Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரை விமர்சனம்: காக்கா முட்டை

Featured Replies

kakkamuttai_2430854f.jpg

 

சென்னையின் குப்பம் ஒன்றில் வசிக்கும் ஏழைக் குடும்பத்தின் இளைய பிள்ளை ‘சின்ன காக்கா முட்டை’ (ரமேஷ்), மூத்த பிள்ளை ‘பெரிய காக்கா முட்டை’ (விக்னேஷ்). அப்பா ஏதோ குற்றத்துக்காகச் சிறை யில் இருக்கிறார். அவரை மீட்டு வரப் போராடுகிறார் அவர்களுடைய அம்மா (ஐஸ்வர்யா). ஒத்தாசையாக இருக்கிறார் பாட்டி (சாந்திமணி). சிறு வர்கள் இருவரும் தண்டவாளங்களின் ஓரங்களில் தவறி விழும் நிலக்கரியைப் பொறுக்கி விற்று ஐந்தோ பத்தோ சம்பாதிக்கிறார்கள். இவர்களது குப் பத்துக்கு அருகே புதிதாக பீட்சா ஹட் ஒன்று உதயமாகிறது. டிவி விளம் பரம் வாயிலாக பீட்சா சாப்பிட ஆசைப் படுகிறார்கள். 300 ரூபாய் பெறுமான பீட்சாவை அவர்கள் வாங்கவோ, சாப்பிடவோ முடிந்ததா என்பதை சுவாரஸ்யமான திரைப்படமாகத் தந்திருக்கிறார் புது இயக்குநர் மணிகண்டன்.
 
மிகவும் சாதாரண சம்பவங்களால் ஆன படம்தான் என்றாலும் அந்தச் சம்பவங்கள் மூலம் சொல்லவரும் விஷயம் மிகவும் ஆழமானது. அதற் குக் காரணம் சம்பவங்களில் உள்ள யதார்த்தமும் அவை காட்சிப்படுத் தப்பட்ட விதமும்தான். படம் ஒரு வித உற்சாகத்துடன் நகர்ந்துகொண்டே யிருக்கிறது. சில இடங்களில் மெல்லிய சோகம் இழையோடுகிறது. ஆனால், அது இயல்பாக இருக்கிறது. எந்த இடத்திலும் உணர்வுகளைச் சுரண்டும் போக்கு இல்லவே இல்லை.
 
ஏழைகளையும் அவர்களது குடி யிருப்புகளையும் மையமாகக் கொண்ட கதையில் ஏழ்மையை விற்பனைப் பண்டமாக மாற்றும் தன்மை துளியும் இல்லை. விளிம்பு நிலை மக்களின் வாழ்வை வெளி யிலிருந்து பார்க்கும் கோணத்தில் அல்லாமல் உள்ளிருந்து காட்டும் கோணத்தில் மணிகண்டன் சித்தரித் திருக்கிறார். அவர்களது சோகங்கள் மட்டுமின்றி, சந்தோஷங்கள், அவர் களுக்கேயான சிக்கல்கள், அவற்றி லிருந்து வெளியேற அவர்கள் மேற் கொள்ளும் முயற்சிகள் ஆகியவை யும் பதிவாகியிருக்கின்றன. பரிதாபத் துக்குரியவர்களாக அவர்களைச் சித்தரித்து, தள்ளி நின்று உச்சுக் கொட்டும் தொனி படத்தில் எங்கும் இல்லை. பார்வையாளர்களிடத்திலும் அத்தகைய அணுகுமுறை ஏற்படத் திரைக்கதை எந்த வாய்ப்பையும் கொடுக்கவில்லை.
 
ஒரே நகரத்தில் இரு வேறு பொரு ளாதாரச் சூழ்நிலையில் வாழும் மனிதர்களிடையே தென்படும் ஏற்றத் தாழ்வுகளையும் அதனால் சமூகத் தில் ஏற்படும் மாற்றங்களையும் அநா யாசமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் மணிகண்டன். இது அவருக்கு முதல் படம் என்பது ஆச்சரியமளிக்கிறது. காக்கா முட்டையை எடுத்துக் குடிக்கும் காட்சியில் பெரியவன் மூன்று காக்கா முட்டைகளில் ஒன்றைத் தனக்கும், மற்றொன்றைத் தம்பிக்கும் தந்துவிட்டு இன்னொன்றைக் காக்காவுக்காக வைக்கும் காட்சி நெகிழவைக்கிறது. தோசை மாவில் பீட்சா செய்ய முயலும் பாட்டி, பையன்களைப் பார்க்க முடியாமல் தவிக்கும் அப்பா என்று பல காட்சிகள் மனதைத் தொடுகின்றன. பீட்சா கடை நிர்வாகத்தின் அணுகுமுறை, பொதுப் பிரச்சினையை அணுகு வதில் ஊடகங்களின் போக்கு, அரசியல்வாதிகள், அவர்களது அல்லக் கைகளின் நடவடிக்கைகள் ஆகியவை யதார்த்தமாகவும் வலுவாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளன. “நாளிக்கி ஆர்ப்பாட்டத்துக்கு வந்துரு, நூறு ரூபாயும் பிரியாணியும் தராங்களாம்” என்னும் வசனம் யதார்த்தத்தைப் பளிச்சென்று புரியவைக்கிறது. சிம்புவைப் பயன்படுத்தியுள்ள விதம் படத்துக்கு சுவையைக் கூட்டுகிறது.
 
இந்தக் கதையை எல்லோரும் பார்க்கும்படியான சுவாரசியமான சினிமாவாக்கியதில் திரைக்கதைக்கும் ஒளிப்பதிவுக்கும், படத்தொகுப்புக்கும் முக்கியப் பங்கு உள்ளது. மணி கண்டனே ஒளிப்பதிவையும் மேற் கொண்டுள்ளார். சென்னையின் குப் பத்தைப் பிளந்துகொண்டு போய் வருகிறது கேமரா. குப்பத்து மனிதர்கள், அழுக்கான ஆடைகள், சுகாதாரமற்ற தெருக்கள், தனிக் கழிப்பறைகூட இல்லாத குடிசைகள், அருகிலே ஓடும் கூவம் இத்தனையையும் கொஞ்சம்கூட சினிமாத்தனமே இல்லாமல் அப்படியே அள்ளியெடுத்து வந்திருக்கிறார் மணிகண்டன். மனிதர்கள் மீதும், வாழ்க்கையின் மீதும் நம்பிக்கை தரும் சினிமாவாக இது இருக்கிறது என்றால் அதற்கு முக்கியக் காரணம் படத்தைத் திரையில் தந்த விதம். திரை மொழி புத்துணர்ச்சியூட்டக்கூடியதாக உள்ளது. படத்தின் வண்ணமும் வசீகரமானதாக அமைந்திருக்கிறது.
 
படத்தின் பக்க பலம் சிறுவர்கள் ரமேஷும், விக்னேஷும். கதாநாயக நடிகருக்குக்கூட முதல் படத்தில் இவ்வளவு கைதட்டல் கிடைக்குமா என்பது சந்தேகமே. ஐஸ்வர்யா, சாந்திமணி, ‘சூது கவ்வும்’ ரமேஷ், பாபு ஆண்டனி, கிருஷ்ணமூர்த்தி, ஜோ மல்லூரி என அனைவருமே படத்தின் உயிரோட்டத்துக்கு உதவுகிறார்கள். வாழ்வு மீதான நம்பிக்கை துளிர்க்கச் செய்யும் ஆக்கபூர்வமான ஆற்றல் படம் முழுவதும் உள்ளது. பிற் பகுதிக் காட்சிகளில் சற்றே எட்டிப் பார்க்கும் நாடகீயத் திருப்பங்களை ஒதுக்கிவைத்துவிட்டால் பிசிறற்ற, விறுவிறுப்பான, யதார்த்தமான கலைப் படைப்பு என்று இந்தப் படத்தைத் தயங்காமல் சொல்லிவிடலாம்.
 
வசனங்கள் இயல்பானவை. ஆனால் ஆழமானவை. படத் தொகுப் பாளர் கிஷோரும் குறிப்பிட்டுச் சொல் லப்பட வேண்டியவர். எந்தக் காட்சி யும் தேவையான அளவுக்கு மேல் நீளவில்லை. பாலிதீன் பையில் தண் ணீரைப் பிடித்துவந்து பாத்திரத்தை நிரப்புவதைப் போகிற போக்கில் ஒரு ஷாட்டில் சாதாரணமாகக் காட்டி விடுகிறார்.
 
அழுக்கான களத்தை எடுத்துக் கொண்டு நேர்மறையான உணர்வை எழுப்பும் ஆரோக்கியமான படத்தைத் தந்திருக்கும் மணிகண்டனும் இதைச் சாத்தியமாக்கிய தயாரிப்பாளர்கள் நடிகர் தனுஷ், இயக்குநர் வெற்றி மாறன் ஆகியோரும் தமிழ் சினிமா வுக்கு புதிய வழியைக் காட்டியுள்ளார் கள். பொதுவாக விருதுகள் பெறும் படமென்றால் அழுதுவடியும் படங் கள் என்ற எண்ணத்தை மாற்றி ஆரோக்கியமான கலகலப்பைத் தந் திருக்கிறது காக்கா முட்டை.
 
  • தொடங்கியவர்

காக்கா முட்டை' உடைத்து நொறுக்கிய தமிழ் சினிமா மூடநம்பிக்கைகள்

 

Kaaka_Muttai_2430240f.jpg

 

காசி தியேட்டர் - இது 'தரை லோக்கல்' நோக்கர்கள் ஆதிக்கம் உள்ள திரையரங்கம் என்பது சென்னையை அறிந்த சினிமா ஆர்வலர்களுக்கு தெளிவாகத் தெரியும். அதுவும், இந்தத் திரையரங்கின் இரவுக் காட்சி என்பது 'மாஸ் மசாலா' படங்களுக்கான ரகளையான கொண்டாட்டங்களுக்கு உரியது என்பது மிகவும் தெளிவு.
 
இந்தத் திரையரங்கின் இரவுக் காட்சியில் 'காக்கா முட்டை' படத்தை ரசித்தபோது கிடைத்த அனுபவம், தமிழ் சினிமாவின் 'சாதாரண ரசிகர்கள்' என்று அசாதாரண கலை ஆர்வலர்கள், முக்கிய படைப்பாளிகள் சிலர் சொல்லி வரும் பல 'மித்'துகளைக் கொத்துபரோட்டா போட்டது.
 
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களின் படங்களுக்கு முதல் நாள் காட்சிகளில் கிடைக்கும் அதே வரவேற்பும் உற்சாகமும் 'காக்கா முட்டை'க்கு கிடைத்தது வியப்பை அளித்தது.
 
பல்வேறு முக்கிய விருதுகளைக் குவித்துவிட்டாலோ, முக்கியப் பட விழாக்காளில் பங்கேற்றுவிட்டாலோ 'இது கலைப் படைப்பு. சாதாரண ரசிகர்களுக்கு பார்க்கப் பொறுமை இருக்காது. சில தியேட்டர்களில் ஒரு காட்சி மட்டுமே போதும்' என்றெல்லாம் சினிமா துறையைச் சேர்ந்தவர்களே கருதுவது உண்டு. எல்லா சினிமாவும் கலைப் படைப்புகள்தானே? யார் இப்படி மோசமாகக் கொளுத்திப் போட்டது என்றுதான் இதுவரையிலும் தெரியவில்லை.
 
இப்படி குருட்டாம்போக்கில் கொளுத்திப் போடுவதன் விளைவுதான், நம் சமூகத்தில் மனிதர்களின் இயல்பு வாழ்க்கையை சினிமா மொழியில் பதிவு செய்யும் நல்ல படைப்புகள், தியேட்டரில் சாதாரண மக்களுக்குக் காணக் கிடைக்காமல் போவதற்கு வழிகுக்கிறது.
 
சினிமா ஆர்வலர்களால் கொண்டாடப்படும் சில படைப்புகள் சில நேரங்களில் சினிமா ரசிகர்கள் பலரைக் கவராததும் சாதாரண விஷயம்தான். அத்தகைய படங்களில் பயன்படுத்தப்பட்ட சினிமா மொழியோ, உத்திகளோ ரசிகர்களுக்கு ஈடுபாட்டை ஏற்படுத்தாமல் போயிருக்கலாம். அதற்காக, ஒட்டுமொத்தமாக அப்படிச் சொல்லுவது சுத்த மூடநம்பிக்கை என்பதையே 'காக்கா முட்டை' நிரூபித்திருக்கிறது.
 
இயல்பு வாழ்க்கையைச் சொல்லும் காட்சிகளையும், வசனங்களையும் துல்லியமாக உள்வாங்கி ரசிக்கத்தக்கவர்கள்தான் சில ஜீனியஸ்கள் சொல்லும் சாதாரண ரசிகர்கள் என்பதை காக்கா முட்டையின் ஒவ்வொரு ஃப்ரேமுக்கும் ரசிகர்கள் அளித்த வரவேற்பு காட்டிக் கொடுத்தது. ரகளையான நகைச்சுவை தருணங்களை ரவுண்டு கட்டி களேபரம் செய்த அதே ரசிகர்கள், நெஞ்சுக்கு பாரத்தைக் கடத்தும் தருணங்களில் பின்-ட்ராப் சைலன்ட் காட்டியது இங்கே கவனிக்கத்தக்கது.
 
இதுபோன்ற சினிமாவைத் தயாரிக்க முன்வந்ததற்காக நடிகர் தனுஷ், இயக்குநர் வெற்றிமாறனைப் பாராட்ட வேண்டும் என்று நினைக்கவில்லை. மெயின் ஸ்ட்ரீம் சினிமாவில் லாபம் ஈட்டும் கலைஞர்கள், தங்கள் துறையின் தரத்தை மேம்படுத்த உறுதுணைபுரிவது கடமை. அதை அவர்கள் செய்திருக்கிறார்கள். காக்கா முட்டை முயற்சிக்காக இவர்களைப் பாராட்டினால், கல்லா கட்ட மட்டுமே தமிழ் சினிமாவைப் பயன்படுத்தும் பலரைக் கழுவியூற்ற வேண்டிய சூழல் எழும் என்பதால் இதோடு இந்த மேட்டரை நிறுத்திக்கொள்கிறேன். இந்த இடத்தில், தெரிந்தோ தெரியாமலோ நடிகர் சிம்பு இந்தப் படத்தில் அளித்த பங்களிப்பையும் பாராட்டச் சொல்கிறது மனம்.
 
காக்கா முட்டையில் தனுஷ் - வெற்றிமாறனின் பங்களிப்பில் பாராட்டுக்குரியது என்றால், இந்தப் படத்தைப் பிரபலப்படுத்த அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் உத்திகளையும் சொல்லலாம். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே பிரம்மாண்ட செலவு செய்வது போன்ற நடவடிக்கை மூலம் பிரபலப்படுத்தி, கடைசியில் ரசிகர்களைப் படுத்துவதற்கு பதிலாக, முழுமையாகத் தயாரான நல்ல படைப்புகளைப் பிரபலப்படுத்த மேற்கொள்ளும் எத்தகைய முயற்சிகளும் வரவேற்கத்தக்கதே. இவ்விருவர் வழியைத் தயாரிப்பாளர்கள் பின்பற்றும் பட்சத்தில், தமிழ் சினிமாவில் மணிகண்டன்கள் பலரை அடையாளம் காணலாம் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
 
மிக முக்கியமாகச் சொல்லியே தீர வேண்டிய ஒன்று... தமிழ் சினிமா நடிகர்கள் பலரும் கச்சிதமாக ஆக்‌ஷன் செய்வதை பெரிய காக்கா முட்டையையும், ரியாக்‌ஷன் செய்வதை சின்ன காக்கா முட்டையையும் பார்த்துப் பழகிக்கொள்ளலாம் என்றே கருதவைத்தது இரண்டு சிறுவர்களின் நடிப்பாற்றல்.
 
உலக அளவில் மிகப் பெரிய அளவில் லாபமும் புகழும் ஈட்டும் படைப்பாளிகளைப் பட்டியலிட்டால், அதில் சிறுவர்களுக்கு எழுதுவோர் - படைப்பவர்கள் தான் அதிகம் இடம்பெறுவர். ஆனால், இங்கே தமிழ் இலக்கியச் சூழலில், என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில், சிறுவர் இலக்கியத்தின் மீது ஈடுபடுவோர் எண்ணிக்கை ஐந்து விரல்களுக்குள் அடங்கிவிடும். அப்படி எழுத முற்படுபவர்களை, குழந்தைத்தனமாக பார்க்கும் சக இலக்கியவாதிகளின் பார்வையால் சிறார் இலக்கியம் மீதான ஈடுபாடே எவருக்கும் இல்லாமல் போய்விடுகிறது.
 
இதே நிலைதான் தமிழ் சினிமாவிலும். சிறார் சினிமாவைப் பொறுத்தவரையில், சிறுவர்களுக்கான - சிறார் ரசனை உள்ளவர்களுக்கான சினிமா, பெரியவர்களுக்கான - 18 வயதுக்குட்பட்ட மனமுதிர்ச்சி மிக்க சிறுவர்களுக்கான சினிமா, இந்த இரண்டு தரப்பின் தேவையையும் பூர்த்தி செய்யும் சினிமா என மூன்று வகையாக பிரிக்கலாம். காக்கா முட்டை மூன்றாம் ரகம். பெரியவர்களுக்கான சிறார் சினிமா மட்டுமல்ல - சிறுவர்களுக்கான ப்யூர் சினிமாவும்கூட.
 
மாஸ், மசாலா, காதல், கலாய்ப்பு, அதிரடி சினிமா கூடாது என்பதெல்லாம் இல்லை. சினிமா எந்த வடிவத்திலும் வரலாம். ஆனால், இந்த மாதிரியான ஓவர் சீன் படங்களின் எண்ணிக்கைக்கு இணையாக, ஒரு படைப்பாளியைச் சுற்றியிருக்கும் கதைகளையும் வாழ்க்கையையும் தொழில்நுட்ப உதவிகளுடன் சுவாரசிய சினிமா விருந்தாக அமையக் கூடிய படங்களும் வரவேண்டும் என்பதே விருப்பம்.
 
மக்களின் ரசனையைக் குறைசொல்லிக் கொண்டே குத்தாட்ட வளர்ச்சிக்கு வித்திடுவது இனியும் நீடிக்காது என்பதையே காக்கா முட்டைக்கு நிறையும் அரங்குகள் சொல்லும் சேதி.
 
மிகச் சிறந்த நகைச்சுவைகள், மனதைத் தைக்கும் நெகிழ்ச்சிகள் என திரையில் எவை வந்தாலும், இழவு வீட்டில் அழாமல் உம்மென்றிருப்பது போன்ற மனநிலையுடன் மல்டிப்ளக்ஸில் படம் பார்க்கும் சோ-கால்டு ஏ சென்டர் ரசிகர்களுக்கு சினிமா பார்க்கத் தெரிகிறதா என்பதே இப்போது எனக்குத் தெரியாமல் போய்விட்டது.
 
வெற்று கலாய்ப்புகளுக்குக் கூச்சலிடுபவர்கள் என்று முத்திரைக் குத்தப்பட்ட ரசிகர்கள், இந்தியப் பொருளாதார நிலை, ஏழ்மையின் வலி, பிழைப்பு அரசியல், வருவாய் பாகுபாடு உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் சமூகக் கலாய்ப்பு (Social satire) காட்சிகளையும் வசனங்களையும் புரிந்துகொண்டு உடனுக்குடன் ரியாக்ட் செய்தபோது, அவர்கள்தான் உண்மை சினிமாவின் ரசிகர்கள் என்று உணர்ந்தேன்.
 
காக்கா முட்டை படைப்புக் குழுவின் முயற்சிகளைப் பார்த்தாவது, 'தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை மேம்பட்டதுதான். அவர்களை நாம் தவறாகப் புரிந்துகொண்டு இதுவரையில் மேகி செய்து வயிற்றை நிரப்பிவிட்டோம். இனியாவது நல்லிடியாப்ப விருந்து அளிப்போம்' என்று முக்கியப் படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைத்து தமிழ் சினிமா சமூகமும் உணர வேண்டும்.
 
எனக்குத் தனிப்பட்ட முறையில், காக்கா முட்டை படத்தின் பல காட்சிகள் தியேட்டரில் சிரிப்பை வரவழைத்தன. அதேகாட்சிகளை வீட்டுக்கு வந்து யோசித்தபோது, அவை தந்த வலிகள் சொல்லி மாளாது. இதற்கு, சின்ன காக்கா முட்டை 'சிட்டி சென்டரை'ப் பார்த்து ரியாக்டும் தருணத்தை உதாரணமாகச் சொல்லலாம்.
 
ம்... நீங்கள் கேட்பது என் காதுகளுக்குக் கேட்கிறது. காக்கா முட்டை படத்தின் கதை என்ன? திரைக்கதை என்ன? வசனங்கள் என்ன? என்றெல்லாம்தானே கேட்கிறீர்கள். தமிழில் பெரும்பாலான பத்திரிகைகள் வெளியிடும் சினிமா விமர்சனத்தைப் படியுங்கள். பெரும்பாலான விமர்சனங்களின் முக்கால்வாசி பகுதியைத்தான் நீங்கள் கேட்கும் விஷயங்கள் ஆக்கிரமித்துவிடுங்கின்றனவே!
 
| பின் குறிப்பு: இம்மாதம் 19-ம் தேதி வெளியிடும் 'குற்றம் கடிதல்' என்ற படத்தை, கடந்த ஆண்டு டிசம்பரில் திரைப்பட விழா ஒன்றில் பார்த்தேன். காக்கா முட்டை ரிலீஸாகி சில தினங்களில் அப்படம் வெளிவருவது, தமிழ் சினிமாவின் புத்தெழுச்சி மீதான வியப்பின் கால அளவை மேலும் கூட்டும் என்பது உறுதி. |
 
  • தொடங்கியவர்

ஆதவன் இப்படித்தான் தலைமுறைகள் வந்தபோதும் பார்க்கத் துடித்தேன் - இதுவரை சாத்தியமாகவில்லை. காக்காமுட்டையாவது தியேட்டரில் பார்க்க முடிந்தால் சந்தேசம். சில திரைப்படங்களை தியேட்டரில்தான் அனுபவிக்க முடியும். கடைசியில் இணையத்தில் தலைமுறைகள் பார்த்தது போல்தான் இதுவுமோ தெரியாது.
 
பாலுமகேந்திராவின் தலைமுறைகளை ரிவியில் பார்க்லாமா? நீங்களே சொல்லுங்கள். அது போலத்தான் இதுவும்....

Edited by ஜீவன் சிவா

மிகவும் சாதாரண சம்பவங்களால் ஆன படம்தான் என்றாலும் அந்தச் சம்பவங்கள் மூலம் சொல்லவரும் விஷயம் மிகவும் ஆழமானது. அதற் குக் காரணம் சம்பவங்களில் உள்ள யதார்த்தமும் அவை காட்சிப்படுத் தப்பட்ட விதமும்தான். படம் ஒரு வித உற்சாகத்துடன் நகர்ந்துகொண்டே யிருக்கிறது. சில இடங்களில் மெல்லிய சோகம் இழையோடுகிறது. ஆனால், அது இயல்பாக இருக்கிறது. எந்த இடத்திலும் உணர்வுகளைச் சுரண்டும் போக்கு இல்லவே இல்லை.-இந்து 

 

உண்மையிலும் உண்மை .இதுதான் படத்தின் வெற்றிக்கான காரணம் .

தோனியுடன் 'காக்கா முட்டை' நாயகர்கள் சந்தித்த தருணம்: இயக்குநர் மணிகண்டன் நெகிழ்ச்சி
 

4h2zhd.jpg

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவரது கூட்டுத் தயாரிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் 'காக்கா முட்டை'.

நடிகை ஐஸ்வர்யா, சிறுவர்கள் ரமேஷ், விக்னேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

 

பல்வேறு விருதுகளை வாங்கி குவித்திருக்கும் இப்படம், இரண்டு தேசிய விருதுகளையும் வென்றிருக்கிறது. ஜூன் 5-ம் தேதி வெளியாகி இருக்கும் இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

 

இந்நிலையில், 'காக்கா முட்டை' சிறுவர்களை இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி சந்தித்தார் என்று சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் வெளியிட்டார்கள்.

ஏன் சந்தித்தார்கள் என்று இயக்குநர் மணிகண்டனிடம் கேட்டபோது "அது ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தினரின் ஏற்பாடு. பசங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினார்கள். பசங்களுக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும் என்றவுடன் தோனியை சந்திக்க ஏற்பாடு செய்தார்கள்.

 

 

நானும் பசங்களுக்கும் இங்கிருந்து மும்பை செல்ல ஏற்பட்டு செய்யப்பட்டு சனிக்கிழமை சென்று சந்தித்தோம். அது ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பு. 'காக்கா முட்டை' படத்தின் ட்ரெய்லர் மற்றும் சில படக்காட்சிகளையும் தோனி பார்த்தார்.

 

 

ட்ரெய்லரில் வரும் ரயில் காட்சி அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் சிறுவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அவர்களது முதல் படம் மற்றும் குடும்ப சூழ்நிலை ஆகியவற்றை கேட்டு வெகுவாக பாராட்டினார்.

 

சப் - டைட்டிலோடு வரும் சில தமிழ் சினிமாவை பார்த்து இருப்பதாகவும், தொடர்ச்சியாக சப்-டைட்டில் போட்டு வந்தால் பார்ப்பேன் என்றும் தெரிவித்தார் தோனி. தோனியிடம் ஆட்டோகிராப் மற்றும் அவரோடு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு கிளம்பினோம்" என்றார் மணிகண்டன்.

 

 

 

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/article7294123.ece

  • தொடங்கியவர்

காக்கா முட்டையும் கோழி முட்டையும்

kakkamuttai_2066920f.jpg

 

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘காக்கா முட்டை’ படத்தில் சுவாரசியமான காட்சிகள் நிறைய உண்டு. சிறுவர்கள், மரத்திலிருக்கும் காக்காவின் கவனத்தைத் திசை திருப்பிவிட்டு, கூட்டிலிருந்து காக்கா முட்டைகளை எடுத்துக் குடிப்பதும் அவற்றில் ஒன்று. அடுத்தடுத்த காட்சிகளில் அவர்கள் காக்கா முட்டைகளைக் குடிப்பதற்காகத் திட்டு வாங்கும்போது அவர்களுக்கு வக்காலத்துக்கு வரும் பாட்டி, “கோழி முட்டை விக்குற விலையில வாங்கிக் குடிக்க முடியுமா, காக்கா முட்டை குடிச்சா என்ன; அதுவும் பறவைதானே?” என்பார். இந்தக் காட்சியைப் பார்த்த உடன் வந்த நண்பர் அதிர்ச்சியடைந்தார். “இது யதார்த்தமாக இல்லை. கோழி முட்டைகூட வாங்க முடியாத குடும்பங்கள் இருக்கின்றனவா என்ன? காக்கா முட்டை குடிப்பதை நியாயப்படுத்திக் காட்டுவதற்கு இதெல்லாம் ஒரு சாக்கு” என்றார். உண்மையில், மிக யதார்த்தமான காட்சிதான் அது. எளிய மக்களின் உணவுப் பண்பாட்டின் நியாயத்தை இயல்பாகப் பேசும் காட்சியும்கூட!

 
சென்னை வந்த பிறகுதான் முதன்முதலில் ஈசல் விற்பவர்களையும் அதை வாங்கிச் சாப்பிடுபவர்களையும் பார்த்தேன். சைதாப்பேட்டை சந்தை வாசலில் ஒரு வயதான ஆயா கூடையில் வைத்து விற்றுக்கொண்டிருப்பார். ஒரு பொட்டலம் பத்து ரூபாய். அரைப்படி அளவுக்கு இருக்கும். ஆரம்பத்தில் ஏதோ ருசிக்காக வாங்கிச் சாப்பிடுகிறார்கள் என்று நினைத்திருக்கிறேன். அப்புறம் ஒரு நாள் அந்த ஆயாவிடம் பேசிக்கொண்டிருந்தேன். “ஏம்பா, கோலா மீன்ல ஆரம்பிச்சு வஞ்சிரம், சுறா வரைக்கும் உள்ள வெச்சிருக்கான். அதுல எல்லாம் இல்லாத ருசியா இந்த ஈசல்ல இருக்கு? இல்லாதப்பட்டவன் கவுச்சியை மோந்துக்க இதெல்லாம் ஒரு வழிப்பா. அப்படியே பழக்கிக்கிறது” என்றார் அந்த ஆயா.
 
மாட்டிறைச்சி தொடர்பான விவாதம் ஒன்றிலும் இதே நியாயத்தைக் கேட்டிருக்கிறேன். பாஜக அரசு கொண்டுவந்த மாட்டிறைச்சித் தடைக்கு எதிராகக் கடுமையாக வாதிட்டுக்கொண்டிருந்தார் அந்த இளைஞர். நம்முடைய ஆதி வரலாறு, உணவுக் கலாச்சாரம், சைவ மேட்டிமைவாதம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தவர் ஒருகட்டத்தில் உடைந்துபோய் சொன்னார்: “யோவ், மாட்டுக்கறி ஒண்ணும் ஆட்டுக்கறியவிட ருசி கிடையாது. ஆனா, ஆட்டுக்கறி கிலோ ஐநூறு ரூபா விக்கிது. மாட்டுக்கறி இருநூறு ரூபா. ஆட்டுக்கறி வாங்க எங்கெ போறது? நீங்க வாங்கித் தர்றீங்களா?”
 
அதுவரை எல்லாவற்றுக்கும் பதில் வாதம் பேசிக்கொண்டிருந்த எதிர்த்தரப்பு அப்படியே மௌனமானது.
 
ஒரு சமூகத்தின் உணவுப் பழக்கம் பின்னாளில் உணவுக் கலாச்சாரமாக உருவெடுப்பது வேறு விஷயம். ஆனால், தேவையும் கிடைப்பதும்தான் எல்லா உணவுப் பழக்கங்களையும் தீர்மானிக்கின்றன.
 
இந்தியாவில் 43 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாகச் சொல்கிறது 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு. உண்மையான எண்ணிக்கை இதுபோல 10 மடங்கு இருக்கலாம். எனினும், அரசு தரும் குறைந்தபட்ச எண்ணிக்கையேகூட, உலகில் அதிகமான குழந்தைத் தொழிலாளர்களைக் கொண்ட நாடு என்ற இடத்தைப் பெற இந்தியாவுக்குப் போதுமானதாக இருக்கிறது.
 
இந்தக் குழந்தைத் தொழிலாளர்கள் நாளெல்லாம் உழைப்பது பத்துக்கும் இருபதுக்கும்தான். உள்ளபடி டீக்கடைகளிலோ, மளிகைக் கடைகளிலோ வேலை பார்ப்பவர்கள் இவர்களில் பாக்கியசாலிகள். பெரும்பாலானவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேலைக்குச் செல்பவர்கள். நாடோடிகள்போல அலைபவர்கள். தலைநகர் டெல்லியில் மட்டும் 3 லட்சம் பேர் குப்பை பொறுக்குகிறார்கள். இவர்களில் பெரும் பகுதியினர் குழந்தைகள்தான். இப்படிப்பட்டவர்களில் இருவரின் வாழ்க்கையைத்தான் சொல்கிறது ‘காக்கா முட்டை’. ரயில் தடங்களின் ஓரத்தில் சிதறிக் கிடக்கும் நிலக்கரித் துண்டுகளைப் பொறுக்கித் தந்து, ஒரு கிலோவுக்கு மூன்று ரூபாய் வாங்கிக்கொள்ளும் சிறுவர்களுக்கு மூணரை ரூபாய்க்கு விற்கும் கோழி முட்டை ஆடம்பர உணவாக இருப்பதில் ஆச்சரியம் என்ன?
 
ஒருகாலத்தில் வாரத்தில் ஒரு நாள் மட்டும் விசேஷமாக அசைவ உணவைச் சாப்பிடும் ஒரு முதல்வர் தமிழகத்தில் இருந்தார். அந்த விசேஷ உணவை அவர் ஆடம்பரமானதாகவும்கூட நினைத்தார். அப்படி அவர் ஆடம்பர உணவாகச் சாப்பிட்ட அந்த அசைவ உணவு கோழி முட்டை. காமராஜருக்குப் பிந்தைய இந்த நான்கு தசாப்தங்களில் அரசியல்வாதிகள் எவ்வளவோ உயரத்துக்குப் போயிருக்கலாம். ஏழை மக்களின் நிலையை அப்படிச் சொல்வதற்கு இல்லை.
 
இரு வாரங்களுக்கு முன்புதான் பூமியிலேயே அதிகமான ஊட்டக்குறைபாடு உள்ளவர்களைக் கொண்ட நாடு என்ற ‘பெருமை’யை இந்தியாவுக்கு அளித்திருக்கிறது ஐ.நா. சபையின் உணவு மற்றும் விவசாயப் பிரிவு வெளியிட்ட உணவுப் பாதுகாப்பு அறிக்கை. ஐ.நா. சபையின் புத்தாயிரமாண்டு இலக்கு, உலக உணவு மாநாடு இலக்கு இரண்டிலுமே இந்தியா தோல்வியடைந்துவிட்டது. இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் ஊட்டக்குறைபாடுள்ளவர்களின் எண்ணிக்கை 19.4 கோடி. அதாவது, உலகின் ஊட்டக்குறைபாடு உள்ளவர்களில் நால்வரில் ஒருவர் இந்தியர். உலகிலேயே அதிகமான ஊட்டக்குறைபாடுள்ள குழந்தைகளைக் கொண்ட நாடும் இதுதான். ஒவ்வொரு ஆண்டும் ஊட்டக்குறைவால் பாதிக்கப்பட்ட 13 லட்சம் குழந்தைகளை மரணத்துக்குப் பறிகொடுக்கிறோம். தவிர, ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் ஆகப் பெரும்பாலான மரணங்களுக்கான அடிப்படைக் காரணமும் ஊட்டக்குறைவுதான்.
 
சுதந்திரத்துக்குப் பின் 67 ஆண்டுகள் கழித்தும் ‘மக்களால், மக்களுக்காக, மக்களின் அரசு’ நடப்பதாகச் சொல்லப்படும் நாட்டில், இப்படியான நிலை நீடிப்பது அவலம் மட்டும் அல்ல; அத்தனை ஆட்சியாளர்களுக்குமே அசிங்கம். ஆனால், எப்போதுமே வக்கற்ற நாட்டின் ஆட்சியாளர்களிடம்தானே வியாக்கியானங்கள் அதிகம் ஒலிக்கும்? நாட்டிலேயே ஊட்டக்குறைவுள்ள குழந்தைகளை அதிகம் (52%) கொண்ட மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் கதை இது. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்களில் முட்டை வழங்கும் திட்டத்துக்கு மத்தியப் பிரதேசத்தில் தடை விதித்திருக்கிறார் பாஜக முதல்வர் சிவராஜ் சௌகான். மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சரான மேனகா காந்தியும் இதற்கு ஒத்தூதியிருக்கிறார். “முட்டையிலுள்ள புரதச்சத்து தொடர்பாக மிகையாகப் பேசுகிறார்கள்; முட்டைக்குப் பதில் காய்கறிகளையே கொடுக்கலாம்” என்பது அவருடைய யோசனை. எல்லாம் சைவ மேட்டிமைவாதத்திலிருந்து பிறக்கும் வார்த்தைகள்.
 
ஒரு குழந்தைக்குப் பலவித காய்கறிகள் மூலம் கிடைக்கும் சரிவிகித சத்துகளை ஒரேயொரு முட்டையால் நிச்சயம் கொடுக்க முடியாது. ஆனால், குழந்தைகளுக்குத் தேவைப்படும் காய்கறிகளைக் கொடுக்கும் திராணி நம்முடைய அரசாங்கத்துக்கு இருக்கிறதா?
 
ஒரு 5 வயதுச் சிறுவன் இருக்க வேண்டிய சராசரி உயரம் 109.9 செ.மீ.; எடை 18.7 கிலோ. இந்த வயதில் அவனுடைய ஒரு நாள் புரதச்சத்து தேவை தோராயமாக 16 கிராம். ஒரு முட்டை வெறும் 6 கிராம் புரதச்சத்தையே கொண்டிருக்கிறது. சரி. ஆனால், நம்முடைய அங்கன்வாடிகள் / சத்துணவுக் கூடங்களில் அதிகம் பயன்படுத்தும் காய்கறிகளில் உள்ள புரதம் எவ்வளவு? 100 கிராம் காய்/கனிகளில் உள்ள புரதத்தின் அளவு இது: கேரட் - 0.93 கிராம். முட்டைகோஸ் - 1.44 கிராம், பீட்ரூட் - 1.61 கிராம், உருளைக்கிழங்கு - 1.81 கிராம், வாழைப்பழம் 1.1 கிராம்.
 
நம்முடைய அங்கன்வாடிகள் / சத்துணவுக்கூடங்களில் ஒரு மாணவருக்கான அரசின் அதிகபட்ச காய்கறி, மளிகை ஒதுக்கீடு எவ்வளவு தெரியுமா? பருப்பு 15 கிராம், மளிகைக்கு 36 பைசா, காய்கறிக்கு 80 பைசா. இதிலும் பருப்பு பயன்படுத்தப்படும் நாட்களில் காய்கறிக்கான ஒதுக்கீட்டில் 10 பைசா குறைந்துவிடும். ஒரு கிலோ 40 ரூபாய்க்குக் குறையாமல் காய்கறிகள் விற்கும் காலத்தில் இந்த 80 பைசா ஒதுக்கீட்டில் ஊழல் போக குழந்தைகளுக்கு எத்தனை காய்கறித் துண்டுகள் கிடைக்கும். அதில் எவ்வளவு புரதம் இருக்கும்? தன்னுடைய குழந்தைகளுக்காக மதிய உணவுத் திட்டத்தில் ஒரு குழந்தைக்கு ஒரு ரூபாய்கூடக் காய்கறிக்கு ஒதுக்க முடியாத அரசாங்கம் அவர்களுக்குக் கிடைக்கும் முட்டைக்கும் தடை விதித்துவிட்டு வேதாந்தம் பேசுவது எவ்வளவு அராஜகம்?
 
அவர்களால் இதையெல்லாம் புரிந்துகொள்ள முடியாது. இப்படியான அற்ப மத அரசியல் விளையாட்டு பல்லாயிரக் கணக்கான உயிர்களுடனான விளையாட்டு என்பதைக் கூட அவர்களால் உணர முடியாது. அவர்கள் அறிந்திருக்கும் சைவம் அப்படி. நொறுக்குத்தீனி நேரத்திலும்கூட -100 கிராம் எடையில் 20 கிராமுக்குக் குறைவில்லாத புரதத்தைக் கொண்ட பருப்புகளில் புரளுபவர்கள் அவர்கள். பாதாம்கள், பிஸ்தாக்களின் உலகம் வேறு. காக்கா முட்டைகள், கோழி முட்டைகளின் உலகம் வேறு!
 
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
 

வலிந்து திணிக்கப்பட்ட மகிழ்வோ, துன்பமோ இல்லாமல் மிகவும் இயல்பாக ரசிக்கத்தக்கதாக இருந்தது.  இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும்.

சில காட்சிகள் படம் பார்க்கும்போது சட்டென்று நகர்ந்து விடுகிறது ஆனால் முடிந்தபின்பு இதயம் கனக்கிறது.



 

  • தொடங்கியவர்

"காசிமேட்டிலிருந்து தேசிய விருது" - 'காக்கா முட்டை' சிறுவர்கள் ஜாலி பேட்டி

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.