Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேசாத பேச்சல்லாம்.

Featured Replies

கடந்த மாதம், மாமல்லபுரம் உணவகத்தில் ஐரோப்பியப் பெண் கேத்தரீனைச் சந்தித்தேன்.

அவள் இந்தியா வந்து அன்றோடு 46-வது நாள். 24 வயதில் கேத்தரீன் பயணிக்கும் ஒன்பதாவது நாடு இந்தியா. தன் முதல் பயணத்தைப் பிரியமான அம்மா இறந்த அடுத்த வாரத்தில்,

 

 

அந்தத் துயரை மறப்பதற்காகத் தொடங்கியிருந்தாள். அடுத்து அடுத்து பயணிக்க ஒரு துயரம் அவளுக்கு வேண்டியிருக்கவில்லை.

'நமக்கு முன்னால் இவ்வளவு பெரிய உலகம் இருக்கிறப்போ, நமக்குனு தனியா என்ன துக்கம் இருக்கு?’

 

 

 

என்று இட்லி - சாம்பாரை ரசித்து, ருசித்துச் சாப்பிட்டுக்கொண்டே கேத்தரீன் கேட்டபோது, ஒரு நாடோடிக்கு மட்டுமே அந்தப் பரந்த மனம் வாய்க்கும் எனத் தோன்றியது. இத்தனைக்கும் கேத்தரீன் ஒன்றும் கோடீஸ்வரி அல்ல.

 

 

போர்ச்சுக்கல் நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு இடம்பெயர்ந்து, மிக சாதாரண வேலைகளில் அதிக உழைப்பைக் கொட்டிச் சம்பாதித்த பணத்தில் பயணம் மேற்கொள்பவள்!

 

கேத்தரீன் முதன்முதலில் நாடுவிட்டு நாடு தாண்டிய பயணத்துக்கு ஷோல்டர் பேக் மாட்டிக் கிளம்பியபோது, அவளுக்கு வயது 18.

அந்த வயதில் நான் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்குப் படிக்கக் கிளம்பிய இரண்டு மணி நேரப் பயணம்தான், அப்போதைய என் அதிதூரப் பயணம்.

 

 

 

அதிலும் வடசேரிக்கு முன்னால் பேருந்து பழுதாகி, 'எப்படியாவது போய்க்கோங்க...’ என நடத்துனர் சொன்னபோது, அங்கேயே நின்று அழும் அளவுக்குத் தைரியசாலியாக இருந்தேன்.

 

 

அட, நானாவது திருநெல்வேலி வரை தனியாகப் பயணித்தேன். என் தோழிகள் பலர், 'அந்த ஊரு எங்க இருக்கு. நெம்ப தூரமோ?’ எனக் கேட்கும் அளவில்தான் இருந்தார்கள். '

 

ஒரு டூர் போயிட்டு வர்றேன்’ எனத் தனியாகவோ, நண்பர்களுடனோ கிளம்பிச்சென்று பயணத்தைத் துளித்துளியாகப் பருகும் சௌகர்யம் ஆண்களுக்கு இங்கே அதிகம் உண்டு. ஆனால், பெண்களுக்கு?

 

 

கன்னியாகுமரியை மட்டும் சுற்றிப் பார்க்க கிளம்பினாலே, ஒரு மாதம் முழுக்கப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

கடற்கரை, மலை, தண்ணீர்... என அத்தனை விஷயங்கள் கொட்டிக்கிடக்கும் ஊர் அது. ஆனால், அந்த ஊரில் இருக்கும் வரை அந்த அழகை எல்லாம் நான் அறிந்திருக்கவே இல்லை.

 

அதிலும், தமிழகப் பெண்களின் பயண அனுபவங்கள் பெரும்பாலும் கோயில் வழிபாடு சார்ந்தவையாக இருக்கும்.

காலையில் சென்று மாலையில் திரும்பும் மண்டைக்காடு பயணத்திலும்கூட கடலில் கொஞ்ச நேரம் கால் நனைப்பதற்கு மல்லுக்கட்ட வேண்டியிருக்கும்.

 

 

கொழுக்கட்டை அவிப்பது, சமைக்க அடுப்பு தேடுவது, உட்கார்ந்து சாப்பிடத் தோதாக இடம் தேடுவது... இவைதான் பெண்களுக்கு ஒருநாள் பயணத்தின்போது பெரும் நேரத்தை எடுத்துக்கொள்பவை.

 

 

திருமணத்துக்கு முன்பு அம்மா, அப்பா எனக் குடும்பத்தோடு கோயிலுக்கோ, உறவினர் வீடுகளுக்கோ சென்றது, திருமணத்துக்குப் பிறகு கணவன், குழந்தைகளோடு சுற்றுலா செல்வது... இவைதான் பெண்களின் பயணங்கள்.

 

 

 

வேலை விஷயமாக நான்கைந்து முறை கோவையோ, சென்னையோ சென்றதை எல்லாம் பயணப் பட்டியலில் சேர்க்கவே முடியாது!

பயணம் என்பது பூமியின் அழகை, வடிவத்தை, அதன் அந்தரங்கத்தை மிக அருகில் நின்று, உணர்ந்து ரசிப்பது.

 

தினசரி வேலைகளில் இருந்து மனதுக்கு விடுமுறை அளிக்கும் செயல் அது. ஆனால், அப்படியோர் அனுபவம் பெண்களுக்குப் பெரும்பாலும் வாய்ப்பதே இல்லை.

 

எழுத்தாளர் அம்பையின் கதை ஒன்றில், கூட்டுக் குடும்பத்தின் பெண்கள் வாழ்க்கை விரிவாகப் பேசப்பட்டிருக்கும்.

மிகச் சிறியதாக, இருட்டாக, காலில் எப்போதும் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும் சமையலறையின் ஜன்னலுக்கு வெளியே ஒரு மலை தெரியும். 

 

துணி காயப்போடும் கயிறு அதை மறைப்பதால்,அதை வேறு இடத்தில் கட்ட வேண்டும் என்று அந்த வீட்டின் மருமகள் சொல்ல, மறுநாள் அங்கே மேலும் ஒரு கயிறு கட்டப்படும்.

 

காலை முதல் சமையல், குழந்தைகள் என வீட்டுக்குள்ளேயே வெந்துகொண்டிருக்கும் பெண்களுக்காக,

பக்கத்திலுள்ள ஓர் ஏரிக்கு ஒருநாள் சுற்றுலா செல்லலாம் என வேறு கலாசாரத்தில் இருந்து வந்த இளைய மருமகள் முடிவு செய்ய, பெரியவர்கள் ஆமோதிப்பார்கள்.

 

குறிப்பிட்ட நாள் அன்று அதிகாலை 3 மணிக்கு அந்தக் குடும்பத்தின் பெண்கள் எழுந்து சமைக்க ஆரம்பிப்பார்கள். வீட்டில் எத்தனை பேர், அவர்களுக்கு எத்தனை சப்பாத்தி, எத்தனை பூரி, அப்புறம் ஸ்நாக்ஸ், குடிக்க தண்ணீர், குழந்தைகளுக்குப் பால் புட்டிகள், மாற்றுத் துணிமணிகள்... எனப் பரபரப்பாகச் சுழல்வார்கள்.

 

சுற்றுலா போகிற இடத்தில், மாலை சூடாகச் சாப்பிட பக்கோடா மாவு, எண்ணெய், ஸ்டவ் எடுத்துச் சென்று அங்கே பக்கோடா பொரித்துக்கொண்டிருப்பார்கள்.

 

 

 

இடையிடையே பசிக்காக அழும் குழந்தைகள், சிறுநீர் கழிக்கும் குழந்தைகள், பெரியவர்களின் தேவைகள்... எனத் தனி கலாட்டா வேறு. குடும்பத்தோடு போகும் 'இன்பச் சுற்றுலா’க்களில் பெண்கள் 'என்ஜாய்’ செய்வது இப்படித்தான்!

 

 

அதுவும் தென்தமிழ்நாட்டு மகளிருக்கு வருடம் ஒருமுறை குற்றாலச் சாரலை அனுபவிக்கச் செல்வதுதான் அதிகபட்ச டூர்.

 

சாரலை 'அனுபவிப்பது’ என்பது வெறும் பெயருக்குத்தான். ஆண்களும் குழந்தைகளும் அருவிக்குள் மறைந்து ஆனந்தமாகக் குளிக்க, 'யாராவது பார்க்கிறார்களா?’ எனக் கவனித்தபடி அருவிக்குள் செல்லும் பெண்கள், ஐந்து நிமிடங்களில் வெளியேறிவிடுவார்கள்.

 

 

குடும்பத்தினர் கழற்றிப்போட்ட ஆடைகளைச் சேகரிப்பது, கொண்டுவந்த பைகளுக்குக் காவல் இருப்பது, சோப்பு, ஷாம்பு தருவது, குளித்துவந்தவுடன் 'பசிக்குது’ என்பவர்களுக்கு சோறு, இட்லி தருவது, அறைக்கு வந்ததும் ஈரத் துணிகளை அலசிக் காயப்போடுவது... என எல்லாவற்றையும் செய்வது பெண்கள்தான்.

 

 

இதில் எங்கே இருந்து சாரலைக் கவனிக்க முடியும்? அருவித் தண்ணீர் வழிந்தோடும் இடுக்குகளில் உட்கார்ந்து சோப்பு போட்டுத் துணி துவைத்துக்கொண்டிருக்கும் பெண்களிடம், 'இந்த டிரிப்பை எப்படி என்ஜாய் பண்ணீங்க?’ என்று சேனல்காரர்கள் மைக் நீட்டினால்,

 

 

'பிரமாதமான’ வார்த்தைகளில் பதில் சொல்வார்கள். அப்படியான நீண்ட பயணம் முடிந்து வீட்டுக்குள் நுழைந்ததும், அசதியில் கிடைக்கிற இடத்தில் நாங்கள் எல்லோரும் படுத்துக்கொண்டு, 'அம்மா டீ’ என்று சொல்லும்போதுதான் 'அம்மா’க்கள் பயணத்தை வெறுக்கிறார்கள் எனத் தோன்றும். '

 

 

அம்மா’க்கள் மாத்திரம் அல்ல... எல்லா பெண்களுமே.

பல பெண்கள் இந்தப் பயண முஸ்தீபுகளில் இருந்து தப்பிக்கவே, மொத்தக் குடும்பமும் சுற்றுலா செல்லும்போது, 'நான் வரலை’ என்று வீட்டிலேயே தங்கி, வழக்கமான வேலைகளில் இருந்து விடுப்பு எடுத்து, தனிமையை அனுபவிக்கிறார்களோ எனத் தோன்றுகிறது!

பயணத்தின் வேலை நெருக்கடிகள் பயணம் மீது சலிப்பு தருவது ஒருபுறம் இருக்க, 'நம்மூர்ல பொண்ணுங்க தனியா டிராவல் பண்ண பாதுகாப்பு இருக்கா... சொல்லுங்க?’ என்ற கேள்வியும் பெண்களின் பயணத்துக்கு ஒரு முட்டுக்கட்டை.

 

 

 

ஒரு பெண் தனியாகவோ, தன் தோழிகள், குழந்தைகளுடனோ பயணிக்கும் அளவுக்கு நம் ஊர்ப் பயணங்கள் பாதுகாப்பானவை அல்ல.

பேருந்து, ரயில், சாலை, ஹோட்டல்... என எங்கும் வெறிக்க வெறிக்கப் பார்க்கும் ஒரு பார்வை போதும், நம் மொத்த மகிழ்ச்சியையும் காலி செய்ய!

 

 

குஷ்பு, நதியா போன்ற நடிகைகள் குடும்பத்தோடு வெளிநாடு சென்றுவிட்டு வந்து ஃபேஸ்புக்கில் பதியும் புகைப்படங்களும், அவர்களின் மகிழ்ச்சியும் அவர்களுக்கு மட்டுமே சாத்தியமானவை.

 

 

விருதுநகரில் இருந்து தனியாக ஏற்காடு செல்லும் ஒரு பெண், அதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோடையில், மகளோடு ஏற்காடு சென்று, அறை ஒன்றை எடுத்து உள்ளே நுழைந்தேன்.

 

 

 

தண்ணீர் எடுத்துவரச் சென்ற ஹோட்டல் பையன் வருவதற்காக அறைக் கதவை திறந்துவைத்த குறுகிய நேரத்தில், சாமியார்போல் உடை அணிந்திருந்த ஒருவன் எங்கள் அறை வாசலை அடைத்துக்கொண்டு நின்றான்.

 

 

 

மகள் பயத்தில் அலறினாள். 'வெளியே போ’ என்ற அதட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் அவன் மசியவே இல்லை! எங்களையும் வெளியேறவிடாமல், அறை வாசலில் கை வைத்து மறித்தபடி, கன்னடத்திலோ, தெலுங்கிலோ போனில் பேசிக்கொண்டிருந்தான்.

அவனது கண்கள் அசையாமல் எங்களை வெறித்தபடியே இருந்தன.

 

 

அடுத்த நொடியே அவனை மூர்க்கமாகத் தள்ளிவிட்டு மகளோடு ஓடிச்சென்று ரிசப்ஷனில் மூச்சிறைக்க நின்றேன்.

ஏதோ அரசியல்வாதியின் செல்வாக்கில் தங்கியிருக்கும் சாமியார் என்றும், தங்களால் அவரை வெளியேற்ற முடியவில்லை என்றும் மன்னிப்புக் கேட்டு, வேறு தளத்தில் அறை மாற்றித் தந்தது ஹோட்டல் நிர்வாகம்!

 

 

இப்படியான தனிமைப் பயண அவஸ்தைகள் பல பெண்களுக்கும் இருக்கும். மூடிய அறையின் பாத்ரூமில் இருந்து வெளியே வந்து ஒருவன் பயமுறுத்திய அனுபவம் பிரேமாவுக்கு இருக்கிறது.

 

 

சென்னையில் இருந்து ஹாங்காங் செல்லும் வழியில் கனெக்ட்டிங் விமானம் தாமதமாகி, இலங்கையில் ஒருநாள் தங்கவேண்டியிருந்த அனுபவத்தை தோழி சுதா சொன்னபோது, பகீர் என இருந்தது.

 

அறைக் கதவைத் தட்டியபடி இரவு முழுவதும் ஹோட்டல் ஊழியன் ஒருவன் அவளைத் தொந்தரவு செய்திருக்கிறான்.

 

 

நிர்வாகத்திடம் புகார் கொடுத்தால், அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை.

வேறு சாவி போட்டுத் திறந்து அவன் உள்ளே வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில், சாவியை அதன் துவாரத்திலேயே பொருத்தி, அதையே பிடித்தபடி இரவு முழுவதும் அறைக் கதவுக்கு அருகே அழுதபடி நின்றிருக்கிறாள்.

 

 

'இதுக்குத்தான் பொண்ணுங்க டிராவல் பண்ண வேண்டாம். வீட்லயே இருங்கனு சொல்றோம்!’ என்ற 'அக்கறை’ பதில் உடனே கிடைக்கும்.

 

அப்படியென்றால், கணவனை அடித்துப்போட்டுவிட்டு மனைவியை இழுத்துச் சென்ற சம்பவம், வீடு புகுந்து பெண்களைத் தாக்கிய சம்பவங்களுக்கு என்ன உபாயம் சொல்வீர்கள்... 'இதுக்குத்தான் புருஷனோட போகாதனு சொன்னோம்’, 'வீட்ல ஏன் தனியா இருக்கீங்க?’ என்றா?!

 

 

நாகர்கோவிலில் இரவு 8 மணிக்கு ஒரு பெண் தனியாகப் பேருந்துக்காகக் காத்திருந்தால் முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள்கூட, 'இங்க ஏன் நிக்கிற?’ என அதிகாரத் தொனியில் கேள்வி கேட்பார்கள்.

 

அப்படியானவர்கள்தான் பய விதையை எங்கள் மனதில் முதலில் விதைக்கிறார்கள்.

 

 

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி தன் கட்டுரை ஒன்றில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டிருப்பார்... ரயில் பயணம் முடிந்து இறங்கும் ஒரு பெண்ணிடம் வரவேற்க வருபவர், 'நைட் நல்லாத் தூங்கினியா?’ எனக் கேட்பார்.

 

'

ஒரு போலீஸ்காரர் இருந்தார். பயத்துல தூக்கமே வரலை’ என அந்தப் பெண் பதில் சொல்வாள். உண்மையில், பாதுகாக்கிறோம் எனக் கிளம்புபவர்கள்தான் அதிகம் பயத்தை விதைக்கிறார்கள்!

 

 

ஆனால், பயணத்தில் இப்படியான இடையூறுகள் ஆயிரம் இருப்பினும் நானோ, ரேவதியோ, சுதாவோ, கவிதாவோ, இன்னும் பல தோழிகள் தொடர்ந்து பயணித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

 

 

ஏனெனில், இந்த இடையூறுகளைக் கடக்கும் வலிமையை பயணங்களே எங்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கின்றன.

'அட... வாழ்க்கையில் இதெல்லாம் ஒரு கஷ்டமா? விட்டுத்தள்ளுப்பா.

 

அடுத்த வேலையைப் பார்ப்போம்!’ என எங்களை நாங்களே மீட்டுக்கொள்ளும் தருணத்தை, ஒரு கடற்கரையிலோ, ஒரு மலைமுகட்டிலோ, பேருந்தின் ஜன்னல் ஓரப் பயணத்திலோ, ரயிலில் நிலா பார்க்கும் ஒரு நொடியிலோதான் உணர்ந்துகொண்டோம்.

அந்த வலிமையை இன்னும் இன்னும் அதிகரிக்கவே நாங்கள் பயணிக்க விரும்புகிறோம்.

 

அதே சமயம், மிரள வைக்கும் மூடர்களை மட்டும் அல்ல, அற்புதமான பல மனிதர்களையும் பயணம் அடையாளம் காட்டியிருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வய நாட்டின் அடர்ந்த காடு ஒன்றில் அலுவல்நிமித்தமாகத் தங்கியிருந்தேன்.

 

 

 

அன்றைக்கு நெடுந்தூரம் பயணித்து, ஓர் ஆதிவாசி கிராமத்துக்கு அலுவலக நண்பர்களோடு செல்ல வேண்டியிருந்தது. பாதி தூரம் ஜீப், மீதி தூரம் நடை என நீண்ட பயணம் அது. குறிப்பிட்ட கிராமத்தை அடையும்போது இருள் சூழத் தொடங்கியிருந்தது.

 

 

பெண்களை வெளி ஆண்கள் மாலையில் சந்திக்கக் கூடாது என அந்தப் பழங்குடி மக்கள் சொல்லிவிட்டார்கள். நான் மட்டும் அந்தப் பெண்களைச் சந்திக்க விரும்பி கிராமத்துக்குள் சென்றேன்.

 

திரும்பும்போது என்னோடு வந்தவர்கள் நடுக்காட்டில் என்னைத் தனியாக விட்டுவிட்டுப் போயிருந்தார்கள்.

 

 

 

மாந்திரீகத்தைத் தொழிலாகக்கொண்ட அந்த ஆதிவாசி மக்கள் இடையே, அந்த இரவில் தனியாக நின்றபோது, பயத்தில் அழுகை வந்தது. என்னை ஆசுவாசப்படுத்திய அந்த மக்கள், பத்திரமாக என் இருப்பிடத்தில் என்னைச் சேர்ப்பிக்கும்படி ஓர் இளைஞனிடம் பொறுப்பை ஒப்படைத்தார்கள்.

 

 

 

அவன் ஒரு கையில் தீப்பந்தம், மற்றொரு கையில் என் கைகளை இறுக்கிப் பிடித்தபடி, அடர் காட்டில் நான்கு மணி நேரம் பயணித்து என்னை பாதுகாப்பாக என் இருப்பிடத்தில் விட்டுச் சென்றான்.

 

அந்தப் பயணம்தான், ஆதிவாசிகளின் அக்கறையை எனக்கு உணர்த்தியது!

முன்பு ஒருமுறை... ஆறு மாதங்கள்கூட நிரம்பாத கைக்குழந்தை மகளோடு அரசுப் பேருந்தில், மழை மாத சென்னையில் இருந்து திருச்சி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தேன்.

 

 

 

தனிப்பட்ட பிரச்னைகளால் மனம் முழுக்க வெறுப்பும் ஏமாற்றமும் நிரம்பி வழிந்த நேரம் அது. விழுப்புரத்தில் பேருந்து நிற்க, அங்கிருந்த மோட்டல் ஒன்றில் மகளுக்கு வேடிக்கை காட்டிக்கொண்டிருந்தேன்.

 

 

பேருந்து கிளம்பும் தருணத்தில், மீண்டும் மழை வலுத்தது. ஓடிச்சென்று ஏறினால் குழந்தை நனைவாளே என நான் யோசித்து தயங்க, 'அங்கேயே நில்லும்மா’ என சைகை காட்டிய ஓட்டுநர், பேருந்தைத் திருப்பி என் அருகே கொண்டுவந்தார்.

 

பேருந்துக்கும் எனக்கும் சில அடிகள் தூரமே இடைவெளி இருக்கும்போது குடையோடு இறங்கிய நடத்துனர், எங்கள் இருவரையும் நனையாமல் பேருந்தில் ஏற்றினார்.

 

 

அன்பும் வெடித்து அழவைக்கும் என்பதை நான் உணர்ந்த தருணம் அது. அந்த இருவர் முகங்களையும் இன்றும் நான் மறக்கவே இல்லை.

 

இப்படிப் பகிர்வதற்கு இனிமையான தருணங்களைப் பயணம் நெடுகிலும் தரும் மனிதர்களும் அதிமாக இருக்கிறார்கள்.

சோர்வடையவைக்கும் 400 மனிதர்களுக்கு இடையே, ஒரே ஒரு தீப்பந்தத்தோடு நடந்துவந்த அந்த ஆதிவாசி இளைஞனைக் கண்டடைவது அவசியம்!

 

 

கடந்த வாரம் காரைக்கால் வரை ஒரு பயணம். நள்ளிரவில் மகளோடு கடற்கரையில் நின்றுகொண்டிருந்தேன். 'கொஞ்சம் நான் தனியா நிக்கிறேன்.

 

 

கை பிடிக்காத... ப்ளீஸ்’ என்று என்னைவிட்டு விலகி நின்றாள் மகள். சில நிமிடங்களில் மீண்டும் என் கையை இறுக்கியபடி, 'போன வாரம் நீ திட்டுனப்ப, வேற வீட்ல பொறந்திருக்கலாம்னு தோணுச்சு.

 

 

ஆனா, இன்னைக்கு இந்த நைட்ல பீச்ல நிக்கிறது உன் பொண்ணா இருக்கிறதாலதான். வேற வீட்ல இதுக்கு அக்செப்ட் பண்ண மாட்டாங்கள்ல. லவ் யூ ப்ரியா’ என்று குதூகலத்தோடு சொன்னாள்.

 

 

ஆறு வயதுச் சிறுமிக்கு இந்தப் புரிதலையும், பக்குவத்தையும், மகிழ்ச்சியையும் ஒரு பயணம்தான் கற்றுத்தரும். எந்தப் பள்ளியும் குடும்பமும் இதைக் கற்றுக்கொடுக்காது!

 

- பேசலாம்...

 

ப்ரியா தம்பி 

மூலம் முகநூல்  

 

Edited by அபராஜிதன்

  • தொடங்கியவர்

2)

பள்ளி நாட்களில் பேச்சுப் போட்டிகளில் நாங்கள் தோழிகள் கும்பலாகக் கலந்துகொள்வோம். மூன்று தலைப்புகள் கொடுத்து அதில் ஒன்றைத் தேர்வுசெய்யச் சொல்வார்கள். 'பெண் விடுதலை’ என்ற தலைப்பைத்தான் எளிதாகத் தேர்வுசெய்வோம்.

எங்கள் அனைவரின் பேச்சிலும் பொதுவாக ஒரு கருத்து இருக்கும். பொருளாதாரத்தில் சுதந்திரம் கிடைத்தால், பெண்கள் சுதந்திரமாக இருக்கலாம் என்று.

அந்தப் பொதுக் கருத்தை உண்மையில் நாங்கள் அப்போது நம்பவும் செய்தோம். 'வீட்டில் எப்போது பார்த்தாலும் கேள்வி கேட்டு, 'அங்கே போகாத, இங்கே போகாத’னு சொல்லிக்கிட்டு.

ஒரு வேலை மட்டும் கிடைச்சா, நாம இஷ்டப்படி சுதந்திரமா, யாரையும் டிபண்ட் பண்ணாம இருக்கலாம்ல...’ என்பதே எங்களின் நினைப்பாக இருந்தது.

ஆனால், உண்மையில் பொருளாதாரச் சுதந்திரம் மனதளவில் பெண்களைச் சுதந்திரமாக்கிவிட்டதா?

எனக்குத் தெரிந்த பெண் ஒருவர், வங்கியில் உயர் பதவியில் இருக்கிறார்.

உடன் இருப்பவர்களிடம் இறுக்கமாக இருந்து 'ஸ்ட்ரிக்ட் ஆபீஸர்’ என்று பெயர் எடுத்திருப்பவர். அவரைப் பார்த்தால், இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பிரச்னையை ஒரே சிட்டிங்கில் முடித்துவிடுபவர்போலவே ஓர் அதிகாரத் தொனி இருக்கும்.

ஆனால், அவரோடு நெருங்கிப் பழகிய பிறகுதான் தெரிந்தது, அவரது பேஸ்மென்ட் எவ்வளவு வீக் என்று!

அவருக்கு அலுவலக வேலையைத் தவிர, வேறு எதுவும் செய்யத் தெரியாது.

காலை, மாலை கணவர்தான் வங்கியில் டிராப், பிக்கப் எல்லாம். வருமான வரி தொடர்பான விவரம் ஏதாவது கேட்டால், 'எனக்கும் அவர்தான் கட்டுறாரு. அந்த டீட்டெய்ல்ஸ் எல்லாம் அவருக்குத்தான் தெரியும்’ எனச் சிரிப்பார்.

ஊருக்குப் போவதானால் கணவர் உடன் செல்ல வேண்டும். அல்லது டிக்கெட் போட்டு, தண்ணீர் பாட்டில் வாங்கி, சரியான எண் பார்த்து இருக்கையில் அமரவைத்து, பேருந்து கிளம்பியதும் டாட்டா சொல்ல வேண்டும். ஒவ்வொரு நிமிடமும் கணவரைச் சார்ந்திருக்கும்படியான வாழ்க்கை.

 

'எனக்கு எதுவும் தெரியாது. எல்லாம் அவருதான்’ எனச் சிரிப்பார். அதைச் சொல்லும்போது, முகத்தில் அப்படியே பெருமிதம் பொங்கி வழியும்!

வீட்டில் அப்பாவிடம், 'நான் என்ன பண்றேன்னு எனக்குத் தெரியும்ப்பா!’ என, தன் முடிவுகளுக்காக 'அபியும் நானும்’ த்ரிஷாபோல் சண்டை போட்டவர்கள்கூட, திருமணத்துக்குப் பின், வீட்டுப்புழுவாகிவிடுகிறார்கள்.

பள்ளி, கல்லூரி, அலுவலகம்... எனப் பல அத்தியாயங்களைக் கடந்தபோது, எதிர்ப்பட்டவர்களுள் 'இவன் நமக்கானவன்’ என மனம் விரும்பியவனை நம்பி, நம் வாழ்க்கையையே அவனிடம் கொடுக்கிறோம்.

ஆனால், திருமணத்துக்குப் பிறகு, 'இன்னைக்கு உருளைக்கிழங்கா... முட்டைக்கோஸா?’ போன்ற மிகவும் சின்னச்சின்ன விஷயங்களுக்குக்கூட 'என்னங்க’வின் ஆலோசனையை எதிர்பார்க்கிறோம்.

ஒருவேளை திருமணத்துக்குப் பின் எந்த முடிவையும் நாம் சுயமாக எடுக்கக் கூடாது என்பது மரபணுவில் பொதிந்துவிட்டதோ என்னவோ!? அலுவலகத்தில் நண்பனோ, வீட்டில் கணவனோ டிரைவர் வேலை செய்வதை நிறுத்திவிட்டால், நாம் வெளியே எங்கும் செல்லாமல் முடங்கி விடுகிறோம்.

நம்மில் நிறைய பெண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும், அப்பாவை, தோழனை, காதலனை, கணவனை, மகனைச் சார்ந்தபடி.

'ஆம்பளைங்க வீட்டுக்குள்ளே வெச்சுக் கொடுமை பண்றாங்கப்பா’ என்று பொத்தாம்பொதுவாகப் புலம்பினாலும், 'சரி... வெளியே போயிட்டு வா’ என்று ஆண்கள் சொன்னால், பதறித்தான்போவார்கள். 'நீ உன் இஷ்டம்போல ஃப்ரீயா இரு’ என்று சொல்லும் கணவரின் மேல் பல பெண்களுக்கு மரியாதை இருப்பது இல்லை.

முன்பு இருந்த அபார்ட்மென்ட்டில் என் வீட்டுக்கு எதிர் வீட்டுக் குடும்பத் தலைவர் மிகவும் அப்பாவி. மனைவி, பிள்ளைகளின் அதட்டலுக்கு எப்போதும் சிரித்தபடி ஓடிக்கொண்டிருப்பார். 'இவருக்குக் கோபமே வராதா?’ என்றுதான் தோன்றும். அவரது மனைவி ஓர் ஆசிரியை.

 

கணவர், பள்ளிக்கு அழைத்துக்கொண்டுபோய் விட்டால், பாடம் எடுப்பார். திரும்பப் போய் அழைத்து வந்தால், வீட்டுக்கு வருவார். அப்படியே உட்கார்ந்து டி.வி பார்த்துக்கொண்டிருப்பார்.

 

விடுமுறை நாட்களில் அவரையும் பிள்ளைகளையும் கணவர்தான் வெளியே அழைத்துச் செல்ல வேண்டும். ஒருநாள் அந்த அப்பாவி கணவன், உடம்பு சரியில்லை என்று வெளியே அழைத்துச் செல்ல முடியாது எனச் சொல்ல, மனைவியின் கூச்சலும் அலறலும் பில்டிங்கையே கிடுகிடுக்கச்செய்தன.

அந்த அப்பாவி மனுஷன் விழுந்தடித்து சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே அழைத்துச் சென்றார். அதே டீச்சர் பக்கத்து வீடுகளில் பேசும்போது தவறாமல் இப்படிச் சொல்வார், 'அவர் இல்லாம நான் எங்கயும் போறதே இல்லை.

எனக்கு அதெல்லாம் பழக்கமும் இல்லை. எங்க வீட்ல அப்படி என்னை வளர்க்கலை!’ என்று. உண்மையில் தனியாக எதையும் செய்ய அவரால் இயலாது. 'என்னால் எதுவும் முடியாது!’ என்று சொல்வதில் என்ன பெருமை இருக்கிறது?

ஒருவேளை மெத்தப் படித்த பெண்கள்தான் இப்படி பிறரைச் சார்ந்தே வாழ்கிறோமோ எனத் தோன்றுகிறது. சாஃப்ட்வேரில் பணிபுரியும் பெண்கள்கூட சினிமாவுக்கு, ட்ரெயினுக்கு முன்பதிவு செய்யக்கூட நண்பரையோ, கணவரையோ சார்ந்துதான் இருக்கிறார்கள்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். திருமணத்துக்கு முன்பு புராஜெக்ட்டுக்காக அமெரிக்காவுக்கு எல்லாம் சென்று, தனியாக இருந்து சமாளித்து வந்திருப்பார்கள்.

 

ஆனால், திருமணத்துக்குப் பிறகு அமைந்தகரையில் இருக்கும் அலுவலகத்துக்குக்கூட கணவர்தான் வந்து டிராப் செய்ய வேண்டும், அழைத்துச் செல்ல வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள்.

 

'ஐய்யயோ... யார் பஸ்ல ஏறிப்போறது? டூ-வீலர் ஓட்டுறதுலாம் இம்சை!’ என்று அலுத்துக்கொள்கிறார்கள். பொறுப்பு ஏற்றுக்கொள்வதில் ஏன் நமக்கு இத்தனை அலுப்பும் சலிப்பும்!

சில ஆண்டுகளுக்கு முன்பு, குமரி மாவட்ட பெண் பஞ்சாயத்துத் தலைவர்களை ஒரு நிகழ்ச்சிக்காகத் தொடர்ந்து சந்தித்தேன். அதில் 80 சதவிகிதம் பஞ்சாயத்துத் தலைவிகளுக்குப் பதிலாக அவர்களின் கணவர்கள்தான் பேசினார்கள். பல தலைவிகள் தங்கள் முகத்தைக்கூட காட்டவில்லை.

கணவர்களின் தலையீட்டை மீறி அந்தப் பெண்களால் ஒன்றும் செய்ய முடியாது என்ற வாதம், சில பெண்களுக்குப் பொருந்தலாம்.

ஆனால், எல்லோருக்கும் அல்ல. ஆண்கள், பெண்களை வீட்டுக்குள்ளேயே வைத்திருக்கிறார்கள் என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, பெண்கள் வீட்டின் சுவர்களையே பாதுகாப்பாக நினைத்து, கணவரைச் சார்ந்தே வாழ்க்கையை ஓட்டிவிடுகிறார்கள் என்பதும். ஆதிக்கத்தைவிட மோசமானது அடிமைத்தனம்.

ஆனால், நாம் ஆதிக்கத்தைப் பற்றியே தான் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். அடிமைத்தன மனோபாவத்தை என்ன செய்வது?

எனக்குத் தெரிந்த புரட்சிப் பெண் ஒருவர் உண்டு. பெண் விடுதலைக்கான அனல் தெறிக்கும் எழுத்துக்கள் அவருடையது. மேடை ஏறி பெண் விடுதலை பற்றி அவர் பேசத் தொடங்கினால், உட்கார்ந்திருக்கும் பெண்களுக்கு எழுந்துபோய் நான்கு செங்கற்களையாவது உடைத்து வீசத் தோன்றும். ஆனால், கூட்டம் முடிந்ததும் வெளியே வந்து கணவனுக்கு போன் போடுவார் அந்தப் புரட்சிப் புயல், 'வந்து கூட்டிட்டுப் போங்க... கூட்டம் முடிஞ்சிருச்சு!’ என்று. 'தோழர் மெயில் ஐ.டி குடுங்க’ எனக் கேட்டால், 'அதெல்லாம் அவருக்குத்தாங்க தெரியும். நமக்கு இதெல்லாம் ஒண்ணும் மண்டையில ஏறலை’ எனச் சிரிப்பார்.

அவர் வீட்டில் உட்கார்ந்து 10 நிமிடங்கள் பேசினால், 15 முறை உள்ளே பார்த்து 'என்னங்க’வை அழைப்பார். 'போன் பில் கட்டலைனு போன் வந்தது! என்னைக் கூட்டிட்டுப் போற டாக்டர் பேர் என்ன? சாயங்காலம் வெளிய போகணும்... கொண்டு போய் விட்ருங்க’ என எல்லாவற்றுக்கும் அவருக்கு 'என்னங்க’ வேண்டும்.

ஒருமுறை புரட்சித் தோழிக்கு வெளிநாடு அழைப்பு வர, பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதில் இருந்து, விசா விசாரணை, செல்லும் நாட்டின் பருவத்துக்கு ஏற்ற ஆடைகளை வாங்குவது... என எல்லாவற்றுக்கும் 'என்னங்க’தான் அலைந்துகொண்டிருந்தார். கடைசியில் விமான நிலையம் கொண்டுவிடுவது வரை, கணவர் ஒருவழி ஆகிவிட்டார். அங்கே போய் பெண்கள் எப்படிச் சுதந்திரமாக இருப்பது என்று பேசுவாராக இருக்கும்.

அவர் சித்தாந்தத்தில் எது சுதந்திரம் என்பது இன்று வரை எனக்குப் புரியவே இல்லை!

அரபு நாடுகளுக்கு வீட்டு வேலைகளுக்குச் செல்லும் படிக்காத, கிராமப்புறப் பெண்கள் நினைவுக்கு வருகிறார்கள்.

தான் செல்லப்போகும் நாட்டை அதற்கு முன்பு வரைபடத்தில்கூட பார்த்திருக்காத, இன்னும் சொல்லப்போனால் வரைபடத்தையே பார்த்திருக்காத அந்தப் பெண்கள், யாரையும் நம்பாமல் தன்னந்தனியாகக் கிளம்பிச் செல்கிறார்கள்.

நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் வரை பேருந்தில் சென்று, அங்கே தனியாக இறங்கி விமான நிலையம் சென்று, அவ்வளவு பெரிய கட்டடத்தைப் பார்த்து பிரமித்து, 'துபாய்க்கு எந்தப் பக்கம் போகணும்?’ என வெள்ளந்தி யாகக் கேட்டு விசாரித்து சென்று சேருவார்கள்.

அங்கு எழுதப்பட்டிருக்கும் எதையும் அவர்களால் வாசிக்கவும் முடியாது. சென்று சேரும் இடம் எப்படி இருக்கும் என்றும் தெரியாது. ஆனாலும், வாழ்க்கையின் நிர்பந்தம் பொருட்டு தன்னை நம்பி அந்தப் பயணத்தை மேற்கொள்கிறார்கள். அதுதானே யாரையும் சாராது இருத்தல்?

மதுரையில் நண்பர் ஒருவர், அவர் அம்மா பற்றி சொல்லத் தொடங்கினால் கண்கலங்கிவிடுவார்.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு எட்டோ, ஒன்பதோ பிள்ளைகளோடு நண்பரின் அப்பாவும் அம்மாவும் திருநெல்வேலி பக்கத்தில் இருந்து மாட்டுவண்டியில் பிழைப்புத் தேடி மதுரைக்கு இடம் பெயர்ந்திருக்கிறார்கள்.

வழியில் விருதுநகர் பக்கம் மனைவி, பிள்ளைகளைப் பாழடைந்த ஒரு மண்டபத்தில் தங்கவைத்து விட்டு, மதுரையில் வேலை தேடிவிட்டு திரும்ப அழைத்துச் செல்கிறேன் என நண்பரின் அப்பா கிளம்பியிருக்கிறார். போனவர் திரும்பியது சில வருடங்கள் கழித்து.

அத்தனை பிள்ளைகளோடு அந்த ஊரில் வயல் வேலை தேடி, தங்கியிருந்த இடத்தைச் சுற்றி கீரை நட்டு... என பிள்ளைகளை வளர்த்திருக்கிறார் அந்த அம்மா. நமக்கு எல்லாம் அரை மணி நேரம் ரயில் நிலையத்தில் சொன்னவர்கள் வரவில்லை என்றால் கலங்கிப்போகிறது.

இத்தனைக்கும் நண்பரின் அம்மா பள்ளிக்கூடம் எல்லாம் போகாதவர்.

அவர் இறப்பது வரைக்கும் அவரிடம் இருந்த தன்னம்பிக்கையையும், மனத்திடத்தையும், யாரையும் சாராத வாழ்வையும் நண்பர் பகிர்ந்துகொள்ளும்போது வியப்பாக இருக்கும்.

வீட்டு வேலைக்காக துபாய்க்கு தனியே கிளம்பும் பெண்ணையும், 'என்னங்க’ ஆசிரியை தோழியையும் ஒப்பிட்டு யோசித்தால், படிப்பும் பொருளாதாரமும் நமக்கு என்ன கற்றுக்கொடுத்திருக்கிறது என உண்மையிலேயே குழப்பமாக இருக்கிறது!

 

- பேசலாம்..

 

 

 

ப்ரியா தம்பி 

மூலம் முகநூல்

 

  • தொடங்கியவர்

காதல் பற்றி, காமம் பற்றி ஆண்கள் பேசும் அளவுக்குப் பெண்கள் பேசுவார்களா என்கிற சந்தேகம் எப்போதும் எனக்கு உண்டு. டீனேஜ் வயதில் இருந்து காதல் அல்லது திருமணம் கைகூடும் வரை, பெண்களின் சிந்தனையை பெரும்பாலும் இந்த இரண்டுமே ஆக்கிரமித்துள்ளன.

 

ஆனால், ஆண்களைப்போல் பொதுவெளியில் எளிதாக அவர்களால் அதைப் பகிர்ந்துகொள்ள முடிவது இல்லை.

 

 

 

சினிமாவில் வரும் முதலிரவுக் காட்சிகளைப் பார்த்துவிட்டு அது பற்றி பள்ளியில் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது.

கதவைத் திறந்துகொண்டு பெண் வருவார், பால் டம்ளர் கொடுப்பார், ஆண் உடனே கட்டிஅணைப்பார், விளக்கு அணைக்கப்படும்.

 

'அதன் பிறகு என்ன நடக்கும்?’ எனக் கேட்டுவிட்டுச் சிரிப்போம். அந்தச் சிரிப்பு முடிந்ததும், அனைவரும் சில நிமிடங்கள் அமைதியாக இருப்போம்.

 

அடுத்து என்ன நடக்கும் என்று கற்பனை செய்வதற்கான பொழுது அது. மீண்டும் அது பற்றி பேசத் தொடங்கும்போது, எங்கள் எல்லோருக்கும் தோன்றும் ஒரே கேள்வி இதுதான்...

 

 

'கல்யாணமாகி ரெண்டு பேரும் முதல் தடவையா ஒரு ராத்திரி முழுக்கச் சேர்ந்து இருக்கப்போறாங்க.

பேச எதுவுமே இருக்காதா?’ என்று.

 

உண்மையில் இங்கே வீடுகளில் இரவுகள் பேச எதுவும் இல்லாமல் அமைதியாகத்தான் கடந்துகொண்டிருக்கின்றன.

 

இன்றைக்குப் பெண்கள் பேச முடியாத, ஆனால் பெரிதும் பேச விரும்புகிற சப்ஜெக்ட்... தங்கள் இரவுகள் குறித்துதான்.

 

 

சமையலறை இருட்டில் இருந்து படுக்கையறை இருட்டுக்கு ஒருநாள் மாற்றப்பட்ட முந்தைய பல தலைமுறைகளின் பெண்களுக்கு, செக்ஸ் என்றால் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான ஓர் ஏற்பாடாக மட்டும் இருந்திருக்கக்கூடும்.

 

 

செக்ஸ் என்பது, ஆண்-பெண் இருவருக்குமான பகிர்தலும் மகிழ்ச்சியும் என்று புரிந்த இன்றைய பெண்களுக்கு, தங்கள் இரவுகளோடு பெரும்பாலும் உடன்பாடே இல்லை.

 

 

இணையத்தில் கொட்டிக்கிடக்கும் போர்னோ சைட்டுகள் பெண்கள் பார்ப்பதற்குத் தடை ஏதும் சொல்லாததால், விரும்பிய வாழ்க்கைக்கும், வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கைக்குமான வித்தியாசத்தை அவர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.

 

 

ஒரு மனைவி, தன் கணவரிடம் என்ன விரும்புகிறாள் என வைரமுத்து ஒரு கவிதை எழுதியிருப்பார்.

 

'காலநேரம் பாராமல் காமச்சங்கு முழங்கி, நிராயுதபாணியோடு யுத்தமொன்று தொடங்கி, முத்தமிடத் தெரியாமல் மோகத்தில் குதறி, மின்விசிறி தலைதட்ட மேலேற்றிச் சுழற்றி, சிருங்கார பயத்தில் நான் சில்லிட்டலற, மெத்தை மேல் என் மேனி விசிறியெறிந்து, தேவை தீர்ந்ததும் திரும்பிப் படுத்து, குளித்த கூந்தல் உலர்த்தி வருமுன்னே, குறட்டைவிடும் என் கணவா, இஃதில்லை யான் கேட்டது’

 

 

என வரிகள் போகும். குறிப்பிட்ட இந்தக் கவிதையை பல பெண்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். 'பாரேன்... நம்ம வீட்ல நடக்கிறதை அப்படியே எழுதிருக்கார்’ என்ற ஆச்சர்யம் அவர்களுக்கு.

 

மற்ற நாட்டு சினிமாக்களைப் பார்த்தால், கணவன் - மனைவி இருவரும் அறைக்குள் வந்ததும் பேச ஆரம்பிக்கிறார்கள், அப்புறம் தழுவிக்கொள்கிறார்கள், முத்தமிடுகிறார்கள்.

 

உடலுறவு என்ற இலக்கைத் தொட குறைந்தது அரை மணி நேரமாவது ஆகிறது.

 

ஆனால், நம் ஊரில் மட்டும் அறைக்குள் நுழைந்த 10-வது நிமிடத்தில், தூங்கிப் போக முடிகிறது எனில், செக்ஸ் என்ன தூக்க மாத்திரையா? நூலகத்தில் படித்த, தலைப்பு மறந்துபோன புத்தகத்தின் வரிகள் சில நினைவுக்கு வருகின்றன.

 

இந்தியாவைச் சுற்றிப் பார்த்த வெள்ளைக்காரர் ஒருவர், இந்தியாவில் தான் அதிகம் வியந்தது குறித்து இப்படிக் குறிப்பிட்டாராம்... 'இந்த இந்தியர்கள் உடைகளைக்கூடக் கழற்றாமல் எப்படி உடலுறவுகொள்கிறார்கள்?’

 

 

நாங்கள் கல்லூரித் தோழிகள் ஒருமுறை சந்தித்தபோது, எங்கள் இரவுகள் குறித்து பகிர்ந்துகொண்டோம்.

 

 

பெண்களின் பேச்சில் இது மிக அபூர்வமாகவே நிகழும். 'உங்களுக்கெல்லாம் வீட்டுக்காரர் முத்தம் தர்றாங்களா?’ எனத் தோழி ஒருத்தி தயங்கித் தயங்கிக் கேட்டாள்.

 

'அது இல்லாம எப்படி?’ எனச் சொல்லத்தான் விரும்பினோம்.

 

 

ஆனால், முடியவில்லை. 'முத்தத்தில் தொடங்கி முத்தத்தில் முடியும் தாம்பத்தியம் எத்தனை பேருக்கு வாய்த்திருக்கிறது?’ என்ற அ.வெண்ணிலாவின் கவிதை வரிகள் எத்தனை சத்தியமானவை.

 

 

திருமணத்துக்குப் பிறகான முத்தத்தை, யார் பாவக்கணக்கில் சேர்த்தது? கதவை அடைத்ததுமே விளக்கை அணைப்பது, மேலே விழுந்து ஆக்கிரமிப்பது எல்லாம் சரிதான். ஆனால், அதற்கு முன்னால் கொஞ்சம் நேரம் காதலைப் பகிரவும், அது பற்றி பேசவும் பெண்கள் விரும்புகிறார்கள்.

 

 

பெண்களுக்கு, தங்கள் உடல் தயாராக வேண்டுமெனில் முதலில் மனம் தயாராக வேண்டும்.

 

பெண் மனம் அவர்களே எதிர்பார்க்காதவண்ணம் மிகமிக ரொமான்ட்டிக்கானது; காதல் நிரம்பியது. தலை வருடுதல், விரல் பிடித்தல், அணைத்துக்கொள்ளுதல் போன்றவை மூலம் காமம் தாண்டிய, காமத்துக்கு முந்தைய அக்கறையை பெண்கள் எல்லா வயதிலும் எதிர்பார்க்கிறார்கள்.

 

இன்னும் சொல்லப்போனால் குழந்தைகள் பிறப்பு, ஹார்மோன்களின் மாறுதல்கள்... என வயது அதிகமாக அதிகமாக கணவனோடு இப்படியான நெருக்கமே தேவைப்படுகிறது.

 

ஆனால், இதே நேரத்தில்தான், 'அஞ்சு நிமிஷத்துக்குள்ள முடிக்கலைனா, அடிப்பேன்’ என கட்டில் அருகே யாரோ ஸ்கேலோடு நின்று விரட்டுவதுபோல எல்லாம் நடந்து முடிந்துவிடுகின்றன.

 

இந்த ஏமாற்றத்தில்தான் பெண்கள் அப்படி ஒரு சம்பிரதாய உறவு தேவையே இல்லை என்பதுபோல் அதைத் தவிர்க்கப் பார்க்கிறார்கள்.

 

'அவளுக்கு இன்ட்ரஸ்டே இல்லப்பா. எப்ப போனாலும் எரிச்சலா தள்ளிப் படுக்கிறா... இல்லைனா சிடுசிடுனு விழுறா!’ என ஆண்கள் தன் நண்பர்களிடம் புலம்புவதும், மனைவியைவிட்டு விலகுவதும் இந்தக் காலகட்டத்தில்தான்.

 

 

திருமணமான புதிதில் மாலையில் அழகாக அலங்காரம் செய்துகொண்ட பெண்கள், பின்னாட்களில் சமையலறை வாசனையோடும், காலையில் அணிந்த நைட்டியோடும் இரவுக்குள் நுழைவதும் இதே காலகட்டத்தில்தான்.

 

 

 

வேலையின் அழுத்தங்கள், பெருநகர வாழ்க்கை மாற்றம் எல்லாம் சேர்ந்து, பெண்களின் இரவுகளில் ஏமாற்றத்தின் அடர்த்தியை அதிகரித்துவிட்டன.

 

 

10 மணிக்கு வீடு வந்தால், தூங்குவதற்கு முன் செய்யவேண்டிய ஒரு சம்பிரதாயக் கடமைதான் செக்ஸ்.

 

 

நம்மவர்களுக்கு அது வெறும் 'செக்ஸ்’... அவ்வளவே. ஆனால், அதற்கு 'லவ் மேக்கிங்’ என்ற அழகிய பதம் உண்டு.

 

 

அழுத்தத்தை வெளியேற்றிய அடுத்த நிமிடம், தூங்கிப்போகும் கணவனை வெறித்தபடி உட்கார்ந்திருக்கும் மனைவிகளைக் கை தூக்கச் சொன்னால், ஆயிரத்தில் தொள்ளாயிரம் பேர் நிச்சயம் கைதூக்குவார்கள். 'உனக்கும் ஓ.கே-வா?’ என, ஏன் இவர்கள் திரும்பக் கேட்பதே இல்லை.

 

எல்லாம் முடிந்த பிறகு, இரண்டு நிமிடங்கள் பேசுவது, அணைத்தபடி தூங்குவது... இதெல்லாம் எவ்வளவு நிம்மதியைக் கொடுக்கும் தெரியுமா?

 

 

ஒரு பெண் தானாக வந்து முத்தமிட்டாலே குறைந்தது இரண்டு நிமிடங்கள் வெலவெலத்துப்போகும் ஆணிடம், 'எனக்கு இது வேண்டும்... இது பிடிக்கவில்லை’ என்பதை எப்படிப் பேசுவது? என்று பெண்கள் தயங்குகிறார்கள்...

 

அவ்வளவுதான்!

 

'சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில் புதிதாகத் திருமணமான சந்திரசேகர், தன் தம்பியின் படிப்பை முன்வைத்து மனைவியுடன் இரவைக் கழிக்கத் தயங்குவார்.

 

 

பல உதாசீனங்களுக்குப் பிறகு புது மனைவி எரிச்சல் அடைந்து, நள்ளிரவில் கிணற்றடியில் போய்க் குளித்துக்கொண்டிருப்பார்.

 

 

 

ஒருகட்டத்தில் கணவனின் அக்கிரமம் தாங்க முடியாமல் அப்பா வீட்டுக்குச் செல்ல, அப்பா வாசலிலேயே துரத்தியடிப்பார்.

 

 

திரும்பும் வழியில் சந்திரசேகர் மிகக் கொச்சையாக, 'உனக்கு அதுதான் வேணும்னா ரோட்டுல இங்கேயே வெச்சுக்கலாமா?’ எனக் கேட்பார். இயல்பான தன் விருப்பத்தைச் சொன்னால் 'இப்படிக் கேட்டுவிடுவார்களோ!’ என்ற பயத்தில்தான், பெண்கள் அமைதியாகிவிடுகிறார்கள்.

 

 

பெண்களில் பலரது முதலிரவு அனுபவங்கள் வலி நிரம்பியவை.

 

 

பெற்றோரை நிராகரித்து காதல் திருமணம் செய்த தோழியின் முதலிரவு அனுபவம் அப்படிப்பட்ட ஒன்று. 'நான் அம்மாவை நினைச்சு, அழுதுட்டு இருந்தேன்.

 

ஹோட்டல் ரூம்ல இருந்த பாத்டப்ல சேர்ந்து குளிச்சே ஆகணும்னு பிடிவாதம் பண்ணிக் குளிக்கவைச்சார். அப்புறம் அவரு தூங்கிட்டாரு. ராத்திரி முழுக்க நான் தூங்கவே இல்லை.

 

 

கல்யாணம் ஆனா இப்படித்தான் இருக்குமா? இதுக்கா நான் எல்லாரையும் விட்டுட்டு வந்தேன்.

 

 

பயம்மா இருக்குடி’ என மிரண்டுபோய் சொன்னாள்.

 

 

உண்மையில், செக்ஸ் என்பதை காலம் முழுக்க வலி நிரம்பியதாக மட்டுமே அனுபவித்த பெண்கள் அநேகம் பேர்.

 

 

அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு பிரிவுக்குச் சென்றால், பிரவச வலியில் மனைவிகள் கணவனைத் திட்டும் வார்த்தைகளை காது கொடுத்துக் கேட்க முடியாது.

 

'உன்னால தினமும் வலி, வேதனைனு பட்டது போதாதா? இது வேறயா..?’ என ஆரம்பித்து, கிடைத்த வாய்ப்பை விடாது கொட்டித் தீர்த்துவிடுவார்கள்.

 

 

'காய்ந்த மாடு வயலில் பாய்வதுபோலான’ அந்தப் பாய்ச்சலுக்கு ஆண்களை மட்டுமே குறைசொல்லிப் பயன் இல்லை.

 

அவர்கள் அப்படித்தான் வளர்க்கப்படுகிறார்கள். பெண்ணை அடக்கி ஆள்வது, அவர்களை ஆக்கிரமிப்பது இவையே 'ஆண்மை’ என்று இங்கே சொல்லித்தரப்படுகிறது.

 

 

'ஆம்பளைனா அப்படித்தான் இருக்கணும்’ எனச் சொல்லி வளர்ப்பதில் கணிசமான பங்கு அம்மாக்களுக்கும் உண்டு.

 

 

நம் சமூகத்தில் ஆணின் குணத்தை அம்மாக்கள்தான் தீர்மானிக்கிறார்கள்.

 

வயதுக்கு வந்த மகளை அப்பாவோடு பேசாதே எனத் தடுக்கும்போது, மகள் மனதில் ஆண்களைப் பற்றி எந்த மாதிரியான எண்ணத்தை விதைக்கிறோம் என அம்மாக்கள் யோசிப்பதே இல்லை.

 

 

'அப்பாவையே நம்பக் கூடாது எனில், பிற ஆண்கள் நம்பிக்கையற்றவர்கள். பயப்பட வேண்டியவர்கள்’ என அவள் முடிவு செய்வாள்.

 

 

இதே மிரட்சியோடுதான் பெரும்பாலான பெண்கள் கணவனையும் அணுகத் தொடங்குகிறார்கள்.

 

'வளர்ந்த தங்கச்சியைத் தொடாத... அதென்ன பொம்பளைப் புள்ளை கன்னத்தைக் கிள்றது?’ என அவனது தங்கையிடம் ஆரம்பித்து, 'ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சுட்டா... இன்னும் என்ன அவளைத் தூக்கிக் கொஞ்சிட்டு இருக்க.

 

இறக்கி விடு’ என, பக்கத்து வீட்டுச் சிறுமியைத் தொடுவது வரை ஆண்களை பெண்ணிடம் இருந்து விலக்கியே வைக்கிறார்கள்.

 

ஒரு பெண்ணிடம் உறவுக்காக மட்டுமே நெருங்க வேண்டும் என வளர்க்கப்படும் ஆண், வாய்ப்பு கிடைக்கும் தருணத்தில் பெண்களிடம் வேறு எப்படி நடந்துகொள்வான்? செக்ஸ் இங்கு புனிதமானது அல்லது அருவருப்பானது என்கிற இரண்டு எதிரெதிர் எல்லைகளில் கொண்டுவைக்கப்பட்டுள்ளது. அது இயல்பானது என்பதை நாம் உணரவே இல்லை!

 

 

முதலிரவு முடிந்து வெளியே வரும் ஆணிடம், 'அப்புறம் எத்தனை ரவுண்டு மச்சான்?’ என்றுதான் இன்னமும் கேள்வி கேட்கிறார்கள். எண்ணிக்கையைக் குறைத்துச் சொன்னால் தன் ஆண்மையைச் சந்தேகித்துவிடுவார்களோ என்கிற பயம் ஆண்களுக்கு.

 

 

அதனாலேயே, 'டயர்டா இருந்தா தூங்கு. நாளைக்குப் பார்த்துக்கலாம்’ என அறைக்குள் அக்கறையோடு நடந்துகொள்ளும் ஆண்கூட, வெளியே 'மூன்று’ எனத் தலை குனிந்து விரல்களை நீட்டுகிறான். முதலிரவுக்குச் செல்பவனின் நண்பர்கள், 'கலக்கிடு மச்சான்... விடாத’ என வெறியேற்றித்தான் அனுப்பிவைக்கிறார்கள்.

 

 

 

செக்ஸில் பெண்களைப் போலவே ஆண்களுக்கும் அநேகம் சந்தேகம் இருப்பதையும், அதுகுறித்த படபடப்புடனே அவர்கள் பெண்களை அணுகுகிறார்கள் என்பதை இரு தரப்புமே புரிந்துகொள்ள வேண்டும்.

 

முட்டாள்தனமான, மூடநம்பிக்கை நிறைந்த, திசையெங்கும் பரவிக்கிடக்கும் 'ஆண்மைக் குறைவு’ விளம்பரங்கள் வேறு ஆண்களின் நம்பிக்கையைக் குலைக்கும்.

 

 

பேசக் கூடாத, தேவையற்ற விஷயங்களை குடும்பத்துடன் உட்கார்ந்து விவாதிக்கும் நாம், 'செக்ஸ்’ என்ற விஷயத்தைப் பற்றி ஏன் பேசுவதே இல்லை? அப்பா, மாமா போன்ற முந்தைய தலைமுறை அதை பாசிட்டிவாகச் சொல்லிக்கொடுத்து, பதற்றத்தை ஏன் குறைக்க முயற்சிப்பதே இல்லை? செக்ஸ் குறித்த குற்றவுணர்ச்சிகளை விலக்கி அடிப்படை புரிதல்களை ஏற்படுத்தலாமே.

 

 

'இது இயல்பானது. எளிதாக எடுத்துக்கொள். ஒரு பெண்ணோடு சேர்ந்து லவ்மேக்கிங்கை ஆரம்ப நாட்களில் கற்றுக்கொள்’ என வழிகாட்டலாமே!

 

 

இதை எல்லாம் பேசுவது 'அபச்சாரம்’ என்று சொல்லிக்கொள்ளும் நம் சமூகத்தில், பலருக்கு விரும்பியபடியான 'உறவு’ என்பது திருமணத்தை தாண்டிய ஒருவரிடம்தான் சாத்தியப்படுகிறது.

 

 

'கணவனிடம் இதைக் கேட்க முடியாது. கணவன் என்னை இப்படியெல்லாம் பாராட்டுவது இல்லை’ என அந்தப் பெண்ணும், 'அவகிட்ட எப்படி இதைக் கேட்கிறது, அவளுக்குப் பிடிக்காது இல்லையா?’ என ஆண்களும் காரணம் சொல்லி தங்களைச் சமாதானப்படுத்திக்கொள்கிறார்கள்.

 

 

இருவரும் சமமாகப் பகிர்தலில் மூலமே மகிழ்ச்சி சாத்தியம் என்பதை உணர்ந்து, பரஸ்பரம் பேசிக்கொண்டாலே, குழப்ப மேகங்கள் விலகிவிடும்.

 

அதற்கு இன்றைய பெண்கள் தயாராகவே இருக்கிறார்கள். செக்ஸ் குறித்து அதிகப்படியான புனித பிம்பங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை.

 

 

முக்கியமாக, ஆண்கள் நினைத்துக்கொண்டிருப்பது போல், 'எத்தனை நிமிடங்கள் தாங்குகிறான்’ என்பதை வைத்து மட்டுமே ஒரு பெண் தன் கணவனை மதிப்பிடுவது இல்லை.

 

தன் மேல் அவன் காட்டும் அக்கறை, அன்பு, மரியாதையே அவனிடம் அவளை நெருங்கவும் கிறங்கவும் வைக்கின்றன!

 

 

- பேசலாம்...

ப்ரியா தம்பி 

 

மூலம் முகநூல்

 

Edited by அபராஜிதன்

  • தொடங்கியவர்

 4)

 

 

'சதுரங்க வேட்டை’ படத்துக்காக தியேட்டரில் உட்கார்ந்திருந்தேன். தியேட்டர் ஆண்களால் நிரம்பி வழிந்தது. அங்கே இருக்கும் பெண்களை எண்ணினால், 20 பேர் தேறுவார்களா என்பதே சந்தேகம்.

 

மால்களின் தியேட்டர்களிலேயே இவ்வளவுதான் பெண்கள் கூட்டம் எனில், பிற தியேட்டர்களில் சொல்லவே வேண்டாம்.

 

மாநகரங்கள் தவிர, பிற ஊர்களில் இப்போதைய பெண்களுக்கும் சினிமாவுக்கும் சம்பந்தமே இல்லை என்றாகிவிட்டது. அது ஆண்களுக்கான கேளிக்கை.

 

சினிமாவுக்கும் பெண்களுக்கும் இடையே ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி என யோசிக்கும்போதே, சினிமாவில் வலம்வரும் பெண்களுக்கும், யதார்த்த பெண்களுக்கும் இடையேதான் எவ்வளவு இடைவெளி என்பது நினைவுக்கு வருகிறது!

ஹன்சிகா மோத்வானி, இலியானா, தமன்னா... என வெண்ணிறக் கதாநாயகிகள் யாருமே தமிழ்ப் பெண்களின் வாழ்க்கையை திரையில் வாழவே இல்லை.

 

வேலைவெட்டி இல்லாத, அழுக்கு டவுசர் தெரிய வேட்டி கட்டியிருக்கிற, சதா குடிக்கிற கதாநாயகன் பின்னால் காதலிக்கச் சொல்லி அலைகிறார்கள்.

 

அல்லது அப்படி தன் பின்னால் அலைகிற ரௌடிப் பையனை உருகி, உருகிக் காதலிக்கிறார்கள். திரையில் வரும் இந்த நாயகிகளில் யாருக்கும் செய்வதற்கு ஒரு வேலையும் இல்லை.

 

அழகழகான உடைகளில், அலங்காரங்களோடு தெருவில் திரிந்துகொண்டே இருக்கிறார்கள்; காதலிக்கிறார்கள்; கலர் கலர் ஆடைகளில் ஆடுகிறார்கள்.

எல்லா காலங்களிலும் பெரும்பான்மை நாயகிகள் இப்படி நாயகனுக்காகக் காத்துக்கிடப்பதிலேயே காலம் தள்ளியுள்ளனர்.

 

அந்தவிதத்தில் 80-களின் நாயகிகள் ரொம்பவே வித்தியாசமானவர்கள். வெளிநாட்டில் படித்துவிட்டு, மாட்டுவண்டி ஓட்டும் ஹீரோவின் பின்னால் காரில் ஹாரன் அடிப்பார்கள். பாப் கட், முட்டிக்கு மேல் இறுக்கமான உடை, அடர்ந்த லிப்ஸ்டிக்... என அடுத்த காட்சியில் குதிரையில் வருவார்கள்.

 

மிக நிச்சயமாக கூலிங்கிளாஸ் அணிந்திருப்பார்கள். இந்தப் பெண்களின் திமிரை அடக்குவதுதான், கதாநாயகனின் தலையாய வேலையாக இருக்கும். அந்தத் திமிரை அடக்குவது எளிதான வேலை.

 

அந்தப் பெண்ணை இழுத்து ஒரு முத்தம் கொடுத்தால் போதும், அடுத்த காட்சியில் நீள முடி வைத்து, மஞ்சள் புடைவை அணிந்து, தலை குனிந்து அந்தப் பெண் நடந்து வருவாள்.

 

இந்த அபத்தத்தைத் தாண்டியும், அந்த நாயகிகள் சிலரிடம் யதார்த்த பெண்களின் சாயல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கத்தான் செய்தன.

சரிதா, ரேவதி, சுஹாசினி, பானுப்ரியா போல சிலர் நம் சமூகப் பெண்களின் ஏதோ ஒரு பிம்பத்தை திரையில் பிரதிபலித் தார்கள்.

ஆகவே, ஆண்கள் இந்தப் பெண்களை குடும்ப லிஸ்ட்டில் சேர்த்துவிட்டு, அம்பிகா, ராதா, அமலா, நதியா போன்ற பெண்களை சைட் அடித்தார்கள்.

 

ஹன்சிகா மோத்வானிக்காகக் கை தட்டி விசில் அடிக்கும் ரசிகர்கள், கனவு காண்பது லட்சுமி மேனனையும், ஸ்ரீ திவ்யாவையும்தான்.

முன்பெல்லாம் பெண்கள் அதிக அளவில் திரையரங்குக்குச் சென்று வந்துள்ளதை நினைத்தாலே ஆச்சர்யமாக இருக்கிறது.

 

ஒரு காலத்தில் 11 மணி காட்சி எல்லா ஊர்களிலும் பெண்களுக்காகவே திரையிடப்பட்டது.

காலையில் வேகமாக வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, அக்கம்பக்கத்து பெண்கள் சேர்ந்து கூட்டம் கூட்டமாக தியேட்டருக்குச் செல்வார்கள்.

 

ஒரு படம் பார்த்துவிட்டு வந்தால், ஒரு வாரம் வரை கூடிக்கூடி அதைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள். இந்த 11 மணி காட்சிதான், பிறகு ஆண்களுக்கான 'அந்த மாதிரி’ப் படம் போடுவதற்கானது.

பெண்களுக்கான அந்த இடத்தைத் தொலைக்காட்சியால் பிடிக்கவே முடியவில்லை.

அது வீட்டுக்குள் மூச்சடைக்க வைத்துவிட்டது. தன் வயதுடைய பெண்களோடு வீட்டைத் தாண்டி சென்று அனுபவிக்கும் ஒரு சந்தோஷம் பெண்களுக்குப் பறிபோய்விட்டது.

இன்றைக்கும் பெண்கள் தியேட்ட ருக்கு வருகிறார்கள்.

அவர்களில் படத்தை விரும்பிப் பார்ப்பதற்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைவு.

 

காதலிக்கும்போது பெண்கள் காதலனுடன் சினிமாவுக்குச் செல்கிறார்கள்.

அதுவும் காதலிக்க இடம் இல்லாததால், திரையரங்கைத் தேர்வுசெய்கிறார்கள்.

 

இல்லையெனில், புதிதாக திருமணம் ஆனதும் கணவனுடன் படம் பார்க்கச் செல்வார்கள்.

 

முதல் குழந்தை கருவுறுவது வரை இந்தத் தியேட்டர் பயணம் தொடரும்.

அதன் பிறகு பிள்ளைகள் வளர்ந்து விஜய் படமோ, சிவகார்த்திகேயன் படமோ பார்த்தே ஆகவேண்டும் என்று தொந்தரவு செய்யும்போது, குடும்பத்தோடு பைக்கில் படம் பார்க்கக் கிளம்புவார்கள்.

'அங்காடித் தெரு’, 'பசங்க’ போன்ற குடும்பப் படங்களைப் பார்க்கலாம் எனக் குடும்பத் தலைவரோ, தலைவியோ முடிவு செய்துவிட்டால், அன்றைய வார இறுதியில் அந்தப் படத்துக்குச் செல்வார்கள்.

ஆக, படம் பார்க்கும் சந்தோஷத்துக்காக தியேட்டருக்குச் செல்லும் பெண்கள் குறைந்துவிட்டார்கள்.

மெட்ரோ சிட்டிகளில் கல்லூரிப் பெண்கள் இணைந்து படம் பார்க்க சிலருக்காவது வாய்ப்பு இருக்கிறது.

 

சிறு நகரங்களில் அந்த வாய்ப்பும் இல்லை. பெண்கள் தனியாக தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பது என்பது, கிட்டத்தட்ட டாஸ்மாக் பாருக்கு போய் மது குடிப்பதைப்போல அரிதான நிகழ்வு.

'7ஜி ரெயின்போ காலனி’ படம் வந்தபோது நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன்.

 

படம் நன்றாக இருப்பதாக விமர்சனங்கள் வாசித்தது, படம் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டியிருந்தது.

 

வீட்டோடு போய்ப் பார்க்கும் சாத்தியமே இல்லை. நினைவுதெரிந்து கடைசியாகக் குடும்பத்தோடு போன படம் 'சின்னக் கவுண்டர்’.

அதிலும் சுகன்யா தொப்புளில் பம்பரம்விடும் காட்சியில் அம்மா எழுந்து வெளியே போனார்.

'பிள்ளைங்களோடு உட்காந்து பார்க்கிற படமா இது?’ எனப் பல பெண்கள் நாகர்கோவில் யுவராஜ் தியேட்டரில் இருந்து வெளியே எழுந்து போனது நினைவிருக்கிறது. அன்றோடு குடும்பமாகப் போய் படம் பார்ப்பது எங்கள் வீட்டில் நின்றுபோனது.

 

'அனிதாவாகவே வாழ்ந்திருக்கிறார் சோனியா அகர்வால்’ என விகடனில் வந்த விமர்சன வரிகளைப் பெரிதாக்கி வடசேரி பேருந்து நிலையத்தில் பேனர் வைத்திருந்ததும் 'ரெயின்போ காலனி’க்குள் நுழையும் ஆர்வத்தை அதிகப்படுத்தியது.

 

துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொண்டு, சக்கரவர்த்தி தியேட்டரில் படம் பார்க்கப் போனேன். கூட்டம் அதிகம் இருந்த தியேட்டரில் என்னையும் சேர்த்து மூன்றே பெண்கள்.

 

இருவர், தத்தமது கணவருடன் வந்திருந்தார்கள். அன்று தியேட்டரே என்னை ஒரு தீவிரவாதிபோல வேடிக்கை பார்த்தது. படம் பார்த்து வீட்டில் மாட்டிக்கொண்டது தனிக் கதை.

 

ஆனால், படம் முடிந்ததும் ஒன்றே ஒன்றுதான் தோன்றியது,

'இந்தக் காதலிகள் செத்துப்போனாலும் பரவாயில்லை, ஒரு தடவை தன்னுடன் செக்ஸ் வைத்துவிட்டுச் செத்துப்போகட்டும்’ என்று சில சினிமா காதலர்கள் நினைக்கிறார்களே, இது எந்த மாதிரியான வியாதி என்று! இன்றும் அந்த நிலவரத்தில் மாற்றம் இல்லை.

 

இப்போதும் தனியாகச் சென்று சினிமா பார்ப்பது, பெண்களுக்கு அலர்ஜியான ஒன்றுதான்.

தியேட்டரில் 11 மணி காட்சி பார்த்த என் அம்மா தலைமுறைப் பெண்களும், அதற்கு முந்தைய தலைமுறைப் பெண்களும் இப்போது சினிமா பற்றி பேசுவதுகூட இல்லை.

 

ஆனால், பாக்யராஜ் படங்களோ, விக்ரமன் படங்களோ எப்போதாவது டி.வி-யில் வந்தால், விழுந்தடித்துக்கொண்டு ரிமோட்டைப் பிடுங்குகிறார்கள். அதற்கு முந்தைய தலைமுறைப் பெண்களுக்கு ரிமோட்டைப் பிடுங்கும் வழி தெரியாது.

 

சேனல் மாற்றும்போது தெரியும் எம்.ஜி.ஆரை ஏக்கத்தோடு பார்க்கிறார்கள்.

ஆண்கள், கதாநாயகிகளுக்காக தியேட்டரை நாடியதுபோல், இந்தப் பெண்கள் கதாநாயகர்களைத் தேடித்தான் திரையரங்குக்குச் சென்றிருக்கிறார்கள்.

 

எம்.ஜி.ஆர்., சிவாஜி, பாக்யராஜ் அளவுக்கு, இந்தப் பெண்களை வேறு எவரும் கவர்ந்தது இல்லை. அதிலும் சிவாஜிக்கு அண்ணன் ஸ்தானத்தைக் கொடுத்துவிட்டு, எம்.ஜி.ஆரை விழுந்து விழுந்து ரசித்திருக்கிறார்கள்.

 

'எம்.ஜி.ஆரு முக்கியமா... நான் முக்கியமா?’ என எத்தனையோ வீடுகளில் கணவன்-மனைவி சண்டைகள் நடந்ததை, செவிவழிக் கதைகளாகக் கேட்டிருக்கிறேன். 'எம்.ஜி.ஆர் படம் பார்க்கவிட்டாதான், அவர்கூட வந்து வாழ்வேன்!’ என முரண்டுபிடித்த பெண்கள், இப்போது பாட்டிகளாக நம்மோடு இருக்கிறார்கள்.

 

'மனசுல என்னை மட்டும்தானே நினைக்கிற?’ என்ற கேள்விகளை, அந்தப் பெண்களிடம் கேட்டிருக்கவே முடியாது. ஏனெனில், அவர்கள் கனவுகளில் எம்.ஜி.ஆர் எப்போதும் தொந்தரவு செய்துகொண்டே இருந்திருக்கிறார்.

 

சுவாரஸ்யமற்ற யதார்த்தத்தில் இருந்து நழுவி, அவர்கள் எம்.ஜி.ஆரை விடாது ரசித்துக் கொண்டாடியிருக்கிறார்கள்.

அவர்களுக்குத் தேவைப்பட்டவை குடும்பங்களில் இல்லாத ரொமான்ஸும், உடன் இருக்கும் பெண்களைப் புரிந்துகொண்டு, தன் ஆசைகளைத் தெரிவிக்க இடம் தருகிற அப்பாவித்தனமான ஆண்களும்தான்.

 

அந்த ரொமான்ஸ் ஏரியாவை சரியாக ஃபீல் செய்தவர் எம்.ஜி.ஆர்-தான். நாயகியை முழுக்கக் குளிக்கவிட்டு, பெண்கள் விரும்பும் சின்னச் சின்ன சில்மிஷங்களைச் செய்து, 'மீதி எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான். வீட்டுக்குப் போ’ என்று அவர் சொன்னது பெண்களுக்குப் பிடித்திருந்தது.

 

பாக்யராஜின் பெண்களிடம் ஓர் இயல்புத்தன்மை இருந்தது. தன் இயல்போடும் குறும்போடும் இருக்க நாயகியை அவர் அனுமதித்து இருக்கிறார்.

 

அந்தப் பெண்கள் தங்கள் காதலைத் துணிந்து சொன்னால், அவமானப்படுத்தாமல் புரிந்துகொள்வார்.

 

அப்பாவித்தனமான அவரது லுக்தான் அவரை பெண்கள் பக்கம் ஈர்த்திருக்க வேண்டும்.

 

அதன் பிறகு அரவிந்த்சாமி, மாதவன்... என பெண்கள் கொண்டாடிய நாயகர்களிடம் அந்த அப்பாவித்தனமும், மைல்டான பெண்மையும் கலந்திருப்பதைக் காண முடியும்.

'எல்லாமே என் ராசாதான்’ படம் பார்த்துவிட்டு வந்து குலுங்கிக் குலுங்கி அழுத பெண்ணைப் பார்த்திருக்கிறேன்.

'அவளுக்கு ராஜ்கிரண் போலவே ஒரு கணவன் இருந்தார்.

அதைச் சொல்லிப் புலம்பிக்கொண்டே இருந்தவர், தன் கோழிகளுக்கு இப்படிப் பெயர் வைத்தார்... 'மஞ்சப் புறா’, 'மாடப் புறா’.

 

தங்களுக்கான ஹீரோக்களைத் தொலைத்த பெண்கள், தங்கள் முகங்களையும் திரையில் தேடி ஏமாந்துபோய்விட்டார்கள். அழுக்குதான் அழகு என்ற எண்ணத்தில் இருந்து சினிமா ஹீரோக்கள் வெளியே வந்தால் நன்றாக இருக்கும். ஏனெனில், முத்தம் கொடுக்கக்கூட முகம் கழுவி பளிச்சென்று வரவேண்டியது அவசியம்.

 

தங்களைப் பிரதிபலிக்கிற பெண்களும் திரையில் இல்லை; தங்களை யதார்த்தத்தில் இருந்து கனவுக்கு அழைத்துச்செல்லும் நாயகர்களும் இல்லை என்ற காலகட்டத்திலேயே பெண்கள் திரையரங்கைவிட்டு விலகத் தொடங்கியிருக்கக்கூடும்.

ஆனால்... மராத்தி, மலையாளம், பெங்காலி சினிமாக்களுக்கு இன்றைக்கும் பெண்கள் போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள். ஏனெனில், அந்தப் படங்களில் அவர்கள் தங்களைக் காண்கிறார்கள்.

 

தமிழ்த் திரையில் 20 முதல் 30 வயதுடைய ஹீரோவின் காதல் அல்லது பகை.

இந்த இரண்டைத் தவிர சொல்வதற்குக் கதைகளே இல்லை. வேறு வயது ஆண்களையே கருத்தில் கொள்ளாதபோது, பெண்களைக் கணக்கில் எடுக்க வேண்டும் என நினைப்பது அதிகபட்ச பேராசை அல்லவா? வெகுஜனக் கலை ஊடகம் சரிபாதி பெண்களிடம் இருந்து விலகி இருப்பது அல்லது பெண்களை விலக்கிவைத்துச் செயல்படுவது முரணாகக்கூட இங்கே தோன்றவில்லை!

என் ஆச்சர்யம், ஒரு கொரியப் பெண்ணோ, ஈரான் பெண்ணோ நம் தமிழ்ப் படங்களைப் பார்த்தால், நம் சமூகத்தைப் பற்றி என்ன முடிவுக்கு வருவாள் என்பதுதான்.

 

'அங்கே ஆண்கள் எல்லோரும் திருடர்களும் முரடர்களுமாக இருக்கிறார்கள். அந்தச் சமூகத்தில் பெண்கள் மிகக் குறைவு.

 

இருக்கிற சில பெண்களும், ஆண்களை மகிழ்விக்க அவ்வப்போது அழகு உடைகளில், பளிச் மேக்கப்பில் வந்து ஆடிவிட்டுச் செல்பவர்கள்’ என்பதாக இருக்குமோ?

 

--- பேசலாம்..

 

ப்ரியா தம்பி 

 

மூலம் முகநூல்

 

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கட்டுரை அபராஜிதன்.நன்றி...தொடர்ந்து இணையுங்கோ

இரா முருகனின் "வட்டியும் முதலும் " தொடர் முடிய இப்போ பிரியா தம்பியின் "பேசாத பேச்செல்லாம் " தொடர் தான் ஆனந்தவிகடனில் வருகின்றது .

 

ஆனந்தவிகடனில் வரும் தொடர் தான் இங்கு இணைக்கப்படுள்ளது .இரா முருகனின் தொடர் மிக மிக ஆர்வமாக வாசித்துவந்தேன் அவ்வளவு அருமையான பதிவுகள் அவை .

 

பிரியா தம்பியின் பல பதிவுகளுடன் உடன் படமுடியாமல் வாசிக்கும் ஆர்வத்தை குறைத்துவிட்டிருந்தது .பல பதிவுகள் யதார்த்தர்த்தை மீறியதாக இருந்தது .

 

அதே போல ஆனந்தவிகடனில் எமது எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் " கடவுள் தொடங்கிய இடம் " தொடர்கதை வந்துகொண்டிருக்கின்றது .வெளிநாடுகளுக்கு புலம் பெயரும் எம்மவரின் அவலங்கள் தான் கதையின் மூலம் .தொடர்ந்து வாசித்துக்கொண்டே வருகின்றேன் ஆனால் முத்துலிங்கத்திற்கு வயது போய்விட்டது எழுத்தில் தெரிகின்றது .

இதன் மூலம் ஆனந்த விகடன் தான்.

 

நானும் ஆரம்பத்தில் தொடர்ந்து வாசித்துக் கொண்டு வந்தேன்..ஆனால் ப்ரியா தம்பியின் பல கருத்துகளுடன் உடன்பட முடியாமல் போக வாசிப்பதை நிறுத்தி விட்டேன்.



 

அதே போல ஆனந்தவிகடனில் எமது எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் " கடவுள் தொடங்கிய இடம் " தொடர்கதை வந்துகொண்டிருக்கின்றது .வெளிநாடுகளுக்கு புலம் பெயரும் எம்மவரின் அவலங்கள் தான் கதையின் மூலம் .தொடர்ந்து வாசித்துக்கொண்டே வருகின்றேன் ஆனால் முத்துலிங்கத்திற்கு வயது போய்விட்டது எழுத்தில் தெரிகின்றது .

 

அந்தக் கொடுமையை எப்படி வாசிக்கின்றீர்கள்? முதல் 3 அங்கங்களுடன் வாசிப்பதை நிறுத்தி விட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாசித்த வரைக்கும் இந்த கட்டுரையில் ஒரு பிழையையும் காணவில்லை. எதற்காக அர்ஜீன் அண்ணா, நிழலி ஆகியோர் இந்த கட்டுரையை எதிர்க்கிறார்கள் என சொல்ல முடியுமா?

  • தொடங்கியவர்

தெருவில், பூங்காவில், கடற்கரையில் என எங்கும் சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என ஆண்கள் இணைந்தே இருக்கிறார்கள்; உற்சாகமாக உரையாடுகிறார்கள்; கலந்து விளையாடுகிறார்கள்;

 

 

நிறையப் பயணிக்கிறார்கள். எல்லா வயதிலும் அவர்களுக்குச் சாத்தியப்படும் நட்பு, பெண்களுக்கு மட்டும் ஏன் எந்த வயதிலும் சாத்தியப்படுவதே இல்லை? 'பெண்களுக்கு இடையில் ஃப்ரெண்ட்ஷிப் ஏன் இருப்பதே இல்லை?’ மிக அதிகமாகக் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்றாக இது இருக்கக்கூடும்.

பெண்களோடு இணைந்து ஒரு பிக்னிக் சென்றால், அங்கேகூட பெரும்பாலும் ஒருமித்தக் கருத்து இருக்காது.

ஒருத்தி வடக்கே இழுத்தால், இன்னொருத்தி தெற்கே இழுப்பாள்.

அங்கே ஓர் ஆணின் கருத்துக்கும் யோசனைக்கும் நம்மால் மண்டையை ஆட்ட முடிகிறது.

 

ஆனால், இன்னொரு பெண் சொல்வதை நம்மால் கேட்கவே முடியவில்லை.

 

ஏன்? நண்பர்கள் குழுவில் ஒருவருக்கு நல்லது நடந்துவிட்டால், அதைக் கொண்டாடித் தீர்க்கும் ஆண் குணம், பெண்களிடம் இல்லவே இல்லையே ஏன்? கூடவே இருந்த தோழிக்குப் பதவி உயர்வு கிடைத்தால், பெண்கள் பதற்றமாகி விடுகிறார்களே... ஏன்? இப்படிப் பல 'ஏன்’கள்!

 

'இல்லியே... எங்க ஆபீஸ்ல நானும் என் ஃப்ரெண்டும் சேர்ந்தேதான் சாப்பிடுவோம்’ என யாராவது சொல்வார்கள்.

ஆனால், இப்படித்தான் பள்ளியில் பக்கத்து பெஞ்ச் பெண்ணோடு, திருமணம் ஆனதும் பக்கத்து வீட்டுப் பெண்ணோடு, அலுவலகத்தில் பக்கத்து ஸீட் பெண்ணோடு... என இருக்கும் இடம் சார்ந்து மட்டுமே நட்புகொள்ள வாய்க்கிறது.

 

பள்ளிப் படிப்பை நிறுத்தியதுமே, பள்ளித் தோழியை மறந்திருப்போம். நீண்ட கால ஆத்மார்த்த நட்பு என்பது, 100-ல் 98 பெண்களுக்கு இங்கு சாத்தியம் இல்லையே. ஏன்... ஏன்?

 

ஊரில் என் அம்மாவுக்கு என தனி செட் ஒன்று உண்டு.

 

கோயில், கல்யாண வீடுகள்... என இவர்கள் அனைவரும் இணைந்தே செல்வார்கள்.

 

மணிக்கணக்காக உட்கார்ந்து பேசுவார்கள். யாராவது ஒருவருக்கு தலைவலி வந்தால், விழுந்தடித்துக்கொண்டு சுக்குக் காபி தயாரிப்பார்கள்.

 

பௌர்ணமிக்கு கன்னியாகுமரி கோயிலுக்குச் சென்றுவிட்டு அம்மா வீட்டுக்குத் திரும்பி, அரை மணி நேரம் படுத்து எழுந்தால், அவரது தோழி சுசீலா வருவார். '

 

இந்தா பஸ் டிக்கெட்டுக்கு நீ சேர்த்துக் குடுத்த ஒரு ரூபா... சில்லறை மாத்திட்டு வந்தேன்’ என ஞாபகமாகக் கொடுப்பார்.

 

அம்மாவும் உடனே வாங்கிக்கொள்வார். அப்படியே வராந்தாவில் அமர்ந்தால், கோயிலுக்கு உடன் சென்ற இன்னொரு தோழியைப் பற்றி குற்றம்குறை கூறிப் பேசிக்கொள்வார்கள்.

 

ஆனால், அடுத்த வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்குக் கடலை மாலை போட சிரித்தபடி அவ்வளவு ஒற்றுமையாகச் செல்வார்கள்.

பெருந்தன்மையோ, பரந்த பார்வையோ பெண்களுக்கு அடிப்படையிலேயே இல்லை.

 

தோழிகளுக்குள் சின்னப் பிரச்னை என்றாலும் பெரிதுபடுத்தி நட்பை முறித்துக்கொள்வார்கள் என்பதுதான் பெண்கள் மீதான ஆண்களின் எப்போதுமான குற்றச்சாட்டு.

யோசித்தால், அதில் உண்மை இருப்பதை மறுக்க முடியாது. உலக அரசியல் வரை தங்கள் விரிந்த அறிவால் அளக்க முடிந்த பெண்களுக்கும், இன்னொரு பெண்ணோடு நட்பாக இருப்பது இங்கு சிக்கலே.

 

எல்லா இடத்திலும் அவர்கள் தனித்தே இயங்குகிறார்கள். அதேபோல் தனித்து இயங்கும் இன்னொரு பெண்ணை, உடனே எதிரியாகப் பார்க்கிறார்கள்.

 

ஆண் எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள் தங்களுக்குள் முரண்படுகிறார்கள்தான். அதே நேரத்தில் தேவைக்கு உடன்படவும் செய்கிறார்கள். அவர்கள் இணைந்திருக்கும் பல நிகழ்வுகளைக் காண முடிகிறது.

 

ஆனால், சக பெண்களுக்காக ஓயாது உழைப்பதாகச் சொல்லிக்கொள்பவர் களால், சக பெண்களுடன் கொஞ்சம் நேரம் உட்கார்ந்து பேச முடியவில்லையே... ஏன்? வீடுகளில் மறுக்கப்பட்ட அங்கீகாரத்தை, பெண்கள் வெளியில் எதிர்பார்க்கிறார்கள்.

 

ஆனால், அது தனக்கு மட்டும்தான் வேண்டும் என நினைக்கிறார்கள். அந்த அங்கீகாரத்தை சக பெண்களுக்கு அளிக்கத் தயங்குகிறார்கள்!

நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? இந்தச் சிக்கல் பள்ளிகளில் இருந்தே தொடங்குகிறது என்றே தோன்றுகிறது.

கடைசி பெஞ்ச் மாணவனோடு முதல் பெஞ்ச் மாணவன் சகஜமாகப் பேசுவதுபோல், முதல் ரேங்க் எடுக்கும் மாணவி சுமாராகப் படிக்கும் மாணவியோடு பேசுவதே இல்லை.

 

அவளைப் பார்க்கும் பார்வையிலேயே அலட்சியம் தெரியும்.

 

தன்னைவிட அழகாக இருக்கும் பெண்ணோடு நட்பாக இருப்பதிலும் நமக்கு சிக்கல் இருக்கிறது.

 

தோழியோடு நடந்து செல்லும்போது தெருவோர பைக் இளைஞன் அவளைப் பார்த்துவிட்டால் போச்சு. மறுநாள், 'நீ தனியா போய்க்கோ. உன்கூட நான் வரலை!’ என அந்தப் பெண்ணுடனான நட்பைத் துண்டித்துவிடுவதுதான் நடக்கிறது.

தன்னோடு நன்றாகப் பேசிக்கொண்டிருக்கும் சக மாணவன், இன்னொரு பெண்ணோடு பேசினால், அந்த நிமிடத்தில் இருந்து அந்தப் பெண் முகத்தில் எதிரி முத்திரை குத்தப்படும்.

வேலை செய்யும் இடத்தில் 'டீம் ஒர்க்’கூட பெண்களுக்குச் சாத்தியப்படுவது இல்லை.

 

பெர்சனல் ஒப்பீடுகளே அங்கே முதன்மை பெறும். கார்ப்பரேட் அலுவலகங்களில் இதெல்லாம் இல்லை என ஒரு மாயத்தோற்றம் இருக்கலாம். ஆனால், அங்கேயும் நிலைமை இதுதான்.

 

ஒரு பெண் புரமோஷனில் மேல் அதிகாரியாகச் சென்றால், ஆணுக்குப் புகைவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. பெண்ணுக்கு அதைவிட அதிகமாகப் புகை கிளம்ப வேண்டிய அவசியம் என்ன?

பழைய வீட்டின் எதிரே மாடி வீட்டுப் பெண்ணும், கீழ் வீட்டுப் பெண்ணும் இணைபிரியாத தோழிகள்.

 

காலை, இரவு என விதவிதமான உணவுகளோடு மாறி மாறி ஏறி இறங்கிக் கொண்டிருப்பார்கள். இருவருக்கும் ஐந்து வயதில் குழந்தைகள் இருக்கிறார்கள்.

 

எங்கு சென்றாலும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு இணைந்தே செல்வார்கள். அவர்கள் படிப்பதும் ஒரே பள்ளியில்தான். அந்தப் பிள்ளைகளின் ஒற்றுமையைப் பார்த்தால், அம்மாக்களின் நட்பைத் தோற்கடித்துவிடுவார்களோ எனத் தோன்றும்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை, மாடி வீட்டுக் குழந்தையை கீழ்வீட்டுக் குழந்தை கீழே தள்ளிவிட, போர் ஆரம்பித்தது.

 

குழந்தைகளின் அறியாமையாக அதைப் பார்க்காமல், இரு பெண்களும் சண்டையிட்டு, மறுநாள் முதல் முகத்தைத் திருப்பிக்கொண்டு நடக்க ஆரம்பித்தனர். குழந்தைகளும், அவர்களது கணவர்களும்கூட வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டனர்.

 

பெண்கள் ஏன் எப்போதும் சின்னச் சின்ன விஷயங்களை லென்ஸ் வைத்துப் பெரிதுபடுத்திக்கொண்டே இருக்கிறார்கள். மன்னித்து மறத்தல் என்பதை ஏன் கற்றுக்கொள்ளவே இல்லை?

கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் ஆரம்பித்து வரலாறு, இலக்கியம்... என எங்கு தேடினும் பெண்கள் இருவர் நட்பாக இருந்ததற்கான அறிகுறியையே காணோம்.

 

சங்க காலத்தில் ஒளவையாருக்குக்கூட அதியமான் என்கிற ஆணோடுதான் நட்பு இருந்தது. சினிமாவில் யோசித்தால், ரஜினி-மம்முட்டி ஆரம்பித்து ஆர்யா-சந்தானம் வரை ஆண்களின் நட்புதான்.

 

நான் பார்த்த வரை வேறு நாடுகளின் திரைப்படங்களில்கூட பெண்களின் நட்பைக் காணோம். அரசியலில் ஜெயலலிதா-சசிகலா நட்பை அரிதான உதாரணமாகக் குறிப்பிடலாம். ஆனால், அதிலும் எத்தனை கேலி, கிண்டல்கள் அவர்கள் நட்பைப் பற்றி!

நட்போ, காதலோ அதை உறுதிப்படுத்தவும், வலிமைப்படுத்தவும், தொடர்ந்து பராமரிக்கவும் அதிக நேரம் தேவைப்படும்.

 

அலுவலகத்தில் அவ்வப்போது பேசிக்கொண்டிருப்பதோ, பஸ் நிறுத்தத்தில் '45B போயிடுச்சா?’ என்று கேட்டு சிரிக்கும் நேரத்திலோ, ஒரு நட்பை வளர்த்தெடுக்க முடியாது.

 

முதல் பத்தியில் குறிப்பிட்டதுபோல, ஆண்கள் தங்கள் நண்பர்களுடன் பூங்காக்களில், கடற்கரைகளில், சாலைகளில் எங்கும் மணிக்கணக்காகப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

 

பெண்களுக்கு நட்புக்கு என்று ஒதுக்க தன் அன்றாட அலுவல்களில் அத்தனை நேரம் எங்கே இருக்கிறது? போனில் அழைப்பு வந்தவுடன், 'ஃப்ரெண்ட் கீழ வெயிட் பண்றான். பார்த்துட்டு வந்துடுறேன்’ எனக் கிளம்பிச் சென்று, சுமார் நான்கு மணி நேரம் கழித்து வீடு திரும்புதல் பெண்களால் முடியாது இல்லையா?

ஆண்கள் தங்கள் நட்பைக் கண்டடையும் இடமும், வளர்த்து எடுக்கும் இடமும் பெரும்பாலும் டீக்கடைகளும் பார்களும்தான்.

 

காலை 7 மணிக்குத் தூங்கி எழுந்து, நிதானமாக நடந்து டீக்கடைக்குச் சென்று, நண்பர்களோடு டீ குடித்து, 8.45 - மணிக்கு வீடு திரும்பி 'நண்பேண்டா’ எனக் காலரைத் தூக்கிவிட்டுக்கொள்கிறார்கள்.

 

ஆனால், பெண்கள் இருவர் இணைந்து இங்கே இன்னும் டீக்கடைக்குக்கூடச் செல்ல முடியாது. துணைக்கு ஓர் ஆண் இருந்தால், கொஞ்சம் கூச்சத்தோடு செல்லலாம்.

 

நாகர்கோவிலில் இருக்கும்போது பேருந்து நிலையங்களில் ஆண்கள் அரட்டையும், சிரிப்புமாகக் கண்ணாடி டம்ளரில் சுற்றிச் சுற்றி டீ குடிப்பதை அவ்வளவு பொறாமையோடு பார்த்திருக்கிறேன்.

 

5 ரூபாய் இருந்தால் குடித்துவிட முடிகிற டீதான் அது. ஆனால், ஊர்களில் அந்த இடம் எங்களுக்கு மறுக்கப்பட்டு இருந்தது. அப்படியான டீ குடிக்கும் ஓர் அனுபவத்துக்காக நான் 600 கிலோமீட்டர்கள் பயணித்து இப்படி ஒரு மாநகரை வந்தடைய வேண்டியிருந்தது!

ஆனால், இங்கும் டீக்கடைகளின் சிகரெட் புகையும், மட்டமான பார்வைகளும், 'எங்க ஏரியா, உள்ள வராதே!’ எனப் பெண்களைத் துரத்துவதாகவே இருக்கிறது.

 

'பார்’ பற்றி தனியாகச் சொல்ல வேண்டாம். ஆக, பெண்கள் தோழிகளைச் சந்திக்க வேண்டும் என்றால், காபி ஷாப்களுக்குச் சென்று 300 ரூபாய்க்கு காபி வாங்கவேண்டி இருக்கும். பூங்காக்களில் மாலைகளில் ரிட்டையர்டு தாத்தாக்கள் ரிலாக்ஸாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்க, பாட்டிகள் தினமும் சந்தித்தால்கூட அவசரமாக ஒரு சிரிப்பைப் பரிமாறிவிட்டு வீட்டுக்கு ஓடுகிறார்கள். அவர்கள் மூளையில் வீடு, சமையல், குழந்தைகள்... என பொறுப்புகள் எப்போதும் ஆக்கிரமித்துக்கிடக்கின்றன. இதில் எங்கே தோழியைப் பற்றி யோசிக்க?

அடுத்த தலைமுறை பெண்களுக்கும் 'ஆத்மார்த்த நட்பு’ வாய்ப்பதற்கான அறிகுறிகளையே காணோம்.

 

வார விடுமுறை நாட்களில் சிறுவர்கள் இணைந்து தெருக்களில் விளையாடும்போது, சிறுமிகள் அன்றைக்கும் அம்மாவை ஒட்டியபடி வீட்டுக்குள் வளையவந்துகொண்டிருக்கிறார்கள்.

 

அதிகம் ஆள் இல்லாத தெருக்களில், டாப்ஸை இழுத்து இழுத்து விட்டபடி, சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டு விளையாடும் ஒன்றிரண்டு சிறுமிகளுக்கும்கூட வயதுக்கு வந்ததும், அதற்குத் தடை விதிக்கப்படும். பள்ளிகளில், கல்லூரிகளில் கிடைக்கும் நட்பும் திருமணத்துக்குப் பிறகு எத்தனை பேருக்குத் தொடர்கிறது?

திருமணத்துக்குப் பிறகு தன் தோழிகளோடு பெண்கள் வெளியே செல்ல எத்தனை குடும்பங்கள் அனுமதிக்கின்றன?

 

ஆண்கள் தங்கள் 40 வயதுகளில், மனைவி, குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு கல்லூரி நண்பர்களோடு இணைந்து ஒரு சுற்றுலா செல்ல முடிகிறது. அதே வயதில் பெண்கள் அப்படிச் செய்ய முடியுமா? அபூர்வமாக அனுமதி கிடைக்கும் வீடுகளிலும், அந்தப் பெண் தன் குழந்தைகளை உடன் அழைத்துச் செல்ல வேண்டும்.

 

அப்படி அழைத்துச் செல்லும்போது அவர்களது பாதுகாப்பை ஒவ்வொரு நிமிடமும் அவள் உறுதிப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இரண்டு நிமிடங்கள் அவள் காணாமல் போய்விட்டாலும், அவர்கள் அடையும் பதற்றத்தை விவரிக்கவே முடியாது. இதில் எங்கே பயணத்தை ரசிப்பது?

நண்பனின் போன் வந்தால் மணிக்கணக்காக மொட்டை மாடிக்குப் போய்ப் பேச, நண்பனை ஏர்போர்ட்டில் டிராப் செய்ய, அழைத்து வர, நண்பனுக்கு ஒரு பிரச்னை என்றால் எல்லாவற்றையும் போட்டுவிட்டு விரைவாகச் செல்ல, நண்பனின் கல்யாணத்துக்காக ஓடி ஓடி உழைக்க, நண்பனுக்குத் தேவைப்பட்டால் கடன் கொடுக்க, நடுத்தெருவில் நின்று மணிக்கணக்காகப் பேச, ஊர் சுற்ற... என ஓர் ஆண் என்ன செய்வதற்கும் குடும்பமும் நேரமும் அனுமதிக்கின்றன. ஆனால், இதில் ஒன்றைச் செய்வதற்குக்கூட ஒரு பெண்ணுக்கு உரிமையோ, நேரமோ இல்லை!

 

பெண்கள் தாங்கள் விரும்பியபடி இருக்க அனுமதிக்கும் வீடுகளும் இருக்கத்தான் செய்கின்றன.

 

ஆனால், அவற்றை பெண்கள் பயன்படுத்திக்கொள்வதே இல்லை. பிள்ளையை விட்டுவிட்டு வெளியில் வந்து, ஒரு சாக்லேட் சாப்பிட்டால்கூட பெண்களுக்குக் குற்றவுணர்வு வந்துவிடுகிறது.

 

ஆக, வீடு அதுவாகவே ஒருபோதும் நம்மை விடுவிக்காது. நாமாக அவ்வப்போது 'எஸ்கேப்’ ஆனால்தான் உண்டு.

இரண்டு நாட்கள் தோழிகளோடு ஊர் சுற்றலுக்குப் பின், தொடர் சிரிப்புக்குப் பின் சாவியைச் சுழற்றியபடி வீடு திரும்பும் சந்தோஷத்தை முழுமையாக உணரும் ஒருநாளில், நமக்கான நேரத்தை நாம் கண்டெடுப்போம்.

அப்படியான புரிதல் வரும்போதுதான், சக பெண் மீது நேசம் அதிகரிக்கும். அந்த நேசமே அவள் மீதான அவநம்பிக்கையை உடைத்துத் தள்ளும். அன்றைக்கு, 'என் ஃப்ரெண்டைப்போல யாரு மச்சி’ என்கிற பாடல் பெண்களுக்கும் பின்னணியில் ஒலிக்கும்!

- பேசலாம்..

 

  • தொடங்கியவர்

நல்லதொரு கட்டுரை அபராஜிதன்.நன்றி...தொடர்ந்து இணையுங்கோ

 

 

இரா முருகனின் "வட்டியும் முதலும் " தொடர் முடிய இப்போ பிரியா தம்பியின் "பேசாத பேச்செல்லாம் " தொடர் தான் ஆனந்தவிகடனில் வருகின்றது .

 

ஆனந்தவிகடனில் வரும் தொடர் தான் இங்கு இணைக்கப்படுள்ளது .இரா முருகனின் தொடர் மிக மிக ஆர்வமாக வாசித்துவந்தேன் அவ்வளவு அருமையான பதிவுகள் அவை .

 

பிரியா தம்பியின் பல பதிவுகளுடன் உடன் படமுடியாமல் வாசிக்கும் ஆர்வத்தை குறைத்துவிட்டிருந்தது .பல பதிவுகள் யதார்த்தர்த்தை மீறியதாக இருந்தது .

 

அதே போல ஆனந்தவிகடனில் எமது எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் " கடவுள் தொடங்கிய இடம் " தொடர்கதை வந்துகொண்டிருக்கின்றது .வெளிநாடுகளுக்கு புலம் பெயரும் எம்மவரின் அவலங்கள் தான் கதையின் மூலம் .தொடர்ந்து வாசித்துக்கொண்டே வருகின்றேன் ஆனால் முத்துலிங்கத்திற்கு வயது போய்விட்டது எழுத்தில் தெரிகின்றது .

 

 

இதன் மூலம் ஆனந்த விகடன் தான்.

 

நானும் ஆரம்பத்தில் தொடர்ந்து வாசித்துக் கொண்டு வந்தேன்..ஆனால் ப்ரியா தம்பியின் பல கருத்துகளுடன் உடன்பட முடியாமல் போக வாசிப்பதை நிறுத்தி விட்டேன்.

 

அந்தக் கொடுமையை எப்படி வாசிக்கின்றீர்கள்? முதல் 3 அங்கங்களுடன் வாசிப்பதை நிறுத்தி விட்டேன்

 

 

நான் வாசித்த வரைக்கும் இந்த கட்டுரையில் ஒரு பிழையையும் காணவில்லை. எதற்காக அர்ஜீன் அண்ணா, நிழலி ஆகியோர் இந்த கட்டுரையை எதிர்க்கிறார்கள் என சொல்ல முடியுமா?

 

 

 

 

நன்றி ரதி அக்கா , வருகைக்கும் கருத்துக்கும் 
 
அர்ஜுன் முன்னர் கோபிநாத் இன்  நீயும் நானும் வந்ததே படித்தீர்களா ?
 
ராஜு முருகன் சாமானிய தான் சந்தித்த மக்களை பற்றி மிக சுவை பட எழுதியிருந்தார் அதனால் படிக்க ஆர்வமாகவும் சுவையாகவும் இருந்திச்சு 
 
அது  e  புக்  ஆகவும் கிடைகிறது online  இல் free  ஆக 
 
ப்ரியா தம்பி எழுதுவது ஒரு பெண்ணின் பார்வையில் எழுதுவதால் சிலவற்றினை 
 
ஆண்களால் ஏற்க   முடியாமல்   இருக்க கூடும்  
 
வருகைக்கு நன்றி நிழலி 
 
 
ப்ரியா தம்பி முக நூலில்  இதற்கென்றே page  உருவாக்கி அதில் ஆனந்த விகடனில் எழுதுவதை இணைத்து கொண்டிருக்கிறார் 
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அபராஜிதன் இணைப்பிற்கு

  • தொடங்கியவர்

வீட்டுக்கு அருகே இருக்கும் ஒரு பெண்ணை தொடர்ந்து கவனிக்கிறேன். அரசுப் பணியில் இருக்கும் பெண்; நான்கு வயதில் ஒரு குழந்தையும் உண்டு.

 

தெருவில் நடக்கும்போது ஒரே நேர்கோட்டில் அவர் நடந்து பார்த்ததே இல்லை. இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாகத் தடுமாறிக்கொண்டே இருப்பார்.

 

தலையைக் குனிந்தபடி, வீட்டுச் சுவர்களை உரசியபடி அவரது ஒவ்வோர் அடியிலும் ஏதோ பதற்றம் தெரியும்.

 

 

மாலை, பார்க்கில் குழந்தையை விளையாடவிட்டு ஆலமரத்தின் அடியே ஒளிந்துகொள்வதுபோல் உட்கார்ந்திருப்பார்.

 

அருகே யாரேனும் உட்காரச் சென்றால்கூட, அங்கிருந்து நகர்ந்துவிடுவார். ஆரம்பத்தில் இது ஏதாவது நோயாக இருக்குமோ என்றுகூட யோசித்திருக்கிறேன்.

 

 

பல நாள் கண்ணாமூச்சிக்குப் பின், அந்தப் பெண் பேச ஆரம்பித்ததும், அவரின் பிரச்னை புரிந்தது. அவர் விவாகரத்தானவர். குழந்தைக்கு ஒரு வயதாக இருக்கும்போதே, கணவரை விவாகரத்து செய்துவிட்டு தன் வீட்டுக்குத் திரும்பிவிட்டார்.

 

வீட்டில் அவர் இருப்பதால், அண்ணனுக்குத் திருமணம் தாமதம் ஆகிறது.

 

வீட்டாரின் குத்தல் பேச்சு, அவரை மிகவும் காயப்படுத்தி இருந்தது. பெர்சனல் வாழ்க்கையைப் பற்றி பேசிவிடுவார்களோ என்ற பயத்திலேயே, அவர் பிறருடன் பேசுவதை நிறுத்தியிருக்கிறார்.

 

 

எதையும், யாருடனும் பகிர்ந்துகொள்ள முடியாத, மிகத் தனிமையான வாழ்க்கை.

 

 

 

மிகப் பெரும்பாலான பெண்களுக்கு ஒரு திருமணம் முறிந்துபோனால், கணவர் இறந்துவிட்டால், கல்யாணம் நடக்காவிட்டால், திருமண வாழ்க்கை எதிர்பாராதபடி அமைந்துவிட்டால்... அதோடு தனது வாழ்க்கை முடிந்துபோனதாக, நல்ல இருட்டான மூலையாகத் தேர்ந்தெடுத்து உட்கார்ந்துவிடுகிறோம்.

 

 

படித்த, படிக்காத, நகரம், கிராமம் வேறுபாடின்றி பெரும்பாலான பெண்கள் இப்படித்தான் இருக்கிறோம்.

நண்பரின் உறவினர் பெண், எம்.டெக்., படித்துவிட்டு சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாள்.

 

கருத்து வேறுபாடுகளால் கணவன் விலகிச் சென்றுவிட்டார். வீட்டில் தனித்தீவாகிப்போன அந்தப் பெண், அலுவலகம் செல்லாமல், உறவினர்களைத் தொடர்புகொள்ளாமல், கதவைத் திறக்காமல், அறைக்குள்ளேயே இருக்க ஆரம்பித்திருக்கிறார். 'ஆளையே காணோமே..!’ என உறவினர்கள் ஊரில் இருந்து வந்து கதவை உடைத்துப் பார்த்தபோது, பல நாட்கள் சாப்பிடாமல், உடலில் எறும்புகள் மொய்க்க மயங்கிக்கிடந்தார்.

 

 

பிறகு, மருத்துவமனையில் சேர்த்து, அவர் உடல்தேறிவிட்டார். ஆனாலும், மனதை அவரால் சரிசெய்யவே முடியவில்லை. வேலையை விட்டுவிட்டு, கோவையில் உள்ள ஆன்மிக மையத்தில் சேர்ந்துவிட்டார்.

ஒரு பிரிவோ, இழப்போ நடந்துவிட்டால், ஆண்கள் துயரை முழுக்க அனுபவித்துவிட்டு அதில் இருந்து விலகிவிடுகிறார்கள்.

 

பெண்கள்தான் அதற்குள்ளேயே கிடந்து உழல்கிறோம். ஏனெனில், ஆண்களுக்குச் செய்வதற்குப் பிடித்த விஷயங்கள் என்று நிறைய உள்ளன.

 

பெண்களுக்கு அப்படி ஏதாவது இருக்கிறதா? ஆழ்ந்து யோசித்தால் நம்மில் பலரும் வேலையைக்கூட கடமைக்குத்தான் செய்கிறோம்.

 

அதனால்தான் ஓர் இழப்பு வந்தால், அதிகம் தடுமாறிப்போகிறோம். 'கல்யாணத்துக்கு முன்னாடி நிறைய படம் பார்ப்பேன். ஆனா, இப்போ சினிமா, புத்தகம்... எல்லாம் கல்யாணம் ஆனதோட போச்சு. குழந்தை பெத்த பிறகு டான்ஸ்லாம் எதுக்கு?’ என ஏதோ ஒரு சாக்கு சொல்லி பிடித்தமான விஷயங்களை ஒவ்வொன்றாக விட்டுவிடுகிறோம்.

 

ஆனால், ஆண்கள் அப்படி தங்களைச் சுருக்கிக்கொள்வதே இல்லை. நாம் ஆண்களிடம் இருந்து இதைக் கற்றுக்கொள்வதற்குப் பதிலாக, 'கல்நெஞ்சக்காரா’ எனத் திட்டித் தீர்க்கிறோம்!

மவுலிவாக்கம் கட்டட விபத்தில் கணவன் இறந்துபோக, கையில் குழந்தையோடு அழுதுகொண்டே அங்கே நின்ற ஒரு பெண்ணின் உருவம் என்னை அதிகம் தொந்தரவு செய்தது.

 

ஏதோ ஒரு வேலை கிடைத்தால், தன்னையும் குழந்தையையும் அவர் பார்த்துக்கொள்ளக்கூடும். ஆனால் தனிமையை விரட்டவும், அடுத்தடுத்த நாட்களை நம்பிக்கையோடு நகர்த்தவும் அவர் அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கும்.

 

தனக்கு என்று ஏதாவது Passion இருக்கிற அல்லது வேலையை Passion-ஆக எடுத்துக்கொள்கிற பெண்கள் மட்டுமே இங்கே தொடர்ந்து தங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முடிகிறது.

 

 

திரைப்பட நடிகைகளை வியந்து, ரசித்துப் பேச, பெண்களுக்கு என்ன இருக்கிறது? ஆனால், ஒரு நடிகையைப் பற்றி யோசித்தால், வியப்பு, பிரமிப்பு, பெருமிதம் என அடுக்கடுக்கான ஆச்சர்யங்கள் தோன்றுகின்றன.

 

அவரைப் பற்றி பேசும்போதெல்லாம் நண்பர்களிடமும் அந்த வியப்பைக் கவனிக்கிறேன். அவர்... நயன்தாரா!

சமீபத்தில் எந்த நடிகைகளையும்விட மீடியா அதிகம் வெளிச்சம் பாய்ச்சியது நயன்தாரா மீதுதான்.

 

தொடர்ந்து காதல்கள், அதில் தோல்விகள் என பரபரப்பிலேயே இருந்தார். அவர் இடத்தில் வேறு எந்தப் பெண்ணாக இருப்பினும், அதோடு பெட்டியைக் கட்டிக்கொண்டு முடங்கிப்போயிருப்பார்கள்.

 

ஆனால், அத்தனை ஏமாற்றங்களையும் சொதப்பல்களையும் ஏற்றுக்கொண்டு, மீண்டும் சினிமாவில் நம்பர் ஒன்னாக தன்னை முன்னிறுத்திக்கொண்டதால்தான் அவரைப் பற்றி பேசவேண்டியிருக்கிறது.

 

 

'நீ என்னதான் திறமைசாலியாக இருந்தாலும், நாங்க உன்னோட தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றித்தான் பேசுவோம்’ என மல்லுக்கட்டி நிற்கும் ரசிகர்களையே, 'என் பெர்சனல் எப்படி வேணா இருக்கட்டும்.

 

 

அது என்னோடது. நான் நடிகை. என் தொழில்ல நான் சரியா இருக்கேனா... இல்லையா? என் நடிப்பு உனக்குப் பிடிச்சிருக்கா... இல்லையா? அவ்ளோதான்!’ என்ற இடத்தில் நிறுத்தியிருக்கிறார் அவர்.

 

 

இன்றைக்கு ஆண், பெண் பேதமின்றி அவரைப் பிடித்திருக்கிறது. அவரது படங்களைப் பார்க்கும் எவரும், பிரபுதேவாவையோ, சிம்புவையோ யோசிப்பது இல்லை.

 

அவர்கள் நயன்தாராவை, அவரது தோற்றத்தை, அழகை, நடிப்பை மட்டுமே பார்க்கிறார்கள்.

 

இது சாதாரணமாக நடந்துவிடக்கூடிய விஷயம் அல்ல. சாதாரணப் பெண்களுக்கே, 'அய்யய்யோ... நாலு பேரு என்ன சொல்லுவாங்க!’ என்ற பதற்றம் அதிகம் எனில், எப்போதும் கேமராக்களின் கண் பார்வையிலேயே இருக்கும் நடிகைகளுக்கு எவ்வளவு பதற்றம் இருக்கும்?

 

 

இதற்குப் பின்னால் நயன்தாரா என்கிற நடிகை தன் தொழில் மீதுகொண்ட Passion இருக்கிறது. அவர் அவ்வப்போது மாறும் டிரெண்டுக்கு ஏற்ப தன்னை அப்டேட் செய்துகொண்டே இருக்கிறார். நடிகைக்கு தோற்றம்தான் முக்கியம் என்பதால், அதில் அவர் எடுத்துக்கொண்ட கவனம் அசாத்தியமானது.

 

 

இரண்டு வாரங்களுக்கு முந்தைய 'ஆனந்த விகடன்’ அட்டையை, ரயிலில் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த ஓர் அம்மா தன்னை மறந்து சொன்னது, 'எவ்ளோ அழகா இருக்குல்ல இந்தப் பொண்ணு’! அதன் பின்பு சக பெண்களோடு அவர் நயன்தாரா பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

 

 

பொதுவாக இப்படியான பேச்சில், நடிகைகளின் தனி வாழ்க்கைதான் கிசுகிசுக்கப்படும். மாறாக, 'இனி நடிக்க மாட்டேன்னு சொன்ன பொண்ணு திரும்ப வந்து இத்தனை படத்துல நடிக்கிறது பெரிய விஷயம்லா!’ எனப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

 

 

சினிமாவை ஒரு வேலையாக, பணத்துக்காக கடனே என்று செய்திருந்தால், நயனுக்கு இது சாத்தியம் ஆகி இருக்காது. தொழிலின்மீதான காதல், அவரது சொந்த துயரங்களைக் கடந்து செல்லும் வலிமையைத் தந்திருக்கிறது.

 

தான் மட்டும் அல்லாமல், மற்றவர்களையும் தன் சொந்த வாழ்க்கையில் இருந்து மாற்றி நிறுத்தியதும் அதனால்தான் சாத்தியமானது. 'இனி நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டேன்.

 

திரும்பவும் நடிக்கப் போனா, சொந்த வாழ்க்கை பத்தியே பேசுவாங்களே!’ என அவர் யோசித்து இருந்தாலும், இந்த வெற்றி சாத்தியம் இல்லை.

 

 

ஆண் ஆதிக்கம் நிறைந்த உலகத்தில், பெண்களால் வேலையில் முன்னுக்கு வருவது ஈஸி இல்லை என்பதுகூட நம்முடைய தயக்கத்தை மறைப்பதற்கான சாக்குப்போக்கு என்றுதான் தோன்றுகிறது.

 

 

ஏனெனில், சினிமாவைவிட ஆண்கள் நிறைந்த, அவர்களின் ஆதிக்கம் நிறைந்த துறை வேறு இருக்க முடியாது. அங்கே ஒரு பெண் தன்னை நிலைநிறுத்த முடியும் எனில், வேறு எந்தத் துறையில் முடியாமல்போகும்!

 

 

இதேபோல ஒரு கதாநாயகியின் ரீ-என்ட்ரி, மலையாளத்தில் பரபரப்பை விதைத்திருக்கிறது. மலையாளத்தில் மஞ்சு வாரியர் கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு நடிக்க வந்திருக்கிறார்.

 

 

அவரது ரீ-என்ட்ரி படம் 'How old are you?’ மலையாளத்தில் சூப்பர் ஹிட். மஞ்சு ஒரு பேட்டியில், 'நடிக்காமல் இருந்த 14 வருடங்களில் நான் நானாகவே இல்லை.

 

எனக்குப் பிடித்த துறையில் நான் இல்லை என்பதுதான் என்னுடைய பெரிய இழப்பு. அதை மீட்டு எடுக்க எவ்வளவு தனிப்பட்ட இழப்புகளையும் தாங்கிக்கொள்வேன்’ என்று சொல்லியிருந்தார்.

 

 

ரீ-என்ட்ரிக்காக அவர் தன் குடும்பத்தைவிட்டு விலகவேண்டி இருந்தது. ஆனாலும் அவர் சொன்னது, 'நான் இப்போதுதான் நானாக இருக்கிறேன்’.

 

 

உண்மையில் பெண்களில் பெரும்பாலோர் நினைத்துக்கொண்டிருப்பதுபோல், தனிப்பட்ட துயரம் ஒன்றும் கடக்க முடியாதது அல்ல. விரும்பி ஈடுபட, அதில் தன்னைத் தொலைக்க, தன்னைக் கரைக்க, தனக்கு என்று விருப்பங்களும் லட்சியங்களும் வைத்திருப்பவர்கள் எந்தத் துயரத்தையும் எளிதில் கடந்துபோவார்கள்.

 

 

முதல்வர் ஜெயலலிதாவை அரசியல் காரணத்துக்காக விரும்பாத பெண்கள்கூட, அவரது ஆளுமையை மனதுக்குள் ரசிக்கவே செய்வார்கள்.

 

அவரது முகத்தில் தெரியும் அதிகாரத்தில், அலட்சியத்தில், திமிரில் தன்னை ஒரு நிமிடம் பொருத்திப் பார்க்காத பெண்கள் மிகக் குறைவே. அந்த ஆளுமை ஒரே நாளில் வந்தது அல்ல.

 

 

அதற்குப் பின்னால், அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் ஏராளமான துயரங்கள் இருக்கக்கூடும். அதைக் கடப்பதற்கு, 'அரசியல்’ என்ற மிகப் பெரிய உலகை அவர் நேசிக்கிறார்!

 

 

அரசியல், சினிமா... என்று இல்லை. நம் அருகிலேயே அப்படியான பெண்கள் சத்தம் இல்லாமல் வாழ்ந்துகொண்டேதான் இருக்கிறார்கள்.

 

 

தங்களுக்கான விஷயங்களை ஒவ்வொரு நாளும் தேடுவதின் மூலம், தங்களைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

 

 

நாகர்கோவிலில் பக்கத்து வீட்டுப் பெண் நளினி. நான் பார்க்கும்போது அவருக்கு 40 வயது இருக்கும். கணவர் மாரடைப்பில் மரணம், மகன் விபத்தில் மரணம்... எனத் தொடர்ச்சியாகத் துயரங்களைச் சந்தித்த வாழ்க்கை அவருடையது.

 

அவற்றை எல்லாம் துடைத்துப்போட்டுவிட்டு அவர் எழுந்துகொண்டே இருக்கக் காரணம், அவர் சொந்தமாக நடத்தி வந்த சிறிய கடையும், அவருக்குப் பாடத் தெரியும் என்பதும்தான்.

 

 

பகல் முழுக்க கடை, இரவு முழுவதும் தனியாக அமர்ந்து பாடல் என, தன்னைச் சோர்வு அடையாமல் பார்த்துக்கொண்டார். 'கல்நெஞ்சு’ எனப் பக்கத்துவீட்டுப் பெண்களின் வசவுகளில் இருந்தும், அவரை இந்தப் பாடல்கள்தான் காப்பாற்றியிருக்கும்.

 

 

யாரும் எதிர்பாராத ஒரு நாளில் உடன்படித்த பெண்கள் தத்தமது மகள்களுக்கு மாப்பிள்ளை தேடும் பருவத்தில், நளினி இன்னொரு திருமணம் செய்துகொண்டார்.

 

 

நாகர்கோவில் மாதிரியான ஓர் ஊரில், ஒரு பெண் அப்படிச் செய்வதற்கு மிகப் பெரிய தன்னம்பிக்கை வேண்டும். தன்னை நேசித்தல் என்பது, நளினிக்கு அப்படி ஒரு தன்னம்பிக்கையை வழங்கியிருக்கக்கூடும்!

 

 

 

சென்னையில் தோழி கீதாவைச் சந்திக்கும் எவருக்கும் முகத்தில் ஓர் உற்சாகம் வரும். ஃபேஸ்புக்கில் சக நண்பர்களை உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பார்.

 

 

சோர்வான ஒரு வார்த்தை யைக்கூட அவரிடம் இருந்து நான் கேட்டது இல்லை. எல்லா பெண்களையும்போல வேலை, குடும்பம்... என அழுத்தங்கள் அவருக்கும் இருக்கக்கூடும்.

 

தொடர்ச்சியாகப் பயணிப்பது, புகைப்படம் எடுப்பது, ஆவணப்படங்கள் இயக்குவது, பறை கற்றுக்கொள்வது... என, தன்னை புதுப்பித்துக்கொண்டே இருக்கிறார்.

 

எனக்குப் பரிசாக அவர் அனுப்பிய புத்தகத்தில், என் பெயர் எழுதுவதற்கு ஒரு நிற பேனா, அவர் பெயருக்கு வேறொரு பேனா, கொரியர் கவரின் மேலே பென்சில் சீவலால் ஒரு சின்ன பூ, அதைக் கட்ட அழகான ஒரு கயிறு... என, ஒரு புத்தகம் அனுப்புவதில் அவருக்கு இருந்த ரசனையைக் கண்டு வியந்தேன்.

 

 

உண்மையில் தன்னை மெருகேற்றும், தன்னை நேசிக்கும் பெண்களின் பொழுதுகள் இப்படி ரசனையானவைதான். கீதா எப்போதும் சொல்வார், 'நாம் ஒன்றைச் செய்யாமல் இருப்பதற்குக் காரணம், நமக்கு அதில் அக்கறை இல்லை என்பதுதான்.

 

 

சுற்றி இருப்பவர்களைக் குறைசொல்வது சாக்குபோக்குத்தான்’! நாம் அதிகம் பேர், இந்தச் சாக்குபோக்குகளைச் சாக்குக்கணக்கில் கட்டிவைத்திருக்கிறோமோ எனத் தோன்றுகிறது.

 

அடுத்த முறை ஆலமரத்தடியில் ஒதுங்கும் பார்க் பெண்ணைப் பார்க்கும்போது, அவரிடம் கீதா பற்றி பேச வேண்டும் என இப்போது தோன்றுகிறது!

- பேசலாம்..

 

Edited by அபராஜிதன்

  • தொடங்கியவர்

நன்றி அபராஜிதன் இணைப்பிற்கு

 

 

நன்றி சுபேஸ் வருகைக்கு :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.