Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடைசெய்யப்பட்ட பகிரங்கம்-நேர்காணல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தடைசெய்யப்பட்ட பகிரங்கம்-நேர்காணல்

-சந்திப்பும் தொகுப்பும்- கரன்

வெளிப்படையாகச் செயற்படுவது, வெளிப்படையாக இருப்பது, பகிரங்கமாகப் பேசுவது, பகிரங்கமாகத் தொடர்பு கொள்வது போன்ற எல்லாமே இலங்கைச் சூழலுக்கு, தமிழ்ச் சூழலுக்கு ஒவ்வாமையாகி விட்டன. கடந்த முப்பதுக்கும் அதிகமான ஆண்டுகால இனவாத அரசியல் எல்லாவற்றையும் தலைகீழாக்கி விட்டது. வாழ்க்கையின் அடிப்படைகள் தகர்க்கப்பட்டு விட்டன. பாராட்டுகள், புகழாரங்கள் என்பவற்றுக்கு அப்பால் இழிவு கூறல், குற்றம் சாட்டுதல், வசை பாடுதல், அவமதித்தல், குறிசுடுதல், புறக்கணித்தல் போன்ற எதிர்மறை அம்சங்களே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளன. ஜனநாயகம் மறுக்கப்பட்டு, அதிகாரம் குவியப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அதிகாரம் தனியே சிங்கள ஆளும் தரப்பிடம் மட்டும் குவிந்துள்ளது என்றில்லை. தமிழ் மனோபாவத்திலும் குவிந்தே இருக்கிறது.

WAR-03-1.jpg பொதுவாக அல்லது சுருக்கமாகச் சொன்னால், நச்சுச் சூழலையே பலரும் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நச்சுச் சூழலுக்கே எல்லோரும் பலியாகிக் கொண்டும் இருக்கின்றனர் என்கிறார் வன்னியைச் சேர்ந்த ஒருவர். இவர் நீண்ட காலமாகப் போராட்டத்துடனும் போராட்டச் சூழல், போர்ச் சூழல் ஆகியவற்றுடன் வாழ்ந்தவர்.

ஈழப்போரின் இறுதி நாட்கள் வரையில் இறுதிப் போர் நடந்த களம் வரையில் சனங்களோடு நின்றவர். இப்போதும் வன்னியில் மீள் குடியேறியவர்களில் ஒருவராக, சனங்களோடு ஒருவராக நிற்கிறார்.

அனுபவத்தைத் தொகுத்து அறிவாக்குவது அடிப்படையான ஒரு விதி. மனித இருப்பு என்பதும் சமூகப் பண்பாட்டு, வாழ்க்கையின் அடையாளங்கள் என்பவையும் கடந்த அனுபவச் சாரத்தையும் கண்டு பிடிப்பதில்தான் தங்கியுள்ளன. இதைத் தவற விடும் சமூகங்கள் முடிவற்ற வீழ்ச்சியிலும் எல்லையற்ற துயரத்திலுமே சிக்கி விடுகின்றன.

இது அறிவின் யுகம் என்பதால், இந்த யுகத்தில் அறிவே பலமாகவும் ஆதாரமாகவும் அமைகிறது. எனவே, அறிவுபூர்வமாகச் சிந்திக்கவும் செயற்படவும் இல்லையெனில் வீழ்ச்சியும் நெருக்கடியும் தவிர்க்க முடியாதவையாகிவிடும் என்று சொல்லும் இவருடன் உரையாடினேன்.

நிலைமையின் தாற்பரியத்தை உணர்ந்து உரையாடலில் தொடர்பு பட்ட இவருடைய பெயர் இங்கே குறிப்பிடப்படவில்லை. ஏற்கனவே சொன்னதைப்போல,

வெளிப்படையாகச் செயற்படுவது, வெளிப்படையாக இருப்பது, பகிரங்கமாகப் பேசுவது, பகிரங்கமாகத் தொடர்பு கொள்வது போன்ற எல்லாமே இலங்கைச் சூழலுக்கு, தமிழ்ச் சூழலுக்கு ஒவ்வாமையாகி விட்டனஎன்பதற்கிணங்க இதைத் தவிர்த்துள்ளேன்.இதில் சொல்லப்பட்டுள்ள விடயங்களையிட்டு தொடர்ந்தும் உரையாட அவர் தயாராக உள்ளார். உங்கள் கருத்துக்களை எழுதுமாறு கேட்கிறோம்…

————————————————————————————————————————————————-

*. போர், போருக்குப் பின்னரான சூழல் அல்லது நிலைமைகளை எவ்வாறு விளங்கியுள்ளீர்கள்? அதாவது, இந்த இரண்டுக்கும் இடையிலான வேறுபாடுகள், ஒத்திசைவுகள் போன்றவற்றை எவ்வாறு புரிந்துள்ளீர்கள்?

போர் என்பது ஒரு சூழ்நிலையின் உருவாக்கமே. போருக்கான சூழ்நிலையின் உருவாக்கத்தை எப்போதும் அதிகார வர்க்கங்களே ஏற்படுத்துகின்றன. சமானியர்கள் ஒருபோதும் போரை உருவாக்குவதில்லை. இது முற்றிலும் உண்மையானது. இதுதான் வரலாறும். மதத்தின் காரணமாக உருவாக்கப்படும் போர்களுக்கு மத பீடங்களும் அவற்றின் தலைமைச் சக்திகளும் காரணமாக இருப்பதை வரலாற்றிற் பார்க்க முடியும்.

WAR-01.jpg

அதேபோல் இனப்போர்களாக இருந்தால், அந்தந்த இனங்களை மையமாக வைத்து அல்லது அவற்றின் இன உணர்வைத் தூண்டி அதிகாரம் செய்கின்ற அல்லது தலைமைத்துவத் தரப்புகள் போரை உருவாக்குகின்றன. இன்றைய உலகில் பொருளாதார ஆதிக்கப்போட்டியை மையமாகவும் நேரடியாகவும் வைத்து போர்களும் போருக்கான வியூகங்களும் ஏற்படுத்தப்படுகின்றன. இதில் குறிப்பிட்ட நாடுகளின் அதிகார மையங்களே சம்மந்தப்படுகின்றன.

மன்னர்களுக்கிடையில் நடந்த போர்களிலும் இரண்டு அதிகாரங்களுக்கிடையிலான போட்டியும் முரணும் மோதல்களுமே அடிப்படையாக அமைந்திருக்கின்றன. அல்லது அதிகார அணிகளுக்கிடையிலான அவை அமைந்துள்ளன. ஆகவே, அதிகாரத்துக்காக அதிகார மையங்களால் நடத்தப்படுகின்றன போர்கள்.

இதேவேளை இந்தப் போர் சில சந்தர்ப்பங்களில் இன்னொரு வகையில் அதிகாரத்துக்கு எதிரான இன்னொரு தரப்பினால், ஒடுக்கப்படும் தரப்பின் சார்பாக நடத்தப்படுவதுண்டு. இந்தப் போர் ஒரு போராட்டத்தின் விளைவானது. அடிப்படையில் இது ஏற்கனவே இருக்கின்ற அதிகாரத்தை உடைத்து இன்னொரு அதிகாரத்தை – மாற்று அதிகாரத்தை உருவாக்குவதற்கான போராகவே இருப்பதுண்டு.

நிலவுகின்ற சூழலில், இருக்கும் அதிகாரத்தை உடைத்து தமக்கான அதிகாரத்தை, தமது இருப்பை உறுதிப்படுத்துவதற்கான போராக இந்தப் போர் அமைக்கப்படுகிறது. இதுதான் விடுதலைப் போராட்டமாக, சுதந்திரப் போராட்டமாக அமைகிறது. ஆனால், மாற்று அதிகாரம் என்று செயற்பட முனையும் தரப்புகள் பல சந்தர்ப்பங்களிலும் எதேச்சதிகார நிலைக்குச் சென்று விடுவதுண்டு. அதிகாரம் என்பது மிகக் கவனமாகக் கையாள வேண்டிய ஒரு பொறிமுறை.

போருக்குப் பின்னரான சூழலில் மக்களுக்கான வாழ்க்கைப் பிரச்சினை, பொருளாதார ஈட்டல் தொடர்பான பிரச்சினைகள் இருக்கின்றன. அதேவேளை, இன்னும் நிச்சயமின்மை என்ற ஒரு உள்ளுணர்வு எல்லோரையும் தீண்டிக்கொண்டேயிருக்கிறது.

நிச்சயமின்மை என்பது ஒரு அச்சநிலையே. ஆட்கடத்தல் ஒரு நிச்சயமற்ற சூழலின் வெளிப்பாடு. இது அச்சத்தை முழுச்சமூகத்திற்கும் விதைத்து விடுகிறது. அடிப்படையில் போர்ச்சூழலுக்கு அண்மித்த நிலையே இது. உத்தரவாதங்கள் தகர்ந்து, நிச்சயமின்மை என்ற நிலை எந்தச் சமூகத்திற்கு ஏற்பட்டாலும் அது போர்ச்சூழலுக்கு ஒப்பானதுதான்.

*. அப்படியென்றால் இன்னும் இலங்கைத்தீவில் அமைதி ஏற்படவில்லை என்கின்றீர்களா?

இலங்கைத்தீவில் அமைதியை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு முதலில் இலங்கையர்களுக்கே உண்டு. அதை அவர்கள் செய்யாத வரையில் இலங்கைத்தீவில் அமைதியை ஏற்படுத்த முடியாது. பதிலாக பதற்றத்துக்குள்தான் இலங்கையர்கள் இருக்க வேண்டும்.

இலங்கைத் தீவிலுள்ள ஒவ்வொரு சமூகமும் நம்பிக்கையீனத்தோடும் சந்தேசத்தோடும்தான் பிற சமூகங்களுடன் உறவாடுகின்றன. சந்தேகத்தோடும் அச்சத்தோடும்தான் இவை லாபநட்டங்களைப் பகிர்ந்து கொள்கின்றன. சூழ்நிலையின் நிர்ப்பந்தம் பலரையும் மௌனமாக்கி வைத்திருக்கின்றதே தவிர, ஒவ்வொருவருக்குள்ளும் வெடித்துக் கொண்டிருக்கும் எரிமலைகள். உள்ளுக்குள்ளே எரிமலைகள் வெடித்துக் கொண்டிருக்கும்போது வெளியே அலங்கரிக்கப்படும் அமைதி சில கணங்களுக்கான தோற்றம் மட்டுமே. அது ஒரு மின்னற் காட்சி. அவ்வளவுதான்.

*. இலங்கையில் நிரந்தர அமைதிக்கான சூழல் உண்டா? அவ்வாறெனில் அது எப்படி அமையும்? அது எவ்வாறு அமைய வேண்டும்?

எதுவும் நிரந்தரமில்லை. ஆனால், நிரந்தரமின்மைக்குள் ஒரு நிரந்தரம் இருக்கும். அதுதான் மக்களைப் பாதுகாக்கிறது. சமூகத்தைப் பாதுகாக்கிறது. ஒரு சட்டம் எப்போதைக்குமான நிரந்தரத்தை உடையதல்ல. ஆனால், ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் அது வரையறுக்கப்பட்ட ஒழுங்குகளைப் பேண முற்படுகிறது. அந்தச் சட்டம் யாரால், யாருடைய பாதுகாப்பையும் நலனையும் பேண முற்படுகிறது என்பது விவாதத்திற்குரியது என்றாலும் ஒரு எல்லைவரையில் பொதுமக்களையும் பாதுகாக்கிறது. இவ்வாறு பல விசயங்கள் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் நிரந்தரம் இருக்கும். அந்த நிரந்தரம் அவசியமானது.

ஓடிக்கொண்டிருக்கும் காலச் சுழற்சியில் மரம் வளர்கிறது. மரம் நிற்பது ஒரு வரையறுக்கப்பட்ட ஒரு நிரந்தரம். ஆனால், வளர்வது நிரந்தரத்தை ஒரு வகையில் குலைக்கிறது. இன்னொருவகையில் நிரந்தரத்தைப் பேணுகிறது. அதாவது மரத்தின் வளர்ச்சியானது அது முன்னர் இருந்த நிலையை மாற்றி விடுகிறது. அதேவேளை அது அது வளர்ச்சியின் மூலம் மரத்தினுடைய இருப்பைப் பேணுகிறது. இது நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றத்தைக் குறிக்கும். அதாவது நேற்றிருந்த மரம் இன்றில்லை. இன்றைக்கு அது வேறுபடுகிறது. ஆறுமாதங்களில், சில ஆண்டுகளில் அது பருத்து வேறு விதமாகத் தோற்றம் தருகிறது. இதுதான் நிரந்தரத்தைக் குலைக்கும் மாற்றமாகும்.

சில மாற்றங்கள் வளர்ச்சியினால் ஏற்படுபவை. அவை முன்னேற்றத்துக்குரியவை. சில மாற்றங்கள் வளர்ச்சிக்குரியவை. சில மாற்றங்கள் இயல்பானவை. சில இயற்கையானவை. சில மாற்றங்கள் மனிதர்களால் நிகழ்த்தப்படுபவை. தேவைகள், அவசியங்களின் பாற்பட்டுச் செயற்படுத்தப்படுபவை.

இலங்கையில் அமைதியை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கையர்களுக்கே உண்டென்று மீண்டும் வலியுறுத்துகிறேன். அமைதிக்கான அவசியத்தை இலங்கையர்களே அதிகமாக உணர்ந்தவர்கள். நடைபெற்ற பெரும் போரும் அந்தப் போரின் மறு விளைவுகளும் அமைதியை வலியுறுத்துகின்றது. போரினால் பாதிக்கப்பட்டவர்கள், அமைதியைத் தவிர வேறு எதையும் விரும்பமாட்டார்கள்.

WAR-2.jpg

அமைதி என்பது அவர்களுக்கு ஆறுதலாகும். தங்களை மீள் நிலைப்படுத்திக் கொள்வதற்கும் காயங்கள் வலிகளில் இருந்து மீள்வதற்குமான ஒரு சந்தர்ப்பமும் ஆகும். எனவே, அவர்கள் நிச்சமாக அமைதியையே விரும்புகிறார்கள்.ஆனால், போரின் பாதிப்புகளில் இருந்தும் போர்ச் சூழலில் இருந்தும் விலகியிருந்தவர்களும் அமைதியைப் பற்றிச் சிந்திக்கவேயில்லை. அவர்கள் அமைதிக்கெதிராகவே சிந்திக்கிறார்கள். அவசியமான அமைதியை அவர்கள் விரும்பவில்லை. சிலர் அதைச் சந்தேகிக்கிறார்கள். தவிர, தூய அமைதி என்ற ஒன்று என்றும் எங்கும் கிடைக்கப்போவதும் இல்லை.

இந்த ஆட்கள்தான் கோட்பாட்டு விளக்கிகளாகவும் உள்ளனர். நீங்கள் ஒரு உண்மையைக் கவனிக்க வேணும். போரின் பாதிப்புகளைச் சந்தித்தவர்கள் பேசுவதை விடவும் அதற்கு வெளியே இருப்பவர்கள் பேசுவதுதான் இன்று அதிகம். போர்ச்சூழலுக்குள் அந்தப் பாதிப்புகளை அனுபவித்துக்கொண்டு வாழ்வதற்கு நிர்ப்பந்திப்பட்டவர்கள். பேசுவதற்கு அனுமதி இல்லாத சூழல் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதுதான் முன்னர் இப்போதும்.

உள்நோக்கங்கள், வேறு காரணங்கள், வேறு பின்புலங்கள் எல்லாம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் அமைதிக்கு எதிரான காரியங்கள். அமைதிக்கு எதிராகவே சிந்தித்துக்கொண்டு அமைதிக்கு எதிராகவே செயற்பட்டுக்கொண்டு அமைதியைப் பற்றி, அமைதி கிடைக்க வேண்டும் என்பதைப் பற்றி எவ்வாறும் நாம் பேசமுடியும்? அதில் ஒரு மிகச் சிறிய விலகல் ஏற்பட்டாலும் அது பெரிய திசைமாற்றத்தை உண்டாக்கி விடும்.

*. ஒடுக்குமுறையிலிருந்து விடுபடுவதற்கான அதிகார மாற்றம் பற்றிய உங்கள் அவதானம் என்ன?

மிகப் பெரிய பொறுப்புணர்வோடும் உச்ச விழிப்போடும் மிக உச்ச நிலையிலான நிதானத்தோடும் போராட்டச் சக்திகள் தமது அதிகாரத்தை, தாம் உண்டாக்கும் அதிகாரத்தை, தாம் கைப்பற்றும் அதிகாரத்தைக் கையாள வேண்டும்.

ஏனெனில், இந்தத் தரப்பு என்பது, அதாவது போராட்டச் சக்திகள் என்பது மக்களின் சார்பானவை. பாதிக்கப்பட்ட சனங்களின் தரப்பிலானவை. ஏற்கனவே திரட்சியுற்றிருந்த அதிகார அமைப்பாகவோ, அதிகார வர்க்கமாகவோ இல்லாதவை. அத்துடன் பாதிக்கப்பட்ட சனங்களின் தரப்பிலானவை என்பதால், அந்தச் சனங்களின் ஆதரவில் இருந்தும் அவர்களுடைய உழைப்பிலிருந்தும் அந்தச் சனங்களின் வாழ்விலிருந்துமே தமது உயிர்ப்புற்கான, இருப்புக்கான சாரத்தை எடுக்கின்றன. என்பதால், அந்த மக்களுக்கு நன்றியாகவும் விசுவாசமாகவும் விடுதலைக்கான இந்த அதிகாரத்தரப்பினர் இருக்க வேண்டும். இயங்க வேணும்.

அவ்வாறில்லாமல் கிடைக்கின்ற அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது அல்லது அதைச் சர்வாதிகாரமாக்குவது என்பது ஏற்கனவே அதிகாரத்திலிருந்து சனங்களை ஒடுக்கும் அதிகாரத்தரப்பின் செயற்பாட்டை விடவும் அந்தத்தரப்பின் அநீதியை விடவும் மிக மோசமானதாகவே அமையும்.

ஏற்கனவே அதிகாரத்திலிருக்கும் தரப்பானது ஒடுக்குமுறைப் பொறியமைப்பின் தேவைக்கமையவும் தேர்ச்சிக்கமையவும் சில அடிப்படைகளையும் அடிப்படைக்கூறுகளாகக் கொண்டிருக்கும். இந்த அடிப்படைக்கூறுகளில் சில விழுமியங்களும் மரபார்ந்த நல்லம்சங்களும் இருக்கும். அவை பேணப்படுவதும் வழமை. காரணம் என்னவெனில் மக்கள் ஒன்று திரளமுடியாமல் இருக்கவும் எதிர்ப்புணர்வில் திரட்சியடையாமல் இருப்பதற்குமான ஒரு பொறிமுறையே இது. சட்டப்பாதுகாப்பு, நீதி விசாரணை, ஜனநாயக உரிமைகள் என்ற ஒரு தோற்றப்பாட்டின் மூலம் மக்களைக் காயடித்தல். ஆனால், உண்மையில் அதிகாரத்தரப்புகள் ஒருபோதும் இவற்றை முறையாகக் கடைப்பிடிப்பதும் இல்லை. இவற்றுக்கு இடமளிப்பதும் இல்லை. ஆனால், அதிகாரத்தரப்பே இதைப் பாதுகாக்க வேணும். இங்கே அதிகாரத்தரப்பெனப்படுவது ஆட்சிக்குப் பொறுப்பாக இருக்கும் தரப்பையே குறிக்கிறது.

மேற்குலக ஜனநாயகம் என்பது இதற்குச் சிறந்த உதாரணம். அங்குள்ள அதிகார வர்க்கத்துக்கு எதிராக மக்களும் வெளியுலகமும் கிளர்ந்தெழ முடியாமல் தடுக்கும் ஒரு விவேக நடவடிக்கையே அங்கே காணப்படுகிறது. அரசை யாரும் எப்படியும் விமர்சிக்கலாம். ஆனால், அரசுக்கு எதிராகச் செயற்பட முடியாது. ஒரு தாராளவாதப் பிம்பம் அங்கே உருவாக்கப்பட்டுள்ளது.

ஏனைய சமூகங்களிலும் பிராந்தியங்களிலும் இல்லாத விட்டுக்கொடுப்புகளை மேற்குலக ஜனநாயகம் செய்கிறது. எனவே அது மேலானதாக பலருக்கும் தோன்றுகிறது.

ஆனால், அந்த ஜனநாயகம் ஒப்பீட்டளவில் ஏனைய பிராந்தியங்களைவ விட மேலானதாக – பரவாயில்லை என்று சொல்லப்படும் அளவுக்கு இருக்கிறதே தவிர, குறிப்பிட்ட நாடுகளின் மக்களையும் அங்குள்ள மக்களையும் அங்குள்ள அதிகாரத் தரப்புகளையும் சமனிலைப்படுத்தவில்லை. அல்லது மேற்குப் பிராந்தியத்தையும் ஏனைய பிராந்தியத்தையும் சமநிலைப்படுத்தவில்லை.

எனவே, இதுவொரு மாயத்தோற்றமே. ஒரு வானவில்லைப்போல. ஆனாலும் ஒரு விசயம் மட்டும் உண்மை. மரபார்ந்த அதிகாரத்தரப்பில் கடுமையான இறுக்கங்களும் அளவுக்கதிகமான நெருக்கடிகளுக்கும் இடமிருக்காது. அவ்வாறிருந்தாலும் அது ஒரு குறித்த காலத்தளவுக்கே.

*. போர், போரின் பின்னரான சூழல் பற்றிச் சொல்லுங்கள்?

நான் முன்னரே சொன்னேன், போரை ஒரு போதுமே மக்கள் உருவாக்குவதில்லை என்று. அவர்கள் போரினை எதிர்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இதன்காரணமாக அவர்களே அதிகமாகப் பாதிப்புக்குள்ளாகின்றனர். ஆனால், வேடிக்கை என்னவென்றால், எல்லாப் போர்களும் மக்களுக்காகவே நடத்தப்படுகின்றன என்று எல்லாத்தரப்பும் கூறுவதுதான்.

போர்ச்சூழல், போர், போருக்குப் பின்னரான சூழல் எல்லாமே ஒன்றுதான். ஒன்றின் தொடர்ச்சி. போரில் நேரடிப்பாதிப்பு, விரைவான – சடுதியான பாதிப்புகள், விளைவுகள், அழிவுகள் ஏற்படும். இதனால் தாக்கம் வெளிப்படையாக அதிகமாகத் தெரியும். குறிப்பாக உயிரிழப்புகள், உடல் உறுப்பிழப்புகள், சொத்திழப்புகள், இடப்பெயர்வுகள் போன்ற அனர்த்தங்கள் பெரிதாக இருக்கும்.

ஆனால், போருக்கு முன்னரான போருக்கான சூழலும் போர் முடிந்த பின்னரான உடனடிச் சூழலும் அவ்வாறிருப்பதில்லை. ஆனால், இவை பெரும் பதற்றமானவை. நேரடிப்பாதிப்புகள் வெளியே தெரியாதபோதும் நீண்டகாலப் பாதிப்புகள், உறுதிப்பாடின்மை, அச்சம் என்ற வகையில் வேறுபட்ட தாக்கங்கள் அதிகமாக இருக்கும்.

*. போருக்குப் பின்னான இன்றைய இலங்கைச் சூழல், வடக்குக் கிழக்குப் பகுதிகளின் நிலைமை என்ன?

போர் நின்ற பின்னும் நிம்மதி, நிரந்தரம், ஆறுதல், அமைதி என்ற எதையும் மக்கள் சீராக உணரவில்லை. அப்படி உணர்ந்தாலும் அது இலங்கைத்தீவில் சமநிலையடையவில்லை. பிராந்தியங்களில் சட்டத்தின் நிறமும் நீதியின் வண்ணமும் வேறுபட்டே உள்ளது. உயிர் இழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இது முக்கியமான ஒன்று. சாவின் குரல் கேட்பது, தினமும் கொத்துக் கொத்தாக இளைய தலைமுறையினர் மடிவது, எப்போது எங்கே என்ன நடக்கும் என்று தெரியாத பதற்ற நிலை அற்றுப்போயுள்ளது. மரணபயத்துடன் வாழ நிர்ப்பந்திக்கப்படுவது மிகப் பயங்கரமானது.

சனங்கள் தங்களுடைய வாழ்க்கையை எப்படி நிர்மாணிக்கலாம் என்று திணறிப்போயுள்ளனர். யாரும் அவர்களுக்கு வழிகாட்டவில்லை. சிறிய உதவிகள் கிடைக்கின்றன. உட்கட்டுமான விருத்தி பரவாயில்லை. முன்னேற்றம் ஏற்படுகிறது. ஆனால், அது தேவையின் அளவுக்கும் நியாயத்தின் அளவுக்குமானதல்ல.

PUT-02.jpg

*. அமைதியைக் குறித்து….

முரண்பாடுகளும் இடைவெளிகளும் வளர்ச்சியடைந்து அல்லது கூர்மையடைந்து பகைமை உச்சமாகியுள்ள ஒரு நாட்டில் அமைதியை உருவாக்குவதென்பது மிகக் கடினமானது. இது ஒரு கூட்டு நடவடிக்கையின் மூலமே சாத்தியமாகும். தீயை மூட்டுவது சுலபம். தனியொருவரே பெருந்தீயை மூட்டிவிட முடியும். ஆனால், அந்தத் தீயை அணைப்பது கடினம். அதற்குப் பலருடைய ஒத்துழைப்பு அவசியம். இந்தக் கூட்டு நடவடிக்கையைத் திட்டமிடுவதிலும் இதில் பங்கேற்பதிலும் அனைவருக்கும் பொறுப்புண்டு. இந்தப் பொறுப்பை ஏற்படுத்தும்போது சகிப்புத்தன்மையும் விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கும் ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் அவசியம். அதாவது, நியாமான ஏற்றுக்கொள்ளல்களுக்கும் நீதியான விட்டுக்கொடுப்புகளுக்கும் நமது மனதைத் தயார்ப்படுத்த வேணும். இது அனைத்துச் சமூகத்தினருக்குமான பொது விதி. ஒரு சமூகத்தின் பாதிப்பு பிற சமூகங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதுவும் பொது விதியே.

இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழ்பேசும்; சமூகங்களும் சரி, சிங்களச் சமூகமும் சரி பெரும் உளவியல் நெருக்கடிக்கும் உளநோய்க்கூற்றுக்கும் உள்ளாகியுள்ளன என்பதே என்னுடைய அவதானிப்பு. இந்த நெருக்கடியிலிருந்து இந்தச் சமூகங்கள் மீள வேணும். இந்த நோயிலிருந்து இந்தச் சனங்கள் விடுதலையாக வேணும். இதுவே முதற்படி. இந்த உளநோய்த்தாக்கத்திலிருந்து அனைவரும் வெளிவரவேண்டிய பொறுப்பு, இந்தப் பாதிப்பிலிருந்து மீள வேண்டிய கடப்பாடு முக்கியமானது. புத்திஜீவிகள், ஊடகங்கள், சமூக அமைப்புகள், அவற்றின் பிரதிநிதிகள், ஊடகத்துறையினர், அரசியல்வாதிகள் என அனைவருக்குமுரிய பொறுப்பு இது.

இப்பொழுது இலங்கை அமைதிக்கான நல்ல சூழலைக் கொண்டுள்ளது. முப்பது ஆண்டுகாலப் போரும் அலைக்கழிவுகளும் அச்சநிலையும் அழிவுகளும் அவை ஏற்படுத்திய களைப்பும் அவை உருவாக்கிய பாதிப்புகளும் இந்தத் தளத்தை – அமைதிக்கான அவாவை உருவாக்கியுள்ளன. கடந்த கால வலியிலிருந்தும் முடிவற்ற துயரத்திலிருந்தும் மீள வேண்டுமாயின் பகை மறப்பும் நல்லிணக்கமும் அவசியம். ஆனால், இந்தப் பகை மறப்பு இன்று இலங்கையில் கூறப்பட்டு வரும் சம்பிரதாயச் சடங்கு வார்த்தையின் அர்த்தத்தில் அல்ல. இந்த நல்லிணக்கம் சந்தர்ப்பத்துக்கான கூட்டும் இணக்கமும் இல்லை. இவை பரஸ்பரத்தளத்தில், நம்பிக்கையும் புரிந்துணர்வும் அமைதியின் தேவையை உணரத்தலைப்பட்டதன் அடிப்படையிலானது.

*. இலங்கையில் பகை மறுப்பும் நல்லிணக்கமும் சாத்தியப்படும் விசயங்களாக உள்ளனவா? அரசியற் தீர்வு, அமைதி, சமாதானம் என்று சொல்லப்பட்டுத் தேய்ந்து போன வார்த்தைகளைப் போல அர்த்தமிழந்த நிலையிற்தான் இந்த அர்த்தபூர்வமான, அவசியமான விசயமும் மாறுமா? அல்லது பகை மறுப்பு என்ற பேரில் அரசியல் அதிகாரத்தை வைத்திருக்கும் சிங்களச் சமூகத்தை அனுசரித்து ஏனைய சமூகங்கள் நடந்து கொள்ள வேண்டுமா?

பகை மறப்பு என்பது, ஒரு தரப்பை – ஒரு சமூகத்தைத் தோற்கடிப்பதாகவோ ஒரு சமூகம் தனது தோல்வியை ஏற்றுக்கொள்வதாகவோ அமைய முடியாது. இனி இயலாது என்ற நிலையில் – தோல்வியின் அடிப்படையில் பகை மறப்பை உருவாக்க முடியாது. அது பகை மறப்பாகவும் அமையாது. பலவந்தமாக உருவாக்க முனையும் பகை மறப்பானது உட்பகையின் வளர்ச்சியாகவே அமையும். இது ஆபத்தானது. முன்னர் இருந்த நிலையையும் விட வன்மம் கூடியது.

அதாவது வெற்றி தோல்வி என்ற இருவேறு நிலைகளில் வைத்து நாம் பகை மறப்பை உருவாக்கவே முடியாது. யாருக்கும் வெற்றியும் இல்லை தோல்வியும் இல்லை. யாரும் வெல்லவும் இல்லை. யாரும் தோற்கவும் இல்லை. யாரும் யாரையும் தோற்கடிக்கவில்லை. பதிலாக எல்லோரும் ஒரு இருண்ட காலத்தைக் கடந்திருக்கிறோம். இந்த இருண்ட காலத்துக்கு ஏதோ வகையில் எல்லோரும் பொறுப்பாளிகளாக இருந்திருக்கிறோம். இந்த நிலையில், மறுபடியும் இன்னொரு இருண்ட காலத்துக்குச் செல்ல முடியாது. அப்படியொரு இருண்டகாலத்தை அனுமதிக்கவும் முடியாது என்ற உணர்விலிருந்தும் நிலைப்பாட்டிலிருந்தும் உறுதிப்பாட்டிலிருந்தும் பகைமறப்பை உருவாக்க வேணும். முதலில் பகை மறப்பின் அவசியத்தைப் பகிரங்கப்படுத்துவது அவசியமானது. மக்கள் அதைப் புரிந்து கொள்ள வேணும். அந்தத் தேவையை அவர்கள் உணர்ந்து கொள்ள வேணும். இந்த அவசியத்தை மக்கள் புரிந்து கொள்ளும்போது அது ஒரு புதிய நிலையை, புதிய சூழலை உருவாக்கும்.

பகை மறப்புக்கு முதலில் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும். இந்த நம்பிக்கையைக் கட்டியெழுப்புவது என்பது சாதாரமான சங்கதியல்ல. அதுவும் நீண்டகால அவமதிப்புகள், ஒடுக்குமுறைகள், அநீதிகள், பகைமுரண்கள் நிலவிய சமூகங்களிடையே இலகுவாக நம்பிக்கையை ஏற்படுத்தி விடமுடியாது.

*. அப்படியானால் இதற்கான வழியென்ன?

இலங்கையில் இன்று அவநம்பிக்கை உருவாக்கிய இடைவெளி பெரியதாக இருக்கிறது. இந்த அவநம்பிக்கையின் உருவாக்கம் கடந்த காலத்தின் நீதியற்ற, நியாயமற்ற செயற்பாடுகளாலும் நடைமுறைகளாலும் மனப்பாங்கினாலும் ஏற்பட்டது. சிங்களச் சமூகம் தமிழ்ச் சமூகத்தை அவமதித்தது. தமிழ்ச்சமூகம் முஸ்லிம் சமூகத்தை அவமதித்துள்ளது. அல்லது, முஸ்லிம் சமூகத்திற்கு அநீதியை இழைத்திருக்கிறது. இதையெல்லாம் நாம் மனப்பூர்வமாக ஒத்துக் கொள்ளவேணும். எல்லாத் தவறுகளுக்கும் அதிகாரத் தரப்பினர்தான் அடிப்படைக் காரணம் என்ற போதும் அதை அனுமதித்ததில் ஏனையோருக்கும் பங்குண்டு. குறிப்பாக புத்திஜீவிகளின் தவறுகள் இந்த இடத்தில் அதிகமானது.

அதற்கிணையானது, ஊடகங்களின் தவறுகள்.

சமூகத்தையும் வரலாற்றையும் ஒழுங்கு படுத்தும் பொறுப்பு நிச்சயம் புத்திஜீவிகளுக்குரியது. இலவசக் கல்வி வாய்ப்பின் மூலம் அறிவைப் பெற்ற, அறிவு மையங்களில் அதிகாரத்தைப் பெற்றவர்கள் இந்தப் புத்திஜீவிகள். ஆனால், தாம் பெற்றுக் கொண்ட அறிவுக்கும் தம்மை நம்பியிருக்கும் சமூகத்துக்கும் இந்தப் புத்திஜீவிகள் பொறுப்பாக இருந்ததில்லை. இது குற்றச் சாட்டுத்தான். தவறு நடந்திருக்கும்போது அதைச் சுட்டிக் காட்டுவதில் தப்பில்லை. அதை விமர்சிப்பதில் தவறில்லை. பொறுப்பானவர்கள் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதையிட்ட எதிர்வினையை நாம் முன்வைத்தே ஆகவேண்டும்.

PUTHU.jpg

இலங்கையில் சிந்தப்பட்ட குருதிக்கும் கண்ணீருக்கும் ஏற்பட்ட அழிவுக்கும் புத்திஜீவிகளும் பொறுப்பாளிகளே! இனவாதத்தை இன்னும் வளர்த்துக் கொண்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் புத்திஜீவிகள் என்ற கசப்பான உண்மையையும் நாம் இங்கே கவனிக்க வேண்டும்.

பகை வளர்ப்புக்கு எதிராக எத்தனை புத்திஜீவிகளும் ஊடகங்களும் செயற்பட்டிருக்கின்றன? அதேபோலே பகை மறப்பை மையப்படுத்தி எத்தனை புத்திஜீவிகள் செயற்படுகிறார்கள்? அல்லது, இதைக் குறித்து எத்தனைபேர் விசுவாசமாகச் சிந்திக்கிறார்கள்? அல்லது இந்த அவசியத்தைப் பற்றிப் புரிந்து வைத்திருக்கிறார்கள்?

சமூகங்களுக்கிடையிலான இடைவெளியைக் குறைப்பதில், பலரும் பங்காற்றியிருக்க வேண்டும். ஆனால், அத்தகைய ஒரு பொறுப்பை அதிகமானவர்கள் உணர்ந்ததாக இல்லை. மாறாக ஏதோ வகையில் மேலும் இடைவெளிகளை ஏட்டிக்குப் போட்டியாக வளர்ப்பதில்தான் நாம் ஒவ்வொருவரும் செயற்பட்டிருக்கிறோம்.

இப்போது துயரம் என்னவென்றால், இலங்கைத் தீவில் பிரிவுக்கான ஏதுக்களும் இல்லை. அதாவது சாத்தியங்களும் இல்லை. அதேவேளை ஒற்றுமையாக – ஐக்கியமாக வாழ்வதற்கான சாத்தியங்களும் இல்லை. இந்த நிலையில்தான் மக்கள் வாழ்கிறார்கள். அரசியல் நடக்கிறது. நாடு இருக்கிறது. இந்தக் கலங்கல் – குழப்பமான – நிலையில்தான் நாட்டின் எதிர்காலமே தங்கியிருக்கிறது.

*. நீங்கள் இவ்வாறு பல தரப்பினரையும் குற்றம் சாட்டலாம். அல்லது அவர்களுடைய பொறுப்புகளைச் சுட்டிக்காட்டலாம். ஆனால், நடைமுறையில் பல பிரிவுச் சிந்தனைகளும் வழிமுறைகளும் இருந்தே தீரும். அப்படிப் பார்க்கும்போது அவரவர்க்கான நியாயங்களும் இருக்குமே?

எல்லா நன்மைகளுக்கும் அடிப்படையானது உண்மையும் நேர்மையுமாகும். முதலில் ஆகக் குறைந்தது அடிப்படையான விசயங்களிலாவது நேர்மையும் உண்மையும் பொறுப்பும் வேணும். ஆனால், யாரிடம் நேர்மை இருக்கிறது? யாரிடம் பொறுப்பிருக்கிறது? யாரிடம் உண்மை இருக்கிறது? அதாவது, பொறுப்பானவர்களை நோக்கிய கேள்விகள் இவை. அதிகாரத்தரப்பினரை நோக்கிய வினாக்கள் இவை.

எப்போதும் வர்க்க நிலைப்பட்டே அறம் இருக்கும் என்பார்கள். அறத்தை வலியுறுத்துவோர் தமது நலனைப் பாதுகாக்கும் அடிப்படையிலேயே அதை உருவாக்கியிருக்கின்றனர். ஆகவே, இந்த நிலையில் அறத்தின் அடிப்படையிலும் நியாயத்தின் அடிப்படையிலும் நடந்து கொள்வது என்பதிலும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

குறிப்பாகச் சிங்களத் தரப்புக்கு ஏற்றமாதிரி – அவர்களின் விருப்பத்துக்கு உரியவாறு நடந்து கொள்ளும் சிங்கள அதிகார வர்க்கம் தனது நிலைப்பாட்டில் ஒரு அறப் பார்வையையும் அறமுறைமையையும் கொண்டிருக்கிறது.

ஆனால், அந்த அறம் பிற சமூகங்களைப் பாதுகாக்கவில்லை.

பதிலாக அவர்களை அச்சுறுத்துகிறது@ நிர்க்கதிக்குள்ளாக்கிறது. இப்படிப் பிற தரப்பினரைப் பாதிக்கும் ஒரு பண்பாட்டியக்கம் ஒரு போதும் அறத்தின் அடிப்படையாக இருக்க முடியாது. இது உண்மையில் அறமேயல்ல.

ஏனைய சமூகங்களையும் பாதுகாக்கும் ஒரு ஏற்பாடே உண்மையான அறமாகும். இதை சட்ட ரீதியாக ஜனநாயகம் வரையறை செய்கிறது. எவ்வளவோ குறைபாடுகள் இருந்தாலும் ஒப்பீட்டளவில் ஜனநாயச் செழிப்பில்தான் அறத்தின் அடிப்படைகள் பாதுகாக்கப்படுகின்றன என்பேன். ஆகவே ஜனநாயகமே மிகவுயர்ந்த மனிதப்பண்பாடாகும்.

இதற்கு உத்தரவாதப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளும் அணுகுமுறைகளும் அவசியம். ஜனநாயகம் எதையும் உத்தரவாதப்படுத்தும். சட்ட ரீதியான உத்தரவாதங்கள், நிர்வாக அணுகுமுறைகளின் மூலமான உத்தரவாதங்கள், ஆட்சியமைப்பின் மூலமான உத்தரவாதங்கள் இந்த வகையில் முக்கியமானவை. அதேவேளை இந்த உத்தரவாதங்களைப் பேணும் அணுகுமுறைகள் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதில் முக்கிய பங்காற்றும். குறிப்பாக அரசு நீதியையும் நியாயத்தையும் ஜனநாயகச் சுழலையும் நிலைப்படுத்த வேண்டும்.

சந்தேகங்களின் மத்தியிலும் ஏற்றத்தாழ்வுகளின் மத்தியிலும் ஒடுக்குமுறைக் கூறுகளின் மத்தியிலும் ஒரு போதும் பகையை மறக்க முடியாது. அங்கே நம்பிக்கையீனமும் பகைமையுமே மேலும் வளரும்.

*. சரி, இதற்கு என்னதான் தீர்வு?

சமச்சீரற்ற அரசியல் அணுகுமுறைகளும் நிர்வாக அணுகுமுறைகளும் பகை மறப்புக்கு எதிரானவை. அவை பகையை வளர்க்குமே தவிர, ஒழிக்காது. இதேவேளை நம்பிக்கை என்பது விட்டுக் கொடுப்பின் அடிப்படையில் அமைய வேண்டும். முரண்களைக் களைவதன் பொருட்டும், பகையைக் கடக்க வேண்டியதன் பொருட்டும் பகையின் விளைவாக ஏற்படும் அழிவு மற்றும் பின்னடைவுகளை மறுதலிப்பதன் பொருட்டும் விட்டுக் கொடுப்புகள் அமைவது அவசியமாகும். அதற்காக அடிப்படைகளை விட்டுக் கொடுத்தல், நியாயத்தை விட்டுக் கொடுத்தல், அடையாளங்களை விட்டுக் கொடுத்தல் என்று இதை விளங்கிக் கொள்ளக் கூடாது. அப்படி அவற்றை விட்டுக் கொடுக்கவும் முடியாது.

சில விட்டுக் கொடுப்புகளைச் செய்வதன் மூலம் பெரிய அனுகூலங்களைப் பெறலாம். ஓன்றை விட்டுக் கொடுப்பதன் மூலம் அதற்குச் சமதையான அல்லது அதையும் விட அவசியமான இன்னொன்றைப் பெற்றுக் கொள்ளலாம்.

அரசியல் என்பதே விட்டுக் கொடுப்புகளிலும் ஏற்றுக் கொள்ளலிலும்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. எதை விட்டுக் கொடுப்பது, அதை எப்படி விட்டுக் கொடுப்பது, எதைப் பெற்றுக் கொள்வது, அவற்றை எப்படிப் பெற்றுக் கொள்வது, எப்போது அவற்றைப் பெற்றுக் கொள்வது என்பதைச் செய்வதே இராசதந்திரம். ஆனால், தமிழ்த்தரப்பில் அல்லது சிங்களவரல்லாத ஏனைய சமூகங்களில் இந்த விசயங்கள் எல்லாம் பூஜ்ஜியமாகவே உள்ளது. எனவேதான் எதையும் விட்டுக் கொடுக்கவும் முடியாது, எதையும் பெற்றுக் கொள்ளவும் முடியாமல் தமிழ்பேசும் சமூகங்கள் இருக்கின்றன. மனிதர்கள் தோற்றுக் கொண்டிருப்பதே பொறிமுறைகளைப் பற்றிய தேர்ச்சியும் அறிவும் இல்லாமல்தான்.

இது பொறிமுறைகளின் உலகம். பொறிமுறைகளில் அதிக தேர்ச்சியுடைய சமூகங்கள் வளர்ச்சியடைகின்றன. இல்லாத சமூகங்கள் வளர்ச்சியடையாதிருக்கின்றன. பொறிமுறைகளை உருவாக்கும் சமூகங்கள் துரித வளர்ச்சியை – அபரிதமான வளர்ச்சியை அடைகின்றன. மேற்குலகமும் யப்பான், சீனா போன்ற நாடுகளும் அனைத்து வகையான பொறிமுறைகளிலும் இன்று வளர்சியடைந்திருக்கின்றன. அதாவது அரசியல் பொறிமுறை மற்றும் விஞ்ஞானப் பொறிமுறை இரண்டிலும் இவை வளர்ச்சி கண்டிருக்கின்றன. இந்தியா இப்போது இந்தப் பொறிமுறை வளர்ச்சியில் பல படிகளைத் தாண்டியிருக்கிறது.

ஆனால், இலங்கைத் தமிழ்ச் சமூகங்கள் எந்தப் பொறிமுறையிலும் வளர்ச்சியடையவேயில்லை. ஆகவே அவை இந்த உலகத்தில் மிகப் பின்தங்கியிருக்கின்றன. பின்தங்கியிருத்தல் என்பது இன்றைய அர்த்தத்தில் துயரத்தோடிருத்தல் என்றே அமையும். இருளில் இருத்தல், அவலத்தில் இருத்தல் என்றெல்லாம் இதை மேலும் விளங்கிக் கொள்ளலாம். என்பதால்தான் பல ஆண்டுகளாகவே இவை பிரச்சினைகளோடிருக்கின்றன. அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றன.

3UNITY.jpg

*. அப்படியென்றால்?

இவை எல்லாவற்றையும் கடப்பதற்கு அல்லது இந்த நிலையை மாற்றிக் கொள்வதற்கு நாம் பகை மறப்புக்கு முதலில் செல்ல வேண்டும். இது அதிகமதிகம் வர்த்தக மயப்பட்டு வரும் உலகம். எதிராளி நாடுகளுக்கிடையில் கூட வர்த்தக உடன்படிக்கைகள், ராஜீக நெருக்கங்கள் இன்று எட்டப்படுகின்றன. அந்த அளவுக்குத் தேவைகளும் அவசியங்களும் இன்று ஏற்பட்டுள்ளன. நெகிழ்ச்சி மிக்க சட்டங்களும் கொள்கைகளும் கதவுகளுமே இன்றைய யதார்த்தம். இவையே இன்றைய உலகத்தின் தெரிவும்கூட. இதில் அமெரிக்காவும் ஒன்றுதான். சீனாவும் ஒன்றுதான்.

எனவே பகையின் மூலம் – முரண்களின் மூலம் – ஒரு போதும் அமைதியை ஏற்படுத்த முடியாது என்ற வரலாற்றுப் படிப்பினைகளையும் அனுபவத்தையும் மனதிற் கொண்டு பார்க்கும்போது பகை மறப்பின் அவசியத்தைப் புரிந்து கொள்ளலாம். அதாவது பகை மறப்பு என்பது எதிர்காலத்தைப் பாதுகாப்பதாகும் என்பதே உண்மை.

இங்கே துயரம் மிகுந்த இன்னொரு விசயத்தையும் குறிப்பிடலாம் என்று எண்ணுகிறேன்.

நாம் எங்கள் கடந்த கால வாழ்க்கையில் ‘நிகழ்காலம்’ என்ற ஒன்றை ஒரு போதும் அதன் முழுமையோடு அனுபவிக்கவில்லை. ஏனெனில் எங்களுடைய கடந்த முப்பது ஆண்டு கால நிகழ்காலம் என்பது உத்தரவாதங்கள் அற்றதாக – அபாயங்கள் நிறைந்ததாகவே இருந்தது. இதற்குக் காரணம் அது பகை வளர்ப்பின் மத்தியில் இருந்தது என்பதேயாகும். தமிழ் அரசியற் தலைமைகள் தமிழ்ச் சமூகத்தை பகை வளர்ப்பின் மூலம் இட்டுச் சென்றன. பகை வளர்ப்பின் மூலமே பிரிவினையைச் சாத்தியப்படுத்தலாம் என்ற எண்ணம் இங்கே மையம் கொண்டிருந்தது. பகைக் கூறுகளை அல்லது பகை நிலையை சிங்கள அதிகார வர்க்கம்தான் முதலில் உருவாக்கியிருக்கலாம். என்றபோதும் தமிழ்த் தரப்பினர் இதைத் தமது அரசியல் ஆதாயத்துக்குரிய ஒரு முதலீடாகக் கொள்ளத் தொடங்கி விட்டனர். சிங்கள அதிகாரவர்க்கத்தின் நிகழ்ச்சிப் பின்னலுக்குள் இவர்கள் தம்மை அறியாமலே சிக்கிவிட்டனர். இன்னும் இந்தப் பின்னலுக்குள்ளிருந்து வெளியேற முடியாமற் தவிக்கின்றமைக்கு தமிழ்த் தரப்பின் அறிவியற் பலவீனமே காரணமாகும். இந்த நிலையில் எவ்வாறு அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்பட முடியும்?

ஆனால், ஒவ்வொரு மனிதரும் தங்கள் நிகழ்காலத்தில்தான் வாழ்கிறார்கள். நிகழ்காலம் என்பது வாழும்காலம் – வாழ்க்கை நிகழும் காலம், வாழ்வு தங்கியிருக்கும் தளம் என்பதாகும்.

இங்கே எங்களுக்கு இந்தத் தளமே ஆட்டம் கண்டு கொண்டிருந்தது. இந்த நிலையில் எப்படி உத்தரவாதங்கள் இருக்க முடியும்? எவ்வாறு அமைதி கிட்ட முடியும்? சிதைந்திருக்கும் நிகழ்காலத்தில், தளும்பிக்கொண்டிருக்கும் நிகழ்காலத்தில், உத்தரவாதங்களற்ற நிகழ்காலத்தில் இயல்பிருக்காது@ அமைதியிருக்காது. இயல்பும் அமைதியும் இல்லாத காலத்தில் அல்லது அவ்வாறானதொரு சூழலில் மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்காதல்லவா! நாங்கள் இவை எதுவும் இல்லாமற்தான் வாழ்ந்தோம். நாங்கள் இயல்பற்ற காலத்தில் வாழ்ந்திருக்கிறோம். சட்டங்கள், கட்டுப்பாடுகள், விதிமுறைகள் முற்றியிருந்த ஒரு சூழலில், எல்லாவற்றுக்கும் சந்தேகப்படுகிற நிலைமையில், அதிகார மையங்களுக்கிடையில் கிழித்தெறியப்படுகிற மையத்தில், எல்லாவற்றுக்காகவும் சனங்களைப் பிழியப்படுகிற நிர்ப்பந்தங்களின் மத்தியில் வாழ்ந்திருக்கிறோம்.

*. உண்மைதான். இந்த அவலம் மறக்க முடியாதது. அதேவேளை மீண்டும் இத்தகைய ஒரு அவல நிலைக்கு நாம் மீண்டும் திரும்பிச் செல்ல முடியாது. ஆனால், நாம் நினைப்பதைப் போல எதுவுமே இலகுவாக இல்லையே!

எங்களின் கடந்த காலத்தைப் போலவே பிரச்சினைப்படுகிற பல சமூகங்கள் உலகம் முழுதும் இருக்கின்றன. பலஸ்தீனத்தில், கென்யாவில், பொஸ்னியாவில், ஆப்கானில், ஈராக்கில், ரிபியூனியாவில், சூடானில் என்றெல்லாம் திசைமுழுதும் பரந்திருக்கின்றன.

எந்த மனிதரும் கடந்த காலத்தில் வாழ்வதில்லை. எதிர்காலத்திலும் வாழ்வதில்லை. நிகழ்காலத்தில்தான் வாழமுடியும். எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்பது வேறு. ஆனால் நிகழ்காலமொன்றில்தான் வாழமுடியும்.

வாழ்க்கை என்பது எப்போதும் நிகழ்காலத்தின் பேறாகும். ஆகவேதான் நிகழ்காலத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். வாழ்க்கையின் வேர் இருப்பது நிகழ்காலத்தில்தான் என்பதை மீளவும் நினைவுறுத்த விரும்புகிறேன். அந்த வேர் அறும்போதுதான் அனர்த்தங்கள் பெருகுகின்றன. அனர்த்தம் பெருகும்போது அகதி நிலை உருவாகிறது. தமிழர்கள் உலகம் முழுதும் அகதி முகத்தோடு – வேர் அறுந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை தயவு செய்து ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.

நமக்கென்று ஒரு கடந்த காலம் இருக்கிறது. அது நல்லதா கெட்டதா பேறுடையதா, புகழுடையதா அல்லது சீழ்பிடித்ததா என்பது வேறு, ஆனால், ஒரு கடந்த காலம் இருந்தது@ இருக்கிறது.

நாளைக்கு நமக்கென்று ஒரு எதிர்காலமும் வரலாம். அது சிறப்பானதா இல்லையா என்பது வேறு. ஆனால், நிச்சயம் அந்த எதிர்காலம் வரும். ஆனால், நாம் வாழ்வது அப்போதும் இப்போதும் முன்னரும் ஒரு நிகழ்காலத்தில்தான்.

நிகழ்காலத்தைச் சிதைத்து விட்டு எதிர்காலத்தைப் பற்றி எவரும் கனவு காணமுடியாது. எதிர்காலம் என்பதே நிகழ்காலத்தின் உருவாக்கம்தான். சமூகப் பொறுப்பும் சமூகப் பணியும் எவ்வாறு அமைய வேண்டுமெனில், நிகழ்காலத்தைப் பாதுகாத்து, நிகழ்காலத்தை அமைதிப்படுத்தி, நிகழ்காலத்தை மகிழ்வூட்டி வைத்திருப்பதாகும். இதன்மூலம் எதிர்காலத்தை பாதுகாப்பானதாகவும் முன்னேற்றகாரமானதாகவும் மாற்றிக் கொள்வது, அமைத்துக் கொள்வது, உருவாக்கிக் கொள்வதாகும்.

அரசியல் அதிகாரம் என்பது, நிகழ்காலத்தைப் பாதுகாப்பதில்தான் முக்கிய பங்காற்ற வேண்டும். எதன்நிமித்தமும் அது எதிர்காலத்தோடு விளையாடக் கூடாது. நிகழ்காலத்தைச் சிதைக்கும் நடவடிக்கைகள் எதிர்காலத்தையே பாதிக்கின்றன. அமைதியைப் பேணமுற்படாத எத்தகைய அரசியற் கோட்பாடும் பயனற்றது. அமைதிக் கெதிரான அரசியற் சூழலில், அதிகாரத்தின் கீழ் எவ்வாறு அமைதியைப் பேண முடியும்? என்று யாரும் கேட்கலாம். அமைதியின் உருவாக்கத்தில் மக்களே முக்கிய பங்களிப்பைச் செய்ய வேண்டும். என்னதான் வலிய அதிகார அமைப்பாக இருந்தாலும் அது மக்களில்தான் – சமூகத்தில்தான் தங்கியிருக்கிறது. ஊடகங்களும் புத்திஜீவிகளும் மக்களுக்கு விசுவாசமாக மக்களை விழிப்பு நிலையில் வைத்துக் கொள்ளலாம். விழிப்படைந்திருக்கும் மக்கள் தோற்கமாட்டார்கள். விழிப்போடிருந்தால் மக்கள் நிச்சயம் வெல்வார்கள்.

*. இறுதியாக என்ன சொல்கிறீங்கள்?

எங்கள் நாட்டில், ஊடகங்களும் புத்திஜீவிகளும் அதிகார அமைப்புகளுக்கும் அதிகாரத் தரப்புகளுக்குத்தான் விசுவாசமாக இருந்திருக்கின்றன. இன்னும் இதே நிலைமைதான் நீடிக்கிறது. இதுதான் கொடுமையானது. மக்களை மூடி மாயத் திரைகளை விரித்திருக்கிறார்கள். இனவாதத் திரை பல அடுக்குகளாக

விரிக்கப்பட்டிருக்கிறது.

people-300x225.jpg

இனப்பகை வளர்ந்திருக்கும் ஒரு சூழலில் நிகழ்காலம் சிதைக்கப்பட்டு விடும். அல்லது எப்படியோ அது சிதைந்து விடும். அப்படியிருக்கும்போது எதிர்காலம் என்பது எவ்வாறு சாத்தியமாகும். அதாவது உத்தரவாதப்படுத்தப்படும் அளவில் அது எவ்வாறு சாத்தியப்படும்?

ஆனால், இன்னும் இலங்கையில் இவை குறித்த சிந்தனைகள் பரவலாக உருவாகவில்லை. அங்கும் இங்குமாக சில புள்ளி அளவில் சில முயற்சிகள் நடந்திருக்கின்றனவே தவிர, குறிப்பிட்டுச் சொல்லத்தக்கதாகவோ, நம்பிக்கை கொள்ளக் கூடியதாகவோ பகை மறப்புச் சிந்தனை வளர்த்தெடுக்கப்படவில்லை.

அதேவேளை இன்னும் பகையை வளர்க்கும் அனைத்துக் கூறுகளும் அப்படியே சூடுதணியாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அரசியற் கட்சிகளும் ஊடகங்களும் இன முரண்களை வளர்ப்பதிலேயே குறியாக இருக்கின்றன. அத்துடன் பிரச்சினைக்குக் காரணமாகவும் பிரச்சினைக்குரிய களத்துக்கு வெளியேயும் இருக்கும் தரப்புகளும் இலங்கையின் இன முரணை வளர்க்க முனைகின்றன. இனமுரணில் பகைவளரும். புகை என்பது என்பது எப்போதும் வளர்ச்சிக்குத் தடையானது. அது சமூகங்களின் வளர்ச்சிக்கும் தடையே. நாட்டின் வளர்ச்சிக்கும் தடையே. ஆகவே வளர்ச்சிக்குச் சிரமப்படும் நாடுகளையும் சமூகங்களையும் தாம் தமது சந்தைக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இந்தத் தரப்புகள் இனமுரணை –பகைக் கூறுகளை வளர்க்க முற்படுகின்றன.

பிரச்சினைக்குரிய களத்துக்கு வெளியே இருக்கும் தரப்புகள் குறிப்பாக இந்தியா, மேற்குலக நாடுகள் என்பதாகும். பொதுவாகவே இன்று சந்தைப் போட்டியில் இருக்கும் அத்தனை நாடுகளையும் நாம் இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ள முடியும். ஊர் இரண்டு பட்டால் இவர்களுக்குக் கொண்டாட்டம்.

ஆகவே பின் தங்கிய சமூகங்கள் தங்களுக்குள் முரண்படுவதையிட்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதாவது பகையையும் முரண்களையும் தவிர்த்துக் கொள்ள வேணும்.

இலங்கையில் சிங்களவர்கள் தமிழர்களை ஒடுக்க முனைகிறார்கள். தமிழர்கள் முஸ்லிம்களை ஒடுக்க முனைகிறார்கள். ஆனால் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிகள் என்ற வேறுபாடில்லாமல் இலங்கையர்களைச் சுரண்டவும் இலங்கையர்களை ஒடுக்கவுமே பிற சக்திகள் முயற்சிக்கின்றன. இதில் அவை எந்த வேறுபாடுகளையும் பார்ப்பதில்லை. அதிகம் ஏன், தமிழர்களில் ஒரு சாரார் சாதிய ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் ஏனைய தமிழர்களை ஒடுக்குகின்றனர். ஆனால், சிங்கள ஒடுக்குமுறையில் எந்தப் பாரபட்சமுமில்லாமல் எல்லாத்தமிழர்களும் ஒடுக்கப்படுகிறார்கள்.

ஆகவே நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நமது அனுபவங்களைக் கொண்டே முடிவு செய்து கொள்ளலாம். நமது கணிதங்கள் தோற்றுவிட்டன. அவற்றுக்கான காரணிகளும் பிழையென்று தெரிந்திருக்கின்றன. எனவே நாம் நமது கடந்த காலத்தை விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் முற்றுமுழுதாகவே பரிசோதனைக்குட்படுத்த வேண்டும்.

கடந்த காலத்தை மதிப்பிடுவதன் வழியாகவும், அந்தக் கடந்த காலத்தின் பாதிப்புகள், கசப்புகள், அழிவுகள், தாக்கங்கள் போன்றவற்றினால் ஏற்பட்ட வாழ்க்கை அழிவைப்பற்றியும் வாழ்வுச் சிதைவைப் பற்றியும் சிந்திப்பதன் மூலமாகவும் பகைப் பிராந்தியத்திலிருந்து வெளியே வரவேண்டியதன் அவசியத்தை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

ஆனால், “இலங்கையில் பகை வளர்ப்பிலேயே அரசியல் வியாபாரத்தை முதலிட்டிருக்கும் நிலையில் பகை மறப்பைப் பற்றி எவ்வாறு சிந்திக்க முடியும்?” என்றொரு நண்பர் என்னிடம் கேட்டார். இந்தக் கேள்வி நியாயமானதே. இதற்குத்தான் புத்திஜீவிகளும் ஊடகங்களும் பொறுப்போடு இருக்க வேண்டும் என்கிறேன். ஜனநாயகச் சூழலை வலுப்படுத்தும் பங்கு முக்கியமாக இந்த இரண்டு தரப்பினருக்கும்தான் உள்ளது. இவர்களை இயங்க வைப்பதில் சிந்தனையாளர்களுக்கு முக்கிய பொறுப்புண்டு. குறிப்பாக இடதுசாரிகளுக்கு.

பகை மறப்பு என்பது மேன்மையானதொரு பணி. அதுவொரு உயர் நிலைச் செயற்பாடு. பரஸ்பரப் புரிந்துணர்வின் அடிப்படையிலும் நம்பிக்கையின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்படுவதாகும். முழுமையானதொரு ஜனநாயகச் சூழலில் பகைக் கூறுகளும் பகைக் காரணிகளும் இல்லாமற் போய்விடும். ஆகவே நாம் ஜனநாயகச் சூழலை வளர்த்தெடுப்பதைப் பற்றி முதலில் சிந்திக்க வேண்டும்.

ஜனநாயகச் சூழலுக்கு நாம் செல்வதாயின் முதலில் சகிப்புத் தன்மையும் விட்டுக் கொடுப்புகளுக்கும் ஏற்றுக் கொள்ளல்களுக்கும் தயாராக வேண்டும். இதுதான் மனிதச் சிந்தனைக்குரிய – மானுடப் பண்புக்குரிய அடிப்படையாகும். பன்மைச் சமூகங்களாக வாழ்வதே மனிதச் சிறப்பாகும். எவ்வளவுக்கு பல சமூகங்களோடு, பல காலச்சாரத் தளங்களோடு கலந்திருக்கிறோமோ அவ்வளவுக்கு பண்பாட்டில் சிறப்படைகிறோம்.

வளர்ச்சியடைந்திருக்கும் எந்தச் சமூகத்திலும் பன்முகத்தன்மையை நாம் காண முடியும். வளர்ச்சியடையாத சமூகங்களின் காட்டுமிராண்டி மனோபாவமே இனரீதியாகவும் மத ரீதியாகவும் தம்மை முதன்மைப்படுத்துவதாகும். ஏனைய தரப்புகளிடம் இருந்து தம்மை முதன்மைப்படுத்துவதும் மேன்மைப்படுத்திக் கொள்வதும் ஏதேச்சாதிகாரத்துக்கு – பாஸிஸத்துக்குமே அழைத்துச் செல்கிறது.

ஈழத்தமிழர்கள் இன்று உலகத்தில் பல தேசங்களிலும் பல திசைகளிலும் வாழ்கின்றனர். அங்கே பல சமூகங்கள் வாழக்கூடிய – உரிமைகளைப் பேணக்கூடிய – பெறக்கூடிய ஒரு நிலைமை எப்படி ஏற்பட்டிருக்கிறது என்று சிந்திப்பதில்லை. அங்கே குறைந்த பட்ச ஜனநாயகப் பேணுகையாவது உள்ளதே என்பதைப் பற்றி கவனிப்பதுமில்லை.

ஜனநாயகத்தை வளர்த்தெடுப்பது என்பது, இன்று இலங்கைக்கு ஒரு அவசியம். அது ஒரு கற்கையாக முக்கியப்படுத்தப்படவேண்டியுள்ளது.

*இந்த நம்பிக்கை இன்று ஏற்பட்டிருக்கிறதா?

இல்லையே.

00

http://eathuvarai.net/?p=1814

இணைப்பிற்கு நன்றி கிருபன். மிகவும் பயனுள்ளதொரு கட்டுரை.

பகை மறைப்பு, இன ஒற்றுமை பற்றி இவர் சொல்லும் சில விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது. பல விடயங்கள் கேள்விக்குள்ளாக்க வேண்டியவை. ஆயினும்

இலங்கைத் தீவில் பிரிவுக்கான ஏதுக்களும் இல்லை. அதாவது சாத்தியங்களும் இல்லை. அதேவேளை ஒற்றுமையாக – ஐக்கியமாக வாழ்வதற்கான சாத்தியங்களும் இல்லை. இந்த நிலையில்தான் மக்கள் வாழ்கிறார்கள். அரசியல் நடக்கிறது. நாடு இருக்கிறது. இந்தக் கலங்கல் – குழப்பமான – நிலையில்தான் நாட்டின் எதிர்காலமே தங்கியிருக்கிறது.

எனச் சொல்வதன் மூலம் இன்றைய நிலையை மிகவும் தெளிவாக கூறியுள்ளார்.

------------------

என் நண்பன் 'மூன்றாம் மனிதன்' ஆசிரியர் பெளசரின், 'எதுவரை' மின்னிதழ் சில நல்ல பேட்டிகளையும், கட்டுரைகளையும் தாங்கி வருவதைக் காண சந்தோசமாக இருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தடைசெய்யப்பட்ட பகிரங்கம்-நேர்காணல்

WAR-03-1.jpg

WAR-01.jpg,

WAR-2.jpg

PUT-02.jpg

PUTHU.jpg

. 3UNITY.jpg

நான் நினைக்கிறன் இந்த படங்களை விளங்கி கொண்டாலே ஓரளவுக்கு இலங்கையில் என்ன நடக்கு என்று விளங்குமோ தெரியவில்லை...

முகம் காட்ட முடியாத மக்கள் சேவகன்/ கருத்து சொல்லுபவர் ..............................

எமது பிரச்சனை ஒரு மூன்றாம் தரப்பின் புரிதல் அன்றி,தலையீடு இன்றி தீர்வு வரவே இடமில்லை .

ஒபாமாவின் நிர்வாகத்தில் இருக்கும் ஒரு தமிழர் ராஜபக்சாவிற்கு நேரில் எடுத்து சொன்னதைவிட இனி எவரும் விளக்கமாக சொல்ல முடியாது.

கெடு குடி சொற்கேளாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.