Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடுநிசி நட்சத்திரங்கள்

Featured Replies

நடுநிசி நட்சத்திரங்கள் - சிறுகதை

ஆனந்த் ராகவ், ஓவியங்கள்: அனில் கே.எஸ்.

 

 

மேகங்களின் குறுக்கீடு இல்லா வானத்தில், வைரத் துகள்களாக இறைந்துகிடந்தன நட்சத்திரங்கள். படுத்து உறங்கும் வசதிகொண்ட, சொகுசான அந்தக் குளிர் பேருந்தின் படுக்கையில் இருந்து இயற்கையின் அந்த கேன்வாஸை நகர்ந்துகொண்டே ரசிப்பது... பரவச அனுபவம். மூன்று நாட்கள் வேலைக்குப் பிறகு உடல் சோர்வாக இருந்தாலும், நட்சத்திரச் சிதறல் வானத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு வரும் ஆர்வத்தில் தூக்கம்கூடப் பிடிக்கவில்லை.

கேமராவும் கையுமாக நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சுற்றும் எனக்கு, நட்சத்திரங்கள் மட்டும் இல்லாவிட்டால் பயணங்கள் சலிப்புற்றுவிடும். வனவிலங்குக் காப்பகங்களிலும், அடர்ந்த காடுகளிலும் தங்கி விலங்குகளைப் புகைப்படம் எடுக்கும் இரவுகளில், அந்த நட்சத்திரங்கள்தான் வழித்துணையாக, ஆதரவாக என்னைத் தொடரும்.  அந்தச் சமயங்களில் இனம்புரியாத ஓர் அமைதியும், உற்சாகமும், தெளிவும், என்னை ஆட்கொள்வதை உணர்ந்திருக்கிறேன்.

திடீரென்று ஹாரன் உரத்து ஒலித்து, சடுதியில் வேகம் குறைந்து பெரிய குலுக்கலுடன் பேருந்து தார் சாலையில் இருந்து விலகி கரடுமுரடான மண் பாதையில் பயணித்தது. சாலையோரம் இருந்த புளியமரங்களின் கிளைகள் பேருந்தில் உரசி சரசரவென சத்தம் எழுப்பின. பேருந்து முழுக்க, அச்சமூட்டும் சின்ன அதிர்வுகள் எழுந்தன. நட்சத்திரங்களில் இருந்து கவனம் சிதறி, படுக்கையை நான் இறுக்கப் பிடித்துக்கொள்கிறேன்.

வேளாங்கன்னியில் பேருந்து கிளம்பியதில் இருந்து அவசர பிரேக்கும் ஹாரனும், வேகத்தில் ஒரு பக்கம் இழுத்துக்கொண்டு போவதுமாக ஏகப்பட்ட இடையூறுகள். நட்சத்திரங்களுடன் மானசீகமாக நிகழும் என் உறவாடல்களைச் சிதைத்துக்கொண்டிருக்கும் முகம் தெரியாத அந்த ஓட்டுநர் மீது எனக்குக் கோபம் வந்தது. 'ராத்திரி முழுக்கக் கண் விழித்து வண்டி ஓட்டவேண்டும் என்பதால் தண்ணி அடித்திருப்பான்!’ என்று தோன்றியது.  

தொடர்ந்தும் நட்சத்திரங்களோடு மனம் ஒன்ற முடியாமல் தடுத்தது பேருந்தின் தடுமாறிய ஓட்டம். கொஞ்சம் கொஞ்சமாக இருட்டு விலகி வெளிச்சச் சிதறல் வானத்தை நிறைத்துக்கொண்டு வந்தது. நெருங்கி வந்த ஊரின் கட்டடங்களும் வெளிச்சமும் மெள்ள மெள்ள அதிகரித்து வானம் முற்றிலுமாக மறைந்துபோனது. பேருந்து ஏதேனும் நகரத்தை அடைந்திருக்க வேண்டும்.  

p74.jpg

வண்டி நின்றது. பயணிகளுக்கும் ஓட்டுநருக்கும் இடையே இருந்த கதவு திறக்கப்பட்டு ஓட்டுநர், ''தஞ்சாவூர் சார்... வண்டி அரை மணி நேரம் நிக்கும். சாப்பிடுறவங்க சாப்பிட்டுட்டு வந்திருங்க. இதுக்கு அப்புறம் வண்டி வேற எங்கேயும் நிக்காது'' என்று கறாராகச் சொல்லிவிட்டு படீரென்று கதவை அடித்துச் சாத்தினார்.

நான் படுக்கையைவிட்டு இறங்கியபோது, நடைபாதையில் இருந்த பெரிய அட்டைப் பெட்டி இடறியது. எதிர் இருக்கை பயணியைப் பார்த்தேன்.

''லக்கேஜ் பாக்ஸ்ல வைக்கலாம்னுதான் டிரைவர்கிட்ட சொன்னேன். அதுக்கெல்லாம் நேரமில்லைனு சொல்லி இங்கேயே வெச்சுக்கச் சொல்லிட்டார்!'' என்றார் பரிதாபமாக. அலுக்கல் குலுக்கல் பயணம், டிரைவர் மீது அவருக்கு இன்னும் மிரட்சியை உண்டாக்கி இருக்க வேண்டும். 'இது என்ன அழிச்சாட்டியம்..? 1,000 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி, லக்கேஜ்களுக்கு இடையில் நடக்க வேண்டுமா?’ என்று எனக்குச் சுறுசுறுவென கோபம் ஏறியது.

நான் ஓட்டுநர் இருக்கையை எட்டுவதற்குள் ஓட்டுநர் இறங்கி, வண்டி நின்றிருந்த இடத்துக்கு எதிரில் இருந்த மிலிட்டரி ஹோட்டலுக்குள் சென்றார். 'பேருந்தை இங்கே நிறுத்தினால், அவருக்கு சாப்பாடு இலவசமாகக் கிடைக்கும்’ என்று நினைத்துக்கொண்டேன். கூர்க்காவை விசாரித்து, அருகில் இருந்த சைவ உணவகத்தைத் தேடிச் சென்றேன்.

சாப்பிட்டுவிட்டு திரும்பி வந்து சிகரெட் பற்றவைத்துக்கொண்டு நிமிர்ந்து பார்த்தால், எதிரில் சிறிது தொலைவில் பீடி உறிஞ்சிக் கொண்டிருந்தார் பேருந்தின் ஓட்டுநர். வெள்ளைச் சட்டை, வெள்ளை பேன்ட், அளவான கிராப், சவரம் செய்த மெல்லிய மீசை வைத்த முகம், சிகப்பு ஏறாத கண்கள், கழுத்தைச் சுற்றிய கறுப்புக் கயிற்றின் முடிவில் தொங்கியது எந்தக் கடவுள் என்று வீதி விளக்கில் தெரியவில்லை. 'பார்க்க சாதுவாக இருந்தாலும் ஏன் இவ்வளவு முரட்டுத்தனமாகப் பேருந்து ஓட்டுகிறார் மனிதர்?’ என்று தோன்றியது. அவரிடம் பேச்சுக் கொடுத்து, மது ஆதிக்கத்தில் இருக்கிறாரா என்று தெரிந்துகொள்ள விரும்பி அவரை நோக்கி நடந்தேன். அப்போதுதான் அது நிகழ்ந்தது.  

பிரதான சாலையின் ஓரம் இருந்த உணவகத்தின் வாசலில் இருந்து சாலையை நோக்கி ஓடும் சிறுவன் கவனத்தை ஈர்த்தான். சாலையில் எதிர்ப்புறம் பேய் வேகத்தில் விரைந்து வந்துகொண்டிருந்தது ஒரு கார். தூக்கக் கலக்கத்தாலோ, காரின் குறைவான வெளிச்சப் புள்ளி காரணமாகவோ 100 அடி தூரத்துக்கு அப்பால் இருந்த சிறுவனை கார் ஓட்டுநர் கவனிக்கவில்லை போலும். சொற்ப நொடியில் அவனை, கார் மோதிவிடும் நிலைமை. இதைப் பார்த்ததும் என்னையறியாமல் அதிர்ச்சியில், 'ஐயையோ கடவுளே...’ என்று உரக்கக் கத்திவிட்டேன்.

என் பக்கமாக நின்றிருந்த பேருந்தின் ஓட்டுநர் திரும்பிப் பார்த்து சட்டென சூழ்நிலையைக் கிரகித்து, ஒரே தாவில் சிறுவனை எட்டிப்பிடித்து தன்னோடு இழுத்து அணைத்துக் கொண்டார். ஆனாலும் சாலையைக் கடக்காமல் நின்று அந்தக் காரையே பார்த்துக்கொண்டிருந்தார். 'அட பைத்தியக்காரா... சட்டுனு எதிர்ப்பக்கம் ஓட வேண்டியதுதானே!’ என்று என் மனசுக்குள் ஒரு நினைப்பு ஓடியது.

கடைசி விநாடியில் சாலையின் நடுவில் திடீரென ஓர் ஆள் சிறுவனுடன் நிற்பதைப் பார்த்த கார் ஓட்டுநர், வெலவெலத்து, சடாரென வலது பக்கமாக காரை ஒடித்துத் திருப்பினார். கார் வலது பக்கம் திரும்புவதைப் பார்த்த பேருந்தின் ஓட்டுநர், சட்டென இடது பக்கமாக சிறுவனுடன் தாவினார். காற்றில் பறந்த ஓட்டுநரின் சட்டையை, காரின் பக்கவாட்டுக் கண்ணாடி சரக்கெனக் கிழித்துவிட்டுக் கடந்தது. நல்லவேளை... மயிரிழையில் சிறுவன் காப்பாற்றப்பட்டுவிட்டான். 'பாங்ங்’ என ஹாரனை அலறவிட்டபடி அந்த கார் இருட்டில் மறைந்தது. இவை அனைத்தும் மின்னல் வேகத்தில் நடந்து முடிந்தன. எங்கிருந்தோ அந்தச் சிறுவனின் அம்மா ''தங்கமே... செல்லமே!'' என்று நெஞ்சில் அறைந்துகொண்டு ஓடிவந்தார்.

நான் ஓடிச்சென்று ஓட்டுநரின் கையில் இருந்த சிறுவனை வாங்கினேன். திடீர் அதிர்ச்சி காரணமாக சிறுவனின் உடல், பயத்தில் உதறிக்கொண்டிருந்தது. சிறுவனை அவன் அம்மாவிடம் கொடுத்துவிட்டு ஓட்டுநர் பக்கம் திரும்பினேன். கிழிந்த சட்டையை நீவிவிட்டுக் கொண்டே சிரித்தார்.

''தூக்கக் கலக்கத்துல இருந்திருப்பான் போல... கடைசி நேரத்துல பார்த்துத் பதற்றமாகி ஏதாவது ஒரு பக்கம் காரை ஒடிப்பான்னு நினச்சேன். அதான் அவன் எந்தப் பக்கம் திரும்புறான்னு பார்த்துட்டுத் தாவினேன். நான் தாவுன பக்கமே அவனும் காரை ஒடிச்சிருந்தா சிக்கலாகி இருக்கும்!'' - நான் கேட்காமலேயே அந்த விளக்கத்தைச் சொன்னார்.

p74a.jpgகண நேரத்தில் ஓர் ஓட்டுநரின் மனநிலையை உணர்ந்து சமயோசிதமாகச் செயல்பட்ட அவர் மேல் எனக்கு சட்டென ஒரு மரியாதை தோன்றியது. அதிர்ச்சியில் இருந்து மீண்டுவிட்ட அந்த அம்மா, ஓட்டுநரிடம் தழுதழுக்க நன்றி சொன்னார். அதுவரை ஓட்டுநர் மேல் நான் கொண்டிருந்த கோபத்துக்குப் பிராயசித்தமாக ஏதேனும் செய்யவேண்டும் எனத் தோன்றியது. ஒரு பழரசப் பாட்டிலும் வாழைப்பழமும் வாங்கி வந்து அவர் முன் நீட்டினேன். தன் மேல் விழுந்த திடீர் கவனம் அவரை வெட்கப்பட வைத்தது. அவர் சுதாரித்துக்கொள்ள அவகாசம் தந்து காத்திருந்தேன்.

''தேங்க்ஸ் சார்!'' என்றார் என்னைக் கண்களுக்குள் பார்த்து.

என் சிகரெட் பாக்கெட்டைப் பிரித்து அவரிடம் நீட்டினேன். தயக்கத்தோடு ஒன்றை எடுத்துக்கொண்டார். பற்றவைத்தேன். ஓர் இழுப்பு இழுத்துவிட்டு 'என்ன சிகரெட்?’ என்று பார்த்தார்.

''ரோத்மென்!'' என்றேன்.

கொஞ்சம் சிரித்துவிட்டு அவர் அந்த சிகரெட்டை இழுத்து ரசித்து புகையை விட்டுக்கொண்டிருக்க, நான் அவரையே பார்த்தபடி காத்திருந்தேன். அவர் மூச்சுக்காற்றில் சாராய நெடி இல்லை. மெள்ளப் பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன். இயல்பாகப் பேசினார்.

அவர் பெயர் துரை. தஞ்சாவூர் பக்கம் மடுகூர் கிராமம். கல்யாணம் ஆனவர். இரண்டு பெண்கள். மனைவிக்கு உப்பளத்தில் வேலை. காவிரியில் நீர்ப்பாசனம் வறண்டுபோய், விவசாயம் பொய்த்துவிட்டது என்று வெளியூரிலும் வெளிநாடுகளிலும் வேலை செய்யப்போய்விட்ட அந்தப் பிரதேசத்தவர்களில் ஒருவர். அப்பா இன்னும் விவசாயம் செய்கிறார்.

''பஸ்ஸுக்குள்ள லக்கேஜ்லாம் பாதையிலேயே வெச்சிருக்காங்க... கொஞ்சம் அதை லக்கேஜ் கேபின்ல வெச்சிருக்கலாமே!'' என்று மெதுவாகச் சொன்னேன்.

''அந்தப் பஸ்ஸுக்கு நான் ஒருத்தன்தாங்க... க்ளீனர் இல்லை. ராத்திரி முழுக்க வண்டி ஓட்டணும். பகல்ல வண்டியை க்ளீன் பண்ணணும். சின்னச் சின்ன ரிப்பேரை சரிபண்ணணும். டீசல் அடிச்சி, காத்து பிடிச்சு சரியான சமயத்துல பிக்கப் பண்ணி எல்லாரையும் நேரத்துக்குக் கொண்டுசேர்க்கணும். இதுல ஒவ்வொரு ஸ்டாப்லயும் வண்டியை நிறுத்தி இறங்கி லக்கேஜும் அடுக்கணும்னா, ஆவுற காரியமா சொல்லுங்க..?'

''என்னது... க்ளீனர் இல்லையா? நைட் டிரைவிங் பண்ணும்போது தூக்கம் வராம இருக்க பேச்சுத்துணைக்கு ஆள் வேணாமா?''

''கம்பெனிக்கு அதைப் பத்திக் கவலை இல்லை சார். காசு மிச்சம்னு நினைச்சுக்குவாங்க. ஆனா, ரிவர்ஸ் எடுக்கும்போது வண்டியில சின்னக் கீறல் விழுந்துட்டாக்கூட சம்பளத்துல பிடிப்பானுவ. பாடாவதி வேலை சார்!''

பயணிகள் இன்னும் சாப்பிட்டுக்கொண்டிருக்க, நாங்கள் இன்னும் கொஞ்ச நேரம் பேசினோம். தன் பெண்களை நல்லமுறையில் படிக்கவைக்க ஆசை. 'கம்ப்யூட்டர் படிக்கவைக்கலாமா?’ என்று என்னிடம் இயல்பாகக் கேட்டார்.

அவர் கேட்ட விதத்தில் அவருக்கு ஆத்மார்த்தமாகப் பதில் சொல்ல வேண்டும் போல் இருந்தது. படிப்பு சம்பந்தமாக நான் சொன்னதைக் கவனமாகக் காதுகொடுத்துக் கேட்டார். நடுவில் கைக்கடிகாரம் பார்த்து, வண்டியில் ஏறி இரண்டு முறை ஹாரனை அழுத்திவிட்டு மறுபடி இறங்கி நின்றார்.

என் கேமராவை எடுத்து சிகரெட் பிடித்துக்கொண்டிருந்த அவரைப் புகைப்படம் எடுத்தேன். சுதாரித்து போஸ் கொடுத்தார். புகையில் வளையங்கள் விட்டு, ''இதை எடுங்க'' என்றார். புகை வளையத்தில் அவர் சிக்கியிருந்ததைக் காட்டினேன். பார்த்து ரசித்தார். என் தொழில்குறித்து கேட்டார். சொன்னேன்.

''ஊரும் காடுமாச் சுத்தி மிருகங்களை போட்டோ எடுக்குறதுதான் வேலையா?!'' என்று கேட்டார் ஆச்சரியமாக. ''அப்ப என்னை போட்டோ எடுத்ததும் ஒரு வகையில கரெக்ட்டுதாங்க. நாய் மாதிரி வேலை செய்றவனை மிருகங்க லிஸ்ட்லதான் சேக்கணும் இல்லையா!'' என்றார் சிரித்தபடி. அவரின் இன்ஸ்டன்ட் நகைச்சுவை உணர்வை வியந்தபடி நானும் சிரித்தேன். கோடியக்கரையில் நான் எடுத்த மிருகங்கள், பறவைகளின் படங்களை கேமராத் திரையில் ஓட்டிக் காட்டினேன்.

''நேர்ல பாக்குறதைவிட உங்க போட்டோல நல்லா இருக்குங்க' என்றார்.

இதர பயணிகள் வந்து சேர்ந்து எல்லோரும் வண்டி ஏறினார்கள். நான் கடைசியாக ஏறி, துரையிடம் சன்னமாக ஒரு கோரிக்கை வைத்தேன்.

''தப்பா நினைக்காதீங்க. கொஞ்சம் நிதானமா ஓட்டுங்க. பயமா இருக்கு...''

''நான் வேணும்னு ஓட்டலை சார். ரோடு அப்படி. உங்களுக்கே பயமா இருந்தா, ஸ்டீயரிங் பிடிச்சு ஓட்டுற எனக்கு எவ்வளவு பயமா இருக்கும்? வாங்க... 10 நிமிஷம் என்கூட முன்னாடி உக்காந்து பாருங்க தெரியும். நீங்க காட்லதான எருமை, பன்னி, யானைனு பாக்கறீங்க. இங்க ரோட்ல வர்ற எருமைங்களைக் காட்டுறேன் வாங்க!'' என்று முன் கதவுக்கு அருகில் இருந்த ஒற்றை இருக்கையைக் காண்பித்தார். அந்த வித்தியாச அனுபவம் என்னை ஈர்த்தது. இருக்கையில் உட்கார்ந்தேன்.  

சிற்றூரை விட்டு விலகிய பேருந்து, சிறிது நேரத்தில் மறுபடி காட்டு வழிப் பாதையைத் தொட்டது.  பேருந்தின் விளக்குகள் ஏற்படுத்திய ஒளிக்கற்றை இருட்டைத் துளைத்து வழிகாட்ட, அதன் ஊடே பேருந்து விரைந்து முன்னேறுவதைப் பார்க்கையில் ஏற்பட்ட திகில் உணர்வில் துரையிடம் பேச வாய் எழவில்லை. எதிரில் அவ்வப்போது வரும் வாகனத்தில் இரண்டு வெளிச்சப் புள்ளிகள் உருவாகி கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து கண்களை நிறைத்தன.

''பெங்களூருக்கு 600 கிலோமிட்டர். 10 மணி நேரம். ஸ்டீயரிங் திருப்பித் திருப்பி கை விட்டுப்போயிரும். காலு வலி பின்னிரும். ரோடு ரொம்ப அகலம் இல்லை. எதிர்ல வர்ற காருங்க லைட்டு மூஞ்சில அடிக்கும். லைட்டை டிம்-டிப்கூட பண்ண மாட்டானுங்க. லாரிக்காரனுங்க மோதுற மாதிரி வந்து சேட்டை பண்ணுவானுங்க. ராத்திரி பூரா இந்த அக்கப்போருதான். இதுல ஒரு செகண்டு கவனம் செதறுனாப் போச்சு... கன்ட்ரோல் போயிரும்!'' - கண்களை சாலைக்குக் கொடுத்துவிட்டு என்னிடம் பேசினார் துரை.

இருளில் விரையும் பேருந்தின் முகப்பில் அமர்ந்து பயணிக்கும் படபடப்பில் இருந்து விடுபட நான் மறுபடி சிகரெட் பற்றவைத்துக்கொண்டேன். பாதையை வெறித்துப் பார்த்தபடியே மௌனமாக வந்தேன். சட்டென்று சாலையைக் கடக்கும் மனிதர்கள், நாய்கள் என்று வெளிச்சத்தில் சிக்கிய உருவங்கள் தெரியும்போது பதைபதைப்பு அதிகரித்தது. இந்தச் சூழலிலும் மனநிலையிலும் எப்படி இவரால் நிதானம் இழக்காமல் வேலை செய்ய முடிகிறது?

p74b.jpgநாங்கள் இன்னும் பேசினோம். எங்கள் குடும்பம் பற்றி, நான் பயணித்த ஊர்கள் பற்றி, பொறியியல் படித்திருந்தாலும் நான் விரும்பியதையே என் தொழிலாக்கிக் கொண்டது பற்றி, நான் எடுத்த விளம்பரப் படங்கள் பற்றி... இருட்டில் அமர்ந்து பேசிக்கொண்டே வந்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. பேச்சைவிட துரை தூங்காமல் இருக்கவேண்டும் என்ற நினைப்பே என்னை ஆட்கொண்டிருந்தது.

துரைக்கு விவசாயக் குடும்பம். அதில் நாட்டம் இருந்தும் அதையே அவர் தொழிலாகச் செய்யவேண்டும் என்று அபிப்பிராயப்பட்டபோதும், வாய்ப்பும் வருவாயும் போதாததால் ஓட்டுநர் வேலை பார்ப்பதாகச் சொன்னார். 'துபாயில் ஓட்டுநர் பணிக்கு நிறையப் பணம் கிடைக்கும்’ என்று நண்பர்கள் அவரிடம் சொன்னார்களாம். இரவு முழுக்கக் கண் விழித்து உடல் வருத்தி வேலை செய்யும் அவரைச் செலுத்துவது அந்தத் துபாய் ஆசையாக இருக்கலாம்.

ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வேகம் குறைத்து ஓர் இடத்தில் ஓரமாக நிறுத்திவிட்டு, 'டீ சாப்பிடலாங்களா?' என்றார்.

சோகையான குழல்விளக்கு எரிந்த அந்தத் தெருவோர டீ கடைக்கு சற்றுத் தள்ளி இருந்த தெருவைச் சுட்டிக்காட்டி, 'யூரின் போணும்னா இருந்துக்குங்க' என்றார். டீக்கடையில் தண்ணீர் வாங்கி முகத்தில் அறைந்து அறைந்து கழுவினார். பக்கத்துச் சுவற்றின் திரைப்பட சுவரொட்டியில் அந்த அகால வேளை யிலும் அரிவாளும் கையுமாக ஹீரோ கோபத்தில் இருந்தார். இருவரும் டீயும் பிஸ்கட்டும் சாப்பிட்டு, சிகரெட் புகைத்தோம்; புறப்பட்டோம்.

நான் கேட்காமலேயே துரை அந்த வேலையில் தனக்குக் கிடைக்கும் சம்பளம் பற்றிச் சொன்னார். ''அவ்ளோதானா?'' என்றேன் நான் என்னையும் அறியாமல். அப்படிக் கேட்டிருக்க வேண்டாம் என்று தோன்றினாலும், துரை அந்த ஆச்சரியத்தையும் கேள்வியையும் பலமுறை எதிர்கொண்டவர் போல தொடர்ந்தார். நான் பதில் சொல்ல இயலாத சில கேள்விகளைக் கேட்டார்.

''நீங்களும் ஒரு தொழில் செய்றீங்க. நானும் ஒரு தொழில் செய்றேன். உங்க தொழில் செய்யத் தேவைப்படுற படிப்பும் அறிவும் நான் செய்ற வேலைக்குத் தேவை இல்லாம இருக்கலாம். ஆனா, நீங்க சம்பாதிக்கிறதுல பத்துல ஒரு பங்குகூட என் தொழிலுக்குக் கிடைக்காம இருக்கறது நியாயமா சார்?''

அவர் கேள்விகளுக்கு எனக்குப் பதில் தெரியவில்லை. அவருக்குப் பதில் சொல்லும் முயற்சியில் நான் அவரிடம் இருந்து இன்னும் பல கேள்விகளை எதிர்கொண்டேன்.

பின்னிரவு நெருங்கியிருந்தது. துரை ஏதோ பேசிக்கொண்டே இருக்க என்னையும் அறியாமல் நான் தூக்கத்துக்கு நழுவினேன். விழித்துக்கொண்டிருக்க வேண்டும் என்று எவ்வளவு பிரயத்தனப்பட்டாலும் என்னை மீறிக்கொண்டு தூக்கம் அழுத்த, உட்கார்ந்த நிலையிலேயே நான் தூங்கிப்போனேன்.

துரை அந்த வயலில் கலப்பையைப் பூட்டி உழுதுகொண்டிருக்கிறார். பின்னணியில் நிறைய நட்சத்திரங்கள் தெரிகின்றன. பனி விழுவது போல் அவை வானத்தில் இருந்து உதிர்ந்து வயலில் சின்னதும் பெரியதுமாக நிறைகின்றன. நான் போட்டோ எடுத்துக்கொண்டிருக்கிறேன். வயலின் ஊடே தூரத்தில் ஒரு பேருந்து வருகிறது. அதன் விளக்குகள் பெரிதாகிப் பெரிதாகி கண்களை நிறைத்து நெருங்கி முகத்துக்கு அருகே வர, துரை அலறுகிறார்.

''சார்... சார்... சார்...''

நான் திடுக்கிட்டு எழுந்தேன்.

'சார்... தூக்கம் வந்தா உள்ள போய்ப் படுங்க சார். இங்க என் முன்னால் உக்காந்து தூங்காதீங்க. எனக்கும் தொத்திக்கும். பயப்படாதீங்க... நான் தூங்கிட மாட்டேன். எனக்குப் பழக்கம்தான்!''

குற்ற உணர்ச்சி குறுகுறுக்க, ''ஸாரி' என்று சொல்லி எழுந்தேன். 'குட்நைட்’ சொல்ல வாயெடுத்து அடக்கிக்கொண்டேன். கதவைத் திறந்து பேருந்துக்குள் நுழைந்தேன்.

சில்லென்ற குளிர் காற்றாலும், ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தவர்களின் குறட்டை ஒலிகளாலும் நிறைந்திருந்தது பேருந்து. என் படுக்கையில் சரிந்து குளிருக்கு இதமான கம்பளிச் சால்வையை எடுத்துப் போத்திக் கொள்கிறேன். ஜன்னல் வழியாக நட்சத்திரங்கள் மறுபடி என்னைப் பார்த்து கண் சிமிட்டுகின்றன. துரை பார்க்க முடியாத நட்சத்திரங்கள். மனம் அதில் பதியாமல் நழுவுகிறது. ஜன்னல் திரையை மூடிவிட்டு மெள்ள உறக்கத்தில் ஆழ்கிறேன். பின்னணியில் ஒவ்வொரு ஹாரன் ஒலிக்கும், பிரேக்குக்கும், குலுங்கலுக்கும் ஆழ்மனதில் துரை எதிர்கொள்ளும் சூழல் மனதில் நிழலாடுகிறது. நட்சத்திரங்களையும் துரையையும் மறந்துவிட்டு முற்றிலுமாக நித்திரையில் ஆழ்ந்து போகிறேன்.

p74c.jpgகாலை வெளிச்சம், ஜன்னல் வழியே கசிந்து துயில் எழுப்பியது. துரையின் குரல் பேருந்து முழுக்க ஒலிக்கிறது. ''சில்க் போர்ட் சார். இரண்டு நிமிஷத்துல சில்க் போர்ட் வருது. இறங்குறவங்க முன்னாடி வாங்க. அடுத்த ஸ்டாப் மடிவாலா!''

கலைந்த தலையும், கலங்கிய கண்களுமாக என் பையை எடுத்துக்கொண்டு கதவைத் திறந்துகொண்டு வந்து துரையிடம் ''குட்மார்னிங்'' என்றேன். நேற்று இரவு பார்த்ததுபோலவே தூக்கத்தின் சுவடே இல்லாமல் இருந்தார் துரை.

''நல்லாத் தூங்கினீங்களா?'' என்றார் புன்முறுலுடன்.

என் பர்ஸில் இருந்து விசிட்டிங் கார்டு ஒன்றை உருவி அவரிடம் நீட்டினேன்.  

'எங்க ஆபீஸ்ல டிரைவர்கள் வேண்டியிருக்கு துரை. வெளிநாட்டு கம்பெனி. சம்பளத்துக்குக் குறைச்சல் இல்லை. வேலை அவ்வளவா சிரமம் இல்லை. போன் பண்ணிட்டு வாங்க. நான் சிபாரிசு பண்றேன்!''

''நன்றி சார்!'' என்று சிரித்த துரையின் கண்களில் இரவுகளில் நான் ரசிக்கும் நட்சத்திரங்களின் மினுக்கல்கள் பிரதிபலித்தன!  

https://www.vikatan.com/

  • கருத்துக்கள உறவுகள்

தூங்காமல் வண்டி ஓட்டுவது சாகசம் என்றால் தூங்கிக் கொண்ட வண்டி ஓட்டுவது கைலாசம்.....!  tw_blush:

  • தொடங்கியவர்

தொடர்ந்து கருத்து எழுதி ஊக்கம் தருவதுக்கு நன்றி..:)

21 hours ago, suvy said:

தூங்காமல் வண்டி ஓட்டுவது சாகசம் என்றால் தூங்கிக் கொண்ட வண்டி ஓட்டுவது கைலாசம்.....!  tw_blush:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.