Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வசனம் - யோ. கர்ணன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வசனம்

யோ.கர்ணன்

நடுச்சாமம் பன்னிரண்டு மணிக்கு ரெலிபொன் அடிச்சுது. நித்திரை குழம்பின எரிச்சலோட, கண்ணை திறவாமலே தலைமாட்டில தடவி ரெலிபோனை எடுத்திட்டன். இப்பிடித்தான், அகாலங்களில ஊரிலயிருந்து அம்மா ரெலிபோன் எடுத்து, தம்பி சாப்பிட்டியோடா, தலைக்கு எண்ணை வைச்சு முழுகினனியோடா என்று கேட்டு கழுத்தறுப்பா. இப்பிடியேதோ கழுத்தறுப்புக்கேஸ் என்று நினைச்சுக் கொண்டுதான் காதுக்குள்ள வைச்சனனான். இது வேற கேஸ். நான் படுக்கையிலயிருந்து துள்ளியெழும்பினன்.

ரெலிபோன் கதைச்சது ரதி. அவள் என்ர மச்சாள். கதைச்சதை விட கூட நேரம் ஒப்பாரி வைச்சு அழுதாள். அழுகைக்கிடையில சொன்ன விசயம், அவளின்ர புருசனை இரவு ஒன்பது மணி போல ஆரோ கடத்திக் கொண்டு போயிற்றினமாம். எனக்கு தலைசுத்தத் தொடங்கீற்றுது. இப்ப கொஞ்ச நாளாகவே எங்கட குடும்பத்திற்கு நேரம் சரியில்லை. எங்கட சித்தியொராளின்ர புருசன் இயக்கத்திலயிருந்தவர். ஆள் கொஞ்சம் பெரிய காய். முல்லைத்தீவில சரணடைஞ்ச மனிசனை பற்றிய கதையேயில்லை. சித்தியும் பிள்ளையாரில தொடங்கி புத்தரின்ர காலடி மட்டும் விழுந்தெழும்பி திரியிறா. ஓரு பலனுமில்லை. எங்கட அன்ரியின்ர பெட்டையொருத்தி மோட்டார் சைக்கிள் அக்சிடன்டில மாட்டுப்பட்டு காலில புக்கை கட்டிக் கொண்டிருக்கிறாள். எனக்கமிஞ்ச வேலை போய், ஒரு பரதேசி முதலாளியிட்ட வேலை செய்யிறன்.

உடனடியாகவே இணையத்தில் தேடிப்பார்த்தன். சுடச்சுட ஈழச் செய்திகள், அகதியின் குரல், பங்கருக்கயிருந்து இயங்கும் இணையம் என்ற விளம்பரங்களுடன் வரும் இணையத்தளங்களெதிலும் இப்படியான செய்தியெதனையும் காணயில்லை. இலங்கை செய்திகள் நிறைந்திருந்த இணையத்தளமொன்றை சல்லடை போட்டன். அதன் முக்கிய செய்தியாக, யாழ் பிரபல பாடசாலை மாணவியின் கர்ப்பத்திற்கு படைச்சிப்பாய்கள் யாராவது காரணமாக இருக்கிறார்களா என்ற திசையில் ஆராய்ந்திருந்தது. பேசாமல் படுத்திட்டன்.

ரதியை நினைக்க பாவமாக இருந்தது. அவளுக்கும் என்ர வயசுதான். புருசனுக்கும் என்ர வயசுதான். இரண்டு பிள்ளையள் வேற. காதல் கலியாணம்தான் செய்தவள். அந்த நேரம் அந்த லவ்விற்கும், கலியாணத்திற்கும் எதிராக எங்கட இனசனமே திரண்டு நின்றது. ஆனாலும் அவள் ராங்கிக்காரி. நினைச்சதை முடிச்சிட்டாள்.

‘ஆழ்கடல் வற்றினாலும் அன்புக்கடல் வற்றாது’, ‘சுடச்சுட தேனீர் குடிசுட்ட பிறகு என்னை நினை’ ரைப் கவிதைகளும், வாவா எந்தன் நிலவே வெண்ணிலவே போன்ற சினிமா பாட்டு வரிகளையும் கொண்ட கடிதமெழுதிற பருவத்திலயே எனக்கும் ரதிக்கும் காதலென்று ஊரில பொடியள் கதை கட்டி விட்டிட்டாங்கள். நாங்கள் அப்ப இடம்பெயர்ந்து போய் புதுக்குடியிருப்பில இருந்தனாங்கள். பள்ளிகூட கக்கூசுக்குள்ள பரணி-ரதி என எங்கள் இரண்டு பேரின்ர பெயரையும் எழுதி, இரண்டு பேர் கட்டிப்பிடிச்சுக் கொண்டு நிக்கிற மாதிரியான மார்க்கமான படமொன்றும் கீறியிருந்தினம். அதை பார்த்திட்டு அவள்தான் அதிபரிட்ட போய் கொம்ளைன் பண்ணினவள். அவர் ஒரு அக்சனும் எடுக்கயில்லை.

உண்மையை சொன்னால், ரதியில எனக்கு ஒரு சொட்டு காதலும் இருக்கயில்லை. எங்கட பொடியளுக்கு மச்சாள்மாரென்டதும் வாற சின்ன ‘ரொமான்ஸ்’ மட்டுமேயிருந்தது. அவ்வளவுதான். ஆனால் இந்த காலங்களில எனக்கு வேற இரண்டு பெட்டையளில காதலிருந்தது. நானும் வஞ்சகமில்லாமல் வலு ஆழமாக என்ர காதலை சொல்லி, ஆழ்கடல் வற்றாது ரைப் கவிதையுமெழுதி ஆளுக்கொரு கடிதமனுப்பினன்.

நான் முதல் கடிதம் குடுத்த பெட்டையும் இடம்பெயர்ந்த பெட்டைதான். திருகோணமலைப்பக்கத்திலயிருந்து வந்தவளாம். ஆழம் தெரியாத கிணத்துக்க கல்லைப் போட்டிட்டு அசுமாத்தம் தெரியாமல் பார்த்துக் கொண்டிருக்கிற பீலிங்தான் எனக்கு வந்தது. பெட்டை கடைசி மட்டும் ஒரு பதிலும் சொல்லயில்லை.

இதுக்கு பிறகுதான் சுகந்திக்குக் கடிதம் குடுத்தனான். அவள் புதுக்குடியிருப்பு பெட்டை. அப்பவும் பொடியள் சொன்னவங்கள்- புதுக்குடியிருப்பு பெட்டையள் திமிர் பிடிச்சவளுகள். கவனம் என்று. நான் ஒருதரின்ர கதையையும் கணக்கெடுக்கயில்லை. அவள் ரீயூசனால வெளிக்கிடுமட்டும் வாசலில காவல் நின்று, அவளை சாய்ச்சுக் கொண்டு போய், ஆளில்லாத இடத்தில “எங்க ரியூசனாலயோ வாறியள்?” என்று கேட்டு அவளின்ர சைக்கிள் கூடைக்குள்ள கடிதத்தை போட்டன். அவள் கடிதத்தை கிழிச்சுப் போட்டிட்டு, செருப்பு பிய்யும் என்றாள்.

உப்பிடி பாட்டுப்பாடி லவ் பண்ணுறது சினிமாவிலதான் சரிவரும், எனக்கு சரிவராது என்று தெரிஞ்சதும் உதையெல்லாம் கைவிட்டிட்டன்.

அந்த நேரம்தான் ரதியின்ர காதல் கொடி கட்டி பறக்க தொடங்கியது. நான் ஆரம்பத்தில நம்பயில்லை. ஒரு நாள் அவளும் அந்த பொடியனும் ஒரு ஒழுங்கைக்குள்ள நின்று கதைச்சுக் கொண்டிருக்க கண்டிட்டன். அவன் அப்ப இயக்கத்திலயிருந்த பொடியன். மட்டக்களப்பு ரீம்காரன் என்றும், அம்மானோட நிக்கிறான் என்றும் பொடியள்தான் சொன்னாங்கள். நான் அவனை முன்பின் கண்டிருக்கயில்லை. பொடியன் கொஞ்சம் முகவெட்டான பொடியன்தான்.

அடுத்தநாள் பள்ளிக்கூடத்தில ரதி என்னோட கதைச்சாள். தான் ஒழுங்கையில நின்று கதைச்சுக் கொண்டிருந்ததை வீட்டில சொன்னனானோ என்று கேட்டாள். நான் இல்லையென்றதும் கண்ணை மூடி “ அப்பா.. தாங்ஸ்” என்றாள். அவனின்ர இயக்க பெயர் வாகரை மைந்தன் என்றும், நல்ல ஆள் என்றும் முகம் கொள்ளாத பூரிப்போட சொன்னாள்.

அடுத்த கிழமை எங்கட பள்ளிக்கூடத்திற்கும் அம்மானின்ர பொடியளுக்கும் ஒரு புட்போல் மட்ச் நடந்தது. அம்மான் ஆள் விளையாட்டில வலு விண்ணன் என்றும், சண்டை ரீமை விட புட்போல், கிரிக்கெற் ரீமெல்லாம் வைச்சிருக்கிறார் என்று பொடியள் கதைச்சினம். பள்ளிக்கூட கிரவுண்டில, பள்ளிக்கூட பொடி பெட்டையளுக்கு மத்தியில போட்டி நடந்தது. பத்தோடு பதினொன்றாக நானும் விளையாடினன். அம்மானின்ர ரீமில வாகரைமைந்தனும் விளையாடினான். அம்மானின்ர பொடியளின்ர காலுக்க பந்து நிக்கேக்கதான் பெட்டையள் கத்தி சத்தம் போட்டினம். அதிலயும் வாகரைமைந்தன் பந்தோட வர, ரதி முன்னுக்கு ஓடி வந்து துள்ளிகுதிச்சாள். ரதியின்ர துள்ளிக்குதிப்பாலயோ என்னவோ அவன்தான் இரண்டு கோல் அடிச்சான். எங்களால ஒரு கோலும் அடிக்க முடியயில்லை. போட்டி முடிஞ்சதும் அம்மானின்ர பொடியள், ஆளையாள் பிடிச்சுக்கொண்டு வட்டமாக நின்று ஏதோ கதைச்சுப் போட்டு, திடீரென ஒரே குரலில் ‘எங்கும் செல்வோம். எதிலும் வெல்வோம்’ என கத்தினாங்கள். அந்த வசனத்தை கேட்க நல்லாய்தானிருந்தது.

அடுத்த கிழமை ரதி வீட்டுக்கு போனன். வீட்டுக்குள்ள ஒரு புது கலண்டர் தொங்கிச்சுது. தலைவர், அம்மான், ஆட்லறி, இடியன் படகுகள் என பல வர்ணப்படங்களுள்ள கலண்டர். கீழ, ஜெயந்தன் படையணி என்றும் எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம் என்றும் எழுதியிருந்தது. மாமியிட்ட மெல்ல கதை குடுத்து பார்த்தன்-உந்த கலண்டர் எங்கயிருந்து வந்ததென. அவவுக்கு நாட்டில நடக்கிற நல்லது கெட்டது ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. உவள் ரதிதான் எங்கயோயிருந்து கொண்டு வந்தவள் என்றும், தானேன் உதை கேட்கிறன் என்றும் சொன்னா. மாமியை நினைக்க பாவமாகயிருந்தது. பெத்ததுகள் எவ்வளவு அப்பாவியாக இருக்க உவளுகள் என்ன ஆட்டம் போடுறாளுகள் என நினைச்சன். பிறகு நானும் இரண்டு கடிதம் குடுத்த நினைப்பு வர உந்த யோசனையை கைவிட்டிட்டன்.

ஆனால் நான் நினைச்சளவிற்கு மாமி அப்பாவியாக இருக்கயில்லை. ரதியின்ர கொப்பிக்குள்ளயோ புத்தகத்திற்குள்ளயோயிருந்து ஒரு கடிதத்தை மனிசி எடுத்துப்போட்டுது. பெட்டைக்கு நல்ல அடி போட்டும் அவள் உசும்பயில்லை. ஓம் நான் அவரை லவ் பண்ணுறன். கட்டினால் அவரைதான் கட்டுவன் என்று வாய்க்கு வாய் கதைச்சிருக்கிறாள்.

“மட்டக்களப்பார்… இக்கணம் அதுகள் என்ன சாதிசனமென்டும் தெரியாது.. எந்த காட்டுக்குள்ள இருக்குதுகளோ தெரியாது..” என்று மாமி ஓயாமல் முணுமுணுத்துக் கொண்டிருந்தா.

அவளுக்கு ஒரு கலியாணம் கட்டி வைச்சால் சரியென்று மாமா ஓடித்திஞ்சார். வெளிநாட்டு மாப்பிள்ளையென்றால் சோலியில்லை. பெட்டையும் ஊர் நினைப்பில்லாமல் இருந்திடுமென அபிப்பிராயப்பட்டார். ஏதோ நடக்கிறது நல்லா நடந்தால் சரியென்று நானிருந்திட்டன்.

ஒரு நாள் மாமி எங்கட வீட்டுக்கு வந்தா. குசினிக்குள்ளயிருந்து அம்மாவோட ரகசியமாக கதைச்சிட்டு போனா. மாமி போனதற்கு பிறகுதான் அம்மா விசயத்தை சொன்னா. தனக்கு பலவந்தமாக கலியாணம் செய்த வைக்க முயன்றால் தான் போய் அம்மானிட்ட என்ரி பண்ணுவன் என்று ரதி வெருட்டினவளாம் என்றா.

ரதியின்ர மெய்க்காதலையுணர்ந்த வாகரைமைந்தனும் இயக்கத்திலயிருந்து விலத்தி வந்திட்டான். மாமாவுக்கு துப்பரவாக விருப்பமில்லை. அரை மனதோட செய்து வைத்தார்.

ரதியின்ர ஒப்பாரிக்கு பிறகு கடந்த இரவு ஒரு சொட்டு தூக்கமுமில்லாது போனது. ஊரியலிருந்து ஒரு தகலும் வரயில்லை. இப்ப ரெலிபொன் எடுத்தால் யாராவது வைக்கிற ஒப்பாரியைதான் கேட்க வேண்டியிருக்கும்.

திரும்பவும் இணையத்தளங்களில தேடிப்பார்த்தன். அனேகமான இணையத்தளங்களில செய்தி வந்திருந்தது. இளம்குடும்பஸ்தன் கடத்தல், முன்னாள் போராளி கடத்தல், மட்டக்களப்பில் தமிழ் இளைஞன் கடத்தல் என பல தலைப்புகளில் செய்தி வந்திருந்தது. இப்பவும் போர்நிலத்திலயிருந்து என்ற உப தலைப்புடன் வரும் இணையத்திலதான் சம்பவத்தை அலசி ஆராய்ந்திருந்தினம். எல்லா இணையங்களையும் வாசிக்க, ஆர் கடத்தியிருப்பினம் என்ற சந்தேகம் வந்தது. வெவ்வேறு தரப்புக்களை சந்தேகிக்க தக்கதாகவே இணையங்கள் எழுதியிருந்தன. இந்த செய்திகளின் பிரகாரம் இந்த கடத்தலை செய்திருக்க கூடியவர்களென நான்கு தரப்புக்களை அடையாளம் கண்டேன்.

1. புலிகள் இல்லாமல் போன சூழலில் இயங்கும் ஆயுதம் தாங்கிய ஒரு நிறுவன மயப்பட்ட அமைப்பு.

2. தமிழினத்தை வேரோடு கருவறுக்க வேண்டமென்ற எண்ணமுடைய அமைப்பு.

3. ராஜ சேவகர்களும், அவர்களின் கைக்கூலிகளும்

4. பிணந்தின்னி சிங்கள புலனாய்வாளர்கள்.

கடத்தல் செய்தி வந்ததும், எனக்கு ஒரு தரப்பில் சந்தேகம் வந்தது.அரசாங்கம் அல்லது அவையளோட இருக்கிற எங்கட தமிழ் கோஸ்டிதான் கடத்தியிருக்க வேணுமென்றுதான் நினைச்சிருந்தன். இந்த செய்திகளை வாசிச்ச பிறகுதான் எனக்கும் கன சந்தேகங்கள் வரத்தொடங்கின. இவ்வளவு அமைப்புக்களையும் வைச்சுக் கொண்டு அல்லாடுற எங்கட சனத்தையும் நினைக்கவும் பாவமாகயிருந்தது.

ரதியொட கதைச்சால் ஏதும் விசயம் அறியலாமென்று ரெலிபொன் எடுத்தன். அவள் ஒரு கதையும் கதைக்கிறாளில்லை. ஓவென்று ஒப்பாரிதான் வைக்கிறாள். கடத்தல்காரர்கள் தன்னோட ரெலிபொன் கதைச்சவங்கள் என்றும், கடுமையாக வெருட்டினவங்கள் என்றும் சொன்னாள். ஒரு மாதிரி அவளை சமாதானப்படுத்தி அழுகையை நிற்பாட்டி, என்ன வெருட்டினவங்கள் என்று கேட்டன். ‘ஏ.. ஒன் புருசனுக்கு தமிழீழம் தேவையா’, ‘ஒரு தமிழனையும் உருப்பட விட மாட்டம்’, ‘அரசாங்கத்தோட இனிமேல் சண்டை பிடிப்பியளா’, ‘வீட்டில எத்தனை கிளைமோர் மறைச்சு வைச்சிருக்கிறியள்’ போன்ற கேள்விகளை கேட்டதாகவும், கடைசியில் கொஞ்சம் காசு தந்தால் ஆளை விடுவதாக சொன்னதாகவும் சொன்னாள்.

பலதையும் யோசிச்சு பார்க்க, சில விசயங்கள் பிடிபடுறது மாதிரியுமிருந்தது. முக்கியமாக கடத்தல் விவகாரம். ரெலிபோனில கதைச்சவனும் நாலு கேள்விதான் கேட்டிருக்கிறான். இணையங்களும் நாலு விதமான குறூப்பிலதான் சந்தேகம் தெரிவித்திருந்தன. இதிலிருந்து சில முக்கிய முடிவுகளிற்கு வந்தேன்.

1.அந்த இணையத்தளங்களை பார்த்த பின்புதான் கடத்தல் குறூப்புக்கள் ஆளுக்கொரு கேள்வியாக நாலு கேள்விகளை கேட்டிருக்கின்றன.

2.அல்லது, இந்த கடத்தல் குறூப்புகள் என்னென்ன கேள்விகள் கேட்பினம், என்ன கொள்கை கோட்பாடுகளுடன் இருக்கினம் என்பது எங்கட ஆக்களுக்கு தெரிஞ்சிருக்குது.

இதில இன்னுமொரு முக்கிய பொயின்ற் இருக்குது. இப்பிடி பத்திரிகைகள், இணையங்களில செய்தி வரத் தொடங்க முதலே எங்கட மாமா ஒராள் கடத்தப்பட்டிருக்கிறார். நானறிய எங்கட ஊரில முதல்முதல் கடத்தப்பட்டவர் அவர்தான். இப்ப பிரான்சில இருக்கிறார்.

ரவுணிலயிருக்கிற கடையை பூட்டிப்போட்டு ஆள் வெளிக்கிட, ஒரு ரெலிக்கா வான் வந்து நின்றதாம். ஆளைப்பிடிச்சு ஏத்தேக்க ஒருத்தன் துவக்கு பிடியால அவரின்ர இடுப்பில இடிச்சுமிருக்கிறான். வந்த பொடித்தரவளியெல்லாம் தாடிக்குறூப் என்று சனம் கதைச்சினமாம்.

அதுவும் காசுக்கான கடத்தல்தான். மாமா ஆள் வலு விண்ணன். உள்ளுக்க இருந்து அவரே பேரத்தை முடிச்சிட்டார். ஏதோ நம்பிக்கையில காசு குடுக்க முதலே அவரை விட்டிட்டாங்கள். அவர் வெளியில வந்ததுக்கு பிறகுதான் கடத்தல்காரருக்கு காசு குடுத்தவர். இனி ஆரும் காசு கேட்டு கடத்த மாட்டினம் என்று, விசிற்றிங்காட் மாதிரியானதொரு துண்டு குடுத்தவையாம். அதில தாயக விடுதலைக்கான தன் பங்களிப்பு பணத்தை இவர் எம்மிடம் ஒப்படைத்துள்ளார் என்ற ரைப்பில் சிறு குறிப்பொன்று எழுதி, கீழே பிரபு. EPRLF என இருந்ததாம். மாமா பிரான்ஸ் போகுமட்டும் அந்த துண்டை பொக்கற்றுக்குள்ளயே வைச்சிருந்தாராம்.

தன்னை கடத்தின அந்த பொடியள் நல்லவங்கள் என்றுதான் இப்பவும் அபிப்பிராயப்பட்டுக் கொண்டிருக்கிறார். இடையில என்னோட ஒருதரம் ரெலிபோன் கதைக்கேக்க சொன்னார்- “அவங்களும் நல்ல இயக்கமாகத்தான்ரா இருந்தாங்கள். தமிழீழம் பிடிக்கிறதுக்கு ஆயுதம் வாங்கிறதுக்காகத்தான் எங்களை மாதிரியாக்களிட்ட காசு வாங்கினவங்கள். அதில பிழை சொல்ல ஏலாதுதானே. உவன் அத்தியடியான்தான் குழப்பினவன்.” என்று. ஆர் அந்த அத்தியடியன் என்று நான் கேட்கயில்லை.

மாமாவிற்கு பிறகு எங்கட சொந்தம் பந்தம், அறிஞ்ச தெரிஞ்ச ஆட்கள் ஒருத்தரும் கடத்தப்பட்டிருக்கயில்லை. எங்கட குலம் கோத்திரத்தில ஒராள் தந்த காசே நாடு பிடிக்க காணும் என்று மற்ற இயக்கங்கள் நினைச்சிருக்க கூடும். ஆனால் பிறகு நிலைமை மாறி விட்டுது. தெருவுக்கு ஒராள் கடத்தப்பட்டினம். எங்கட தினசரி பேப்பருளில பாதியிடத்தை இந்த செய்திகள்தான் நிறைத்திருந்தன. இதிலயிருந்த முக்கியமான விசயம் என்னென்றால், கடத்தப்பட்ட ஆட்களுக்கு விசிற்றிங் காட் குடுக்கப்படயில்லை என்பதுடன் வீடுகளிற்கும் திரும்பி வந்திருக்கயில்லை. சில கடத்தல் செய்திகளை பற்றி அரசாங்க செய்தியில் இயக்கம் செய்ததென்றும், இயக்க செய்தியில் அரசாங்கமோ துணைகுழுக்களோதான் செய்ததென்றும் சொல்லிச்சினம். நீதி நேர்மை நடுநிலை போன்ற சுலோகங்களுடன் வந்த பேப்பருகளில இனந்தெரியாதவர்களினால் கடத்தப்பட்டார்கள் என்று வரும்.

இடைக்கிடை ஊருக்கு ரெலிபோன் அடிச்சுக் கொண்டிருந்தன். ஒருக்கால் அடிக்க இந்தா அடைவு கடையில நிக்கிறன் என்றாள். பிறகு அடிக்க, இலங்கை வங்கியில நிக்கிறன் என்றாள். கொஞ்சத்தால அடிக்க, காசோட வவுனியா வரச் சொல்லியிருக்கிறாங்கள். போறதுக்கு பஸ்சை பார்த்துக் கொண்டு நிக்கிறன் என்றாள். நான் விஜயகாந்தின்ர நிறைய படங்கள் பார்த்ததாலயோ என்னவோ, என்ர மூளை வேற றூட்டில ஓடிச்சுது. காசை குடுக்கிற மாதிரி போக்கு காட்டி பொலீசை வைச்சு ஆக்களை பிடிக்கலாமென்று யோசிச்சன். அவளுக்கு ஐடியாவை சொன்னதும், கண்டபடி பேசத்தொடங்கி விட்டாள். உனக்கு இஞ்சத்தையான் சிற்றிவேசன் தெரியுமோ, கடத்தல்காரருக்கும் பொலீசுக்கும் தொடுப்பிருந்தால் தன்ர புருசனின்ர உயிரை ஆர் தாறதென்று கேட்டாள். அதுவும் சரிதான். விஜயகாந்தின்ர படத்திலயும் இப்பிடியான பொலீஸ்காரர் வாறவை தானே. அவள் என்னை விட கூடுதலாக கப்டனின்ர படங்கள் பார்த்திருக்கிறாள் போல என யோசிச்சுவிட்டு இருந்திட்டன்.

நேரம் போக போக இந்த விளையாட்டில எனக்கு இன்ரஸ்ற் இல்லாமல் போயிற்றுது. நான் வேலைக்கு போயிற்றன். பின்னேரம் வேலையால திரும்பிற நேரம் ரதி ரெலிபோன் எடுத்தாள். வவுனியா ரவுணில நிக்கிற தன்னை, உள்ளுக்கயிருக்கிற ஏதோ ஒரு குளத்தடியிலயிருக்கிற சேர்ச்சுக்கு வரச் சொல்லுறாங்கள், பயமாய்த்தானிருக்குது, என்றாலும் புருசனுக்காக மனதை திடப்படுத்திக் கொண்டு போறன் என படபடவென கதைச்சுப் போட்டு வைச்சிட்டாள்.

அவள் படபடவென கதைச்சுப் போட்டு ரெலிபோனை வைச்சு, சரியாக ஒரு மணித்தியாலத்திற்கு பிறகு திரும்பவும் எடுத்தாள். நான் ‘ஹலோ’ சொல்ல, “ஐயோ மச்சான் ..அவரை விட்டிட்டாங்கள்” என்று கத்தினாள். எனக்கு சரியான சந்தோசம். வாழுற வயசில தாலியை அறுத்துப் போட்டு நின்றாளென்றால் எங்களுக்கும் கவலைதானே. விசயத்தை அடியிலயிருந்து நுனிவரை விபரமாக சொன்னாள்.

அந்த சேர்ச்சடியில வாகனத்தில வந்த இரண்டு பேர் காசை வாங்கி, வாகனத்திற்குள்ளயே எண்ணி நூறு ரூபாய் குறையுது என்று ஐஞ்சு நிமிசம் சண்டை போட்டாங்களாம். இவளுக்கு சரியான ஏற்றமாம். கள்ளநாயளே ஆரும் எளியதுகளின்ர வாயில வயித்திலயடிச்சு பிழைக்கிறியள். இதுக்குள்ள நூறு ரூபா கணக்கு பார்க்கிறியளோ என்று பேசிப் போட்டாளாம். வந்ததில கொஞ்சம் டீசன்ட் ரைப்பாயிருந்த பொடியன்தான் ‘தங்கச்சி அப்பிடி கதையாதையுங்கோ.. நீங்கள் நினைக்கிறது மாதிரி நாங்களில்லை’ என்றானாம். இவளும் பதிலுக்கு கதைக்க, அவன் சொன்னானாம், தாங்கள் நாட்டுக்காக போராட வந்தனாங்கள். அது பிசகி விட்டுது. இனி நாங்கள் எங்களயும் பாக்கத்தானே வேணும். எங்களுக்கு உதவுறது உங்கட கடமைதானேயென்றானாம்.

அவனின்ர இந்த லொஜிக்தான் ரதியை எரிச்சல்படுத்தியிருக்க வேணும். திரும்பத்திரும்ப இதைத்தான் சொல்லி திட்டிக் கொண்டிருந்தாள். அவளை கொஞ்சம் ஆறுதல்படுத்திறதுக்காக ‘ எங்க உன்ர புருசனிட்ட குடு.. கதைப்பம்’ என்றன்.

“இல்லையடா.. அவர் சரியா பயந்து போயிருக்கிறார்..” என்றாள்.

“ஏன் பயப்பிடுவான்.. விட்டாச்சுததானே.. இனியென்ன பயம்..”

“இல்லையடா.. அவங்கள் ஒரு துண்டு குடுத்து விட்டிருக்கிறாங்கள்… அதுதான்.”

“துண்டோ.. ஓ.. முந்தி எங்கட ராசா மாமாவுக்கும் ஒரு இயக்கம் இப்பிடியொரு துண்டு குடுத்து விட்டிருந்ததல்லோ.. அது நல்லது தானேயடி..”

“அதில்லையடா.. அதில எழுதியிருக்கிறதுதான்..”

“ என்ன எழுதிக்கிடக்குது”

"ஆரோ ஒருத்தனின்ர பெயரை போட்டு, கீழ எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம் என்று கிடக்குதடா” என்றாள்.

0 0 0

பி.கு: எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம் என்பது விடுதலைப்புலிகளின் தாக்குதல் படையணிகளில் ஒன்றான ஜெயந்தன் படையணியின் கோசமாக இருந்தது

http://www.vallinam.com.my/issue40/story1.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமுறை வெளியான கர்ணனின் கதைத் தொகுப்பில் ஊரிலிருந்து விபரீதங்களோடு விழையாடியுள்ளார் என்பது புரிகிறது அவர் கடத்தப்படாமலிருந்தால் சரி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியே கடைசியில் நடக்கும் கடத்தலையும் புலியில் போட்டுவிட்டார். 

ஒண்டும் தெரியாதம் யார் கடதுரதெண்டு ஆனால் இணைய தளங்களை பார்த்து கண்டுபிடிப்பாராம். 

சுத்த புழுகல் கதை. மச்சாளிண்ட புருசன்ட விடயத்தில இண்டரெஸ்ட் விட்டுபோச்சாம்?  ப்ளாக் லேபல் நினைவு வந்திட்டுதோ? 

அப்பு, ஆளுக்கு நாலு ஆர்மி நிக்கிற ஊரில எப்படி கடத்தல் நடக்கிறது? 

அவருக்கு வேறு, ஆயுத குழுக்களுக்கும் சிறி லங்கா ஜெனோசைட் கூட்டத்திற்கும் தொடுப்பு இருப்பது விசயகாந்த் படம் பார்த்து தான் தெரியுமாம். 

விட்டால் இவனும் விசயகாந்த் போல் பிஞ்ச ஜீப்பில் பறப்பான்.

Edited by KuLavi

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமுறை வெளியான கர்ணனின் கதைத் தொகுப்பில் ஊரிலிருந்து விபரீதங்களோடு விழையாடியுள்ளார் என்பது புரிகிறது அவர் கடத்தப்படாமலிருந்தால் சரி

நீங்கள் பயப் படாதேங்கோ சிங்கள அரசோடு சேர்ந்து இருப்பவர்களை அரசு இப்போதைக்கு ஒன்றும் செய்யாது...எதற்கும் அரசை பகைக்க வேணாம் என அவருக்கு சொல்லுங்கள்...ஒரு எழுத்தளார் நீண்ட காலம் வாழ வேண்டாமா அப்பத் தானே அவரால் தேசியத்துக்கும்,தமிழினத்துக்கும் எதிராக எழுத முடியும்...அப்படி எழுதினால் தானே சிறந்த இலக்கியவாதி என பட்டம் கிடைக்கும்...சோ.சக்தியை பின்னுக்கு தள்ளி முன்னுக்கு இவரும் ஒரு நாள் வரத் தானே வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் பயப் படாதேங்கோ சிங்கள அரசோடு சேர்ந்து இருப்பவர்களை அரசு இப்போதைக்கு ஒன்றும் செய்யாது...எதற்கும் அரசை பகைக்க வேணாம் என அவருக்கு சொல்லுங்கள்...ஒரு எழுத்தளார் நீண்ட காலம் வாழ வேண்டாமா அப்பத் தானே அவரால் தேசியத்துக்கும்,தமிழினத்துக்கும் எதிராக எழுத முடியும்...அப்படி எழுதினால் தானே சிறந்த இலக்கியவாதி என பட்டம் கிடைக்கும்...சோ.சக்தியை பின்னுக்கு தள்ளி முன்னுக்கு இவரும் ஒரு நாள் வரத் தானே வேண்டும்

ஓஓ....அந்த கதையிலை வருகின்ற ரதியா நீங்கள் கர்ணனின் மச்சாள் எண்டு இப்பதான் எனக்கு தெரியும். மன்னிக்கவும் :unsure: :unsure: .. மற்றபடி கர்ணனின் கதைகளை படித்ததை தவிர எனக்கு அவன் யாரெண்டே தெரியாது பிறகெதுக்கு நான் கவலைப்படவேணும். :lol: :lol:

Edited by sathiri

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.

  • கருத்துக்கள உறவுகள்

ஓஓ....அந்த கதையிலை வருகின்ற ரதியா நீங்கள் கர்ணனின் மச்சாள் எண்டு இப்பதான் எனக்கு தெரியும். மன்னிக்கவும் :unsure: :unsure: .. மற்றபடி கர்ணனின் கதைகளை படித்ததை தவிர எனக்கு அவன் யாரெண்டே தெரியாது பிறகெதுக்கு நான் கவலைப்படவேணும். :lol: :lol:

ஓஓஓ...அபிராமின்ட கதையில் வாற வெற்றிலை சாத்திரி நீங்கள் என்டு இப்பத் தான் எனக்குத் தெரியும்...மன்னிக்கவும் :unsure: :unsure:

நான் தான் கர்ணணின் மச்சாள்...என்ட புருசனைத் தான் பிடித்திட்டுப் போனவங்கள் ஆனால் ஜெயந்தன் படையணி பிடிக்கேல்ல.அரசோடு சேர்ந்தியங்கும் ஒட்டுக் குழுக்கள் தான் பிடிச்சவை ஆனால் கர்ணன் தன்ட கதையில ஜெயந்தன் படையணி என்று எழுதிட்டார் ^_^

:Dநல்ல மாட்டுக்கு ஒரு சூடு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் தான் கர்ணணின் மச்சாள்...என்ட புருசனைத் தான் பிடித்திட்டுப் போனவங்கள்

கர்ணன் அறிஞ்சால் குழம்பப் போகின்றார்..

  • கருத்துக்கள உறவுகள்

ஓஓஓ...அபிராமின்ட கதையில் வாற வெற்றிலை சாத்திரி நீங்கள் என்டு இப்பத் தான் எனக்குத் தெரியும்...மன்னிக்கவும் :unsure: :unsure:

நான் தான் கர்ணணின் மச்சாள்...என்ட புருசனைத் தான் பிடித்திட்டுப் போனவங்கள் ஆனால் ஜெயந்தன் படையணி பிடிக்கேல்ல.அரசோடு சேர்ந்தியங்கும் ஒட்டுக் குழுக்கள் தான் பிடிச்சவை ஆனால் கர்ணன் தன்ட கதையில ஜெயந்தன் படையணி என்று எழுதிட்டார் ^_^

:Dநல்ல மாட்டுக்கு ஒரு சூடு

தகவல்களிற்கு நன்றிகள்

மற்றும் பழமொழியில் பாதிதான் எழுதியுள்ளீர்கள் அதன் முழுவடிவம் நல்லமாட்டிற்கு ஒரு சூடு நற்பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை இப்படி வரவேண்டும்

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

கர்ணன் அறிஞ்சால் குழம்பப் போகின்றார்..

அது குளறுபடியில்லாமல் இருப்பவர்களுக்கு நடப்பது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.

சாமியார், ஒரு நாள் தியானம் செய்தனான்.  இப்ப தெளிஞ்சிட்டுது. 

மச்சாளில் கள்ளகாதல், புது மாப்பிள்ளை மீது எரிச்சல்,  காசு பற்றாக்குறை, மச்சாளை தனிய காட்டுக்கு போ என்றுவிட்டு தண்ணி போட கிழம்புவது, மற்றும் ஜெயந்தன் படையணி துண்டை ஆர்மியிடம் கொடுத்தால்? 

எனக்கென்னவோ யோக்கரன்னா தான் சொந்த குடும்பத்தை தூக்கி பிழைப்பு நடத்துறார் போல?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.