Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேலைவாய்ப்பு கோரி ஒன்று திரண்ட முன்னாள் போராளிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஜீவன் சிவா said:

இல்லை விசுகு இது உங்களுக்கு புரியாததில்லை.

உங்கள் (உங்களைப் பற்றி நிச்சயம் புலனாய்வு தெரிந்து வைத்திருக்கும்) தொடர்புகள்கூட xxக்கு பாதகமாக இருந்திருக்கலாம். ஒரு உதவிக்காக xxக்கு எனது மொபைல், வீட்டு இலக்கம்கூட கொடுத்திருந்தேன், அவரும் சில தடவைகள் தொடர்பு கொண்டிருந்தார். என்னிடம் புலனாய்வுத்துறையினர் யாருமே வரவில்லையே. 

நன்றி சகோதரா

இதனால் தான் யாழ் களத்திலிருந்தும் ஒதுங்கியிருப்பது..

இது கூட பாதகமாகலாம்...

மீரா

தவறான தகவல்களை மீரா பரப்புகிறார் என்று எழுதியதால் எழுதவேண்டி வந்துவிட்டது

 

போராளிகள் பலருக்கு (சகலருக்கும் அல்ல) உறவினர்கள், நண்பர்கள், ஊர்மக்கள், புலம்பெயர் மக்கள், வட மாகாணசபை, சில கோவில்கள், ...... உதவிகளை செய்துதான் வருகின்றனர் / வருகின்றன.

சிலருக்கு வட மாகாணசபை, உள்ளூர் தொழிலதிபர்களால் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. பலர் சுயதொழிலை செய்து வருகின்றனர்.

ஒருசிலருக்கு எந்த உதவிகள் கிடைப்பதில்லை என்பதுவும் உண்மை!

ஒருசிலருக்கு யாராலும் எந்த உதவிகளும் செய்ய முடிவதில்லை என்பதுவும் உண்மை!

எனவே போராளிகள், அவர்கள் உறவினர்கள் முற்றாக கைவிடப்பட்டுள்ளார்கள் என்பது 100% தவறான பிரச்சாரம்.

அதே நேரத்தில் இன்னும் செய்யப்பட வேண்டியவை நிறையவே உள்ளது.

இது ஒரு முகப்புத்தக பதிவு 
உரிமையாளரின் அனுமதியுடன் இங்கு பதிகின்றேன்.
தவறானால் நிர்வாகம் முடிவெடுக்கலாம்.

எனது நோக்கம் நலிவுற்றோரின் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் மட்டுமே.
அவர்களுக்கு இப்படியும் உதவலாம் எனும் நோக்கத்தை தவிர வேறொன்றுமில்லை பரமபிதாவே.

இது சஞ்சயன் செல்வமாணிக்கத்தின் பதிவு.

அன்பான மனிதர்களால் ஆனது உலகு.
******

‘வணக்கம் அண்ணன்’ என்ற குரலுடன் அவர் என்னை தனது மோட்டார் சைக்கிலில் ஏற்றிக்கொண்டார், அவர்.
ஐந்தாண்டு நட்பு. மண்ணையும் மனிதர்களையும் நேசிக்கும் மனிதர். துளியும் தன்னலமற்றவர்.

எளிமையும், உண்மையும், தன்னலமுமற்ற மனிதர்களின் அருகாமையில் நின்றுபாருங்கள் அவர்களின் அதிர்வுகள் உங்களையும் ஆட்கொள்ளும்.

புளியந்தீவு, வலையிறவு கடந்து மோட்டார்சைக்கில் படுவான்கரைக்குள் புகுந்து ஓடிக்கொண்டிருந்தது. இன்றைய நாள் எதை அறிமுகப்படுத்தப்போகிறது என்ற சிந்தித்துக்கொண்டிருந்தேன். ஏறத்தாள இரண்டு மணிநேரத்தின் ஓரிடத்தில் நின்றபடியே யாருடனோ தொலைபேசினார். மீண்டும் அரைமணிநேரப் பயணம்.

படுவான்கரையின் வடக்கே தொலைதூரத்தில் ஒரு கிராமம். ஆங்காங்கே வீடுகள். அவ்வப்போது கடந்துபோகும் சைக்கில்கள். எறிக்கும் வெய்யில். மோட்டார் சைக்கிலைப் புதினம்பார்க்கும் சிறுவர்கள். தார்ச் சாலைகள், கிறவல் சாலைகள் கடந்து மணல் ஒற்றையடிப் பாதையினூடாக பயணித்து ஒரு வீட்டின் அருகில் இறங்கிக்கொண்டோம்.

நாம் சந்தித்த மனிதர் ஐந்தாண்டுச் சிறை, புனர்வாழ்வு என்று அவரது 25 ஆண்டு போராளிவாழ்க்கையை கடந்திருந்தார். இப்போது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் என்று புலனாய்வாளர்களின் தொல்லைகளின் மத்தியில் வாழ்கிறார். செங்கற் சூளையில் கூலிவேலை. சுகயீனமான குழந்தை. ஏறிகணையினால் காயப்பட்டு இடுப்புக்கு கீழ் இயங்காத மனைவியின் தம்பி, இரண்டு மாவீரர்கள் இவரது குடும்பத்தில், மனைவியின் குடும்பத்தில் ஒரு மாவீரர். இவரது மனைவியும் போராளி. ஒருவேளை உணவுக்கே அல்லாடும் நிலை. மழைக்காலம் என்பதால் தொழில் இல்லை. இதுதான் அவரது வாழ்வின் சாரம்.

மீண்டும் ஒரு மணிநேர மோட்டார் சைக்கில் ஓட்டம். மேடும் குழியுமான வாகனங்கள் செல்லமுடியாத காட்டுப்பாதை. ஒரு தகரக் கொட்டகை. அதன்மேல் வெய்யிலின் அகோரத்தைத் தணிக்க தென்னம் ஓலைகள். உள்ளே இருவருக்கு மேல் உட்கார்ந்திருக்க இடமில்லை. வெளியே உட்கார்ந்திருந்தோம். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். கண்டியில் வாழ்தந்தவர். போராளி. நோய்வாய்ப்பட்டு எழுந்து வேலைசெய்யமுடியாத நிலை. மனைவி படுவான்கரையைச் சேர்ந்தவர். இவரும் போராளி. இரண்டு குழந்தைகள்.

குடும்பத்தின் பாரத்தைச் சுமப்பது பெண். தினமும் காலையில் தயிர், பால், பழங்கள், மரக்கறிகள் என்பவற்றை 30 கி.மீ வரை சைக்கிலில் எடுத்துச்சென்று விற்று உழைத்தவர். இவருக்கு அனைத்து வாகனங்களையும் செலுத்தும் திறமையும் இருக்கிறதாம். பேரூந்தும் ஓட்டக்கூடியவர். வங்கிக் கடன் மூலம் ஒரு மோட்டார்சைக்கில் வாங்கி அதனூடாக இப்போது வியாபாரம் செய்கிறார். இதனால் நேரம் மிச்சமாகிறது. ஆனால் செலவு அதிகம். குழந்தைகளையும், கணவரையும் கவனிப்பதற்கு நேரம் அவசியமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு ஏறத்தாள 500ருபா வருமானம்.

மீண்டும் மோட்டார் சைக்கில் பயணம். இன்னொரு போராளி. கடற்போரில் ஒரு காலை இழந்தவர். இவருக்கும் இரண்டு குழந்தைகள், மனைவி. எதுவித வருமானமும் இல்லை. தனது போலிக்காலினை அணிவதால் காயம் ஏற்படுகிறது. சக்கரை வியாதி ஆகையால் காயம் ஆறுவதில்லை. எனவே போலிக்காலை அவர் அணிந்துகொள்வதை தவிர்க்கிறார்.

மீண்டும் மட்டக்களப்பிற்குள் நுளைந்தபோது இருட்டியிருந்தது. எம்மை சந்திப்பதற்கு ஒரு பெண்ணும் அவரது மகனும் வந்திருந்தனர். அவரது கணவர் போராளி. போரில் கொல்லப்பட்டவிட்டார். வருமானம் ஏதும் இல்லை. அவரது தம்பி ஒருவர் அவ்வப்போது கொடுக்கும் சிறுதொகை பணம் மட்டுமே அவருக்கு உதவுகிறது.

மறுநாள் காலை. நாம் நேற்றுச் சந்தித்த அனைவரும் வந்திருந்தார்கள். ஒரு சிறு அறையினுள் சந்தித்துக்கொண்டோம். அனைவரையும் அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் அறிமுகமாகியிருந்தார்கள். பேச்சு அவர்களின் கடந்தகாலங்களையும், சக போராளிகளையும், போரையும் கடந்து தற்கால வாழ்க்கைக்குள் நுளைந்தது. குழந்தைகள் தமக்குள் நட்பாகி விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

நோர்வேயில் இருந்து புறப்புடுவதற்கு முன் சில நண்பர்கள் தம்மால் முடிந்த உதவிகளை செய்ய ஆவலாக உள்ளோம் என்றிருந்தார்கள். ஒரு முகப்புத்த பதிவின்பின் வேறு சிலரும் உதவுவதற்கு முன்வந்தார்கள். சுயதொழில் முயற்சிகள்பற்றி ஏற்கனவே எனது நண்பர் ஆராய்ந்து, உரியவர்களுடன் உரையாடியிருந்தார்.

செங்கற்சூளையில் கூலிவேலை செய்பவருக்கு செங்கற்சூளை ஒன்றை அமைப்பதற்னாக முதலீட்டை நோர்வேயில் வாழும் ஒருவர் வழங்கினார். இன்னொருவர் பெண் போராளிளின் மோட்டார் சைக்கில் கடனில் 50 வீதத்தை அடைத்தார். காலை இழந்த போராளிக்கு 3 பசுவும் கன்றுகளும் வாங்குவதற்கு உதவினார் இன்னொருவர். இங்கிலாந்தில் வாழும் ஒருவர் பாடசாலைக்குச் செல்லும் சிறுவனின் கல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

சென்ற வருடம் சுயதொழில் செய்வதற்கு உதவிபெற்ற குடும்பத்தினரும் இந்தச் சந்திப்பிற்கு வந்திருந்தார்கள். இவர்களது வாழ்வின் முன்னேற்றத்தை ஆவணப்படுத்திய ஒரு காணொளியினாலேயே ஏனையவர்களுக்கு சுயதொழில் முயற்சிகளை ஏற்படுத்திக்கொடுக்க முடிந்தது என்பதே உண்மை. இதை அவர்களிடம் கூறினோம். அவர்களின் முகத்தில் இருந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

அந்நேரம் நோர்வேயில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. ‘என்னால் ஆன ஒரு சிறு உதவியைச் செய்கிறேன்’ என்றார் ஒரு அன்புத் தம்பி. விதைநெல் கொள்வனவு செய்வதற்கு அவர் உதவயிருக்கிறார்.

உதவிபெற்றவர்களும் உதவியவர்களும் ஒருவருடன் ஒருவர் உரையாடிக்கொண்டனர். உதவிகளை நேரடியாக அவர்களே பரிமாறிக்கொண்டனர். அவர்கள் தொடர்ந்தும் தொடர்புகளைப் பேணுகிறார்கள்.

இங்கிலாந்தில் இருந்தும் சிலர் ஒரு குழுவாகச் சேர்ந்து உதவ முன்வந்திருக்கிறார்கள். இவர்கள் முன்பும் உதவியவர்கள். எனது நண்பர் அவர்களுக்குரிய உதவிகளைச் செய்கிறார்.

நீங்களும் உதவலாம்.

அன்பான மனிதர்களால் ஆனது உலகு.

  • கருத்துக்கள உறவுகள்

 

சில ஆண்டுகளாக இந்த நிறுவனம் நிறையவே செய்கிறது.

http://www.nowwow.org/

 

இந்த சர்வதேச நிறுவனம் மூலம் வங்கி கணக்கில் இருந்து இலங்கையில் எந்த வங்கி கணக்குக்கும் பணம் அனுப்பலாம். அமரிக்க டாலர்கள் ஐந்து செலவாகும்.

https://www.xoom.com/

 

மறுபடியும் முகப்புத்தகத்தில் இருந்து சில பதிவுகள்
இங்கு இன்னுமொருவன் யாருமேயில்லை சாட்சாத் நானேதான். 

நிர்வாகத்திற்கு களவிதிகளை நான் மீறினால் முடிவெடுக்கும் உரிமையை முழுமையாக வழங்குகின்றேன். 

ஆனால் எனது நோக்கம் நல்லது என்றே நினைக்கின்றேன்.

இன்னொருவனின் பார்வையில் - "தமிழ் நோர்வே உதவி அமைப்பு" 1

நோர்வேயில் இருந்து வந்த நண்பன் ஒருவருடன் (எனக்கும் சில வேலைகள் வவுனியாவில் இருந்தமையாலும்) வவுனியா சென்றிருந்தேன். நானும் பல சகாப்த்தங்களை நோர்வேயில் கழித்திருந்தாலும் இந்த அமைப்பிற்கும் எனக்கு எந்த சம்பந்தமுமிருந்திருக்கவில்லை. வழமைபோல புகையிரத்தத்தின் வெளியே காமராவுடன் சூரிய உதயத்தை ரசித்தபடி ஒரு அழகான பயணம். சூரியன் பனைகளூடாக எழுவதை எப்படியாவது படம் பிடித்துவிட வேண்டுமென்ற ஆவலை தனது பேச்சால் குழப்பியவாறே இருந்தார் நண்பரும்.

என்னடா யாழ்ப்பாணத்தில் இருப்பவன் பனைகளினூடாக சூரிய உதயத்தை படம் எடுப்பது அவ்வளவு கஷ்ட்டமா என்றுதானே யோசிக்கிறீர்கள். ஆமாங்க ரொம்ப கஷ்டம்தான். சூரிய பகவான் உதித்து பனைக்கு மேலேயும் வளர்ந்து ஜன்னலுக்கால வந்து பின்புற உடலை சுடும்வரை குப்புறப் படுத்து குறட்டை விடுபவர்களுக்கு மட்டுமே அந்த கஷ்டம் புரியும் - மொத்தத்தில் நான் ரொம்ப சோம்பேறி. ஆனாலும் இண்டைக்கு அதிஷ்டம் என்பக்கமில்லை. தென்னையாவது மாட்டிச்சே என்றவகையில் கொஞ்சம் திருப்தி.

Image may contain: sky, tree, plant, outdoor and nature

Image may contain: sky, tree, cloud and outdoor

இன்னொருவனின் பார்வையில் - "தமிழ் நோர்வே உதவி அமைப்பு" 2

வவுனியாவுக்கும் வந்தாச்சு நெல்லி ஹோட்டலிலும் குந்தியாச்சு - காலை உணவுக்கு. ரூமில போய் பொதியை வைத்தபின் நண்பனும் சொன்னான் "உனக்குத்தான் இண்டைக்கு ஒரு வேலையும் இல்லை, சும்மாதானே ஊர் சுத்தப்போறாய் என்னோட வா".

இந்த நண்பர்களின் தொல்லை எப்பவுமே வரைமுறைகளுக்கு அப்பாற்பட்டதாச்சே (எவனாவது சும்மா ஊர் சுத்துவானா, அவனவனுக்கு ஊர் சுத்த ஆயிரம் காரணம் இருக்குமே - மனதுக்குள் கறுவியபடி) சரி என்றேன். சென்ற அன்று எதுவித வேலைகளுமற்று வெட்டியாக ஊர் சுற்ற ஆசைப்பட்ட என்னை வலுக்கட்டாயமா இழுத்துச் சென்றார் நண்பர்.

ஆட்டோவில் SEEDS என்ற நிறுவனத்துக்கு போனோம். அழகான இயற்கையான கட்டிடம், ரசித்து ரசித்து கட்டியிருந்தார்கள். மரக்கிளைகளில் விறாந்தை வேலிகள், தென்னை மர தூண்கள், கிடு்கினால் வேயப்பட்ட சில தட்டிகள், சாணகத்தால் மெழுகிய நிலம் ஆனாலும் உள்ளே நவீன தொழில்நுட்பம் நிறைந்திருந்தது. சிறிய உரையாடலின் பின்னர் ஒரு வானில் மூன்று உதவியாளர்களுடன் ஏத்தி எங்கோ அனுப்பினார்கள். எங்குபோகின்றோம் என்று தெரியாவிட்டாலும் அலுவலக உரையாடலில் இருந்து ஓரளவு ஊகிக்க முடிந்தது.

"பெண் தலைமைத்துவ குடும்ப வாழ்வாதார உதவிகள்" சம்பந்தமாக இந்திரா காந்தியை சந்திக்கப் போகின்றோம் என்கிறார் அருகிலிருந்த உதவியாளர்.

"ஆ... மறுபடியும் இந்திரா காந்தியா" என்று மனதுக்கு நினைத்தாலும் வெளிக்காட்டாமல் அவரைப் பற்றி சொல்லுங்களேன் என்றேன். இவர் போரினால் பாதிக்கப் பட்டவர், கணவனை இழந்தவர் + உயர்தரம் படிக்கும் ஒரு மகளுடன் வாழ்ந்து வருகிறார். சொந்தமாக நிலமிருந்தாலும் விவசாயம் செய்ய விதைகளுக்கு கூட பணமில்லாதிருந்தார். தமிழ் நோர்வே உதவி அமைப்பு இவருக்கு சொந்தமாக தொழில் செய்ய 2015 இல் இருந்து ஒரு வருடத்திற்கு உதவி செய்ததாகவும், இந்திரா காந்தியும் இப்போது சொந்தக்காலில் நிற்பதாயும், மகளின் படிப்புக்கு மட்டுமே சிறிய உதவி இப்போது வழங்கப்படுவதாயும் சொல்லி முடித்தார் உதவியாளர் பிரமீளா. சரி பாக்கலாம் என்றது மனது.

வானும் ஒரு கரடு முரணான பாதையில் போய்க்கொண்டிருந்தது. ஒரே துள்ளலும் குலுக்கமும்தான். பக்கத்திலிருந்த உதவியாளர் கலை இண்டைக்கு உங்களுக்கு மசாஜ் தேவையில்லை நல்லா நித்திரை வரும் இரவுக்கு எண்டார். ம் ம் என்றபடி இருந்தால் ஒரு வாசலில் வான் நின்றது. உள்ளே போகும்போது இரு புறமும் தோட்டம் ஒரு பக்கம் கச்சான் + உளுந்து, மறுபக்கம் குண்டு மிளகாய். ரொம்ப உறைக்குமே என்று நினைத்தபடி உள்ளே போனால் புன்சிரிப்புடன் இந்திரா காந்தி.

துப்பரவான காணி, அழகான தோட்டம், வீட்டுத் தேவைக்கான அனைத்து பயிர்களும் அங்கே. சேர்ந்து வந்த உதவியாளர்களும் எதோ தமது குடும்ப உறவினர் போல அவருடன் பழகினார்கள். அடிக்கடி வந்து போகின்றார்கள் என்பது அப்படியே தெரிந்தது. அதுவும் அந்த வாலு கலை அங்கேயிருந்த விளாம்பழம், மாங்காய் என்று ஒவ்வொண்டாய் கடித்து குதறியதை பார்க்க இவங்களுக்கு இந்த வளவு ரொம்ப பரிச்சயமானது என்பதும் நிச்சயமானது.

இந்திரா காந்தியும் இன்று வயல், கச்சான், உளுந்து, மிளகாய், கத்தரிக்காய் என்று தனியாளாக விளைவித்து, அதன் வருமானத்தில் தானும் வாழ்ந்து மகளையும் படிக்க வைப்பதை பார்க்க பிரமிப்பா இருந்தது. ஆனாலும் சுற்றத்தவர், உறவினர்களின் தொடர்பு இல்லை என்று கூறும்போது அவரின் கண்கள் கரைந்தது.

மகளைப் படிக்க வைச்சு நான் நல்லா வருவன் அப்ப வருவானுக இவங்கள், அப்ப வைக்கிறன் ஆப்பு என்கிறார்.

அப்படி போடம்மா அரிவாளை!

உறுதியும் உழைப்பும் இருந்தால் எப்படியும் முன்னே வரலாம் என்பதுக்கு உதாரணம் நீங்கள்.

Image may contain: plant, flower, outdoor and nature

Image may contain: plant, tree, outdoor and nature

Image may contain: grass, tree, plant, sky, outdoor and nature

எனது நோக்கம் நல்லது என்றே நினைக்கின்றேன்.
இப்பதிவுகளை நிர்வாகம் அனுமதித்தால் மிகுதியை நாளை தொடர்கின்றேன்.

இன்னொருவனின் பார்வையில் - "தமிழ் நோர்வே உதவி அமைப்பு" 3

அடுத்துச் சென்றது பாரதிபுரத்திலுள்ள இருளாயி வீட்டிற்கு. இவர் விபத்தில் ஒரு கையை இழந்திருந்தார். கணவருக்கோ கண்பார்வை மிகவும் குறைவானது. ஆனாலும் இந்த வயதிலும் புன்முறுவல் பூத்தபடி வாழும் அன்பான உள்ளங்கள் - தம்பதிகள் நீடூழி வாழ எனது வாழ்த்துக்கள். இவர்களின் ஒரு மகளுக்கு 3 பிள்ளைகள். கணவன் மனைவியில் ஒருவர் இறந்துவிட மற்றயவர் மறுமணம் செய்ய அநாதரவான நிலையில் 3 பிள்ளைகள். அவர்களைப் பொறுப்பெடுத்து எப்படியும் வளர்த்தே தீருவேன் என்ற திடகாத்திரத்துடன் ஒரு கையாய் நிற்கிறார் இருளாயி. இந்த வேளையில் தமிழ் நோர்வே உதவி அமைப்பின் உதவியும் கிடைக்க தனி மனுஷியாய் ஒற்றைக்கையுடன் கச்சான் செய்கையில் ஈடுபட்டு + கச்சான் செய்கை இல்லாத காலங்களில் கச்சானை வாங்கி வறுத்து பைகளில் போட்டு கோவில்களிலும் விற்று வருகின்றார்.

இந்த வயதில் இவ்வளவு திடமான பெண்ணை பார்ப்பது அரிது. கதைக்குள்ளே நாங்களும் எங்களுக்கு எங்கையம்மா கச்சான் என்றதும் உள்ளே ஓடிப்போய் ஒரு தட்டில் கொண்டு வந்தார். அதில் பழுதாகிய, அல்லது சப்பிகள் ஒன்றுமே இருக்கவில்லை. கேட்டுப் பாத்தோம், அதே புண் முறுவலுடன் சப்பிகள் எல்லவற்றையும் நான் பொறுக்கி எடுத்துப் போட்டுத்தான் விப்பன் + காசு கொடுத்து வாங்குபவனுக்கு தரம் குறைய கொடுக்கக் கூடாது என்கிறார்.

தட்டில் இருந்ததை கொறித்தபடியே பத்தையும் பலதையும் பேசினோம். தற்போது இங்கு மழை ஆரம்பமாகி இருப்பதால் அடுத்த போகத்திற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுள்ளார்.

ஏழ்மையிலும் + உடல் தளர்ந்த வயதிலும் + ஒரு கை இழந்த நிலையிலும் தானே கச்சானை உற்பத்தி செய்து தானே கோவில்களில் அதுவும் தரமான கச்சானை விற்று தனது சொந்த உழைப்பில் இன்று தன்னிறைவாக வாழும் இவர் தனது ஒரு தேவையை மட்டுமே முவைத்தார். அதுவும் கச்சானுக்கு இப்போதெல்லாம் தனியாக தண்ணீர் பாச்ச முடியவில்லையாம். யாராவது தானியங்கி தண்ணீர் செலுத்தி (Springler ) அன்பளிப்பு செய்வார்களா என்பதே.

இந்த அசாத்திய தன்னம்பிக்கைக்குரிய இருளாயிக்கும் அவருக்கான ஆரம்ப உதவியை செய்த தமிழ் நோர்வே உதவி அமைப்புக்கும் நிறுவனம் SEEDS இற்கும் வணக்கங்கள் பல.

 

ஒளியிழந்த எமது சமூகத்தில் இப்படி எத்தனையோ ஒளிக்கீற்றுகள் - ஆமா இவருக்கு யார் இருளாயி என்று பெயர் வைத்தது.

 

Image may contain: one or more people and people standing

Image may contain: tree, grass, plant, sky, outdoor and nature

 

 

Edited by ஜீவன் சிவா

இன்னொருவனின் பார்வையில் - "தமிழ் நோர்வே உதவி அமைப்பு" 4

 

அடுத்து சிவாஜினி - கணேசபுரம்

இவரும் இவரது கணவரும் முன்னாள் போராளிகள். சிவாஜினி தனது ஒரு காலையும் கணவர் கண்பார்வையையும் இழந்திருந்தார். கணவருக்கு கண்ணாடியினூடாக சிறிது பார்வை மிச்சம் இருக்கின்றது. இவர்களுக்கு பிறந்த குழந்தைகூட முள்ளிவாய்க்கால் அவலத்தில் அதிக கஷ்டங்களுடன் பிறந்ததே. இவர்களுக்கு தமிழ் நோர்வே உதவி அமைப்பு கோழி வளர்ப்பதற்கும் நெற்செய்கை செய்யவும், சிறு பயிர்ச்செய்கைக்கு உதவியிருந்தார்கள். இன்று இவர்களும் ஓரளவு தன்னிறைவு பெற்றவர்களாகவே உள்ளார்கள்.

ஆட்டக்காரி

இதுதான் அவர்களது மூலப் பயிர்ச்செய்கை. பெயரைக் கேட்டதும் என்னை அறியாமலே சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டேன். இது வேறு ஒன்றுமில்லை ஒரு வகை நெல்லின் பெயர்தான். மழைக்காலம் தொடங்கி விட்டதால் அடுத்த போகம் ஆரம்பமாகி இருந்தது. இடை இடையே உளுந்து, புடலங்காய், பாவற்காய், கரும்பு, வெள்ளை கௌப்பி என பலவிதமான பயிர்களையும் இடையே வளர்க்கிறார்கள். அது மட்டுமில்லை, அமைத்துக் கொடுக்கப்பட்ட கோழி கூட்டினுள் பல விதமான கோழிகள். இனங்களின் பெயர்கள் ஞாபகமில்லை - சாதாரண கோழிகள், நீண்ட கழுத்துடன் கழுத்தில் மயிரே இல்லாத கோழிகள், காலிலும் மயிருள்ள கோழிகள் என்று அவை பலவகை. கூட்டைத் திறந்து விட்டதும் ஆனந்தமாக பறந்தன - கூட்டுக்குள் முட்டைகள்.

என்ன இடர் வந்தாலும் துணிந்து முன்னேற எமக்கு முன்னைய வாழ்க்கை கற்றுக் கொடுத்திருக்கிறது என்கிறார் சிவாஜினி. காலை இழந்திருந்தாலும் பொருளாதார ரீதியில் சொந்த காலில் நிற்கும் இவர்களுக்கும், ஆரம்ப உதவி செய்த அமைப்புக்கும் அதனை நெறிப்படுத்தி, வழிகாட்டலையும் மேற்கொள்ளும் சீட்ஸ் அமைப்புக்கும் நன்றிகள் பல.

Image may contain: plant, tree, grass, outdoor and nature

Image may contain: outdoor and nature

Image may contain: bird, outdoor and nature

இன்னொருவனின் பார்வையில் - "தமிழ் நோர்வே உதவி அமைப்பு" 5

இறுதியாக கட்டயபுரத்திலுள்ள சரிதா வீடு

இறுதி போரில் முள்ளிவாய்க்காலில் காயமுற்ற சரிதாவும் கணவரும் மூன்று பிள்ளைகளும் ஒரு சிறிய வீட்டில். கணவர் முறிகண்டியில் கச்சான் வியாபாரம். சரிதாவும் தன் பங்கிற்கு கச்சான் பயிரிட்டு கணவருக்கு உதவி செய்து வருகிறார். போரில் ஏற்பட்ட காயங்கள் உடல் முழுவதும், காலின் உள்ளே இருந்து இன்னமும் வலி கொடுக்கும் ஷெல் சிதறல்கள், இழக்கப்பட்ட ஒரு கண் பார்வை இது சரிதா.

விடாப்பிடியாக மூன்று பிள்ளைகளையும் படிப்பித்தே தீருவேன் என்ற வைராக்கியம் அவர் கண்களிலும் தெறிக்கிறது. அம்மாவின் வைராக்கியத்துக்கு ஏற்ப பிள்ளைகளும். மூத்தவர் உயர்தரம் படிக்கின்றார். நாங்கள் வெளியே புறப்படும் போதுதான் பாடசாலையில் இருந்து வந்திருந்தார். வெள்ளை வெளீரென சுத்தமான உடை - அங்கேயும் அம்மாவின் உறுதி தெரிந்தது. இவர் சாதாரண தர பரீட்சையில் 6A 3B பெற்றிருக்கிறார். அடுத்தது மகள் - அவரும் மிகவும் கெட்டிக்காரி என்று சொல்கையில் பெருமிதம் சரிதாவின் முகத்தில் பொங்கி வழிந்தது. சரி கடைக்குட்டி என்ன செய்யுது என்று கேட்ட போது வீட்டுக்குள் போனவர் கையில் கேடயம் முதல் படங்கள் வரை கொண்டு வந்தார். என்னவென்று பார்த்தால் புலமைப் பரீட்சையில் இந்த வருடம் 177 புள்ளிகள் எடுத்திருக்கிறார் (அதாவது 88,5%).

தமிழ் நோர்வே உதவி அமைப்பு மூலம் சில உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் கோழி வளர்த்தல், பப்பாசிக் கண்டுகள் போன்றவையும் உள்ளடக்கம். பப்பாசிக் கண்டுகள் சில மாதங்களிலேயே காய்க்கும் ஹைபிரிட் இன வகை. சில மரங்களைக் காட்டி இது காய்க்குதில்லை என்றார், நானும் இதில் அனுபவப்பட்டதால் எந்த வகை பூ இருந்தால் காய்க்கும், எது காய்க்காது என்று சொல்லிக் கொடுத்தேன். கடைசியாக சில நாட்களின் முன்னர் 25 கிலோ சந்தைக்கு கொண்டு சென்றேன் என்றார் மறுபடியும் அதே பெருமிதத்துடன்.

சிறிய வீடு, முன்பக்கச் சுவரில் கரும்பலகை (வைட் போர்டு) மழைக்கு இங்கிருந்து படிப்பது கஷ்டம், 3 தகரம் வேண்டி ஒரு தட்டி இறக்கணும் என்றவர் பின்னர் இல்லை உள்ளேயும் படிக்கலாம் என்றார். வாழ்க்கையில் இலகுவாக முன்னேற படிப்பே ஒரே வழி என்ற குரல் கேட்க்கிறது - அவர் அதை செவிமடுக்கவேயில்லை. ஆனால் அதை அவர் ஏற்கனவே உணர்ந்திருந்தார்.

உங்கள் எதிர்காலம் பிரகாசமாக தெரிகிறது. உங்கள் பிள்ளைகள் மேலும் சாதிக்க எனது வாழ்த்துக்கள்.

திரும்பி வந்து கொண்டிருக்கும்போது முன்னால் ஒரு உழவு இயந்திரம். அதன் கலப்பைகள் கழன்று வீதியை உழத்தொடங்கின. நானும் அடப்பாவி தோட்டத்தை உழச் சொன்னா வீதியை உழுகிறானே என்றேன். அதற்குப் பதில் எங்களுடன் வந்த உதவியாளர் ஒருவரிடமிருந்து அழகாகவே வந்தது - வீதி ஏற்கனவே உழுத மாதிரித்தான் இருக்குது அப்புறம் ஏன் மறுபடியும் உழுகின்றான் என்று.

நிறைவான சந்திப்புகள்.

இறுதியாக சீட்ஸ் நிறுவன நடத்துனர் வாசுகியுடன் ஒரு கலந்துரையாடல் என்று இனிதே நிறைவடைந்தது நேற்றய நாள்.

இதில் பணம் சேர்த்து உதவி செய்யும் தமிழ் நோர்வே உதவி அமைப்புக்கு சொல்லும் நன்றிகளைவிட பல மடங்கு நன்றிகள் சீட்ஸ் நிறுவனத்திற்கும் அதன் பணியாளர்களுக்கும். உதவித் திட்டங்களை மேற்பார்வை செய்து, பயனாளர்களின் தேவை அறிந்து அவர்களுக்கு தேவையான அறிவுரைகளையும், அதற்குரிய வழிகாட்டலையும் செய்திராவிட்டால் சில வேளை இந்த திட்டமும் பிசுபிசுத்துப் போய் இருக்கலாம். ஆனால் சீட்ஸ் நிறுவன ஊழியர்கள் பயனாளர்களை சந்திக்கும்போது ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் போன்றே பழகுகிறார்கள், பயனாளர்களின் தேவை, அவர்களது குடும்ப, பொருளாதார சமூகப் பிரச்சனைகள் போன்றவை உதவியாளருக்கு அத்துப்படி. அப்படி என்றால் இவர்கள் அடிக்கடி சந்திக்கிறார்கள், வழி காட்டுகிறார்கள், உதவி செய்கிறார்கள், அன்புடன் பழகுகிறார்கள் என்றுதானே அர்த்தம்.

மறுபடியும் தமிழ் நோர்வே உதவி அமைப்புக்கும் SEEDS நிறுவனத்துக்கும் அங்குள்ள உதவியாளர்களுக்கும் நன்றிகள்.

இவை யாவும் எனது கருத்துக்களே 
யார் மனமும் புண்பட விரும்பவில்லை - அப்படி புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

Image may contain: plant, food and outdoor

 

Image may contain: plant, outdoor and nature

Image may contain: plant, tree, outdoor and nature

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஜீவன் உங்கள் தகவல்களுக்கு,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.