Everything posted by கிருபன்
-
முழுப்பெயர் - முதற்பெயர், இடைப்பெயர், குடும்பப்பெயர் ...
எங்களின் பெயர்கள் போல இல்லாமல் நீங்கள் மேற்கு நாட்டவர்களின் நாக்கு சுழல்வதற்கு ஏற்ப முதலே பெயரை வைத்துவிட்டீர்கள்! 😬
-
முழுப்பெயர் - முதற்பெயர், இடைப்பெயர், குடும்பப்பெயர் ...
குடும்பப்பெயர்கள் சந்ததிகளின் அடியைக் குறிக்க இருந்திருக்குமா தெரியவில்லை. ஆனால் பாட்டன்/பாட்டி பெயர்களை பிள்ளைகளுக்கு வைத்து சுழற்சி செய்துகொண்டிருந்தார்கள். போடியார் என்றால் மேச்சல்தரைகள், விவசாய நிலங்கள் என்று பெரும் காணிகளுக்குச் சொந்தக்காரர் என்று நினைத்தேன். அது குடும்பப்பெயராகப் பாவிக்கப்பட்டதா?🤔 உண்மைதான். பரம்பரையினரை கண்டுபிடிக்க குடும்பப்பெயர்கள் உதவும். எனினும் ஐரோப்பியர்களும் இடையிடையே குடும்பப்பெயர்களையும் மாற்றுவார்கள். அப்ப உங்கள் பெயர் எங்கே போயிட்டுது?🤭
-
கொரோனா வந்து அமைதி போச்சு-பா.உதயன்
கொரோனாக் கவிதை நன்று👍🏾 மனிசரைக் கண்டால் ஸொம்பிகளைக் கண்ட மாதிரி விலகி ஓட வைக்கின்றது!
-
பயணம்???
ரென்ஷன் ஆனாலும் சூடாகும்! தொடருங்கள்.
-
முழுப்பெயர் - முதற்பெயர், இடைப்பெயர், குடும்பப்பெயர் ...
சீனாக்காரர், கொரியன் எல்லாம் பல்நாட்டுக் கம்பனிகளில் சேரும்போது ஆங்கிலப் பெயர்களை முதற்பெயர்களாகப் பாவிக்கின்றார்கள். ஆனால் ஜப்பான்காரர் அப்படி செய்வதில்லை. அவர்களுடன் உரையாடும்போதும் அல்லது அவர்களுக்கு இமெயில் அனுப்பும்போது ஜப்பான் பண்பாட்டின்படி அவர்களின் குடும்பப்பெயர் (கடைசிப்பெயர்) உடன் ‘சான்’ என்று சேர்த்துச் சொல்லவேண்டும். san ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. என்னுடைய குடும்பப்பெயரின் வல்லினம், இடையினமும் அதிக மெல்லினமும் இருப்பதால் ஐரோப்பியர் கூடியவரை உச்சரிப்பதைத் தவிர்ப்பார்கள்😁 ஒருமுறை ஹெல்சிங்கி எயார்போர்ட்டில் பிளைட்டுக்குக் காத்திருக்கும்போது வழமைபோன்று இரண்டு சிறிய சிவப்பு வைன்போத்தல்களை அவுக் அவுக்கென்று குடித்து சாப்பிட்டுவிட்டு சற்றுக் கண்ணயர்ந்துவிட்டேன்😌 நான் கிணத்துக்குள் விழுந்துகொண்டிருந்தபோது என்னுடைய பெயர்மாதிரி ஒன்றை கீழே வெகு ஆழத்தில் தண்ணிக்குள் இருந்து கெதியாக வா என்ற தொனியில் ஒரு பெண்குரல் தொடர்ந்து கூப்பிட்டமாதிரி இருந்தது. கண்ணைத் திறந்தால் என்னுடைய பிளைட் “லாஸ்ற் கோல்” என்று காட்டிக்கொண்டிருந்தது. வேர்க்க விறுவெறுக்க ஓடி ஒரு மாதிரி இமிக்கிரேஷனையும் தாண்டி பிளைட்டைப் பிடிச்சன்!😬
-
முழுப்பெயர் - முதற்பெயர், இடைப்பெயர், குடும்பப்பெயர் ...
எங்கள் தலைமுறையினர்தான் குழப்பங்களுடன் சமாளிக்கின்றார்கள். அடுத்த தலைமுறையினர் ஒரு பொதுவான பொறிமுறையை பின்பற்றுவார்கள் என்று பார்த்தால் அவர்களும் அப்படியே தொடர்கின்றார்கள். எனினும் குடும்பப்பெயர் தமிழ்ப்பெயராக இருக்கவேண்டும்.
-
மாஸ்க் எடுத்தாச்சே
வக்சீன் போட்டால்தானே முருகனின் கொமிட்டிக்கு தலைவனாகி அவரின் இடையாடையை உருவலாம்😂 புத்தனின் கிறுக்கல் கன காலம் வரவில்லை. கொரோனா லொக்டவுன் கிரியேற்றிவிற்யையும் லொக்டவுன் பண்ணிவிட்டது என்று நினைத்தேன்!
-
பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
வழி இல்லாதபோது அடிமையாக பவ்வியமாக இருப்பதும், திடீரென்று பணக்காரனாகி பவிசு வந்ததும் விரலைக் காட்டுவதும் ஒரு நல்ல மனிதருக்கு அழகில்லை!
-
தொலைவும் வாழ்வும் , தொலையும் வாழ்வும்
ஒரு மார்க்கமாகத்தான் இருக்கு!😃 தொடருங்கள். அப்பத்தான் வைச்சுச் செய்யலாம்😂
-
யாழ் எனும் கைத்தடி..
வளவன் அண்ணா! யாழ் முறுக்குடன் 23 வயதில்தான் இருக்கு. ஆனால் கருத்தாளர்கள்தான் நாடி, நரம்பு தளர்ந்த முதியோர்களாக இருந்துகொண்டு, முறுக்காக இருப்பதாகப் பாவனை பண்ணுகின்றார்கள்!
-
வான்கரும்புலி கேணல் ரூபன், வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்க நாள்
வீர வணக்கங்கள்.
-
முழுப்பெயர் - முதற்பெயர், இடைப்பெயர், குடும்பப்பெயர் ...
குடும்பப்பெயரை ஒவ்வொரு தலைமுறைக்கும் மாற்றினால் நாம் தமிழ் மரபில் இடமிருந்து வலமாக எழுதுவதை வலமிருந்து இடமாக மட்டும் மாற்றுகின்றோம். நிலைத்த குடும்பப்பெயர் இருக்காது. உங்கள் மகன் உங்கள் பெயரை குடும்பப்பெயராகப் பாவித்து ஒரு clan ஐ உருவாக்குகின்றார். சில தலைமுறைகளின் பின்னர் அதே பொதுவான குடும்பப்பெயரில் இருக்கும் உறவுமுறையில்லாத பலரும் கிளைக்குடும்பமாகவும் கருதலாம்! எனது பெயரை ஆங்கிலேயர்கள் உச்சரிப்பதற்குத் திணறுவார்கள். வங்கி அல்லது காப்புறுதி நிறுவனங்களில் இருந்து ஃபோன் வந்தால் அவர்கள் குடும்பப்பெயரைச் சொல்லித்தான் கதைக்கவேண்டும். எரிச்சலூட்டுபவர்களாக இருந்தால் முதற்பெயரில் அழைக்க விடுவதேயில்லை😁
-
முழுப்பெயர் - முதற்பெயர், இடைப்பெயர், குடும்பப்பெயர் ...
முழுப்பெயர் - முதற்பெயர், இடைப்பெயர், குடும்பப்பெயர் ... அண்மையில் பிள்ளைகளுடன் எனது பெயர் பற்றிய உரையாடல் வந்தது. அவர்களுக்கு எனது முதற்பெயர் என்ன என்பதில் குழப்பம். ஆனால் அதை தெளிவாக்க முயன்று இன்னும் குழப்பிவிட்டேன் என்று நினைக்கின்றேன்.🥴 இந்தப் பெயர்ச் சிக்கல் தமிழர்களுக்கு நிறையவே உண்டு. புலம்பெயர்ந்து வரும்வரை பிரச்சினை தராத பெயர், இலண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் பாஸ்போர்ட் இல்லாமல் வந்து இறங்கியதும் பிரச்சினையாகி விட்டது. சகாரா பாலைவனத்தின் வெம்மையை பல்லாயிரம் அடிகளுக்கு மேலால் பறந்துகொண்டிருந்த விமானத்தில் உணர்ந்தபோதே விமானத்தின் ரொய்லட்டில் பாஸ்போர்ட்டை, அதை வெட்டிக்கிழிக்க என்று முன்னேற்பாடாக எடுத்துச்சென்ற சின்னக்கத்தரிக்கோலால் வெட்டி ஃபிளஷ் பண்ணிவிட்டேன்! ஆனால் எங்கிருந்து விமானம் வந்தது, பாஸ்போர்ட் கிழித்தது எல்லாம் “ரூட்” அடிபடக்கூடாது என்று குடிவரவு அதிகாரிகளுக்குச் சொல்லவில்லை. ஆவணங்கள் இல்லாமல் வந்து இறங்கியவர்களை விசாரித்து அனுபவப்பட்டவர்கள். வழமையான முதலாவது கேள்வியாக பெயரைக் கேட்டபோது எனது ஒற்றைப்பெயரைச் சொன்னேன். அது போதாது இரண்டு பெயர்களையும் சரியாகச் சொல்லுங்கள் என்றபோது, எனக்கு “திக்” என்றது. எனக்கு இரண்டு பெயர்கள் இருப்பதை (பெயர் இடையில் மாற்றப்பட்டது தனிக்கதை) என்னுடன் கூட வந்தவர்களே அறியாதபோது எப்படி இவர்கள் கண்டுபிடித்தார்கள் என்று ஆடிப்போய் முழியைப் பிதுக்கினேன். இரண்டு பெயர்கள் வந்த கதையைச் சொல்லும் அளவுக்கு ஆங்கில அறிவும் இல்லை, தவிர அதைச் சொல்லும் நோக்கமும் துளியும் இல்லை என்பதால் திரும்பவும் எனக்கு ஒரு பெயர்தான் என்று எனது ஒற்றைப்பெயரைச் சொன்னேன். அவர்களின் பார்வை அப்பன் பெயர் தெரியாத அனாதைப்பயலைப் பார்க்கிற மாதிரித் தெரிந்தது. தங்கள் நேரத்தை வீணாக்கவேண்டாம் என்று கொஞ்சம் மிரட்டுவதுபோல எனது முழுப்பெயரை எழுதச் சொன்னார்கள். குடும்பப்பெயரையும் அடிக்கோடிடவேண்டும் என்றார்கள். முழுப்பெயர் விளங்கியது. அது என்ன குடும்பப்பெயர்? இப்படி ஒன்றும் எங்கள் குடும்பத்தில் இல்லையே! தமிழர்களின் முழுப்பெயர்கள் இன்னாரின் பிள்ளை இவன்/இவள் என்று இருக்கும் அல்லது இன்னாரின் மனைவி இவள் என்று இருக்கும். தந்தை அல்லது கட்டிய கணவன் பெயர் முன்னுக்கும் பிள்ளைகளினதும் மனைவியினதும் பெயர் பின்னுக்கும் எழுதுவதுதான் மரபு. உதாரணமாக செல்லையாவின் செல்லமகள் சிவகாமி என்றால் முழுப்பெயர் “செல்லையா சிவகாமி” என்று இருக்கும். அதுவே சிவகாமி செந்தூரனைத் திருமணம் செய்தால் “செந்தூரன் சிவகாமி” என்று மாறிவிடும். இப்படி முழுப்பெயர் எழுதும்முறை தெரிந்திருந்தாலும், எனது பெயரை எண்சோதிடப்படி பாட்டனார், தந்தையாரின் முதலெழுத்துக்களுடன் பாவிக்கவேண்டும் என்று பெயர் மாறியபோது வீட்டில் சொல்லியிருந்ததால் பாட்டனார், தந்தையார் பெயர்களுடன் எனது பெயரையும் எழுதினேன். இடமிருந்து வலமாக மூன்றாவதாக இருந்த எனது தனிப்பெயருக்கு அடிக்கோடிட்டேன். இப்படியாக, எனது தனிப்பெயர் குடும்பப்பெயராகியது! அப்படியே வங்கி, கல்லூரி, பல்கலைக்கழகம், வேலை என்று எல்லா ஆவணங்களிலும் முழுப்பெயர் மூன்றாகவும், எனது பெயர் குடும்பப்பெயராகவும் வருமாறு பார்த்துக்கொண்டேன். எனினும் விமானப் பயணச் சீட்டுக்கள் பதிவு செய்யும்போதும், விசா எடுக்கப் போகும்போதும் படிவங்கள் நிரப்புவதில் குழப்பங்கள் வரும். நான் மூன்று பெயர்களை வேறு வைத்திருப்பதால் படிவங்களில் உள்ள கட்டங்கள் கூட போதாமல் இருக்கும். எனது முழுப்பெயரை ஆங்கிலத்தில் எழுத இரண்டு இடைவெளிகளுடன் 31 கட்டங்கள் வேண்டும்! நண்பன் ஒருவனின் பாட்டன் தனது தமிழ் மீதான பற்றைக்காட்ட நச்சினார்க்கினியனார், பரிமேலழகனார் என்று அதி நீளமான பெயர்களை வைத்ததுபோல, எனது பாட்டனார் செய்யவில்லை. என்றாலும் தனது முப்பாட்டன் முருகன் மேல் கொண்ட பக்தியால் முருகனின் பெயர்களையே மூன்று ஆண் பிள்ளைகளுக்கும் வைத்திருந்ததால் கடைக்குட்டியான தந்தையாருக்கு ஒரு முருகனின் பெயர்! அது எனது முழுப்பெயரின் நடுவில் உள்ளது. சிங்களவர்களில் சில பிரபலங்களின் பெயர்கள் இன்னும் நீளமாக இருப்பதால், உதாரணமாக வர்ணகுலசூரிய பத்தபெந்திகே உஷாந்த ஜோசேஃப் சமிந்த வாஸ், அவர்களுடன் ஒப்பிடும்போது பரவாயில்லை என்று சமாதானம் அடைந்துவிடுவேன். பிச்சைக்காரன் தன்னைவிட வசதிகுறைந்த பிச்சைக்காரனைப் பார்த்துத்தானே திருப்தியடைய முடியும். அதிலும் இவர்கள் சிங்களவர்கள் வேறு!😊 முன்னைய காலங்களில் தமிழின் மீதான பற்றினால் பொதுவாக நீளமான பெயர்களைத் தமிழர்கள் விரும்பி வைப்பதுண்டு. எனினும் பெயர்களின் நீளங்கள் சமூகக்கட்டமைப்பின் பிரமிட் நிலையையும் காட்டும் குறிகாட்டிகளாகவும் கருதப்பட்டதுண்டு. சமூகப்படிநிலையில் கீழே இருப்பவர்கள் நீளமான பெயர்களை வைக்க விரும்பி விண்ணப்பித்தவேளைகளில், பதிவாளர்களாக இருந்த உயர்குடியினர் கந்தன், செல்லன் என்று சுருக்கிவிட்ட வரலாறும் தமிழ் சமூகத்தில் உண்டுதானே. இப்படியாக நீளமான பெயர் ஒருபக்கம் பிரச்சினையாக இருந்தாலும் முக்கியமாக குடும்பப்பெயர் என்று ஒன்றில்லாதது பொதுவாக தமிழர்களுக்கான பிரச்சினையாக இருக்கின்றது போலுள்ளது. இணையத்தில் தேடினால் தமிழர்களைப் போலவே வேறு இனங்களிலும் குடும்பப்பெயர் எழுதுவது ஒரு சிக்கலாக இருப்பதாகத் தெரிகின்றது. சிங்களவர்களும், வட இந்தியர்களும், ஐரோப்பியர்களின் கொலனியாக இருந்த காலத்தில் அவர்களுக்கு சேவகம் செய்தவர்களும், மதம் மாற்றப்பட்டவர்களும் குடும்பப் பெயர்களைப் பாவித்து வருகின்றார்கள். தமிழர்களுக்குத்தான் இந்த Last name/Surname/Family name என்று ஒன்றில்லை. அதனால் தமிழருக்கு இந்த குடும்பப்பெயர் விடயம் இன்னும் நீடித்துக்கொண்டிருக்கும் சிக்கலாக இருக்கின்றது! எனக்குத் தெரிந்து தமிழ் மக்கள் எல்லோருக்குமே ஒரேயொரு பெயர்தான். சுருக்கியபெயர், செல்லப்பெயர், பட்டப்பெயர், புனைபெயர், இயக்கப்பெயர் இதெல்லாம் கணக்கில் எடுப்பதில்லை. இலங்கையில் பிறந்திருந்தால் சட்டபூர்வமாக பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் இருக்கும் Given name என்பதுதான் எங்களைக் குறிக்கும் தனிப்பெயர். ஆறுமுகம், கந்தசாமி என்று எதுவானாலும் ஒரே ஒரு பெயர்தான். நாங்கள் பெயர் எழுதும் முறையில் எங்கள் தனிப்பெயர் குடும்பப்பெயராக வருவதும் குழப்பங்களை ஏற்படுத்துகின்றது. மேற்கத்தையரின் வழக்கப்படி ஒரு குடும்பத்தில் எல்லோருக்கும் குடும்பப்பெயர் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். ஆனால் நாங்கள் எங்கள் தனிப்பெயரை தமிழ் மரபுப்படி பின்னுக்கு எழுதி குடும்பப்பெயராகப் பாவிக்கும்போது கணவன், மனைவி பிள்ளைகளுக்கு வேறு வேறு குடும்பப்பெயர்கள் வந்துசேர்கின்றது. மேற்கத்தையர் ஒரு மாதிரி மேலேயும் கீழேயும் எங்களைப் பார்க்கவைக்கின்றது. சகோதரர்களுக்கு ஸ்பொன்சர் கடிதம் எழுதும்போது அவர்கள் தங்கள் தனிப்பெயரை குடும்பப்பெயராகப் பாவித்தால், குடும்பப்பெயர் ஏன் வேறாக இருக்கின்றது என்பதற்கு கூடுதலாக விளக்கம் வேறு கொடுக்கவேண்டும். இதை நான் கவனமாகச் செய்ததுண்டு. அதிலும் சகோதரர்கள் என்னைப்போல மூன்று பெயர்களைப் பாவிக்காமல் தந்தை, தமது பெயர் என்று இரண்டுடன் உள்ளதால் (எதை குடும்பப்பெயராகப் பாவிக்கின்றார்கள் என்பதே இன்னமும் குழப்பம்தான்) விலாவாரியான விளக்கங்கள் கொடுத்திருக்கின்றேன்! புலம்பெயர் நாட்டில் வசிக்கும் ஒருவர் தனது தந்தையின் பெயரை குடும்பப்பெயராக வைத்திருந்தால், அவர் இலங்கைசென்று திருமணம் முடித்து வரும்போது, கட்டிய மனைவி தனது மாமானாரின் பெயரைத் தனது குடும்பப்பெயராக வைத்திருக்க சங்கடப்படுவதும் உண்டு. உதாரணமாக கந்தசாமி மகன் கேதீஸ்வரன் குடும்பப்பெயராக கந்தசாமி என்று பாவித்தால் அவர் சுப்பிரமணியம் மகள் வதனாவை திருமணம் செய்த பின்னர், வதனா குடும்பப்பெயரை மாற்றினால் “வதனா கந்தசாமி” என்று வரும். இதில் கேதீஸ்வரன் பெயரே காணாமல் போய்விடும்! வதனா மாமனாரின் பெயரை தனது குடும்பப்பெயராக எழுதுவதை விரும்பாமலும் இருக்கலாம்! அதே போல பிள்ளைகள் பிறக்கும்போது பிள்ளைக்கு வைக்கும் பெயரை முதற்பெயராகப் பாவிப்பதா அல்லது குடும்பப்பெயராகப் பாவிப்பதா என்பதிலும் குழப்பங்கள் உண்டு. தந்தையின் பெயரைக் குடும்பப்பெயராக வைத்தால் ஒவ்வொரு தலைமுறைக்கும் குடும்பப்பெயர் மாறிக்கொண்டிருக்கும். இது குடும்பப்பெயரின் நோக்கமாகிய பரம்பரையை இலகுவாக அறிவதையே இல்லாமல் ஆக்கிவிடும். மறுவளமாக எங்கள் தனிப்பெயரை குடும்பப்பெயராக மாற்றியதுபோல, பிள்ளைகளின் தனிப்பெயரை குடும்பப்பெயராக மாற்றினாலும் நிலைத்த குடும்பப்பெயர் உருவாகாது. அதுவே பெண்பிள்ளையாக இருந்தால் அவரின் தனிப்பெயரை குடும்பப்பெயராகவும் வைப்பதும் சிக்கல்தான். ஏனெனில் பெண்பிள்ளைகளின் பெயரை குடும்பப்பெயராகப் பாவிக்கும் நடைமுறை இல்லை. உதாரணத்திற்கு ஞானவேல் மகன் எழில்வேந்தன் தனது பெயராகிய எழில்வேந்தனை குடும்பப்பெயராகக் கொண்டிருக்கின்றார் என்று வைப்போம். அவருக்கு மூத்த பிள்ளையாக பிறந்த மகனுக்கு அர்ஜுன் என்று பெயர்சூட்டி, பிள்ளையின் தனிப்பெயரையே குடும்பபெயராகவும் பதிந்துவிட்டார். பின்னர் பெண்பிள்ளை பிறந்தபோது சஹானா என்று பெயரைவைத்து பெண்பிள்ளை என்பதால் தனது பெயராகிய எழில்வேந்தனை குடும்பப்பெயராக வைத்தால் பிள்ளைகள் இருவருக்கும் வேறு வேறு குடும்பப்பெயராகிவிடும். இவ்வாறு பல வேறுபட்ட குழப்பங்கள் நம்மவரிடையே உண்டு. கணணிமயமாக்கப்பட்ட இக்காலத்தில் பெயர்களில் குடும்பப்பெயர்தான் தரவுத்தளங்களில் முதன்மைத் திறவியாக (primary key) உள்ளது. எனவே, குடும்பப்பெயர்களை எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதில் கவனம் தேவை. முழுப்பெயர் பொதுவாக இரண்டு அல்லது மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. முழுப்பெயர் மூன்று பகுதிகளாக எழுதும்போது இப்படி வரும்: [முதற்பெயர்] [நடுப்பெயர்] [குடும்பப்பெயர்] முழுப்பெயர் இரண்டு பகுதிகளாக எழுதும்போது நடுப்பெயர் இல்லாது வரும்: [முதற்பெயர்] [குடும்பப்பெயர்] ஆங்கிலத்தில் First name, Forename, Given name, Christian name என்று விதம்விதமாகச் சொல்லப்படுபவை எல்லாம் ஒருவரை அழைக்கும் முதற்பெயரைத்தான் குறிக்கின்றன. அதேபோல Last name, Second name, Surname, Family name என்று சொல்லபடுபவை எல்லாம் குடும்பப்பெயரைத்தான் குறிக்கின்றன. Middle name கிறீஸ்த்த மதத்தினர் ஞானஸ்நானத்தின்போது பெற்றுக்கொள்ளும் பெயர். எனினும் வேறு வகைகளிலும் இதனைப் பாவிக்கலாம். அவை பற்றியும் பின்னர் சுருக்கமாகப் பார்க்கலாம். அத்துடன் குடும்பப்பெயரைத் தவிர மற்றைய பெயர்கள் அனைத்தையும் முதற்பெயர் என்றும் கொள்ளலாம்! இப்படி பெயர் என்பதே ஒரே குழப்பம் நிறைந்து இருக்கின்றது! இந்த முழுப்பெயர் எழுதும் முறை வந்த வரலாற்றைப் பார்ப்போம். ரோமானிய ஆண்கள் மூன்று பெயர்களைக் கொண்டிருந்தார்களாம். ஒருவரை அடையாளப்படுத்தும் தனிப்பெயர் (praenomen); அவரது குடும்பப்பெயர் (nomen); அவரது குடும்பக்கிளைப் பெயர் (cognomen). அதிகமான குடும்பக்கிளைப் பெயர்களைக் கொண்டு ஒருவரின் பெயர் மிக நீளமாக அமைந்திருந்தால் அவரின் சமூக மதிப்பு கூடியிருக்கும். ஏனெனில் நீளமான பெயர் வம்ச விருட்சத்தை (family tree) இலகுவாக அடையாளம் காண உதவும். ஆனால் பெண்களுக்கு அவர்களது தனிப்பெயரும் குடும்பப்பெயரும் மட்டும்தான் இருந்தன. அடிமைகளுக்கோ வெறும் தனிப்பெயர்தான்! இப்படிப் பெயரானது பல பெயர்களின் தொடராக குறிப்பிடப்படும் மரபு 17-18 ஆம் நூற்றாண்டுகளில் மேற்கு நாடுகளுக்கும் பரவியது. அதிகாரம் மிக்க பிரபுத்துவ வம்சத்தினர் தமது குழந்தைகளுக்கு மிக நீளமான பெயர்களைச் சூட்டி சமூகத்தில் தமது உயர்நிலையை உறுதிப்படுத்தினர். அது இன்றளவும் தொடர்கின்றது. பிரித்தானிய இளவரசர் வில்லியத்தின் மகன் இளவரசர் ஜோர்ஜின் முழுப்பெயர் George Alexander Louis Mountbatten-Windsor என்றுள்ளது. ஸ்பானியர்களும், அரேபியர்களும் தமது குழந்தைகளின் பெயர்களில் தந்தைவழியோடு, தாய்வழி பரம்பரைப் பெயர்களையும் சூட்டி வம்ச விருட்சங்களை பெயர்களிலேயே நிலைநிறுத்தினர். எனினும் ஐரோப்பியர்கள் இடைப்பெயராக (Middle name) எதைச் சூட்டுவது என்பதில் ஆரம்பத்தில் சற்றுக் குழம்பியதாகத் தெரிகின்றது. குடும்பக் கிளைப்பெயரையா அல்லது புனிதர்களின் (saint) பெயரையா சூட்டுவது என்று தீர்மானிக்க முடியாமல், பின்னர் ஞானஸ்நானப் பெயரை இடைப்பெயராகச் சூட்டினர். இவ்வாறு முதற்பெயர், இடைப்பெயர், குடும்பப்பெயர் என்று பெயர் வைக்கும் மரபு அமெரிக்கா போன்ற குடியேற்ற நாடுகளுக்கும், ஐரோப்பியர்களின் கொலனிகளுக்கும் பரவியது. எனினும் இக்காலத்தில் பலர் இடைப்பெயரை சுத்தமாகப் பாவிப்பது இல்லை. அத்தோடு பலர் மதம் சார்ந்த இடைப்பெயரைத் தவிர்த்து வேறு புதுமையான முறைகளில் இடைப்பெயர்களைச் சூட்டிக்கொள்கின்றார்கள். பொதுவாக தாயின் கன்னிப்பெயரை (Maiden name) இடைப்பெயராக பாவிக்கும் வழக்கம் அதிகரித்து வருகின்றது. திருமணமான பெண்கள் கணவர்களின் குடும்பப்பெயரை ஏற்றுக்கொள்வது வழமை. ஆனாலும் பெண்கள் தங்கள் தனித்துவத்தை இழக்க விரும்பாத தற்காலத்தில் கன்னிப்பெயரை தொடர்ந்தும் குடும்பப்பெயராக பாவிப்பதும், அல்லது கன்னிப்பெயரை இடைப்பெயராகப் பாவிப்பதும் உண்டு. உதாரணமாக முன்னாள் சிறிலங்கா ஜனாதிபதியின் முழுப்பெயர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க என்றுள்ளது. இதில் அவரின் கன்னிப்பெயர் இடைப்பெயராக அமைந்துள்ளது. பெயர் வைப்பதில் இவ்வளவு சிக்கல்கள் இருக்கும் என்பதை தமிழர்கள் அறிந்திருக்கவில்லை போலிருக்கின்றது. ஏற்கனவே வேறு எவருக்குமில்லாத பெயராக இருக்கவேண்டும், பிறந்த நேரத்துக்கான நட்சத்திரப்படி பஞ்சாங்கத்தில்/சாதகத்தில் உள்ள எழுத்துக்கள் வரத்தக்கதாக பெயர் இருக்கவேண்டும், ஆங்கிலத்தில் எழுதும்போது எண்சாத்திரத்திற்கு அமைவாக இருக்கவேண்டும் என்று ஒருவரைச் சுட்டும் தனிப்பெயரான முதற்பெயருக்கே மூளையைக் கசக்குகின்றவர்கள், இடைப்பெயர், குடும்பப்பெயர் என்று இன்னும் பலவற்றை ஆராயவெளிக்கிட்டால் கதிகலங்கித்தான் போயிருப்பார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி இந்தப் பெயர்ச்சிக்கலைக் கையாளுகின்றார்கள். சில ஐரோப்பிய நாடுகளில் தந்தையாரின் பெயர் அல்லது கணவனின் குடும்பப்பெயராக விளங்கும் கணவனின் தந்தையின் பெயரைக் குடும்பப்பெயராக்க கட்டாயப்படுத்துகின்றார்கள். இதுவே இப்போது தமிழர்களிடையே பொதுவான நடைமுறையாக உள்ளது. எனினும் பிரித்தானியாவில் எதுவிதமான கட்டாயப்படுத்தல்களோ, வழிமுறைகளோ இருப்பதாகத் தெரியவில்லை. நான் எனது தனிப்பெயரை குடும்பப்பெயர் (Surname) ஆகவும், எனது தந்தையின் பெயரை இடைப்பெயராகவும் (Middle name) ஆகவும், பாட்டனாரின் பெயரை முதற்பெயர் (First name) ஆகவும் ஆரம்பத்தில் பாவித்தேன். இது ஒன்றும் திட்டம்போட்டுச் செய்ததில்லை. தமிழர்கள் வலமிருந்து இடமாக தந்தை பெயர், எம்மைச் சுட்டும் தனிப்பெயர் என்று எழுதும் பழக்கத்தால் வந்தது. கூடுதலாக பாட்டனாரின் பெயரும் இருப்பதால் அது முதலாவதாக வந்துவிட்டது! ஆனாலும் இடைப்பெயர் குழப்பமாக இருந்ததால், இடைப்பெயரைக் கைவிட்டு பாட்டனாரினதும் தந்தையாரினதும் பெயர்களையே முதற்பெயராக இப்போது எழுதுகின்றேன். இந்த மூன்றையும் சேர்த்து எழுத நீளமாக வரும் என்பது வேறு ஒரு பிரச்சினை! ஐரோப்பிய நாட்டில் இருப்பதாலும், எனது பெயர் நூற்றாண்டுகளாக நிலைத்து இருக்கவேண்டும் என்ற சிறிய ஆசை உள்ளதாலும் எனக்கு இடையில் வைத்த பெயரையே எனது குடும்பப்பெயராக்கி உள்ளேன். அதற்காக குடும்பப்பெயரை சுருக்கி/வெட்டி, ஆங்கிலப் பெயர் மாதிரி உச்சரிப்பு வரும்மாதிரிச் செய்ய எல்லாம் விருப்பமில்லை. பிறநாட்டவரின் நாக்கு சுளுக்கிக் கொண்டாலும் இதுவே தலைமுறை தலைமுறையாக நிலைத்து நிற்கட்டும்! ஆயினும் முழுப்பெயர் கட்டாயமாகக் கொடுக்கவேண்டி ஏற்படாத இடங்களில் எல்லாம் முதற்பெயராக இருக்கும் பாட்டனாரின் பெயரை பாதியாகக் கத்தரித்து பாவிக்கின்றேன்!. தந்தையாரின் பெயர் எனது சுருக்கிய முதற்பெயரில் இருந்து சுத்தமாக நீங்கிவிட்டது! மேற்கத்தேயரின் வழக்கப்படி பொதுவாக மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யும்போது முதற்பெயரையும், குடும்பப்பெயரையும் கட்டாயம் சொல்லி மரியாதை செய்யவேண்டும். முதற்பெயரை மிக நெருங்கியவர்கள்தான் அழைப்பதற்குப் பாவிப்பார்கள். நமது முதற்பெயரை (அதையும் நாம் சுருக்கி ஓரசை, ஈரசை என வைத்திருந்தாலும்) சொல்லவே பிறநாட்டவருக்கு நாக்கு சுளுக்கிவிடுகின்றது. இதற்குள் பல அசைகள் (syllables) உள்ள எங்கள் குடும்பப்பெயரை சொல்ல அவர்கள் முயலும்போது நமக்கே கேட்கச் சிரமமாக இருக்கும். எனது ஆஸ்திரிய நண்பர் ஒருவர் என்னுடைய நீண்ட குடும்பப்பெயரை மிகவும் எளிதாகச் சொன்னபோது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. எப்படி கற்றுக்கொண்டாய் எனக்கேட்டபோது, எனது நண்பர் சொன்னபதில் இன்னும் ஆச்சரியமாக இருந்தது. அவர் எனது குடும்பப்பெயரை எழுத்துப் பிழைகள், உச்சரிப்புப் பிழைகள் இன்றி எழுதுவதற்கும், சொல்லுவதற்கும் அரைமணி நேரத்துக்கும் மேலாக பயிற்சியில் செலவளித்தாராம். முதற்பெயரையும், குடும்பப்பெயரையும் மரியாதையுடன் சொல்லவேண்டும் என்பதற்காகவே ஐரோப்பியர் இப்படியும் கஸ்டப்படுகின்றார்கள். தமிழர்கள் மத்தியில் பெயர் குறித்த விழிப்புணர்வு மிகக் குறைவு. தமது பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயர் வைப்பது அரிதிலும் அரிது. இதனால் அடுத்து வரும் தலைமுறைகளை சேர்ந்த தமிழர்களுக்கு தமது பூர்வீகமே மறந்து போகலாம். பிறகு மரபணுச் சோதனை செய்து தான் அவர்களது வேர்களைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். எனினும், சரியான பெயர் எழுதும் முறை எதுவென்று இலகுவாகச் சொல்லமுடியாது. தமிழர்கள் தங்கள் தனித்துவத்தைப் பேணும் வகையிலும், பரம்பரையை அடையாளம் காணும் வகையிலும் ஒரு பெயர் வைக்கும் பொறிமுறையை உருவாக்குவது பற்றிச் சிந்திக்கவில்லை என்றுதான் தோன்றுகின்றது. ஆகவே, பெயர்க் குழப்பங்கள் தொடர்கதையாகவே இருக்கும். குறிப்பு: எனது பெயர் மாறிய கதையை எழுதவேண்டுமென்றால் பெயர்களை வெளிப்படுத்தாமல் எழுதுவது இலகு அல்ல! ——
-
லொக்டவுண்
அதிகம் கலந்துகொள்ள வாய்க்கவில்லை! கிளப் ஒன்றில் 50வது பிறந்தநாள் கொண்டாட்டம். ரெஸ்ரோறன்ற்றில் ஒரு சர்ப்ரைஸ் பிறந்தநாள் கொண்டாட்டம்! அவ்வளவுதான்!!
-
பரிசு.
இதயம் சுமக்கும் மலரைப் பரிசாகத் தந்தவளின் பிடியிடை தழுவி குருடனாக முடியுமா?🤭
-
லொக்டவுண்
இதைத்தான் மொக்குச்சனம் என்று சொல்வது😖 இங்கிலாந்திலும் பல பார்ட்டிகள் இப்படிக் கள்ளமாக நடக்கின்றன. பெரும் பணக்காரர்கள் வாழும் இலண்டனின் மத்திய பகுதியிலும் ஆங்கிலேய கனவான்களும், சீமாட்டிகளும், பல இளவயதினரும் லொக்டவுனை மதிக்காமல் நடந்துகொள்கின்றார்கள். நம்மவர்களும் தங்கள் பங்குக்கு செய்கின்றார்கள்தான். ஒரு சிலர் பிடிபடுகின்றனர். பிடிபடாதவர்கள் பெரிய சாதனை படைத்த பெருமையுடன் மீண்டும் பார்ட்டிகளுக்கு திட்டம் போடுகின்றார்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அகஸ்தியனுக்கும் நுணாவிலானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉 வாழ்க வளமுடன்🎂
-
லெப். கேணல் பொற்கோ குறித்து பொட்டம்மான் கூறுகையில்...
லெப். கேணல் பொற்கோ குறித்து பொட்டம்மான் கூறுகையில் … தளபதி லெப். கேணல் பொற்கோ பற்றி அம்மான் சொன்னது……….. லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்” என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப். கேணல் பொற்கோ அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவில் கருத்து பகிர்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்: “போராட்டத்தில் இணைவதற்கு முன்னர் கிறிஸ்தவ பாதிரியாருக்கான கற்கை நெறியில் பொற்கோ இணைந்திருந்தார். அநேகமாக அக்கற்கை நெறியின் நடுப்பகுதியை கடந்த நிலையில் சிங்கள அரசின் இனவெறி தாக்குதலும், 1983 ஆம் ஆண்டின் கொடூரமான இனக்கலவரமும் சேர்ந்து அவரை ஒரு தேசியப் போராளியாக மாற்றியிருந்தது. இன்னும் சொல்வதானால் மக்கள் மீதான ஒரு அன்பு உணர்வினால் அவர் ஆன்மீகப் பணியில் தன்னை ஈடுபடுத்தியிருந்தார். அந்தப்பயணத்தை விட, அதன் மூலமாக மக்களிற்கு செய்யும் சேவையை விட, தேசிய விடுதலைக்கான ஆயுதம் தாங்கிய போர் மேலானது என்பதற்காக அவர் விடுதலைப் போராட்டத்தில் இணைந்திருந்தார். உண்மையிலேயே குருத்துவ நிலையிலிருந்து போராளியாக பயணமானது அவருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் சங்கடமான ஒன்றாகவே இருந்திருக்கும் என நான் நினைக்கிறேன். பின்னர் தன்னுடைய கடந்த காலங்கள் பற்றிய மனந்திறந்த உரையாடல்களின் போது இது பற்றி அவர் நிறையக் கூறியிருக்கிறார். பொற்கோ, சில நண்பர்களுடன் படகேறி இராமேஸ்வரம் பகுதியில் வந்திறங்கி இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்துக் கொண்டார். இந்திய இராணுவத்தின் நெருக்கடி காலத்தில் பொற்கோ, தமிழீழத்தில் தனது கடமையைச் செய்யத் தொடங்கினார். இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து அவர் புலனாய்வுத்துறையில் தனது பணியை செய்தார். மக்களை நேசிக்கின்ற, மக்களுடன் பழகுகின்ற, மக்களை விரும்புகின்ற ஒருவராக அவர் புலனாய்வுப் பணியை செய்ததை இன்றும் என்னால் மறக்க முடியாது. மக்களிற்கு கஸ்டம் வரும்போது அவர்களுடன் இணைந்து நிற்கின்ற பண்பும், கடமை என்று வருகின்ற போது இறுக்கமாக நிற்கின்றதுமான பல்வேறு கலவையான சம்பவங்கள் இன்று அவரை பற்றி நினைக்கும் வேளையில் என்னுடைய மனதில் மேல் எழுகின்றது. அவர் என்னை அந்த கிராமத்திற்கு அடிக்கடி கூட்டிச் செல்வார். அவருடைய சொந்த இடம் போல் சிறு பகுதிகளையும் நினைவில் வைத்திருந்து அவர் எனக்கு விளங்கப்படுத்தினார். அவர் சொன்னார் ‘இந்த கிராமம் பின்தங்கிய கிராமமாக உள்ளது. கல்வியிலும் சுகாதாரத்திலும் பின் தங்கிய கிராமமாக உள்ளது. குறிப்பாக அந்த கிராமத்தில் தொழுநோய் தொற்றியிருப்பது பற்றி மிகவும் கவலையாக’ அவர் என்னுடன் கதைத்திருக்கிறார். அந்த மக்களை அந்த நோயிலிருந்து விடுவிப்பதற்காக நீண்ட கால வேலைத்திட்டத்தை செய்ய வேண்டும் என என்னுடன் நீண்டநேரம் உரையாடினார். உண்மையில் அவர் சார்ந்த புலனாய்வுப் பணியுடன் சார்ந்ததாக இப்பணி இல்லாத போதும் மக்களின் மீதான நெருக்கம் அந்த மக்களின் விடுதலைக்கான தெரிவு என்பவை கொண்ட தன்னை உருவகித்து உணர்ந்து செயற்பட்டார். அதேபோல் ஒரு விடயத்தை நான் இங்கு கூறலாம். ஓரிடத்தில் ஒரு எதிரியுடன் தொடர்புடைய ஒரு மட்டத்தினரிடம் விளக்கம் கேட்க வேண்டியிருந்தது. அதற்காக பொற்கோ தன்கூட இருந்த போராளி ஒருவரை அனுப்பியிருந்தான். தவிர்க்க முடியாமல் விளக்கம் கோர வேண்டிய நிலையில் அந்த சம்பவம் அமைந்திருந்தது. அதனை தெளிவுபடுத்தியிருக்க வேண்டிய அந்தப்பிரமுகர் பெரிதுபடுத்தி அதனை மேல்மட்டங்களிற்கு எடுத்து சென்று தன்னை விளக்கம் கேட்டது தவறு தன்மீதான அவமானம் என்ற வகையில் அதனை ஒரு தோற்றம் மாற்றி அவர் ஒரு குழப்பத்தை விளைவித்திருந்தார். அந்த வேளையில், பொற்கோவிற்கு மேலாளராயிருந்த பொறுப்பாளர் குறித்த போராளியை அவரிடம் சென்று மன்னிப்பு கேட்குமாறு பணித்திருந்தார். உண்மையில் பொற்கோ, அந்த விடயத்தில் பொறுக்க முடியாதவராக இருந்தார். அவர் சமாளித்து செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தால் தனக்கு மேற்பட்ட பொறுப்பாளர் இதனை செய்கிறாரே என்று இதனை போகட்டும் என்று பேசாமல் விட்டிருக்கலாம். அவர் அதனைச் செய்யவில்லை உடனடியாக அவர் அதனை ஒரு பெரிய பிரச்சனையாக ஆக்கினார். இது கடைசி வரைக்கும் செய்ய முடியாத ஒன்று. அந்த இளநிலை போராளி தன்னுடைய கடமையை செய்திருக்கிறான். நானே அந்த கடமைக்கு அவருக்கு அனுமதி வழங்கியிருந்தேன். ஆகையினால் எந்த சந்தர்ப்பத்திலும் இந்த மன்னிப்பு கேட்க முடியாது. அப்படியானால் கடமையை செய்வதற்காக எவருமே முன்வர மாட்டார்கள். நானும் கூட முன்வர மாட்டேன். இது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும் என்று அவர் கூறுகிறார். உடனடியாக பிரச்சினையை என்னிடம் கூறினார். நான் விடயத்தை பரிசீலித்து உரிய பிரமுகருக்கு தெரிவித்து நீங்கள் பொறுப்பாளர்கள் போய் இது எங்கள் கடமை என விளக்கத்தை வழங்குங்கள். ஆனால் பொற்கோவின் பணிப்பின் பேரில் செயற்பட்ட இளநிலை போராளியோ பொற்கோவோ தவறேதும் இழைக்கவில்லை என்ற வகையில் கருத்து கூறியிருக்கிறேன். என்னை மிகவும் கவர்ந்தது அவருடைய மனதுக்குள்ளிருந்த உண்மை மீதான ஆக்குரோசம்” எனப் புகழ்ந்துரைத்தார் பொட்டம்மான். https://www.thaarakam.com/news/f02f3135-2680-4feb-8439-e13c96df1195
-
லெப். கேணல் பொன்னம்மான் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
லெப். கேணல் பொன்னம்மான் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். லெப். கேணல் பொன்னம்மான் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். யாழ். மாவட்டம் கைதடிப் பகுதியில் எதிர்பாராமல் ஏற்பட்ட வெடிவிபத்தின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மூத்த தளபதி லெப். கேணல் பொன்னமான், தென்மராட்சி பொறுப்பாளர் மேஜர் கேடில்ஸ், விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு, லெப்.சித்தார்த்தன், 2ம் லெப். பரன், வீரவேங்கை ஜோகேஸ், வீரவேங்கை குமணன், வீரவேங்கை அக்பர், வீரவேங்கை கவர், வீரவேங்கை தேவன் ஆகிய மாவீரர்களின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். யாழ். மாவட்டம் நாவற்குழி படைமுகாம் மீதான தாக்குதலுக்கு 14.02.1987 அன்று வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தி ஒன்று வெடிக்க வைத்த பின்னரேயே தாக்குதல் அணிகள் உட்புகுந்து முகாமைக் கைப்பற்றுவதெனத் திட்டம் தீட்டப்பட்டது. படைமுகாமின் வாயில் உள்ள படையினர் ஐயம் கொள்ளக்கூடாது என்பதற்காக படையினருக்கு குடிநீர் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் தண்ணீர் தாங்கி ஊர்தி (பவுசர்) போன்றதொரு ஊர்தி வெடிமருந்து நிரப்பப்பட்டது. எனினும் இறுதி நேரத்தில் தண்ணீர் தாங்கியிலிருந்து நீர் ஒழுகியது. இதனை அடைக்கும் முயற்சியில் ஈடுபட்ட வேளை எதிர்பாராத வகையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் எங்கள் வீரங்கள் தாய்மண்ணின் காற்றில் கலந்தனர். எமது இயக்கத்தின் முதலாவது பாசறையின் பொறுப்பாளராக இருந்த பொன்னம்மான் நினைவாக லெப். கேணல் பொன்னம்மான் கண்ணிவெடிப்பிரிவு தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்பட்டது தாய்மண்ணின் விடியலின் கனவுகளுடன் தாய்மண்ணின் காற்றில் கலந்த மாவீரச்செல்வங்கள்….. தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/75aea4c4-ce7f-4e24-9783-7767ece5e3fe
-
லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு நாள்
புலிகள் இயக்கத்தின் முதலாவது பாசறையின் பொறுப்பாளராக இருந்தவர் லெப். கேணல் பொன்னம்மான்.! லெப்.கேணல் அற்புதன் (பொன்னம்மான்) யோகரத்தினம் குகன்கலட்டி, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:23.12.1956 வீரச்சாவு:14.02.1987 நிகழ்வு:யாழ்ப்பாணம் யாழ். மாவட்டம் கைதடி பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தின்போது வீரச்சாவு தந்தை தாய் இருந்தால் நமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா…. என்ற பாடல் முகாமுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த ஓரிரவில் தோழர்கள் காற்று வெளியில் நின்று கொண்டிருந்தார்கள். அருமையான அந்தப் பாடல் காற்றில் என்னமாய் வந்து அவர்களை உதைத்தது. எமது இயக்கத்தில் புதிதாக இணைந்து பயிற்சி எடுப்பதற்காக பயிற்சி முகாமில் நின்று கொண்டிருந்த புதியவர்களுக்கு நெஞ்சில் மெல்லிய சோகத்தை அந்த வரிகள் எழுதியிருக்கக்கூடும். ஆனால் அந்த அத்தனை பேருக்கும் தாயாக, தந்தையாக, அண்ணனாக, அம்மானாக, நின்ற பொன்னம்மானே அந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருந்தார். அம்மான் இருக்கும் இடத்தில் எப்போதுமே சந்தோசம் குடிகொண்டிருக்கும். ஆனால் எப்போதும் தமிழர் துயரநிலை கண்டு அவர் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. அவர் அந்தப் பாடலை அடிக்கடி பாடும்போது தமிழர் துயரநிலையை சூட்சுமமாகப் பாடுவதாக தோழர்கள் நினைத்துக் கொள்வார்கள். எமது இயக்கத்தில் எமது தேசியத் தலைவர் பிரபாகரனுடன் அக்காலத்தில் தோளோடு தோளாய் நின்று இயக்கத்தைப் பலமாகக் கட்டியெழுப்புவதற்காக அயராது உழைத்தார் அம்மான். எழுபதுகளின் நடுப்பகுதியில் எமது தலைவருடன் இணைந்து கொண்டு செயற்படத் தொடங்கி உமையாள்புரம், திருநெல்வேலி தாக்குதல் உட்பட பல தாக்குதல்களில் தனது துணிவையும், வீரத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். 1983ஆம் ஆண்டு திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட நடவடிக்கைக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் வேகமாகவும் அதேவேளை நிதானத்துடனும் வளரத் தொடங்கியது. போர்ப்பயிற்சிகள் இந்தியாவில் ஆரம்பமாகின. அங்கு நடந்த முதலாவது பாசறையின் பொறுப்பாளராக இருந்த பொன்னம்மான் பயிற்சியின் போதே சகவீரர்களை எமது இயக்கத்தின் விதிமுறைக்கேற்ப உருவாக்கிக் கொண்டிருந்தார். இந்தப் பாசறையில் தளபதிகளான கிட்டு, விக்டர், புலேந்திரன், சூசை, பொட்டு, கணேஸ், அருணா, ராதா, பரமதேவா, பதுமன், கேடில்ஸ் போன்றவர்கள் உட்பட சுமார் நூறுபோராளிகள் இருந்தனர். பயிற்சியை முடித்துக் கொண்ட பொன்னம்மான் தமிழ்நாட்டில் பல இடங்களில் பயிற்சி முகாம்களை ஏற்படுத்தி புதிய வீரர்களை புரட்சியாளர்களாக்கினார். உலகமே வியக்கக்கூடிய வகையில் எமது போராட்டம் வளர்ச்சியடைவதற்குத் தேவையான, புதிய வீரர்களிற்குப் பயிற்சி அளித்தல், வேண்டிய ஆயுதங்களைச் செய்து கொள்ளல் போன்ற முக்கிய விடயங்களில் பொன்னம்மானின் முயற்சி கணிசமாக இருந்தது என்றே சொல்லலாம். வெடிமருந்துகளைக் கையாள்வதில் பொன்னம்மான் மிகவும் வல்லுனராக இருந்தார். அதற்கேற்றவாறு மேலும் பல வீரர்களை, ஆயுதங்கள் செய்யும் பிரிவிற்குத் தகுதியுள்ளவர்களாகவும் ஆக்கியிருந்தார். பேராட்டத்திற்கு கை எறிகுண்டு கணிசமான அளவு தேவையாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் குண்டு தயாரிப்பு வேலைகள் சாத்தியமற்றதாக இருந்தது. பொன்னம்மானின் கடுமையாக முயற்சியினால் 85, 86ஆம் ஆண்டுகாலப் பகுதியில் மாதாமாதம் ஆயிரக்கணக்கில் கைக்குண்டுகள் தயாரிக்க வழிசெய்தார். இந்தியாவில் 2000இற்கும் அதிகமான வீரர்களைத் தோற்றுவித்தது மாத்திரமன்றி இராணுவத் தொழில்நுட்பத் வளர்ச்சிக்கும் முக்கிய காரணியாக பொன்னம்மான் செயற்பட்டார். பெரும் எண்ணிக்கையிலான விடுதலை வீரர்களை உருவாக்கி இயக்க வரலாற்றில் பெரும் சாதனை படைத்தவர் பொன்னம்மான். பல சிறப்புக்களும், தகுதியும், ஆளுமையும் மிக்க பொன்னம்மானின் போராட்ட வாழ்வின் இறுதிக்கணங்கள் வீரம் செறிந்தவை. யாழ்ப்பாணத்தில் உள்ள நாவற்குழி எனும் இராணுவ முகாம் மீது தாக்குதலை நடத்த கிட்டண்ணாவும் தோழர்களும் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அத்தாக்குதலில் பொன்னம்மானும் முக்கிய பங்கேற்று செயற்பட்டுக் கொண்டிருந்தார். இராணுவ முகாம் மிகவும் பலம் பொருந்திய வெளி அமைப்பைக் கொண்டிருந்தது. அது கடல் நீர் உள்வாங்கிய பகுதி. சுற்றிவர நூறு யாருக்கும் மேலாக ஒரே வெளிப் பிரதேசம். வெட்டை வெளி. சிறு நகர்வும் எதிரிக்குத் தெரிந்து விடக்கூடிய அபாயம் இருந்தது. இராணுவ முகாமைச் சுற்றி நான்கு பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு மண்ணை சுவர்போல குவித்து வைத்திருந்தனர். அவர்களுடைய காவல் அரண்களை உடைத்துக் கொண்டு உட்புகுவது என்பது மிகவும் சிரமத்துக்குரியதும் எமது வீரர்கள் தரப்பில் அதிக சேதத்தை ஏற்படுத்தக் கூடியதுமான முயற்சி. எனவே அவர்களுக்கு அதிர்ச்சியூட்டி அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு அவர்கள் காவல் அரண்களை பலப்படுத்துவதற்கு முன்னர் நாம் தாக்கி உடபுகக் கூடியதாகத் திட்டம் தீட்டப்பட்டது. தினமும் அந்த இராணுவ முகாமுக்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒரு பவுசர் செல்வது வழக்கம். அது வெளியாரின் வண்டி: சம்பளத்திற்கு அமர்த்தப்பட்டு இருந்தது. எனவே அதைப் போலவே ஒரு பவுசர் வண்டியைத் தயாரித்து, அதன் கீழ் அரைவாசிப் பகுதிக்கு தண்ணீரை விட்டு, திட்டமிட்ட நாளில் உள்ளே அனுப்பி வெடிக்க வைத்து முகாமை தாக்கியழிப்பதற்கான வேலைகள் நடக்கத் தொடங்கின. பழைய வண்டியைப் போல் ஒரு புதிய வண்டியைத் தயாரிப்பது என்பது மிகவும் கஸ்டமான விடயமாக இருந்தது. அதிலும் அந்த பவுசர் எஙகோ தாக்குதலுக்குள்ளாகி ஒரு பக்கத்தில் நசுங்கியும் இருந்தது. அது மாத்திரமல்ல தோழர்கள் செய்யும் வண்டி வாயில் காவலர்களைத் தாண்டிச் செல்ல வேண்டி இருந்ததால் அதேபோல் நசுக்கப்பட வேண்டி இருந்தது. இயற்கையாக விபத்துக்குள்ளான வண்டியைப் போல் வெடிமருந்தேற்றிச் செல்லும் வண்டியை மிகச் சிரமத்திற்குப் பின் உருவாக்கினார்கள். புதிதாக மை பூசிய புவுசரை பழைய பவுசரைப் போல் உருமாற்றம் செய்ய வேண்டியிருந்தது. ஏன் பழைய வண்டியில் ஏற்பட்டிருந்த துருப்பிடித்த பகுதிகூட தாக்குதலுக்கு தயாரான பவுசரில் இருந்தாக வேண்டும். அதைவிடவும் பவுசர் இரு பகுதியாகப் பிரிக்கப்பட்டு கீழ் பகுதி வெடிமருந்து நிரப்பிய பகுதியாகவும், மேல் பகுதியில் தண்ணீர் நிரம்பிய பகுதியாகவும் தயாரித்தோம். ஏனென்றால் முகாம் வாயிலில் உள்ள காவல் அரணில் இருப்பவர்கள் பவுசரின் மேல் ஏறி மூடியைத் திறந்து தண்ணீரைப் பார்த்தபின்தான் உள்ளே அனுமதிப்பார்கள். இத்தனை சிரமங்களின் மத்தியிலும் அந்த பவுசரை மிக நேர்த்தியாக வடிவமைத்தார்கள். பவுசருக்கு வெடிமருந்தை இணைக்கும் பணியை பொன்னம்மான் எடுத்துக் கொண்டார். இம்முயற்சிக்கு வழிகோலி, அயராது உழைத்து வந்தவன் கேடில்ஸ்தான். கேடில்ஸ் அப்போது சாவகச்சேரிப் பகுதிக்கு பொறுப்பளராக விளங்கியவன். மிகத் துல்லியமாக முகாமை வேவு பார்த்து, இராணுவ முகாமினது ஒவ்வொரு நடவடிக்கையையும் அவதானித்து வைத்திருந்தான். கேடில்சும், வாசுவும் சேர்ந்துதான் இரவுபகலாக உழைத்து அந்த பவுசரை உருவாக்கினார்கள். அவர்களுக்குத் துணையாக ரஞ்சன் எனும் பொறியியலாளர் ஒருவர் பணியாற்றினார். அவர் பொன்னம்மானின் உறவினருங்கூட. மிகுந்த மதிநுட்பம் வாய்ந்த ரஞ்சன், வாசுவோடு சேர்ந்து விமானமொன்றைத் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார். முழுவதுமாக தன்னை இயக்கத்துடனேயே இணைத்துக் கொண்டவர். 14.02.1987 அன்று தாக்குதல் நடத்துவதாக இருந்தது. கெரில்லா தாக்குதல்களை இரவு நடத்துவதுதான் தோழர்களுக்கு உசிதமாக இருந்தது. தாக்குதல் தொடங்கினால் இராணுவ ஹெலிகொப்டர்களும், குண்டு வீச்சு விமானங்களும் தகவல் பெற்று எம்மைத் தாக்கத் தொடங்கலாம். பகல் வேளையானால் மேலிருந்து கண்டுபிடித்து குண்டு வீசுவது அவர்களுக்கு மிகவும் சுலபமான விடயம். ஆனால் பிற்பகல் 6 மணிக்குப் பின் இராணுவ முகாமுக்கு தண்ணீர் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. எனவே கடைசி சந்தர்ப்பத்தை தோழர்கள் தாக்குதலுக்கான நேரமாக குறித்துக் கொண்டார்கள். 6:30 மணிக்கு சண்டை தொடங்குமானால் சுமார் ஒரு மணி நேரத்தில் இருட்டடித்துவிடும். அதன்பின் தோழர்களுக்கு மிகவும் பாதுகாப்பாகவே இருக்கும். முதல்நாள் இரவிரவாக பொன்னம்மான், வாசு, ரஞ்சன் ஆகியோர் மருந்தடைத்தனர். வெடிமருந்தின் நச்சுத்தன்மை அவர்களைப் பாதித்தது. அதனால் மூவரும் மிகச் சோர்வாக வேறு இருந்தார்கள். அதிகாலை வெடிமருந்து இணைக்கப்பட்ட நிலையில் பவுசர் தயாராக நின்றது. அம்மான் அவ்விடத்திலேயே தூங்கியும் விட்டார். வாசுவும் கிட்டண்ணாவும் தாக்குதல் குழுக்களைப் பிரித்து அவரவர்களுக்குத் தேவையான வெடிபொருட்களை இணைத்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மூன்று பெரிய லொறிகள் தயார்ப்படுத்தப்பட்டன. முகாமுக்குள் சென்ற பவுசர் வெடித்ததும் ஜொனி, கேடில்ஸ், சூசை தலைமையிலான குழுக்கள் லொறிகளில் விரைந்து முகாமுக்குள் சுட்டுக் கொண்டே உட்புகுவதாகத் திட்டம். லொறியின் முன்புறமும், மேல்பக்கமும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன. முதல் லொறியில் ரொக்கட் லோஞ்சருடன் நிற்பவன் உட்புகும் போது ரொக்கட்டால் வாயில் காவல அரணை உடைத்தெறிவதாக திட்டம் தீட்டப்பட்டிருந்தது. நேரம் பிற்பகலை நெருங்கிக் கொண்டிருக்க தாக்குதல் குழுக்கள் தத்தமது நிலைகளுக்கு செல்லத் தொடங்கி விட்டனர். பவுசரை அனுப்பும் பொறுப்பு பொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கிட்டண்ணா தாக்குதலை நடத்துவதற்காக, சகலருடனும் வாக்கிடோக்கியில் தொடர்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் இடம் தெரிந்தெடுக்கப்பட்டு அதற்குரிய வசதிகள் செய்திருந்தார். கிட்டண்ணா ஐந்து மணியளவில் எல்லாக் குழுக்களையும் சரி பார்த்து வந்து கொண்டிருந்தார். நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கிட்டண்ணா ஒரு குழுவினர் நின்ற வீட்டில் அவர்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார்… மிகப்பெரிய சத்தத்தைத் தொடர்ந்து ஒரு முறை பூமி அதிர்ந்தது. அதிர்ச்சி, வியப்பு, சற்றும் புரியவில்லை. 5:30க்கு வேறு இந்த வெடிச்சத்தம் கேட்டதால் தோழர்கள் மத்தியில் ஒரே குழப்பம். கிட்டண்ணா பொன்னம்மானை வாக்கியில் பலதடவை கூப்பிட்டார். கேடில்சைக் கூப்பிட்டார். வாசுவைக் கூப்பிட்டார். பதில் இல்லை. பல தடவைகள் அழைத்தார். மீண்டும் பதில் இல்லை. ஜொனியை அழைத்தார்: பதில் வந்தது. ஜொனியை அழைத்து உடனடியாக சத்தம் கேட்ட இடத்திற்கு அனுப்பினார். ஜொனி அங்கு சென்ற போது எங்கும் தூசிமயம். பிரளயம் ஒன்று ஏற்பட்டதைப் போல இருந்தது. அவ்விடத்தில் பெரிய குழி, அதற்கருகில் கேடில்சினுடைய கார் நொறுங்கிப் போய் கிடந்தது. இதற்கு 50 யார் தூரத்தில் லொறி நின்றது. லொறிக்குள் பார்த்தபோது ஐவர் அதற்குள் இறந்து கிடந்தார்கள். தண்ணீர் நிரப்பிக் கொண்டிருக்கையில் பவுசர் வெடித்து விட்டது. ஆனால் அந்த இடத்தில் நின்று சம்பவத்தைப் பார்த்த யாரும் உயிருடன் இல்லை. பொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ரஞ்சன் ஆகியோர் அந்த இடத்துக்கு வந்ததாக தோழர்கள் கூறினார்கள். பவுசரில் தண்ணீர் நிரப்பும்போது தண்ணீர் சிறிது ஒழுகியதாம். அதைப் பொன்னம்மான் கேடில்சுக்கும் வாசுவுக்கும் தெரிவித்து பொறியியலாளர் ரஞ்சனையும் அழைத்துக் கொண்டு பவுசர் நின்ற இடத்திற்கு சென்றார்கள். பொறியியல் நடவடிக்கையின் போது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்த, அங்கு நின்ற எவருமே இல்லை. எல்லோரையும் தேடினார்கள். வாசுவின் பிஸ்டலும், அடையாள அட்டையும் கேடில்சின் காற்சட்டையின் ஒரு பகுதியும்தான் கிடைத்தது. பொன்னம்மானை அடையாளம் காணக்கூடியவகையில் அவருடைய உடலோ, உடலின் பகுதியோ எந்தத் தடமும் கிடைக்கவில்லை. ஈழத்தில் வீசிக் கொண்டிருக்கும் காற்றோடு காற்றாய் அவர் மறைந்து விட்டார் முகாம்கங்களில் கலைநிகழ்ச்சிகளை வைப்பித்தும், குறும்புகள் செய்தும், நடித்தும், சிரிக்க வைத்து, எந்த நேரமும் சந்தோசத்தைக் குடிகொள்ள வைத்திருக்கும் அந்த மனிதன் இன்று இல்லை. “அம்மான் ஒரு பாட்டுப் பாடுங்கோ” என்று தோழர்கள் அடம் பிடிப்பதும் அவர் எப்போதும் தோழர்களுக்காய் பாடிக் காட்டும் அந்தப் பாட்டும் நினைவில் நனைய கண்கள் பனிக்கின்றன. ஈரமான இதயம் சுமந்த மனிதர்களின் நண்பனாய், தந்தையாய், தனையனாய், தாயாய், எல்லாமுமாய் நின்ற எங்கள் அம்மானிடம் வளர்ந்த எத்தனையோ தோழர்கள் இன்றும் அவரது கனவைச் சுமந்தபடி மண்ணில் நிற்கிறார்கள். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/3bc796f3-4535-4156-bf6b-c8dbf876361a
-
பொத்துவில் மண்ணில் விடுதலை நெருப்பாய், விடியலுக்காய் எழுந்தவன் லெப். சைமன் (ரஞ்சன்)
பொத்துவில் மண்ணில் விடுதலை நெருப்பாய், விடியலுக்காய் எழுந்தவன் லெப். சைமன் (ரஞ்சன்). தென் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பெங்களுரின் தொடரூந்து நிலையத்தில் சுமார் நூறுவரையிலான விடுதலைப்புலிப் போராளிகள் இராணுவப் பயிற்சிபெறும் நோக்கோடு செல்வதற்கு தயாரான நிலையில் இருந்தனர். அப்போது ரஞ்சன் தனது போராளி நண்பர்களை நோக்கி இந்த பெங்களூர் நகருக்கு நான் அப்போதே வரவிருந்தேன். வானூர்தி ஓட்டியாக பயிற்சி பெறுவதற்கு இங்குள்ள நிறுவனத்தில் அனுமதியும் பெற்றிருந்தேன். ஆனால் வரவில்லை. இன்று, இங்கு நிற்கின்றபோது அதையும் எண்ணிப்பார்க்கின்றேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஏனெனில் எமது மக்களின் விடுதலைக்கான ஓர் பயணத்தில் நாம் இருப்பதுதான் அந்த மகிழ்ச்சிக்குரிய காரணமாகும். தென் தமிழீழத்தின் எல்லையில் அமைந்துள்ள ஓர் ஊர்தான் பொத்துவில். இங்கு தமிழ்மொழியைக் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்களும், இந்துக்களும், கணிசமாக கிறிஸ்தவர்களும் இணைந்து வாழ்ந்து, எமது வரலாற்றைக் கூறக் கூ டிய எமது பாரம்பரிய தாயகமாகவும் இது விளங்குகின்றது. சிங்களம் பரவுகின்ற தென் தமிழீழத்தில் 1963 ம் ஆண்டு காலப்பகுதியில் சிங்கள ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் இவ்வூர் அமைந்துள்ளதால் என்றும் சிங்கள ஆக்கிரமிப்பின் அபாயம் இருந்து கொண்டே வந்துள்ளது. தமிழர்களின் இன விகிதாசாரத்தை தென் தமிழீழத்தில் மாற்றுவதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டதும் இம்மாவட்டத்தில்தான் என்பதையும் வரலாற்று ரீதியாக நாம் அறிந்திருக்கின்றோம். அது மட்டுமல்லாமல் 1958 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிங்கள ஆட்சியாளர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனஅழிப்பு நடவடிக்கையும் பின்பு அம்பாறை மாவட்டமாக மாற்றப்பட்ட பகுதிகளிலே மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கைக்கு எதிராக துறைநீலாவணை என்ற ஊரில் சிங்கள இராணுவத்தினரையும் அவர்களோடு இணைந்திருந்த சிங்களக்காடையர்களையும் எதிர்த்து ஆயுதம் தூக்கி தாக்கிய வரலாற்று நிகழ்வையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம். தமிழ்மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஆயுதம் தூக்கவேண்டியநிலை அன்றே ஏற்பட்டுவிட்டது. வீரத்துடன் வாழ்கின்ற தமிழர்களுடைய நிலமான இம் மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான போராளிகள் விடுதலைக்காக புறப்பட்டது ஒரு வரலாற்றுக்கடமையாகும். தொன்மையான வரலாற்றைக் கொண்டுள்ள தமிழினம் தனது இலக்கிய வரலாற்றில் குறிப்பிட்டுள்ள ஐவ்வகை நிலங்களில் நெய்தல், மருதம், குறிஞ்சி ஆகிய மூன்றுவகை நிலங்களைக் கொண்டுள்ள பொத்துவில், உகந்தை முருகன் கோயிலினால் மேலும் சிறப்பான வரலாற்றை எமக்கு உணர்த்துகின்றது. இக்கோயிலுக்கு அப்பால் தென் திசையில் அமைந்திருக்கின்ற பாணமை என்னும் ஊர் தமிழர்களுடையதாக இருந்து பின்பு சிங்கள ஊராக மாறியதையும் நாம் அறிந்திருக்கின்றோம். இன்று தமிழர்கள் எவரும் வாழவில்லை என்றநிலையில் இவ்வூர் இருக்கின்றது. இவ்வாறான வரலாற்றுடன் பின்னிப்பிணைந்த பொத்துவில் மண்ணிலிருந்து புறப்பட்டவர்கள்தான் லெப். சைமன் (ரஞ்சன்), அம்பாறை மாவட்டத்தின் தளபதியாகவிருந்த கப்டன். டேவிட், லெப். ஜோசப் (நாகராஜா) என்பவர்களாகும். இவ்வூரிலும், இவ்வூரையண்டிய ஊர்களிலிருந்தும் தீவிரமாக செயல்பட்ட தமிழ் இளைஞர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அரசியல் ரீதியாக விடுதலையில் தமிழ் மக்கள் எழுச்சி கொண்ட காலப்பகுதியில் அதிதீவிரமாக இயங்கிய அம்பாறை மாவட்ட இளைஞர்களில் இவர்கள் குறிப்பிடத் தக்கவர்களாகவிருந்தனர். இம்மாவட்டத்தில் மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்ட தமிழர்களின் அரசியல் நிலையை தக்கவைத்துக்கொள்ள அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டனர். இன்னும் இம் மாவட்டத்தில் தமிழர்கள் ஒன்றுபட்டு செயல்படுவதால்தான் ஒரு பிரதி நிதித்துவத்தையாவது பெற்றுக்கொள்ள முடிகின்றது. அக்கரைப்பற்றிலிருந்து பாணமை வரையிலான பகுதியில் அமைந்துள்ள அனைத்து ஊர்களும் தமிழ் சொல்லும் தமிழர்களுடைய நிலமாக இன்னும் இருக்கின்றது. விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறாமல் இருந்திருந்தால் அந்தநிலத்தை தமிழர்களுடைய நிலமாக எம்மால் இன்று பார்க்கமுடியாமல் இருந்திருக்கும். அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களுடைய பாரம்பரிய சொந்தநிலங்கள் பறிக்கப்பட்டு சிங்களக்குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு தமிழர்களுடைய நிலங்கள் சிங்களவர்களுடைய நகரமாக மாற்றப்பட்டதை நாம் பார்த்திருக்கின்றோம். 1948 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆக்கிரமிப்பு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எமது விடுதலைப் போராட்டத்திற்கான நீதியான நியாயமான காரணங்களை எம்மால் கூறிக்கொண்டே இருக்கமுடியும். இது எமது இனத்தின் அடிப்படை தனிமனித உரிமையுடன் அமைந்ததாகவும் இருக்கின்றது. 1970 களில் உணர்வுள்ள தமிழ் இளைஞர்கள் தீவிரமாக விடுதலையைப் பற்றி எண்ணத் தொடங்கினர்.தம்வாழ்வைவிட தமது இனத்தின் வாழ்வை மேலாக எண்ணி களமிறங்கினர். சிங்களக் காவல்துறையினரின் கண்காணிப்புக்குள் இவர்களின் நடவடிக்கைகள் கொண்டுவரப்பட்டன. ஆனால் அச்சமின்றி தமது பயணத்தை தொடந்தனர். பொத்துவில் என்னும் ஊரில் தமிழர்களுடைய பாரம்பரிய தொழிலான விவசாயத்தையும், அதனோடு இணைந்த வியாபாரத்தையும் தொழிலாகக்கொண்ட வசதிபடைத்த குடும்பத்தில் 1956 .09 .20 அன்று பிறந்த ரஞ்சன். தன் வாழ்வைவிட தமிழர்களின் விடுதலையை நேசித்ததனால் தமிழ் இளைஞர்கள் மத்தியில் தீவிரசெயல்பாட்டாளராக தன்னை மாற்றிக்கொண்டார். அடக்குமுறையிலிருந்து தமிழினம் விடுதலை பெறுவதற்கு ஆயுதப்போராட்டமே சிறந்த வழி என்பதில் அசையாத நம்பிக்கையும் கொண்டிருந்தார். 1977 ம் ஆண்டு ஸ்ரீலங்காவின் பாராளுமன்றத்துக்கு தொகுதி அடிப்படையில் தேர்தல் நடைபெற்றது. தென் தமிழீழத்தில் அமைந்துள்ள மூன்று மாவட்டங்களிலும் உள்ளடக்கப்பட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, சம்மாந்துறை, அம்பாறை. பொத்துவில் ஆகிய தொகுதிகளுக்குள் பொத்துவில் இரட்டை அங்கத்தவர் தொகுதியாக இருந்தது. இத்தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ரஞ்சனின் தந்தை கனகரத்தினம் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார்.அம்பாறை தவிர்ந்த ஏனைய தொகுதிகளில் முஸ்லிம் ஐக்கிய முன்னணி ஆதரவுடன் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். கனகரத்தினம் பொத்துவில் தொகுதியிலிருந்து இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்தார். இத்தேர்தலில் தமிழ் இளைஞர்களின் பங்கு அளப்பரியதாகயிருந்தது. தமிழீழம் என்ற இலட்சியத்தையடைவதற்கு அரசியல் வழியை விட ஆயுதப் போராட்ட வழியே சரியானபாதை என்பதில் மாற்றுக்கருத்தில்லாத நிலை தமிழ் இளைஞர்களிடமிருந்தது. இதனால் ஆயுதங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கத்திற்காக அரச நிறுவனங்களிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கையொன்றை திட்டமிட்டனர். 1978 ம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தீவிரமாகச் செயல் பட்ட இளைஞரான பரமதேவாவுடன் ஒன்றிணைந்து செங்கலடி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் கிராமிய வங்கியிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை பரமதேவா, ரஞ்சன் இன்னும் இருவருடன் சேர்ந்து மேற்கொண்டனர். இச்சங்கத்திற்கு எதிரே அமைந்திருந்த சாந்தி சாராயவிடுதியில் சாராயம் அருந்திக்கொண்டிருந்த சிங்கள காவல் துறையினரின் புலனாய்வாளர்களுக்கு இச்சம்பவம் தெரிந்ததனால் ரஞ்சன் குழுவினரின் வாகனத்தை பின்தொடந்தனர். மட்டு – பதுளை நெடுஞ்சலையில் கரடியனாறு என்ற ஊரை அண்மித்தபோது புலனாய்வாளர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். பரமதேவா விழுப்புண் அடைந்த நிலையில் ரஞ்சன் உட்பட்ட மூவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் இவர்களுடன் சாரதியாக சென்றவர் தப்பிவிட்டார். அதன்பின் நீதிமன்றத்தில் நடாத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில் ப . நோ. கூ . சங்கப் பணியாளர்களால் இனங்காணப்படாத நிலையில் விடுதலை செய்யப்படவிருந்தனர். ஆனால் சிங்கள ஆட்சியாளர்களும் சிங்கள காவல்துறையினரும் விரும்பாத நிலையில் தீர்ப்பு வழங்குவது ஒத்திவைக்கப்பட்டது. இவர்களைப் போன்றவர்களை விடுதலை செய்ய விரும்பாத சிங்கள அரசு வாக்குமூலத்தை மாத்திரம் ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பு வழங்குவதற்கு ஏற்றவிதத்தில் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வந்து இம் மூவருக்கும் 5 வருட சிறைவாசத் தண்டனையை விதித்தது. போகம்பர என்ற சிங்கள ஊரில் அமைக்கப்பட்டிருந்த சிறைக்கூடத்தில்தான் ரஞ்சன் சிறை வைக்கப்பட்டிருந்தார். இச்சிறையில் சிங்களக்காடையரின் அட்டகாசத்தினால் தமிழ்க் கைதிகள் தாக்கப்பட்டுக்கொண்டிருந்தனர். தமிழ் அரசியல் கைதியான ரஞ்சன் மீது பலமான சிங்களக்காடையன் ஒருவன் தாக்குதல் நடத்த முற்பட்ட போது குளிப்பதற்கு வைத்திருந்த வாளி ஒன்றினால் அவனை மயக்கமுற்றுவிழமட்டும் தாக்கி தமிழ் அரசியல் கைதிகளுக்கு சிறைக்குள் ஒரு பாதுகாப்பைக் கொடுத்தான். தமிழ் உணர்வோடு, தமிழனின் வீரத்தோடு, தன்மானத்தோடு வாழ எண்ணுகின்ற ரஞ்சன் போன்றவர்கள். சிங்களச் சிறைகளில் அடைக்கப்பட்டாலும் அடங்காத் தமிழர்களாக வாழ்ந்ததை எம்மால் மறக்கமுடியாமல் இருக்கின்றது. இவர்கள் வாழ்ந்த காலத்தில், இவர்களின் ஒவ்வொரு செயல்பாடும் தன்னலமற்றதாக தமது இனம் சார்ந்ததாக இருந்ததை வரலாற்றில் பதிவு செய்வது காலத்தின் பொருத்தமான ஒன்றாகும். ரஞ்சனின் தந்தை கனகரெத்தினம் கொள்கை, இலட்சியத்தைவிட்டு தடம் புரண்டு தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக செயல்பட்டு சிங்களப் பேரினவாதியான ஜே . ஆர் .ஜெயவர்த்தன அரசுடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் மந்திரியாக நியமிக்கப்.பட்டார். இச்சந்தர்ப்பத்தில்தான் கனகரத்தினம் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொழும்பில் வைத்து சுடப்பட்டார். ஆனால் அவர் சாகவில்லை அப்போதும் ரஞ்சன் மனநிலையில் எவ்வித சலனமும் ஏற்படவில்லை. ஆயுதப் போராட்டமொன்றில் ஈடுபடுவதையே விருப்பமாக கொண்டிருந்தார். தந்தையின் இச்செயல் ரஞ்சன் அவர்களுக்கு மிகுந்த மன வேதனையைக் கொடுத்திருந்தது. பாசத்திற்குப்பால் தமிழ் மக்கள் மீது கொண்டபாசம், அவர்களின் உரிமை அவர்களின் விடுதலை என்பவற்றில் ரஞ்சன் அவர்களின் ஈடுபாடு மிகவும் அதிகமாகவே காணப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகன் ஆயுதம் தூக்கிய போராளியாக மாறிய வரலாற்றுப் பதிவாகவும் இது அமைந்தது. இச்சந்தர்ப்பத்தில் இன்னுமொன்றை குறிப்பிட விரும்புகின்றோம் மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப்புலிப் போராளியாக செயல்பட்ட அக்கால பருத்தித்துறை பாராளுமன்ற உறுப்பினர் துரைரத்தினம் அவர்களின் மகன் மேஜர். கமல் அவர்களையும் எண்ணிப் பார்க்கின்றோம். விடுதலைப் போராட்டத்தில் பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்திய கரும்புலி கப்டன். மில்லர் தாக்குதல் நடத்திய நெல்லியடி ம. மாகவித்தியலயத்தில் நிலைகொண்டிருந்த சிங்கள இராணுவத்தினர் மீதான தாக்குதலில் மேஜர். கமல் வீரச்சாவடைந்தார். தனித்துச் சிந்தித்து, தனித்துச் செயல்பட்டுக் கொண்டிருந்த ரஞ்சன் குழுவினர் பலத்தைப் பெருக்குவதற்கு ஒன்றிணைந்து செயல்படஎண்ணிய வேளையில் தமது பார்வையில் பட்டவர்தான் எமது தேசியத் தலைவர் வே. பிரபாகரன். தமிழீழத்தை மீட்டெடுக்கும் உறுதி தளராத கொள்கைப்பற்று, நிமிர்ந்து நின்று எதிரியைச் சந்திக்கும் திறன், தனது நலனைவிட தாய்மண்ணின் விடுதலை, தமிழ்மக்களின் நல்வாழ்வு என்பதையே உயிர்மூச்சாக கொண்ட தமிழ் தேசியத்தின் தலைவருடன் இவர் இணைந்துகொண்டது காலத்தின் கட்டாயம் என்பதையே உணரமுடிகின்றது. தமிழ் மக்களின் அரசியல் ஒற்றுமையில் கிடைத்த பெருவெற்றியினால் பாராளுமன்ற உறுப்பினரான கனகரத்தினம் கொள்கையை விட்டு, கட்சி மாறிய செயலானது அனைத்து தமிழ் மக்களையும், தமிழ் இளைஞர்களையும் ஆத்திரமடைய வைத்தன. ஆனால் அவருடைய மகன் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இணைந்து செயலாற்ற முன்வந்ததை வரவேற்று, தன்னுடன் இணைத்துக்கொண்ட எமது தேசியத் தலைவர் அவர்களின் பரந்த நோக்கையும் தீர்க்கதரிசனமான கொள்கைகளையும் நாம் இன்று நினைத்துப் பார்க்க முடிகின்றது. சுயனலமற்றவர்களையும், கொள்கையில் உறுதியானவர்களையும் தம்முடன் இணைக்கின்ற எமது தலைவரின் செயல் பாட்டுக்கு இது ஓர் பெரிய உதாரணமாகும். இந்தியாவின் விடுதலைப் புலிகளின் முதலாவது பாசறையில் ரஞ்சன் உட்பட 100 வரையிலான போராளிகள் பயிற்சியை மேற்கொண்டனர். இங்கு பயிற்சி பெற்ற அனைத்து போராளிகளுக்கும் ரஞ்சன் பற்றிய பின்னணி தெரிந்திருந்தும் அவர்கள் எல்லோரும் ரஞ்சன் மீது அளப்பெரிய மதிப்பு வைத்திருந்தனர். ரஞ்சன், சைமன் என்னும் பெயருடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பயிற்சியை முடித்துக்கொண்டு தாய்நாட்டுக்குத் திரும்பியபின் இயக்கத்தின் சில நடவடிக்கைகளுக்கு பொறுப்பாகப் பணியாற்றத் தொடங்கினார். தலைவரின் ஆணைப்படி பரமதேவா அவர்களின் வீரச்சாவைத் தொடர்ந்து மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களுக்கான தளபதியாக பணியாற்றச் செல்வதற்காக தனது பயணத்தை வட தமிழீழத்திலிருந்து தென் தமிழீழத்திற்கு ஆரம்பித்தார். அக்காலத்தில் போராளிகள் நடைப்பயணத்தின் மூலமாகத் தான் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு செல்வது வழக்கமாகவிருந்தது. சைமன் (ரஞ்சன்) குழுவினர் தென் தமிழீழம் நோக்கிய பயணத்தில் வன்னியில் நின்றபோது கொக்கிளாய் ஸ்ரீ லங்கா இராணுவ முகாமை தாக்குவதற்கு விடுதலைப் புலிகள் திட்டமிட்டனர். 13 . 2 .1985 அன்று நடத்தப்பட்ட இத்தாக்குதலில் சைமன் குழுவினரும் ஈடுபட்டனர். இத்தாக்குதலில் சைமன் (ரஞ்சன்) பொத்துவில் அம்பாறை, காந்தருபன் கல்லடி மட்டக்களப்பு, கெனடி கிரான் மட்டக்களப்பு, மகான் கம்பர்மலை, ரவி செம்மலை, ஜெகன் திருகோணமலை, சோனி சாவாகச்சேரி, தனபாலன் பரந்தன், காத்தான் சாவாகச்சேரி, வின்சன் (பழசு) பருத்தித்துறை, நிமால் பருத்தித்துறை, சங்கரி வல்வெட்டித்துறை, வேதா கண்டவளை, காந்தி தம்பலகாமம், ரஞ்சன் கண்டவளை, மயூரன் உட்பட 16 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் சிங்கள இராணுவ முகாம் மீதான தாக்குதலாகவும் இது வரலாற்றில் பதிவாகியது. தென்தமிழீழத்தின் எல்லையிலிருந்து புறப்பட்ட லெப்.சைமன் அழியாத வரலாற்றுடன் எமது மக்களின் மனங்களில் என்றும் இடம் பெற்றுள்ளார். வரலாற்றைப்படிப்பவர்கள்தான் வரலாற்றில் இடம்பெறவும் முடியும் வரலாற்றைப் படைக்கவும் முடியும். வரலாறு எப்போதும் எமக்கு வழிகாட்டியாக அமையும். இவற்றை எமது இளந்தலை முறையினர் பின்பற்ற வேண்டும் என்பதைத்தான் உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனும் எதிர்பார்க்கின்றான். தன்னாட்சி என்பது தமிழரின் பிறப்புரிமை. தமிழீழம் என்பது தமிழரின் வாழ்வுடமை. https://www.meenagam.com/பொத்துவில்-மண்ணில்-விடுத/
-
லெப்.கேணல் நீலன்
- மரணித்தது மரணமே கௌசல்யன் அல்ல.!
- செயற்திறன் மிக்க தளபதி லெப் கேணல் விநாயகம்
- தமிழீழப் போர் மருத்துவ வரலாற்றில் அசாத்திய ஆற்றல் மேஜர் இறைகுமரன் (திவாகர்)
தமிழீழப் போர் மருத்துவ வரலாற்றில் அசாத்திய ஆற்றல் மேஜர் இறைகுமரன் (திவாகர்) 1990ம் ஆண்டு யாழ் நகரை இரும்பரக்கனாக அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது ஒல்லாந்தர் உருவாக்கிய கோட்டை. இதனை சிறிலங்கா படைகள் பலமான தளமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றது. பல நூறு ஆண்டுகளின் பின்னர், பகைவன் கோட்டையொன்றைக் கைப்பற்றுவதற்கான முற்றுகையைத் தமிழர் வீரவரலாறு சார்பாகப் புலிகள் நடாத்திக்கொண்டிருக்கின்றார்கள். ஒரு லட்சம் தீவுப்பகுதி மக்கள் ஏதிலிகளாயினர். பல இலட்சம் தீபகற்ப மக்கள் அல்லலுறுகின்றனர். இதற்கு நேரடிக் காரணமான படை முகாம் வீழ்த்தப்பட்டேயாக வேண்டும். இம்முகாமிற்குப் முதன்மை வழங்கற் பாதையாக விளங்கும் பண்ணைப் பாலம் தகர்க்கப்படல் வேண்டும். ஐம்பது மீற்றர் முன்னால் பகைவனின் பதுங்கிக் குறிபார்த்துச் சுடும் வீரர்கள் விழித்திருக்கின்றார்கள். அவர்களின் கழுகுப்பார்வை இவர்களின் பகுதியைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றது. பகைவன் கண்களில் மண்ணைத்தூவி பண்ணைக் கடற்கரை நோக்கி வெடிமருந்துகளை நகர்த்தவேண்டும். எக்கணமும் உயிர் பறிபோகும் ஆபத்தான இப்பணியைத் திவாகர் செய்து கொண்டிருந்தான். எது நடக்கலாகாது என எதிர்பார்க்கப் பட்டதோ இது நடந்தேவிட்டது. ஆனால் சிறு அதிஸ்டத்துடன் எதிரியின் ரவையொன்று இவனது காலைத்துளைத்துச் சென்றுவிட்டது. கண்விழித்துப் பார்க்கையில் யாழ். மருத்துவமனையில் படுத்திருந்தான். காயம் மாறுகையில் அக்காலின் நீளம் ஒரு இஞ்சி கட்டையாகி இருந்தது. கீழ்க்காலின் ஒரு பகுதி தொடுகை உணர்வை இழந்திருந்தது. அக்காலை இழுத்திழுத்தே நடக்கவேண்டியிருந்தது. தனக்கேற்பட்ட வலுக்குறைவை நடையின் வேகத்தைக் கூட்டுவதன் மூலம் ஈடுசெய்ய முற்பட்டான். அம் மருத்துவமனையில் போர்க் காயமுற்ற நூற்றுக்கணக்கான போராளிகள் பண்டுவம் (சிகிச்சை) பெறுகின்றார்கள். அவர்களின் தேவைகளைப் நிறைவும் செய்யும் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்துவது மிகவும் சிரமமாக இருந்தது. இவனது ஆலோசனைகளும் பண்பான செயற்பாடுகளும் அதனை இலகுவாக்கியது. அப்பொறுப்பை முழுமையாகச் செய்யுமாறு கேட்கப்பட்டான். அதற்கு இவன் கால இடைவேளை கேட்டான். அடிப்படைப் பயிற்சி முடிவடைய முன்னரே தான் காயமடைய நேர்ந்ததையும், அதனைத்தான் முழுமைப்படுத்தினால் தான் தன்னால் முழுமையான போராளியின் மனநிலையில் செயற்பட முடியும் என்பதையும் தெளிவுபடுத்தினான். இயலாக் காலுடன் கடின பயிற்சிகளை நிறைவுசெய்து பணிக்குத் திரும்பினான். காயமடைந்தவர்கள் பலரின் மனச் சமநிலையில் மாற்றமிருந்தது. அவர்களுக்குத் தாயாய், தாதியாய், தலைவனின் பிரதிபலிப்பாய், நண்பனாய் எனப் பலராய்ச் செயற்பட்டான். மருத்துவ நிபுணர்கள், மருத்துவம் கற்பவர்கள், ஏனைய மருத்துவப் பணியாளர்கள் அனைவருடனும் அன்பாகவும் போராளிக்குரிய பிரத்தியேக பண்பை வெளிக் காட்டும் வண்ணமும் உறவாடினான். அனைவர் மனதிலும் ஆழ இடம்பிடித்தான். மனித மனங்களையும் வளங்களையும் முகாமைத்துவம் செய்வதிலும் இவன் ஒரு நடைமுறை நிபுணனாகச் செயற்பட்டான். போர்க்காலத்தில் பொருளாதார, மருந்துத்தடை களால் மக்கள் இன்னல்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வாழ்க்கைத் தரத்திலும் அக்கறை செலுத்தவேண்டி இருந்தது. தமிழீழ சுகாதார சேவைகள் நிறுவன மயப்படுத்தப்பட்டது. இதன் துணைப்பொறுப்பாளராகப் பணியாற்றப் பணிக்கப்பட்டான். இக்காலகட்டத்தில் தான், வரலாற்றின் மிகப் பெரும் துன்பமாக யாழ்ப்பாண இடப்பெயர்வு நிகழ்ந்தேறியது. யாழ் மருத்துவமனையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட போராளிகளும் பொதுமக்களும் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தனர். அவர்களைப் பாதுகாப்பாக நகர்த்தவேண்டியிருந்தது. இவ் மனிதாபிமானப் பணியின் பாரத்தின் பெரும்பகுதி இவன் தோள்களில் இறங்கியது. ஒற்றைக்காலில் சுற்றும் பம்பரமாக, இரவு பகல் பாராது இருபத்தினான்கு மணிநேரமும் இவன் சுழன்றது இன்னும் நினைவுகளில் உள்ளது. மக்கள் அனைவரும் வெளியேறிவிட்டனர். இடிவிழுந்த சுடுகாடாக இயல்பிழந்து யாழ்.மண் காட்சியளித்தது. போராளிகளின் கள மருத்துவமனையாக “ஞானம்ஸ்” உல்லாச விடுதிக் கட்டிடம் பயன்பட்டுக்கொண்டிருக்கின்றது. பணியின் களைப்பால் சிறிது கண்ணயர்ந்த திவாகர் திடீரென எழுந்து “எண்பத்தொண்டில் இந்த ஹொட்டல்ல காமினி திசநாயக்கா வந்திருந்தபோதுதான் ஆமிக்காரங்கள் யாழ்ப்பாணம் நூல் நிலையத்தை எரித்தவங்கள். அதுமாதிரி இனியும் ஏதாவது செய்வாங்கள். அதனால், யாழ். மருத்துவபீட நூலகத்தில் உள்ள நூல்களையாவது பாதுகாக்க வேண்டும்” எனக் கூறினான். இவனது எண்ணம் அங்கிருந்தவர்களுக்கு அதீதமாகப்பட்டது. அண்ணளவாக மருத்துவ பீடத்திற்கு முன்னால் 750M தூரம்வரை பகைவன் வந்துவிட்டான். வாகனங்களைக் கிட்டக்கொண்டுபோகும் சத்தம் கேட்டாலே போதும் எறிகணைகளால் பொழிவான். தமிழீழ மருத்துவக் கல்லூரி மாணவர்களைத் துணைக்கழைத்தான். தள்ளி உருட்டிச் செல்லக்கூடிய கட்டில்கள் சிலதைப் பாரஊர்தி களில் ஏற்றினான். புறப்பட்டுவிட்டான். மருத்துவபீடப் பின்பக்க திடலுக்கு வெளியில் பாரவூர்திகளை நிறுத்திவிட்டு, எல்லோரும் உள்ளே சென்றார்கள். கையினால் மின்சூழ் களின் வெளிச்சம் பொத்தி மறைக்கப்பட, மாடியில் இருந்து மனிதச் சங்கிலியாக எல்லோரும் நின்று கைமாறிக் கைமாறிப் புத்தகங்களை உருளும் கட்டில்களில் ஏற்றி, தள்ளிவந்து பாரஊர்திகளில் ஏற்றி, சாவகச்சேரிப் பகுதிக்குப் பாதுகாப்பாக அனுப்பிவைத்தார்கள். யாழ்.நகர் பறிபோகும் கவலையில் அனைவரும் துவண்டிருக்கையில் அவன் அறிவு பூர்வமாகச் சிந்தித்தது மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தியது. இடம்பெயரும் மக்களுக்கு மனிதாபிமான உதவி களைச் செய்யுமாறு ஐ.நா. தலைமைச் செயலர் அறிக்கை விட்டிருந்தார். எவ்வுதவிகளும் வந்துசேர எவ்வழிகளும் இல்லாத நிலை. மாரி மழையில் வாந்தி பேதியோ, வயிற்றோட்டமோ வந்து பல்லாயிரம் மக்கள் மடிய நேரலாம். எனும் மனித அவலம் எதிர்பார்க்கப்பட்டது. திரவஊடகமோ, நுண்ணுயிர் கொல்லி மருந்துகளோ ஒரு மருத்துவ நெருக்கடியைச் சமாளிக்கக் கூடியவாறு கையிருப்பில்லை. மருத்துவ சேவைக்கான நிர்வாகக் கட்டமைப்போ சீர்குலைந்துள்ளது. அவ்வேளை திவாகர் பின்வருமாறு கூறினான். மக்கள் கல்வியறிவுள்ளவர்கள். அடிப்படைச் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிப்பவர்கள். திடீரென ஏற்பட்ட இவ்நெருக்கடியால் அவர்கள் கவனம் சிதறும். அதனால் மீண்டும் மீண்டும் சுகாதார விழிப்புணர்வை ஊட்டுவதனூடாகப் பிரச்சினையை வரவிடாமல் தடுக்கலாம். இவனது இக்கருத்து விரைவாகச் செயலுருப் பெற்றதால் எதிர்பார்த்த அவலம் வராமல் தடுக்கப்பட்டது. யாழ் மருத்துவமனை பறிபோனதால் எம் போரிடும் வலு குறைந்துவிட்டது. இதன் தொடராக எதிரி தென்மராட்சி வடமராட்சி பிரதேசங்களைக் கைப்பற்ற முயற்சிப்பான். ஆயிரக்கணக்கில் போராளிகளும் மக்களும் காயமடைவார் கள். இச் சவாலை முகம் கொடுப்பதற்கான வளப்பிரதியீட்டைக் குறுகிய காலத்தில் ஏற்படுத்த வேண்டும். அதற்குத் துறைசார் மருத்துவக் குழுக்களைக் குறிப்பாகச் அறுவைப்பண்டுவத்திற்கான (அறுவைச்சிகிச்சைக்கான) மருத்துவ மாதுக்கள் ஆய்வுகூடத் தொழில்நுட்பவியலாளர்கள் போன்ற ஆளனி வசதியை ஏற்படுத்த வேண்டும். வழமை போல் இவனது லாவகமான செயற்பாட்டால் கைமேல் பலன் கிடைத்தது. இதனை முல்லைச்சமரில் காயமடைந்த ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட போராளிகளைக் காப்பாற்றியதன் மூலம் உணரமுடிந்தது. நெருக்கடியான நேரங்களில் பொறுப்புக்களை நுணுக்கமாகக் கையாண்டதால் வன்னி மண் மீண்டும் ஒரு பாரிய பொறுப்பினை இவனிடம் ஒப்படைத்தது. ஆம் இங்கு இவன் களமருத்துவப் பொறுப்பாளனாகச் செயற்படப் பணிக்கப்பட்டான். அகண்ட முன் அனுபவ மற்ற பகுதி, ஆங்காங்கே அடிக்கடி அகோரமாக விரியும் சமர்க்களங்கள், ஆங்கிலேயர் காலத்திற்குப் பின் திருத்தப்படாத வீதிகள். எரிபொருள், மருந்துக்கும் தட்டுப்பாடான நிலை. ஒவ்வொருவரையும் பல தடவை சாவின் விளிம் புக்குக் கொண்டுபோய்க் கொண்டுவரும் மலேரியா, காயமடைந்தவர் களை வேகமாக நகர்த்தவோ, வைத்துப்பராமரிக்கவோ போதிய வளங்கள் இல்லாத நிலை. தலையிடி முதல் உடல் துண்டுபடும் காயங்கள் வரை அனைத்துமே சிரமத்தையே பரிசளிக்கும். இவ்வளவிற்கும் இவன் செயற்பட்டான். “கடினமாக உழைத்தோ அல்லது மிதமாக உழைத்தோ பாரிய வெற்றிகளைப் பெறலாம்” இவன் அடிக் கடி கூறும் கருத்தின் முற்பகுதியைத் தன் வாழ்வின் தத்துவ மாக்கியிருந்தான். எதிரி ஜெயசிக்குறு சமர்முனையைத் திறந்து விட்டான். வன்னியை இரண்டறுத்து, புலிகள் பலத்தைச் சிதறடித்து, தமிழர் தேசியத்தைச் செல்லாத விடயமாக்கும் முயற்சியில் பகைவன் மூர்க்கமாகவே ஈடுபட்டான். முதலை க்கு தண்ணியிலும் புலிகளுக்கு வன்னியிலும் பலம் என்பதை அவன் அனுபவத்தில் புரியவிரும்பிய காலம். பகை படைத் தொடரணியைத் தாண்டிக்குளத்தில் ஊடறுத்துத் தாக் கும் திட்டம் தயாரானது. கைவிடப்பட்ட வயல்களினூடும், காடுகளினூடும் புலிகள் நகரத் தொடங்கிவிட்டனர். சுமார் 30 கிலோ மீற்றர் இயலாத காலுடன் நடந்தான். மேலெழுந்த வாரியாகப் பார்க்கையில் ஒரு பிரிவுப் பொறுப்பாளன் ஒரு குழுவுடன் நகர்வது பொருத்தமற்றதாகத் தென்படலாம். எனினும் சாக்களங்களிலுள் நுழைந்து வெளிவருவது, தொடரும் சமற்களங்களில் சந்திக்கும் சவால்களுக்கு முகம் கொடுப்பதை இலகுவாக்கும் என்பதைத் திடமாக நம்பினான். களம்திறக்கும் இடமெங்கும் திவாகர் நிற்பான் என்பது வெளிப் படையானது. சமர்கள் முடிந்து தளம்திரும்பும் அவன் சில நாள் இடைவெளியில் தொய்திருக்கும் நிர்வாக சேவைகளை வேகமாக ஒழுங்கு படுத்துவான். களமுனைத் தளபதிகளுடன் கலந்தாலோசனை செய்வான். முதன்மை, துணையான களமருத்துவ நிலை களை எங்கெங்கு நிறுவுவதென முடிவெடுப்பான். வரைபடம், குறிப்புப் புத்தக மும் கையுமாக வருமிவன் அவ்வவ் இடங் களில் மண்வெட்டியுடன் நின்று பதுங்குகுழி களை அமைப்பான். ஒவ்வொரு மருத்துவ நிலையையும் மரபுசார் சிறு முகாமாக(மினிமுகாம்) மாற்றுவான். மருத்துவ நிலைகள் சுற்றிவளைக்கப்பட்டால் தாக்குப் பிடிக்கவும், தேவையேற்பட்டால் முற்றுகையை உடைக்கவும் தேவையான அனைத்தையும் படைய அறிவியல் பார்வையோடு செயற்படுத்துவான். புளியங்குளத்திலும், புதூரிலும் அவன் அமைத்த முகாம்கள் இயல்பானபார்வையில் களமருத்துவ முகாம்களாகவும், அலசும் பார்வையில் படைய பயன்பாட்டிற்குரிய முகாம்களாகவும் தென்பட்டன. இவ்விரு இடங்களும் முற்றுகைக்கு உள்ளாகித் தாக்குப்பிடித்து, பின் முற்றுகை உடைத்த நிகழ்வுகள் தமிழீழப் போர் மருத்துவ வரலாற்றில் சாதனைப் பதிவுகளாயின. ஜெயசிக்குறு படை நடவடிக்கை அர்த்தமற்றதாக்கப்பட வேண்டும். அதற்கு சாத்தியமானவைகள் அனைத்தும் செய்யப்பட வேண்டும். அவற்றில் ஒன்றாக கிளிநொச்சி மீண்டும் கைப்பற்றப்படல் வேண்டும். இது நடைபெறுமாயின் ஜெயசிக்குறு படை ரெயில் தடம் புரளும் அல்லது தடம்மாறும். அதற்கான சமர் 10.02.1997 அன்று தொடங்க திட்டமிடப்பட்டது. இச் சமர்க்களத்தின் சுற்றயல் பகுதிகளில் களமருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு. சமர் தொடங்கிவிட்டு. களமருத்துவ முகாமொன்றில் திவாகர் பணியாற்றிக்கொண்டிருக்கின்றான். ஆங்காங்கே வான் தாக்குதல்களும் நடாத்தப்படுகின்றது. இரவு நடைபெற்ற சண்டையின் பிரதிபலிப்பாய் காயக்காரரை ஏற்றிப் பல ஊர்திகள் அவ் மருத்துவ நிலைக்கு வந்துபோகின்றன. காயக்காரர்களுக்கு அவசர உயிர்காப்புச் சிகிச்சைகளும், ஏனையவும் செய்யப்பட்டு விரைவாகப் பின்தளம் அனுப்பப்படுகின்றார்கள். வானில் ஆளில்லா வேவு வானூர்தி ரீங்காரமிடுவது கேட்கின்றது. ஊர்தி ஓட்டங்களை வைத்து இவர்களுடைய முகாம் அடை யாளம் காணப்படலாம் எனும் அச்சம் தலைதூக்குகின்றது. எனினும் அதனைப் பொருட்படுத்தாமல் அவரவர் தம்தம் கடமைகளில் மூழ்கியுள்ளனர். திடீரென செவிப்பறை வெடிக் கும், நிலம் அதிரும் வகையில் இரைச்சல் சத்தம் கேட்கிறது. நிலைமையைக் கணித்த திவாகர் “எல்லோரும் பங்கருக்க பாயுங்கள்” கத்தி முடிப்பதற்குள் படீர் படீர் என கிபிர்க் குண்டுகள் அவ்விடங்களில் விழுந்து வெடிக்கின்றது. வெடி மருந்துப் புகையும், தூசி மண்டலமும் விலக சில நிமிடங்கள் எடுத்தது. கண்டகாட்சி அதிர்ச்சியைக் கொடுத்தது. களமருத் துவ நிலை இருந்தஇடம் கற்குவியலாகக் காட்சியளித்தது. பச்சை மரங்களும், மருந்துப் பொருட்களும், தசைத்துண்ட ங்களும் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. ஆம் களமருத்துவப் பொறுப்பாளன் திவாகர் மற்றும் இரு படைய மருத்துவர்கள் உட்பட நாற்பத்திமூன்று பேர் நேசித்த மண்ணில், போர்ப் பணியாற்றிய இடத்தில் விதையாகிப் போனார்கள். – தூயவன். விடுதலைப்புலிகள் இதழ் (மாசி -பங்குனி, 2006 ) https://www.thaarakam.com/news/8ca5e5eb-d181-497c-85ec-d01aa78f35eb - மரணித்தது மரணமே கௌசல்யன் அல்ல.!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.