Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

அதிதி

நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்புசிறுகதை: காலபைரவன், ஓவியங்கள்: ஸ்யாம்

 

ரவு விளக்கின் நீல நிற வெளிச்சம், அறையை முழுமையாக வியாபித்திருந்தது. அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். மின்விசிறி மெதுவாகச் சுழன்றுகொண்டிருந்தது. காற்றின் போக்குக்கு ஏற்ப, சுவரில் மாட்டப்பட்டிருந்த நாள்காட்டியின் தாள்கள் அசைந்துகொண்டிருந்தன. அதிதி மட்டும் உறக்கம் வராமல் நெளிந்து கொண்டிருந்தாள். போர்வையை இழுத்து முகத்தை மூடிக்கொண்டாள். பக்கத்தில் உறங்கிக்கொண்டிருந் தவர்களை போர்வைக்குள் இருந்து கவனித்தாள். உறங்கிக்கொண்டிருந்த வர்கள் மீது நீல வண்ணம் கவிந்து ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது. அந்த வெளிச்சம் அவளுக்கு தந்தையின் நினைவைத் தூண்டியது. அதைத் தொடர்ந்து அவரின் குறட்டை சத்தத்தின் ஊடாக அவள் எண்ணம் பயணப்பட்டது.

அவரை நினைக்கும்போது எல்லாம் மனதில் ஆத்திரம் பொங்கி வன்மமாகக் கிளைக்கத் தொடங்கியது. `அக்காவை மட்டும் ஏன் அவருக்குப் பிடித்துப்போகிறது?' என யோசித்துப் பார்த்தாள் அதிதி. எதுவும் பிடிபடவில்லை. மூச்சை, ஆழ்ந்து இழுத்து மெதுவாக வெளியிட்டாள். இந்த மூச்சுப் பயிற்சிகூட அவர் கற்றுக்கொடுத்ததுதான். மனதை ஒருமுகப்படுத்தி சுவாசத்தில் சிந்தனையைக் குவித்தாள். அது நிலைகொள்ளாமல் அடிபட்ட நாகம்போல சீறிக்கொண்டே இருந்தது. அவளின் அடிமனதில் தேங்கியிருந்த அப்பாவின் சித்திரங்கள் ஒவ்வொன்றாக மேலெழும்பத் தொடங்கின.

பனிக்காலம் தொடங்கிய ஒருநாள், அப்பா தல்லாகுளம் சந்தையில் இருந்து மூன்று முயல்கள் வாங்கிவந்திருந்தார். சனி, ஞாயிறு வந்துவிட்டால் போதும். சுற்றுவட்டாரத்தில் எங்கு சந்தை நடக்கிறது; அங்கு என்னென்ன கிடைக்கும் என்பது எல்லாம் அவருக்கு அத்துபடி. கினிகோழி பிரியர். அவர் கைப்பக்குவத்தில் செய்து தரும் மாமிசத்தின் ருசி அலாதியானது. அன்று கோழி வகையினங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. முயல் தேறும்போல தோன்றியது. வாங்கிவிட்டார். உடன் சென்ற ஆறுமுகம் ஆசிரியருக்கும் துருவத்தார் வீட்டு ராஜா அண்ணனுக்கும் வரும்போது வேட்டவலத்தில் காடை வாங்கித் தந்தார். முயல் ஒவ்வொன்றும் ஒரு நிறத்தில் இருந்தது. புசுபுசுவென இருந்தது வெள்ளை முயல்; சாம்பல் நிற முயல் பருத்து இருந்தது. சற்று நோஞ்சானாக இருந்தது கறுப்பு. முயல் வேண்டும் என்று முதலில் கேட்டவள் அதிதி.

``இன்னைக்காவது ஏமாத்தாம வாங்கியாந் திட்டயே... தேங்ஸ் டாட்” என்றாள்.

அவர் அமைதியாக இருந்தார். வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருந்த அக்கா ஓடிவந்து, “எனக்கு வெள்ளை கலர் முயல்” என்றாள். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே `சரி' என்பதுபோல தலையை ஆட்டினார். தன் அக்காவை ஏற இறங்கப் பார்த்தாள் அதிதி.

p88a.jpg

சமையலறையில் இருந்துகொண்டே அம்மா “எனக்கு?'' என்றாள்.

“அம்மா நீ சாம்பல் கலர் எடுத்துக்கோ” என்றாள் அக்கா துடுக்காக.

“அப்ப அதிதிக்குக் கறுப்புதான்” என்றார் அதுவரை அமைதியாக இருந்த அப்பா.

தன் விருப்பத்தைக் கேட்காமல் அவர்களாகவே பிரித்துக்கொண்டது அதிதிக்குப் பிடிக்கவில்லை.

“எனக்கு முயலும் வேணாம் ஒரு ம... வேணாம்” என்றாள் ஆத்திரம் பொங்க.

``இப்படிப் பேசக் கூடாதுனு எத்தனை தடவை சொல்றது?” என்று அம்மா கத்தினாள். அவள் குரல் இவளை ஒடுங்கச்செய்தது. எதுவும் பேசாமல் படுக்கையறைக்குச் சென்றாள். தலையணையில் முகம் புதைத்து அழத் தொடங்கினாள். தன்னைக் கலக்காமல் மூவரும் முடிவெடுத்ததைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தேம்பித் தேம்பி அழுதாள். கண்களில் நீர் பெருகி தலையணை நனைந்தது. ஆத்திரம், பெருநெருப்பைப்போல அவள் மனதில் கனன்றுகொண்டிருந்தது.

சுவர்க் கடிகாரம், 11 முறை மெல்லிய ஒலி எழுப்பி அடங்கியது. அப்பா வாங்கிவந்த வெளிநாட்டுக் கடிகாரம். வெளிநாட்டுப் பொருள் என்றால் கூடுதலாகக் கொடுத்துகூட வாங்கும் ரகம் அவர். அம்மாவும் திட்டிப்பார்த்து ஓய்ந்து விட்டாள். அதையெல்லாம் அவர் பொருட் படுத்தியதே இல்லை. கடிகாரச் சத்தம் அறையில் எதிரொலித்தபடியே இருந்தது. அதன் ஒலி இப்போது அவளுக்கு நாராசமாகக் கேட்டது. போர்வையை விலக்கி பக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த அம்மாவைப் பார்த்தாள். அவள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள். எழுந்து சென்று சிறுநீர் கழித்துவிட்டு வந்தாள். போர்வையை மீண்டும் முகம் வரை இழுத்துவிட்டுக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாள். நீல நிற வெளிச்சம் அவளைத் தொந்தரவு செய்துகொண்டே இருந்தது. புரண்டு படுத்தாள் உறக்கம் பிடிக்காமல். பழைய நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருந்தது அவள் மனம்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. மீன்காரப் பெண் தெருவில் இருந்தபடியே சத்தம்போட்டுக் கூப்பிட்டாள்...

“வாத்தியார் வீட்டம்மா மீன் வாங்கலையா?”

உள்ளே இருந்தபடியே `வேண்டாம்' என்பதுபோல அம்மா கையசைத்தாள்.

“நீங்க அப்படித்தான் சொல்வீங்க. பாள்தார் பேத்தியைக் கூப்பிடுங்க” என்று அவள் மீண்டும் சத்தம்போட்டு அழைத்தாள்.

கூடத்தில் விளையாடிக்கொண்டிருந்த அதிதி நிமிர்ந்து மீன்காரியைப் பார்த்தாள். திரும்பி அம்மாவைப் பார்த்தாள்.

“என்னடி அப்படிப் பாக்குற?” என்று கேட்டாள்.

“உன் அக்காவைத்தான் அப்படிச் சொல்றாங்க” என்று சொல்லிவிட்டு வேலையைப் பார்க்கத் தொடங்கினாள்.

முயல்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தைச் சுத்தம் செய்துகொண்டிருந்த அப்பாவிடம் சென்றாள். சிறிது நேரம் அவரையே பார்த்துக்கொண்டு நின்றாள். அவர் காதுகள் முயலின் காதுகளைப்போல் இருந்தன. ஒரு நொடிப்பொழுதில் தன் தந்தையை முயலாக கற்பனைசெய்து பார்த்தாள். காதுகளைப் பிடித்துத் தூக்கி இப்படியும் அப்படியுமாக ஆட்டினாள். அதை எண்ணி உள்ளுக்குள் சிரித்துக்கொண்டாள். பின் மெதுவாக, “அக்காவை ஏன் `பாள்தார் பேத்தி’னு சொல்றாங்க?” என்று கேட்டாள்.

“நம்ம வீட்டுக்குப் `பாளையத்தார் வீடு'னு பேரு. அதனால அப்படிக் கூப்பிடுறாங்க” என்று தன் வேலையைச் செய்துகொண்டே அவர் கூறினார்.

“என்னையும் அப்படித்தான் கூப்பிடுவாங்களா?” - சட்டெனக் கேட்டாள்.

`இல்லை’ என்பதுபோல அவர் தலையாட்டினார்.

 “ஏன்?”

 “நீதான் இங்கே பொறக்கலையே...”

 “அப்புறம், எங்கே பொறந்தேன்?” - அதிதியின் குரல் கம்மியிருந்தது.

 “உன்னை தல்லாகுளம் சந்தையில தவிட்டுக்குல வாங்கியாந்தேன்.”

அதைக் கேட்ட அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

“என்னது தவிட்டுக்கா?” என்று புரியாமல் கேட்டாள்.

`ஆமாம்’ என்பதுபோல தலையாட்டி “நெல் குத்திக் கிடைச்ச கருக்கா தவுட்டை அப்படியே ஆவூர் சந்தையில வித்துட்டு, உன்னை வாங்கியாந்தேன்... சும்மா இல்லை.”

அவரை ஊடுருவிப் பார்த்தாள். அவருடைய வார்த்தைகள் முள்ளாகி அவளைத் தைத்தன. கண்களில் நீர் கோத்துக்கொள்ளத் தொடங்கின. எந்த நேரமும் வெடித்து அழுதுவிடுவாள்போல இருந்தது.
“உண்மைதானா?” என்று கேட்டாள்.

அவர் மையமாகத் தலையாட்டினார்.

அதன் பின்னர் வேறு எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட வேண்டும்போல இருந்தது அவளுக்கு. சட்டெனப் புறப்பட்டுச் சென்றாள். அவளுக்கு மனம் சங்கடமாக இருந்தது. வழக்கமாக தெருவே கதி எனக் கிடப்பவள், மாடிப்படியில் அமர்ந்து எதிர்வீட்டு முருங்கைமரத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மதியம் அம்மா சாப்பிடக் கூப்பிட்டாள். வேண்டாம் என்று மறுத்துவிட்டாள். வழக்கமான பதில்தான் என நினைத்துக்கொண்டாள்.

` `என்னைத் தவிட்டுக்கா வாங்கிவந்தீங்க?’னு அவளிடம் கேட்கலாமா?' என்று நினைத்தாள். `அப்பா கூறியதையே அவளும் ஆமோதித்தால் என்ன செய்வது?' என யோசித்தாள். உடல் சிலிர்த்துக்கொண்டது. மனம் நடுங்குவதை முதன்முதலாக அப்போதுதான் அதிதி உணர்ந்தாள். வீடு அன்னியமாகத் தோன்றியது. இவ்வளவு நேரம் கடந்தும்கூட தன்னை யாரும் வந்து சமாதானம் செய்யவில்லை. `இதுவே அக்காவாக இருந்தால் அப்பா இப்படி இருப்பாரா?’ எனும் சிந்தனை மனதுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. அது இவளுக்கு மேலும் வலியைத் தந்தது.

பெரியவள் எதிர்வீட்டுப் பையன்களோடு கூட்டாஞ்சோறு செய்துகொண்டிருந்தாள். `உண்மையில் என்னை தவிட்டுக்குத்தான் வாங்கிவந்தாரோ, அதனால்தான் இப்படி நடத்துகிறார்களா?’ என்றும் யோசித்தாள். அனைவரும் அவரவர் வேலையில் மூழ்கியிருந்தனர். ஒருவரும் தன்னைப் பொருட்படுத்தாமல் இயங்கிக்கொண்டிருந்தது இவளுக்கு மேலும் ஆத்திரத்தை அதிகரிக்கச்செய்தது. அம்மாவும் இப்படி நடந்துகொள்வாள் என இவளால் நினைத்துப்பார்க்கவே முடியவில்லை.
 
தெருவில் விளையாடிவிட்டு தண்ணீர் குடிக்க வீட்டுக்கு ஓடிவந்த பெரியவள்... “அதிதி... விளையாட வரல?” என்று கேட்டாள்.

இவள் அமைதியாக எதிர் வீட்டு சுவரையே வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள். ஓர் அணில், மதில் சுவரில் இங்கும் அங்குமாக ஓடிக் கொண்டிருந்தது.

சாதாரணமாக இரவு 10:30 மணி ஆகிவிடும் இவள் படுப்பதற்கு. சுட்டி டி.வி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். தூங்கிவிட்டாள் என நினைத்து அணைத்துவிட முடியாது. அவ்வளவு தான். அழுகை பீரிட்டெழும். தூங்குவதற்கு முன்னர் கண்டிப்பாக வடிவேலுவின் நகைச்சுவை அவசியம். அதன் பின்னர்தான் தூங்க முயற்சி நடக்கும். ஆனால், அன்று 8 மணிக்கே படுக்கைக்குச் சென்றுவிட்டாள். சாப்பிடத் தேடும்போதுதான் இவள் படுத்துவிட்டது அம்மாவுக்குத் தெரியவந்தது. ஏதோ கோபத்தில் இருக்கிறாள் என்பதும் புரிந்துபோனது. அருகில் சென்று சீண்டி எழுப்பினாள். அவள் புரண்டு படுத்தாள்.
“ராத்திரியில வெறும் வயித்தோடு படுக்கக் கூடாதும்மா. எந்திரிச்சு சாப்ட்டு படும்மா” என்று அவளை சாந்தப்படுத்திப் பார்த்தாள்.

“எனக்குப் பசிக்கல” என்று சுருக்கமாகப் பதில் வந்தது.

“வாடிம்மா அம்மு இல்ல” என்று அவளை அப்படியே தூக்கினாள். அவள் மேலும் வீம்போடு அப்படியே சரிந்தாள்.

“உன் கோபத்துக்கு என்னதான்மா காரணம்?” என்றாள்.

“ம்… போயி உன் புருஷனைக் கேளு” என்றாள் வெடுக்கென்று.

“அவுரு ஒரு கூறுகெட்ட மனுஷன். நீ சொல்லுடி செல்லம்” என்று வார்த்தையில் தேனைக் குழைத்தாள்.

“என்னைத்தான் தவுட்டுக்கு வாங்கியாந்தீங் களாமே, அப்புறம் எதுக்குச் சாப்பிடக் கூப்பிடுறீங்க?” என்று பொரிந்தாள்.

அவள் கோபத்துக்கான காரணம் புரிந்துபோனது.

“அவுருக்குப் புத்தி கெட்டுப்போச்சும்மா… அதான் இப்படிப் பேசறாரு” என்று பதில் சொன்னாள்.

அவளைத் தூக்கிக்கொண்டு கூடத்துக்கு வந்தாள். சாப்பிடவைக்கத்தான் ரொம்பவும் மெனக்கெட வேண்டியிருந்தது.

இரவு படுக்கைவிரிப்புகளைப் போட்டவாறே, “ஏங்க அவளை சும்மா சும்மா சீண்டிக்கிட்டே இருக்கீங்க?” என்று அம்மா கேட்டாள்.

அப்பா மென்மையாகச் சிரித்தார்.

“பாப்பா பேச்சு பழம்விடுங்க” என்று அவரிடம் சிணுங்கினாள்.

“அதிதி...” என்று அவர் அழைத்தார். கண்களை மூடி அமைதியாகப் படுத்திருந்தாள். தன்னை அவர் அவ்வாறு அழைப்பதை அவள் விரும்பவில்லை. தன் பெயரின் மென்மையை அந்தக் குரல் சிதைப்பதாக உணர்ந்தாள்.

ஒரு பௌர்ணமி நாளில், திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்றபோது தன் பெயர் தொடர்பாக அவருடன் பேசிக்கொண்டே நடந்து சென்றது அதிதியின் நினைவுக்கு வந்தது.
“அக்காவுக்கு யார் பேர் வெச்சா?” என்று கேட்டாள்.

“நான்தான்...”

``எதுக்கு அந்தப் பேர் வெச்ச?”

“நித்ய சைதன்ய யதி எனும் ஞானியுடைய பேரு அது. அதனால வெச்சேன்.”

“பையன் பொறந்திருந்தா என்ன பேர் வெச்சிருப்ப?”

“நகுலன்.”

“இரண்டு பெயரையும் நீதான் செலெக்ட் பண்ணி வெச்சிருந்தியா?”

`ஆமாம்’ என்பதுபோல தலையை ஆட்டினார். பல்லி தன் தலையை உயர்த்தித் தாழ்த்துவதுபோல இருந்தது அவரின் அசைவு. திரும்பவும் அதிதி பேசினாள்.

 “எனக்கு யாரு பேரு வெச்சா?”

 அவர் சிறிது நேரம் யோசித்து, ``அஜயன்பாலா அங்கிள் வெச்சாரு.”

“எனக்கு ஏன் அவர் பேரு வெச்சாரு... உங்களுக்கு வைக்கணும்னு தோணலையா?”

அதற்கு என்ன பதில் சொல்வதெனப் புரியாமல் அமைதியாக இருந்தார்.

“என் பேருக்கு என்ன அர்த்தம்?”

“ `விருந்தாளி’னு அர்த்தம்” என்று சொல்லிவிட்டு இவளைப் பார்த்து கண்கள் சிமிட்டிச் சிரித்தார். அந்தச் சிரிப்பு இவளை மேலும் எரிச்சலூட்டியது.
எல்லாவற்றையும் முடிச்சுப்போட்டு அர்த்தப் படுத்திக்கொண்டிருந்தாள். `அக்காவுக்குப் பெயர் வைக்கத் தெரிந்த அப்பாவுக்கு, தனக்கு ஒரு பெயர் வைக்க முடியாதா?' என மனதுக்குள் ஒவ்வொரு வார்த்தைகளாக உருட்டிக் கொண்டிருந்தாள்.

``தவிட்டுக்கு வாங்கினதாலதான் `அதிதி’னு பேர் வெச்சீங்களா?’’ என அவரைப் பார்த்து வெடுக்கெனக் கேட்டாள்.

பதில் சொல்லாமல் அப்பா சிரித்தார். அதில் ஒளிந்திருந்த கள்ளத்தனம் மேலும் அவளைச் சிறுத்துப்போகச் செய்தது. உண்மையில் தான் ஒரு விருந்தாளிதானோ என, அவள் தன்னைத்தானே மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொண்டாள்.

p88b.jpg

அவளுக்கு சிறுநீர் கழிக்க வேண்டும்போல இருந்தபோது அவள் எழுந்துகொண்டாள். கழிவறைக்குச் சென்று வந்தாள். நீல நிற வெளிச்சம் உறுத்திக்கொண்டே இருந்தது. அதை அணைத்துவிட்டு வந்து படுத்தாள். சிறிது நேரம் கழித்து தண்ணீர் குடிக்க எழுந்த அப்பா, மறுபடியும் விளக்கை எரியச்செய்தார். அந்தச் செயல் மேலும் அவர் மீதான ஆத்திரத்தைக் கூட்டியது. மனம் பிடிபடாமல் அலைபாய்ந்து கொண்டே இருந்தது. நீர்க்குமிழிபோல மேலெழும்பிக்கொண்டிருந்த எண்ணங்களை அமைதிப்படுத்த முயற்சித்துப் பார்த்தாள். ஒரு பயனும் ஏற்படவில்லை. மிகச் சரியாக கடந்த பொங்கல் பண்டிகைக்கு துணிமணிகள் வாங்கச் சென்ற நாளில் வந்து நின்றது நினைவின் குறிமுள்.

அன்று, காலை உணவை முடித்துக்கொண்டு விழுப்புரம் கிளம்புவதாகத் திட்டம். மதியம் தலப்பாகட்டி பிரியாணி என்பதும் தீர்மானமாகி இருந்தது. எல்லோரும் கலந்து பேசி எடுக்கப்பட்ட முடிவுதான். ஆனால், காலை நடைப்பயிற்சிக்குச் சென்ற அப்பா, நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு அப்படியே மீன் வாங்க வேட்டவலம் சென்றுவிட்டார். திரும்பி வரும்போது மணி 10:00. கொடுவாவும் சங்கராவும்தான் கிடைத்தன. பையை சமையல் மேடையில் வைத்துவிட்டு குளிக்கச் சென்றுவிட்டார். எல்லோரும் குளித்துவிட்டிருப்பார்கள் என்ற எண்ணத்தில் சுடுநீர் கருவியின் பொத்தானை அணைத்துவிட்டு, குளித்து முடித்தார். அவர் தலைவாரிக் கொண்டிருக்கும்போது, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த அதிதி வேகமாக வந்து குளியலறைக்குச் சென்றாள். சுடுநீர் குழாயைத் திறந்தாள். குளிர்ந்த நீர் சீறிப்பாய்ந்து பாத்திரத்தை நிரப்பியது. அங்கு இருந்தே கத்தினாள்.

“அம்மா... ஜில் தண்ணியா வருது...”

அம்மா ஓடிச்சென்று பார்த்தாள். பொத்தான் அணைக்கப்பட்டிருந்தது.

“ஏங்க நீங்களா நிறுத்தினீங்க?” என்று கேட்டாள்.

அவர் ``ஆமாம்'’ என்று சொல்லிக்கொண்டே சாப்பிட அமர்ந்தார்.

“நீங்க ஏன் நிறுத்தினீங்க, கேட்டுட்டு செய்யக் கூடாதா?” என்றாள்.

“மணி பத்துக்கு மேல ஆச்சேனு நிறுத்தினேன்” என்றார்.

அவர்களின் உரையாடலை உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தவள் குளிர்ந்த நீரை ஜக்கில் மொண்டு மேலுக்கு ஊற்றிக்கொண்டாள்.

“பச்சத்தண்ணியில குளிக்காதம்மா. செத்த பொறு. ஸ்டவ்ல வெச்சுத் தர்றேன்” என அம்மா அவளிடம் கெஞ்சிப்பார்த்தாள். அவள் பேசுவதை காதில் வாங்கிக்கொள்ளாமல் தண்ணீரை மொண்டு மேலுக்கு ஊற்றிக்கொண்டே இருந்தாள். அவள் உடல் குளிரில் நடுங்கியது; பற்கள் கிட்டிக்கொண்டன. எதையும் காட்டிக் கொள்ளாமல் குளித்துமுடித்து கூடத்துக்கு வந்து துவட்டத் தொடங்கினாள்.
உடை மாற்றிக்கொண்டு சமையற்கட்டில் இருந்த அம்மாவிடம் சென்றாள். பாலித்தீன் பையில் இருந்த மீன்களைப் பார்த்தாள். முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடித்தன.

“இந்த மீன்தான் வாங்கியாந்திருக்காரா?” என்று அழுத்தமாகக் கேட்டாள்.

அம்மா சுதாரித்து பதில் சொல்வதற்குள், “எறா இல்லையாம்மா?” என்று அடுத்த கேள்வி வந்து விழுந்தது.

இறால் மீனின் நிறம் அதிதிக்கு மிகவும் பிடிக்கும். குழம்பின் மணத்தை தன் நாசி வழியாக இழுத்து அனுபவிப்பாள். குழம்பில் சிறியதும் பெரியதுமாக வட்ட வட்டமாக அவை கிடக்கும். அவற்றை எடுத்து தட்டின் ஓரத்தில் வரிசைக்கிரமமாக அடுக்கிப்பார்ப்பாள். பின்னர் ஒவ்வொன்றாக ருசித்துச் சாப்பிடுவாள்.

``என்ன மீனு வாங்கியாந்திருக்காரு உன் புருஷன்?”

`அப்பா' என்று சொல்லாமல் `உன் புருஷன்' என்றது அம்மாவுக்குச் சிரிப்பை ஏற்படுத்தியது. வெளிக்காட்டிக்கொள்ளாமல், “கொடுவாவும் சங்கராவும்” என்று சொன்னாள்.

அதற்கு மேல் மீன் சம்பந்தமாக எதுவும் கேட்க வேண்டாம் எனப் பட்டது. சலிப்புடன் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள்.

“அதிதி இதுக்கு எல்லாம் கோவிச்சிக்கக் கூடாதும்மா” என்றாள் அம்மா. அவள் கூடத்துக்கு வந்து தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்தாள்.

“அடுத்த வாரம் நிச்சயமா வாங்கியாரச் சொல்றேன்மா. வா, வந்து இட்லி சாப்பிடு” என்று அம்மா திரும்பவும் அழைத்தாள்.

“எனக்குப் பசிக்கல” எனும் வார்த்தைகள் பதிலாக வந்தன. அப்பா கணினியில் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதைச் சட்டெனப் புரிந்துகொள்ள முடியாது.

“நீ பேசாம கம்ப்யூட்டரையே கட்டிக்கினு இருந்திருக்கலாம்பா” என்று பெரியவள் அவரைப் பார்த்து கிண்டலாகச் சொன்னாள்.

“சரியாச் சொன்னடி” என்றாள் அம்மா.

`அப்பா வந்து தன்னை சமாதானம் செய்ய மாட்டாரா?’ என்று ஒரு கணம் நினைத்துப் பார்த்தாள் அதிதி. சிறு சலனமும் இன்றி அவர் பணியில் மூழ்கிக்கிடந்தார். தன்னை அனைவரும் அலட்சியம் செய்வதாக நினைத்துக்கொண்டு எழுந்து தெருவுக்குச் சென்றாள்.

பெரியவளின் தொடர்ச்சியான இருமல் சத்தம் அவள் நினைவுகளைத் துண்டித்தது.

“சைதன்யா, எழுந்து தலகாணிய உயரமா போட்டு படும்மா” என்று அம்மா எழுப்பினாள். கடிகாரச் சத்தம் தெளிவாகக் கேட்டது. தெருமுக்கில் நாய் குரைத்துக்கொண்டு இருந்தது.
போர்வையை இழுத்து முழுக்கப் போத்திக்கொண்டாள். அப்படியும் குளிர் அதிகமாக இருந்தது. மின்விசிறியின் வேகத்தைக் குறைக்கலாமா என்றும் நினைத்தாள்.
`அக்கா செவுத்தோரம் படுத்திருக்கா. ஃபேனை நிறுத்தினா, அவளை கொசு கடிக்கும். நல்லா போத்திக்கிட்டு படு’ என்று அப்பா எப்போதோ அதட்டியது நினைவுக்கு வந்து தொலைத்தது. கேட்டு எதுவும் ஆகப்போவது இல்லை என்று அமைதியாக இருந்துவிட்டாள். அவரை நினைக்க நினைக்க எரிச்சலாக இருந்தது.

`தூக்கம் வரலைனா ஒண்ணு ரெண்டு மூணு… எண்ணிக்கிட்டே இரு. தூக்கம் தன்னால வந்துடும்’ என்பது தூக்கத்துக்கான அம்மாவின் மந்திரம். மனதுக்குள் மெதுவாக எண்ணத் தொடங்கினாள். அப்படியே தூங்கியும்போனாள்.

p88c.jpgநள்ளிரவு கடந்திருக்கக்கூடும். எங்கும் ஒரே நிசப்தம். நீல நிற வெளிச்சம், அறையை மேலும் அடர்த்தியாக்கியது. போர்வையை விலக்கி எழுந்து உட்கார்ந்தாள் அதிதி. தூங்கிக்கொண்டிருந்த மூவரையும் பார்த்தாள். குறட்டைவிட்டு தூங்கிக்கொண்டிருந்தார் அவர். குறட்டைச் சத்தம் அவளை பல நாட்கள் தூங்கவிடாமல் இம்சை செய்திருக்கிறது. தன் தலையணையை நகர்த்தி அடியில் ஒளித்துவைத்திருந்த கத்தியையும் தலையணையையும் எடுத்துக்கொண்டு அவர் அருகில் சென்றாள். அவளின் நிழல் எதிரில் இருந்த சுவரின் மீது சன்னமாகப் படிந்திருந்தது. மனதைத் திடப்படுத்திக்கொண்டு கீழே தோதாக அமர்ந்தாள். தலையணையை எடுத்து அப்பா முகத்தின் மேல் வைத்து ஏறி, கால்களை இரு பக்கங்களிலும் போட்டுக்கொண்டு உட்கார்ந்தாள். அப்பா சுதாரித்து எழுந்திருப்பதற்கு வாய்ப்பே அளிக்காமல் கத்தியால் தன் வலுகொண்ட மட்டும் அவர் கழுத்தை அறுத்தாள். ஆழமாகக் கத்தி பாய்ந்திருந்தது. குரல்வளை துண்டிக்கப்பட்ட நிலையில் கூச்சலிட முடியாமல் கால்களால் உதைத்தார். ரத்தம் பீறிட்டுக் கிளம்பியது. என்ன நடக்கிறது என்று அவர் உணர்வதற்கு முன்பாகவே எல்லாம் நடந்து முடிந்திருந்தது. ரத்தம் பீறிட்டு சுவரில் தெறித்தது. கோடுகோடாக வழிந்து தரை முழுக்கப் பரவியது. அப்பாவின் அசைவுகள் மெள்ள அடங்கிக்கொண்டிருந்தன. தலையணையை அப்புறப்படுத்திவிட்டு பார்த்தாள். அவரின் உஷ்ணம் அதில் பொதிந்திருந்தது. கண்கள் தன்னையே உற்றுப்பார்ப்பதுபோல இருந்தன அவளுக்கு. நிலைத்த பார்வை நடுக்கத்தை ஏற்படுத்தியது. கோரைப்பாயைத் தாண்டி ரத்தம் அடர்த்தியாக உறைந்துகிடந்தது. விபரீதம் தெரியாமல் அம்மாவும் அக்காவும் உறங்கிக்கொண்டிருந்தனர். எழுந்து அதிதி தன் இடத்துக்குச் சென்று படுத்துக்கொண்டாள்.

அக்காவின் சிறுநீர், அதிதியைத் தொப்பலாக நனைக்கத் தொடங்கியது. கனவு அறுபட்டு உறக்கம் கலைந்து திடுக்கிட்டு எழுந்தாள். உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. உறங்கிக் கொண்டிருக்கும் அப்பாவைப் பார்த்தாள். அவளையும் மீறி கேவிக் கேவி அழுதாள். சத்தம் கேட்டு அலறி அடித்து எழுந்த அம்மா, “அதிதி... என்னம்மா?” என்று கேட்டாள். இவளுக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. பயத்தில் நாக்குக் குழறியது. வார்த்தைகள் வராமல் அழுதபடியே இருந்தாள். சத்தம் கேட்டு அப்பாவும் எழுந்துகொண்டார். பயத்தினால் முகம் வெளிறிப்போய் இருந்தது. அழுகை நின்றபாடில்லை.

“கண்ட எடத்துக்கு போவாதனா கேக்குறியா? எதையாவது பார்த்துப் பயந்திருப்ப” என்று சொல்லிக்கொண்டே கதவைத் திறந்துகொண்டு பூஜை அறைக்குச் சென்றாள் அம்மா. கொஞ்சம் விபூதியை எடுத்து வந்து அவள் நெற்றியில் பூசினாள்.

குடிக்க தண்ணீர் கொடுத்தாள். வாங்கி இரண்டு மிடறு அருந்திவிட்டு நீல நிற விளக்கையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் அதிதி. கனவின் நிகழ்வுகள் திரும்பத் திரும்ப அவள் மனதில் புரண்டுகொண்டே இருந்தன. பயத்தினால் பேச்சே எழவில்லை. அப்பா எழுந்து சென்று சிறுநீர் கழித்துவிட்டு வந்தார். மீண்டும் படுத்து குறட்டைவிட்டு தூங்க ஆரம்பித்தார்.
“அம்மா நான் அப்பாகிட்ட போய் படுத்துக்கட்டுமா?'' என்று கேட்டாள் அதிதி.

“ஏம்மா... இங்கேயே படு” என்றாள்.

“பயமா இருக்கு” என்றாள்.

 “சரி போய்ப் படுத்துக்கோ”

எழுந்து சென்று நன்றாக உறங்கிக்கொண்டிருந்த அப்பாவின் அருகில் படுத்தாள். அவர் மீது கால்களைத் தூக்கிப்போட்டுக்கொண்டாள். அவரும் அவளை தன் பக்கமாக இழுத்து, குளிருக்கு அடக்கமாகப் போர்வையைப் போத்திவிட்டார். மறுபடியும் குறட்டைவிட்டுத் தூங்க ஆரம்பித்தார். அவரின் கழுத்தை மெதுவாகப் தடவிப்பார்த்த அதிதி, சிறிதுநேரம் அமைதியாக இருந்தாள். பின்னர் கண்களை மூடிக்கொண்டு ஒன்று, இரண்டு, மூன்று... என்று மனதுக்குள் எண்ணத் தொடங்கினாள்!

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.