Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈரமான ரோஜாவே....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெடுஞ்சாலையின் அதிவேகத்தோடு வழுக்கியபடி ஓடிக்கொண்டிருந்த வாகனம் சற்று வேகத்தைக் மிதப்படுத்தி வெளிச்செல்லும் பாதையில் வளைவாக ஓடி சிவப்பு வெளிச்சத்தில் தரித்து நின்ற பொழுதில் வாகனத்துக்குள் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த அனாவிற்கு தான் போகுமிடத்தை அண்மித்துக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு ஏற்பட்டது.
அனா, அழகு என்றால் அனா என்று சொல்லுமளவிற்கு அங்கங்கள் ஒவ்வொன்றும் அளந்து செய்த செப்புச் சிலை. உயரமும் உயரத்திற்கேற்ற உடல்வாகும் பொன்நிற முடியும் பொலிவான தோற்றமும் கொண்ட அழகி மட்டுமல்ல அறிவு, துணிவு, ஆளுமை, கொண்ட பெண்.
சிறு வயதிலேயே படிப்பில் மட்டுமல்லாது விளையாட்டுத் துறையிலும் கலைகளிலும் அனாவின் தனித்தன்மை பெற்றவர்களை மட்டுமல்ல ஆசிரியர்களையும் வியக்க வைத்திருக்கிறது. உயர்வகுப்பு படிக்கும்போதே பல மாணவர்களின் கண்வீச்சு அவளை உரசிச் சென்றாலும் யாரோடும் அவளுக்குக் காதல் ஏற்படவில்லை. படிப்பில் மட்டும் மிகுந்த அக்கறை காட்டினாள்.
பல்கலைக்கழகம் நுழைந்து இரண்டாண்டுகளின் பின்பு அதுவரை அவளது வகுப்புத் தோழனாக இருந்த அன்ரனி அவளுடன் சேர்ந்து படிப்பில் மட்டுமல்ல பாசத்தையும் வளர்த்துக் கொண்டான்.
காதலர் தினத்தன்று அன்ரனி அழகான காதலர் தின வாழ்த்து அட்டையுடனும் அன்றலர்ந்த சிவப்பு ரோஜாவுடனும் 'ஜ லவ் யூ அனா' என்று சொல்லி தன் அன்பை வெளிப்படுத்திய தருணம் அனாவின் மனதுக்குள்ளும் மத்தாப்பூவாய் அன்புப் பொறிகள் தூவத் தொடங்கின. 'அன்ரனி ஜ லவ் யூ ரூ'என்ற தன்னுள் மலர்ந்துவிட்ட காதலையும் பகிர்ந்து கொண்டாள்.   
மிகுதி இரு வருடங்களிலும் கல்வியும் காதலும் ஒரு ஸ்திரமான நிலையில் வளர்ந்து விருட்சமாகி இருவரும் பல்கலைக்கழகம் முடித்து வேலை தேட ஆரம்பித்தனர். அனாவுக்கு விமானப் பணிப்பெண்ணாக வேலை செய்ய வேண்டுமென்ற விருப்பம் நீண்ட நாட்களாக இருந்ததால் அதில் பயிற்சி பெற்று வேலைக்கு விண்ணப்பித்தாள். அழகும் இளமையும் மொழிவளமும் கொண்ட அனாவுக்கு உடனடியாக வேலை கிடைத்தது.
அவளது கனவு மெய்ப்பட்ட பொழுதுகளில் தினமும் வானத்திலே பறவைபோல பறந்து உலகைச் சுற்றிவருவது அவளுக்கு மிகவும் விருப்பமான பொழுதாக அமைந்ததுடன் கைநிறைய வருமானமும் கிடைத்தது. அன்ரனிக்கும்; நல்ல அலுவலகம் ஒன்றில் வேலை கிடைத்தது.
இரண்டு மூன்று வருடங்கள் இருவருமாக உழைத்து தங்களுக்கு சொந்தமாக இருப்பிடம் ஒன்றை வாங்கிக் கொண்டனர் பின்; பெற்றவர்களின் அனுமதியுடன் திருமணத்திற்கான நாள் குறிக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட ஆலயத்தினுள் நீண்ட வெள்ளை உடையுடன் தேவதை போல நடந்து வந்த அனாவைப் பார்த்தவர் யாவரும் வியந்து போயினர். இதுவல்லவோ ஜோடிப்பொருத்தம் என்று அனைவரும் வாழ்த்தினர்.
அன்ரனியினதும் அனாவினதும் இல்லறம் மிக இனிதாக ஆரம்பமாகியது. இரு வருடங்கள் இருவரும் வாழ்வின் இன்பங்களை எல்லாம் வாரி வாரி வழங்கி மகிழ்ந்தனர். அனாவுக்கும்; அலுவலகம் ஒன்றில் வேலை கிடைத்ததால் இருவரும் ஒன்றாகவே வேலைக்கு போய் வருவார்கள்.
அனாவின் வயிற்றில் அவர்களது அன்பின் வித்து வளரத் தொடங்கியதும் அன்ரனியின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அவளை கையில் தாங்காத குறை. தன் அன்பு மனைவியை ஒரு பூவைப்போல பொத்திப் பொத்திப் பாதுகாத்தான். அனாமாதிரியே அழகான கொழு கொழு குழந்தை அஸ்லி பிறந்த பொழுதில் இவர்கள் மட்டுமல்ல இருவீட்டுப் பெற்றவரும் குழந்தையை ஆசையுடன் அள்ளி எடுத்து கொஞ்சி மகிழ்ந்தனர்.
அஸ்லியுடன் அனா அன்ரனியின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக நண்பர்கள், விருந்து, வேடிக்கை, உல்லாசப் பயணங்கள் என்று மிகவும் ரம்யமாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அஸ்லியும் அழகோவியமாக வளரத் தொடங்கினாள். அஸ்லிக்கு மூன்று வயதாகியதும் அன்ரனி வேலைக்குப் போகுமுன் குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்துவிட்டு அனாவையும் அலுவலகத்தில் இறக்கிவிட்டு தான் தனது அலுவலகம் செல்வது வழக்கம். பின்பு மாலை இருவருமாக குழந்தையை அழைத்துக்கொண்டு வீடு திரும்புவர்.
அன்று அவர்கள் வாழ்வில் இருண்ட நாள்.
காலை வழக்கம்போல இருவரும் காலை உணவருந்தியபின் குழந்தைக்கும் உடை அணிவித்து உணவூட்டியபின் வேலைக்குப் புறப்பட்டனர்.
அஸ்லியின் குழந்தைகள் காப்பகத்தில் அவளை ஒப்படைத்து விட்டு அனாவை அலுவலகத்தில் இறக்குவதற்காக நெடுஞ்சாலையில் வேகமாகப் போய்க்கொண்டிருந்த வாகனம்; வீதியை விட்டு விலகி..எப்படி? ஏன் இப்படி நடந்ததென்று எவருக்கும் இதுவரை புரியவில்லை. கண்மூடித் திறக்கும் நேரத்திற்குள் எல்லாமே நடந்து முடிந்து விட்டது.
அன்ரனிக்கு நினைவு திரும்பிய நிமிடத்தில் அவனது விழிகள் அனாவைத் தேடின.
ஆனா பக்கத்தில் இல்லை என்பதை அவதானித்தவன் 'அனா எங்கே?' என்று மிகவும் அங்கலாய்ப்புடன் வினாவினான். எவரும் உடனடியாகப் பதிலளிக்காததால் 'ஜயோ என் அனாவுக்கு என்ன நடந்தது?' என்று மீண்டும் மீண்டும் வினாவவும் 'அனா அவசர பிரிவில் அனுமதிக்கப்படடிருக்கிறாள்' என்று ஒரு தாதி மூலம் செய்தி கிடைத்தது.
அன்ரனியின் மனம் அடைந்த வேதனைக்கு அளவில்லை.
ஆறு மாதங்கள். ஆன்ரனியின் குடும்பத்திற்கு மிகவும் துன்பமான காலம். ஆன்ரனி வைத்தியசாலைக்கும் அஸ்லியைக் கவனிப்பதற்கும் அலைந்து அல்லாடிப் போனான். ஆனாவைப்பற்றி தினமும் வைத்தியர்கள் சொன்ன தகவல்கள் நம்பிக்கை தருவதாக இல்லை.
அனா கோமா நிலையிலிருந்து சிறிது சிறிதாக மீளத் தொடங்கினாள். கண் விழித்துப் பார்த்தாள். அன்ரனிக்கோ தாங்க முடியாத மகிழ்ச்சி. ஆனால் அனாவால் கை கால்களை அசைக்க முடியவில்லை. உணவு உண்ண முடியவில்லை. படுத்த படுக்கையாக இருக்கும் அனாவைப் பார்த்த அன்ரனிக்கு வேதனையாக இரந்தது.
'அனா, அனா நான்தானே காரை வேகமாக ஓட்டி உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டேன்.' என்று ஆயிரம்தடைவ அழுதழுது மன்னிப்புக் கேட்டும் அன்ரனிக்கு மனம் ஆறவில்லை.
ஆஸ்லியின் நிலமை அதைவிட மோசம் 'அம்மா, அம்மா என்று அழுதழுதே அவலப்படும் அவளுக்கு எப்படி ஆறுதல் கூறுவதென்றே தெரியவில்லை.
'அன்ரனி கவலைப்படவேணாம்.' என்று அவனை அணைத்து ஆறுதல் கூறவும் 'அஸ்லியை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்க' என்றும் சொல்ல வேண்டுமென்ற எண்ணம் தொண்டைக்குழி வரை வந்து வந்து போனது. ஆனால் வார்த்தைகளுக்கு ஒலி கொடுக்க அவளால் முடியவில்லை. முடிவில் என்ன சொல்ல நினைத்தாளோ அதுவே கண்ணீர் என்னும் பிரளயமாக கன்னங்களில் வழியத் தொடங்கியது. அன்ரனி கண்ணீரைத் துடைத்து ஆறுதல் கூறினான். என்னகூறி என்ன பயன்.? அவளின் வேதனையைத் தணிக்க அவன் என்ன செய்வான்.
அனா தனக்குத் தானே சுமையானாள். படுக்கையிலேயே அவளது பொழுதைக் கழிக்க வேண்டிய பரிதாபநிலை. முள்ளந்தண்டில் அடிபட்டதால் செயலிழந்த உடல் உறுப்புக்களுடன் தினமும் போராடினாள். எல்லாவற்றிற்கும் அடுத்தவர் உதவியை எதிர்பார்க்க வேண்டி இருந்தது.
காது கேட்கிறது. சுற்றி நடப்பவற்றை பார்க்கவும் உணர்ந்து கொள்ளவும் முடிகிறது. ஆனால் உடம்பை அசைக்கவோ பேசவோ முடியாது.
நிரந்தர நோயாளியாகிவிட்ட அனாவை அன்ரனி மிகவும் அக்கறையுடன் கவனித்தான். அஸ்லியும் தன்னால் முடிந்தவரை உதவி செய்தாள். ஆனாவிற்கு பேசமுடியாவிட்டாலும் நினைப்பவற்றை எழுதிக் காட்டவாவது முடியாமல் கைகளும் செயலிழந்து போனது மிகவும் சங்கடமாக இருந்தது. ஏதாவது கேட்பதென்றாலும் தொண்டையிலிருந்து வரும்; சத்தம் வெறும் குழறலாகத்தான் வெளிப்படும். தலையை திருப்ப முடியாது. கழுத்து நிமிர்ந்து நிற்காமல் சாய்ந்தே கிடக்கும். அழகாக பூத்துக் குலுங்கிய இந்த அழகு மலர் வாடி வதங்கி கிடப்பதைப் பார்த்து அன்ரனியும் பெற்றவர்களும் மனதுக்குள் அழுதனர். ஆலயமெங்கும் அவளது நலனுக்காக வேண்டுதல் செய்தனர். என்ன செய்து என்ன பயன். அனா முப்பது வயதிலேயே மூப்படைந்து விட்டதான நிலை.
அடுத்து வந்த பல வருடங்கள் அன்ரனி தன் பொழுதுகளை அனாவுடனேயே கழித்தான். வேலைக்குச் செல்லாமல் எவ்வளவு காலம்தான் வீட்டிலிருக்க முடியும் பகல் வேளைகளில் ஒரு ஆயாவை வேலைக்கு அமர்த்தி அனாவை கவனிக்க வைத்துவிட்டு அன்ரனி பகுதிநேர வேலைக்குப் போனான். மாலை வேளைகளில் அனாவை சக்கரநாற்காலியில் வைத்து வெளியே கொண்டுபோய் வருவதுவும் அவளுக்குப் பக்கத்திலிருந்து தன் மன ஆதங்கங்களை பகிர்ந்து கொள்வதுவும் அன்ரனிக்கு தினமும் வழக்கமாயின.
காலம் உருண்டோடியது. அஸ்லிக்கு இப்பொழுது வயது இருபது. அவள் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவி. அவள் மார்க் என்ற வாலிபனை தனது காதலனாக தன் பெற்றவர்களிடம் அறிமுகம் செய்த பொழுது தனது கையை தூக்கி ஆசிகூறவோ அரவணைத்து அன்பைப் பகிர்ந்து கொள்ளவோ முடியாமல் தன் கண்களிலிருந்து பெருகிய ஆனந்தக் கண்ணீராலேயே தன் அன்பைத் தெரிவித்தாள் அந்த அன்புத் தாய்.
அஸ்லியின் படிப்பு முடிந்ததும் அவர்கள் தம் திருமணத்திற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினர். தன் ஒரே மகளின் திருமணத்தை முன்நின்று நடத்தக்கூட முடியாத பாவியாகி விட்டேனே என்று எண்ணி எண்ணி இதயம் நொந்து போனாள்.
தினமும் காலையில் அனாவைக் குளிக்க வைத்து துடைத்து உடைமாற்றி உணவூட்டி சக்கரநாற்காலியில் இருத்தி அவளது தேவைகளை எல்லாம் கவனித்து மீண்டும் படுக்கைக்கு மாற்றி உடைகளை கழுவி அறை துப்பரவு செய்து என்று நாள் முழுவதும் ஓடிஓடி அன்ரனியும் களைத்துப் போய்விட்டான். இப்பொழுதெல்லாம் அன்ரனிக்கு இடுப்பு வலி. உடல் அசதியும் மனச் சோர்வும் வேறு அவனை வாட்டி எடுத்தது. அஸ்லிக்கும் திருமணமாகிவிட்டால் அவளுக்கும் குடும்பப் பொறுப்புகள் வந்து விடும்.
அதுதவிர இப்பொழுதெல்லாம் அனாவிற்கு உணவூட்டுவத்கு மிகவும் சிரமப்பட வேண்டி இருந்தது. சாதாரண உணவை அவளால் விழுங்க முடியவில்லை. வைத்தியரின் ஆலோசனைப்படி அவளிற்கு தடிப்பாக்கப்பட்ட திரவ உணவுகளே கொடுக்கலாம் என கூறப்பட்டது. சிறிது துகள் உணவுகள்கூட அவளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பளிக்கும் என்று வைத்தியர் எச்சரித்திருந்தார். அனாவிற்கும் அன்ரனியின் நிலையைப் பார்க்க மிகவும் மன வேதனையாக இருந்தது.
அனா இப்பொழுதெல்லாம் மன அழுத்தத்திற்கு ஆளானாள். உயிருடன் இருப்பதே மற்றவர்களுக்கு மட்டுமல்ல தனக்கே பெரும் சுமை என எண்ணத்தொடங்கினாள். நாள் முழுவதும் சக்கரநாற்காலியில் இருப்பதும் படுக்கையில் கை கால்கள் போட்டது போட்டபடி கிடப்பதும் உடல் வலியாக இருந்தது. தன் பிரத்தியேக தேவைகளுக்குக்கூட அடுத்தவர் உதவியை நாடவேண்டிய தன் நிலையை எண்ணி எண்ணி தன்னையே நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
அதனால் இப்பொழுதெல்லாம் காரணமின்றி குரலெடுத்து கத்தத் தொடங்கினாள். அவள் கத்துவது தொண்டைக்குழிக்குள் இருந்து பெரும் உறுமல் சத்தமாக பகலில் மட்டுமல்ல இரவிலும் வீட்டிலுள்ள மற்றவர்களின் அமைதியையும் குலைத்தது. அவளின் இயலாமையின் வெளிப்பாடுதான் இதுவென அன்ரனியால் உணரமுடிந்தாலும் தர்ம சங்கடமான நிலையாக இருந்தது.
அவளின் உடல்நிலையும் மோசமாகிக் கொண்டே போனது. இறுதியில் வைத்தியரின் ஆலோசனையாலும் அன்ரனியின் இயலாமையாலும் 24 மணிநேரமும் வைத்திய கண்காணிப்புள்ள ஒரு நர்சிங் கோமில் அனாவைச் சேர்ப்பதென்று முடிவாகியது. அன்ரனிக்கும் இது மிகப் பெரிய வேதனை. வாழ்நாள் முழுவதும் சிறுகச் சிறுக இறப்பதென்பது இதுதானோ?
இதோ நர்சிங்கோம் அண்மித்து விட்டது. அனா தன் கண்களிலிருந்து வழியும் கண்ணீரைக்கூட கைகளால் துடைக்க முடியாமல் அன்ரனியை நோக்கினாள். அன்ரனி தன் வேதனையை விழுங்கியபடி அனாவை அணைத்து அவள் கண்ணீரைத் துடைத்து விட்டான்.
அகன்ற பெரிய கண்ணாடி ஜன்னல்களை மறைத்திருந்த பெரிய திரைச்சீலைகளின் மெல்லிய இடுக்குகளின் வழி சூரிய வெளிச்சம் அறைக்குள் விழுந்தது.
விடிந்து விட்டது.
தாதி அறைக்குள் வந்து திரைச்சீலைகளை விலக்கி விடிவிளக்கை அணைத்து விடுகிறாள்.
வழக்கம் போல அவளது காலைக் கடமைகள் எல்லாம் முடிக்கப்பட்டு மீண்டும் சக்கர நாற்காலிக்கு மாற்றப்படுகிறாள். ஓவ்வொரு முறை இடம் மாற்றப்படும் போதும் அவள் படும் வேதனை வார்த்தைகளில் வடிக்க முடியாதவை. அவளது கண்களில் பக்கத்து மேசையில் வைக்கப்பட்டிருந்த தன் இளமைக்கால நிழற்படங்கள் தட்டுப்படுகின்றது. பார்க்கும் பொழுதெல்லாம் ஏக்கம்தான் மிஞ்சியது. ஏக்கத்துடன் சுவரை ஏறிட்டாள். அங்கு அவளும் அன்ரனியும் திருமணத்தன்று கண்களில் வழியும் ஆயிரம் கனவுகளுடன் ஒருவரை ஒருவர் அணைத்தபடி புன்னகை தவழும் வதனத்துடன் நிழற்படமாய். நெஞ்சு வெடித்துவிடும் அளவிற்கு சத்தம் போட்டு அழ வேண்டுமென நினைக்கிறாள். அதுகூட முடியாமல் இதுவென்ன வாழ்க்கை.
நானே எனக்குச் சிலுவையா? இறைவா இவ் வேள்வித்தீயில் நான் வேகுவது இன்னும் எத்தனை காலம்?
அவளது வாயில் இறுகிய திரவஉணவு ஏதோ ஊற்றுகிறார்கள். சுவை, சூடு, குளிர், எந்த உணர்வுமற்ற ஏதோ ஒன்று உணவாக ஊட்டப்படுகிறது. அதுகூட இடைக்கிடை தொண்டைக்குள் சிக்கி மூச்சை அடைக்கிறது.
இதோ அவளது ஆசைமகள் தன் காதலனுடன் பூங்கொத்தை கையிலேந்தியவாறு வந்த என்னை முத்தமிடுகிறாள்.  மார்க்கும் பார்ப்பதற்கு நல்ல பண்பான அன்பான இளைஞனாகத்தெரிகிறான். ஆனா அவர்களை அணைத்து முத்தமிடத் துடிக்கிறாள். முடியவில்லை.  அவள் நன்றாக சந்தோசமாக வாழ வேண்டும் என மனதால் வாழ்த்துகிறாள். அன்ரனிதான் பாவம். தனிமையில் துவளும் அவனிற்கு ஆறுதல் கூற யார் இருக்கிறார்கள்.
அவளால் முடியவில்லை. அமைதியாக இருக்க முடியவில்லை. மனம் எரிமலையாய் குமுறுகிறது. அவளது குரல்வளையில் இருந்து வெளிப்படும் குரல் அந்த அமைதியான நர்சிங்கோம் சுவர்களில் மோதி விகாரமாக ஒலிக்கிறது. தாதி விரைந்து வருகிறாள். அனாவின் சக்கர நாற்காலியை உருட்டிக்கொண்டு போகிறாள்.
அந்த நர்சிங்கோமின் ஒரு பகுதியில் அமைதியான ஓர் அறை இருக்கிறது. அதில் இப்படி அங்குள்ள மற்றவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் ; சந்தர்ப்பங்கள் நேரும் சமயங்களில் தனிமைப்படுத்தி வைப்பதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது.
அனைவை சக்கரநாற்காலியுடன் அந்த அறையினுள் இருத்திய தாதி ஓர் அமைதியான இசையை ஒலிக்க விடுகிறாள். மெல்லிய இசை அறையெங்கும் பரவுகிறது.
இசையில் வசமாகுமா அவள் இதயம்?......

 
 

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கனதியான கதையல்ல நிஜம், எனக்கும் இதுபோன்ற நிலையிலுள்ள சிலரைத் தெரிந்திருப்பதால் , இது மிகவும் கொடுமையானது...!

 

கதைக்கு நன்றி கண்மனி...!!

  • கருத்துக்கள உறவுகள்

மிக நீண்ட நாட்களுக்குப்பின்  உங்கள் கதையை சுவைப்பதில்  மிக்கக் மகிழ்ச்சி .. ஆமாம் எவரின் வாழ்கையும் நிலையில்லை .  இறைவனா தரப்பட்ட  வாழ்கையை  ஏற்று  மகிழ்வாக  வாழ்வது  தான் வாழ்க்கை  நேரம்  கிடைக்கும்போதெல்லாம்  வாருங்கள் . நன்றி

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

அனேகமாக இந்தக் கதையை வாசிப்பவர்கள் அனைவருக்கும் ஒரு சில நிமிடங்களாவது பேச்சு வராது என்று தான் நினைக்கிறன்....எதுவுமே நமது கட்டுப்பாட்டில் இல்லை. ஆனாலும் இப்படியானவர்கள் மேலும் இருந்து வாழ்வோடு போராடக் கூடாது..யாராக இருந்தாலும் ஒரு நாள்,இரு நாள்,ஒரு மாதம்,இரு மாதம் பராமரிப்பார்கள் அதன் பின் அவர்களுக்கும் கஸ்ரம்,இப்படியான நிலையில் இருப்பவர்களுக்கும் கஸ்ரம்..வாழ்வு முழுவதும் உடல் வலிகளோடு,மன வலிகளோடு வாழ்வது கொடுமையிலும், கொடுமை.பகிர்வுக்கு நன்றிகள் கண்மணி அக்கா.

 

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

கதைக்கு நன்றி அக்கா...எழுத வார்த்தைகளே இல்லை.யாயினியின் கருத்து தான் என்னோடதும்

கதையில் வரும் பெயர்கள் ஆங்கிலப் பெயராக இருப்பது நெருடலாக உள்ளது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கதை நிஜமான கதை என்பதால் எந்தவித கற்பனைகளையும் கலந்து எழுத முடியவில்லை. எனவேதான் பெயர்களைக்கூட மாற்றவில்லை. அனாவின் அன்றைய நிழற்படங்களைப் பார்த்த எனக்கு இன்றைய நிலையைப் பார்க்கும்பொழுது நிலையாமை கண்முன் நிழலாடியது.
கருத்தெழுதிய சுவி, நிலாமதி, யாயினி, ரதி அனைவருக்கும் நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.