Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துப்பறிவாளன் திரை விமர்சனம்

Featured Replies

 

card-bg-img
 

விஷால் எப்போதெல்லாம் தன் திரைப்பயணத்தில் கொஞ்சம் சறுக்கலில் இருக்கின்றாரோ அப்போதெல்லாம் புதிய முயற்சிகளை கையில் எடுப்பார். யாரும் எதிர்ப்பாராத கூட்டணியை அமைத்து ஹிட் கொடுப்பார். அப்படித்தான் அவன் இவன், பாண்டியநாடு படங்கள் அமைந்தது, அதேபோல் தற்போது யாரும் எதிர்ப்பாராத விதமாக மிஷ்கினுடன் கூட்டணி அமைத்து துப்பறிவாளன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளிவர, துப்பறிவாளன் மூலம் விஷால் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டினாரா? பார்ப்போம்.

கதைக்களம்

விஷால் ஒரு தனியார் துப்பறிவாளர். போலிஸே முடிக்க முடியாத வழக்குகளை விஷால் மிக எளிதாக முடிக்கின்றார். அப்படியிருக்கு ஒரு கஷ்டமான வழக்கை தேடி அலைகின்றார்.

அந்த நேரத்தில் ஒரு பள்ளி மாணவன் எங்கள் வீட்டு நாய் இறந்துவிட்டது, அது உடலில் இந்த குண்டு இருந்தது என கொடுக்க, அந்த வழக்கை விஷால் கையில் எடுக்கின்றார்.

அதே சமயத்தில் சிம்ரனின் கணவர் மின்னல் தாக்கி இறக்கின்றார். ஆனால், அந்த மின்னல் இயற்கையாக வந்தது இல்லை என விஷால் ஒரு கட்டத்தில் கண்டுப்பிடிக்கின்றார்.

இந்த நாய் மரணத்தில் தொடங்கிய வழக்கு, மின்னல் தாக்கி இறந்தவர், இதை யார் செய்தார்கள், எதற்காக செய்தார்கள் என்பதன் முடிச்சுகள் ஒவ்வொன்றையும் நிதானமாகவும் சுவாரசியமாகவும் மிஷ்கின் அடுத்தடுத்து அவிழ்க்கின்றார்.

படத்தை பற்றிய அலசல்

விஷால் கணியன் பூங்குன்றனாக வாழ்ந்தே உள்ளார், உடல் தான் விஷால், உயிர் கொடுத்தது மிஷ்கின் தான். நடை, உடை, பெண்களிடம் பேசுவது என அனைத்திலும் மிஷ்கின் மட்டும் கண்ணில் தென்படுகின்றார். சவாலான வழக்கை தேடி அலைந்து பிறகு அந்த வழக்கு அவர் கழுத்தையே இறுக்க அதிலிருந்து அவர் வெளியேற செய்யும் வேலைகள் என ‘அட துப்பறிவாளர்கள் உண்மையாகவே இப்படித்தான் இருப்பார்களா’ என்று கேட்க வைக்கின்றது.

பிக்பாக்கெட்டாக வரும் அனு இமானுவெல், விஷால் மேற்பார்வையில் இருந்து அவர் வீட்டிலே வேலை செய்து, கிளைமேக்ஸில் வினயிடம் போனை திருடி விஷாலிடம் கொடுக்கும் காட்சியில் மனதை நெகிழ வைக்கின்றார்.

ஹாலிவுட் படமாக ஷெர்லாக் ஹோம்ஸில் எப்படி துப்பறிவாளருக்கு உதவியாளராக ஒருவர் வருவாரோ அதேபோல் தான் பிரசன்னா. விஷாலுக்கு உதவியாக வந்து கிளைமேக்ஸில் அவர் கொடுக்கும் துப்புக்களை கண்டுப்பிடித்து உதவும் காட்சியில் பிரசன்னா செம்ம.

மிஷ்கின் படம் என்றாலே கொஞ்சம் ஸ்லோவாக இருக்கும் என்பார்கள், அது ஸ்லோ இல்லை, நிதானம், இந்த கதைக்கு இப்படிப்பட்ட ஒரு நிதானமான திரைக்கதை அவசியம் தான், கதாபாத்திரங்களை அவர் வடிவமைக்கவில்லை, உருவாக்கியேவிட்டார்.

அதிலும் பாக்யராஜ் என்று பத்து பேர் சொன்னால் தான் தெரியும், அப்படி ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் கலக்கியுள்ளார். நீண்ட வருடங்களாக ஒரு ப்ரேக்கிற்காக காத்திருந்த வினய்க்கு இனி வில்லன் வேஷம் குவியலாம். அவர் ஸ்கிரீனில் வந்து காபி கேட்டால் நம்மை பயம் தொற்றிக்கொள்கின்றது.

ஆண்ட்ரியாவும் வழக்கம் போல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் மிகப்பெரும் பலமே சண்டைக்காட்சிகளும், இசையும் தான், சண்டைக்காட்சியை வடிவமைத்தவருக்கு கண்டிப்பாக அடுத்த வருடம் பல விருது காத்திருக்கின்றது.

அரோலின் பின்னணி இசை படத்துடன் நம்மையும் கதைக்குள் இழுத்து செல்ல மிகவும் பயன்பட்டுள்ளது.

க்ளாப்ஸ்

நடிகர், நடிகைகள் பங்களிப்பு, குறிப்பாக வினய், பாக்யராஜ், ஆண்ட்ரியா ஆகியோர் சிறப்பாக தங்கள் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

படத்தின் பல காட்சிகள் மிகவும் உணர்வுப்பூர்வமாக உள்ளது. பாக்யராஜ் மரண படுக்கையில் செய்யும் விஷயம், அனு இமானுவெல் விஷாலை விட்டு பிரியும் தருணம் மிகவும் நெகிழ்ச்சிகரமாக உள்ளது.

ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை.

பல்ப்ஸ்

இந்த கதைக்கு இப்படிப்பட்ட நிதானமான திரைக்கதை வேண்டும் என்றாலும், அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் கொஞ்சம் பொறுமை இருக்குமா என்று தெரியவில்லை.

மொத்தத்தில் கணியன் பூங்குன்றன் வழக்கை வெற்றிகரமாகவும், நெகிழ்ச்சிகரமாகவும் முடித்துள்ளார்.

  • தொடங்கியவர்

திரைப்பட விமர்சனம்: துப்பறிவாளன்

 
துப்பறிவாளன்
 
திரைப்படம் துப்பறிவாளன்
   
நடிகர்கள் விஷால், பிரசன்னா, வினய், அனு இமானுவேல், ஆண்ட்ரியா, பாக்யராஜ், நரேன், சிம்ரன்
   
ஒளிப்பதிவு கார்த்திக் வெங்கட்ராமன்
   
இசை அரோல் கெரோலி
   
இயக்கம் மிஷ்கின்

ஆர்தர் கொனான் டாயிலின் சாகாவரம் பெற்ற பாத்திரமான ஷெர்லக் ஹோம்ஸ் சாகசங்களை அடிப்படையாகக் கொண்ட படம் என்று இயக்குனர் மிஷ்கின் ஏற்கனவே சொல்லிவிட்டார். படத்தின் துவக்கத்திலும் ஆர்தர் கொனான் டாயிலுக்கும் நன்றி தெரிவிக்கிறார். ஆக படத்தின் துவக்கத்திலேயே ஷெர்லக் ஹோம்ஸ் பாணியிலான ஒரு துப்பறியும் கதைக்கு நம்மை தயார் செய்துவிடுகிறார் மிஷ்கின்.

கணியன் பூங்குன்றன் (விஷால்) ஒரு தனியார் துப்பறிவாளர். ஷெர்லக்கிற்கு வாட்ஸனைப் போல கணியனின் நண்பர் மனோ (பிரசன்னா). சுவாரஸ்யமான வழக்கு ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கும் கணியன், நாய் ஒன்று சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு ஒன்றை விசாரிக்க ஆரம்பிக்கும் போது, அது மிகப் பெரிய சதிவலையின் ஒரு கண்ணி என்பது புரிய ஆரம்பிக்கிறது.

கூலிக்காக கொலைகளைச் செய்யும் மிகப் பெரிய கும்பல் ஒன்று நாயின் கொலைக்குப் பின்னால் இருப்பது தெரியவருகிறது. அந்தக் கும்பலைச் சேர்ந்த ஒவ்வொருவராகக் கண்டுபிடித்து, தலைவனை நோக்கி கணியன் நகர, நகர பல கொலைகள் நடக்கின்றன. கணியனுக்கும் ஆபத்து ஏற்படுகிறது.

துப்பறிவாளன்

தமிழில் ஏற்கனவே பல துப்பறியும் கதைகள் வந்திருந்தாலும் அப்படியே ஷெர்லக் ஹோம்ஸ் பாணியில் உருவாக்கப்பட்ட முதல் படம் இதுவாகத்தான் இருக்கக்கூடும். அந்தக் கதைகளில் வாட்ஸன் இருப்பதைப் போலவே துப்பறிவாளருக்கு ஒரு நண்பர், கதைகளில் வரும் கொலைகளில் வித்தியாசமான விஷங்களைப் பயன்படுத்துவது, கொலை என்று தெரியாமல் இருப்பதற்காக விபத்துகளைப் போல கொலைகளை ஏற்பாடு செய்வது என பல சுவாரஸ்யமான அம்சங்கள் படத்தில் தென்படுகின்றன.

தவிர, துப்பறிவாளரின் வீட்டை ஷெர்லக் ஹோம்ஸின் அறையைப் போல வடிவமைத்திருப்பதும் கூடுதல் சுவாரஸ்யம். வெவ்வேறு விதமான ரசாயனங்களைப் பயன்படுத்துவது, விஷத்தைப் பயன்படுத்துவது, மின்னலை உருவாக்கிக் கொலை செய்வது என ஒரு விக்டோரியா காலத்து துப்பறியும் கதைக்குத் தேவையான அம்சங்கள் படத்தில் நிறையவே இருக்கின்றன.

 

ஷெர்லக் ஹோம்ஸ் கதைகளில் ஃபிலிப் ஆண்டர்சன் என்று ஒரு பாத்திரம் வரும். ஃபிலிப் ஒரு தடயவியல் அறிஞர். ஆனால், ஷெர்லக்கிற்கும் ஃபிலிப்பிற்கும் ஆகாது. பல தருணங்களில் உதவி செய்ய மறுப்பார். இந்தப் படத்திலும் தடயவியல் துறையில் பணியாற்றுபவர் வேண்டாவெறுப்பாக கணியனுக்கு உதவுகிறார். இவையெல்லாம் ஒவ்வொரு தருணத்தில் படத்தோடு நம்மை ஒன்றிப்போக வைக்கின்றன.

ஆனால், படத்தின் மிகப் பெரிய பிரச்சனை காட்சிகளிலும் சில பாத்திரங்களிலும் இயல்பு தன்மையே இல்லாமல் இருப்பதுதான். கதாநாயகனாக வரும் கணியன் பல காட்சிகளில் தாறுமாறாக நடந்துகொள்கிறார். வேறு சில பாத்திரங்களும் சில சந்தர்ப்பங்களில் இதுபோல நடந்துகொள்கிறார்கள். மிஷ்கினின் படங்கள் எல்லாவற்றிலும் இருக்கும் பிரச்சனை இது.

துப்பறிவாளன்

பாடல்கள், நகைச்சுவை காட்சிகள் இல்லாத இந்தப் படம் சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு மேல் நீள்கிறது. பல காட்சிகளின் நீளம் படத்தின் வேகத்தையும் விறுவிறுப்பையும் குலைக்கிறது. காட்சிகளை அடுக்கியிருக்கும் விதம் சில சமயங்களில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். புத்திசாலித்தனத்தை வைத்து புதிரை விடுவிக்கும் ஒரு கதையின் உச்சகட்டத்தில், கதாநாயகன் வில்லனை அடித்து வீழ்த்துவதுபோல படம் முடிவது பொருத்தமாக இல்லை.

கணியன் பாத்திரத்தில் வரும் விஷால், முன்பே குறிப்பிட்டதைப் போல நாடகத்தனத்துடன் கூடிய நடிப்பையே வெளிப்படுத்துகிறார். வில்லனாக வரும் வினய், பாக்கியராஜ் ஆகியோர் அவர்களுடைய பாத்திரத்திற்கு கூடுதல் மதிப்பு எதையும் சேர்க்கவில்லை.

 

கணியனின் நண்பர் பாத்திரத்தில் வரும் பிரசன்னாதான் படம் முழுக்க இயல்பாக வரும் ஒரே நடிகர். ஹீரோவின் கூடவே வரும் பாத்திரம் என்றாலும், இந்த இயல்புதன்மையின் காரணமாகவே ரசிக்க வைக்கிறார் அவர்.

கதாநாயகியான அனு இமானுவேல், வில்லியாக வரும் ஆண்ட்ரியா ஆகியோருக்கு மற்றும் ஒரு படம். படத்தின் இசையமைப்பாளர், கலை இயக்குனர் ஆகியோர் குறிப்பிட்டு பாராட்டத்தக்கவர்கள்.

இந்தப் பிரச்சனைகளையெல்லாம் மீறி, துப்பறியும் கதைகளை ரசிப்பவர்களுக்கு படம் மிகவும் பிடிக்கக்கூடும்.

தவிர, தமிழ் சினிமாவில் இந்த பாணி துப்பறியும் கதைகளுக்கு ஒரு துவக்கமாகவும் இருக்கக்கூடும்.

http://www.bbc.com/tamil/arts-and-culture-41270347

  • தொடங்கியவர்

மிஷ்லாக் ஹோம்ஸ்கினின் வியூகம் ஈர்க்கிறதா? - துப்பறிவாளன் விமர்சனம்

 

கொலைகளை நிகழ்த்திவிட்டு, அதை 'விபத்துகள்' போல மாற்றிவிடும் சதிகாரக் கும்பலைத் ‘துருப்பு’களை வைத்துத் துப்பறியும் துப்பறிவாளன் கதை.

சிம்ரனின் வீட்டில் நடக்கிறது விபத்து என்ற பெயரில் ஒரு கொலை. அடுத்த காட்சியில் போலீஸ் அதிகாரி ஒருவர் காவல்துறை அலுவலத்தில் மர்மமான முறையில் இறக்கிறார். ஒரு சுவாரஸ்யமான வழக்கு கையில் சிக்காதா என்று காத்திருக்கும் துப்பறிவாளர் கணியன் பூங்குன்றனிடம் (விஷால்) ஒரு சிறுவன் தன் நாய் கொல்லப்பட்ட கேஸைக் கொண்டுவருகிறான். இதுமட்டுமல்லாமல் வெவ்வேறு சம்பவங்களுக்கு இடையிலான முடிச்சுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்த்து, கொலையாளிகளைப் பிடிக்கும் கதையை ஷெர்லாக் ஹோம்ஸ் பாணி பாதி, தன் பாணி மீதி என்று படமாக்கியிருக்கிறார் மிஷ்கின். படத்தின் முக்கால்வாசி வரை சஸ்பென்ஸை மெயின்டெய்ன் செய்தவகையிலும் கதையோட்டத்திலும் பிரமாண்டத்தைக் கொண்டுவந்த வகையில் வெல்டன் மிஷ்கின்! 

 

துப்பறிவாளன்

அறை முழுக்க புத்தகங்கள்; தன் மூளைக்குச் சவால் விடும் புதிருக்காக நாட்கணக்கில் காத்திருப்பது; உணவுகளை வெறுப்பது என்று விஷாலின் கேரக்டர் முழுக்க ஷெர்லாக்கின் சாயல்.இப்படி ஷெர்லாக் பாதி மிஷ்கின் மீதி என இவன் மிஷ்லாக் ஹோம்ஸ்கினாக செயல்படுகிறான்.  பொதுவாக வெத்து பஞ்ச் டயலாக் பேசி, குத்துப்பாட்டுக்கு ஆடிக்கொண்டிருந்த விஷாலுக்கு இது வித்தியாசமான சினிமாதான். சின்னச் சின்ன க்ளூக்களை வைத்துக்கொண்டு கொலையாளிகளை நெருங்குமிடம் புத்திசாலித்தனம். ஆனால் எதிரில் அமர்ந்திருப்பவர் யார் என்றாலும் அவரைப் பற்றிய தகவல்களைச் சகட்டுமேனிக்குப் புட்டுப்புட்டு வைப்பதும் அவர் எதற்குத் தன்னைப் பார்க்க வந்தார் என்பதை அவர் சொல்வதற்கு முன்பே சொல்வதும் சலிப்பு. ஓவர் புத்திசாலித்தனம் உடம்புக்கு ஆகாது சாரே! அதேபோல் கதாநாயகியை விஷால் ட்ரீட் செய்யும் இடங்கள் எல்லாம் நெருடல். வித்தியாசமான கதாபாத்திரம் என்பதற்காக இப்படிக் கிறுக்குத்தனங்களா?

விஷாலின் நண்பனாக பிரசன்னா. அவரின் கேரக்டரை ஜாதாவின் 'கணேஷ் வசந்த்' பாத்திரங்களில் வசந்த் பாத்திரம் என்று சொல்லலாம். இவருக்கு படம் முழுவதும் ஹீரோவுடன் டிராவல் செய்யும் கேரக்டர். சென்னை டு பிச்சாவரம் டிராவல் மட்டுமே செய்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் அவருக்கு கொஞ்சம் முக்கியத்துவம். மற்ற காட்சிகளில் விஷால் என்ன செய்கிறார், ஏன் செய்கிறார் என்று பிரசன்னாவுக்கே புரிவதில்லை. 

'அஞ்சாதே பிரசன்னாவின் வாட்ச் மேனரிசம்போல், ' ஒரு கப் காபி ' என கிளின் ஷேவ் வினயின் மேனரிசம் ஷார்ப். வில்லத்தனத்தில் ஸ்மார்ட்டாக அசத்துகிறார்.  மலையாளத்தில் கவனம் ஈர்த்த அனு இமானுவேல் அழகு. ஆனால் தொடக்கக்காட்சியிலும் (அவருக்கான) இறுதிக்காட்சியிலும் தவிர வேறெங்கும் அவருக்குப் பெரிதாக வேலை இல்லை. அதுவும் கையில் துடைப்பத்தைக் கொடுத்து விஷால்  அவரை உள்ளே தள்ளிக் கதவைச் சாத்துவதும் அவரும் ஏதோ 'மிஸ் யுனிவர்ஸ்' பட்டம் கிடைத்த ஃபீல் காட்டுவதும்....சத்தியமா முடியல்ல!

துப்பறிவாளன்

பாண்டியராஜன், ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரா என மூத்த நடிகர்கள் வரிசையில் மிஷ்கினின் பார்வை பாக்யராஜ் பக்கம் விழுந்திருக்கிறது. 'அதில ஒரு சமாச்சாரம் என்னன்னா...' என்று எப்போதும் நிறையப் பேசும் பாக்யராஜைக் குறைவான வசனங்களுடன் பார்க்கும்போது வித்தியாசமாகத்தான் இருக்கிறது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்குப் பாக்யராஜின் பாத்திரம் கனமாக இல்லையே. ஆண்ட்ரியா சாகசம் செய்து அசத்துகிறார். ஆனால் அவருக்கும் அந்த மொட்டைத்தலை பாத்திரத்துக்கும் என்ன மாதிரியான உறவு, அவர் இறந்ததும் ஆண்ட்ரியா ஏன் ஃபீல் செய்கிறார், பாக்யராஜ் கொல்லப்பட்டதற்கு அவர் ஃபீல் செய்தாரா இல்லையா என்றெல்லாம் எந்த டீட்டெய்லிங்கும் இல்லை. 

ஒரு டிடெக்டிவை நம்பி ஒட்டுமொத்த காவல்துறையும் விஷால் பின்னால் போவது, போலீஸிடம் இருநது ஆண்ட்ரியா தப்புவது... காதலி இறக்கும் காட்சியில் விஷால் அழுவது எல்லாம் மிஷ்கினிஸம். ஜான் விஜய், ஆண்ட்ரியா , ஷாஜி, 'ஆடுகளம்' நரேன்,தலைவாசல் விஜய், சிம்ரன், ஜெயப்பிரகாஷ், அபிஷேக், ரவி மரியா எனத் தெரிந்த முகங்கள் ஏராளம். அடுத்தடுத்துக் கதையை நகர்த்துவதற்கு அணிலைப்போ ல் உதவியிருக்கிறார்கள்.

 படத்தில் அந்த சிறுவன் “எல்லா டிடெக்டிவும் தொப்பி போட்டிருந்தாங்க... நீங்கதான் பேர் மட்டும் போட்டு சிம்பிளா இருந்தீங்க” என்கிறான். ஆனால் சென்னை வெயிலிலும், ஸ்கார்ஃப் அணிந்து, தொப்பி போட்டுக்கொண்டுதான் சுற்றுகிறார்  துப்பறிவாளர் ஷெர்லாக் பூங்குன்றன்.  அவ்வளவு மெனக்கெட்டு விஷாலின் அறையை 221B பேக்கர் ஸ்டிரீட்டாக (ஷெர்லாக்கின் அறை எண்) மாற்ற முயற்சி செய்திருக்கும் மிஷ்கின், செஸ் போர்டை எப்படி சரியாக வைப்பது என்றும் கவனித்திருக்கலாம்.

துப்பறிவாளன்

மிஷ்கின் டிரேட்மார்க் ஃபிலிம் மேக்கிங் இதிலும் தொடர்கிறது. கேமரா கோணங்கள் மற்றும் காட்சிக்கோர்வைகள்  மிரட்டல். யுத்தம் செய் படத்தில் வரும் 'ப்ரிட்ஜ் ஃபைட்' காட்சி; அஞ்சாதேவில் வரும் மருத்துவமனை அடியாள் சண்டை; பாணியில் மிஷ்கினின் ஸ்டன்ட் நுண்ணறிவு இதிலும் நேர்த்தி. மிஷ்கினின் சொல்கேட்டு நகர்ந்திருக்கிறது கார்த்திக் வெங்கட் ராமின் கேமரா. ‘இதுக்கு நீ பிக்பாக்கெட்டாவே இருந்திருக்கலாம்’ என  அனுவை பார்த்து விஷால் கலங்கும்போது, ‘இப்பயும் நான் பிக்பாக்கெட்தான்’ என்று அவர் சொல்லும் இடம், க்ளைமாக்ஸில் சிறுவனுக்கு வினய் சொல்லும் பதில்... இப்படி சில இடங்களில் மிளிர்கிறார் வசனகர்த்தா மிஷ்கின்.

பேமென்ட் கேட்டு வரும் அடியாளை கொலை செய்யதை எல்லாம் டீடெயிலிங் பண்ணிய மிஷ்கின், வினய்யின் பின்னணி தகவல்களை விஷால் கண்டறிந்ததை வெறும் வசனங்களில் கடத்துவதும் எல்லா கதாபாத்திரங்களும் மிஷ்கினை அப்படியே நகலெடுத்து இருப்பதும்  போர். ஆனால் காலில் தொடங்கும் காட்சிகள், கும் இருட்டு போன்ற மிஷ்கினின் க்ளிஷேக்கள் இதில் குறைவு என்பது ஓர் ஆறுதல். 

ஒரு காட்சியில் , பிக் பாக்கெட் அடிக்கும் இரு சிறுவர்கள் மாட்டிக்கொள்ள அங்கிருக்கும் பொதுமக்கள் அவர்களை அடிப்பார்கள். அதை தட்டிக்கேட்கும் விஷால், ' போலீஸே அடிச்சாலும் தப்புதான் என்பார்'. பின்னர் விஷாலுடன் மஃப்ட்டியில் இருக்கும் ஒரு போலீஸ் , ஷாப்பிங் மாலின் சிசிடிவி ஃபுட்டேஜை  அதே போலீஸ் பாணியில்தான் அடித்துக் கேட்கிறார்.  கண் தெரியாத அம்மா; என் அப்பா பிக் பாக்கெட்; குடிகார சொந்தக்காரர்; கோமாவில் இருக்கும் மனைவி என ஏகத்துக்கும் திணிக்கப்பட்ட மெலொ டிராமா கதாபாத்திரங்கள் அலுப்பு. அதிலும், போலீஸில் மாட்டிக் கொள்ளும் ஒருவன் (பைக் சேஸிங்கில் ஹார்லி டேவிட்சனில் நாற்பதில் செல்லும் அளவுக்கு நல்லவர்) ஜப்பானிய  பாணியில் (ஹரகிரி) வயிற்றை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்வதெல்லாம் டூ மச் ஜப்பான் சினிமாயிஸம்.

துப்பறிவாளன்

கடைசியில் விஷால் துப்பறிந்து சொல்வது வினயின் பின்னணியைத்தானே தவிர பாக்யராஜ், ஆண்ட்ரியா மற்றும் ஐவர் கேங் எப்படி சேர்ந்தது, அவர்களின் பின்னணி என்ன என்ற எந்த விவரங்களும் இல்லையே?

படத்தின் ஆரம்பித்திலேயே ஷெர்லாக் ஹோம்ஸ் கதாப்பாத்திரத்திற்கும், அதன் எழுத்தாளர் சர் ஆர்தர் கொனான் டாய்லுக்கு நன்றி சொல்லியதற்கு பாராட்டுக்கள். படத்தின் மிகப்பெரிய பிளஸ் அரோல் கொரேலியின் இசை. பல காட்சிகளின் வீரியத்தை பலமடங்கு கூட்டுகிறது. பிசாசுவைப் போல், இதிலும் தன் வயலின் கரங்களால் அழகுபடுத்தியிருக்கிறார். 

 

பலப்பல கேள்விகள் இருந்தாலும் ஸ்டைலான மேக்கிங்கில் நீண்டநேரம் சஸ்பென்ஸைத் தக்கவைத்தவகையில் கவர்கிறான் 'துப்பறிவாளன்'. 

http://cinema.vikatan.com/movie-review/102271-thupparivaalan-film-review.html

  • கருத்துக்கள உறவுகள்
On 9/14/2017 at 7:51 PM, நவீனன் said:

மிஷ்லாக் ஹோம்ஸ்கினின் வியூகம் ஈர்க்கிறதா? - துப்பறிவாளன் விமர்சனம்.

....

பலப்பல கேள்விகள் இருந்தாலும் ஸ்டைலான மேக்கிங்கில் நீண்டநேரம் சஸ்பென்ஸைத் தக்கவைத்தவகையில் கவர்கிறான் 'துப்பறிவாளன்'. 

http://cinema.vikatan.com/movie-review/102271-thupparivaalan-film-review.html

 

201708071440528220_1_Thupparivalan-visha

 

'காற்று வெளியிடை' என்ற படத்தை 'மணிரத்னம் இயக்கியதாயிற்றே..!' என்று இங்கே திரையில் வெளியிட்ட அன்றே குடும்பத்தோடு சென்று பார்த்து வெறுத்தே போச்சுது..! இனி தமிழ்ப் படங்களை இணையத்தில் பார்த்துவிட்டுதான் திரையரங்கிற்கு சென்று பார்க்கவேண்டுமெனெ முடிவில் இருக்கிறேன்..

நேற்று 'துப்பறிவாளன்' படத்தை இணையத்தில் பார்த்தோம்.

படம் தெளிவாக இருந்தாலும், ஒலி சரியாக இல்லையாததால் பல கொலைகளுக்கான காரணத்தை விளக்கும்போது ஒன்றுமே தெளிவாக புரியவில்லை.. படம் மெதுவாக நகர்ந்தாலும் நிச்சயம் திரையரங்கில் சென்று பார்க்கலாம்.

இறுதியில் விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளில் வரும் 'பிச்சாவரம்' சதுப்பு நிலக்காடுகள் பழைய நினைவுகளை மீட்டுச் சென்றது.

மாலை திரையரங்கில் சென்று இப்படம் பார்க்கலாமென உள்ளேன்.

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ்கன்

நேற்று வெள்ளிக்கிழமை வழமை போல் பகலுணவு பிரியாணியயை வெட்டிவிட்டு நானும் இதை இணயத்தில் பார்த்தேன். 

மிஷ்கின் படங்களை பார்த்தால் 2 , 3 நாட்களுக்கு  அதன் பாதிப்பு இருக்கும். இதுவும் அதேபோல்தான். சண்டைகாட்சிகள் / பின்னனி இசை அருமை. 

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பகல் 2 மணிக் காட்சியில் மொத்தம் 5 குடும்பங்கள் மட்டுமே படத்திற்கு வந்திருந்தனர்.. இணையத்தில் பார்ப்பதற்கும் திரையரங்கில் டிஜிட்டல் தொழிற்நுட்பத்தில் பார்ப்பதற்கும் மிகுந்த வேறுபாடுகள்..

குறிப்பாக இந்த 'திரில்லர்' படத்தை திரையரங்கில் பார்த்தால் மட்டுமே முழுமையாக ரசிக்க முடியும்..(சில லாஜிக் ஓட்டைகளை தவிர்த்து..!).

படத்தை மிக உன்னிப்பாக கூர்ந்து கவனித்துக்கொண்டே வந்தால் அடுக்கடுக்காக விழும் கொலைகளையும், அக்கொலைகளின் மர்மமும் விலகுவதை ரசிக்கலாம்..

வழக்கமான இயக்குநர் மிஷ்கினின் கைவண்ணமும், இசையும், சண்டைக் காட்சிகளும் படத்தின் விறுவிறுப்பை கடைசிவரை அலுக்காமல் நம்மை இட்டுச் செல்கிறது..

நிச்சயம் திரையரங்கில் சென்று ஒருமுறை பார்க்கலாம்..! :)

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு பார்க்கலாம் என்று இருக்கிறன் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.