Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதுப் பெண்சாதி

Featured Replies

புதுப் பெண்சாதி - அ.முத்துலிங்கம்

 

 

 
 
anibul16.gifஅ.முத்துலிங்கம்
white_spacer.jpg
title_horline.jpg
BLUFLOAT1.gifநட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு...
anibul13.gifபுதுப் பெண்சாதி
white_spacer.jpg

கொழும்பிலே ரயில் ஏறும்போது பத்மலோசனிக்குத் தன்னுடைய பெயர் இனிமேல் பயன்படாது என்பது தெரியாது. கணவனைத் தேடினாள். அவன் மும்முரமாக இரண்டு பெரிய பெட்டிகளையும், வயதான ஒரு சூட்கேஸையும் ஏற்றிக்கொண்டு இருந்தான். அவர்களுக்குக் கல்யாணம் முடிந்து ஒருநாள்தான் ஆகியிருந்தது. அவளுடைய தாலி வட்டமாகத் தொங்கியது. கண்ணுக்கு மை பூசியிருந்தாள். தலையிலே மல்லிகைப்பூ. பெருவிரலைப் பார்த்தபடி இருந்தாலும் அடிக்கடி தலையை நிமிர்த்தி கணவன் என்ன செய்கிறான் என்பதையும் பார்த்தாள்.

p95a.jpg

அவன் கறுப்பாக, நெடுப்பாக முறுக்கிய கயிறுபோல இருந்தான். அவளுக்கு மீசை பிடிக்காது. ஆனால், அவனுடைய மீசை வசீகரமாக இருந்தது. மெல்லிய பச்சை நீளக்கை சேர்ட்டைச் சுருட்டிச் சுருட்டி புஜத்தின் தசைநார்கள் உருளும் இடத்தில் விட்டிருந்தான். அவளுடைய அம்மா அவளுக்குச் சொல்லிவிட்டது ஞாபகத்துக்கு வந்தது. 'உன் புருசனுக்குப் பெரிய படிப்பொன்றும் இல்லை. கிராமத்தில் கடை வைத்திருக்கிறான். நீ எந்தச் சமயத்திலும் உனக்குப் படிப்பு இருக்கு என்றோ, இங்கிலீஷ் தெரியும் என்பதையோ காட்டிவிடாதை.' ஸ்டேஷனில் டிக்கெட் கொடுத்த ஆள் மீதிப் பணத்தைச் சரியாகத்தான் எண்ணிக் கொடுத்திருக்கிறார். எட்டத்தில் நின்ற அவளுக்கே அது தெரிந்தது. ஆனால், கணவன் சரியில்லை என்று கணக்கைத் திரும்பவும் கேட்டு அவன் விளக்கவேண்டியிருந்தது. இவன் எப்படிக் கடை வியாபாரத்தைக் கவனிப்பான் என்று நினைத்தபோது அவளுக்கு மலைப்பாக இருந்தது.

 

அடுத்த நாள் காலை கொக்குவில் ஸ்டேஷனில் அவர்கள் இறங்கியபோது அவர்களை வரவேற்க ஒருவருமே இல்லை. துண்டுத் துண்டாகச் சிதறிய வானம்; வட்டு முறிந்த பனை மரங்கள்; மஞ்சள் நிறப் புற்கள்; உடைந்துபோன மரவேலி. அந்த இடத்துக்கு முற்றிலும் பொருத்தம் இல்லாமல் அவள் செங்குத்தாக நின்றாள். கீழே குனிந்து செருப்பு வாரைப் பின் குதியில் இழுத்துவிட்டாள். மறுபடியும் குனிந்து அடுத்த கால் வாரையும் சரியாக்கிவிட்டு நிமிர்ந்தபோது, அந்த ஊர்ச் சிறுவர்கள் அவளைச் சூழ்ந்துகொண்டார்கள். எல்லோரும் அவளையே அதிசயமாகப் பார்த்தார்கள். ஒரு சிறுவன் கத்தினான். 'ராமனாதனுக்குப் புதுப் பெண்சாதி.' அவ்வளவுதான். அந்தக் கணத்தில் இருந்து அவளுடைய முழுப் பெயரைச் சொல்லி அழைப்பதற்கு யாருமே இல்லையென்று ஆகிவிட்டது.

விற்போரில் வென்ற அரசகுமாரியை அழைத்து வருவதுபோல ராமனாதன் முன்னே நடக்க... அவள் பின்னே தொடர்ந்தாள். சாமான் தூக்கிகள் அவளுக்கு முன்னாலும், சிறுவர்கள் பின்னாலும் போனார்கள். அது பெரிய ஊர்வலம்போல அமைய... ஊர்ப் பெண்கள் வேலிக்கு மேலால் எட்டி எட்டிப் பார்த்து அதிசயித்தார்கள். குதிச் செருப்புப் பெண் ஒருத்தி அவர்கள் கிராமத்து ஒழுங்கையில் ஏதோ சகாயம் செய்யப்போவதுபோல நடந்து வந்தது அதுவே முதல் தடவை. அவர்கள் ஊரில் இப்படி ஓர் அழகான பெண் இல்லை. அவளுடன் படித்த ஒரு மாணவன் அடிக்கடி சொன்னதை நினைத்துப் பார்த்தாள். 'இவ்வளவு அழகையும் நீ ஒருத்தியே வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறாய்?' மெல்லச் சொண்டுக்குள் வந்த சிரிப்பை அடக்கினாள்.

ராமனாதன் இரண்டு நாட்களாகக் கடையைத் திறக்கவில்லை. புதுப் பெண்சாதி மயக்கத்தில் இருக்கிறான் என்று ஊரில் பேசிக்கொண்டார்கள். மூன்றாம் நாள் கடையைத் திறந்து பழையபடி வியாபாரம் செய்ய ஆரம்பித்தான். அந்தக் கிராமத்தில் அது ஒன்றுதான் பலசரக்குக் கடை. அத்துடன் பள்ளிக்கூடச் சாமான்கள், சோடா, சிகரெட், பத்திரிகைகள் என்று எல்லாம் அங்கே கிடைக்கும். காலை ஆறு மணிக்குப் பலகைகளை ஒவ்வொன்றாக அகற்றி, அவன் கடையைத் திறந்தால், இரவு எட்டு மணிக்குப் பூட்டிவிட்டு வீட்டுக்குப் போவான். வீடு வசதியாக கடைக்குப் பின்னால் இருந்தது.

முதல் ஆறு மாதம் புதுப் பெண்சாதியைப் பார்க்க அந்த ஊர்ப் பெண்கள் வந்தபடி இருந்தார்கள். அவள் வார்த்தைகளை விழுங்கி விழுங்கிப் பேசும் அழகைப் பார்க்கச் சிலர்... விரித்த அவள் தலை முடி காற்றில் தேசியக் கொடிபோலப் பக்கவாட்டில் பறக்கும் அழகைப் பார்க்கச் சிலர்... பக்கத்து வீட்டுக்காரி அவளைப் 'புதுப் பெண்சாதி' என்றுதான் கூப்பிட்டாள். சாமான் விற்க வருபவர்கள் 'புதுப் பெண்சாதி அம்மா' என்றும், சிறுவர்கள் 'புதுப் பெண்சாதி அக்கா' என்றும் அழைத்தார்கள். அவளுக்குத் தன் பெயர் மறந்துகொண்டு வந்தது.

வந்த சில மாதங்களிலேயே புருசனுடைய கடை நட்டத்தில் ஓடுவது அவளுக்குத் தெரிந்துவிட்டது. அவனுக்கு ஒரு கணக்கும் எழுதிவைக்கத் தெரியாது; வாசிப்பதுகூட எழுத்துக்கூட்டித்தான். பட்டணத்துக்கு மெனக்கெட்டுப் போய் சாமான்கள் வாங்கிவந்து கொள்விலையிலும் குறைந்த விலைக்கு விற்பதைப் பார்த்து அவள் திகைத்திருக்கிறாள். ஒருநாள் கதையோடு கதையாக 'நானும் உங்களுக்குக் கடையில் உதவியாக இருக்கிறனே' என்று கேட்டாள். புருசன் பாம்பு கொத்தியதுபோலத் திடுக்கிட்டு 'சீச்சீ, அப்படியெல்லாம் செய்யக் கூடாது, உமக்கு ஒன்றும் தெரியாது' என்று சொல்லிக் கதையை முடித்துவிட்டான்.

p94a.jpgஒருநாள் அதிகாலை முன் வீட்டுக் கிழவிக்கு ஒரு தந்தி வந்தது. கிழவி தந்தியை உடைக்காமல் அதைத் தலைக்கு மேல் பிடித்துக்கொண்டு செட்டை முளைத்த கறையான்போல அங்குமிங்கும் ஓடினாள். இங்கிலீஷ் தெரிந்த ஒருத்தரும் அகப்படாததால் பள்ளிக்கூடம் திறக்கட்டும், யாராவது வாத்திமார் வந்ததும் படிக்கலாம் என்று சொன்னார்கள். கிழவி ஆவென்று அழுது புலம்பத் தொடங்கினாள். இவள் புருசனிடம் 'நான் படித்துப் பார்க்கட்டா?' என்று கேட்டாள். 'நீரா, உமக்கு வாசிக்கத் தெரியுமா?' என்றான் கணவன். 'கனக்கத் தெரியாது, ஆனால், முயற்சி பண்ணலாம்' என்றாள். அவன் அனுமதி கொடுத்ததும் தந்தியைப் பிரித்து வாசித்துவிட்டுச் சிரித்தாள். 'ஆச்சி, பயப்பிடாதை. உன்ரை மகளுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு, நீ பாட்டியாகிவிட்டாய்' என்றாள். பிள்ளை பிறந்த புதினத்தைவிட புதுப் பெண்சாதிக்கு ஆங்கிலம் தெரியும் என்பதுதான் அன்று ஊர் முழுக்கப் பேச்சு. ராமனாதன் ஆச்சர்யத்தோடும் பெருமையோடும் அவளைப் பார்த்தான். அவள் படித்த பள்ளிக்கூடத்தில் ஆங்கிலத்திலும் கணிதத்திலும் அவள் முதல் பரிசு பெற்றதை அப்பவும் அவனிடம் சொல்லவில்லை.

மணமுடித்து இரண்டு வருடங்களாகியும் ராமனாதனுக்கு ஏதோ பிரச்னை இருந்தது. அவள் அழகு அவனைக் கூச வைத்தது. அவளுக்கு அவன் ஏற்றவள் இல்லை என்ற எண்ணம் ஆரம்பத்தில் இருந்தே அவனிடம் இருந்தது. அவளை நெருங்கிய அடுத்தகணமே சிறு பையன்போல உணர்வான். கறுப்பாகத் திரண்டுகிடக்கும் அவள் கண்களை அவனால் நேராகப் பார்க்க முடியாது. சற்றுமுன் பூச்சி கடித்ததுபோல வீங்கியிருக்கும் உதடுகளை அவள் செல்லமாகத் திறந்து பேசும்போது எல்லாம் மனதைக் கிளறும். சிலவேளைகளில் அவனுக்கு அடிக்காலில் தொடங்கி நடுக்கம் ஏறிக்கொண்டு வரும். அவனால் அவளை அணுக முடியவில்லை.

ஒருநாள் இரவு அவள் சொன்னாள், 'நான் உங்களுக்குப் புத்தி சொல்லுறன் என்று நினைக்கக் கூடாது. கடையிலே விற்கிற சாமான்களுக்குச் சங்கேத எழுத்தில் விலை ஒட்டி வைப்பம். விற்கும்போது பொருளில் எழுதிய விலையிலும் கூடிய விலைக்கு விற்கவேணும். இந்த முறையில் நட்டமே வராது.' பேசி முடிந்த பிறகும் அவள் வாய் மெல்லிசாகத் திறந்து அவன் சொல்லும் பதிலை உள்வாங்கக் காத்திருந்தது. அன்று ராமனாதன் களைத்துப்போய் இருந்ததால், பிச்சைக்காரர்களுக்குத் தர்மம் செய்யும் முகத்தை அணிந்து 'சரி, செய்யும்' என்று சொல்லிவிட்டு படுத்துத் தூங்கிவிட்டான்.

அன்றிரவு விளக்கைக் கொளுத்திவைத்து அந்த வெளிச்சத்தில் உட்கார்ந்து ஒவ்வொரு சாமானாக எடுத்து விலைக் குறிப்பு எழுதினாள். அந்தக் குறிப்புகள் 'சகிவெ' என்றும் 'மல்டு' என்றும் இருந்தன. ஒவ்வொரு சங்கேத எழுத்துக்கும் ஓர் எண் இருந்தது. எந்த எழுத்துக்கு எந்த எண் என்பதை ஞாபகம் வைப்பதற்காகப் பத்து எழுத்து வாசகம் ஒன்றையும் தயாரித்தாள். இரவு ஒரு மணிக்கு ராமனாதன் உருண்டு படுத்தபோது, தன் மனைவி கைவிளக்கு வெளிச்சத்தில் குனிந்து குனிந்து எழுதிக்கொண்டு இருப்பதைப் பார்த்து மறுபடியும் திரும்பிப் படுத்தான்.

காலை எழும்பியவன் திடுக்கிட்டுவிட்டான். அவன் மனைவி மாற்றம் இல்லாமல் அதே இடத்தில் அமர்ந்து, அதே மாதிரி குனிந்து, கீழே விழுந்த தலைமுடியை ஒரு கையால் பிடித்தபடி எழுதிக்கொண்டு இருந்தாள். ஒரு முழு இரவு அவள் தூங்கவில்லை. அவனால் நம்ப முடியவில்லை. மனதில் ஏதோ உருகி ஓடியது. அருகே வந்து அவள் கன்னத்தைத் தொட்டு 'பத்மி' என்றான். அவன் அவளை அப்படி என்றுமே அழைத்தது இல்லை. அவள் நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை. அவளுக்கு வெடித்து அழுகை வந்தது. கார் கண்ணாடி துடைப்பான்போல இரண்டு கைகளாலும் மாறி மாறி கன்னத்தைத் துடைத்தாள். அப்படியும் நிற்காமல் கண்ணீர் பெருகி வழிந்து கன்னத்தை நனைத்தது. 'அழாதேயும்... அழாதேயும்' என்று ராமனாதன் அவளை அணைத்தான். அன்றைக்கு இரண்டு மணி நேரம் தாமதமாகக் கடையைத் திறந்தவன், வீரகேசரி பேப்பர் முன் பக்கத்தில் பெரிய எழுத்தில் அவன் பெயர் அச்சாகியதுபோல அன்று முழுக்க மகிழ்ச்சியில் திளைத்தான்.

மத்தியான நேரங்களில் அவன் சிறிது கண்மூடி இளைப்பாற... அவள் வியாபாரத்தைக் கவனித்தாள். அந்தக் கடையில் அதிகமாக விற்றது யானை மார்க் சோடாவும், த்ரீரோசஸ் சிகரெட்டும்தான். அவள் விலைச் சீட்டைப் பார்த்து விலை சொல்லி வியாபாரத்தைச் சுறுசுறுப்பாகக் கவனிப்பாள். அவளைப் பார்க்கச் சுழட்டிவிட்ட பம்பரம்போல இருக்கும். கடை பூட்டும் நேரம் மறுபடியும் வந்து உதவி செய்வாள். விளம்பரத் தட்டிகளை மடித்து, சிகரெட் பற்றவைக்கும் நெருப்புக் கயிற்றை அணைத்து சுருட்டி உள்ளே வைப்பார்கள். ஒவ்வொரு பலகையாக அடுக்கி, கடையை மூடி ஆமைப்பூட்டைப் போட்டுப் பூட்டுவார்கள். ஒருநாள் அவள் கணக்குப் பார்த்துவிட்டு, 'இன்றைக்கு லாபம் ரூபா 50.40. ஆகக்கூடிய லாபம் கிடைத்த நாள்' என்று சொல்லிச் சிரித்தாள். 'எப்படி அத்தனை சரியாகச் சொல்கிறீர்?' என்று ஆச்சர்யமாகக் கேட்டான். ஏதோ பழைய காலத்து சினிமா கதாநாயகி பெயரை நினைவுக்குக் கொண்டுவருவதுபோல கண்களைச் சொருகி, இரண்டு கைகளையும் ஒரு கன்னத்தில் வைத்து யோசித்தாள். பின்னர் 'எண்ணும் எழுத்தும் தெரிந்தால் எதுவும் செய்யலாம்' என்றாள். அவள் வார்த்தைகளை விழுங்கி விழுங்கிப் பேசும்போது, அவனுக்கு அவளையே விழுங்கிவிடலாம் போலத் தோன்றும்.

மணமுடித்து சரியாக 13 வருடங்கள் கழித்து, அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அற்புதமாகப் பிறந்த குழந்தைக்கு அற்புதம் என்று பெயர் சூட்டினார்கள். அப்போதுகூட அவளை புதுப் பெண்சாதி என்றே அந்த ஊர் சனங்கள் அழைத்தார்கள். அற்புதத்துக்கு 10 வயது நடந்தபோது, ஒருநாள் கணவன் மாரடைப்பில் இறந்துபோனான். அவள் சோர்ந்துபோகவில்லை. பொறுப்புகள் கூடியபோது விவேகமும் கூடியது. அவளுடைய ஒரே பெண்ணைப் படிப்பித்து, வளர்த்து ஆளாக்க வேண்டும் என்பதுதான் அவளுடைய லட்சியமானது.

கடையில் வியாபாரம் முன்னெப்போதும் இல்லாத மாதிரி நல்லாய் நடந்தது.

வாத்திமாரும் அந்தப் பள்ளிக்கூடத்தில் படித்த பிள்ளைகளும், பிறத்தியாரும் கடைப் பொருட்களில் எழுதி ஒட்டியிருக்கும் சங்கேத வார்த்தைகளை உடைக்கப் பார்த்தார்கள். முடியவில்லை. அற்புதத்தைக் கேட்டுத் தொந்திரவு செய்தார்கள். அது அவளுக்குக் கூடத் தெரியாது. பள்ளிக்கூடத்தில் கணிதம் படிப்பிக்கும் வாத்தியார்கூட முயன்று பார்த்துத் தோல்வியடைந்தார். புதுப் பெண்சாதி மிகத் திறமையாகச் சங்கேத வார்த்தைகளை உண்டாக்கிஇருக்கிறாள் என்று பேசிக்கொண்டார்கள்.

ஒருநாள் காலை அற்புதத்தைக் காணவில்லை. தாயைப் போலவே மகளும் அழகாக வருவதற்குத் திட்டம் போட்டிருந்தாள். பின்னலைப் பின்னித் தொங்கவிட்டு அதற்கு மேல் அரைத் தாவணியை எறிந்திருப்பாள். ஒரு பிணம் பொதுக்கிணற்றிலே மிதப்பதாகச் செய்தி வந்தபோது ஒருவரும் நம்பவில்லை. 17 வயது நடந்துகொண்டு இருந்த அற்புதம் தற்கொலை செய்திருக்கிறாள். சோதனைக்காக அதிகாலை எழும்பி மும்முரமாகப் படித்துக்கொண்டு இருந்தவளுக்கு 'இன்னொரு வாய்'... 'இன்னொரு வாய்' என்று சொல்லி இரண்டு நாள் முன்புகூட அந்தத் தாயார் சோறு தீத்திஇருக்கிறாள். எதற்காகத் தற்கொலை செய்துகொண்டாள் என்பது அவளுக்கு விளங்கவில்லை. அற்புதம் ஓர் இயக்கப் பெடியனைக் காதலித்தாள். அவன் வடமராட்சிப் போரில் இறந்துவிட்ட செய்தி கிடைத்து, அவள் உயிரைவிட்டு இருக்கிறாள். ஊரிலும், அவள் படித்த பள்ளிக்கூடத்திலும் இந்தக் கதை எல்லோருக்கும் தெரிந்திருந்தது. பெற்ற தாயாருக்குத் தெரியவில்லை. 13 வருடம் காத்திருந்து, 17 வருடம் வளர்த்த மகளுக்கு தாய் ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. மூன்று மாதமே பழகிய ஒரு போராளிக்காகக் கிணற்றிலே குதித்துவிட்டாள்.

p97a.jpgமகள் இறந்த பிறகு அவள் கடையைத் திறக்க மறுத்துவிட்டாள். இனி, யாருக்கு என்ன சீவியம் என்று அரற்றினாள். ஊர்ச் சனங்கள் வற்புறுத்தியபடியால் மறுபடியும் கடையைத் திறந்த அன்று அது எதிர்பாராதவிதமாக மறக்க முடியாத ஒரு நாளாக அமைந்தது. 30 ஜூலை 1987. லெப் ஜெனரல் திபேந்தர் சிங் தலைமையில் இந்திய அமைதிப் படை இலங்கையில் இறங்கிய நாள். அவளுடைய கடை விழாக்கோலம் பூண்டது. வந்தவர்களுக்கு எல்லாம் யானை மார்க் சோடா உடைத்துக் கொடுத்தாள். ஆண்களுக்கு த்ரீரோசஸ் சிகரெட்டுகளும், பள்ளிப் பிள்ளைகளுக்கு இனிப்பு, பென்சில், அழிரப்பர்களும் இலவசமாக வழங்கப்பட்டன. புதுப் பெண்சாதி கடையில் அன்று கொண்டாட்டம் இரவு நடுநிசி வரை நீண்டது.

ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருந்த ஒருநாள் அவள் அன்றைய கணக்குகளை அவசரமாக முடித்துவிட்டு, கடையைப் பூட்டிய சமயம் திடு திப்பென்று இந்திய ராணுவ வாகனம் ஒன்று வந்து நின்றது. ஒரு பட்டாளக்காரன் மாத்திரம் தொப்பென்று குதித்து எட்டு வாழைப் பழங்களைப் பிடுங்கிக் கொண்டு, நாலு ரொட்டியும், ஒரு த்ரீரோசஸ் பக்கட்டும் வாங்கினான். முட்டைப் படம் போட்ட போத்தலைச் சுட்டிக்காட்டினான். அடித்தொண்டையில் விநோதமான சத்தம் உண்டாக்கும் ஒரு மொழி யில் ஏதோ வினவ... இவளும் 'யேஸ்... யேஸ்' என்று தலையாட்டினாள். அவன் காசு எவ்வளவு என்று சைகையில் கேட்க, இவள் அதே சைகையில் வேண் டாம் என்றாள். அவன் மறுத்து காசை நீட்டியதும், அவள் விலைக் குறிப்புகளைப் படித்து ஒரு துண்டுக் காகிதத்தில் கணக்கு எழுதிக் காட்டி, சரியான காசைப் பெற்றுக்கொண்டாள். சாமான்களுக்குக் காசு கொடுத்தது இந்திய ராணுவத்தின் மதிப்பை அவளி டம் உயர்த்தியது. அந்த மதிப்பு 24 மணி நேரம்கூடத் தாக்குப்பிடிக்கவில்லை.

அடுத்த நாள் அவள் கடையை மூடும் நேரம், முதல் நாள் போல ஒரு வாகனம் வேகமாக வந்து பிரேக் போட்டு நின்றது. ஆனால், வாகனத்தில் இருந்து குதித்தவன் நேற்று வந்தவன் அல்ல.

அதிகாரம் செலுத்திப் பழகிய முகம். நீலத் தலைப்பாவும் மீசையும் வைத்த ராணுவ அதிகாரி. அவளைப் பேசவிடாமல் பகையுணர்வுடன் இழுத்து வாகனத்தில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்கள். அதற்கிடையில் ஊர்ச் சனம் கூடிவிட்டது. தன்னை ஏன் பிடிக்கிறார்கள், எதற்காகக் கூட்டிச் செல்கிறார்கள் என ஒன்றும் அறியாது திகைத்துப்போய் நின்றவள், பக்கத்துவீட்டுக்காரியிடம் கத்திச் சொன்னது 'ராசம்மாக்கா, என்ரை ஆடு, என்ரை கோழிகள், பத்திரம்' என்பதுதான்.

முட்டைப் படம் போட்ட ஷம்பூவைச் சாப்பிடலாமா என்று பட்டாளத்துக்காரன் கேட்டிருக்கிறான். மொழி புரியாமல் இவள் ஓம் என்று பதில் சொல்லியதைக் கேட்டு, அவன் அதைச் சாப்பிட்டுப் பேதியாகிப் படுத்த படுக்கையாகக் கிடந்தான். அதற்காக அவளை விசாரணைக்குப் பிடித்துச் சென்றார்கள். மொழிபெயர்த்தவர் சொல்லித்தான் இது அவளுக்குத் தெரியும். தான் நிரபராதி என்பதை அவள் பல தடவை விளக்கிக் கூறியும் அது பலன் அளிக்கவில்லை.

ஆறு மாதமாகியும் புதுப் பெண்சாதி ஊருக்குத் திரும்பவில்லை. அவளுடைய கடையும் திறக்கவில்லை. ராணுவம் பிடித்துப் போனவளுக்கு என்ன நடந்தது என்பது ஒருத்தருக்கும் தெரியாது. கோழிக்கு உணவு போட்டவர்கள் ஒருநாள் கோழியை உணவாக்கினார்கள். ஆட்டுக்கு உணவு போட்டவர்கள் ஒருநாள் ஆட்டை உணவாக்கினார்கள். ஒருநாள் இரவு யாரோ பின் கதவை உடைத்து கடைக்குள்ளே புகுந்து அரிசி, பருப்பு என்று திருடிப்போனார்கள். அதைத் தொடர்ந்து மா, உப்பு, சர்க்கரையும் மறைந்தது. விரைவில் சோடா, த்ரீரோசஸ், சுருட்டு, முட்டைப் படம்போட்ட ஷம்பூ, பென்சில், கொப்பி, அழிரப்பர் எல்லாமே களவு போயின. கடைசியில் எஞ்சியது கணக்குப் புத்தகம். அற்புதம் இறந்தபோது பேப்பரில் வந்ததை வெட்டிச் சுவரில் ஒட்டிவைத்த படம். கைதான அன்று கடைசியாகக் கிழித்த நாள்காட்டி. அது திங்கட்கிழமை, 1989 மார்ச் 20 என்று காட்டியது.

தெற்கே ஒரு பெயர் தெரியாத ஊரில் இருந்து 32 வருடங்களுக்கு முன்னர் மணமுடித்து, இந்தக் கிராமத்துக்கு வந்த புதுப் பெண்சாதியை எல்லோரும் மறந்துவிட்டர்கள். ஒருநாள் போரிலே வீட்டை இழந்த இளம் தம்பதியினர் கடையினுள் புகுந்து, அதைச் சொந்தமாக்கினர். ஈரத் துணியால் தரையைச் சுத்தம் செய்த பெண், ஒவ்வொரு பலகையிலும் ஒவ்வொரு எழுத்து எழுதியிருப்பதைப் படித்தாள். பத்து பலகைகள், பத்து எழுத்துக்கள், எ ண் ணெ ழு த் து இ க ழே ல். சிறிது தயங்கிவிட்டு, அந்த இளம் மனைவி கையில் இருந்த துணியால் அதை அழுத்தமாகத் துடைத்து அழித்தாள்!

https://www.vikatan.com

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

அ .முத்துலிங்கத்தின் கதைகள் முத்து முத்தாக இருக்கும். இங்கும் இந்திய இராணுவம்தான் கதையை முடித்திருக்கு.....!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.