Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஷரோனின் மோதிரம்

Featured Replies

ஷரோனின் மோதிரம் - சிறுகதை

நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... சுப்ரபாரதிமணியன், ஓவியங்கள்: அரஸ்

 

கூரியரில் மோதிரம் வந்தது.

அருணகிரிக்கு கத்த வேண்டும் போல் இருந்தது. 'கண்டேன் சீதையை!’ என்று அனுமன் கத்தியது, சம்பந்தமே இல்லாமல் ஞாபகம் வந்தது.

'அடப்பாவி... கிளம்பிட்டியா?!'' என்றுதான் கத்தினான். உடனே அவளைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. கைபேசியை முடுக்கினான்.         மஞ்சள் சுடிதாரில் அவள் சிரித்துக்கொண்டிருந்தாள். அவள் தேவி... 30 வயதில் அவள் முகத்தில் இல்லாத அழகை எல்லாம் அவன் கண்டிருக்கிறான். தினமும் 100 குறுஞ்செய்திகள் அனுப்பிய காலமும் உண்டு. 'பிரியலாம்’ என்றுகூட ஒரு குறுஞ்செய்தியில் சொல்லித்தான் பிரிந்தார்கள். அனுப்பியவள் தேவி.

குறுஞ்செய்தியும், இப்போது இந்தக் கூரியரும்... மோதிரம் போன்ற வஸ்து சுலபமாகத் திருடுபோகாமல் கூரியரில் பத்திரமாக வந்து சேர்ந்தது, அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தது. தொலைந்திருந்தாலும் 5,000 ரூபாய் நஷ்டமாகி இருக்கும். தொலைந்தது தெரியாமல்கூடப் போயிருக்கலாம். மோதிரம் அவளிடம்தான் இருக்கிறது என்று அருணகிரி நினைத்திருப்பான். இப்போது தேவி, உறவை முறித்துக்கொண்டது நிச்சயமாகிவிட்டது.

'யூ டூ ஷரோன்' என்று வாய்விட்டுச் சொன்னான்.

அவளை 'ஷரோன்...’ என்றுதான் அழைப்பான். கூரியர் முகவரி பார்த்தான், மீண்டும் தேவி ஆகிவிட்டிருந்தாள்.

P79D.jpg

தேவி, பனியன் கம்பனி மெர்சன்டைஸிங்கில் சேர்ந்தபோது அந்தப் பிரிவு மேனேஜர் 'யூ டூ கம்பம்'' என்றார்.

தேவி முழித்த முழி, சாயப்பட்டறைகள் மூட உத்தரவிட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கேட்ட சாயப்பட்டறை தொழிலாளியின் திகைப்புப் போலத்தான் இருந்தது. அவனே விளக்கமும் சொல்லிவிட்டான் கேட்காமலே.

''உங்க ஊரும் கம்பமா? கம்பம் பள்ளத்தாக்கு எனக்குப் பிடிச்ச இடம். பூரா பச்சையாக் கெடக்கும் அந்த ஊர்ல இருந்து எதுக்குப் பஞ்சம் பொழைக்க வர்றீங்கனுதான்?'

அருணகிரி, அண்ணாமலை தீபம் ஊர்க்காரன். பல ஏக்கர் பரப்பளவில் இருந்த பனியன் கம்பனியில் மற்றோர் ஓரத்தில் உள்ள பேக்கேஜ் செக்ஷனில் அவனுக்கு வேலை. வழக்கமான சந்திப்புகள், புன்முறுவல்கள், அப்புறம் காபி ஷாப்கள், சோடா ஷாப்கள், இன்டர்நெட் சென்டர்கள் என்று திரிந்தபோது, பிரிவு அவஸ்தை தருவது என்பது தெரிந்தது.

ஊரின் மத்தியில் இருந்தது மொழிப் போர் நினைவுச்சின்னம். மழை, லேசாகத் தூறிக்கொண்டிருந்தது. ஒதுங்கி நிற்பதற்கு இடம் இல்லை என்பது போல் நினைவுச்சின்னத்தின் அருகில் ஒதுங்கிக்கொண்டார்கள். ஒரு தொழிற்சங்கம், அதன் அழுக்குத்தனத்துடன் ஓரமாக நினைவுச்சின்னத்தை ஒட்டியிருந்தது.

'அதென்னங்க 'அ’ நொண்டியடிக்குது..!''

'நானும் ஒருநாள் ஆச்சரியப்பட்டுத்தான் ஒதுங்கிப் பார்த்தேன். அப்புறம்தான் தெரிஞ்சது தமிழ் அ-தான் அது. அகரம் முதல் எழுத்து. இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலே செத்துப் போனவங்க நினைவுச்சின்னம் இது.'

'பனியன் கம்பனி, ரெண்டு கட்டிங் டேபிள், ரெண்டு பவர் டேபிளுக்கு இருக்கிற மரியாதை இந்த ஊர்ல எந்தச் சிலைக்கோ, எந்த நினைவுச்சின்னத்துக்கோ இல்லைதான்.'

மழை, சற்றே வலுக்கத் தொடங்கியிருந்தது. ''இன்னும் கொஞ்சம் ஒதுங்கி, ஏதாச்சும் சிலைக்கு அடியிலயாவது ஒதுங்கியிருக்கலாம்.''

'ஒதுங்கிறதே நம்ம பொழப்பாப் போச்சு; இன்னம் கொஞ்சம் தள்ளிப் போயிருக்கலாம்.''

p76C.jpg

இன்னும் கொஞ்சம் தள்ளி அண்ணாவும் பெரியாரும் பக்கம் பக்கம் நின்றிருந்தார்கள். அவர்களின் தலைக்கு மேல் ஒரு கூடாரமும் இருந்தது. அந்தச் சிலைகளுக்குக் காவல் துறையினர் எப்போதும் காவல் இருந்தார்கள். முன்பு நாலைந்து பேர். இப்போது அவர்கள் இருவராகி இருந்தனர். அண்ணாவும் பெரியாரும் இருவர். காவல் துறையினரும் இருவர் அவர்களின் காவலுக்கு.

அங்கு கொஞ்சம் நின்று, வலது பக்கம் பார்த்தால் குமரன் நினைவுச்சின்னம் இருந்தது. குமரன் நினைவுச்சின்னம் இருக்கும் இடத்துக்கு அருகில் அண்ணாவும் பெரியாரும் நிற்பது பலருக்குப் பிடிக்கவில்லை. 'குமரனுக்கு முக்கியத்துவம் இல்லை, மாற்ற வேண்டும்’ என்று சத்தம் போட்டார்கள். கொஞ்சம் கடுசாகவே வார்த்தைகள் வந்துவிட்டன. காவல் துறை, அண்ணாவையும் பெரியாரையும் காத்துக்கொண்டிருந்தார்கள்.

காதர்பேட்டையில் இருந்து திமுதிமுவென்று நாலைந்து நைஜீரியர்கள் அவர்களைக் கடந்து சென்றனர். தூறல் மழை, அவர்களின் உடல் நிறக் கறுப்பை இன்னும் அழுத்தமான கறுப்பாக்கி இருந்தது. மழையில் நனைந்து போகும் யானையைப் போல் இருந்தனர்.

'இவங்களையும் வாழவைக்கிற ஊர், நம்மள வாழவைக்காதா?'

'அதுதான் வாழவைக்குதே, அப்புறம் என்ன கேள்வி?''

'வாழவைக்கிறதுனா அந்த அர்த்தமா.

10 மணி நேரம் வேலை, கொஞ்சம் காசு, கொஞ்சம் சொகுசுனு... அதில்லை...''

'அப்புறம்...''

'உன்னை நான் நேசிக்கட்டுமா?''

'அட சக்கை... இவ்வளவு அழகான தமிழ்ல கேட்டுட்டே! 'லவ் யூ’னு கேட்கிறதுக்குப் பதிலா இப்படி பெர்மிஷனோட வந்தது நல்லா இருந்துச்சு.'

மழைக்காக ஒதுங்கிக்கொண்டாலும் இருவரும் நெருங்கி நின்றுகொண்டே இருந்தனர். கதகதப்பு, சட்டென கூடிக்கொண்டிருந்தது. மழை கொண்டுவந்த லேசான குளிரை, அவர்கள் எல்லாத் திசைகளிலும் கடத்திக்கொண்டிருந்தார்கள். சிலைகளும், மொழிப் போர் நினைவுச்சின்னமும் அந்தக் கதகதப்பில் ஈரம் தவிர்த்து தங்களைச் சற்றே சூடாக்கிக்கொண்டன.

டுத்த முறை நொய்யல் கரையில்தான் சந்தித்துக்கொண்டார்கள். சாயத் தண்ணீரும் சாக்கடைக் கழிவுகளும் பல வண்ணங்களில் ஓடிக்கொண்டிருந்தன.

'என்ன... இங்க வரச் சொல்லிட்டீங்க..?'

'அதோ பார்..!''

p76b.jpg'வளம்’ நினைவுச்சின்னம், நொய்யலின் மத்தியில் நின்றிருந்தது. நொய்யல் ஓர மேட்டைச் சரிப்படுத்திப் பாலம் ஏற்படுத்தி இருந்தது வளம் அமைப்பு. அதன் நினைவாகத் தூண் ஒன்று சிமென்ட் நிறத்தில் நின்றுகொண்டிருந்தது.

'ஊருக்குள்ள இருக்கிற சிலைகளை, நினைவுச்சின்னங்களை ஒரு ரவுண்டு கூட்டிக்கிட்டுப் போயிக் காட்டறதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா?''

''இந்த ஊர்லே டாலர், பவுண்ட்னு இருக்குதே தவிர, காட்டறதுக்கு வேற என்ன இருக்கு?''

'இருக்கே... இதோ!'' - கறுத்த நிறத்தில் நொய்யல் சலசலத்து ஓடிக்கொண்டிருந்ததைக் காட்டினாள். நொய்யல் நதியின் மத்தியிலும் அங்கும் இங்குமாகப் பல வண்ணங்களில் பாறைகள் இருந்தன. அந்தப் பாறைகள், அவ்வப்போது வண்ணம் அடித்துக்கொண்டன; ஏதோ விசேஷம் என்று சொல்லிக்கொண்டன. சமீபத்திய விசேஷம், பொங்கல் விழா. நாலைந்து நாட்கள் கரகாட்டம், கும்மியாட்டம், அண்ணன்மார் சுவாமி கதை என்று அந்தப் பகுதியில் மேடை போட்டு நடத்தினார்கள். எல்லாவற்றுக்கும் கூட்டம் சேர்ந்தது.

''ஷங்கர் படத்துல கல், ரோடு எல்லாத்துக்கும் பெயின்ட் அடிச்சிவிட்ட மாதிரி பாறைகளுக்கு பெயின்ட் அடிச்ச ஊர் இதுவாத்தான் இருக்கணும்.''

அவள் மல்லிகைப் பூ கேட்டாள்.

'என்ன திடீர்னு?''

'ஏதாச்சும் கேட்கணும்னு தோணுச்சு. தலைங்கிற பாறையில கொஞ்சம் வெள்ளைப் பெயின்ட் அடிக்கலாம்னு. வேற... இங்க சுண்டலும் பலூனுமா கிடைக்கப்போகுது?''

'கொஞ்ச தூரம் போனா 'மெக்டுவல்’ ஹோட்டல் இருக்கு.'

அவன் அலைந்து திரிந்துகொண்டிருப்பது, அவனின் வெஸ்பா சத்தம் ஆங்காங்கே கேட்டதில் தெரிந்தது. யுனிவர்சல் திரையரங்கின் ஓரத்தில் தெரிந்த தையல் செக்ஷன் பக்கம் இருந்து ஏதோ இயந்திரங்களின் பலத்த ஓசை கேட்டது. அவள் அம்மா, தையல் வேலை செய்தவள். ரவிக்கைகளும் பழைய துணிகளும் தைத்து, அவளை பள்ளிப் படிப்பு வரை படிக்க வைத்திருந்தாள். அவளுக்கும் பனியன் கம்பெனி என்றதும் தையல் செக்ஷன்தான் ஞாபகம் வந்தது. தையல் மெஷினில் உட்கார்ந்து ஓயந்துபோனதற்குக் காரணம், தையல் மெஷின் கொடுத்த சூடும், அது சார்ந்த கொப்பளங்களும் வியாதிகளும்தான். தையல்காரியின் மகளாக அவள் தொடர வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தாள்.

அவன் திரும்பி வந்தபோது, அவன் கையில் மினுமினுக்கும் ஜரிகைப் பொட்டலம் ஒன்று இருந்தது.

'மல்லிகைப் பூவே கெடைக்கல. நாளைக்கு முகூர்த்தம் வேற. இது கல்யாண சீஸன். பெரிய டிமாண்ட்.''

மினுமினுக்கும் ஜரிகையில் ஒளிந்திருந்தது சிறிய தங்க மோதிரம்.

' 'பொன் வெக்கிற இடத்துல பூ’னு தன்னோட கையாலாகாத் தனத்தைச் சம்பிரதாயமா மறைச்சு சொல்வாங்க. இங்க அதுக்கு மாறா... தலைகீழா, பூ வெக்கிற இடத்திலே பொன்.''

'தலையில பூவும் வெச்சு விட்டுட்டீங்க. ஒதுங்க இடம் தேடுற மாதிரி... அதுக்கு பெர்மிஷன் கேட்கிற மாதிரி.'

நினைவுச்சின்னங்களும் சிலைகளும் பார்த்து அலுத்துப்போகவே, கொஞ்சம் லாட்ஜ் பக்கமும் ஒதுங்க ஆரம்பித்தார்கள்.

''கல்யாணம் செய்துகொண்டால் வெட்டிப் போட்ருவாங்க'' என்று அவள் சொன்னாள்.

அவனும் அதையேதான் சொல்ல வேண்டியிருந்தது, ''பொட்டலம் கட்டி பாலாறுல வீசிருவாங்களே!'

'நொய்யல்லியே அதுக்குச் சௌகரியம் இருக்கு. சாயத்தண்ணியில அடையாளம் காணாமப்போகப் பண்றது சுலபம்.''

சேர்ந்து வாழலாம் என்று தீர்மானம் எடுத்தபோது, சில மாதங்கள் ஓடியிருந்தன. சாயப்பட்டறைகள் மூடல்கள் என்று வந்த பின்பு ஊரில் நிறைய கம்பெனிகள் காலியாகிச் சும்மா கிடந்தன. நாலு பெரிய கம்பெனிகள், பார்கள் ஆயின. ஏழு சாயப்பட்டறைகள் பால் கம்பெனிகள் ஆயின. நொய்யல் கரையில் இருந்த ஒன்பது சலவைப்பட்டறைகள் ஈமு கோழிப் பண்ணைகள் ஆயின.

''இந்தச் சமயத்திலே ஊடு புடிக்கிறது சுலபம். நிறைய வூடுக சும்மா கெடக்குது. சாதி, மதம்னு விலாவாரியாக் கேட்க மாட்டாங்க.'

ஊர்விட்டு ஊர் வந்த பின்பு, இந்த நகரத்தில் தங்களின் சாதி அடையாளம் தெரியாமல் திரிவது அவர்களுக்கு சுலபமாக இருந்தது. அதற்காகவே புழுதி, வெயில், சாயக்கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள் மீறி அவர்களுக்கு ஊர் பிடித்துவிட்டது.

''நல்ல காசு. டாலர் பவுண்ட்னு பத்தே வருஷத்துல நம்ம பர்ஸ்ல புழங்கும். சாயம், அழுக்கு எல்லாத்தையும் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.'

''சாதி கேட்காட்டியும், 'புருஷன் பொண்டாட்டியா?’னு கேட்காமலா இருப்பாங்க..?'

'கேட்டா ஆமான்னு சொல்லிட்டாப் போச்சு.''

'என்ன ஆமான்னு சொல்லப்போறீங்க..'

'எல்லாத்துக்கும் ஆமாதான். உங்கூடப் படுத்து சொகம் காண்றதுக்கு எவ்வளவு வேண்ணா ஆமா போடலாம்.'

ல்லாம் சுலபமாகவே நடந்தன. லைன் வீடுகளைத் தவிர்த்தார்கள். தனியாக ஒரு வீடு தென்பட்டது. வீட்டுக்காரர், நான்கு வீதி தள்ளி இருந்தார். அது பெரிய சௌகரியம். அவளுக்குக் கமலி பெண்கள் விடுதியில் இருந்த அவஸ்தை முடிந்தது. அவன் லாட்ஜில் மாத வாடகையில் இருந்த உப்பசம் தீர்ந்தது.

'சின்னதா ஒரு நஷ்டம்.'

''தெரியலையே!'

'முந்தியெல்லாம் மீட் பண்றப்போ நான் ஒரு குட்டிக் கதை... நீங்க அறுவை ஜோக் ஒண்ணு சொல்லிப்போமே!'

'ஆமா... அது கட்டாயிருச்சுல்ல!'

p76a.jpg'சரி... குட்டிக் கதை ஒண்ணு சொல்றேன். உலகின் கடைசி மனிதன் இருந்த வீட்டுக் கதவு தட்டப்பட்டது.'

'இது நான் படிச்சதுதான். உபயம் சுஜாதா..'

'நான் என் பங்குக்கு, மெக்சிகோ சலவைக்காரி ஜோக் சொல்றேன்.''

'அதுவும் உபயம் சுஜாதாதானா?'

''இன்னமும் இதை ஃபாலோ பண்ணணும். ஞாயிற்றுக்கிழமையாச்சும் குட்டிக் கதை, கடி ஜோக்ஸ் சொல்லிக்கணும்.''

ரு ஞாயிற்றுக்கிழமை, மாடியில் நின்று பட்டம் விட்டார்கள். பட்டத்துக்கு மாஞ்சா போடுவதிலும், டீல்விட்டு அறுத்துவிடுவதிலும் அவன் மன்னன். சாயப்பொடி, கோந்து, கண்ணாடித் தூள் கலந்து பசை தயாரிப்பான். அன்று பட்டம் விட்டபோது பட்டத்தைக் கடந்து சென்ற விமானத்தைக் காட்டிச் சொன்னான், 'உன்னோட, இதுல பறக்கணும்.' அங்கு குடிபோய் ஒரு வாரத்துக்குப் பிறகு, இது எதுவுமே தொடரவில்லை. எல்லாம் தலைகீழாகிவிட்டன.

ரண்டாம் நாள், தேவி அவளின் தூரத்து உறவினர் ஒருவரை அவள் குடிபோன வீதியில் பார்த்தாள்.

'இந்த வூட்லே என்ன பண்றே?''

'இங்க இருக்கிறவையப் பார்க்க வந்தன்.'

'காலியாத்தானே கெடந்தது. யாரு இருக்கா?'

'ஒரு குடும்பம்.'

'குடும்பம்னு இருந்த மாதிரி தெரியலயே!'

அவரை அந்த வீதியில் அடிக்கடி பார்ப்பதாகத் தோன்றியது. அவரும் வேவு பார்ப்பதாகத் தோன்றியது. பிரமையும் பயமும் அவளை அலைக்கழித்தன. ஊரில் இருந்து தொலைபேசி அழைப்பு வரும். அருவாள் சகிதமாக நாலைந்து பேர் வருவர் என்பது அவன் அணைப்பில் அவள் கிடந்தபோது விருக்கென்று தள்ளிப் போகச் செய்திருக்கிறது.

'வேறு இடம் பார்த்துடணும்.'

'நிறைய அட்வான்ஸ் குடுத்திருக்கோம்.''

'அட்வான்ஸுக்காக அடிபட முடியுமா? வெட்டி, பொட்டலமாக் கட்டிருவாங்க. ரெண்டு பக்கமும் சாதி வெறி பிடிச்சவங்கதானே இருக்காங்க.''

மலி பெண்கள் விடுதிக்கு, தேவி திரும்பி விட்டாள். அழுக்குப் படுக்கை, பாத்ரூமுக்கு க்யூ, கலர்கலராக அஜினமோட்டா சாதங்கள். அலுத்துவிட்டது எப்போதோ அவளுக்கு.

''என்ன... கமல்-கவுதமினு சொல்லிட்டிருந்தே. ஊத்திருச்சா..?'

'என்ன... திருப்தி பண்ண முடியலையா..? யார்... எவர்?''

'நல்ல திருப்திதான். உசுரு எப்போ போகுமுனு ஊசலாட்டம்...''

தற்கு இடையில் தேவியும் மெர்சன்டைஸில் இருந்த கிராக்கி காரணமாக, வேறு கம்பெனிக்குப் போய்விட்டாள். அவனைத் தவிர்த்தாள்.

'என்னைய அவாய்ட் பண்றியா?'

''இப்போ நெனச்சாலும் உடம்பு நடுங்குது. யோசிச்சுப் பார்த்தா ஒர்க்-அவுட் ஆகாதுனு தீர்மானமாத் தெரிஞ்சது. நீயும் படுக்கை சபலம் எல்லாம் இல்லாம யோசிச்சுப் பாரு.'

முன்பு இன்டர்நெட் கபேயில் இருவரும் சென்று பொழுதுபோக்கியபோது ஒருநாள் அருணகிரி, 'பேஸிக் இன்ஸ்டிங்ட்’ படத்தில் இடம் பெற்ற உடலுறவுக் காட்சிகளைக் காட்டினான். அதன் பின்னரான சந்திப்புகளில் அவள் அந்தப் படத்து கதாநாயகி ஷரோன் ஸ்டோன் போலத்தான் அவனுடன் படுக்கையில் இயங்கினாள்.

''ஷரோன் ஸ்டோன் நடிச்ச மத்த படங்களைப் பார்க்கிறயா?''

'இது ஒண்ணுக்கே இடுப்பு வலி தீரலை.''

அதற்கப்புறம் அவளைச் செல்லமா 'ஷரோன்’ என்றுதான் கூப்பிட ஆரம்பித்தான்.

'வாழ்க்கையில யாரையாச்சும் முன்னுதாரணமா வெச்சுட்டு ஃபாலோ பண்ணணும்.''

'எனக்கு ஷரோன்... உங்களுக்கு?''

'உனக்கு இப்பதான் ஷரோன். எனக்கு எப்பவும் மு.வ-தான்.'

'அவர் ஒழுக்கத்தை கம்பெல் பண்றவர்.''

'லிவிங் டுகெதர் பத்தியும் கதை எழுதியிருக்கிறார்.''

p76.jpgவளுக்கு அவன் அணிவித்து இருந்த மோதிரம் திரும்பி வந்துவிட்டது. நிச்சயதார்த்த மோதிரமா... நட்புச் சின்னமா... எதுவும் இல்லை. இனி ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. சரி என்னதான் சொல்கிறாள் என்று தெரிந்துகொள்ளலாமே என்று அவளின் கைபேசி எண்ணை முடுக்கினான். இன்னும் எண் மாறவில்லை. குறுஞ்செய்தியில் பிரிவு சொல்லி பிரிந்தவள், எடுப்பாளா... நிராகரிப்பாளா?

'சௌக்கியமா தேவி?'

'சௌக்கியம். எப்பவாச்சும் இப்பிடி ஹலோ சொல்லிக்கலாம்... அதுதான் நல்லது.'

'சரி...' அவனுக்கு, தொண்டை கமறியது.

'உனக்குத் தொண்டை கமறலயா ஷரோன்.'

'அதைத் தாண்டி வந்திட்டேன். உசுரு முக்கியம் இல்லையா? என்ன ஷரோன்னுட்டிங்க..?'

'ரொம்ப நாளா அப்படிக் கூப்பிட்டுப் பழக்கமாயிருச்சே!''

''நீங்கதானே யாரையாச்சும் ஃபாலோ பண்ணணும். உங்களுக்கு மு.வ-ன்னீங்க..'

'உனக்கு ஷரோன்னே!''

'உம்.''

'மோதிரத்தைத் திருப்பி அனுப்பியிருக்கீங்க.''

'அதுவும் ஷரோன் வழிதான். அவங்க வழி தனி வழி...'

'எப்படி?''

'டாம்டாம் பத்திரிகை. இந்த இஷ்யூ 35-ம் பக்கம் பாருங்க.''

பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப் பள்ளி முக்கில் இருந்த பெட்டிக்கடையில் டாம்டாம் அந்த வார அட்டையில் திரிஷாவுக்கும் நயன்தாராவுக்கு என்னென்ன வித்தியாசங்கள் என்று தலைப்பிட்டு திரிஷா மார்பைக் காட்டி சாய்ந்து சிரித்தாள். 35-ம் பக்கத்தைப் புரட்டினான்.  

எனக்குத் தேவை 'பேஸிக் இன்ஸ்டிங்ட்'' ஷரோன் ஸ்டோன்.

35-ம் பக்கம். அட... 35-ம் பக்கம் நடுப்பக்கம் அல்லவா! ஷரோன், மார்புகளின் பிளவு தெரிய தொடையை அகல விரித்துக்கொண்டு மேசை மேல் உட்கார்ந்திருந்தாள். ஷரோன் பற்றிய செய்தியை பரபரவென்று படிக்க ஆரம்பித்தான்.

'ஷரோன் ஸ்டோன், கூரியரில் காதலனுக்கு மோதிரத்தைத் திருப்பி அனுப்பியிருந்தாள்.’

https://www.vikatan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.