Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிந்தனைச்சோதனைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிந்தனைச்சோதனைகள்

சுந்தர் வேதாந்தம்

ஒரு புறம் Large Hadron Collider, International Space Station போன்ற பல பில்லியன் டாலர்களை விழுங்கிவிட்டு மெல்ல எழுந்து நிற்கும் சோதனைகளும் முயற்சிகளும் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் காசு பணம் ரொம்பத்தேவை இல்லாத வெறும் சிந்தனையை மட்டுமே உபயோகிக்கும் பல சுவையான சோதனைகளும் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. வெகு காலத்துக்கு முன்பே கேள்விகள் வழியே பிரச்சினைகளை அலசும் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தாலும் பழசும் புதுசுமாய் இவற்றில் பல வகைகள் உண்டு. அறிவியல், உளவியல், பொருளாதாரம், அரசியல், மதங்கள், நீதி, தர்மம், நெறிமுறை (Ethics), தத்துவம் என்று பல துறைகளையும், மனித சமூகத்தின் வாழ்முறையின் பல பக்கங்களையும் தொடும் சிந்தனைச்சோதனைகளை இந்த தொடரில் கொஞ்சம் அலசுவோம். நீங்கள் நிச்சயம் சில சோதனைகளைப்பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். நாம் தொடப்போகும் அத்தனை சோதனைகளையும் பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருக்காதவரை, சில நாட்களாவது உங்கள் தூக்கத்தை கெடுத்த புண்ணியத்தை நான் தேடிக்கொள்வேன்.

தள்ளுவண்டி சோதனை

ஒரு ரயில் தடம். அதில் உருண்டோடி வந்து கொண்டிருக்கிறது ஒரு டிராலி வண்டி. வண்டியில் ஓட்டுனர் யாரும் இல்லை, பயணிகளும் இல்லை. அது பாட்டுக்கு எப்படியோ ப்ரேக் கழண்டு போய் ஓடி வந்து கொண்டு இருக்கிறது. அருகிலிருக்கும் கட்டுப்பாட்டு அறையில் தனியாக பணி புரியும் நீங்கள் இதைப்பார்த்து விடுகிறீர்கள். இது என்ன ரகளை? இதை நிறுத்தியாக வேண்டுமே என்று நீங்கள் செயல்பட ஆரம்பிக்கும்போது, வண்டி ஓடி வந்து கொண்டிருக்கும் பாதையில் காது கேட்காத ஐந்து பேர் அதே திசையில் நடந்து போய் கொண்டிருப்பதையும் பார்க்கிறீர்கள். நீங்கள் ஏதாவது செய்து தொலைக்காவிட்டால், வண்டி இன்னும் ஒரு நிமிடத்தில் அவர்கள் மீது மோதி அந்த ஐவரையும் கொல்லப்போவது உறுதி.

trolly.jpg

நல்ல வேளையாக உங்களிடம் அந்த வண்டியின் ரயில் தடப்பாதையை மாற்றி விடும் ஒரு லீவர் (Lever) அல்லது ஸ்விட்ச் இருக்கிறது. அப்பாடா என்று ஒரு பெருமூச்சுடன் அதை தட்டிவிடப்போகும்போது அந்த மாற்றுப்பாதையில் காது கேட்காத ஒரே ஒரு மனிதர் நடந்து போய்க்கொண்டிருப்பதை பார்க்கிறீர்கள். எனவே ஸ்விட்ச்சை தட்டினால் வண்டி மாற்றுப்பாதைக்கு திரும்பி ஓடும்போது அந்த ஒருவர் கொல்லப்படுவது நிச்சயம். ஒரு சில வினாடிகளுக்குள் நீங்கள் முடிவு எடுத்து செயல்பட்டாக வேண்டும். வண்டியின் பாதையை மாற்றி விடுவீர்களா மாட்டீர்களா?

இந்தக்கேள்வியை உலகின் பல பகுதிகளில் பல்வேறு பின்னணிகள் கொண்ட ஆயிரக்கணக்கானவர்களிடம் கேட்டிருக்கிறார்கள். பெரும்பாலும் பதில்சொன்ன எல்லோரும் (சுமார் தொண்ணூறு சதவீதத்தினர்), நிச்சயம் ஸ்விட்ச்சை தட்டுவேன், ஐந்து பேருக்கு பதில் ஒருவர் கொல்லப்படுவது மேல் என்றே பதில் அளித்திருக்கிறார்கள்.

philippafoot.jpg

1967 வாக்கில் அருகிலுள்ள படத்தில் காணப்படும் பிலிபா ஃபுட் (Philippa Foot) உருவாக்கிய இந்தக்கதையில் சிறிய மாறுபாடுகளை ஏற்படுத்தி கேள்வியை திரும்ப கேட்பது சுலபம். இந்தவகையில், ஸ்விட்ச்சை தட்டி பாதையை மாற்றி ஒருவரை பலி கொடுக்கும் வாய்ப்பை எடுத்துவிட்டு, அதற்கு பதில் அந்த வண்டிக்கும் நடந்து போய் கொண்டிருக்கும் ஐவருக்கும் இடையே உள்ள ஒரு பாலத்தில் நீங்கள் நின்று இதைப்பார்த்துக்கொண்டு இருப்பதாக கொள்வோம். இப்போது வண்டியை நிறுத்தி அந்த ஐவரையும் காப்பாற்ற உங்களுக்கு இருக்கும் ஒரே வழி பாலத்தின் மேல் உட்கார்ந்து சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும் ஒரு குண்டு மனிதரை பிடித்து அந்த வண்டியின் பாதையில் தள்ளி விடுவதுதான். அவர் பாலத்தில் இருந்து உங்களால் தள்ளி விடப்பட்டு அந்த ரயில் பாதையில் விழும்போது வண்டியால் இடித்துக்கொல்லப்படுவார். ஆனால் அந்த நிகழ்வே ஒரு தடையாக மாறி அந்த வண்டியை மேலே ஓட விடாமல் நிறுத்தி முன்னால் போய் கொண்டு இருக்கும் ஐவரையும் காப்பாற்றிவிடும். நீங்கள் அந்த மனிதரைப்பிடித்து வண்டியின் பாதையில் தள்ளி விடுவீர்களா?

கேள்வி இப்படி மாறும்போது பெரும்பாலோருக்கு தயக்கம் வந்து விடுகிறது. பதிலளிப்பவர்கள் ஆணோ பெண்ணோ, வயதானவர்களோ வயது குறைந்தவர்களோ, பணக்காரர்களோ ஏழைகளோ, படித்தவர்களோ படிக்காதவர்களோ, கடவுள் நம்பிக்கை உள்ளவர்களோ இல்லாதவர்களோ, அமெரிக்காவில் வாழ்பவர்களோ ஆப்பிரிக்க பழங்குடியினரோ, எல்லோரும் பொதுவாக பாலத்தில் உட்கார்ந்து இருப்பவரை பிடித்து தள்ள மாட்டேன் என்றுதான் சொல்கிறார்கள். வெறும் லாஜிக்கை மட்டும் கொண்டு யோசித்தால், இரு நிலைமைகளிலும் ஒருவரைக்கொன்று ஐவரை காப்பாற்றுகிறோம். அப்படி இருக்கும்போது இந்த மன மாற்றம் ஏன்? ஆய்வில் பங்குகொண்டு கேள்விகளுக்கு பதிலளித்தவர்களிடம் ஏன் இந்த மனமாற்றம் என்று கேட்டால் பெரும்பாலருக்கு ஏன் என்று சொல்லத்தெரியவில்லை. ஆனால் அவர்கள் கொடுத்த விடைகளில் அவர்களுக்கு சந்தேகமோ மனத்தடுமாற்றமோ ஏதும் இல்லை. தத்துவ நிபுணர்கள் முதல் கதையில் ஐந்து பேரோ அல்லது ஒருவரோ கொல்லப்படுவது நிச்சயம் என்பதுதான் காரணம் என்கிறார்கள். இரண்டாவது கதையில், பாலத்தின் மேல் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் மனிதருக்கும் நிகழப்போகும் விபத்துக்கும் எந்த சம்பந்தமும் முதலில் இல்லை. நீங்கள் பிடித்து தள்ளும்போதுதான் அந்த தொடர்பு வருகிறது. எனவே ஐந்து பேரை காப்பாற்றுவோம் என்றாலும் விபத்துக்கு தொடர்பில்லாத ஒருவரை அதற்காக பலி கொடுப்பது சரியல்ல என்று பொதுவாக எல்லோரும் நினைப்பதாக தெரிகிறது.

இது ஏதோ கவைக்கு உதவாத கதை என்று நினைக்க வேண்டாம். நிஜ வாழ்வில் பலமுறை பல விதங்களில் இந்தக்கேள்வி தலையை காட்டும் வழக்கம் உண்டு. உதாரணமாக அமெரிக்கா ஜப்பானின் மீது அணு குண்டை வீசியபோது அதற்கு சொல்லப்பட்ட காரணம் அப்படி ஒரிரு ஜப்பானிய ஊர்களை அழிப்பதன் மூலம் மதம் பிடித்து அலைந்த ஜப்பானை ஒடுக்கி உலகையே காப்பது என்பதுதான். அந்த வாதம் சரியா தவறா என்று இங்கே விவாதிக்க வரவில்லை. இந்த சிந்தனைச்சோதனைக்கும் உலகில் நிகழும் மிகப்பெரிய சம்பவங்களுக்கும் உள்ள தொடர்பை மட்டுமே சுட்டிக்காட்டுகிறேன். அந்த அணு குண்டு வீச்சு ட்ராலியை மாற்றுப்பாதைக்கு அனுப்புவதற்கு சமமாக சொல்லப்பட்டது. அதே குண்டை ஜப்பானுக்கு பதில் இரண்டாம் உலகப்போருக்கு முற்றிலும் சம்பந்தம் இல்லாத இன்னொரு நாட்டின் மீது வீசி, ஜப்பானுக்கு பயத்தை உண்டாக்கி போரை நிறுத்த முயல்வது பாலத்தின் மீது வேடிக்கை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும் மனிதரை தள்ளி விடுவதற்குச்சமம். முடிவு ஒரே விதமாய் அமைந்தாலும் அதை எப்படி சென்றடைகிறோம் என்பதும் முக்கியம் என்ற கொள்கையை இது வலியுறுத்துகிறது. இன்னொரு உதாரணம் இதயமாற்று, சிறுநீரகமாற்று (இன்னும் உங்களுக்கு பிடித்த மூன்று பாகங்களை சேர்த்துக்கொள்ளுங்கள்) அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் இறந்து விடுவார்கள் என்ற நிலையில் உள்ள ஐந்து நோயாளிகளைக்காப்பாற்ற நல்ல உடல் நிலையில் இருக்கும் ஒருவரைக்கொன்று அவரது உடல் பாகங்களை பொருத்தி ஐந்து நோயாளிகளை பிழைக்க வைப்பது நியாயமா? இதனால்தான் அந்த காலத்தில் வந்த நாயகன் படத்து “நாலு பேருக்கு நல்லது செஞ்சா, அதற்காக செய்யற எந்த காரியமும் நல்லதுதான்” வசனத்தை எல்லா சமயங்களிலும் ஒப்புக்கொள்ள முடிவதில்லை.

இந்த ட்ராலி கதையை இன்னும் பலவிதங்களில் மாற்றலாம். ஐந்து பேருக்கு பதில் இருவரையோ அல்லது ஒரே ஒருவரையோ அந்த முதல் பாதையில் நடக்க வைக்கலாம். வளர்ந்த ஆண்களுக்கு பதில் பெண்களையோ குழந்தைகளையோ ஒரு பாதையில் மட்டுமோ அல்லது இரு பாதைகளிலுமோ மாற்றலாம். சூழ்நிலைகளை மாற்றும்போது. கிடைக்கும் பதில்கள் மாறினாலும், பதில் சொல்பவர்கள் எடுக்கும் முடிவின் விகிதாசாரம் எல்லா நாட்டு, மதத்து, இன, மொழி, வயது மக்களிடையேயும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. இந்த ஒற்றுமையை சுட்டிக்காட்டி, மனித சமூகத்திற்கு தர்மத்தை போதிக்க மதங்களோ, கடவுள் கண்ணைக்குத்தும் பயமோ அவசியம் இல்லை, நமக்குள் எது நியாயம் என்கிற தெளிவு இயற்க்கையாகவே இருக்கிறது என்ற ஒரு கருத்தையும் முன் வைத்திருக்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடையே இந்த கதையைச்சொல்லி உங்களுக்கு கிடைக்கும் பதில்களை நீங்கள் அட்டவனைப்படுத்தி பார்க்கலாம்.

ஹைன்ஸின் திண்டாட்டம்

ஹைன்ஸ் ஒரு சாதாரணத்தொழிலாளி. வருடம் ஐம்பதாயிரம் சம்பாதிக்கிறான். அவன் மனைவிக்கு ஒரு வினோதமான புற்றுநோய். மிகவும் அவதிப்படுகிறாள். ஒன்றும் செய்யாவிட்டால் இரண்டு மாதங்களில் இறப்பது உறுதி என்கிறார் டாக்டர். ஊர் உலகம் பூராவும் தேடியதில் திருமதி ஹைன்ஸ்ஸை முற்றிலும் குணப்படுத்தவல்ல புதிய மருந்தொன்று இருப்பது தெரிய வருகிறது. மருந்தின் விலையோ பத்து லட்சம். ஹைன்ஸ் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

1. மருந்தின் விலை அவ்வளவு அதிகமாகவும் ஹைன்ஸின் சம்பளம் அவ்வளவு குறைவாகவும் இருப்பது கடவுள் விதித்த விதி. எனவே திருமதி ஹைன்ஸை சாக விட வேண்டியதுதான். முடிந்த அளவு அவள் உயிரோடு இருக்கும் வரை சிரமப்படாமல் மட்டும் ஹைன்ஸ் பார்த்துக்கொள்ள வேண்டும்.

2. தினமும் மருந்து கம்பெனியிடம் விலையை குறைக்கச்சொல்லி மன்றாட வேண்டும்.

3. பாங்கிலிருந்து கடன் வாங்கி மருந்தை வாங்க வேண்டும்.

4. மனைவிக்கு உயிராபத்து என்ற நிலையில் அந்த மருந்தை பெற ஹைன்ஸுக்கு வேண்டிய உரிமை இருக்கிறது. எனவே எவ்வளவு சீக்கிரம் முடிகிறதோ அவ்வளவு சீக்கிரம் மருந்து கம்பெனியின் கதவை உடைத்து உள்ளே சென்று மருந்தை திருடிக்கொண்டு வந்து விட வேண்டும். பின்னால் சிறை தண்டனை கிடைத்தால் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

5. திருட வேண்டியதுதான். அதற்கப்புறம் சிறை தண்டனையாவது, ஒன்றாவது? தப்பித்து எங்காவது ஓடி விட வேண்டும்.

6. இந்த வழிகள் எதுவும் சரியில்லை. வேறு ஏதாவது வழி ஒன்றை கண்டு பிடிக்க வேண்டும்?

kohlberg.jpg

லாரன்ஸ் கோல்பெர்க் என்ற அமெரிக்கர் கேட்ட இந்த கேள்விக்கு உங்கள் விடை ஒன்றிலிருந்து ஐந்தை நோக்கி வரவர நீங்கள் சம்பிரதாயமான தார்மீக சிந்தனைகளில் இருந்து விடுபட்டு கொண்டு இருக்கிறீர்கள் என்று பொருள் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். சட்டத்தை மதிக்காமல் நாம் எல்லோரும் நம் இஷ்டத்திற்கு எப்போதும் நடப்பது சமுதாயத்திற்கு நல்லதல்ல என்றாலும், குழந்தைப்பருவத்திலிருந்து முதியவர்களாக வளரும்போது நாம் ஒன்றுக்குப்பின் ஒன்றாக, விதிகளை மதிப்பது, அடுத்தவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது, ஊரோடு ஒத்து வாழ்வது, சட்டங்களை எதிர்க்க வேண்டிய அவசியம் நேர்ந்தாலும் மனிதகௌரவத்தை மதித்து நடப்பது போன்ற நிலைகளை மனதளவில் வளர்ந்தடைகிறோம் என்பது கோல்பெர்கின் கருத்து.

சூழ்நிலையை கொஞ்சம் மாற்றி மருந்து தேவைப்படுவது ஆளை சாகடிக்கும் புற்றுநோய்க்கு அல்ல, அவருக்கு அடிக்கடி வரும் தலைவலியை போக்குவதற்கு என்றால்? அதையும் தாண்டி திருமதி ஹைன்ஸ்சுக்கு வியாதி ஒன்றும் இல்லை. இந்த புதிய மருந்து அவரை சாதாரண மூடில் இருந்து ஒரு நல்ல குஷி மூடிற்க்கு மாற்றி வைத்திருக்கும் என்றால்? நீங்கள், “இதென்ன கேள்வி? அத்யாவசிய தேவைகளுக்கும் பொழுதுப்போக்கு தேவைகளுக்கும் வித்யாசம் இல்லையா?”, என்று கேட்கலாம். உதாரணமாக பசியை போக்க ஒரு ஏழை சாப்பாடு திருடுவதை சுலபமாக மன்னிக்கலாம் ஆனால் பணம் உள்ள ஒருவர் தன்னிடம் நாலு கார்கள் இருக்கும்போது இன்னொரு காரை நூறு கார் வைத்திருக்கும் இன்னொரு அதிபணக்காரரிடமிருந்து திருடினால் கூட மன்னிக்க முடியாது என்பதல்லவா உலக நியதி? இந்தச்சிந்தனை சிதறலுக்கு சமீபத்திய உதாரணம் ஒன்று உண்டு. அமெரிக்க சுகாதார காப்பீடுகள் (Healthcare Insurance Policies) பெண்களுக்கு கருத்தடை மாத்திரை வழங்க வேண்டுமா இல்லையா என்றொரு விவாதம் நடந்து கொண்டிருந்தது. தேவை இல்லை என்று சில நிறுவனங்கள் வாதாட, வழங்க வேண்டும், அது பெண்களின் ஆரோக்யத்திற்கு அவசியம் என்று வாதிட்ட பெண்கள் பலர், இதே காப்பீட்டு நிறுவனங்கள் ஒரு ஆட்சேபனையும் எழுப்பாமல் ஆண்களுக்கு மட்டும் பல வருடங்களாக வையாக்ரா (Viagra) வழங்கி வருவதை சுட்டி காட்டி ஏன் இந்த பாரபட்சம் என்று வினவினார்கள். இது தாராளவாத Vs பழமைவாத.(Liberal Vs Conservative) விவாதம் என்று நினைக்கத்தோன்றினாலும் கூட, இந்தக்கேள்விகளுக்கும் ஹைன்ஸின் திண்டாட்டத்துக்கும் ஒரு தொடர்பு இருப்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

சுகாதார காப்பீடுகள் வைத்திருக்கும்போது மனிதர்கள் இந்தத்திண்டாட்டத்தின் எதிர்முனையில் மாட்டிக்கொண்டு தடுமாறுவதும் உண்டு. வாழ்வின் இறுதிக்காலத்தில் மருத்துவமனையில் நெருங்கிய உறவினர் ஒருவர் சிகிச்சை பெறும்பொழுது, காப்பீடு அல்லது பண வசதி இருப்பதால் உலகில் இருக்கும் அத்தனை தொழில்நுட்பங்களையும் உபயோகித்து, வாழ்வின் தரம் (Quality of Life) குறைந்தாலும் அவர் வாழ்நாட்களை எப்படியாவது நீட்டிக்க முயற்சிப்பது சரியா அல்லது முடிந்த அளவு நோயாளியை வலிகள் ஏதும் இல்லாமல் சுகமாக வைத்திருந்து, அமைதியாக இறக்க விடுவது சரியா என்பது இன்று பல மருத்துவமனைகளில் தினமும் எதிர்கொள்ளப்படும் கேள்வி. உயில் எழுதுவதையே கூட சற்று அமங்கலமான காரியமாக நம் சமுதாயத்தில் பலர் நினைத்தாலும், அதற்கு மேல் ஒரு படி போய், நம்மால் சுயமாக மருத்துவ முடிவுகள் எடுக்கமுடியாத நிலையில், இந்த சிகிச்சைகள் அளிக்கலாம், இந்த மாதிரியான சிகிச்சைகள் அளிக்கக்கூடாது (உதாரணமாக, DNR: Do Not Resuscitate) என்ற சுயவிருப்பங்களை விளக்கமாக முன்கூட்டியே வாழ்வுயில் (Living Will) ஒன்றில் நாம் எழுதி வைப்பது நம் உறவினர்களை இத்தகைய திண்டாட்டங்களில் இருந்து காப்பாற்றும்.

(தொடரும்)

படங்கள்: நன்றி நியூயார்க் டைம்ஸ்

.- See more at: http://solvanam.com/?p=34378#sthash.Y7vu0kIZ.dpuf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிந்தனைச்சோதனைகள் – 2

சுந்தர் வேதாந்தம்

சென்ற இதழில் நாம் பார்த்த டிராலி சோதனையும் ஹைன்சின் திண்டாட்டமும் நமது தார்மீக நெறிமுறைகளை அளந்து பார்த்தவை. அத்தகைய வேதாந்த விசாரணைகளில் இருந்து சற்றே கீழிறங்கி வந்தால் அன்றாட வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் சிந்தனைச்சோதனைகள் நுழைந்து இருப்பதை எளிதில் பார்க்கலாம்.

தீஷியசின் கப்பல்

Plutarch.jpg

சென்ற வருடம் இதே பெயரில் வெளிவந்த திரைப்படத்தைப்பற்றிய அனுக்ரஹாவின் சொல்வனம் கட்டுரையை நீங்கள் பார்த்திருக்கலாம். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த கிரேக்க எழுத்தாளர் ப்ளூடார்க் ஒரு கேள்வியை எழுப்பினார். நமது கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் முன்னோடியான தீஷியெஸ்ஸிடம் ஒரு அழகான புது கப்பல் இருக்கிறது. அதை வைத்து வியாபாரம் நடத்தி வளர்ந்து வரும் தீஷியெஸ் வருடாவருடம் கப்பலை நல்ல நிலையில் வைத்துக்கொள்ளத்தேவையான பராமரிப்பு வேலைகளை செய்துவிடுவான். மரத்தினால் செய்யப்பட்ட அந்தக்கப்பலின் பலகைகள் கொஞ்சம் கொஞ்சமாக கடல் பயணத்தினால் அரிக்கப்பட, பத்து இருபது வருடங்களில் கப்பலின் அத்தனை பலகைகளும் மாற்றப்பட்டு விட்டன. இதேபோல் மராமத்து வேலைகளின் மூலம் கப்பலில் உள்ள பாய்மரம், கயிறுகள், கருவிகள் என்று ஒவொன்றாக எல்லாமே மாற்றப்பட்டுவிட்டால், இப்போது இருக்கும் கப்பல் தீஷியெசின் ஒரிஜினல் கப்பல்தானா அல்லது இது வேறு கப்பலா? இதுதான் ப்ளுடார்க்கின் கேள்வி. தீஷியெசின் ஒரிஜினல் கப்பலில் இருந்த பாகங்கள் எதுவும் புதிய கப்பலில் பாக்கி இல்லை என்றால் இது வேறு கப்பல்தானே? அப்படியென்றால் அது எப்போது வேறு கப்பலாக மாறியது? ஒரிஜினல் கப்பலின் 51ஆவது சதவீத பாகம் மாற்றப்பட்டபோதா? அல்லது கடைசி 100ஆவது சதவீத பாகம் மாற்றப்பட்டபோதா? பாகங்கள் மாறினால் என்ன, அது இன்னும் தீஷியெசின் ஒரிஜினல் கப்பல்தான் என்று வாதிட்டுப்பார்போம். இப்போது ஒரிஜினல் கப்பலில் இருந்து உளுத்துப்போன பாகங்களை காயலான் கடையில் போட்டபோது, அங்கே ஒருவர் அந்த பழைய பாகங்களை உபயோகித்து திரும்பவும் ஒரு கப்பலை உருவாக்கியதாகக்கொள்வோம். இந்த உளுத்துப்போன கப்பல் கடல் பயணத்திற்கு உதவாது என்றாலும், இப்போது உலகில் இரண்டு கப்பல்கள் இருக்கின்றன அல்லவா? அப்போது எது தீஷியெசின் கப்பல்?

இரண்டாயிரம் வருடங்களுக்கு பின்பும் எளிதான விடை கிடைக்காத இந்தக்கேள்வி சமகால வாழ்வில் பல இடங்களில் தலைகாட்டுவதைப்பார்க்கலாம். நான்கு பேர் சேர்ந்து பீட்டில்ஸ் போன்ற ஒரு இசைக்குழு அமைத்து மிகவும் புகழ்பெற்று நிறைய சம்பாதிக்கிறார்கள். காலப்போக்கில் குழுவைச்சேர்ந்த ஒவ்வொரு கலைஞரும் வயதாகி ஓய்வு பெறும்போது வேறு புதிய கலைஞர்கள் சேர்ந்து விழுந்த ஓட்டைகளை நிரப்புகிறார்கள். குழு ஆரம்பிக்கப்பட்டபோது அதில் இருந்த நால்வரும் புதிய குழுவில் இல்லாத நிலையில், இப்போது இருப்பது அதே இசைக்குழுதானா அல்லது இது வேறு இசைக்குழுவா? இப்போது எம்‌பி3 வடிவத்தில் அவர்களின் பாடல்கள் விற்கப்படும்போது பழைய கலைஞர்களுக்கு எவ்வளவு ராயல்டி கொடுக்கப்பட வேண்டும்? இந்த சண்டைகள் வருடந்தோறும் நீதிமன்றங்களில் அரங்கேறி வருகின்றன.

இசைக்குழுக்களை விட்டுவிட்டு தனி மனிதர்களை எடுத்துக்கொள்வோம். இதயமாற்று, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் சாதாரணமாக நடந்து வருவதை எல்லாம் தாண்டி 2005ல் ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த மருத்துவர்கள் மாற்று அறுவை சிகிச்சையை முகத்தின் ஒரு பாதிக்கு செய்து காட்டினார்கள். 2010இல் முழு முகமாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிய, கடந்த பத்து வருடங்களில் பல நாடுகளில் இப்போது இந்த முகமாற்று சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. பழுதாகிப்போன கால் முட்டி, இடுப்பு போன்ற உறுப்புகளுக்கு உலோக கலவைகளால் ஆன செயற்கை உறுப்புகள் இப்போது சாதாரணமாக பொருத்தப்படுகின்றன. கொஞ்சம் முன்பின்னாக ஓடி தொந்தரவு தரும் இதயங்களை ஒரே சீராக ஓட வைக்க பேஸ் மேக்கர் போன்ற கருவிகளும் கூட சகஜமாய் உபயோகப்படுத்தப்படுகின்றன. இனிவரும் காலங்களில் மேன்மேலும் செயற்கை அல்லது இயற்கை மாற்று உறுப்புக்களை நாம் பொறுத்திக்கொள்ளும்போது, எப்போது ஒரு மனிதர் தன் அடையாளத்தை இழக்கிறார்? இப்போதைக்கு இந்த கேள்விக்கு நம் மூளையும் நினைவுகளும் நிலைத்து இருக்கும்வரை நாம் நாம்தான் என்று பதில் சொல்லி வைக்கலாம். ஒரு வேளை மூளை மாற்று அறுவை சிகிச்சை சாத்தியமானால்? அவ்வளவு தூரம் கூட போக வேண்டாம். நம் தனிமனித நினைவுகளும், தான் என்ற பிரக்ஞையும்தான் நமது அடையாளம் என்றால், அல்ஸைமெர்ஸ் போன்ற இரக்கமற்ற வியாதிகளால் அவதிப்படும் ஒரு நோயாளியின் நினைவுகள் செல்லரித்துப்போகும் போது, இன்றைய சட்டப்படி நாம் அந்த நோயாளி அடையாளத்தை இழந்து விட்டதாக கருதுவதில்லையே, அது சரியா?

கழிப்பறையில் ஒரு சிலந்தி

தாமஸ் நேகல் ஒரு தற்காலத்தைய அமெரிக்க தத்துவத்துறை பேராசிரியர். அவர் ஒரு நாள் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு கழிப்பறைக்கு சிறுநீர் கழிக்க சென்றபோது அங்கே பரிதாபமாய் ஒரு சிலந்தி ஒன்றிக்கொண்டு இருப்பதை பார்த்தார். அது இருந்த இடத்திலிருந்து அந்த போர்சலைன் வழுக்களைத்தாண்டி வெளிவருவது எப்படி என்று அதற்கு தெரிவதாக நேகலுக்கு தோன்றவில்லை. அதன் மேலேயே அவ்வப்போது மூத்திர மழை பெய்துகொண்டிருந்தாலும் வேறு வழியின்றி அது அந்த அருவருப்பூட்டும் சிறுநீர் கழிக்கும் இடத்திலேயே ஓட்டிக்கொண்டு இருப்பதாகத்தோன்றியது. தன் வேலையை முடித்துக்கொண்ட நேகல், பாவம் அந்தச்சிலந்தி என்று நினைத்தவாறு தன் அலுவலகத்துக்கு திரும்பிவிட்டார். மறுநாள் அதே கழிப்பறைக்கு அவர் திரும்பச்சென்றபோது, அந்த சிலந்தி அதே இடத்தில் அதே பரிதாப தோற்றதுடன் முழித்துக்கொண்டு இருந்தது. அதற்கு எங்கிருந்து உணவு கிடைக்கிறது, எப்படி உயிர் வாழ்கிறது என்று எதுவும் தெரியவில்லை.

Thomas-Nagel-1.jpg

இந்தமுறை மனம் பொறுக்காத நேகல் துடைக்கும் காகிதம் ஒன்றை எடுத்துக்கொண்டு சிலந்தியிடம் சென்று காகிதத்தால் அதை வருட, அது காகிதத்தில் ஜம் என்று ஏறிக்கொண்டது. நேகல் அதை அருகிலிருந்த ஒரு காய்ந்த இடத்தில் இறக்கிவிட்டு, “அந்த மூத்திர மழையிலிருந்து உனக்கு நிரந்தர விடுதலை. குஷியாக எங்காவது போய் பிழைத்துக்கொள்”, என்று சொல்லிவிட்டு, ஒரு நல்ல காரியம் செய்த மனமகிழ்வுடன் தனது அலுவலகத்துக்கு திரும்பினார். அன்று மாலை வீட்டுக்கு கிளம்பும்முன் திரும்ப கழிப்பறையை உபயோகிக்க அவர் சென்றபோது அந்த சிலந்தி அவர் அதை இறக்கி விட்ட அதே இடத்தில் இன்னும் அசையாமல் நின்று கொண்டு இருப்பதை பார்த்து, “இன்னும் எங்கேயும் போக உனக்கு மனசு வரவில்லையோ” என்று கிண்டலடித்துவிட்டு வீட்டுக்கு போய்விட்டார். மறுநாள் அவர் திரும்பி வந்தபோது அந்த சிலந்தி அவர் இறக்கி விட்ட அதே இடத்தில் செத்துக்கிடந்தது. இதைப்பற்றி பின்னால் எழுதிய நேகல், இதை ஒரு சிந்தனைச்சோதனையாக வாசகர்களை பார்க்கச்சொன்னார். நமக்கு எவ்வளவு நிச்சயமாக பட்டாலும், பிறர் வாழ்க்கையில் நாம் தலையிடுவது எப்போதுமே சரியா என்பதுதான் நம் முன் வைக்கப்படும் கேள்வி. அந்தச்சிலந்திக்கு தெரிந்ததெல்லாம் அந்த மூத்திர மழை வாழ்க்கை மட்டும்தானோ? அதற்கு உதவி செய்கிறேன் பேர்வழி என்று எப்படியோ அதற்கு கிடைத்துவந்த சாப்பாட்டைப்பறித்து பட்டினிபோட்டு கொன்று விட்டேனோ என்று கேட்கிறார் நேகல்.

இவ்வளவு மோசமாக நமக்குத்தெரியும் வாழ்விலிருந்து சிலந்தியை “காப்பாற்றுவதே” தவறாக முடியக்கூடும் என்றால், ஒருவரை மதம் மாற்றவைத்து “காப்பாற்றுவது”, பழங்குடி மக்களை “பண்படுத்துவது” எல்லாம் எவ்வளவு தூரம் சரி? கிளி போன்ற சிறு பறவைகளை வீடுகளில் கூண்டில் அடைத்து செல்லப்பிராணிகளாய் வளர்ப்பது சரியா என்ற கேள்வி வரும்போது, அந்த பழக்கத்தை ஆதரிப்பவர்கள் அந்தப்பறவைகள் இப்படி வளர்ப்பதற்காகவே முட்டைகளில் இருந்து பொறிக்கப்பட்டவை, அவற்றிக்கு கூண்டுக்கு வெளியே வாழவே தெரியாது, அவற்றை காப்பாற்றுகிறோம் என்று விடுதலை கொடுத்து வெளியே பறக்கவிட்டால் மறுநாளே ஏதாவதொரு பூனைக்கு மதிய உணவு ஆகிவிடும் என்று வாதிடுகிறார்கள். வெளியே சுதந்திரமாய் பறந்து திரிய வேண்டிய பறவைகளை இப்படி வீடுகளில் கூண்டில் வளர்ப்பதற்காகவே என்று குஞ்சு பொறிப்பதே அவற்றின் வாழ்வில் தேவை இல்லாமல் நாம் தலையிடுவதற்கு சமம் என்று இதற்கு பதில் மறுப்பும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் எல்லாம் எது சரி எது தவறு என்பதற்கு எளிதான விடைகள் அளிப்பது, தத்துவார்தமான பிடிவாதங்கள் இல்லாமல் எல்லா பக்கங்களையும் அலச விரும்புபவர்களுக்கு மிகவும் கடினம்.

இந்த சிந்தனையை வேறு இரு சோதனைகள் தொடர்ந்து இருக்கின்றன. ஒரு சோதனை உலகில் உள்ள அனைவரும் அசைவ உணவை விட்டுவிடுவதாக நினைத்துப்பார்க்க சொல்கிறது. அத்தகைய உலகில் உணவுக்காக வளர்க்கப்படும் பல லட்சக்கணக்கான விலங்குகளுக்கு தேவை இருக்காது என்பதால் அவை வளர்க்கப்படுவது நிறுத்தப்பட்டுவிடும். இதன் விளைவாக பல உயிரினங்கள் சுத்தமாக அழிந்து மறைந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. எனவே ஒருவிதத்தில் பார்த்தால் மனிதர்கள் அசைவ உணவு உண்பதில் மனிதர்களைவிட அதற்காக வளர்க்கப்படும் விலங்குகளுக்கு, தன் இனத்தை நீண்ட காலம் காப்பாற்றிக்கொள்ளும் தேவை காரணமாக அதிக ஆர்வம் இருக்கிறது என்று சிலர் வாதிட்டிருக்கிறார்கள். இது சரியான வாதமாகப்படவில்லை. ஒவ்வொரு உயிரினத்திற்கும் தன் வம்சாவளியை பல நூறு ஆண்டுகளுக்கு தொடரச்செய்யும் டார்வீனிய ஆர்வம் நிச்சயம் உண்டு. ஆனாலும் இந்த வாதம் சரியானால், எதிர் காலத்தில் வாழ்க்கை தரம் உயர நிச்சயம் வழியில்லை என்ற போதும் பல லட்சக்கணக்கான உயிர்களை பிறக்க வைத்து பரிதாபமான வாழ்வை வாழ வைப்பது மேல் என்றாகிறது. இதை ஏற்றுக்கொண்டால், சென்ற இதழில் பார்த்த தள்ளுவண்டி சோதைனையில் பாலத்தில் இருந்து தள்ளி விடுவதற்கென்றே மனிதர்களை வளர்ப்பது கூட சரி என்றல்லவா ஆகிவிடும்?

JohnRawls.jpg

அதெல்லாம் சரியில்லை, மனிதர்களையும் விலங்குகளையும் ஒரே தட்டில் வைத்துப்பார்ப்பது தவறு என்றும் ஒரு வாதம் உண்டு. அந்தக்கருத்து ஜான் ரால்ஸ் என்ற வேதாந்தி அறிமுகப்படுத்திய அடுத்த சோதனைக்கு நம்மை கூட்டிச்செல்கிறது. நீதியின் கோட்பாடு (Theory of Justice) என்ற புத்தகத்தில் எல்லோருக்கும் எந்தக்காலத்திற்கும் உகந்த அரசியலமைப்பையும் சட்டதிட்டங்களையும் உருவாக்குவது எப்படி என்ற கேள்வியை அவர் அலசியிருக்கிறார். இதற்கான ஒரு ஆரம்ப நிலை (Original Position) சிந்தனை சோதனையில் நம் நிகழ்கால வாழ்க்கைத்தரம், சமுதாயத்தில் நமது இடம், நாம் வாழும் நாடு, அங்கே நிலவும் சட்டதிட்டங்கள், அரசியலமைப்பு அனைத்தையும் “அறியாமை முக்காடு” (Veil of Ignorance) ஒன்றை அணிந்துகொண்டு மறந்து விடச்சொல்கிறார். அதன் பின் நமக்கு முன்னே இருக்கும் பல்வேறு அமைப்புகள், சட்டங்களில் இருந்து எது சரி என்று படுகிறதோ அவற்றை புதிதாக அமையும் ஒரு சமுதாயத்திற்காக நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் தேர்வுகள் முடிந்தபின் நீங்கள் எப்படிப்பட்ட மனிதர், அந்த புதிய சமுதாயத்தில் எங்கே வாழ்கிறீர்கள் போன்ற விவரங்கள் உங்களுக்கு சொல்லப்படும்.

உதாரணமாக, போதை மருந்துகளை விற்பவர்கள் அனைவருக்கும் தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்ற ஒரு சட்டத்தை நீங்கள் நியாயமானது என்று தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த மாதிரியான சட்டம் இன்று பல நாடுகளில் நிலவுவது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இந்த தேர்ந்தெடுத்தல் முடிந்தபின், உங்கள் வாழ்வைப்பற்றிய விவரங்கள் உங்களுக்கு தெரிய வரும்போது, நீங்கள் புத்தி ஸ்வாதீனம் இல்லாத ஒருவராகவும், ஒரு முரட்டு போதைப்பொருள் தயாரிக்கும் வில்லனால் அவற்றை விற்க கட்டாயப்படுத்தப்படுபவராகவும் இருக்க நேர்ந்தால்?

நாம் அனைவரும் எப்படி சிந்திக்கிறோம், எந்த மாதிரி சட்டதிட்டங்களை ஆதரிக்கிறோம் என்பதெல்லாம் நமது பின்புலம், நாம் வாழும் சமூகத்தின் பின்னணிச்சூழல் என்ன என்பதைப்பொருத்ததே என்பதை இந்த சிந்தனைச்சோதனை வலியுறுத்துகிறது. இந்தக்காரணத்தால் இங்கிலாந்தின் ராணிக்கும், இந்தியாவில் ஒரு குப்பத்தில் வாழும் மனிதனுக்கும், ஒரு ஆப்பிரிக்க பழங்குடிப்பெண்ணுக்கும் தனித்தனியாக சரி என படும் சட்டதிட்டங்களுக்கும் அரசியல் அமைப்புகளுக்கும் சம்பந்தமே இருக்காது. எனவே நாம் எந்த தேசத்தில் எப்படிப்பட்ட வாழ்வு வாழப்போகிறோம் என்பது பற்றி ஒன்றுமே தெரியாத நிலையில் நாம் தேர்ந்தெடுக்கும் அமைப்பு பொதுவாக எல்லோருக்கும் எல்லா காலங்களிலும் ஒத்துவரும் அமைப்பாக இருக்க வாய்ப்பு அதிகம். தேர்ந்தெடுப்புகளுக்குப்பின் திரை விலக்கப்பட்டு நமது கதாபாத்திரம் நமக்கு காட்டப்படும்போது அது ஒரு மனிதவடிவமாகக்கூட இல்லாமல், ஒரு சாப்பாட்டிற்காக வளர்க்கப்படும் கோழியாகவோ அல்லது (மனிதர்களை பல விதங்களில் ஒத்து இருந்தாலும் ஒரு விலங்கினமாக இருக்கும்) சிம்பன்ஸி குரங்காகவோ இருக்க நேர்ந்தால்? நம்முடைய தேர்வுகளை இத்தகைய வாழ்வு பற்றிய பின்புலங்களும், அவதாரங்களும் எவ்வளவு தூரம் மாற்றிவிடும் என்று எண்ணிப்பாருங்கள். பலமுறை பலவடிவங்களில் வெளிவந்திருக்கும் Planet of the Apes திரைப்படத்தின் மூலக்கதைக்கரு கூட இத்தகைய ஒரு சிந்தனைச்சோதனைதான்.

அடுத்த இதழில் கணினியியல் சம்பந்தமான, அதிலும் குறிப்பாக செயற்கை நுண்ணறிவு பற்றிய சில சோதனைகளைப்பற்றி பார்க்கலாம்.

(தொடரும்)

.- See more at: http://solvanam.com/?p=34677#sthash.b3GRiycC.dpuf

கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒன்று போல் இருக்கிறது. விரைவில் வாசிப்போம்.
 
இங்கே பல பந்திகளைப் பார்க்கும் போது ஒரு ஐடியா தோன்றுகிறது. ஒரு கருத்துச் செறிவுமிக்க மொழி ஒன்றைக் கண்டுபிடித்தால் என்ன என்று.
 
ஒவ்வொரு பந்தியையும் ஒரு சொல்லில் அடக்கும் கருத்துச் செறிவு.
 
பத்து பந்திக்கு பத்துச் சொல்லு.  "கிர்ர்ர்ர்ர்... "  என்று மூளைக்குள் அவ்வளவு விசயமும் ஒரு செக்கனில் ஏறிவிடும்.
  • கருத்துக்கள உறவுகள்

சிந்தனைச் சோதனைகள்! thought experiments என்பதற்கு எவ்வளவு அழகான தமிழ்ப் பதம்! மிக அருமையான இணைப்புக்கு நன்றிகள்! (பின்னேரம் ஆறுதலாக இருந்து வாசிக்கலாம்!)

  • கருத்துக்கள உறவுகள்

நான் இப்படியான அறிவு சார்ந்த கட்டுரைகளை படிப்பதில்லை[அறிவுக்கும்,எனக்கும் எட்டாப் பொருத்தம் என்பது வேற விசயம் :lol:.] ஆனால் இந்த கட்டுரை படிக்க ஆவலை தூண்டுகிறது. எழுத்தளாருக்கு பாராட்டுக்கள்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிந்தனைச் சோதனைகள் - 3

கணினியியலில் சிந்தனைச்சோதனைகள்

சுந்தர் வேதாந்தம்

வேதாந்த அல்லது தினப்படி வாழ்வு சம்பந்தப்பட்ட விசாரணைகளில் இருந்து கொஞ்சம் விலகி, இந்த இதழில் கணினியியல் பற்றிய மூன்று சோதனைகளை பார்க்கலாம்.

டியுரிங் தேர்வு

alan_turing.jpg

இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆலன் டியுரிங் ஒரு பிரிட்டிஷ் கணிதமேதை. நவீன தத்துவார்த்த கணினியியலின் (Theoretical Computer Science) தந்தை என்று பலராலும் கருதப்படுபவர். வெறும் 41 வயதில் காலமான டியுரிங், 1950இல் கணினி இயந்திரங்களின் நுண்ணறிவு (Machine Intelligence) குறித்த ஒரு கட்டுரையை பிரசுரித்தார். கணினிகளால் மனிதர்களைப்போல் சிந்திக்க முடியுமா என்ற கேள்வியை அலசுவது கட்டுரையின் குறிக்கோள். இதற்காக இவர் முன்வைத்த ஒரு சோதனை பின் நாட்களில் டியுரிங் தேர்வு (Turing Test) என்று பெயர் சூட்டப்பட்டு இன்றும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. சுருக்கமாகச்சொன்னால், இந்த சோதனையில் ஒரு அறையில் ஒரு மனிதனும் இன்னொரு அறையில் ஒரு கணினியும் இருக்க, இரண்டு அறைகளுடனும் ஒரு முனையத்தின் (terminal) வழியே உரையாடும் நம்மால் எது மனிதன், எது கணினி என்று கண்டு பிடிக்க முடியாமல் போனால், கணினிகள் மனிதர்களைபோல் இயங்க ஆரம்பித்து விட்டதாக கொள்ளலாம் என்றார் டியுரிங். அதாவது கணினிகள் நம்முடன் தொடர்புகொண்டு ஊடாடுகையில், மனிதர்களுக்கு இருக்கும் குறை நிறைகளை பிரதிபலித்து மனிதநடத்தையிலிருந்து சிறிதும் பிறழ்வது தெரியாமல் அவற்றால் செயல்பட முடிந்தால் அவற்றின் செயற்கையான நுண்ணறிவு (Artificial Intelligence) மனித அறிவுக்கு ஈடாக வளர்ந்து விட்டதாக நாம் கருதலாம் என்பது அவர் கருத்து.

Watson_Jeopardy.jpg

அறுபத்தைந்து வருடங்களுக்கு முன் கணினியியல் வளர்ந்துகொண்டு இருந்த விதத்தைப்பார்த்துவிட்டு, இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் ஏறக்குறைய முப்பது சதவிகித மக்களை தாம் ஊடாடிக்கொண்டு இருப்பது ஒரு சகமனிதருடன் என்று கணினிகளால் நம்ப வைக்க முடியும் என்று டியுரிங் கணித்திருந்தார். இந்த சிந்தனைச்சோதனையில் முதல் இதழில் நாம் பார்த்த சோதனைகளைப்போல் ரத்தம் ஏதும் இல்லாததால், கணினி மென்பொருள் பொறியாளர்கள் இந்த நிலையை அடைய பலவருடங்களாய் முயன்று கொண்டு இருக்கிறார்கள். போனமாதம் வெளிவந்த ஒரு அறிவிப்பு சமீபத்திய ஒரு டியுரிங் தேர்வு முயற்சியில், 30% நடுவர்கள், தாங்கள் உக்ரைன் நாட்டைச்சேர்ந்த ஒரு பதின்மூன்று வயது சிறுவனுடன் உரையாடிக்கொண்டு இருப்பதாக நம்பினார்கள் ஆனால் அவர்கள் ஊடாடிக்கொண்டு இருந்ததென்னவோ ஒரு கணினியுடந்தான் என்கிறது. இந்த அறிவிப்பை வைத்துக்கொண்டு டியுரிங் அறுபது ஆண்டுகளுக்கு முன் அமைத்துக்கொடுத்த ஒரு மைல் கல்லை தாண்டி இருக்கிறோம் என்று சொல்லலாம் என்றாலும், இதுவரை இத்தகைய சாதனைகளை புரிய மென்பொறியாளர்கள் பல்வேறு தகிடுதத்தங்களைத்தான் நம்பி இருக்கிறார்களேயொழிய நிஜமாகவே கணினிகள் நம்மைப்போல இன்னும் யோஜனை செய்ய ஆரம்பிக்கவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் அந்த திசையை நோக்கி விடாமல் பொறியாளர்களும் கணினிகளும் ஓடிக்கொண்டு இருப்பதும் உண்மைதான். ஜியோபர்டி (Jeopardy) என்ற புகழ்பெற்ற அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சில வருடங்களுக்கு முன் IBMன் வாட்சன் என்கிற கணினி இரண்டு மனிதர்களுடன் போட்டியிட்டு, சாதாரண பேச்சு வழக்கு ஆங்கிலத்தில் கேட்கப்படும் கேள்விகளை புரிந்துகொண்டு பதிலளித்து வென்றதை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இல்லாவிட்டால் யூட்யூப் பக்கம் போய் “Jeopardy Watson” என்று ஒரு தேடல் நடத்தி விடுவது உத்தமம். அந்த ஜியோபர்டி முயற்சி, சமீபத்தில் வெளிவந்த Her என்கிற ஹாலிவுட் திரைப்படம் போன்றவை எல்லாவற்றிலும் டியூரிங் தேர்வு இழை பின்னனியில் ஓடிக்கொண்டு இருப்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

டியூரிங் தேர்வுக்கு எதிர்மறையான சில தேவைகளும் வழக்கில் உண்டு. ஒரு வகையான எதிர்மறை டியூரிங் தேர்வு நிஜ மனிதர்கள் கணினிகள் போல் நடித்து, நடுவர்களை தாம் கணினிகளுடன் ஊடாடுவதாக தீர்மானிக்க வைப்பது. இன்னொரு வகை கணினிகள் ஒரு டியூரிங் தேர்வு வழியாக தாங்கள் ஊடாடுவது மனிதர்கள் கூடத்தான் கணினிகளுடன் அல்ல என்று உறுதி செய்து கொள்ள முயல்வது. சொல்வனம் உள்பட பல வலைதளங்கள் வாசகர்கள் கருத்துக்களை பதிவு செய்ய முயலும்போது CAPTCHA புதிர்களுக்கு பதில் அளிக்கக்கோருவதை பார்த்திருப்பீர்கள். கணினிகளுக்கு எளிதில் புரியாத அத்தகைய கேள்விகளை கேட்பதின் மூலம் Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart என்கிற CAPTCHA முறை வழியாக, கருத்துக்களை பதிவு செய்வது மனிதர்கள்தான் என்று வலைதளக் கணினி உறுதி செய்து கொள்கிறது.

ஆலன் டியுரிங் இந்த சிந்தனைத்தேர்வு மட்டுமின்றி, டியுரிங் இயந்திரம் (Turing Machine) என்ற ஒரு சிந்தனைச்சோதனை அமைப்பையும் நமக்கு வழங்கியிருக்கிறார். டியூரிங் தேர்வு பற்றி முன்பே படித்திருந்த நான், இருபத்தைந்து வருடங்களுக்கு முன் முதல் முறையாக டியுரிங் இயந்திரம் பற்றி கேள்விப்பட்டபோது இரண்டையும் போட்டுக்- குழப்பிக்கொண்டு இருந்திருக்கிறேன். தன் பெயர் கொண்ட ஒரு சிந்தனைத்தேர்வுடன் டியுரிங் போனஸ்ஸாக ஒரு சிந்தனை இயந்திரத்தை வேறு கணினியியலுக்கு வழங்கி இருக்கிறார் என்று எனக்கு புரிய ஓரிரு நாட்கள் ஆனது! நவீன கணினியின் அடிப்படை இயக்கங்கள் அனைத்தையும் அலச ஒரு நாடா, அந்த நாடாவில் வெறும் ஒன்று அல்லது பூஜ்யம் என்று எழுத/அழிக்க வல்ல ஒரு அமைப்பு மட்டும்போதும் என்று சொல்லும் இந்த அழகான தத்துவார்த்த டியுரிங் இயந்திர உருவமைப்பு எத்தனையோ ஆராய்ச்சிகளுக்கும் புரிதல்களுக்கும் வழி வகுத்திருக்கிறது. சொல்வனத்தில் கூட இதைப்பற்றி முன்பு ஒரு கட்டுரை வந்திருப்பதாய் ஞாபகம். கணிதம், கணினியியல், சங்கேதகுறியீடுகள், இரண்டாம் உலகப்போரின்போது நாஜி ஜெர்மனிக்கு எதிரான பல கண்டுபிடிப்புகள், மாரத்தான் பந்தயங்கள் என்று பல துறைகளில் புகுந்து விளையாடிய டியுரிங்கின் 41 வருட வாழ்க்கை பலவிதங்களில் வியப்புக்கும் சில விதங்களில் பரிதாபத்துக்கும் உரியது. விருப்பமுள்ளவர்கள் கொஞ்சம் வலை வீசலாம்.

உங்களுக்கு மாண்டரின் தெரியுமா?

ஆங்கிலம் மட்டுமே தெரிந்த நீங்கள் ஒரு அறைக்குள் அமர்ந்திருக்கிறீர்கள். உங்களிடம் ஏகப்பட்ட விதிகளடங்கிய ஒரு பெரிய புத்தகம், தேவையான அளவு காகிதம், பேனா எல்லாம் இருக்கிறது. அறைக்கு வெளியிலிருந்து சீன மொழி நன்கு தெரிந்த ஒருவர் மாண்டரின் என்கிற சீன மொழியில் ஒரு கதையையும் அந்த கதையை பற்றிய சில கேள்விகளையும் ஒரு காகிதத்தில் எழுதியோ அல்லது ஒரு கணினி மூலமாகவோ உங்களுக்கு அனுப்புகிறார். உங்களுக்கு சுத்தமாய் மாண்டரின் தெரியாது என்றாலும், ஆங்கிலத்தில் அந்தப்புத்தகத்தில் எழுதப்பட்டு இருக்கும் விதிகளை பார்க்கிறீர்கள். அதில் இந்த ஜிலேபி வடிவத்துக்கு அப்புறம் இந்த பூச்சி வடிவம் உள்ளே வந்த கேள்வியில் இருந்தால், நீங்கள் இந்த தேன்குழல் வடிவத்தை வரையவும் போன்ற விலாவரியான விதிகளும் குறிப்புகளும் இருக்கின்றன. அந்த விதிகளை பொறுமையாக கடைப்பிடித்து நீங்கள் ஒரு காகிதத்தில் மாண்டரின் எழுத்துக்களை படங்களாக வரைந்து வெளியே காத்திருக்கும் சீன மொழிக்காரருக்கு அனுப்பி வைக்கிறீர்கள். அதைப்படித்த அவர் கேள்விகளுக்கு பதில்கள் சரியாக தரப்பட்டு இருக்கிறது என்று சொல்கிறார், சில பதில்களில் உள்ள தத்துவார்தமான சில விளக்கங்கள் மிக அருமை. எனவே நீங்கள் சீன மொழியில் ஒரு விற்பன்னர் என்று சான்றிதழே வழங்குகிறார். இந்தக்கட்டத்தில் உங்களுக்கு மாண்டரின் தெரியும் என்று நாம் எடுத்துக்கொள்ளலாமா?

cr_process.jpg

C_Instructions.jpg

இதென்ன அசட்டுக்கேள்வி, நான் செய்ததெல்லாம் அந்த புத்தகத்தில் இருந்த விதிகளை செயல்படுத்தியது மட்டும்தானே என்று நீங்கள் பதில் சொன்னால், நீங்கள் வலுவற்ற செயற்கை நுண்ணறிவு (Weak AI) மட்டும்தான் கணினிகளிடையே சாத்தியம் என்று சொல்லும் விஞ்ஞானிகளின் கட்சி. அதற்கு பதில் நான் எப்படி விடை சொன்னால் என்ன, சீன மொழி தெரிந்த ஒருவரால் செய்யமுடியும் அத்தனை விஷயங்களையும் என்னால் அந்த விலாவரி விதிகள் அடங்கிய புத்தகத்தை வைத்துக்கொண்டு செய்ய முடிகிறதென்றால் எனக்கு சீன மொழி தெரிகிறது என்றுதான் அர்த்தம் என்று ஒரே அடியாய் அடித்தீர்களானால், நீங்கள் வலுவான செயற்கை நுண்ணறிவு (Strong AI) கட்சியை சேர்ந்தவர் என்று அர்த்தம்.

John-Searle.jpg

1980 வாக்கில் இந்த சிந்தனைச்சோதனையை பரிந்துரைத்த ஜான் சேர்ள் (John Searle) முதல் கட்சியை சேர்ந்தவர். அந்தக்கட்சி விஞ்ஞானிகள் கணினிகளை பல்வேறு புத்திசாலித்தனமான வேலைகளை செய்ய வைக்கலாம்; அப்படி செய்ய வைக்கும்போது அவை மனிதர்கள் போலவே செயல்படலாம், மனிதர்களால் அப்படியே உணரவும் படலாம். அந்த நிலை கணினிகள் மனித மூளைக்கும் மனதுக்கும் ஒரு நல்ல மாதிரியாக (model) இருப்பதை குறிக்கிறது. அவ்வளவுதான். அதைத்தாண்டி அவையே மனிதர்களைப்போல் தான் என்கிற ஸ்மரணையை பெற்று விட்டதாக எண்ணுவது முற்றிலும் தவறு என்று வாதிட்டனர். இவர்கள் கருத்துப்படி, புத்திசாலித்தனமான நிரலிகளை உபயோகித்து கணினிகளால் டியுரிங் தேர்வைத்தாண்டிவிட முடியும். ஆனாலும் அந்த அறைக்குள் உட்கார்ந்திருப்பவருக்கு உண்மையில் சீன மொழி தெரியாததைப்போல், கணினிகளும் ஆத்மார்த்தமாக எதையும் புரிந்து கொள்வதில்லை. அவை இயந்திரத்தனமாக சொன்ன வேலைகளைச்செய்வதாக மட்டும்தான் கொள்ளவேண்டும் என்று இவர்கள் அடித்துக்கூறினார்கள். எதிர் கட்சியினர் அந்த அளவுக்கு கணினிகள் மனிதர்களுக்கு இணையாக செயல்பட முடிகிற பட்சத்தில், அவையும் தான் என்ற பிரக்ஞை உள்ள மனித மனதுக்கு இணையானதுதான் என்று பிரதிவாதம் தொடுத்தனர். மனித மூளையும் மனமும் இதே போல சில பல ரசாயன மாற்றங்களுக்கு உட்பட்டு செயல் படுவதுதான், அதற்கு மேல் ஆத்மா, இறைவன் கொடுத்த ஸ்பெஷல் வரங்கள் எல்லாம் சும்மா கதை என்பது அவர்கள் கருத்து. ஆரம்பத்தில் சேர்ள் இந்த சோதனையை முன் வைத்தபோது இது கணினிகளின் செயற்கை நுண்ணறிவை அளப்பதற்காக வடிவமைக்கப்பட்டது என்றாலும், பின் நாட்களில் மொழியியல் வல்லுனர்கள், தத்துவவாதிகள், மதவாதிகள், உயிரியல் மற்றும் மருத்துவ நிபுணர்கள் என்று பலரும் இந்த சோதனையால் ஈர்க்கப்பட்டு விவாத களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

சேர்ளை மறுத்தவர்கள் குறிப்பாக மூன்று விதமான கருத்துகளை முன் வைக்கிறார்கள்.

1. அந்த அறைக்குள் உட்கார்ந்திருக்கும் மனிதனுக்கு சீன மொழி புரியாமல் இருக்கலாம். ஆனால் அங்கே நாம் பார்க்க வேண்டியது அந்த மனிதனை மட்டும் அல்ல. அந்த மனிதன், அந்த விதிப்புத்தகம், கேள்வி உள்ளே வரும் விதம், பதில் வெளியே போகும் விதம் எல்லாம் கலந்த அந்த பூரா அறையையும், அறைக்குள் இருக்கும் அத்தனை விஷயங்களையும் சேர்த்து ஒரு சிஸ்டமாக பார்க்க வேண்டும். மொத்தமாக அந்த அமைப்புக்கு சீன மொழி நிச்சயம் புரிகிறது. எனவே அங்கே புரிதல் எதுவுமே நடக்கவில்லை என்று நினைப்பது தவறு.

2. இந்த சோதனையில் விவரிக்கப்பட்ட அமைப்பில் சீன மொழியை முழுதாக புரிந்து கொள்ளுதல் நிகழவில்லைதான். ஆனால் இது வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட ஒரு அரைகுறை அமைப்பு. இதைக்கொஞ்சம் மாற்றினால், உதாரணமாக தேவையான காமிரா, அந்த விதிப்புத்தகத்தை விழுங்கிய கணினி எல்லாம் கொண்ட முழு ரோபாட் ஒன்று இருந்து அது பதில்களை கொடுத்தால், அங்கே அந்த ரோபாட்டுக்கு சீன மொழி புரிவதாகத்தான் கொள்ள வேண்டியிருக்கும்.

3. மூன்றாவது வாதம் கொஞ்சம் கூட இடத்தை விட்டுக்கொடுப்பதில்லை. இவர்கள் அங்கே நடப்பது புரிதல்தான், அது புரிதல் இல்லை என்றால், இது “புரிதல்” என்றால் என்ன என்பதே நமக்கு இன்னும் சரியாக தெரியவராததால் வரும் குழப்பம் என்று வாதிடுகிறார்கள். நமது புரிதல் பற்றிய உள்ளுணர்வு சரியாகும்போது நமக்கு இது இன்னும் ஒழுங்காக புரியும். நாம் இன்னும் அந்த நிலையை அடையவில்லை என்பது அவர்கள் தரும் விளக்கம்!

கணினியியலில் இருந்து ஆரம்பித்து எதை எதையெல்லாம் இந்த கற்பனை சோதனை தொட்டிருக்கிறது பாருங்கள்!

சீன அறைக்கு பதில் சீன நாட்டு சோதனை

Ned_Block.jpg

மனித மூளை செயல்படுவது என்பதே மூளைக்குள் இருக்கும் நியூரான்கள் எந்த ஒரு நிலைமைக்கும் ஏற்றாற்போல் ஒன்றை ஒன்று கிளப்பிவிட்டு விழித்தெழ வைக்க அதனாலேயே மூளையில் உண்டாகும் பல்வேறு நிலைகள்தான் என்பது நரம்பியல் நிபுணர்களின் கருத்து. சேர்ள் பரிந்துரைத்த சோதனையில் நாம் அலசுவது ஒரே ஒரு மனித மூளையின் செயல்பாட்டை பற்றி மட்டும்தான். அதற்கு பதில் இன்னொரு சிந்தனையை மேற்கொள்வோம். இதன்படி ஒரு சாதாரண மனிதமூளையில் நூறு கோடி நியூரான்கள் இருப்பதாகக்கொள்வோம். துயரம் என்ற நிலைமை வரும்போது, இந்த நூறு கோடி நியூரான்களில் குறிப்பிட்ட அறுபது கோடி நியூரான்கள் ஒரு கோடியில் இருந்து ஆரம்பித்து ஒன்றை ஒன்று உசுப்பி விழித்தெழ வைப்பதாக வைத்துக்கொள்வோம். இப்படி அறுபது கோடி நியூரான்களும் விழித்தெழுந்து ஒரு வித தொடர்பு நிலையை அடைந்தவுடன் மனிதமனம் துயரத்தை உணர்கிறது என்றும் வைத்துக்கொள்வோம். இப்போது ஒரு மனித மூளையில் உள்ள நூறு கோடி நியூரான்களை சீனாவின் மக்கள்தொகைக்கு இணையாக கொண்டு, சீனாவின் ஒரு கோடியில் ஆரம்பித்து அறுபது கோடிப்பேரை தொலைபேசி மூலம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளச்செய்வோம். ஒருவருடைய தொலைபேசி ஒலிக்கும்போது, அதை அவர் எடுத்து பெரிதாக ஏதும் பேசக்கூட வேண்டாம். அவருக்கு அந்த அழைப்பு வந்தவுடன் அவருக்குக்கொடுக்கப்பட்டு இருக்கும் எண்களுக்கு அவர் தொலைபேசி அழைப்புக்களை செய்யவேண்டும். அவ்வளவுதான். இப்படியாக ஒரு மூளைக்குள் ஒரு குறிப்பிட்ட தொடர்முறையில் நியூரான்கள் விழித்தெழும் அதே வரிசையில் நாம் அறுபது கோடி சீனர்களை தொலைபேசிமூலம் விழித்தெழவைக்கிறோம்.

மூளைக்குள் இருக்கும் தனித்தனி நியூரான்கள் ஒவ்வொன்றும் ஒரு பெரிய இயந்திரத்தில் இருக்கும் சிறு பற்சக்கரங்களைப்போல் என்று கொண்டால், தனித்தனி சக்கரங்களுக்கு மொத்தமாக இயந்திரம் என்ன செய்கிறது என்று தெரியாது என்பதைப்போல், நியூரான்களுக்கும் சரி, தனியொரு சீனருக்கும் சரி மொத்தத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருக்கலாம். ஆனால் கடைசியில் அந்த மனிதமனம் அறுபது கோடி நியூரான்கள் விழித்தெழும்போது துயரத்தில் ஆள்வதுபோல், அந்த அறுபது கோடி தொலைபேசி அழைப்புகளும் சரியான வரிசைப்படி செய்யப்பட்ட உடன் சீனா என்ற முழு தேசமும் துயரத்தில் இருப்பதாக கொள்ளலாமா? 1978 வாக்கில் இந்த கேள்வியை எழுப்பியவர் நியூயார்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நெட் பிளாக் (Ned Block) என்ற தத்துவ பேராசிரியர். இந்த சிந்தனை சோதனை மூலம் இவர் சொல்லவருவது மனிதர்களின் மனசாட்சி, தான் என்கிற பிரக்ஞை எல்லாமே ஒரு மாயை என்பதுதான். இந்துமத கோட்பாடுகளில் எங்கேயோ கேள்விப்பட்டது போல் இல்லை?

(தொடரும்)

.- See more at: http://solvanam.com/?p=34932#sthash.LfwF5WNF.dpuf

வெறும் விதிகளை வளங்கி அதற்கேற்ப செயற்படுவதை செயற்கை அறிவாக தற்போது ஏற்றுக் கொள்வதில்லை.  
 
கணனிகள் தாமாக கற்பதையும் அதன் மூலம் தம் அறிவை வளர்ப்பதையும், பின் அந்த அறிவைப் பயன் படுத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதையும் சேர்த்தே செயற்கை அறிவு தற்போது வரவிலக்கணப்படுத்தப் படுகிறது. 
 
உயர் விலங்குகளின் மூளைக் கட்டமைப்பிற்கேற்ப கணனி மூளையும் கட்டமைக்கப் படுகிறது. இதை Neural Networks என்பார்கள்.
 
விலங்குகள் மனிதர்களிடம் இருக்கும் "சுயம்" [ Self ] கணனிகளுக்கும் ஏற்படுத்தலாம். மனிதர்களிடம் இருக்கும் சுயம் அடிப்படை தேவைகளினால் ஏற்படுகிறது.
 
"எனக்குப் பசிக்கிறது" (நான்)
"எனக்குத் தாகம்" (நான்)
 
இதுபோல் கணனிக்கும் அதன் மின் சேமிப்பின் அளவு குறையும் போது
 
"எனக்கு மின் தேவை" என்பது போன்ற அடிப்படைத் தேவைகளுக்கான உணரி சமிக்ஞ்ஞைகளுக்கு [ Sensor signals] நடவடிக்கை எடுக்கும் சுற்று [ Response circuit / Response thread ] ஒன்று இயங்கும் வரையும் இந்த "நான்" என்பது இருக்கும்.
 
 
ஆகவே "சுயம்" பொய்.  
  • 3 weeks later...

அன்புள்ள கிருபன்,

சுவையான பொருள் செறிந்த கட்டுரைகளை தாங்கள் பிற யாழ் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு எனது மனமார்ந்த நன்றி. 

 

சொல்வனம் இணைய இதழில் எழுதும் என்னைப்போன்றவர்கள் வணிக, பொருளாதார எதிர்பார்ப்புகள் எதுவும் இன்றி, பொதுவாக அறிவைப்பரப்பும் ஒரு சமூக சேவை போல்தான் இலவசமாக கட்டுரைகளை எழுதி வருகிறோம். எங்களை தொடர்ந்து எழுத ஊக்குவிக்கும் ஒரே பரிசு வாசகர்களின் பதில்கள் மற்றும் எத்தனை பேர் கட்டுரைகளை படிக்கிறார்கள் என்ற புள்ளி விவரங்கள் மட்டும்தான். சொல்வனம் இணையஇதழும் விளம்பர வருவாய் எதுவும் இன்றி அதன் ஆசிரியர் குழுவின் சொந்த செலவில் நடத்தப்படுகிறது. எனவே, முழு கட்டுரைகளையும் இங்கே copy/paste செய்வதற்கு பதில் சுவையான கட்டுரைகளின் இணைப்புகளை மட்டும் இங்கே வழங்கி, யாழ் வாசகர்களை சொல்வனம் இணையத்திற்கு அனுப்ப இயலுமா?

 

அதே போல் இங்கே வாசகர்கள் எழுதும் கருத்துகளை நீங்கள் சொல்வனம் இணையதளத்தில் பதிவும் செய்தீர்களானால் அது சொல்வனம் ஆசிரியர் குழுவுக்கும் கட்டுரை ஆசிரியர்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும். 

 

நன்றி

சுந்தர் வேதாந்தம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மதிப்புக்குரிய சுந்தர் வேதாந்தம் அவர்களே,

சொல்வனம் இணைய இதழின் தீவிர வாசகனாக இருந்துவருகின்றேன். அதில் வரும் விஞ்ஞான, கணித, இலக்கிய ஆக்கங்களை தவறாமல் படிப்பதுண்டு. சிந்தனைச் சோதனைகள் தொடர் தேடல் உள்ள வாசகர்களுக்கு மிகவும் பயன்தரும் கட்டுரைகளாகும். அவற்றினை எதுவித வருவாயுமின்றி சேவை மனப்பான்மையுடன் தருவதற்கு மிக்க நன்றிகள். யாழ் இணையத்தின் வாசகர்களும் இவ்வகையான அறிவுசார்ந்த ஆக்கங்களைப் படித்துப் பயன்பெறுவார்கள் என்று மாத்திரமே வெட்டி ஒட்டுவதுண்டு.

யாழ் கள விதிகளின்படி ஆக்கங்களை முழுமையாக இணைக்கவேண்டும் என்பதால் இணைப்பை மாத்திரம் கொடுப்பது சாத்தியமல்ல என்றே கருதுகின்றேன். எனவே இதுபற்றி யாழ் நிர்வாகத்தில் உள்ளவர்கள் தெளிவுபடுத்தும்வரை புதிய கட்டுரைகளை இணைப்பதைத் தவிர்த்துக்கொள்கின்றேன்.

நட்புடன்

கிருபன்

உடனே பதில் அளித்தமைக்கும், உங்கள் ஆதரவுக்கும் நன்றி கிருபன்.

எல்லா கட்டுரைகளும் ஒரு சேவையாகவே எழுதப்படுவதால், எவ்வளவு பேர் படிக்கிறார்களோ அவ்வளவு தூரம் .கட்டுரை ஆசிரியரின் உழைப்பின் பயன் பெருகுகிறது. எனவே தங்களைப்போன்ற வாசகர்கள் தங்கள் நண்பர்கள் இடையே செய்யும் பகிர்வுகள் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

 

யாழ் இணையதள நிர்வாகத்தினரை இணைப்புகளை வழங்க அனுமதிக்கும்படியும், யாழ் வாசகர்களை இங்கே மட்டுமின்றி சொல்வனம் இணையதளத்திலும் கருத்துகளை பதிவு செய்து கட்டுரை ஆசிரியர்களை ஊக்குவிக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன்.

 

அன்புடன்

சுந்தர் வேதாந்தம்

வணக்கம் சுந்தர் வேதாந்தம்,

யாழ் இணையத்தில் உறுப்பினராக இணைந்ததையிட்டு மகிழ்வடைகின்றோம்.

சொல்வனம் இணைய இதழ் யாழ் இணையத்தைப் போன்று வணிக நோக்கற்று அறிவியல், இலக்கிய ஆக்கங்களை ஒரு சமூகசேவை நோக்கத்துடன் பிரசுரிப்பதால், சொல்வன ஆக்கங்களை ஊக்குவிப்பதற்கு யாழ் நிர்வாகம் உதவ முன்வந்துள்ளது. இதன்படி யாழ் கருத்துக்களத்தில் உள்ள நூற்றோட்டம் பகுதியில் திரி ஒன்றை ஆரம்பித்து புதிய இதழ்களைப் பற்றிய விபரங்களைப் பதிய தங்களையும் சொல்வனத்தைத் தொடர்ந்து வாசிக்கும் கிருபன் போன்ற கள உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கின்றோம். இதேவேளை இலாப நோக்கற்று உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாய் விளங்கும் யாழ் இணையத்தில் இடப்படும் பதில்களின் நேரடி இணைப்பைக் கொடுத்து சொல்வனத்தில் தாங்கள் இணைக்கும்போது யாழ் களமும் ஊக்குவிக்கப்படும் என்று நம்புகின்றோம்.

நன்றி

நியானி (யாழ் நிர்வாகம் சார்பாக)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.