Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

பாதை - சிறுகதை

 
 
கவிதைக்காரன் இளங்கோ - ஓவியங்கள்: ஸ்யாம்

 

p52g_1533102201.jpg

திங்கட்கிழமை காலை நேரப் பரபரப்பைத் தவிர்க்க திட்டமெல்லாம் போட்டு ஒவ்வொரு வாரமும் தோற்றுதான்போகிறாள் ரம்யா. ஞாயிற்றுக்கிழமைகளின் அசமந்தக் காலையிலேயே அதை முடிவுசெய்வாள். ஆனாலும் முடிவதில்லை. ரயில்வே டிக்கெட் கவுன்ட்டரில் டிரெயின் நீளத்துக்கு ஒரு க்யூ நிற்கிறது. சனிக்கிழமையே மாதாந்திர பாஸை ரெனியூவல் செய்திருக்க வேண்டும். விட்டாச்சு.

p52a_1533102182.jpg

தாம்பரம் போகும் டிரெயின், மூன்றாவது நடைமேடையிலிருந்து கிளம்பக் காத்திருக்கிறது. ஏற்கெனவே லேடீஸ் ஸ்பெஷலைத் தவற விட்டுவிட்டாள். இது சூப்பர் ஃபாஸ்ட். `சட்டென மாம்பலம் ஸ்டேஷன் போய்விடலாம்’ என, மனக்கணக்கு வேகமாக ஓடியது. ஆனால், வரிசை மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

இவளுடைய ரெனியூவல் பாஸுக்கு எக்ஸ்ட்ரா ஒன்றரை நிமிடம் ஆயிற்று. விருட்டென கவுன்ட்ட ரிலிருந்து திரும்பினாள். பக்கத்து வரிசையை ஊடுரு வினாள். வேகவேகமாக டிரெயினை நோக்கி விரைந்தாள். அறிவிப்பு ஒலிக்கத் தொடங்கியது.

தொலைவில் இருந்த மஞ்சள் சிக்னல் இன்னும் பச்சைக்கு மாறவில்லை. அதற்குள் லேடீஸ் கம்பார்ட்மென்ட்டைப் பிடித்துவிடலாமா என யோசிக்கும்போதே பச்சை விழுந்தது. இன்னும் இரண்டு பெட்டிகள்தான். `ஓடலாமா... வேண்டாமா? ஊஹும்.’ இன்னைக்குப் பார்த்து சேலை கட்டிக்கொண்டு வந்திருக்கிறாள். அப்போது, அவளுக்கு முன்னால் தத்தக்கா பித்தக்காவென ஓடிக்கொண்டிருந்த பள்ளிக்கூடச் சிறுமி ஒருத்தி, புத்தக மூட்டையின் கனச்சுமை தாளாமல் தடுமாறிக் கீழே விழுந்தாள்.

பதறிய ரம்யா, முன்னே இரண்டடி வேகமாக எட்டுவைத்து சிறுமியை விலுக்கெனத் தூக்கினாள். வடிவான முகம். அழுகின்ற பாவனைக்கு எக்கணம் வேண்டுமானாலும் மாறிவிடலாம்போல் இருந்தபோது, நீண்ட விசில் சத்தம் கேட்டது. சட்டென சிறுமியின் புத்தகப் பையைக் கழற்றி வாங்கி ஒரு கையில் வைத்துக்கொண்டு மறு கையில் அவளைப் பிடித்துக்கொண்டு அவசரமாகவும் உடனடியாகவும் பக்கவாட்டு கம்பார்ட்மென்ட் வாசலுக்குள் நுழைந்தாள்.

ஹாரன் அடித்து, டிரெயின் சிறு குலுங்கலுடன் நகரத் தொடங்கியது. ஏறிய பிறகுதான் உறைத்தது, அது `வெண்டார்’ எனச் சொல்லப்படும் சரக்குப் பொருள்களோடு பயணிப்பவர்களுக்கான கம்பார்ட்மென்ட். உள்ளே நடுவில் அகலமாக இடம் விடப்பட்டு பெஞ்ச்போல நீளவாக்கில் பக்கவாட்டு ஜன்னல்களையொட்டி இருக்கைகள் இருபுறமும் இருந்தன. அதற்கும் மேலே இரும்புப்பரண்கள்.

பால் கேன்கள், காய்கறிக் கூடைகள், வாய் இறுக்கிக் கட்டப்பட்ட இடுப்பு உயர வெள்ளை நிற பிளாஸ்டிக் பைகள். உடைமைகளுக்கு உரியவர்களின் சொற்ப அடைசல். இப்போதைக்கு இங்கே பெரிய கூட்டம் இல்லை. கைப்பற்றி நிற்பதற்கான வளையங்கள் உயரத்தில் தொங்கின. ரம்யா தன்னுடைய உயரத்தை எண்ணி நொந்துகொண்டாள். ஓரமாக நெட்டுக்குத்தலாக நிறுத்தப்பட்டிருந்த கம்பிகளில் ஒன்றை எட்டிப்பிடித்துக்கொண்டாள். இன்னும் உடல் நடுக்கத்திலிருந்து விடுபடாத அந்தச் சிறுமியும் கூடவே நின்றது, ஒருவிதப் பொறுப்பையும் லேசான எரிச்சலையும் ஒருசேர உண்டுபண்ணியது.

p52c_1533102235.jpg

`என்ன மாதிரியான பெற்றோர்... ஒரு சிறு குழந்தையை இத்தனை அசட்டையோடு தனியாக அனுப்பிவைத்திருக்கிறார்களே?’ என்று எண்ணியபடி,

``உன் பேர் என்ன பாப்பா?’’ என்றாள்.

``ப்ரியம்வதா.’’

``பேரு நல்லாருக்கே. அப்படின்னா என்னன்னு அர்த்தம் தெரியுமா பாப்பா?’’

அவள் முகத்தில் அதுவரை இருந்த கலவரம் காணாமல்போய் ஒரு வெட்கச் சிரிப்பு துளிர்த்தது. அவளுக்குத் தெரியவில்லை. இடவலதாகத் தலையசைத்தாள். சிவப்பு கலர் ரிப்பன் பட்டாம்பூச்சிகள் விடைத்த ஜடை இரண்டும் அப்படியும் இப்படியும் போய்வந்தது, வேடிக்கையாக இருந்தது.

``எங்க இறங்கணும் நீ?’’

``எக்மோர்.’’

``கூட யாரும் வரலியா, தனியா போறியே?’’

ப்ரியம்வதா தன் முட்டைக்கண்களால் ரம்யாவை அண்ணாந்து பார்த்தாள்.

``சுகந்தி அக்கா லேடிஸ் கம்பார்ட்மென்ட்ல இருக்கா ஆன்ட்டி.’

``உன் அக்காவா?’’

``ஆமா. அவ நைன்த் பி செக்‌ஷன். நான் தேர்டு ஏ செக்‌ஷன்.’’

``ஓஹோ... அவ மட்டும் எப்படி முன்னாடி போயிட்டா?’’

``அவ ஸ்பீடா ஓடிட்டா ஆன்ட்டி. அவ ஸ்மால் பேக் வெச்சிருக்கா. நான்தான் விழுந்துட்டேனே!’’

பாவமாக இருந்தது ரம்யாவுக்கு. அவளை, தன்னோடு நெருக்கமாக்கி நிறுத்திக்கொண்டாள். இது ஓர் அடைக்கலம். மிகவும் தற்காலிகமானது. ஆனால், மனம் ஏனோ நெகிழ்ந்தபடியே இருக்கத் தொடங்கியது. இதுமட்டும் திங்கட்கிழமை வழக்கத்தில் ஏற்பட்டதேயில்லை. ஒரு குழந்தையின் அண்மை அதை  உண்டுபண்ணுவதை அவள் உணரத் தொடங்கினாள்.

``இதுமட்டும் டிஃப்ரென்ட்டா இருக்குல்ல ஆன்ட்டி?’’

வெண்டார் கம்பார்ட்மென்ட் அவளுக்குப் புதிய அனுபவமாக இருக்கிறது. எல்லாவற்றையும் கிரகிக்கவும் கவனிக்கவும் பழக்கப்பட்ட குழந்தையாக அவள் தெரிகிறாள். புன்சிரிப்புடன் ரம்யா, பதில் சொல்லும்விதத்தில் அவளைப் பார்த்து ஆமோதித்து மையமாகத் தலையசைத்தாள்.

டிரெயின், மெதுவாக ஊர்ந்தபடி முதல் வளைவைத் தொட்டுத் திரும்பிக்கொண்டி ருக்கிறது. இடதுபக்கம், ரிசர்வ் வங்கி பார்வையில் பட்டது. அதற்கு எதிர்ப்பக்கக் கட்டடத்தின் உச்சியில் மிகப்பெரிய கால்பந்து வடிவில் வெள்ளை நிறத் தண்ணீர் டேங்க் ஒன்று உண்டு. வலதுபக்கம் உயர் நீதிமன்றத்தின் நெடிய காம்பவுண்ட், ஒரு சகபயணியைப்போல கூடவே வருகிறது.

ரம்யாவிடமிருந்து பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது.

``எவ்ளோ பெரிய பால் பாருங்களேன்! இதை எட்டி உதைச்சா எங்க போய் விழும் ஆன்ட்டி?’’

வெள்ளரிக்காய்ப் பிஞ்சுகள் நிறைந்த கூடை ஒன்றின் பக்கத்தில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்த மூதாட்டி, பொதுவாக ஒரு சிரிப்பை உதிர்த்தாள்.

``அது எனக்குத் தெரியாது. இப்போ நாம ஒரு செல்ஃபி எடுத்துப்போமா?’’

அவள் உற்சாகமாக ரெடியானாள். அவளுக்காகக் கொஞ்சம் குனிந்தவாக்கில் மொபைலை உயர்த்திப் பிடித்துக்கொண்டபோது ப்ரியம்வதாவின் முட்டைக்கண்கள் மேலும் அழகுற விரிந்து, உதடு பிளக்காமல் சிரித்தபடி இரண்டு விரல்களைக் கத்தரிக்கோல்போலப் பிரித்துக் காட்டி போஸ் கொடுத்தாள்.

டிரெயின், கோட்டை ரயில்நிலையத்துக்குள் மெள்ள நுழைந்து நின்றது.

``வா... வா... அடுத்த கம்பார்ட்மென்ட்டுக்கு ஓடியே போயிரலாம்.’’

இருவரும் வேகவேகமாக இறங்கி, உடனே அடுத்ததில் ஏறிக்கொண்டார்கள்.

``நாம சுகந்தி அக்காகிட்டயே போயிருக்கலாமே ஆன்ட்டி.’’

``அதுக்குள்ள எடுத்துருவான் பாப்பா.’’

சொல்லிக்கொண்டிருக்கும்போதே டிரெயின் கிளம்பியது. அரைமனதாக வெளியே பார்த்தபடி ஒப்புக்கொள்ளும் பாவனையோடு தலையை ஆட்டிக்கொண்டாள்.

``ஏய்... குட்டிச்சாத்தான், சீக்கிரம் ஓடியான்னு சொன்னேன்ல. லொடுக்குன்னு விழுந்துட்ட?’’

பக்கவாட்டிலிருந்து திடீரென ஒலித்த குரலை நோக்கி இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். இதே யூனிஃபார்மில் உயரமாக இருந்த பெண், மூச்சிரைக்க கோபத்தில் நின்றுகொண்டிருந்தாள். ஓடிவந்து ஏறியிருக்கிறாள். இவள்தான் சுகந்தியாக இருக்கவேண்டும். அவளுடைய முகத்தில் பதற்றம் இருந்தது. விட்டால் அடித்துவிடுவாள்போல ஒரு கடுப்பும் இருந்தது. அதற்கும் முன்னே, அச்சத்தில் ப்ரியம்வதாவுக்கு உதடுகள் துடிக்கத் தொடங்கின.

p52f_1533102268.jpg

``ஏம்மா... உன் தங்கைதான? அவ பேகை நீ வாங்கி வெச்சிருந்திருக்கலாம்ல? எல்லா நாளும் ஒண்ணுபோல இருக்குமா?’’

``கேட்டாலும் கொடுக்க மாட்டா ஆன்ட்டி. அவசரத்துக்கு ரப்பர்கூட ஷேர் பண்ண மாட்டா, தெரியுமா?’’

புகார் கூர்மையாக இருக்கிறது. ஸோ, நம்மாளிடம்தான் கோளாறா? ரம்யாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. சட்டென மடங்கி அவள் உயரத்துக்கு இறங்கி உட்கார்ந்துகொண்டு ப்ரியம்வதாவின் கண்களை நேருக்குநேர் சந்தித்தாள். குண்டு குண்டுவென்ற பளிங்குக் கண்கள்.

``அப்போ நான் உன் பேகைக் கையில எடுத்துக்கிட்டப்ப மட்டும் ஒண்ணும் சொல்லாம கொடுத்துட்டியே, ஏனாம்?’’

``டிரெயினை மிஸ்பண்ணிட்டா, கேட்டுக்கு வெளியே தனியா நிக்கணும் ஆன்ட்டி.’’

``அடேங்கப்பா... செம கில்லாடியா நீ?’’

ப்ரியம்வதா, அக்காவைத் திரும்பிப் பார்த்தாள்.

``நடிக்காதடி. இந்த ஆன்ட்டி ஹெல்ப் பண்ண லைன்னா உன்கூடவே நானும் கேட்லதான் நின்னிருப்பேன். இனிமேயாச்சும் பேகை என்கிட்டே கொடுக்கச் சொல்லுங்க ஆன்ட்டி.’’

``நான் சொல்லிட்டா கேட்டுப்பாளா பெரிய மனுஷி?’’

``யார்கூடவும் ஒட்ட மாட்டா ஆன்ட்டி இவ. என் ஃப்ரெண்ட்ஸ் யாரையும் பிடிக்காது இவளுக்கு. உர்ருன்னுதான் உட்கார்ந்தி ருப்பா. பயந்துபோயிருக்கா பாருங்க. நீங்க ஹெல்ப் பண்ணவும் உங்ககிட்ட க்ளோஸாயிட்டான்னு நினைக்கிறேன்.’’
டிரெயின், பூங்காநகர் நிலையத்தில் நின்றது. மேலும் கூட்டத்தை ஏற்றிக்கொண்டு கிளம்பியது.

``அப்படியா பாப்பா?’’

பதில் சொல்லாமல் சிரித்தாள்.

``ஓகே. இனிமே உன்னோட பேகை அக்காகிட்ட கொடுத்துடு. அவ அதை பத்திரமா வெச்சுக்குவா. நீ சூப்பரா எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துக்கிட்டே வருவியாம். என்னை மாதிரி.’’

சரியென்று அழகாய்ச் சிரித்து, தன்னுடைய சம்மதத்தை வெளிப்படுத்தினாள். சுகந்தி, ரம்யாவிடம் இருந்த தங்கையின் பேகை வாங்கிக்கொண்டாள்.

அடுத்த ஸ்டேஷன் எக்மோர். அவர்கள் இருவரும் இறங்குவதற்குத் தயாராகிக்கொண்டார்கள்.

``நீங்க எங்க இறங்குவீங்க ஆன்ட்டி?’’

``மாம்பலம்.’’

கூட்டத்தினிடையே உட்புகுந்த சொற்பக் காற்று, சுகந்தியின் தலைமுடியை லேசாகக் கலைத்தது.

``இவ, அம்மா செல்லமா... அப்பா செல்லமா சுகந்தி?’’

``எங்களுக்கு அம்மா கிடையாது ஆன்ட்டி. அத்தைதான் எங்களைப் பார்த்துக்கிறாங்க. ஆனா, இவ அப்பா செல்லம் இல்லை.’’

உள்ளுக்குள் ஏதோ பட்டென உடைந்தது. ப்ரியம்வதாவை ஒருமுறை அணைத்துக்கொண்டாள். நெஞ்சு பொங்கியது. சிக்குண்ட கைகளுக்குள்ளிருந்து பதிலுக்கு அவளும் ரம்யாவை இறுக அணைத்து, அவளுடைய கன்னத்தில் பச்சென்று எதிர்பாராமல் முத்தமிட்டாள்.

பிஞ்சு மனத்தின் ஈரம் கன்னத்திலிருந்து காயும் முன் டிரெயின் நின்றது.

``தேங்ஸ் ஆன்ட்டி.’’

இறங்கிய பிறகும் பிளாட்பாரத்தில் நின்றபடி இருவரும் கையசைத்த காட்சி, ரம்யாவின் மனதுக்குள் உருண்டுகொண்டே இருந்தது. இரக்கமில்லாத டிரெயின் நகர்ந்து வேகமெடுத்தது. அடுத்து நேரே மாம்பலத்தில்தான் நிற்கும்.

அத்தனை கூட்டத்துக்கும் நடுவே சட்டெனத் தனித்துவிடப்பட்டவளாகத் தன்னை உணர்ந்தாள்.

ஹேண்ட் பேகுக்குள் கிடந்த செல்போன் ஒலித்தது. அவசரமாக அதன் ஜிப்பைப் பிரித்து வெளியில் எடுத்தாள்.

செல்வராஜ், அட்வகேட்.

``ஹலோ... சொல்லுங்க சார். ஆமா, ஆபீஸ் போயிட்டிருக்கேன். ஹலோ... ஆமா சார்... டிரெயின்ல... ஹலோ... ஹலோ... வாய்ஸ் பிரேக் ஆகுது சார்... ஹலோ...’’

காதிலிருந்து செல்போனை விலக்கி, ஸ்க்ரீனை உற்றுப்பார்த்தாள். இன்னும் கால் கட்டாகவில்லை. ஆனால், சிக்னல் டவர் ஒற்றைப்புள்ளியைக் காட்டி அணைந்து அணைந்து மீண்டுகொண்டிருந்தது.

``ச்சை!’’ என்றபடி துண்டித்துவிட்டாள். காற்றில் புரளும் புத்தகப் பக்கங்கள்போல மனத்தின் நுனி பட படத்துக்கொண்டிருந்தது.

பொருந்தா இடத்தில் மனக்கசப்பை வெளிப்படுத்தும் ஒரு சொல் பதம் தப்பினால், அது விவாகரத்து வரை இழுத்துப்போய் கோர்ட்டில் நிறுத்திவிடும் என்பதை அவள் நினைத்துப்பார்த்திருக்கவில்லை.

பொருந்தாத உறவைப் பற்றிய அபிப்பிராயங்களை உட்கார்ந்து பேசி பரஸ்பரம் அதிலாவது இணங்கி, சச்சரவுகள் இல்லாமல் பிரிந்து வாழ்தல் சாத்தியமில்லாத சூழல்தான், படித்த மனிதர்கள் நிறைந்த நகரங்களிலும் பரவலாய் இருக்கிறது. ரம்யாமீதான வழக்கை வலுப்படுத்த கருணாகரனால் ஜோடிக்கப்பட்ட அவதூறின் கொச்சைத்தனம், இனி மீதமுள்ள வாழ்க்கை முழுவதும் ஏதாவது ஒரு ரூபத்தில் தன்னைத் தொடரப்போகிறது என்பதை நன்கு உணர்ந்த நிமிடத்திலிருந்து அழுவதை முதலில் நிறுத்தினாள். வழக்கை எதிர்கொள்ளத் துணிந்தாள். ஃபிளாட்டில் அவள் மட்டுமே தனித்து வாழ நேர்ந்த தலையெழுத்தை மாற்றி எழுத, அவளுடைய வக்கீல் கடந்த மூன்று ஆண்டுகளாகப் போராடுகிறார்.

அவளுடைய அனுபவத்தில், குடும்பநல நீதிமன்றங்களில் முண்டியடிக்கும் கூட்டத்துக்குள் வியர்வை கசகசக்க நின்றபடி நிமிடத்துக்கு ஒருமுறை கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொள்வதில் எந்தவோர் அர்த்தமும் மிஞ்சுவதில்லை.

தன் தரப்புக்கென வக்காலத்தாக நீதிமன்றத்தில் கவுன்ட்டர் ஃபைல் பண்ணியிருப்பதோடு, அதில் ஒரு கோரிக்கையும் இருந்தது. அது, மகள் சம்யுக்தா தன்னிடம்தான் வளரவேண்டும் என்கிற உரிமைகோரலான சைல்டு கஸ்டடி.

சம்யுக்தாவுக்கு ஐந்து வயது பூர்த்தியாகப்போகிறது. அடுத்து அவளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப வேண்டும்.

மீண்டும் போன் கால் வந்தது.

``சார்... சொல்லுங்க சார். சம்யுவோட போட்டோவா? வாட்ஸ்அப் பண்றேன் சார். அடுத்த ஹியரிங்கா? ஓகே சார்... ஓகே சார். நான் ரிமைண்ட் பண்றேன் சார். பாப்பாவ எப்படியாவது என்கிட்ட சேர்த்துவெச்சிருங்க சார். ம்ம்... சார்? இல்லல்ல சார்... சரி சார்... சரி சார். சிக்னல் வீக்கா இருக்கு சார்... இறங்கினதும் அனுப்பிடுறேன் சார்... ஓகே... ஓகே... தேங்ஸ் சார்.’’

போன்கால் கட் ஆன மொபைலில் ஸ்க்ரீன் சேவராகச் சிரிக்கும் சம்யுக்தாவைப் பார்க்கும்போது கலங்கும் கண்களைக் கட்டுப்படுத்தச் சிரமப்பட்டாள். தன்னுடைய கீழ் உதட்டை அழுந்தக் கடித்துக்கொண்டாள்.

காதில் ஹியர்போனுடன் அதுவரையில் தன் மொபைலையே பார்த்துக்கொண்டிருந்த ஓர் இளம்பெண், ரம்யாவை ஒருமுறை ஏறெடுத்துப் பார்த்துவிட்டு மீண்டும் குனிந்துகொண்டாள்.

ரம்யா மீண்டும் முகத்தைப் பக்கவாட்டில் வாசல் பக்கமாகத் திருப்பிக்கொண்டாள். புலனுக்கு அர்த்தமாகாத காட்சிகள் பின்னோக்கி ஓடிக்கொண்டிருந்தன.

மாம்பலம் ஸ்டேஷனில் இறங்கியதும், பரபரவென விரையும் கூட்டத்திலிருந்து ஒதுங்கி மெதுவாக நடந்தபடியே மொபைலின் லாக்கை விடுவித்தாள். வெயில் உஷ்ணம் பரவிய இந்த பிளாட்பாரம், தொலைவில் மேலேறி இரண்டாகப் பிரியும் பாதைகளை நோக்கிய படிக்கட்டுகளைக் குறிவைத்து நீண்டுகிடக்கிறது.

ஸ்டேஷனுக்கு வெளியே கெளரி டூவீலருடன் காத்திருப்பாள். மனம் திறந்து அனைத்தையும் இறக்கிவைக்க வாழ்க்கையில் அமைந்த உற்றதோழி அவள் மட்டுமே.

வக்கீலுக்கு அனுப்புவதற்காக சம்யுக்தாவின் சமீபத்திய புகைப்படத்தைத் தேடுவதற்கு மொபைல் கேலரியைத் திறந்தபோது, சற்றுமுன் எடுத்த செல்ஃபி முதலில் இருந்தது. அதில், தன்னோடு சேர்ந்து முட்டைக்கண் விரிய போஸ்கொடுத்த ப்ரியம்வதாவின் கண்களை உற்றுப்பார்த்தாள் ரம்யா. அந்தப் பார்வையில் இருக்கும் அர்த்தத்தைத் தேட முயன்று தோற்றுப்போனாள்.

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.