Jump to content

வெளிச்சக்கொடி


Recommended Posts

பதியப்பட்டது

வெளிச்சக்கொடி - சிறுகதை

சிறுகதை: சந்திரா, ஓவியங்கள்: செந்தில்

 

திருச்சி தாண்டி இரு பக்கங்களும் கருவேலங்காடு அடர்ந்திருந்த  நெடுஞ்சாலையில் கார் போய்க் கொண்டிருந்தபோது, அம்மாவும் நானும் விழித்துக்கொண்டோம். அந்தக் கருவேலங்காட்டைப் பார்க்கும்போதெல்லாம் தோகை விரித்துப் பறந்து வரும் மயில்தான் எனக்கு ஞாபகம் வரும். குழந்தைகள் கற்பனை செய்துகொள்ளும் தேவதைக் கதைகளில் வருவதைப்போல, அப்பாவின் முகத்தோடு மயில் பறந்துபோகும் காட்சி சில சமயங்களில் என் நினைவில் வந்துபோகும்.  கடவுள் நம்பிக்கை இல்லாத எனக்கு, இப்படிக் கிறுக்குத்தனமான அல்லது பகுத்தறிவற்ற சில வி‌ஷயங்களில் ஆழமான நம்பிக்கை உண்டு.

p48a_1522833553.jpg

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட என் அப்பா அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில், முள்கீரிடம் தரித்த  இயேசுவின் பெரிய உருவச்சிலை மருத்துவமனையின் நட்டநடுவில் வைக்கப் பட்டிருந்தது. மரணப்படுக்கையில் அப்பா இருந்த போது `அப்பா எப்படியாவது  பிழைத்துக்கொள்ள வேண்டும்’ என்று நான் கடவுளிடம் மன்றாடவில்லை. மாறாக, அங்கு இருந்த நாள்களில் எல்லாம் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் வலியையும் நோயுற்றிருந்த என் அப்பாவின் வலியையும் ஒப்பிட்டு, இயேசுவின் சிலையைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பேன். ஒரு நாளும் `பிதாவே, என் தந்தையைக் காப்பாற்றும்’ என உருகிப் பிரார்த்தனை செய்யவில்லை.  மருத்துவத்தை மட்டுமே நம்பினேன். நோய் முற்றி `அப்பா பிழைக்க முடியாது’ என்று மருத்துவர் அறிவித்ததும், அவரை ஆம்புலன்ஸில் ஊருக்கு எடுத்துச் சென்றோம்.

மூடப்பட்ட கதவுகளுக்கு நடுவே அப்பா கிடத்தப்பட்டிருந்த அந்த ஆம்புலன்ஸ் பயணம், ஒருபோதும் முடிவுக்கு வராமல் அப்படியே தொடர வேண்டும் என நினைத்தேன். ஆக்ஸிஜன் மூலம் சுவாசித்துக்கொண்டிருந்த அப்பாவின் மூச்சு ஊரைச் சென்றடைந்தால் முடிவுக்கு வந்துவிடும் என்ற பயம், என் மனதைச் சிதைத்துக்கொண்டிருந்தது. அதுவரை சிறு சிறு வார்த்தைகளை முனகிக்கொண்டிருந்த அப்பா, மூக்கில் பொருத்தப்பட்டிருந்த ஆக்ஸிஜன் கவசத்தைத் தூக்கி எறிந்துவிட்டு அம்மாவின் மடியில் தலைவைத்துப் படுத்துக்கொண்டார். அதன் பிறகு அவர் கண்களைத்  திறக்கவில்லை. நெஞ்சுக்குழியில் மட்டும் உயிர் இழுத்துக்கொண்டிருந்தது. நாங்கள் மூவரும் அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தோம். அக்காதான் `அப்பா இறந்துவிட்டார்’ என்று சொல்லி, பெரும் குரலெடுத்து அழுதார். அப்பாவின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத நான், பைத்தியம் பிடித்தவளைப்போல வண்டியிலிருந்து குதிக்க, ஆம்புலன்ஸ் கதவைத் திறக்க முயன்றேன். அக்காவும் அம்மாவும் அப்பாவைக் கீழே கிடத்திவிட்டு, என்னைப் பிடித்திழுத்து வண்டிக்குள் தள்ளிவிட்டார்கள். நான் அப்பாவின் தலைமாட்டில் விழுந்தேன்.

எங்கள் ஓலத்தைக் கேட்டு டிரைவர் வண்டியை ஓரமாக நிறுத்தினார். யார் என்று தெரியாத அந்த மனிதன் “இப்படி பொம்பளைங்களா வந்திருக்கீங்களே” என்று சொல்லி வருத்தப்பட்டு ஆறுதல் சொன்னார். அவர் பல மரணங்களைப் பார்த்திருந்தாலும் எங்களுடைய துயர் அவரிடம் எதிரொலிக்கத்தான் செய்தது.  `எழுந்துபோனால் அப்பா இறந்துவிடுவாரோ’ என பயந்தே அதுவரை சிறுநீரை அடக்கி வைத்திருந்தேன். அக்கா என்னைப் புரிந்தவர்போல ``வா, முதல்ல ஒண்ணுக்குப் போகலாம். ஊருக்குப் போய்ப் போக முடியாது” என்று சொல்லி, சாலையில் இரு பக்கங்களும் அடர்ந்திருந்த கருவேலங்காட்டுக்குள் அழைத்துப்போனாள்.

ஒண்ணுக்குப் போய்விட்டுத் திரும்பி வந்து, `இதுதான் அப்பா மரணித்த இடம்’ என்று அந்த இடத்தை மனதில் அழுத்தமாகப் பதிவுசெய்துகொண்டேன்.

ஒரு வருடம் சென்றபிறகு, அப்பாவின் திவசத்துக்காக ஊருக்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது, அந்த இடத்தை அடையாளம் கண்டு வண்டியின் வேகத்தைக் குறைத்து மெதுவாகச் செல்லும்படி டிரைவரிடம் சொன்னேன். காரின் வேகம் குறைத்து நிறுத்த முயன்றபோது கருவேலங்காட்டுக்குள்ளிருந்து தோகை விரித்த மயில் ஒன்று பறந்து வந்து காரின் முன் பகுதியில் அமர்ந்து சாலையின் மறுபக்கத்தில் இருந்த கருவேலங்காட்டுக்குள் சென்று மறைந்தது. `மயில் உருவில் வந்த அப்பாவின் ஆன்மாதான் அது!’ என்று அம்மா உறுதியாக நம்பினாள். அந்த நம்பிக்கை எனக்கும் ஆறுதலாக இருந்ததால், நானும் அப்படியே நம்பினேன். அன்றிலிருந்து கருவேலங்காட்டைப் பார்க்கும்போதெல்லாம் மயிலும் அப்பாவும்தான் ஞாபகம் வருவார்கள்.

ஆசைகளை நிராசைகளாக்கி, காலம் என்னை வெளித்துப்பிக்கொண்டிருந்த நாளில், ஒரு பயணம் மட்டுமே என்னைச் சீர்செய்யும் எனத் தோன்றியது. பகலெல்லாம் புறா ஓங்கரித்துத் துயரமான சத்தத்தை எழுப்பிக்கொண்டிருக்கும் நகரத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பு வாழ்க்கை, அம்மாவையும் மிகவும் தனிமைப்படுத்தியிருந்தது. அப்பா இருந்தவரை ‘நகரமும் கிராமமும் ஒன்றே’ என்பதுபோலத்தான் அம்மாவும் இருந்தாள். அப்பாவின் இல்லாமை எங்களைத் துயரப்படுத்திக் கொண்டிருந்தது.

அப்பாவின் மரணத்துக்குப் பிறகு இப்போது மூன்றாவது வீட்டுக்கு இடம் மாறிவிட்டோம். அதற்குக் காரணம் புறாக்கள்தான். கிராமத்தில் வாழ்ந்தபோது வானத்தில் தூரமாய்ப் பறந்துபோகும் புறாக்களை எப்படியாவது தரை இறக்கி எங்கள் வீட்டுவாசலுக்கு வரவழைத்துவிட வேண்டும் என்று வாசலில் தானியங் களைத் தூவிக் காத்துக் கொண்டிருப்பேன். வெகுகாத்திருப்புக்குப் பிறகு தரை இறங்கி தானியங்களைக் கொத்தும் புறாக்கள், தானியங்கள்மீதும் தன்னைப் பிடிக்கக் காத்திருக்கும் வேடனின் புற அசைவுகளின் மீதும் ஒரே மாதிரியான கவனத்தை வைத்திருப்பதைக் கூர்ந்து கவனித்திருக்கிறேன். மெல்லிய சத்தத்துக்கும் வீரியமான சிறகு அசைவை நிகழ்த்திவிட்டுப் பறந்தோடி மறைந்துவிடும். அதன் அடுத்த தரை இறங்கிப் பறத்தலுக்காகக் காத்திருந்த எனக்கு, இன்று புறாக்களைக் கண்டாலே வயிற்றில் பயம் கவ்வ, அப்பாவின் இல்லாமை பூதாகாரமாகித் துன்புறுத்துகிறது.

அப்பா படுக்கையில் வலியோடு இருந்த நாள்களில்தான் புறாக்களை வெறுக்கத் தொடங்கினேன். படுக்கையறையின் ஓரமாக இருந்த ஜன்னலில் வந்தமரும் புறாக்கள், ஓயாமல் துயர சத்தத்தை ஏற்படுத்திக்கொண்டே இருந்தன. விடாது ஒலித்த அந்தச் சத்தம், அப்பாவைப் பிரிவின் அகன்ற வாய்க்குள் மூழ்கடித்துக்கொண்டிருந்தது. அப்பாவின் மறைவுக்குப் பிறகும் புறாக்களின் சத்தம் தொடர்ந்துகொண்டிருந்தது. அந்த வீட்டிலிருந்து இடம் மாறினோம். அதற்குப் பிறகு குடிபோன வீட்டிலும் புறாக்கள் ஜன்னலில் வந்தமர்ந்து சத்தத்தை எழுப்ப, இப்படி வீடு மாறிக்கொண்டே இருக்கிறோம். இன்னும் சத்தம் ஓய்ந்தபாடில்லை. அம்மாவும் நானும் பழைய கதைகளைப் பேசிக்கொண்டிருக்கும் போது, அப்பாவின் கடந்தகாலங்களைப் பற்றி அம்மா நினைவுபடுத்திக்கொண்டி ருந்தாள். எங்கள் இருவரின் தனிமையும் ஒன்றுபோலவே இருந்தது. அதிலிருந்து விடுபட, அப்பா மிகவும் மகிழ்வாக வாழ்ந்த ஊருக்குப் பயணப்படுவது என இருவரும் தீர்மானித்தோம்.

கரட்டு மலையில் இருந்த பண்டாரவூத்து என்கிற அந்த ஊர், அப்பாவுக்கு மகிழ்வைத் தந்திருக்கும் என்பதில், எனக்குச் சிறிதும் மாற்றுக்கருத்தில்லை. என் சிறுவயதில் அந்த ஊருக்குப் போனபோதெல்லாம் அப்பாவைப்போல எனக்கும் அந்த ஊர் மகிழ்ச்சியைத் தந்தது.

பண்டாரவூத்துக் கரட்டு மலையில் கார் ஏறாது என்பதால், வருசநாடு வரை காரில் செல்வது என்றும் அதன் பிறகு அங்கிருந்து ஆட்டோவில் செல்வது என்றும் முடிவுசெய்தோம். வருசநாட்டைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சுற்றிவிட்டு, கடைசியாக பண்டாரவூத்துக்குச் சென்று தங்கலாம் எனத் திட்டமிட்டோம். அங்கே என் பெரியப்பா மகள் குடியிருந்ததால், தங்குவதில் பிரச்னை இல்லை என்று அம்மா சொல்லியிருந்தாள்.  

கருவேலமரங்கள் மறையத் தொடங்கி வருசநாட்டு ஆறு தென்படத் தொடங்கியது.

காரை நிறுத்தச் சொல்லிப் பாலத்தில் நின்று ஆற்றைப் பார்த்தேன். ஒரு பெரிய கண்ணீர்த் துளியைப்போன்று, அகலமான மணற்பரப்பில் ஒரு கோடாக ஆற்றில் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. ஆனால், ஆற்றுக்குப் பின்புலத்தில் வெகுதூரத்தில் படர்ந்திருந்த மலைகள், ஆற்றுக்கு என்றும் வற்றாத அழகை அளித்துக்கொண்டிருந்தன. என்றும் மறையாத அந்த இயற்கை ஒன்றே நம்பிக்கையின் ஊற்றாக என் மனதில் புனலாய்ப் பாய்ந்தோடியது. வறண்டிருந்த ஆற்றைக் கடந்து வண்டி முந்திரிக்காடுகள் நிறைந்த சாலையில் பயணிக்கத் தொடங்கியதும், மனம் கோடைமழையில் துளிர்த்த செடியைப்போல ஆசுவாசமடைந்தது. முந்திரியின் நறுமணம் பரவசமாக மூளையில் இனிப்பும் புளிப்புமாய் சுவை கூட்டியது. நறுமணத்துக்கு நாக்கின் ருசி இருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.

``இந்தப் பக்கமெல்லாம் வந்து பல வருசமாச்சுடி. வெறும் முள்ளா, மழை இல்லாம பொட்டல்காடா கெடந்துச்சு. இப்ப எல்லாத்தையும் முந்திரிக்காடாக்கிப்புட்டாங்களே. காட்டுக்குள்ள கஞ்சா வெதச்சு, எல்லார் கையிலும் பணம் செழிப்பாச்சுனு சொன்னாங்க. அதான் தண்ணி இல்லைன்னாலும் பணத்தை வெச்சு எங்கிட்டிருந்தோ தண்ணியக் கொண்டுவந்து முந்திரிக்காடாக்கிப்புட்டாங்க” என்று சொல்லி அம்மாவும் பரவசமாக வேடிக்கை பார்த்தபடி வந்தாள்.

 p48b_1522833579.jpg

கொஞ்ச தூரம் போனதும் முந்திரிக்காடு மறையத் தொடங்கி, இலவம்பஞ்சு மரங்கள் தென்படத் தொடங்கின. ஆங்காங்கே வறண்ட முள்மரங்களும் வெட்டவெளியில் காய்ந்த புல்லுமாய் மாறிய நிலக்காட்சிகள். ஆனால், அவை எனக்குள் மந்தத்தன்மையை அளிக்காமல்  இயற்கையின் அற்புத அழகாய்ப் பரிணமித்தது. அது வெயில் மிகுந்த கோடை. இருந்தும் சூரியன், தன் இளஞ்சிவப்பு மஞ்சளாலும் பட்டு போன்ற வெண்மை ஒளியாலும் அந்த நிலத்தை சொர்க்கமாக்கியிருந்தது. சமதளப் பகுதியிலிருந்து கரட்டில் ஏற ஏற வானம் தலைக்கு மேல் ஒளிபடர்ந்து என் ஆன்மாவை நிறைத்தது.

நான் மண்பாதைக் கட்டாப்பில் வயலெட் நிற ரேடியோப் பூக்கள் தென்படுகின்றனவா எனத் தேடத் தொடங்கினேன். சிறு குழந்தையாய் இருந்தபோது அந்தக் கரட்டில் ஒற்றைவழிப் பாதையில் என் அப்பாவோடு நடந்து செல்லும்போது வழியெங்கும் பூத்திருந்த ரேடியோப் பூக்கள், எனக்குப் பேரதிசயமாகத் தோன்றும். எப்போதும் ரேடியோப் பூக்களைப் பிடுங்கித் தலையில் வைத்துக்கொண்டு ஒய்யாரமாக நடந்து செல்வேன். அப்படிப் போகும்போது அப்பா கரட்டில் வளர்ந்திருக்கும் கற்றாழைப் பழத்தைப் பிடுங்கி, பழத்தின் நடுவில் இருக்கும் முள்களை நீக்கிவிட்டுக் கொடுப்பார். கற்றாழைப் பழத்துக்கு இருக்கும் ருசி, உலகில் வேறெந்தப் பழத்துக்கும் இல்லை எனத் தோன்றும். அப்பா எப்போதும் சின்னச் சின்ன விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவராகவும், மகிழ்வுடன் ஏற்றுக்கொள்பவராகவும் இருந்தார்.

நம் வாழ்வின் மிகப்பெரிய அவலம், வயது கூடக்கூட நாம் அதிசயப்படுவதை நிறுத்திக்கொள்வதுதான். `இவ்வளவுதான், இதிலென்ன இருக்கு?’ என்று எல்லாவற்றின் மீதும் ஓர் அலட்சியம் வந்துவிடுகிறது. பெரிய பெரிய விஷயங்கள் எனத் தேடத் தொடங்கி, குட்டிக் குட்டி அதிசயங்களை, சிறு சிறு மகிழ்வைத் துறக்கிறோம். கடைசியில் பெரிய விஷயங்கள் எதுவும் கிடைக்காமல்போக, வெறுமையில் எரிகிறோம். அந்த எளிமையின் பயணம் என் நினைவைக் கிளர்த்தி அப்பாவின் வழியே என் குழந்தைமையின் அதிசயத்துக்குள் கொண்டுசென்றது.

பண்டாரவூத்து ஊர் முழுவதும் பாறைகளால் நிறைந்திருக்கும். எழுபது வருடங்களுக்கு முன்புதான் உருவாக்கப்பட்ட ஊர் அது. அது நாடோடிகளின் ஊர். `விவசாயம் செய்ய நிலம் தேடி அலைந்த என் தாத்தா-பாட்டி, அவர்களின் உறவினர்கள் இன்னும் நிலமற்றவர்கள் சேர்ந்து உருவாக்கிய ஊர்’ என்று அப்பா அந்த ஊர் உருவான விதத்தை, அங்கு நிலத்தை உருவாக்கக் கடுமையாகப் போராடியதை, கதையாகச் சொல்லியிருக்கிறார்.

வறண்ட கரட்டு மலையில் விவசாயம் செய்யலாம் என்ற அவர்களின் முடிவு என்பது நிச்சயம் அசாத்தியமானதுதான். பசி, பாறையையும் பூக்கச்செய்யும் என்று அவர்கள் நம்பியிருக்கிறார்கள் அல்லது அவர்களுக்கு அதைவிடுத்து வேறு வழி இருந்திருக்கவில்லை. முன்பு அப்பாவோடு வருகையில், கரட்டின் உச்சிக்கு வந்ததும் அப்பாவின் கையை உதறிவிட்டு, ஊர் ஆரம்பிக்கும் முன்னே படர்ந்திருக்கும் பெரிய நீளமான பாறையில் குரங்கைப்போல தாவித் தாவிக் குதித்து ஓடுவேன். பிறகு, மண்வீடுகளும் குடிசைகளும் தென்படத் தொடங்கும். அப்போது அந்த ஊரில் குறைந்தது நூற்றைம்பது வீடுகளாவது இருக்கும். இப்போது ஊருக்கு முன்னே இருந்த பெரும்பாறை சுருங்கிக் குறைந்து போய் இருந்தது. ஆனாலும் பாறையின் அழகு குறையவில்லை. பாறைகளின் நடுவே ஒரு பள்ளம் உருவாகி, நீர் ஊறி, சிறு குளத்தைப் போல சூரிய ஒளியில் ஜொலித்துக் கொண்டிருந்தது. பிறகு, மாலை தொடங்குவதற்கு முன்னான இளம்வெயில் பாறையில் மெல்லிய கதிர்வீச்சாக இறங்கி மினுங்கிக் கொண்டிருந்தது.

வீடுகள் எதுவும் கண்ணுக்குப் புலப்படவில்லை. வீடு இருந்த இடங்களில் எல்லாம், உலவ மரங்கள் மட்டுமே ஊரை நிரப்பி இருந்தன. முன்னே செல்லச் செல்ல ஒரே ஒரு தெரு மட்டுமே தென்பட்டது. அவ்வளவுதான், ஊர் முடிந்திருந்தது. ஒரே தெரு, இருபது வீடுகள்கூடக் கிடையாது. அதிலும் ஐந்தாறு மண்வீடுகள் இடிந்துகிடந்தன. தகரம் போட்ட மண்வீடுகளுக்கு அருகில் இருந்த ஆட்டுத்தொழுவம், அந்த வீடுகளுக்கு அழகைக் கொடுத்தது. அப்போதுதான் மேய்ச்சலிலிருந்து திரும்பியிருந்த ஆடுகள், தெரு முழுக்க நின்று கத்திக்கொண்டிருந்தன. அதுவும் எங்கள் ஆட்டோவின் சத்தம் அவற்றை மிரளச்செய்து தெருவின் ஓரத்துக்குத் துரத்தியது. சில ஆடுகள் நடுத்தெருவில் நகராமல் நின்றபடி கத்திக்கொண்டிருந்தன. ஆட்டோவின் ஹாரன் சத்தம் அவற்றை நகரச் செய்யவில்லை. இன்னும் பேரதிசயங்களைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் மனிதர்கள், ஊருக்குள் ஆட்டோ வந்ததை  அறிந்து `யாருடா அது?’ என்று விநோதமாகப் பார்த்தார்கள். நானும் அம்மாவும் ஆட்டோவிலிருந்து இறங்க, அம்மாவை உடனடியாக அடையாளம் கண்டுகொண்டு நலம் விசாரிக்க ஆரம்பித்தார்கள்.

``என்னம்மா, இம்புட்டு தூரம் வந்திருக்கீங்க?’’ என்று சிவந்த கிழவி ஒருத்தி கேட்க, அவர்களிடம் ``சும்மா, என் மச்சான் மகளப் பார்க்க வந்தோம்’’ என்று அம்மா சொல்லி ஒவ்வொருவரையும் விசாரித்தபடி அந்தத் தெருவின் கடைசியில் இருந்த வீட்டுக்கு அழைத்துப்போனாள். இலவம்பஞ்சை வீட்டுவாசலில் போட்டு உடைத்துக்கொண்டிருந்த என் பெரியப்பா மகள் லட்சுமி அக்கா, என்னைப் பார்த்ததும் நம்ப முடியாதவளாய் ``ஆத்தே, என்னைக்கும் வராதவ வந்திருக்காத்தே’’ என்று சொல்லி மகிழ்வுடன் எங்களை வரவேற்று என்னைக் கட்டிக்கொண்டாள்.

நான்கு இளம்வயது குடும்பத்தைத் தவிர, கிழவன் கிழவிகள் மட்டுமே அந்த ஊரில் இருந்தனர். ஆட்டுக்குட்டிகளைத் துரத்திக்கொண்டு நான்கைந்து குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் அங்கே நிரந்தரமாக வசிப்பவர்கள் அல்லர். ஊரைக் காலி பண்ணிப்போனவர்களின் குழந்தைகள். விடுமுறைக்காகத் தங்கள் தாத்தா-பாட்டி வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் தவிர்த்து, அந்த ஊர் வயதானவர்களாலும் ஆடுகளாலும் மட்டுமே நிரம்பியிருந்தது. என் பெரியப்பா மகளும் அந்த ஊரில் நிரந்தரமாகக் குடியிருக்கவில்லை. வேறு ஊருக்கு இடம்பெயர்ந்துவிட்டார். அவர்கள் காட்டில் இருந்த இலவம்பஞ்சுகளைச் சேகரிக்கத்தான் அங்கு வந்திருக்கிறார்கள்.

என் அக்கா வீட்டுக்காரரின் தம்பி குடும்பம் மட்டும் அங்கு நிரந்தரமாகக் குடியிருந்தது. அவர்களின் குழந்தைகள் வெளியூரில் படித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் மட்டும் ஊரைக் காலிபண்ணாமல் ஐம்பது ஆடுகளை வளர்த்துக்கொண்டு, இலவம்பஞ்சுக் காட்டைக் கவனித்துக்கொண்டு அங்கேயே வாழ்ந்துவந்தனர். மாமாவின் தம்பிக்கு ஓரளவு வசதி இருந்தாலும் அந்தக் கரட்டை விட்டுக் கீழிறங்க மனமில்லை. அவர் மனைவி எவ்வளவு கெஞ்சிப்பார்த்தும் அந்த ஊர் கிழவிகளைப்போல,  ``இந்த ஊரே காலியானாலும் நான் பிறந்த இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன்” என்று பிடிவாதமாக இருக்கிறார்.

அப்பாவும் இவரைப்போலவே பிடிவாதமாக அந்த ஊரில் இருந்திருக்க வேண்டியவர்தான். தன்னைப்போல் தன் பிள்ளைகள் படிக்காமல் போய்விடக் கூடாது என்று, அக்காவும் அண்ணனும் பிறந்தபிறகு பிள்ளைகளைப் படிக்கவைக்க வேண்டும் என்று கூடலூருக்குக் குடிபோய் விட்டதாகச் சொல்லியிருந்தார். அப்பாவின் வீட்டில் ஏழு பிள்ளைகள். வண்டி மாடு வைத்து, கூடலூரில் சிறிய அளவில் விவசாயம் செய்துவந்திருக்கிறது தாத்தாவின் குடும்பம். எல்லோரின் பசியையும் அந்தச் சிறு நிலத்தால் பூர்த்திசெய்ய முடியவில்லை. நிலம் தேடி அலைந்த தாத்தா மற்றும் அவரின் உறவினர்கள், வருசநாட்டுப் பக்கம் காடு தேடி அலைந்து இந்த இடத்துக்கு வந்துசேர்ந்திருக்கிறார்கள். கரட்டுக்காட்டை விவசாய நிலமாக்கி, இந்த ஊரை உருவாக்கியிருக்கிறார்கள்.

அப்பாவுக்குப் படிக்க வேண்டும் என்று நிறைய ஆசை. இரண்டாம் வகுப்புகூட முடிக்காத நிலையில் அப்பாவின் குடும்பம் இடம் மாறி கரட்டுக்குக் குடிவந்துவிட்டது. ஆறு வயதிலிருந்து மண்வெட்டியைப் பிடித்து உழைத்த வாழ்வை, அப்பா கதையாகச் சொல்வார். இளம்வயது வந்த பிறகு, தான் படிக்கவில்லை என்று அப்பாவுக்குக் கவலை வர, கம்யூனிஸ்ட் ஆள்கள் நடத்திய மாலை வகுப்பில் சேர்ந்து படிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறார். தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி ஆள்களின் தொடர்பு, நிலப்போராட்டம் என்று அவர் வாழ்வு அந்தக் காலங்களில் அர்த்தம் மிகுந்து விளங்கியதாகச் சொல்லியிருக்கிறார்.

ஆளற்ற அந்த ஊரின் பொலிவு, என்னை வியக்கவைத்தது. அப்பழுக்கற்ற வானின் ஒளிதான் மனிதர்கள் நடமாட்டம் இல்லாத அந்த ஊரின் இன்றைய தனிமையை, இருண்மையை முற்றாகத் துடைத்தெறிந்துகொண்டிருந்தது. அந்த ஊரில் ஒரு கிணறு இருந்தது. தெரு ஓரத்தில் இருந்த லட்சுமி அக்கா வீட்டின் அருகில் பாறைகளுக்கு நடுவே இருந்த அந்தக் கிணறு அழகின் உச்சம். கிணற்றைச் சுற்றி ஒரு கொடி படர்ந்திருந்தது. கிணற்றடியில் இருக்கும் பாறைகளில் விழும் சூரிய ஒளி தெறித்து, அங்கு இருக்கும் செடிகொடியெல்லாம் மின்னிக்கொண்டிருந்தன. ஊரே ஒளிக்கோலமாய் இருப்பதைப்போல எனக்குத் தோன்றியது. நான் இதுவரை பார்த்ததிலேயே ஒளி மிகுந்த ஊர் பண்டாரவூத்துதான்.

இரவில் அந்த ஊர் இன்னும் மாயவித்தையோடு இருந்தது. தூரத்துக் காட்டிலிருந்து முந்திரிவாசம், காற்றில் பரவிக் கமழ்ந்தது. இயற்கை அந்த ஊருக்கென பிரத்யேகமான அழகை வழங்கியிருந்ததோ என்னவோ, வானின் இரவொளி நேராக இறங்கி வெளிச்சமும் இருளுமற்ற காலைப் பனியைப் போன்ற மிதமான ஒளியோடு இருந்தது.  சிறுவயதில் பாட்டி வீட்டில் அப்பாவுடன் தங்கிய நினைவுகளோடு அக்காவின் வீட்டில் கயிற்றுக்கட்டிலில் படுத்துக்கொண்டேன்.

இங்கே எப்போது வந்தாலும் பாதி நாள்கள் கோழிக்குழம்பும் சோறும்தான் பாட்டி சமைக்கும். இதெல்லாம் விருந்தாளிகள் வந்தால்தான். இல்லையென்றால், கூழும் வெல்லமும் இரவில் களியும்தான் பாட்டியின் உணவு. ஊரில் வசிக்கும் எல்லோர் வீட்டிலும் இதே நிலைதான். சோறு என்பது அரிதாகத்தான் இருக்கும். வீட்டுக்கு முன்னால் எப்போதும் சேவல்களும் கோழிகளும் கூவிக்கொண்டும் கொக்கரித்துக்கொண்டும் இருக்கும். தினை, சோளம், சாமை என எதையாவது பெண்கள் உரலில் போட்டு இடித்துக்கொண்டிருப்பார்கள். அது இனிமையான சங்கீதமாய் விட்டுவிட்டு சத்தம் எழுப்பும்.

தூக்கத்தில் கிணறு மட்டும் நினைவில் வந்துகொண்டே இருந்தது. கிணற்றடியில் விழுந்த ஒளிக்கற்றைகள்தான் கண்ணில் அகலாது நின்று ஞாபகத்தைத் தூண்டின.  முதலில் அந்தக் கிணறு பற்றிய இருளான வி‌ஷயங்கள்தான் நினைவுக்கு வந்தன. விருப்பப்பட்ட காதலனைக் கல்யாணம் செய்ய முடியாமல்போக, கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட பெண், தண்ணீர் எடுக்கும்போது கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண், தண்ணீர் மொண்டு குடிக்கப்போய் சாராய மயக்கத்தில் விழுந்து இறந்த நடுத்தர வயது ஆண் என, பல கதைகள் ஞாபகத்துக்கு வந்தன. ஆனால், அந்த ஊரின் நீராகாரம் அந்தக் கிணற்றின்மூலம்தான் என்பதால், யாராவது கிணற்றில் விழுந்து செத்துப்போனாலும் தண்ணீரை இறைத்துக் கீழே விட்டுவிட்டு மறுபடியும் கிணற்றில் ஊறும் தண்ணீரை சாதாரணமாகக் குடிக்கப் பழகிவிடுவார்களாம். என்ன ஆனாலும் அந்தக் கிணற்றடியில் அமர்ந்துதான் பெண்கள் தங்கள் கதைகளைப் பேசித் திரிந்திருக்கிறார்கள்.  

p48c_1522833604.jpg

ஆனால், அப்பா சொன்ன கிணற்றுக் கதை இதற்கு முற்றிலும் மாறானது. நிலம் திருத்திய அந்தக் காலத்தில் தண்ணீருக்காக வெகுதூரம் பெண்கள் ஊற்றைத் தேடி அலைந்து கொண்டிருப்பார்களாம். ஒரு மடக்கு தண்ணீருக்காக ஒரு நாள்கூடக் காத்திருந்தி ருக்கிறார்கள். காட்டை உருவாக்கிய பிறகு முதல் வேலையாக, கிணறு வெட்டுவதைப் பற்றித்தான் பெரியவர்கள் யோசித்திருக்கிறார்கள். பொட்டல்காட்டில் தண்ணீர் இருக்கும் பகுதியை அவ்வளவு எளிதில் கண்டடைய முடியவில்லை. அப்போது அந்த வழியாகச் சென்ற வெள்ளிமலைப் பழங்குடியினர் இப்போது இருக்கும் இந்தப் பண்டாரவூத்தைக் காட்டி, ``பாறை இருக்கும் இடத்துல நிச்சயம் தண்ணீர் இருக்கும்’’ என்று சொல்லி ஓர் இடத்தைக் கைகாட்டி கிணறு வெட்டச் சொல்லியிருக்கிறார்கள். அந்தப் பாறையைத் தோண்டி எடுக்கவே ஆறு மாதங்கள் பிடித்ததாம். பெண்கள் விவசாய வேலைகளைக் கவனிக்க, சிறுவனாக இருந்த என் அப்பா முதல் அத்தனை ஆண்களும் கிணறு தோண்டும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்பாவின் கைகளில் அப்போது தோன்றிய கைக்காப்பு பெரிய பெரிய கட்டியாகக் கடைசி வரை இருந்தது. கிணறு உருவாகி, தண்ணீர் வந்த பிறகு அந்தப் பகுதியில் வீடு அமைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதன் பிறகு பழங்குடியினர் வணங்கிய தெய்வமான பண்டாரப்பனையே அவர்களும் வணங்கி, அந்த ஊருக்கு `பண்டாரவூத்து’ என்று கிணற்றின் பெயராலேயே பெயர் வைத்திருக்கிறார்கள். காலம் மாற மாற, `பஸ் போகாத, பள்ளிக்கூடம் இல்லாத ஊரில் யார் வாழ்வார்கள்?’ என்று கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் ஊரைக் காலிசெய்துவிட்டார்கள். கடைசியில் பத்துக் குடும்பங்கள் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன.

காலையில் எழுந்து, சாப்பிட்டு முடித்த பிறகு முதல் வேலையாகக் கிணற்றடிக்குப் போனேன். அம்மாவை அழைத்து, நான் கிணற்றுமேட்டில் உட்கார்ந்திருக்கும்படி பல புகைப்படங்களை எடுத்துக்கொண்டேன். கிணற்றுக்குள் ஒன்றிரண்டு காய்ந்த இலைகள் மிதந்துகொண்டிருந்தன. அவை பேரழகோடு காட்சியளித்தன. தண்ணீரில் மரங்களின் எதிரொளிப்புகள் நிழலோவியங்களாகக் கிணற்றுக்குள் படர்ந்திருந்தன. தண்ணீர் மிகத் தூய்மையாக இருந்தாலும் இப்போது யாரும் கிணற்றுத் தண்ணீரைக் குடிக்கப் பயன்படுத்துவதில்லை. அரசாங்கம், போர் போட்டு அங்கே குழாயில் தண்ணீர் பிடிக்க ஏற்பாடு செய்திருந்தது. இப்போது பெண்களின் நடமாட்டம் இல்லாத கிணறு தனித்திருந்தது. கிணற்றைச் சுற்றி எத்தகைய ஒளி நிரம்பிக் கிடந்தாலும் அந்த இடம் சென்று கதைகள் பேசும் பெண்கள்தான் அந்த ஊரில் இல்லை. 

p48d_1522833619.jpg

நானும் அம்மாவும் அங்கிருந்து கிளம்பி, பக்கத்தில் இருக்கும் மீதி ஊர்களைச் சுற்றிப்பார்க்கச் சென்றோம். வழியெங்கும் அந்த ஊரில் அப்பாவோடு வாழ்ந்த நினைவுகளை அம்மா சொல்லிக்கொண்டு வந்தாள். மீண்டும் இரவுத் தங்கலுக்கு பண்டாரவூத்துக்கு வந்துவிட்டோம். அதுவரை எடுத்த புகைப்படங்களை எல்லாம் லேப்டாப்பில் இறக்கிப் பார்த்துக்கொண்டிருந்தேன். நான் அந்த நிலத்தில் பார்த்த ஒளியின் பாதியளவாவது புகைப்படத்தில் விழுந்திருந்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது. கிணற்றடியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்த்ததும் அதிர்ந்து நின்றேன். நான் கிணற்றுமேட்டில் உட்கார்ந்திருந்த எல்லாப் புகைப்படங்களிலும் என் முகத்துக்கு முன்னே நெளிந்த பாம்பு போன்ற வெளிச்சக் கொடி படர்ந்து என் தலைக்கு மேலே சென்று அங்கு இருந்த சிறு செடியின் கிளைகளோடு பிணைந்திருந்தது. நான் இருக்கும் எல்லாப் புகைப்படங்களிலும் அந்த வெளிச்சக்கொடியைப் பார்த்து மிரண்டுபோனேன். வயிற்றில் இனம்புரியா பயம் இறங்கியோடியது. கூடவே நெஞ்சடக்க முடியாத துயரமும். நான் இல்லாத கிணற்றுப் புகைப்படங்களில் அந்த வெளிச்சக்கொடி இல்லாதது எனக்குப் பெரும் அச்சத்தைத் தந்தது. படங்களைப் பெரிதாக்கி மீண்டும் மீண்டும் பார்த்தேன். அந்த வெளிச்சக்கொடி வருவதற்கான சாத்தியக்கூறுகள் அந்த இடத்தில் இல்லை. ஊர் இப்போது அதே ஒளியோடு இருப்பதாகவே தோன்றியது. அக்கா வீட்டிலிருந்து எழுந்து கிணற்றடியைப் பார்த்தேன். என் கண்கள் பளபளக்க, கிணற்றைச் சுற்றிலும் ஒளிர்ந்த பல வெளிச்சக்கொடிகள் மின்னிக்கொண்டிருந்தன. என்னால் உணர்வெழுச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கண்களில் நீர், தானே வழிந்தது. ஏதோ ஒன்று, கிணற்றை நோக்கி என்னை இழுத்தது. பயத்தை மீறிய புதிதான உணர்வு ஒன்று எழுந்தது.

சீராக வடிவமைக்கப்பட்ட இசை வடிவத்தைப் போன்று பல்வேறு குரல்களும் சத்தங்களும் காற்றில் பரவியிருந்தன. சிறு குழந்தையைப்போல அந்தச் சத்தங்களைக் கையில் பிடிக்க முற்பட்டேன். கோழிகளின் சத்தம், ஆடுகளின் சத்தம், உரல் இடிபடும் சத்தம், பல்வேறு மனிதர்களின் பேச்சு சத்தம்.  அதில் அப்பாவின் குரலைத் தனித்தறிய முயன்றுகொண்டிருந்தேன். அந்த ஊரில் அதுவரை வாழ்ந்து இறந்துபோனவர்களின் ஆன்மாவின் குரல்கள் கிணற்றைச் சுற்றியும், அந்த ஊரிலும் ஒளியாகப் பரவிக்கிடந்தன. பாறைகளின் வழியே நடந்து கிணற்றடிக்குப் போனேன். மெள்ள மெள்ள எல்லா ஒளிக்கொடிகளும் காற்றில் நகர்ந்து என் அருகே வந்துகொண்டிருந்தன. என் கால்கள் தரையை உணரவில்லை. ஏகாந்தமாக என் உடல் காற்றில் தளர்ந்து நின்றது. மனம் அதுவரை அடையாத பரவசநிலைக்குப் போனது. நகர்ந்து வந்த ஒவ்வொரு கொடியும், என் உடல் முழுவதும் ஒன்றன் பின் ஒன்றாகச் சுற்றத் தொடங்கின. என் உடல் ஐந்தடி ஒளிக்கொடியாக மாறி நிலவெளியெங்கும் பறந்து சென்றதை நான் பாறையில் நின்றபடி பார்த்துக்கொண்டிருந்தேன்.

https://www.vikatan.com/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நம் வாழ்வின் மிகப்பெரிய அவலம், வயது கூடக்கூட நாம் அதிசயப்படுவதை நிறுத்திக்கொள்வதுதான். `இவ்வளவுதான், இதிலென்ன இருக்கு?’ என்று எல்லாவற்றின் மீதும் ஓர் அலட்சியம் வந்துவிடுகிறது. பெரிய பெரிய விஷயங்கள் எனத் தேடத் தொடங்கி, குட்டிக் குட்டி அதிசயங்களை, சிறு சிறு மகிழ்வைத் துறக்கிறோம். கடைசியில் பெரிய விஷயங்கள் எதுவும் கிடைக்காமல்போக, வெறுமையில் எரிகிறோம். அந்த எளிமையின் பயணம் என் நினைவைக் கிளர்த்தி அப்பாவின் வழியே என் குழந்தைமையின் அதிசயத்துக்குள் கொண்டுசென்றது.

மனித இனத்துக்கு மட்டும் இதுவொரு அவஸ்தையாகவே இருக்கிறது....!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.