Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலச்சந்திரன் படுகொலை இந்தியாவில் ஏற்படுத்திவரும் அதிர்வுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலச்சந்திரன் படுகொலை இந்தியாவில் ஏற்படுத்திவரும் அதிர்வுகள்

எஸ். கோபாலகிருஷ்ணன்
 

 

இலண்டனில் இயங்கும் சானல் 4 என்ற தொலைக்காட்சி நிறுவனம் 2009இல் நடந்த இலங்கை இறுதிப் போரில் சிங்கள் இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களையும் இன்ன பிற அட்டூழியங்களையும் அம்பலப்படுத்தி வருகிறது. அந்தத் தொலைக்காட்சியில் இது தொடர்பாக கால்லும் மெக்கரே என்பவர் இயக்கிய 'இலங்கையில் கொலைக்களம்' என்ற ஆவணப்படத்தின் முதல் இரண்டு பகுதிகள் சானல் 4ஆல் கடந்த ஆண்டு ஒளிபரப்பப்பட்டன. அந்தப் படத்தின் மூன்றாவது பகுதி விரைவில் வெளியாவதற்கு முன்னோட்டமாக ஒரு சில புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. அந்தப் புகைப்படங்களைப் பார்த்த உலகத் தமிழர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் உருக்குலைந்து போயிருக்கின்றனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் புகைப்படங்கள்தான் அவை.

 

12 வயது நிரம்பிய பாலச்சந்திரன் மார்பில் குண்டு பாய்ந்து இறந்து கிடக்கும் புகைப்படம் கடந்த ஆண்டே வெளியாகிவிட்டது. அவர் போர் உச்சத்தில் இருந்தபோது தூப்பாக்கிச் சூட்டில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்று அப்போது இலங்கை அரசு தெரிவித்தது. அண்மையில் வெளியாகியிருக்கும் புகைப்படங்கள் இதை அப்பட்டமான் பொய் என்று நிரூபித்திருக்கின்றன. ஒரு புகைப்படத்தில் பாலச்சந்திரன் மணல் மூட்டைகளுக்கு நடுவில் அமர்ந்து பிஸ்கட் உண்டுகொண்டிருப்பதும் மற்றொரு புகைப்படத்தில் மிரட்சியும் அப்பாவித்தனமும் நிறைந்த கண்களுடன் வெறித்துக்கொண்டிருப்பதும் தெரிகின்றன.

 

பாலச்சந்திரனின் சடலத்தின் புகைப்படத்தையும் மேலே குறிப்பிட்ட இரண்டு புகைப்படங்களையும் ஒரே புகைப்படக் கருவியில் சில மணிநேர இடைவெளியில் எடுத்திருப்பதை உலகப் புகழ்பெற்ற தடயவியல் நிபுணர் ஒருவரின் உதவியுடன் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்திருப்பதாக ஆவணப்பட இயக்குநர் கால்லும் மெக்கரே இந்திய நாளிதழான "தி ஹிந்து" நாளிதழில் இது குறித்து எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

 

இந்தப் புகைப்படங்கள் நிரூபிப்பது இதைத்தான்: பச்சிளம் பாலகன் பாலச்சந்திரனையும் அவரைப் பாதுகாத்து வைத்துக்கொண்டிருந்த புலிகள் ஐவரையும் கைது செய்த இலங்கை ராணுவம் பாலச்சந்திரனுக்கு தின்பண்டமும் குடிநீரும் கொடுத்துவிட்டு பாதுகாப்புப் புலிகளை அவரது கண்முன் சுட்டுக் கொன்றனர். அதன் பின் பாலச்சந்திரனையும் சுட்டுக் கொண்டிருக்கின்றனர். அதுவும் பாலச்சந்திரனின் கைக்கெட்டும் தூரத்தில் துப்பாக்கியை வைத்து சுட்டிருக்கின்றனர் என்று அக்கட்டுரையில் விளக்கியிருக்கிறார் மெக்கரே.

 

பாலச்சந்திரன் மரணம் அறிவிக்கப்பட்டபோது ஏற்படுத்திய ரணத்தைவிட அவர் கொல்லப்பட்ட விதம் குறித்த சாட்சியம் உலகத் தமிழர்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் தாங்க முடியாத வலியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்தப் புகைப்படங்களைப் பார்த்து வேதனையுடன் அறிக்கை வெளியிட்டுள்ளன.

 

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுவனர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன், பா.ம.க. நிறுவனர் இராமதாஸ், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவரும் தே.தி.மு.க தலைவருமான விஜயகாந்த் ஆகியோர் இலங்கை அரசின் மீது சர்வதேச விசாரணைக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

 

தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி, 'பாலச்சந்திரனின் புகைப்படங்களைப் பார்த்து கண்ணீர் வடிக்காத தமிழக அரசியல் தலைவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த பாலகனை நோக்கி துப்பாக்கியை நீட்ட எத்தகைய நெருப்பு நெஞ்சம் வேண்டும்' என்று வேதனையுடன் வினவியுள்ளார்.

 

2009 போரின்போது இலங்கை அரசுக்கு உதவி புரிந்ததாகக் குற்றம் சாட்டப்படும் காங்கிரஸ் அரசுக்கு இலங்கையில் போரை நிறுத்தும்படி வலியுறுத்தச் சொல்லி நிர்ப்பந்தம் செலுத்தவில்லை என்பதால் இலங்கைத் தமிழர்களின் துரோகி என்ற அவப்பெயரை தமிழீழ ஆதரவாளர்களிடமிருந்து பெற்றவர் கருணாநிதி. இந்தப் புகைப்படங்கள் வெளியான பின் இலங்கை அரசு நிகழ்த்திய போர்க்குற்றங்களை விசாரிக்க, ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்க அரசு கொண்டுவர இருக்கும் இரண்டாவது தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். மத்திய அரசு, பல்வேறு போர்க்குற்றங்களை நிகழ்த்திய இலங்கை அரசுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்க இனியும் தவறினால் இந்தியாவை ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து தம் கட்சி விலகிக்கொள்ளும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். விரைவில் தொடங்கப்போகும் பாராளுமன்றக் கூட்டத் தொடரில் இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் மீது சர்வதேச நடவடிக்கைகளை வேண்டி அழுத்தம் கொடுக்க அனைத்துக் கட்சிகளும் கலந்து பேசி உத்திகளை வகுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

'முழுக் காணொளியும் வெளியானபின்தான் கருத்து தெரிவிக்க முடியும்' என்பதுதான் இந்தப் புகைப்படங்கள் குறித்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் முதல் எதிர்வினையாக இருந்தது. ஆனால் அதன் பின் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இலங்கை அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கி இருக்கிறார் முதல்வர். 'பாலச்சந்திரனைக் கொன்றது போர்க்குற்றம்' என்று அறிவித்துள்ள அவர் 'இலங்கை அரசின் எண்ணமும் மனப்பான்மையும் ஜெர்மனியை ஆண்ட ஹிட்லரை நினைவுபடுத்துகின்றன' என்றும் கூறியுள்ளார்.

 

'பிரபாகரன் மகனாகப் பிறந்த ஒரே காரணத்திற்காக 12 வயது பாலகனை இலங்கை இராணுவம் கொடூரமாகச் சுட்டுக் கொன்றுள்ளது. மத்திய அரசு இலங்கையில் நடைபெற்ற போர்குற்றங்களை கவனத்தில்கொண்டு தக்க தண்டனைகள் வழங்கத் தீர்மானம் நிறைவேற்றி ஐ.நா.வை வலியுறுத்த வேண்டும். சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்றத்திற்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும். இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். தேவைப்பட்டால் வர்த்தகத் தடைகளையும் விதிக்க வேண்டும். இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப அனைத்து உரிமைகளையும் பெற்று, கண்ணியத்துடன் வாழும் வரை பொருளாதாரத் தடை நீடிக்க வேண்டும்'.

 

2009இல் இலங்கையில் நடந்தது போர்க்குற்றமல்ல. அது தமிழ் இன அழிப்பு என்பது தமிழீழ ஆதரவாளர்களின் நிலைப்பாடாக இருக்கிறது. 'இலங்கைத் தமிழர்களுக்கு பிரபாகரனைப் போல் மற்றொரு வலிமையான தலைமை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே அவரது மகனை சிறுவனென்றும் பாராமல் கொன்றழித்திருக்கிறது இலங்கை அரசு' என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். 'இலங்கையில் நடந்தது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் அல்ல, அங்கு நடந்தவை போர்க் குற்றங்களும் அல்ல, மாறாக, அது தமிழினத்தை அழிக்க நடந்த திட்டமிட்ட இனப்படுகொலைப் போர்தான் என்பதே பாலசந்திரன் படுகொலை வெளிப்படுத்தும் உண்மையாகும்' என்று அவர் ஈழ ஆதரவாளர்களின் ஒட்டுமொத்தக் குரலை எதிரொலிக்கிறார்.

 

வழக்கம்போல் இலங்கை அரசு, கால்லும் மெக்கரே வெளியிட்ட புகைப்படங்கள் பொய்யானவை என்று தெரிவித்துள்ளது. பாலச்சந்திரன் போரின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சிக்கித்தான் உயிரிழந்திருக்க வேண்டும் என்று அதே பல்லவியைப் பாடிக்கொண்டிருக்கிறது. இது அனைவரும் எதிர்பார்த்ததுதான். ஆனால் இறுதிப் போரின்போது இலங்கை அரசின் இராணுவத் தளபதியாக இருந்து இப்போது பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள பொன்சேகா, 'சிறுவன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவம் கைது செய்து கொன்றதாக எங்கும் பதிவாகவில்லை. பிரபாகரனும் அவரது மூத்த மகன் சார்லஸும் மட்டுமே இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டர்கள். இது பற்றிய சர்வதேச விசாரணையை எந்தச் சார்பும் இன்றி நேர்மையாக எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்' என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

 

இந்தப் பிரச்சினை குறித்து இந்திய மைய அரசு சார்பில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷிதின் வார்த்தைகள் இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசின் மீதான தமிழர்களின் அதிருப்தியை அதிகரிக்கச் செய்வதாகத்தான் அமைந்திருக்கிறது. 'இந்தப் புகைப்படங்களை நம்ப முடியாது. இலங்கை அரசுடன் நமக்கு நல்லுறவும் நட்பும் இருக்கிறது. அதை நாம் மறந்துவிடக் கூடாது' என்று மட்டுமே கூறியிருக்கிறார். இந்தப் புகைப்படங்களைக் கொண்டு முன்வைக்கப்படும் தகவல்கள் உண்மையானவை என்று நிரூபிக்கப்பட்டால் இந்திய அரசின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று சொல்லக்கூட அவருக்குத் தோன்றவில்லை. ஈழத்தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் அரசின் நியாயமற்ற அணுகுமுறைக்கு இது மற்றொரு சாட்சியமாக விளங்குகிறது.

 

இந்தியப் பாராளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியும் இந்தியாவின் முக்கிய தேசிய கட்சியுமான பாரதீய ஜனதா கட்சி, பாலச்சந்திரன் மரணம் குறித்த சந்தேகங்களை எழுப்பியுள்ள புகைப்படங்கள் பற்றி எந்தக் கருத்தும் கூறவில்லை. இது பல சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது. அந்தச் சந்தேகங்கள் வலுவாக வெளிப்படுத்தப்படுவதற்கு முன் பா.ஜ.க தன் நிலைப்பாட்டைத் தெரிவித்துவிடும் என்று நம்பலாம்.

 

இறுதிப் போர் முடிந்து மூன்றாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இன்றுவரை அங்கு ஈழத் தமிழர்களின் நிலை பரிதாபத்துக்குரியதாகத்தான் இருக்கிறது. அதை மாற்ற காங்கிரஸ் அரசு சொல்லிக்கொள்ளும்படி ஒரு நடவடிக்கையையும் எடுத்ததில்லை. ராஜபக்சே அரசால் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களின் மீது சர்வதேச விசாரணை கோரும் விஷயத்தில் அமெரிக்க அரசும் (அதன் சுயநலன் சார்ந்ததாயினும்) காட்டும் முனைப்பைக்கூட இந்திய அரசு காண்பித்ததில்லை. கடந்த ஆண்டு அமெரிக்க அரசு ஐ.நா. சபையில் கொண்டுவந்த இலங்கை அரசின் போர்க்குற்றங்களை விசாரிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க காங்கிரஸ் அரசும் முதலில் தயங்கியது. அதன் பின் தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் சேர்ந்து வலியுறுத்தியபின் வேண்டாவெறுப்பாக அத்தீர்மானத்தை ஆதரித்தது. அதுவும் பல்வேறு நிபந்தனைகளுடன்.

 

ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்திய அரசு இதுவரை கடைபிடித்துவந்த பிழையான அணுகுமுறையைத் திருத்திக்கொள்ளவும் ஈழத் தமிழருக்கு துரோகம் இழைத்ததற்கான குற்றச்சாட்டிலிருந்து விடுபடவும் இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசுக்கு மற்றுமொரு வாய்ப்பாக கால்லும் மெக்கரே வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அமையக்கூடும். ஆனால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் முனைப்பு இந்திய அரசிடம் இருக்கப்போவதில்லை என்பதுதான் வேதனையளிக்கும் உண்மை.

 

ஆனால் தமிழகக் கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு ஒரே குரலில் பேசினால் காங்கிரஸ் என்னும் யானையை அசைக்கலாம். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வைக்கலாம். பாலச்சந்திரனின் படுகொலை அதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது. தமிழகக் கட்சிகள் சுயநல அரசியல் கணக்குகளைப் போடாமல் இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி மத்திய அரசைச் செயல்பட வைக்க முயல்வார்களா என்பதே உலகத் தமிழர்கள் முன் இப்போது எழுந்துள்ள கேள்வி.

 

  • கருத்துக்கள உறவுகள்

 

தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி, 'பாலச்சந்திரனின் புகைப்படங்களைப் பார்த்து கண்ணீர் வடிக்காத தமிழக அரசியல் தலைவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த பாலகனை நோக்கி துப்பாக்கியை நீட்ட எத்தகைய நெருப்பு நெஞ்சம் வேண்டும்' என்று வேதனையுடன் வினவியுள்ளார்.

 

 

உங்களுடையதைப் போன்ற ஒன்று போதும்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
இந்த அதிர்வலைகள், கிதிர்வலைகள்  எல்லாம் நம்ப தயார் இல்லை.
 
செவிடன் காது விழும் சங்கொலியாக இல்லாது இருந்தால் சரி!!
  • கருத்துக்கள உறவுகள்

செவிடன் காது விழும் சங்கொலியாக இல்லாது இருந்தால் சரி!!

 

இந்த சமூக உறவு, சுமூக உறவு, தந்திர உறவு, மந்திர உறவு, எந்திர உறவு, கள்ள உறவு என புரியாத உறவுகளை ராஜதந்திரிகள் அடிக்கடி சொல்கிறார்களே, ஒருவேளை அதன் மூலம் முயற்சித்தால் நடக்கலாமோ? கள உறவு தான் இதைப்பற்றி எழுதணும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சமூக உறவு, சுமூக உறவு, தந்திர உறவு, மந்திர உறவு, எந்திர உறவு, கள்ள உறவு என புரியாத உறவுகளை ராஜதந்திரிகள் அடிக்கடி சொல்கிறார்களே, ஒருவேளை அதன் மூலம் முயற்சித்தால் நடக்கலாமோ? கள உறவு தான் இதைப்பற்றி எழுதணும்.

 

நான் இறுதிவரியை  கள்ள  உறவு என்று வாசித்தேன்

உண்மையும் அதுதான்

 

இந்த சமூக உறவு, சுமூக உறவு, தந்திர உறவு, மந்திர உறவு, எந்திர உறவு, கள்ள உறவு என புரியாத உறவுகளை ராஜதந்திரிகள் அடிக்கடி சொல்கிறார்களே

அதை  ஓரளவு புரிந்து கொள்ளமுடியும்

ஆனால் அவை எல்லாவற்றையும் தாண்டி இவர்களுக்குள் வெளியில் தெரியாத பகிரங்கப்படுத்தப்படாத ஒரு கள்ள உறவு உண்டு.

அது தான் அவர்களது நடவடிக்கைகளை தீர்மானிக்கும்.

நாம் வெளிப்பேச்சுவார்த்தைகள் பயணங்கள் நடத்தைகளை  வைத்து நாம் ஒரு முடிவிலிருக்க

அவர்களது முடிவுகள் வேறு மாதிரி  வருவதற்கு காரணம் இந்த கள்ள உறவே.

சிறுவர்களை புலிகள் போருக்கு பலவந்தமாக சேர்கிறார்கள். நாங்கள் மனிதாபிமான யுத்தம் நடத்துகின்றோம். அவர்களை விடுவிக்கப்போகின்றோம்.

 

எல்லாம் பிசுபிசுத்து போய்விட்டன. பயங்கரவாத அரசு கண் முன்னால் நிர்வாணமாக்கப்பட்டு நிற்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
ஆமாம் அகோதா, 'சிறுவர்களை புலிகள் போருக்கு பலவந்தமாக சேர்கிறார்கள்' என்று காவடி தூக்கி தான் கதிர்காமர், சிங்களத்துக்கு, மேற்குலகில் புலித்தடை என்னும், வெற்றியினை பெற்றுக் கொடுத்தார்.
 
இன்று, அதே சிறுவர் விடயத்தில், வசமாக சிக்கி விட்டனர்.
 
பொய் சொல்ல வைப்பதற்காகவே, போன வருடம் சிறுவனின் கொலைப் படம் மட்டும் காட்டி உள்ளனர். எதிர்பார்த்தது போலவே, சிறுவன்  'cross fire' லில் சிக்கி மரணித்தான் என்று சிங்களம் சொல்லி, இப்போது, வாயில் அல்வா சிக்கியது போல, ஆ, ஆது, அது, கமரா ஒட்டு வேலை என்று கூசாமல் சொல்லப் பார்கின்றது.
 
பார்ப்போம், எவ்வளவு தூரம் போகின்றனர் என்று!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.