Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

தமிழின் சொல்வளமையும் செறிவான சொற்சிக்கனமும்

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி

 

எந்த ஒரு மொழியின் செறிவான வளமை என்பது அம்மொழியின் "தனிச்சொற்கள் தொகுதி" எண்ணிக்கை அன்று. அம்மொழியின் செறிவான கருத்துக் குறியீட்டு வளமே உண்மையான வளம் ஆகும்.

தமிழ்மொழியின் சொல்வளமை!

உயர்தனிச் செம்மொழியான தமிழ் செறிவான கருத்துக் குறியீட்டு வளத்தைத் தன்னகத்தே கொண்டு விளங்கி வருகின்றது.

உதாரணமாக, தந்தையின் உடன்பிறந்தவர்கள் பெரியப்பா, சித்தப்பா என்றும், அன்னையின் உடன்பிறந்தவர் அம்மான்(தாய்மாமன்) என்றும் அவரவரின் தனிச்சிறப்புகளுடன் வழங்குகிறது தமிழ் மொழி; இச்சொல்லாற்றல்கள் தமிழ்மொழியின் இனச்செறிவைப் பறைசாற்றுகின்றன.

ஆங்கிலமொழியின் சொல்வளமைக் குறைபாடு!

ஆங்கிலமொழியோ, இவ்வுறவுகளின் நுட்பங்களைப் பதிவுசெய்யும் ஆற்றலின்றித்  தன் இயலாமையை ,  'Uncle' என்ற ஒற்றைச் சொல்லில் வெளிப்படுத்துகின்றது.

அதேபோல், அம்மான்(தாய்மாமன்) மனைவியை 'மாமி' என்றும், அப்பாவின் சகோதரியை 'அத்தை' என்றும் தனித்துவப்படுத்தும் அழகே தமிழின் சிறப்பு!

இங்கும் ஆங்கிலம் 'Aunty' என்ற ஒற்றைச் சொல்லில் இவர்களின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் ஆற்றலின்றித் தவிக்கின்றது!

தேவையற்ற சொற்கள் தரும் மூளைச்சுமை!

இவ்வாறு, ஒரு மொழியில் பல கருத்துக்களைக் குறிக்கப் பல சொற்கள் தேவைப்படுவது இயல்பானதுதான். அதேவேளை, தேவையற்ற பலசொற்களை உருவாக்கும் மொழி, அம்மொழி பேசுபவரின் மூளைச்சுமையை அதிகமாக்குகின்றது! பல சொற்கள் தேவையின்றிப் புகுத்தப்படுவதால், அம்மொழி பேசும் இனத்தவரின் மூளை அத்தேவையற்ற சொற்களை வீணாகச் சுமக்கவேண்டிய அவலத்துக்கு ஆளாக்கப்படுகின்றன!

மூளைச்சுமையை அதிகமாக்கும் ஆங்கிலமொழி!

எடுத்துக்காட்டாக, 'Lightning' (என்னும் மின்னலின்ஆற்றல்) 'Power' ஆங்கிலத்தில் 'Electricity' எனப்படுகின்றது. எனவே, 'Lightning', Power, Electricity என்ற மூன்று கருத்துக்களுக்கு இம்மூன்று வேறு வேறு தொடர்பற்ற சொற்களை ஆங்கில மொழியினத்தின் மூளை சுமக்கின்றன!

மூளைச்சுமையைக் குறைக்கும் தமிழ்மொழி!

உயர்தனிச் செம்மொழியான தமிழ் இந்நிலையை எவ்வாறு செறிவாகக் கையாளுகின்றது என்பதைச் சற்று உற்று நோக்குவோம்! புதிய அறிவான Electricity என்னும் புதிய பொருளுக்கு, 'மின்னாற்றல்' என்ற புதிய அறிவுச் சொல்லை, மின்னல், ஆற்றல் என்ற பழைய அறிவுடன் தொடர்புப்படுத்தி, அப்பழைய அறிவின் பொருளையும், பொருட் பண்பையும் இப்புதிய அறிவுச்சொல்லுடன் ஆழப்பதிய வைக்கின்றது. இதனால், தொடர்பற்ற மூன்று சொற்கள் தவிர்க்கப்பட்டு, மின்னல், மின்னாற்றல் என்ற இரண்டு சொற்களாகவே குறிக்கப்படுவதால், மொழிச் சிக்கனமும், இயற்கை அறிவு வழியும் கொண்டு தமிழ் மொழி தன்னைச் செறிவூட்டிக் கொள்கின்றது!

இவ்வாறு, செம்மொழியான தமிழ்மொழி தேவையற்ற சொற்களைத் தவிர்த்து, சில தனிச்சொற்களின் அடிப்படையில் திரிபுச்சொற்களை அமைத்துத் தமிழ் மொழிக்கு வளமும் சிக்கனமும் கொண்ட செறிவாற்றலை உருவாக்கிக் கொள்கின்றது!

 

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.