Jump to content

பகல் வெள்ளி பார்த்த கதை.


Recommended Posts

பதியப்பட்டது

எனக்கு அப்போது ஏழு வயதிருக்கும். என்னவென்று சொல்லத்தெரியாத ஓர் கனமான, பீதி நிறைந்த அமைதிக்குள் மூழ்கிக்கிடந்தந்தது எனது தேசம்.

மேலே நீறு மூடிக்கிடந்தாலும் முழு வீச்சுடன் வெடித்தெரியத் தயாராகிக் கொண்ட்ருந்த விடுதலை வேட்கைத்தீயின் வெப்பம் அவ்வப்போது ஆங்காங்கே தலை காட்டி, உயிரின் ஆழம் வரை சிலிர்க்கச் செய்து விட்டு மறைந்தாலும், அதை இன்னதென்று கிரகித்துக் கொள்ளும் பரிபக்குவமோ அறிவாற்றலோ முதிர்ச்சி அடையாத வயது. ஆகவே தென்றலாகத்தன் வீசிக் கொண்டிருந்தது எனது பட்டாம் பூச்சிப் பருவம்.

அன்று பாடசாலை விடுமுறை நாள். வறுத்த அரிசிமாவுடன் தேங்காய்ப்பூவும் சேர்ந்து வேகும் வசனை, புதிதாய்ப்புலர்ந்த காலைப்பொழுதின் உற்சாகத்திற்கு உரம் கூட்டிக்கொண்டிருந்தது.

அம்மா சுடவைத்துத் தந்த பாலை சர்க்கரைத்துண்டைக் கொறித்துக்கொண்டே குடித்து விட்டு மாம்பழம் வங்கி வருவதற்காக நானும் அண்ணனும் புறப்பட்டோம்.

எங்கள் வீடு ஓர் முச்சந்தியில் இருந்ததனால் விடுப்புப் பேசும் கூட்டமொன்று, பெரும்பாலும் எங்கள் வீட்டின் முன்னால் கூடியிருக்கும். அவர்களூக்கு வசதியாக நிழல் கொடுத்துக் கொண்டிருந்தது, பாதை ஓரத்தில் நின்ற ஓர் பெரிய அத்தி மரம். கனமான பலகையினாலான இரண்டு வாங்குகளையும் எங்கிருந்தோ கொண்டுவந்து போட்டு, விடுப்புப் பேசுவோரின் ஓர் 'சபை'யாகவே அந்த இடத்தை பிரகடனப்படுத்தி இருந்தர்கள்.

அப்படி அவர்கள் கூடியிருக்கும் போது என்னைக் கண்டாற் போதும். எப்படியாது துரத்திப்பிடித்துக் கொண்டுபோய், அவர்கள் மத்தியில் நடுநாயகமாக இருக்கவைத்து, பாட்டுப்பாடச் சொல்லுவர்கள். நான்'பிகு' பண்ணினால் கிச்சுக்கிச்சு மூட்ட தொடங்கி விடுவார்கள். அப்போதெல்லாம், கிச்சுக்கிச்சு மூட்டுவதுதான் உலகிலேயே சகித்துக் கொள்ள முடியாத சித்திரவதை என்பது எனது அனுபவக்கணிப்பு.

பாடசாலைமுடிந்து வந்ததும் என்னுடைய பெரும்பாலான மத்தியான நேரங்கள்,அவர்களுடன் தான் களியும். படித்த, பண்பானவர்களின் கூட்டம். என்பதால், அவர்களுடன் பழகுவதற்கு வீட்டிலும் எந்த ஆட்சேபனையும் தெரிவிப்பதில்லை. 'குடும்பம்' எனும் வட்டத்தைதாண்டி, 'சமுதாயம்' எனும் எல்லைக்குள் என் இரு கரம் பற்றி அழைத்துச் செல்லும், வழி காட்டிகளாய் இருந்திருக்க வேண்டிய என் மதிப்பிற்குரியவர்கள் அவர்கள். ஆனால், வெறிகொண்டெழுந்த பேரினவாத பூதம் மூட்டிவிட்ட யுத்தத் தீயில் வாடி, வதங்குண்டு, கருகி, காணாமற்போன. புலப்பெயர்வுகளால் இளயசமுதாயம் இளந்து போன உன்னதங்களில், இதுபோன்ற ஆரோக்கியமான சமூகக்கட்டமைப்பும் ஒன்று.

மாம்பழம் வாங்கப்போன கதையை விட்டு விட்டு எங்கேயோ போய் விட்டேன். படலையைத் திறந்து கொண்டு வெளியே வரும் போதே, என்னைப் பிடித்துக் கொள்ள வந்த என் இசை ரசிகர்களிடம்???? அகப்படாமல் சிட்டெனப்பறந்து தப்பிக்கொண்டேன். போகும் வழியில் 'ஐம்பேசத்தின்ர' மாட்டுத்தாள் பாக் ஒன்றும் வாங்கிக்கொண்டு, வழமையாக மாம்பழம் வாங்கும் வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தோம். அந்தவீட்டுப் பிள்ளைகளுடன் விளையாடுவதற்கு, நாம் அடிக்கடி அங்கே போவதுண்டு. அப்படிப்போகும் நேரங்களில், எத்தனை பழங்கள் சாப்பிட்டாலும் இலவசம். ஆனால் காசுக்கு வாங்கப்போனால், கறார் விலைதன். பை நிறைய வெள்ளைக் கொழும்பான் பழங்களை நிரப்பி விட்டு, இரண்டு விலாட்டு மாம்பழங்களை, எனக்கொன்றும் அண்ணாக்கொன்றுமாகத் தந்த அந்தவீட்டு அக்கா, ''விலாட்டு மாவில இப்பத்தானப்பன் காய்க்கத்து வங்கியிருக்கு அடுத்த வருசம் இதவிடப் பெரிய பாக்கு நிறயத்தாறன் சரியோ'' எனச் சொல்லியவாறே எனக்கு வழமையாகத்தரும் கன்னக்கிள்ளலையும் தந்து அனுப்பி விட்டார்.

அண்ணா பழம் நிறைந்த பையை இரு கைகளாலும் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டு வந்ததனால், நான் ஒரு பழத்தை உரித்து, அண்ணா ஒரு கடியும் நான் ஒரு கடியுமாக மாறி மாறி சுவத்துக்கொண்டே வருகையில், தூரத்தே வெள்ளயுஞ் சொள்ளையுமாக வந்து கொண்டிருந்தது எனது கெட்ட காலம்.

அவர் எங்களை நெருங்க நெருங்க மாம்பழமும் எங்கள் இருவரினதும் வயிற்றுக்குள், ஜீவ மோட்சமடைந்து கொண்டிருந்தது. இதோ... ஆயிற்று.... மாம்பழம் முழுவதுமாக தன் பிராணனை இழந்து, விதை மட்டும் மஞ்சளாய் என் கையில் இளித்துக்கொண்டிருக்கையில், ''என்ன தம்பி இண்டைக்குப் பள்ளிக்கூடம் போக இல்லயோ?'' எனக் கேட்டுக் கொண்டே பதிலுக்குக் காத்திராமல், அவசரமாக எம்மைத் தாண்டிப் போனவரிடம், ''இண்டைக்குப் பள்ளிக்கூடம் லீவு'' என்று சொல்லிக ்கொண்டே நான் எறிந்த மாங்கொட்டை, யதேச்சையாக அருகிலுருந்த மதகிற்ப்பட்டுத் தெறித்து, அவரின் வெள்ளைச்சாரத்தில், மஞ்சள்ப் பொட்டு வைத்து மங்களகரமாய் ஒரு கோடும் கிளித்துக்கொண்டே கீழே விழுந்து ''இது எப்படி இருக்கு?''என்று என்னைப்பார்த்து விசமமாய்ச்சிரித்தது.

நிலமையின் விபரீதத்தைப்புரிந்து கொள்வதற்குக்கூட அவகாசம் கிடைக்க வில்லை. புயல் வேகத்தில் என்னை நோக்கிப்பாய்ந்து வந்த அந்த மனிதனின் வலது கை என் இடது கன்னத்தில் வெடித்தது. {அடிச்சால் பகல் வெள்ளி தெரியும், மின்னல் தெரியும்.., என்று சொல்லுறதெல்லாம் வெறும் சண்டித்தனமில்லை. அதைப்பற்றி இருந்த கொஞ்ச நஞ்ச சந்தேகமும், கொழும்பில ஆமிக்காறனிட்ட வாய் காட்டினதில தீர்ந்து போச்சு} இடியென விழுந்த அடியின் அதிர்ச்சியில் நான் நிலை குலைந்து போனாலும் கால்கள் மட்டும் தம் கடமையைச் சரியாகச் செய்தன. ஆம், அடிவிழுந்த மறு நொடி நான் மின்னலென ஓடி மறைந்து போனேன்.

குச்சொழுங்கைகளுகூடாகவும், த்ட்டங்களுக்கு குறுக்காகவும் ஓடி, பின் படலை வழியாக , வீட்டுக்குள் போனால், 'விதி????' என்னை முந்திக்கொண்டு வந்து, முன் முற்றத்தில் துள்ளிக் கொண்டிருந்தது. கூச்சல் போடும் 'மிஸ்டர் மங்கொட்டையரும் அவரைச் சமாதானப்படுத்தும் அயலவருமாக, எங்கள் வீட்டு முற்றம் கலவர பூமியக மாறி இருந்தது.

''அடடா... வில்லங்கம் வீடுதேடி வந்திருக்கே..... இண்டைக்கு வீட்டிலயும் நல்ல பூசைதான்'' எனப்பயந்தவாறே வீட்டுக்குள் ஒழிந்து கொண்டு வெளியே எட்டிப்பர்த்துக் கொண்டிருந்த என்னைக் கட்டிக் கொடுத்த புண்ணியத்தை தங்கை கட்டிக்கொண்டாள்.

''அம்மா... அண்ணா இங்க நிக்கிறார்''என அவளின் குரல் கேட்டு வந்து என் முகத்தைப்பார்த்தவுடன் அம்மா போட்ட சத்தத்தைக் கேட்டு ஓடிவந்து பார்த்த அத்திமரத்தடி அண்ணாமாரின் முகத்தில் கோபக்கனல் பற்றிக்கொள்ள, அவர்களிடமிருந்து, மாங்கொட்டை மாமாவை சேதாரமின்றிக் காப்பாற்ற. மிகுந்த சிரமப்படவேண்டியதாயிற்று.

சிறிலங்காவின் ஆக்கிரமிப்பு ராணுவ நடவடிக்கைகள் போல புயலெனப் புறப்பட்டு, கடைசியில் அடி வாங்கி நொந்து நூலாகி திரும்பிபோக வேண்டிய நிலை மாங்கொட்டையருக்கு ஏன் வந்தது? என் கன்னத்துக்கு அம்மா களிம்பு தடவும் போதுதான் பதில் தெரிந்தது. கன்னத்தில் பதிந்திருந்த விரல்களின் அடையாளம் தான் எல்லோருடைய கோபத்திற்கும் காரணமென்று.

கலவரம் தணிந்து எல்லோரும் கலைந்து போன பின், அம்மா பரிமாறிய புட்டும் தயிரும் மாம்பழமும், அன்று மட்டும் ஏனோ ஒருவருக்கும் அவ்வளவாக ருசிக்கவில்லை.

மின் ஆதவன் எங்களூரில் உதயமாகாத காலமது. சம்பவதினம் முன் விறாந்தையில் விளக்கு வெளிச்சத்தில் படித்துக்கொண்டிருந்த போது, படலை திறக்கும் சத்தம் கேட்டு, எல்லோருடைய பார்வைகளும், முற்றத்தில் எங்களை நோக்கி வரும் அந்த உருவத்தை நோக்கிக் குவிகிறது. அந்த உருவம், நெருங்க நெருங்க எனக்குள் பீதியின் நிழல் படரத்தொடங்கியது. கிட்டே வரும் வரை பொறுமை இல்லாமல், அவரின் முகத்தில் வெளிச்சம் படும் படி அண்ணா விளக்கைத் தூக்கிப் பிடித்த மறுகணம்,என்னைப் பயம் முற்றிலுமாக பற்றிக்கொண்டது.

வந்தது வேறு யாருமல்ல. அன்று கலை சாரத்தில் மஞ்சள் கோடு போட்டதற்காக என் கன்னத்தைச் செல்லமாக ச் சிவக்க வைத்த அதே மனிதன் தான். ஆனால் இப்போது அவரின் முகத்தில் கோபமில்லை குரோதமில்லை. என்னைப்பர்த்து சிரித்தவாறே நெருங்கி வந்து, ''எங்க கைய நீட்டுங்கோ பாப்பம்''என்றார். நான் எதோ மந்திரத்துக்கு கட்டுப்பட்டவன் போல் கைகளை நீட்ட அடுத்த நிமிடம் இன்ப அதிர்ச்சி. என் இருகைகளும் கொள்ளாத அளவிற்கு கண்ணா டொபிகளைக்கொட்டினார். நான் அடங்காத திகைப்புடன் அவரின் முகத்தையே பார்த்துக் கொண்டுக்கையில், மண்வெட்டியும் கலப்பையும் பிடித்து, காய்த்து முறுக்கேறி, சொரசொர என்றிருந்த அவரின் கைகளினால், சிவந்து தடித்துப் போயிருந்த எனது கன்னத்தைத் தொட்டதுதான் தாமதம். எங்கிருந்த ுதான் வந்ததோ விம்மி, வெதும்பி, வெடித்துப்புடைத்து. அப்படி ஒரு அழுகை. அழுதேன் அழுதேன் அழுதுகொண்டே உறங்கிப்போனேன்.

அடுத்த நாள் காலையில் எழுந்த உடன் அம்மாகேட்ட முதல் கேள்வி ''என்னடா கன்னத்தில உந்த அடி விழுந்தும் அழாமல் இருந்து போட்டு டொபியக்கண்ட உடன உந்த அழுக அழுறாய்'' என்பதுதான்.

அன்றிலிருந்து அவர் என்னை எங்கே கண்டாலும் ''தம்பி கையில மாங்கொட்டை ஏதும் வச்சிருக்கிறியலோ?'' என்று கேட்டு என்னை வெட்கப்பட வைப்பதை வழக்கமாக்கிக் கொண்டார்.

அடித்தும் அணைத்தும், தட்டிக்கொடுத்தும், தட்டிக்கேட்டும் நம் ஒவ்வொருவரினதும் வளர்ச்சிக்கான பாதையில் நம்மை வழி நடத்திச்செல்வது, நாம் சார்ந்த சமூகமே. அந்த வகையில், எனக்கான சமூகம் எந்தளவிற்கு இறுக்கமான மனித உறவுகளின் கட்டமைப்பாக இருந்தது.அந்த உணர்வு சார்ந்த ஒன்றிப்பானது, நமக்குள் விதைக்கும் பாதுகாப்புணர்வும், இது எனது மண், இவர்கள் எனது மக்கள். நான் இவர்களில் ஒருவன் என்ற சமூக அங்கீகாரம். இவை எல்லாம் மனதிற்குள் ஏற்படுத்தும் பெருமித உணர்வுகள், வர்ணிப்புகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவை.

இறுதியாக யுத்ததின் கொடுமையானது வேர்கள் அற...அற.... என்னைப் பிடுங்கி, கொழும்பின் புறநகர்ப் பகுதியொன்றில் வீசியெறிந்ததால் வாடிக்கொண்டே வளர்ந்ததில், துளிரிலேயே உதிர்ந்து போயின என் சுயங்களின் சுவடுகள். சிங்களத்தின் குஞ்சுகள் கூட, ''தெழா... தெமழா...'' என தம் விசக்கொடுக்குகளால் கொட்டியதில், முறிந்து போயின என் சிறகுகள்.அன்னிய சமூகம், என்னை அரவணைக்க மறுத்ததனால் வீட்டின் சுவர்களுக்குள், சிறைப்பட்டுப் போனது எனது பட்டாம் பூச்சிப்பருவத்தின் மறுபாதி. அந்ததனிமையின் யுகங்கள் எனக்குள் விட்டுச்சென்ற, நான் இழந்து போன , எனக்கே எனக்கான அந்த சமூகத்தைப் பற்றியதான ஏக்கம், இன்றும் என் உணர்வுகளின் ஆழத்தில் வலிகள்சுமந்த கனவுகளாக....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்க கதையின் ஆரம்பம் ரொம்ப அழகு.

கதையை வாசித்து மேலும் மேலும் சிறு சிறுத்தங்கள் செய்தால் நல்லா இருக்கும்.

Posted

நன்றி கறுப்பி...சில தவறுகள் நிகழ்ந்து விட்டன சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி. இது கதை அல்ல நிஜம்.

Posted

அந்தவீட்டுப்பிள்ளைகளுடன் விளையாடுவதற்கு, நாம் அடிக்கடி அங்கே போவதுண்டு. அப்படிப்போகும் நேரங்களில், எத்தனை பழங்கள் சாப்பிட்டாலும் இலவசம். ஆனால் காசுக்கு வாங்கப்போனால், கறார்:

:lol:

Posted

நல்லாயிருக்கு... இறுதியில் வெற்றிடம் அதிகமா இருக்கே...கொஞ்சம் சரி பாருங்க :lol:

Posted

QUOTE(eezhanation @ Jan 11 2007, 11:43 AM)

அந்தவீட்டுப்பிள்ளைகளுடன் விளையாடுவதற்கு, நாம் அடிக்கடி அங்கே போவதுண்டு. அப்படிப்போகும் நேரங்களில், எத்தனை பழங்கள் சாப்பிட்டாலும் இலவசம். ஆனால் காசுக்கு வாங்கப்போனால், கறார்:

வாசித்து பின்னூட்டமிட்டதற்கு மிக்க நன்றி 'மாப்பிளை' நான் அப்படிக்குறிப்பிட்டது சும்மா நகைச்சுவைக்காக மட்டுமல்ல. நம்மவர்களிடம் நான் ரசிக்கும், அவர்களுக்கேயான குணவியல்பு களில், இதுவும் ஒன்று.

Posted

மிக்க நன்றி தூயா...முயற்சிக்கிறேன்.

Posted

கதையல்ல நிஜம்

உணர்வின் ஓசை..

எழுத்துகளுக்கு ஏணி கொடுங்கள்

நாழி கொடுங்கள்

யாழில் மீண்டும் மீண்டும்

ஏறவிடுங்கள்..வாழ்த்துகள்.

Posted

வாசித்து உங்கள் கருத்தைப்பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.... விகடகவியாரே..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

கதையின் கருத்தும் பாராட்டத்தக்கது.

சுவாரஸ்யம் நிறைந்த எழுத்து நடை பாராட்டுக்கள்.

வாழ்த்துக்கள் eezhanation உங்கள் புலமை எழுத்துலகில் காலடி எடுத்துவைக்க.

Posted

வாழ்த்துகிறேன் ஈழநேசன் அவர்களே. செழிப்பான வசன நடை தொடர்ந்து படிக்க வாசகர்களுக்கு ஊக்கம் கொடுக்கிறது. ஆரம்பம் செறிவான கதையோட்டமுடன் இருந்தாலும் இறுதியில் ஒரு வெற்றிடம் தெரிவதாக எனக்குப் படுகிறது. மொத்தத்தில் உங்கள் நிஜக்கதை பிடித்திருக்கிறது தொடர்ந்து எழுதுவீர்களென நம்புகிறேன். அடுத்தவர் சொல்லும் குறையைப் பக்குவமாய் புரிந்துகொண்டு நன்றி கூறும் உங்களின் நல்ல கண்ணியத்தை மெச்சுகிறேன்.

Posted

கதையின் கருத்தும் பாராட்டத்தக்கது.

சுவாரஸ்யம் நிறைந்த எழுத்து நடை பாராட்டுக்கள்.

வாழ்த்துக்கள் eezhanation உங்கள் புலமை எழுத்துலகில் காலடி எடுத்துவைக்க.

மிக்க நன்றி தேவன்.. உங்கள், கருத்துக்கும் பாராட்டுக்கும்.

Posted

வாழ்த்துகிறேன் ஈழநேசன் அவர்களே. செழிப்பான வசன நடை தொடர்ந்து படிக்க வாசகர்களுக்கு ஊக்கம் கொடுக்கிறது. ஆரம்பம் செறிவான கதையோட்டமுடன் இருந்தாலும் இறுதியில் ஒரு வெற்றிடம் தெரிவதாக எனக்குப் படுகிறது. மொத்தத்தில் உங்கள் நிஜக்கதை பிடித்திருக்கிறது தொடர்ந்து எழுதுவீர்களென நம்புகிறேன். அடுத்தவர் சொல்லும் குறையைப் பக்குவமாய் புரிந்துகொண்டு நன்றி கூறும் உங்களின் நல்ல கண்ணியத்தை மெச்சுகிறேன்.

மிக்க நன்றி Norwegian,

இது போன்ற தட்டிக்கொடுத்தல்களும், சுட்டிக்காட்டல்களும்தான் ஒரு மனிதனைச்செதுக்கும் உளிகள்.....இல்லையா........?

Posted

ஈழநேசன் அருமையான நிஜக்கதை. செறிவான இரசிக்கத்தக்க வசனநடை பாராட்டுக்கள்.

Posted

பகல் வெள்ளி பார்த்த கதை என்றதும் வேறு நினைத்து விட்டேன்.

ஆனால் இது மாம்பழக்கதையாக இருக்கு. இப்படி எத்தனையோ உள்ளங்கள் அந்த காலம் போயிற்றுதே என்று ஏங்கி கொண்டிருக்காங்க ஈழநேசன்.

உண்மையா நடந்த கதை..நல்லா இருக்கு. அதை வாசிக்க அழகாக சொல்லி இருக்கீங்க..அதுவும் நல்லா இருக்கு. இடைக்கிட எழுத்து பிழைகள்..அதை இன்னொரு முறை நீங்களே வாசித்தீர்கள் என்றால் கண்டு பிடித்து சரி பண்ணிடலாம். குறை நினைக்காதீர்கள்.

Posted

ஈழநேசன் அருமையான நிஜக்கதை. செறிவான இரசிக்கத்தக்க வசனநடை பாராட்டுக்கள்.

நன்றி ரசிகை.. :rolleyes:

Posted

பகல் வெள்ளி பார்த்த கதை என்றதும் வேறு நினைத்து விட்டேன்.

ஆனால் இது மாம்பழக்கதையாக இருக்கு. இப்படி எத்தனையோ உள்ளங்கள் அந்த காலம் போயிற்றுதே என்று ஏங்கி கொண்டிருக்காங்க ஈழநேசன்.

உண்மையா நடந்த கதை..நல்லா இருக்கு. அதை வாசிக்க அழகாக சொல்லி இருக்கீங்க..அதுவும் நல்லா இருக்கு. இடைக்கிட எழுத்து பிழைகள்..அதை இன்னொரு முறை நீங்களே வாசித்தீர்கள் என்றால் கண்டு பிடித்து சரி பண்ணிடலாம். குறை நினைக்காதீர்கள்.

உண்மைதான்.. எழுத்து பிழைகளை நானும் அவதானித்தேன்..அடுத்த முறை தவறுகள் நிகளாத வாறு பர்த்துக்கொள்கிறேன்..

நீங்க சொன்னா.. நான் கோவிப்பேனா.. :rolleyes:

வாசித்து கருத்தைப்பகிர்ந்தமைக்கு நன்றி. ப்ரியசகி.. <_<

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.