Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆடும் நினைவுகள் மட்டும்....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆடும் நினைவுகள் மட்டும்....

10505503_10203786500004173_2637562294580

 

யாழ்பாணத்தில் எங்கள் வீடு இருந்த வளவின் ,தென்மேற்கு மூலையில் குபேர திசை என்று வாஸ்து சாத்திரம் சொல்லும் திசையை பார்த்து ஆட்டுக் கொட்டில் இருந்தது. அதில எப்பவும் ஒரு மறியாடு, கிளுவங் குழையைக் சப்பிக்கொண்டு குட்டி போட்டு கொண்டு எப்பவும் இருக்கும், கெடாய்க்குட்டிகள் வளர்ந்து திமிரத் தொடங்க அம்மா அதுகளை விப்பா,அது போட்ட மறிக்குட்டி வளர்ந்து ருதுவாக ,எப்பவும் தாய் ஆடு வயதாகி ஒரு நாள் திடீர் எண்டு வாயில நுரை தள்ளி, தலையைப் பக்கவாட்டில சரிச்சு வைச்சு சீவன் போய்க் காலையில் குபேர திசை தென்மேற்கு மூலையில் இறந்தாலும் ஆடுகள் எங்கள் வீட்டின் முக்கியமான பால் விநியோக மையம் போல இருக்க,கெடாய் குட்டிகள் உபரி வருமானம் போல இருந்ததுக்கு முக்கிய காரணம் வளவைச் சுற்றி நிறைய மரங்கள் இலை குழைக்குப் பஞ்சமில்லாமல் நாலுபக்க சுற்று வேலிக்கு சாட்சியா நின்றது.

 ஆடு எங்கட வீடில நின்டதால் ஆட்டுக்கு பெரிய லாபம் ஒண்டும் இல்லை,அது நிண்டதால எங்களுக்குப் பெரிய நஷ்டமும் சொல்லும் படியா ஒண்டும் இல்லை.வீட்டு பின் வளவு முழுவதும் அருகம் புல்லும்,கோரைப் புல்லும் அள்ளு கொள்ளையா வளர்ந்து கிடந்த காணியில் ஆடு அது பாட்டுக்கு மூன்று நேரமும் மேஞ்சு கொண்டு நிக்கும்..முக்கியமா இழுப்பு வியாதியால் அவதிப்பட்ட என்னோட ஒரு தம்பிக்கு ஆட்டுப்பால் தேவைக்கு தான் ஆடு எப்பவும் எங்கள் வீடில் நின்றாலும்,அது குட்டி போட வைக்க அதுக்கு கலியாணம் கட்டும் நிகழ்வு வருஷத்தில் ஒரு முறை எப்பவம் நடக்கும், மற்றப்படி ஆட்டுப் புழுக்கை எங்கள் வீட்டின் பின்னால நின்ற வாழை மரத்துக்கு உரமாக,ஆட்டுக் குட்டிகள் எங்கள் வீட்டின் நடு ஹோலில் துள்ளி விளையாடும் செல்லப் பிள்ளைகள் போல வளரும்.

 எங்கள் வீடுக்கு கொஞ்சம் தள்ளி இலுப்பையடி சந்தியில் இருந்த " ஆட்டுக்கு விடுற சங்கரன் " என்பவரின் வீட்டில்தான் கெடாய் ஆடுகள் இருந்தது, " ஆட்டுக்கு விடுற சங்கரன் " எண்டு அவரை சொல்லுவார்கள் ,அப்படிச் சொல்லவதால் எசகு பிசகா தப்பாகா நீங்க நினைக்கக்கூடாது, அவரிடம் நிறைய சீமைக் கெடாய் வைத்து ஆட்கள் கொண்டு வரும் மறியாடுகளுக்கு கொஞ்ச நேரம் கலியாணம் கட்டி வைப்பதால் அவரை அப்படி சொல்லுவார்கள். சங்கரனும் சுருட்டைத் தலை முடியோட ,வாட்ட சாட்டமான சீமைக் கெடாய் போல எழும்பின ஆம்பிளை,எப்பவும் சாரத்தை உயர்த்திக் கட்டிக் கொண்டு ,சீமைக் கெடாய் போல நாடியில் கொஞ்சம் ஆட்டுத் தாடி வைச்சு அதை எப்பவும் தடவிக்கொண்டு இருப்பார்.

 ஆடு எப்பவும் கத்தி சத்தம் எழுப்பாது. அமைதியா ஆடாய்ப் பிறந்து தொலைத்த பாவத்தில் எங்களை பார்த்து பெரு மூச்சு விட்டுக் கொண்டு அடுத்த பிறப்பிட்க்கு ஏங்கிக் கொண்டு இருக்கும்.ஆனாலும் கொட்டிலில் கட்டின இடத்திலையே , கழுத்து இழக் கயிறில் ஒரு வட்டத்தில் நிண்டு சுழரும் ஆடு சில நாட்கள் திடீர் எண்டு அதிகாலை ஏக்கமாக

                         " செந்தூரப் பூவே செந்தூரப் பூவே சில்லென்ற காற்றே "..
எண்டு 16 வயதினிலே படத்தில வார பாடல் போல

                          " என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே "

 என்று கத்தும், அந்த சத்தம் சொல்லும் சந்தம் கொஞ்சம் விரகதாபம் போல இருக்க அம்மா உசார் ஆகி எங்க வீடுக்கு கொஞ்சம் தள்ளி அரசடிக் குறுச்சியில் வசித்த எங்க வீடில தென்னை மரம் ஏறி தேங்காய் பிடுங்கும் நட்சத்திரம் என்பவரை கையோட போய்க் கூடிக்கொண்டு வரச் சொல்லுவா,

நட்சத்திரம் வயதானவர்,வேட்டி கட்டிக்கொண்டு வருவார்,மேலே சேட்டு போடமாட்டார்,ஒரு சால்வையைக் கழுத்தில சுற்றிக் கொண்டு தென்னை மரத்தில ஏறுற மாதிரி கெந்திக் கெந்தி நடப்பார், வாயில எப்பவும் வெத்திலை போட்டு, பெரு விரலில் நிரந்தரமா சுண்ணாம்பு வைச்சுக்கொண்டு அதை இடைக்கிடை நாக்கில ஒரு இழுப்பு இழுத்து போட்டு, ரெண்டு விரலை சொண்டில வைச்சு அதுக்கு நடுவால பளிச் எண்டு துப்புவார் .

  அவர் தான் ஆட்டை சங்கரன் வீடுக்கு இழுத்துக்கொண்டு போவார், அவரை கண்டால் ஆடு கொஞ்சம் கலியாணக் களை வந்த பெண்கள் போல சந்தோசம் ஆகிடும். உண்மையில் ஆடு கிளுன்வங் குழையை கையில வைச்சுக்கொண்டு அவர் இழுத்துக்கொண்டு போனாலும் ஆடு,குழையில இண்டரெஸ்ட் இல்லாத மாதிரியும்,கலியாணத்தில இண்டரஸ்ட் போலவும் விறுக்கு விறுக்கு எண்டு நட்சத்திரத்தை இழுத்துக்கொண்டு முன்னால போகும் .ஒரே ஒரு முறை நானும் ஆட்டுடன் சங்கரன் வீடுக்கு ஆடு கலியாணம் கட்டுறது பார்க்கப் போயிருக்கிறேன்...

சங்கரன் வீட்டு வாசலில் நாங்க ஆட்டோட நிக்க, சங்கரன் வந்து எங்கள் ஆட்டைப் பார்த்திட்டு ,

                     " சரி உள்ளுக்க கொண்டு வாங்கோ "எண்டு சொல்லிப்போட்டு,

                       " சித்தப்பு , இவன் சின்னப் பொடியன என்னத்துக்கு இதுக்க இழுத்துக்கொண்டு வந்தனி "

                       எண்டு சொல்லிபோட்டு என்னை உள்ளுக்க விடவில்லை, எப்படியோ எங்க ஆடு வெளிய நிண்டு

                             " தென்றலைத் தூது விட்டு ஒரு சேதிக்குக் காத்திருந்தேன் "

எண்டு ஏக்கமா கத்த ,உள்ளுக்கு நிண்டு சீமைக் கெடாய்கள் எல்லாம் ஒரே நேரத்தில வில்லங்கமா தமிழ் சினிமா படத்தில வார வில்லன்கள் போல சத்தம் எழுப்பி சிக்னல் கொடுக்க, கொஞ்ச நேரத்தில எங்க ஆடு உள்ளுக்குப் போய்,கொஞ்ச நேரத்தில கலியாணம் கட்டி, கொஞ்ச நேரத்தில முகம் முழுவதும் சந்தோஷ திருப்தியுடன் வெளிய வந்து, திரும்பி எங்க வீட்டுக்கு வர மாட்டன், புகுந்த வீட்டிலேயே வாழப்போறேன் எண்டு அடம்பிடிக்க, அதுக்கு கிளுவங் குழையை காட்டியும் அது அசையிற மாதிரி தெரியவில்லை கடைசியில், அதைக் கொற இழுவையில் குழறக் குழற இழுத்துக்கொண்டு வந்தோம். ஆடு வீட்டுக்கு வார வழி முழுவதும் சத்தியவான் சாவித்திரி நாடகம் போட்டு கொண்டு வந்து கொட்டிலில் கட்டிய பின்னும் கிடந்தது

 

 " என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே "

என்று அழுது வடிந்து ஒரு கிழமையில் அடங்கி விட்டது..

ஆடு கொஞ்ச நாளில் வயிறு பெருக்குறதைப் பாத்து ,அம்மா ,
 

                     " அடி வயிறு இப்படி சளியுது இந்த முறையும் கெடாய்க்குட்டி தான் போடும் " எண்டா,

  அதுக்கு பிறக்கு வாயும் வயிறும இருந்த ஆட்டுக்கு நாங்க பின்னேரம் சந்தியில் இருந்த பிலாப்பழ ஆச்சி வீடில போய் பிலாக் குழை குத்திக்கொண்டு போடுவோம். ஒரு வெள்ளிகிழமை காலை ஆடு முனகுற சத்தம் கேட்டு கொட்டிலுக்குப் போய்ப் பார்க்க ஆடு,ஏறக்குறைய குட்டியை வெளிய தள்ளி,வேதனையில் முகத்தை வைத்துக்கொண்டு நிக்க,அம்மா எங்களை அது குட்டி போடுறதை கிட்ட இருந்து பார்க்க விடலை,ஆட்கள் பார்த்தல் குட்டி போடாது எண்டு சொன்னா, எப்படியோ போட வேண்டிய நேரத்தில ஆடு குட்டியைப் போட்டுதான் ஆகும் எண்டு அவாவுக்கு சொன்னா பிரச்சினை வரும் எண்டு தெரிந்ததால் ஒண்டும் சொல்லவில்லை,

  குட்டி போட்ட பிறகு இளங்கொடி எண்டு ஒன்று வெளியே சொப்பிங் பாக்கில தண்ணி நிரப்பின மாதிரி ஆட்டின் ஜனன உறுப்பில் இருந்து இறங்க அதையும் போடுறதை அம்மா கிட்டத்தில் இருந்து பார்க்க விடலை, பார்த்தால் இளங்கொடி போடாது எண்டு சொன்னா ஆடு இளங்கொடியை வலியோடு முனகி முனகிப் போட்ட உடனையே அம்மாவே கூப்பிட்டு

  " இளங்கொடி போடப் போக்குது போட்ட உடன அதை எடுத்து மாட்டுத்தாள் பேபரில் சுற்றி பாசல் பண்ணி அம்மச்சியா குள ஆலமரத்தில் கட்ட " சொன்னா,  " ஏன் அப்படிக் கட்ட வேண்டும் " எண்டு கேட்டதுக்கு  " அப்படி செய்தால் குட்டி நல்லா வளரும் "

 எண்டும் சொன்னா. சொன்ன படியே செய்தோம்.ஆல மரத்தில ஏற்கனவே குட்டிகள் நல்லா வளர வேண்டும் எண்டு மரம் முழுவதும் வேற பல பொட்டல்கள் மரத்துக்குப் பாரமாகத் தொங்க்கிக் கொண்டு இருந்தது .வீட்டை வர தாய் ஆட்டின் மடி தொங்கிக்கொண்டு இருக்க,அதன் முலைக்காம்பில் இருந்து பால் வடிந்தது,அம்மா அந்தக் கடும்புப் பாலை கறந்து எடுக்க, குட்டி மலங்க மலங்கப் பார்த்துக்கொண்டே , " என்னோட பாலை எதுக்கு பிறந்தவுடனே களவு எடுகுரிங்க, .....இந்த வீட்டில என்னோட சீவியம் கிழியத்தான் போகுது .. "

   என்பது போல இயலாமையில் அதைப் பார்த்துக்கொண்டு இருக்க, அம்மா அந்தப் பால் முழுவதையும் எடுத்து சட்டியில ஊற்றிக் காச்ச அது மஞ்சள் நிறத்தில திரண்டு வந்தது ..

    போட்ட கெடாய் குட்டியை முதல் நாள் முழுவதும் ஆடு வாஞ்சையுடன் நாக்கால நக்கிவிட அது ஒண்டுமே தெரியாத மாதிரி அப்பாவியாப் படுத்தே கிடந்து ,எங்களை " நான் ஏன் பிறந்தேன் " என்பது போலப் கண்ணை முழிச்சுப் பார்க்கிற மாதிரியும்,பார்க்காத மாதிரியும் கிடந்தாலும் , அடுத்தநாள் அது நாலு காலில் எழுத்து நிக்க முயற்சித்து ,தாய் மொழி கொஞ்சம் பழகி ,ரெண்டு நாள் தடுமாறி விழுந்து , மூன்றாம் நாள் பாலன்ஸ் பிடிச்சு,நாலாம் நாள் நாட்டியம் கொஞ்சம் ஆடப் பழகி, அஞ்சாம் நாள் எங்கள் அடுப்படியில் ஆட்டுப் புழுக்கை போட்டு, ஆறாம் நாள் வீட்டு நடு ஹோலில் மூத்திரம் பெய்து. ஏழாம் நாள் அது எங்கள் குடும்ப அங்கத்தினர் ஆக,ஏறக்குறைய அதை பார்த்துக்கொண்டு இருப்பதே சுவாரசியமா இருந்தது. அது வீடு முழுவதும் ஓடித் திரியும், 

              " என்னை ஏன் பெத்தாய் என்னை ஏன் பெத்தாய் " 

  எண்டு அம்மா ஆட்டோடு சண்டை பிடிக்கும் , முகத்தை முகத்தோடு உரசும் , முன்னம் காலில் துள்ளிக் குதிக்கும், பின்னம் காலில் பாயும் ,பின்னுக்கு வாழை மரங்களுடன் கிளித் தட்டு விளையாடும்,கிணத்தை எட்டிப் பார்க்கும்,களைத்துப் போய் ஓடி வந்த " பால் முழுவதும் எனக்குதான் " என்பது போல முட்டி முட்டி உறிஞ்சி உறிஞ்சிப் பால் குடிக்கும் ,

 மார்கழி மாதம் அடை மழை நேரம் , ஆட்டுக் கொட்டில் தகரத்தில் மாரி மழை அள்ளிக் கொட்டி டொக்கு டொக்கு எண்டு விழுந்து அதிர வைக்கவும், மழைக் குளிரிலும் ஆட்டுக்குட்டி பயந்து இரவெல்லாம் கத்தும். சத்தமில்லாம் இருட்டோ இருட்டா அதை வீட்டுக்க கொண்டு வந்து வைச்சால், அது வீட்டுக்க நிண்டு

                           " அம்மே அம்மே , அ ம்மே அ ம்மே ,அம் மே அம் மே , அ ம் மே அ ம் மே "

எண்டு அம்மாவையும் கொண்டுவா எண்டு கத்தும்,அந்த சத்தத்தில் அம்மா எழும்பி

  " இவன் என்னடா மனுசரை அசந்து நித்திரை கொள்ளவிடாமல்க் கொல்லுறான் ,ஏண்டா மிருகங்களை வீட்டுக்க கொண்டுவந்து உயிரை எடுகுறாய், நீ பேசாமா போய் ஆட்டுக் கொட்டிலுக்க படடா "  எண்டு சண்டை தொடக்குவா .  ஒருநாள்க் காலை .....  ஆட்டுக் கொட்டிலில் சிலமன் ஒண்டும் இல்லை எண்டு வந்து எட்டிப் பார்க்க,ஆடு அலங்கோலமாய் விழுந்து கிடந்தது, அதன் வாயில நுரை தள்ளி, முகத்தில இலையான் மொய்க்க, ஆட்டுக் குட்டி அப்பவும் பால் குடிக்க ஆட்டை இடிச்சு இடிச்சு எழுப்ப, ஆடு எழும்பவில்லை,அம்மா வந்து பார்த்திட்ட ,

                            " கொஞ்சநாள் ஒரு மாதிரி தான் நிண்டது, நான் நினைச்சது சரியாதான் போச்சு "
                      எண்டு சொன்னா,வேற ஒண்டுமே சொல்லவில்லை. குட்டி எங்களை மலங்க மலங்கப் பார்த்துக் கொண்டு அம்மா அம்மா எண்டு கத்த,அம்மா ஆட்டுக் கல்லில் இருந்துகொண்டு,

    " வாழை மரத்துக்கும், மாதுளை மரத்துக்கும் நடுவில கிடங்கு வெட்டச் " சொன்னா.

 மம்பட்டியை எடுத்துக்கொண்டு போய்க் கிடங்கு வெட்ட ஆட்டுக் குட்டி அப்பவும் கிடங்கைச் சுற்றி துள்ளி துள்ளி ஓடி விளையாட ,அம்மா ஆட்டை இழுத்துக்கொண்டு போக சொன்னா,எனக்கு ஆட்டைப் பாக்க பாவமா இருக்க,அதை தூக்கிக்கொண்டு போக முயற்சிக்க அது பாரமா இருக்க,அம்மாவுக்கு கோவம் வந்திடுது,

   " பின்னம் காலில பிடிச்சு இழுத்துக் கொண்டு போடா, செத்த ஆட்டை வைச்சு கொண்டு இவன் என்னடா தாலாடுப் பாடிக்கொண்டு நிக்குறான் ,இழுத்துக்கொண்டு போடா " எண்டு சொன்னா,நான் நிலத்தில தேயும் எண்டு முடிந்தளவு ஆட்டுக்கு நோகாமல் அதை இழுக்காமல் தூக்கியே கொண்டு போய்க் கிடங்கில வளர்த்தினேன்,

  ஆடு கிடங்கில கிடந்தது மேல பார்த்துக்கொண்டு இருந்தது, அதுக்கு போற வழிக்கு ஒரு தேவராமாவது பாடி வழி அனுப்பி மண் போடுவம் எண்டு நினைக்க அந்த நேரம் பார்த்து ஒரு தேவாரமும் நினைவில வரவில்லை ,

                           " அத்திப் பழம் சிகப்பா-எங்க அக்கா பொண்ணுசிகப்பா, அத்திப் பழம் சிகப்பா-எங்க அக்கா பொண்ணுசிகப்பா ,,"

 என்ற சினிமாப் பாட்டுதான் திருப்பி திருப்பி நினைவு வந்தது. இந்தப் பாட்டு செத்த வீடுக்கு உதவாது எண்டு போட்டு வீட்டுக் ஹோலில இருந்த பிள்ளையார் சிலையில இருந்து கொஞ்சம் திருநீறு எடுத்துக்கொண்டு வந்து அதன் தலையில பூசிப்போட்டு,

                          " மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு ...................... "

எண்டு பாடி முடிய, ஆடு ஒருக்கா தலையை சரிச்சுப் பார்த்திட்டு திருப்பி படுத்திட்டுது,மண்ணை சலிச்சு மூடிப்போட்டு அதுக்கு மேலே செவ்வரதம் பூ ஒரு கொப்போடு பிடுங்கிக் கொண்டு வந்து வைச்சுப்போட்டு, ஆட்டுக்குப் பிடித்தமான கிளுவங் குழையும் கொஞ்சம் மேல குத்தி வைச்சு முடியும் வரை அம்மா ஆட்டுக்

கல்லில் இருந்து பார்துக் கொண்டு இருந்தா,ஒண்டும் சொல்லவில்லை,

  அம்மா அந்த ஆட்டுக் குட்டியை பிறகு கொஞ்சம் வளர வித்தா, அதுக்குப் பிறகு எங்கள் வீட்டில் ஆடு வளர்க்கவில்லை,ஆட்டுக் கொட்டிலை கொஞ்சம் சிமெந்து போட்டு ஒரு ஸ்டோர் போலக் கட்டி ,அந்த இடத்தில ஒரு காலத்தில் ஆடு நின்ற நினைவுகள் மட்டும் அதன் சுவர் முழுவதும் அப்பி இருக்க, ஒரு கட்டத்தில் நாங்க எல்லாருமே அந்த வீட்டை விட்டு தேசிக்காய் மூட்டையை அவுத்துக் கொட்டின மாதிரி ஒவ்வொரு பக்கத்தால சிதறிப் போன்னோம்,ஆடு வளர்த்த அம்மா அமரிக்கக் கண்டத்தில,மற்ற சகோதரங்கள் ஒவ்வொரு நாட்டில, ஒவ்வொரு கோலத்தில.....

                        இது தான் வாழ்க்கை.!!!. 

Naavuk Arasan

  • கருத்துக்கள உறவுகள்

ஆடு குட்டி போட முதல் ஏற்பூசி போட வேணும்! இல்லாட்டி அனேகமாக ஏற்பு வலியில் செத்து விடும்! எங்கட ஆட்கள் மரத்தில இளங்கொடி கட்டுற வேலையெல்லாம் சரியாகச் செய்வார்கள்! ஆடு மாட்டுக்கு முறையான மருத்துவம் மட்டும் செய்யார்! 

  • கருத்துக்கள உறவுகள்

ஆடும் நினைவுகளை மனதில் ஆட வைத்த குமாரசாமியின் ஆக்கம் மிக அருமை

குமாரசாமி அண்ணை இது உங்களது ஆக்கமா?

எழுத்து நடையில் உங்கள் வழமையான நக்கலும் நையாண்டியும், சொண்டுக்குள் சிரித்தபடி வாசித்தேன். றியலி சுப்பர்ப். எனது அம்மா வளர்த்திருந்தாலும் எ்ரை ஆடு என்று கூறிக்கொண்ட "குட்டி"யும் அதன் குட்டிகளும் கண்முன் வந்து போயின.

கொங்கிறீட் காடுகளிற்குள் (ஒஸ்லோவை அப்படி அழைக்க முடியாதுதான்) வாழ்க்கையில் அரைவாசியைத் தொலைத்துவிட்ட நான் பழைய பசும் நினைவுகளைத் தேடியபோது, இங்கும் அவை நினைவுகளாகவே இருந்ததைக் கண்டு ஆரம்பத்தில் கொஞ்சம் ஆடிப்போய்த்தான் விட்டேன். மறுபடியும் சுதாகரித்து எழுந்து இவற்றைத் தேடியபோது ஏதோ சங்ககாலத்திலிருந்து வந்தவனைப் பார்ப்பதுபோல பார்த்தார்கள். 

எமது நினைவுகளை இப்படியான எழுத்துகள்தான் கண்முன் கொண்டு வருகிறது. இதை எழுதும்போதும்கூட எமது நாட்சார வீட்டின் நடுமுத்தத்தில் எனது ஆட்டுக்குட்டி முன்னங்காலைத் தூக்கி பக்கவாட்டில் திரும்பி ஒரு பாச்சல் பாயுறது ஞாபகம் வருகுது.

தொடர்ந்து எழுதுங்கள் அல்லது பதியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 " ஆட்டுக்கு விடுற சங்கரன் " 

இப்ப உந்த விளையாட்டு ஒன்றுமில்லை போல கிட‌க்கு, எல்லாம் ஊசி தானாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 கிழிஞ்சுது போ :shocked:.....சத்தியமாய் நான் உந்த கதையை எழுதேல்லை  fire%201_zpswxx1glre.jpg       

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு, பழைய நினைவுகளை கிழறிவிட்டது. ஒவ்வொருதருக்கு ஒரு குட்டியென  தூக்கி கொண்டு போய் படுத்தால் விடிய காணக் கிடைக்காது, அம்மா கலைத்துவிட்டுவிடவா நாங்க தூங்கியபின். அதை அனைத்துக்கொண்டு துங்குவதே ஒரு சுகம். சின்ன குட்டிகள் துள்ளி விளையாடுவதை நாள் முழுக்க இருந்து இரசிக்கலாம்

ஆடுகள் குருவிச்சை இலையை விரும்பி சாப்பிடும், குருவிச்சை இலை வெட்டும் போது, அதன் பழங்கள், காய்கள், பூக்களை பிடுங்கி சாப்பிட்டுவிடுவேன், நல்ல சுவை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.