Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமூச்சு

Featured Replies

மலையின் மஞ்சள் கலந்த மண்ணிறம் மாயத்தோற்றந் தந்தது. மலையினைக் கையால் உடைத்து வாயில் போட்டு மென்று தின்ன முடியும் என்று தோன்றியது. மலை வெண்ணையென்றும் நான் கண்ணனென்றும் கூட ஒரு தடம் மனதுள் விரிந்தது. கண்ணன் என்ற எண்ணம் சிந்தையில் வந்ததும் கோபிகை தோன்றி விடுகிறாள்.
 
குதிரை வால் குடுமியில் ஏதோ ஒரு மாந்திரீகத் தன்மையிருக்கிறது என்பது எனது அபிப்பிராயம். கறுத்த முடிப் பெண் குதிரைவால் குடுமி போட்டு என் முன் நடப்பின் என் மனம் ஒரு முகப்பட்டு அவள் முகம் பார்க்கத் துடிப்பது எனக்குப் பரிட்சயம். உடற் பயிற்ச்சி நிலையத்துள் குதிரைவால் குடுமியுடன் ஒரு இளையவள் குதிரையாய் வந்தாள். காதிற்குள் “எம்.குமரன் சன் ஒவ் மகாலட்சுமி படத்தின் ஐயோ ஐயையோ” பாடல் நிஜமாகவே ஒலித்தபடி நான் ஓடிக்கொண்டிருந்தேனா, சிற்றுவேசன் அமர்க்களப்படுத்தியது. ஓட்டம் வேகமெடுத்தது. ஆழ்கூறு மாறாத வேகவோட்டத்தில் உடலிருக்க, என் மனம் மீண்டும் மலையேறியது.
 
மனித உளவியலில், ஆட்டிற்கு வெக்கையினைக் குளிரவைக்கும், கடுங்குளிரைச் சூடாக்கும் தன்மையிருப்பதனைப் பலமுறை அவதானித்துள்ளேன். வரண்ட நிலத்தின் சிறுத்த புல்லை மேய்ந்தபடி ம்மே என்று ஆடு கத்த அதன் குட்டி பால் குடிப்பதனைப் பார்க்கையில் வரட்சி மறந்து போகும். மஞ்சள் மலையில் தாடியாடு தாண்டி ஓடுகையில் குளிர் இதமாய் இருக்கும். குதிரையில் குதிரைவால்க் குடுமி வைத்த இடைச்சி ஒருத்தி மஞ்சள் மலையில் ஆடு மேய்த்து வந்தாள். வீடுகளாக மாற்றப்பட்டிருந்த மலைக் குகைகள் பின்னணியில் புகை கக்கிக் கொண்டிருந்தன. 
 
ஏதிர்பார்த்திருக்காகத் திருப்பம் உடற்பயிற்சி நிலையத்துள்ள நிகழ்ந்தது. ஒற்றைக் குறி விபூதி அணிந்த தன் தாயினைத் திடிரென்று குதிரைவால் இளையவள் எங்கிருந்தோ அழைத்து வந்தாள். இவளுடன் கூடவே வந்த தாய் உடைமாற்றும் அறையில் அதிகநேரம் இருந்திருப்பாள் போலும். விலா மற்றும் உள் தொடையின் தசைநார் இறுக்கத்திற்காக, குறிப்பாக இளம் பெண்கள் அதிகம் கவனம் செலுத்தும் உபகரணத்தில் தாயை உட்கார வைத்துத் தன் தாயிற்குப் பயிற்சி கற்றுக் கொடுத்தாள். மனம் எதிர்பார்க்காத காட்சிகள் திடுப்பென்று விரிகையில் கவனம் குவிவது தவிர்க்க முடியாதது. “மேறா சப்பு நோக்கி றாணி கப் ஆயே கித்து” பாடல் தற்போது என் காதிற்குள் ஒலித்துக் கொண்டிருந்தது. பாடல் என்னை மலைக்கு மீட்டு வந்தது.
 
இடைச்சியின் ஆடுகள் மேய்ந்த பாதையில் என் பார்வை பயணித்தது. மலையில் எத்தனை மலர்கள். கல்லாய்த் தெரியும் நிலப்பரப்பைக் கூர்ந்து பார்க்கையில் தாவர ராட்சியம் பிரமாண்டம். தேனீக்கள் மலைத்தேன் சேர்த்துக்கொண்டிருந்தன. அருவி ஒன்று மலையினை அறுத்துப் பாய்ந்து கொண்டிருந்து. குகைகளில் புகை இன்னமும் குறைந்தபாடில்லை. வானத்தில் நீலமின்றி வேறேதுமில்லை. காற்றில் ஏதேதோ கலந்திருக்கவேண்டும், ஆயுர்வேத வைத்தியத்தினை அது எனக்குள் நிகழ்த்திக்கொண்டிருந்தது. இடைச்சியின் குதிரை இழைப்பாறியபடி மேய்கிறது. இடைச்சி நிலத்தில் உட்கார்ந்திருக்கிறாள். குளிர்தாங்கும் ஆடை அவள் உடல்போர்த்துப் பாய்கிறது.
 
நம் பெற்றோர் நம் மனதுள் கதாநாயகர்களாக அறிமுகமானவர்கள். அப்பா அம்மாவால் முடியாதது உலகில் இல்லை என்ற எண்ணம் பாதுகாப்புணர்வாய் நம்மோடு வளர்வது. திடீரென முதுமை தோன்றி அம்மாவும் அப்பாவும் மூச்சுவாங்குவதைப் பார்க்கையில் நம் உடலிற்குள் ஒழிந்திருந்த எத்தனையோ கோழைத்தனங்கள் முகங்காட்டும். ஓடி ஒழிக்கத் தோன்றும். கத்திக் கலவரம் செய்யத் தோன்றும். கதாநாயகர்கள் அடிவாங்குவதை எந்த ரசிகனும் ஏற்றுக்கொள்ளுவதில்லை. ஆறாவது அடி விழுந்த பின்னேனும் கதாநாயகன் எழுந்தடிப்பான் என்ற நம்பிக்கை ரசிகனுள் மறைவதேயில்லை. கதாநாயகன் எழுந்திருக்கத் தாமதிப்பின் ரசிகன் எழுந்து உற்சாகக் குரலெழுப்புவான். 
 
தன் அம்மாவின் உள்தொடையின் தசைநார்களைப் பாடகி Beyonce கூனிப்போகும் படி மீண்டும் வரவைப்பேன் என குதிரைவால் பெண் உடற்பயிற்சி நிலையத்துள் தன் தாயின் அருகிருந்து முயன்று கொண்டிருந்தாள். அவள் தாயின் கண்களில் ஏதோ சோகம் இழையோடிக் கிடந்தது. தாயின் கன்னங்கள் கலவரப்பட்டுத் துடிப்பது போல்த் தெரிந்தது. யாழ்ப்பாணத் தமிழ்த்தாய் இந்தப் பயிற்சி செய்யலாமா என்று கேட்டு அவதானமாய்ச் சிந்திப்பதுபோல மொத்த முகம் கலவரப்பட்டுக் கிடந்தது. குதிரைவால் குடுமி கருமமே கண்ணாய் அன்றலர்ந்த மலர்போல் சலனமின்றித் தன் தாயருகே முயன்று கொண்டிருந்தாள். மிட்டாய் கடையில் நுழைந்த சிறுவன் போல, எல்லாவற்றையும் முழுங்கிவிடும் நோக்கில், என் மனம் மீண்டும் மலையேறியது.
 
ஒரு கழுதையில் பொதியேற்றிக் கிழவன் ஒருவன் மலையின் மீது இழுத்துவருகிறான். அவனிற்கு இருமல் பிடித்திருக்கவேண்டும், ஒலி என் காதை எட்டாத போதும் அவன் உடல் அடிக்கடி குலுங்குவது தெரிகிறது. உறு மீனைக் கண்டு குறிவைத்துக் குத்தும் கொக்கின் குணவியல்பொத்து இடைச்சி கணப்பொழுதில் குதிரையோட்டிக் கிழவனை அடைகிறாள். அலாக்காய் அவரை அள்ளிக் குதிரையில் வைக்கிறாள். பின் கழுதையின் கயிற்றோடு தானும் குதிரையேறி மலையேறுகிறாள். தன் தந்தையின் தலைப்பாகையினைச் சரிசெய்து விடுகிறாள். ஏதோ கதைகதையாய்க் கூறுகிறாள். மஞ்சள் கலந்த மண்ணிற மலை பின்னணியாய் இருக்க, சிவப்புக்கம்பளமும் வெண்ணிறத் தலைப்பாவும் அணிந்த கிழவனின் முகத்தில் இழையோடும் முறுவல் மானசீகமாய் எனக்குள் தெளிவாய் விரிகிறது. இருமல் குலுக்கல் அவர் உடலில் குறைந்திருந்தது. நாளை கிழவன் எழுந்திருக்காது கூடப் போகலம். ஆனால் இன்றைக்குத் தன் தந்தை கதாநாயகன்ந்தே வீரன்ந்தே என அவரை அவள் குதிரையில் கம்பீரமாகவே கொண்டு செல்லுகிறாள்.
 
உடற்பயிற்சி நிலையத்தின் வரவேற்று மேசையில் அலங்காரப் பொருளாய் வரண்டு இறுகிக்போன றோஜா இதழ்கள் ஓலைப்பெட்டியில் நிறைந்து கிடப்பதனைப் பார்க்கையில் முதுமையின் முகம் முளித்துப் பார்க்கிறது. முதுமை முடியும் வரைக்கும் நம் கதாநாயகர்களை உயர்த்தி உயர்த்திப் பிடித்து அவர்கள் தோலின் சுருக்கமெடுக்க முனைந்து நாம் தோற்றதன் பின்னர், அவர்களைப் புகைப்படமாக்கி இதிகாசம் புனையும் எமது ஓயா ஓட்டம் அழுத்தி நிலைக்கிறது. 
  • கருத்துக்கள உறவுகள்

வாிக்குவாி விளையாடும் இன்னுமொருவனின் தமிழைப் படித்து எம்மால் பெருமூசு்சு விடாமலிருக்க முடியவில்லை. என்னவொரு எழுத்துநடை. முதுமை சுகமா சுமையா என்று பட்டிமன்றம் நடத்தி என்ன பயன். முதுமையை ஏற்றுக் கொள்ள எம்மை பக்குவப்படுத்துவதனால் மட்டுமே இதற்கு சிறிதளவாவது விடை காண முயலலாம். வரண்ட மலாிதழ்களில் மென்மையை ஸ்பாிசிக்க முடியாவிட்டாலும் வருடிக்கொடுத்து எம் வாஞ்சையை வெளிப்படத்தலாம் என்று உங்கள் பெருமூசு்சின் நீளம் சொல்கிறது,பாராட்ட வாா்த்தையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.. இன்னுமொருவன்!

நீண்ட காலங்களின் பின்னர் ஒரு தலை காட்டல்...மிக்க மகிழ்ச்சி!

எல்லாமே இழந்து நிற்கும் ஈழத்தமிழன் யாழ் களத்தை மட்டும் எந்தக் காரணத்தையும் கொண்டு இழந்து விடக்கூடாது!

அதற்காகவும், உங்கள் அழகு தமிழ் நடைக்காகவும்... பல தளங்களில் உலாவும் உங்கள் சிந்தனைச் சிதறல்களுக்காகவும் அடிக்கடி என்று இல்லாவிட்டாலும் இடைக்கிடையாவது எட்டிப் பாருங்கள்!

  • தொடங்கியவர்

காவலூர் கண்மணி, வல்வை சஹாறா மற்றும் புங்கையூரான். உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோர்கள்தான் எல்லோருக்கும் கதாநாயகர்களாக இருப்பார்கள். அவர்களை முன்னுதாரணமாகக் கொண்டுதானே பலர் வாழமுயற்சிக்கின்றார்கள்.  எனது அம்மா, அப்பா சொல்லித்தந்த அடிப்படையான சமூக விடயங்கள், தோற்றுப்போகாமல் தொடர்ந்தும் வாழ்வில் போராடவேண்டும் என்பதுக்கு அவர்கள் சொல்லிய கதைகள் எப்போதும் நினைவுகளில் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

சி.கு. குதிரைவால் கொண்டை வைத்த எல்லாரும் ஆண்கள் பார்வையில் குமரிகளாகத்தான் தெரிவார்கள். பார்க்கும்போது நாமும் பதின்ம வயசுக்குப் போய்விடுவோம் :)

  • தொடங்கியவர்
வணக்கம் கிருபன்,
நிச்சயம் பெற்றோர்கள் கதாநாயகர்கள் தான். நமது கதாநாயகர்களின் முதுமையினைப் பார்க்கையில் எமக்குள் எழுகின்ற போராட்டங்களையும் மாற்றமுடியாக் காரணங்கள் சார்ந்து எழுகின்ற குமைச்சல்களையுமே கதை பேச முயன்றுள்ளது. மற்றம்படி கதாநாயகர்கள் கதாநாயகர்கள் தான்.
 
முதுமை என்பதை நாம் எதிர்கொள்ளுவது ஒருவேளை இலகுவாய் இருக்குமோ என்னமோ. எமது பெற்றோர்களின் முதுமையினைப் பார்ப்பது குமைச்சலானது. முதுமை எனும் போது அது தோற் சுருக்கம் மட்டுமல்ல. உதாரணமாக அல்சைமர்ஸ் வியாதிக்குட்படும் வயோதிபர் உடல் இருக்க உளத்தின் அடையாளம் தொலைத்து நிற்பது, பாக்கின்சன்ஸ் நோய்க்குட்படுவோர் உளம் உள்ளபடி இருக்க உடல் உருகிக்கொண்டிருப்பது போன்ற விடயங்கள் மிகப்பெரும் போராட்டங்களை பாசத்திற்குரியோரில் விதைத்து விடுகின்றன. இது தவிர்த்து, இக்கதை பேசியதைப் போலன்றி எழுந்து நடமாடமுடியா முதுமைக் கட்டமும் இருக்கவே செய்கின்றது. அவைசார்ந்த எண்ணங்களை இயன்றவரை அழகுணர்வோடு பகிர முயன்ற முயறச்சிதான் இக்கதை.
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான். எமது பெற்றோர்களின் முதுமை அடையும்போதும், குறிப்பாக துணையில் ஒருவர் இல்லாமல்போகும்போதும் மற்றவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பார்ப்பது மிகவும் கடினமானது. அவர்களை சந்தோசமாக வைத்திருக்க பிள்ளைகள் தமக்குக் கிடைக்கும் சொற்ப நேரத்திலும் செய்யும் பணிவிடைகள் முக்கியமானவை. அதை உங்கள் கதையில் அழகாகக் கொண்டுவந்துள்ளீர்கள். 

இதேபோன்ற நிலைமை எதிர்காலத்திலும் எமது சமூகத்தில் இருக்குமா அல்லது மேற்கத்தையரைப் போன்று நாமும் இறுதிக் காலத்தில் ஒரு முதியோர் தங்ககத்தில் இருந்துகொண்டு பிள்ளைகளினதும் தெரிந்தவர்களினதும் வருகைக்காகக் காத்திருப்போமா போன்ற கேள்விகள்தான் அடிக்கடி வருகின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்

கதையை இரு தடவையும் ,அத்துடன் பின்னூட்டங்களையும் வாசித்த பின்பு கதையை முழுதாக புரிந்து கொண்டேன்...நன்றிகள்...

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனைசிறந்த எழுத்தைக் கொண்டிருக்கும்,தமிழக எழுத்தாளர்களை விஞ்சக்கூடிய எழுத்தாளுமை உள்ள ஒருவர் தன திறனை எழுதாது வீணடிக்கிறாரே என்று ஆதங்கமாக இருக்கிறது இன்னுமொருவன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.