Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சின்மயி பிரச்சினை : பெண்ணிலைவாதமும் இன்னபிறவும் - யமுனா ராஜேந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சின்மயி பிரச்சினை : பெண்ணிலைவாதமும் இன்னபிறவும் - யமுனா ராஜேந்திரன்

30 அக்டோபர் 2012

singer_CI.jpg

பெண்ணிலைவாதம் எனும் இடத்தில் எவரும் வர்க்கம், பாலினம், சாதி, இனம், மொழி, சூழலியல் என வேறு வேறு சமூகப் பகுப்புகளை வைத்துப் பார்த்துக் கொள்ளலாம் அடையாள அரசியலும் சிறுபான்மையினர் உரிமைகளும் விடுதலை அரசியலின் பகுதிகளாகிவிட்ட இன்றைய நிலையில் இப்பிரச்சினைகள் அனைத்தும் ஒன்றையொன்று ஊடறுத்துத்தான் செல்கின்றன. ஓரு குறிப்பிட்ட தருணத்தில் 'இதில் எந்த முரண்பாடு மேலொங்கியிருக்கிறது' எனப் பார்ப்பதும், 'அதிகாரத்தில் இருப்போர் எந்தப் பிரச்சினையின் சார்பில் நிலைபாடு எடுக்கிறார்கள்' எனப் பார்ப்பதும், ஒரு குறிப்பிட்ட சமூக நிலைமையில் ‘மேலதிகமாக’ ஒடுக்கப்பட்டவர் எவர் எனப் பார்ப்பதும்தான் விடுதலைக்குச் சார்பான அரசியல் எனப் பார்க்க முடியும். இதுவல்லாது, ‘அவரவர் அனுபவத்தின் அடிப்படையில்’ எவரொருவரும் ‘தத்தமது வாழ்நிலை சார்ந்த’ நிலைபாடுகளையும் மேற்கொள்ள முடியும். சின்மயி பிரச்சினை அதற்கான நம் காலத்தின் உதாரணம்.

இந்தியப் பழங்குடியின மக்களைக் கொல்கிற பகாசுர நிறுவனத்திற்காக, அவர்களிடமிருந்தே நிதிபெற்று பழங்குடியின மக்கள் நல்வாழ்வு குறித்து ‘விவரணப்படமெடுத்துவிட்டு‘, அதனைத் ‘தனக்கான உபரிமதிப்புப் பகிர்வு’ எனக் கூச்சநாச்சமில்லாமல் ‘மார்க்சீய’ விளக்கம் கொடுத்து நியாயப்படுத்தும் கவிதாயினி, ‘அதிகாரமில்லாத’ இளம்பெண்ணொருவரை டுவிட்டரில் உளவியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு, போலி ஆன்மீகவாதியின் காலடியில் நித்யானந்த தீர்த்தம் அருந்தியதோடு அவருக்காகப் பிரச்சாரமும் செய்துவிட்டு கொஞ்சமும் வெட்கமில்லாமல் கடவுள்தியரி பேசித்திரியும் ‘பின்நவீனத்துவ' எழுத்தாளர், மாற்றுக் கருத்தின் பெயரில் ‘இலங்கை அரச ஆதரவாளர்களின் தோழனாக மட்டுமே’ அவதாரம் தரித்திருக்கும் ‘தேசபக்த இலங்கை' எழுத்தாளர் என 'பெண்ணிலைவாதிகளும், பின்நவீனத்துவர்களும், மனித உரிமையாளர்களும்' சின்மயியின் சார்பாகப் பொங்கி எழுந்திருக்கிறார்கள். தமிழகத்தை மேலாண்மை செய்யும் சாதிய கருத்தியல் மற்றும் ஆயுத அதிகாரமும் சின்மயிக்கு ஆதரவாகச் செயலாற்றியிருக்கிறது. நிலவும் அதிகார நிறுவனங்களைக் கச்சிதமாகச் சின்மயி தனக்கு ஆதரவாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்தியாவின்-தமிழகத்தின் சமகால வரலாறு என்பது சாதியாதிக்கம், ஈழத்தமிழர் ஒடுக்குமுறை, இட ஒதுக்கீட்டுப் பிரச்சினை, தமிழக மீனவர் போன்ற பிரச்சினைகளால் கனன்றிருக்கிறது. அருள் எழிலன்(1), விமலாதித்த மாமல்லன் போன்றோர் தமது தர்க்கபூர்வமான பதிவுகளில் மேலே குறிப்பிட்ட பிரச்சினைகள் தொடர்பாக சின்மயி இப்பிரச்சினைகளில் பாவித்த வன்மமான சொற்களைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். தலித் மக்களை ‘ஒட்டுண்ணிகள்’ என்கிறார் சின்மயி. ‘தாம் தொட்டியிலும் மீனை வளர்க்காதவர்கள், உயிர்களை வெட்டியும் கொன்று புசிக்காதவர்கள்’ எனச் சொல்லும் சின்மயி, ‘தமிழக மீனவர்களை உயிர்க்கொலை செய்கிறவர்கள்’ என்கிறார். ‘தமது சாதியான ஐயங்கார் சாதி உயரிய நிலையிலுள்ள சாதி’ என்கிறார். தலித் மக்களை ‘மாட்டுச் சாணம்’ போன்றவர்கள் என்கிறார். தலித் மக்களது உரிமையான ‘இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசுகிறார்’. 2011 துவக்கம் முதல் 2012 அக்டோபர் வரை கடந்த இரண்டு ஆண்டுகளில் ‘பிறரை மேற்கோள் காட்டி’ தலித்துகள் மற்றும் மீனவர்கள் குறித்து சின்மயி கொண்டிருக்கும் வன்மமான கருத்துக்களுக்கான டுவிட்டர் திரை - ஸ்கிரீன் சாட்ஸ் - சான்றுகளை விமலாதித்த மாமல்லன் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார்(2).

இதுவன்றி, சின்மயி ‘பிரச்சினைக்குரிய’ டுவிட்டர் பதிவுகளை ‘சிக்கலின் பின்பாக அகற்றியிருக்கிறார்’ எனவும் அருள்எழிலன், மாமல்லன் என இருவரும் பதிவு செய்கிறார்கள். சின்மயியின் கருத்துக்கள் கருத்தியல் அளவிலும், உளவியல் அளவிலும் மிகப்பெரும் வன்முறை கொண்ட கருத்துக்கள் என்பதனை இந்திய-தமிழக ஒடுக்கப்பட்ட மக்களின் மனநிலையிருந்து சமகால வரலாற்றைப் பயில்கிற எவரும் உணரமுடியும். இப்போது சின்மயிக்குச் சார்பாக தமிழக அதிகார நிறுவனங்களும், தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்களும் திரண்டிருக்கின்றன. இது சின்மயி பிரச்சினையின் ஒரு பரிமாணம். சின்மயி பிரச்சினை என்பதனைத் தவிர்க்கவிலாமல் இன்று அமெரிக்க-பிரித்தானிய அரசுகளின் வேட்டைக்குத் தப்பி, ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்திருக்கும், பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கும் விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பிரச்சினையோடு ஒப்பிடத் தோன்றுகிறது.

.இரண்டு நாடுகள் ஜூலியன் அசாஞ்சேவைக் குற்றவாளி எனத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றன. ஐக்கிய அமெரிக்கா முதலாவது நாடு. ஸ்வீடன் இரண்டாவது நாடு. ஸ்வீடன் நாட்டுப் பிரஜைகளான இரண்டு பெண்களை அசாஞ்சே வன்புணர்வுக்கு உட்படுத்தினார் எனத் தேடித்திரிகிறது ஸ்வீடன் அரசு. அமெரிக்க அரசின் இரகசிய ஆவணங்களைத் திருடி உளவுவேலை செய்ததாக அசாஞ்சேவைத் தேடித் திரிகிறது அமெரிக்க அரசு. ஸ்வீடன் வழியாகவோ அல்லது பிரித்தானியாவிலிருந்து நேரடியாகவோ அசாஞ்சேவை அமெரிக்காவுக்குக் கடத்திச் சென்று அவர் மீது உளவுபார்த்ததாக வழக்குத் தொடுக்கவும் அமெரிக்கா திட்டமிட்ட வருகிறது.

1971 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் பிறந்த ஜூலியன் அசாஞ்சே ஒரு நித்திய நாடோடி. அவரே சொல்கிறபடி அனைத்து அரசியல் கருத்தியல்களும் தோற்றுப் போன காலத்தில் நாம் வாழ்கிறோம் என அவர் கருதினார். தனது உலகப் பார்வை இடது அல்லது வலது என்பதற்கு அப்பாலான பார்வை கொண்டது என்கிறார் அசாஞ்சே. தகவல்களின் நிஜம் அல்லது பொய் என்பதனை அறியாத நம்பிக்கைகளில் மேற்கொள்ளப்படும் அரசியல், அதனையொட்டிய கருத்தியல், ‘தகவல் அறிதலின் நிஜம் அல்லது பொய்’ என்பதன் அடிப்படையிலேயே அமையும் என்பதால் தகவல்களின் ‘அறிந்திராத பக்கத்தைத் தேடி முன்வைப்பதே’ தனது நோக்கம் என்கிறார்.

அரசுகள் மற்றும் நிறுவனங்களின் மறைபக்கங்களையும் ஊழல்களையும் உளவுவேலைகளையும் அம்பலப்படுத்துவதன் மூலம் ஜனநாயக்தை அகலிக்கவும் சமூக அமைப்பில் மாற்றங்களை உருவாக்கவும் முடியும் என அவர் கருதினார். அரசு மற்றும் அதிகாரம் கொண்ட நிறுவனங்களைக் குலைப்பதன் மூலம் ஜனநாயகபூர்வமான சமூகத்தை விளைவதே தனது இலக்கு எனவும் அவர் அறிவித்தார். இடதுசாரி அரசியல் மரபை அறிந்தவர்க்கு ஜீலியன் அசாஞ்சேவின் இயங்குதளம் அராஜியவாத தளம் - அரசுநிறுவனங்களுக்கு எதிரான தளம் - என்று புரிந்து கொள்வது இயல்பானது. இதன் காரணமாகவே அசாஞ்சேவின் நடவடிக்கைகள் கடும் அரசியல் அதிர்வுகளை உலகெங்கிலும் ஏற்படுத்தியிருக்கிறது.

அசாஞ்சே மீது வன்பாலுறவுக் குற்றம் சுமத்திய இரு பெண்களினதும் முதல் தகவல் அறிக்கையின்படி, அவர்கள் அவர் மீது வைத்த குற்றச்சாட்டு அவர் ‘உறை’ போடாமல் உறவுகொண்டார் என்பதும், அவர் சோதனைக்கு உட்பட வேண்டும் என்பதுதான். பிற்பாடு வழக்குரைஞரின் ‘சட்டபூர்வமான அறிதலின்படி’ ஸ்வீடன் சட்டங்களின்படி, அசாஞ்சே செய்திருப்பது ‘பாலியல் பலாத்காரம்’ என்பதால் அவர் மீது ‘வன்புணர்வு’ வழக்கு பதிவு செய்யப்படுகிறது. பெண்நிலைவாதம் என்பது வர்க்க-சாதிய-மத-இன-அரசியல் மதிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டது இல்லை. அசாஞ்சே மீது குற்றம் சாட்டியிருக்கும் பெண்களும் ஸ்வீடன் தாராளவாத ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள். இதில் விலன் தனது கல்லூரி வாழ்வின் போது பாலின சமத்துவத்துக்காகப் பேசிக் கொண்டிருந்தவர். இரு பெண்களதும் ‘திட்டமிடப்பட்ட’ குற்றச்சாட்டுகளின் வாதங்கள் பெண்நிலைவாத சொல்லணிகளால் நிறைந்திருக்கிறது. விலன் தனது கியூபப் பயணம் ஒன்றின் போது அமெரிக்க உளவுத்துறைக்கு வேவுபார்த்தர் எனும் சந்தேகத்தின் பேரில் கியூபாவிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பதும் இன்று செய்தியாக வருகிறது.

அசாஞ்சே சொல்கிறார் ‘கணணிக்குள் நீங்கள் ஊடுறுவல் - ஹாக்கிங் - செய்யும் போது கணணி அமைப்பைச் சேதப்படுத்தக் கூடாது. தகவல்கைளையும் சேதப்படுத்தக் கூடாது. தகவல்களை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியே வந்துவிடுங்கள். தகவல்கள் ஒரு போதும் அறிவு அல்ல, ஆனால், தகவல்கள் குறித்த அறிதலே ஒரு செயல்பாட்டைத் தீர்மானிக்கும்’. வன்புணர்வு தொடர்பான விவாதங்கள் எத்தகையது ஆயினும் அசாஞ்சே நம் காலத்தின் தகவல் தொழில்நுட்ப அறவியலில் பாய்ச்சலை நிகழ்த்திய நிறுவன எதிரப்பு, அரசு எதிர்ப்புத் தூரதரிசனம் கொண்ட அராஜியவாதி. நுமது ‘அறிதலின் அரசியல்’ குறித்து அவர் கொண்டிருக்கும் அவரது நெஞ்சுரமான செயல்பாட்டினாலும் தனித்ததொரு மேதமை கொண்டவராக அவர் நிமிர்ந்திருக்கிறார். அசாஞ்சே விடுதலை பெற்ற ஒரு மனிதனாக இருக்க வேண்டும் எனும் எமது விழைவுக்கு இந்தக் காரணங்கள் மட்டுமே போதுமானது என நாம் கருதுகிறோம்.

பிரித்தானிய நீதிமன்றத்தினால் ஸ்வீடனுக்கு நாடுகடத்தப்பட வேண்டும் எனும் உத்தரவு வழங்கப்பட்டதனையடுத்து, அசாஞ்சே இலண்டன் ஈக்வடார் தூதரகத்தில் அரசியல் அடைக்கலம் கோரியிருக்கிறார். பிரித்தானிய அரசு நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக அவரைக் கைது செய்யக் காத்திருக்கிறது. அசாஞ்சே ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்பட்டால், அவர் அங்கிருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவார் எனவும், அமெரிக்கச் சிறையிலிருக்கும் பிராட்லி மானிங் போல அசாஞ்சே அமெரிக்காவை உளவு பார்த்தார் எனும் பெயரில் அசாஞ்சேவுக்கு மரணதண்டனை வழங்கப்படலாம் எனவும் அசாஞ்சேவின் தாயார் அச்சம் வெளியிட்டிருக்கிறார். இங்கு அசாஞ்சே எதிர்கொள்வது வன்பாலுறவு தொடர்பான நேர்மைப் பிரச்சினையா அல்லது அமெரிக்காவின் உலக அதிகாரம் தொடர்பான அரசியல் பிரச்சினையா?

சின்மயி பிரச்சினையின் பிறிதொரு பரிமாணம் அவர் மீதும் அவரது அன்னை மீதுமான பாலியல் வசவுகள் தொடர்பானது. சின்மயியின் உயர் சாதிய மனோபாவத்தினைச் சரியாக மதிப்பிட்டிருக்கும் அருள்எழிலன், மாமல்லன் போன்றவர்கள் தெளிவாகத் தாம் இந்த வசவுகளையும் பாலியல் நிந்தனைகளையும் ஏற்பவர்கள் அல்ல என்பதனைப் பதிவு செய்திருக்கிறார்கள். பெண்நிலை நோக்கினை விடுதலை அரசியலின் பகுதியாக ஏற்பவர்கள் எந்தச் சாதி, வர்க்கம், இனம், மொழி என்பதற்கு அப்பால் நிச்சயமாகவே பாலியல் நிந்தனைகளையும், பாலியல் வசவுகளையும் நிராகரிக்க வேண்டும்; கண்டிக்க வேண்டும். இதுபோலவே, எவ்வளவு தூரம் பாலியல் வசவுகளும் நிந்தனைகளும் தண்டனைக்கு உரியதாக ஒரு சமூகம் ஏற்கிறதோ அதே அளவு சாதி ஆதிக்கத்தைப் போற்றுவதையும் தலித்மக்கள் மீதான உளவியல் வன்முறையையும் தண்டனைக்கு உரியதாக ஏற்கவேண்டும்.

கவிதாயினிகளும், பின்நவீனத்துவர்களும், பன்முகவாதிகளும், கட்டுடைப்பாளர்களும் எவ்வாறு எல்லாப் பிரச்சினைகளிலும் ‘குட்டையைக் குழப்பி’ அறுதியில் அதிகாரத்துக்கு ஆதரவாகவும் அதனிடம் தோழமையுடனும் இருப்பார்கள் என்பதற்கு சின்மயி பிரச்சினையும் ஒரு சாட்சி. இவர்கள் தமிகத்தின்-ஈழத்தின் மிக முக்கியமான பிரச்சினைகளில் என்ன நிலைபாடு எடுத்தார்கள் என்பதனை இப்போது தொகுத்துப் பார்த்துக்கொள்ள நல்ல தருணம்.

(1).மூவர் மரணதண்டனை தொடர்பான பிரச்சினையை இவர்கள் முன்கையெடுத்து எதுவும் செய்யவில்லை; தர்மபுரியில் மாணவியரின் பேருந்தை எரித்து அவர்களைக் கொன்றதற்காக மரணதண்டனை பெற்றவர்களுக்காகவும் வாதிட வேண்டும் என ‘அறம்’ பேசிக் கொண்டு அதனுள் நுழைந்தார்கள்.

(2).ஈழக் கிறித்தவர்கள், இந்துக்கள், முஸ்லீம்கள் என அனைவர் மீதும் வன்முறைத்தாக்குதல் தொடுக்கிற இலங்கைப் பௌத்தம் அன்பைப் போதிப்பது எனவும், ஈழ மேல்சாதித் தமிழர் சாதி மறுப்புப் பௌத்தத்திற்கு எதிராக இருப்பதாகவும் சொல்லிக் கொண்டு, ‘மாற்றுக் கருத்தாளர்’ தான் ‘பௌத்ததிற்கு மாறிவிட்டதாகவும்’ அறிவித்தார்.

(3).குஷ்பு பிரச்சினை முதல் வங்கிக் கொள்ளையர் வரை மனித உரிமைக்கு வாதிட்ட பின்நவீனத்துவ மனித உரிமைவாதி விடுதலைப்புலிகள் மக்களைப் பிணை கைதிகளாக வைத்ததால் இலங்கை அரசுக்கு எதிராக மனித உரிமை விசாரணை கோர முடியாது என்று ‘வரலாற்றைக் கட்டுடைப்பு’ செய்தார்.

(4).அடித்தட்டு மக்களின் உயிராதாரம் தொடர்பான கூடங்குளம் பிரச்சினையில் கேரள இனவாதிகளின் முல்லைப் பெரியாறு பிரச்சினையையும் கொண்டுவர வேண்டும் என்றார் ‘கவிதாயினி‘.

(5).ஈழத்தில் மக்கள் இனக்கொலைக்கு ஆளாகிக் கொண்டிருந்தபோது ஈழ மேல்சாதியினர் ஏன் மலையக மக்களைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை என்று சன்னதம் ஆடினார் ‘சர்வதேசிய’ தலித் மார்க்சியர்.

(6).சிங்களப் பெண்களை இந்தியராணுவம் பாலியல் வல்லுறவு செய்ததால், சிங்களவர்கள் இலங்கை ராணுவத்தில் சேர்ந்து தமிழர்களைக் கொன்றார்கள் எனும் ‘புதிய இலக்கிய உண்மையை’ எழுதினார் பின் நவீனத்துவ எழுத்தாளர்.

என்ன ஆச்சர்யம் பாருங்கள் - இந்தக் கூட்டணிதான் அப்படியே சின்மயி பிரச்சினையிலும் அவருக்கு ஆதரவாக இருக்கிறது. இன்னொரு ஆச்சர்யம் பாருங்கள் - இவர்கள்தான் தலித்தியம், பெண்ணிலைவாதம், பின்நவீனத்துவம், கட்டுடைப்பு. மனித உரிமை, பன்முகத்துவம், சர்வதேசியம் என்றெல்லாம் சதா வாயடித்துக் கொண்டிருப்பவர்கள். நடைமுறையில் தாம் பேசுகிற அனைத்துக்கும் எதிராக இருப்பவர்களும் இவர்கள்தான். சின்மயி பிரச்சினையில் பொதிந்திருக்கிற ஆதாரமான ‘சாதியாதிக்கம்’ எனும் ‘மேலாண்மை’ செய்கிற கருத்தியலைப் பின்தள்ளி ‘ பெண்நிலை நோக்கு’ எனும் ‘தாராளவாத’ சமூக அரசியலை ‘முன்னிலைப்படுத்தி’ அதிகாரசக்திகளின் வரிசையில் ‘இவர்கள்’ அணிவகுத்து நிற்கிறார்கள்.

சின்மயி பிரச்சினை கருத்துச் சுதந்திரம் எனும் பிரச்சினையை மிகவும் நெருக்கடியில் தள்ளியிருக்கிறது. கண்காணிப்புச் சமூகங்கள் டுவிட்டர், வலைப்பூக்கள், முகநூல் போன்றவற்றின் மீது தமது தாக்குதலை அதிகரித்திருக்கும் காலம் இது. அரபுபு புரட்சியின்போது இந்தச் சமூக வலைத்தளங்கள் அனைத்தும் அரசின் தாக்குதலுக்கு உள்ளாகின. இலங்கை அரசு தொடர்ந்து தன்னை விமர்சிக்கும் இணையதளங்களின் மீது தாக்குதலைத் தொடர்ந்து வந்திருக்கின்றன. இன்றைய எகிப்திய,துனீசிய அரசுகளும் இவைகளின் மீது கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றன. சீனாவில் இவை அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இந்தியாவிலும் தமிழகத்திலும் சாதியம் - கூடன்குளம் - மீனவர் பிரச்சினை போன்றவற்றைப் பேசுகிற, பகாசுர ஊடக பலமற்ற கருத்தாளர்களின் கருத்துருவாக்கப் பிரச்சாரப் பகிர்வுக்கான ஊடகங்களாக இருப்பவை இந்தச் சமூகத்தளங்கள்தான். சின்மயி பிரச்சினையை முன்வைத்து மேலாண்மை செய்யும் சாதியக் கருத்தியல் மற்றும் அதனைத் தாங்கும் அரசு இயந்திரம் என்பன இந்த சமூகத்தளங்களை நெரிக்கும் ஆபத்தினை உருவாக்கியிருக்கிறது. இவ்வளவு பெரிய ஆபத்தினை கொஞ்சமும் உணராமல் ஆதிக்கத்தின் பக்கமும் அதிகாரததின் பக்கமும் சேர்ந்து நின்றிருக்கிறார்கள் பன்மைத்துவமும் பெண்நிலைவாதமும் பின்நவீனத்துவமும் பேசுகிறவர்கள்.

இந்தப் பின்நவீனத்துவாதிகள் அல்லது பின்-மார்க்சியர் என்று தம்மைக் கோரிக்கொள்பவர்கள் குறித்து, அவர்களது எதிர்ப்புரட்சிகரக் கலாச்சார சார்புவாதம் குறித்து ஈழத்தமிழரும் வர்க்கம் மற்றும் இனம் காலண்டிதழின் ஆசிரியருமான சிவானந்தன் தன்னுடைய ‘எங்கே போரட்டமோ அங்கே என் இதயம்’ எனும் நீண்ட நேர்காணலில்(3) துல்லியமாகக் குறிப்பிடுகிறார் :

" இதுதான் பின்-நவீனத்துவவாதிகளின் ‘விசேஷமான’ குணம். போராட்டத்துக்குள் பங்குபெறாமலே அவைகளை ஸ்வீகரித்துக் கொள்வார்கள். கடைசியில் போராட்டத்தின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்வதைத் தவிர வேறொன்றும் நடக்காது. இந்த தகவல் தொழில்நுட்ப யுகத்தில் இந்த அறிவுஜீவிகள் பலம்வாய்ந்த நிலைகளில் இருக்கிறார்கள். அவர்களின் கருத்துக்கள் அது நம்யுகத்தில் ஆளும் கருத்துக்களாக இல்லாதிருக்கலாம்; ஆனால் அது கவர்ச்சிகரமான கருத்துக்கள். நம்காலத்தின் 'பாஷனான' இவர்களை விமர்சித்து ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை நாம் உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. ஏனெனில் இவர்கள் எதிர்ப்புரட்சியாளர்கள், அபாயகரமானவர்கள், வஞ்சகமானவர்கள், மக்களை வஞ்சிப்பவர்கள். இந்த தகவல் தொழில்நுட்பயுகம் அவர்களுக்கு வாய்ப்புக்களை கொடுத்திருக்கிறது. அதை அவர்கள் விற்கிறார்கள்……..பின்நவீனத்துவவாதிகளுக்கு எல்லாம் நிலையற்றவை. சிதறுண்டவை. அலைந்துகொண்டிருப்பவை. ஒரு பெருங்கதையாடலும இல்லை. பிரபஞ்ச உண்மைகள் என்பது இல்லை. பகுப்பாய்வை மறுத்து உரையாடல் புனிதப்பட்டுவிட்டது. கட்டமைப்பை மறுத்து கட்டுடைப்பு புனிதப்பட்டுவிட்டது. தற்காலிகத் தன்மை நிரந்தரத்தன்மையை மறுத்து புனிதப்பட்டுவிட்டது. ஆனால், மிருகங்கள்தான் காலத்தில் வாழ்கிறது. மனிதகுலம் நிரந்தரத்தில் வாழ்கிறது. ஆகவேதான் நமக்கு நினைவுகள், மரபு, மதிப்பீடுகள், தரிசனம் எல்லாரும் இருக்கின்றது. எல்லாம் குறுகலானவை, அலைபவை என்பது தனிநபர் அகந்தையின் தத்துவம். சுயநலத்திற்கு பிரதி, சுயநலத்திற்கு அறிவுபூர்வமான விளக்கம் இதிலிருந்து தான் இந்த கலாசார அடிப்படையினின்றுதான் உலக முதலாளித்துவம் அதிகாரம் பெறுகிறது.

பின் மார்க்சியவாதிகள் நிஜ உலகத்தில் புனிதமான வர்க்கமற்ற சமூகத்திற்கான தேடுதலை விட்டுவிட்டார்கள். மாறாக சொர்க்கம் காட்சிப்புல யதாரத்தத்தில் இன் வாசலில் இருக்கிறதென்று காத்திருக்கிறார்கள். இதை வேறு வகையில் சொல்வதானால் இந்த புதிய தொழில்நுட்பம் பிரம்மையை மைய நிஜமாக காண்பிக்கிறது. இந்த உலகம் வீட்டில் உருவாக்கப்படுவதால் நீங்கள் இந்த பிரமையில் வாழலாம். ஆகவே தனிமையான உலகத்தில் நீங்கள் தனியனில்லை. வர்க்க முரண்பாடு உள்ள உலகத்தில் உங்களுக்கு வர்க்கம் இல்லை. பின் மார்க்சியம் சைபர்வெளி யுகத்தின் கருத்தியல். இப்போது நிறைய கலாசார நிர்ணயம் பற்றி அடையாள அரசியல் பற்றி பேசப்படுகிறது. பொருளாதார போரபாயம, அரசியல் போராட்டம் இரண்டாம் பட்சமாகி விட்டது. போராட்டத்தின் பக்கம் நிற்பதாகப் பாவனை செய்வார்கள். யதார்த்தத்தில் போராட்டங்களுக்கு எதிராகவே இவர்களின் செயல் இருக்க முடியும். இந்த கலாசார நிர்ணயவாதம் குறித்து நாம் விமர்சனபூர்வமாக இயங்க வேண்டும்."

-----------------------

சான்றுகள் :

1.தலித்துக்கள், முஸ்லீம்களுக்கு எதிராக கருத்து சொன்ன சின்மயி High Engerக்கு என்ன தண்டனை? : அருள் எழிலன் (கீற்று : 27, அக்டோபர் 2012).

2.ஒரு ஸ்கிரீன் ஷாட்டும் அதன் நோய்க்கூறுகளும், ட்விட்டு - ரீட்விட்டு - ரிவிட்டு, க்ஷமிக்கணும் சின்னப்பயலின் சின்னத்தனமான கேள்விகள் (23,26,28 அக்டோபர் 2012 mamallan.com)

3. Communities of Resistence : A.Sivanadan Writings : Verso, London 1990.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/84853/language/ta-IN/article.aspx

தொடர்புபட்ட திரி: http://www.yarl.com/forum3/index.php?showtopic=109898

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சின்மயி விவகாரம்: வல்லாரைக் கீரை சாப்பிடுங்க - ஷோபாசக்தி

பார்ப்பனிய நிறுவனங்களுடன் கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு இருக்கும் தொடர்புகளைச் சுட்டி நான் சொன்ன ஒரு கருத்தை மனுஷ்யபுத்திரன் சரியாக விளங்கிக்கொள்ளவில்லை என்றுதான் நினைக்கிறேன்.

கடந்த காலங்களிலும், இப்போதும் வெவ்வேறு பார்ப்பனிய நிறுவனங்களின் நிழலில் மனுஷ்யபுத்திரன் நின்றிருப்பதை நான் சுட்டிக்காட்டுவது அவர்மீது குற்றப்பட்டியலொன்றைத் தயாரிக்கும் எத்தனமல்ல. அது விவாதத்தைத் திசை திருப்பும் முயற்சியும் கிடையாது.

‘சின்மயி பிற்போக்கான கருத்தைச் சொன்னதற்கான எதிர்வினையே அவர்மீதான பாலியல் வசவுகள், எனவே சின்மயி முதலில் தமிழர்களிடமும் தலித்துகளிடமும் மன்னிப்புக் கேட்கட்டும் அப்போது நான் சின்மயிக்காகப் போராடுவேன்’ என்ற மனுஷ்யபுத்திரனின் கூற்றே நான் மனுஷ்யபுத்திரனின் பார்ப்பனிய நிறுவனங்களுடனான தொடர்புகள் குறித்த கேள்வியை எழுப்புவதற்கான அடிப்படை.

சின்மயியை விடப் பன்மடங்கு ஆபத்தான கருத்துகளை இடஒதுக்கீடு குறித்தும் ஈழப்பிரச்சினை குறித்தும் இஸ்லாமியர்கள் குறித்தும் சொன்னவர்கள் சுஜாதா, தினமலர், காலச்சுவடு போன்றவர்கள். பார்ப்பன சங்க விழாவில் கலந்துகொண்டு ‘வீரமுழக்கம்’ எழுப்பிய சுஜாதாவைக் கண்டித்து அ.மார்க்ஸ் எழுதிய கட்டுரையை ‘உயிர்மை’யில் பிரசுரிக்க மறுத்தவர் மனுஷ்யபுத்திரன். இதனால் அப்போது அ.மாரக்ஸ் ‘உயிர்மை’யில் எழுதிய தொடரே நின்று போயிற்று. மனுஷ்யபுத்திரனைக் கண்டித்து ‘பார்ப்பனர்களின் மானம் காக்கும் கோவணம்’ என்ற குறிப்பை ‘அநிச்ச’யில் எழுதினார் மார்க்ஸ்.

அவ்வாறானால் இத்தகை பார்ப்பனிய சக்திகளின் நிழலில் மனுஷ்யபுத்திரன் நின்றதற்கும், நிற்பதற்கும் புத்தகங்களைப் பதிப்பிப்பதற்கும் அவர்களிடமிருந்து விளம்பர வருமானங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் தலித்துகள், தமிழர்கள், இஸ்லாமியர்கள், ஈழத் தமிழர்கள் எல்லோரிடமும் மனுஷ்யபுத்திரன் பொது மன்னிப்புக் கேட்க வேண்டாமா என்ன? சின்மயிக்கு ஒரு நியாயம் மனுஷ்யபுத்திரனுக்கு மறு நியாயமா ?

“சுகிர்தராணியின் கவிதைகள் ‘பின்’ பண்ணப்பட்டு பிளாட்பாரத்தில் விற்கப்படும் ஆபாசங்களை ஒத்தவை” என்று மனுஷ்யபுத்திரன் சொன்னதற்கு வேண்டுமானால் அவர் மன்னிப்பெல்லாம் கேட்கத் தேவையில்லை என்று விட்டுவிடலாம். ஏனெனில் அது அவரின் சொந்தக் கருத்துக் கிடையாது. அக்கருத்தை அவர் ‘இந்து மக்கள் கட்சி’யிடமிருந்தும் சில சினிமாக் கவிஞர்களிடமிருந்தும் இரவல் பெற்றிருந்தார் என்பதைக் கருத்தில் கொள்வோம்.

இப்போதுகூட மனுஷ்யபுத்திரன் மன்னிப்புக் கேட்டேயாக வேண்டும் என்றெல்லாம் நான் வலியுறுத்தவில்லை. ‘சின்மயி மன்னிப்புக் கேட்டால் சின்மயிக்காகப் போராடுவேன்’ என்ற மனுஷ்யபுத்திரனின் கூற்றிலுள்ள தவறைச் சுட்டிக்காட்டவே இதை எழுத நேரிட்டது.

இடஒதுக்கீடு பிரச்சினையும் மீனவர்கள் கொல்லப்படும் பிரச்சினையும் அதுசார்ந்த எதிரெதிர் விவாதங்களும் சின்மயி இவை குறித்தெல்லாம் கருத்துச் சொல்ல வருவதற்கு முன்பேயே இருப்பது போலவே இனியும் பல காலங்களுக்கு இந்தப் பிரச்சினைகளை முன்வைத்து ஊடகங்களிலும் சமூக வலைத்தளஙகளிலும் கடுமையான விவாதங்கள் நடக்கத்தான் போகின்றன. அந்த விவாதங்களை ஆபாச வசைகளால் எதிர்கொள்வதல்ல அதற்கான எதிர்வினை. எந்தக் காரணத்தை முன்வைத்தும் பெண்கள் மீது கொட்டப்படும் வசவுகளை நாம் நியாயப்படுத்திவிட முடியாது. ‘அந்தப் பெண் அப்படிச் சொன்னதாலேயே இப்படி நடந்தது எனவே முதல்தவறு பெண்மீதே’ என்று சொல்வதெல்லாம் மிகவும் சராசரி ஆணாதிக்கச் சிந்தனை. ‘மீனா கந்தசாமியும் சந்தனமுல்லையும் லீனா மணிமேகலையும் சொன்ன கருத்துகளிற்காகவே அவர்கள்மீது பாலியல் வசவுகள் ஏவப்பட்டன எனவே பிரச்சினையில் முதல் குற்றவாளிகள் அவர்களே’ எனச் சொன்னால் அதையும் நியாயம் என ஒப்புக்கொள்பவர்களே மனுஷ்யபுத்திரனின் இந்தக் கருத்தையும் நியாயம் எனக் கொண்டாடுபவர்களாக இருப்பார்கள்.

இந்த விவகாரத்தில் நான் வலியுறுத்த விரும்பும் இன்னொன்றுண்டு: சமூகத்தில் எத்தனையோ ஆபத்தான பிரச்சினைகளும் போராட்டங்களும் இருக்க சின்மயி விவகாரத்தில் அதீத கவனத்தைக் குவிப்பது சரியானதா எனச் சில நண்பர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அந்த நண்பர்களின் ஆதங்கத்தை நான் புரிந்துகொள்கிறேன். எனினும் இந்தச் சின்மயி விவகாரத்தை வெறும் இணையச் சண்டையாகச் சுருக்கிப் பார்த்துவிடுவதும் சரியற்றது. ஏனெனில் இணையத்தில் எழுதியதற்காக முதற்தடவையாக இருவர் குற்றத்தின் அளவிலும் மீறிய அளவிற்குக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்கள். இணையக் குற்றங்களிற்கு மூன்றாண்டுகள்வரை சிறையென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இணையம் காவற்துறையின் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ள பேராபத்து நிகழ்ந்துள்ளது. இது குறித்தெலாம் இணையப் பயன்பாட்டாளர்களான நாமனைவரும் தீவிரமாகச் சிந்திக்கவும் விவாதிக்கவும் அவசியமுள்ளது. மறுபுறத்தில் இணையத்தில் பெண்கள் இழிவுபடுத்தப்படும் தொடர் செயற்பாடுகள் மீது இந்த விவகாரம் கவனத்தைக் குவித்துள்ளது. இணையத்தில் எழுதுபர்களிற்கு சுயதணிக்கையும் சுயகட்டுப்பாடும் அவசியம், அதுவே கட்டற்ற இணைய சுதந்திரத்தைக் காப்பதற்கான வழி என்ற பொதுக் கருத்தொன்று இந்த விவாதங்களின் அடிபபடையில் உருவாகியிருக்கிறது. எனவே அந்த வகையில் இந்த விவகாரமும் விவாதங்களும் முக்கியமானவையே.

நான் முன்பே சுட்டிக்காட்டியவாறு, டாக்டர் கிருஷ்ணசாமி முதற்கொண்டு நாம் மதிக்கக்கூடிய பலர் இடஒதுக்கீடுகள் பிரச்சினையில் சமூகநீதிக்கு எதிரான கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்கள். ஈழப் பிரச்சினை, மீனவர் பிரச்சினை இவற்றிலெல்லாம் தாறுமாறாகப் பல தரப்புகளுள்ளன. யாழ்ப்பாண மீனவர்கள் கடலில் நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்களைச் சிறைப்பிடித்து இலங்கை அரசிடம் ஒப்படைத்த செய்திகள்கூட உள்ளன. இந்தப் பிரச்சினைகளையெல்லாம் நாம் பாலியல் வசவுகள் மூலமாகவா எதிர்கொண்டோம்.

இவற்றோடு ஒப்பிடும் போது (கவனிக்க: ஒப்பிடும்போது) துரும்பளவு கருத்தை டுவீட்டரில் சொன்னதற்காக, சின்மாயி மட்டுமல்லாமல் அவரது தாயாரும் பாலியல் வசவுகளாலும் கிண்டல்களாலும் எதிர்கொள்ளப்பட்டதற்கான காரணம் அவர்கள் பெண்களாக இருப்பது என்பதல்லாமல் வேறென்ன. இது அப்பட்டமான ஆணாதிக்கத் தடித்தனம். அந்தத் தடித்தனத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முயற்சிப்பது அறிவுஜீவி அயோக்கியத்தனம். ஜெயலலிதாவும் ராமகோபாலனும் இல. கணேசனும் துக்ளக் சோவும் இந்து ராமும் நடமாடும் நாட்டில் சின்மயியின் அரசியல் கருத்தெல்லாம் ஒரு பொருட்டா என்ன! மன்னிப்புப் படலத்தை எங்கிருந்து ஆரம்பிப்பது என்றெல்லாம் நாம் யோசிக்க வேண்டாமா என்ன! தனது சாதியவாதக் கருத்துகளிற்காக சின்மயி வருத்தம் தெரிவிக்கவேண்டியது அவசியமே. ஆனால் சின்மயி மீது இழைக்கப்பட்ட பாலியல் ஆபாச வன்முறையைச் சுரணையுடன் தட்டிக் கேட்பதற்கும் அந்த வன்முறைக்கு எதிராக சின்மயி சட்டத்தின் உதவியை நாடிச் சென்றதை ஆதரிப்பதற்கும் ‘மன்னிப்புக் கேள்’ என்பது ஒருபோதும் முன்நிபந்தனையாக இருக்க முடியாது.

ஒரு பிரச்சினையை அதன் சூழமைவுகளிலும் முன்னும் பின்னுமான அரசியல் வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியிலும் ஆராய்வதே சமூகப் பொறுப்பான ஆய்வுமுறை. சின்மயி பிரச்சினையை மட்டும் ஸ்பெசலாகப் பிய்த்தெடுத்துப் பேசுவதும் அந்த அடிப்படையில் அவசர தீர்ப்புகளை வழங்குவதும் அநீதி. ஒருபுறம் பார்ப்பன நிறுவனங்களின் நிழலில் நின்று கொண்டே மறுபுறத்தில் ‘திடீர்’ பார்ப்பன எதிர்ப்பாளி வேடம் கட்டி அறச் சீற்றத்தில் ஆடுவது சந்தர்ப்பவாத அரசியல். “வாஜ்பேயிக்குப் பிறகு கவிதை எழுதும் இரட்டை நாக்குப் பேர்வழி மனுஷ்யபுத்திரன்தானா” என்று முன்பொருமுறை அ.மார்க்ஸ் சாடியது ஞாபகத்திற்கு வருகிறது.

ஒழுக்கம் எனப்படுவது எதுவெனில் மற்றவர்கள் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறமோ அதேபோல நாமும் மற்றவர்களிடம் நடந்துகொள்வதே ஒழுக்கமாகும் எனறார் தந்தை பெரியார். எதிர்க் கருத்துள்ளவர்கள் நம்மிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என நாம் விரும்புகிறோமோ அதுபோலவே நாமும் அவர்களிடம் நடந்துகொள்ள வேண்டும் என்பதே பெரியார் வலியுறித்திய அறம். அதை மறுபடியும் மறுபடியும் ஞாபகம் கொள்ளுங்கள்

மீன் சாப்பிடுகிறீர்களோ இல்லையோ, நாள் தவறாமல் வல்லாரைக் கீரை சாப்பிடுங்கள்.

http://www.shobasakthi.com/shobasakthi/?p=1016

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், கிருபன்!

தென்னிந்தியாவைப் பற்றி. அறிந்து கொள்ளப் புத்தகங்களைத் தேடித்தேடி வாசித்தது, ஒரு காலம்!

இன்றைய எனது கேள்வியெலலாம், ஒன்றே ஒன்று தான்!

எப்படி இந்த மண்ணிலிருந்து, காமராஜர், பாரதிதாசன், பாரதியார் போன்ற மனிதர்கள், தோன்றினார்கள் என்பதே!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், கிருபன்!

தென்னிந்தியாவைப் பற்றி. அறிந்து கொள்ளப் புத்தகங்களைத் தேடித்தேடி வாசித்தது, ஒரு காலம்!

இன்றைய எனது கேள்வியெலலாம், ஒன்றே ஒன்று தான்!

எப்படி இந்த மண்ணிலிருந்து, காமராஜர், பாரதிதாசன், பாரதியார் போன்ற மனிதர்கள், தோன்றினார்கள் என்பதே!

இதெல்லாம் ஒவ்வொரு மண்ணிலும் இருக்கு புங்கை, நம்ம தலைவர் பிறந்த மண்ணில்தான் எத்தனை கோடரிக் காம்புகள்

இதெல்லாம் ஒவ்வொரு மண்ணிலும் இருக்கு புங்கை, நம்ம தலைவர் பிறந்த மண்ணில்தான் எத்தனை கோடரிக் காம்புகள்

அதைத் தான் அர்ஜீன் அண்ணையும் சொல்லுறார். என்ன ஒரு ஒற்றுமை உங்கள் இருவருக்கும்,

தம்பி இதற்குள் என்னை ஏன் இழுக்கின்றீர்கள் ,எனக்கு மாத்திரமில்லை வன்னிக்கு போனால் உண்மை விளங்கும் .

எல்லோரது பார்வைகளும் சார்புநிலையானதுதான்.

எல்லாவற்றிலும் தோற்று கையறு நிலையில் இருக்கும் எமக்கு முழு உலகிலுமேயே இப்போது கோவம் .

யப்பானுக்கு மேல் அணுக்குண்டு வீசினான் அமெரிக்கன் ,ஜெர்மனில் இருந்த யூதர்களை துவம்சம் செய்தார்கள் நாஸிக்கள் இப்படியே பட்டியலை நீட்டலாம் ,இவர்கள் எல்லோரையும் விட தென்னிந்தியன் என்ன துரோகம் செய்தான் இந்த உலகிற்கு ?

ஆபிரகாம் லிங்கனும் மகாத்மா காந்தியும் வாழ்ந்த காலங்கள் போய்விட்டன .

இப்போது பணமே எவர்க்கும் ஒரே குறி.அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ரொம்னியின் கடந்த காலத்தை பார்த்தால் உலகம் எங்கே போகின்றது என விளங்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

யப்பானுக்கு மேல் அணுக்குண்டு வீசினான் அமெரிக்கன் ,ஜெர்மனில் இருந்த யூதர்களை துவம்சம் செய்தார்கள் நாஸிக்கள் இப்படியே பட்டியலை நீட்டலாம் ,இவர்கள் எல்லோரையும் விட தென்னிந்தியன் என்ன துரோகம் செய்தான் இந்த உலகிற்கு ?

ஆபிரகாம் லிங்கனும் மகாத்மா காந்தியும் வாழ்ந்த காலங்கள் போய்விட்டன .

இப்போது பணமே எவர்க்கும் ஒரே குறி.அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ரொம்னியின் கடந்த காலத்தை பார்த்தால் உலகம் எங்கே போகின்றது என விளங்கும் .

[size=4]அப்ப புலிகளின் தவறால் முள்ளிவைக்கால் நிகழவில்லையா?[/size][size=1]

[size=4]மாறி மாறி பல்டி அடிக்கிறிங்கள் இதுவும் சர்வதேச அரசியலின் ஒரு பாகமா?[/size][/size][size=1]

[size=4]அதை சர்வதேச அரசியல் தளங்களில் அடிக்கலாம்............ ஏன் யாழில் அடிக்கவேண்டும் என்பது புரியவில்லையே?[/size][/size]

அதைத் தான் அர்ஜீன் அண்ணையும் சொல்லுறார். என்ன ஒரு ஒற்றுமை உங்கள் இருவருக்கும்,

[size=4]உங்களுக்கு டெலிபோன் அடித்து சொன்னவரா????????????[/size][size=1]

[size=4]தலைப்பின் கீழ் எதையுமே காணோம்?[/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.