ரமணி மாஸ்டரின் இரசிகர்கள், அவருடைய ஓவியங்களைப் பார்த்த உடனேயே அதன் பாணி மூலமாக அவர் வரைந்தவை என்பதை அடையாளப்படுத்தி விடுவார்கள். நல்ல உடற்கூற்றியலுடன் கூடிய மனித உருவங்களும், விரைவான தன்மை கொண்ட எளிமையான, ஆனால் மிகச்சரியாக அமைந்துள்ள கோடுகளும் அவரின் தனித்தன்மையாகும். அவருடைய நீர்வண்ணம் தீட்டும் பாணி இலங்கையில் முன்னோடியானது. அது, மென்மையான வண்ணக் கலவைகளையும் துடிப்பான தூரிகை வீச்சுகளையும் உள்ளடக்கிய ஒரு தனித்துவமான நுட்பமாகும். அவர் நீர்வர்ணத்தின் ஈரமான தன்மையைப் பயன்படுத்தி, பின்னணிகளில் வண்ணங்கள் ஒன்றோடு ஒன்று மென்மையாகக் கலக்கும்படி தீட்டியுள்ளதோடு, தாளின் வெள்ளை நிறத்தையே ஒளியாகப் பயன்படுத்தி நிழல்களுக்கும் வெளிச்சத்திற்கும் இடையிலான முப்பரிமாணத் தன்மையை உருவாக்கியிருப்பார். ஓஃப்செட் வருவதற்கு முன்னமே, புளொக் அச்சடிக்கும் நேரத்திலும் அவர் எளிமையான கோடுகளுடனும் சிறப்பான நிறத் தெரிவுகளுடனும் கவர்ந்திழுக்கும் வகையிலான முகப்போவியங்களைப் படைத்திருந்தார். கருப்பு வெள்ளையில் படத்துக்கான ஸ்கெட்ச் வரைந்து, ஒயில் பேப்பரை அதன் மேல் இருக்குமாறு ஒரு பக்கம் மட்டும் ஒட்டி, அதன் மேல் வண்ணங்களைத் தீட்டிக் குறித்திருப்பார்.
1990 அளவில் அவர் தீருவிலில் போராளிகளின் சிற்பத்தைச் செய்தார். ஏழு போராளிகள், ஏழும் வேறு வேறு நிலைகளில், ஆண்கள், பெண்கள், வேறு முகங்கள் முக பாவனைகள் அப்படி ஒரு அமைவு இலங்கையில் வேறு எங்கும் இல்லை. அதன் பிறகு கிட்டு பூங்கா நல்லூரில் அமைக்கும் போது அங்கே கிட்டுவின் சிலையை உருவாக்கினார். கிட்டுவுடைய நிறையப் படங்கள் வைத்துக் கொண்டு அவருடைய முப்பரிமாணத் தோற்றத்தைக் கம்பீரமாக உருவாக்கினார். கிட்டுவின் மனைவியும் அங்கே அடிக்கடி வந்து தனது கருத்துக்களைச் சொல்வார். சிலை முடிந்த பிறகு அவர் சிலையைத் தொட்டுத் தடவி மிகவும் பூரிப்படைந்தார். அடுத்ததாக நெல்லியடி மத்திய கல்லூரியில் மில்லர் சிற்பமும் அருமையாக அமைந்து இருந்தது. மில்லரின் தாயார் கூட அவரை மிகவும் பாராட்டினார். பின்னராக அவர் உருவாக்கிய சேர் பொன் ராமநாதன் சிலை, நுண்கலைக் கல்லூரியின் முகப்பில் கம்பீரமாய் நிற்கிறது. தந்தை செல்வா, இந்து போர்ட் ராஜரத்தினம், கந்தையா உபாத்தியாயர், சரஸ்வதி சிலை என்று அதன் பின்னர் தொடர்ந்து சிற்பங்களைச் செய்து கொண்டே இருந்தார். அதன் பின்னர் ஆறுமுக நாவலர், தேவரயாளி நிறுவுனர் சூரன், பின்னர் அவர் செய்த சரஸ்வதி சிலையைத் திறந்து வைத்த தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுடைய சிலையையும் செய்தார். கடைசியாக அவர் உருவாக்கிய சிவசிதம்பரம் அவர்களுடைய சிலை நெல்லியடிச் சந்தியில் நின்றிருக்கிறது. அவர் தன்னால் இனிமேல் சிற்பங்கள் செய்ய உடல்நிலை ஒத்துழைப்பதில்லை என்பது தெரிந்ததும், தன் சிறப்பான மாணவர்களை வெளி உலகத்துக்கு அடையாளம் காட்டி அவர்களை ஊக்குவித்தார்.
ஈழத்தில் நவீன ஓவியத்தை வெகுஜன ஊடகங்களில் அனைவரும் அடையும் வகையில் அறிமுகப்படுத்தியதில் அவருக்குப் பெரும் பங்கு உண்டு. பத்திரிகைகளில் வந்த வரைபடங்களிலும் முகப்போவியங்களிலும் அவர் நவீன மற்றும் மறைபொருள் ஓவியங்களை நிறையவே படைத்தார். இதன் மூலம் நவீன ஓவிய ரசனையைத் தமிழ் மக்களிடையே பரப்பினார். கற்பனைத்திறனோடு புத்துருவாக்கம் செய்யும் பிரம்மாவாக அவர் உருவாக்கிய பல ஓவியப் படைப்புகளும் சிற்பங்களும் காலத்தால் அழியாதவை. எங்கள் சமூகத்தில் மீளுருவாக்கத்துக்கும் புத்துருவாக்கத்துக்கும் உள்ள வித்தியாசங்களைப் பிரித்தறியும் ஓவிய ரசனையை வளர்க்க அவர் தன்னாலானவற்றைச் செய்தார். காலம் தான் அதற்கான விடையை இனிமேல் அளிக்க வேண்டும். அவருடைய விவரங்களும் படைப்புகளும் இலங்கை ஓவியப்பாட ஆண்டு 10,11 பாடத்திட்டங்களில் இணைக்கப்பட்டுள்ளது. அவருடைய கடின உழைப்புக்குக் கிடைத்த ஒரு மரியாதையே அதுவாகும். தனியே ஒரு வர்த்தக ரீதியிலான ஓவியராக இல்லாமல் அவருடைய தனிப் பாணியில் இலங்கைத் தீவில் தனக்கென்று ஒரு முத்திரை பதித்த மாபெரும் ஓவியரின் தனிச்சிறப்புக்கு இந்த அங்கீகாரம் கட்டியம் கூறி நிற்கிறது. தற்பொழுது அவரிடம் பயின்ற, மற்றும் ஓவியம் பயிலும் மாணவர்களுக்கெல்லாம் அவர் படைப்புகள் உந்துசக்தியாகவும் வழிகாட்டியாகவும் இருப்பது அவருக்குப் பெருமை. வாழ்க அவர் புகழ்!
By
villavan ·