Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இயக்கச்சி - காணாமற்போன 'வல்லியக்கன்'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இயக்கச்சி - காணாமற்போன 'வல்லியக்கன்'

கருணாகரன்

'வல்லியக்கனைத் தெரியுமா? ஒரு காலம் உங்கள் ஊரில் வல்லியக்கன் என்றொரு கோயில் இருந்தது. பிறகு அது மருவி அந்தக் கோயில் கிருஷ்ணன் கோவிலாகி விட்டது' என்றார் பொ.ரகுபதி. பொ.ரகுபதி இலங்கையின் புகழ்மிக்க வரலாற்றுத்துறைப் பேராசிரியர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் வல்லியக்கன் என்ற சிறுதெய்வ வழிபாட்டைப் பற்றி அவர் செய்த ஆய்வு 'வல்லியக்கனும் வல்லிபுரநாதரும்' என்ற நூலாக வந்திருக்கிறது. ரகுபதி குறிப்பிட்டுள்ளதைப்போல வல்லியக்கன் கோயில் இருந்த இடத்தில் இப்பொழுது மல்வில் கிருஷ்ணன் குடியமர்த்தப்பட்டிருக்கிறார். வல்லியக்கனை வழிபட்டவர்கள் இன்று அங்கேயில்லை. பதிலாக இப்பொழுதிருக்கும் கிருஷ்ணன் கோவிலுக்கு ஏகப்பட்டவர்கள் பங்காளர்களாக இருக்கிறார்கள். இயக்கச்சி, பூநகரி, பேராலை, பளை, ஊர்வணிகன்பற்று, முகாவில், மாசார், கோவில்வயல் - சங்கத்தார்வயல், ஆழியவளை - உடுத்துறை என இயக்கச்சியிலும் இயக்கச்சியைச் சூழவுள்ள இடங்களிலும் இந்தப் பங்காளர்கள் உண்டு.

பச்சிலைப்பள்ளி என்றிருந்த பெரும்பிரதேசம் இன்று நிர்வாக ரீதியாகக் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, வடமராட்சி கிழக்கு என மூன்றாகப் பிரிந்து விட்டது. அதைப்போல இயக்கச்சியில் இப்பொழுது இயக்கச்சி, கோவில்வயல், முகாவில் என மூன்று கிராம அலுவலர் பிரிவுகளும் வந்து விட்டன. வல்லியக்கன் கோயில் மாறியதைப் போல பிரதேசத்தின் வரைபடமும் மாறிவிட்டது. ஊரில் ஒழுங்கைகளும் தெருக்களும் வீடுகளும் மாறிவிட்டன. ஆனாலும் கிருஸ்ணன் கோயிலின் உரித்து மாறவில்லை. எல்லா ஊர்க்காரர்களும் இன்னும் தங்கள் பங்குத்திருவிழாவைச் செய்கிறார்கள். கிருஷ்ணன் கோயில் என்ற அடையாளம் துலங்கத்தொடங்க வல்லியக்கன் கோயில் பற்றி யாருக்குமே தெரியாமல் போய்விட்டது. அப்படியே பச்சிலைப்பள்ளி என்ற பெரும் பிரதேசத்தைப் பற்றிய நினைவுகளும் அடையாளமும் மாறிவிட்டது. பச்சிலைப்பள்ளியின் மையமாக இருக்கும் பூர்வீக ஊரான இயக்கச்சியின் அடையாளமும் பெருமளவுக்கும் மாறியே விட்டது.

இப்பொழுது நீங்கள் காணும் இயக்கச்சி முன்பு இருந்ததல்ல. 1950 களுக்கு முன், இயக்கச்சியிலிருந்து 'சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயத்துக்குச்' (Nature Park) செல்லும் வீதியே இருக்கவில்லை. அப்பொழுது அது காட்டின் நடுவே செல்லும் ஒரு மணல் நிரம்பிய வண்டிப்பாதை மட்டும்தான். 50களில் அந்தப் பாதையின் தெற்குப் புறத்தில் காடாக இருந்த அரச நிலம் சங்கத்தார்வயலின் தென்பகுதியில் - வீரபத்திரர் கோவிலடியிருந்த மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. அதற்குப் பிறகே சுண்டிக்குளம் தெரு அமைக்கப்பட்டுத் தார் வீதி வந்தது. அதைத் தார் வீதியாக்கியவர் அன்று சாவகச்சேரித் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த வி.குமாரசாமி. அப்பொழுது கிளிநொச்சி என்ற தனித்தொகுதியும் இருக்கவில்லை. கிளிநொச்சி தனி மாவட்டமாக்கப்படவும் இல்லை. இன்றிருக்கும் ஊரின் முகம் இப்படித்தான் வந்தது.

அதற்கு முன் இப்பொழுதிருக்கும் சங்கத்தார்வயல் காடாகவும் இன்று காடாக இருக்கும் சங்கத்தார்வயல் ஊராகவும் இருந்தன. இன்றிருக்கும் வை.எம்.ஸி.ஏ. குடியிருப்பு (விநாயகர் குடியிருப்பு) தென்னிந்தியத் திருச்சபையின் குடியிருப்பு எதுவும் அன்றில்லை. (இந்த இரண்டு குடியிருப்புகளும் 1983 இல் தென்னிலங்கையில் நடந்த வன்முறையினால் இடம்பெயர்ந்த வந்தவர்களுக்காக கிறிஸ்தவ அமைப்புகளினால் உருவாக்கப்பட்டவை). கொற்றாண்டார்குளம், தோவண்டை, சங்கத்தார்வயல், கோவில்வயல், ஊர்வணிகன்பற்று, முகாவில், கோண்டாவில் என இயக்கச்சியை மையப்படுத்திய கிராமங்களில் நிறையக் குடும்பங்களிருந்தன. எல்லாமே கூட்டுக்குடும்பங்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் பத்திற்குக் குறையாத ஆட்கள். எட்டுப் பத்துப் பிள்ளைகளைப் பெறாதவர்களே அன்றில்லை. இப்பொழுது தோவண்டையிலும் கொற்றாண்டார் குளத்திலும் யாருமேயில்லை. வேறு ஊர்களுக்குப் பெயர்ந்து விட்டார்கள். சிலர் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்குப் போய்விட்டனர்.

முன்னர் இருந்த இயக்கச்சி ஒரு பச்சை ஊர். காடும் மரமுந்திரித் தோப்புகளும் சவுக்குமரங்களின் பூங்காவும் தென்னந்தோட்டங்களும் பனங்கூடல்களும் நிறைந்த பச்சை. போதாக்குறைக்குப் பூவரசும் கிளுவையும் வேலிகளாக நிற்கும் பெரிய வளவுகள் இருந்தன. ஒவ்வொரு வளவுகளிலும் வடக்கு வீடு, கிழக்கு வீடு, தலைவாசல், அடுப்படி அல்லது குசினி என்று நான்கு வீடுகளுக்குக் குறையாத வீடுகள் இருந்தன. இது போக, மாட்டுக்கொட்டில் அல்லது வண்டில் கொட்டில் என்று எருத்து மாடுகளைக் கட்டுவதற்காகவும் வண்டில்களை விடுவதற்காகவும் தனியாக ஒரு கொட்டகை பெரும்பாலான வளவுகளில் இருந்தது. வேலிகளைப் பனை ஓலையால் அல்லது பனை மட்டையினால் அடைத்திருந்தார்கள். சில கிடுகினால் அடைக்கப்பட்டிருந்ததும் உண்டு. சில வேலிகள் பாவட்டை அலம்பலினால் அல்லது கினியா அலம்பலினால் அடைக்கப்பட்டன. மணல் நிறைந்த ஒழுங்கைகளில் மாடுகளைச் சாய்த்துக் கொண்டு ஊர் ஆட்கள் போய் வருவர். சீசன் காலத்தில் வெளியிடங்களிலிருந்து மாடுகளைச் சாய்த்துக் கொண்டு வருவோரும் உண்டு. ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் பலாலி, வளலாய், இடைக்காடு, அச்சுவேலிப் பகுதிகளிலிருந்து இப்படி வருவர். அது அங்கே பயிர்செய்யும் காலம். இயக்கச்சியில் புல் செழித்திருக்கும் நேரம். எனவே இந்த மாதிரி ஒரு ஏற்பாடு. அறுவடை முடிந்த பிறகு இந்த மாடுகளை கண்டாவளைக்கும் வட்டக்கச்சிக்கும் சாய்த்துக்கொண்டு போவார்கள். தவிர, சந்தைக்குப் போனாலென்ன வயலுக்குப் போனாலென்ன எதுவும் இந்த மணல்தெருக்களின் வழியேதான். மணல் தெருக்களில் சைக்கிளோ, வண்டி வாகனங்களோ கிடையாது. கால்நடையே. கால் நடை என்றால் தலைச்சுமையே. நான்கூட பத்துப் பதினைந்து வயதில் (1970 களில்) இருபது முப்பது தேங்காய்களை தலையில் சுமந்து இந்த மணல்தெருக்களில் கால்கள் புதையப் புதைய நடந்து சென்றிருக்கிறேன்.

மணல் தெருக்களின் இரண்டு பக்கமும் பெரும்பாலும் ஓலைக் குடிசைகளே இருந்தன. பனையோலையினால் அல்லது தென்னங்கிடுகினால் வேயப்பட்ட குடிசைகள். எங்காவது ஒன்றிரண்டு ஓட்டு வீடுகள். இடையிடையே மிளகாயும் வெங்காயமும் கத்திரியும் விளையும் தோட்டங்கள். அங்கே பயிற்றங்கொடியும் புகையிலையும் வெண்டியும் செழித்திருக்கும். தோட்டங்களின் மத்தியில் துரவுகள். இந்தத் துரவுகளிலிருந்து பனையோலைப் பட்டைகளால் தண்ணீரை அள்ளிப் பயிருக்கு இறைப்பார்கள். எல்லாம் இளவேனில்வரையில்தான். வைகாசியில் வீசும் சோழகக் காற்றோடு பயிர்கள் வாடத்தொடங்கும். வைகாசிக் காற்று.. காண்டாவனத்தோடு உச்சங்கொள்ளப் பயிர்கள் வாடும். மணற்தரையில் கைப்பட்டையினால் இறைத்து மாளாது. ஊரின் ஓரங்களில் வயல்வெளிகளும் சிறு குளங்களும். அநேகமாக எல்லோரும் குளங்களிலேயே குளித்தனர். (இப்பொழுது யாருமே குளங்களில் குளிப்பதில்லை. இருபது ஆண்டுகளுக்குள் வந்த வினை இது). வயற்கரைகளில் அல்லது குளக்கரைகளில் கண்ணகி, அண்ணமார், வீரபத்திரர், வயிரவர், காடேறி, பிள்ளையார் என்று சிறிய கோயில்கள். எங்கே பார்த்தாலும் வானைத்தைத் தொட்டுவிடத் துடித்துக் கொண்டு நிற்கும் பனங்கூடல்கள். பாதிப்பனைகளில் கள்ளு நிரம்பிய சிறுமுட்டிகள். ஓரங்களில் காடு. இடையிடையே பொட்டல் வெளிகள். நிழல் நிரம்பிய தெருக்களும் தென்னந்தோப்புகளும் ஊரோடு யாரையும் இணைத்து விடும்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன், ஊரில் நான்கைந்து கிணறுகள் மட்டுமே இருந்தன. மற்றதெல்லாம் பூவல் என்று சொல்லப்படும் வயற்கரை - குளக்கரை நீர்க்குழிகளே. அந்தக் குழிகளில் இருந்தே குடிப்பதற்கும் குளிப்பதற்குமாக நீரை எடுத்தனர் ஊர்வாசிகள். சில நீர்க்குழிகளை பனங்கொட்டுகளைப் பயன்படுத்தி கிணறு போல அமைத்திருந்தார்கள். ஆனால் ஊற்றுப் பெருக்குள்ள நிலம் என்ற படியால் சனங்களுக்கு தண்ணீர் ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. பிறகு ஒவ்வொரு குறிச்சியிலும் கிராமசபை (பிரதேச சபை)யினால் பொதுக்கிணறுகள் கட்டப்பட்டன. இதைச் சனங்கள் 'வீசிக்கிணறு' என்றார்கள். Village Council என்பதன் சுருக்கமே VC.

வயலும் தோட்டமும் துரவும் காடும் என்றே பெரும்பாலானவர்களின் தொழிலும் வாழ்க்கையும் கழிந்தது. கூத்தும் பாட்டும் ஆட்டமுமாகப் பொழுதுகள் கழிந்தன. காட்டுப்பழங்களுக்கும் வேட்டைக்கும் குறைச்சல் இல்லை. சிலர் ஆனையிறவிலும் குறிஞ்சாத்தீவிலும் இருந்த உப்பளத்துக்குப் போனார்கள். இடைக்காட்டிலிருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்தும் வண்டில் கட்டி வந்து கோடாலிப்பிடி, மண்வெட்டிப் பிடி, இடிகட்டை, மாடு கலைப்பதற்குத் துவரந்தடி என்றெல்லாம் வெட்டிக்கொண்டு போனார்கள். போகும்போது, ஒடியல், புழுக்கொடியல், நெல், இறைச்சி வத்தல், தேன் என்று இயக்கச்சியில் கிடைக்கிற 'அயிற்றங்களையும்' கொண்டு போவர். அங்கிருந்து வரும்பொழுது குரக்கன், மரவெள்ளிக் கிழங்கு, கரணைக்கிழங்கு. சாமை என்ற அயிற்றங்களைக் கொண்டு வருவார்கள். அது பெரும்பாலும் பண்டமாற்றுக்காலம். இதைப்போலத்தான் இயக்கச்சிக்கு வடக்கே இருக்கும் ஆழியவளை, உடுத்துறை, வெற்றிலைக்கேணிக் கடற்கரைப்பக்கத்திலிருந்து மீனும் கருவாடும் கொண்டு வரும் ஆட்கள் போகும் பொழுது நெல்லும் ஒடியலும் மாங்காயும் மரக்கறிகளும் கொண்டு போவார்கள்.

426c4a89-39ba-4f5a-876c-7188b937aa3d4.jp

எல்லா வீடுகளிலும் தென்னையும் மாவும் புளியும் காய்த்துக் கொட்டின. அன்று மண்ணும் அப்படி. மனிதர்களும் அப்படி. சனங்கள் உழைக்க உழைக்க மண்ணும் செழித்தது. ஆனால், சனங்களின் வாழ்க்கை அப்படியொன்றும் பிரமாதமாக இருந்தது என்றில்லை. உழைத்ததையெல்லாம் குடித்தும் கூத்தாடியும் செலவழித்தார்கள். போதாக்குறைக்கு பொங்கலென்றும் திருவிழா என்றும் கூத்து என்றும் கொண்டாடினார்கள். ஒவ்வொன்றும் கிழமைக்கணக்காக நடந்தன. இப்படி வாரக்கணக்காக இந்த மாதிரிக் கூத்தாடிக் கொண்டாடினால், வேறு எதில்தான் உருப்பட முடியும்? கல்வியில் யாருக்கும் நாட்டமிருக்கவில்லை. படிப்பறிவு குறைவாக இருந்தால் எந்தச் சமூகத்தினாலும் வாழ்க்கையை முன்னகர்த்த முடியாது.

இலங்கையின் ஆதிக்குடிகளில் ஒன்றான இயக்கர்கள் இயக்கச்சியில் இருந்தாக வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள். இயக்கர்கள் இருந்தார்களோ இல்லையோ இயக்கச்சி மிகப் புராதன காலத்திலிருந்தே மக்கள் வாழ்ந்து வருகின்ற ஒரு மையம்தான். இப்படி மிகப் பழமையான ஒரு மையமாக, நீண்டகாலமாகவே மக்கள் வாழ்கின்ற இடமாக இருந்தபோதும் புராதன சுவடுகள் என்று ஊரில் அதிகம் எதுவுமில்லை. முதிய மரங்களும் பழைய கோயில்களும் சிறு குளங்களும் வயல்வெளிகளும்தான் புராதனச் சின்னங்கள். எல்லாமே நிலத்தோடிணைந்தவை. கோயில்கள் கூட அப்படித்தான். நிழலுள்ளுறைந்த தெய்வங்கள். மரங்களினடியில் உறங்கியவை. கண்ணகி, வயிரவர், காளி, கிருஸ்ணன், அம்மன்... என்ற மாதிரி. பெருங்கட்டிடங்கள் என்றில்லை. நானூறு ஆண்டுகளுக்குட்பட்ட முருகைக்கற் கட்டிடங்கள் அல்லது சுண்ணாம்புக்கற் கட்டிடங்கள். பாப்பாங்குளம் பிள்ளையார், சின்னமண்டலாய்ப் பிள்ளையார், மண்டலாய்ப் பிள்ளையார், இயக்கச்சி கண்ணகி அம்மன், திரியாய் அம்மன், மல்வில் கிருஸ்ணன் இவ்வளவும்தான் இந்த மாதிரிக் கட்டப்பட்டிருந்த கோயில்கள்.

நாங்கள் சிறு வயதில் இருந்தபோது, இயக்கச்சியில் ஒரு சிறிய கோட்டை பாதி சிதைந்த நிலையில் இருந்தது. அதைவிடச் சற்றுப் பெரிய கோட்டை ஆனையிறவில் இருந்தது. இன்னொன்று வெற்றிலைக்கேணியில். பிறகுதான் தெரிந்தது மூன்றும் 1700களில் ஒல்லாந்தர்கள் கட்டியவை என்று. முருகைக்கல்லினால் கட்டப்பட்ட இந்தக்கோட்டைகளுக்கு Pyl (இயக்கச்சி), Basurta (வெற்றிலைக்கேணி), BBasculla (ஆனையிறவு) என்று பெயருமிட்டிருந்தார்கள். இதில் ஆனையிறவுக் கோட்டை மட்டுமே கொஞ்சம் உருப்படியாக மிஞ்சியிருந்தது. அந்தக் கோட்டையையே 'வாடி வீடு' என்று விருந்தினர்களுக்கான விடுதியாக மாற்றியிருந்தார்கள். பிறகு அது படைவீடாக மாறியது பெரிய கதை. இயக்கச்சியிலிருந்த Pyl கோட்டையிலிருந்து ஆனையிறவுக் கோட்டைக்குப் போவதற்கு ஒரு வழியிருந்திருக்கிறது. அநேகமாக அந்த நாட்களில் இதில் ஒல்லாந்தப்படைகள் பதுங்கு அகழியை அமைத்திருந்தன என்று எண்ணுகிறேன். காலப்போக்கில் அந்தப் பதுங்கு அகழி தூர்ந்து போயிருக்கலாம். ஆனாலும் சனங்கள் இன்னும் அந்தச் சுரங்கப் பாதை இருக்கிறது என்றே நம்பினார்கள். இயக்கச்சிக் கோட்டையில் அப்படியொரு சுரங்கம் உண்டென்றும் அதில் இறங்கினால் ஆனையிறவில் போய் ஏறலாம் என்று சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். இந்த நம்பிக்கையை யாராலும் மாற்றவே முடியவில்லை. இந்த வழியில்தான் பிறகு சந்தைப் பாதை ஒன்று வந்து, சங்கத்தார்வயல் ஊடாக (அந்தநாட்களில் பாதிரி காட்டில் இருந்து வீரபத்திரர் கோயில்வரையில்தான் அதிகமானவர்கள் இருந்தனர்) ஆனையிறவுக்குச் சனங்கள் போய்வந்தனர். இப்பொழுது அந்தப் பாதை இருந்த இடமேயில்லை. இடைக்காலத்தில் இந்தப் பாதையை ஆனையிறவு முற்றுகைக்காகப் போராளிகளும் போராளிகளை எதிர்ப்பதற்காகப் படையினரும் பயன்படுத்தினார்கள். பழைய வரைபடங்களில் மட்டும் இந்தப் பாதையின் அடையாளம் உள்ளது.

இயக்கச்சியில் இருந்த Pyl கோட்டையை 'வாடியடி' என்று சொல்வோம். இந்த வாடியடியிலிருந்து இரவில் யாழ்ப்பாணக் கோட்டைக்குப் பக்கத்திலிருக்கும் முனியப்பர் கோவிலுக்கு முனி போய் வருவதாகப் பேசுவார்கள். அந்த முனியை நேரில் பார்த்ததாகக் கதை விட்டவர்களும் உண்டு. அதை நம்பியவர்களும் உண்டு. இதனால் அந்த நாட்களில் பிந்திய இரவில் யாரும் நடமாடுவதில்லை. முனிக்குப் பயந்த ஊர் பத்து மணிக்கெல்லாம் அடங்கி உறங்கி விடும். அல்லது உறைந்து விடும்.

இந்த முனிக்கதையை வேறு மாதிரிச் சொல்வார் பெருமாள் இரத்தினசிங்கம். இரத்தினசிங்கம் 1970களில் உயிர்ப்பான பல விசயங்களில் இந்த மாதிரி வித்தியாசமாகச் சிந்தித்த ஒருவர். இன்னொருவர் இயக்கச்சி மணியம். இயக்கச்சி மணியம் ஒரு இடதுசாரியாக வாழ்ந்து பலராலும் அறியப்பட்டார். ஆனால், இரத்தினசிங்கம் அப்படியல்ல. என்றாலும் அவரை அறிந்தவர்களுக்கும் அயலூர்களுக்கும் அவர் மறக்க முடியாதவர். ஒல்லாந்தரின் காலத்திலும் அதுக்குப் பிறகு பிரிட்டிஷ்காரரின் காலத்திலும்தான் இந்த முனிக்கதை உருவானது என்றார் இரத்தினசிங்கம். எப்படித் தெரியுமா?

'அந்த நாட்களில் இயக்கச்சியிலும் ஆனையிறவிலும் இருந்த கோட்டைகளில் இருந்து யாழ்ப்பாணம் கோட்டைக்கு ஒல்லாந்தப் படைகளும் பிறகு பிரிட்டிஷ் படைகளும் போய் வந்தன. இந்தக் கோட்டைகளிலும் படைகள் இருந்தன. இப்படி ஊரைச் சுற்றியிருக்கும் படைகளையும் நடமாடும் படையினரையும் ஊர்மக்கள் விரும்பவில்லை. அவர்கள் தங்களின் வெறுப்பைக் காட்டினர். இதற்குள் வன்னியிலிருந்தும் இடையிடையே தமிழர்களின் படையெடுப்புகள் நடந்து கொண்டிருந்தன. இதெல்லாம் அந்நியப்படைகளுக்கு உவப்பாக இருக்கவில்லை. இதனால் அவர்கள் சனங்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி, அவர்களை அச்சத்தில் உறைய வைக்க விரும்பினார்கள். இந்தக் கோட்டைகளில் இருந்து யாழ்ப்பாணக் கோட்டைக்குப் படைகள் போய்வரும்போது இடையில் யாராவது அகப்பட்டால் அல்லது எதிர்ப்பட்டால் அவர்கள் மீது தாக்குதல் நடந்தது. இப்படிப் படைகள் போவதையே 'முனி போகிறது' என்று சனங்கள் பூடகமாகத் தங்களின் மொழியில் சொல்லி வீடுகளுக்குள் ஒடுங்கினார்கள். அந்நியப்படைகளின் தாக்குதலை 'முனி அடிச்சிட்டுது' என்றார்கள். 'படைகளின் நடமாட்டத்தை முனி நடமாட்டம்' என்றனர். இதுவே 'அந்தப் படைகள்' இல்லாமற் போன பிறகும் சனங்களிடம் ஒரு நம்பிக்கையாக - 'முனிக்கதை'யாக உருவாகி விட்டது'.

ஒல்லாந்து மற்றும் பிரிட்டிஷ் படைகள் போனாலும் இயக்கச்சியை விட்டுப் படைவாசம் நீங்கவில்லை. இலங்கை இராணுவம் 1960களிலேயே இயக்கச்சியில் படைமுகாமொன்றை அமைத்தது. இந்தியாவிலிருந்து அப்போது 'கள்ளக்கடத்தல்' என்ற பேரில் கஞ்சாவும் அபினும் பிற இந்தியப் பொருட்களும் சட்டவிரோதமாக யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுவதைத் தடுக்கவே இந்த முகாமில் படையினர் இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது. கள்ளக்கடத்தலைத் தடுப்பதற்கு எதற்காக படையினர்? பொலிஸ் போதாதா? என்று நாம் கேட்கலாம். இந்தக் கேள்விக்கு யார்தான் சரியான பதிலைச் சொல்வார்? கள்ளக்கடத்தலைத் தடுப்பதற்காக வந்த படையினர் இயக்கச்சிச் சந்திக்கு தென்மேற்குப் பக்கமாக இருந்த வனவள இலாகாவுக்குச் சொந்தமான காட்டுப்பகுதியில் முகாமை அமைத்திருந்தனர். இது ஊரின் ஒதுக்குப் புறம். தண்ணீருக்கும் கள்ளுக்குமாக ஊருக்குள் வருவார்கள். கடிதத்தை எடுப்பதற்காக பளைக்குப் போவர்கள். மற்றும்படி அவர்கள் தங்கள் பாடு. ஊரவர்கள் தங்கள் பாடு என்ற மாதிரி இருந்தது. ஆனாலும் இந்த 'ஆமிக்காம்'புக்கு உள்ளுர் ஆட்களே விறகு பறித்தார்கள். அது மாட்டு வண்டிலில் பொருட்களை ஏற்றும் காலம். வண்டிலில் முகாமுக்கு விறகைப் பறிக்கப்போகின்றவர்கள், திரும்பி வரும்போது, 'ரின்மீனை'யும் 'ரின்பாலை'யும் கொண்டுவந்தார்கள். இரண்டையும் எங்கள் வீட்டுக்கும் மாமா கொண்டு வந்தார். மாமா வேட்டைக்காரன். அவர் தான் வேட்டையாடும் காட்டு விலங்குகளின் இறைச்சியைப் படையினருக்குக் கொடுத்தார். படையினர் பதிலுக்கு 'மீன்ரின்'னையும் 'பால்ரின்'னையும் மாமாவுக்குக் கொடுத்தார்கள். அதுவரையிலும் அதைப் பற்றி அறியாதிருந்த எங்களுக்கு அது ஒரு ஆச்சரியம். ஆனால், அதையெல்லாம் வீட்டில் அம்மாவும் ஆச்சியும் ஏற்கவில்லை. மாமாவை விரட்டும் அளவுக்கு அவர்கள் கெம்பினார்கள். இப்படித்தான் ஊரில் பொதுவாகவே இந்த இரண்டையும் எதிர்த்தார்கள். 'நாறிய மீனையும் பழைய பாலையும் எவனாவது சாப்பிடுவானா' என்ற மாதிரி. என்றாலும் எங்களுக்குக் கொண்டாட்டமே.

பிறகு, நாட்டு நிலைமை பிழைக்கத் தொடங்க, இயக்கச்சியில் இருந்த படையினர் மீண்டும் வாடியடி (Pyl) என்ற ஒல்லாந்தக் கோட்டைக்கு மாறிப்போனார்கள். அநேகமாக அது ஜே.வி.பியின் கிளர்ச்சிக்காலம். 1970 இல் மீண்டும் வாடியடியில் ஒரு சிறிய முகாம் வந்தது. பத்துப்பேர் வரையில் அதிலிருந்தார்கள். இன்னொரு தொகுதிப் படையினர் ஆனையிறவுக்குப்போய் வாடி வீட்டில் குந்தினார்கள். பிறகு அதுவே ஆனையிறவுப் படைத்தளமாகியது. இயக்கங்கள் வளர்ந்து கோலோச்சத் தொடங்க, இயக்கச்சி - வாடியடியில் இருந்த படையினர் தமக்குப் பாதுகாப்பில்லை என நகர்ந்து ஆனையிறவிற்குப் போய்ச் சேர்ந்தனர். ஊரில் படையில்லை என்றாலும், படை நடமாட்டம் இருந்தது. இருந்தும் ஈரோஸ் இயக்கத்தினர் ஒரு பயிற்சி முகாமை 1986இல் இயக்கச்சி கண்ணகி அம்மன்கோயிலுக்குப் பக்கத்தில் நடத்தினார்கள். இன்னொரு முகாமை வெள்ளைவெளியில் வைத்திருந்தார்கள்.

வாடியடியை விட்டுப் படையினர் போன கையோடு இயக்கச்சி - வாடியடி ஊடாக சுண்டிக்குளம், கொம்படிப் பாதையைத் திறந்தன இயக்கங்கள். ஆனையிறவைக் கடந்து செல்ல முடியாத போராளிகள் இந்த வழியையே பயன்படுத்தினார்கள். இந்தப் பாதையை முன்னர் கள்ளமரம் (சட்டவிரோதமாகக் காட்டு மரங்களைக் கடத்துவோர்) கடத்திகள் பயன்படுத்தி வந்ததால் அவர்களிற் சிலரை வழிகாட்டிகளாக இயக்கங்கள் வைத்துக்கொண்டதும் உண்டு. காடும் புழுதியுமாக இருந்த வழியே கடுமையான சிரமங்களோடு பயணங்கள் நடந்தன. அந்த நாட்களில் போராளிகளாக இருந்த அத்தனைபேருக்கும் இந்த வழி நல்ல பரிச்சயம். யாழ்பாணத்திலிருந்து வன்னிக்கும் கிழக்கு மாகாணத்திற்கும் இந்த வழியூடாகவே ஆயுதம் உட்பட அத்தனை பொருட்களையும் இயக்கங்கள் கொண்டு போய்வந்தன. அதைப்போல வெளிமாவட்டங்களிலிருந்து இந்த வழியாலேயே யாழ்ப்பாணத்துக்கு இயக்கங்களின் தளபதிகளும் போராளிகளும் வந்து போனார்கள். இதனால், எந்த நேரத்திலும் இயக்கச்சிச் சந்தி இயக்கங்களின் சந்தியாக இருந்தது. இயக்கங்களின் சந்தியைப் படைத்தரப்பு அப்படிச் சும்மா இருக்க லேசில் விடுமா? ஆனையிறவில் இருந்து இயக்கச்சியை நோக்கி படையெடுப்பும் படையெடுப்பைச் செய்ய முடியாத போது எறிகணை, ஏவுகணைகளும் வரத்தொடங்கின.

இதெல்லாம் நடந்தால் ஊரில் யார்தான் நிம்மதியாக இருக்க முடியும்? ஊர்தான் எப்படியிருக்க முடியும்? துப்பாக்கிச் சூடுகளும் அகாலமரணங்களும் தாரளமாக நடந்தன. இடம்பெயர்ந்தனர் சனங்கள். அழிந்தது ஊர். இயக்கர்களின் காலத்திலிருந்தே அடியடியாக வாழ்ந்து வந்த மக்களும் அறுந்துபடாத கால நீட்சியாக இருந்து வந்த ஊரும் சிதைந்த நிலை. காலம் முழுதும் பூத்தும் காய்த்தும் கனிந்தும் நின்ற மரங்களெல்லாம் அழிந்தன. தோட்டங்களில் காட்டுச் செடிகள் முளைத்தன. வயல்களில் முள்ளி முளைத்தது. வீடுகளில் ஷெல்லும் குண்டும் வீழ்ந்தன. கோவில்களில் பூசையில்லை. போர்க்களமாகிய இயக்கச்சியில் ஆனையிறவுக்கு தண்ணீரை எடுப்பதற்காக இருந்த கிணற்றைத் தவிர, வேறு எதுவுமே மிஞ்சவில்லை. சனங்கள் வாழ்ந்த வரலாற்று நிலத்தில் யுத்தகளம் விரிந்தது. இயக்கச்சியில் தமிழ்ப்படை (விடுதலைப் புலிகள்) நிலை கொண்டது. பாதுகாப்புக்கு ஏற்ற கேந்திர மையங்களின் கதை உலகம் முழுதும் இப்படித்தான். இந்தக் கேந்திரத்தில் இருக்கும் மக்கள் அடுப்பிலே வைத்த சட்டியின் நிலையில்தான். இந்தக் காலத்தை எதிர்கொள்ளும் போதுதான் தெரிகிறது, அந்த நாட்களில் - அந்நியரின் படைகள் இருந்த காலத்திலும் படையெடுப்புக்காலத்திலும் - எங்கள் முன்னோர்கள் எப்படியெல்லாம் பாடுகளைச் சுமந்திருப்பார்கள் என்று. இதேபோலத்தான் இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் 'காப்பிரிகள்' என்ற ஆபிரிக்கப் படையினரை பிரிட்டிஷார் கொண்டு வந்து இயக்கச்சியில் இறக்கியிருந்ததாகவும் அந்தக் 'காப்பிரிப்படை'களுக்கு அஞ்சிப் பெண்கள் எல்லாம் வீடுகளை விட்டே வெளியே வர முடியாமல் இருந்ததாகவும் ஆச்சி பல கதைகளைச் சொன்னா. பாருங்கள், காலம் முழுதும் இப்பிடியே படைகளோடும் பாடுகளோடும் இயக்கச்சிச் சனங்கள் வாழ்ந்து தொலைக்க வேண்டியிருப்பதை.

இயக்கச்சியிலிருந்து சனங்கள் இடம்பெயர்ந்தாலும் போர் ஓயவில்லை. ஆனையிறவுத் தளத்தில் நிலைகொண்டிருந்த படையினரைச் சுற்றிவளைத்துப் புலிகள் தாக்கினார்கள். 1990 இல் ஒரு பெரிய தாக்குதல். பிறகு1991 இல் இன்னொரு பெரிய போர். அந்தப் போரை முறியடிப்பதற்காக இயக்கச்சியின் வடகிழக்கில் உள்ள கட்டைக்காடு கடற்கரையில் படையினர் தரையிறக்கப்பட்டனர். அதுவரையிலும் முற்றுகையிலிருந்த ஆனையிறவுப் படைத்தளத்தை நோக்கிப் படையினர் நகரத்தொடங்க பெரும்போர் மூண்டது. அந்தச் சமருக்கு 'ஆகாய கடல் வெளிச் சமர்' என்று பெயரிட்டுப் புலிகள் தாக்குதலை நடத்தினார்கள். 18 நாட்கள் நடந்த கடுமையான சமரின் பின்பு ஆனையிறவுத் தளத்தை கட்டைக்காடு வரை இணைத்தது படைத்தரப்பு. ஒல்லாந்தர், பிரிட்டிஷார் கால படை உபாயத்தைப் பயன்படுத்தி யாழ்ப்பாணக் குடாநாட்டைத் தனிமைப்படுத்தியது படைத்தரப்பு. யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கும் பிற இடங்களுக்குமான பாதை முழுதாகத் தடைப்பட்டது. அதற்கு முன்னரே பூநகரிப் பாதையையும் படையினர் தடுத்திருந்ததால், இயக்கச்சி - வாடியடி, கொம்படி, ஊரியான் என்ற பின் வழிப்பாதையின் கதையும் முடிந்தது. அதற்கு முன் மாற்றுப்பாதையாக இந்தப் பாதையையே சனங்கள் பயன்படுத்தினார்கள். கொம்படிப் பாதை ஒரு நகரத்தின் சாலையைப் போல சனங்களால் நிறைந்திருந்தது. அப்படிப் பயன்படுத்தும்போது, புல்லாவெளி, மண்டலாய்ப் பக்கமெல்லாம் ஒரே சனப் புழக்கமாயிருந்தன. இல்லையென்றால் புல்லாவெளியில் பெருநாள் காலங்களிலும் மண்டலாயில் திருவிழாக்காலங்களிலும் மட்டுமே சனநடமாட்டத்தைக் காணலாம்.

1991 இல் ஆனையிறவுப் படை முகாம் பென்னாம் பெரிய படைத்தளமாக மாறியது. அதற்குப்பிறகு, இயக்கச்சியில் வாழமுடியவில்லை. பிறகு 2000 ஆம் ஆண்டு புலிகள் மீண்டும் பெரியதொரு படைநடவடிக்கையைச் செய்து ஆனையிறவையும் இயக்கச்சியையும் அதனோடிணைந்த பகுதிகளையும் மீட்டார்கள். சனங்களும் மெல்ல மெல்ல ஊருக்கு வந்தனர். அழிந்த ஊரைக் கண்டு மலைத்தனர். அழுது புலம்பினால் மட்டும் ஆகுமா? மீண்டும் புழுதியிலும் வெயிலிலும் கோடையிலும் மாரியிலும் அலைந்து உழைத்தனர். புலிகள் மிகப் பெரிய பயிற்சித்தளமொன்றைப் புல்லாவெளிக்கும் மண்டலாய்க்கும் இடையில் உருவாக்கினர். சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்தில் இயக்கச்சி சற்றுச் செழித்தது. ஆனாலும் அது நீடிக்கவில்லை. 2008 இல் மீண்டும் போர் வெடிக்க, இடப்பெயர்வு. வன்னியின் இறுதிப்போர் அது. முகமாலையில் இருந்த படையினர் அங்கிருந்து வெளியேறி, கிளிநொச்சியில் நிலைகொண்டிருந்த மன்னார் - வவுனியாப் படையினருடன் கைகோர்ப்பதற்காக முன்னேறினர். முப்பது ஆண்டுகளாக உக்கிர போர் நடந்த இயக்கச்சி - ஆனையிறவுப் பகுதியில் துப்பாக்கி வெடியோசைகளே இல்லாமல் படைகள் நகர்ந்தன. ஆனையிறவை மீட்பதற்காக என்று 4000 போராளிகள் வரையில் பலியாகியிருக்கிறார்கள். ஆனையிறவைப் பாதுகாப்பதற்காக 1000 படையினருக்கு மேல் பலியாகியிருக்கிறார்கள். இப்பொழுது? விதி எப்பிடியெல்லாம் விளையாடும் என்பதை அப்போது பார்த்தேன். பிறகு ஆண்டாண்டு காலமாக நீக்கமற்றிருந்த சனங்கள் ஊர் நீங்கக் காடுறைந்தது ஊரில். விதிவலியதா?

போர் முடிய, மீண்டும் சனங்கள் இயக்கச்சிக்கு வந்தனர். அதை மீள் குடியேற்றம் என்று சொன்னார்கள் பலரும். ஆனால், அது ஒரு மீள்நடுகையே. எல்லாமே அழிந்த ஊரில் ஒரு மீள்நடுகை. அது ஒரு கொடிய நாள். ஆனால், ஊருக்குத் திரும்பி வந்தவர்கள் தங்குவதற்கோ, சமைப்பதற்கோ, உறங்குவதற்கோ வீடுகளிருக்கவில்லை. சனங்கள் நட்டு வளர்த்த மரங்களும் இல்லை. ஊட்டி வளர்த்த பிராணிகளுமில்லை. தங்களின் ஊரிலே அந்நியரைப்போல - வந்தேறு குடிகளைப்போல நடுத்தெருவில் தத்தளித்துக் கொண்டு நின்றனர் எல்லோரும். சமைப்பதற்கு பொருத்தமான பாத்திரங்களோ, புழங்கு பொருட்களோ கூட இல்லை. தலைமுறை தலைமுறையாக முன்னோர்கள் சேமித்து வைத்திருந்த முதுசொம்களில் ஒன்று கூட இல்லாத வாழ்க்கை. யுத்தப் பிசாசு சாதாரணமான ஒன்றல்ல. அது சனங்களை மட்டும் தின்னவோ அலைக்கழிக்கவோ இல்லை. அவர்களுடைய ஆதார வாழ்க்கையையே சிதைத்தது. ஆனால், மிச்சமாக எது இருந்ததோ இல்லையோ அதை வைத்து வாழ்க்கையை ஆரம்பிப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், மீள்குடியேற்றம் தொடங்கிய அன்றுதான் நல்ல நாளும். மறுபடியும் எல்லோரும் ஊர் திரும்பினரென்றால்... அது மகிழ்ச்சியன்றி வேறென்ன?

ஊருக்கு வந்தவர்கள் மீண்டும் மெல்ல மெல்ல ஊரைக் கட்டியெழுப்பத் தொடங்கினார்கள். அல்லது சனங்கள் வர ஊரும் வந்தது. கடைகளும் தெருக்களும் வந்தன. ஒருபோதுமே இல்லாதிருந்த மின்சாரமும் வந்தது. அழிந்த வீடுகளையும் விட - ஓலைக்குடிசைக்குப் பதிலாக அதிமான வீடுகள் வந்தன. பயிர்கள் வளர்ந்தன. ஆடுகளும் மாடுகளும் வந்தன. அதை மேய்த்துக் கொண்டு நிற்கும் வாழ்க்கையும் வந்தது. கோயில்களெல்லாம் புத்தெழுச்சியாகக் கட்டப்பட்டு பூசையும் தேவாரமும் நடக்கிறது.

இத்தனைக்குப் பின்னும் இயக்கச்சியின் பழைய முகம் முழுதாக மாறாதிருக்கிறது. கிராமத்தின் சாயல் நீங்கவில்லை. ஆமாம், இயக்கச்சி என்னும் இராணுவக் கேந்திரம் கூட இன்னும் மாறாமல் வலுவானதாகவே உள்ளது. வரலாற்றின் வழி நெடுக தன்னுடலில் குருதியையும் கந்தகத்தையும் சுமந்த ஒரு முதிய கிராமம் இன்னும் தத்தளிப்பின் மத்தியில்தான் வாழும் விதியா?

வல்லியக்கன் கோயிலை வரலாறு காணுமா?

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=7&contentid=426c4a89-39ba-4f5a-876c-7188b937aa3d

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம ஊரை பற்றி பேசுறாங்க ......

  • கருத்துக்கள உறவுகள்

இயக்கச்சி பற்றிய பல தகவல்களை அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. கட்டுரைக்கு நன்றி கிருபன்...இப்படி கொடிய யுத்தத்தினால் அழிந்து போன ஊர்கள் இன்ன்னும் எத்தனையோ!

  • கருத்துக்கள உறவுகள்

426c4a89-39ba-4f5a-876c-7188b937aa3d4.jp
 

இடிந்த நிலையில் உள்ள.... அந்தக் கோவிலைப் பார்க்கும் போது, மனதில் வலி ஏற்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

426c4a89-39ba-4f5a-876c-7188b937aa3d4.jp

 

இடிந்த நிலையில் உள்ள.... அந்தக் கோவிலைப் பார்க்கும் போது, மனதில் வலி ஏற்படுகின்றது.

பலமுறை அங்கே பொங்கி இருக்கிறோம் .....எங்களுக்கு எப்படி இருக்கும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.