Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீந்திக்கடந்த நெருப்பாறு அங்கம் - 06 தொடக்கம் 32

Featured Replies

நீந்திக்கடந்த நெருப்பாறு அங்கங்கள் 1 தொடக்கம் 5 வரை வாசிக்க இங்கே சொடுக்கவும்

 

 

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 06

 

சங்கரசிவத்தின் கால்கள் சைக்கிளை வேகமாக மிதித்துக்கொண்டிருந்த போதிலும் அவனின் மனம் கணேசனையே சுற்றிக்கொண்டிருந்தது. அவன் இன்னும் உயிராபத்தான நிலைமையைத் தாண்டாவிட்டாலும் போராளிகளுக்கு இயல்பாகவே உள்ள மனவலிமை அவனைக் காப்பாற்றிவிடும் என சிவம்

முழுமையாக நம்பினான்.



அவன் மடுக்கோவிலைத்தாண்டியபோது வீதிக்கரையில் அமைந்திருந்த அந்தப் பெரிய கட்டுக்கிணற்றில் ஏராளமான ஆண்களும் பெண்களும் இருபுறமும் நின்று குளித்துக்கொண்டிருந்தனர். அந்த அகதி வாழ்வு பகிரங்கமான இடங்களில் குமர்ப்பிள்ளைகள் கூட நின்று குளிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்திவிட்டதை நினைத்த போது நெஞ்சில் ஏதோ செய்தது. ஒரு நீண்ட பெருமூச்சு அவனுள்ளிருந்து வெளிப்பட்டது.



வீதியில் அங்குமிங்கும் மாடுகள் படுத்திருந்தன. தம்பனையில் பட்டி பட்டியாக நின்ற அவை கூட அகதிகளாகி வீதி வீதியாகப் படுத்திருந்தன.



தட்சினாமருதமடு பொது நோக்கு மண்டபத்தில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். நடுவில் ஒரு மேடையில் வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடல்கள் வைக்கப்பட்டிருந்தன. மக்கள் ஒவ்வொருவராக மலர்தூவி அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தனர். பெண்கள் அஞ்சலி செலுத்தும் போது விம்மல்களும் அழுகையொலிகளும் மண்டபத்தை நிறைத்தன.



சிவம் ஒரு ஓரமாகச் சைக்கிளை நிறுத்திவிட்டு ஒரு ஓரமாக நின்று கொண்டான். மக்கள் அஞ்சலி செலுத்தி முடிந்ததும் சிவம் தானும் இரு கரங்களிலும் மலர்களை எடுத்து போராளிகளின் கால்களில் போட்டு அஞ்சலித்தான். நேற்று இரவு தன்னுடன் தோள் கொடுத்துப் போராடிய வீரர்கள் உயிரற்றுக் கிடப்பதைப் பார்த்தபோது அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனினும் சிரமப்பட்டு தன் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டான்.



அவன் அஞ்சலித்துவிட்டு நிமிர்ந்தபோது மக்கள் மத்தியில் அமர்ந்து கண்ணீர்வடித்துக் கொண்டிருந்த அவனின் தாய், பார்வதி ஓடிவந்து அவனைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள்.



“பாரடா.. உன்ர தம்பிமாரை..” என்றுவிட்டு அவள் அலறத் தொடங்கினாள். அவளின் பின்னால் வந்த முத்தம்மாவும் விம்மி விம்மி அழுதுகொண்டிருந்தாள்.



முன்பின் அறிந்திராத இந்த இளைஞர்களின் சாவுக்காக இத்தனை மக்கள் மனமுருகி அழுகிறார்கள் என்றால் அந்தச் சாவின் பெறுமதி எவ்வளவு உயர்வானது என்பதை நினைத்துப் பார்த்துக்கொண்டான். அவர்களில் தானும் ஒருவன் என நினைத்தபோது ஒரு வித பெருமிதம் அவனின் நெஞ்சை நிறைத்தது.



பார்வதியம்மாள் அவனை விட்டு விட்டு வேப்பிலைகளை எடுத்து வித்துடல்களுக்கு விசிற ஆரம்பித்தாள்.



தான் போராளியாக இணைந்த போது தன்னை எப்படியும் வீட்டிற்கு அழைத்துவிடவேண்டும் என்பதற்காக எத்தனை நாள் எத்தனை போராளிகள் முகாம்களுக்கு அலைந்திருப்பாள். எவ்வளவு பாடுபட்டிருப்பாள். அவள் இன்று இப்படி மனம் மாறிவிட்டாள் என நினைத்தபோது அவனுக்கு நம்பச் சிறிது சிரமமாகவே இருந்தது.



விடுதலை வேட்கை என்பது எல்லோரையுமே பற்றிப்பிடித்திருக்கும் மகத்தான சக்தி வாய்ந்தது என்பதை தன் தாயாரைப் பார்த்த போதே அவனால் உணர முடிந்தது.



அவன் அங்கு நின்ற போராளிகளிடமும் மற்றவர்களிடமும் விடைபெற்றுக்கொண்டு முகாமை நோக்கிப் புறப்பட்டான்.



பின்னால் வந்த பார்வதி அவனிடம், “சாப்பிட்டியே தம்பி”, எனக் கேட்டாள்.



அவன் தாயின் முகத்தைப் பார்த்துவிட்டு, “ஓமம்மா முகாமிலை சாப்பிட்டுத்தான் வந்தனான்”, என்றான்.



அவனைக் கூட்டிக்கொண்டுபோய் நல்ல கறியுடன் சாப்பாடு கொடுக்கவேண்டும் என ஒரு மன உந்துதல் எழுந்தாலும், மாவீரர் அஞ்சலியை இடையில் விட்டுச் செல்ல மனம் இடங்கொடுக்காத காரணத்தால் அந்த ஆசையை அடக்கிக்கொண்டாள்.



“கவனமாய்ப் போட்டு வா மோனை”, என்று அவள் அவனை வழியனுப்பிவைத்தாள்.



அவன் முகாமுக்கு வந்து சேர்ந்த போது மாலை ஆறு மணியாகிவிட்டது.



கைப்பற்றப்பட்ட இராணுவ முகாம் பகுதியை நோக்கி விமானத் தாக்குதல்களும், எறிகணை வீச்சுக்களும் நடத்துவதால் அதைவிட 200 மீற்றர் முன்னால் சென்று காவலரண்களை அமைக்குமாறு தளபதி கட்டளையிட்டிருந்தார்.



அவன் முகாமையடைந்த போது அந்த வேலைகள் முடிந்துவிட்டன. அவன் போய் காவலரண்களின் நிலைமைகளைப் பரிசீலனை செய்து போராளிகளுக்கு ஆலோசனை வழங்கிவிட்டு வர இரவு ஒன்பது மணியாகிவிட்டது.



கைவிடப்பட்ட இராணுவ முகாமிலிருந்து இன்னும் புகை எழுந்துகொண்டிருந்தது. பீரங்கி மேடைகள் இரண்டும் வெறுமைப்பட்டுப் போய்க்கிடந்தன.



இராணுவத்தினருக்கு பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்ட காரணத்தால் அவர்கள் தங்கள் படையணிகளைச் சீர் செய்து இன்னொரு தாக்குதலை நடத்தச் சில நாட்கள் எடுக்கலாம் என அவன் கருதினான்.



சிவம் மரை இறைச்சிக் கறியுடன் ஒரு பிடிபிடித்துவிட்டுப் போய் படுத்துக்கொண்டான். காலை, நண்பகலில் எல்லாம் சாப்பிடாததால் தேங்கிக்கிடந்த பசி இப்போது பொங்கி எழுந்து விட்டது போல் தோன்றியது.



உடல் அலுப்புத் தீர ஒரு நல்ல தூக்கம் போட வேண்டும் என நினைத்துப் படுத்தவனுக்கு தூக்கம் வர மறுத்தது. மீண்டும் மீண்டும் கணேசின் நினைவுகள் வந்து மூளையை நிறைத்துக் கொண்டன.



எத்தனை களங்கள், எத்தனை சண்டைகள், எத்தனை சாதனைகள் என அனைத்தும் ஒன்றையொன்று மேவி நினைவில் வந்து கொண்டிருந்தன. குடாரப்புத் தரையிறக்கத்தின் போது இடம்பெற்ற சமர்களில் அவன் காட்டிய வீரமும் துணிச்சலும் சிவத்தையே பல முறை அதிசயிக்க வைத்ததுண்டு.



முகமாலைப் பகுதியில் அநேகமான சண்டைகள் கைகலப்பு என்ற அளவுக்கு மிக நெருக்கமாகவே நடைபெற்றன.



ஒரு முறை சில பெண் போராளிகள் படையினரின் சுற்றிவளைப்புக்குள் சிக்குப்பட்டுவிட்டனர். வோக்கி உதவி கேட்டு அலறிக்கொண்டிருந்தது. அதே வேளையில் கணேசின் அணியோ ஒரு பெரும் படையணியுடன் மோதிக்கொண்டிருந்தது.



கணேசன், “நீங்கள் இந்த இடத்தைக் கவனமாய்ப் பாருங்கோ; நான் போறன்”, என்றுவிட்டுப் புறப்பட்டான்.



“தனியே போறாய்?” எனக் கேட்டான் சிவம்.



“நான் சமாளிப்பன்”, என்றுவிட்டு கிட்டத்தட்ட இருநூறு மீற்றர் தூரத்தை 3 நிமிடங்களில் ஓடிக் கடந்தான்.



நிலைமை மிகவும் கடுமையாகவே இருந்தது. முப்பது நாற்பதுக்கு மேற்பட்ட படையினர் ஆறு பெண் போராளிகளைச் சுற்றிவளைத்திருந்தனர்.



கணேசன் தயங்கவில்லை. ஒவ்வொரு வடலியின் பின்னும் ஓடி  ஓடிப் போய் நின்று தாக்குதல் நடத்தி பலர் தாக்குவது போன்ற ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தினான்.



பின்புறமாகப் பல முனைகளிலிருந்து வந்த வேட்டுக்கள் படையினரை நிலை குலைய வைத்துவிட்டன. கண் மூடித்தனமாக வடலிகளை நோக்கிச்  சுட ஆரம்பித்தனர். தம்மை நெருங்கிக் கொண்டிருந்த இராணுவத்தினரில் பலர் அடுத்தடுத்து விழவே பெண் போராளிகளும் புதிய உற்சாகத்துடன் தாக்குதலைத் தொடுத்தனர்.



கணேஸ் தாக்குதலைத் திடீரென நிறுத்தவே படையினர் மீண்டும் பெண்கள் பக்கம் கவனத்தைத் திருப்பினர்.



கணேஸ் மீண்டும் சுட ஆரம்பித்தான்.



முன் பக்கமும் பின் பக்கமும் ஒரே நேரத்தில் வந்த வேட்டுக்களால் நிலை குலைந்த படையினர் பின் வாங்க ஆரம்பித்தனர்.



அந்தச் சண்டைகளில் ஒரு இடத்தைப் பிடிப்பதும் பின்வாங்குவதும் அடிக்கடி நிகழும் சம்பவங்கள். ஒரு இடத்தை இழந்துவிட்டால் கணேஸ் பசி, தாகம், தூக்கம் எதையுமே பார்க்கமாட்டான். அதை மீண்டும் பிடித்த பின்பே அவன் ஓய்வான்.



ஒவ்வொரு சம்பவங்களாக அவன் மனதில் வந்து போய்க்கொண்டிருந்தன. தூக்கம் வர பிடிவாதமாக மறுத்தது. எழுந்து வெளியே வந்து ஒரு மரக்குற்றியில் அமர்ந்து கொண்டான்.



வானத்தைப் பார்த்தபோது ஒரு எரிகல்லோ அல்லது நட்சத்திரமோ எரிந்து விழுவதை அவனின் கண்கள் கண்டன. சிவத்தின் நெஞ்சு ஒரு முறை திக்கிட்டது. ஏதாவது ஒரு கேடான சம்பவம் நடக்கு முன்பு நட்சத்திரம் எரிந்து விழுவது கண்ணில் படும் என தகப்பனார் ஒரு முறை சொன்னது நினைவுக்கு வந்தது. மனம் குழம்ப ஆரம்பித்தது.



(தொடரும்)

தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்.

 

http://tamilleader.com/?p=2919

Edited by கலையழகன்

வானத்தைப் பார்த்தபோது ஒரு எரிகல்லோ அல்லது நட்சத்திரமோ எரிந்து விழுவதை
அவனின் கண்கள் கண்டன. சிவத்தின் நெஞ்சு ஒரு முறை திக்கிட்டது. ஏதாவது ஒரு
கேடான சம்பவம் நடக்கு முன்பு நட்சத்திரம் எரிந்து விழுவது கண்ணில் படும் என
தகப்பனார் ஒரு முறை சொன்னது நினைவுக்கு வந்தது. மனம் குழம்ப ஆரம்பித்தது.

 

அபசகுனங்கள் எப்பொழுதும் வாழ்க்கையில் தொடர்புபட்டவைதான் . ஆனால் எமது மனம் எமக்கு விருப்பமானதையே தேர்வு செய்து எம்மை சமாதானப்படுத்திக் கொள்ளும் . இணைப்பிற்கு நன்றி . தொடர்ந்து இணையுங்கள் ஊர்பூராயம் :) :) :) .

  • தொடங்கியவர்

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 07

 

 
வோக்கியின் அருகில் தூக்கமும் விழிப்புமான சலன நிலையில் அமர்ந்திருந்த புனிதன் நீண்ட நேரமாக வெளியே போன சிவம் திரும்ப வராத காரணத்தால் எழுந்து வெளியே வந்து பார்த்தான்.
 
வானத்தையே பார்த்துக் கொண்டிருந்த சிவத்திடம் “என்னண்ணை.. தனிய இருந்து கடுமையாய் யோசிக்கிறியள்?” எனக் கேட்டான்.சிவம் அவனைப் பார்க்காமலே, “கணேசுக்கு பயப்பிடுற மாதிரி ஒண்டும் நடவாது”, என்றான்.
 
புனிதனுக்கு எதுவுமே புரியவில்லை, “என்னண்ணை சொல்லுறியள்”, எனத் தடுமாற்றத்துடன் கேட்டான்.
 
அப்போது தான் சிவம் தன்னையறியாமலே ஏதோ நினைவுகளில் உளறிவிட்டதை உணர்ந்தான். பின்பு சமாளித்தவாறே, “கணேசுக்கு கொஞ்சம் கடுமையான காயம்” அதுதான் யோசினையாக் கிடக்குது” என்றான்.
 
புனிதன் சற்று நேரம் யோசித்துவிட்டு, “ரூபாக்காவுக்கு தெரியுமே?” என ஒருவித தயக்கத்துடன் கேட்டான்.
 
“இல்லை தெரியாது… அவ இப்ப பூநகரியில நிக்கிறா” என்றான் சிவம்.
 
கணேசும் ரூபாவும் அடிக்கடி சந்திப்பதில்லை. அவர்கள் சந்திப்பதற்காக ஒருவரைத் தேடி மற்றவர் போவதுமில்லை. ஆனால் சந்திக்கக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் நீண்ட நேரம் நிறையவே கதைப்பார்கள்.
 
எனினும் முகாமிலுள்ள அத்தனை போராளிகளுக்கும் அவர்களின் காதல் பற்றியும் கணேஸ் அவளில் வைத்துள்ள ஆழமான பாசம் பற்றியும் நன்கு தெரியும்.
 
எல்லோரையும் விட அவளின் காதலின் வலிமை பற்றி சிவம் நன்றாகவே புரிந்திருந்தான்.
 
கணேசின் தாயும் தகப்பனும் அவன் சிறுவனாக இருந்த போதே தென்னிலங்கையில் இடம்பெற்ற இனக்கலவரத்தின் போது கொல்லப்பட்டுவிட்டனர். உறவினர் வீட்டில் வளர்ந்த அவன் பத்து வயதிலேயே தேனீர்க் கடையில் வேலைக்குச் சேர்ந்தான். பின் பல இடங்களிலும் மாறி மாறி வேலை செய்தான். பல வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் அரிசி ஆலை ஒன்றில் வேலை செய்த போதுதான் போராட்டம் பற்றிய எண்ணங்கள் அவன் மனதில் படிய சில நாட்களில் அவன் போராளியாக இணைந்து கொண்டான். பாசமே என்னவென்று தெரியாமல் வளர்ந்த அவனுக்கு ரூபாவின் அன்பு கிட்டிய போது அந்த எண்ணங்கள் கூட எல்லையற்ற இன்பத்தைக் கொடுத்தன.
 
தங்கள் காதலை மற்றவர்களிடம் சொல்வதில் பெரும் மகிழ்ச்சியடைந்தான். அவன் ரூபாவின் கெட்டித்தனங்கள் பற்றிப் பேசத் தொடங்கினால் வெகு சிரமப்பட்டே நிறுத்தவேண்டி வரும்.
 
ஒரு நாள் தானும் கணேசும் கதைத்தது சிவத்தின் ஞாபத்திற்கு வந்து உதைத்தது.
 
“நான் ரூபாவை எவ்வளவு நேசிக்கிறான் எண்டு தெரியுமே?”, சிவம் மெல்லிய சிரிப்புடன் கேட்டான்,
 
“அது நீ சொல்லியே தெரியவேணும்?”
 
“சிவம் எனக்கு அன்பு எண்டால் என்ன எண்டத உணர்த்தினவள் அவள் தான். அவள் எண்டைக்குமே கவலைப்படக் கூடாது”
 
“அப்பிடியெண்டால்..?”
 
கணேஸ் ஒரு சிறிய மௌன இடைவெளியின் பின்பு சொல்ல ஆரம்பித்தான், “நான் தற்செயலா வீரச்சாவடைஞ்சா நான் இல்லாத குறையை அவள் உணரக் கூடாது. என்ர இடத்த நீ தான் நிரப்ப வேணும்”
 
“சிவத்தின் குரலில் கோபம் ஏறியது” என்னடா மடைக் கதை கதைக்கிறாய்?.. காதல் என்னடா கால் செருப்பே அடிக்கடி மாத்த?”
 
“நான் அவளில வைச்சிருக்கிற அன்பையும் அவள் என்னில வைச்சிருக்கிற அன்பையும் நல்லாய் புரிஞ்சவன் நீ.. ஆனபடியால்..”
 
“உந்தக் கதையை நிப்பாட்டு பாப்பம்”
 
“கணேஸ் பரிதாபமாகக் கேட்டான்.. “அப்ப.. நீ வேற.. நான் வேற எண்டு நினைக்கிறியே?”
 
“இல்லை.. ஆனால் அது வேறை.. நீ கேக்கிறது வேறை”
 
சிவத்தின் குரலில் கடுமை ஏறியிருந்தது.
 
“அப்ப.. நான் வீரச்சாவடைந்தால்…” என்று ஏதோ சொல்ல முற்பட்ட கணேசை இடை மறித்த சிவம், “அதுக்கு முதல் நான் வீரச்சாவடைஞ்சிடுவன்… அதால அந்தப் பிரச்சினைக்கு இடமில்லை” என்றுவிட்டு அந்த இடத்தில் இருந்து எழுந்தான் சிவம்.
 
“சிவம்.. நான் இனி அதைப் பற்றிக் கதைக்கமாட்டன். ஆனால் என்ர விருப்பத்தை நிராகரிக்க மாட்டாய் எண்டு நம்பிறன்”, என்றுவிட்டு அவனும் எழுந்தான்.
 
மீண்டும் சிவம் மௌனமாகி விட்ட நிலையில், “என்னண்ணை பிறகும் யோசிக்கிறியள், அவருக்கு ஒண்டும் நடக்காது.. போய்ப் படுங்கோ”, என்றான் புனிதன்.
 
“ம்.. பாப்பம்”, என்றுவிட்டு எழுந்தான் சிவம்.
 
அன்று பால் கொடுப்பதற்காகப் பரமசிவம் அண்ணாவியார் முத்தையா கடைக்குப் போன போது அந்த இடமே கலகலப்பாக காட்சியளித்தது. ஒவ்வொருவரும் தாங்களே போய் சண்டை பிடிச்சு, முள்ளிக்குளத்திலிருந்து இராணுவத்தை விரட்டி விட்டது  போன்று  பெருமையடித்துக் கொண்டிருந்தனர்.
 
பரமசிவம், “எல்லாரும் வெற்றியப் பற்றிக் கதைக்கிறியள்.. அந்த வீரச்சாவடைஞ்ச பொடியளப் பற்றி ஆரும் கவலைப்பட்டியளே? எனக் கேட்டார்.
 
முருகேசர் ஒரு மெல்லிய செருமலுடன்..“தியாகங்கள் இல்லாமல் வெற்றி வருமே?” என்று தத்துவம் பேசினார்.
 
“உன்ரை பொடியன் செத்திருந்தால் நீ உப்பிடிக் கதைப்பியே” எனக் கேட்டார் பரமசிவம்.
 
“அவர் இரண்டு பொடியளையும் சவுதிக்கும், கட்டாருக்கும் அனுப்பிப்போட்டார். அவர் கட்டாயம் தியாகம் பற்றிக் கதைப்பர் தானே? என நக்கலடித்தார் கதிரேசு.
 
“கதிரேசு. அப்பிடிக் கதையாத.. வெளிநாட்டில இருக்கிற எங்கட சனம் அனுப்பிற காசில எங்கட போராட்டத்துக்கு நிறைய பலன் கிடைக்குது தெரியுமே?” என்றார் பரமசிவம் சற்றுக் கண்டிப்புடன்.
 
“ஆமாங்க.. நாம எல்லாம் ஒவ்வொரு பக்கம் உதவி செஞ்சுறதால தானுங்களே,. நாம வெல்ல முடியுது என்றார் முத்தையா தேநீரை இழுத்து ஆற்றியவாறே”?
 
முள்ளிக்குளத்திற்கு இராணுவம் முன்னேறிய போது, எங்கே தாங்களும் இடம்பெயர வேண்டி வருமோ என அஞ்சிக் கொண்டிருந்த பாலம்பிட்டி மக்கள் அந்த வெற்றியைத் தமக்கு கிடைத்த பெரும் விமோசனமாகவே கருதினர். அந்த மகிழ்ச்சி ஒவ்வொருவர் முகங்களிலும் மின்னியது.
 
பரமசிவம் கேட்டார், “எங்களுக்காக பொடியள் இவ்வளவு கஷ்டப்பட்டு தியாகங்கள் செய்து ஆமியை கலைச்சிருக்கிறாங்கள். நாங்கள் ஏதாவது சந்தோஷமா செய்ய வேண்டாமே?”
 
“அது தானே முருகர் ஒரு பெரிய தாட்டான் மரையை வேட்டையாடிக் குடுத்திருக்கிறாரல்லே”, என்றார் கதிரேசு.
 
“அது முருகர் குடுத்தது. நாங்கள் என்ன செய்யப்போறம்?”
 
“பலகாரம் செஞ்சு அனுப்பிடலாமே?” என்றார் முத்தையா.
 
“அது நல்ல யோசினை தான். ஆனால் கடைசி மூண்டு கடகங்களிலையெண்டாலும் செய்தனுப்ப வேணும்”, என்றார் பரமசிவம்.
 
முருகேசர் திடீரெனக் குறுக்கிட்டார், “மூண்டென்ன, ஐஞ்சு கடகம் செய்வம்… அரைவாசிக் காசை நான் பொறுக்கிறன்.
 
கதிரேசர் உற்சாகத்துடன்..“மிச்சக் காசை நாங்கள் போடுவம்” என்றார்.
 
முத்தையாவும் தனது பங்குக்கு பலகாரம் செய்யும் வேலையை தானே முழுமையாகச் செய்வதாக ஏற்றுக்கொண்டார்.
 
பயித்தம்பணியாரமும் பனங்காய்க்காயும் பருத்தித்துறை வடையும் செய்வதாக முடிவெடுக்கப்பட்டது.
 
பரமசிவம் அளவற்ற மகிழ்ச்சியுடன் வீட்டை நோக்கி நடந்தார். தேவையான பயறு முழுவதையும் தானே தருவதாக வாக்களித்திருந்தார். இதற்காகவே தனக்கு பயறு அமோக விளைச்சல் கொடுத்ததாக அவர் கருதினார்.
 
அவர் திரும்பி வரும் போது வழியில் வேலம்மாளைக் கண்டார். அவளும் முத்தம்மாவும் தோட்டத்திற்குப் போயிருப்பார்கள் என்றே அவர் நினைத்திருந்தார்.
 
“என்ன.. நீ மிளகாய் பிடுங்கப் போகேல்லயோ?.. எனக் கேட்டார் அவர்.
 
“இல்லையையா.. இவருக்கு கடுமையா இழுக்குது. ஆஸ்பத்திரிக்கு கூட்டுக் கொண்டு போகப்போறன்.
 
“என்னத்தில கூட்டிக்கொண்டு போகப் போறாய்?”
 
“நடந்து தான்”
 
“ஏலாத மனுஷன் நடக்குமே! நான் சைக்கிளை குடுத்து சுந்தரத்தை அனுப்பிறன். அவனோட அனுப்பிவிடு” என்றுவிட்டு அவளின் பதிலை எதிர்பாராமலே நடக்கத் தொடங்கினார் பரமசிவம்.
 
(தொடரும்)
 
தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்
 

http://tamilleader.com/?p=3366

Edited by ஊர்பூராயம்

  • தொடங்கியவர்
நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 08
 
சுந்தரசிவம் பெருமாள் வீட்டுக்குப் போன போது ஆஸ்மா காரணமாகப் பெரும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அந்தச் சிறு குடிசைக்கு வெளியே நிற்கும் போதே மூச்சிழுக்கும் ஒலி சுந்தரத்தின் காதில் விழுந்தது.அவன் குடிசைக்குள் போன போது முத்தம்மா ஒரு போத்தலில் சுடுநீரை விட்டு அவரின் நெஞ்சில் ஒத்தடம் கொடுத்துக்கொண்டிருந்தாள்.
 
“எழும்புங்கோ, ஆஸ்பத்திரிக்குப் போவம்”, என்றவாறே கையைக் கொடுத்துத் தூக்கிவிட்டான் சுந்தரம். அவரால் நிமிர்ந்து நிற்கக் கூட முடியவில்லை. முத்தம்மா ஒருபுறமும் அவன் ஒரு புறமுமாகப் பிடித்து வெளியே கொண்டு வந்தனர்.
 
“எப்பிடித் தம்பி சைக்கிளிலை இருக்கிறது?” என இழைத்தவாறே கேட்டார் பெருமாள்.
 
“இது பெரிய கரியல்தானே.. நீங்கள் மெல்லமா ஏறி என்னை பிடிச்சுக் கொண்டு இருங்கோ நான் கொண்டுபோவன்”, என்றுவிட்டு சைக்கிளில் ஏறினான் அவன். பெரும் மரவெள்ளிக் கிழக்கு மூட்டையை ஏற்றி இழுக்கும் அவனுக்கு அவரைக் கொண்டு போவது அவ்வளவு சிரமமாகப்படவில்லை.
 
முத்தம்மாவும் வேலம்மாவும் மிகச் சிரமப்பட்டு அவரைக் கரியலில் ஏற்றிவிட்டனர்.
 
“கவனம்”, என்றுவிட்டு சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான் சுந்தரம். முன்பு மேடும் பள்ளமுமாகப் படுமோசமாக இருந்த வீதியை போராளிகள் கிரவல் போட்டுத் திருத்தியிருந்தனர். பாலம்பிட்டியிலிருந்து பண்டிவிரிச்சான் மருத்துவப்பிரிவு முகாம் வரை வீதி திருத்தப்பட்டிருந்தது.
 
பெருமாள் மூச்சை உன்னி இழுக்கும் போது சிறிது ஆட்டினாலும் சுந்தரம் சமாளித்து கவனமாக ஓடினான்.
 
அவர்கள் மடுவில் உள்ள செஞ்சிலுவைச் சங்க மருத்துவ நிலையத்தை அடைந்தபோது மருந்தாளராக ஒரு இளம் பெண் மட்டுமே நின்றாள்.
 
அங்கு மருத்துவர்  திங்களும் வெள்ளியும் மட்டுமே வருவார். மற்ற நாட்களில் சிறு வைத்திய உதவிகளை அவளே செய்வதுண்டு.
 
உடனடியாகவே அவள் ஒரு சிறுபம்மில் அஸ்தலின் குளிசைகளை போட்டு  இழுக்கக் கொடுத்தாள். சில நிமிடங்களில் இழுப்பு சற்று குறைந்தது.
 
அவள் அவனிடம், “அண்ணா! இது கொஞ்ச நேரம்தான் தாங்கும். இவரை நீங்கள் இலுப்பைக்கடவை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போறது தான் நல்லது. அங்க “கேஸ்” பிடிச்சு விடுவினம் என்றாள்.
 
அவன் தயக்கத்துடன், “இலுப்பைக்கடவை கொஞ்ச நஞ்ச தூரமே? அவ்வளவுக்கு இவர் சைக்கிளில இருந்து கொள்ள மாட்டார்”, என்றான்.
 
அவள் சில விநாடிகள் யோசித்துவிட்டு, “பரவாயில்லை, நீங்கள் பண்டிவிரிச்சான் மருத்துவப் பிரிவுக்குக் கொண்டு போங்கோ” என்றாள்.
 
“அவை, வெளி ஆக்களுக்கு…?” என்று இழுத்தான் அவன்.
 
“கடுமை எண்டால் கவனிப்பினம். நீங்கள் யோசியாமல் கொண்டுபோங்கோ!” என்றாள் அவள்.
 
அதற்கிடையில் முத்தம்மாவும் வீதியால் வந்த உழவுஇயந்திரம் ஒன்றில் வந்துவிட்டாள். சிவம் பெருமாளையும் உழவுஇயந்திரப் பெட்டியில் ஏற்றிவி்டடு, “நீங்கள் போய் மெடிக்ஸ் முன்னால இறங்குங்கோ” நான் பின்னால சைக்கிளில வாறன்”, என்றுவிட்டு சைக்கிளை எடுத்தான்.
 
அவர்களும் போய் இறங்க சுந்தரமும் வேகமாக மிதித்து அங்கு போய் சேர்ந்துவிட்டான்.
 
அவர்கள் உள்ளே போனதும், “என்னண்ணை?”, எனக் கேட்டு கொண்டு வந்த ஒரு போராளி பெருமாளைக் கண்டதும் நிலைமையை விளங்கிக் கொண்டு, “உதிலை இருங்கோ, அண்ணை வருவார்”, என்றுவிட்டு உள்ளே போனான்.
 
சில நிமிடங்களில் அங்கு வந்த மருத்துவப் போராளி பெருமாளை சோதித்துப் பார்த்துவிட்டு, உள்ளே அழைத்துப் போனான்.
 
மருத்துவ அறையில் ஒரு கதிரையில் இருத்திவிட்டு முகமூடியைப் போட்டு “காஸ்” கொடுக்க ஆரம்பித்தான்.
 
வெளியே இருந்த சுந்தரம் முத்தம்மாவிடம், “ஏன் இவர் பம் இழுக்கிறேல்லயே?” எனக் கேட்டான்.
 
“இழுக்கிறவர்! போனமுறை இலுப்பைக்கடவைக் கிளினிக்கில பம்முக்கு போடுற குளிசை முடிஞ்சுதெண்டு கடையில வேண்டச் சொல்லீட்டாங்கள்”,
 
“வேண்டியிருக்கலாமே…”
 
“எங்கை வேண்டுறது.. அது வேண்ட ஜெயபுரம் தான் போகவேணும்”
 
மருத்துவமனைகளுக்குப் போதிய மருந்துகளைக் கூட அனுமதிக்காத படையினரின் கீழ்த்தரமான செய்கைகளை நினைத்த போது அவனுக்கு ஆத்திரமாத்திரமாக வந்தது. எனினும் அவசர நேரங்களில் உதவும் போராளிகளை நினைத்த போது மனதில் ஒரு வித ஆறுதல் ஏற்பட்டது.
 
சிறிது நேரத்தில் அங்கு வந்த மருத்துவ போராளி, “அண்ணை ஐயாவுக்கு மத்தியானம் ஒருக்காலும் பின்னேரம் ஒருக்காலும் காஸ் பிடிக்கவேணும். அவர் அந்த வட்டக்கொட்டிலில படுத்து ஆறுதல் எடுக்கட்டும். நாங்கள் சாப்பாடு குடுக்கிறம்.. நீங்கள் போட்டுப் பின்னேரம் வந்து ஏத்துங்கோவன். போகேக்கை பம்மிலை போட்டு இழுக்கிற மருந்து தந்து விடுறன்”, என்றான்.
 
சுந்தரம் முத்தம்மாவை பார்த்தான். அவள், “போட்டுப் பிறகு வருவம்”, என்றாள்.
 
வெளியே வந்த சுந்தரம் சைக்கிளில் ஏறி அமர்ந்தவாறே, “ம்.. ஏறு” என்றான்.
 
“நீங்கள் போங்கோ.. நான் மெல்ல மெல்ல நடந்து வாறன்” என்றாள் முத்தம்மா மெல்லிய தயக்கத்துடன். அவளின் கண்களில் ஒருவித மிரட்சி இருந்தது.
 
“ஏய்.. இப்பிடி இரண்டு பேரும் ஒண்டாய்ப் போற சந்தர்ப்பம் எங்களுக்கு கிடையாது. வா.. ஏறு?”, எனத் தாழ்ந்த குரலில் அதட்டினான்.
 
“அப்பிடி சந்தர்ப்பம் எனக்குத் தேவையில்லை”
 
அவன் அவளின் முகத்தைத் திரும்பிப் பார்த்துவிட்டு, “உண்மையா வேண்டாமோ?”
 
அவள் எதுவும் பேசாமல் தலையைக் குனிந்து கொண்டாள்.
 
அவன் மீண்டும் கேட்டான், “சொல்லன். உனக்கு என்னில விருப்பம் இல்லையே?”
 
அவள் தயக்கத்துடன், “விருப்பமில்லையெண்டில்லை… ஆனால்…”
 
“ஆனால்.. என்ன சொல்லு?”
 
“நிறைவேற முடியாத ஆசைகளை வளர்க்கக் கூடாது எண்டு தான் நினைக்கிறன்”
 
“நீங்கள் மலையகம்… நாங்கள் மன்னார்.. அதால தானே சொல்லுறாய்?”
 
அவள் பயந்த விழிகளுடன் அவனையே பார்த்தாள்.
 
அவன்.. “நாங்கள் எல்லாரும் தமிழர் தான்.. ஏறு இப்ப,” என்றான்.
 
அவனின் கட்டளையை அவளால் மீற முடியவில்லை.
 
சைக்கிள் ஓட ஆரம்பித்தது.
 
அவள் அவனில் முட்டாதவாறு சற்று விலகி கரியலின் பின்புறமாகவே அமர்ந்திருந்தாள்.
 
அவர்கள் இருவருமே எதுவும் பேசவில்லை. ஆனால் அவனோ சைக்கிளின் ஹான்டிலை பிடித்தபடி வான வீதியில் பறந்துகொண்டிருந்தான்.
 
இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கிய போதும் கூட சங்கரசிவம் அதிகாலையிலேயே விழித்துவிட்டான். காலைப் பயிற்சிகளை முடித்துவிட்டு சாப்பிட இருந்த போதும் ஏனோ சாப்பாடு இறங்க மறுத்தது. செயற்கைச் சுவாசத்துடன் கண்களை மூடிப் படுத்திருந்த கணேசின் உருவமே கண்களில் வந்து நின்றது.
 
அவன் கையைக் கழுவி விட்டு தளபதியிடம் போன போது அவர்,
 
“என்ன சிவம், நீங்கள் இன்னும் கணேசிட்ட போகேல்லயே?” எனக் கேட்டார்.
 
“இல்லையண்ணை.. இனித்தான் போகப் போறன். உங்களிட்ட சொல்லிப் போட்டுப் போகத்தான் வந்தனான்”.
 
“காலமை இரண்டு போராளியளை அனுப்பினனான். மயக்கம் வாறதும் தெளியிறதுமாய் இருக்குதாம். எதுக்கும் நீங்கள் போட்டு வாங்கோ”, என்றார் அவர்.
 
“சரியண்ணை”, என்றுவிட்டு வெளியே வந்தான் சிவம்.
 
மயக்கம் வருவதும் தெளிவதுமாக இருக்கிறது என்பதைக் கேள்விப்பட்ட போது மரணத்தைக் கூட அவன் வெற்றி கொள்ளப் போராடிக்கொண்டிருக்கிறான் என்றே சிவத்துக்கு தோன்றியது.
 
அவன் மரணத்தை வெற்றி கொள்வான் எனச் சிவம் திடமாக நம்பினான்.
 
அவன் புறப்படச் சைக்கிளை எடுத்த போது ஓடி வந்த புனிதன், “அண்ணை..உங்களை மெடிக்சுக்கு உடன வரட்டாம்”, என்றான்.
 
சிவம் திடுக்கிட்டு, “ஏன்.. ஏனாம்?” எனக் கேட்டான்.
 
“ஏனெண்டு தெரியேல்ல.. ரூபாக்கா தான் கதைச்சவா”,
 
“ம்… ரூபா வந்திட்டாளே.. சரி நான் போட்டுவாறன்” என்றுவிட்டுப் புறப்பட்டான் சிவம்.
 
(தொடரும்)
 
தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்
 


 

Edited by ஊர்பூராயம்

  • தொடங்கியவர்
நீந்திக்கடந்த நெருப்பாறு -09
 
சிவம் மருத்துவப் பிரிவு முகாமைச் சென்றடைந்தபோது அதன் பொறுப்பாளரான மருத்துவப் போராளி நிமலன் வாசலில் நின்றிருந்தான்.
 
“என்ன நிமலன் – கணேஸ் பாடு எப்பிடியிருக்குது?; எனக் கேட்டான் சிவம். எந்த நெருக்கடி நேரத்திலும் நிமலன் சிரித்த முகத்துடனேயே பணியாற்றுவான்.
 
அன்று அவனின் முகம் சற்று வாட்டமடைந்திருப்பதைச் சிவம் அவதானிக்கத் தவறவில்லை.
 
நிமலன் நேரடியாக எந்தப் பதிலையும் கூறாமல்; ரூபாக்கா வந்திட்டா. அவ தான் அங்க பக்கத்தில நிக்கிறா” என்றான். சிவம் கணேஸ் படுத்திருக்கும் அறையை நோக்கிப் போனான். கணேசுக்கு இன்னும் செயற்கைச் சுவாசம் ஏற்றப்பட்டுக்கொண்டேயிருந்தது.
 
எனினும் அப்போது அவன் விழிப்பு நிலையிலேயெ இருந்தான்.
 
ரூபா அவனைக் கண்டதும், “வாங்கோ.. இப்ப தான் கன நேரத்துக்குப் பிறகு முழிச்சவர்”, என்றாள்.
 
அந்த நிலையிலும் கணேசின் முகத்தில் ஒரு புன்னகை படர்ந்தது. சிவம் மெல்ல அவனின் தலையை வருடிவிட்டான். அந்த வருடலில் ஏதோ ஒரு வித சுகம் இருந்திருக்க வேண்டும். கணேஸ் கண்களை மெல்ல மூடிவிட்டு மறுபடியும் திறந்தான்.
 
மூச்சை அவன் சற்றுப் பலமாக இழுத்ததால் நெஞ்சு ஒரு முறை தாழ்ந்து பிறகு மேலெழுந்தது. அதை அவதானித்த சிவம் ஒரு கையை அவனின் நெஞ்சில் வைத்து தடவினான். கணேஸ் சிரமப்பட்டு தனது வலது கையைத் தூக்கி நெஞ்சில் கிடந்த சிவத்தின் கையை மெல்ல பிடித்துக் கொண்டான். பின்பு தனது இடது கையை ரூபாவை நோக்கி உயர்த்த ரூபா அந்தக் கையை பற்றிக் கொண்டாள். அவன் இருவரின் கைகளையும் இறுகப் பற்றிக் கொண்டு கண்களை மூட அவனின் கண்களில் நீர் வடிந்தது.
 
சிவம் மெல்லக் கையை எடுக்க முயன்ற போது கணேசின் பிடி இறுகவே அவன் அந்த முயற்சியைக் கைவிட்டான். ரூபாவுக்கும் அதே நிலை ஏற்பட்டிருக்கவேண்டும். அவள் ஒதுவித மிரட்சியுடன் சிவத்தை நோக்கிவிட்டு கணேசின் முகத்தைப் பார்த்தாள்.
 
இப்போ கணேசின் கண்கள் திறந்தன. அவனின் முகத்தில் ஒருவித புன்னகை இழையோடியது.
 
கணேசின் செய்கைகளின் அர்த்தத்தை இருவருமே புரிந்துகொண்ட போதிலும் அவர்கள் உடனடியாக மறுப்புக் கூறி அந்த நிலையில் அவனின் மனதை நோகடிக்க விரும்பவில்லை.
 
கணேசின் பிடி சற்று தளரவே இருவரும் தங்கள் கைகளை விடுவித்துக் கொண்டனர்.
 
அங்கு வந்த நிமலன், “அண்ணை! அவர் கொஞ்சம் ஓய்வு எடுக்க வேணும்”, என்றான்.
 
இருவரும் கணேசைப் பார்த்தனர். அவன் விழிகளில் மலர்ந்த ஒரு புன்னகையால் விடை கொடுத்தான்.
 
இருவரும் வெளியே வந்த பின்பு, ரூபா..“சிவம்…”, என அழைத்தாள்.
 
சிவம் நின்று திரும்பி அவளைப் பார்த்தான்.
 
“கணேஸ்.. என்ன சொன்னவர் எண்டு விளங்கினதே?”
 
கணேஸ் சில விநாடிகள் அமைதியின் பின், “ஓ.. நல்லாய் விளங்கினது.. அதை என்னட்ட நேரிலையும் கேட்டிருக்கிறான். ஆனால்..”
 
“ஆனால்…?”
 
“நான் அதை ஏற்றுக்கொள்ளேல்ல”!
 
ரூபா “ஓமோம் நானும் ஏற்கேல்ல. அதைப் பற்றி யோசிக்கவே போறதில்லை. அப்பிடியான தேவையும் வராது” என்றாள்.
 
“நிச்சயமாய்.. அவனுக்கு எந்த ஆபத்துமே வராது”, என்றான் சிவம். அவனின் குரலில் அசைக்க முடியாத உறுதி தொனித்தது.
 
முன்னால் நின்ற பாலை மரத்தில் இரு குருவிகள் அருகருகேயிருந்து தங்கள் மொழிகளில் பேசிக் கொண்டிருப்பது ரூபாவின் கண்களில் பட்டது.
 
அவள் ஒரு பெருமூச்சுடன்..“போராளிகளான எங்களுக்கு எப்பவும் சாவு வரலாம் எண்டு தெரிஞ்சு தான் காதலிக்கிறம் எண்டாலும் கூட..”
எனக் கூறிவிட்டு இடைநிறுத்தினாள்.
 
“ஏன்.. இப்ப நீங்கள் சாவைக் கண்டு பயப்பிடுறியளே?”
 
“இல்லை.. இல்லை.. எனக்குச் சாவு வந்தால் அதைப் பெருமையோட ஏற்றுக்கொள்ளுவன். ஆனால் நான் காதலிக்கிறவருக்கும் சாவு வருமெண்டால்….”, முடிக்கப்படாத அவளின் வார்த்தைகளில் ஒரு ஏக்கம் விரவிக்கிடந்தது.
 
சிவம் ஒரு பெருமூச்சுடன் சொன்னாள், “அவனுக்கு ஏதாவது விபரீதமாய் நடந்தால் என்னாலேயே தாங்க முடியாது.. அப்பிடியிருக்க உங்கடை நிலைமை எப்பிடி இருக்கும் எண்டு என்னால புரிஞ்சுகொள்ள முடியுது”
 
“இல்லை. அவர் ஒரு வீரன்.. மரணம் அவரை வெற்றி கொள்ள முடியாது” என்றாள் ரூபா அழுத்தமான குரலில்.
 
“ஓமோம்.. அவன்ரை மன உறுதி அசைக்கப்பட முடியாதது”, என்றான் கணேஸ்.
 
அவர்கள் கதைத்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில் திடீரென மருத்துவப்பிரிவு முகாம் பரபரப்படைந்தது. சில போராளிகள் அங்குமிங்கும் ஓடி ஏதோ அவசர பணிகளில் ஈடபடத் தொடங்கினர்.
 
அம்புலன்ஸ் வண்டியொன்று அவசரமாக புறப்பட்டு வேகமாக வெளியே சென்றது.
 
அப்போது அங்கு வந்த நிமலனிடம், “என்ன நிமலன் ஏதும் பிரச்சினையே?”, எனக் கேட்டான்.
 
“ஓமண்ணை.. கிளைமோர் வைச்சிட்டாங்களாம்.. மோட்டர் சைக்கிளில வந்த ஒரு ரீச்சரும் புருஷனும் அகப்பட்டிட்டினமாம்”
 
“எங்கை எங்கை நடந்தது?” எனத் தவிப்புடன் கேட்டான் சிவம்.
 
“பரப்புக்கடந்தான் றோட்டிலையாம்”
 
சிங்கள இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணி மடு – பரப்புக்கடந்தான் வீதியில் கிளைமோர் வைத்ததென்றால் தங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பலவீனப்பட்டிருப்பதாகவே சிவத்துக்குத் தோன்றியது. அது அவனுள் ஒருவித கோபத்தையும் ஏற்படுத்தியது.
 
“அவளவு தூரம் அவங்கள் வரும் வரைக்கும் எங்கட முறியடிப்பு ரீம் என்ன செய்ததாம்?”
 
“அண்ணை.. இந்த மடுக்காடு அவங்களுக்கு நல்ல வசதி தானே.. வில்பத்து வரையும் நீளுது. எங்கடை போராளியளின்ரை கண்ணில மண்ணைத் தூவிப்போட்டு வாறது அவனுக்கு அவ்வளவு கஷ்டமில்லை; என்றான் நிமலன் சற்று அமைதியாக.
 
சிவமும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
 
“எங்களோட நிண்டிட்டு  துரோகியளாய் மாறின கொஞ்சப் பேரும் இப்ப அவங்களோட நிக்கிறாங்கள்.. அவங்கள் வடிவாய் பாதை காட்டுவாங்கள் தானே?”
 
“அந்தத் துரோகியள் மட்டும் என்ரை கையில அகப்பட்டால்..”என்றுவிட்டு பல்லை நெருமினான் நிமலன்.
 
“சரி.. சரி.. ஆக்கள் பாடு என்னமாதிரி?”
 
“கிளைமோர் எண்டால் தெரியும் தானே.. இப்ப விபரம் தெரியேல்ல.. மெடிக்கல் ரீமை அனுப்பீட்டன். இனி வந்திடும்”, என்றான் நிமலன்.
 
“சரி சரி.. நான் பேசுக்குப் போறன்”
 
“ஓம்.. சிவம். நீங்கள் போங்கோ.. நான் இஞ்சை தான் நிப்பன்.” என்றாள் ரூபா.
 
“கணேஸ் தேடுவான்.. பக்கத்திலேயே நில்லுங்கோ..” என்றுவிட்டு ரூபாவிடம் விடைபெற்றான் சிவம்.
 
சிவம் தங்கள் முகாமைச் சென்றடைந்ததும் முழு விபரங்களையும் அறிய முடிந்தது. ஆசிரியையும், அவரின் கணவரும் மோட்டார் சைக்கிளில் அடம்பனில் இருந்து மடு நோக்கி வந்ததாகவும், பரப்புக் கடந்தானுக்கும் மடுவுக்கும் இடையிலான அடர்ந்த காட்டுப் பகுதி வீதியில் கிளைமோர் தாக்குதலில் அகப்பட்டதாகவும் தெரிந்து கொண்டான். ஆசிரியை சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். அவரின் கணவர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டுவரப்படும் போது மரணமடைந்துவிட்டார்.
 
நேராக தளபதியிடம் சென்ற அவன், அவர் வோக்கியில் யாருடனோ கதைப்பதைக் கண்டு வெளியே நின்று கொண்டான்.
 
சிறிது நேரத்தில் அவர், “சிவம், உள்ளை வாங்கோ” என அழைத்தார்.
சிவம், “என்னண்ணை சனத்தைக் கொல்லுறாங்கள்”, என்றான். அவன் வார்த்தைகளில் ஒருவித ஆவேசம் இளையோடியது.
 
“ம்.. எங்கட வாகனங்களுக்கு வைச்சாங்கள். புதூருக்கை வைச்சு இரண்டு பேரை அமத்தினதோட ஓய்ஞ்சு கிடந்துது, இப்ப பிறகு சனத்திலை துவங்கீட்டாங்கள்”, என்றார் தளபதி.
 
“நாங்கள் ஏதாவது அடுத்த ஏற்பாடு செய்யத்தானே வேணும்..”
 
“பின்னை.. இவங்கள் எங்கடை சனத்தை அழிக்க விடலாமே?”
 
“அப்ப.. என்ன செய்வம்?”
 
“பிளான் ஒண்டு போட்டிருக்கிறன். இரவைக்கு அண்ணையோட கதைச்சு அனுமதி எடுத்துப் போட்டு நடத்திவிட வேண்டியதுதான்”
 
அவரின் வார்த்தைகள் தனக்கொரு பெரிய வேட்டைக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையை சிவத்துக்கு ஏற்படுத்தின.
 
(தொடரும்)
 
தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்
  • கருத்துக்கள உறவுகள்

ஊர்பூராயம் கதையை தொடர்ந்து படிக்கிறோம். ஆனால் கருத்துத்தான் எழுதேல்ல.  தொடர்ந்து இணையுங்கோ.

  • தொடங்கியவர்

நன்றி. படித்தீர்கள் என்றால்போதும் கருத்து எழுதவேண்டும் என்ற அவசியமில்லையக்கா.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்

நிச்சயம் எல்லோரும் படிப்போம்

படிக்க வேண்டும்

உங்கள் நேரத்திற்கு நன்றிகள்

  • தொடங்கியவர்
நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 10
 
ஆசிரியையும் அவரின் கணவரும் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தி பாலம்பிட்டி, மடு, பண்டிவிரிச்சான் என எல்லாக் கிராமங்களிலும் பரவிவிட்டது. எங்கும் ஒரு அச்சம் கலந்த பரபரப்பே நிலவியது.அன்று பரமசிவம் நேரத்துக்கே மாடுகளை சாய்த்துக்கொண்டு வந்து பட்டியில் அடைத்துவிட்டு முற்றத்துக்கு வந்தபோது சுந்தரசிவம் அங்கு காணப்படாததால் அவன் எங்கு போயிருப்பான் என்ற கேள்வி அவருக்கு எழுந்தது.
 
“இஞ்சரப்பா, உவன் தம்பி எங்கை போட்டான்?” எனப் பலமாகக் கேட்டார்.
 
அடுக்களைக்குள்ளிருந்த பார்வதி, “காலமை பெருமாளைக் கொண்டு போய் பண்டிவிரிச்சானிலை விட்டவனல்லே; ஏத்திவரப் போட்டான்”, என்றாள்.
 
“சரி, சரி.. பொடியளோட சேர்ந்து அவனை கண்டபடி திரியவேண்டாமெண்டு சொல்லு.. மோட்டச்சைக்கிளுக்கே குண்டுவைக்கிறாங்கள்… நம்பேலாது.. இனி சைக்கிளுக்கும் வைப்பங்கள்” என்றார்.
 
“பாழ்படுவார்.. வாத்தியார் பெட்டையும் புருஷனும் அவங்கள என்ன கேட்டதுகளாம்? கொண்டுவாற குண்டு வெடிச்சுத்தான் உவங்கள் துலைவாங்கள்” என வாய் நிறையச் சாபம் போட்டாள் பார்வதி.
 
“ம்.. நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன.. இரவு ரேடியோவில இரண்டு பெரிய புலியளைக் கொண்டுபோட்டம் எண்டு செய்தி சொல்லுவங்கள்”
 
“அவங்கட பொய்யளைக் கேக்கத்தானே அநியாய விலைக்கு பற்றி வேண்டி காலமையும் பின்னேரமும் காதுக்கை வைக்கிறியள்”, எனச் சீறினாள் பார்வதி.
 
“அவங்கட பொய்யிலயிருந்து உண்மையைக் கண்டுபிடிக்கிறது தான் என்ர கெட்டித்தனம்”
 
“ஓ.. ஓ.. உண்மையைக் கண்டுபிடிச்சுத்தான் அவங்களைக் கலைக்கப் போறியள்?”
 
“கலைக்கிறமோ இல்லையோ எண்டு இருந்து பார்”, எனச் சவால் விட்டு கடையை நோக்கிப் புறப்பட்டார் பரமசிவம்.
 
முத்தையா கடையிலும் எல்லோர் வாயிலும் கிளைமோர் பற்றிய கதையே பிரதான இடத்தைப் பிடித்திருந்தது.
 
காடேறி முருகர், “நான் உந்தக் காடு கரம்பையெல்லாம் வேட்டைக்குத் திரியிறன் – என்ரை கண்ணிலை ஒரு நாளும் படுறாங்களில்லையே?”, எனச் சலித்துக் கொண்டார்.
 
“கண்ணில பட்டால் அதை இஞ்சை வந்து சொல்ல அவங்கள் உன்ன உயிரோடை விட்டால் தானே?”, எனக் கிண்டலடித்தார் முத்தையா,
 
“டேய், நான் வேட்டைக்குப் போகேக்கை வெறுங்கையோடையே போறனான். அவங்களிலை இரண்டு பேரை விழுத்த மாட்டனே? என்றார் முருகர்.
 
முருகரின் வெடிவைக்கும் திறமையைக் கண்டு ஏனைய பல வேட்டைக்காரர்களே அதிசயப்பட்டதுண்டு. எவ்வளவு வேகமாக ஓடக்கூடிய மிருகமும் அவரின் தோட்டாவுக்குத் தப்பிவிட முடியாது. நெல்லுக்குள் புகுந்த பன்றியை நெல்லு அசையும் ஒலியைக் கேட்டே குறி தவறாமல் வெடிவைத்து விடுவார். வில்பத்திலிருந்து மணலாறு வரையும் எந்த இடத்தில் என்ன மரம் உண்டு என்பதையோ எங்கு எந்த மிருகங்கள் கூடுதலாக உலவும் என்பதையோ துல்லியமாகச் சொல்லிவிடுவார். காற்றில் வரும் மணத்தை வைத்தே அண்மையில் நிற்கும் மிருகம் எதுவென்று கண்டுபிடித்து விடுவார். அவர் சாதாரண நாட்டுத்துவக்கிலேயே கண்ணிமைக்கும் நேரத்தில் தோட்டா மாற்றி குறி தவறாமல் வெடிவைத்து விடுவார். அதனால் தானோ என்னவோ அவருக்குப் பெயருக்கு முன்னால் காடேறியைச் சேர்த்துவிட்டனர்.
 
“நீ செய்வாய் எண்டு தெரியும்… எண்டாலும் காடு வழிய திரியிறது அவதானமா திரி” என அக்கறையுடன் எச்சரித்தார் பரமசிவம்.
 
“அவங்கள் என்னைக் காணமுந்தி மணத்திலை நான் அவங்கள் திரியிற இடத்த அறிஞ்சிடுவன். பிறகென்ன மரம் பத்தையெல்லாம் சுடும்”, என்றுவிட்டுக் கடகடவெனச் சிரித்தார் முருகர்.
 
“எல்லா நேரமும் உனக்குக் காத்துவளம் பாத்தே அவங்கள் வருவங்கள்?”
 
“அது சரி தானே.. ஆட் காட்டி சொல்லித்தரும்.. குரங்கு பாயுறதை வைச்சே ஆக்கள் வாறதை அறிஞ்சிடலாம்”,
 
ஒரு மனிதனின் அனுபவமும் தான், செய்யும் தொழிலில் காட்டும் அக்கறையும் எப்படி அவனை அந்தத் துறையில் மிகப் பெரிய அறிவாளியாக்கிவிடுகிறது என நினைத்து வியந்தார் பரமசிவம்.
 
“உந்த மடுக்காடு எப்பவும் பயம் தான். எவ்வளவு தூரத்தையெண்டு பெடியளும் பாக்கிறது?” எனக் கூறி ஒரு பெருமூச்சு விட்டார் முத்தையா.
 
“ஓமோம்.. வேட்டைக்குப் போற நாங்களும் உந்த விஷயத்தில கொஞ்சம் கவனமெடுக்கத்தான் வேணும் என்றார் முருகர்.
 
சுந்தரசிவம் பெருமாளைக் கொண்டுவந்து இறக்கிய போது முத்தம்மா வெளியே வந்து வீதியைப் பார்த்துக்கொண்டு நின்றாள். அவள் பெருமாளின் வருகையை எதிர்பார்த்து வீதிக்கு வந்தபோதும் சுந்தரத்தைக் காணாது அவளின் மனம் துடித்ததை அவளால் உணர முடிந்தது.
 
 பெருமாள் எவரும் பிடிக்காமலே தானாகவே சைக்கிளில் இருந்து இறங்கினார். இப்போ அவர் இயல்பு நிலைக்கு வந்துவிட்டார்.
 
மருத்துவப் பிரிவு முகாமில அவருக்கு சிகிச்சையளித்ததுடன் பம்மில் போட்டு சுவாசத்தின் போது பயன்படுத்தும் குளிசை அட்டைகளும் கொடுத்துவிட்டிருந்தனர்.
 
பெருமாள், “தேத்தண்ணி குடிச்சிட்டுப் போங்கோ தம்பி”, எனச் சுந்தரத்தை அழைத்தார்.
 
“இப்ப வேண்டாம்”, என்றார் சிவம்.
 
“அவர் எங்கட வெறுந்தேத்தண்ணி குடியாரப்பா”, என்றாள் முத்தம்மா கேலி கலந்த குரலில்.
 
“உன்ரை கையால தந்தால் வெறுந்தண்ணியும் பாலைவிட நல்லாயிருக்கும்”, எனச் சொல்ல நினைத்தவன் அதை அடக்கிக் கொண்டு, “ம்.. நக்கல்… என்ன?” எனக் கேட்டான்.
 
“பின்னை.. சைக்கிளோடி களைச்சுப் போய் வாறியள் எண்டு தேத்தண்ணி குடிக்கச் சொன்னால்…”
 
“களைப்பு இல்லை.. எண்டாலும் நீ கேக்கிறதால குடிப்பம்..” என்றுவிட்டு அவன் சைக்கிளை ஸ்ராண்டில்  விட்டான்.
 
அவனின் முகத்தை நோக்கி ஒரு புன்னகையைத் தவழ விட்டு குசினியை நோக்கிப் போனாள் முத்தம்மா.
 
முத்தமா, தாய், தகப்பன், இளைய சகோதரங்கள் எல்லோரும் எப்பிடி அந்த சிறிய குடிசையில் தங்குகிறார்கள் என எண்ணி வியப்படைந்தான் சுந்தரம்.
 
முத்தம்மாவின் தம்பி ஒரு மாங்காயைக் கடித்து தின்று கொண்டு அங்கு வந்தான். சுந்தரத்திடம் அவன்,
 
“தமிழ்த் தினப் போட்டிக்கு ரீச்சர் நாடகம் பழக்கினவா, நானும் நடிக்கிறன்” என்றான் அவன்.
 
அவன் படிப்பிலும் நல்ல கெட்டிக்காறன் என முத்தம்மா அடிக்கடி சொல்வதுண்டு.
 
கொஞ்சம் வயது வந்ததும் படிப்பை நிறுத்திவிட்டுக் கூலி வேலைக்குப் போவது தான் அவர்கள் வழக்கம். ஆனால் முத்தம்மா எப்படியாவது அவனை நன்றாகப் படிப்பிக்க வைக்கப் போவதாக அடிக்கடி சொல்லிக் கொள்வாள்.
 
முத்தம்மா தேனீர் கொண்டுவந்து நீட்டினாள்.
 
“எப்பிடி நல்லாய் படிக்கிறானே?”
 
“ஓ.. இந்த முறை இரண்டாம் பிள்ளை”, எனப் பெருமிதத்துடன் சொன்னாள் முத்தமா, அவள் கதவு நிலையைப் பிடித்துக் கொண்டு அவன் தேனீர் அருந்துவதை விழிகளால் விழுங்கினாள். மனம் இனம் புரியாத மகிழ்வில் குதித்தது.
 
சிவம் அதிகாலை நான்கு மணிக்கே தூக்கம் கலைந்து எழுந்துவிட்டான். அவசர அவசரமாக காலைப் பயிற்சிகளை முடித்துவிட்டு தளபதியின் இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவனின் மனம் ஒரு புறம் விடைகாண முடியாத குழப்பத்திலும் மறுபுறம் அடக்க முடியாத ஆவலிலும் தத்தளித்துக்கொண்டிருந்தது. கணேசுக்கு என்ன ஆகுமோ என்ற தவிப்பு எழுந்து அவனைக் குழப்பியது. தற்செயலாக அவன் வீரச்சாவடைந்தால் என்பதை நினைத்த போது அதை அவனால் தாங்கவே முடியில்லை. அதே வேளையில் ஆழ ஊடுருவும் படையணியினரின் நடவடிக்கைகளை நிறுத்தத் தளபதி என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்பதை அறியும் ஆவலும் அவனைப் பாடாய் படுத்திக்கொண்டிருந்தது.
 
அவன் தளபதியின் இடத்தை அடைந்த  போது அவர் தோப்புக்கரணம் போட்டுக்கொண்டிருந்தார். ஒரு போராளி அருகில் நின்று எண்ணிக்கொண்டிருந்தான்.
 
சிவம் ஒன்றும் புரியாதவனாக அப்படியே நின்றுவிட்டான்.
 
ஐநூறு எண்ணி முடிந்ததும் தளபதி தோப்புக்கரணத்தை நிறுத்தினார். சிவம் அருகில் போனான்.
 
“என்னடாப்பா.. பாக்கிறாய்.. பணிஸ்மென்ற செய்தனான்”,
 
என்றார் தளபதி புன்னகையுடன்.
 
“ஏனண்ணை?” என வியப்புடன் கேட்டான் சிவம்.
 
“ஆழ ஊடுருவும் படையணி பற்றி என்ரை திட்டத்தை அண்ணைக்குச் சொன்னன். அவ்வளவு தான், இரவு தண்ணி கூடக் குடியாமல் படுத்திட்டு, காலமை எழும்பி ஐநூறு தோப்படிச்சுப் போட்டு தன்னோட தொடர்பு எடுக்கச் சொன்னார்”, என்றார் தளபதி.
 
சிவத்துக்கு ஒன்றுமே புரியவில்லை. அவன் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான்.
 
(தொடரும்)
 
தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்
  • தொடங்கியவர்
நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 11
 
ஒரு புதிய தாக்குதல் திட்டத்தைச் சொல்லி தலைவரிடம் அனுமதி கேட்டபோது அதற்குப் பதிலாக ஐநூறு தோப்புக்கரணம் தண்டனையாக வழங்கப்பட்டதென்றால் அது நிச்சயமாக ஒரு படுபிழையான திட்டமாகவே இருக்கவேண்டும் என சிவம் ஊகித்துக் கொண்டான்.அந்த அதிகாலை வேளையிலும் கூட உடல் முழுவதும் வழிந்தோடிய வியர்வையை ஒரு துணியால் துடைத்தவாறே, “சிவம்” இருங்கோ நான் அண்ணைக்கு அறிவிச்சுப்போட்டு வாறன்” என்றுவிட்டு உள்ளே போனார் தளபதி.
 
தலைவரிடம் தண்டனை பெறுமளவுக்கு அப்படி என்ன மோசமான திட்டமாயிருக்கும் எனத் தனக்குள்ளேயே கேள்வியை எழுப்பியவாறு காத்திருந்தான் சிவம்.
 
சிறிது நேரத்தில் வெளியே வந்த தளபதி, “இண்டைக்கு இரண்டு மணிக்கு முக்கியமான ஒராள் வாறாராம். அணிப் பொறுப்பாளர்கள் எல்லாரையும் கூப்பிட்டு வைக்கட்டாம் எண்டு அண்ணேன்ர செயலாளரின்ர இடத்தில இருந்து செய்தி வந்திருக்குது”, என்றுவிட்டு மற்றக் கதிரையில் அமர்ந்தார்.
 
அப்படியெல்லாம் கூட்டம் கூட்டி விளக்கமளிக்குமளவுக்கு தளபதி சொன்ன திட்டம் என்னவாக இருக்கும் என்பதை அறிய ஆவல் உந்தித் தள்ளிய போதும் சிவம் அவரிடம் அது பற்றி எதுவும் கேட்கவில்லை.
 
அவர் தானாகவே மெல்ல ஆரம்பித்தார். “செட்டிகுளத்துக்கு அங்காலை ஒரு சிங்களவர் குடியிருக்கிற கிராமம் இருக்கல்லே?”
 
அந்தக் கிராமத்தில் வீதியின் ஒரு புறம் தமிழரும் மறுபுறம் குடியேற்றப்பட்ட சிங்களவரும் இருந்ததையும், பின்பு தமிழர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டதையும் சிவம் அறிந்திருந்தான்.
 
தளபதி தொடர்ந்தார், “இந்த ஆழ ஊடுருவும் இராணுவப் படையணி எங்கடை சனத்தைக் கொல்லுற மாதிரி எங்கடை ஒரு அணியையும் அதுக்கை இறங்கிச் சிங்களச் சனத்தை சுட்டுத்தள்ளினால் நல்ல பாடமாய் இருக்கும் எண்டு யோசிச்சு அண்ணையைக் கேட்டன். தங்கடை சனத்தை நாங்கள் அழிச்சால் பயத்திலை எங்கடை சனத்திலை கை வைக்கிறதை விட்டிடுவங்கள் எண்டு நினைச்சன்”
 
“அண்ணை என்ன சொன்னவர்?”
 
“பெரிசா ஒண்டும் சொல்லே்ல.. ஐநூறு தோப்பு போடச் சொன்னவர்”, என்றுவிட்டுச் சிரித்தார் தளபதி.
 
“நாங்களும் சாதாரண சனத்திலை கை வைச்சால் அவங்களுக்கும் எங்களுக்கும் பிறகு என்ன வித்தியாசம்?”
 
“ஓமோம்.. இப்ப தான் நானும் அதை யோசிக்கிறன். சரி நீங்கள் போய் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுங்கோ”, என்றுவிட்டு எழுந்தார் தளபதி.
 
சரியாக இரண்டு மணிக்கு அரசியல்துறைப் பொறுப்பாளர் வந்திறங்கியபோது முக்கிய போராளிகள் அனைவரும் பாலைமர நிழலில் கூடியிருந்தனர்.
 
அவர் சில நிமிடங்கள் தளபதியிடம் ஏதோ கதைத்துவிட்டு மாவீரர் வணக்கத்துடன் கூட்டத்தை ஆரம்பித்தார்.
 
முதலில் முள்ளிக்குளம்  முகாம் தாக்குதல் சாதனைகள் தொடர்பாக தலைவர் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக கூறும்படி சொல்லிவிட்டதை தெரிவித்தார். அத்துடன் தான் தலைவரின் சார்பில் முக்கியமான விளக்கம் ஒன்றைத் தரப்போவதாகச் சொல்லி அவர் உரையைத் தொடர்ந்தார்.
 
“தளபதிகளிலிருந்து சாதாரண போராளிகள் வரை மக்களுக்கும் எதிரிகளுக்குமிடையிலான வித்தியாசம் பற்றி தெளிவாக இருக்க வேண்டும். தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் எந்த மக்களும் எங்கள் எதிரிகளல்ல. எங்களுடைய எதிரிகள் இனவாத அரசியல் அதிகார பீடங்களும் ஆயுதப் படைகளும் தான்.
 
நாங்கள் இனவாதிகள் அல்ல. இனவாதிகள் தான் இன்னொரு இனத்தையே வெறுப்பவர்கள். நாங்கள் விடுதலைப் போராளிகள். நாங்கள் ஒடுக்குமுறையிலிருந்து விடுபடவே போராடுகிறோம். அதே ஒடுக்குமுறையாளர்கள் சிங்கள மக்களையும் பொருளாதார வழிகள் மூலம் ஒடுக்குகிறார்கள். சிங்கள மக்கள் அதை உணரும் போது எங்கள் போராட்டத்தின் நியாயங்களையும் புரிந்துகொள்வார்கள்.
 
சிங்களப் படையினர் எமது மக்களை அழிக்கிறார்கள் என்பதற்காக நாம் சிங்கள மக்களை அழித்தால் நாம் விடுதலைப் போராளிகள் என்ற நிலையிலிருந்து இறங்கி இனவாதிகளாக நிலை தாழ்ந்து விடுவோம்.
 
அதனால் தான் உங்கள் தளபதி ஒரு சிங்கள கிராமத்தின் மீது தாக்குதல் தொடுக்க தலைவரிடம் அனுமதி கேட்ட போது அதை நிராகரித்ததுடன் அவருக்குத் தண்டனையும் வழங்கப்பட்டது.
 
ஆழ ஊடுருவும் படையணி மக்கள் மீது நடத்தும் தாக்குதல்களை நிறுத்த நாங்கள் பாதுகாப்பைப் பலப்படுத்துவதுடன், மக்களின் ஒத்துழைப்பையும் பெறவேண்டும்”
 
அவர் பேசி முடித்து அமர்ந்ததும் ஒரு அமைதி நிலவியது. அவர் சில வசனங்கள் மூலமாகவே பல விஷயங்களைத் தெளிவுபடுத்தி விட்டதாக சிவம் உணர்ந்து கொண்டான்.
 
ரணகோஷ நடவடிக்கையின் போது இடம்பெயர்ந்து மடுக் கோவிலில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீது இராணுவம் எறிகணை வீசியதில் பல மக்கள் உடல் சிதறி இறந்ததை நினைத்துப் பார்த்துக் கொண்டான். புனித மாதாவின் ஆலயத்தில் ஓடிய மக்களின் குருதி அவனைக் கோபாவேசமடைய வைத்தது. மடுத் திருவிழாவுக்கு வரும் சிங்களவரையெல்லாம் வெட்டிக் கொன்று பழி தீர்க்கவேண்டுமென நினைத்துக் கொண்டான்.
 
ஆனால் விடுதலைப்புலிகள் அமைப்பு மடுவுக்கு வந்த சிங்களவர்களுக்குச் சகல பாதுகாப்புக்களையும், வசதிகளையும் வழங்கியது அவனுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
 
ஆனால் இப்போ அதன் அடிப்படையையும் அர்த்தத்தையும் நன்றாகவே புரிந்துகொள்ள முடிந்தது.
 
அரசியல்துறைப் பொறுப்பாளர் மேலும் சிறிது நேரம் இருந்து போராளிகளின் கேள்விகளுக்கெல்லாம் விளக்கமளித்துவிட்டுப் புறப்பட்டார்.
 
அப்போது ஒரு புதிய போராளி ஓடி வந்து, “அண்ணை எனக்குத் தலைவரைப் பார்க்க ஆசையாய் கிடக்குது. கூட்டிக்கொண்டு போவியளே?, எனக் கேட்டான்.
 
அவர் சிரித்தவாறே, “ஓ.. நீங்கள் சண்டையிலை ஒரு சாதனை செய்யுங்கோ… அண்ணையே கூப்பிட்டு உங்களுக்குப் பரிசு தருவார்”, என்றுவிட்டு வாகனத்தில் ஏறினார்.
 
அவனும் திருப்தியடைந்தவனாக தலையை ஆட்டினான்.
 
கூட்டம் நிறைவடைந்த பின்பு சிறு சிறு வேலைகளைச் செய்து முடிக்க நேரம் ஐந்து மணியாகிவிட்டது. சிவம் அவசரமாகக் கணேஷைப் பார்க்கப் போகத் தயாராகிக் கொண்டிருந்த போது புனிதன் ஓடிவந்தான்.
 
“அண்ணை, ரூபாக்கா உங்களை உடன தொடர்பு எடுக்கட்டாம்”
 
சிவத்தின் நெஞ்சு ஒரு முறை அதிர்ந்தது. கணேசுக்கு ஏதாவது நடந்திருக்குமோ என்ற அச்சம் அவனை குழப்பமடைய வைத்தது.
 
“சரி.. நான் எடுக்கிறன்”, என்றுவிட்டு வோக்கியை இயங்கு நிலைக்கு கொண்டு வந்து ரூபாவுக்குத் தொடர்பெடுத்தான்.
 
“ரூபா.. ரூபா.. சிவம்… ரூபா.. ரூபா.. சிவம்”
 
எதிர்த்தரப்பிலிருந்து பதில் வந்தது.. ஓமோம்.. சிவம்.. மற்றதுக்கு வாங்கோ..”
 
சிவம் மற்றய இலக்கத்துக்குப் போனான்.
 
“ரூபா.. ரூபா..சிவம்.. ரூபா.. ரூபா.. சிவம்”
 
“ஓமோம்.. சிவம் .. ஒரு சந்தோசமான செய்தி”
 
“சொல்லுங்கோ.. என்னது? சிவம் அவசரப்படுத்தினான்.
 
“கணேஷ்.. ஆபத்தான கட்டத்தைத் தாண்டியிட்டான். செயற்கைச் சுவாசம் அகற்றியாச்சுது.. இப்ப இயல்பாக மூச்சுவிடுறார்.. ஓவர்”
 
சிவத்தால் மகிழ்ச்சியைத் தாங்க முடியவில்லை. அவனையறியாமலே அவன் கண்கள் கலங்கி விட்டன. சில நிமிடங்கள் அவனால் எதுவுமே பேசமுடியவில்லை”
 
பின்பு ஒருவாறு சமாளித்துக் கொண்டு, “எதிரியள் மட்டுமில்லை சாவு கூட அவனிட்ட தோற்றுப் போச்சுது” நான் கொஞ்ச நேரத்திலை அங்க கிடைச்சிடுவன்”, என்றுவிட்டு வோக்கியை நிறுத்தினான்.
 
அவன் சைக்கிளை எடுத்து வேகமாக மிதிக்க ஆரம்பித்தான். எவ்வளவு வேகமாக மிதித்த போதும் அது மிகவும் மெதுவாகப் போவதாகவே அவனுக்குத் தோன்றியது.
 
வழியில் முதியவர் ஒருவர் சில மாடுகளைச் சாய்த்துக் கொண்டு வந்தார். அவை கூட ஏதோ ஒருவித சந்தோசத்துடன் போவதாகவே அவனுக்குத் தோன்றியது. தலைக்கு மேலே நீண்டிருந்த தெருவோர மரக்கிளைகளில் அமர்ந்திருந்த புள்ளினங்களின் கீச்சொலிகள் கூட கணேஸ் உயிர் பிழைத்தமைக்காக வாழ்த்திசைப்பதாகவே அவனுக்குப் பட்டது.
 
அவன் மருத்துவப்பிரிவு முகாமை அடைந்த போது ரூபா அவனுக்காக வாசலில் காத்து நின்றான். அவன் போய் இறங்கியதும் ஒரு மெல்லிய துள்ளலுடன் அவனை உள்ளே அழைத்துக் கொண்டு போனான்.
 
சிவத்தைக் கண்டதும் கணேஸ் கண்களை மட்டும் அவன் பக்கம் திருப்பி அவனைப் பார்த்தான். அவனின் முகத்தில் மெல்லிய புன்னகை இழையோடியது. சிவம் மெல்ல அவனின் தலையை வருடிவிட்டான்.
 
கணேஸ் வாயைத் திறந்து ஏதோ கதைக்க முயன்றான். இதழ்களும், நாவும் அசைந்த போதும் வார்த்தைகள் எவையும் வெளிவரவில்லை. மீண்டும் ஒரு புன்னகையுடன் தன் பேச்சு முயற்சியை அவன் நிறுத்திக் கொண்டான்.
 
ரூபா சொன்னாள், “மத்தியானம் போல என்னைக் கூப்பிட்டு தன்ரை தலையை வருடி விடச் சொல்லி கையால சைகை காட்டினார். நானும் தலையை வருடி விட்டன். அவரின்ர கண்களில நீர் வடிஞ்சுது. அப்பிடியே நித்திரையானவர் கனநேரமாய் எழும்பவேயில்லை.
 
“பிறகு”
 
அவர் கனநேரமாய் எழும்பாமலிருக்க பயந்து போனன். ஓடிப்போய் டொக்டரைக் கூட்டி வந்தன். அவர் சோதிச்சுப் போட்டு ஆபத்தான கட்டம் தாண்டியிட்டுது எண்டு போட்டு செயற்கைச் சுவாசத்தைக் கழட்டி விட்டார்.
 
சிவம் ஒரு மெல்லிய சிரிப்புடன்  சொன்னான், “உங்கடை அன்பு தான் அவனுக்குச் சரியான வைத்தியம் போலை”
 
அவன் எல்லையற்ற மகிழ்வில் திளைத்த போதும் ஒரு அதிர்ச்சி செய்தி அவனுக்காகக் காத்திருந்தது என்பதை அவன் அப்போது தெரிந்திருக்கவில்லை.
 
(தொடரும்)
 
தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்
  • தொடங்கியவர்
நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 12
 
சிவம் சிறிது நேரம் இருந்துவிட்டு புறப்படுவதற்குத் தயாரானான். கணேஸ் கண்களாலும், ஒரு புன்னகையாலும் விடை கொடுத்தான்.
 
ரூபா சிவத்துடன் வெளிவாசல் வரையும் கூடவே வந்தாள். சிவம் ஒரு மெல்லிய சிரிப்புடன், “ரூபா.. அடிக்கடி அவனுக்கு தலையை வருடி விடுங்கோ.. அப்ப தான் கெதியா சுகம் வரும்”, என்றான்.“சிவம்”, என்ற ரூபாவின் குரல் சற்று அழுத்தமாகவே ஒலித்தது.
 
“என்ன ரூபா?” எனக் கேட்டான் அவன். ஏன் திடீரென அவளின் குரல் அப்படி மாறியது என அவனால் புரிந்து கொள்ளமுடியவில்லை.
 
“அவர் அந்த நிலைமையில இருந்ததால தவிர்க்க முடியாமல் அப்பிடி செய்தன் எண்டதுக்காக நக்கலடிக்கிறியள், என்ன?”
 
“நானோ? உங்களை நக்கலோ? என்ன ரூபா நீங்கள்…” என்று விட்டுப் பின், “ரூபா, அவன் உங்களிலை எவ்வளவு ஆழமான அன்பு வைச்சிருக்கிறான் எண்டு எனக்குத் தெரியம். அது போலை உங்கடை அன்பு எப்பிடிப்பட்டது எண்டதையும் நான் அறிவன். உன்னதமான தூய்மையான அன்பு எதையும் சாதிக்கும் எண்டு கேள்விப்பட்டிருக்கிறன். அவன் கெதியாய் சுகமாகி எங்களோடை நிண்டு முந்தி மாதிரி களமாட வேணுமெண்ட ஆசையில தான் அப்பிடிச் சொன்னனான்”, எனக் கூறிவிட்டு சிவம் ஒரு பெரு மூச்சை விட்டான்.
 
அவன் முகம் சுருங்கிவிட்டது.
 
அவள் சற்றுத் தடுமாறிவிட்டாள்.
 
“மன்னியுங்கோ சிவம்.. நான் அவசரப்பட்டு கோப்பப்பட்டிட்டன். ஆனால் அவர் களமாடுறது தான்…” என்றுவிட்டு நிறுத்தினாள் அவள்.
 
“ஏன்.. ஏன்.. என்ன பிரச்சினை?”
 
“முதுகெலும்பிலை ஏற்பட்ட தாக்கத்தாலை இனி இடுப்புக்கும் கீழை உணர்ச்சி வர வாய்ப்பில்லையாம்”
 
“என்ன…?”, திகைப்புடன் கேட்டான் சிவம்.
 
“இனி இடுப்புக்குக் கீழை எந்த உறுப்பும் இயங்காதாம்” எனக் கூறிவிட்டு,
 
“அவர் உயிர் தப்பினதே போதும்”, என்றாள் ரூபா.
 
சிவத்தால் அந்தச் செய்தியை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
 
சில நிமிடங்கள் மௌனமாக வானத்தைப் பார்த்தாள்.
 
சூரியன் செந்நிறமாக அஸ்தமித்துக்கொண்டிருந்தது.
 
அவனையறியாமல், “நாளைக்கு சூரியன் உதிக்கும்”, என அவனின் வாய் முணு முணுத்தது.
 
ரூபா எதையும் புரிந்து கொள்ளமுடியாமல், “நீங்கள் என்ன சொல்லுறீங்கள்?”, எனக் கேட்டாள்.
 
“அவன் நடப்பான், மரணத்தை வெற்றி கொண்ட அவனுக்கு உடல் ஊனத்தை வெல்லுறது பெரிய வேலையில்லை” என்றுவிட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டான் சிவம்.
 
ரூபா அப்பிடியே அவன் போன திசையையே பார்த்துக்கொண்டு நின்றாள். இரு நண்பர்களினதும் மன உறுதியும், நம்பிக்கையும் அவர்கள் ஒருவருடன் ஒருவர் கொண்ட ஆழமான நட்பும் அவளை வியப்பில் ஆழ்த்தியது. ஆனால் தனது அன்புமட்டுமின்றி அவர்கள் இருவரும் ஒருவருடன் ஒருவர் கொண்டிருக்கும் உயிர் நட்பும் கூட கணேசின் உயிரைக் காப்பதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்திருக்கும் என அவள் திடமாக நம்பினாள்.
 
ஆனால் எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த அந்த மூவருக்குமிடையே ஒரு ஆழமான அன்பு முக்கோணம் உருவாகி வருவதை அவள் அப்போது உணர்ந்து கொண்டிருக்கவில்லை.
 
அடுத்த நாள் காலையில் தளபதி முருக்கப்பரையும், சோமண்ணையையும் போராளிகளின் முகாமுக்கு அழைத்திருந்தார். இருவரும் வந்து வட்டக் கொட்டிலில் அமர்ந்தனர். ஒரு போராளி அவர்களுக்கு தேனீர் கொண்டு வந்து கொடுத்தான்.
 
உடனடியாகவே தளபதி அவர்களைக் கண்டதும் சிவத்தையும் அழைத்துக் கொண்டு வட்டக் கொட்டிலுக்கு வந்தார்.
 
“என்ன தம்பி வரச்சொன்னியளாம்?”, என்ற முருகப்பர் கதையைத் தொடங்கினார்.
 
தளபதி சுற்றிவளைக்காமல் நேரடியாகவே விடயத்துக்கு வந்தார்.
 
“அப்பு.. ஆமிக்காரர் காடுக்களுக்காலை பதுங்கி வந்து எங்கடை சனத்துக்கு கிளைமோர் வைக்கிறாங்கள். இதை இப்பிடியே விட ஏலாது. நீங்கள் தான் ஏதாவது உதவி செய்ய வேணும்.
 
முருகர் சற்று யோசித்துவிட்டு, “தம்பி.. மிருகங்கள் தங்களுக்கெண்டு சில பாதையளை வைச்சிருக்கும். நம்பி அதிலை காத்திருக்கலாம். மனுஷர் அப்பிடி இல்லைத்தானே? என்றார்.
 
“மிருகங்களை மடக்கிற உங்களுக்கு மனுஷரை மடக்க ஏலாதே?”
 
“ஏலுமோ.. ஏலாதோ.. மடக்கித்தானேயாக வேணும்.. அது எங்கடை கட்டாயத் தேவையல்லே?”
 
“நீங்கள் தான் வழி சொல்ல வேணும்”, என்றார் தளபதி.
 
“தம்பி.. ஆமிக்காரர் காடுகளை வடிவாய்த் தெரிஞ்சவங்கள் இல்லை. அவங்கள் வரை படங்களையும், கொம்பாசையும் வைச்சுக்கொண்டு தான் வர வேணும்.. அவங்கள் எந்த இடத்துக்கும் நேர பாதை பிடிச்சு வரமாட்டாங்கள்” என்றார் முருகப்பர்.
 
“ஏன் அப்பிடிச் சொல்லுறியள்?”
 
“வழியிலை சூரை முள்ளுக்காடுகள் வரும். சேத்து மோட்டையள் வரும். இதுகளை ஊடறுத்து வரமாட்டினம். விலத்தி வர வெளிக்கிட்டு கன தூரம் சுத்தவேண்டி வரும். குழுவன்கள் திரியிற பாதை பிடிச்சு வருவினமெண்டால் அது இடையில நிண்டிடும். திக்கு முக்காட வேண்டி வரும்”
 
“அப்பிடியிருந்தும் வந்து செய்து போட்டு போறாங்கள் தானே?” எனக் கேட்டார் தளபதி.
 
“உண்மை தான்.. ஏதோ முடிஞ்சளவு செய்வம். முதல் அவங்கள் வரக்கூடிய பாதையைப் பார்த்து வைப்பம்”.
 
“சரி நான் உங்களோடை கொஞ்சம் காடு அனுபவமுள்ள போராளியள் இரண்டு பேரை அனுப்பிறன்”, என்ற தளபதி, “சிவம்.. நீங்கள் மலையவனையும் கூட்டிக்கொண்டு இவையோட போங்கோ”, சிவத்திடம் சொன்னார்.
 
“சரியண்ணை,” என்றான் சிவம்.
 
மாலை நான்குமணிக்கு வருவதாகக் கூறிவிட்டு இருவரும் விடைபெற்றனர்.
 
அன்று நண்பகல் சிவம் மருத்துவப் பிரிவு முகாமிற்குப் போயிருந்தான்.
 
கணேசின் உடல் நிலை காலையை விட சற்று விருத்தியடைந்திருந்தது போலவே அவனுக்குப் பட்டது. அவன் போன போது ரூபாவும் கணேசின் அருகிலேயே இருந்தாள்.
 
சிவம், “இப்ப எப்பிடி இருக்குது?” எனக் கேட்டான்.
 
“கொஞ்சம் பறவாயில்லை. இப்ப கொஞ்ச நேரம் முந்தித்தான் “சஸ்ரோஜன்” கரைச்சுக் குடுத்தவை. ஒரு கொஞ்சம் குடிச்சவர். பிறகு குடிக்க ஏலாமல் போச்சுது”, என்றாள் ரூபா.
 
“ம்… அதே நல்ல விஷயம் தானே. இப்ப முகத்திலையும் ஒரு தெளிவு வந்திருக்கிற மாதிரிக் கிடக்குது”, என்றுவிட்டு சிவம் கணேசின் முகத்தைப் பார்த்தான்.
 
அவன் ஒரு முறை புன்னகைத்தான்.
 
பின்பு சிவம் ரூபாவைப் பார்த்து, “நீங்கள் எப்ப போகப் போறியள்”, எனக் கேட்டான்.
 
“அது பிரச்சினையில்லை. காலமை நான் அக்காவோடை (தளபதி) கதைச்சனான்.அவ ஒரு கிழமை நிண்டிட்டு வரச்சொல்லி அனுமதி தந்திட்டா”
 
“நல்லதாய்ப் போச்சுது.. நான் நாலைஞ்சு நாளைக்கு இஞ்சாலை வர ஏலாது. வேறை ஒரு வேலையாய்ப் போறன்”
 
ரூபா, “பறவாய் இல்லை.. இஞ்சை நான்கூடி தேவையில்லை.. மருத்துவப் போராளியள் வலு பக்குவமாய்க் கவனிக்கினம். ஆனால் நான் என்ரை மனத் திருப்திக்காகத் தான் இஞ்சை நிக்கிறன்” என்றாள்.
 
சிவம், மெல்ல கணேசின் தலையை வருடியவாறு,
 
“நான் போட்டு வரட்டே”, எனக் கேட்டான்.
 
அவள் ஒரு புன்னகையுடன் தலையசைத்து விடை  கொடுத்தாள்.
 
கணேசைப் போன்ற ஒரு திறமையுள்ள போராளி காலம் முழுவதும் வீல் செயரில் நடமாட வேண்டிய நிலை வந்து விட்டதை நினைத்த போது அவள் மனதில் ஒரு வித வேதனை வேர்விட்டது. அவன் ஒரு பெருமூச்சுடன் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டான்.
 
வாசல்வரை வந்து வழியனுப்பிய ரூபா, “போற காரியத்திலை வெற்றியோட வாங்கோ”, எனச் சொல்லி வழியனுப்பினாள்.
 
அவளது அந்த வார்த்தைகள் ஏதோ ஒரு விதமான புதிய உணர்வை அவனுள் எழுப்ப அவன் புதிய உற்சாகத்துடன் சைக்கிளை எடுத்தான்.
 
அன்று மாலை முருகப்பர் தலைமையில் சிவம், மலையவன், சோமர் ஆகியோர் காட்டுக்குள் இறங்கினர். அவர்கள் இறங்கிய இடம் கிளைமோர் வெடித்த இடத்தில் இருந்து ஏறக்குறைய ஒரு கிலோமீற்றர் இருக்கும்.
 
சிறுத்தைப் படையணியில் இருந்த போது சிவம் காடுகளில் நீண்ட தூரம் போய்த் தாக்குதல் நடத்திவிட்டு வந்த அனுபவங்களைப் பெற்றிருந்தான். எனினும் முருகப்பரின் நடைக்கு ஈடு கொடுத்துப் பின் தொடர்வது சற்று சிரமமாகத்தான் இருந்தது.
 
ஏறக்குறைய அரை மணி நேரம் நடந்த பின்பு பாதை போன்று தோற்றமளிக்கும். ஆனால் அருகுப் பற்றைகளால் மூடப்பட்ட ஒரு பகுதி தென்பட்டது.
 
“தம்பி இது முந்திக் கள்ள மரம் ஏத்தின வண்டில் பாதை.. இப்ப பத்தையள் வளர்ந்து மூடிப்போட்டுது”, என விளங்கப்படுத்தினார்.
 
சிவம் குனிந்து பார்த்தான். பாதை சிறிது தூரம் சென்றதும் வளைந்து மறைந்துவிட்டிருந்தது,
 
முருகப்பர் பற்றைகளை விலக்கிக் கொண்டு முன்னால் நடக்கத் தொடங்கினார்.
 
வண்டில்கள் போன பாதைகள் நீண்டகாலமாகியும் அழியாமல் இருப்பது சிவத்துக்கு பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.
 
சிறிது தூரம் நடந்த பின்பு முருகர் பாதையை விட்டுப்பிரிந்து அங்கு தென்பட்ட ஒரு ஒற்றையடிப் பாதையில் நடக்கத் தொடங்கினார். அவர், “இது குழுமாடுகள் தண்ணி குடிக்கப் போற பாதை”, என்றார்.
 
சிறிது தூரம் நடந்த பின்பு சிவம் திடீரென்று நின்று, அப்பு வடிவாய்க் காதைக் குடுத்துக் கேளுங்கோ”, என்றான்.
 
தொலைவில் சிங்கள சினிமாப் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.
 
“அது மடு றோட். ஆமிக்காம்ப்”, என்றார் முருகப்பர் ஒரு புன்னகையுடன்.
 
(தொடரும்)
 
தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஊர்பூராயம் எங்கே மிச்சக்கதை ? போட மறந்திட்டீங்களோ ?

  • தொடங்கியவர்
நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 13
 
அப்பகுதியில் குறிப்பிட்டளவுக்குப் பெரிய முகாம்களாக முருங்கன், பறையனாலங்குளம், மடுவீதி என்பனவே இருந்தன என்பதை “வேவு”ப் போராளிகள் மூலம் சிவம் அறிந்திருந்தான். ஏனைய சிறு முகாம்களிலும் காவலரண்களிலும் பகலில் நின்றுவிட்டு இரவில் பிரதான முகாம்களுக்குப் போய்விடுவார்கள்.
முருகர் சொன்னார், “இப்ப நாங்கள் மடுறோட்டுக்கும் பறையனாலங்குளத்துக்கும் இடையில நிக்கிறம். ஒரு காக்கட்டை போக மன்னார் றோட்டில மிதக்கலாம்”.
 
“அதுக்கை அவங்கடை காவலரண் ஒண்டுமில்லையே?”
 
“இருக்குது. பொழுது பட்டால் அதிலை நில்லாங்கள்”, என்றார் முருகர்.
 
நன்றாகப் பொழுது படும் வரை நால்வரும் ஒரு மறைவான இடத்தில் அமர்ந்தனர். புள்ளினங்களின் ஒலி மெல்லக் குறைய ஆரம்பித்தது.
 
“முருங்கனில இருந்து இந்தக் காட்டிலை இறங்க வேணுமெண்டால் எப்பிடியும் நாலைஞ்சு ஊர்மனை தாண்டித்தான் வரவேணும். பறையனாலங்குளத்திலையிருந்து வாறதெண்டாலும் றோட்டுக்கு ஏறித்தான் வரவேணும். இடையிலை ஒரு பெரிய முள்ளுக்காடு கிடக்குது. அனுபவமில்லாதவை அதுக்கை இறங்கினால் உடம்பு கிழிஞ்சுதான் வரும்”, என்றார் முருகர்.
 
“அப்பிடியெண்டால் இந்த ஊடுருவும் படையணி உந்த இரண்டு முகாம்களிலையிருந்தும் வந்திருக்க ஏலாது. அவங்கள் சனத்தின்ரை கண்ணிலை படாமல் தான் நடமாடுவங்கள்.. மடு றோட்டும் சனப்புழக்கம் உள்ள இடம், அங்கையிருந்து வாறதும் சாத்தியமில்லை”, என்றான் சிவம்.
 
“அப்பிடியெண்டால் றோட்டைக் கடந்து போனமெண்டால் குஞ்சுக்குளம் தொங்கு பாலத்தோடை ஒரு சின்ன முகாம் இருக்குது. அங்கால கஜூவத்தை தான்” என்றார் முருகர்.
 
நன்றாக இருட்டியதும் நால்வரும் மீண்டும் நடையைத் தொடங்கினர். அந்தச் சிறுகாவலரணை அண்டியதும் முருகர் மற்றவர்களைச் சைகை செய்து நிறுத்திவிட்டு முன்னால் போனார். ஒரு மரத்தின் பின்னால் நின்று காதை மட்டும் அந்தப் பக்கமாகத் திருப்பிக் கொண்டார். மிருகங்களின் காலடி ஓசையைக் கூடக் கிரகிக்கும் அவரின் காதுகளுக்கு மனித அசைவுகளை அறிவது சிறு விஷயம் தான்.
 
அவர் திரும்பியதும் வந்து, “ஒருதருமில்லை… போவம்”, என்றார். இரு புறமும் வெளிச்சம் எதுவும் தெரியாததை உறுதி செய்த பின்பு அவர்கள் வீதியைக் கடந்தனர்.
 
நன்றாக இருட்டிவிட்ட போதிலும் முருகர் ரோச் லைற்றை அடிக்க வேண்டாமெனக் கூறிவிட்டார். மங்கிய நிலவொளியில் அந்த வீரை மரங்களுக்குள்ளால் முருகரைத் தொடர்ந்து நடந்தனர். நிலம் பற்றைகளோ, முட்களோ இல்லாதிருந்த போதிலும் இலைச் சருகுகளால் நிறைந்திருந்தது. எனினும் விறகுக்காகத் தறிக்கப்பட்ட மரங்களின் அடிக்கட்டைகளில் கால் அடிபடாமல் மிகவும் அவதானமாக நடக்கவேண்டியிருந்தது.
 
சிறிது நேரத்தில் அவர்கள் வண்டில் பாதையொன்றுக்கு வந்து சேர்ந்தனர். வண்டில் தடங்கள் சென்ற அடையாளங்கள் மெல்லிய ஒற்றையடிப்பாதைகள் போல் தென்பட்ட போதிலும் நடுப்பகுதிகள் முட்செடிகளாலும் சிறு புதர்களாலும் மூடப்பட்டிருந்தன. அவர்கள் வண்டில் தடங்கள் வழியே நடந்த போது அவை கால்களில் தடக்குப்பட்டு இடைஞ்சல் செய்திருந்தன. கொடிகளும் இடையிடையே சிக்கி தொல்லை கொடுத்தன.
 
ஆனால் முருகரும் சோமரும் சர்வசாதாரணமாக பிரதான வீதியில் நடப்பது போன்று வேகமாக போய்க் கொண்டிருந்தனர். சிவத்துக்கும் மலையவனுக்கும் அவர்களைத் தொடர்வது சற்று சிரமமாக இருந்த போதிலும் அந்த அனுபவம் அவர்களுக்கு ஒருவித மகிழ்ச்சியைக் கொடுத்தது.
 
திடீரென எங்கோ ஒரு ஆட்காட்டியின் குரல் கேட்டது. முருகர் எல்லோரையும் நிற்கும்படி சைகை காட்டிவிட்டு குரல் வந்த திசைப்பக்கம் காதை நன்றாகக் கொடுத்துக் கேட்டார். குரல் சில நிமிடங்களில் நின்றுவிட்டது. பின்பு சிறிது நேரத்தில் இன்னும் சற்றுத் தொலைவில் ஆட்காட்டியின் குரல் கேட்டது.
 
முருகர் மிகவும் தணிந்த குரலில் சொன்னார், “ஆரோ ஆக்கள் மேற்குப் பக்கமாய் நடந்து போறாங்கள். இப்ப வேட்டைக்காரர் வாற நேரமுமில்லை. கொஞ்ச நேரம் பொறுப்பம்.
 
மலையவன் சருகுகளுக்கால் வெளியே தெரிந்த வேர் ஒன்றில் குந்தினான். சில வினாடிகளில் திடுக்கிட்டு எழும்பிய அவன்,
 
“அப்பு.. வேர் அசையுது”, என்றுவிட்டுப் பாய்ந்து முருகரின் அருகில் வந்தான்.
 
முருகர் மெல்லச் சிரித்துக் கொண்டு,“அது வேரில்லை தம்பி.. வெங்கடாந்திப் பாம்பு.. எதையோ விழுங்கிப் போட்டு இரை மீட்டிக்கொண்டு கிடக்குது… அங்கை பார் சருகுகள் அசையுது”, என்றுவிட்டு ரோச் லைட்டை குத்தி அடித்துக் காட்டினார்.
 
“நல்லவேளை.. என்னை வாலால சுத்தாமல் விட்டிட்டுது”, என்றான் மலையவன்.
 
“அதுகள் தங்களுக்கு இரை தேவைப்படயுக்கை தான் மிருகங்களைப் பிடிக்கும், மனுஷரைப் பிடிக்கிற மாதிரி பெரிய பாம்புகள் இந்தக் காட்டிலை இல்லை”, என்றார் சோமண்ணை. என்றாலும் கூட மலையவனால் உடனடியாக அந்த அதிர்ச்சியில் இருந்து விடுபட முடியவில்லை.
 
“இந்த நேரம் ஆமியும் காட்டுக்கை இறங்காங்கள். இப்ப காட்டுக்க நிக்கிறது ஆர் எண்டு விளங்கேல்லை”, என்றார் முருகர்.
 
“ஆழ ஊடுருவும் படையணிகாறராய் இருக்குமோ?”, எனக் கேட்டான் சிவம்
 
.“அவங்கள் இந்தக் காட்டிலை இரவிலை துணிஞ்சு இறங்க மாட்டாங்கள். அது பாலைமரக்காடு, கரடியள் ஆக்கள் போக சத்தம் சந்தடியில்லாமல் பின்னாலை வந்து கட்டிப்பிடிச்சுப்போடும். அந்தப் பயத்திலை அந்தப் பகுதியிலை நாங்களே வலு கவனமாய்த் தானிருப்பம்”.
 
மீண்டும் அவர்கள் நடக்க ஆரம்பித்தனர்.
 
பாலைமரக்காட்டுக்குள் வந்த பின்பு முருகர் முன்னால் நடக்க இடையில் சிவத்தையும், மலையவனையும் நடக்கவிட்டுவிட்டு சோமர் பின்னால் வந்தார். கரடி பின் தொடருமானால் சோமர் அதன் வாசனையைக் கொண்டு எச்சரிக்கையடைந்து விடுவார் என்பதாலேயே அந்த ஏற்பாட்டைப் பின்பற்றினர்.
 
சுமார் எட்டுமணியளவில் அவர்கள் அருவியாற்றங்கரையை அடைந்துவிட்டனர். ஆற்றில் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து இடையிடையே மண்திட்டுக்கள் வெளியே தெரிந்தன. முருகர் சொன்னார், “அதிலை தெரியிற வளைவிலையிருந்து ஒரு கொஞ்சத் தூரத்திலை தான் தொங்குபாலம் கிடக்குது. அதிலை அங்காலுப் பக்கம் ஒரு காவலரணும் சின்னக் காம்பும் இருக்குது”.
 
அவரின் குரல் “கிசு கிசு” ஒலியிலேயே வெளிவந்தது.
 
ஆற்றங்கரையில் இருந்த பெரிய மருத மரத்தின் பின்னால் அனைவரும் பதுங்கிக் கொண்டனர்.
 
முருகர் ரோச்சை பதிவாக அடித்து ஆற்றின் நடுவில் கிடந்த மணத்திட்டுக்களை உற்று நோக்கினார். அவற்றில் இரவில் முதலைகள் படுத்திருப்பதுண்டு.
 
ரோச்சை அணைத்துவிட்டு இராணுவ முகாம் பக்கம் முருகர் நன்றாக காதுகொடுத்துக் கேட்டார். எவ்வித சலனமும் கேட்காத நிலையில் அவர்கள் ஆற்றில் இறங்கினர். சில இடங்களில் மட்டும் நீர் இடுப்புக்கு சற்று மேல் ஓடிக்கொண்டிருந்தது.
 
முதலைகள் பயத்தில் இடையிடையே ரோச்சை அடித்துக் கொண்டு நீரைப் பார்த்தபடியே நடந்தனர். செம்மூக்கன் வகை முதலைகள் மனிதரையே இழுத்துக் கொண்டு போகும் வலிமை வாய்ந்தவை. லைற் அடிக்கும் போது மீன்கள் கூட்டம் கூட்டமாக நீரோட்டத்தை எதிர்த்து நீந்துவது அவர்கள் கண்களில் பட்டது. ஆற்றைக் கடந்ததும் முருகர் வேகமாக நடக்கத் தொடங்கவில்லை.
 
“தம்பி சிவம் இஞ்சாலை ஊர்மனை.. இப்ப நாங்கள் பின்பக்கமாய்ப் போறம்.. அதிலை ஒரு வயல்வெளி வரும் அதைத் தாண்டிடமெண்டால் அங்காலை காட்டுக்கை போய் ஆறுதல் எடுக்கலாம். எட்டி நடவுங்கோ”, என்றுவிட்டு நடையில் மேலும் வேத்தை அதிகரித்தார் முருகர்.
 
வயல்வெளியைக் கடந்ததும் அவர்கள் மேலும் அடர்த்தியான ஒரு காட்டுக்குள் புகுந்தனர். சிறிது தூரம் சென்ற பின்பு முருகர் இருவருடைய துப்பாக்கிகளையும் ரவைக்கூடுகளையும் வாங்கி ஒரு பற்றைக்குள் வெளியே தெரியாதவாறு மறைத்தார்.
 
சிவம், “ஏனப்பு?, எனக் கேட்டான்.
 
“இப்ப நாங்கள் போய் சின்னபர் எண்ட இந்த ஊர்க்காறன்ரை சேனையில தான் தங்கப்போறம். நீங்கள் ஆர் எண்டு கேட்டால் புதிசாய் வேட்டை பழக வந்த பொடியள் எண்டு சொல்லுங்கோ. நானும் அவரும் இரவு கதைதக்கிறதை ஒண்டும் தெரியாத ஆக்கள் மாதிரி இருந்து கவனிச்சுக் கேட்டு தேவையானதை எடுத்துக் கொள்ளுங்கோ”, என்றுவிட்டு முன்னே நடக்கத் தொடங்கினார் முருகர்.
 
தங்களை சாரத்தோடும் பழைய சேட்டுடனும் வரும்படி முருகர் சொன்னதன் காரணம் இப்போது விளங்கியது.
 
குஞ்சுக்குளம் போன்ற காட்டுக் கிராமங்களில் சேனைப் பயிர் செய்கை கைவிடப்பட்டாலும் சின்னப்பு, போன்ற முதியவர்கள் அதில் இப்போதும் அக்கறை காட்டிவந்தனர். அது அவர்களுக்கு பயிர் செய்கைக்கு மட்டுமன்றி வேட்டைக்கும் வாய்ப்பாயிருந்தது.
 
காடுகளில் உள்ள கீழ்க்காடு எனப்படும் பற்றைகளையும் சிறு மரங்களையும் வெட்டித் துப்புரவு செய்துவிட்டு பெரிய மரங்களில் அடர்த்தியான கொப்புக்களை நிலத்தில் வெயில் படுமளவுக்கு மட்டும் வெட்டி விடுவார்கள். பின்பு நிலத்தைக் கொத்திப் பண்படுத்திவிட்டு கொச்சி மிளகாய் மரக்கறிகள் என்பவற்றின் விதைகளை விதைத்துவிடுவார்கள்.
 
சித்திரை மழையுடன் பயிர்கள் முளைத்துப் பூக்க ஆரம்பித்துவிடும். மழை காலம் முடிந்த பின்பு குஞ்சுக்குளம் வயல்களின் கழிவு நீர் பாயும் வாய்க்காலை மறித்து நீர் பாய்ச்சுவார்கள். காடெரித்த சாம்பல் பசளையில் பயிர்கள் காய்த்துக் கொட்டும். பின்பு மார்கழியில் அவற்றைப் பிடுங்கி விட்டுச் சோளம் போட்டுவிடுவார்கள்.
 
இரண்டு வருடங்கள் செய்துவிட்டு சேனைப் பயிர்ச் செய்கையை இன்னுமொரு இடத்தில் காட்டை வெட்டி தொடங்கிவிடுவார்கள்.
 
தூரத்தில் போகும் போதே சின்னப்பரின் கொட்டிலுக்கு அருகில் எரிந்து கொண்டிருந்த நெருப்பு தெரிந்தது. அவ்விடத்தை நெருங்கிய போது சின்னப்பரின் இரண்டு பெட்டை நாய்களும் குரைத்துக்கொண்டு பாய்ந்து வந்தன.
 
“பொல்லாத நாயள், தொண்டைக் குழியிலை தான் பாயும்.. அசையாதையுங்கோ.. அப்படியே நில்லுங்கோ”, என்றார் முருகர். ஓடாமல் நின்றால் தப்ப முடியாதென்றே மலையவனுக்குத் தோன்றியது.
 
திடீரென நால்வர் மேலும் ஒரு பெரும் ஒளிவெள்ளம் பாயவே அவர்கள் செய்வதறியாது திகைத்துப் போய் நின்றனர்.
 
(தொடரும்)
 
தமிழ்லீடருக்காக அரவிந்த குமாரன்.
 
 
நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 14
 
ஒரு பெரிய முதிரை மரத்திலிருந்து பாய்ந்து வந்த ஒளி சின்னப்பரின் ஐந்து பற்றி லைற்றிலிருந்துதான் வருகிறது என முருகர் ஊகித்துக் கொண்டார். மரத்திலிருந்து, “அடி.. அடி.. நில்லடி.. கறுப்பி!”, என்ற அதட்டல் வந்ததும் நாய்கள் இரண்டும் அப்படியே நின்றன.
 
“அது.. சின்னப்பண்ணை.. நானண்ணை”, என்றார் முருகர்.சின்னப்பர் மரத்திலிருந்து இறங்கிக் கீழே வந்தார்.
 
“இப்ப நாலைஞ்சு நாளாய் காடுவளிய சில வித்தியாசங்கள் கண்ணிலை படுது. ஆரோ புது ஆக்கள் நடமாடுற மாதிரிக் கிடக்குது. அதுதான் காடு சரசரத்ததோடை துவக்கோடை ஒளியில ஏறியிட்டன்”,
 
“இஞ்சை ஆர்.. என்னைப் போல வேட்டைக்காரர் வருவங்கள்.
 
இல்லாட்டில் ஆமிக்காரர் உங்கினை திரிவங்கள்”, என முருகர் அந்த விஷயத்தைப் பெரிதாகப் பொருட்படுத்தாதது போன்று அலட்சியமாகச் சொன்னார்.
 
“விசர்க் கதை பறையாதை… எனக்குத் தெரியாத வேட்டையோ…? வேட்டைக்காரர் வந்து போற அடையாளம் எப்பிடி இருக்குமெண்டு எனக்குத் தெரியாதே?”
 
“அப்ப.. ஆமியாக்கும்..?” என்றார் சோமண்ண.
 
“என்னைக் கடந்து தானே இஞ்சத்தை ஆமி காட்டுக்கை இறங்கவேணும்.. அவங்கள் இஞ்சாலில் காட்டிலை இறங்கிறேல்ல”
 
“அப்ப.. ஆராயிருக்கும்?” எனக் கேட்டார் முருகர்.
 
“அது தான் தெரியேல்லை.. வாருங்கோ.. வந்தனீங்கள் முதல் தண்ணி வென்னியைக் குடியுங்கோ”, என்றுவிட்டுக் கொட்டிலை நோக்கி நடக்கத் தொடங்கினார் சின்னப்பர்.
 
அனைவரும் கொட்டிலுக்கு முன்னால் எரிந்து கொண்டிருந்த நெருப்பின் அருகில் அமர்ந்து கொண்டனர்.
 
“கொஞ்சம் மா கிடக்குது… றொட்டி தட்டட்டே?” எனக் கேட்டார் சின்னப்பு.
“வேண்டாம்.. நாங்கள் றொட்டியும்.. நல்ல செத்தல் மிளகாய்ச் சம்பலும் கொண்டு வந்தனாங்கள்.. உனக்கும் சேத்துத்தான்”.. என்று தனது பன் பையிலிருந்த றொட்டிப் பார்சலை வெளியே எடுத்தார் முருகர்.
 
வழமையாகப் போராளிகள் காட்டு நடவடிக்கைகளுக்குப் போகும் போது பிஸ்கற் பெட்டிகள் போன்ற உலர் உணவுகளையே கொண்டு செல்வதுண்டு. ஆனால் முருகர் புறப்படும்போது பிஸ்கற் கொண்டு வர வேண்டாம் என்று சொல்லிவிட்டு றொட்டி செய்யும்படி சொன்னமைக்கான காரணம் இப்போது தான் சிவத்துக்கு புரிந்தது.
 
சின்னப்பு, “பொறு வாறன்.. மரை வத்தல் கிடக்குது. சுட்டுப்போட்டு றொட்டியோடை தின்னுங்கோ என்றுவிட்டு எழுந்து உள்ளே போனார். முருகர் றொட்டிகளை எடுத்துச் சம்பல் வைத்து ஒவ்வொருவரிடமும் கைகளில் கொடுத்தார்.
 
சின்னப்பர் வத்தலை நெருப்பில் வாட்டி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு துண்டுகளைக் கொடுத்துவிட்டு தானும் ஒன்றை எடுத்துக் கொண்டார். வயது முதிர்ந்துவிட்ட போதிலும் வெற்றிலைக் காவி படிந்த ஆனால் உறுதியான அவரின் பற்களைப் பார்க்கச் சிவத்துக்கு பொறாமையாயிருந்தது.
 
சாப்பிட்டுக்கொண்டிருந்த போது சின்னபர், “ஆர்.. ரண்டு விடலையளைக் கூட்டி வந்திருக்கிறாய்?” எனக் கேட்டார்.
 
முருகர் ஒரு முறை போராளிகள் இருவரையும் பார்த்துவிட்டு, “ஒருதன் தங்கச்சியின்ரை பொடியன், மற்றவன் பெறாமேன், ரண்டு பேரும் வேட்டை பழக வேணுமெண்டு ஒரே கரைச்சல். வேட்டை பிறகு பழகலாம், முதல் என்னோடை வந்து காட்டைப் படியுங்கோ எண்டு கூட்டியந்தனான்”, என்றார்.
 
சின்னப்பர் இருவரின் முகத்தையும் நன்றாகப் பார்த்துவிட்டு, “எப்பிடியும் உன்ரை ரத்தம் தானே.. பழகியிடுவங்கள்”, என ஆரம்பித்த சின்னப்பர், “கண்ணும் காதும் மூக்கும் சரியாய் வேலை செய்தால் மிருகங்கள் எங்கட காலடியிலயடா தம்பியவை” எனச் சொல்லி முடித்தார்.
 
சாப்பிட்டு முடிந்த பின்னர் எழுந்து உள்ளே சென்ற சின்னப்பு ஒரு சிகரட் பெட்டியைக் கொண்டுவந்து காட்டி, “இது ஆத்தங்கரையிலை முதலை மோட்டையடியிலை கிடந்தது. எனக்கு என்னண்டு விளங்கேல்ல.. எடுத்துப் பாத்தன் சிகரட் மாதிரி ஒரு வாசம் வந்தது” என்றார்.
 
முருகர் அதைக் கையில் வாங்கி பார்த்துவிட்டு இது சீக்றற் பெட்டி போலை தான் கிடக்கு.. ஆனால் ஒரு நாளும் இப்பிடிக் காணேல்லை.. இதைப் பாரடா தம்பி”, எனச் சிவத்திடம் கொடுத்தார்.
 
அந்தப் பச்சைப் பெட்டியைத் திருப்பித் திருப்பிப் பார்த்துவிட்டு”, இது ஸ்போட்ஸ்மன் எண்டொரு சிகரட்.. இஞ்ச இது ஒருதரும் பாவிக்கிறேல்லை. கொழும்புப் பக்கம் தான் இது பாவிக்கிறவங்கள் எண்டு கேள்விப்பட்டிருக்கிறன்” என்றான் சிவம்.
 
மடு விழாக் காலங்களில் வரும் சிங்களவர்களில் சில நாகரிகமாக இருப்பவர்கள் இந்த சிகரட் பிடிப்பது அவனின் நினைவுக்கு வந்தது.
 
மலையவனும், “இஞ்சை பிறிஸ்டர் எண்ட சிகரட்டை விட வேறை இல்லை.. இது ஆரோ கொழும்புக்காரன் தான் பத்தியிருக்கவேணும்”, என்றான்.
 
“கொழும்புக்காறன், குழுவனும் கரடியும் சருகுப் புலியும் திரியிற இந்தக் காட்டிலை துணிஞ்சு வந்தவனே?, என்றார் சின்னப்பு.
 
“அது தானே.. உதிலை ஏதோ விஷயமிருக்குது.. நாங்களும் கண்ணை மூடிக்கொண்டு காடுவழிய திரியிறனாங்கள். உதை என்னண்டு அறியத்தான்  வேணும்”, என்றார் முருகர் அழுத்தமாக. சின்னபருக்கும் முருகர் சொன்ன வார்த்தைகள் ஒரு எச்சரிக்கை உணர்வை ஊட்டிவிட்டது.
 
“ஓ.. ஓ நாளைக்கு ஒருக்கால் காடு தடவத்தான் வேணும். இப்ப படுப்பம்”, என்று விட்டு எழுந்தார் சின்னப்பர்.
 
சிவத்தைப் பொறுத்த வரையில் அந்த சிகரட் பெட்டி பல மர்மங்களை விளக்கும் என்ற நம்பிக்கையுடன் தூங்கிப் போனான்.
 
அன்று இறைப்பு முறையாதலால் சுந்தரம் அதிகாலையிலேயே எழுந்துவிட்டான். அவன் முகம் கழுவிவிட்டு வரும்போது பரமசிவம் பால் கறந்து முடித்துவிட்டார்.
 
இருவரும் தேனீரைக் குடித்த பின்பு பரமசிவம், “தம்பி… நீ போய் மிஷினை ஸ்ராட் பண்ணி இறை… நான் கடைக்குப் போய் பாலைக் குடுத்திட்டு அப்படியே நேர வாறன்” என்று விட்டு பார்வதியிடம் பால் போத்தலைக் கையில் வாங்கினார்.
 
“ஓமய்யா.. மிளகாய் பிடுங்க வேறையும் ரண்டு பேரை வரச்சொல்லிவிடுங்கோ.. இப்ப பிடுங்கி முடிச்ச பக்கம் இண்டைக்கு இறைப்பு முடிஞ்சு போம்.. அதைப் பிடுங்கி முடிச்சால் தான் நாளைக்கு இறைக்கலாம்”, என்றான் சுந்தரம்.
 
தனது மகனின் பொறுப்புணர்வை நினைக்க அவருக்கே பெருமையாயிருந்தது.
 
“சரி பாப்பம்.. அப்பிடி ஆள் கிடையாட்டில் கொம்மாவும் வருவா தானே.. நானும் நிண்டு அவளளோடை சேர்ந்து முடிச்சிடலாம் என்றுவிட்டுப் புறப்பட்டார் அவர்.
 
’அவளள் ’, என்பது வேலம்மாவையும் முத்தம்மாவையுமே குறிக்கிறது என்பதை அவன் புரிந்து கொண்டதால் முத்தமா வருவாள் என்ற நம்பிக்கை அவன் மனதில் ஒரு புதிய உற்சாகத்தை ஊட்டியது.
 
முத்தம்மா வந்த போது சுந்தரம் ஏறக்குறைய கால்வாசி இறைப்பை முடித்திருந்தான். அவளும் வேலம்மாவும் கடகத்தை எடுத்துக்கொண்டு பிஞ்சு மிளகாய்களைப் பிடுங்கத் தொடங்கினர்.
 
உடைந்து கிடந்த சில பாத்திகளைச் சரி செய்துவிட்டு வந்த பரமசிவம்..“தம்பி.. நான் தண்ணி மாறுறன்.. நீ கொஞ்ச நேரம் ஆறு”, என்றுவிட்டு மண்வெட்டியை வாங்கினார். “இல்லை ஐயா.. நான் களைக்கேல்லை”, என்றான் சுந்தரம்.
 
“பறவாயில்லை.. நான் மாறுறன்”, என்றுவிட்டு வேலையைத் தொடங்கிவிட்டார்.
 
சுந்தரம் ஒரு கடகத்தை எடுத்துக் கொண்டு முத்தம்மா நிற்குமிடத்துக்கு வந்து மிளகாய் ஆய ஆரம்பித்தான். அவளிடம் ஏதாவது கதைக்க வேண்டுமென்ற தவிப்பு அவனுள் மேலோங்கிய போதும் உடனடியாகக் கதைக்க எதுவுமே வர மறுத்தது. அவளும் எதுவும் பேசவில்லை. அவன் வந்ததையே பொருட்படுத்தாதது போல் மிளகாய்களைப் பிடுங்கிக் கொண்டிருந்தாள்.
 
“என்ன வேலம்மா.. அண்டைக்கு மாவீரர் அஞ்சலியிலை மேள் விம்மி விம்மி அழுதாள். சரியான கவலை போலை”, என ஒருவித கிண்டலுடன் கேட்டுவிட்டு சிரித்தான் சுந்தரம். அவனைத் திரும்பிப் பார்த்த முத்தம்மாவின் கண்களில் பொறி பறந்தது. அவள், வெடுக்கென, “அந்தச் சாவின்ரை பெறுமதி உங்களை விட எங்களுக்குத்தான் தெரியும்” என்றாள்.
 
சுந்தரம் திகைத்துவிட்டான். பின் தயக்கத்துடன், “எல்லாருக்கும் கவலை தானே” என்றான்.
 
“தலைமுறை தலைமுறையாய் மலையகத்திலை இருந்த எங்களை 83 இனக்கலவரத்திலை கொண்டு தள்ளினாங்கள்.. உயிர் தப்பி ஓடி வந்து அம்மாவும், அப்பாவும் கைக்குழந்தையாய் இருந்த அண்ணாவும் மூண்டு முறிப்புக்கு வந்தினம். அங்கையும் விமான நிலையத்தின்ரை இடமெண்டு எங்களைக் கலைக்க பூவசரங்குளம் வந்தம். அங்கை ஆமி வர மடுவுக்கு வந்தம். நாங்கள் இடம் பெயர இடம் பெயர ஊருக்கொரு பிள்ளையாய் பிறந்து மலையகத்திலை பிறந்த அண்ணையை மடுவில பறிகுடுத்தம்..
 
அண்டைக்கு முள்ளிக்குளத்திலை வெளிக்கிட்ட ஆமி இஞ்சை வந்தால் நாங்கள் பிறகும் ஓடுறதே?”
 
மழை பெய்துவிட்டது போல பேசி முடித்தாள் முத்தம்மா.
 
அவள் அப்பிடிக் கதைப்பாள் என்று வேலம்மாவும் எதிர்பார்க்கவில்லை.
“சரி விடு.. அதெல்லாம் தம்பிக்கும் தெரியும் தானே?” என சமாளித்தாள் வேலம்மா.
 
“இல்லையம்மா.. அண்டைக்கு அந்த அண்ணையவை ஆமியை மறிச்சு திருப்பி அனுப்பினபடியால் தான் நாங்கள் இன்னொருக்கா இடம்பெயராமல் இஞ்சை இருக்கிறம், எங்களுக்காக உயிர் விட்டவைக்காக அழுதால் அது பிழையே?” முத்தம்மாவின் கண்களில் நீர் வடிந்தது.
 
அவளுடன் ஏதாவது கதைக்க வேண்டும் என்பதற்காக ஏதோ சொல்லப் போக இப்பிடி விபரீதமாக மாறிவிட்டதை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
 
எதுவும் பேசாமல் அவன் அவ்விடத்தை விட்டு அகன்றான். அவளுள் எழுவது கோபமா? ஆற்றாமையா? என்று அவனாலே புரிந்துகொள்ள முடியவில்லை.
 
(தொடரும்)
 
தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருகாலத்தின் பதிவு கதையாக நகர்கிறது. போராளிகளின் வாழ்வு ஒரு குறித்த கதாபாத்திரங்களோடு கதையாக நகர்த்தப்படுகிறது. சம்பவ விபரிப்பு அந்த இடங்களில் நிற்கிற உணர்வைத் தருகிறது.

பகிர்வுக்கு நன்றிகள் ஊர்பூராயம். அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்ப்பார்த்தபடியிருக்கிறேன்.

  • தொடங்கியவர்

ஒருகாலத்தின் பதிவு கதையாக நகர்கிறது. போராளிகளின் வாழ்வு ஒரு குறித்த கதாபாத்திரங்களோடு கதையாக நகர்த்தப்படுகிறது. சம்பவ விபரிப்பு அந்த இடங்களில் நிற்கிற உணர்வைத் தருகிறது.

பகிர்வுக்கு நன்றிகள் ஊர்பூராயம். அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்ப்பார்த்தபடியிருக்கிறேன்.

 

நன்றி அக்கா. வேலைப்பளு காரணமாக கடந்த இரு தொடர்களை உரிய நேரத்தில் பதிவிட முடியவில்லை. தாமதத்திற்கு மன்னிக்கவும். இனிமேல் உரிய நேரத்தில் வருமாறு பார்த்துக்கொள்கின்றேன்.

 

Edited by ஊர்பூராயம்

  • தொடங்கியவர்
நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் -15
 
சுந்தரம் எதுவும் பேசாமல் போனமை அவளுள் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது. அவனும் பதிலுக்கு ஏதாவது சொல்லித் தன்னுடன் சண்டையிட்டிருப்பான் என்றே எதிர்பார்த்தாள். அவனின் பின்னால் ஓடிச்சென்று அவனைச் சமாதானப்படுத்த வேண்டும் என ஒரு உணர்வு அவளை உந்தித் தள்ளிய போதும் தாய் வேலம்மா அருகில் நின்ற காரணத்தால் சிரமப்பட்டு அந்த எண்ணத்தை அடக்கிக்கொண்டாள்.கடகத்தை நிரப்பும் முகமாக மிளகாய்களை வேகமாக ஆய ஆரம்பித்தாள். பத்து பதினைந்து நிமிடங்களில் அரைக்கடகம் நிறைந்துவிட்டது. கைகள் மிளகாய்களை ஆய்ந்த போதும் கண்கள் அடிக்கடி கொட்டில் வாசலை நோக்கிப் பாய்ந்தன. அவன் வெளியில் தென்படவேயில்லை.
 
“அம்மா.. நீங்க பிடுங்கினதையும் தாங்க”, என்று கூறிவிட்டு வேலம்மா ஆய்ந்த மிளகாய்களையும் தனது கடகத்தில் நிரப்பிக் கொண்டு முத்தம்மா கொட்டிலை நோக்கி நடந்தாள். அவள் கொட்டிலுக்குள் சென்ற போது சுந்தரம் பிஞ்சுமிளகாய் குவியலிலிருந்து செம்பழங்களை தெரிந்து வேறொரு கடகத்தில் நிரப்பிக்கொண்டிருந்தான். அவள் குவியலில் மிளகாயைக் கொட்டிய போதும் அவன் அவளை நிமிர்ந்து பார்க்கவேயில்லை.
 
அவளால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
 
அவள் மெல்லிய குரலில், “என்னிலை கோபமே?” எனக் கேட்டுவிட்டு அவனைப் பார்த்தாள்.
 
அவன் அப்போதும் எதுவும்  பேசவில்லை.
 
அவள் ஒரு சிணுங்கலுடன் மீண்டும் கேட்டாள், “சொல்லுங்கோவன், என்னிலை கோபமே?”
 
அவன் அவளை நிமிர்ந்துபார்த்துவிட்டு ஒரு பெருமூச்சுடன்,
 
“இல்லை.. எனக்கு என்னிலை தான் கோபம்”, என்றான்.
 
“நீங்கள்.. என்ன சொல்லுறியள்?”
 
“இல்லை.. மாவீரருக்கு நீ அஞ்சலி செய்ததைப் பகிடி பண்ணுற அளவுக்கு நான் முட்டாளாய் போனன்”
 
அவள் சில விநாடிகள் எதுவும் பேசவில்லை. பின்பு, “நான் அதை உங்களிட்டை இதமாய்ச் சொல்லியிருக்கலாம். கோவிச்சிருக்கக் கூடாது தானே?” என்றாள் அவள்.
 
சுந்தரத்தின் கோபம் கவலை எல்லாம் அவளின் வார்த்தைகளுடன் எங்கோ பறந்துவிட்டது.
 
எழுந்து அவளருகில் வந்து மதுரமாக அவன், “ஏன்.. என்னைக் கோவிக்க உனக்கு உரிமை இல்லையே?”
 
அவள் மெல்லிய ஒரு புன்னகையுடன், “இல்லை”, என்றாள் சுந்தரம் வியப்புடன், “ஏன் அப்பிடி?”
 
“அப்பிடி நீங்கள் எனக்கு உரிமையைத் தந்திட்டு எங்கட அப்பா இரவில குடிச்சிட்டு வந்து அம்மாவுக்கு அடிக்கிற மாதிரி எனக்கடிக்கிற உரிமையை நீங்கள் கேட்டால் என்ன செய்யிறது?”
 
“அப்ப, நாங்கள் அம்மா அப்பாவாகிறதெண்டு முடிவு எடுத்திட்டியே?” என ஒரு மெல்லிய நகைப்புடன் கேட்டான் சுந்தரம். அவள் முகம் திடீரெனச் சிவந்தது. பின்..“சீ.. ஆசைதான்!” எனச் சொல்லிவிட்டு வெளியே போனாள் முத்தம்மா.
 
மனம் மெல்ல இறகு விரித்துப் பறப்பது போன்று ஒரு சுகம் அவனில் பரவி ஒருவித மகிழ்ச்சியை உண்டுபண்ணியது.
 
சுந்தரம் தகப்பனிடம் மண்வெட்டியை வாங்கி தண்ணிமாற மிளகாய்ப் பாத்திகளை நோக்கிப் போனான்.
 
சின்னப்பர் அதிகாலையிலேயே எழுந்து சேனைக்குள் இறங்கிவிட்டார். மறிப்பை உயர்த்திவிட்டு பயிர்களுக்கு நீர் பாய்ச்ச ஆரம்பித்துவிட்டார்.
 
கத்தரிச் செடிகள் நன்றாக மதமதத்து வளர்ந்து காய்த்துத் தள்ளியிருந்தன. சில கத்திரிகள் குலை குலையாகக் காய்த்திருந்தன. சுண்டங்கத்தரியையும், நாட்டுக்கத்திரியையும் ஒட்டி உருவாக்கிய செடிதான் அது.
 
முருகரால் அதை நம்பவே முடியவில்லை. ஆனால் குலை குலையாகத் தொங்கிய கத்தரிக்காய்கள் அவரை நம்பவைத்தன.
 
“சின்னப்பர்.. நீங்கள் இறைச்சுப்போட்டு வாருங்கோ… நான் போய் றொட்டி தட்டுறன்”, என்றுவிட்டு முருகர் கொட்டிலை நோக்கிப் போனார்.
 
ஏற்கனவே தாங்கள் கொண்டுவந்த கோதுமை மாவை எடுத்து றொட்டி சுட ஆரம்பித்துவிட்டனர். முருகர் சற்றுத் தொலைவில் நின்ற வல்லாரையில் இலைகளைப் பிடுங்கி வந்து பிஞ்சு மிளகாயுடன் சேர்த்து அங்கு அம்மி போன்ற போன்ற வடிவத்தில் இருந்த கருங்கல்லில் வைத்து அரைத்து உருட்டி எடுத்துக் கொண்டார். பின்பு காட்டுக்குள் போய் சிறிது நேரத்தில் சில எலுமிச்சம் பழங்களைக் கொண்டு வந்து வெட்டிப் பிழிந்து அந்த அரையலுடன் நன்றாகப் பிசைந்தார்.
 
“டேய்.. தம்பியவை இந்தப் பச்சடியோட றொட்டியைத் திண்டுபாருங்கோ.. எப்பிடி நாதம் பேசுதெண்டு”, என்றார் முருகர்.
 
சின்னப்பரும் வேலைகளை முடித்துவிட்டு, அங்கு வரவே எல்லோரும் றொட்டிகளை உண்ண ஆரம்பித்தனர். மலையவனுக்கும் சிவத்துக்கும் உச்சிவரை உறைத்த பச்சடியின் காரம் சின்னப்பருக்குப் போதுமானதாக இருக்கவில்லை. அவர் பிஞ்சு மிளகாய்களைக் கடித்தவாறே றொட்டிகளைச் சாப்பிட்டார்.
 
சாப்பிட்டு முடிந்ததும் முருகர், “அண்ணை காட்டுப்பக்கம் போய் அந்த சிகரட் பெட்டி சங்கதி என்னண்டு பாத்து வருவமே?” என சின்னப்பரிடம் கேட்டார்.
 
“ஓ..ஓ.. கட்டாயம் அறியத்தான் வேணும். உவங்கள் தம்பியவை நிக்கட்டன்.. நாங்கள் போவம்”, என்றார் சின்னப்பர்.
 
“அவங்கள் காடு பாக்கத்தானே வந்தவங்கள். இஞ்சை நிண்டு என்ன செய்யிறது? வரட்டன்”, என்றார் முருகர்.
 
“பயமில்லாமல் எங்களோடை வாறதெண்டால் வரட்டும்.. காடு பொல்லாத குழுவன் காடு”
 
“எல்லாம் பழகத்தானே வேணும்..”, என்றுவிட்டு, “எழும்புங்கோ போவம்”, என சிவத்தையும் மலையவனையும் அழைத்தார் முருகர்.
 
ஐவரும் கொட்டில் பின்புறமாகக் கழிவு வாய்க்காலில் இறங்கி அதைக் கடந்து வாய்க்கால் ஒரமாக நடக்கத் தொடங்கின. யாவரணையும், காயாவுமாக உயரமான மரங்களே காணப்பட்டன. காயா மரங்கள் நட்டு நீரூற்றி வளர்த்தது போன்று வரிசையாக நின்றிருந்தமை ஒரு தனி அழகைக் கொடுத்தது.
 
அவர்கள் வருவதைக் கண்ட மந்திகள் பாய்ந்து குதித்து அடுத்தடுத்த மரங்களில் போயிருந்து அவர்களையே பார்த்தன.
 
அவைகளின் பாய்ச்சலால் பட்சிகள் கலைந்து கீச்சிட்டவாறு பறக்கத் தொடங்கின.
 
சிறிது தூரம் சென்ற பின்பு சின்னப்பர் அங்கு காணப்பட்ட ஒரு மாட்டுப்பாதையால் காட்டுக்குள் இறங்கினார். ஒரு சில நிமிடங்களில் ஒரு வெட்டையான இடமும் ஒரு பள்ளமும் தென்பட்டன.
 
சின்னப்பர் சொன்னார், “அந்தப் பள்ளம் ஒரு மோட்டை. மாரியில தண்ணி நிக்கும். அங்காலை பார் அந்த மருத மரத்தடியிலை மணலாய் தெரியுது!, அது ஒரு அறுத்தோடி, அந்த அறுத்தோடி மணலிலை தான் அந்தப் பெட்டி கிடந்தது”,
 
“அதிலை ஒருக்கால் போய்ப் பாப்பமே?”, எனக் கேட்டான் சிவம்.
 
“அதுக்கை என்ன கிடக்கப்போகுது? ஆசைப்படுறாய்.. வா.. போய்ப்பாப்பம்..”, என்று விட்டு சின்னப்பர் முன்னால் நடந்தார்.
 
ஐவரும் மோட்டைக்குள் இறங்கிப் பின் அறுத்தோடிக்குள் ஏறினர். மோட்டைக்குள் எந்த அடையாளங்களையும் காண முடியவில்லை. அறுத்தோடியை மூடியிருந்த படியால் பல இடங்களில் குனிந்தே செல்ல வேண்டியிருந்தது.
 
குனிந்தும் நிமிர்ந்தும் நடந்துகொண்டிருந்த சிவம் திடீரென, “அப்பு.. அந்தப் பத்தையுக்க ஏதோ மின்னுது”, என்றான்.
 
“எங்கை பாப்பம்”, என்றுவிட்டு முருகர் குனிந்து பார்த்த போது ஒளிப் புள்ளி நடுப் பற்றைக்குள் தெரிந்து.
 
சின்னப்பராலும் அது என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை. பற்றைக்குள் இறங்குவது சாத்தியமில்லை. முள்ளு நிறைந்த அடர்த்தியான சூரை புதராக இருந்தது அது.
 
சின்னப்பர் கொண்டு வந்த காட்டுக் கத்தியால் ஒரு பக்கம் ஒரு கவர் வரும் வகையில் ஒரு நீண்ட தடியை வெட்டினார். சிவம் கத்தியை வாங்கி பற்றைக்குள் அதை விட்டு துளாவினான். திடீரென அந்த ஒளிப்பொட்டு காணாமல் போய்விட்டது. சிவம் சளைத்துவிடவில்லை. தொடர்ந்து துளாவினான் அவன்.
 
ஏதோ தடியில் வித்தியாசமான பொருள் கத்தியில் தட்டுப்படுவது போல் படவே வெகு பக்குவமாக மெல்ல அதை இழுத்தான்.
 
கைகளில் முட்கள் கீறிய போதும் அவன் முயற்சியை விடவில்லை.
 
கத்தியின் முகப்புப் பகுதியில் கொழுவிக் கொண்டு  மீன் ரின் போன்ற ஒரு தகரம் வெளியே வந்தது. மிகவும் அவதானமாக அதைக் கையில் எடுத்துப் பார்த்துவிட்டு, “அப்பு.. இது சாப்பாட்டு ரின்.. இஞ்சை ஆமி தான் இது வைச்சிருக்கிறாங்கள்” என்றான் சிவம்.
 
“அப்ப ஆரோ ஆமிக்காரர் இதிலை வந்திருந்து சாப்பிட்டு சிகரட் பத்தி போயிருக்கிறாங்கள்”, என்றார் முருகர்.
 
“முருகர் இஞ்சாலை ஒரு கட்டையிலை காம்ப் இருக்குது.. அங்காலை ஒரு மூண்டு கட்டையிலை கிடக்குது.. வடக்கு போனாலும் மடு றோட் காம்ப்.. அப்பிடியிருக்க இந்தக் குழுவன் காட்டுக்கை சாப்பிட வந்தவங்களே?”, என்றார் சின்னப்பு.
 
“அப்ப.. ஆரப்பு வந்திருப்பங்கள்”, என்றார் சின்னப்பர் மீண்டும்.
 
சிவத்துக்கு சில விஷயங்கள் புரிவது போல் தோன்றியது. அவன் மெல்ல, “அப்பு உந்த அறுத்தோடியோடை கொஞ்சம் மேலை போய்ப் பாப்பம். சில வேளை ஏதாவது விளங்கினாலும் விளங்கும்”, எனக் கேட்டான்.
 
“ஓ.. ஓ.. உது என்னண்டு அறியத்தான் வேணும். வாருங்கோ போவம்”, என்றுவிட்டு சின்னப்பர் முன்னால் நடந்தார்.
 
சிவமும் மலையவனும் அறுத்தோடியின் இரு பக்கங்களிலும் மிகவும் துல்லியமாக அவதானித்துக் கொண்டு நடந்த போதும் எந்தவித தடையங்களும் கண்ணில் படவில்லை.
 
ஆனால் அப் பகுதியில் ஏதாவது இருக்கக் கூடும் என அவர்கள் நம்பினர்.
ஒரு கூப்பிடு தூரம் வந்த பின்பு அந்த அறுத்தோடி ஒரு பெரிய அறுத்தோடியில் இணைந்து கொண்டது. அந்தச் சந்திப்பு கொஞ்சம் பெரிய வெட்டையாக இருந்தது.
 
சின்னப்பர் தென் மேற்குப் பக்கமாகக் கையைக் காட்டி, “அங்கை காட்டுக்கு மேலாலை ஒரு உயர மரம் தெரியுது கண்டியளே?” எனக் கேட்டார்.
 
அவர்கள் நன்றாக உற்றுப் பார்த்த போது வெகு தொலைவில் மற்ற மரங்களுக்கு மேலால் ஒரு மரம் தெரிந்தது.
 
அவர் சொன்னார், “அது கஜூவத்தை ஆமிக் காம்பிலை நிக்கிற மரம். இப்ப சொல்லுங்கோ உதிலை இருக்கிற ஆமி சாப்பாடு கொண்டு வந்து காட்டுக்கை சாப்பிடுவனே?”
 
அவர் சொல்வதில் நியாயமிருப்பதாகவே பட்டது. ஆனால் அந்த சாப்பாட்டு ரின்னும், சிகரட் பெட்டியும் அங்கு எப்பிடி வந்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதில் சிவம் உறுதியாக இருந்தான்.
 
(தொடரும்)
 
தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்.
  • தொடங்கியவர்
நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 16
 
அந்த மரத்தை நோக்கிய போது அவர்கள் நிற்குமிடம் கஜுவத்தை இராணுவமுகாமிலிருந்து நான்கு அல்லது ஐந்து கிலோமீற்றருக்குள்ளேயே இருக்க வேண்டுமென சிவம் ஊகித்துக் கொண்டான்.சின்னப்பர் சொன்னார், “இப்பிடியே நேர கஜூவத்தையை நோக்கிப் போனமெண்டால் இடையில ஒரு பெரிய கஞ்சாத் தோட்டம் கிடக்குது. அது ஒரு சிங்களவன் நடத்துறான். நாலு பக்கமும் கடுமையான காவல். ஆர் அந்தப் பக்கம் போனாலும் வெடிதான்.. கதை பேச்சுக்கே இடமில்லை”.
 
முருகரும் அந்தக் கஞ்சாத் தோட்டம் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார். ஆனால் இராணுவ முகாமுக்கு அண்மையில் கஞ்சாத் தோட்டம் இருப்பதைக் கேள்விப்பட்ட போது சிவத்தால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.
 
“அப்பு.. அந்த அறுத்தோடி எங்கை போகுது?” எனக் கேட்டான் சிவம்.
 
“இது இந்த வெட்டையில இரண்டாய்ப் பிரிந்த நாங்கள் இப்ப வந்த அறுத்தோடியாலை போய் அந்த சின்ன மோட்டையிலை முடிஞ்சிடும்.
 
மழை நேரம் மோட்டை நிறைஞ்சு காட்டுக்கை தண்ணி பாய்ஞ்சு எங்கட கழிவாத்தில விழும். அது அப்பிடியே போய் முதலைக்குடாவுக்கு கீழை அருவியாத்திலை விழும்”, என்றார் சின்னப்பர்.
 
“அப்ப.. இந்தப் பெரிய அறுத்தோடி…?”
 
“இதிலை வாற தண்ணி நேர போய் குஞ்சுக் குளத்திலை விழும்”
 
ஒரு கிளை குளத்தில் சேர்ந்து வயல்களுக்கு நீர் பாய்ச்சி பின் கழிவில் சேர மற்றக் கிளை குறுக்குப்பாதை பிடித்து அதே கழிவில் சேர்வதை நினைத்த போது சிவத்துக்கு வியப்பாக இருந்தது. இப்படியான பாதைகளையே ஆழ ஊடுருவும் படையணியினர் பயன்படுத்தக் கூடும் என அவன் கருதினான்.
 
முருகரும் தாங்கள் வந்த நோக்கத்தை மறந்துவிடவில்லை.
 
“அண்ணை உப்பிடியே அறுத்தோடியோடை குளம் மட்டும் போய் பாத்திட்டு வருவமே?”, எனக் கேட்டார் அவர்.
 
“சரி.. போய் பாப்பம்”, என்றுவிட்டு சின்னப்பர் அறுத்தோடிக்குள் இறங்கி அடுத்த கரைக்கு ஏறி அதன் ஓரமாக நடக்கத் தொடங்கினார். சிவமும் மலையவனும் இரு பக்கங்களையும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டே நடந்தனர்.
 
தொடர்ந்து நடந்தபோது காட்டுக்குள்ளிருந்து வந்து அந்தப் பெரிய அறுத்தோடியுடன் இணையும் சில குழிகளைக் கடக்கவேண்டியிருந்தது. அப்படியான ஒன்றில் இறங்கி ஏறும் போது சிவம் திடீரென.. “அப்பு.. கொஞ்சம் நில்லுங்கோ…” என்றான். நின்று திரும்பிப் பார்த்த சின்னப்பரிடம், “அங்கை பாருங்கோ”, என்றுவிட்டு அவன் வாடிக்கிடந்த காட்டுக் கொடிகளைக் காட்டினான்.
 
“பொறு வாறன்”, என்றவிட்டு திரும்பி வந்து அந்தக் கொடித் துண்டுகளைக் கையில் எடுத்துப் பார்த்துவிட்டு, “இது கால் சுத்திக் கொடி”, என்றார்.
 
முருகரும் வாங்கிப் பார்த்துவிட்டு சிவத்திடம், “இது சும்மா நிலத்திலை கிடக்கும். மிதிச்சமெண்டால் காலைச் சுத்திப் போடும். கழட்டிக் கொள்ள ஏலாது. ஒரு பக்கத்தால கழட்ட மற்றப் பக்கத்தால சுத்திப்போடும்”, என்றார்.
 
சின்னப்பரும், “எங்களைப் போலை அனுபவமுள்ளவைக்கு அதைக் கழட்டுறது எப்பிடி எண்டு தெரியும். புது ஆக்களெண்டால் அதுகளை அறுத்துத்தான் காலைக் கழட்ட வேணும் இல்லாட்டில் அதிலை கிடக்க வேண்டியது தான்”, என்றார்.
 
சிவம் சுற்றும் முற்றும் பார்த்தான். சற்றுத் தொலைவில் அந்தக் கிளை அறுத்தோடியின் கரையில் அந்தக் கொடி படர்ந்து கிடந்தது.
 
“அப்பு.. அது தான் அந்தக் கொடியே?”
 
“ஓமோம்.. அதுதான் என்றுவிட்டு சின்னப்பர் அருகில் போனார். மற்றவர்களும் அவரைப் பின் தொடர்ந்தனர்.
 
அந்த வெட்டப்பட்ட கால் சுற்றிக் கொடியின் அருகில் வேட்டைச் சப்பாத்துக்களின் அடையாளங்கள் மண்ணில் அழியாமல் கிடந்தன.
 
முருகர் சொன்னார், “அப்பு.. அவங்கள் இதாலை தான் வந்திருக்கிறாங்கள்”
 
சின்னப்பர் சற்று யோசித்தவாறு, “வேட்டைச் சப்பாத்து எண்டால் ஆமி தான்.. ஆனால் அவங்கள் ஏன் இதுக்கை வரப்போறாங்கள்.. ஏன் இஞ்சை வைச்சு சாப்பிடுறாங்கள்.. ஒண்டுமே விளங்குதில்லை” எனக் குழம்பினார்.
 
ஆனால் சிவத்துக்கு எல்லாமே விளங்கியிருந்தாலும் அவன் எதுவுமே  பேசவில்லை.
 
“வாருங்கோ.. இப்பிடி கொஞ்சத்தூரம் போய்ப் பாப்பம்”,
 
என்றுவிட்டு சின்னப்பர் அந்தக் கிளை அறுத்தோடியினூடாக நடக்க ஆரம்பித்தார். அருகிலிருந்த பற்றைகள் இடைஞ்சல் செய்த போதிலும் அவர் அதைப் பொருட்படுத்தாமல் நடந்துகொண்டிருந்தார்.
 
போகப் போக காடு பெரும் மரங்களைக் கொண்டதாக அமைந்திருந்தது. அறுத்தோடியின் மணற்பாங்கான இடங்களில் வேட்டைச் சப்பாத்தின் அடையாளங்கள் தென்பட்டன. சின்னப்பர் சிறிது தூரம் சென்ற பின்பு, “முருகர்.. உப்பிடியே நேரை போனால் வில்பத்துக் காடு தான். அங்காலை நாங்கள் வேட்டைக்குப் போறேல்லை. உங்காலை காடு பார்த்து பொடியளுக்கு பிரியோசனமில்லை. மற்றது ஆரோ வித்தியாசமான ஆக்கள் காட்டுக்கை இறங்கியிருக்கிறாங்கள். எண்டும் விளங்குது. ஆனால் இவங்கள் வில்பத்து பக்கத்தாலை தான் வந்திருக்கிறாங்கள் எண்டும் விளங்குது. இனித் திரும்புவம் எண்டு யோசிக்கிறன்” என்றார்.
 
முருகர் சிவத்தைப் பார்த்தார்.
 
அவனும், “ஓமப்பு திரும்புவம்”, என்றான்.
 
போன பாதையிலேயே திரும்பவும் கழிவாற்றங்கரைக்கு அவர்கள் வந்துசேர்ந்தனர்.
 
சிவம் கழிவாற்றைப் பார்த்தான். அது வளைந்து வளைந்து சென்று காட்டுக்குள் மறைந்தது. அவன் சின்னப்பரிடம், “இது எங்கையப்பு போகுது?” எனக் கேட்டான்.
 
“உது உப்பியே போய் முதலைப்பிட்டிக்கு கொஞ்ச தூரம் கீழை போய் விழும். பாக்கிறதெண்டால் வாருங்கோ போவம்; கன தூரம் இல்லை”, என்றுவிட்டு கழிவாற்றங்கரையால் நடக்கத் தொடங்கினார் சின்னப்பர்.
 
அவ்விடத்தில் காடு அவ்வளவு அடர்த்தியாக இருக்கவில்லை. இடையிடையே பெரும் மருதமரங்களைக் காணக்கூடியதாக இருந்தால் இவ்விடம் நல்ல நீரோட்டம் உள்ள இடமாக இருக்கவேண்டுமென சிவம் ஊகித்துக் கொண்டான்.
 
அருவியாற்றங்கரைக்கு வந்ததும் சின்னபர், “இதிலை ஆறு கொஞ்சம் ஒடுக்கமெண்டாலும் வேகமும் ஆழமும் கூட. ஆத்துக்கு அங்காலை போறதெண்டால் இதக் கடந்து முதலைப்பிட்டியிலை தான் இறங்கவேணும்” என்றார்.
 
“இதிலை வேறை இடத்திலை கடக்கேலாது”,
 
“கடக்கலாம். ஆனால் நேரை ஆத்துக்கு குறுக்க போனால் பள்ளங்களிலை விழுந்து தண்ணியோட போக வேண்டியது தான். தெரிஞ்சவங்கள் பள்ளங்களை விலத்தி ஏரி மாதிரிக் கிடக்கிற இடங்களிலை கடப்பார்கள். மாரியெண்டால் நினைச்சுப் பார்க்க ஏலாது”, என்றார்  அவர்.
 
தன் கேள்விகளுக்கு அவர் தரும் ஒவ்வொரு பதில்களும் ஆழ ஊடுருவும் படையணியினரின் பாதையை அவனுக்கு வரைபடம் காட்டி விளங்கப்படுத்துவது போன்று சிவத்தைத் தெளிவுபடுத்திக் கொண்டிருந்தன.
 
அவன் சிறுத்தைப் படையணியில் இருந்த போது ஒரு முறை ஒரு தாக்குதலில் பங்கெடுத்துவிட்டுத் திரும்பும் போது காடு மாறி முள்ளக் காட்டுக்குள் அகப்பட்டுப் படாத பாடு பட்டதும், பின்பு கொக்குகள் பறந்த திசையை நோக்கி நடந்ததும், புவசரன் குளத்தில் ஒரு வயல் காவல் கொட்டிலில் போய் மிதந்ததும் நினைவுக்கு வந்தது. பின்பு விவசாயின் உதவுடன் தம்பனையின் பின் பக்கத்தால் வந்து பண்டிவிரிச்சானை அடைந்தார்கள்.
 
ஆனால் சின்னப்பர், முருகப்பர் போன்ற வேட்டைக்காரர்கள் எவ்வளவு துல்லியமாக காடுகளையும், அங்குள்ள ஆறுகள், நீர் நிலைகள் என்பவற்றையும் அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்த போது அவர்கள் மீது ஒரு தனியான மதிப்பு உருவாகியது.
 
மதியம் கொட்டிலுக்கு திரும்பிய அவர்கள் சிவம் கொண்டு வந்த அரிசியில் சமைக்க ஆரம்பித்தனர். முருகர் பருப்பையும் கருவாட்டையும் போட்டு ஒரு கறி வைக்க,  சின்னப்பர் உருக்கி ஒரு போத்தலில் விட்டு வைத்த பன்றி நெய்யில் மரை வத்தலைப் பொரித்து எடுத்தார். முருகர் தோட்டத்தின் ஒரு மூலையில் நின்று பிம்பிளி மரத்தின் காய்களைப் பிடுங்கி வந்து புளிக்குப் பதிலாக பருப்புக் கறியில் போட்டு அவிய விட்டார்.
 
சிவமோ மலையவனோ அப்பிடி ஒரு சுவையான உணவை முன் எப்பொழுதுமே சாப்பிடுவதில்லை. தேங்காய், கடுகு, சீரகம் என எதுவுமே இல்லாமல் எப்பிடி இவளவு சுவையான உணவைச் சமைக்க முடியும் என அவர்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
 
சாப்பிட்டு முடித்த பின்பு சின்னப்பர், “இரவைக்கு நில்லுங்கோவன் ஒரு பண்டி வெடி வைச்சுக் கொண்டு போகலாம்” என்றார்.
 
“என்னண்டண்ணை இஞ்சையிருந்து காவிறது? பொழுது படத் தானே போறம் – மடுவுக்கை இறங்கினாப் போலை பாப்பம்”, என்றார் முருகர்.
 
சின்னப்பரும் அதை ஏற்றுக்கொண்டார்.
 
திரும்பி வரும் போது அருவியாற்றைக் கடந்து, வண்டில் பாதையால் வந்து ஒற்றையடிப் பாதையால் இறங்குமிடம் வந்த போது முருகர், “தம்பியவை நாங்கள் இனி வேற ஒரு பாதையால போவம். நேர போய் உங்கட இடத்திலை மிதக்கும்” என்றார்.
 
நால்வரும் வண்டில் பாதையால் நடந்து சிறிது தூரம் சென்ற பின்பு வலப்புறமாகத் தென்பட்ட ஒரு ஒற்றையடிப் பாதையில் இறங்கினர். ஏறக்குறைய இரண்டு மணித்தியாலங்கள் நடந்த பின்பு ஒரு தார் வீதியைக் கடக்க வேண்டி வந்தது.
 
“தம்பி.. இது மதவாச்சி றோட்டு.. இதைக் கடந்து கொஞ்சத் தூரம் போக குருக்களுரின்ரை பின் பக்கம் வரும். அதால போய் வவுனியா றோட்டைக் கடந்து கொஞ்ச இடம் போக பண்டிவிரிச்சான் குளம் வரும். பிறகென்ன அப்பிடியே அலைகரையாலை போக கீரிசுட்டான் தானே?, நாங்கள் போன இடத்துக்கு இந்தப் பாதை வலு கிட்ட. ஆனால் வலு அவதானமாய் இருக்க வேணும்”, என்று கூறிவிட்டு நடக்க ஆரம்பித்தார் முருகர்.
 
அவர்கள் பின்புறமாகக் குருக்களுரைக் கடந்த போது கிராமம் இருளில் உறைந்து போய்க் கிடந்தது. ஏதோ ஒரு வித மயான அமைதி நிலவுவதாகவே சிவத்துக்கு தோன்றியது.
 
அவர்கள் வவுனியா வீதியை அண்மித்த போது வீதியில் ஒரு பிரகாசமான வெளிச்சம் வந்து கொண்டிருந்தது.
 
நால்வரும் பின் வாங்கிப் பற்றைகளுக்குள் படுத்துக் கொண்டனர்.
 
வந்த வெளிச்சம் சற்றுத் தொலைவில் வந்ததும் அணைந்தது.
 
நால்வரும் உடனடியாகவே தங்கள் துப்பாக்கிகளைத் தயார் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டு தனித்தனி இடங்களில் போய்ப் படுத்துக் கொண்டனர்.
 
(தொடரும்)
 
தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்
 
  • தொடங்கியவர்
நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 17
 
வெளிச்சம் அணைக்கப்பட்டதுமே ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போவதைச் சிவம் புரிந்து கொண்டான். உடனடியாகவே நால்வரும் துப்பாக்கிகளைத் தயார் நிலையில் வைத்துக் கொண்டு தனித் தனியான மறைவிடங்களில் பதுங்கிக் கொண்டனர்.
மீண்டும் வாகனத்தின் லைற் எரிந்தது.
 
கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் ஒருவனை இன்னொருவன்  எழுந்து முழங்காலில் நிற்க தள்ளி விட்டவன் அவனைக் காலால்  உதைத்துவிட்டு ஏதோ கத்தினான். அவனின் கையில் மின்னிய ஒரு வாள் லைற் வெளிச்சத்தில் பளபளத்தது. அவர்களைச் சுற்றி மேலும் நால்வர் சூழ்ந்து கொண்டனர்.
 
நின்றவர்களில் ஒருவன் முழங்காலில் நின்றவனைக் கையால் காட்டி ஏதோ சொல்ல மற்றவன் வாளை ஓங்கினான்.
 
சிவம் இனித் தாமதிக்க நேரமில்லை என்பதைப் புரிந்து கொண்டான். வாளை ஓங்கியவனின் நெற்றியை இலக்குவைத்து துப்பாக்கியின் விசையை அழுத்தினான். அவன் அப்பிடியே சுருண்டு விழுந்தான். மலையவன், முருகர், சோமர் முதலியோரின் துப்பாக்கிகளும் முழங்க மேலும் இருவர் விழுந்தனர்.
 
மற்ற இருவரும் ஓடிப்போய் வாகனத்தில் ஏறி அதை வேகமாகக் கிளப்பினர். சிவம் ரயரை இலக்குவைத்து சுட்டபோதும் அது வேகமாகப் புறப்பட்டதால் குறி தப்பிவிட்டது. அந்த “ஹையர்ஸ்” வாகனத்தின் பல இடங்களில் துளையிடப்பட்ட போதும் அது வீதியின் வளைவான இடமாதலால் கண்களில் இருந்து மறைந்து ஓடித் தப்பிவிட்டது.
 
அவர்கள் போய்விட்டனர் என்பது உறுதியான போதும் சிவம் மிகவும் எச்சரிக்கையுடனேயே அவர்கள் விழுந்து கிடந்த இடத்துக்கு வந்தான். அவனைக் கண்டதும் கைகள் கட்டப்பட்டவன் எழுந்து நின்றான். சிவம் அவனைப் பற்றிப் பொருட் படுத்தாமல் விழுந்து கிடந்தவர்களை ரோச் லைற்றை அடித்துப் பார்த்தான். மூவரும் இறந்துவிட்டதை உறுதி செய்து கொண்டான்.
 
பின்பு சிவம் மற்ற மூவரையும் மறைவிலிருந்து வெளியேவரும்படி அழைத்துவிட்டு அருகில் நின்றவனின் கைக் கட்டை அவிழ்த்து விட்டான்.
 
அருகில் வந்து ரோச் லைற்றை அடித்து அவனின் முகத்தைப் பார்த்த முருகர், “டேய்.. நீ.. பதினோராம் கட்டை கந்தசாமியல்லோ?”, என்றார்.
 
அவனும் முருகரை அடையாளம் கண்டுவிட்டான்.
 
“ஓமப்பு.. நான் தான்” என்றான் அவன்.
 
“என்னடா? என்ன நடந்தது?” எனக் கேட்டார் முருகர்.
 
“என்னை வெட்டவெண்டு கொண்டு வந்தவங்கள்.. நல்ல காலமாய் நீங்கள் கண்டதால தப்பியிட்டன்”
 
இன்னும் அவனின் குரலில் நடுக்கம் தீரவில்லை.
 
“அப்பு இதிலை நிக்கிறது ஆபத்து. விசயத்தை ஆறுதலாய் விசாரிப்பம். இப்ப காட்டுக்கை இறங்குவம்”, என்றான் சிவம்.
 
“ஓமோம் எங்கடை எல்லையுக்கை போய்ச் சேருவம் செத்தவங்களுக்கு அவங்கடை ஆக்கள் வந்து கருமாதி செய்யட்டும்”, என முருகர்  மெல்லச் சிரித்தபடி சொல்லிக்கொண்டு மதவுக்கு அருகில் தெரிந்த ஒரு அறுத்தோடியில் இறங்கி காட்டுக்குள் நடக்கத் தொடங்கினார்.
 
அவர்கள் காட்டுக்குள்ளால் நடந்து சிறிது தூரத்தில் போய்க் கொண்டிருந்த போது பிரதான வீதியால் கனரக வாகனங்கள் வேகமாக ஓடும் ஒலி கேட்டது.
 
சோமர் கிண்டலாக, “தம்பி.. ஆமிக்காரர் பிரேதம் தூக்கப் போறாங்கள்”, என்றார்.
 
மலையவன், “சை.. பிழைவிட்டிட்டமண்ணை”, என்றான்.
 
சிவம், “என்னது?, எனக் கேட்டான்.
 
“நிண்டிருந்தால் அவங்களிலை நாலு பேரையும் போட்டிருக்கலாமண்ணை”, என்றான் மலையவன்.
 
“சாமத்திலை ஆமி வாறதெண்டால் பெருந்தொகையாத் தான் வருவாங்கள். நாங்கள் இரண்டு ஏ.கேயையும் இரண்டு வேட்டைத் துவக்குகளையும் வைச்சு கிரிக்கட்டே விளையாடுறது”,
 
மலைவன் அதன் பிறகு எதுவும் பேசவில்லை. ஆனால் மனதில் சண்டைக்கு துணிவு மட்டும் இருந்தால் போதாது முன் யோசனையும் தந்திரங்களும் வேண்டும் என்பது அவன் மனதில் வந்து உறைத்தது.
 
காடு அவ்வளவு சிரமமாக இருக்கவில்லை.
 
ஆங்காங்கே குறுக்கிட்ட ஒற்றையடிப்பாதைகள் அவர்களின் பயணத்தை இலகுவாக்கின.
 
ஏறக்குறைய ஒரு மணிநேரம் நடந்த பின்பு ஒரு குளத்தின் வால் கட்டுப்பக்கம்  அவர்கள் வந்து சேர்ந்தார்கள்.
 
சிவம் அந்த இடத்தை நன்றாக அவதானித்து விட்டு முருகரிடம்,
 
“அப்பு.. இது பண்டிவிரிச்சான் குளமல்லே?” எனக் கேட்டான்.
 
முருகர், “ஓ.. இப்படியே குளக்கட்டிலை போய் துருசடியால இறங்கினால் ஊருக்குள்ளை போகலாம். நேரை காட்டுக்காலை போனால் தட்சினாமருதமடு அலைகரையிலை போய் மிதக்கலாம்” என்றார்.
 
“காட்டுக்காலை போவம்”, என்ற சிவம், “கந்தசாமியண்ணை என்ன நடந்ததெண்டு நடந்து  கொண்டே சொல்லுங்கோ, கேப்பம்” எனக் கதையைத் தொடங்கி விட்டான்.
 
நிறுவனம் ஒன்றில் காவலாளியாக கடமையாற்றும் கமலநாதன் என்பவன் கந்தசாமியின் தங்கை பாடசாலையால் வரும் போது பத்தாம் கட்டையில் காட்டுக்குள் இழுத்துச்சென்று பலவந்தமாக கற்பழித்துவிட்டான். அவள் வீட்டில் வந்து சொல்லி அழுதுவிட்டு அன்றிரவு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டாள்.
 
கமலநாதன் இராணுவத்துடன் இணைந்து செயற்படும் தமிழ் ஆயுதக் குழுவிற்கு வால் பிடித்துத் திரிபவன். கந்தசாமி அவனை வீதியில் கண்டு கத்தியுடன் விரட்டிய போது அவன் காட்டுக்குள் ஓடித் தப்பிவிட்டான். அதன் பிறகு மூன்று நாட்களாகியும் கமலநாதன் திரும்பி வரவில்லை. ஆனால் கமலநாதனின் செருப்புக்கள் மட்டும் குருக்கள் மதவடியில் காணப்பட்டன.
 
அதன் பின்பு இராணுவப் புலனாய்வாளர்களுடன் சென்ற ஆயுதக் குழுவினர் கந்தசாமியைப் பிடித்துக் கொண்டுபோய் கமலநாதன் பற்றி விசாரித்து சித்திரவதை செய்தனர். கந்தசாமியிடம் எந்த ஒரு தகவலையும் பெற முடியாத நிலையில் செருப்புக்கள் கிடந்த அதே மதவடியில் வைத்து அவனை வெட்டக்  கொண்டு வந்தபோது அவன் காப்பாற்றப்பட்டான்.
 
“அப்ப நீயே கமலநாதனைக் கடத்திக் கொண்டுபோய் கொலை செய்தனீ”, எனக் கேட்டார் முருகர்.
 
அவன் பதறிப் போனான்.
 
“நான் வெட்டக் கலைச்சது உண்மை.. அதுக்குப் பிறகு என்ன நடந்ததெண்டு சத்தியமாய் எனக்குத் தெரியாதப்பு”
 
அவன் பொய் சொல்லவில்லை என்பதை முருகர் உணர்ந்து கொண்டார்.
 
அவனின் தங்கைக்கு ஏற்பட்ட கதிக்கு அவன் கமலநாதனைக் கொன்றாலும் கூட அவனை எவரும் பிழை சொல்லப் போவதில்லை. ஆனால் அவனைப் போன்றவர்கள் கோபத்தில் உடனடியாக எதுவும் செய்வார்களேயொழிய கடத்தி கொலை செய்யுமளவுக்கு திட்டமிட்டு செயற்படுமளவுக்கு அவர்கள் இல்லை.
 
“அப்ப ஆர் செய்திருப்பங்கள்?” எனக் கேட்டார் முருகர்.
 
“அதுதான் தெரியேல்லை?” என்றான் கந்தசாமி.
 
சோமர், “அண்ணை.. ஆனை அடிச்சிருக்கும். உப்பிடிப் பெண் பாவம் செய்யிறவனைப் பிள்ளையார் விடமாட்டார்” என்றார்.
 
“அண்ணை! ஆனை அடிச்சுதோ… மனுஷர் தான் கொண்டாங்களோ.. இப்பிடியானவங்களுக்கு சாவு கொடூரமாய் இருக்க வேணும். அந்தப் பிள்ளை மனதாலையும் உடம்பாலையும் பட்ட வேதனையை அவனும் அனுபவிக்க வேணும். அவனெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய்த்தான் சாகவேணும்”
 
சிவத்தின் குரலில் உண்மையான ஒரு ஆவேசம் இழையோடியது.
 
பின்பு முருகர் சொன்னார், “கந்தசாமி.. இனி நீ அங்கை போனால் உயிரோடை தப்ப முடியாது. நீ இஞ்சையே நில்”, என்றார்.
 
“பெண்சாதி, பிள்ளையள்..”, என தயக்கத்துடன் முனகினான் அவன்.
 
“அது நீ யோசியாதை.. நான் பொழுதுபட ஒரு ஆளை அனுப்பி காட்டுப்பாதையாலை இஞ்சாலை கூட்டிவாறன். நீங்கள் மடுவிலை தங்கலாம்”, என்றார் முருகர்.
 
கந்தசாமிக்கும் வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.
 
சிவமும் மலையவனும் மற்றவர்களை அனுப்பிவிட்டு முகாமுக்கு வந்தபோது அதிகாலை இரண்டு மணியாகிவிட்டது. எனினும் தாங்கள் நடத்திய தாக்குதல் பற்றியும் கந்தசாமியைக் காப்பாற்றியது பற்றியும் தளபதிக்கு உடன் அறிவிப்பதற்காக அவரின் இருப்பிடத்தை நோக்கிப் போனார்கள்.
 
சென்றியில் நின்ற போராளி தளபதியை எழுப்பி சிவம் வந்த செய்தியை சொன்னதுமே அவர் உடனே வெளியில் வந்தார்.
 
சிவம் காட்டுக்குள் போய் வந்த விடயத்தை சுருக்கமாகச் சொல்லிவிட்டு தாங்கள் குருக்களுரில் நடத்திய தாக்குதல் தொடர்பாக முழு விடயத்தையும் விளக்கினான்.
 
தளபதி இடையிடையே கேள்விகள் கேட்டு முழு விடயங்களையும் உள்வாங்கிய பின்பு, “நல்ல விஷயம் தான் செய்திருக்கிறியள், ஆனால் ஒரு சிக்கல் இருக்குது..” என்றார்.
 
“என்னண்ணை?”
 
“இப்ப நீங்கள் மூண்டு பேரைப் போட்டிட்டியள்.. கந்தசாமியையும் காப்பாத்திப் போட்டியள்.. அவங்கள் அதுக்குப் பழிவேண்ட கந்தசாமியின்ரை பெண்சாதி பிள்ளையளை ஏதும் செய்யப்பாப்பாங்கள்”
 
பள்ளிக் கூடத்தில படிச்சுக்கொண்டிருந்த கந்தசாமியின்ரை சகோதரியையே இரக்கமில்லாமல் கெடுத்தவங்கள் அவன்ர மனைவியை சும்மாவிடப் போவதில்லை என்பது சிவத்துக்கு நன்றாகவே புரிந்தது. அவர்கள் பழி தீர்க்கப் பிள்ளைகளையும் கொல்லத் தயங்கமாட்டார்களென்றே அவன் நம்பினான்.
 
சிவம் சற்றுத் தடுமாற்றத்துடன்.. “அப்ப.. இப்ப என்னண்ணை செய்யிறது?” எனக் கேட்டான்.
 
சில நிமிடங்கள் அமைதியாக எதையோ யோசித்த தளபதி,
 
“பறவாயில்லை.. நான் இப்பவே முழு விடயத்தையும் சொல்லி எங்கடை புலனாய்வுப் பிரிவுக்கு அறிவிக்கிறன். அவை உள்ள நிக்கிற போராளியளுக்கு அறிவிச்சு கந்தசாமியின்ரை பெண்சாதி பிள்ளையளைப் பாதுகாப்பான இடத்துக்கு மாத்துவினம். பிறகு முருகரப்பு இல்லாட்டில் சோமண்ணை போய் இஞ்சாலை கூட்டி வந்து மடுவிலை விடட்டும்” என்றார்.
 
அந்த வார்த்தைகள் சிவத்தை சற்று நின்மதியடைய வைத்தன.
 
அதன் பின்பு சிவம் காட்டுக்குள் போய் சந்தித்த சகல சம்பவங்களையும் ஒன்றும் விடாமல் விபரித்தான்.
 
தளபதி எல்லாவற்றையும் கேட்டு விட்டு, “நல்ல பிரியோசனமான வேலை இரண்டு நாளைக்கிடையிலை செய்து முடிச்சிருக்கிறியள். காலமை எல்லாத்தையும் அறிக்கையாய் எழுதிக் கொண்டுவாங்கோ” என்றுவிட்டு எழுந்து வோக்கியை நோக்கிப் போனார்.
 
சிவம் தன் இடத்துக்குப் போய் படுக்கையில் சரிந்த போது தான் அவனுக்கு கணேஸின் நினைவு வந்தது. கடந்த இரண்டு நாட்களில் ஒரு முறை கூட அவனின் நினைவு வராமல் இருந்தது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. எப்பிடியும் ரூபா அவனைக் கவனமாகப் பார்ப்பாள் என்ற நம்பிக்கையுடன் உறங்கிப் போனான்.
 
திடீரென தொடர் எறிகணை ஒலிகள் கேட்கவே திடுக்கிட்டு எழுந்து வெளியே வந்தான். பெரிய தம்பனைப் பக்கமாகவே எறிகணைகள் விழுந்து கொண்டிருப்பதை அவன் காதுகள் உணர்த்தின. இது இராணுவத்தின் முன்னேற்ற முயற்சியின் அறிகுறி என்றே அவனுக்குத் தோன்றியது.
 
தளபதியின் இருப்பிடத்தை நோக்கி அவசரமாக நடக்கத் தொடங்கினான்.
 
(தொடரும்)
 
தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அக்கா. வேலைப்பளு காரணமாக கடந்த இரு தொடர்களை உரிய நேரத்தில் பதிவிட முடியவில்லை. தாமதத்திற்கு மன்னிக்கவும். இனிமேல் உரிய நேரத்தில் வருமாறு பார்த்துக்கொள்கின்றேன்.

 

தமிழ்லீடர் பக்கத்திற்கு போக பயமாக்கிடக்கு. இந்தக்கதையை வாசிக்க ஒருதரம் போனதோடை எனது கணணி அடிச்சு நூந்து போச்சுது. அதோடை இங்கை நீங்கள் இணைக்கும் வரை கதைபடிக்க காத்திருப்பது. நேரம் தவறாமல் இணையுங்கோ.

 

  • தொடங்கியவர்

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 18

 

“வாங்கோ சிவம் உங்களைக் கூப்பிட யோசிக்க நீங்களே வந்திட்டீங்கள்” , என சிவத்தை வரவேற்றார் தளபதி.  “என்னண்ணை செய்ய வேணும்?” எனக் கேட்டான் சிவம்.

 
“பெரிய தம்பனையை நோக்கி இராணுவம் ஒரு பெரிய முன்னேற்ற முயற்சியைத் தொடங்கியிருக்கிறாங்களாம்… எங்கடை கவனத்தை இங்கை திருப்பி எங்களை அங்கை இழுத்துப் போட்டு முள்ளிக்குளத்துக்கை இறங்கி அவங்கள் பழைய இடத்திலை நிலை கொள்ளக் கூடும் எண்டு சிறப்புத் தளபதி எதிர்பார்க்கிறார். அதாலை எங்கடை பக்கத்தை இறுக்கமாய் வைச்சிருகச் சொல்லி அறிவிச்சிருக்கிறார்”
“அது பிரச்சினை இல்லையண்ணை.. எங்கடை காவலரண்கள் பலமாய் இருக்குது… எங்கடை  வேவுப் பொடியளும் விழிப்பாய் இருக்கிறாங்கள்”, என்றான் சிவம்.
 
“அது தெரியும்.. இப்ப சொல்லும், கிபிரும் குண்டு பொழியிற விதத்தைப் பார்க்க எங்கடை அணி கொஞ்சம் பின் வாங்கித்தான் பிறகு அடிக்கும் போல கிடக்குது. அதாலை நீங்கள் உங்கடை அணியை முள்ளிக்குளத்துக்கை இறக்கி தயார் நிலையிலை நில்லுங்கோ.. இராணுவம் முன்னேறினால் சிறப்புத் தளபதியின்ரை அழைப்பு வரும். நீங்கள் காட்டுக்காலை இறங்கி பக்கவாட்டிலை அடிக்கவேணும்”.
 
“அது கலக்கிவிடுவமண்ணை!” என்றான் சிவம் அளவற்ற மகிழ்ச்சியுடன். தட்சினாமருதமடு அலைகரையில் இறங்கினால் காட்டுக்குள்ளால் பெரியதம்பனையின் பின்புறம் நோக்கி நகரும் பாதை அவனுக்கு ஏற்கனவே நன்கு பரிச்சயமானதால் அப்போதே அவன் மனம் திட்டங்களை வகுக்க ஆரம்பித்துவிட்டது.
 
பெரிய தம்பனையில் பொழுது விடிந்த வேளையில் இதுவரை பொழிந்து கொண்டிருந்த எறிகணைகளுக்கும் மேலாக நான்கு கிபிர் விமானங்கள் மாறி மாறி குண்டுகளைப் பொழிய ஆரம்பித்தன. மக்களால் கைவிடப்பட்ட வீடுகள் அனைத்தும் தூள் தூள்களாக நொருங்கிக் கொண்டிருந்தன. எங்கும் கரும்புகை மண்டலம் எழுந்து பரவியது.
 
சிறப்புக் கட்டளைத் தளபதி தானே நேரில் நின்று போராளிகளை நெறிப்படுத்திக் கொண்டிருந்தார்.
 
மெல்ல மெல்ல எறிகணை வீழ்ச்சி வட்டம் முன் நகர ஆரம்பித்தது. தளபதி உடனடியாகவே வலப்புறமாக ஒரு அணியையும், இடப்புறமாக ஒரு அணியையும் காடுகளுக்குள்ளும் இன்னொரு அணியை நேராகவும் பின் வாங்கும்படி கட்டளையிட்டார்.
 
ஒரு சிறு அணி மட்டும் ஓடு பங்கர்களில் தூரத்திற்கு ஒருவராக நின்று முன்னேறி வரும் படையினரை எதிர்கொள்ளத் தயாராகியிருந்தனர்.
 
படையினர் முன்னேறி நகர ஆரம்பித்த போது போராளிகளின் பீரங்கிகள் குண்டுகளைப் பொழிய ஆரம்பித்தன.
 
படையினர் டாங்கிகளின் பின்னும், கவச  வண்டிகளின் பின்னும் மறைப்பு எடுத்துக் கொண்டு முன்னேறிய போதும் போராளிகளின் பீரங்கிக் குண்டுகள் அவற்றின் மேலாய் போய் விழுந்து படையினரைப் பலியெடுத்துக் கொண்டிருந்தன. காட்டுக்குள்ளிருந்து வந்த ஆர்.பி.ஜி ஒன்று டாங்கி ஒன்றின் செயினை அறுத்தது. அது நகர முடியாமல் அப்படியே நின்றுவிட்டது. ஒரு ஆர்.சி.எல் குண்டு பாய்ந்து வந்து இலக்கு தவறாமல் ஒரு கவச வண்டியின் சுடுகுழலைப் பிரித்தெடுத்தது.
 
மரங்கள், இடிந்த வீடுகள் என்பவற்றினூடாக முன்னேறிய படையினர் எதிர்பாராத இடங்களிலிருந்து வந்த தாக்குதல்களால் இறந்தும் காயப்பட்டும் பெரும் இழப்புக்களைச் சந்தித்தனர்.
 
எனினும் படையினர் சிறிது சிறிதாக முன்னேறத்தான் செய்தனர்.
 
இராணுவம் ஊர்மனையைக் கடந்து காடு சூழ்ந்த பகுதிக்கு வந்த போதுதான் அவர்கள் பெரும் ஆபத்துக்குள் அகப்பட்டுவிட்டதை உணர்ந்தனர். எதிர்ப்பக்கத்திலிருந்தும், இரு புறக் காடுகளிலிருந்தும் கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது.
 
அதேவேளையில் முன்னேறிய படையினருக்கும் அவர்களின் கட்டளைப் பீடத்துக்குமிடையே போராளிகள் குண்டுகளால் வேலி போட்டுக்கொண்டிருந்தனர்.
 
காயப்பட்ட படையினரைப் பின் நகர்த்த முடியாமலும், பின்புறமிருந்து உதவிகளைப் பெற முடியாமலும் முன்னேறி வந்த படையணி திணறியது.
 
தம்பனையின் பின்புறக் காட்டிற்குள் கட்டளைகளை எதிர்பார்த்துக் காத்துக்கிடந்த சிவத்துக்கும் அவனது அணியினருக்கும் பொறுமை பறிபோய்க்கொண்டிருந்தது. பீரங்கி ஒலிகளும், வெடியோசைகளும் அவர்களை அறிவித்தலை எதிர்பார்த்துத் துடிக்க வைத்தன.
 
திடீரென சிவத்தின் வோக்கி இயங்க ஆரம்பித்தது..
 
“சிவம்.. சிவம்.. மெயின்”
 
“மெயின்.. மெயின்… சிவம்.. ஓவர்”
 
“ஆறுமுகத்தான் புதுக்குளத்திலை ஓட்டை விழுந்திட்டுது உடனை போய் அடையுங்கோ.. ஓவர்”
 
“சரியண்ணை.. நாங்கள் செய்யிறம் .. ஓவர்”
 
சிவம் வோக்கியின் இயக்கத்தை நிறுத்திவிட்டு தனது அணியை வடக்கு நோக்கி நகர்த்த ஆரம்பித்தான். இரணைஇலுப்பை இராணுவம் முள்ளிக்குளத்தால் நகர்ந்ததால் தங்களுடன் மோத வேண்டிவருமாதலால் அதைத் தவிர்த்து ஆறுமுகத்தான் புதுக்குளத்தில் இறங்கி சின்னத்தம்பனையின் பின்புறமாக தம்பனை நோக்கி வருகிறது என்பதை அவன் புரிந்து கொண்டான்.
 
அது தங்களுக்கு ஒரு நல்ல சாதகமான நிலைமை என்றே சிவம் கருதினான். சின்னத்தம்பனையின் பின்புறம் மக்கள் நடமாட முடியாத நெருக்கமான முள்ளுக்காடு நிறைந்த பகுதியாகும். ஒரு அறுத்தோடியின் இரு மருங்குமான சிறு பகுதியாலேயே எவரும் போய் வர முடியும்.
 
அந்த இடைவெளியில் வைத்து படையினரை மறித்து தாக்கினால் அப்பிடியே அந்த அணியைத் துவம்சம் செய்து விட முடியும் என அவன் நம்பினான்.
 
எனவே அவர்கள் நடையைத் துரிதப்படுத்தினர்.
 
ரூபா அன்று மருத்துவப் பிரிவுக்கு வரும் போது நேரம் பத்துமணியைத் தாண்டிவிட்டது. அவள் மகளிர் அரசியல் பிரிவின் முகாமிலேயே பண்டிவிரிச்சானில் தங்கியிருந்தாள். அதிகாலையில் சண்டை தொடங்கியதும் ஒரு சில போராளிகளை விட மற்றவர்கள் களமுனைக்குப் போய்விட்டனர். அருகிலேயே சண்டை நடக்கும் போது அதில் கலந்து கொள்ளமுடியாமல் இருப்பது அவளுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
 
ஆனால் அதே வேளையில் கணேசை அந்த நிலையில் விட்டுச் செல்வதையும் அவளின் மனம் ஏற்க மறுத்தது. என்ன செய்வதென முடிவெடுக்க முடியாத நிலையில் அவள் தன் படையணி தளபதியுடன் தொடர்பு கொண்டாள்.
 
தளபதியோ, “இஞ்சை அப்பிடி ஒரு அவசரமுமில்லை. நீங்கள் நிண்டுபோட்டு ஒரு கிழமையால வாங்கோ, இடையிலை தேவைப்பட்டால் நான் அறிவிக்கிறேன்” என்றுவிட்டு வோக்கியின் இயக்கத்தை நிறுத்திவிட்டாள்.
 
தளபதியுடன் தொடர்பு எடுப்பத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக கணேசிடம் அவளால் நேரத்துக்கு வரமுடியவில்லை.
 
அவளைக் கண்டதும் போராளி மருத்துவர் எழுந்து அவளருகில் வந்தார்.
“அக்கா.. அவர் கொஞ்சம் குழப்பத்திலை இருக்கிறார். நீங்கள் தான் கொஞ்சம் சமாதானப்படுத்த வேணும்”, என்றான் அவன்.
 
“குழப்பமோ! என்னது?”, எனக்  கேட்டாள் ரூபா.
 
“காலைமை சண்டைச் சத்தம் கேட்டவுடனை என்னைக் கூப்பிட்டனுப்பினார். களத்திலை சண்டை நடக்க தான் என்னண்டு கட்டில்ல படுத்திருக்கிறதெண்டும், தன்னை உடன முகாமுக்கு அனுப்பச் சொல்லியும் பிடிவாதம் பிடிச்சார். நான் அவரின்ரை உடல் நிலைமை சரியில்லையெண்டும் எழும்பி நடக்கக்கூடாது பெட்றெஸ்ற் எடுக்க வேணுமெண்டும் சொன்னன்”.
 
ரூபா தவிப்புடன் கேட்டாள், “பிறகு?”
 
“இல்லை நான் போகத்தான் வேணும்.. நான் செற்றிலை இருந்து சண்டையை வழிநடத்துவன் எண்டிட்டு பெட்டிலை இருந்து இறங்கப் போய் விழுந்து போனார். நல்ல நேரம் நான் பக்கத்திலை நிண்டபடியால நிலத்தில விழாமல் பிடிச்சிட்டன். அவர் உடன மயங்கியிட்டார். ஒரு ஊசி போட்டனான் இனி முழிச்சிடுவார்”
 
கணேசின் உணர்வு அவன் பற்றிய மதிப்பை மேலும் அவளுள் அதிகரித்த போதும் அவனில் அவள் வைத்திருக்கும் அக்கறை அவளைக் கவலை கொள்ள வைத்தது.
 
“சரி.. பாப்பம்..”, என்றுவிட்டு அவள் உள்ளே போனாள்.
 
கணேஸ் கண்களை மூடியவாறு படுத்திருந்தான். அருகில் சென்ற அவள் மெல்ல அவனின் தலையை வருடியவாறே, “கணேஸ்”, என்றாள்.
 
அவனின் விழிகள் மெல்லத் திறந்தன. ஒரு மெல்லிய புன்னகை அவனின் முகத்தில் படர்ந்தது. ஆனால் மெல்ல மெல்ல அவனின் புன்னகை மங்கிக் கொண்டு போக முகம் இறுகியது. கண்கள் அகலத் திறந்தன.
 
“நீங்கள்.. நீங்கள்.. இன்னும் போகேல்லையே?”
 
ரூபா திகைத்துவிட்டாள். அவள் ஒருவித தடுமாற்றத்துடன்..“எங்கை,”, எனக் கேட்டாள்.
 
“சண்டை நடக்கிற சத்தம் காதிலை விழேல்லையே?”
 
அவள் தயக்கத்துடன், “நீங்கள் இப்பிடி இருக்கையுக்கை என்னெண்டு விட்டிட்டு..”, எனக் கூறி முடிக்குமுன்பே அவன்,
 
“நிக்கட்டும்”, என்று அதட்டினான்.
 
அவன் வார்த்தைகள் குளறி தெளிவில்லாத போதும் அவற்றில் என்றுமில்லாத உறுதி தொனித்தது.
 
“நானும் நீங்களும் காதலர்களாய் போராட்டத்திலை இணையேல்ல. போராளியளாய்த் தான் காதலிச்சனாங்கள். உங்கடை வீரமும், அர்ப்பண உணர்வும் தான் நான் உங்களை விரும்ப வைச்சது. என்னை ஒரு போராளியாய்த்தான் நீங்கள் என்னை விரும்பினீங்கள். காதல் முக்கியம் தான்! போராட்டம் அதைவிட முக்கியம்”
 
களைப்பு அவனை அதற்கு மேல் பேச விடாமல் தடுத்துவிட்டது.
 
அவன் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினான்.
 
அவள் கண்கள் கலங்கி கன்னத்தில் கண்ணீர் வடிந்தது,
 
“நான் அதை மறுக்கேல்ல.. அக்கா தான் ஒரு கிழமை நிண்டிட்டு வரச் சொன்னவா..” என்றாள் ரூபா.
 
மீண்டும் கணேசின் குரல் உயர்ந்தது.
 
“அவ.. நீங்கள் பாவமெண்டு சொல்லியிருப்பா.. நீங்கள் என்னைக் காதலிக்கிறது உண்மையெண்டால் போங்கோ.. ஓ.. போங்கோ”
 
அவள் பரிதாபமாக அவனின் முகத்தைப் பார்த்தாள். பின்பு அவன் கையைப் பிடித்து மெல்ல வருடிவிட்டு எதுவுமே பேசாது ‘விடு விடு வென’ நடந்தாள்.
 
கணேஸ் மீண்டும் கண்களை மூடிக்கொண்டான்.
 
(தொடரும்)
 
தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்.
 
  • கருத்துக்கள உறவுகள்

காதலைவிடவும் கடமை ஒரு போராளியை எப்படியெல்லாம் சிந்திக்க வைக்கிறது ? கணேசின் உறுதியும் ரூபாவின் இலட்சியப்பற்றுமே எமது விடுதலைப்போராட்டத்தில் பல வெற்றிகளையும் தந்தது:. இன்று அவர்களது வாழ்வை இந்த எழுத்துக்கள் மூலமே உலகறியும்.

  • தொடங்கியவர்

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 19

மகளிர் அரசியல்துறைச் செயலகத்தைச் சென்றடைந்த போது தான் பூநகரி புறப்படும் விடயத்தை அங்கு பொறுப்பாக நின்ற பெண் போராளியிடம் தெரிவித்துவிட்டு தனது மோட்டர் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.

அவள் மருத்துவப் பிரிவுக்குச் சென்ற போது கணேஸ் கண்களை மூடியவாறு படுத்திருந்தான்.அவள் மெல்ல, “கணேஸ்”, என அழைத்தாள். அவன் உடனேயே விழிகளைத் திறந்ததிலிருந்து அவன் தூங்கிக்கொண்டிருக்கவில்லை என்பதை அவள் புரிந்து கொண்டாள்.

“நான் வெளிக்கிடப்போறன்”, என்றவள் சற்று இடைநிறுத்திவிட்டு தயக்கத்துடன், “என்னிலை கோபமே?”, எனக் கேட்டாள்.

“பின்ன கோபம் வராதே?, நானும் போராட்டத்திலை எந்த விதத்திலையும் பங்களிப்புச் செய்ய முடியேல்லை.. என்னாலை நீங்களும் இஞ்சை நிண்டால்..?”

“பிழை தான்.. நான் உணர்ந்திட்டன்!” என்றாள் ரூபா.

“நல்லது..  போட்டு வாங்கோ.. வரயுக்கை ஏதாவது ஒரு சாதனையோட வாங்கோ”, என்றான் கணேஸ் ஒரு மெல்லிய புன்முறுவலுடன்.

அவள் கணேசின் கையை இறுகப் பற்றிக் கொண்டாள்.

“கணேஸ்.. மனதை நிம்மதியாய் வைச்சுக் கொண்டு நல்ல றெஸ்ற் எடுங்கோ.. காலமை மாதிரி அடம்பிடிச்சு எழும்பினீங்களெண்டால் சுகம் வரப் பிந்தும்.. நல்லாய் பெட் றெஸ் எடுத்துக் கெதியாய் சுகம் வந்தால் ரண்டு பேருமே ஒண்டாய் முன் களத்திலை நிண்டு போராடலாம்”

கணேசின் கைப்பிடி இறுகியது.

“அப்ப.. எனக்குக் கெதியாய் சுகம் வருமே?” அவன் குழந்தை போல அவாவுடன் கேட்டான்.

“நிச்சயமாய்.. உங்கடை வைராக்கியம் உங்களை கெதியாய் நடக்க வைக்கும்”

கணேஸ் ஒரு முறை விழிகளை மூடி ஒரு முறை மூச்சை நீளமாக உள்ளிழுத்து விட்டு மீண்டும் திறந்தான்.

“நிச்சயமாய்.. உங்கடை அன்பு வார்த்தையள் என்னை கெதியாய் நடக்க வைக்கும்”

அவனின் கையை விடுவித்துக் கொண்டு, “போட்டு வாறன்”, என விடைபெற்றுவிட்டுப் புறப்பட்டாள் ரூபா.

சிவத்தின் அணியினர் குறிப்பிட்ட இடத்துக்கு வந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும் அவர்கள் எதிர்பார்த்த இராணுவ அணி வந்து சேரவில்லை.

சிவம் வோக்கியை இயக்கி கட்டளை பீடத்துடன் தொடர்பை ஏற்படுத்தினான்.

இராணுவ அணி காட்டுக்குள் இறங்கி நகர்வை ஆரம்பித்து விட்டதாகத் தகவல் கிடைத்து விட்டதாகப் பதில் வந்தது.

பெரிய தம்பனைப்பக்கமாக ஐம்பது கலிபர் வெடியோசைகளும், எறிகணைகளும் தொடர்ந்து கேட்டவண்ணமிருந்தன.

சற்றுத் தொலைவிலுள்ள மரங்களில் குரங்குகள் பாயத் தொடங்கின.

குருவிகள் கத்தியவாறு கலையத் தொடங்கின.

சிவம் விடயத்தைப் புரிந்துகொண்டான்.

போராளிகள் அனைவரும் நிலையெடுத்துக் கொண்டனர்.

இராணுவ அணியொன்று உடலெங்கும் குழைகளைக் கட்டி உருமறைப்புச் செய்தபடி இரண்டு வரிசைகளில் நகர்ந்து கொண்டிருந்தது. அவர்கள் வரக் கூடுமென எதிர்பார்க்கப்பட்ட பாதையில் இருபுறமும் போராளிகள் மரங்களின் மறைவிலும், பற்றைகளின் பின்பும் பதுங்கிக்கிடந்தனர்.

அவர்களின் முன்பகுதி தங்களைக் கடக்கும் வரை பொறுமை காத்த சிவம் நடுப்பகுதி தனக்கு நேரே வரக்கட்டளை வெடியைத் தீர்த்தான். திடீரென வெடிகள் விழ ஆரம்பித்ததும் அவர்கள் தாங்கள் ஒரு “அம்புஸில்” அகப்பட்டு விட்டதைப் புரிந்து கொண்டனர். எனினும் அவர்கள் தயாராவதற்கு முன்பாகவே பலர் விழுந்து விட்டனர்.

போராளிகளின் எல்லைக்குள் வந்தவர்கள் ஒருவர் கூடத் தப்பவில்லை. ஆனால் முன்னால் சென்றவர்கள் சிறிது தூரம் பின் நிலையெடுத்துக் கொண்டு போராளிகளின் பக்கம் சுட ஆரம்பித்தனர். பின்னால் வந்தவர்கள் ஓடிப்போய்விட்டார்களா? அல்லது சற்றுப் பின்னால் போய் நிலையெடுத்து விட்டார்களா என்பதை சிவத்தால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால் வந்த அணியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்திருக்க வேண்டுமென அவன் ஊகித்துக் கொண்டான்.

எப்படியும் பின்வாங்கிவிட்ட பின்னால் வந்த பகுதியினர் உடைக்கப்பட்டு முன் தள்ளப்பட்டு தனிமைப்பட்ட பகுதியினரை மீட்க வருவார்கள் என்பதால் புதியதொரு ஏற்பாட்டைச் செய்யவேண்டியிருந்தது.

பின்வாங்கிப் போனவர்கள் திரும்பவும் வருவதானால் நிச்சயமாக அதே பாதையால் வரப்போவதில்லை என்பதை அவன் முடிவு செய்து கொண்டான். எனவே எதிர்ப்பக்கம் நின்ற பகுதியினரை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதி அதே இடத்தில் நிலை கொள்ள மறுபகுதி இராணுவம் வந்த திசை நோக்கி சிறிது தூரம் முன் சென்று காட்டுக்குள் நிலையெடுக்குமாறு கட்டளையிட்டான். தானும் தனது பக்கத்தில் நின்ற போராளிகளும் காட்டுக்குள் சிறிது உட்பக்கமாகப் பின்வாங்கி முன் சென்று தனிமைப்பட்டிருந்த படையினரைப் பின்புறமாக வளைத்தான்.

அவர்கள் முன்பு தாங்கள் நின்ற பக்கமாகச் சுட்டுக் கொண்டிருந்ததை அவனால் அவதானிக்க முடிந்தது.

அவர்கள் குழைகளால் உருமறைப்புச் செய்திருந்த காரணத்தால் இனங்கண்டு துல்லியமாக துப்பாக்கிச் சூடு நடத்த முடியவில்லை.

அடுத்த நடவடிக்கையாக கிரனைட் லோஞ்சர்களை இயக்கி அவர்கள் நிற்குமிடத்தை நோக்கி கைக் குண்டுகளை சிவத்தின் அணியினர் வீசினர்.

அது நல்ல பலன் தர ஆரம்பித்து விட்டது.

படுத்திருந்த இராணுவத்தினர் எழுந்து திசை தெரியாமல் ஓட ஆரம்பித்தனர். பின் பக்கத்தால் சிவத்தின் அணியினரும் மறுபக்கத்தில் பாதையருகில் படுத்திருந்தவர்களும் அவர்களை இலகுவில் சுட்டுத்தள்ள முடிந்தது.

சில நிமிடங்களிலேயே அந்தச் சண்டை முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் பின்வாங்கி விட்ட பின்பகுதியினர் எப்படியும் வருவார்கள் என்றே எதிர்பார்த்தான் சிவம்.

எனவே உள்காட்டுப் பகுதியால் இராணுவம் வந்த திசை நோக்கி நகர்ந்து பரவலாக நிலையெடுத்துக் கொண்டனர் போராளிகள்.

ஆனால் சிவம் எதிர்பார்த்ததுக்கு மாறாக இராணுவம் அறுத்தோடியின் மறுகரைப் பக்கமாகவே காட்டுக்குள் இறங்கியது.

அப்பகுதியில் போராளிகள் பத்துப் பேர் மட்டுமே நின்றனர்.

உடனடியாகவே சிவம் அவர்களை பின் வாங்கி ஆரம்பத்தில் நின்ற பகுதியில் பதுங்கி நிலையெடுத்து தாக்கும்படி கட்டளையிட்டான்.

வேட்டுச் சத்தங்களிலிருந்து இராணுவம் முன்னேறுவது தெரிந்தது. தங்களுக்கு நேரே இராணுவம் வந்ததும் தனது அணியை அறுத்தோடியைக் கடந்து மறுபுறக் காட்டுக்குள் இறக்கினான்.

மரங்களுக்குப் பின்னால் நிலையெடுத்த அவர்கள் படையினரைப் பக்கவாட்டில் தாக்கத் தொடங்கினர். ஒரே நேரத்தில் முன்புறமிருந்தும் பக்கவாட்டிலும் தாக்குதல் வரவே இராணுவத்தினர் நிலை குலைய ஆரம்பித்துவிட்டனர்.

போராளிகளின் ஒவ்வொரு சூடும் ஒவ்வொரு படையினரை வீழ்த்துவது அவர்களை கிலி கொள்ள வைத்துவிட்டது.

அவர்கள் இறந்தவர்களையும் காயப்பட்டவர்களையும் தூக்கிக் கொண்டு காப்புச் சூடு கொடுத்தவாறே பின்வாங்க ஆரம்பித்தனர்.

சில மணி நேரம் வெடியோசைகளாலும், குண்டுச் சத்தங்களாலும் அதிர்ந்த காடு அமைதியடைந்துவிட்டது.

போராளி வில்லவன் வீரச்சாவடைந்துவிட்டான். மாயவன் படுகாயமடைந்துவிட்டான். வேறு இருவருக்குப் படுகாயம்.

இரு தடிகளை வெட்டி அதில் ஒரு சாரத்தைக் கொழுவி ஸ்டெச்சர் போல செய்து அதில் வில்லவனின்  வித்துடலையும் அது போன்ற இன்னொன்றில் மாயவனையும் சிவம் முகாமுக்கு அனுபி வைத்தான்.

 சிறு காயப்பட்ட போராளிகள் முதல் உதவி செய்து கட்டுக்களைப் போட்டுவிட்டு தாங்கள் சண்டையில் நிற்பதாகக் கூறிவிட்டனர்.

தூரத்தில் வானத்தில் “ரோண்” சத்தம் கேட்க ஆரம்பித்து. ஒரு  போராளி, “அண்ணை.. வண்டு.. வருகுது” என்றான்.

சிவம், “உடனை செத்துக் கிடக்கிற ஆமிக்காரரின்ரை சடலங்களை பத்தையளுக்கை மறையுங்கோ.. கண்டால் நாங்கள் இஞ்சை தான் நிக்கிறம் எண்டு தெரிஞ்சு கிபிர் வந்து பொழியத் துவங்கியிடுவன்”, என்றான்.

இராணுவத்தினரின் சடலங்களை மறைப்பது அவ்வளவு சிரமமான காரியமாகவே இருக்கவில்லை. அவர்கள் ஏற்கனவே உருமறைப்பு செய்திருந்ததால் குழைகளைப் போட்டே அவர்களை மறைக்கத்தக்கதாக இருந்தது.

எப்படியிருந்த போதும் அங்கு நிற்பது புத்திசாலித்தனமல்ல என நினைத்த சிவம் தனது அணியை வெகு அவதானமாக மறைவான பாதைகளால் பின்னகர்த்தினான்.

அரை மணி நேரத்துக்கு மேலாக வேவு விமானம் சுற்றிக் கொண்டிருந்தது. எதையும் அது கண்டுபிடிக்கவில்லைப் போலவே தோன்றியது.

வேவு விமானங்கள் வானத்தை விட்டு அகன்று சில நிமிடங்களிலேயே இரு கிபிர் விமானங்கள் வந்து காட்டின் மீது குண்டுகளைப் பொழி ஆரம்பித்தன. கரும்புகை மண்டலங்கள் திரள் திரளாக மேலெழுந்தன.

சிவமும் போராளிகளும் தங்களுள் சிரித்துக் கொண்டனர். ஏனெனில் குண்டுகள் அவர்கள் நின்ற இடத்திலிருந்து ஏறக்குறைய அரைக் கிலோமீற்றர் தூரத்தில் விழுந்து கொண்டிருந்தன.

நேரம் மூன்று மணியைத் தாண்டிய போது வோக்கி இயங்க ஆரம்பித்தது. சிவம் தொடர்பை ஏற்படுத்தினான்.

காட்டுக்குள் இறங்கிய இராணுவம் பெரும் இழப்புடன் பின் வாங்கிவிட்டதாகவும், சிவத்தின் அணியினரை முகாமுக்குத் திரும்பும் படியும் கட்டளை பீடத்திலிருந்து அறிவித்தல் வந்தது.

அனைவரும் முகாமை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

வில்லவனின் வீரச்சாவு சிவத்தின் நெஞ்சைப் போட்டு நெருடிக்கொண்டிருந்தது. வில்லவன் இருக்குமிடம் எப்போதுமே கலகலப்பாயிருக்கும். புதுப்புது விதமான குளப்படிகள் செய்து அவன் அடிக்கடி “பணிஸ்மென்ற்” வாங்கத் தவறுவதில்லை.

அவனும் அவற்றைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை.

அவன் எவ்வளவு தான் தொல்லை கொடுத்தாலும் தளபதி முதல் எல்லோரும் அவனை விரும்பினர்.

அவன் ஒரு கிளி வளர்த்தான். சண்டைக்குப் போகும் நேரம் தவிர அது அவனை விட்டுப் பிரிவதேயில்லை. அதற்கு அவன் பேசக் கற்றுக்கொடுத்திருந்தான். வில்லவன் இல்லாத போது யாரும் அதுக்குக் கிட்டப் போனால்,

உடனே அது, “வில்லவன்.. எங்கை?”, எனக் கேட்கும்.

விளையாட்டாக யாராவது, “அவன் வீரச்சாவு”, என்று சொன்னால், அது “பொய்.. பொய்..” என்றுவிட்டு சுற்றிச் சுற்றிப் பறக்கும்.

இப்போ முகாமுக்கு போனதும் கிளி, “வில்லவன் எங்கை?”, எனக் கேட்டால் என்ன செய்வது என நினைத்த போது சிவத்தின் நெஞ்சு மெல்ல நடுங்கியது.

(தொடரும்)

தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்

 

http://tamilleader.com/?p=8037

  • தொடங்கியவர்
நீந்திக்கடந்த நெருப்பாறு அங்கம் - 20
 
வில்லவனின் வித்துடல் முகாமுக்குக் கொண்டுவரப்பட்ட போது “வோக்கி” அருகில் இருந்த தளபதி உடனடியாகவே எழுந்து வந்தார். அருகில் வந்த அவர் எவரிடமும் எதுவுமே பேசாமல் அவனுக்கு அஞ்சலி செலுத்தினார்.அவர் அவனது குறும்புகளுக்காக அவனுக்கு அடிக்கடி சிறு தண்டனைகள் கொடுத்த போதிலும் அவரும் அவனில் ஒருவித பாசம் வைத்திருந்தார்.
 
வழக்கமாக “வில்லவன் எங்க?” எனக் கத்தும் அவனின் கிளி கூட அமைதியாய் இருந்தது சிவத்துக்கு பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. அது ஓரிடத்தில் மிகவும் சோகமாக அமர்ந்திருந்தது. வில்லவனின் வீரச்சாவை அது தனது உள்ளுணர்வால் உணர்ந்து கொண்டுள்ளதாகவே சிவத்துக்கு தோன்றியது.
 
“சிவம்! அரசியல்த்துறையைக் கூப்பிட்டு வித்துடலைப் பாரம் குடுத்திட்டு மற்ற ஏற்பாடுகளையும் செய்யச் சொல்லுங்கோ”, என்றுவிட்டு தளபதி தனது இடத்திற்குப் போய்விட்டார். தாங்கள் சின்னத்தம்பனைக் காட்டுக்குள் நிகழ்த்திய சாதனையைக் கூடப் பாராட்டும் மன நிலையில் அவர் இல்லையென்பதைச் சிவம் புரிந்து கொண்டான்.
 
சிறிது நேரத்தில் அரசியல்துறையினர் வந்து வில்லவனின் வித்துடலைப் பாரமெடுத்தனர். அதுவரை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த கிளி, வித்துடலை வாகனத்தில் ஏற்றுவதற்காகத் தூக்கிய போது, “வில்லவா, வில்லவா!”, எனக் கத்திக் கொண்டு சுற்றிச் சுற்றிப் பறக்க ஆரம்பித்தது.
 
அரசியல்துறைப் போராளிகள் அதைக் கண்டு வியந்து போயினர். வாகனத்தில் ஏறியதும் அனைவரும் வரிசையாக நின்று அவனுக்கு அஞ்சலி செய்தனர்.
 
கிளியும் சிவத்தின் தோளில் வந்து அமைதியாய் அமர்ந்து கொண்டது.
 
அஞ்சலி முடிந்து வாகனம் புறப்பட ஆரம்பித்ததும் கிளி முகாம் வாசல் கேற் தூணில் போய் அமைதியாக இருந்து கொண்டது. வாகனம் போகும் போது அதையே பார்த்துக் கொண்டிருந்த கிளி அது கண்ணிலிருந்து மறைந்ததும் வானில் பறக்க ஆரம்பித்தது.
 
வந்த காலம் தொட்டு முகாமை விட்டு வெளியே போகாத அந்தக் கிளி எங்கே போகிறது என்பதைச் சிவத்தால் ஊகிக்கவே முடியவில்லை.
 
ஆனால் அதன் பிறகு அந்தக் கிளி முகாமுக்குத் திரும்பவே இல்லை.
 
பகலில் ஓய்வு கண்டிருந்த சண்டை மாலையில் மீண்டும் உக்கிரமடைந்தது. கிபிர் விமானங்கள் தங்கள் தாக்குதல்களை சின்னப்பண்டிவிரிச்சான் வரை விரிவித்தன. அங்குள்ள மக்கள் ஏற்கனவே மடுவுக்கு இடம்பெயர்ந்து விட்டதால் உயிராபத்துக்கள் தவிர்க்கப்பட்ட போதும் குடியிருப்புக்கள் நொருங்கிக் கொண்டிருந்தன.
 
தம்பனையில் பட்டிமாடுகள் ஏற்கனவே கலைபட்டு பண்டிவிரிச்சான் வீதிகளில் தஞ்சமடைந்திருந்தன. அவையும் மெல்ல மெல்ல தட்சிணாமருதமடு, பாலம்பிட்டி நோக்கி நகரத் தொடங்கிவிட்டன.
 
நன்றாக இருட்டிய பின்பே சண்டை ஓய்வுக்கு வந்தது. ஆனால் படையினர் தாம் முன்னேறி நிலைகொண்ட இடத்திலிருந்து பின்வாங்கவில்லை. இரவு முழுவதுமே தொடர்ந்து பரா வெளிச்சங்களை அடித்துக் கொண்டிருந்தனர்.
 
அன்று மாலை சிறப்புத் தளபதி, பகுதி தளபதியிடம் ஒரு அணியை களமுனைக்கு அனுப்பும்படி கேட்டிருந்தார்.
 
சிவம் தலைமையிலான நாற்பது பேர் கொண்ட ஒரு அணியை அனுப்பிவைத்தார் பகுதித் தளபதி.
 
சிவம் குடாரப்பு தரையிறக்கத்தின் போது சிறப்புக் கட்டளைத் தளபதியின் தலைமையில் பல வீர தீரச் சண்டைகளைச் செய்தவன். அவரது தலைமையிலும் நெறிப்படுத்தலிலும் அவனுக்கு எல்லையற்ற மரியாதையும் விருப்பமும் உண்டு. மின்னல் வேகத்தில் முடிவெடுக்கும் அவரின் ஆற்றல் கண்டு அவன் பலமுறை அதிசயப்பட்டதுண்டு.
 
அவனைக் கண்டதும், “என்னடாப்பா.. இண்டைக்கு காட்டுக்கை கலக்கவிட்டிட்டாய் போலை?..” என்றார் சிறப்புத் தளபதி ஒரு புன்னகையுடன்.
 
அவரின் வாயால் பாராட்டுப் பெறுவது சிவத்துக்கு எல்லையற்ற பெருமையாக இருந்தது, அவன் மெல்ல, “எல்லாம் உங்களோட நிக்கேக்க கிடைச்ச அனுபவம் தானண்ணை”, என்றான்.
 
“அனுபவம் எல்லாருக்கும் தான் கிடைக்குது. அதை அறிவாய் மாற்றி அடுத்த கட்டத்துக்கு நகருறது தான் கெட்டித்தனம். உனக்கு அது இருக்குது.. இனி இந்தச் சண்டையிலையும் நீ அதை நிரூபிக்க வேணும்”,
 
“சரியண்ணை”, என்றான் சிவம் பெரும் மகிழ்ச்சியுடன்.
 
சிவத்தின் அணியினருக்கு ஒரு நீண்ட வரிசை கொடுக்கப்பட்டது. அதில் வலது பகுதி அணியும், இடது பகுதி அணியும் காட்டுக்குள் நிறுதப்பட நடுப்பகுதி 50மீற்றர் பின் தள்ளி நிறுத்தப்பட்டது. சிவம் நடுவில் நின்று அணியை வழிநடத்தும் படி கட்டளையிடப்பட்டது.
 
களத்தின் முன் முனையில் நின்ற அத்தனை போராளிகளும் பின்னுக்கு எடுக்கப்படவே இப்போ சிவத்தின் அணி களத்தின் முன் முனை வரிசையாகியது.
 
இரவு இடையிடையே படையினரின் செல்கள் விழுந்து கொண்டிருந்தன. துப்பாக்கிச் சூடுகளும் கேட்டுக்கொண்டிருந்தன. பரா வெளிச்சம் மட்டும் இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்தன.
 
இரவு ஏற்கனவே போராளிகள் நின்று போரிட்ட பகுதிக்கும் சிவத்தின் நிலைகளுக்குமிடையே சில அசைவுகள் தெரிவது போன்று சிவத்துக்குப் பட்டது. ஆனால் பரா வெளிச்சம் வரும் நேரங்களில் பார்த்த போது சிறு பற்றைகளை விட எதுவுமே தெரியவில்லை. எப்படியிருப்பினும் மேலிடத்தின் கட்டளை வரும் வரை எந்தத் தாக்குதலிலும் இறங்கக் கூடாது எனக் கண்டிப்பான உத்தரவு இருந்த படியால் அவனால் எதுவுமே செய்ய முடியவில்லை.
 
அதிகாலை மூன்று மணியளவில் படையினரின் செல் மாரி ஆரம்பமாகியது. சிவத்தின் அணியினர் நிலை கொண்டிருந்த காப்பரண்கள் நிலமட்டத்தில் தேக்கம் குற்றிகள் போடப்பட்டவையாக இருந்தபடியால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
 
மரக் கொப்புகள் மட்டும் முறிந்து பங்கர்களின் மேல் விழுந்தன. கிழக்கு வெளித்துக்கொண்டிருந்த அதிகாலைப் பொழுதில் செல் மாரி ஓய்ந்தது. டாங்கிகள் சகிதம் படையினர் முன்னேறும் அறிகுறிகள் தென்பட்டன.
 
ஏற்கனவே போராளிகள் நிலை கொண்டிருந்து பின்வாங்கிவிட்ட காவல் நிலைகள் மீது சரமாரியாக ராங்க் தாக்குதல்களும் துப்பாக்கி வேட்டுக்களும் பொழியப்பட்டன. காவல் நிலைகள் மேல் பீரங்கிக் குண்டுகள் விழுந்து வெடித்தன.
 
சுமார் ஒரு மணி நேரத் தாக்குதலின் பின்பு டாங்கிகள் சகிதம் படையினர் முன்னேற ஆரம்பித்தனர்.
 
சிவத்துக்கு இன்னும் தாக்குதலுக்கான கட்டளை வராமல் இருப்பது தாங்கமுடியாத தவிப்பாய் இருந்தது. எனினும் அடுத்தடுத்த நிமிடங்களில் கட்டளை வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தான்.
 
இரு டாங்கிகளும் அதன் பின்னால் காப்பெடுத்து ஓடிவந்த படையினரும் அவனின் கண்களில் தெரிந்தது. சுடுவதற்கு தயார் நிலையில் கட்டளையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.
 
டாங்கிகள் சிவம் இருந்த இடத்தை நெருங்கிவிட்டன. படையினரும் சூட்டெல்லைக்குள் வந்து விட்டனர்.
 
இன்னும் ஏன் கட்டளை வரவில்லை எனத் தவித்துக் கொண்டிருந்த போது படையினர் நின்ற இடங்களிலெ்லாம் நிலக்கண்ணிகள் வெடித்து அவர்கள் தூக்கி வீசப்பட்டது தெரிந்தது. முன்னால் வந்த டாங்கியின் செயின் நிலக்கண்ணியில் அகப்பட்டு அறுந்து மேலெழுந்து கீழே விழுந்தது. போராளிகளின் எறிகணைகள் எங்கும் விழுந்து பெரும் புகைமண்டலத்தை எழுப்பின. பின்னால் வந்த டாங்கியின் மேல் ஒரு எறிகணை விழுந்து சுடுகுழலைத் தூக்கி எறிந்தது.
 
படையினர் பலர் இறந்தும், காயப்பட்டும் விழுந்ததையும், ஏனையோர் நிலைகுலைந்து ஓடுவதையும் காண முடிந்தது.
 
போராளிகளின் எறிகணை வீழ்ச்சி வரிசை மெல்ல மெல்ல முன்னகர ஆரம்பித்தது.
 
திடீரென முன்னேறும்படி கட்டளை வந்தது.
 
எறிகணைவீச்சு நின்றுவிடவே புகை மண்டலத்திற்குள்ளால் புகுந்து சிவத்தின் அணியினர் முன்னேற ஆரம்பித்தனர்.
 
அப்போது தான் முன்னால் வந்த இராணுவ அணியை விட இன்னொன்று முன்வந்து கொண்டிருப்பதை  சிவம் அறிந்து கொண்டான். சிவத்தின் அணி மிக நெருக்கமாக முன்னேறி அவர்கள் மேல் தாக்குதலைத் தொடுத்தது.
 
அதே வேளையில் போராளிகளின் எறிகணைகள் துல்லியமாக படையினர் நடுவே விழுந்து வெடித்தன.
 
ஆனால் படையினரின் எறிகணைகளோ சிவத்தின் அணியினருக்குப் பின்புறமாகவே விழுந்து வெடித்தன.
 
முற்பகல் பதினொரு மணியளவில் படையினர் பின்வாங்க ஆரம்பித்தனர். அதே நேரத்தில் தாக்குதலை மேலும் மூர்க்கமாக நடத்தும்படி சிவத்துக்கு கட்டளை வந்தது.
 
பிற்பகல் இரண்டு மணியளவில் தம்பனை முழுமையாகவே போராளிகளின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. அப்போது தான் தங்களைப் போல் மேலும் நான்கு அணிகள் சண்டையில் பங்கு கொண்டதை அறிந்து கொண்டான்.
 
காவலரண்களில் மட்டும் சில போராளிகளை நிறுத்திவிட்டு ஏனையோரை வெவ்வேறு பாதைகளால் காடுகளுடாகப் பின்வாங்கும்படி கட்டளை வந்தது.
 
எல்லோரும் சாப்பிட்டு விட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது கண்ணிவெடிப் பிரிவுப் பொறுப்பாளர் செல்வம் சிவத்தின் அருகில் வந்தான்.
“எப்பிடியண்ணை எங்கடை விளையாட்டு?” எனக் கேட்டான் அவன்.
 
“இண்டைக்கு வெற்றியே உங்களால தானே… சண்டைக்குத் திட்டம் வகுக்கிறதிலை எங்கடை சிறப்புத் தளபதிக்கு நிகர் எவருமில்லை”, என்றான் சிவம்.
 
“ஓமண்ணை.. எனக்கும் முதல் விளங்கேல்லை.. கண்ணியை விதைச்சுப்போட்டு ஒரேயடியாய்ப் பின்வாங்கப்போறமோ எண்டு தான் நானும் யோசிச்சன்”.
 
“நானும் சாடையாய் அசுமாத்தம் கண்டிட்டு ஆமியெண்டு நினைச்சு சுடத்தான் நினைச்சனான். அவர் தன்ரை ஓடர் இல்லாமல் தாக்குதல் நடத்தக் கூடாது எண்டு கண்டிப்பாய் கட்டளையிட்டதாலை தான் விட்டனான். உருமறைப்பிலை வர ஆமியையும் எங்கடை ஆக்களையும் வித்தியாசம் தெரியுமே?”
 
“அப்பாடா.. தப்பினம்!” என்றான் செல்வம் சிரித்தவாறே!
 
“நீங்கள் தப்பினபடியால் தான் ஆமியாலை தப்ப முடியேல்லை”, என்றுவிட்டு சிவமும் சிரித்தான்.
 
“அண்ணை.. நாங்கள் பிடிச்ச இடத்திலையிருந்து முற்றாகப் பின்வாங்கியிட்டம். இதிலை ஏதும் திட்டம் இருக்குமெண்டு நினைக்கிறன்”, என்றான் செல்வம்.
 
“ஓமோம்.. இருக்கும்”, எனச் சிவமும் ஆமோதித்தான்.
 
(தொடரும்)
 
தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்
  • தொடங்கியவர்
நீந்திக்கடந்த நெருப்பாறு அங்கம் - 21
 
போராளிகள் களத்தை விட்டு நீங்கிச் சிறிது நேரத்திலேயே கிபிர் விமானங்கள் அந்த இடத்தை இலக்குவைத்து குண்டுகளை வீசத் தொடங்கிவிட்டன. கண்காணிப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த சிறு தொகையினரான போராளிகளும் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பான காவலரண்களில் பதுங்கிவிட்டதால் அவர்களில் எவருக்கும் எதுவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை.
 
ஏறக்குறைய ஒரு மணிநேரம் நான்கு விமானங்கள் மாறி மாறித் தாக்குதல் நடத்திவிட்டுப் போய்விட்டன. அடுத்த சில நிமிடங்களில் தொடங்கிய எறிகணை வீச்சு மாலையில் நன்றாக இருட்டும் வரை தொடர்ந்தது. பல எறிகணைகள் காடுகளுக்குள்ளும் விழுந்து வெடித்தன. அன்று இரவு சிறப்புத் தளபதி முக்கிய அணிகளின் பொறுப்பாளர்களை அழைத்து ஒரு விசேட கூட்டம் நடத்தினார்.
 
அன்று இரவுக்குள் தற்சமயம் முன்னரங்காக உள்ள பெரிய தம்பனைப் பகுதியிலிருந்து பண்டிவிரிச்சான் வரை மறைவான பகுதிகளால் பாம்பு பங்கர்கள் அமைக்கப்படவேண்டும் எனவும் படையினர் நகர்வை மேற்கொள்ளக்கூடிய பகுதிகள் எங்கும் ரிமோட்டில் இயங்கக்கூடியவை உட்பட சகலவிதமான கண்ணிவெடிகளும் புதைக்கப்பட வேண்டுமெனவும் அக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டுவிட்டதாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்து விட்டதாகவும் வேவுத் தகவல்கள் தெரிவிப்பதாகவும், படையினர் தம்மை மீளமைத்து உடனடியாக அடுத்த நகர்வை மேற்கொள்வது சாத்தியமில்லையெனவும் அவர் தெரிவித்தார். அந்த இடைவெளியைப் பயன்படுத்தி சகல தயாரிப்புக்களையும் நிறைவு செய்வது பற்றியும் அவர் திட்டங்களை விளக்கினார்.
 
போராளிகள் தரப்பிலும் நான்கு பேர் வீரச்சாவடைந்திருந்தனர். பன்னிரண்டு பேர் காயமடைந்திருந்தனர். போராளிகள் தங்கள் தோழர்களின் இழப்புக்காகக் கவலைப்பட்டாலும் அந்தக் கவலையை எதிரியின் மீதான கோபமாக மாற்ற அவர்கள் கற்றுக்கொண்டிருந்தனர்.
 
இரு நாட்களாகச் சண்டைகளில் தோய்ந்து போயிருந்த சிவத்தின் மனம் இப்போ கணேசனை நினைத்துக் கொண்டது. ரூபாவை கணேஸ் அனுப்பிவிட்ட விடயம் சிவத்துக்கு தெரியாதாகையால் ரூபா அவனைக் கவனிப்பாள் என அவன் தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டான். எப்பிடியும் மறு நாள் காலை கணேசை போய்ப் பார்க்க வேண்டும் என சிவம் முடிவு செய்து கொண்டான்.
 
அடுத்தநாள் காலையில் சிவம் பண்டிவிரிச்சான் மருத்துவப் பிரிவுக்குப் போனபோது அவனுக்கு அங்கே அதிர்ச்சிதான் காத்திருந்தது. கணேஸ் படுத்திருந்த கட்டில் வெறுமனே கிடந்தது. அருகில் படுத்திருந்த போராளியிடம், “தம்பி.. இதில படுத்திருந்த அண்ண எங்கை?”, எனக் கேட்டான்.
 
“தெரியேல்லை அண்ணை – நான் ராத்திரித்தான் வந்தனான்”, என்றான் அவன்.
 
கணேஸ் அனுமதிக்கப்பட்ட போது இருந்த போராளிகள் எவருமே காணப்படவில்லை. சிவம் மனம் குழம்பியவனாகப் பொறுப்பாளரைத் தேடிப் போனான்.
 
பொறுப்பாளர் சிவத்தைக் கண்டதும், “வாங்கோ.. அண்ணை”, எனக் கூறியவாறு எழுந்து நின்றான். சிவம் கணேஸ் பற்றி அவனிடம் விசாரித்தான்.
 
அவன் கடுமையான காயங்களுக்கு உட்பட்ட போராளிகளைப் பராமரிக்கும்  இலுப்பைக்கடவை  மருத்துவ முகாமுக்கு மாற்றப்பட்டுவிட்டதாகவும், தாங்கள் உடனடிக்காயங்களுக்கு வைத்தியம் செய்வதுடன், முதலுதவிப் பிரிவாக இயங்குவதாகவும் தெரிவித்தான். அவனுக்கு கணேசைப் பற்றி எந்தவித விபரமும் தெரிந்திருக்கவில்லை.
 
ரூபாவைச் சந்தித்தால் விபரம் அறிய முடியும் என நினைத்தவனாக அரசியல்துறையின் மகளிர் பிரிவை நோக்கிப் போனான்.
 
அங்கு ரூபா தனது படையணிக்கே திரும்பிவிட்டதாக தெரிவித்தனர். அவர்களாலும் கணேஸ் பற்றிய எந்த விபரங்களையும் சிவத்துக்கு கொடுக்க முடியவில்லை.
 
அப்போது அங்கு வந்த முகாம் பொறுப்பாளர், கணேஸ் தான் சண்டைக்குப் போகப் போவதாகக் கூறி கட்டிலில் இருந்து எழுந்து விழுந்துவிட்டதாக ரூபா தன்னிடம் கூறியதாகக் கூறினாள். அதற்கு மேல் எதையும் அவளும் தெரிந்து வைத்திருக்கவில்லை.
 
படுகாயமுற்று, இடுப்பின் கீழ் இயக்கமின்றி செயலற்ற நிலைமையில் இருந்த போதும் சண்டை என்றதும் தன்னிலை மறந்து உணர்ச்சி வசப்பட்டதை நினைத்த போது சிவத்தின் உடல் ஒருமுறை புல்லரித்தது.
 
ஆனால் கணேசின் நிலைபற்றி அறிய முடியாமல் இருந்தமை அவனுள் பெரும் குழப்பத்தையே ஏற்படுத்தியது. சண்டைக்களம் சூடு பிடித்துள்ள நிலையில் இலுப்பைக்கடவை போய் வருவதும் சாத்தியமில்லை. எதற்கும் முதலில் முகாமில் போய் வோக்கி மூலம் தொடர்பு எடுப்பதாக முடிவு செய்தவனாக சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டான் சிவம்.
 
அவன் திரும்பி வந்து கொண்டிருந்த போது மடுவில் கந்தசாமியும் இன்னொரு பெண்ணும் தண்ணீர் குடங்களுடன் வந்து கொண்டிருந்தனர்.
 
சிவம் சைக்கிளை நிறுத்தினான்.
 
கந்தசாமி தனக்கருகில் நின்ற பெண்ணிடம், “இவர் தான் என்ரை உயிரைக் காப்பாற்றின இயக்கத் தம்பி”, என அறிமுகப்படுத்தினான்.
 
கந்தசாமி ஒரு மெல்லிய சிரிப்புடன், “இதுதான் என்ரை பெண்சாதி புஷ்பம்… அங்காலை சண்டை நடக்கேக்கயே முருகரப்பு போய் இவவையும் பிள்ளையளையும் காட்டுப்பாதையாலை கூட்டி வந்திட்டார்”, என்றான்.
 
அவள், “அங்கை எங்களைத் தேடி வந்தவங்களாம்.. நாங்கள் இல்லையெண்டாப் போல வீட்டைக் கொழுத்திப் போட்டு போட்டாங்களாம்.. எங்களை இயக்கம் முதலே கூட்டிக்கொண்டு போய் குருக்களுரிலை ஒரு மறைவான இடத்தில விட்டவை. அங்கை வந்து தான் முருகரப்பு கூட்டி வந்தவர்”, என நடந்ததைக் கூறி முடித்தாள் புஷ்பம். அவள் குரலில் எல்லையற்ற நன்றிப் பெருக்கு இளையோடியது.
“தம்பி.. இந்த நன்றியை நான் சாகுமட்டும் மறக்கமாட்டன்”, என்று கூறிய கந்தசாமியின் குரல் தளதளத்தது.
 
புஷ்பம் திடீரென, “நீங்கள் சங்கரசிவமெல்லே?” எனக் கேட்டாள்.
 
சிவம் வியப்புடன். “ஓ.. ஏன் என்னை முதலே தெரியுமே?” எனக் கேட்டான்.
 
“பண்டிவிரிச்சான் பள்ளிக்கூடத்திலை ஓ.எல்லிலை உங்களோட படிச்ச புஷ்பமலரை ஞாபகமில்லையே?”
 
சிவம், அவளின் முகத்தை நன்றாக உற்றுப் பார்த்தான். தன்னுடன் படிப்பில் போட்டி போடும் புஷ்பமலர் தான் அவள் என்பதை அவன் இனங்கண்டு கொண்டான்.
 
ஏறக்குறைய பத்து வருடங்கள் அவளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக அவனால் அவளை உடனடியாக அடையாளம் காணமுடியவில்லை என்பதை அவன் புரிந்து கொண்டான்.
 
“மடுவில ஆமியின்ரை செல்லடியிலை உங்கடை, அம்மா, அப்பா, தங்கச்சியெல்லாம்…”
 
சிவம் வார்த்தைகளை முடிக்கவில்லை. அவள், “ஓமோம்.. அந்த புஷ்பமலர் நான் தான்.. அப்பிடியே அந்தப் பிரச்சினையிலை காயப்பட்டு அங்காலை கொண்டு போனவங்கள். பிறகு சுகமானாப் போலை சொந்தக்காரரோடை அங்கயே தங்கீட்டன்.” என்றாள்.
 
ரணகோஷ காலகட்டத்தின் போது நடந்த அந்தக் கொடூரம் சிவத்தின் நினைவில் வந்தது. அந்தக் காட்சியை மீட்டிப்பார்க்கும் போது இப்போதும் அவனின் நெஞ்சில் நெருப்பு எரிந்தது,
 
வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கி முன்னேற முயன்ற இராணுவம் விடுதலைப்புலிகளின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக முன் செல்ல முடியவில்லை. அந்த நிலையில் அவர்கள் தங்கள் முன்னேற்ற வியூகத்தை வவுனியா மன்னார் வீதியை நோக்கி திருப்பினார்கள்.
 
ரணகோஷ என்ற படை நடவடிக்கை மூலம் நெலுக்குளத்தை உடைத்துக்கொண்டு படையினர் பூவரசங்குளம் வரை முன்னேறிவிட்டனர். அங்கிருந்து மடு நோக்கி நகர முயன்ற இராணுவம் விடுதலைப்புலிகளின் பதிலடிகாரணமாக ஒரு அடி கூட மேற்கொண்டு நகர முடியாமல் திண்டாடியது.
 
அந்த நிலையில் பூவரசங்குளம் தம்பனை ஆகிய கிராமத்து மக்கள் இடம்பெயர்ந்து மடுவில் தஞ்சமடைந்திருந்தனர்.
 
அந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு நாள் பண்டிவிரிச்சானை நோக்கி அடுத்தடுத்து எறிகணைகள் வந்து விழத் தொடங்கின. அதன் காரணமாக மடுவில் இடம்பெயர்ந்து தஞ்சமடைந்திருந்த மக்கள் அச்சமடைந்து மடுமாதா தேவாலயத்திற்கு அருகில் இருந்த சின்னக் கோவிலில் அடைக்கலம் புகுந்தனர்.
 
பண்டிவிரிச்சானை நோக்கி இடம்பெற்ற தொடர் எறிகணை வீச்சு ஓய்ந்து மக்கள் சற்று நிம்மதியடைந்த வேளையில் தான் அந்தக் கொடூரம் நிகழ்ந்தது.
 
பறந்து வந்த இரு எறிகணைகளில் ஒன்று சின்னக் கோவிலின் உள்ளேயும் மற்றையது வாசலிலும் வீழ்ந்து வெடித்தன. பெரும் மரண ஓலம் எங்கும் எழுந்தது. உடல்கள் பிய்த்தெறியப்பட சீறிய இரத்தம் ஆலயச் சுவர்களில் தெறித்துப் பரவின.
 
பிணங்களும் குற்றுயிராய்க் கிடந்த மக்களுமாய் ஆலயமும் ஆலய வளாகமும் ஒரு போர்க்களம் போல் காட்சியளித்தன.
 
“மாதாவே.. ஏன் எங்களுக்கு இந்தக் கொடுமை”, என யாரோ ஒரு பெண் அலறிய குரல் ஆலயச் சுவர்களில் மோதி எதிரொலித்தது.
 
பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட இருபத்தைந்திற்கும் மேற்பட்டவர்கள் அந்த இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். உடல்கள் தலைவேறு, கை கால்கள் வேறு எனச் சிதறிப் போய்க் கிடந்ததால் இறந்தோரின் தொகையைக் கூடச் சரியாகக் கணக்கெடுக்க முடியவில்லை. ஏராளமானோர் படுகாயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.
பாடசாலைகள், ஆலயங்கள் என மக்கள் பெருமளவு கூடியிருக்கும் இடங்களை இலக்கு வைக்கும் இலங்கை இராணுவத்தின் இன அழிப்புப் போர் முறைக்கு மடுவளாகமும் பலியாகி இரத்தக்குளமாகியது.
 
அந்தச் சம்பவத்தில் தான் புஷ்பமலரின் தாய்,தந்தையும் தங்கையும் அடையாளம் காணமுடியாதவாறு சிதறிப்பலியாகினர்.
 
புஷ்பமும் படுகாயமடைந்து செஞ்சிலுவைச்சங்க வாகனத்தில் வவுனியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டாள்.
 
அந்த நினைவுகள் சிவத்தின் நினைவில் மோதியபோது அவன் தன்னையறியாமலேயே தன் பற்களை நெருமிக் கொண்டான்.
 
சிவம், “மடுவிலை உங்கடை பெற்றோர் சகோதரியைக் கொண்டாங்கள். புவரசங்குளத்திலை உங்கடை மச்சாளை கெடுத்து அவவைச் சாகவைச்சாங்கள். பிறகு இவரையும் உங்களையும் பிள்ளையளையும் கொல்லப் பாத்தாங்கள். இவங்களை…”, என்று கோபமாக கூறிவிட்டு இடைநிறுத்தினான்.
 
திடீரென சற்றுத் தொலைவில் கேட்ட பெரும் வெடியோசை அவர்களை அதிரவைத்தது. அவர்கள் மேல் காற்று ஏற்படுத்திய உதைப்பின் அதிர்வில் புஷ்பம் தண்ணீர்க்குடத்தை கீழே போட்டுவிட்டாள்.
 
குண்டைவீசிய விமானம் பேரிரைச்சலுடன் மேல் எழுந்தது.
 
(தொடரும்)
 
தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
நீந்திக்கடந்த நெருப்பாறு அங்கம் - 22
 
இரு புறங்களிலிருந்து பறந்துவந்த விமானங்கள் குண்டுகளை வீசிவிட்டு மேலெழுந்த போது தரையிலிருந்து விமான எதிர்ப்பு பீரங்கிகள் முழங்கத்தொடங்கின. உடனடியாகவே இரு கிபிர் விமானங்களும் வான்பரப்பைவிட்டு மறைந்தன.
 
பெரியபண்டிவிரிச்சான் பாடசாலைப் பக்கம் புகைமண்டலம் எழுந்தது. இப்போதெல்லாம் விமானத் தாக்குதல்கள் மக்களுக்குப் பழகிப்போய்விட்டன. ஒவ்வொரு வீடுகளிலும் பதுங்குகுழிகள் அமைக்கப்பட்டிருந்தன. விமானங்கள் போய் சில நிமிடங்களிலேயே இயல்பு நிலை வந்துவிடும்.
 
புஷ்பம் புகைமண்டலம் எழும்பிய திசையைப் பார்த்து ஒரு பெரு மூச்சுடன், “பாருங்கோ சிவம்.. கோயிலுக்கு ஷெல் அடிச்சு எங்கடை குடும்பத்தையே அழிச்சாங்கள், இப்ப பள்ளிக்கூடங்களுக்கு விமானத் தாக்குதல் நடத்தி பிள்ளையளைக் கொல்லத் திரியிறாங்கள்” என்றாள்.
பண்டிவிரிச்சான் பாடசாலையில் முன்பொருமுறை புக்காரா விமானம் பரீட்சை மண்டபத்தின் மீது குண்டு வீசியது சிவத்தின் நினைவில் வந்து போனது.
 
“நக்கிற நாய்க்கு செக்கென்ன? சிவலிங்கமென்ன எண்டு சொல்லுவாங்கள். இன அழிப்பு எண்டு வெளிக்கிட்டவங்கள் குழந்தையள், முதியவர்கள் எண்டு பாக்கவே போறாங்கள்?”, என்றான் சிவம். அப்போ பண்டிவிரிச்சான் பக்கமிருந்து வேகமாகச் சைக்கிளில் வந்த ஒருவரிடம் சிவம், “ஐயா.. குண்டு எவடத்திலை விழுந்தது?”, எனக் கேட்டான்.
 
“அது பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்திலை உள்ள ஒரு கைவிடப்பட்ட வீட்டிலை தான் விழுந்தது. ஆக்களுக்க ஒரு சேதமும் இல்லை. இரண்டு பசுமாடுகள் தான் செத்துப்போச்சுது” எனச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார் அவர்.
 
அது ஏற்கனவே தமிழர் புனர்வாழ்வுக்கழகம் இயங்கிய வீடு. இப்போது அந்தக் காரியாலயம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது. ஆனால் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் இயங்கிய இடம் அது என்பது எங்கள் மக்களில் ஒருவராலேயே எதிரிக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்கும் என்பதை நினைத்த போது சிவத்தின் மனதில் வேதனை பரவியது. எனினும் அந்தத தகவல் மிகவும் பிந்திப் போய்ச் சேர்ந்துள்ளது என்பதை நினைத்து அவன் சற்று ஆறுதலடைந்தான்.
 
சிவம் கந்தாசாமியிடமும் புஷ்பத்திடமும் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டான். புஷ்பம் நன்றி கலந்த ஒரு புன்னகையுடன் விடைகொடுத்தாள்.
 
அடுத்த இருவாரங்களில் இராணுவம் மூன்று முறை மீண்டும் பெரிய தம்பனையைக் கைப்பற்ற முயன்றும் முடியவில்லை. ஒவ்வொரு முறையும் பெரும் இழப்புக்களுடன் பின்வாங்கும் நிலையே ஏற்பட்டது. ஆனால் அப்படியான சந்தர்ப்பங்களிலெல்லாம் ‘கிபிர்’ தாக்குதல்கள், தொடர் எறிகணை வீச்சுக்கள் என்பன தம்பனை, சின்னப்பண்டிவிரிச்சான் ஆகிய பகுதிகளிலுள்ள எஞ்சியிருந்த வீடுகளையும் துவம்சம் செய்து கொண்டிருந்தன. எனினும் இராணுவத்தால் ஒரு அடி கூட முன்னேற முடியவில்லை. மடு, தட்சிணாமருதமடு, பாம்பிட்டி ஆகிய பகுதிகளில் ஓரளவு அமைதி நிலவியதால் தமிழ்த் தினப் போட்டிக்கான ஏற்பாடுகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன.
 
தட்சிணாமருதமடு பாடசாலையில் நாடகப் போட்டிக்கு காத்தவராயன் நாட்டுக் கூத்து பழக்கப்பட்டது. அதிபர் பரமசிவத்தையே கூத்தைப் பழக்கிவிடும்படி கேட்டிருந்தார். அவர் சுந்தரசிவத்தையே அனுப்பிவிட்டிருந்தார். முத்தமாவின் தம்பி ராமு காத்தவராயன் பாத்திரத்தில் மிகச் சிறப்பாக பாடி நடித்தான்.
 
இரவில் ‘பெற்றோர் மாக்ஸ்’ வெளிச்சத்திலேயே நாட்டுக்கூத்து பழக்கப்பட்டது. தம்பியாருக்குத் துணையாக வரும் சாட்டில் ஒவ்வொரு நாளும் முத்தமாவும் வந்துவிடுவாள். சுந்தரசிவமும் ஒரு தனியான உற்சாகத்துடன் பழக்க ஆரம்பித்தான்.
 
தமிழ்த் தினப்போட்டி வெகு சிறப்பாகவே இடம்பெற்றது. நாட்டுக்கூத்து எது எது சிறந்தது என இலகுவில் முடிவு செய்ய முடியாதவாறு கடுமையான போட்டியாகவிருந்தது.
 
தட்சிணாமருதமடு காத்தவராயனும், சின்னப்பண்டிவிரிச்சான் ஞானசௌந்தரியும், பெரிய பண்டிவிரிச்சான் சந்தோமையர் கூத்தும் என கடும் போட்டி நிலவியது. ஞான சௌந்தரி முதல் இடத்தையும் காத்தவராயன் இரண்டாவது இடத்தையும் ஒரு சில புள்ளிகள் வித்தியாசத்தில் பெற்றுக்கொண்டன. ஆனால் சிறந்த நடிகனுக்கான பரிசு ராமுவுக்கே கிடைத்தது. இரண்டாவது பரிசு ஞானசௌந்தரியாக நடித்த பற்றிமா என்ற பெண் பிள்ளைக்கே கிடைத்தது.
 
சின்னப்பண்டிவிரிச்சான் அதிபர் தனது நாடகம் பரிசு பெற்றதில் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தாள். சின்னப்பண்டிவிரிச்சான் பாடசாலை இடம்பெயர்ந்து மடுவில் இயங்கிய போதும் முதல் பரிசு பெற்றது அவளுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது.
 
விழா முடிந்து திரும்பிச் செல்லும் போது பேருந்துக்குள் பற்றிமாவைத் தன்னருகிலேயே அமர்த்தியிருந்தாள். அந்தப் பழைய பேருந்து மெல்ல மெல்ல தட்சிணாமருதமடு – மடு பாதையில் ஓட ஆரம்பித்தது.
 
இரண்டாம் கட்டையில் பேருந்து போய்க்கொண்டிருந்த போது தான் எதிர்பாராத அந்த அனர்த்தம் நிகழ்ந்தது.
 
திடீரென தாக்கிய கிளைமோர் வெடியில் பேருந்து நொருங்கியது. பேருந்தில் வந்த இரு பாடசாலைகளின் ஆசிரியைகளும், மாணவ மாணவியரும் உடல் சிதறித் தூக்கி வீசப்பட்டனர்.
 
எங்கும் சிதறிய குருதியில் அந்த இடமே சிவந்துபோனது. காயப்பட்ட மாணவ, மாணவியரின் அலறல் காட்டு மரங்களையே நடுங்க வைத்தது. சத்தம் கேட்டு நாலாபக்கங்களிலுமிருந்து மக்கள் கூடிவிட்டனர். சில நிமிடங்களில் போராளிகளும் அங்கு வந்துவிட்டனர்.
 
போராளிகள் உடனடியாகவே காயப்பட்டவர்களைத் தங்கள் வாகனங்களில் ஏற்றி மருத்துவப் பிரிவுக்கு அனுப்பினர். பதின்நான்கு மாணவ, மாணவியரும் சின்னப்பண்டிவிரிச்சான் அதிபரும் உயிரிழந்துவிட்டனர். அதிபர் பரிசு பெற்ற மாணவியை அணைத்த நிலையிலேயே இருவரும் உயிரிழந்திருந்தனர்.
 
சிவம் அது ஆழ ஊடுருவும் படையினரின் வேலை என்பதைப் புரிந்து கொண்டான். அவன் உடனடியாகவே தளபதியின் இடத்திற்குப் போனான். அவரும் மலையவனுடன் மேலும் போராளிகள் இருவரையும் கொண்டு காட்டுக்குள் இறங்கும்படி கட்டளையிட்டார்.
அந்தப் பரந்த காட்டுக்குள் அவர்களைத் தேடிப்பிடிப்பது சாத்தியமில்லை என்பதை அவன் அறிவான். ஆனால் அவர்கள் திரும்பும் போது எப்பிடியும் முதலைக்குடாவில் தான் அருவியாற்றைக் கடக்கவேண்டுமாகையால் அந்த இடத்தை இலக்கு வைப்பதாக முடிவு செய்தான்.
 
சிவம் தனது அணியையும் கொண்டு முதலைக்குடா நோக்கி குறுக்குப்பாதையால் முதலைக்குடா நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
 
தமிழ்த்தின விழாவில் தங்கள் பிள்ளைகளின் திறமைகளைப் பார்த்து மனம் மகிழ்ந்த அந்தக் கிராமங்களின் மக்கள் அதே நாளிலேயே தங்கள் செல்வங்கள் இரத்த வெள்ளத்தில் சிதறிக்கிடப்பதைக் கண்டு கதறினர். எவருக்கு எவர் ஆறுதல் சொல்வது என்று தெரியாத நிலை.
 
பரமசிவம், முருகரப்பு ஆகியோரும் அங்கு வந்து சேர்ந்துவிட்டனர்.
 
எந்த ஒரு அதிர்ச்சியையும் தாங்கும் மனவலிமைம பெற்ற பரமசிவம் கூடக்கண்கலங்கிவிட்டார்.
 
காயப்பட்டவர்களுக்கு மருத்துவப்பிரிவுப் போராளிகள் அவசர முதலுதவிகளைச் செய்துவிட்டு தங்கள் அம்புலன்ஸிலேயே இலுப்பைக்கடவைக்குக் கொண்டு சென்றனர். இறந்தவர்களின் சடலங்களை வாகனங்களில் ஏற்றிய போராளிகள் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பிக்கொண்டிருந்தனர்.
 
பரமசிவமும், முருகரப்புவும் ஆசிரியையின் உடலைத் தூக்கினர். அவளுக்கும், அவள் அணைப்பில் கிடந்த மாணவிக்குமிடையே அவர்கள் பெற்ற விருது கிடந்தது. பரமசிவம் அதைக் கையில் எடுத்துப் பார்த்தபோது அவரின் கண்கள் கலங்கிவிட்டன.
 
“முருகர்! பாத்தியே… அதுகள் தாங்கள் பரிசு எடுத்த சந்தோஷத்தை அனுபவிக்கக் கூட அந்தப் பாழ்படுவார் விடயில்லை” என்றார் பரமசிவம்.
 
முருகர் எதுவும் பேசாமலே ஆசிரியையின் உடலைத் தூக்கி வாகனத்தில் ஏற்றினார். அவர் மனதில் காட்டுக்குள் கண்டெடுத்த சாப்பாட்டுப் பேணியும், ஏனைய தடயங்களும் நினைவில் வந்தன.
 
சிறப்புத் தளபதி உடனடியாகவே காட்டுக்குள் ஒரு அணியை இறக்கித் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடும்படி கட்டளையிட்டார்.
 
சிவம் நான்கு புறமும் வெகு உன்னிப்பாக அவதானித்தவாறே வெகு வேகமாக நடந்துகொண்டிருந்தான். மற்ற இரு போராளிகளும் சிறு சிறு இடைவெளிகளில் அவனின் பின்னால் நடந்தனர். மலையவன் எல்லோருக்கும் பின்னால் பின்புறத்தை நோட்டம்விட்டவாறு நடந்து கொண்டிருந்தான்.
 
அவர்களுடன் வந்த இரு போராளிகளும் பல்வேறு பயிற்சிகளை முடித்திருந்தவர்கள் என்பதால் சிவத்துக்கு ஈடுகொடுத்து நடப்பது அவர்களுக்கு அவ்வளவு சிரமமாயிருக்கவில்லை.
 
அவர்கள் சுமார் இரு மணி நேரத்தில் அருவியாற்றங்கரையை அடைந்துவிட்டனர்.
 
ஏனையோரை நிறுத்திவிட்டு சிவம் ஆற்றங்கரையில் போய் மணலில் கூர்ந்து அவதானித்தான். அவனின் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. மணலில் இராணுவச் சப்பாத்து அடிகள் பதிந்திருந்தன. அவை ஆற்றிலிருந்து வெளியேறும் திசையிலேயே தென்பட்டன.
 
ஆழ ஊடுருவும் படையணியினர் இதே பாதையைத் தான் பயன்படுத்தியுள்ளனர் என்பதையும் அவர்கள் இன்னும் திரும்பவில்லை என்பதையும் அவன் உறுதி செய்து கொண்டான்.
 
ஒரு குழைக் கொப்பை முறித்து மணலில் பதிந்திருந்த தனது காலடித் தடங்களை அழித்துவிட்டு திரும்பி அனைவரையும் மறைவான இடங்களில் நிலையெடுக்கவைத்தான்.
 
சிவம் தான் முதலில் சுடும்வரை எவரும் சுட வேண்டாம் எனக் கட்டளையிட்டான்.
 
அவர்கள் இந்தப்பாதையால் தான் வருவார்கள் என்பதில் சிவம் அவ்வளவு நம்பிக்கையாயிருப்பது மலையவனுக்கு பெரும் ஆச்சரியத்தை கொடுத்தது. எனினும் அவன் எதுவும் சொல்லாமலேயே சிவத்தின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்தான்.
 
நேரம் மிகவும் மெதுவாக நகர்வது போலவே மலையவனுக்குத் தோன்றிது. அவர்கள் வந்து இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் கடந்துவிட்ட போதிலும் எவ்வித அறிகுறியும் தென்படவில்லை.
 
மேலும் ஒரு அரை மணி நேரம் கடந்த நிலையில் மலையவன் முற்றாகவே நம்பிக்கை இழந்துவிட்டான்.
 
அந்த நேரத்தில் தான் சற்றுத் தொலைவில் உள்ள மரங்களில் குரங்குகள் பாயும் ஒலி கேட்டது. பறவைகளும் கத்தியவாறு பறப்பது தெரிந்தது.
 
சிவமும் ஏனைய போராளிகளும் எச்சரிக்கையடைந்து தம்மை தயார் படுத்திக் கொண்டனர்.
 
(தொடரும்)
 
தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.