Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொல்ல மறந்த செய்திகள்... 01

Featured Replies

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. இரவு ஒரு எட்டு மணி இருக்கும் என்று நினைக்கிறேன். பாரிசின் பத்தாவது நிர்வாகப் பிரிவான லா சப்பல் ஞாயிற்றுக்கிழமைக்குரிய பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருக்கிறது.
 
நம்முடைய மக்கள் சந்திக்கு சந்தி தெருவுக்கு தெரு நின்று 'ஊர்பூராயம், உலக நடப்புகள், புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புகளுக்கிடையிலான மோதல்கள், தனிநபர்களின் காதல் 'கிசுகிசுக்கள்' என்று அனைத்தையும் அசைபோட்டு அலசிக்கொண்டிருந்தார்கள்.
 
பெரும்பாலும் அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு விடுதிகளில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது.
 
sollo-marantha-01.jpg

 

நான் ஒரு பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வாங்கிக் கொண்டு பணம் செலுத்துவதற்காக வரிசையில் நின்றபோது அந்த மனிதன் அந்த அங்காடி வாசலில் வந்து நின்றார்.
 
முழுமையான ஒரு பரதேசிக் கோலத்தில் இருந்த அந்த மனிதனிடமிருந்து வீசிய துர்நாற்றம் அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது.
அந்த மனிதன் குளித்து வாரக் கணக்கில் அல்லது மாதக்கணக்கில் கூட ஆகியிருக்கலாம். அவர் அணிந்திருந்த அழுக்கு மண்டிய கிழிந்து கந்தலாய் தொங்கிய உடையும் துவைத்து நீண்ட நாட்களாகிக்கும் என்பதை உணர்த்தியது.
 
அந்த மனிதன் அதை பற்றியயெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல் அந்த அங்காடி வாசலில் நின்றவாறு சீப்பையே காணாமல் பரட்டையாகிப் போன தலைமுடியை தடவியபடியும் புதர்போல வளர்ந்திருந்த தாடியை சொறிந்த படியும் தனக்கு தானே பிதற்றிக் கொண்டிருந்தார்.
 
ஆனால் அங்காடிக்கு உள்ளே வர அவர் முயற்சிக்கவில்லை. அது பயமா அல்லது அந்த அங்காடிக்குள் செல்லும் தகுதியை தான் இழந்துவிட்டேன் என்ற தாழ்வு மனப்பான்மையா தெரியவில்லை.
 
அந்த அங்காடியில் பணிபுரிந்தவர்களும் அவரை கடும் சொற்களால் திட்டி விரட்டிவிட முயற்சிக்கவில்லை. மாறாக அவர்களில் ஒருவர் வெளியே சென்று 'உனக்கு பக்கத்து கடையில் சாப்பாட்டுக்கு சொல்லுகிறேன். வாங்கிக்கொண்டு போ' என்று அவரிடம் கூறிவிட்டு அதற்கான ஏற்பாட்டையும் செய்தார்.
 
அந்த பல்பொருள் அங்காடிக்கு அடுத்து இருந்த அந்த ஈழத்தமிழர் உணவகம் பாரிசில் பிரபலமான ஒன்று. எப்போதும் அங்கே கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கும்.
 
அதுவும் அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம், வடை ரோள்ஸ், ரொட்டி, கொத்துரெட்டி என்று நம்மூர் உணவுகளை வாங்கிச் செல்லவதற்கு ஏராளமானோர் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
 
நான் அந்த பல்பொருள் அங்காடியில் இருந்து வெளியே வந்த போது அந்த மனிதன் அந்த உணவக வாசலில் நிற்க முயற்சி செய்து கொண்டிருந்தார். அவரிடமிருந்து வந்த துர்நாற்றத்தால் அங்கு நிற்று கொண்டிருந்தவர்கள் அவரை அங்கிருந்து போய்விடும்படி விரட்டிக் கொண்டிருந்தார்கள்.
 
அவரும் அவர்களையெல்லாம் பிரெஞ்சும் செந்தமிழும் கலந்த மொழியில் அர்ச்சித்தவாறு அங்கே நிற்பதற்குப் போராடிக்கொண்டிருந்தார்.
"சனியன்.. மூதேசி.. எங்கடை இனத்தின்ரை மானத்தை கெடுக்கிறதுக்கெண்டு வந்து நிற்குது" என்று அங்கிருந்த ஒருதர் சொல்ல, மற்றொருதர்.. "உதுகள் எல்லாம் ஏன் உயிரோடை இருக்குகள், போய் செத்து தொலையலாம் தானே" என்றார்.

 

http://tamilworldtoday.com/archives/5195

Edited by Kashni

Kashni, கள விதிகளின்படி முழுமையான பதிவு இணைக்கப்பட வேண்டும் என்பதால் மீதியையும் இணைத்துள்ளேன். 

 

இன்னொருதர்… “கைகால் எல்லாம் நல்லாத் தானே இருக்கு, போய் உழைச்சு பிழைச்சு மற்றவையை போல வாழலாம் தானே” என்றார்.

இந்த விமர்சனங்கள் எல்லாம் அவரின் செவியில் விழவில்லை. அவற்றை செவிமடுக்கும் கட்டத்தை அவர் தாண்டிவிட்டார்.

“தம்பி சாப்பாட்டை தாங்கோ” என்று அவர் கத்த, அந்த உணவக உரிமையாளர் அவரை அங்கு அதிக நேரம் தாமதிக்க வைப்பது தனது வியாபாரத்தை பாதிக்கும் என்பதை உணர்ந்து ஒரு உணவு பொதியை கொண்டு வந்து அவரிடம் கொடுத்தார்.

“மேர்ஸ்சி (நன்றி) தம்பி” என்று கூறிக்கொண்டு அந்தப் பொதியை வாங்கிய அவர் “என்ன சாப்பாடு?” என்று கேட்கவும் தயங்கவில்லை.

 

“சிக்கன் புரியாணி” என்று அந்த உணவக உரிமையாளர் சொல்விட்டு உள்ளே செல்ல, அங்கே நின்று கொண்டிருந்த சிலர் “எடுக்கிறது பிச்சை, அதிலை தெனவெட்டு வேறை” என்று நக்கலடித்துக் கொண்டிருந்தார்கள்.

 

அந்த மனிதர் அவர்களை பொருட்படுத்தாது அந்த உணவுப் பொதியை பிரித்து சாப்பிட்டவாறு அங்கிருந்து புறப்பட்டார்.
இதை பார்த்த எனக்கு அந்த மனிதன் மீது கழிவிரக்கமும் அவரை விமர்சித்தவர்கள் மீது கோபமும் ஏற்பட்டது.

 

அங்கு நின்று கருத்துக் கூறிய எவருக்கும் அந்த மனிதனைப்பற்றி ஒன்றும் தெரியாது. அவர் யார்? அவருடைய கடந்த காலம் என்ன? அவர் ஏன் இப்படி திரிகிறார் என்று எந்த தகவலும் தெரியாது. ஆனால் எல்லாம் தெரிந்தது போல் “குடிகாரர்கள், உழைக்கத் தெரியாத சோம்பேறிகள், உப்பிடி திரிகிறதைவிட செத்து தொலையலாம் தானே” என்று விமர்சிக்க மட்டும் தெரியும்.

எனக்கு அந்த மனிதனை 1990 ஆம் ஆண்டிலிருந்தே தெரியும். தாயகத்தில் வடமாரட்சி கரணவாய் பகுதியை சேர்ந்த அவர் 1988 ஆம் ஆண்டு பாரிசுக்கு வந்திருந்தார். பாரிசில் அவருக்கு உறவினர்கள் என்று யாருமே இருக்கவில்லை. பாரிசில் அடிப்படை வசதிகளற்ற சிறிய அறைகளுக்குள் பதினைந்து இருபதுபேர் நெருக்கியடித்து வாழ்ந்த காலகட்டம் அது.

 

தமிழர்கள், தமிழர்களைக் கண்டால் எங்கே தங்க இடம் கேட்டுவிடுவார்களோ? என்று ஓடி ஒழித்த அந்தக் காலகட்டத்தில் ஒரு மொரிசியஸ்காரர் அவர் மீது இரக்கப்பட்டு தான் தங்கியிருந்த வீட்டில் தங்க இடம் கொடுத்ததோடு தான் வேலை செய்த பிரெஞ்சு உணவகத்தில் வேலையும் வாங்கிக் கொடுத்தார்.

 

கோப்பை கழுவுவதற்கு பரவலாக மெசின் பாவனையில்லாத அந்தக் காலகட்டத்தில் அந்த வேலை என்பது அவ்வளவு சுலபமானதல்ல. சக்கையாக பிழிந்து எடுத்துவிடுவார்கள். பகல் 11 மணிக்கு ஆரம்பமாகும் அந்த வேலை இரவு 11 மணிக்குத்தான் முடியும். மாலையில் ஒரு மணி நேரம் ஓய்வு கொடுப்பார்கள். அந்த மனிதன் அதை சலிக்காமல் செய்து அதே உணவகத்தில் சமையலறை உதவியாளர், உதவி சமையற்காரர், சமையல்காரர் என்று தனது கடும் உழைப்பாலும் திறமையாலும் படிப்படியாக முன்னுக்கு வந்தார்.

 

1993 இல் அவர் பிரெஞ்சு உணவகங்கள் மட்டத்தில் சிறந்த சமையல்காரர்களில் ஒருவராக இருந்தார். இந்த 5 வருட காலத்தில் வேலை செய்துகொண்டே படித்து சமையல்காரருக்குரிய டிப்ளோமும் பெற்றிருந்தார்.

உழைப்பில் மட்டுமல்லமல் மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் அவர் முன்மாதிரியாகத் திகழ்ந்தார். தனது அறிமுகத்தின் மூலம் வேலையற்ற பல இளைஞர்களை வேலையில் சேர்த்துவிட்டிருந்தார். தாயகம் சார்ந்து எந்த நிகழ்வுக்குச் சென்று பணம் கேட்டாலும் முகம் சுளிக்காமல் மறுப்புச் சொல்லாமல் பணம் கொடுப்பார். அத்தோடு தேசிய செயற்பாட்டு நிகழ்வுகளிலும் தனது சொந்த வேலையைப் போல முதல் ஆளாக முன்னுக்கு வந்து நின்று முறிந்து வேலை செய்வார். குறிப்பாக சொல்வதானால் தான் தனது தனக்கு மட்டும் என்ற ஒரு குறுகிய சுயநல வட்டத்துக்குள் நில்லாது சமூக அக்கறையுள்ள ஒரு நல்ல முன்மாதிரியான மனிதராக அவர் திகழ்ந்தார்.

 

இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதருடைய வாழ்க்கையை ஒரு சம்பவம் தலைகீழாக புரட்டிப் போட்டுவிட்டது.

1993 ஆம் ஆண்டு பிரெஞ்சு அரசாங்கம் தாயகத்தில் இருந்த அவரது மனைவியையும் 9 வயதும் 7 வயதும் நிரம்பிய ஆண் பெண் பிள்ளைகளையும் பிரான்சுக்கு அழைப்பதற்கு அனுமதி வழங்கியிருந்தது.

 

தனது மனைவியும் பிள்ளைகளும் வந்தால் குடும்பம் நடத்துவதற்கென்று பாரிசின் புறநகர் பகுதியான சார்சல் பகுதியில் தொடர்மாடி வீடொன்றையும் வாங்கி வைத்துக்கொண்டு அவர் மகிழ்ச்சியோடு காத்திருந்தார்.

 

அவரது துர்ரதிஷ்டம், பிரான்சுக்கு வருவதற்காக குடாநாட்டிலிருந்து கொழும்பு செல்ல அவரது மனைவியும் பிள்ளைகளும் கிளாலி கடலேரியில் வந்த படகை ஶ்ரீலங்கா கடற்படை தாக்கியதில் அவர்கள் கடலில் மூழ்கி இறந்துவிட்டார்கள். கிளாலி படுகொலை நடந்த 6 மாதத்தில் இந்தச் சம்பவம் நடந்தது. அதிர்ந்து உடைந்து போன அவருக்கு ஆறுதல் சொல்ல இங்கே நண்பர்கள் மட்டும் தான் இருந்தார்கள்.

 

தான் காதலித்து மணம் முடித்த அன்பு மனைவிக்காவும் அருமைக் குழந்தைகளுக்காவும் அவர் வாங்கி வைத்திருந்த வீடு சிறைச்சாலையாகத் தோன்றியது. கவலையை மறக்க நண்பர்களின் ஆலோசனையைக் கேட்டு குடிக்க ஆரம்பித்தார்.

கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்த இந்தப் பழக்கம் நாளடைவில் அவரை 24 மணி நேரமும் போதையில் மிதக்கும் மொடா குடியராக்கிக்கியது. இதனால் வேலை பறிபோனது. சேமிப்பு முழுக்க கரைந்தது. ஆசை ஆசையாய் வாங்கிய வீடு கடன் கட்டாமல் ஏலத்தில் விற்கப்பட்டது. ஏதுமற்றவராக அவர் வீதிக்கு வந்தபோது நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டு அதுவரை ஒட்டிக்கொண்டிருந்தவர்கள் கழன்று கொண்டனர்.

 

அவரால் வேலை வாங்கிக் கொடுத்து கைதூக்கி விடப்பட்டவர்கள் சிலர் அவரை சமூக உதவி நிறுவனமொன்றுக்கு அழைத்துச் சென்று FOYER (சமுக நலக்காப்பகம்) ஒன்றில் தங்குவதற்கும் குடிப்பழக்கத்திலிருந்து மீட்டெடுப்பதற்கான சிகிச்சை அளிப்பதற்கும் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

 

ஆனால் அது சாத்தியப்படவில்லை. காரணம் அந்த சமூகநலக் காப்பகத்தில் பல வெளிநாட்டு குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுடன் வசித்து வந்தன. அது அவரது கவலையை இன்னும் அதிகப்படுத்தியது. எல்லோரும் தங்கள் குடும்பங்களுடன் சந்தோசமாக இருக்க, தான் மட்டும் தனித்து விடப்பட்டதைப்போல அவர் உணர்ந்தார். பல இரவுகள் தூக்கமின்றித் தவித்தார்.

தொடர்ந்து அங்கிருந்தால் தனக்கு பைத்தியம் பிடித்துவிடும் என்று அஞ்சிய அவர் யாருக்கும் சொல்லிக் கொள்ளாமல் அந்த சமுக நலக் காப்பகத்திலிருந்து வெளியே வந்துவிட்டார்.

 

அடுத்தது என்ன? எங்கே செல்வது? தெரியாமல் கால்போன போக்கில் நடந்த போது தான் SDF(sans domicile fixe) எனப்படும் வீடற்ற தெருவோர மனிதர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர்களோடு சேர்ந்து அவரும் தெருவோர வாழ்க்கை வாழப் பழகிக்கொண்டார்.

 

ஆரம்பத்தில் கார் து நோர்ட் தொடரூந்து நிலையம், ஸ்டாலின் கிராட் மெத்ரே நிலையம் என்பவை தான் அவர்களுடைய வசிப்பிடமாகியது. பின்னர் கார் து நோர்ட் தொடரூந்து நிலையத்தில் பாதுகாப்பு கெடுபிடி கண்காணிப்பு அதிகமான பின்பு ஸ்டாலின் கிராட் மெத்ரே நிலையம் அவர்களது நிரந்தர வதிவிடமாகிவிட்டது.

 

அந்த மனிதர் வீதிக்கு வந்துவிட்டாலும் ஒரு நாளும் பிச்சை எடுத்தில்லை. என்னைப் போல அவருக்கு தெரிந்த நிறையப் பேர் அந்த ஸ்டாலின் கிராட் மெத்ரோ நிலையப் பகுதிக்கு செல்லும் போது வாய் திறந்து எதுவும் பேசவோ கேட்கவோ மாட்டார். ஆனால் தனது இயலாமையை வெளிப்படுத்தும் விதத்தில் ஒரு ஏக்கப்பார்வை ஒன்று பார்ப்பார். அந்தப் பார்வை மனிதாபிமானமுள்ள எவரின் மனதையும் இளகவைத்துவிடும். அதனால் தினசரி அவருக்கு யாராவது உணவு வாங்கிக் கொடுப்பார்கள். ஓரு சிலர் மதுபானமும் வாங்கிக் கொடுப்பார்கள். சிலர் உடைகள் கொண்டுவந்து கொடுப்பார்கள்.

 

இப்படி எதிர்காலம் பற்றிய எந்தவித அக்கறையும் இல்லாமல் தன்னிலை மறந்து ஏதிலியாக வாழ்நாளைக் கழிக்கும் அந்த மனிதர் புலம் பெயர் தமிழ் சமூகத்தின் அடையாள இழப்பின் குறியீடாகும்.

 

அதனாலே தான் இந்த மனிதரின் பெயரை நான் குறிப்பிடவில்லை. இது ஒரு தனி மனிதனின் கதையல்ல. இது வாழத் தெரியாத பொறுப்பில்லாத அல்கோலிஸ்ட்டின் அதாவது குடிகாரனின் கதை என்று இதை ஒதுக்கிவிட முடியாது

புலம்பெயர் தேசங்களின் மாற்றுக் கலாச்சார, மாற்றுப் பண்பாட்டுச் சூழலில் தொலைந்து போன – தங்களது அடையாளத்தை தொலைத்துவிட்ட பல்லாயிரக்கணக்கான அகதிகளின் கதையிது.

 

இந்த மனிதன் தாயகத்தில் இருந்து, அங்கே இப்படி ஒரு இழப்பு அவருக்கு ஏற்பட்டிருந்தால் இப்படி அவர் அடையாளம் இழந்திருக்கமாட்டார். காரணம் அவரை ஆற்றுப்படுத்த அம்மா அப்பா உற்றார் உறவினர் சுற்றத்தார் என்று ஒரு குடும்ப அமைப்பு, சமூக அமைப்பு இருக்கிறது. அவர்களது அன்பும் அரவணைப்பும் ஆறுதல் வார்த்தைகளும் அவர் தனது இழப்பின் துயரத்திலிருந்து மீள்வதற்கு உதவியிருக்கும். நிச்சயமாக மதுவை அருந்து, உன் கவலைகள் எல்லாம் பறந்து போகும் என்று பெரும்பாலும் அங்கே யாரும் சொல்லியிருக்க மாட்டார்கள்.

 

எப்போது ஒரு மனிதனுக்கு தனது மனச்சுமைகளை இறக்கி வைக்க ஓரு சுமை தாங்கி இல்லாமல் போகிறதோ – எப்போது ஒரு மனிதனுக்கு தனது கவலையை கொட்டித்தீர்க்க வடிகால் இல்லாமல் போகிறதோ அப்போதிலிருந்தே அந்த மனிதன் தனக்குள்ளேயே எல்லாவற்றையும் பூட்டிவைத்துக் கொண்டு தனக்குள்ளேயே குமுறி வெடித்து – தனக்குள்ளேயே அழுது புலம்பி தனது சுயத்தை இழக்க ஆரம்பிக்கிறான். இது தான் அடையாளம் இழத்தலுக்கான தொடக்கப்புள்ளியாகவும் அமைகிறது

இந்தப் பிரச்சனை ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல புலம் பெயாந்த அனைத்து இனங்களுக்கும் பொதுவான பிரச்சனையாகும்.

குறிப்பாக புலம்பெயாந்த யூதர்கள், ஆர்மேனியர்கள், குர்தியர்கள், சீனர்கள் என்று எல்லோருமே இந்த அடையாளமிழத்தல் பிரச்சனையை எதிர் கொண்டார்கள். ஆனால் அவர்கள் அதை தடுத்து நிறுத்துவதற்கான வழிமுறைகளை கண்டு கொண்டார்கள். பாதிக்கப்பட்டவர்களை அந்தப் பாதிப்புக்களில் இருந்து மீட்பதற்கான உளவளத்துணை அமைப்புகளை தாங்கள் புலம்பெயர்ந்த தேசங்களில் நிறுவினார்கள். கீழே வீழ்ந்தவர்களை கைதூக்கி விடுவதற்கான சமூக உதவி அமைப்பக்களை உருவாக்கினார்கள். இவற்றின் மூலம் அடையாள இழப்பை நூற்றுக்கு நூறு வீதம் தடுத்து நிறுத்த முடியாவிட்டாலும் கணசமான அளவுக்கு குறைத்திருக்கிறார்கள்.

 

ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்கள் இது பற்றி சமூக அக்கறையோடு இன்னும் சிந்திக்கவே இல்லை.

இருக்கக் கூடிய அமைப்புகளும் தலைப்பா கட்டி முதல் மரியாதை பெறுவதற்கு போட்டி போடும் அளவுக்கு அடையாளமிழத்தல் ஏற்படுத்தக் கூடிய பின்விளைவுகள் பற்றி அக்கறையற்று இருப்பது கவலைக்குரிய ஒரு விடயமாகும்.

(தொடரும்..)

 

- சிவா சின்னப்பொடி


 

  • கருத்துக்கள உறவுகள்

காயமே கோவில் என்பது எனது அசையாத நம்பிக்கை ஆகும்!

 

தூய்மையான, ஆரோக்கியமான ஒரு உடலில் தான், நல்ல மனம் உறைய முடியும்!

 

எவ்வளவு தான் துயரங்கள் சூழ்ந்திடினும், ஒரு மனிதன் தன்னிலையை மறந்து வாழ்வான் எனின்,எனது அனுதாபத்தின் ஒரு துளிகூட அவனுக்குக் கிடையாது!

 

மாற்றுத் திறனாளிகளை, நான் எனது கருத்துக்குள் உள்ளடக்கவில்லை!

 

பகிர்வுக்கு நன்றிகள், கஷ்னி, இணையவன்!

  • கருத்துக்கள உறவுகள்

இவரை பற்றியா விசு அண்ணாவும் எழுதி இருந்தார் முந்தி ஒரு முறை?

  • கருத்துக்கள உறவுகள்

எப்போது ஒரு மனிதனுக்கு தனது மனச்சுமைகளை இறக்கி வைக்க ஓரு சுமை தாங்கி இல்லாமல் போகிறதோ – எப்போது ஒரு மனிதனுக்கு தனது கவலையை கொட்டித்தீர்க்க வடிகால் இல்லாமல் போகிறதோ அப்போதிலிருந்தே அந்த மனிதன் தனக்குள்ளேயே எல்லாவற்றையும் பூட்டிவைத்துக் கொண்டு தனக்குள்ளேயே குமுறி வெடித்து – தனக்குள்ளேயே அழுது புலம்பி தனது சுயத்தை இழக்க ஆரம்பிக்கிறான். இது தான் அடையாளம் இழத்தலுக்கான தொடக்கப்புள்ளியாகவும் அமைகிறது..........

 

 

அழகாக  கோர்த்து  எழுத ப்பட்ட பதிவு .......சின்னப் பொடிக்கு  என் பாராட்டுக்கள்.
தெருவில் திரியும் ஒவ்வொரு மனிதருக்கும்  ஒரு சரித்திரம் இருக்கும். அதிர்ச்சிச்  சம்பவங்கள் மனிதனின் மறு பக்கத்தை புரட்டிப் போட்டுவிடுகின்றன.  பகிர்வுக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.