Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீர்ப்பாயத்தின் முன் வைகோவின் உணர்வுபூர்வமான வாதம்

Featured Replies

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை குறித்த தீர்ப்பு ஆய விசாரணை, ஒக்டோபர் 26ம் ,27ம் திகதிகளில் குன்னூர் நகராட்சி அரங்கத்தில், தீர்ப்பு ஆய நீதிபதியான டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. மிட்டல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இரண்டு நாள்களிலும் விசாரணையில் பங்கேற்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, 26ம் திகதி சாட்சியம் அளித்த இரண்டு காவல்துறை அதிகாரிகளையும், 27ம் திகதி சாட்சி அளித்த காவல்துறை அதிகாரியையும் குறுக்கு விசாரணை செய்தார். அடுத்து தமது வாதங்களை பின்வருமாறு முன்வைத்தார்.

வைகோவின் வாதம்..

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்படி, 1992 ஆம் ஆண்டு முதல் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையும், இந்த ஆண்டில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறையும் மத்திய அரசு தடை பிறப்பித்து வருகின்றது.

இந்தத் தடை சட்டத்திற்கும், நீதிக்கும் அடிப்படையிலேயே முரண் ஆனது. இதன் மொத்தக் கட்டுமானமும், ஒரேயொரு அடித்தளத்தின் மீதுதான் எழுப்பப்பட்டு இருக்கின்றது. அதுதான், “தமிழ் ஈழம்” என புலிகள் கேட்கின்ற சுதந்திரத் தனிநாடு கோரிக்கை ஆகும்.

இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையே ஆதாரம் இல்லாதது, சிதறி நொறுங்கிப் போகக் கூடியது.

“தமிழ் ஈழம்” என்ற மையக் கருத்தை வைத்துத்தான் தடை கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. எனவே, இதன் பின்னணியை ஆராய வேண்டும். “ஈழம்” என்ற சொல் பல்லாயிரம் ஆண்டுகளாக வழங்கி வருகின்றது.

பண்டைத் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றது. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை உள்ளடக்கிய தமிழர் தாயகத்தைக் குறிப்பது ஆகும். இந்த நிலப்பரப்பில் தமிழர்கள் வரலாற்றின் வைகறைக் காலத்தில் இருந்து வாழ்ந்து வருகின்றார்கள்.

இலங்கை என்பது ஒரு தீவு. அங்கே இரண்டு தேசங்கள் உள்ளன. ஒன்று தமிழர் தேசம் மற்றொன்று சிங்களர் தேசம். 16 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை தமிழர்கள் தனி அரசு அமைத்து சிறந்த நாகரிகத்துடன் ஆட்சி நடத்தி வந்தனர்.

1619 இல் போர்த்துகீசியர் படை தமிழர் தேசத்தைக் கைப்பற்றியது. 1638 இல் டச்சுப் படைகள் கைப்பற்றின. 1796 இல் பிரித்தானியப் படைகள் மொத்தத் தீவையும் கைப்பற்றின. தங்கள் நிர்வாக வசதிக்காக தமிழர் தேசத்தையும், சிங்களர் தேசத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தனர்.

1948 பெப்ரவரி 4 இல் பிரித்தானியர் இலங்கையை விட்டு வெளியேறியபோது, ஆட்சியை சிங்களர் கைகளில் ஒப்படைத்து விட்டுச் சென்றனர். தமிழர்களின் இறையாண்மை மறுக்கப்பட்டது.

இந்திய வழித்தோன்றலான பத்து இலட்சம் தமிழர்களின் குடி உரிமை பறிக்கப்பட்டது. கல்வி, வேலைவாய்ப்பு அனைத்துத் துறைகளிலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு, இரண்டாந்தரக் குடிமக்கள் ஆக்கப்பட்டனர். அடிமைகளாக நடத்தப்பட்டனர்.

தமிழர்களின் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் தாக்கித் தகர்க்கப்பட்டன. யாழ்ப்பாண நூலகம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

ஈழத்துக் காந்தி என அழைக்கப்பட்ட தந்தை செல்வா அவர்கள் தலைமையில், தமிழர்கள் அறவழியில், அமைதி வழியில் உரிமைகளுக்காகப் போராடினர். அதற்குப் பரிசு, குண்டாந்தடியடி, துப்பாக்கிச் சூடு. தமிழ்ப் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

நீதி கேட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதனால், இனி சிங்களவரோடு சேர்ந்து வாழ முடியாது என்று தமிழர்கள் தீர்மானித்தனர். தந்தை செல்வா தலைமையில் அனைத்துத் தமிழ் அமைப்புகளும் ஒன்றுகூடி, 1976 மே 14 ஆம் நாள், பண்ணாகம் வட்டுக்கோட்டையில் சுதந்திர, இறையாண்மையுள்ள தமிழ் ஈழ நாடு அமைக்கப் பிரகடனம் செய்தனர். இது ஒரு நாட்டைப் பிரிக்கின்ற போராட்டம் அல்ல, இழந்த சுதந்திரத்தை மீண்டும் பெற, தமிழர்கள் நடத்துகின்ற விடுதலைப் போராட்டம் ஆகும்.

நீதிபதி அவர்களே, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைத் தங்களிடம் ஆவணமாகத் தந்து இருக்கின்றேன். அதன் முக்கியமான பகுதிகளை இதோ வாசிக்கின்றேன்:

“ஐரோப்பியர்கள் எங்கள் தேசத்தை ஆக்கிரமித்தனர். அவர்கள் வெளியேறிய பின்பு, எங்கள் மொழி, எங்கள் நிலம், எங்கள் உரிமை அனைத்தையும் அழிக்கின்ற முயற்சியில் சிங்களவர்கள் ஈடுபட்டனர்.

எனவே, சுதந்திரத் தமிழ் ஈழம் அமைப்போம். அது இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கியதாக இருக்கும். இலங்கையில் வாழும் ஈழத்தமிழ் மக்களும், உலகின் பல பகுதிகளில் வசிக்கின்ற ஈழத்தமிழர்களும், அவர்களுடைய வழித்தோன்றல்களும் இதன் குடிமக்கள் ஆவார்கள்.”

இந்தத் தீர்மானம்தான் தமிழ் ஈழத்தின் ‘மேக்னா கார்ட்டா’ ஆகும். இதன்பின்னர், சிங்கள இராணுவம் கொடூரமான தாக்குதல்களை நடத்தி, தமிழ் இனப் படுகொலை செய்ததால், ஈழத்தமிழ் இளைஞர்கள் குறிப்பாக விடுதலைப்புலிகள், ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

மத்திய அரசு வழக்கறிஞர்: “புலிகள் மீதான தடையைப் பற்றி மட்டும்தான் பேச வேண்டும், பழைய வரலாறெல்லாம் இங்கே சொல்லக் கூடாது“ என்றார்.

வைகோ: தமிழ் ஈழம் என்ற சொல்லை அடிப்படையாக வைத்தும், புலிகளின் ஆயுதப் போராட்டத்தைக் காரணமாக காட்டியும்தான் தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது. பிரச்சினையின் மூலாதாரத்தை ஆராயாமல் வேறு எதைப் பேசுவது? நான் நீதிபதியின் நேரத்தை அதிகமாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை என்றார். நீதிபதி தொடர்ந்து பேச அனுமதித்தார்.

வைகோ: நீதிபதி அவர்களே, விடுதலைப் புலிகள் ஏன் ஆயுதப் போராட்டம் தொடங்கினார்கள்? ஐ.நா. சபையின் மனித உரிமைப் பிரகடனத்தின் முன்னுரையில் சொல்லப்படும் முக்கியமான கருத்தை இங்கே முன்வைக்கின்றேன்.

“அடக்குமுறையையும் சர்வாதிகாரத்தையும் எதிர்த்து, ஆயுதப் போராட்டப் புரட்சியை நோக்கித் தள்ளப்படாமல் இருக்க வேண்டுமானால், மனித உரிமைகள் சட்டப்படியான அதிகாரத்தால் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிடுகின்றது.

எனவே ஒரு அரசாங்கமே ஆயுத பயங்கரவாதத்தை ஏவும்போது, அதை எதிர்க்க ஆயுதம் ஏந்தத்தான் நேரும். இதைத்தான் குற்றக் கூண்டில் நின்றவாறு நெல்சன் மண்டேலா சொன்னார். இதைத்தான் பிரபாகரன் செய்தார். புலிகள் ஆயுதப் போராட்டம் நடத்தினர்.

தடைக்காக மத்திய அரசு சொல்லும் இரண்டாவது காரணம் என்ன தெரியுமா?

“தமிழ் ஈழம் என்ற கொள்கையை விடுதலைப்புலிகள் விட்டுவிடவில்லை. அதற்காகப் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆள் திரட்டுகிறார்கள். தமிழ்நாட்டிலும் அதற்கு ஆதரவு திரட்டப்படுகிறது.”

இதில் என்ன தவறு? தமிழ் ஈழம் என்பது அவர்களின் இலட்சியம். அது எனக்கும் உன்னதமானது. அதைப் பேசுவதில் என்ன தவறு இருக்க முடியும்? ஜனநாயகத்தின் அடிப்படையே பேச்சு உரிமைதானே?

இதற்கும் மத்திய அரசு வழக்குரைஞர் எதிர்ப்புத் தெரிவித்தார்.

உடனே வைகோ, விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன். இன்றும் ஆதரிக்கின்றேன்; நாளையும் ஆதரிப்பேன் என இந்திய நாடாளுமன்றத்தில் பேசியதைப் பொதுக்கூட்டத்தில் மேற்கோள் காட்டிப் பேசியதற்காகத்தான் பொடா சட்டத்தின் கீழ், 19 மாதங்கள் வேலூர்ச் சிறையில் அடைக்கப்பட்டேன்.

சிறையில் இருந்தவாறே உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தேன். “தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை அதன் இலட்சியத்தை ஆதரித்துப் பேசுவது குற்றமா? பொடா சட்டப் பிரிவின் கீழ் வருமா?’ என்று கேள்வி எழுப்பி இருந்தேன்.

இதற்கு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில்,

“பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதுதான் குற்றமே தவிர, தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது குற்றம் ஆகாது” எனக் கூறி இருக்கின்றது.

தமிழ் ஈழம் என்பதற்கு விடுதலைப்புலிகள் வரையறுத்த நில எல்லை எது? இதுதான் இங்கே முக்கியமான கேள்வி.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 ஆம் தேதி மாவீரர் நாள் உரை ஆற்றுவார். அந்த மேடையின் பின்புறத்தில் தமிழ் ஈழ வரைபடம் வைக்கப்பட்டு இருக்கும். நீதிபதி அவர்களே, அந்த ஆவணங்களை உங்களிடம் நான் தாக்கல் செய்து இருக்கின்றேன்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவரான தளபதி சதாசிவம் கிருஷ்ணகுமார் என்ற கிட்டு, 1990 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் நாள், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜூரிச் நகரில் மாவீரர் நாள் உரை ஆற்றினார். அப்போது கூறினார்:

அகதிகள் பராமரிப்பைக் கவனிக்கின்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர், ‘உங்கள் தமிழ் ஈழத்தின் எல்லைகள் எவை?’ என்று கேட்டார்.

ஒருகணம் நான் திடுக்கிட்டுப் போனேன். யோசித்தேன். அவரிடம் சொன்னேன்:

“இலங்கையின் வரைபடத்தை எடுத்துப் பாருங்கள். (நீதிபதி அவர்களே, கிட்டு குறிப்பிட்டது இலங்கையின் வரைபடம் தென் கிழக்கு ஆசியாவின் வரைபடம் அல்ல, இந்தியாவைச் சேர்த்த வரைபடம் அல்ல.) எங்கெல்லாம் இந்தத் தீவில் அரச இராணுவத்தின் குண்டுகள் வீசப்பட்டு இருக்கின்றதோ, எங்கெல்லாம் தமிழர்களின் இரத்தம் திட்டுத்திட்டாகத்தேங்கி இருக்கின்றதோ, அந்தப் பகுதிகளை எல்லாம், ஒரு தூரிகை கொண்டு வண்ணத்தைப் பூசிப் பாருங்கள். அதுதான் தமிழ் ஈழம் என்று சொன்னேன்” என்று குறிப்பிட்டார்.

எனவே, தமிழ் ஈழம் குறித்த விடுதலைப்புலிகளின் கருத்து நிரூபிக்கப்பட்டு விட்டது. தமிழ்நாட்டின் ஒரு பிடி மண்ணைக் கூட அவர்கள் சேர்க்க நினைக்கவில்லை.

மத்திய அரசு வழக்கறிஞர் குறுக்கிட்டு , “வைகோ பிரச்சினையை வேறு பக்கம் கொண்டு போகிறார்” என்றார்.

இதற்கு வைகோ,

தமிழ்நாட்டையும் சேர்த்துத்தான் தமிழ் ஈழம் கேட்கிறார்கள் என்றால், தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியும் அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து, சுதந்திரத் தமிழ் ஈழத்தை ஆதரித்து ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினார்களே, தமிழ்நாட்டையும் சேர்த்து ஈழம் என்றால், இப்படித் தீர்மானம் நிறைவேற்றி இருப்பார்களா?

அடுத்து ஒரு காரணத்தை மத்திய அரசு சொல்லுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள புலிகளின் ஆதரவாளர்களும், புலம்பெயர் ஈழத்தமிழர்களும், விடுதலைப்புலிகளின் தோல்விக்கு இந்திய அரசுதான் காரணம் என்று குற்றம் சாட்டுகின்றார்கள். இது இந்தியாவின் முக்கியத் தலைவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

இந்தக் குற்றச்சாட்டு கேலிக்கூத்தானது, நகைப்புக்கு உரியது. நான் மட்டுமா? ஓய்வு பெற்ற நீதிபதிகள் இந்திய அரசைக் குற்றம் சாட்டுகின்றார்கள். நான் கலந்து கொண்ட ஒரு மேடையில் பேசிய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர், ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்திய அரசின் தலையீட்டைக் கண்டித்தார்.

டில்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இராஜேந்திர சச்சார், டப்ளின் தீர்ப்பு ஆயத்தில் பங்கேற்றார். ‘ஈழத்தமிழர் படுகொலைக்கு நீதி வேண்டும்’ என்றார். குல்தீப் நய்யார், அருந்ததி ராய் போன்ற எழுத்தாளர்கள் இந்திய அரசைக் குற்றம் சாட்டினார்கள். ஏன் இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் ராஜபக்ச, ‘இந்தியாவின் உதவியால்தான் போரில் வெற்றி பெற்றோம்’ என்று சொல்லவில்லையா? உண்மையைச் சொன்னால் மத்திய அரசுக்கு ஏன் சுடுகிறது? இது எப்படி இந்திய அரசியல் தலைவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்?

முக்கியத் தலைவர்களின் பாதுகாப்பை இந்தத் தடைக்கு ஒரு காரணமாக மத்திய அரசு சொல்லுகிறது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்படி, விஐபி பாதுகாப்பு ஒரு காரணமாக ஆக முடியாது.

இங்கே ஐந்து பேர் சாட்சியம் அளித்து இருக்கின்றார்கள். தமிழர் பாசறை, தமிழ்நாடு விடுதலைப் படை, தமிழ்நாடு விடுதலை முன்னணி, இப்படிப் பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களைக் கைது செய்ததாகச் சொன்னார்கள்.

அவர்களுடைய கொள்கைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் என்ன சம்பந்தம்? அவர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பு உண்டு என்பதற்கு ஆதாரம் எதையாவது காட்டி இருக்கின்றார்களா? இல்லை.

காஷ்மீர் தீவிரவாதிகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பு உண்டு என்றும் மத்திய அரசு குற்றம் சாட்டுகிறது. இது அப்பட்டமான பொய். அப்படி எந்தத் தொடர்பும் கிடையாது என்று நான் அழுத்தமாகச் சொல்வேன்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஆறு பேர்களைக் கைது செய்தோம் என்று ஐந்தாவது சாட்சி இங்கே சொன்னார். அதுகுறித்து நான்கு சாட்சிகள் நீதிபதிக்கு முன்னால் குற்ற இயல் நடைமுறைச் சட்டம் 164 ஆவது பிரிவின் கீழ் வாக்குமூலம் கொடுத்தார்கள்’ என்றும் சொன்னார்.

சாட்சிகளைக் கொண்டு வந்து நீதிபதிக்கு முன்னால் நிறுத்திய காவல்துறையினர், விடுதலைப்புலிகள் என்று குற்றம் சாட்டியவர்களைக் கொண்டு வந்து நீதிபதிக்கு முன்னால் நிறுத்தி, அதே 164 ஆவது பிரிவின் கீழ் ஏன் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கவில்லை?

ஒப்புதல் வாக்குமூலங்கள் அனைத்தும் காவல்துறையிடம் கொடுத்ததுதான். இது அவர்களே பொய்யாகப் புனைந்து எழுதிக்கொண்ட கட்டுக்கதை. தமிழ்நாடு கியூ பிராஞ்ச் போலீசுக்கு இதுதான் வேலை.

நீதிபதி அவர்களே, உலகத்தின் பல நாடுகளில் தமிழர்கள் வாழ்கின்றோம். தமிழ்நாட்டில் ஏழரைக் கோடிப் பேர் இருக்கின்றோம். இலங்கையில் நடைபெற்றது தமிழ் இனப் படுகொலை. இலட்சக்கணக்கான தமிழர்கள் குழந்தைகள் பெண்கள் ஆயுதம் ஏந்தாத அப்பாவிகள் வயதானவர்கள் சிங்கள இராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டனர். ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் நியமித்த, மார்சுகி தாருஸ்மன் தலைமையிலான மூவர் குழு தந்த அறிக்கையை வாசித்தால் கல் நெஞ்சமும் கலங்கும். வேதனையால் துடிக்கும்.

2009 இல் விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களை மௌனிக்கிறோம் என்று அறிவித்தார்கள். அதன்பின் அவர்கள் இராஜதந்திர முறையில், பிரச்சார முறையில், தங்கள் இலட்சியத்திற்கு ஆதரவு தேடுகின்றார்கள்.

விடுதலைப் புலிகள் மீது இந்தியா தடை விதித்து இருப்பதால், உலகத்தின் எந்த நாட்டுக்கும் சென்று தஞ்சம் புக முடிகின்ற ஈழத்தமிழர்களால், குறிப்பாக இளைஞர்களால் தமிழ்நாட்டுக்கு வர முடியவில்லை. புலிகள் என்று முத்திரை குத்திப் பொய்வழக்குப் போடுகிறது காவல்துறை. இந்த நிலையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சார்ந்த யாராவது இந்தியாவுக்கு வர முடியுமா? இந்தத் தீர்ப்பு ஆயத்தில் வாதாட முடியுமா?

நான் புலிகளின் ஆதரவாளன். என் போன்ற ஆதரவாளர்களையும் குறிப்பிட்டுத்தான் இந்தத் தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது. அதனால்தான் உங்கள் முன் வந்து வாதாடுகிறேன்.

புலிகள் மீதான தடைக்கான அடிப்படைக் காரணமே தகர்ந்து விட்டதால், தடையை நீடிப்பது நியாயம் அல்ல. விடுதலைப்புலிகள் மீதான தடை சட்டத்திற்கு எதிரானது நீதிக்கும் முரணானது. தமிழர்களுக்கு நாதி இல்லையா?

எனவே, நீதிபதி அவர்கள், புலிகள் மீதான தடையை உறுதி செய்யாமல், நீதி வழங்குமாறு வேண்டுகிறேன் என தனது வாதத்தினை முன்வைத்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

வைகோவின் வாதம். நன்றாக இருந்தது.
அண்மையில்.... பல வியக்கத்தக்க தீர்ப்புகளை வழங்கிய, இந்திய நீதிமன்றம்,
இதற்கும்... நல்லதொரு தீர்ப்பை தரும் என எதிர்பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா என்ற குரங்குக்குமுன் தூக்கணாங் குருவிகளில் ஒன்று தங்கள் கூடுகளின் அழகுபற்றி விபரித்திருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது. :(:o

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய நீதிமன்றத்தின் முன்னான வை.கோ ஐயாவின் இந்த வாதம்... இந்திய வீடுகளில்.. மாமியார் முன்னாடி மருமகள் வைக்கும் வாதத்துக்கு ஒப்பானது. இந்திய நீதித்துறை என்பது.. இந்திய மாமியார்கள் மாதிரி. லேசில.. நியாயத்துக்கு வளைஞ்சு கொடுக்காது. :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் கேட்டு வருத்தப்பட்ட நீதிபதி மிட்டல் தடையை நீடித்து தீர்ப்பு வழங்குவார். :icon_idea: இருந்தாலும் நியாயத்தை எடுத்துப் பேசிய வைகோ ஐயாவுக்கு நன்றி..!

ஏதோ இந்தியா மாத்திரம் புலிகளை தடை செய்த மாதிரி இருக்கு பலர் கருத்து .

 

புலிகளை தடை செய்த நாடுகளில்  இனி இருக்கமாட்டோம் என்று ஒரு முடிவுக்கு வருவோம் . :icon_mrgreen:

விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும் என தொடர்ச்சியாக முயற்சி எடுத்து வரும் வைகோ ஐயா மற்றும் அனைவருக்கும் நன்றி.

செய்திக்கு நன்றி விஷ்வா.

டில்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இராஜேந்திர சச்சார், டப்ளின் தீர்ப்பு ஆயத்தில் பங்கேற்றார். ‘ஈழத்தமிழர் படுகொலைக்கு நீதி வேண்டும்’ என்றார். குல்தீப் நய்யார், அருந்ததி ராய் போன்ற எழுத்தாளர்கள் இந்திய அரசைக் குற்றம் சாட்டினார்கள்.

காஷ்மீர் பிரச்சினை, மணிப்பூர் பிரச்சினை போன்றவற்றில் அம்மக்களுக்காக குரல் கொடுத்து அருந்ததி ராய் எழுதிய கட்டுரைகளின் மொழிபெயர்ப்பை முன்னர் வாசித்திருக்கிறேன்.

ஆனால் ஈழத்தமிழர்களின் பிரச்சினை பற்றி இவருக்கு சரியான புரிந்துணர்வு இருக்குமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது.

இதில் கூறப்பட்டிருப்பது போல் அவர் இந்தியாவை குற்றம் சாட்டியிருந்தால் அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் மாதம் பிறக்கும் நேரத்தில்

 

ஐயா வைகோவின் வாதம் நோவுக்கு ஒத்தடம் கொடுத்தது  போல் இருக்கிறது.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

மத்திய அரசின் நாடளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் வெங்கையா நாயுடு விடுதலை புலிகளின் மீதான தடையை நீக்கும் திட்டமெதுவும் மத்திய அரசுக்கு இல்லை என்று பேட்டியில் சொன்னார்.

பிறகு என்ன வெங்காயத்துக்கு இந்த தீர்ப்பாயத்தை கூட்டுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 

மத்திய அரசின் நாடளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் வெங்கையா நாயுடு விடுதலை புலிகளின் மீதான தடையை நீக்கும் திட்டமெதுவும் மத்திய அரசுக்கு இல்லை என்று பேட்டியில் சொன்னார்.

பிறகு என்ன வெங்காயத்துக்கு இந்த தீர்ப்பாயத்தை கூட்டுகிறார்கள்.

 

"அம்மா தாயே பிச்சைபோடுங்க" என்ற பிச்சைக்காரன் குரல்கேட்டு வெளியே வந்த மருமகள், "பிச்சையில்லை போ" என்று விரட்டினாள். மருமகளைத் தொடர்ந்துவந்த மாமியார்  பிச்சைக்காரனைத் திரும்பக் கூப்பிட்டு "இவள் யார் உனக்குப் பிச்சை இல்லையென்று சொல்ல? நான் சொல்கிறேன், உனக்குப் பிச்சையில்லை போ!" என்று விரட்டினாள். :icon_mrgreen:  
 
இந்த வெங்காயத்துக்குத்தான் தீர்ப்பாயத்தைக் கூட்டுகிறார்கள். :D  :lol:  
 
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன?

வைகோ விளக்கம்

மலேசியாவின் பினாங்கு நகரில் நடைபெற்ற அனைத்துலக தமிழ் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு நவம்பர் 12 ஆம் தேதி, நான் சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தேன். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணித் தலைவர்களும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும் விமான நிலைய வளாகத்தில் வரவேற்கக் காத்திருந்தனர். அவர்கள் விமான நிலையத்திற்குள் அத்துமீறி நுழையவும் இல்லை.

விமான நிலையத்தை விட்டு நான் வெளியே வந்தவுடன், வாசலில் காத்திருந்த பத்திரிகை நிருபர்களிடம் பேட்டி கொடுத்துவிட்டு நடந்து வந்துபோது, திரண்டிருந்த தொண்டர்கள் மாலைகளும், கைத்தறி ஆடைகளும் அணிவித்தனர். அங்கிருந்து அனைவரும் நடந்தே தொலைவில் உள்ள வெளிவாசலை நோக்கிச் சென்றோம்.

வெளிநாடுகளுக்குச் செல்லும்போதோ, திரும்பி வரும்போதோ வழி அனுப்புவதையோ, வரவேற்பதையோ பொதுவாக நான் விரும்புவதில்லை. பல நேரங்களில் நான் வருகின்ற தேதியைக்கூடச் சொல்லாமல், விமான நிலையத்தில் இறங்கி வீட்டிற்குச் சென்றிருக்கிறேன்.

இம்முறை பினாங்கு மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க பினாங்கு பிரகடனம் வெளியிடப்படுவதற்கு நான் முக்கியக் காரணமாக இருந்தேன் என்பதால், கழகத்தினர் வரவேற்பு ஏற்பாட்டைச் செய்த செய்தி, நான் புறப்படும் நேரத்தில்தான் தெரிய வந்தது.

நான் பிறந்த நாள் விழா கொண்டாடுவதில்லை. கழகத் தோழர்கள் ஆர்வத்தோடு இந்த வரவேற்பை செய்திருந்தனர். வெளிவாசலை ஒட்டி குதிரைகள் பூட்டப்பட்டிருந்த சாரட் வண்டி நிறுத்தப்பட்டிருந்தது. அதைத் தவிர்க்க வேண்டும் என்று நான் தோழர்களிடம் கூறினேன். சாரட் வண்டியின் குதிரைகளுக்கு முன்னால் காவல்துறையினர் நின்று தடுத்தபோது கழகத் தோழர்களுக்கும், காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஏதாவது அமளி ஏற்பட்டுவிடக்கூடாது, குதிரைகள் மிரண்டு காவல்துறையினருக்கு காயம் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற கவலையோடு சாரட் வண்டியில் ஏறி நின்று கழகத் தோழர்களைக் கண்டித்து அறிவுரையாகப் பேசினேன். சாரட் வண்டி ஒரு அடிகூட நகரவில்லை.

அதன்பின்னர் நான் சாரட் வண்டியைவிட்டு இறங்கி, தொண்டர்களோடு நடந்துசென்றபோது, தொண்டர்களைக் காவல்துறையினர் தடுத்ததில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த நேரத்தில்கூட தொண்டர்களைத்தான் நான் கடுமையாகக் கண்டித்தேன். தொண்டர்களைக் கை வைத்துத் தள்ள முயன்ற ஒரு போலிÞ அதிகாரியிடம், ஏன் பொறுப்பில்லாமல் நடந்துகொள்கிறீர்கள்? நான் இன்னும் சற்று தூரத்திலேயே காரில் ஏறிச்செல்ல இருக்கிறேன். நீங்கள் தொண்டர்கள் மீது கை வைத்தால் விபரீதம் ஏற்படும் அல்லவா? பிரச்சினைக்கு நீங்கள்தானே காரணம் என்று அந்தக் காவல்துறை அதிகாரியிடம் நான் பேசிக்கொண்டிருந்தபோது, எடுக்கப்பட்ட புகைப்படம் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.

சாரட் வண்டியில் செல்லவேண்டும் என்று நான் வாக்குவாதம் செய்ததுபோன்ற தோற்றத்தை இப்புகைப்படம் ஏற்படுத்துகிறது. நான் சாரட் வண்டியில் ஏறிச் சிறிது தூரம் சென்றதாக தவறான தகவல் ஓரிரு ஏடுகளில் வெளிவந்துள்ளது

சில தலைவர்கள் தமிழ்நாட்டுக்குள்ளேயே பிரயாணம் செய்கிறபோது, பலமணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பொதுமக்கள் அவதிக்கு ஆளாவதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

நான் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டபோதும், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல், பொதுமக்களுக்கு சிறிதளவு தொல்லையும் ஏற்படாமல் நானும், எங்கள் இயக்கத் தொண்டர்களும் செயல்பட்டோம் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். எங்கள் இயக்கத்தினர் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது. நடந்தது என்ன? என்பதை பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்காகவே இந்த விளக்கத்தைத் தந்துள்ளேன்.

வைகோ

பொதுச் செயலாளர்,

மறுமலர்ச்சி தி.மு.க

‘தாயகம்’ 

சென்னை - 8 

14.11.2014

 

555624_621484254578191_126248954_n.png?o

 
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.