Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“நாங்கள் ராணுவத்தால் சூழப்பட்டிருக்கிறோம்”: நேர்காணல்: யாழ்ப்பாணம் தோமஸ் சௌந்தரநாயகம்

Featured Replies

நேர்காணல்: யாழ்ப்பாணம் தோமஸ் சௌந்தரநாயகம்

“நாங்கள் ராணுவத்தால் சூழப்பட்டிருக்கிறோம்”

சந்திப்பு: இளைய அப்துல்லாஹ்

தமிழ் மக்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டபோதும் முகாம்களில் அடைக்கப்பட்டுப் பல்வேறு இன்னல்களுக்குள்ளானபோதும் யாழ் ஆயர் இல்லம் ஏதாவது அறிக்கை விடாதா வத்திக்கான் எங்களுக்கு ஏதாவது உதவாதா என்று தமிழ் மக்கள் ஏங்கிக்கொண்டிருந்தனர். யாழ் ஆயர் இல்லம் தமிழ் மக்கள் நிலை குறித்துத் தொடர்ந்து பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டது. யுத்தத்திற்குப் பிறகு, இப்போது அம்மக்களின் நிலை குறித்து நீங்கள் அக்கறை காட்டிவருகிறீர்களா? வடக்குப் பகுதியில் வாழும் தமிழ் மக்களின் தற்போதைய நிலை என்ன?

page32a.jpgயுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்கள் முடிந்துவிட்டன. இத்தறுவாயில் இன்னும் அங்கு வாழும் மக்கள் அமைதியான சூழலில் வாழ்வதுபோலத் தோன்றவில்லை. முக்கியமாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா அகதி முகாம்களில் வைக்கப்பட்டிருந்த, கிட்டத்தட்ட இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அவரவர் இடங்களுக்குப் போக வேண்டும். ஆனால் அதற்குப் பல தடைகள் இருந்தன. ஆனால் இப்போது கிட்டத்தட்ட எண்பது சதவீத மக்கள் தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்பியிருக்கிறார்கள். ஆனால் அங்கே அவர்கள் அமைதியாக வாழ்கிறார்கள் என்று சொல்ல முடியாது. பலவிதமான கட்டுப்பாடுகளுக்கும் நெருக்கடிகளுக்குமிடையேதான் அவர்கள் வாழ வேண்டியிருக்கிறது. மீள்குடியேற்றம் என்பது முழுமையானதாக இருக்க வேண்டும்.

யுத்தத்தின் விளைவாகத் தமிழ் மக்கள் துன்பப்பட்ட போதெல்லாம் உங்களைப் போன்ற கத்தோலிக்க மத குருமார்கள் தொடர்ந்து குரல் கொடுத்துவந்துள்ளார்கள். இது பலனளித்திருக்கிறதா?

நிச்சயமாகப் பயனுள்ளதாக இருந்திருக்கிறது. ஏனெனில் யுத்த காலத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று ஒருவரும் இருந்திருக்கவில்லை. அண்மையில்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பாராளு மன்றத்தில் அவர்களுக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கு முன்பு தமிழ் மக்களுக்காகப் பேசுவதற்கு யாரும் இருந்திருக்கவில்லை. ஆகையால் கத்தோலிக்கத் திருச்சபைக்குத் தன் குரலை ஓங்கி ஒலிக்க வேண்டிய தேவை இருந்தது. அரசியல் என்பது சமயத்துக்கு அப்பாற்பட்டது என்றாலும், அரசியல்வாதிகள் யாரும் இல்லாத நேரத்தில் யாழ்ப்பாணம் திருச்சபை மக்களுக்காகக் குரல்கொடுத்து அவர்களின் அவல நிலையை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. மக்கள் சார்பாக நாம் நின்றோம்.

யாழ்ப்பாணம் வரும் உலகப் பிரதிநிதிகள் உங்களைச் சந்திக்கிறார்கள். இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சினை தொடர்பாக எத்தகைய மனநிலையைக் கொண்டிருக்கிறார்கள்?

அவர்கள் இங்கு வரும்போது ஆயரைச் சந்திக்க விரும்புவதற்குக் காரணம் நாங்கள் யாருடைய தூண்டுதலும் இல்லாமல், கட்சி சார்பு இல்லாமல் உண்மை நிலையைச் சொல்லுவோம் என்பதுதான். இங்கு வரும் பிரதிநிதிகளுக்கு எப்போதும் மக்களின் நிலைமைகளை விளக்குகிறோம். எங்களை வந்து சந்தித்துப் பேசும்போது அவர்களுக்கு முழுமையான தோற்றம் கிடைப்பதாக நம்புகிறார்கள். திருச்சபையிடமிருந்து அவர்கள் உண்மையான நிலவரங்களை அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். தமது அறிக்கைகளில் எங்கள் கருத்துகளை அவதானிக்கிறார்கள்.

சுஸ்மா சுவராஜ் தலைமையிலான இந்தியத் தூதுக் குழுவினர் வந்து உங்களைச் சந்தித்தார்களா?

இந்தியத் தூதுக் குழுவினர் எங்களைச் சந்திக்கவில்லை. கருத்து எதுவும் கேட்கவுமில்லை.

அவர்கள் வேண்டுமென்றே உங்களைச் சந்திப்பதைத் தவிர்த்தார்கள் என்று நினைக்கிறீர்களா?

இல்லை, இல்லை. அப்படி நினைக்கவில்லை.

இலங்கைத் தமிழர்கள் இந்தியாவிடமிருந்து பெரிதாக எதிர்பார்த்தார்கள். அந்த நம்பிக்கை அவர்களுக்கு இன்னும் இருக்கிறதா?

தமிழ் மக்களைப் பொறுத்தவரை இந்தியாவின் மீதான நம்பிக்கை போய்விட்டது. ஏனென்றால் கடந்த காலப் போரின்போது இந்தியா எங்களை முற்றாகக் கைவிட்டது. நானும் மற்ற ஆயர்களும் யுத்த காலத்தில் நேரடியாக இந்தியத் தூதராலயத்துக்குப் போய், ‘சனங்கள் ஒவ்வொரு நாளும் செத்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். என்னசெய்யப்போகிறீர்கள்?’ என்று கேட்டபோது ‘ஒரு கட்டம் வரும். அப்போது நாங்கள் எல்லாவற்றையும் செய்வோம்’ என்று சொன்னார்கள். ஆனால் எங்களின் சனங்கள் செத்து மடிந்துவிட்டார்கள். ஆகையால் இந்த நிலையில் இந்தியாவை நாங்கள் நம்பத் தயாராக இல்லை. இந்தியா நினைத்தால் இலங்கைத் தமிழர்களுக்கு ஏதாவது செய்யலாம். ஆனால் அவர்களும் அரசியல் சித்து விளையாட்டை விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். ராஜபக்ஷ அரசாங்கம் இப்போது சீனாவைச் சார்ந்து போய்க்கொண்டிருக்கிறது. சீனாவுக்குப் பின்னால் இலங்கை போய் விடும் என்னும் பயம் இந்தியாவுக்கு இருக்கிறது. ஆனால் தமிழருக்கு இந்தியாவால் எந்தப் பயனும் இப்போது இல்லை என்றுதான் நான் சொல்வேன்.

முக்கியமான இரண்டு நிறுவனங்கள் யாழ்ப்பாணத் தமிழ் மக்களின் நலனில் அக்கறை செலுத்துகின்றன. ஒன்று உங்களுடைய கத்தோலிக்கத் திருச்சபை. மற்றது யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் சமூகம். நீங்கள் யாழ்ப் பல்கலைக்கழகத்தோடு இணைந்து தமிழ் மக்களுக்கான வேலைத்திட்டங்கள் எதையாவது செய்துவருகிறீர்களா?

இல்லை, இல்லை. பல்கலைக்கழகத்தோடு இணைந்து வேலைசெய்வதில்லை. ஆனால் அவர்களின் கருத்துகளைக் கவனித்து அவற்றுக்கு மதிப்பளித்துவருகிறோம்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னிப்பகுதிக்கு அண்மையில் எப்போதாவது சென்றீர்களா? அங்கு அழிக்கப்பட்ட தேவாலயங்களின் தற்போதைய நிலைமை என்னவாக இருக்கிறது?

அண்மையில் வன்னிக்குப் போய் வந்தேன். அங்குத் தேவாலயங்கள் திருத்த வேண்டிய நிலைமையில் இருக்கின்றன. வன்னியில் 12 பங்குகள் இருக்கின்றன. ஒவ்வொரு பங்குக்கும் ஆறு அல்லது ஏழு தேவாலயங்கள் இருக்கின்றன. அங்குத் தேவாலயங்களைத் திருத்தி வேலைசெய்ய வேண்டியிருக்கிறது. அங்குக் குருமாரை அனுப்ப வேண்டியிருக்கிறது. புதுக்குடியிருப்பில் புனித சூசையப்பர் ஆலயம் முற்றாகக் குண்டுவீச்சில் பழுதடைந்துவிட்டது.

வன்னிக்குப் போயிருந்தபோது மக்கள் உங்களிடம் என்ன முறையிட்டார்கள்?

அங்கே போனவுடன் மக்கள் எங்களிடம் கேட்ட முதல் வேண்டுகோள், ஒரு ஃபாதரைத் தாருங்கள் என்பதுதான். ஏனெனில் ராணுவத்தால் சூழப்பட்ட இடத்தில் ஃபாதர் இருந்தால் தாங்கள் பாதுகாப்பாக இருப்போம் என்று மக்கள் நினைக்கிறார்கள். தலைமைத்துவமாக நின்று அவர் பேசுவார் என்று மக்கள் நினைக்கிறார்கள். எல்லாத் தேவாலயங்களிலும் எங்களால் ஃபாதரை நியமிக்க முடியாது. ஆனால் ஒவ்வொரு பங்குக்கும் ஒவ்வொரு ஃபாதரை நியமித்து நாங்கள் அந்த மக்களைப் பாதுகாத்துவருகிறோம்.

ஆலயங்களைத் திருத்துவதற்கு இலங்கை அரசாங்கம் உங்களுக்கு உதவுகிறதா?

(சிரித்துக்கொண்டே சொல்கிறார்) இலங்கை அரசாங்கம் மக்களுக்குத் தேவையான வீட்டுத் திட்டத்தையே நிறைவேற்ற முடியாமல் இருக்கும்போது எப்படி ஆலயங்களுக்கு உதவுவார்கள்?

வன்னி மக்களின் வீடுகள் எல்லாமே அழிந்துபோய் இருக்கின்றனவா? நீங்கள் போய்ப் பார்த்தபோது எப்படி இருந்தன?

கிட்டத்தட்ட எண்பது சதவீதமான வீடுகள் அழிந்துபோய்விட்டன. அங்கு மக்கள் வசிக்க முடியாது. வீடுகளைக்

கட்டுவது அரசாங்கத்தின் முக்கியமான பணிகளில் ஒன்று. ஆனால் அதைச் செய்வதற்கு அவர்கள் முயலவில்லை. தொண்டு நிறுவனங்களையும் உள்ளே அனுமதிப்பதில்லை. இப்போது ஓரிரு தொண்டு நிறுவனத்தினர் வேலைசெய்கிறார்கள். அது போதவே போதாது. திருச்சபையைப் பொறுத்தவரை நாங்களும் சில வேலைத்திட்டங்களை மேற்கொண்டுவருகிறோம். பெரிய அளவிலான உதவி அந்த மக்களுக்குத் தேவைப் படுகிறது. இந்திய அரசாங்கம் மக்களுக்கு வீடுகளைக் கட்டித்தருவதாகச் சொல்கிறார்கள். ஆனால் செயலில் ஒன்றுமே இல்லை. மக்களுக்குச் சொந்த இடம் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் வீடு கட்டித்தருவார்கள். மக்களுக்குச் சொந்த இடம் இல்லை. அது அவர்களுக்குப் பெரும் பிரச்சினையாக இருக்கிறது.

மக்கள் வன்னியில் அவர்களின் சொந்த இடத்தில்தானே இருந்தார்கள்? அங்கிருந்துதானே துரத்தப்பட்டார்கள்?

தங்கள் சொந்த இடத்தை உறுதிப்படுத்த அவர்களிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை. யுத்தத்தில் அகதிகளாக ஓடிக்கொண்டிருந்தபோது அழிந்துவிட்டன. அவலப்பட்ட மக்களாகத் தமிழ் மக்கள் இருக்கிறார்கள்.

இந்தியா பெரிய அளவில் முன்னெடுத்த தமிழ் மக்களுக்காக ஐம்பதாயிரம் வீடுகள் கட்டித்தரும் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன?

இந்தியா பெரிய அளவில் அதைப் பிரச்சாரம் செய்தது. இப்போதும் அதைப் பற்றி இந்தியா சொல்லிவருகிறது. தமிழ் மக்களுக்கு எல்லாவற்றையும் செய்துதருவதாக இந்தியா வாக்களிக்கிறது.

அந்த நேரத்தில் அதைக் கேட்ட உடனேயே தமிழ் மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது வெறுமனே ஆயிரம் வீடுகள் மட்டுமே கட்டிக்கொடுத்திருக்கிறார்கள். இந்தியா ஏமாற்றிவிட்டதோ என்று தமிழ் மக்கள் நினைக்கத் தொடங்கிவிட்டார்கள்.

மக்களின் இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக நீங்கள் அரசுடன் ஏதாவது பேசியிருக்கிறீர்களா?

ஒருமுறை அல்ல பலமுறை பேசியிருக்கிறோம். அவர்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை. விவசாயம், மீன்பிடி முதலான தமிழ் மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த தொழில்களுக்கு உதவ வேண்டும். ஆனால் அரசு முழுமையாக எதையும் செய்யவில்லை. சிங்கள மக்கள் வாழும் பகுதிகளின் வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவமளிக்கும் அரசாங்கம் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள எந்த முயற்சியும் மேற்கோள்ள முன்வராதது கவலை அளிக்கிறது. பாதைகள் போடப்படுகின்றன, பாலங்கள் கட்டப்படுகின்றன, ஆனால் தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்படவில்லை.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கம் இழுத்தடிப்பதற்கு என்ன காரணம்?

தமிழர்களுக்கு இப்போது ஒன்றும் செய்யத் தேவையில்லை என்று இலங்கை அரசாங்கம் நினைக்கிறது. சாலை அமைத்தல், மின்சாரம் கொண்டுவருதல் போன்று சில பணிகளைச் செய்வதன் மூலம் சர்வதேசச் சமுதாயத்தை ஏமாற்ற நினைக்கிறது. இது வண்டிக்கு முன்னால் கட்ட வேண்டிய மாட்டைப் பின்னால் கட்டுவது போன்றதாகும். அரசாங்கம் எத்தகைய வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டாலும் அவற்றில் தமிழருக்கும் சமபங்கு அளிக்க வேண்டும். எங்களுக்கும் அதில் உரிமை இருக்கிறது. தமிழர்கள் இந்த நாட்டு மக்கள். சிங்களவர்கள் அனுபவிக்கும் உரிமைகள் அனைத்தையும் அவர்களும் அனுபவிக்க வேண்டும். எல்லோரும் சமமானவர்கள் என்னும் உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அந்த மனநிலை ஆட்சியாளர்களுக்கு வர வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் ராணுவத்தின் நெருக்கடிகள் அதிகரித்திருப்பதாக நாங்கள் அறிகிறோம். நீங்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கிறீர்கள் அங்கு நிலைமை எப்படி இருக்கிறது?

போருக்குப் பிறகு வடக்கு - கிழக்குத் தமிழர் பகுதிகளில் இருந்துவரும் ராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்னும் எதிர்பார்ப்பு எங்களுக்கு இருந்தது. ராணுவத்தினர் மீண்டும் தத்தம் இடங்களுக்குத் திரும்பிவிடுவார்கள் என்று நினைத்தோம். ஆனால் அப்படி நடக்கவில்லை. ராணுவம் மேலும் அதிகமாகக் குவிக்கப்பட்டிருக்கிறது. அது மக்களின் இயல்பு வாழ்க்கையை முழுமையாகப் பாதிக்கிறது என்பது உண்மைதான். ராணுவக் குறைப்பு மிகவும் அவசியம் என்பதை நாங்கள் அரசாங்கத்துக்குச் சொல்லியுமிருக்கிறோம். இப்படிச் சொல்லும்போது இன்னும் பயங்கரவாத ஆபத்து இருப்பதால் ராணுவத்தைக் குறைக்க முடியாது என்று அரசாங்கம் சொல்கிறது. நாங்கள் ராணுவத்தால் சூழப்பட்டிருக்கிறோம் எனபதுதான் உண்மை. யாழ்ப்பாணத்தை மட்டும் கிட்டத்தட்ட நாற்பதினாயிரம் ராணுவத்தினர் சூழ்ந்திருக்கிறார்கள். சில இடங்களில் ராணுவம் மட்டும் தான் இருக்கிறது. நாங்கள் அச்சத்தோடு வாழ்கிறோம். சில இடங்களில் திடீர்ச் சோதனைகள் நடத்தப்படுகின்றன. வன்னிப் பிரதேசங்களில் இந்த நிலைமை கடுமையாக இருக்கிறது. புலிகள் மீண்டும் வந்துவிடுவார்களோ என்ற அச்சம் ராணுவத்தினர் மத்தியில் இருக்கிறது. சில இடங்களில் மீன்பிடிக்கக்கூடத் தமிழர்களை ராணுவம் அனுமதிப்பதில்லை. ஆனால் சிங்கள மீனவர்கள் ராணுவத்தின் உதவியோடு மீன்பிடிக்கிறார்கள். அது தமிழ் மக்கள் மத்தியில் கசப்பான விடயமாகும். எப்படி வாழ்வது என்ற கவலை எங்களுக்கு இருக்கிறது. ராணுவத்தினருடன் நாம் போய்க் கதைப்போம். ஆனால் சில விடயங்களைத் தங்களால் எதுவும் செய்ய முடியாது ஏனெனில் அது மேலிட உத்தரவு என்று சொல்வார்கள். பிரச்சினை என்னவெனில் அரசாங்கம், பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவை என்ன சொல்கிறதோ அதன்படி அவர்கள் நடப்பதாகத் தெரிகிறது.

யாழ்ப்பாணத்தில் பொதுநிகழ்ச்சிகளில் ராணுவம் பங்கேற்பதாகத் தெரிகிறது. இதன் பின்னணி என்ன?

பொதுமக்களோடு தங்களை இணைத்துக்கொண்டு பணியாற்ற ராணுவம் நினைக்கிறது. ஆனால் ராணுவம் என்றால் தமிழ் மக்களைப் பொறுத்தவரை அச்சுறுத்தக் கூடிய ஒரு அமைப்புதான். அதைத் தமிழ் மக்கள் எப்போதும் விரும்புகிறார்களில்லை.

யுத்தம் முடிவடைந்த பிறகு தமிழ்க் கலாச்சாரம் யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்படுகிறது என்ற அச்சம் தெரிவிக்கப்படுகிறது. அது சரியா?

page32b.jpg

ஒரு பக்கத்தில் அரசாங்கம் புத்த சமயத்தைப் பரப்புவதற்கு முயல்வது தெளிவாகத் தெரிகிறது. ஏனென்றால் வடபகுதியில், யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் புத்தருடைய சிலைகள் வைக்கப்பட்டு விகாரைகளும் கட்டப்படுகின்றன. இதுவும் தமிழ் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச நிலையைத் தோற்றுவித்திருக்கிறது. அங்கு வாழும் மக்களில் பெரும்பாலானவர்கள் இந்துமக்கள். அவர்கள் வாழும் இடங்களில் புத்த விகாரைகளோ புத்தர் சிலைகளோ எதற்கு? முன்பு மக்கள் கட்டுப்பாடுகளோடு இருந்தார்கள். போர் அவர்களை வேறு விடயங்கள் எதையும் யோசிக்க விடாது தடுத்திருந்தது. போர் முடிந்தவுடன் மக்கள் ஒருவிதச் சுதந்திர மனநிலையை உணருகிறார்கள். எல்லாவகையான போதைப் பொருட்களும் யாழ்ப்பாணத்தில் தாராளமாகக் கிடைக்கின்றன. இது இளைஞர்களைத் திசைதிருப்பிவிடுகிறது. சீரழிவுக்கு இதெல்லாம் காரணம் என்று நினைக்கிறேன்.

அங்கு இருக்கும் இன்னுமொரு பிரச்சினையைப் பற்றியும் இங்கே சொல்ல வேண்டும். ராணுவம் விவசாய நிலங்களையும் மற்ற நிலப்பகுதிகளையும் அபகரித்திருப்பதால் விவசாயம், கைத்தொழில் போன்றவை முடங்கிப் போயிருக்கின்றன. தமிழ் மக்களுடைய வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது பெருந்துயரம். நாற்பதாயிரம் ராணுவத்தினர் பெரும்பாலான நிலங்களை அபகரித்திருக்கிறார்கள். அது விவசாயிகளுக்குப் பாரியதொரு பிரச்சினை. பாதுகாப்பு என்னும் பெயரில் அவர்களின் நிலங்களைக் கேள்வியில்லாமல் ராணுவத்தால் பிடுங்கிக்கொள்ள முடியும்.

வன்னியிலிருந்து அகதிகளாக யாழ்ப்பாணத்துக்கு வந்த மக்களுடைய நிலவரம் எவ்வாறு இருக்கிறது?

யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்குப் போய் யுத்த களத்தில் அகப்பட்டவர்களில் அகதிகளாக மெனிக்பாம் முகாமில் இருந்தவர்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் குடியமர்த்தப்பட்டுவிட்டார்கள். ஆனால் வீடுவாசல்கள் இல்லாமல் எப்படித்தான் குடியமர்த்துதல் என்ற சொல்லைப் பிரயோகிப்பது? அவர்களுக்குத் தொழில்செய்ய உதவ வேண்டும். ஆனால் அவர்களுக்கு மகிழ்ச்சியளித்தது ஒரேயொரு விடயம்தான். தமது சொந்த இடத்துக்குப் போய்த் தங்கள் காணியில் இருக்கும் கிணற்றில் தண்ணீர் அள்ளிக் குடித்ததுதான் அது. ஆனால் ஒரு சிறிய குடிசை போட்டு அதில் வாழ்வதற்குக்கூட வழியில்லாமல் அவதிப்படுகிறார்கள். அவர்கள்

யுத்தத்தில் எல்லாவற்றையும் இழந்துவிட்டார்கள். அவர்களிடம் பணம் இல்லை. வேறு எதுவுமே இல்லை.

யுத்தத்தால் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள், யுத்தத்தால் கணவனை இழந்த விதவைகள் ஆகியோர் பெரும் நெருக்கடியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?

யுத்தக் கைதிகளாக இருந்து இப்போது விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுடைய நிலைமை பெருந்துன்பமானது. அவர்கள் எப்போதும் கண் காணிக்கப்படுகிறார்கள். விடுதலை செய்யப்பட்டிருந்தாலும் அவர்கள் சுதந்திரமானவர்களாக இல்லை. அவர்கள் மாதம் ஒருமுறையோ இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையோ ராணுவ முகாம்களுக்குப் போய்க் கையெழுத்திட வேண்டும். இது அச்சமூட்டும் நிலைமை. அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படாவிட்டால் தவறான வழிகளுக்குப் போய்விடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களுக்குள் ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் அவர்களது மன ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதற்கும் தொழில் வாய்ப்புகள் அவசியம். இதைச் செய்வதில் இலங்கை அரசு அதிக அக்கறைகாட்ட வேண்டும்.

முன்னாள் பெண் போராளிகளின் நிலைமை எப்படி இருக்கிறது? ஏனெனில் அவர்களைத் திருமணம் செய்வதற்கு யாழ்ப்பாணத்தில் யாரும் முன்வராத நிலைமை காணப்படுவதாகக் கேள்விப்படுகிறோம்?

பொதுவாக அப்படி நான் கேள்விப்படவில்லை. சில இடங்களில் அப்படி இருக்கலாம். இங்கு ஒரு விடயத்தைச் சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாற்பதினாயிரம் விதவைகள் இருக்கிறார்கள் அவர்களின் நிலைமைதான் மோசம். அவர்கள் மறுவாழ்வு பெற வேண்டும். குடும்ப பாரம் முழுக்க அவர்களின் தலையில் இருக்கிறது அதைச் சுமப்பது அவர்களுக்குப் பெரும் சிக்கலாக இருக்கிறது. இவர்களுக்கு வங்கிகள் மூலமாகச் சில உதவிகள் செய்யப்படுகின்றன. ஆனால் அது யானைப் பசிக்குச் சோளப்பொரி போட்ட மாதிரித்தான் இருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் கடத்தல்களை யார் செய்வது? தொடர்ச்சியாக இந்தப் பிரச்சினை இருக்கிறது அல்லவா?

ஆள் கடத்தல்கள், வெள்ளை வேன் கடத்தல்கள் கொழும்பில் அதிகமாக நடக்கின்றன. யாழ்ப்பாணத்திலும் நடக்கின்றன. சிலர் அச்சத்தின் காரணமாக வெளியில் சொல்லாமல் இருக்கிறார்கள். கடத்தல்களுக்கு யார் காரணம், ராணுவத்துக்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறதா, வேறு கட்சிகளுக்குத் தொடர்பு இருக்கிறதா என்னும் குழப்பமான நிலையே நிலவுகிறது. எங்களுடைய பாதிரிமார் இரண்டுபேரைக்கூட மக்களின் கண் முன்னால் கடத்திக்கொண்டு போனார்கள். அவர்கள் இன்னும்கூட விடுவிக்கப்படவில்லை. ஆள் கடத்தல் என்பது பெரிய பிரச்சினை.

எல். எல். ஆர். சி. என அழைக்கப்படும் கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக் குழு முன்னிலையில் நீங்கள் சாட்சியமளித்தீர்கள். அவர்களிடம் என்ன சொன்னீர்கள்?

ஆம். சாட்சியமளித்தேன். அதில் ‘கடத்தப்பட்ட மக்களை விடுவியுங்கள். காணாமல்போன ஆட்களைப் பற்றிய தகவல்களைத் தாருங்கள்’ என்று கேட்டேன்; தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்கள் அல்ல என்ற விடயத்தையும் அவர்களுக்குச் சொன்னேன். தமிழர்களுக்குச் சம உரிமை வேண்டும், அவர்களது மொழி, கலாச்சாரத்தைப் பின்பற்றுவதற்கான சூழல் ஒன்றுபட்ட இலங்கைக்குள் உருவாக்கப்பட வேண்டும்.

எல். எல். ஆர். சி. அறிக்கையைப் படித்தீர்களா? அது தமிழர்களுக்கு ஏதாவது பயனள்ள விடயத்தைச் சொல்லியிருக்கிறதா?

அது முழுமையான அறிக்கை என்று சொல்வதற்கில்லை. அந்த ஆணைக்குழு உருவாக்கப்பட்டதே சர்வதேசச் சமுதாயத்திடமிருந்து வந்த அழுத்தங்களைச் சமாளிப்பதற்காகத்தான். அதில் உள்ள சில அம்சங்கள் ஓரளவு பயனுள்ளவை. அவற்றையாவது அமல்படுத்த அரசாங்கம் முன்வர வேண்டும். ஆனால் அரசாங்கம் அதை அலட்சியப்படுத்துகிறது. இலங்கை அரசாங்கத்துக்குத் தமிழ் மக்கள்மீது எந்தவிதமான அக்கறையும் இல்லைபோலத்தான் தோன்றுகிறது. சர்வதேசச் சமுதாயத்தின் அழுத்தங்கள் இல்லாவிடில் எதுவும் நடக்காது எனச் சந்தேகிக்கத் தோன்றுகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்திற்குப் பிறகு இலங்கை அரசு கொஞ்சம் பயந்ததுபோல் காணப்படுகிறது. இலங்கை அரசை மனித உரிமைகளுக்கு எதிரான அரசாக சர்வதேசச் சமுதாயம் நோக்குகிறது என்னும் விடயம் இலங்கை அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் விஷயம். நாங்களும் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக எங்களுடைய கத்தோலிக்க ஆயர் சங்கத்தினூடாக வத்திக்கானுக்கு அறிக்கை சமர்ப்பித்துக்கொண்டிருக்கிறோம். ஆயர்களாகிய நாங்கள் வருடத்துக்கு மூன்றுமுறை சந்திப்போம். அங்கு வத்திக்கானின் பிரதிநிதியும் எங்களோடு இருப்பார். அங்குப் பேசும்போது எங்களுடைய நாட்டின் நிலைமைகள், அரசியல் நிலைமை, மக்களின் நிலைமை தொடர்பாகப் பேசுவோம்; அறிக்கையிடுவோம். எனக்குச் சொல்ல முடிந்ததெல்லாம் இவைதாம்: நாங்கள் தமிழர்கள். சிங்களவர்களுக்குச் சமமான உரிமை எங்களுக்கும் இருக்கிறது. அதை முழுமையாக நாங்களும் அனுபவிக்க வேண்டும். தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இவற்றைத்தான் நான் மீண்டும் அழுத்திச் சொல்வேன்.

மிகவும் நன்றி: காலச்சுவடு

http://www.kalachuva...-152/page32.asp

[size=4]நிகழ்காலத்தை தழுவிய கேள்விகள். கேள்விகளை கேட்டவருக்கு நன்றிகள். [/size][size=1]

[size=4]சகல சந்தேகங்களையும் அருட்தந்தை தீர்த்து வைத்துள்ளார். ஊருக்கு போய் பார்த்துதான் யதார்த்தத்தை தெரியவேண்டியதில்லை. [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்காலத்தை தழுவிய கேள்விகள். கேள்விகளை கேட்டவருக்கு நன்றிகள்.

சகல சந்தேகங்களையும் அருட்தந்தை தீர்த்து வைத்துள்ளார். ஊருக்கு போய் பார்த்துதான் யதார்த்தத்தை தெரியவேண்டியதில்லை.

இங்கை ஒருவர் வெளிநாட்டில் இருக்கிறவர்கள் தானாம் ஊதிப் பெருப்பிக்கிறார்களாம்.அங்கு ஒரு பிரச்சனையும் இல்லையாம் என்றல்லோ கதையளக்கிறார்.

||

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் கடத்தல்களை யார் செய்வது? தொடர்ச்சியாக இந்தப் பிரச்சினை இருக்கிறது அல்லவா?

ஆள் கடத்தல்கள், வெள்ளை வேன் கடத்தல்கள் கொழும்பில் அதிகமாக நடக்கின்றன. யாழ்ப்பாணத்திலும் நடக்கின்றன. சிலர் அச்சத்தின் காரணமாக வெளியில் சொல்லாமல் இருக்கிறார்கள். கடத்தல்களுக்கு யார் காரணம், ராணுவத்துக்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறதா, வேறு கட்சிகளுக்குத் தொடர்பு இருக்கிறதா என்னும் குழப்பமான நிலையே நிலவுகிறது. எங்களுடைய பாதிரிமார் இரண்டுபேரைக்கூட மக்களின் கண் முன்னால் கடத்திக்கொண்டு போனார்கள். அவர்கள் இன்னும்கூட விடுவிக்கப்படவில்லை. ஆள் கடத்தல் என்பது பெரிய பிரச்சினை.||

நாற்பதாயிரம் இராணுவத்துக்கும் அவர்களோடு சேர்ந்து இயங்கும் டக்கிளஸ் குழுவுக்கும்(கிழக்கில் கருணா, பிள்ளையான் குழு) தெரியாமல் எதுவும் நடக்க வாய்ப்பில்லை என்பது சிறு பிள்ளைக்கே தெரியும்.

[size=4]

இங்கை ஒருவர் வெளிநாட்டில் இருக்கிறவர்கள் தானாம் ஊதிப் பெருப்பிக்கிறார்களாம்.அங்கு ஒரு பிரச்சனையும் இல்லையாம் என்றல்லோ கதையளக்கிறார்.

[/size]

[size=4]ஒரு வித hidden agenda உள்ள ஆட்களாக இருக்கும்.[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த செய்திகளை ஏனையர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்..பிரதானமாக, அங்கில மற்றும் பிற மொழி மூல செய்தி ஊடகங்களில்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.