Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் மூலோபாயத் திட்டம் என்ன? - இதயச்சந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் மூலோபாயத் திட்டம் என்ன? - இதயச்சந்திரன்

[saturday, 2012-12-08 13:18:24]
USA-eagle-flag-150.jpg

அடுத்த வருடம் ஜனவரி மாதமளவில் அமெரிக்காவின் அழைப்பை ஏற்று , தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அங்கு செல்லவிருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. மார்ச்சில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் முக்கிய கூட்டத்தொடரிற்கு முன்பாக , அமெரிக்கா சில காய் நகர்த்தல்களை இலங்கை விவகாரத்தில் கையாள முற்படுகிறது என்பதையே இந்த வசந்த அழைப்பு உணர்த்துகிறது.

  

அண்மையில் மேற்குலக கருத்துருவாக்கிகளின் மையமான, சர்வதேச நெருக்கடிக்களுக்கான குழுவின் [international Crisis Group] அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட பல விடயங்கள் குறித்து கூட்டமைப்போடு அமெரிக்கா விவாதிக்குமென நம்பலாம். அமெரிக்கா என்ன பேசப்போகிறது என்பதனை அலன் கீனனின் நெருக்கடிக் குழு தெளிவாக முன்வைத்து விட்டது. அறிக்கையில் பல இடங்களில் சிங்களத்தை விமர்சித்தாலும் , தீர்வு குறித்த விவகாரத்தில் நழுவல் போக்கினை அக்குழு கடைப்பிடிப்பதை காணலாம்.

எம்மிடம் அரசியலும் இல்லை, தீர்வும் இல்லை என்பதை வெளிப்படையாகக் கூறும் உலகத் தமிழர் பேரவையை, புலம் பெயர் மக்களின் மிகப்பலமான அமைப்பாகச் சித்தரிக்க இந்த நெருக்கடிக் குழு முயற்சித்துள்ளது. நாம் ஒரு தேசம் [NATION ] என்கிற அடிப்படைக் கோட்பாட்டில் தெளிவாக இருக்கும் , கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களைத் தலைவராகக் கொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தீவிரப் போக்குடையவர்களாக இனம் காணும் இக்குழு, கூட்டமைப்பை தமது நலனோடு முரண்படாத சக்தியாக அரவணைத்துக் கொள்கிறது .

உலகத் தமிழர் பேரவை தவிர்ந்த ஏனைய புலம் பெயர் மக்கள் அமைப்புக்களை, சுயநிர்ணய உரிமைகோரும் பயங்கரவாதிகள் என்று விளிப்பதில் எதுவித தயக்கமும் இவர்களிடம் இல்லை. ஒரு நாடு இரு தேசம், ஒரு தீவு இரு நாடுகள் என்கிற கோட்பாட்டில் வேறுபாடுகள் இல்லை என்பதுதான் நெருக்கடிக் குழுவின் நிலைப்பாடு.

தென்னாபிரிக்க மத்தியஸ்தத்தில், இக் கோட்பாட்டின் அடிப்படையில் தீர்விற்கான பேச்சுவார்த்தை நடைபெறும் சாத்தியப்பாடுகள் அறவே கிடையாது . அதேவேளை நோர்வே விட்டுச் சென்ற பணியை , தென்னாபிரிக்கா ஊடாகத் தொடர மேற்குலகம் முயல்கிறதா என்கிற கேள்வியும் எழுகிறது. இந்தியா இம்முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்காது என்ற நம்பிக்கையும் அமெரிக்காவிற்கு உண்டு.

தென்னாபிரிக்கா உடனான தொடர்பாடல்களில் தீவிரமாகப் பணியாற்றும் உலகத் தமிழர் பேரவை, நாடு கடந்த அரசாங்கத்தையும் இப்புதிய நகர்வில் இணைத்துச் செல்ல முயல்வது போல் தெரிகிறது. 2003 ஒக்டோபரில் தமிழீழ விடுதலைப்புலிகள் முன்வைத்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபை [iSGA]என்கிற முன்வரைபு போல் அல்லாத , சிங்களத்தோடு இணங்கிப் போகக்கூடிய , புதிய பலவீனமான இடைக்காலத் தீர்வொன்றினை ஏற்றுக் கொள்வோமென உலகத் தமிழர் பேரவை முன் மொழியலாம். அதனை கோட்பாட்டில் இறுக்கமாகவிருக்கும் புலம் பெயர் அமைப்புக்கள் ஏற்றுக்கொள்ளாது என்பது வெளிப்படை.

சிங்கள அதிகார மையத்தில், மென்போக்கு தீவிரப்போக்கு என்கிற இருவேறு முகங்கள் கிடையாது . இவ்வாறான முயற்சிகள் மீண்டுமொரு பொறிக்குள் தமிழினத்தை வீழ்த்திவிடும் ஆபத்தினை உருவாக்கும். வல்லரசாளர்கள், எமது சுயநிர்ணய உரிமையை தமது பிராந்திய நலனிற்காக நிராகரிக்கலாம். ஆனால் நிழல் அரசமைத்து ,விடுதலைப்புலிகள் போராடிப் பெற்ற இறைமையை எவருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது.

'நாம் ஒரு இறைமையுள்ள தேசத்து மக்கள் ' என்பதனை ஏற்றுக்கொள்ளாத எந்த பேச்சுவார்த்தையும் , 'ஒற்றையாட்சிக்குள் சிங்களத்தின் இறைமை ' என்கிற பேரினவாத ஆட்சிக் கட்டமைப்பினை வலுப்படுத்தவே துணை புரியும். 1997 ஆம் ஆண்டிலேயே , விடுதலைப் புலிகளை வெளிநாட்டுப் பயங்கரவாத இயக்கமென அமெரிக்கா பிரகடனப்படுத்தி , ஆயுதங்களை கீழே போடுமாறு வற்புறுத்தியது. சமாதான பேச்சுவார்த்தை நடைபெறும்போது 2006 ஆம் ஆண்டு , ஐரோப்பிய ஒன்றியம் புலிகளைத் தடை செய்தது. 2008 இல் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையைக் கைவிடுமாறு 'சர்வதேச நெருக்கடிக் குழு' விடுதலைப் புலிகளுக்கு நெருக்கடி கொடுத்தது.

சிறுவர் படை சேர்ப்பு, தற்கொலைத் தாக்குதல்கள் என்பவற்றின் அடிப்படையில் புலிகளைத் தடைசெய்வதாக மேற்குலகம் நியாயம் கற்பித்தாலும், அவர்களின் தலையாய பிரச்சினை , தமிழ் தேசிய இனத்தின் பிறப்புரிமைக் கோட்பாடான சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையே.

இக் கோட்பாட்டின் அடிப்படையிலமைந்த போராட்டங்களின் எதிர்வினையானது , சிங்கள தேசத்தோடு தமது பிராந்திய எதிராளிகளை கூட்டுச் சேர வைத்துவிடும் என்று மேற்குலகும் இந்தியாவும் உணர்ந்து கொண்டதே இந்த நிராகரிப்பிற்கான காரணமாக அமைகிறது.

கடந்த வருடம், கோரி.என்.கசாவே [ CORY.N ,GASSAWAY ] என்கிற படைத்துறை நிபுணர் , அமெரிக்காவின் கடற்படை யுத்தக் கல்லூரியில் இலங்கை குறித்தானதொரு ஆய்வறிக்கையை சமர்ப்பித்திருந்தார். 'இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் உறுதிப்பாடும் இலங்கையின் மூலோபாய முக்கியத்துவமும் : முத்துமாலையில் வைரம்' என்பதாகவிருந்த அவ்வறிக்கையில் , இலங்கை குறித்தான அணுகுமுறையில் , தனது வெளியுறவுக் கொள்கையை அமெரிக்கா எவ்வாறு வகுத்துக் கொள்ள வேண்டுமென பல ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளன. அதிலுள்ள பல பரிந்துரைகள் அமெரிக்காவினால் உள்வாங்கப்பட்டிருப்பதை அதன் தற்கால நகர்வுகள் உணர்த்துகின்றன.

பொருளாதார அபிவிருத்தியோடு கூடிய சீனாவின் இராணுவ விரிவாக்க ஒருங்கிணைந்த மூலோபாயத்திட்டமும், முத்துமாலைத் திட்டத்தினூடாக சீனா தன்னை சுற்றிவளைக்கிறது என்கிற இந்தியாவின் அச்சமும் சேர்ந்து, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நெருக்கடி நிலைமையை உருவாக்குவதால் , இவ்விரு சக்திகளுக்கிடையே இடைதரகராகவோ அல்லது இடைவெளி நிரப்பும் சக்தியாகவோ அமெரிக்கா உள்நுழைய வேண்டுமென்பதை கசாவே அவர்கள் வலியுறுத்துகின்றார்.

சீனாவின் விரிவாக்க நகர்வு, சமாதானவயப்பட்டதா அல்லது மேலாதிக்க நோக்கம் கொண்டதா என்பதனை அமெரிக்கா கண்டறிய வேண்டும் என்கிற விடயத்தை அவர் முதன்மைப்படுத்துகிறார். இக்கூற்றினை சற்று ஆழமாகப் பார்க்கவேண்டும். இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் மேலாதிக்கம், எத்தகைய பரிமாணத்தை வெளிப்படுத்தப் போகிறது என்பது குறித்து உரையாடப்படும்போது, 2004 இல் 'ஆசியாவில் எரிசக்தியின் எதிர்காலம்' என்று தலைப்பிட்ட அறிக்கையில் பூஸ் அலன் ஹமில்டன் அவர்களால் பயன்படுத்தப்பட்ட 'முத்துமாலை மூலோபாயம்' என்கிற கருத்துருவம் சுட்டிக்காட்டப்படுவதைப் பார்க்கலாம்.

இந்தியாவைச் சூழவுள்ள நாடுகளில், துறைமுக அபிவிருத்தி என்கிற செயல்திட்டத்தோடு சீனா கால் பதிப்பதை காண்கிறோம். இதற்கு அப்பால், பாகிஸ்தான் பங்களாதேஷ் மற்றும் பர்மா போன்ற நாடுகளில் பாரியளவில் முதலீடுகளையும் கடனுதவிகளையும் குவிக்கிறது. இந்த நாடுகளை முத்துக்கள் என்று வர்ணிக்கும் அதேவேளை , இலங்கையை வைரம் என்கிறார் கசாவே.

அத்தோடு இந்துசமுத்திரப் பிராந்திய நாடுகளில் , உட்கட்டுமான அபிவிருத்திப்பணிகளில் சீனா ஈடுபடுவதை முத்துமாலை மூலோபாயத்திட்டம் [ String of Pearl Strategy ] என்றும் கூறலாம்.

இவைதவிர, சீனாவின் இத்தகைய அபிவிருத்தி நடவடிக்கைகளை அவதானிக்கும் அதேவேளை, இம்முத்து மாலையிலுள்ள நாடுகள் சீனாவின் பக்கம் சாய்கிறதா அல்லது அமெரிக்காவிலிருந்து விலகிச் செல்கிறதா என்பதையும் கவனத்தில் கொள்ளல் வேண்டுமென மேற்குலக அரசறிவியலாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

'இந்த இடைப்பட்ட காலத்தில், இலங்கையுடனான தொடர்பாடல்களை அதிகரித்து, உண்மையிலேயே சீனாவின் எதிர்க்காலத் திட்டத்திற்கு இசைந்து செல்லக்கூடிய நாடாக இலங்கை மாறுமா என்பதனை அமெரிக்கா கண்டறிந்து கொள்ளலாம்' என்கிற புதிய அணுகுமுறையை கசாவே அவர்கள் முன் வைக்கிறார்.

அதாவது, அமெரிக்கா தனது பொருண்மிய- இராஜதந்திர உறவினைப் பலப்படுத்தும் போது, அதனை நிராகரிக்கும் போக்கில் இலங்கை நடந்து கொண்டால், சீனாவின் நலனிற்குள் அது இணங்கிச் செல்கிறது என்கிற முடிவிற்கு வரலாம் என்பதுதான் கசாவேயின் கருத்து.

படைத்துறை ஒத்துழைப்பை பொறுத்தவரை , பசுபிக் கட்டளை மையம் [PACOM] , இலங்கை அரசோடு நீண்டகால மூலோபாயக் கூட்டுறவினை ஏற்படுத்தும்வகையில் தொடர்பாடல்களைப் பேணவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. ஏற்கனவே படைத்துறை ஒப்பந்தமொன்றில் , போர் ஆரம்பித்தகாலத்தில் அமெரிக்கா கைச்சாத்திட்டது கவனிக்கத்தக்கது. மேலும் பல ஒப்பந்தங்களை அமெரிக்கா மேற்கொள்ள வேண்டுமென்பதே இவர்களின் அறிவுரையாகும்.

இதனை வேறுவிதமாகப் பரீட்சித்துப் பார்க்கிறது இந்தியா. சீபா [CEPA ] ஒப்பந்தம் நிறைவேறாமல் போனதால், அதற்கு மாற்றீடாக தனது பாரிய பன்னாட்டு தொழில் நிறுவனங்களை இலங்கையில் களமிறக்கியுள்ள இந்தியா, அம்பாந்தோட்டை வணிக மையத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது.

இந்து சமுத்திரப்பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருப்போர், முழு ஆசியாவிலும் மேலாதிக்கம் செலுத்தமுடியும் என்கிற மூலோபாயத்தின் அடிப்படையில், சகல வல்லரசாளர்களும் தமக்கிடையே தற்காலிகக் கூட்டுக்களை உருவாகிக் கொள்கிறார்கள்.

இருப்பினும்,' இந்து சமுத்திரத்தை , இந்தியாவின் சமுத்திரமாக நாங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றோம் என்கிற அதிரடி அறிவிப்பினை , அண்மையில் சீனாவின் அட்மிரல் சாவ் நான்கி அவர்கள் வெளியிட்டு இருந்ததை குறித்துக் கொள்ள வேண்டும். வியட்நாம், பிலிப்பைன்ஸ் , மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளை தொட்டு நிற்கும் தென் சீனக் கடற்பரப்பு முழுவதும் தமக்கே சொந்தமென சீனா கூறுவதையும் கவனிக்க வேண்டும்.

சீனாவானது ,உலகின் இரண்டாவது பொருண்மிய வல்லரசாக வளர்ச்சியுற்ற நிலையில், அவ்வளர்ச்சியினைத் தக்கவைப்பதற்கு, எண்ணெய் மற்றும் கனிம வளங்களைக் காவிச் செல்லு கடல் பாதை ,எதுவித அச்சுறுத்தலுக்கும் உள்ளாகாமல் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பதுதான் அது தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினையாகும்.

அமெரிக்காவிற்கு நிகராக தனது கடற்படை வலுவினை உயர்த்தும் வரை இப்பாதுகாப்புப் பிரச்சினை சீனாவிற்கு இருக்கும்.

இதனை அழுத்திக்கூறும் வகையில், சமகால சர்வதேச உறவுகள் குறித்த சீன கற்கை மையமொன்றின் சிரேஷ்ட ஆய்வாளர் ஷாங் யுன் செங் அவர்கள் மிகத்தெளிவாக ஒரு விடயத்தை கூறுகின்றார். அதாவது 'மலாக்கா நீரிணையையும் [strait of Malacca], இந்து சமுத்திரப் பிராந்தியத்தையும், எச்சக்தி தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறதோ, அச்சக்தியானது சீனாவின் எண்ணெய் மற்றும் மூலவள வழங்கல் பாதையை [ கடல்] முடக்கும் வல்லமையைப் பெறும்' என்கிறார்.

ஒரு தேசத்தின் பாதுகாப்பு [பொருண்மிய- இராணுவ] அச்சுறுத்தலிற்கு உள்ளாகும்போது, அது தனது பொருளாதார மற்றும் இராஜதந்திர அணுகுமுறைகளை வளர்த்துக் கொள்வதோடு, இராணுவ மூலோபாயங்களை தேசத்தின் நலனடிப்படையில் வகுத்துக் கொள்ளும் என்பதுதான் தற்காப்பு யதார்த்தவாத [Defensive Realism] கருத்தியலாகும்.

இதனடிப்படையில், சீனா தனது கடற்படைவலுவினை ஆசியப்பிராந்தியத்தில் அதிகரிக்க முயல்வதோடு, இந்தியாவைச் சூழவுள்ள நாடுகளில் பாரிய முதலீடுகளையும், சர்வதேச அரங்கில் அந்நாடுகளுக்கு ஆதரவான இராஜதந்திர நிலைப்பாடுகளையும் மேற்கொள்ளத் தீவிரம் காட்டுகிறது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் [sCO ], தீர்மானம் மேற்கொள்ள முடியாத, ஆனால் அமைப்பின் உரையாடல் களத்தில் கலந்து கொள்ளும் பங்காளியாக , இலங்கையை வரவேற்ற சீனா மற்றும் ரஷ்யாவின் நிலைப்பாடு இதனை மேலும் உறுதி செய்கிறது.

இலங்கையை ஒரு பிரதான களமாக முன்னிலைப்படுத்துவதன் மூலம், இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் பூகோள மூலோபாய நலனை எதிர்கொள்ளலாமென்கிற வகையில் சீனாவும் ரஷ்யாவும் தமது காய்களை நகர்த்துவதாக மேற்குலக அரசியல் நோக்கர் ஒருவர் தெரிவிக்கின்றார்.

பாரசீகக்குடாவரை நேட்டோவின் ஆதிக்கத்தைக் கொண்டு வந்த அமெரிக்கா, ஒக்டோபர் 2007 இல் முதன்முறையாக, தனது கடற்படை பயிற்சியினை இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நடாத்திய விவகாரத்தையும் அவர் நினைவூட்டுகிறார்.

இவ்வாறான வல்லாதிக்க போட்டி நகர்வுகள் குறித்து, அமெரிக்க கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி அட்மிரல். மைக் முலன் அவர்கள் அமெரிக்க காங்கிரசில் பேசும்போது குறிப்பிட்ட விடயம் மிக முக்கியமானது.

நேட்டோவைப் பொறுத்தவரை , அதன் விரிவாக்கமானது , பரந்துபட்ட ஆழமான உறவுகளை பாகிஸ்தானை நோக்கி உருவாக்கி , அதன் பிராந்திய நலனடிப்படையில் நகர்கிறது. ஆனாலும் நேட்டோவின் இந்துசமுத்திரப் பிராந்திய மணிமுடியில், இலங்கையானது முக்கியத்துவம்மிக்க முத்தாக அமையுமெனக் குறிப்பிடுகின்றார்.

அதேவேளை, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவும் இந்தியாவும் முரண்பட்டுக் கொண்டாலும், அவற்றின் முரணற்ற எழுச்சிக்கு அமெரிக்க கடற்படைப் பலத்தின் வகிபாகம் அவசியம் என்பதனை, அமெரிக்காவின் பூகோள அரசியல் ஆய்வாளர் ரொபேர்ட் .டி.கப்லான் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றார்.

ஆனாலும், 'எண்ணெய் வழங்கல் பாதையில் தடை ஏற்படக்கூடாது என்பதற்காக , இந்துசமுத்திரப் பிராந்திய நாடுகளில் , சீனாவின் காலூன்றல் தேவையற்றது' என்பதனை அழுத்திக் கூறும் சர்வதேச உறவுகள் குறித்து ஆய்வுகள் செய்வோர், பாரசீகக்குடா ,ஹோர்முஸ் நீரிணை மற்றும் அரபிக் கடலில் பலமான கடற்படையை நிறுத்தியிருக்கும் அமெரிக்காவால் , சீனாவின் வழங்கல் பாதைக்கு அங்கேயே தடுப்பரணைப் போடமுடியும் என்கிறார்கள்.

இந்த வாதம் உண்மையான தரவுகளின் அடிப்படையில் சொல்லப்பட்டாலும், புதிதாக தோற்றம்பெற்றுள்ள இந்திய- சீன பனிப்போரினால் , இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் மோதல் களம் உருவாகும் என்பதனைக் கருத்தில் கொண்டு , அதனை பகைமையற்ற முரணிலையாக மாற்ற, அமெரிக்க கடற்படையின் வகிபாகம் தேவை என்பதுதான் பெரும்பாலான அமெரிக்க வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்களின் சிந்தனைப்போக்காக இருப்பதை புரிந்து கொள்ளலாம்.

அதேவேளை அமெரிக்க கடற்படைக்கு அச்சுறுத்தலாகவிருக்கும், சீனாவின் டி.எவ்.21 டி [Dong Feng 21 D ] என்கிற ,பாரிய நாசகாரி யுத்தக்கப்பல்களையும் தாக்கியழிக்கும் வல்லமைகொண்ட ஏவுகணைகள் , கடலாதிக்கப்போட்டியில் புதிய வரவாகப் புகுந்து கொண்டதை அமெரிக்கா எச்சரிக்கையுடன் நோக்குகிறது.

இருப்பினும், 813 மில்லியன் டொலர் முதலீட்டில் 'நோர்த்ரொப் குறுமன்' நிறுவனம் [ Northrop Grumman ] தயாரித்த X -47B என்கிற அதி நவீன ஆளில்லா ஸ்டெல்த் தாக்குதல் விமானம் , அமெரிக்க படைத்துறையில் முக்கிய பங்கினை வகிக்கப்போவதை சீனா ,ரஷ்யா உட்பட இந்தியாவும் உன்னிப்பாக அவதானிக்கின்றன.

இவ் விமானத்தின் பெரிய வடிவமான X -47C என்கிற, 4500 கிலோகிராம் குண்டுகளை காவிச் செல்லும் தாக்குதல் விமானம் தற்போது வடிவமைக்கப்படுகிறது.

ஆகவே உயர் தொழில் நுட்பத்தின் புதிய கண்டுபிடிப்புக்கள் , வல்லரசாளர்களின் படை வலுவினை அதிகரித்து, எதிர்காலத்தில் இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் பதட்டமான சூழலை உருவாக்கத்தான்போகிறது.

அமெரிக்காவின் நீண்டகால மூலோபாயம் என்பது , இலங்கையைத் தனது நலன்சார்ந்த வியூகத்தினுள் கொண்டு வருவதாக இருக்க வேண்டும். இவர்களின் நலன்களையும், வெளியுறவுக் கொள்கைகளையும் புலம் பெயர் தமிழ் மக்கள் புரிந்து கொள்வது நல்லது.

குறிப்பாக அமெரிக்கா மற்றும் தென்னாபிரிக்கா அரசுகளோடு பேசிக்கொண்டிருக்கும் உலகத்தமிழர் பேரவை , நோர்வேயின் பிரதியீடாக பயன்படுத்தப்படுகிறதா என்கிற கேள்வியும் எழுகிறது. ஆகவே தாயக தமிழ் தேசிய அரசியல் தலைமைகள், அடிப்படைக்கோட்பாட்டில் உறுதியாக இருந்து , தமக்கிடையே பரந்துபட்ட பொது ஐக்கிய முன்னணியை உருவாக்கி உலக அரசுகளோடு பேசுவதே சரியாக அமையும்.

-இதயச்சந்திரன்-

 

நன்றி - செய்தியிணையம்

இந்துசுமுத்திர பிராந்தியத்தில் எந்தப் பதட்ட நிலையும் உருவாகாதுங்கோ. இதெல்லாம் சும்மா ஜூஜூபி.

  • கருத்துக்கள உறவுகள்

புதிதாக தோற்றம்பெற்றுள்ள இந்திய- சீன பனிப்போரினால் , இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் மோதல் களம் உருவாகும் என்பதனைக் கருத்தில் கொண்டு

 

 

http://www.youtube.com/watch?v=XTfEYBVajhk

அதிகமான பந்திகள் அதிகமான அலசல்கள் 

 

மையப் கருத்தை தொலைத்து இறுதியில் கண்டு பிடித்தேன்.. வேண்டாமையா வேண்டாம்.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.