Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எலிப்பொறி - சிறுகதை

Featured Replies

எலிப்பொறி - சிறுகதை

வாஸந்தி - ஓவியங்கள்: ஸ்யாம்

 

90p1.jpg

ஷீலுவுக்குச் சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்தது. கடகடவென்று சிரிக்க வேண்டும்போல் இருந்தது. இந்த அடுக்குமாடி வளாகத்தில் வசிக்கும் மேடம்கள் சரியான தொடைநடுங்கிகள் என அவளுக்கு இப்போதுதான் புரிந்தது. உண்மையில் அவர்களை முதன்முதலில் பார்த்தபோது, அவளுக்குப் பிரமிப்பாக இருந்தது. அவர்களது குட்டை முடியும் கால்சராயும் அங்ரேஜி மொழியும்... அவர்கள் ஏதோ வேற்றுக் கிரகக்காரர்கள் எனத் தோன்றும். அவர்கள் வீட்டு ஆண்கள் வெளியில் கிளம்புவதற்கு முன்னர், இவர்கள் தங்கள் வண்டியை ஓட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார்கள். ‘நா கிளம்புறதுக்குள்ள வேலையை முடிச்சுடணும்’ எனக் கண்டிப்புடன் சொல்வார்கள். அவர்கள் சொல்வதை மீறுவது தெய்வக் குற்றம்போல், மாமியார் கமலா பதைப்பாள். `இப்படிப் பட்ட சர்வவல்லமை படைத்த பெண்களும் இருக்கிறார்களா?’ என ஷீலுவுக்குப் பிரமிப்பு ஏற்படும். 

p90.jpgஷீலு அநேகமாக முன்பு, மாமியார் வேலை செய்யும் வீடுகளுக்குச் சின்னச் சின்ன உதவி செய்யக்கூடச் செல்வாள். இப்போது மாமியார்  அவளையே முழு வேலையையும் செய்யச் சொல்கிறாள் . பறந்து பறந்து செய்தாலும்,  எந்த மேடமிடம் இருந்தாவது திட்டு கிடைக்கும். இன்று 203 மேடம்செய்த அமர்களத்தால் எல்லாமே தாமதமாயிற்று.

அதை நினைத்து அவளுக்கு மீண்டும் சிரிப்பு வந்தது. லிஃப்டில் அவள் தனக்குத்தானே சிரிப்பதைக் கண்டு, அங்கு இருந்த இரண்டு ஆண்கள் அவளை விநோதமாகப் பார்த்தார்கள். அவள் அதைக் கவனிக்காததுபோல் நின்றாள். சிரிப்பதற்குக்கூடவா சுதந்திரம் இல்லை?

தோள்பட்டையில் அந்த மேடமின் சென்ட் வாசனை இருந்தது. நடக்கும்போது கூடவே வந்தது. அங்குதான் அந்த ஒப்பனைசெய்த முகம் கலவரத்துடன் பதிந்திருந்தது. சமையலறையில் ஷீலு வேலைசெய்யும்போது, அலமாரியைத் திறக்கவந்த மேடம் திடீரென்று கத்தினாள். அடுத்த விநாடி ஷீலுவைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். அவள் தோள்பட்டையில் முகத்தைப் பதித்தாள். ஒரு விநாடி ஷீலு அரண்டுபோனாள்.

``என்ன ஆச்சு?’’

`‘எலி... எலி...’’ என்று மேடம் அலறினாள். ‘`இப்பத்தான் இப்படி ஓடிப்போச்சு.’’

அவளுடைய அலறலைக் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் கூடிவிட்டார்கள்.

‘`எலி எப்படி வந்தது வீட்டுக்குள்ளே?’’ என்று சாஹப் கத்தினார்.

அது ஒரு மிகப் பெரிய அவமானம்போல், அத்துமீறல்போல் ஆளுக்கு ஆள் பேசினார்கள். வீட்டில் எங்கேயாவது ஓட்டை இருக்கும். அதை முதலில் அடைக்கவேண்டும் எனத் திட்டம் போட்டார்கள்.
`‘வாசல் கதவைத் திறந்துவைத்தாளா ஷீலு?’’ என்று யாரோ கேட்டார்கள்.

90p2.jpg

எல்லோருடைய ஆங்கிலம் கலந்த ஆவேசப் பேச்சுகளையும் கேட்டபடி நின்றாள் ஷீலு. ஓர் எலிக்காக இப்படி அரண்டுபோவார்களா என்று இருந்தது. மேடமின் பயம் இன்னும் விலகவில்லை எனத் தோன்றிற்று.

`‘மேடம்... நா எலிப்பொறி கொண்டுவர்றேன். பயப்படாதீங்க’’ என்றாள் ஷீலு.

`‘எலி பிடிபடுமா?’’ என்றாள் மேடம் சந்தேகத்துடன்.

ஷீலுவுக்குச் சிரிப்பு வந்தது. 

“அப்படித்தான் நாங்க பிடிப்போம். எலி அதுல அகப்பட்டுக்கிட்டு முழிக்கிறதைப் பார்க்கணுமே... தமாஷா இருக்கும்.”

மேடம் முகத்தைச் சுளித்தாள்...

`‘இதுல தமாஷ் வேறா? நீயே எலிப்பொறியை வெச்சுட்டுப்போ. கொண்டுவர மறந்துடாதே!’’

லிஃப்ட் ஐந்தாம் தளத்தில் நின்று திறந்ததும், அவள் அவசரமாக 503 வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினாள். அதரங்களில் புன்னகை இன்னும் இருந்தது.

``வா... வா... என்ன இத்தனை லேட்? சீக்கிரம் செய். நா வெளியிலே போகணும்’’ என்று வழக்கம்போல மேடமிடம் இருந்து அதட்டல் வந்தது.

ஷீலு சிரித்தபடியே, எலியால் நேர்ந்த கூத்தைச் சொல்லிக்கொண்டு பாத்திரம் கழுவச் சென்றாள். 

“ஐயய்யோ எலி வந்ததா?’’ என்றாள் மேடம்.

சே... என்ன பெண்கள் என்று ஷீலுவுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. ஒரு சின்ன ஜந்துவைக் கண்டு என்ன பயம்?

வேலை எல்லாம் முடிந்து வீட்டை நோக்கி நடக்கும்போது, சுரீரென மதிய வெயில் தலையில் அடித்தது. அவள் துப்பட்டாவை விரித்து, தலையில் சுற்றிக்கொண்டாள்... பசித்தது.

வழி முழுவதும் அங்கங்கே ஆலூ டிக்கி, சமோசா என்று விற்பனை நடந்தது. எண்ணெய் காயும் வாசனையும், சமோசாவின் மணமும் நாசிக்குள் புகுந்து நாவில் நீர் ஊறிற்று. ஆனால், அவள் கையில் என்றும் ஒரு நயா பைசா இருக்காது. இல்லாதபடி கமலா பார்த்துக்கொண்டாள். அவள் வேலைபார்க்கும் வீடுகளில் எல்லாம் ஷீலு வேலை செய்யவேண்டும். ஆனால், சம்பளம் வாங்கும் தினம் கறாராக கமலா ஆஜராகி, பணத்தை எடுத்துக்கொண்டு போய்விடுவாள். ஷீலு அதில் `எனக்கும் பங்கு வேண்டும்’ என்று கேட்டது இல்லை. வீட்டுச் செலவுக்குத்தானே உழைக்கிறோம் என்று மனசு சமாதானம் சொல்லும்.

எங்கோ மணி ஓசை கேட்டது. கடைகளுக்கு இடையே யாரோ ஒரு சின்ன மண்டபம் கட்டி ஒரு சாமி படத்தை வைத்திருந்தார்கள்.

ஜெய் ஹனுமான்ஜி படம். கையில் மலையைத் தூக்கிக்கொண்டு குரங்கு உருவம். எல்லாம் நமக்கு சாமி. `எலிகூட கணேஷ்ஜிக்கு வாகனம்’ என்பாள் கமலா. அதனால் எலியைக் கொல்லக் கூடாது.  அது குட்டை முடி மேடமுக்குத் தெரியாதுபோல் இருக்கு. ஒரு பூசாரி ஹனுமான்ஜிக்குத் தீபம்காட்டி மணியை ஆட்டிக்கொண்டிருந்தார். இரண்டு மூன்று பேர் அவருடைய தட்டில் காசை வைத்துவிட்டுப் போனார்கள். அவள் அந்தப் பக்கம் திரும்புவதே இல்லை.

கிராமத்தைவிட்டுக் கிளம்பும் வரை கோயில் திருவிழாவுடன் சம்பந்தம் இருந்தது.   சிநேகிதிகளுடன் பண்டிகைக் காலங்களில் கையில் டிசைன் டிசைனாக மருதாணி இட்டுக்கொண்டு, கோயில் வளாகத்தில் ஆடவும் பாடவும் பிடிக்கும். ஓ... அப்போது நிறைய விஷயங்கள் பிடிக்கும். வளையல் அணிய, கொலுசு போட, பாட்டு பாட, மற்றவர்களுடன்  சன்னிதியைச் சுற்றி நமஸ்கரிப்பாள். சாமியிடம் எதுவும் கேட்க வேண்டும் என்றுகூடத் தோன்றாது.  திருவிழா நடத்த மட்டுமே கோயில் என்று தோன்றும். உள்ளே ஜிகினா ஜரிகைச் சுற்ற அமர்ந்திருக்கும் சாமிக்கும் அவளுக்கும் சம்பந்தம் இருக்குமா? சம்பந்தம் இருந்தால், அந்த ஆளுக்கு மகாத் தொல்லை பாவம். எத்தனை பேரைச் சமாளிப்பார்? அவர் எங்கோ காணாமல் போயிருக்க வேண்டும். நீங்களே சமாளிச்சுக்குங்க. எலியையோ, பசியையோ, புருஷனுடைய அடியையோ, மாமியாரையோ.

அவளுக்குச் சிரிப்பு வந்தது. வழியில் படுத்திருந்த  நாய் ஒன்று உசுப்பப்பட்டதுபோல அவளை நிமிர்ந்து பார்த்தது. அதன் எதிரில் ஒரு குத்துக்கல் இருந்தது. ஷீலு அதன் மேல் அமர்ந்து அதன் முதுகை வருடினாள். அது கண்களை மூடிக்கொண்டு வாலை ஆட்டிற்று.

``பின்னே என்ன, சிரிச்சுத்தான் சமாளிக்கணும்.அழுதா, வந்து அணைக்க யாரு இருக்கா?’’ என்றாள் அதனிடம். ``பெத்தவ பெத்துப்போட்டு கண்ணை மூடிட்டாளாம். தீராத வியாதினு தெரிஞ்சதும், அவசர அவசரமா கிடைச்ச ஆளுக்குக் கட்டிக்கொடுத்த அடுத்த மாசம், அப்பா கண்ணை மூடியாச்சு.’’

நாய் கண்களைத் திறந்து அவள் கையை நக்கியது.

செத்தவர்கள்  சிலசமயம் ஆவியாக வருவதாக அவளுடைய சிநேகிதி ரமா சொல்வாள். அப்பா அவளுடைய கனவில்கூட வந்தது இல்லை. வந்தால்கூட என்ன சொல்லிவிட முடியும்?
ஒரே ஒரு கேள்விதான் குடைகிறது.

`நீ ஏன் செத்துப்போனே?’

அவள் நாயைச் சற்று நேரம் பார்த்தாள். அப்பாவின் ஜாடை அதற்கு இருப்பதுபோல் தோன்றியது.  

“ஷீலு...”

அவள் விருக்கென்று எழுந்தாள். மாமியாரின் குரல் எட்டு ஊருக்குக் கேட்கும். அவளுடைய குரலோ இல்லை அவளது பிரமையோ முதுகின் பின்னால் விரட்டியது. அவள் திரும்பிப் பார்க்காமல் வேகமாக வீடு நோக்கி நடந்தாள்.  அவள் போய்தான் அடுப்பைப் பற்றவைத்து, சமையல் செய்தாக வேண்டும். ஒரு நயா பைசாவுக்குப் பிரயோஜனம் இல்லாவிட்டாலும், ஒரு மணி அடித்ததும் கூப்பிட்டு அழைத்ததுபோல சாப்பிட மதன் வந்துவிடுவான்.

`ஆச்சா... ஆச்சா... இன்னுமா ஆகலை?  எங்கே போய் சதிராடிட்டு வந்தே?’ என்பான்.

ஒரு நாள் அவன் அப்படிக் கேட்டுக்கொண்டு நின்றபோது, அவள் அடுப்படியில் இருந்து எழுந்தாள். கையை விரித்து சிநேகிதிகளுடன் ஆடிய நாட்டியத்தை நினைவுபடுத்திச் சுழன்று ஆடிக் காண்பித்தாள்.
‘ஆமாம்... இப்படித்தான் சதிராடிட்டு வந்தேன். பாரு நூறு ரூபா கிடைச்சுது’ என துப்பட்டா நுனியில் இருந்த முடிச்சைக் காண்பித்தாள். பிறகு கடகடவெனச் சிரித்தாள்.

அவன் பளார் என்று கன்னத்தில் அடித்தான். துப்பட்டாவை உருவி  முடிச்சை அவிழ்த்தான். அது வெறும் முடிச்சு. துப்பட்டா பறக்காமல் இருக்க அவள் போடும் முடிச்சு.  அவள் மீண்டும் சிரித்தாள். அவன் மீண்டும் அடித்தான். அவள் சுரணையற்றவள் போல அடுப்படிக்கு நகர்ந்தாள். கண்ணில் ஒரு பொட்டு நீர் வரவில்லை.

`நா எதுக்கு அழணும்? என்ன தப்பு செஞ்சேன்? இதோ பார்... இப்படி அடிச்சியானா இன்னைக்கு உனக்கும் சோறு இல்லை... எனக்கும் இல்லை. எனக்குப் பசிக்குது’ என்று அமைதியாக அமர்ந்து சமையலைத் தொடர்ந்தாள்.

90p3.jpg

அவன் தோற்றுப்போனவன்போல மூலையில் சென்று அமர்ந்தான்.

எப்படி ஒருத்தன் இத்தனை உதவாக்கரை யாகவும் அதேசமயம் சர்வாதிகாரியாகவும் இருப்பது  சாத்தியம் என்று, அவள் பல நாள் யோசித்திருக்கிறாள். அவளிடம்தான் அவனுடைய பௌருஷம்; வெளியில் பெட்டிப்பாம்பு.
`காசு குடு... காசு இல்லே? இந்தா வாங்கிக்க. இந்தா... இந்தா... உன்னைக் கொல்வேன் ஒருநாள்.’
அவள் சிரிப்பாள்.
‘கொன்னியானா உனக்குக் காசு எங்கே இருந்து கிடைக்கும்?’

அதற்கும் அவன் அடிப்பான்.  அவன் மனிதனே இல்லை என அவளுக்கு நிச்சயமாகிப் போனது. அந்த நினைப்பு அவளுக்குச் சமாதானமாகிக்கூடப் போனது. மனுஷனே இல்லாதவனிடம் இருந்து எப்படி மனுஷத்தனத்தை எதிர்பார்க்க முடியும்?  கல்யாணம் நடந்தபோது அவனுடைய சிவந்த மேனியைப் பார்த்து அவளுடைய தோழிகள் அவளைக் கேலி செய்தார்கள்.

‘ஏய்... சல்மான் கான் கணக்கா இருக்கார்டீ!’ என்றார்கள். அவளும் திருட்டுத்தனமாகப் பார்த்தாள். பார்க்க நன்றாகத்தான் இருந்தான்.  ஆனால், அது பொய் பிம்பம் என்று ஒரே நாளில் தெரிந்துபோயிற்று.  மாமியார் வீடு போய் சேர்ந்த அன்றே அவளுடைய நகைகளைத் திருடிக் கொண்டு காணாமல்போனான் மதன்... அவள் புருஷன். பல நாட்கள் கழித்துதான் வந்தான். இடையில் அவளுடைய அப்பா இறந்துவிட்டார்... ‘எப்படி ஷீலு இருக்கே?’ என்று ஒரு கேள்வி கேட்கக்கூடப் பயந்தவர்போல.

மாமியார் பிள்ளையைப் பற்றி வாயே திறக்கமாட்டாள். ‘என் தலைவிதி’ என்று சிலசமயம் மண்டையில் அடித்துக்கொள்வாள்.

`அடிச்சுக்கோ... பிள்ளையைக் கண்டிச்சு வளர்க்கத்தெரியலே, பள்ளிக்கூடத்துக்கு அனுப்பலே, யாரோடு பழகுறான்னு கவனிக்கலே. ஊர் மேல மேயவிட்டுப்பிட்டு, என் ‘தலைவிதி’னு சொல்லு’ என்று ஷீலு தனியாக இருக்கும் சமயத்தில், சமைக்கும்போது அடுப்பிடம் சொல்வாள்.  

குடி மட்டும் இல்லை, என்னென்னவோ வாங்கிச் சாப்பிடுவான். போதை மருந்தாம். என்ன இழவோ. வீட்டில் இருக்கும் சாமான் எல்லாம் காணாமல்போகும். கொஞ்ச நாள் வீட்டுக்கே வராமல் இருப்பான். வந்தால் இரவு அவளைத் துவம்சம்செய்துவிட்டு, மறுநாள் முழுவதும்  வீட்டு  மூலையில் முடங்கிக் கிடப்பான். இரவில் அவனுடைய இம்சை பொறுக்க முடியாமல்,  அவள் பல நாள்  எழுந்து கொல்லையில் முடங்குவாள்.

`‘கல்யாணமானா சரியாகிடுவான்’னு சொன்னாங்க. உனக்குத்தான் அவன்கிட்ட இணக்கமா நடந்துக்கத் தெரியலே’ என்கிறாள் மாமியார்.

‘நீ பண்ணின தப்புக்கு என்மேல குத்தம் சொல்றியா? இப்படி என்கிட்ட சொல்ல உனக்குக் கூச்சமா இல்லே?’ என்று ஒருநாள் கமலாவிடம் கேட்டாள். ‘உன் பிள்ளை மனுஷன் இல்லை... மிருகம்!’
மாமியார் குய்யோமுய்யோ என ஊரைக் கூட்டிவிட்டாள். 

‘உனக்கு இங்க இருக்க இஷ்டம் இல்லைன்னா எங்கேயாவது போ!’ என்றாள்.

அவளுக்குப் புசுபுசுவெனக் கோபம் வந்தது. ஆனால், கூடவே சிரிப்பும் வந்தது.

‘எங்கே போகட்டும் சொல்லு? நா என்ன ஓடிவந்தேனா உன் மகனைக் கட்டிக்க? நீ என் அப்பாவை ஏமாத்தி என்னை அழைச்சுட்டு வந்திருக்கே? என் மகன் இந்திரன் சந்திரன்னு சொன்னே? அவன் யமன்!’ - அவளுக்கு உற்சாகம் கரைபுரண்டுபோயிற்று.

`போ... போ... போயிடு’ என்று கமலா அனத்தியபடியே இருந்தாள்.

‘நா போயிடறேன்னே வெச்சுக்க. இத்தனை பேர் வீட்டுவேலைகளும் என்ன ஆகும்? ஒண்டியா செஞ்சு சம்பாதிப்பியா? இல்லே உன் அழகான மகன் சம்பாதிச்சுட்டு வருவனா?’

`இல்லே... உன் குடிகாரப் புருஷன்தான் கொண்டுவருவாங்களா?’ என்று மேற்கொண்டு  அவள் கேட்கவில்லை. அது ஊருக்கு எல்லாம் தெரிந்த ரகசியம்.

கடகடவென்று அவள் சிரிப்பதைப் பார்த்து கமலா வாயை மூடிக்கொண்டாள்.

பக்கத்து வீட்டுக்காரியிடம் அவள் சொல்வது கேட்கும்... ‘பிள்ளை ஒரு உதவாக்கரைன்னா மருமகள் ஒரு கிறுக்கு.’

ஷீலுவுக்கு இப்போது எல்லாம் பழகிவிட்டது. பசியை மட்டும் பொறுத்துக்கொள்ள முடியாது.  கிடுகிடுவென்று சமைத்து, பகபகவென்று வயிற்றை நிரப்பி, ஒரு லோட்டா நீரைக் குடித்தால் அதுவே சொர்க்கம்.

போயிடு... போயிடு...

எங்கே போவது? மாமியார் மனசில் என்னதான் இருக்கிறது என்று புரியவில்லை.  ஒருநாள் திடுதிப்பென்று சொன்னாள்...

‘யாராவது ஆள் கிடைச்சா கல்யாணம் பண்ணிக்கோ. இங்கே இருந்து போயிடு.’

ஷீலுவுக்குத் தூக்கிவாரிப்போட்டது. எத்தனை அபத்தமான பேச்சு எனத் தோன்றியது.

‘ஆளா... எந்தக் கடையிலே கிடைப்பான்?’ என கண்களை அகலவிரித்துப் பெரிதாகச் சிரித்தாள்.

மாமியாருக்குத்தான் கிறுக்குப் பிடிச்சுப்போச்சு எனத் தோன்றிற்று. நீ என்னைப் பிடிச்சுத் தள்ளினாலும் நா இங்கு இருந்து போகமாட்டேன் எனக் கருவிக்கொண்டாள்.

‘என்னை எதுக்குப் போகச் சொல்றே? உனக்காக உழைக்கிறேன். ஒரு காசு கேட்கலை. வீட்டு வேலை எல்லாம் செய்றேன். நா இருக்கிறது உனக்குத் தொல்லையா இருக்கா?’

கமலா தலையைக் குனிந்துகொண்டாள்.

‘இதோ பாரு... நா ஒண்ணும் இங்கே பிரியப்பட்டு வரலை. நீதான் என்னை இட்டுட்டு வந்தே. என்னை வெச்சுக் காப்பாத்துறது உன் பொறுப்பு.’

கமலா அதற்குப் பிறகு அதைப் பற்றி பேசுவது இல்லை. ஷீலுவுக்கு நல்லவேளை யாருடைய கோபமும் நினைவில் தங்காது. நாள் முழுக்க உழைத்த பின் அக்கடா என்று படுக்க வேண்டும் போல் இருக்கும். இதில் இல்லாததையும் பொல்லாததையும் மனசில் போட்டுவைத்தால் வரும் தூக்கம்கூடக் கெட்டுப்போகும். அட... சொல்லிட்டுத்தான் போகட்டுமே!

மையல் முடிந்தது. இன்று மதன் வரக் காணோம். நல்லதாய்ப் போயிற்று என்று அவள் தனது சாப்பாட்டை முடித்துக்கொண்டாள். கமலாவையும் காணோம். வேலைசெய்யும் இடத்திலேயே அவளுக்குச் சாப்பாடு கிடைக்கும். ஷீலு அவளுடைய பல வீடுகளைக் கவனிப்பதால், அவள் புதிதுபுதிதாக வீடு பிடிக்கிறாள். இருவருமாக மாதம் இருபது ஆயிரம் சம்பாதிக்கிறார்கள்... ஆண்கள் உதவாக்கரைகள் என்பதால். மாமனார் கிஷோர் லால் இரவுதான் வருவார்... அதுவும் குடிபோதையில். ஷீலு மாமனாரின் எதிரில் நிற்பதுகூடக் கிடையாது.    அவர்களை அல்லவா வீட்டில் இருந்து கமலா விரட்ட வேண்டும்?

 ‘போ... போ... போயிடு...’ - கமலா புருஷனையும் மகனையும் துடைப்பக்கட்டையால் விரட்டுவதுபோல கற்பனைசெய்வது தமாஷாக இருந்தது. சிரிப்பு வந்தது.

மாலை வேலைக்குக் கிளம்புவதற்கு முன்னர் நினைவாக எலிப்பொறியை எடுத்து பையில் வைத்துக்கொண்டாள். 

வெளியில் கால்வைத்ததும் ஓர் உற்சாகம் அவளுள் புகுந்தது. உலகம் வண்ணம்மிகுந்த ராட்டினம்போல் இருந்தது. கடைத்தெருக்கள் அவளுக்கு  மகா நெருக்கம். காய்கறிக் கடைக்காரர்கள், பழம் விற்பவர்கள், துணிக்கடைக்காரர்கள், பெண்கள், ஆண்கள் அவளைப் பார்த்துத் தலையசைத்துச் சிரிப்பார்கள். ‘கைஸீ ஹோ?’ எப்படி இருக்கே? என்னவோ தினம் தினம் அவள் புதிதாகப் பிறந்தவள்போல. உண்மையிலேயே தினமும் எல்லாமே புது அழகோடு தெரிவதுபோலதான் இருக்கும் அவளுக்கு. எல்லோருடைய கேள்விக்கும் அவள் உற்சாகமாகக் கையை அசைத்துச் சிரிப்பாள். ‘ஃபஸ்ட் க்ளாஸ்!’ அது அங்ரேஜி பாஷை. மேடம்களிடம் இருந்து கற்றது. கடைகளில் இன்று பூவும் பழங்களும் அதிகமாகத் தெரிந்தன. ஜரிகை மாலைகளும் முகம்பார்க்கும் கண்ணாடிகளும் இருந்தன. பண்டிகைக் காலம்போல.
அவள் லேசான துள்ளல் நடையுடன் நடந்து அடுக்கு மாடி வளாகத்துக்குள் நுழைந்தாள். அங்கே கமலா அவளை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் .

`‘ஷீலு... மறந்தேபோச்சு. நாளைக்கு கர்வா சௌத். விரதம் இருக்கணும். நாளைக்கு வேலைக்கு வரமுடியாதுனு எல்லார்கிட்டவும் சொல்லிடு” என்றாள்.

`‘ஓ... அதானா. சரி” என்றபடி அவள் நகர்ந்தாள்.

90p41.jpg

அவளுக்குப் பண்டிகைகள் பிடிக்கும். இன்று இரவே மருதாணி இட்டுக்கொண்டால், காலை ரத்தச் சிவப்பாக விரல்கள், நகங்கள், பாதங்கள் ஜொலிக்கும். அன்று நல்ல உடை உடுத்திக்கொண்டு  இரவு சந்திரன் உதயமாகும் வரை விரதம் இருக்க வேண்டும்.  அன்று அதிசயமாகப் பசி எடுக்காது. புருஷனுக்காக விரதம். அவளுக்கு அதை நினைத்துச் சிரிப்பு வந்தது. ஐந்து வருடங்களாக அவள் விரதம் இருக்கிறாள். அதனால், எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அவள் எதிர்பார்க்கவும் இல்லை. அவளுக்குப் பண்டிகை ஒரு தமாஷ். 

இன்று கமலா கடையில் இருந்து இரண்டு அரைத்த மருதாணிச் சுருளை வாங்கி வருவாள். பத்து ரூபாய்க்கு ஒன்று. மாமியாரும் மருமகளும் சாப்பாடு முடிந்த பிறகு இட்டுக்கொள் வார்கள். இருவரும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்ளும் நேரம். 

மேடம் எலிப்பொறியை அதிசயத்துடன் பார்த்தாள். ஷீலு அதற்குள் ரொட்டித்துண்டு வைத்து, எலி எப்படி உள்ளே மாட்டிக்கொள்ளும் என்று நடித்துக்காண்பித்தாள். மேடம்கூடச் சிரித்தாள். ‘பார்க்கலாம்... இன்னைக்கு ராத்திரி பிடிபட்டுச்சுன்னா நீதான் அதை வெளியே கொண்டுபோய் கொல்லணும்” என்றாள்.

‘`எலி எல்லாம் கொல்லக் கூடாது மேடம்’’ என்றாள் ஷீலு தலையசைத்து. ‘`அப்புறம் கணேஷ்ஜி நம்மைத் தண்டிப்பார்”.

`‘நீ ஒரு கிறுக்கு’’ என்றாள் மேடம். `‘எங்கேயாவது கொண்டு போய் போடு. மெட்ரோவைத் தாண்டி. மறுபடி இங்கே வரக் கூடாது.’’

`‘ஓ... மறந்துபோனேன் மேடம். நாளைக்கு நா வர முடியாது. கர்வா சௌத் விரதம்  இருக்கணும். நாளன்னைக்குப் பொறி வையுங்க.’’

மேடம் அவளை வியப்புடன் பார்த்தாள்.

``நல்ல கூத்து... இதெல்லாம் அந்தப் புருஷனுக்கா செய்ற?’’

“ஆமாம்... பின்னே? எனக்கு இருக்கிறது ஒரு புருஷன்தானே?” - கடகடவென்று அவள் சிரிப்பதை மேடம் விநோதமாகப் பார்த்தாள்.

எல்லோருடைய வீட்டுவேலைகளையும் முடித்துக் கிளம்புவதற்குள் இருட்டிவிட்டது.
 
ன்று மதன் அதிசயமாக வீட்டில் இருந்தான். கமலா காலையில் சமைத்த பதார்த்தங்களைச் சூடாக்கி, புதிதாக ரொட்டி சுட்டிருந்தாள். மாமனாரைக் காணோம் வழக்கம்போல்.  அவருக்கு என்று கமலா தனியாக மூடிவைத்தாள்.

மூவரும் சாப்பிட்டு முடித்ததும், இருவரும் முற்றத்தில் உட்கார்ந்தபடி கையிலும் பாதத்திலும் மருதாணி வைத்துக்கொண்டார்கள். ஷீலுவுக்கு ஊர் நினைவு வந்தது. தோழிகளுடன் பாடிய பாட்டு நாவில் வந்தது. கமலாவின் அதரங்களில்கூடப் புன்னகை மலர்ந்தது.  மதன் தூங்கிப்போயிருந்தான். மருதாணி கலையாமல் இருக்க முன்ஜாக்கிரதையாக  அவள் பாயையும் தலையணையையும் எடுத்துக்கொண்டு, கொல்லைத் திண்ணையில் விரித்திருந்தாள். படுக்கப்போகையில்,  இன்று காலையில் அவள் தடவிக்கொடுத்த நாய் மண்தரையில் படுத்திருந்தது. அவளை நிமிர்ந்துபார்த்து வாலை ஆட்டியது. அது அவளுக்கு வேடிக்கையாக இருந்தது. ஒரு முறை முதுகைத் தடவிக்கொடுத்த வுடன் சொந்தம் கொண்டாட வந்ததா என்று இருந்தது. அதற்கு அப்பாவின் ஜாடை இருந்ததாகத் தனக்குத் தோன்றியது நினைவுக்கு வந்தது. மேடம் சொன்னது சரிதான். `நா ஒரு கிறுக்கு’என்று திண்ணையில் படுத்துக் கொண்டாள்.

படுத்த சில நொடிகளில் சுகமாகத் தூக்கம் வந்தது. கனவில் தோழிகள் வந்தார்கள். கோயில் வளாகத்தில் மருதாணியில் சிவந்த கைகளைப் பிடித்தபடி நாட்டியம் ஆடினார்கள். `சல்மான் கானுக்காக விரதம் இருக்கப்போறியா?’ என்றார்கள். கண்ணாடியிலே சந்திரனைப் பாரு. சந்திரனா... சல்மான் கானா? அவள் புரண்டு படுத்தாள். யாரோ அவளது சுடிதாரை அவிழ்ப்பதுபோல் இருந்தது. மார்பைத் தொடுவதுபோல் இருந்தது.  அவள் விருக்கென்று விழித்துக்கொண்டாள். பயத்தில் நாக்குக் குழறிற்று.

`‘யாரு... யாரு...’’ - அவள் வாயை யாரோ இரும்புக் கையால் பொத்தினார்கள். அவள் திமிறினாள். நாய் குரைக்க ஆரம்பித்தது. இரும்புக் கை ஒன்று அவள் கம்மீஸுக்குள் நுழைந்து மார்பைப் பிசைந்தது. நாய் குரைத்த வண்ணம் இருந்தது. திமுதிமுவென உள்ளே இருந்து யாரோ ஓடிவந்தார்கள். உள்ளே இருந்து வந்தது யார் என்று அவளுக்குத் தெரியவில்லை. அவளைப் பிடித்திருந்த கை சட்டெனத் தளர்ந்தது. மரங்களுக்கு ஊடே தெரிந்த நிலா வெளிச்சத்தில் அவள் பார்த்தாள். எதிரில் கமலாவும் மதனும் நின்றிருந்தார்கள்... கையில் தடியுடன். மதன் அத்தனை ஆக்ரோஷமாக  நின்று அவள் பார்த்தது இல்லை. இருவரும் அந்த ஆளை மாற்றி மாற்றி அடித்தார்கள். `யார் அது?’ அவளுக்குத் தூக்கிவாரிப்போட்டது.

`‘உனக்கு அத்தனை திமிரா, அத்தனை திமிரா, கமீனே... பத்மாஷ்!’ (அயோக்கியனே... போக்கிரி!) என்று மதன் திட்டியபடி அடித்தான். எங்கு இருந்து வந்தது அந்தப் பலம்?

அவளுடைய மாமனார் மண்டையில் காயத்துடன் கீழே கிடந்தார். தலையில் இருந்து ரத்தம் பீறிட்டபடி இருந்தது. நாய் பயந்து எங்கோ ஓடிவிட்டது. ஷீலு கண்கள் விரிய பார்த்தாள். கமலா மூச்சுவாங்க நின்றிருந்தாள்.  மதன் வேலை முடிந்தது என்பதுபோல உள்ளே செல்லத் திரும்பினான்.

‘`நா போலீஸுக்குப் போறேன்” என்றான் கமலாவிடம்.

‘`நா போறேன் நீ இரு” என்றாள் கமலா.

‘`சே... அசட்டுத்தனமா பேசாதே. நீ இருக்கணும். ஷீலு உன் பொறுப்பு” - ஷீலுவின் பக்கம் திரும்பாமலே அவன் வெளியேறினான்.

கமலா தரையில் அமர்ந்திருந்த அவளைக் கூர்ந்து பார்த்தபடி, கையில் காய்ந்திருந்த மருதாணியை நிதானமாக உதறினாள். உள்ளங்கையும் விரல்நுனியும் ரத்தச் சிவப்பாகியிருந்தது.
ஷீலுவுக்குத் திடீரென அழுகை வந்தது. அது அடி வயிற்றில் இருந்து சுருண்டு பொங்கிப் பொங்கி வந்தது! 

http://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களே பாவப்பட்ட ஜென்மங்கள் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.