Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புக்கெட் - சிறுகதை

Featured Replies

புக்கெட் - சிறுகதை

 

அராத்து - ஓவியங்கள்: ரமணன்

 

சின்னச் சின்னச் சண்டை பெரிதாகி, குளிரூட்டப்பட்ட உணவுவிடுதியில்  மன்னிப்பு கேட்டு, அவள் தங்கி இருக்கும் விடுதியின்  வாசலில் செய்வதறியாது காலில் விழுந்தான். நான்கைந்து பெண்கள் வேடிக்கை பார்த்தனர். காலை மெள்ள இழுத்துக்கொண்டு நடந்து உள்ளே சென்றுவிட்டாள். தொழப் பாதமில்லாது, சற்றுநேரம் நெடுஞ்சாண்கிடையாகக் கிடந்தான். தெருமண்ணை நக்கிப்பார்த்தான். சிறுவயதில் விபூதி சாப்பிட்டது, இப்போது இந்த நகரத்தின் நூற்றாண்டுகால மண் ஒரு விநோதமான சுவையை உணரச்செய்தது. அழுகை வந்தது. அழுகையினூடே சிரிப்பும் வந்தது. மெதுவாக எழுந்தான். வெட்கம், மானம் எல்லாம் எங்கோ போயிருந்தன. தன்னை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களை வெறுமையாகப் பார்த்தான். அவர்கள் பார்வையைத் திருப்பிக்கொண்டார்கள். மண்டியிட்டுக் காம விளையாட்டுகளில் காதலுடன் ஈடுபட்ட ஒருத்தியின் காலில் விழுந்தும் தட்டிவிட்டுச் செல்கிறாள். ஆட்டோவை அழைத்தான்.

இந்தச் சம்பவம் முடிந்ததும் அவன் மதுபான விடுதிக்கு வந்தான். இந்தச் சம்பவத்தையும், அவன் மன உணர்வையும் அப்படியே சொன்னான். ஆனால், ஒரு பியர் முடிக்கும்வரை நாங்கள் இருவரும் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. ஒரு பியர் முடித்ததும் முதல் பத்தியில்  இருப்பதைச்  சொன்னான். நீட்டமாகத்தான் சொன்னான். நான்தான் சுருக்கிக் கொடுத்திருக்கிறேன்.

ஒரு பியர் முடித்ததும், அடுத்தடுத்து வரவழைத்தான். நானும் மூன்று பியர் குடித்துப் போதையாகிவிட்டேன். அதனால் அதற்குமேல் அவன் என்ன பேசினான் என்பது எனக்குத் தெரியாது. இந்தக் கதையையும் என்னால் தொடர முடியாது. மன்னித்துக்கொள்ளுங்கள். நான் விடைபெற்றுக்கொள்கிறேன்.

62p1.jpg

ரக்கடிச்சதால் உண்டான `தலை பாரத்துடன்’ வேலைக்கு வந்தான். வேலையில் ஏதும் ஓடலை. இதை டீ குடிக்கச்சொல்லோ என்கிட்ட சொன்னான். எனக்கும் அவனுக்கும் பெருசா ஃப்ரெண்ட்ஷிப் கிடையாது. எப்பனா பேசுவான். அவனை ஹெச்.ஆரு கூப்பிட்டார். `தம்பி, இன்னியோடு நீ போயிடு’ன்னார். திக்குன்னு இருந்திச்சு அவனுக்கு. அப்டியே மூலையை முறைச்சுப் பார்த்துக்கிட்டே இன் பண்ணியிருந்த சட்டையை வெளியே எடுத்து வுட்டுகிட்டுப் போயிட்டான்.

லோ, என் பேர் கலாதரன். எனக்கு இப்போ மண்டைக்குள்ளே ஒரே குடைச்சலா இருக்கு. சாதாரணமா யாராச்சும் சிரிச்சுப் பேசிக்கிட்டாலே அவங்களைப் பார்த்து வெறியாகுது. என் ஆளும் போயிட்டா. என் வேலையும் போச்சு. ஏதாவது ஜோடியைப் பார்த்தா, உஷ்ணம் ஆகுது. இப்ப எதுக்குடா  சிரிச்சுச் சிரிச்சுக் குலவிக்கிட்டி ருக்கீங்க? இன்னும் கொஞ்சநாள்ல பிரிஞ்சு தவிக்கப்போறீங்கன்னு கறுவிக்கிறேன். ஆனாலும் அவங்களை நினைச்சும் சோகம் ஆகிடுறேன். காலையில தூங்கி எழுந்ததுமே படபடப்பு, பயம் வந்துடுது. ஆக்சுவலா இந்த பயமும் படபடப்பும்தான் என்னை எழுப்பியே விட்டுடுது. தூக்கம் வருமான்னு பயத்தோடத்தான் தூங்கப்போறேன். எந்த உண்மையான பிரச்னையும் இல்லாமலேயே பயமா இருக்கு. பயம் ஏதும் இல்லைன்னு எனக்கே தெரிஞ்சாலும் மூளை, பயத்தை உண்டுபண்ணிகிட்டே இருக்கு. அதெல்லாம் ஒண்ணுமில்லைனு மூளை மூலமா மூளைகிட்டயே சொல்லிக்கிட்டிருக்கேன். இருந்தாலும், படபடப்பா இருக்கு. இந்த ஃபீலிங்ல இருந்து வெளியே போயிடணும்னு இருக்கு. ஆக்சுவலா எனக்கு செத்துடலாம்னு இருக்கு. ஆனா, இப்படித் தோன்றறதுக்குக்  காரணம்  மூளையோட வேதியல் சமமற்றத்தன்மைன்னு எனக்குத் தெரியறதால சாகாமத் தள்ளிப்போட்டுட்டிருக்கேன். இருந்தாலும் மூளையோட இந்த வேதியல் சமமற்றத்தன்மை  எனக்குக் கொடூரமா இருக்கிறதால, `செத்தா தேவலாம்’னு தோணுது. தூங்கி எழுந்தாலே பயம். தூக்கம் வருமான்னு பயம். எல்லாத்துலயும் படபடப்பு. உலகத்துல எல்லோரும் நல்லா இருக்காங்க, எனக்கு மட்டும்தான் பிரச்னைன்னு இருக்கு.நான் முடிவு பண்ணிட்டேன். இந்த வாழ்க்கை வேணாம். செத்துடுறேன். ஆனா, ஜாலியா சாகணும். எனக்குத் தெரிஞ்சு ஆன் அரைவல் விசா வசதி உள்ள பக்கத்து நாடு தாய்லாந்து தான். சுலபமா போலாம். அங்கே போய் யாருக்கும் தெரியாம அநாதைப் பொணமா செத்துடுறேன். அங்கே போனா, மனசு மாறும்னு இல்லை. இந்த வேதனை வேணாம். என்னால தாங்க முடியலை. என் மூளை `இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை’ன்னு சொன்னாலும், நான் சாகத்தான் போறேன். டிசைடட். மாத்திக்கவே மாட்டேன்.

பாங்காக் விமானநிலையத்தில் எல்லோரும் ஜாலியாக இறங்கினார்கள். ஒருவன் மட்டும் எதையோ பறிகொடுத்ததுபோல இறங்கினான். என் விமானப் பணிப்பெண் சர்வீஸில் பாங்காக்கில் இப்படி ஒருவன் இறங்கிப் பார்த்தது இல்லை. அவனுக்கும் முகமன் சொல்லி வாழ்த்துத் தெரிவித்தேன். கண்டுகொள்ளாமல் தளர்வாக நடந்து சென்றுவிட்டான். அவனைப் பார்க்கையில் சுடுகாட்டுப் பிணம், தானே நடந்து போவதுபோல இருந்தது.

பாங்காக் விமானநிலையமே கொண்டாட்ட மாக இருந்தது. ஆனால், என் மனம் தானாக உருவான கொண்டாட்ட மனநிலையையும் எதிர்த்தது. திடீரென குட்டைப்பாவாடை, நிக்கருக்குக் கீழே உள்ள வெண் தொடைகள் மூளை முழுக்க ஆக்கிரமித்தன. வெள்ளைக் கால்களுக்கும் தொடைகளுக்கும் இடையில் நான் பாம்பாக ஊர்ந்துபோவதுபோலத் தோன்றியது. கொஞ்ச நேரம்தான், வெள்ளைத் தொடைகளும் வாளிப்பான கால்களும் பார்பி பொம்மையைப் போல ஆகின. ஆன் அரைவல் விசா எடுத்துக் கொண்டு, புக்கெட் விமானத்தைப் பிடிக்க அதன் வாயிலைத் தேடிச் சென்றேன். விமானத்துக்கு இன்னும் மூன்றுமணி நேரம் இருந்தது. பசித்தது. பசியிலேயே இருக்க வேண்டும் எனத் தோன்றியது. ஆனாலும் மண்டை `ஏதேனும் செய்... ஏதேனும் செய்’ எனப் பரபரத்துக்கொண்டே இருந்ததால், ஒரு பர்கர் வாங்கிச் சாப்பிட்டேன். அடுத்த பத்தே நிமிடத்தில் அது வயிற்றை அடைத்துக்கொண்டது. நிறைய வாயுவை உருவாக்கிவிட்டது. செயற்கையான ஏப்பத்தை உருவாக்கிக்கொண்டே அமர்ந்திருந்தேன். ஏப்பத்தினூடே இருக்கும்போது கண்ணயர்ந்தேன். மூடிய இமைகளுக்குள் விழித்திருந்தேன். காது மட்டும் தூங்கிவிட்டது என நினைக்கிறேன். ``விமானம் கிளம்பும் அறிவிப்பு’’ என்று ஒருவன் எழுப்பிவிட்டான்.

னக்கு இந்தியர்களே பிடிக்காது. ஆஸ்திரேலியாவிலிருந்து கிளம்பி ஆசியச் சுற்றுலா அடித்துக்கொண்டிருக்கிறேன். புக்கெட் செல்வதற்கு ஜன்னலோர  இருக்கை கிடைத்தது என ஜாலியாக இருந்தால், ஓர் இந்தியன் அநாகரிகமாக  இருக்கைக் கைப்பிடியை ஆக்கிரமித்துக்கொண்டான். அவனுடைய முட்டியால் என்னை இடித்து எரிச்சல் ஊட்டிவிட்டான். அவனுடைய முகத்தைப் பார்க்கவே பிடிக்கவில்லை. வெறுமை படர்ந்திருந்தது. விமானத்தின் கூரையை உற்றுப்பார்த்தபடி அமர்ந்திருந்தான். இவன் புக்கெட்தான் செல்கிறானா? நடுவானில் குதித்து விடுவானா? விமானத்தை கடத்தப்போகிறானா? நான் அவன் பக்கமே திரும்பாமல், ஜன்னல் பக்கம் என் பார்வையைப் பதித்துக்கொண்டேன்.

``ஏய்! உன்னைத்தான்டா, எங்கே போகணும்னுதானே கேட்டேன். அதுக்கு ஏன்டா முறைச்சுப் பார்த்துக்கிட்டே போற? புக்கெட் ஏர்போர்ட்டிலிருந்து எங்கே போகணும் னாலும் டாக்ஸிலதான்டா போகணும்’’ எங்கே போக வேண்டும் என்று கேட்டதற்கு ஏதும் சொல்லாமல் நடந்தே விமானநிலையத்தைவிட்டு வெளியேறுகிறான். இந்தியன், இந்த இந்தியர்களே இப்படித்தான். விசித்திரமானவர்கள். இதோ எனக்கு ஆள்கள் வந்துவிட்டார்கள்; நான் பதாங்க் பீச் வரை ஓட்டிச்செல்ல வேண்டும்.

நான்  இந்த நாட்டில் பிறந்து வளர்ந்ததிலிருந்து, இன்றுதான் ஒருவன் லிஃப்ட் கேட்கிறான். கொடுக்கலாமா, வேண்டாமா? இந்தியன்போல இருக்கிறான். `பெண்கள், இந்தியர்களிடம் ஜாக்கிரதையாக இருந்துகொள்ள வேண்டும்’ எனச் சொல்லியிருக்கிறார்கள். வேண்டாம், ஆக்ஸிலேட்டரை மிதிப்போம்.

ன் நண்பனை விமானநிலையத்தில்  விட்டுவிட்டு பைக்கில் திரும்பச் சென்று கொண்டிருந்தேன். ஒருவன் தளர்ச்சியாக நெடுஞ் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தான். வழக்கமாக, நெடுஞ்சாலையில் இங்கு யாரும் நடப்பதில்லை. `யார்ரா இவன்?’ என வேடிக்கையாக யோசித்துக்கொண்டே ரியர்வியூ மிரரில் பார்த்தேன். வாளிப்பாக இருந்தான். என் உடல் சிலிர்த்துக்கொண்டது. பைக்கை வேகமாக ஓட்டி, யூ டர்ன் அடித்துப் பறந்தேன். அவனைப் பக்கவாட்டில் பார்த்தேன். தயங்கி நிற்பதும், மெள்ள நடப்பதுமாக இருந்தான். முறுக்கி அடித்து மீண்டும் ஒரு யூ டர்ன் போட்டு, அவன் அருகில் வந்து நிறுத்தினேன்.

“வேர் யூ வான்ட் டு கோ?”
“பதாங்க் பீச்.’’
“ஐ கேன் டிராப் யூ , கெட் இன்.”

62p2.jpg

ஏறிக்கொண்டான். பின்னால் ஒரு பை மட்டும் மாட்டியிருந்தான். பைக்கில் கொண்டுபோய் பதாங்க் பீச் அருகே இறக்கிவிட்டுவிட்டு, ``எங்கே போக வேண்டும்? எங்கே தங்கப்போகிறாய்?’’ என்றேன். வறட்சியாகச் சிரித்தான்.  ``நோ ப்ளேஸ். ஐ ஸ்டே அட் பீச்’’ என்று சொல்லிச் சிரித்தான்.  எனக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது. அவன் ஏதோ சிக்கலில் இருக்கிறான் எனப் புரிந்தது. ``எனக்கு ஓர் அறை இருக்கிறது. என்னுடன் தங்கிக்கொள்கிறாயா?’’ என்று கேட்டேன். `ம்’ எனத் தலையசைத்தான். நான் அவனிடம் நேர்மையாக இருக்க விரும்பினேன். நான் “கே” என்றேன். ``ஓஹோ... ஓகே’’ என்றான். ``ஆனால், நான் `கே’ இல்லை’’ என்றான். ``சரி, உறவு எல்லாம் வேண்டாம்.  ஆனால், பெண்களால்கூட கொடுக்க முடியாத சுகம். நான் உனக்குத் தருவேன்’’ என்றேன். ``ஸாரி பிரதர், ஐ யம் நாட் இன்ட்ரஸ்டட்’’ என்று அவசரமாகக் கூறிவிட்டு, முன் நடக்க ஆரம்பித்தான். பைக்கை சைடு ஸ்டாண்ட் போட்டு விட்டு, அவனை நெருங்கி ``உனக்கு விருப்பம் இருந்தால் என்றுதான் கூறிவிட்டேனே, இதற்கும் நீ என்னுடன் தங்குவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நீ என்னுடன் தங்கிக்கொள்ளலாம். நான் உன்னை அந்த வகையில் எந்தத் தொந்தரவும் செய்ய மாட்டேன்’’ என்றேன். தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு என்னைப் பின்தொடர்ந்தான். அவனை வீட்டில்விட்டு ரெஃப்ரெஷ் செய்துகொள்ளச் சொன்னேன். மீண்டும் அழைத்துக்கொண்டு போய் பதாங் பீச்சில் விட்டேன். நான் என்னுடைய ரெஸ்டா ரென்ட்டுக்குச் செல்வதாகச் சொன்னேன். ``இங்கேயே சுற்றிக்கொண்டிரு.  இரவு 12 மணிக்கு வந்து அழைத்துக்கொள்கிறேன்’’ என்றேன். தலையசைத்தான். ``பணம் இருக்கிறதா?’’ என்றேன். `இருக்கிறது’ என்பதாகத் தலையை ஆட்டினான். 500 பாட்டை எடுத்து அவன் கையில் திணித்தேன்.  மறுக்காமல் வாங்கிக்கொண்டான். நான் என்னுடைய சிறிய ரெஸ்டாரென்ட்டுக்குப் பறந்தேன். போய்தான் ஆள்களை ஒழுங்குபடுத்த வேண்டும். இரவுதான் எனக்கு முக்கியமான வியாபாரம். இரவு மட்டும்தான்.

ஷ்யாவிலிருந்து நேற்று இரவுதான் நானும் என் தோழியும் வந்து இறங்கினோம். இரவு நெடுநேரம் ஆகிவிட்டபடியால் இன்றுதான் பதாங் பீச் வர முடிந்தது. ஓர் இந்தியன் கடலை நோக்கிச் செல்வதைப் பார்த்தேன். என் தோழியை அழைத்துச் சொன்னேன். ``அவன் கடலை நோக்கிச் செல்வது எனக்கு ஏனோ விபரீதமாகப்படுகிறது’’ என்று. அவள் ``அதெல்லாம் ஒன்றுமில்லைடி’’ என்று கூறி, என்னை அங்கிருந்து விலக்கிச் சென்றாள். ஒரு மரத்தடியில் அமர்ந்தோம். இரண்டு சீன இளைஞர்கள் எங்களை நெருங்கி `ஹாய்’ சொல்லிப் பேச ஆரம்பித்தார்கள். பணம் செலவழித்து எங்களை மயக்கி, படுக்கைக்கு அழைத்துச் செல்வதுதான் நோக்கமாக இருக்க முடியும். ஆங்கிலம் தெரியாததால், மொபைல் ஆப் மூலம் மொழிபெயர்த்துக் காட்டி கம்யூனிகேட் செய்தபடி இருந்தார்கள். அப்போதுதான் கவனித்தேன், கடலை நோக்கிச் சென்றவன் எங்களுக்குச் சற்று அருகே நின்றுகொண்டு எங்களை வெறிக்கப் பார்த்தபடி இருந்தான்.

நான் அவனிடமிருந்து கவனத்தை விலக்கி, சீனர்களின் மொபைலைப் பார்க்க ஆரம்பித்தேன். இரவு குடிப்பதற்கும் டின்னருக்கும் அழைக்கிறார்கள். நான் பேரழகி, நல்ல உடற்கட்டும்கூட. நான் விர்ஜின் இல்லைதான். ஆனால், மொழிகூட தெரியாமல் எப்படிப் பொதுவில் சந்தித்த அன்றே படுக்கைக்கு அழைக்கத் திட்டம் போட முடிகிறது? முகத்தில் ஏதும் பாவங்கள் காட்டாமல், மொபைலைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

ர்ப்பரிப்பு இல்லாத கடலையும், துள்ளலாகத் திரியும் ஜோடிகளையும், ஆர்ப்பாட்டமாகக் கூத்தடிக்கும் இளைஞர்களையும் கண்டதும் என் மனம் சுருங்கத் தொடங்கியது; அழுகை வர ஆரம்பித்தது. அழுதுவிட்டேன். தனி ஆளாக நிற்கிறேன். உல்லாசமான இடத்துக்கு வந்தும் என்னால் உல்லாசமாக இருக்க முடியவில்லை. உலகமே உல்லாசமாக இருக்கிறது. `கடலில் விழுந்து உடனடியாகச் செத்துப்போ’ என, எனக்குள்ளிருந்து உத்தரவு வந்தது. இடுப்பளவு ஆழம்வரை சென்றுவிட்டேன். இன்னும் ஒரு கிலோமீட்டர் உள்ளே போக வேண்டும்போல இருந்தது. யதேச்சையாகத் திரும்பிப் பார்த்தால், இரண்டு சீனர்கள் இரண்டு ரஷ்யக்காரிகளை கரெக்ட் செய்துகொண்டிருந்தார்கள். எனக்கு உள்ளம் கொதித்தது. நாட்டுப்பற்றுக் கிளர்ந்து எழுந்தது. நாம் போய்ப் பேச வேண்டும் எனத் தோன்றியது. பிறகு, `கொஞ்சநேரம் கழித்து செத்துக் கொள்ளலாம். எங்கே போய்விடப்போகிறது உயிர்?’ என நினைத்தபடி, அவர்கள் அருகே சென்றேன். அந்த ரஷ்யக்காரி, என்னை ஒரு கணம் பார்த்துவிட்டு சீனர்களிடம் உரையாடலைத் தொடர்ந்தாள். என்னைப் பார்த்துவிட்டாள். அது போதும் எனக் காத்திருந்தேன்.

ந்தச் சீனர்களைத் கழட்டிவிட்டு, நாங்கள் இருவரும் எழுந்துகொண்டோம். இந்தியனைத் தாண்டித்தான் இப்போது நாங்கள் போக வேண்டும். நிச்சயம் அவன் எங்களிடம் பேசுவான்.

62p3.jpg

ஷ்யக்காரிகள் எழுந்துகொண்டனர். என்னை நோக்கித்தான் வருகிறார்கள். நிச்சயம் இவர்களோடு பேச வேண்டும். வாழ்க்கையில் கடைசிக் கடைசியாக இவர்களையாவது கவர முடிகிறதா எனப் பார்ப்போம். குறைந்தபட்சம்  ஒரு டின்னர், கொஞ்சம் ஒத்துவந்தால் இவர்களோடு தங்க முடியுமா எனப் பார்க்க வேண்டும். கரெக்ட். ஆனால், யாருடன் இரவைக் கழிப்பது? இருவருமே அழகாக இருக்கிறார்கள். இருவருடனும் இரவைக் கழிக்கலாம். உலகம் சுற்றும் ரஷ்யக்காரிகளுக்கு இதெல்லாமா பெரிய விஷயம்? ஏதோ எல்லாம் நல்லபடியாக நடந்து முடிந்தால், நாளைக் காலைகூட செத்துக் கொள்ளலாம்.

நான் நினைத்ததுபோலவே எங்களிடம் பேசினான். சில கேள்விகளுக்குப் பதில் அளித்தேன். இவனும் `டின்னர் சாப்பிடலாமா?’ என்றுதான் தூண்டில் போட்டான். வேறு தீவுக்குப் பயணிக்கப் போவதாகச் சொல்லி மறுத்துவிட்டேன். அடிப்பட்டவன்போல முகம் சுருங்கிவிட்டது. மிகவும் பதற்றமாகக் காணப்பட்டான். பாவமாக இருந்தது. நான் அவனுக்கு ஏதேனும் செய்ய விரும்பினேன். ``யூ ஆர் லுக்கிங் ஸ்மார்ட். வீ ரியலி மிஸ் யூ’’ என்றேன். பிறகு அவனைத் தாண்டிச் செல்ல ஆரம்பித்தேன்.

ழகாகப் பேசினாள். அவளது இடையும், அந்த ஹெல்த்தியான தோலின் ஷைனிங்கும், அவளது செக்ஸியான வடிவமும் என்னைப் பாடாய்ப் படுத்தின. `சாவதற்குள் ஒரே ஒருமுறையாவது’ என மனம் தவித்தது. அழகாகப் பதில் அளித்துவிட்டுச் சென்றுவிட்டாள். தளர்ந்து அமர்ந்தேன். பசித்தது. வெகுவாகப் பசித்தது. பசியில் சாவதற்குத் தெம்பு இல்லை. ``முதலில் சாப்பிட லாம்’’ என நகர்ந்தேன். ஓர் உணவகத்தில் அமர்ந்து சாப்பிட்டேன். சாப்பிடச் சாப்பிட சோகத்திலும் பதற்றத்திலும் எதுக்களித்துக் கொண்டு வந்தது. தண்ணீர் குடித்துக் குடித்து ஒரு வழியாகச் சாப்பிட்டு முடித்தேன். பங்களா ஸ்ட்ரீட் வழியாக நடந்து சென்றேன். தெரு முழுக்க உற்சாகம் பொங்கி வழிந்தபடி இருந்தது. செக்ஸ் ஷோக்கள், விதவிதமான பப்கள், பார் அண்ட் ரெஸ்டாரென்ட்டுகள் எனக் களைகட்டியது. தெரு முழுக்க வண்ண விளக்குகளாலும், வண்ண வண்ண மனிதர்களாலும் நிரம்பி வழிந்தது. பல கிளப்களில் இருந்து எழுந்த வேகமான பீட்கள்கொண்ட இசை கலந்துகட்டித் தெரு முழுக்க மயக்கமூட்டியது. லேடி பாய் ஒருத்தி என் கன்னத்தைத் தடவிச் சென்றாள்.

ன்னத்தைத் தடவுவது என் பிசினஸ் டெக்னிக். ஒருவன் ஆர்வமாக இருக்கிறானா இல்லையா என ஒரு செகண்டில் யூகித்துவிடுவேன். இந்த இந்தியன் கன்னத்தைத் தடவியதும், அவன் கண்ணீர் என் கைகளில் பட்டது. இந்த உற்சாகமான பங்களா ஸ்ட்ரீட்டில் ஒரு மனிதன் அழுதுகொண்டு நடக்கிறானா? திடுக்கிட்டு அவனைத் திரும்பிப் பார்த்தேன். வேறொருவன் என் இடையைத் தட்டி அழைத்தான். அழுபவனை மறந்து , `ஹாய்’ எனச் சொல்லியவாறு இடையைத் தடவியவனின் கன்னத்தைத் தடவினேன். ``டூ தெளஸண்ட் பாட்’’ என்றேன். ``லேடி பாய்க்கு, இரண்டாயிரம் பாட்டா’’ என்று நக்கல் அடித்தான். ``போடா’’ என அவனைத் துரத்தினேன். `கண்ணீர்விட்டவனைப் பின்தொடர்ந்திருக்கலாமே’ என ஆதங்கப்பட்டபடி, அவனைத் தேட ஆரம்பித்தேன்.

ந்த லேடி பாயின் கை என் கன்னத்தில் பட்டதும்தான், எனக்கே தெரிந்தது நான் அழுதுகொண்டிருக்கிறேன். இந்தக் கொண்டாட்டமான தெருவில் மிகச் சோர்வாக உணர்ந்தேன். மீண்டும் தெருவழியாக நடந்து பீச்சை அடைந்து படுத்துவிட்டேன். பீச்சில் ஜோடியாக அமர்ந்து பியர் குடித்துக்கொண்டிருந்தார்கள். சிணுங்கல்கள், முத்தங்கள். கண்களையும் காதுகளையும் பொத்திக்கொண்டேன். இப்போதே செத்துவிடலாம்தான். இருட்டாக இருக்கிறதே. இருட்டில் எப்படிச் சாவது?

ரெஸ்ட்டாரென்ட்டை உதவி ஆள்களிடம் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, இந்தியனைத் தேடி பீச்சுக்கு வந்தால் ஆளைக் காணோம். `ஓடியிருப்பான். எதற்கும் பார்க்கலாம்’ என பீச் உள்ளே நடந்தால், தூங்கிக்கொண்டிருக்கிறான். எழுப்பினேன். எழுந்தான். முதலில் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை, விழித்தான். பின் எழுந்துகொண்டான். சோர்வாகப் புன்னகைத்தான். ``ஏதேனும் கிளப்புக்குப் போகலாமா?’’ என்றேன். `வேண்டாம்’ எனத் தலையசைத்தான். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துவந்து, ஒரு சிகரெட் கொடுத்தேன். பற்றவைத்துக்கொண்டோம். நான் பைக்கில் சாய்ந்து நின்றுகொண்டேன். அப்போது ஒரு தாய்ப்பெண் பைக்கில் சென்றாள். இவன் அவளை ஆர்வமுடன் உடனே நோக்கினான்.

ரு தாய்ப்பெண் ஸ்டைலாக பைக் ஓட்டிக்கொண்டு சென்றாள். நான் என்னை மீறி அவளைப் பார்த்தேன். அவள் என்னைப் பார்த்துக் கை ஆட்டியதுபோல் இருந்தது. எனக்கான இளவரசியே என்னை நோக்கிக் கை ஆட்டியதுபோல் இருந்தது.

பைக்கில் செல்கையில் ஒரு தாய் ஆளும் ஓர் இந்தியனும் நின்றுகொண்டிருந்தனர். நான் ``சர்வீஸ் வேண்டுமா?’’ என்று கேட்கும்விதமாகக் கையை அவர்களை நோக்கி ஆட்டினேன்.

வள் கையை ஆட்டியதும், ``அந்தப் பொண்ணுகூட போறியா?’’ என்றேன் என் இந்திய நண்பனிடம்.

ரு கணம் இளவரசி கனவு கலைந்து, விலைமாதுவிடமா என்று எனக்கு ஏமாற்றம் ஏற்பட்டாலும், ஏனோ அவளின் கை அசைவு அவ்வளவு உற்சாகத்தைத் தந்தது. புக்கெட்டே கலர்ஃபுல்லாக மாறியதுபோலத் தோன்றியது. இரவு 12 மணியிலிருந்து பின்னோக்கிச் சுற்றி இரவு ஒன்பது மணியில் போய் நின்றார்போல இருந்தது. மீண்டும் ஒன்பது மணி முதலான படாங், பங்களா ஸ்ட்ரீட் வாழ்வை வாழலாம்போல இருந்தது. இவனது ரெஸ்ட்டாரென்ட்டிலேயே இணைந்து வேலை செய்யலாம் எனத் தோன்றியது. இன்னொரு ரெஸ்ட்டாரென்ட் போடலாம். இந்திய உணவுகளைச் சமைக்கலாம். நடமாடும் ஊர்தி உணவகங்கள் திறக்கலாம். ஹோட்டலை லீஸுக்கு எடுத்து நடத்தலாம். இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு பேக்கேஜ் டூர் போடலாம் என்றெல்லாம் எண்ணம் றெக்கை கட்டிப் பறந்தது. தாய் நண்பனிடம், ``போறேன்’’ என்றேன்.

62p4.jpg

வளை அழைத்து இந்திய நண்பனிடம் கைக்காட்டினேன். அவள் இயல்பாக அவனுடன் ஒட்டிக்கொண்டாள். ``லவ் யூ டார்லிங்’’ என்றாள்.

`லவ் யூ டார்லிங்’’ என்று சொல்லி, அவனை இயல்பாக்க முயற்சித்தேன். அவன் இதயத்துடிப்பை உணர முடிந்தது. அளவுக்கு அதிகமாக இருந்தது.

`லவ் யூ டார்லிங்’ என்று அவள் சொன்னது, எனக்கு இதமாக இருந்தது. ஓர் ஒட்டுதல் வந்தது. இவள் அழகாகவும் ஸ்டைலாகவும் இருந்தாள். கால் கேர்ள் இயல்புடன் கமர்ஷியலாக இல்லை. அன்பாக இருந்தாள். `இவள் கால் கேர்ள் இல்லை’ என்று சொல்லிக்கொண்டேன்.

ரண்டு நண்பர்களும் ஏதோ பேசிக்கொண்டனர். எங்கள் நாட்டு ஆள் கொஞ்சம் தாய் `பாட்’டை எடுத்து இந்தியன் சட்டை பாக்கெட்டில் வைத்தான். எனக்கு எல்லாமே வித்தியாசமாக இருந்தன. இவர்களை இயல்பாக்க நான் ``முதலில் ஒரு கிளப்புக்குப் போய் பியர் குடிக்கலாமா?’’ என்றேன்.

``இல்லை. நீங்கள் இருவரும் செல்லுங்கள்’’ என்று சொல்லிவிட்டு, நான் என் பைக்கை நோக்கி நடந்தேன்.

தாய் நண்பனை, கையைப்பிடித்து இழுத்து நிறுத்தினேன். மனதில் ஏதோ பொங்கியது. அவனை அணைத்து அவன் உதட்டில் ஒரு முத்தமிட்டேன். ``நீயும் வா’’ என்றேன்.

ந்தியன் என் உதட்டில் முத்தமிட்டது, எனக்கு பேரன்பாகப்பட்டது. நாங்கள் மூவரும் ஒரு கி்ளப்புக்குச் சென்றோம்.

தாய்ப்பெண் பைக் ஓட்ட, அவள் பின்னால் அமர்ந்து செல்வது எனக்கு சொர்க்கமாக இருந்தது. மூவரும் ஒரு கிளப்புக்குள் நுழைந்தோம். உற்சாகமான இசை எங்களை வரவேற்றது. தாய்ப்பெண், என் இடையைப் பற்றி மெள்ள ஆடியபடியே நுழைந்தாள். அந்த எனக்கான இரவு ஆரம்பமானதுபோல உணர்ந்தேன். என் தாய் நண்பன் தனியாக ஒரு மேசைக்குச் சென்றான்.

பியர் குடித்துக்கொண்டிருக்கும்போது அவ்வப்போது இந்தியனை மென்மையாக முத்தமிட்டேன். என் இடையில் அவனது கையைச் சுற்றிவைத்துக்கொண்டேன். அவனது தலையை எனது மார்பில் சாய்த்துக்கொண்டேன். என் மொபைலைப் பார்த்தான். எடுத்துக் காட்டினேன். என் மூன்று வயது மகள் சிரித்தபடி மொபைல் ஸ்க்ரீனில் இருந்தாள். அவ்வளவு மகிழ்ச்சியுடன் இந்த இந்தியன் என் மகளை முத்தமிட்டான். அவளின் தந்தைகூட இப்படி முத்தமிட்டதில்லை.

வனுக்குத் திடீரென காதலியின் நினைவு வந்தது. உடனே அவளைச் சென்று பார்க்க வேண்டும்போல் இருந்தது. `இன்னொருமுறை சமாதானப்படுத்தினால்தான் என்ன?’ எனத் தோன்றியது. உடனே அவளைத் தேடி ஓட வேண்டும். அவளின் கால்களில் சரணடைய வேண்டும். `எனக்கு எல்லாமே நீதான் என அழுதுகொண்டே கட்டிப்பிடித்துக்கொள்ள வேண்டும்’ என்று மனம் அடித்துக்கொண்டது. அவன் என்னுடைய கால்களில் விழுந்தும் உதறிவிட்டு அன்று ஹாஸ்டலுக்குள் வந்துவிட்டேனேயொழிய, இப்போது அவனுக்கு இப்படியெல்லாம் தோன்ற வேண்டும் என மனதுக்குள் ஆசையுடன் ஓட்டிப்பார்த்துக் கொண்டே தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்கிறேன்.

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.