Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆகாசப் பூ - சிறுகதை

Featured Replies

ஆகாசப் பூ - சிறுகதை

பிரபஞ்சன், ஓவியங்கள்: ஸ்யாம்

 

p66b.jpg

வள் புரண்டு படுத்தாள். இப்போது எல்லாம் இப்படி அடிக்கடி புரண்டு புரண்டு படுத்து, அறுந்துபோகும் உறக்கத்தின் இழையைத் துரத்திச்சென்று விடியும் வரை அவஸ்தைப்பட வேண்டியிருந்தது அவளுக்கு. மூன்று மூன்றரை மணிக்கு, இந்தப் பிரச்னை தொடங்கிவிடும். காதுகளுக்கு அருகில், விளங்காத சத்தங்கள், மொழிச்சொற்கள், யாரோ பக்கத்தில் இருந்துகொண்டு பேசுவதுபோல. என்ன பேசுகிறார்கள் என்றுதான் விளங்கவில்லை.

p66a.jpg

ஏறக்குறைய உறக்கத்தில் ஆழ்ந்தாள். உலகம் விடிந்துகொண்டிருந்தது; சத்தமாகத் தெரிந்தது. பால் வெளிச்சம் படரும்போது, தோட்டத்து மரங்களில் இருந்து பறவைகள் பேசத் தொடங்கிவிடும். உணவுவிடுதிக்குக் கறந்து தர மாடுகள் நடக்கும் ஓசை, பால் பூத்தின் ஷட்டர் அநாகரிகச் சத்தத்துடன் திறக்கும் நாராசம்.

அவள் தன்னை உறக்கத்துக்குள் போத்திக்கொண்டாள். உறக்கம், நீல அலைகளானது. நீல அலைகளில் அவள் அமிழும்போது, மிதமாக அவள் செல்பேசி சகானாவில் இழைந்தது. யார் இந்த நேரத்தில்? முக்கியமான அழைப்பு என்பதுபோல அவள் உணர்ந்தாள்.

``ஹலோ.''

``வணக்கம் மேடம். நான் கேசவன்'' என்றது எதிர்க்குரல்.

``சொல்லுப்பா, என்ன விஷயம்?''

``ஸாரி மேடம். நம்ம சி.ஆர் காலமாகிட்டார்.''

``அடடா... எப்போ?''

``இரவு பத்துக்கு நெருக்கமா.''

அவள், பதிலை யோசிக்கவேண்டி இருந்தது.

``சரி, பார்ப்போம்... நன்றி.''


அவள், ஜன்னல் கதவைத் திறந்து வெளியே பார்த்தாள். மழைநீர் மாதிரி தெருவிலும் மரங்களிலும் இருட்டு தேங்கியிருந்தது. ஒரு தெருநாய், தன் உடம்பை உதறி, குரைத்து சூரியனை அழைத்துக்கொண்டிருந்தது.

கேசவன் குரலில் இரண்டு சமாசாரங்கள் இருந்தன. அவள் அறிவாள். நிறுவனத்தின் தலைவர் இறந்ததைச் சொன்னது ஒன்று. இன்னொன்று, அவர் அவளுக்கு நெருக்கமானவர் என்பது. நெருக்கம், இதற்கு என்ன அர்த்தம்? அவரவர் அனுபவத்துக்கு ஏற்ப பொருள்படும் பன்முக வார்த்தை அது. கேசவன், அவளுடைய உதவியாளன். அவன் மேடத்துக்கு விஷயத்தைச் சொல்வது அவன் கடமைகளில் ஒன்று. மேல் மற்றும் கீழ் அர்த்தம் வெளிப்படச் சொன்னான்.

காபி போட்டு எடுத்துக்கொண்டு வந்து பால்கனியில் அமர்ந்தாள். ஒரு ஆட்டோ, வெள்ளை வேட்டியாகப் பரவிய விடியலைக் கிழித்துக்கொண்டிருந்தது.

சி.ஆருக்கும்கூட காபி பிடிக்கும். அதை முதல் சந்திப்பிலேயே அவர் வெளிப்படுத்தினார்.

சி.ஆர் பதவியில் இருந்தபோதுதான், அவள் பணியில் சேர்ந்தாள். பணிசார்ந்த, அனுபவம் சார்ந்த எதையும் அவர் அவளிடம் கேட்கவில்லை.

``உங்களை எனக்குத் தெரியும்’' என்று ஒற்றை வரியில் அனைத்தையும் முடித்துக்கொண்டார். காபி வந்தது.

``எடுத்துக்கொள்ளுங்கள். சர்க்கரை தேவை யானதைப் போட்டுக்கொள்ளுங்கள். இங்கே எல்லாம் கலந்துகட்டித்தான் கொடுத்துக்கொண்டி ருந்தார்கள். நான் வந்த பிறகுதான், காபி சடங்கை ஒழுங்குப்படுத்தினேன்'' என்றவர், அவள் ஒரு வாய் சாப்பிட்ட பிறகு, ``எப்படி இருக்கு?'' என்றார்.

``அருமை'' என்றாள்.

அவர் தொடர்ந்தார், ``என்னைப் பற்றி. உங்கள் கட்டுரை ஒன்றில், ஒரு அபிப்பிராயத்தைக் கொஞ்சம் சூடாகச் சொல்லியிருந்தீர்கள். எனக்கு மறக்கவில்லை. அப்போது, சிராய்த்துக் கொண்டாற்போல் வலித்தது. ஆனால், உங்கள் கருத்து சரி. நான் புரிந்துகொண்டேன்.''

அவள் சங்கடமாக உணர்ந்தாள்.

``இப்போ என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?''

``என்ன எடுத்துக்கொள்ளலாம் என யோசித்துக்கொண்டிருக்கிறேன்.''

``நல்லது. உங்கள் வேலையைத் தொடருங்கள். அரை மணி நேரம் காத்திருக்க முடியுமா? உங்கள் அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை  வாங்கிக்கொண்டு போய்விடுங்கள்.''

அவள் நன்றி சொல்லிவிட்டு, அறைக்கு வெளியே இருந்த விசிட்டர்ஸ் பகுதியில் வந்து, சௌகர்யமான நாற்காலியில் அமர்ந்தாள்.  ஓர் இனிய வாசனை அங்கு நிரம்பியிருந்ததை ரசித்தாள். பத்து நிமிடங்களுக்குள் சி.ஆர் அழைத்தார்.

``வாழ்த்துகள். இது உங்கள் நியமன ஆணை.  ம்... உங்களை நான் எப்படி அழைக்கட்டும்? தியாகராசன் சந்திர பிரபாவை டி.சி.பி என்று. டாக்டர் டி.சி.பி சரியா?''

``டாக்டர் என்னத்துக்கு? டி.சி.பி போதும் சார்!''

``நோ சார். சி.ஆர் போதும்.''

``நன்றி சார்''-சொல்லிவிட்டு வெளியே வந்தாள். `சிநேகிதி வசந்த சூர்யாவைப் பார்த்து, விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்' என இவள் நினைக்கும்போதே, சூர்யா இவளை நோக்கி வந்துகொண்டிருந்தாள். நிறுவனம், நிறைய மரங்களை வளர்த்தது ஆறுதல். சில மரங்களை அழகுபடுத்துவதாகச் சொல்லி முடிவெட்டி நிறுத்தியிருந்தது அநாசாரம். இரண்டும் சேர்ந்தவைதான் நிறுவனங்கள்.

சூர்யா ஓடிவந்து இவள் கைகளைப் பற்றிக்கொண்டு, ``பாராட்டுகள்'' என்றாள். பாக்குமர நிழலில் புல்தரையில் அமர்ந்தார்கள்.

``நேர்காணல் ரொம்பச் சீக்கிரம் முடிஞ்சுட்டாபோல!''

``நேர்காணல்னா, நேராக வேலை பெறப்போகிற ஆளைப் பார்ப்பதுதானே? பார்த்தார். ஆர்டரைக் கொடுத்தார். அது சரி. சி.ஆர் எப்படி... நல்லவர்தானா?''

புல்தரையில் தும்பிகள் நிறையப் பறந்தன. வெயிலைத் தின்று வாழும் உயிர்கள். சூர்யா, டி.சி.பி-யைப் பார்த்துச் சொன்னாள், ``நல்லவர்கள்னு ஒரு சாதி இருக்காப்பா? எனக்குத் தெரிஞ்சு இல்லை. மனுஷர்கள்தான் இருக்காங்க. அன்பு, அயோக்கியத்தனம், கருணை, களவாணித்தனம், சல்லித்தனம், புறம்பேசுதல், காட்டிக்கொடுக்கிற கயமைத்தனம், எல்லாம் சரிவிகிதத்துல கலந்த மனுஷத்தனம், சந்தர்ப்பம் சூழ்நிலை, நிலம், பொழுது, காற்று, தின்கிற உணவு எல்லாம் சேர்ந்தவன்தான் மனுஷன். நீ உன்னைக் காப்பாத்திக்கணும். தட்டப்படுற கதவுக்கு வெளியே யார் நிக்கிறானு பார்த்துட்டு, அப்புறமா கதவைத் திறக்கிறது உனக்கு நல்லது.''

``நேரா சொல்லுப்பா... சி.ஆர்-ஐ எப்படி டீல் பண்றது?''

``என்னிடம்கூட கேட்டிருக்கார், `அடுத்த கருத்தரங்கத்தை ஊட்டியில் வெச்சுக்கலாமா?'னு.''

``ஊட்டியிலா?''

``ஆமாம்... ஏற்காடு, ஊட்டி, கொடைக்கானல்னு மலைவாசஸ்தலத்துலதான் நம்ம சி.ஆரு-க்கு ஐம்புலனும் எழுந்து நடனமாடுது. நேஷனல் செமினாரை எல்லாம் அங்கேதான் நடத்துவார்.''

``நீ போயிருக்கியா?''

``இல்லை. எனக்கு புரமோஷனே வரலையே.
 
நீ புரிஞ்சுக்கவேணாமா!''

ல்லவேளைதான். சி.ஆர் அடுத்தடுத்து நான்கு கருத்தரங்குகள் நடத்தினார்; அவற்றைச் சமதளத்திலேயே நடத்தினார். துறைத் தலைவர் என்ற முறையிலும், நிறுவனத் தலைவர் என்ற நிலையிலும் அடிக்கடி சி.ஆரை அவள் சந்திக்கவேண்டியிருந்தது. தொடக்கத்தில் பதற்றம் இருந்தாலும், நாளடைவில் அது சமனப்பட்டுக் குறைந்தது. அதோடு சி.ஆர் அறிவாளியாக இருந்தார். இடைக்காலத்து இலக்கியங்களில் அவர் ஆர்வமும் புலமையும் மதிக்கும்படியாக இருந்தன. அதோடு இருபதாம் நூற்றாண்டு நவீனத் தத்துவங்களில் ஆராய்ச்சியும் செய்திருந்தார். அவள் `கேமு’ என்றால், `சார்த்ரு’தான் மேலானவர் என்று இரண்டு மணிக்கும் மேலாக அவர் பேசினார். அவர் முன்வைக்கும் நியாயங்களில், நியாயம் இருப்பதுபோல தோன்றினார். இருத்தலியல்வாதிகளில், வைதிக-அவைதிகத் தத்துவவாதிகளை அழகுறப் பிரித்துக் காட்டினார்.

p66c.jpg

ஒருநாள் அவர் அவளிடம், ``சிற்றிலக்கியங்கள் பற்றிய கருத்தரங்கம் ஒன்றை நீங்கள் முன்நின்று நடத்துங்களேன். சிற்றிலக்கியங்களின் சொற்கள், அமைப்புகள், தோற்றக் காரணம், சமூகப் பின்புலம்... ஏதேனும் உங்கள் தேர்வை முன்னிறுத்திச் செய்யுங்களேன்.''

``செய்யலாம் சி.ஆர். முதலில் சில புரிதல்கள் நமக்கு வேணும். அவற்றைச் `சிற்றிலக்கியம்' என ஏன் சொல்ல வேண்டும்? `இலக்கியம்' என்றால் போதாதா? அப்புறம், நீங்கள் சொன்னதுபோல, சிற்றிலக்கியங்களை நூற்றுக்கணக்கில் செய்தவர்கள் இஸ்லாமியக் கவிஞர்கள் அல்லவா! அதை ஏன் நாம் பேசுவது இல்லை? நம் தமிழ் அன்னைக்கு இஸ்லாமியப் பிள்ளைகள் மேல் வெறுப்பா என்ன? அவர்களின் இலக்கியப் படைப்புகள் பற்றி கருத்தரங்கம் நடத்த அனுமதி கொடுத்தீர்கள் என்றால், நான் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன்.'’

``கொடுத்தேன். உங்கள் விருப்பம்போலவே செய்யுங்கள். அகில இந்தியக் கருத்தரங்கமாகவே நடத்திவிடலாம்.'’

அவள் பின்வருமாறு பேசியிருக்கக் கூடாது. மனதில் இருப்பதுதானே வார்த்தையாக வெளிவருகிறது.

``சமதளத்திலேயே நடத்தலாம். மலைப்பகுதிக்குப் போக வேண்டாமே!’’

மனித முகம் இப்படியும் ஆகும் என்று அவள் நினைக்கவில்லை. அவமானப்படுத்தப்பட்ட மனிதன் முகம்போல, காயம்பட்டதுபோல ஆனார். ஆனால் அது டி.சி.பி-யை வருத்தப்படுத்தவில்லை. யாரோ ஒருத்தி அவர் முகத்தில் அதைச் சொல்லியிருக்க வேண்டும். அவளுக்காக தான் பேசியதாக அவள் நினைத்தாள். அது தன் கடமை என்றும் நினைத்தாள்.

மீண்டும் அவள் அசிஸ்டன்ட் கேசவன் பேசினார். ``மதியம் இரண்டு மணி போல் அடக்கஸ்தலம் ஊர்வலம் புறப்படுவதாக இருக்கிறது'' என்று நினைவூட்டினார். நன்றி சொல்லிவிட்டு, `என்ன செய்யலாம்?' என யோசிக்கத் தொடங்கினாள். `பழகிய மனிதனின் மரணத்துக்குச் சென்று வழியனுப்புவது நாகரிகம்' எனப் பலரும் சொல்ல அவள் கேட்டிருக்கிறாள். அந்தக் கூற்றில் சத்து இருக்கலாம். அவளுக்கு முன், குளிக்கவேண்டிய கடமை ஒன்று இருப்பது அவள் நினைவுக்கு வந்தது. `குளித்துவிட்டு சாவு வீட்டுக்குப் போவதாவது!' என்றும் தோன்றியது. தான் `தூய்மை' என்றெல்லாம் பேசப்படும் விஷயத்துக்குள் காலை வைக்கிறோமோ? இல்லை. அது கூடாது. அவள் குளிக்கப் போனாள்.

டி.சி.பி-க்கு ஒரு பிரச்னை ஏற்பட்டது. அவசரமாக வீடு தேவைப்பட்டது. சூர்யாவுடன் வீடு பார்க்கப் போனாள். தனியாக வாழும் ஒரு பெண்ணுக்கான, தொந்தரவு அதிகம் வராத, ஓரளவு பாதுகாப்பான குடியிருப்பு.

``தனியாக இருக்கிறீர்களா?’’ என்றார் வயதான ஒரு வீட்டுக்காரர். முன்னர் அந்த வீட்டில் லெக்சரர் சரவணன் இருந்தார். திருமணம் ஆன பிறகுதான் வேறு வீட்டுக்குப் போனார்.''

``சரவணன்கூட தனியாகத்தானே இருந்தார்?’’ என்றாள் டி.சி.பி.

அசட்டுத்தனமான சிரிப்பை, இப்போது எல்லாம் அடிக்கடி பார்க்க முடிந்தது டி.சி.பி-யால். வீட்டுக்காரப் பெரியவர் ஒருவர், ``அசைவம் சமைக்க மாட்டேளே!'’ என்றார்.

``இல்லை... நான் சமைப்பதே இல்லை. ஆனால், வாங்கிவந்து சாப்பிடுவேன்’' என்றாள். அழகான அசட்டுச் சிரிப்பு.

``ஹஸ்பண்ட் பின்னால் வருவாரா?’’ என்றார் ஒரு வீட்டுக்காரர்.

``இல்லை. எப்போதும் வர மாட்டார். எனக்கு ஹஸ்பண்ட் என்று எவனும் இல்லை.’'

ஆறாவது வீட்டுக்காரர், ``எங்கு பணி?'’ என்று மட்டும் கேட்டார்... சொன்னாள்.

``உங்கள் தலைவர் உங்களுக்காகப் பேசுவாரா?’’ என மட்டும் கேட்டார்.

டி.சி.பி-யை முந்திக்கொண்டு சூர்யா சொன்னாள், ``பேசுவார்... நாளைக்கு எங்களோடு வருவார்.’'

வந்தார் சி.ஆர்.

``அனைத்துக்கும் நான் பொறுப்பு’’ என்று வீட்டுக்காரருக்கு உத்தரவாதம் அளித்தார்.

இதை டி.சி.பி விரும்பவில்லை. சில பிரச்னைகள் ஏற்படும் என்று அவள் தயங்கினாள்.  வீடு கிடைக்கும்படியாகச் செய்தமைக்கு, ஏதாவது பிரதிபலன் எதிர்பார்ப்பார் சி.ஆர் என்பது ஒன்று. தன் வசிப்பிடம், ஓர் ஆணுக்குத் தெரிந்துவிடுகிறது என்பது இரண்டு. என்றாலும் சூர்யா எப்படியோ சாத்தியப்படுத்தினாள்.

p66d.jpg

``சி.ஆர் இதுக்கு கூலி கேட்பாரோடி... வேறு வகையாக.’'

``கேட்கலாம். எப்படியும் உன்னிடம் இருப்பதைத்தானே கேட்கப்போகிறார். தராதே. இதுபோன்ற அதிகாரத்தில் இருக்கும் ஜொள்ளர்களின் நினைவு எல்லாம் நம் உடம்பாகத்தான் இருக்கும். அலட்சியம் செய். அவர்களைப் புறக்கணி. காலை எழுந்தவுடன் தலை வாருகிறோம். எப்போதும் ஒன்றிரண்டு தலைமுடிகள் சீப்பில் ஒட்டிக்கொண்டு வருகிறதுதானே! அந்த உதிரிகளுக்காக வருந்துகிறோமா?’’

``வருந்தத் தேவை இல்லைதான்.’'

ரில் இருந்து டி.சி.பி-யின் தம்பி செல்லில் அவளை அழைத்து நன்றி தெரிவித்துக்கொண்டார்.

``எதுக்குப்பா நன்றி?’'

``அக்கா... நீ சொல்லித்தானே நிறுவனத்தின் கான்ட்ராக்ட் எனக்குக் கிடைத்திருக்கிறது. பெரிய பெரிய முதலைகள் அதுக்கு மோதிக்கொண்டிருந்தார்கள். மாசம் பல லட்சம் ரூபாய் வரும். நான் நிமிர்த்திடுவேன் அக்கா.'’

ஏதோ தப்பு நடக்கிறது எனத் தோன்றியது அவளுக்கு.

நேராக சி.ஆரைப் போய்ப் பார்த்தாள்.

``என் தம்பி, ஏதோ சொல்றானே... என்ன சார்?’’

``அதுவா, உங்க தம்பி என்னை வந்து பார்த்தார். அந்தப் பெரிய கான்ட்ராக்ட் தனக்கு வேணும்னு கேட்டார். நம்ம குடும்பத்து இளைஞன் முன்னுக்கு வர்றதுக்கு நாம் வழிகாட்டியதா இருக்கட்டுமே!’'

``தப்பு பண்ணிட்டீங்க சார். எனக்கு இந்த விஷயமே தெரியாது. நீங்க என்னிடம் சொல்லியிருக்கணும். அவன் நல்ல பையன் இல்லை சார். மணல் திருட்டு, பிளாட் பிசினஸில் ஊழல்னு வாழுறவன். அதனாலேயே என் குடும்பத்தோட உறவே வேண்டாம்னு நான் ஒதுங்கி வாழ்றேன்.’'

``ஒருத்தன் எப்பவுமே தப்பு பண்ணிட்டே இருப்பானா! உங்க தம்பி நல்லா வருவான். நான் நம்புறேன்.'’

சூர்யாவைப் பார்த்து விஷயத்தைச் சொன்னாள் டி.சி.பி. அவள் மூச்சு இரைக்க இரைக்க நின்றதைக் கண்டு, சூர்யா கவலைப்பட்டாள்.

அவர்கள் அமர்ந்த இடத்தில் இருந்து, அமைதியற்றுக் கொந்தளிக்கும் கடலைப் பார்க்க முடியும். புரண்டு புரண்டு வந்த அலைகள், சமாதானமாகி கடலில் கரைந்தன.

``இதுல நீ விசனப்பட என்ன இருக்கு? அந்த ஆள், எப்போதும் தூண்டில்தான் போடுவார். இப்போது பெரிய வலையையே விரித்திருக்கார். நீ சிக்க மாட்டாய். அதை அவர் இப்போது புரிந்துகொண்டிருப்பார்.’’

``கடைசியாக வர்றபோது, நான் அவரிடம் சொன்னேன். `அடிப்படையில் முறை இல்லாத, நேர்மை இல்லாத காரியங்களை நீங்கள் செய்கிறீர்கள் சி.ஆர். அந்தப் பையன் எப்படிப்பட்டவன், இந்தப் பெரிய காரியத்தைச் சாதிக்கும் தகுதியுள்ளவனா, அந்த கான்ட்ராக்ட்டுக்கு உரிய யோக்கியதை நிரம்பியவனானு எதுவும் விசாரிக்காம நீங்க இதைச் செய்திருக்கக் கூடாது. இப்படிச் செய்வது என்னைச் சந்தோஷப்படுத்தும்னு நீங்க நினைச்சா, அது நீங்க எனக்குச் செய்ற அவமானம். நான் திருப்தி அடைஞ்சு, எந்த ரூபத்துலயும் பதில் உபகாரம் செய்ய மாட்டேன்.’

`அப்படி இல்லை டி.சி.பி. அன்பு காரணமா...'

`அன்பு? அந்த வார்த்தையைக் கேட்கவே எனக்கு அருவருப்பா இருக்கு. அர்த்தம் இல்லாத, சாயம்போன வார்த்தையை என் முன்னால இனி சொல்லாதீங்க. நீதி, நேர்மை, நியாயம், எல்லாத்துக்கும் மேலே அறம்னு ஒண்ணு இருக்கு சி.ஆர். பொய்யை அன்புனு சொல்லாதீங்க. என்னை ரொம்ப மலிவா எடை போட்டுட்டீங்க'.'’

காபியை முடித்துக்கொண்டு அவர்கள் வெளியே வந்தார்கள்.

``அந்த ஆள் முகத்தில் விழிக்கவே எனக்குப் பிடிக்கலைப்பா. என்ன செய்யலாம்... ரிசைன் பண்ணிடலாமா?’’

டி.சி.பி-யை அவள் ஃபிளாட்டின் வெளியே இரும்பு கேட்டுக்குப் பக்கத்தில் வளர்ந்துகொண்டிருந்த மாதுளைச் செடியின் ஓரம் நிறுத்தி சூர்யா சொன்னாள், ``ரிசைன் பண்ண வேணாம். சி.ஆர் நிரந்தரமா என்ன? நிலைமை மாறலாம். ஒண்ணு செய், கீழைத் தேய மொழி ஆராய்ச்சிக்கு உனக்குக் கிடைச்சிருக்கிற ஸ்காலர்ஷிப்பை இப்போ பயன்படுத்திக்கோ. ஆறு மாசம், ஒரு வருஷம் வரைக்கும் அதை நீட்டிச்சுக்கலாம். சி.ஆரைச் சந்திக்கவும் நேராது. உருப்படியா ஒரு காரியத்தைச் செய்துட்டு வா. ஆய்வில் மட்டும் கவனம் செலுத்து.''

திர்ஷ்டம்தான். டி.சி.பி அப்படித்தான் நினைத்தாள். தங்கும் இடம் பெரிய வளாகம். முதிர்ந்து படர்ந்த மரங்கள். மரங்களில் அடர்ந்த பறக்கும் உயிர்கள். பத்துப் பத்து அறைகளாக மூன்று அடுக்குக் கட்டடம். அவளுக்குக் கீழ் அடுக்கில் கடைசி அறை. ஜன்னலைத் திறந்தால் மரங்களின் கொலு. அவள் அறை வாசலில் சச்சதுரமாக நிலம். முதல் நாளே, அந்த இடத்தைப் பசுமையாக மாற்றுவது எனத் தீர்மானித்தாள்.

பக்கத்து அறை சிநேகிதி கங்கா. ஊரில் இருந்து திரும்பும்போது ஒரு செடி கொண்டுவந்து கொடுத்தாள். ``என்ன செடி?’' என்றாள் டி.சி.பி.

``ஆகாசப் பூ. அதாவது, நீல நிறம் மேல்பக்கமும் வெள்ளை நிறம் அடிப்பக்கமுமாக, நீல ஆகாயம்போல பூக்கள் இருக்குமாம். அதனால் அந்தப் பெயர். பக்கத்து கார்டனில் இருந்து, எல்லா பூச்செடிகளையும் வாங்கி நட்டுவிடலாமா?’’ என்றும் கேட்டாள் கங்கா.

``நாலு பூச்செடிகள் போதும். மீதி நாலோ ஆறோ பூக்கள் இல்லாத, இலையே அழகாக அரும்பும் செடிகளாகவும் இருக்கட்டும். பூக்கள் மட்டுமா அழகு? இலைகள், அரும்புகள், தண்டில் ஊர்ந்துவரும் எறும்புகள், எல்லாவற்றுக்கும் மேலாக புற்கள் எல்லாமும்தானே தோட்டம்.

தோட்டம் வளர்ப்பதில் மிகவும் சிரத்தையாகத் தன்னைப் பிணைத்துக்கொண்டாள் டி.சி.பி. காலையிலும் மாலையிலும் செடிகளைப் பார்ப்பது, தொடுவது, பேசுவது, நீர் வார்ப்பது என தன்னை உடைத்து, திசைகளிலும் மண்ணிலும் ஆகாயத்திலும் பொடியாகத் தூவிக்கொண்டாள்.

இடையிடையே, சூர்யா பேசிக்கொண்டுதான் இருந்தாள். ஒருமுறை சூர்யா பேசும்போது, ``யார்?'' என்றாள்.

``என்னடி, நான்தான் சூர்யா. என்னைக் கூடவா மறந்துட்டே?'’ என்று கேட்டபோதுதான் தன்னிலை உணர்ந்தாள்.

அவள் தன் டைரியில் இப்படி எழுதினாள்...

`இரண்டு விஷயங்களில் என்னை, நானே விரும்பி இழந்துகொண்டிருக்கிறேன். இந்த இழப்புதான் என்னுள் சேகரமாகிறது. என் ஜீவியத்துக்கு அர்த்தம் இதுதான் என்று தோன்றுகிறது.'

``அது என்னடி இரண்டு விஷயங்கள்?’' - ஊர் திரும்பியபோது சூர்யா கேட்டாள்.

``ஒண்ணு... பழங்குடி மலைவாழ் மக்கள்னு சொல்லி, நம்ம நாகரிகச் சமூகம் ஒதுக்கிவெச்சிருக்கிற மக்கள் நூறு சதவிகிதம் மனுஷங்களா இருக்கிறதை ஒவ்வொரு நாளும் நான் பார்க்கிறேன். ரெண்டு... அவர்களை அவர்கள் வாழும் இடங்கள்ல இருந்து ஏன் வெளியேத்துறாங்கனு அவர்களுக்குத் தெரியலை சூர்யா. நம்ம அரசியல்காரர்கள், கார்ப்பரேட்டு களோட ஏஜென்டா இருக்கிறாங்கனு அவர்களுக்குத் தெரியலை. இது ரொம்பவே என்னைத் தொந்தரவு பண்ணுது.'’

p66e.jpg

`` `மலைவாழ் மக்களோட மொழியை ஆராய்ச்சி பண்றது மட்டும்தான் உன் வேலை'ம்பாங்களே!’'

``இப்படித்தான் எனக்கு சம்பளம் தர்ற நிறுவனமும் சொல்லுது. கல்விப் புலத்து அயோக்கியத்தனமே அந்த இடத்துலதான் தொடங்குது சூர்யா. என் கண் முன்னாடி துப்பாக்கியைக் காட்டிய போலீஸ், அந்த மக்களை காடுகளைவிட்டு வெளியேத்துறாங்க. எதுக்கு நம்மை வெளியேத்துறாங்கனு தெரியாமலேயே, அந்த மக்கள் குழந்தைக்குட்டிங்களோடு நடக்குறாங்க. பெண்கள், குழந்தைகள், வயசானவங்க கண்கள்ல மிரட்சி பயம்; எதையும் செய்ய முடியாத துர்பாக்கியம். என்னைத் தூங்க முடியாமப்  பண்ணுதுப்பா. அந்த மக்கள்கிட்ட, `நீங்க எக்கேடும் கெட்டுப்போங்க. என்கிட்ட மொழி பற்றி பேசுங்க’னு சொல்ல, இரும்பாலே அடிச்சிருக்கலைப்பா என் மனசு!’’

மிகுந்த யோசனைக்குப் பிறகு, சூர்யா சொன்னாள்,  ``வேண்டாம்... அந்த எழவெடுத்த வேலை. பார்த்துக்கலாம். இங்கே நடக்கிறது தெரியுமா, `தகுதி இல்லாத நபருக்குப் பெரிய பெரிய கான்ட்ராக்டை, சுயலாபம் கருதி கொடுத்திருக்கார் சி.ஆர்’னு தகவல் பரவி என்கொயரி நடந்தது. சி.ஆர் தப்பிக்க முடியாத நிலை. நீண்ட விடுப்பிலே போனார்.’’

இந்த விவகாரங்களை காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை டி.சி.பி.

``இந்த முறை நீ என்னோடு வர்ற. `நான் ஏழெட்டுச் செடிகள் வளர்க்கிறேன்'னு  சொல்றதே தப்பு. அதுங்க வளருது. நான் பார்த்துக்கிட்டிருக்கேன். நான் செய்றது எல்லாம் ஒரு வாளி தண்ணீர் வார்க்கிறது மட்டும்தான். அதுங்களோடு பேசுறேன். குழந்தையைப்போல தொடுறேன். அதுங்களுக்கு என்னைப் புரியுதா? புரியும்... நிச்சயம் புரியும். மனிதர்களால்தான் மனிதரைப் புரிஞ்சுக்க முடியலை. செடி, கொடி, மரம், நாய், பூனை எல்லாம் புரிஞ்சுக்கும். பச்சைக் கடுகு மாதிரி, பச்சைப் பயறு மாதிரி, பச்சைப் பட்டாணி மாதிரி இலைவிடுறது ஆச்சர்யம்பா... அதிசயம்பா!

ஒரு செடி, ஒரு இலைவிடுறது, அரும்பு வைக்கிறது, பூ பூக்கிறது எவ்வளவு பெரிய சிருஷ்டி. அதைப் பார்க்கிறதே என் வாழ்க்கையின் பயன்னு நினைக்கிறேன்பா. நான் நிறைஞ்சுபோயிடுறேன். அது போதும் என்னைச் சுத்தி பெரிய பெரிய மரம். பறவைகள் சதா பேசும். `எந்தப் பறவை இப்போ பேசினது?’னு கேட்டா, என்னால சொல்ல முடியும். போதும்... இது போதும். இப்படியே வாழ்ந்துட்டுப் போயிடுறேன் சூர்யா.’'

டி.சி.பி-யின் கைகளைப் பற்றிக்கொண்டாள் சூர்யா. அவள், கண்களால் நிறைந்திருந்தாள்.

டல் ஏனோ அமைதி அடைந்திருந்தது.

சூர்யா சொன்னாள், ``சி.ஆரோடு இறுதி ஊர்வலத்துக்குப் போயிருந்தேன்பா. ஒரு தகவல் எனக்குச் சொல்லப்பட்டது.’'

``.......’’

``சி.ஆர்., சில மாசங்களா மாத்திரை மருந்தே சாப்பிடாம இருந்திருக்கார். அதாவது, மரணத்தை அவரே தேடிப் போயிருக்கார்.’’

டி.சி.பி சொல்லத் தொடங்கினாள், ``கங்கானு ஒரு சிநேகிதி. என் அடுத்த ரூம். அவள் ஒரு செடி கொண்டுவந்தாள். மலைச்சிகரங்கள்ல வளர்ற செடியாம். அது பேர் ஆகாசப் பூச்செடி. ஒரு சமயம் ஒரு  பூ பூக்கும். நீலமும் வெள்ளையுமா ஆகாசம்போல பூ. எத்தனை அழகு! அடடா... எனக்குத் தோணுது, அந்தப் பூ மாதிரி ஆகாசமா மாறிடணும்னு. மேல மேல ஆகாசத்தையே லட்சியமா வெச்சுப் போய்க்கிட்டே இருக்கணும். போகணும்... போய்ச் சேரணும்.''

சூர்யாவின் மடியில் தலை சாய்த்தாள் டி.சி.பி. காற்றில் சிதறிப் பறக்கும் அவள் தலைமுடியை நீவி விட்டுக்கொண்டு சொன்னாள், ``உன்னால முடியும் பிரபா.’’

http://www.vikatan.com/anandavikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.