Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படைப்பாளி ஆதிலட்சுமியின் மே 17 அனுபவப்பகிர்வு

Featured Replies

மே 17.  மறக்கமுடியாத இன்றைய நாள்.  

2009 ஆம் ஆண்டின் மே 15ஆம் திகதி நான் முற்றாக தனித்துப் போனேன். சுதந்திரபுரத்தில் மயிரிழையில் உயிர்தப்பிய என்னை தம்முடன் அரவணைத்து முள்ளிவாய்க்கால் வரை அழைத்து வந்த குடும்பம் ஒன்று இனி உங்கள் வழியை பார்த்துக்கொள்ளுங்கள் என உணர்த்திப் பிரிந்தனர். 

நான் ஓரளவுக்கு பிரபலமானவள். ஊடகங்களில் அறியப்பட்டவள் என்பதால்  என்னால் தமக்கு ஆபத்து ஏற்படலாம் என அவர்கள் எண்ணியிருக்கலாம் என இப்போது உணர்கிறேன்.  அது தவறுமில்லை.  அன்று அவர்கள் என்னிடம் காட்டிய அன்பிற்கு என்றும் தலைவணங்குகின்றேன்.  

பதினைந்தாம் திகதி இரவு முள்ளிவாய்க்காலில் ஆயுத சேமிப்பு கிடங்கு ஒன்று தாக்குதலுக்கு உள்ளாகி வெடித்துக்கொண்டிருந்தது.  இரவு முழுவதும் போராளிக் குடும்பம் ஒன்றுடன் ஒற்றையாய் தங்கியிருந்தேன்.  

இனி என்ன சாவு நெருங்கிவிட்டது என்கின்ற நிலை.  அதிகாலையில் வெடிப்பு சத்தங்கள் அமந்த நிலையில் அந்த குடும்பம் உண்டியல் சந்தியை நோக்கி புறப்பட்டது. நானும் தனித்துப் போய்விட்ட நிலையில் அவர்களுடன் புறப்பட்டேன். உரசுமாற்போல துப்பாக்கிச் சன்னங்கள் காற்றில் அலைந்துகொண்டிருந்தன.  

காலை ந்ந்திக்கடல் அருகே நவம் அறிவுக்கூடப் போராளிகளுடன் நான் சேர்ந்துகொண்டேன். சமர்க்களங்கள் பலகண்டு விழுப்புண்கள் சுமந்தவர்கள் அவர்கள். என்னை அன்போடும் அக்கறையுடனும் பார்த்தார்கள்.  2 அடி அகலமும் 4 அடி நீளமும் உயரம் குறைந்ததுமான பதுங்குகுழியில்  குழந்தைகள் உட்பட்ட பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் இருந்தோம். 

நந்திக்கடல் அருகிலும் குண்டுகள் விழுந்து பனை வடலிகள் மற்றும் பற்றைகள் பற்றிஎரிய தொடங்கின. சாவு ஓலங்கள் கிலியை ஏற்படுத்தின. விறைத்துப்போய் மரணக்களையுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தோம். குழந்தைகள் கூட அழமுடியாமல் இறுகிக்  கிடந்தன. 

இரண்டு நாட்களாய் உணவோ தேனீரோ இல்லை. எனது பையில் நந்தினி தந்த சிறிதளவு சீனி இருந்தது. அதைக்கூட வாயிற்போடும் மனநிலை இருக்கவில்லை. மகனின் தவிப்பு மனதை வருத்தியது. 

எங்களை சுற்றி ஒரே புகைமண்டலம்.  கூக்குரல்கள். இனி உயிர் தப்பமுடியும் என்ற நம்பிக்கை ஏற்படவில்லை எனக்கு. மகனையும் துணைவரையும் பிரிந்து தொடர்பற்ற நிலையில் இனி உயிர்தப்பி என்ன செய்வது என்றும் இருந்தது. 

எமக்கு ஒரு பத்து மீற்றர் தள்ளி ஒரு செல் விழுந்து வெடித்தது. அக்கம் பக்கமெல்லாம் கூக்குரல்.  கட்டுப்போடுங்கோ என்ற போராளிக்குரல்கள்.  பதுங்குகுழியை விட்டு வெளியேறி ஓடியவர்களுடன் நானும் ஓடினேன். என்பின்னே பார்வைவலுவற்ற போராளி நிமலன் , பயப்பிடாதேங்கோ என எனக்கு ஆறுதல் சொல்லியபடி வந்தார். 

நவம் அறிவுக்கூட போராளியான காவலன் மாஸ்ரர் சில தினங்களுக்கு முன் காயப்பட்டிருக்கவேண்டும். கண்பார்வையையும் இழந்துவிட்டிருந்தார். காயங்களுடன் அவரும் அவரின் மனைவி பிள்ளைகளும் கூட பின்னால் வந்துகொண்டிருந்தனர். ( காவலன் மாஸ்ரர் இறந்துவிட்டதாக அறிந்தேன்). 

என் தலையை உரசுமாற்போல வந்த சிறிய குண்டு ஒன்று முன்னால் விழுந்தது. ஆனால் வெடிக்கவில்லை. அதனால் தப்பினேன்.  எங்கே போவது என தெரியவில்லை. பொழுது மங்கும்வரை அங்கும் இங்குமாக அலைந்தேன்.  வழி நெடுகலும் இறந்த சிதைந்த உடல்கள். சிறிய பதுங்குகுழி ஒன்றில் இரத்தம் குளமாக நின்றது. நான்கைந்து தலைகள் மட்டும் தெரிந்தன. 

முன்னர் இறந்தவர்களின் உடல்கள் அழுகி துர்நாற்றம் வீசின. நான் அலைந்துகொண்டிருந்த நிலையில் மெல்லிய இருளில் 
"ஆதியக்கா. ......"
என்று என் கைகளை பிடித்தாள் நவம்அறிவுக்கூட போராளி ஆசிரியை வித்தகி. 
அந்த நெருக்கடியிலும் என்னை இழுத்துக்கொண்டு சென்று தனது அம்மாவிடம், " அம்மா ஆதியக்கா இனி உங்கட பொறுப்பு. உங்களுடனே கூட்டிச்செல்லுங்கள்......." என கூறிப்போய்விட்டார்.  

இரவு முழுவதும் இராணுவத்தினரின் தாக்குதல்கள்.  நடப்பதும் கைவிடப்பட்ட பதுங்குகுழிக்குள் பதுங்குவதும் என இருந்தோம். மழைகாலம் என்பதால் வெற்றுக்கால்களில் சேறு காய்ந்து குத்தியது. 
நிலமெங்கும் காயப்பட்டவர்கள். உயிரற்ற உடல்களே கண்ணிற்பட்டன. கண்ணீர்கூட இல்லை. அழுவதற்கும் எவரிடமும் தென்பில்லை. 

பின்னர்  வித்தகி  குடும்பத்துடனேயே  தங்கி இருந்து மே 17 காலை வட்டுவாகலூடாக  இராணுவாக்கிரமிப்புக்குள் வந்தோம். கடலென கூடிய மக்களிடையே காயங்களுடன் எனக்கு தெரிந்த பலரும் இருந்தார்கள்.
இன்று அவர்களில் பலர் எங்கே எனத்தெரியாது. 

மூன்று ஆண்டுகால பிரிவையும் துயரங்களையும்  பல்வேறு நெருக்கடிகளையும்  மன உளைச்சல்களையும் தாண்டி துணைவருடன் இணைந்துகொண்ட நான் இறக்கிவைக்கமுடியாத் துயரங்களுடன் இன்னமும் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.  உயிருள்ளவரை மறக்கமுடியாத வலிகள். 

ஆனால் அனைத்துமே நான்பிறந்த தாய்மண்ணுக்காக என்ற நெகிழ்வு நிறைவுதருகிறது.   இது நான் தெரிவு செய்த பயணப்பாதை. பயணம் இலகுவானதாகவும் சொகுசாகவும் இருந்தபோது துதிபாடியாகவும் ,  பின்பு வசைபாடியாகவும் என்னை நான் ஒருபோதும் தாழ்த்திக்கொள்ள மாட்டேன். என்  இலட்சிய எழுத்தின் சத்தியத்தை பேணுவேன்.  உண்மைக்காகவும் நேர்மைக்காகவும் வாழக்கற்றுத்தந்த என் தந்தைக்கு நான் நன்றி சொல்வேன்.  அவரே எனக்குள் நாட்டுப்பற்றை நாட்டியவர். 

இறுதிப்போர் எப்படி நடந்தது ? ஏன் இப்படி நசுக்கப்பட்டோம் ?கடைசிவரை என்ன நடந்ததென்பது எல்லோர்க்கும் தெரியும்.  

முள்ளிவாய்க்காலில் வதைந்தவர்கள் , காயமுற்றவரகள் , உயிரிழந்தவர்கள், உறுப்பிழந்தவர்கள், காணாமற்போனவர்கள் , என்னைப்போல் உயிர்தப்பி இன்னமும் மனவதைப் படுவோர் எல்லோருக்குமாக இறைவனை இறைஞ்சுகிறேன். எமது அடுத்த தலைமுறையாவது தலைநிமிர்ந்து மகிழ்வாக வாழவேண்டும். அதற்காக உழைப்போம்.

  • தொடங்கியவர்

படைப்பாளி ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களால் அவரது முகப்புத்தகத்தில் பதியப்பட்ட இவ் அனுபவப்பகிர்வு அவரது அனுமதியோடு இங்கு பகிரப்படுகின்றது.

 

  • கருத்துக்கள உறவுகள்

ம் மனதை வருத்துகிறது

வாழ் நாளில் மறக்காமல் இருக்கும் வடுக்களில் ஒன்று  இப்படி எத்தனை பேருக்கு தங்கள் கடந்த கால  நினைவை மனதில் புதைத்து கொண்டு ?? 

முள்ளிவாய்க்காலில் வதைந்தவர்கள் , காயமுற்றவரகள் , உயிரிழந்தவர்கள், உறுப்பிழந்தவர்கள், காணாமற்போனவர்கள் , எல்லோருக்குமாக இறைவனை இறைஞ்சுகிறேன்.

எமது அடுத்த தலைமுறையாவது தலைநிமிர்ந்து மகிழ்வாக வாழவேண்டும். அதற்காக உழைப்போம்

  • தொடங்கியவர்
2 hours ago, Mayuran said:

 அனைத்துமே நான்பிறந்த தாய்மண்ணுக்காக என்ற நெகிழ்வு நிறைவுதருகிறது.   இது நான் தெரிவு செய்த பயணப்பாதை. பயணம் இலகுவானதாகவும் சொகுசாகவும் இருந்தபோது துதிபாடியாகவும் ,  பின்பு வசைபாடியாகவும் என்னை நான் ஒருபோதும் தாழ்த்திக்கொள்ள மாட்டேன். என்  இலட்சிய எழுத்தின் சத்தியத்தை பேணுவேன்.  உண்மைக்காகவும் நேர்மைக்காகவும் வாழக்கற்றுத்தந்த என் தந்தைக்கு நான் நன்றி சொல்வேன்.  அவரே எனக்குள் நாட்டுப்பற்றை நாட்டியவர். 

இந்தப் பந்தியை தூற்றிக்கொண்டு திரிவோர் கண்டிப்பாக வாசிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

//நான் அலைந்துகொண்டிருந்த நிலையில் மெல்லிய இருளில் 
"ஆதியக்கா. ......"
என்று என் கைகளை பிடித்தாள் நவம்அறிவுக்கூட போராளி ஆசிரியை வித்தகி. 
அந்த நெருக்கடியிலும் என்னை இழுத்துக்கொண்டு சென்று தனது அம்மாவிடம், " அம்மா ஆதியக்கா இனி உங்கட பொறுப்பு. உங்களுடனே கூட்டிச்செல்லுங்கள்......." என கூறிப்போய்விட்டார். //

தன்னுடைய உயிருக்கு... உத்தரவாதம் இல்லாத நிலையிலும், மற்றொருவரை... காப்பாற்றிய  ஆசிரியை வித்தகியின், செயலை நினைக்க... என்ன எழுதுவதென்றே தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்டுரையை வாசித்து விட்டு  வெறுமனே லைக் செய்துவிட்டு போக என்னால் முடியவில்லை.
நெஞ்சில் அமிலம் நிறைய, நான் நம்பி வணங்கிய கோயில்கள்,கடவுள்களுக்கு வசையும் சாபமும் மட்டுமே என்னிடம்  எஞ்சி இருக்கிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.