Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

லட்டு - ஜி.கார்ல் மார்க்ஸ்

ஓவியங்கள் : செந்தில்

 

ந்தக் கதையைப் படிக்கத் தொடங்குவதற்குமுன்பு, நீங்கள் இந்த ‘லட்டு’ எனும் வார்த்தையை எவ்வாறு உச்சரித்தீர்கள் என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். ‘ட்’ அப்புறம் ‘டு’ என்கிற வார்த்தைகளுக்கு மிகவும் அழுத்தம் கொடுத்து அதை உதிரச்செய்து விடாமல் ‘Latdu’ என மென்மையாக, அதேசமயம் Laddu என்று நீர்த்துப் போனதாகவும் அல்லாமல், வாஞ்சையாக அதை உச்சரிக்க முடிந்தால், இந்தக் கதை உங்களுக்குப் பிடித்துவிடும். “மென்மை, வாஞ்சை போன்ற வார்த்தைகள் ரொம்பவும் க்ளிஷேவானவை ஆயிற்றே... எதற்காக ஒரு கதையை இப்படித் தொடங்குகிறான்...” என்று உள்ளுக்குள் எழுந்துவரும் எரிச்சலை மறைத்துக்கொண்டு, “சரி சரி... மேலே சொல்...” என்று வாசிப்பதைத் தொடர்பவராக இருந்தாலும், இந்தக் கதை உங்களுக்குப் பிடிக்கும். ஆமாம்; எனக்கு உங்களைப் பற்றித் தெரியும். என்னதான் முகத்தை விறைப்பாக வைத்துக்கொண்டு, “நோ க்ளிஷே... நோ க்ளிஷே...” என்று கூப்பாடு போட்டாலும், உங்கள் மென்மையான இதயம் துடிப்பது எனக்குத் தெரிந்துவிடுகிறது. பிரியாணியை அந்தச் சுவைக்காக அல்லாமல், நான் சாம்பார் இல்லை என்று சொல்வதற்காக நீங்கள் முகச்சுழிப்புடன் தின்று கொண்டிருப்பதைக் காண எனக்குச் சிரிப்பாகத்தான் இருக்கிறது. இந்த லட்சணத்தில் கூண்டிற்குள் வைக்கப்பட்டிருக்கும் குரங்குக் குட்டியை, அதன் கழுத்தோடு அதனுடைய இயக்கத்தை நிறுத்திவிட்டு, அதன் மண்டையோட்டைச் சீவி, அதனுள்ளே புகை படிந்த பனியைப் போலப் புத்தம் புதிதாக இருக்கும் அந்தக் குட்டி மூளையில் ஸ்ட்ராவை வைத்துச் சற்றே அழுத்தி, பின்பு கலக்கி, அதைக் குடிக்கும் லாகவம் உங்களுக்கு வருமா என்று நினைக்கையில், எனக்குச் சிரிப்பு பீறிட்டுக் கிளம்புகிறது. இந்த இடத்தில் மிகவும் இயல்பாக நான் ‘லாகவம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறேன் பாருங்களேன். நீங்கள் நினைக்கும் அளவுக்கு இல்லாவிட்டாலும் நானும் கொஞ்சம் எழுத்தாளன்தான். கிட்டத்தட்ட அந்த விஷயத்தில் நானும் லட்டுவைப்போலத்தான். அவளுக்கு அவளது பெயரை மிருதுவாக உச்சரிப்பவர்களை மட்டுமே பிடிக்கும். குரங்கின் மூளையாக இருந்தாலும், மிக மென்மையாக, பதமாக, கவனமுடனும் குறிப்பாகக் காதலுடனும் கலக்கி அதை அருந்த வேண்டும் என்பது அவளது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

110p1_1519646372.jpg

தனது முப்பதுகளில் இருந்தாள் லட்டு. கணவனையும் தன்னையும் இணைத்துக்கொண்டிருக்கும் ஒரே குழந்தையான மூன்று வயது நவீனுக்கு, சென்ற வருடம் முன்பு வரை பாலூட்டி ஓய்ந்திருந்த முலைகளின் சுருக்கங்களைத் தடவிக்கொடுத்தபடி, குளிரூட்டப்பட்ட, அடர்த்தியான வண்ணங்களால் நெய்யப்பட்டுச் சன்னல்களில் போர்த்தப்பட்டிருந்த திரைச்சீலைகளின் வெளிச்சமின்மையால், அழகால் மிளிர்ந்துகொண்டிருந்த அந்த அறையின் கட்டிலில் படுத்திருந்தாள். இரண்டு கைகளாலும், பக்கவாட்டில் சரிந்துவிடாமல் விலாவுக்குமேலே இருபுறமும் கைகளை வைத்து அணைத்துக்கொள்கிறபோது, வட்டமாக மிக நேர்த்தியான அமைப்புடன் கூடிய முலைகளாக அவை இருக்கின்றன. லேசாகத் தளும்புகின்றன. அந்தத் தளும்புதலில் சுருக்கங்கள் அசைந்து அதன் ஒத்திசைவு மாறி, காம்புகளின் நீளத்தை மாற்றிக்காட்டுகின்றன. இன்னும் கொஞ்சம் பக்கவாட்டில் கைகளால் அழுத்தம் கொடுக்கிறபோது, காம்புகள் மிதந்து மேலேறுவது உன்மத்தம் தருவதாக இருக்கிறது. கிட்டத்தட்ட அதுவொரு சூரிய உதயத்தைப்போல அவளுக்குப் புதிதாக இருக்கிறது. ஆனால், கூசும் ஒளியோ கரிக்கும் காற்றோ போல அல்லாமல் தனுமையாக இருக்கிறது. தன் மேலே படர்ந்திருப்பவனிடம், இரு... என்று சொல்லிவிட்டு, ஒருமுறை அவள் இதைச் செய்துகாட்டியபோது, அவன் அவளது உடலின் இருபுறமும் கைகளை 110p4_1519646415.jpgஅழுத்தமாக ஊன்றிக்கொண்டு இன்னும் கொஞ்சம் உடலை மேலெழுப்பிக்கொண்டு அதை முழு  கண்கொண்டு பார்த்தான். இவளது பார்வைக்குத் தொண்ணூறு பாகைக் குறுக்காக இருந்தது அவனது பார்வை என்பது அவளுக்குத் தெரிந்திருந்தாலும், அவசரமாக அந்தக் கணக்கீட்டிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு, “எப்படி இருக்கு...” என்று கண்களைச் சுருக்கிக்கொண்டு அவனிடம் கேட்டாள். அந்தக் கேள்வியில் தொனித்த குழந்தைத்தனம் அவளுக்கே பிடித்திருந்தது. உயரமான தலையணையின் பொருட்டு, கொஞ்சமாக அழுந்தியிருந்த குரல்வளையில் இருந்து வெளிவந்த அவளது குரல், இயல்பைவிடக் கூடுதல் செக்ஸியாக இருந்தது. “உனது அழகு முகத்தைவிட அழகானதாகவும் உயிர்ப்புடனும் இது இருக்கிறது” என்று சொன்னான். ‘அது உயிர்ப்புடன் இருக்கிறது என்று சொல்வதற்கு, எனது முகம் உயிர்ப்பு குறைவாக இருக்கிறது என்று நீ சொல்லியிருக்க வேண்டியதில்லை’ எனத் தோன்றிய அதிருப்தியை வேகமாகக் கடந்தாள். ‘நீ இப்போது பார்த்துக்கொண்டிருப்பது கழுகுப் பார்வை. மேலும், நீ ஓர் ஆண். உன்னால் அப்படித்தான் பார்க்க முடியும். உனக்கு அப்படித்தான் பேசவும் வரும். நான் உன்னிடம் காட்டிக்கொண்டிருப்பது, உனது வாழ்வின் முதல் ஜோடி முலைகள் அல்லவே... என்ன செய்வது..?’ என்று சமாதானமடைந்தாள். ஆனால், அவன் அதன் மீது கன்னங்களைப் பதித்தபோது, அவனது தலையை நிமிர்த்தி அவனது வாயைக் காம்பின் மீது வைத்து அழுத்தினாள். ‘எப்போதும் எச்சிலின் ஸ்பரிசம் தேவை என்பதைத் தாம்தான் கேட்க வேண்டியிருக்கிறது’ என்பதை நினைக்கையில், அவளுக்கு அவன் மீது வாஞ்சை பெருகியது. கவனியுங்கள்! அவளது தீவிரத்தை வாஞ்சை என்ற சிமிழுக்குள் எவ்வளவு தந்திரமாக அடைக்கிறேன் பாருங்கள். எழுத்தாளன்தான் என்றாலும் ஆண் அல்லவா... a fucking crooked male chauvinist asshole..!

கலவியின் தொடக்கத்தில் அவள் கண்களைத் திறந்து,  மூடாதிருக்கும் அவனது கண்களை ஆழமாகப் பார்த்தாள். அப்படியான தருணங்களில் அவனது இயக்கம் அனிச்சையாக நின்றுவிடுவதை அந்த நேரத்திலும் அவன் உணர்ந்தான். பிறகு அவள் தனது கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள். உயரமான கட்டடத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருப்பவளைப்போல, கொஞ்சம் பிசகினாலும் அதிலிருந்து நழுவி அந்தரத்தில் மிதந்து தரையைத் தொட்டுவிடுபவளைப்போல, அத்தனை இறுக்கமாகக் கண்களை மூடியிருந்தாள். கண்களின் ஓர் ஓரத்தில் தொடங்கிய சுருக்கங்கள் இமைகள்மீது படர்ந்து மறுபக்கத்தில் குவிந்து கண்களின் நீளத்தைக் கூட்டின. அவற்றை மெல்லிய கோட்டைப்போல அவனை உணரச் செய்தன. திறந்திருக்கையில் சிறிய குளத்தைப்போலத் தத்தளித்துக்கொண்டே இருக்கும் அவை, இறுக்கமான இமைகளால் பூட்டப்பட்டபோது முகத்திலிருந்து விழிகளை அப்புறப்படுத்திவிட்டிருந்தன. அத்தகையதொரு முகத்தைக் காணும்போது அவனுக்கு விசித்திரமானதொரு ஆசுவாசம் கிட்டியது. ஆனால், அவள் சட்டெனக் கண்களைத் திறக்கும்போது, அந்த மினுங்கும் பார்வையை எதிர்கொள்வது அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. இத்தனைக்கும் அவள் மிகுந்த காதலுடன்தான் அவனைப் பார்க்கிறாள்.

அவன் அவளைக் கண்டடையத் தொடங்கிய போது, அவளது கரங்கள் அவனது முதுகில் ஆழமாகப் பதிந்திருந்தன. அழுத்தம்; பூஞ்சையான அழுத்தம். அவளது கைவளைகள் முதுகில் கீறின. அவளது நகக்கீறலை நகல் செய்யும் பிறாண்டலாக அது இருந்தது. முனகும் அவளது குரல், நிறைசூல் பூனையுடை யதைப்போலத் தடுமாறித் தடுமாறி வந்தது. அவள் தன்னைக் கைவிடும் தருணத்துக்காக ஏங்கினாள். அதை நோக்கிப் போகையில் தயங்கித் தயங்கி முன்செல்கிறாள் என்பதைப் போலத் தோன்றியது. ஆனால், மேலே செல்லச் செல்ல, அவள் தனது மூர்க்கத்தின் அளவைக் கூட்டிக்கொண்டே போனாள். கண்கள் இன்னும் இன்னும் இறுகின. கண்களில்லாத முகமொன்றின் உன்மத்தம் அவனது புலன்கள் மொத்தத்தையும் விழிப்புறச் செய்தது. அவனது இயக்கத்தின் விசையைக் கூட்டியது.

அவன் பெயர்களை, இடத்தை, இருப்பை மறக்கத்தொடங்கிய கணத்தில், படுக்கைக்கு அருகில் கிடந்த அவளது அலைபேசி க்விக்... க்விக்.. என்று ஒலியெழுப்பத் தொடங்கியது.  அந்தச் சிறிய ஒலி செய்தது, பெரிய குறுக்கீடு. அவனைப் பதறச் செய்துவிட்டது. காரணங்களற்ற வெறும் பதற்றம். அவள்வேறு கண்களைப் படக்கென திறந்தாள். அது அவனது கண்களுடன் மோதி அவனைக் குருடாக்கியது. இத்தனைக்கும் அலைபேசியின் ஒலி, தொந்தரவுக்கு உட்படுத்தும் அளவில் இல்லை. ஆனால், பக்கத்தில் வந்து தடவிக் கொடுப்பது போன்றதொரு நெருக்கமான அத்துமீறலை அது செய்திருந்தது. அந்த ஒலியின் ரகசியத்தன்மை தங்களது அந்தரங்கத்தில், அதுவும் ஒரு தரப்பாக நுழைந்துவிட்டதைப் போன்ற அதிர்வை இருவருக்கும் ஏற்படுத்திவிட்டது. அவள் சென்ற இடத்திலிருந்து இறங்கி வந்து தரையைத் தொடுவதற்கு நான்கு விநாடிகள் எடுத்துக் கொண்டாள். முகத்தில் படர்ந்திருந்த மயிர்க் கற்றைகளை இரண்டு விரல்களால் ஒதுக்கிக்கொண்டு, இருக்கும் இடத்திலிஇருந்து ஒருக்களித் தவாறு புரண்டு அலைபேசியை எடுக்கும்போது அவனும் தன்னைத் தனியாக்கிக் கொண்டிருந்தான் அலை பேசியின் இடைவிடாத குரல் கேட்டுக்கொண்டே இருந்தது. அது இறைஞ்சுதலைப் போன்றதொரு கனிவுடன் இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. கிட்டத்தட்ட அவனது முதுகில் இறுக்கிய அவளது மென்மையான கரத்தைப்போல. அதில் எந்த அழுத்தமும் இல்லைதான். ஆனால், அந்தத் தொடர் ஒலியில் ஒருவிதப் பிடிவாதம் இருப்பதைப் போல அவன் உணரத் தொடங்கியபோது அவள், ‘சொல்லுடா.... என்ன..?’ என்ற குரலால் அந்தப் பிடிவாதத்தின் முணுமுணுப்பை நிறுத்தியிருந்தாள். 110p4_1519646415.jpg

‘‘ம்ம்.. ம்ம்ம்...
சரி.... இல்ல...
ஆஃபீஸ்ல இல்ல...
வெளில...
தெரில...
ம்ம்ம்...
ஓகே... ஓகே...’’


அவன் அவளது இடுப்பில் மெள்ளத் தடவிக் கொடுத்துக்கொண்டிருந்தான். அவள் ஒருக்களித்துப் படுத்திருப்பதால், அவளது இடையின் பள்ளத்திலிருந்து கால்களை நோக்கிக் கைகளை நகர்த்தவும் பிறகு மீண்டும் தொடங்கிய இடத்துக்கு வருவதுமாக இருந்தான். அது அவளது சம்பாஷணையில் எவ்வித ஆதிக்கத்தையும் செலுத்தவில்லை. அதை அவள் விரும்பவே செய்தாள் என்பது தனது முகத்தை அவள் சுருக்கிக்கொள்ளும் தொனியில் வெளிப்பட்டது. அவளை வருடிக்கொண்டே படுத்திருப்பது ஆசுவாசம்போல அவனுக்கும் பட்டது. இப்போது அவள் புரண்டு மல்லாக்க படுத்தாள். இடது கையால் தொலைபேசியைப் பிடித்துக்கொண்டு வலது கையைக் கொஞ்சம் மடக்கி அவனது கன்னத்தை வருடியபடி மீசையில் வந்து நிறுத்தினாள். அவன் அவளது கைகளை எடுத்து நெஞ்சில் வைத்து அப்படியே பிடித்துக் கொண்டான். அவள் திரும்பி அவனது கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு உரையாடலைத் தொடர்ந்தாள். அவள் தொலைபேசியைக் கீழே வைக்கும்போது, அவன் கண்களை மூடி அவளது கழுத்தை ஓட்டிப் படுத்துக் கொண்டு, ஒரு கையை அவளது நெஞ்சின் குறுக்காகப் போட்டிருந்தான். அவனது மூச்சுக்காற்று அவளது தோளில் தவழ்ந்துகொண்டிருந்தது.  

110p2_1519646442.jpg

அவள் காத்திருந்தாள். போனில் யார் என்று அவன் கேட்கப்போகும் கணத்திற்காகக் காத்திருந்தாள். 20 நொடிகள் இருக்கும். நீண்டதொரு காத்திருப்பைப்போல அது இருந்தது. வெற்றுடம்பின் குழைந்த வயிற்றில் ஊரும் கால்களற்ற பூச்சியைப்போலக் காலம் அவளது சிந்தனையில் ஊர்ந்துகொண்டிருந்தது. அதை உதறி எறிய விரும்பிய அவள் அத்தகையதொரு நகர்வுக்காகக் காத்திருக்கையில், அவன் அவளது முகத்தைத் திருப்பி உதட்டில் முத்தமிட்டான். இங்கு வந்த பிறகு அவன் கொடுத்த முதல் முத்தத்தைப் போன்ற அதே தீவிரத்துடன் கூடிய முத்தம். கிட்டத்தட்ட அதுவொரு விடுதலையை அவளுக்குச் சாத்தியப்படுத்தியது. காலமெல்லாம் பிணைக்கப்பட்டிருக்கும் சங்கிலியின் உராய்விலிருந்து அவளுக்குத் தற்காலிகமாகவாவது ஆசுவாசத்தை அளிக்கும் ஒத்தடமாக அது இருந்தது. அவனது சுவாசம் நொறுங்கும் அளவுக்கு அவனை இறுக்கி அணைத்துக்கொண்டாள். முற்றிலும் உலராமல் இன்னும் துளியூண்டு ஈரம் மிச்சமிருக்கும் துணியை மேலே படர்த்தி இறுக்குவதைப்போல அதை உணர்ந்தான். அவளது பிரத்யேக வாசம் அவனது முகத்தில் அலைந்தது. எதையும் ஞாபகப்படுத்தாத, எந்த வாசனையும் அற்றதொரு வாசமாக அது இருந்தது.

இதுதான் எவ்வளவு ரம்மியமாக இருக்கிறது. எவ்வளவு ideal ஆக இருக்கிறது. ஆனால், இதை எழுதுகிற போது, ஓர் எழுத்தாளனாக எனது மூளைக்குள் பூரான்கள் ஊர்கின்றன என்பது தெரியுமா உங்களுக்கு? படிக்கும் உங்களுக்கும்கூட எட்டுக்கால் பூச்சியொன்று உங்களது இடுப்பிலிருந்து பாதம் நோக்கி ஊர்வதுபோலத் தோன்றலாம். இந்த அதிருப்தியை அவன் மீதோ அவள் மீதோ ஏற்றிவைத்து, அந்த விஷத்தை இறக்காமல் இந்தப் படைப்பு பூரணமாகப் போவதில்லை என்பது எனக்கும் தெரிகிறது. நானும் அந்த வன்மத்தின் அளவுகள் குறித்த கவலையில்தான் நேரம் கடத்திக்கொண்டிருக்கிறேன். அவளுடன் படுத்திருப்பவனோ அவளைத் தொலைபேசியில் அழைத்தவனோ அவளது கணவன் இல்லை என்பதை, உங்களைப் போலவே எனது தட்டச்சுப் பலகையும் யூகித்துவிட்டே வார்த்தைகளைத் துப்புகிறது. எப்படி உங்களது துர்சிந்தனைகளுக்கு நீங்கள் மாத்திரம் பொறுப்பில்லையோ, அதேபோலத்தான் எனது தட்டச்சிலிருந்து வரும் வார்த்தைகளுக்கு நானும் பொறுப்பேற்பதில்லை. நாம் இருவரும் எங்கோ ஒரு பொதுவான இடத்தில் வைத்துத்தான் ட்யூன் செய்யப்பட்டு இருக்கிறோம். அதிலிருந்து சிறிய விடுதலை ஒன்றை, மூச்சு முட்டலைத் தவிர்க்கும் வெளியேற்றம் ஒன்றைச் சாதித்துக் கொள்வதற்காக, அழுத்தும் தண்ணீருக்கு வெளியே வந்து வாயை வாயைத் திறக்கிறோம். காற்று பலமாக அடிக்கிறது. இவ்வளவு மண்ணைக் கொண்டுவந்து அது வாயில் கொட்டவில்லை என்றால், நமக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைத்திருக்கும். எல்லா உறவுகளையும்போல இந்த உயிர்மூச்சின் பரிதவிப்பிலும்கூடப் பக்கவிளைவுகள் இருப்பதை என்னவென்று சொல்வது. உங்களைப்போலவே எனக்கும் இந்தச் சூழல் அலுப்பாகத்தான் இருக்கிறது.

ஒன்று மட்டும் இந்தக் கதையை எழுதுபவனாக எனக்குத் தெரியும். அவள் நிஜமாகவே வேறொரு அலைபேசி அழைப்பை எதிர்பார்க்கிறாள். அது வரக் கூடாது என்றுகூட நினைக்கிறாள். தனது பதற்றத்தை மறைத்துக்கொள்ளவும் செய்கிறாள். உண்மையாகச் சொன்னால், உன்மத்தத்தின் களிப்பில் அவள் அதை மறந்தும்விடுகிறாள். அவளது முலைகளைத் தடவுவதாக நான் எழுதிச் செல்லும்போது, ஒரு கணம் நீங்கள் அவளது துயரங்களை மறந்துவிட்டு அவற்றின் தனுமையில் கரைந்துபோகிறீர்கள் அல்லவா... அதைப்போல. ஏனெனில், அவள் எதிர்பார்த்திருக்கும் அந்தச் செய்தி அத்தனை அமைதிகொண்டதாக இருக்காது என்கிற அச்சம் அவளைப் பீதியூட்டுகிறது. நல்ல  செய்திகளை அவள் எப்போதாவதுதான் தெரிந்துகொள்ள நேர்கிறது என்கிற எதார்த்தம் அவளை இவ்வாறு யோசிக்கப் பழக்கியிருக்கிறது. மிக எளிதாக ஓர் உதாரணம் சொல்கிறேனே. ஓர் அலைபேசி உரையாடலை அவள் முடிக்கும்போது, அது யார் என்று கேட்காத சக உயிருக்காகக் காத்திருந்து ஏமாறுபவள் அவள். அந்த எதிர்பார்ப்பு எவ்வளவு எளியதோ, அவ்வளவு சிக்கலானதும் அபூர்வமானதும் என்பதை அதற்காக ஏங்குபவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். இப்படித்தான் தாம் இருக்கும் ஒன்றிலிருந்து அவள் மேலும் மேலும் வெளியேறிக்கொண்டே இருந்தாள். அதே சமயம், உடனிருக்கும் எல்லாமே பதற்றத்தை நோக்கி உந்தும் காரணிகளாக மாறிப்போனதற்கு தான் எவ்வகையிலும் பொறுப்பல்ல என்றும் அவள் நம்புகிறாள். அது உண்மையும்கூட. இதை எழுதுபவனாக எனக்கும்கூட அது சரி என்றே தோன்றுகிறது. ஆனால், அதை முழுக்கவும் ஏற்றுக்கொள்வதில் எனக்குத் தயக்கம் இருக்கிறது. இந்தத் தயக்கத்திற்குக் காரணம் எனக்கு அவள் மீதோ அவள் கைகொண்டிருக்கும் பெண் என்பதன் தன்னிலை மீதோ எனக்கு இருக்கும் அச்சமோ பதற்றமோ அல்ல. கசப்போ கையறு நிலையோகூட அல்ல. வேறொன்று. அது என்ன தெரியுமா. அதிகாலையில் அந்த குழந்தை இறந்துபோனதற்கு - அதுதான் அவளது மகனாகிய இரண்டு வயது நவீன் - அவளும் காரணம் என்று நான் தீர்மானமாக நம்புகிறேன்.

இன்னும் கொஞ்சம் மேலாக அவனைக் கொன்றதில் அவளுக்குப் பங்கிருக்கிறது என்றும் நான் நினைக்கிறேன். இந்த  ‘பங்கிருக்கிறது’ என்கிற வார்த்தையைப் படிக்கிறபோது அதில் பங்குபெற்ற இன்னோர் ஆள் யாரென்று நீங்கள் தெரிந்துகொள்வதற்கு அவசரப்படுவீர்கள். வேறு யாராக இருக்க முடியும்? அவளது கணவன்தான். “அந்தக் குழந்தைக்கு யார் மருந்து புகட்டுவது” என்பதில் இரண்டு பேருக்கும் இடையே ஏற்பட்ட போட்டியில், இரண்டு பேருமே புகட்டாமல்விட்டதில் அவன் இறந்துபோனான் என்பது மங்கலாக நினைவுக்கு வருகிறது. ஆனால், அவள் வேறு மாதிரி அந்த 110p4_1519646415.jpgஇறப்புக்கான காரணத்தை உருவகிக்கக்கூடும். அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. அவளுக்குத்தான் அவன் இறந்திருப்பது இன்னும் தெரியவில்லையே. இதை எழுதும் எனது நிஜத்துக்கும், நேற்றைய இரவு அவளுக்கும் குழந்தைக்கும் முதுகு காட்டிக்கொண்டு உறங்கிய அவளது கணவனது நிஜத்துக்குக்கும், இரண்டு முதுகுகளுக்கிடையில், கலங்கிய தண்ணீரில் வாயைத் திறந்து திறந்து மூடிக்கொண்டிருந்த மீன் குஞ்சையொத்த நவீனின் நிஜத்துக்கும், எப்போதும் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த அரூபமான கனத்த சங்கிலியின் வளையமாக இருக்கும் மகனின் இருப்பைச் சுமக்கவும் முடியாத விலகவும் முடியாத அவளது நிஜத்துக்கும் இடையில் மயிரளவு, மயிரளவேதான் வேறுபாடு இருக்கிறது. இன்னும் நுணுக்கமாகச் சொல்ல வேண்டுமானால், அந்த வேறுபாட்டின் எடையும் நவீனின் உயிரும் சமமாக இருந்திருக்கக்கூடும். நோயுற்றிருக்கும் மூன்று வயதுக் குழந்தையின் உயிருக்கு என்ன வலு இருக்கும் சொல்லுங்கள்? இன்னும் சொல்லப்போனால், எனக்கும் உங்களுக்கும் அதன் பெற்றோருக்கும் இருக்கும் அளவுக்குக்கூட அதற்கு வலுவான தரப்போ, நியாயமோ இல்லை. அதனால்தான் அது உயிரை விட்டுவிட்டது. எப்போதெல்லாம் தம்மால் மூர்க்கமாக இருக்க முடிவதில்லையோ, அப்போதெல்லாம் தாம் வழியனுப்பி வைக்கப்படுவோம் என்பது அதற்குத் தெரிந்திருக்கவில்லை. இல்லையென்றால், அது இன்னும் கொஞ்சம் சத்தமாக அழுதிருக்கும். இரண்டு பேரின் உறுதியான தன்முனைப்பின் பனிக்கட்டியை உடைக்கும் அளவுக்கு அதன் அழுகைக்கு வீரியம் இருந்திருக்க வேண்டும். ஆனால், அதுவோ சற்று முன்பு அவளுக்கு வந்த அலைபேசி அழைப்பின் குரலைப்போல முனகியது. பிறகு ஏன் இருவரும் தவறவிட்டார்களாம்..? மெல்லிய குரல்களால் எப்போதும் அந்தரங்கத்தைத்தான் ஊடுருவ முடியும், வெளிப்படையானவற்றையல்ல என்பது குழந்தைக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால், ஓர் எழுத்தாளனாக நான் யூகித்துவிட்டேன். எழுத்தாளனாக இருப்பதன் வசதியே எல்லாவற்றையும் யூகித்துவிடுவதுதான். ஒருவகையில் அது அச்சமூட்டும் வாதையாக இருக்கிறது. எல்லாவற்றுக்கும் ஒரு interpretation-ஐத் தரவேண்டியிருக்கிறது. ஆனாலும் அதில் இருக்கும் ஒரு பிரத்யேகக் கிளுகிளுப்புக்காகத்தான் அதன் சிரமத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அது என்னவென்றால், எழுதுபவனுக்கு விருப்பமான வகையில் சத்தியத்தைத் திரித்து – இல்லை... இல்லை... சத்தியத்தை உருவாக்கி - வாசிப்பவர்கள் முன்னால் ஒரு மாயவலையை - இல்லை... இல்லை... ரூபவலையை - நெய்துவிடுவது. உதாரணத்துக்கு, இப்போதுகூட நான் நவீனுக்கு வழங்கியிருக்கும் பெறுமதியைப் பாருங்கள். நான் அவனை எங்குமே குற்றப்படுத்தவில்லை. தவறு சொல்லவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, அவன் குழந்தை. இரண்டு, அவன் இறந்துவிட்டான். ஆனால், மிகவும் அந்தரங்கமாக, நீங்கள் என்னை எவ்வளவு தவறாக நினைத்தாலும் சரி, மிக மிக ரகசியமாக அவனது சாவில் அவனுக்கும் பங்கிருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். அவனது எடைக்கு ஏற்ற பங்கு. நாம் வளர்ந்துவிட்டதால் நமக்குக் கூடுதல் பங்கு. இதைச் சொல்வதில் எனக்கு அவ்வளவு பயம் இருக்கிறது. யார் மீது..? உங்கள் மீதா..? எனக்குத் தெரியவில்லை. இதைப் படிக்கும் உங்களுக்காக நான் ஏன் அஞ்ச வேண்டும்...? மிஞ்சி மிஞ்சிப் போனால், இதற்கு வலுவான காரணம் ஒன்றைச் சொல்லிவிட்டால், நீங்கள் சமாதானமடைந்துவிடப்போகிறீர்கள். அதனால் அதைப் பயம் என்று சொல்ல முடியாது. இதுவரை அதற்குப் பொருத்தமான வார்த்தை ஒன்றும் புழக்கத்தில் இல்லை என்பதே காரணம். ஏனென்றால், அப்படியான ஒரு தரிசனம் இங்கு யாருக்கும் அமைந்திருக்கவில்லை என்பதால், இதை வாசிக்கும் உங்களால் புரிந்துகொள்ளமுடியாது என்பதால், நான் ஒரு வரம்பிற்கு உட்பட்டு இதைச் சொல்லிச் செல்கிறேன். நீங்கள் அங்கீகரித்தால் நவீனின் சாவை அது சரிதானே என்று எழுதும் தைரியம்கூட எனக்கு உண்டு. அதற்கு ஆதரவான சில வார்த்தைகளை நான் புதிதாகப் படைக்க வேண்டும் அவ்வளவுதான். நீங்கள் விரும்பவில்லை என்றால், ஒரு குழந்தை கைவிடப்படுவதன் அபத்தத்தை உங்களால் சகிக்க முடியாது என்றால், நான் பூடகமாக அதைக் கடவுளின் பிழையாக எழுதுவேன். அதற்கு நம்மால் மாற்ற முடியாத ஒரு காரணத்தைக் கற்பித்துவிடுவேன். இந்த இடத்தில் நீங்கள் எழுத்தாளனைச் சபிக்க விரும்புகிறீர்கள் இல்லையா? ஆனால், நீங்கள்தான் இந்தக் கதையின் தொடக்கத்தில் க்ளிஷே என்று அவனைக் கேலி செய்ய நினைத்தீர்கள்!

110p3_1519646469.jpg

நாம் மீண்டும் திறந்த விழிகளுடன் விதானத்தைப் பார்த்துக்கொண்டே சம்பாஷணையில் இருப்பவளிடம் வருவோம் இந்தச் சம்பவத்தை அவள் எப்படி உருவகித்திருப்பாள் தெரியுமா? அதற்கு, அவள் வீட்டைவிட்டு வெளியேறிய தருணத்தை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். அவள் வீட்டை விட்டு வெளியேறிய அந்த அதிகாலையில், பனி படர்ந்த, புறநகர் என்பதால், இன்னும்கூடக் குருவிகளின் சத்தம் எழுப்புகிற, செருப்பில்லாமல் நடந்தால் கால்களைச் சில்லிடச் செய்கிற, சிமென்ட்டையோ, தாரையோ கொட்டி மண்ணைக் கெடுக்காத அந்தத் தெருவைக் கடந்து, சாரை சாரையாய்ச் சரக்கு லாரிகள் மட்டுமே ஊர்ந்துகொண்டிருக்கிற பிரதான சாலைக்கு வந்து, அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து, இதோ அவளது மார்பின் குறுக்காகக் கைகளைப் போட்டுக்கொண்டு படுத்திருக்கும் அவனுக்குத் தகவல் சொல்லி வரச்சொல்லிவிட்டு, அந்த சர்வீஸ் அபார்ட்மென்ட்டை வந்தடைந்து, அவனைக் கட்டிலுக்கு அருகில் இருந்த நாற்காலியில் எதிர்கொண்டு, அவனிடம் இருந்து அந்த அதிகாலை முத்தத்தைப் பெற்றவளது பார்வையில் இந்தக் கதையே வேறாக இருக்கிறது. இந்தக் கதையென்றால் நவீனையும் உள்ளடக்கி யதுதானே.

எப்போது பொழுது விடியும் என்று ஆத்திரத்துடன் கிளம்பி வந்தவளுக்கு ஒன்று மட்டும் தெரிந்திருந்தது. குழந்தைக்கு ஜுரம் கூடிப்போயிருக்கும் என்பதுதான் அது. அதொன்றும் புதிது கிடையாது. ஏற்கெனவே இரண்டு மூன்று முறை நடந்திருக்கிறது. ஒருமுறை காய்ச்சல் கூடிப்போனபோது, அரக்கப் பரக்க மருத்துவமனைக்கு ஓட, ஒரு பக்கெட் ஐஸ் வாட்டரை எடுத்து, கண்களை மட்டும் நன்றாகப் பொத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு, அந்த மருத்துவன் அப்படியே அனலாகத் தவிக்கும் அந்தப் பிஞ்சின் தலையில் கொட்டினான். இந்த ‘பிஞ்சு’ எனும் வார்த்தை பூஞ்சையான மனதுள்ள எழுத்தாளனின் குரல் என்பது உங்களுக்குப் புரிகிறதுதானே..? அவன் அப்படியான ஒருவனும்தான். சட்டென்று நெகிழ்ந்து கண்ணில் தண்ணீர் கொண்டுவிடுவான். மருத்துவனின் அளவுக்கு இல்லையென்றாலும் அதற்கு நிகராக அவளும் அதை மருத்துவ வழிமுறை என்றே நினைத்தாள். சிகிச்சையின் தீவிரத்தைக் கண்டு அய்யோ.. என்றெல்லாம் பதறவில்லை. குழந்தையின் கண்களை இறுக்கமாகப் பொத்திக்கொண்டாள். ஆனால், அவளது கணவன் அந்த அறையில் நிற்கச் சகிக்காமல் வெளியேறியிருந்தான்.

ஆக, தமக்கு நன்கு பழக்கமான மருத்துவமனையில் இருந்தோ – அந்த நர்ஸ்வேறு அவளுடனும் குழந்தையுடனும் நன்றாகப் பழகியிருந்தாள்; அவளுக்கு நவீனின் சுருட்டை முடியை அவ்வளவு பிடிக்கும் - அல்லது தனது கணவனிடமிருந்தோ தொலைபேசி வரக்கூடும் என்று மட்டுமே அவள் நினைத்தாள். ஆனால், அவள் வெளியேறியபோதே அந்தக் குழந்தை இறந்துவிட்டிருந்தது என்பது இதை எழுதும் எனக்குத் தெரிந்திருக்கிறது. அவளுக்குத் தெரியவில்லை பாவம். அவள் கிளம்புவதை, அவள் பாத்ரூம் சென்று வருவதை, அலமாரியைத் திறப்பதை, செருப்புகளை அணிவதை, கண்களைத் திறக்காமலேயே புரிந்துகொண்டிருந்தவனுக்கு, அவளது முகத்தைப் பார்க்கக்கூட விருப்பமில்லை. அவளைத் திட்டுவதற்குக்கூட அவன் தயாராக இல்லை. அவளது இருப்பின் அண்மையில் இருந்து வெளியேற அவளே ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறாள் என்றாலும் தனது இருப்பை அலட்சியமாகக் கையாளும் அவள்மீது அவனுக்குப் பொங்கிய ரவுத்திரம், ‘ஒழியட்டும்’ என்றே நினைக்கவைத்தது. அவளைத் திட்டுவதற்காகத் திரும்பியிருந்தால்கூட அந்த ஜில்லிட்ட உடலை அவன் தீண்டியிருக்கக்கூடும். தவறவிட்டுவிட்டான். இப்போது காத்திருக்கிறான். அவள் திரும்ப வருவதற்குள், அந்தக் குழந்தையின் முகத்தை அவளுக்குக் காட்டாது அதைப் புதைத்து விட வேண்டும் என்று இறுகிய முகத்துடன், அந்தக் குழந்தையின் மீது மாறாத பரிவுடன், அதைப் பெற்றவள்மீது தீராத வெறுப்புடன், குழந்தையைக் கவனியாது விட்டதன் குற்றவுணர்ச்சியின் போதத்தில் கண்ணீர் மல்க, இப்படியான நேரத்தில் அதிகாலையில் கிளம்பிப்போனவளின் வருகைக்காகக் காத்திருக்கும்போதும் அவள்மீதான தீரவே தீராத காதலால் ரகசியமாகத் துடிக்கும் அபூர்வக் கணத்தைக் கடந்துவிட விரும்புகிற, – இவை எல்லாமே உண்மையா, இல்லை எதாவது ஒன்று மட்டுமே உண்மையா அல்லது எல்லாமே பொய்யா என்றெல்லாம் இதைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் ஏன் சந்தேகிப்பதில்லை என்று எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. இதை நான் முடிவு செய்ய வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள். நீங்கள் ஏந்தப்போவது என்ன மாதிரி ஆயுதம் என்பதைத் தீர்மானிக்கும் வாய்ப்பை அதன்மூலம் நானே உருவாக்கித்தர வேண்டும் என நினைக்கிறீர்கள். அவன் உணர்வதில் இது ஒன்று மட்டுமே சரி என்றும், அதைத் தேர்ந்து நான் உங்கள் முன்னால்வைக்க வேண்டும் எனவும் விரும்புகிறீர்கள். எல்லாப் பாவத்தையும் ஒரு எழுத்தாளன்தான் சுமக்க வேண்டுமா? அவன் அவ்வளவு சபிக்கப்பட்டவனா? இப்படி நீங்கள் அழுத்துவதால்தான் அவன் குழம்பிப் போகிறான். அதனால்தான் சண்டையிட்டுக்கொண்டு பேசாமல் இருந்த தம்பதியர் இருவரும் ஒருவர் கொடுத்தது அறியாமல் இரண்டுமுறை குழந்தைக்கு மருந்து புகட்டியதைக்கூடக் கவனிக்காமல் குழம்பிவிட்டான். இருந்தாலும் குழந்தை இறந்துவிட்டது. அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அது இறந்ததற்கு உறுதியான எந்தக் காரணமும் இல்லை. தனது நீண்ட மயக்கத்திலிருந்து அது வெளியேறாமல் அங்கேயே நிலைத்துவிட்டது. உறக்கத்தைப் போல. என்ன ஒன்று, இனி கனவில் திளைக்கும்போது, அதன் உதடுகள் நெளியாது. 

அந்தியாகிவிட்டிருந்தது. அவளது ஆத்திரம் கொஞ்சம் மட்டுப்பட்டிருந்தது. அன்று அவள் ஈடுபட்டது அவளது மிகச் சிறந்த கலவிகளில் ஒன்றாக இருந்தது. அதில் தென்பட்டது காதலின் ரேகைகளாக இருக்கக்கூடும். அவள் ஆட்டோவில் பயணிக்கையில் தோன்றிய அதிர்வு அந்த முயக்கத்தின் ஒத்திசைவை நினைவூட்டி அவளைப் பரவசப்படச் செய்தது. இடையில் வந்த தொலைபேசி அழைப்பை அவன் எவ்வளவு எளிதாகக் கையாண்டான் என நினைக்கையில், அவளுக்கு அவன்மீது அன்பு பெருகியது. ச்சை... எப்படி ஒரு நீர்த்துப்போன வார்த்தையில் அவளது நிலையைச் சொல்லிவிட்டேன் பாருங்கள். ஆனால், இப்போது அவளிடம் அடர்த்தியாகிக்கொண்டே வரும் காதலோடு அந்தச் சிசுவை அவள் அணைத்துக் கொண்டால் – அது இன்னும் அங்கு இருக்க வேண்டும் -  அதற்கு உயிர் வந்துவிடும் என்று நான் சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள். cliche... everything is f......  cliche...!

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.