Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழை எளிமையாக கற்க 'ஐ' தமிழ்: மதன் கார்க்கியின் புது கான்சப்ட்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழை எளிமையாக கற்க 'ஐ' தமிழ்: மதன் கார்க்கியின் புது கான்சப்ட்!

 

karki%20i%20tamil%20rightttt.jpgப்பொழுது நாம் எழுதி படித்துக் கொண்டிருக்கும் தமிழ் வடிவ மானது பண்டைய காலங்களிலிருந்து பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு வந்தது. மொழியின் ஒலி மாறுவதில்லை. ஆனால் காலத்திற்கேற்ப எழுத்தின் வடிவம் மாறி வந்துகொண்டிருக்கிறது. கல்வெட்டில் இருந்த தமிழும், ஓலைச் சுவடிகளில் இருந்த தமி ழும், அச்சகங்கள் வந்தபோது அதற்காக மாறிய தமிழ் எழுத்துக் களையும் நாம் அறிவோம்.

கடைசியாக எழுத்துக்களை சீரமைத்து கொடுத்தவர் பெரியார். சில காலமாகவே வா. செ. குழந்தைசாமி போன்ற அறிஞர்கள் எழுத்துச் சீரமைப்பை பற்றி பேசி வந்திருக்கிறார்கள். இப்போது இருக்கும் தமிழ் எழுத்து வடிவங்களை மேலும் எளிமையாக்க 'கார்க்கி ஆராய்ச்சி மையம்' மேற்கொண்டுள்ள முயற்சிதான் 'ஐ-தமிழ்’ கான்சப்ட்.  இந்த மையத்தின் நிறுவனர்  மதன் கார்க்கியை சந்தித்தோம்.

ஐ'னா அழகுன்னு அர்த்தம். உங்களோட இந்த கான்செப்ட் தமிழுக்கு எந்த விதத்தில் அழகு சேர்ப்பதாக இருக்கும்?" ......

முதல் கேள்வியையே உற்சாகத்துடன் எதிர்கொண்டு பேச ஆரம்பித்தார் கணினிக் கவிஞர் கார்க்கி.

சில ஆண்டுகளாவே நான் யோசிச்சுகிட்டு இருந்த ஒரு விஷயம்தான் இது. 247 எழுத்துக்கள் கத்துகிட்டா தான் தமிழ் கத்துக்க முடியும்னு குழந்தைகள பயமுறுத்துறோம். போன தலைமுறைக்கு இருந்த பொறுமை யில் பாதி கூட இந்த தலைமுறை குழந்தைகளுக்கோ, பெற்றோர்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ இல்ல. குழந்தைகளோட கவனத்த ஈர்க்க நூற்றுக் கணக்குல தொலைக்காட்சி அலைவரிசைகள், ஐஃபோன், ஐபேட், ப்ளே ஸ்டேஷன்னு எத்தனையோ விஷயங்கள் இருக்கு. இதுக்கு நடுவுல நாம மொழி சொல்லிக் கொடுக்க ணும்னா அந்த மொழி எளிமையா இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கு.

இப்போ இருக்குற தமிழ கத்துக்க 107 குறியீடுகள் கத்துக்கணும். உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய்க் குறிகள், புள்ளி, அப்புறம் கு, கூ, மு, தீ கி போன்ற உகர, ஊகார, இகர ஈகார எழுத்துக்கள். குழந்தைகளுக்கு தமிழ் மொழிய சொல்லிக் கொடுக்கும்போது தான் இதோட சிரமம் புரியும். கால் எழுத்த மெய்யெழுத்துக்கு பின்னாடி போடணும், கொம்ப முன்னாடி போடணும், புள்ளிய மேல போடணும்ன்னு குழப்பங்களும் இதுல அடங்கும். ஃப்ரென்ச்சா, ஆங்கிலமா தமிழா எது படிக்க விருப்பம்ன்னு கேட்டா குழந்தைகள் எளிமையா இருக்குற ஆங்கிலத்தையோ அது போன்ற மொழியையோதான் தேர்வு செய்வாங்க.

karki%20i%20tamil%20500%201.jpg

தமிழ்ல படிச்சாதான் உனக்கு வேலை கிடைக்கும்னோ, தமிழ்ல படிச்சா தனிச் சலுகைனோ அச்சுறுத்தியோ, லஞ்சம் கொடுத்தோ மொழிய படிக்க வைக்குறது நல்ல முறை இல்ல. தமிழ் மொழிய நம்ம தமிழக் குழந் தைகள் இல்ல, உலகக் குழந்தைகள் எல்லாரும் படிக்க ஆர்வம் தூண்டும்படி அதை எளிமை படுத்தணும் ங்குறதுதான் ஐ-தமிழ் திட்டத்தோட முதல் நோக்கம். ஐ-தமிழ்ல 43 குறியீடுகள் கத்துகிட்டா தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம். ஐ-தமிழ், உயிர்மெய் எழுத்து எழுதும் முறையில் மட்டும் மாற்றம் கொண்டு வரணும்னு கோரிக்கை வைக்குது.

இப்பொழுதுள்ள எழுத்துவடிவத்தில் 'க்' என்ற மெய்யெழுத்துடன் உயிரெழுத்து 'ஊ'  புணரும்பொழுது வரும் உயிர்மெய் க்+ஊ-'கூ'(சுழியிட்டு வருகிறது).ஆனால் அதே போன்ற மெய்யெழுத்தான 'த்' உடன் 'ஊ' என்ற உயிரெழுத்து  புணரும்பொழுது த்+ஊ-தூ என்று (துணைக்கால் சேர்த்து)குறியீடு வேறாக இருக்கிறது. இரண் டுமே மெய்யெழுத்தாக இருந்தாலும் அதனுடன் புணர்வது ஒரே உயிரெழுத்தாகத்தான் இருந்தாலும் புணர் வின் முடிவில் அதன் வடிவங்கள் வேறுபடுகின்றன. (ஒன்றுக்கு சுழித்தல்,மற்றொன்றிற்கு துணைக் கால்). இதைப் புரிந்துகொள்வதும், மனப்பாடம் செய்வதும், எந்த இடத்தில் எப்படி சுழியிட வேண்டும், துணைக் கால் போட வேண்டும் என்பதே தமிழைப் புதிதாகக் கற்றுக்கொள்பவர்கள் மேற்கொள்ளும் சிரமம்.

இதனாலேயே தமிழ் எழுதக் கற்றுக்கொள்வதற்கு கடினமான மொழியாக உள்ளது. தமிழில் மாணவர்கள் தடுமாறுவதற்கும் இதுவே முக்கியக் காரணம்.'க' என்ற ஓர் உயிர்மெய் எழுத்தை அடிப்படையாக வைத்து அதற்கு முன்னும்(கே) பின்னும்(கா) அதன் மீதும்(கூ) எந்தக் குறியீடும் உபயோகிக்காமல் அந்த எழுத்தின் மேலேயே அதனுடன் புணரும் உயிரெழுத்துக்களின் ஓசைக்கு ஓர் குறியீடு கொடுத்து எழுத்து வடிவம் தருவதே 'ஐ-தமிழ்’ நோக்கம். அதாவது, உயிர்மெய் எழுத்தை மெய்ப் பகுதி, உயிர்ப் பகுதின்னு ரெண்டா பிரிச்சு, மெய்யெழுத்துக்கு மேல உயிர் குறியீட போடும் முறைதான் ஐ-தமிழ்.  ( www.karky.in/labs)

karki%20i%20tamil%20500%202.jpg

ஐ-தமிழின் பயன்கள் என்னென்ன? இதை எளிதில் கற்றுக்கொள்ளலாமா?

பல நன்மைகள் ஐ-தமிழ்ல இருக்கு. ஏற்கனவே தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள், 15 முதல் 20 நிமிடத்தில் ஐ-தமிழ் எழுத்தை எழுத பழகலாம். புதுசா தமிழ் எழுத கத்துக்குறவங்க இரண்டு இல்ல மூணு மாசத்துல தமிழ் எழுத்துக்கள கத்துக்கலாம். நாளைய தலைமுறை புது உயிர் எழுத்துக்களையோ, மெய் எழுத்துக்க ளையோ தமிழ்ல சேர்க்க விரும்பினா, ஐ-தமிழ் அந்த மீமேலாக்கத்தகவுக்கும் உகந்ததா இருக்கும். கணிப் பொறித் திரைகளோட அளவு சுருங்கிகிட்டே வருது. தொலைக்காட்சி பெட்டி மாதிரி இருந்த கணிப்பொறி இன்னிக்கு கைக்கடிகாரமா சுருங்கிடுச்சு.

இத்தனை சிறிய திரையில் தமிழ் சொற்களை போடும்போது நான்கு அல்லது ஐந்து எழுத்து சொற்களுக்கே திரை நிரம்பிவிடும். ஐ-தமிழ், இடத்தை சேமிப்பதன் மூலமா எளிதாக கூகுள் கண்ணாடி, ஆப்பிள் வாட்ச் மற்றும் இன்னும் வரப்போகும் தொலைதொடர்புக் கருவிகளுக்கு உகந்ததா இருக்கும்.

OCR எனப்படும் தொழில்நுட்பத்தின் படி சுவர் விளம்பரங்களையோ, கையெழுத்தையோ, நாளிதழில் அச்சடித்த எழுத்துக் களையோ, கணிப்பொறி படித்து எழுத்துக்களை உணரும் அந்த செயலிகளை துல்லியத்தோடு வடிவமைக்க ஐ-தமிழ் சரியான மாற்றமாக இருக்கும். புத்தகங்களில் அச்சாகும் சொற்களில் ஐ-தமிழ் 25-59 சதவிகிதம் வரை சேமிக்கிறது. இது மூலமா ஒரு ஆண்டுக்கு அச்சாகும் நூல்கள்ல ஐ-தமிழ் சேமிக்கும் இடம் மூலமா காகிதத்துக்காக வெட்டப்படும் முப்பதாயிரம் மரங்களை நாம காப்பாத்தலாம்.

இதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து என்னவிதமான ரியாக்ஷன் இருந்தது?

karki%20i%20tamil%20right.jpgஐ-தமிழ் ப்ராஜெக்ட்டுக்கு பலரிடமிருந்து எதிர்ப்புகள் இருக் கத்தான் செய்கின்றன. 'தாய்மொழி தாய் மாதிரி... அதில் குறை சொல்லக் கூடாது!' ன்னு சொல்றாங்க. நம் பாரம்பரி யத்தை மாற்றக் கூடாது என்பதுதான் அவர்கள் கூறுவது. ஆனால் இத்தனை வருடம் தமிழ் மாறிக்கொண்டேதானே வந்திருக்கிறது. எப்படியானாலும் மாற்றங்களைத் தடுக்க முடியாது. அவர்களிடம் நான் முன் வைக்கும் கேள்வி, பாரம்பரியமாக நாம் பழகி வரும் இம்மொழியை பாதுகாத் து வைத்தல் முக்கியமா இல்லை, இன்னும் அதிகமாக  மொழி பரவி பல நூற்றாண்டுகள் வாழவேண்டுமென்பது முக்கியமா? எங்களோட ஆராய்ச்சியில் அரசியல் இல்ல, வணிக நோக்கம் இல்ல, நடைமுறையையும் மொழி மேல இருக்குற காதல்லயும்தான் ஐ-தமிழ் திட்டத்தை நாங்க முன் வைக்குறோம்.
 
ஐ-தமிழ் பற்றி உங்க தந்தையிடம் சொன்னீங்களா? அவரிடமிருந்து வந்த விமர்சனம் என்ன?


அப்பா ரொம்பவே சந்தோஷப்பட்டாங்க. "தமிழுக்கு இது நல்லதொரு மாற்றம். இது மாதிரியான விஷயங் கள் தான் உன்னிடமிருந்து நான் எதிர்பார்த்தேன். ரொம்ப நல்லா பண்ணியிருக்க. இதை நடைமுறைப்படுத்த வாய்ப்புக்கள் நிறையவே இருக்கிறது. இது வரைக்கும் நீ தமிழ் சம்பந்தமா எத்தனையோ ஆராய்ச்சிகள்  பண்ணியிருக்க. ஆனால் அதை எல்லாம் விட என்னை ரொம்ப சந்தோஷப்படுத்தியது இதுதான். நம் மொழிக்காக நீ செய்திருக்க இந்த நல்ல விஷயத்தை ரொம்பப் பொறுமையா எடுத்துகிட்டு போ" ன்னு அறிவுரை கூறினார்.

உங்கள் குழு பற்றி...?

முனைவர் சுதர்சனன் நேசமணி, எஸ்.ஆர்.எம் கல்லூரியில்  துணைப்பேராசிரியரா பணியாற்றும் தமிழ்ச் செல்வி. நாங்க மூணு பேரும் இது தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகள எழுதிகிட்டு இருக்கோம். கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்துல என்னோட சேர்ந்து  இளஞ்செழியன், ராஜபாண்டியன், தென்றல், ஆல்வின் வர் கீஸ், ஆர்த்தி, அனிதா ஆகிய ஆறு பேரும் முழு நேரமாக இந்தப் பணியிலும் மற்ற தமிழ் ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

இது தவிர்த்து சூர்யா, தமிழ்ச்செல்வி பகுதி நேரமாக இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைவரின் பங்க ளிப்புடன்தான் இதை எழுதி தயாரித்துள்ளோம். நடக்கவிருக்கும் ஒரு தமிழ் மாநாட்டில் 'ஐ-தமிழ்' கட்டுரையை சமர்ப்பிக்க உள்ளோம்.

karki%20i%20tamil%20500%204.jpg

இதற்கு அரசாங்கத்தின் பங்களிப்பு எந்த அளவில் வேண்டும் ?

இப்பொழுது திரைத்துறையிலிருந்து வரும் என் வருவாயின் ஒரு பகுதி மூலமே என் ஆராய்ச்சிகளுக்கான செலவை கவனித்துக்கொள்கிறேன். நண்பர்கள் ஒரு சிலரும் அவ்வப்போது நன்கொடை வழங்கி வருகிறார் கள். எதிலும் இலாப நோக்கம் இல்லாமல் செய்து வருகிறோம். மொழிக்கு தேவையான மென்பொருட்கள் உருவாக்குவது, மொழியை கற்க தேவையான கருவிகளைச் செய்வது, மொழியறிவை மென்பொருள் மூல மாக மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது, இதுவே எங்கள் முயற்சியும் நோக்கமும்.

இந்த இரண்டு ஆண்டுகளில் பத்து மென்பொருட்களை உருவாக்கி இலவசமாக இணையத்தில் எல்லோரும் பயன்பெறும்படி தந்திருக்கிறோம். இன்னும் பத்து ஆண்டுகளுக்கான திட்டப்பணியை தயார் செய்து வைத் திருக்கிறோம். மத்திய மாநில அரசுகளின் நிதியுதவி, கார்ப்பரேட் நிறுவனங்களும், பொது மக்களும் தமிழுக் காக நிதி கொடுக்க முன்வந்தால் நாங்கள் திட்டமிட்டு வைத்திருக்கும் அடுத்த பத்து வருடங்களுக்கான ஆராய்ச்சியை நிச்சயமாக நேர்த்தியான முறையில் தமிழுக்காக நடைமுறை படுத்த முடியும்.
 
ஐ-தமிழைத் தொடர்ந்து அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தை 'அகராதி', அதைப் பற்றி கூறுங்களேன்?

அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது நான், டாக்டர்.டி.வி.கீதா, டாக்டர் ரஞ்சனி ஆகிய மூவ ரும் சேர்ந்து தொடங்கியதுதான் அகராதி ப்ராஜெக்ட். 25000 சொற்களை வைத்து நாங்கள் தொடங்கிய 'அகராதி'யை அந்த பணியிலிருந்து நான் வெளிவந்த பின்னர் தொடர முடியவில்லை.  'கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம்' தொடங்கியபின் அகராதியை எங்கள் நிறுவனத்தின் மூலம் எடுத்துக்கொண்டு தொடர ஆரம்பித் தோம். இப்பொழுது அகராதியில் 2,60,000 சொற்கள் உள்ளன. ஆன்லைன் டிக்ஷனரியிலேயே அதிகம் தமிழ்ச் சொற்கள் கொண்ட டிக்ஷனரி ‘அகராதி' தான்.

மருத்துவம், சட்டம், விலங்கியல், தாவரவியல், பொறியியல், கணிப்பொறி போன்று 33 பிரிவுகளிலுள்ள சொற்களை ஒருங்கிணைத்து அடக்கியுள்ளதுதான் இந்த 'அகராதி'. இதுவரை இணையதளமாக இயங்கிக் கொண்டிருந்த அகராதிக்கு இப்பொழுது தான் குறுஞ்செயலி 'ஆப்' வடிவம் கொடுத்திருக்கிறோம். கடந்த வாரம் லான்ச் செய்யப்பட்ட அகராதி ஆப், 'ஆப்பிள்' போன்களுக்கு இயங்கும். அடுத்த மாதத்திலிருந்து ஆண்டிராய்டு அலைபேசிகளுக்கும் வருகிறது.


-லோ. இந்து

புகைப்படங்கள்: ஆ.முத்துக்குமார்

 

http://www.vikatan.com/news/article.php?module=news&aid=39351

  • கருத்துக்கள உறவுகள்
எளிமையாக கற்க வேண்டும் என்றால் ............
ஐ தமிழும் ரொம்ப கடினமாத்தான் இருக்கும். 

 
karki%2Bi%2Btamil%2B500%2B1.jpg
தமிழ் எழுத்துக்களின் சீர்திருத்தம் பற்றிக் கடந்த பல ஆண்டுகளாகப் பலரும் பல திட்டங்களை முன் வைத்துவிட்டனர். ஆனால், 16-ம் நூற்றாண்டளவில் வீரமாமுனிவரும், 20-ம் நூற்றாண்டளவில் பெரியாரும் முன்வைத்த சீர்திருத்தங்கள் தான் நடைமுறைக்கு வந்தன. இவை போகத் தமிழை அச்சிலேற்றியே போது அ, ஆ, இப் போன்ற எழுத்துக்களின் வடிவங்களும் சற்று மாற்றப்பட்டன. அதைச் செய்தவர் யார் எனத் தெரியாது. 
 
 
தமிழ் எழுத்துக்கள் மாறவே கூடாது என்ற பழமைவாத எண்ணம் எல்லாம் எனக்குக் கிடையாது. ஏனெனில் தமிழ் பிராமி எழுத்துக்களாகத் தோன்றிய காலம் முதல் தமிழ் எழுத்துக்கள் பலமுறை மாற்றம் கண்டே வந்துள்ளன. தமிழ் பிராமி, வட்ட எழுத்துக்கள், பல்லவ எழுத்துக்கள், பல்லவ - சோழ எழுத்துக்கள் எனத் தமிழ் மாற்றம் கண்டுள்ளது. ஆனால் அக்காலத்தின் எழுத்து மாற்றத்துக்கும் இக்காலத்தின் எழுத்து மாற்றத்துக்கும் வேறுபாடுகள் உள்ளன. ஏனெனில் அக் காலத்தில் தமிழை எழுதத் தெரிந்தவர்கள் 10 % பேர் இருந்திருப்பார்கள், அதனால் மாற்றம் எளிதில் நடந்துவிடும். ஆனால் இன்றோ 90 % பேருக்குத் தமிழ் எழுதவும், வாசிக்கவும் தெரியும். அதனால் மாற்றத்தை எளிதில் ஏற்படுத்துவது இயலாது. 
 
IMG1.png

அதே சமயம் தமிழ் எழுத்துக்களைச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை, ஆனால் எந்தளவுக்குச் சீர்திருத்தலாம், எவ்வளவு சீர்திருத்தலாம், எப்படிச் சீர்திருத்தலாம் என்பதில் ஒரு வரைமுறை நிச்சயம் தேவை. 

 
மதன் கார்கி, வ.செ. குழந்தைசாமி எனப் பலரும் முன்வைக்கின்ற எழுத்துச் சீர்மையின் நோக்கம் என்பது சமயத்தில் தான்தோன்றித்தனமாக இருக்கின்றதோ எனத் தோன்றுகின்றது. அதுவும் இவர்கள் கூறுகின்ற சப்பைக் காரணங்கள் சிரிப்பை வரவழைக்கின்றன. 
 
ஏன் இப்போதிருக்கும் எழுத்தை மாற்ற வேண்டும் ? என்றால் இப்போதுள்ள எழுத்துக்கள் சீராக இல்லை என்ற ஒரு காரணத்தை ஏற்கலாம். 
 
ஆனால் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்கு எழுத்துக்கள் கஷ்டமாக உள்ளது என்ற வாதம் ஏற்க இயலாது. ஏனெனில் தமிழை விட மிகவும் சிக்கலான எழுத்துக்களைக் கொண்ட பல இந்தி, மலையாளம் உட்படப் பல இந்திய மொழிகளைப் பலரும் நல்லவிதமாகவே கற்கின்றனர். சீன எழுத்துக்கள் பல ஆயிரம் உருவங்களில் உள்ளது, அதைச் சீனர்கள் கற்கவில்லையா? அதனால் இப்போது இருக்கும் எழுத்துக்கள் கஷ்டமானவை என்ற வாதம் சரியாகப் படவில்லை. வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழைக் கற்க திணறுவதற்கான காரணங்கள் அவர்கள் வாழும் சூழ்நிலை, தேவைகள், வசதிகளால் தானே ஒழிய எழுத்தின் மீது குற்றஞ்சாட்டுவது ஏற்க இயலாத ஒன்றாகும். 
 
அது மட்டுமின்றி மற்ற மொழி பேசுவோர் தமிழைக் கற்க கஷ்டமாக உள்ளது என்ற கூற்றும் ஆதாரமற்றவை. எத்தனையோ தமிழர்கள் இந்தி, கன்னடம், சிங்களம் போன்ற மொழிகளைக் கற்று அதில் எழுதியும் வருகின்றனர். தமிழை விட அதிக எழுத்துக்களையும், அதிகச் சிக்கலான உருவங்களையும் கொண்ட அந்த மொழிகளின் எழுத்துக்களைக் கற்கவில்லையா? அதே போல நானறிந்தே பல மார்வாரிகள், தெலுங்கர்கள் தமிழைப் பள்ளிகளில் பயில்கின்றார்கள். அவர்களுக்குத் தமிழோ தமிழ் எழுத்துக்களோ கஷ்டமானதாகப் படவில்லை என்பதே உண்மை. 
 
மற்றொரு காரணம் காகிதங்களை மிச்சப்படுத்தலாம், அச்சிடுவதில் இடங்களைக் குறைக்கலாம் வாதங்களும் அடிப்பட்டுப் போகின்றன. ஏனெனில் கணனி மயமாகி வரும் இக்காலத்தில் காகிதங்கள் பற்றிக் கவலைப்படுவது வீணான ஒன்று, இடங்களை மிச்சப்படுத்தலாம் எனக் கஞ்சப்படும் அளவுக்கு இன்று யாரும் பஞ்சப் பரதேசிகளாக இல்லை, மற்றொன்று கணனியில் எந்த எழுத்தை எழுதி பிரிண்டு போட்டாலும் நவீன பிரிண்டர்கள் அச்சிட்டுத் தள்ளிவிடுகின்றன. 
 
கணனியில் பயன்படுத்த வசதிப்படும் என்ற பேச்சும் ஏற்கத் தகாதவைகளே. செல்போன், கணனியில் கீபோடுகளில் எழுத்தைச் சேர்க்கலாம் என்போருக்கு ஏற்கனவே இந்தச் சிக்கலை கடந்துவிட்டோம். சொல்லப் போனால் இன்று பலரும் ஆங்கிலக் கீபோடுகளைக் கொண்டே தமிழ் எழுதி வருகின்றனர். செல்பேசிகளின் செயலிகள் கூடக் கு, கூ என்பதற்கு எல்லாம் தனிப் பட்டன்களைக் கொண்டிருக்கவில்லை, மாறாக க் + உ என அழுத்தினால் கூ வந்துவிடுகின்றது. அல்லது K+U என அழுத்தினால் கு வந்துவிடுகின்றது. கணனி, செல்பேசிகளில் தமிழ் Typingpad என்பதைத் தமிழின் 31 எழுத்துக்களைக் கொண்டே உருவாக்கிவிடலாம். 216 உயிர்மெய் எழுத்துக்களையும் அதில் இட வேண்டியதில்லை. 
 
தமிழில் புதிதாக எழுத்துக்களைச் சீர்திருத்த முனையும் பலரும் இன்று கூறுவது வீரமாமுனிவர், பெரியாரது சீர்திருத்தங்களை. வீரமாமுனிவரும், பெரியாரும் இருக்கின்ற எளிமையான எழுத்துக்களை மாற்றவில்லை. புதிய உருவங்களைச் சேர்க்கவில்லை, ஏற்கனவே இருக்கின்ற எழுத்துருவங்களைக் கொண்டே சில மாற்றங்கள் செய்தனர். வீரமாமுனிவர் ஏ, கே ஆகியவற்றைத் தோற்றுவித்தார். அக்காலங்களில் எ, ஏ ஆகிய இரண்டையும் எ என்றே எழுதினார்கள். அதனால் எ எழுத்தின் கீழ் ஒரு கோடை இழுத்து ஏ என மாற்றினார். அதே போல ஒற்றைக்கொம்பன் (கெ) மட்டுமே இருந்தன, இரட்டைக் கொம்பன்(கே) கிடையாது, ஆக ஒற்றைக் கொம்பனை மேலே சுழித்து இரட்டைக் கொம்பனாக மாற்றினார். 
 
 
tamil_periyar_reform.png பெரியார் சீர்திருத்தம்
மிக முக்கியமாக அக் காலத்தில் ணகர, றகர, னகர எழுத்துகள் மட்டும், ஏனைய எழுத்துகள் போன்று எழுதப் பெறாமல் எழுதப் பெற்று வந்தன. அதாவது என்றே எழுதப் பெற்று வந்தன. கை முதல் னை வரையிலான 18 எழுத்துகளில் ணை, லை, ளை, னை ஆகிய எழுத்துகள் மட்டும் என்று எழுதப் பெற்று வந்தன. ஏனைய எழுத்துகள் எல்லாம் ை எனும் துணை எழுத்து இட்டு (கை, சை, தை...) எழுதப் பெற்று வந்தன. மேற்சொல்லப் பெற்ற இரு நிலைகளிலும் ஓர் ஒத்த ஒழுங்கு முறை இல்லாமல் இருந்தது. மேலும் அச்சு வார்ப்புகளிலும், தட்டச்சு எந்திரங்களிலும் ஆகிய எழுத்துகளுக்குத் தனி அச்சு வார்க்க வேண்டி இருந்தது. எனவே இந்த எழுத்துகளை எல்லாம் இந்த எழுத்துகளை ஒத்த ஏனைய எழுத்துகளைப் போன்றே எழுத வேண்டும் என்னும் கருத்து தந்தை பெரியார் என்று போற்றப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்களால் முன் வைக்கப் பெற்றது. அவர் தம் பத்திரிகையை அப்புதிய வடிவ எழுத்துகளைப் பயன்படுத்தி அச்சிட்டார். அவரது கருத்துக் காலப் போக்கில் வலுப்பெற்றது. பின்னர்த் தமிழக அரசின் ஆணையால் மாற்றி அமைக்கப் பெற்ற புதிய எழுத்து வடிவங்கள் உலகம் முழுவதும் வழக்குப் பெற்றுள்ளன. 
 
இன்றைய தமிழ் உயிர்மெய் எழுத்துக்கள் 216-யில் பெரும்பாலான எழுத்துக்கள் சீராகவே உள்ளன. சீர்மைச் சிக்கல் எங்கு வருகின்றது என்றால் உகர, ஊகார உயிர்மெய் எழுத்துக்களில் தான். அவை தான் ஒழுங்கில்லாத உருவங்களைக் கொண்டுள்ளன. எல்லா உயிர் மெய் எழுத்துக்களுக்கும் பொதுக்குறி பயன்பாடு இருக்க உ கரம் ஊ காரத்துக்கு மட்டும் அப்படி பொதுக்குறிகள் இல்லாமல் தனிக்குறிகள் பயன்படுத்த வேண்டியிருக்க அதாவது கு , கூ , சு , சூ ,ங , ஙூ , டு , டூ என இருக்க அதில் மட்டுமாவது சீர்திருத்தம் செய்யவேண்டும் என குறிப்பிட அதற்கான சில மாதிரிகளும் முன மொழியப்பட்டன.
 
ஏற்கனவே பெரியார் இதைக் குறித்தும் எழுதி இருக்கின்றார். "உதாரணமாக ஜ,ஷ முதலிய கிரந்த அட்சரங்கள் என்று சொல்லப் படுபவைகளுக்கு இன்றும் உ கரம், ஊ காரம் சப்தங்களுக்குக் கு, கூ என்கிற மாதிரி தனி எழுத்துக்கள் இல்லாமல், உ கரத்துக்கு ு இந்த மாதிரி குறிப்புகளையும் ஊ காரத்திற்கு ூ இந்த மாதிரி குறிப்புகளையும் சேர்த்து ஜு, ஜூ, ஷு, ஷூ, ஸு, ஸூ, ஹு, ஹூ என்பதாக ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதுபோல் தமிழ் எழுத்துக்களிலும் கி. கீ. கு. கூ ஆகியவைகளுக்கு ு, ூ என்பது போன்றவைகளையோ அல்லது வேறு விதமான குறிப்புகளையோ சேர்த்தால் அச்சில் 72 தனி எழுத்துக்கள் தேவையில்லை என்பதோடு பிள்ளைகள் தமிழ் கற்பதற்கும் 72 எழுத்துக்களைத் தனியாக இந்த ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லாத சௌகரியமும் ஏற்படும். "

இதனைப் பின்பற்றியே வ.செ. குழந்தைசாமி வ.செ. குழந்தைசாமி இகர, ஈகார, உகர, ஊகார எழுத்துக்களில் இருக்கும் சீரின்மையை நீக்க சில சீர்த்திருத்தங்களைப் பரிந்துரைத்தார். ஆனால் அது குறித்துத் தமிழக அரசோ, தமிழ் சமூகமோ எந்தவித முடிவுக்கும் வரவில்லை. 

 
நமது சேய்மொழியான மலையாளத்தில் கூடச் சில ஆண்டுகளுக்கு முன் உகர, ஊகாரத்தில் ஒழுங்கின்மை காணப்பட்டன. இதனால் ஏற்பட்ட சிக்கலைத் தீர்க்க, அந்த மாநில அரசும், மலையாள மொழிச் சமூகமும் இணைந்து சில சீர்திருத்தங்களைச் செய்தன. மெய்யெழுத்துக்களின் பக்கத்தில் കു, കൂ, ഴു, ഴൂഥു, ഥൂ, ഖു, ഖൂ,  என உகர, ஊகார குறிகளையிட்டுச் சீர்த்திருத்தம் செய்தன. இந்தக் குறிகளை நோக்கும் போது தமிழின் கிரந்த உகர, ஊகாரக் குறிகளை ஒத்தே காணப்படுகின்றன. ஆனால் இந்த குறிகள் மலையாள எழுத்தின் அழகோடும், நேர்த்தியோடும் ஒத்துப் போனது சிறப்பு.  தமிழ் எழுத்தோடு ஒத்திருக்கும் இந்தக் குறியீடுகளைக் கூட தமிழில் ஏற்றுக் கொள்ளலாம். 
 
24FEB_KAT01_iTa_TH_2321715f.jpg மதன் கார்கியின் 

சீரழிவுத் தமிழ்

ஆனால் மதன் கார்கி, சுதர்சன நேசமணி, தமிழ் செல்வி போன்றோரது எழுத்துச் சீர்மை வ.செ. குழந்தைசாமியின் திட்டத்தை விட மகா கேவலமானதாகவே உள்ளது. இவர்களது பரிந்துரைகள் தமிழின் எல்லா உயிர்மெய் எழுத்துக்களையும் மாற்றுவதாக இருக்கின்றது. இது வாசிப்பவர்களுக்கு அதிக இடைஞ்சல்களைத் தரவல்லது. தமிழின் ஒட்டுமொத்தமான குறிகளையும் களைந்துவிட்டு எழுத்தின் மீது என்னவோ தான்தோன்றித் தனமான குறிகளை இட நினைப்பது ஏற்கத்தக்கதாகப் படவில்லை. தமிழின் எழுத்துருவங்கள் துணைக்குறிகள் எல்லாம் நூற்றாண்டு காலம் மெல்ல மெல்ல பரிணமித்தவை, வருங்காலத்திலும் அது பரிணமிக்கும், ஆனால் ஒரே நாளில் மூன்று பேர் ரூம் போட்டு யோசித்து ஒரேயடியாக மாற்றிவிட தமிழ் ஒன்றும் யார் அப்பன் வீட்டுச் சொத்தும் கிடையாது. மதன் கார்கியின் எழுத்துச் சீர்திருத்ததையும், அதற்கு மல்லுக் கட்டும் தி இந்துவையும், ஆனந்த விகடனையும் குப்பையில் வீசுங்கள்.

என்னைப் பொறுத்தவரை உகர, ஊகார எழுத்துக்களில் மாற்றம் கொண்டு வரலாம், வேண்டும் என்றால் உகர, ஊகாரத்தைச் சீர்படுத்த வழியுள்ளதா என ஆராயலாம், நடைமுறைக்குக் கொண்டு வரலாமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் அது தமிழறிஞர்கள், தமிழக அரசு ஆகியவை இணைந்து மிகுந்த ஆய்வின் பின்னரே கொண்டு வர முடியும். அதனையும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி மக்கள் ஏற்றால் மட்டுமே அங்கீகரிக்க இயலும். 

 
மற்றபடி தமிழை வளர்க்க எண்ணுவோர் முதலில் தமிழை முறையாக ஆங்கிலக் கலப்பைக் குறைத்தாவது பேசலாமே, அறவே நீக்குவது எல்லாம் சுத்த முட்டாள் தனம், ஆனால் அநாவசிய ஆங்கிலக் கலப்பை நிச்சயம் குறைக்கலாம். இப்போது எல்லாம் தேவையற்ற இடங்களில் கூட ஆங்கிலம் கலந்து பேசுகின்றார்கள். இடது, வலது, நேர், மேல், கீழ், ஆனால், என்ன என்ற சாதாரணத் தமிழ் சொற்களையே மாற்றி Left, Right, Straight, Up, Down, So எனக் கலந்து பேசி வருவது கடுப்பேற்றத் தான் செய்கின்றது. செந்தமிழில் பேச வேணாம், நல்ல தமிழில் பேச்சுத் தமிழில் பேசலாம். தமிழின் ந, ண, ன, ல, ள, ழ, ர, ற போன்றவற்றைப் பிழையின்றி ஒலிக்கக் கற்றுக் கொள்ளலாம். 
 
திமுக, அதிமுக அரசாங்கம் ஒருவழியாக அனைவரும் தமிழை ஒரு பாடமாகக் கட்டாயமாகக் கற்க வேண்டும் என்ற சட்டத்தை நிறைவேற்றியது பெரும் ஆறுதல். அதனை உயர்நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது மிக நல்லது. ஆனால் தமிழை மட்டுமின்றி வரலாறு, புவியியல் பாடங்களையும் தமிழிலே படிக்கலாமே? கணிதம், அறிவியலைத் தான் ஆங்கிலத்தில் படிக்க வேண்டும், அப்போது தான் வேலை கிடைக்கும், உலக அளவில் ஜொளிக்கலாம் எனக் கூறுகின்றார்கள். அப்துல் கலாம், அண்ணாதுரை, சுப்பையா அருணன் எல்லாம் தமிழில் படித்துத் தான் அறிவியலில் சாதித்தார்கள் என்பது தனிக் கதை. இருந்துவிட்டு போகட்டும், உங்கள் வரலாறுகளைக் கூடவா ஆங்கிலத்தில் படிக்க வேண்டும்? அதையும் தமிழுக்கு மாற்ற அரசும், பொதுசமூகமும் முயற்சிக்கலாம் என்பது எனது எண்ணம். 
 

 

சாப்பாடு  போடும் தமிழையே  விளங்கவில்லை என்று  சொன்ன  முதல் தமிழன் இவருதான் என்னத்த  சொல்லுறது .

  • கருத்துக்கள உறவுகள்
 
இன்று புலம்பெயர் நாடுகளில்  விருப்போடு தமிழைக்கற்கும் தமிழ்க்குழந்தைகளை ஒப்பீடு செய்யின் சீர்திருத்தம் என்பது கையாலாகாத் தனத்தின் வெளிப்பாடாகவே நோக்கலாம். 
 
 கு,கூ,-ஙு,ஙூ-சு,சூ-ஞு,ஞூ-டு,டூ- ணு,ணூ-து,தூ-நு,நூ-............................... உகரம், ஊகார எழுத்துகள் அதனது இயல்புமாறாது பொருத்தமான சீர்திருத்தம் ஏற்படையதாக இருக்கும். ஆனால் பொறிசார்ந்த ஆய்வுகளின் வழி செயற்படுத்தப்படுதலே தமிழ் சிறக்கவழியாகும்.
  • கருத்துக்கள உறவுகள்

தற்போது இருக்கும் எழுத்துக்களை மாணவர்கள் சரியாகவே கற்கின்றனர். எதுவுமே கடினம் எண்ணுவோமானால் கடினம் தான். தமிழ் எழுத்துவடிவத்தை மாற்றுவது என்று கூறி அதன் தொன்மையைத் தொலைத்து முற்றாக இல்லாது ஒழிப்பதிலேயே இந்தியாவில் பலர் முனைப்புடன் செயற்படுகின்றனர். தமிழ்  மொழி மாற்றமடைந்து வந்திருந்தாலும் தற்போது அது தனி அழகுடன் இருக்கிறது. அதை மாற்ற வேண்டிய தேவை இருப்பதாகத் தெரியவில்லை. தமிழன் மட்டும் எப்போதும் தன தனித்துவத்தை மற்றவருக்காக இழந்து தானே காணாமற் போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றான். இப்பொழுது எழுத்துக்களை மாற்றி எல்லாவற்றையும் இழந்து நிற்பதுதான் அவனின் சிறப்பு

  • கருத்துக்கள உறவுகள்

சுமேயின் கருத்தும் சரியே...!  உச்சி வகிட்டை வலதில் இருந்து இடதுக்கு மாற்றுவதுபோல் கார்க்கியும் அருகில் போடும் குறியீடகளைத் தலையில் போடுகிறார். தற்போதைய நிலையில் இருப்பதை அழியாமல் காப்பதே முக்கியம்...! :)

மதன் கார்கியின் பெரும்பாலான சினிமா பாடல்களில் ஆங்கில கலப்புகள் மிக அதிகம். பாடல்களில சுத்த தமிழ் சொற்களை பாவிக்க தெரியாத இவர்கள் போன்றவர்களால் தமிழ் மொழியை எப்படி சரியான முறயில் திருத்த முடியும்?
இவர்கள் (மதன் கார்கி மற்றும் அவரது அடிவருடிகள்) ஒண்டும் ஆணியை புடுங்க வேண்டாம். இவர்கள் சும்மா இருந்தாலே தமிழ் மொழி அழியாமல் இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.