Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குட்டிப்பூனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குட்டிப்பூனை

 

அயர்லாந்து – நாட்டுப்புறக் கதை

முன்பொரு காலத்தில், பசுமை நிறைந்த பள்ளத்தாக்கு ஒன்று இருந்தது. அதில் ஒரு பெரிய கோட்டையும், கோட்டையைச் சுற்றி அழகிய மரங்களும், செடிகளும் இருந்தன. அக்கோட்டையில் ஒரு பெரிய அரக்கன் வசித்து வந்தான். அந்தக் கோட்டைக்கு நூறு வாசல்கள். ஒவ்வொரு வாசலிலும் பெரிய பெரிய நாய்களைக் காவலுக்கு வைத்திருந்தான் அந்த அரக்கன். அந்த நாய்களின் நாக்குகள் அனைத்தும் தீயினும் கொடியவை, பற்கள் ஒவ்வொன்றும் பாறையையும் உடைக்கக் கூடியவை, நகங்கள் அனைத்தும் இரும்பால் செய்த ஈட்டி போன்றவை. அந்த நாய்களிடம் மனிதர்கள் யாராவது மாட்டிவிட்டால் ஒரு எலும்புத்துண்டு கூட மிஞ்சாது.

ஒரு நாள், அந்த அரக்கன் பக்கத்து நாட்டில் இருந்த ஒரு அரசருடன் சண்டையிட்டு, அந்த அரசரையும், மக்களையும் கொன்று குவித்துவிட்டு அந்த நாட்டையே எரித்து அழித்துவிட்டான். அந்த நாட்டின் இளவரசியின் அழகில் மயங்கி அவளை மட்டும் தனது கோட்டைக்குக் கடத்தி வந்துவிட்டான். அவளுக்கு அழகிய அறை தந்தான், நூறு குள்ளர்களை அவளுக்குப் பணிவிடை செய்யப் பணித்தான், உலகில் உள்ள அனைத்து வண்ணங்களிலும் ஆடை கொடுத்தான், கதிரொளியை மிஞ்சும் அளவிற்கு வைர ஆபரணங்கள் தந்தான், அவளுக்குப் பிடித்த இசையை இசைக்க இசைவாணர்களையும் ஏற்பாடு செய்து கொடுத்தான். இவ்வளவும் கொடுத்த அவன், கோட்டையை விட்டு வெளியேறக் கூடாது என்றும் கட்டளையிட்டான். கட்டளையை மீறினால், நூறு நாய்களுக்கும் இரையாவாய் என்று எச்சரித்தான்.

இளவரசியைக் கடத்தி வந்த ஒரு வாரத்தில் பக்கத்துத் தீவில் உள்ள மற்றொரு பேரரசுருடன் மீண்டும் சண்டையிடப் புறப்பட்டுவிட்டான் அரக்கன். புறப்படும் முன், “நான் திரும்பி வந்ததும் உனக்கும் எனக்கும் திருமணம். நீ என் மனைவியாக வேண்டும்”, என்றான் அரக்கன். இளவரசி இதைக் கேட்டதும் கண்ணீர் வடித்தவாறே, “உன்னை மணமுடிப்பதற்கு நான் மரணத்தை மணமுடிப்பேன். எந்தையைக் கொன்ற பாவி நீ”, என்றாள்.

“அழுது உன் அழகிய கண்களையும் கன்னங்களையும் பாழாக்கிக் கொள்ளாதே! உனக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் நீ என்னை மணமுடித்தே ஆக வேண்டும். உனக்கு வேறு வழியில்லை”, என்று ஆணவத்துடன் பேசினான்.

இளவரசியை அவளது அறைக்கு அனுப்பிவிட்டு, தன் பணிக்குள்ளர்களிடம் “நான் போருக்குச் செல்லும் நேரத்தில், இளவரசி கேட்டதெல்லாம் கொடுங்கள், அவளுக்கு எந்தக் குறையும் இருக்கக் கூடாது” என்றான், அவளுக்குப் பிடித்த இசையினை இசைக்கும்படி இசைக்கலைஞர்களுக்கும் ஆணையிட்டான்.

இளவரசி இதயமே இடிந்து அவளது அறையில் அமர்ந்து அழுததில் அந்த நாளே முடிந்து, இருளும் சூழ்ந்து, உறக்கமின்றி விடிகாலைப் பொழுதும் வந்தது. அதிகாலையில் எந்த வழியிலாவது தப்ப முடியுமா என்று சாளரக் கதவுகள் வழியே தேடிப்பார்த்தாள். ஆனால், அவள் இருந்த அறையில் சாளரங்களும் வானுயர இருந்தன, சாளரம் வழியில் குதித்தாலும் வெளியில் கொலைவெறி கொண்ட நாய்கள் உயிரை எடுத்துவிடும். இறுகிய இதயத்தோடு சாளரக் கதவுகளை மூடும் பொழுது, ஒரு மரக் கிளை அசைவதைக் கண்டாள். அந்தக் கிளையில் ஒரு குட்டிப் பூனை இருந்தது.

“மியாவ்”, என்று கத்தியது அப்பூனை.

“அய்யோ! எத்தனை அழகான பூனை, இங்கே வா, என்னருகே வா” என்றாள் இளவரசி.

“சாளரத்திலிருந்து தள்ளிப் போ, நான் இங்கிருந்து தாவுகிறேன்”, என்றது பூனை.

இளவரசி பின் சென்றதும், ஒரே தாவலில் பூனை இளவரசியின் அறைக்குள் சாளரம் வழியே நுழைந்தது.

பட்டுப் போன்ற அந்த வெள்ளை நிறப் பூனையை கையில் எடுத்துத் தடவிக் கொடுத்தாள், அதுவும் தலையை நீட்டி நன்றாக நீவிவிடுமாறு, அவள் மீது தனது உடலால் தேய்த்தது.

“எங்கிருந்து வருகிறாய் நீ? உன் பெயர் என்ன?”, என்றாள் இளவரசி

“நான் எங்கிருந்து வருகிறேன் என்பதோ, என் பெயர் என்ன என்பதோ இப்பொழுது முக்கியமல்ல, நீயும் நானும் இனி நண்பர்கள், உனக்கு உதவி செய்யவே நான் இங்கு வந்தேன்”, என்றது பூனை.

“எனது இந்த இழி நிலையில் எனக்கு யாரும் உதவி செய்ய முடியாது”, என்று அழுது கொண்டே கூறினாள் இளவரசி.

“எனக்கும் அது தெரியும், ஆனால் நான் கூறுவதைக் கேள், அந்த அரக்கன் போர் முடிந்து வந்து உன்னைத் திருமணம் செய்ய வேண்டும் என ஆணையிட்டால், திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறு”, என்று அறிவரை கூறியது அப்பூனை.

“ஆனால், எனக்கு அரக்கனை திருமணம் செய்ய விருப்பமில்லை”, என்றாள் இளவரசி.

“நான் கூறியது போல் கூறு, அவனைத் திருமணம் செய்ய வேண்டும் என்றால் ஒரு நிபந்தனை மட்டும் விதி, அவனது குள்ள மனிதர்கள் அதிகாலையில் புற்களின் மீது இருக்கும் பனித்துளிகளைக் கொண்டு மூன்று பந்துகளை உருவாக்க வேண்டும், அப்பந்துகள் இந்த அளவில் இருக்க வேண்டும்”, என்று அதன் கால்களைக் கொண்டு அதன் காதுகளில் இருந்து மஞ்சள், சிவப்பு, மற்றும் நீல வண்ணத்தில் மூன்று பந்துகளை எடுத்துக் கொடுத்தது அந்தப் பூனை.

“இப்பந்துகள் அனைத்தும் ஒரு பட்டாணி அளவு கூட இல்லை, குள்ளர்களுக்கு இது அத்தனை கடினமான பணியில்லையே”, என்றாள் இளவரசி.

“அவர்களால் முடியாது, ஒரு பந்தை உருவாக்கவே, அவர்களுக்கு 31 நாட்கள் ஆகும். ஆகையால், மூன்று பந்துகளையும் உருவாக்க 93 நாட்கள் ஆகும். ஆனால், அரக்கனும் உன்னைப் போன்றே, சில நொடிகளில் இப்பணி முடியும் என்றெண்ணுவான். அதனால், கண்டிப்பாக அவனும் சரி என்று உறுதியளிப்பான். அதன் பிறகு அவன் செய்த தவறை உணர்வான். ஆனால், அவன் நேர்மையாக இருக்க நினைப்பான். இப்பணி முடியும் வரை உன்னைத் திருமணம் செய்யுமாறு வற்புறுத்தமாட்டான்”, என்றது பூனை.

“அரக்கன் எப்பொழுது வருவான்”, என்று இளவரசி கேட்டதும், “நாளை மாலை”, என்றது பூனை.

“அரக்கன் வரும் வரை, என்னோடு இருப்பாயா? எனக்குத் தனிமையில் இருக்க பயமாக உள்ளது”, என்றாள் இளவரசி.

“என்னால் முடியாது. நான் எனது தீவிலுள்ள எனது அரண்மனைக்குச் செல்ல வேண்டும், அத்தீவு மனிதனது காலடித் தடம் படாத தீவு. அங்கே எந்த ஒரு மனிதனும் வர முடியாது, ஒரே ஒருவனைத் தவிர”, என்று வியப்பிலாழ்த்தியது பூனை.

“அந்தத் தீவு எங்கிருக்கிறது? யார் அந்த மனிதன்?”, என்று கண்களை அகல விரித்து வினவினாள் இளவரசி.

“அத்தீவு, மிக தொலைவிலுள்ளது, அத்தீவிற்க் எக்கப்பலும் சென்றடையாது. எல்லாம் நல்லபடியாக நடந்தால், பல நாட்கள் கழித்து நீ பார்க்க இருக்கும் ஒருவன், ஒரு நாள் இந்த அரக்கனைக் கொன்று உன்னை அவனிடமிருந்து மீட்பான்”, என்றது பூனை.

இளவரசி சோகத்துடன், “அது சாத்தியமில்லை. இக்கோட்டையைக் காவல் காக்கும் நூறு நாய்களையும் அழிக்க ஒரு ஆயுதமும் இவ்வுலகி இல்லை, எந்த வாள் கொண்டும் அந்த அரக்கனை அழிக்க முடியாது”.

“அந்த அரக்கனை அழிக்க ஒரு வாள் உள்ளது. ஆனால், நான் இப்பொழுது செல்ல வேண்டும். நீ அரக்கனிடம் என்ன கூற வேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொள். ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் நான் நின்று கொண்டிருந்த இந்த மரத்தினைப் பார். யாராவது மனிதரோ, இளவரசரோ இங்கு வருவார்கள்”, என்று கூறிக் கண் சிமிட்டியது அப்பூனை.

“அப்படி இளவரசர் யாரையாவது நீ கண்டால், இந்த மூன்று பந்துகளையும் அவனிடம் தூக்கி எறிந்துவிடு, மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன். அந்த இளவரசரோடு ஒரு வார்த்தையும் பேசாதே, அப்படி நீ பேசினால் அரக்கன் கண்டுகொள்வான், அதன் பிறகு உன்னை யாராலும் காப்பாற்ற முடியாது” என்றது பூனை.

“நாம் மீண்டும் சந்திப்போமா?” என்று சந்தேகத்தோடு கேட்டாள் இளவரசி.

“காலம்தான் பதில் சொல்ல வேண்டும்”, என்று கூறியபடியே, “போய் வருகிறேன்” என்று கூட சொல்லாமல் சாளரம் வழியே குதித்துக் கண் மூடிக் கண் திறக்கும் முன் மறைந்துவிட்டது அப்பூனை.

அடுத்த நாள் மாலையில் அரக்கன் வந்தான். நாய்கள் குரைக்கும் சத்தங்களின் மூலம் அரக்கன் வருகையை அறிந்து கொண்டாள் இளவரசி. அவளது இதயம் அரக்கன் இன்னும் சற்று நேரத்தில் அவன் முன் தோன்றுவான் என்ற துயரத்தில் மூழ்கியது. அரக்கன் வந்ததும் இளவரசிக்குக் கட்டளையிட்டான் திருமணத்திற்குத் தயாராய் இருக்குமாறு. இளவரசி முகமலர்ச்சியுடன் இருப்பதுபோல் பாவனை செய்து கொண்டே அரக்கனை வரவேற்றாள்.

“நான் தயாராகிறேன், ஆனால் எனக்கு ஒரு வாக்குறுதி தர வேண்டும்”

“என்ன வாக்குறுதி, நீ எது கேட்டாலும் தருவேன்”

“நன்றி. உன்னை மணமுடிக்கும் முன் உனது குள்ளர்கள் அதிகாலையில் புற்களின் மீது இருக்கும் பனித்துளிகள் கொண்டு இவ்வளவில் மூன்று பந்துகளை உருவாக்க வேண்டும்”, என்றாள் அந்தக் கோடை வெயிலில் பூனை கொடுத்த பந்துகளைக் காண்பித்தவாறே.

“ப்ப்ப்பூ.. இவ்வளவுதானா?, இப்பொழுதே, எனது குள்ளர்படைக்குக் கட்டளையிடுகிறேன். அவர்கள் நாளை காலையிலேயே மூன்று பந்துகளையும் உருவாக்கித் தருவார்கள். நாம் மாலை நேரத்தில் திருமணம் செய்து கொள்வோம்”, என்றான் குதூகலத்துடன்.

“அதுவரை என்னைத் துன்புறுத்தக் கூடாது”

“அப்படியே ஆகட்டும்”

“உறுதியாகவா?”

“உறுதியாக”, என்று ஆணவச் சிரிப்புடன் சென்றான் அரக்கன்.

இளவரசி அவளது அறைக்குள் சென்று மாலை நேரத்தில் கூண்டுக்குள் திரும்பும் புறாக்களைப் போன்று அடைந்து கொண்டாள். அரக்கன் தனது குள்ளர் படையை அழைத்து, இளவரசியின் ஆசையை நிறைவேற்றுமாறு கூறினான். அடுத்த நாளில் குள்ளர்படையால் ஒரு பந்தினைக் கூட உருவாக்க இயலவில்லை. எவ்வளவுதான் முயன்றும் ஒரு பெண்ணின் கண்ணிமையின் முடி அளவிற்குதான் அவர்களால் பனித்துளிகளை சேகரிக்க முடிந்தது. அடுத்த நாள், அடுத்த நாள், என்று தினமும் அதிகாலைகள்தான் ஓடின, ஆனால் பனித்துளிகளால் அந்தப் பந்தினை உருவாக்க இயலவில்லை. அரக்கனுக்கு இளவரசி மீது கோபம் வந்தது. இளவரசியின் புத்திசாலித்தனம் கண்டும் அவன் எதிர்பார்த்தது போல் வெகுவிரைவில் திருமணம் நடக்காதது கண்டும் அவன் மீதே அவனுக்கு வெறுப்பு வந்தது.

அப்பூனை இளவரசியிடம் இருந்து விடைபெற்றுச் சென்றபின்பு, ஓடியது, ஓடியது, ஓடிக்கொண்டே இருந்தது. மலைகளைக் கடந்து, பள்ளத்தாக்குகாளைக் கடந்து, ஆறுகளைக் கடந்து என்று ஓடிக் கொண்டே இருந்தது. இறுதியில் வெள்ளி நதித் தீவை அடைந்து, அங்குள்ள ஒரு இளவரசனைக் கண்டதும் மூச்சிறைக்க நின்றது. அங்கே இளவரசன் தனிமையில், சோகமாக, சோர்வுற்று இருந்தான். அந்த இளவரசன்தான் சிறைவைக்கப்பட்ட இளவரசியை மணமுடிக்க நிச்சயம் செய்ய்ப்பட்டிருந்தவன். அரக்கனால் கோட்டையில் சிறை வைக்கப்பட்ட இளவரசியைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தான் இளவரசன். இளவரசி எப்படி இருக்கிறாளோ, எங்கிருக்கிறாளோ என்று நகத்தினைக் கடித்தவாறே சுற்றிச் சுற்றி அலைந்தான்.

“மியாவ்”, என்று கத்தியவாறு பூனை மெதுவாக இளவரசன் இருந்த அறைக்கு வந்தது. ஆனால் இளவரசனோ பூனையைக் கவனிக்காமல் இளவரசியின் நினைவில் வாடினான். “மியாவ்”, மீண்டும் குரலெழுப்பியது பூனை. இப்பொழுதும் இளவரசன் பூனையைக் கண்டுகொள்ளவில்லை. மூன்றாவது முறையாக பூனை, “மியாவ்” என்று கத்தியவாறே இளவரசனின் காலடியில் குதித்தது.

“நீ எங்கிருந்து வருகிறாய்? உனக்கு என்ன வேண்டும்?”, என்று கேட்டான் இளவரசன்.

“நீங்கள் நான் எங்கிருந்து வர வேண்டும் என்று நினைக்கிறீகளோ, அங்கிருந்துதான் நான் வருகிறேன்”, என்றது பூனை.

“அதுதான் எங்கிருந்து?”, திரும்பவும் வினவினான் இளவரசன்.

“ஓ! எங்கிருந்து? எனக்கு நீவிர் என்ன நினைக்கிறீர் என்றும் தெரியும். யாரைப் பற்றி சிந்திக்கிறீர் என்றும் தெரியும்”, என்று சிறிது இடைவேளை விட்டு அப்பூனை, “நீவிர் முயற்சித்தால் அவளைக் காப்பாற்ற முடியும்” என்றது.

“என் இதயம் கவர்ந்தவளைக் காக்க எனது உயிரை ஆயிரம் முறை கூட இழக்க நான் தயாராக இருக்கிறேன்”, என்றான் இளவரசன்.

“யாருக்காக?”, என்று கூறிக் கண் சிமிட்டியது பூனை.

“நான் யாருடைய பெயரும் கூறவே இல்லையே, யாருக்காக?”, என்று மீண்டும் கண் சிமிட்டியது பூனை.

“என் எண்ணம் யாதென நீயறிந்தால், நான் யாரைப் பற்றி எண்ணுகிறேன் என்பதையும் நீ அறிவாய். அவள் எங்கிருக்கிறாள் என்பது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான் இளவரசன்.

“இளவரசி ஆபத்திலிருக்கிறாள். அவள் அந்த அரக்கனின் கோட்டையிலிருக்கிறாள். அக்கோட்டை இந்த மலையைத்தாண்டி இருக்கும் பள்ளாத்தாக்கில் இருக்கிறது”, என்று ஒரு மலையைச் சுட்டிக் காட்டியது.

“நான் இப்பொழுதே சென்று இளவரசியை விடுவிக்கிறேன். அதற்காக அந்த அரக்கனுடன் போரிட்டு அவனைக் கொல்லவும் துணிவேன்”, என்று சவால் விடுத்தான்.

“சொல்வது யாவர்க்கும் எளியவாம். அரிதே சொல்லியவண்ணம் செயலாற்றுதல்”, என்றது பூனை.

“மனிதனால் உருவாக்கிய எந்த வாள் கொண்டும் அவ்வரக்கனை அழிக்க இயலாது. அப்படியே அவனைக் கொல்ல நினைத்தால், அதற்கு முன்பு அவன் கோட்டையைக் காவல் காக்கும் நூறு நாய்கள் உன்னைத் துண்டு துண்டாக்கிவிடும். ஒவ்வொரு நாயும் கொடிய நாக்கும், கூரிய பற்களும், ஈட்டி போன்ற நகங்களும் கொண்டவை”, என்றது பூனை.

“யான் என்ன செய்வேன் இப்பொழுது”, என்று கலங்கி நின்றான் இளவரசன்.

“நான் சொல்வது போல் செய்வீராக. அக்கோட்டையைச் சுற்றி இருக்கும் மரத்திற்குச் செல்லுங்கள். அக்கோட்டையில் சூரிய மறைவினைப் பார்த்து நிற்கும் சாளரமருகே உள்ள மரத்திலேறி அதன் கிளைகளை அசைத்தால், நீவிர் யாரைத் தேடுகிறீரோ அவரைக் காணலாம். உமது தொப்பியை தலைகீழாகப் பிடித்தால், அதில் மூன்று பந்துகள் – சிவப்பு, மஞ்சள், நீல வண்ணத்தில் – எறியப்படும். அதன் பிறகு அப்பந்துகளோடு நீங்கள் திரும்பி வந்துவிடுங்காள். ஒரு வார்த்தையும் பேசாதீர், மீறிப் பேசினால், அங்கிருக்கும் நாய்கள் உம்மைக் கிழித்தெறிந்துவிடும்.” என்றது பூனை.

பூனை கூறி முடித்த உடனே, இளவரசன் புறப்பட்டுச் சென்றான். இரு நாட்கள் பயணத்திற்குப் பிறகு அரக்கனின் கோட்டையை அடைந்தான் இளவரசன். பூனை கூறிய அம்மரத்திலேறி மரக்கிளையை அசைத்தான். உடனே, அக்கோட்டையின் மரத்தருகே இருந்த சாளரத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. இளவரசி அங்கே தோன்றினாள். இளவரசனின் கண்களுக்கு தேவதையைக் கண்டது போல் இருந்தது. அவன் இளவரசியே என்று விளிக்க வாயெடுத்தான். அதற்குள் இளவரசி தன் அழகிய விரல்களை தனது சிவந்த உதடுகள் மீது வைத்து “உஸ்ஸ்” என்பது போல் பாவனை செய்தாள். இளவரசனுக்குத் தான் பேசக் கூடாது என்பது நினைவிற்கு வந்தது. அவன் தனது தொப்பியை எடுத்துத் தலைகீழாகப் பிடித்தான். இளவரசி தன்னிடம் பூனை கொடுத்த அந்த மூன்று பந்துகளையும் ஒவ்வொன்றாகத் தொப்பியில் விழுமாறு தூக்கி எறிந்தாள். அதன் பிறகு தன் கைகளை வாயில் ஒரு முத்தத்தினை இளவரசனை நோக்கிப் பறக்கவிட்டு, சாளரத்தின் கதவுகளை மூடினாள். அவள் கதவுகளை மூடியதும்,வேட்டைக்குச் சென்ற அரக்கன் திரும்பி வரும் சத்தம் கேட்டது.

அரக்கன் கோட்டைக்குள் செல்லும் வரை இளவரசன் மரக்கிளையிலேயே காத்திருந்து பின்பு மரத்திலிருந்து இறங்கினான். இளவரசன் அங்கிருந்து புறப்பட்டு ஓட்டமும் நடையுமாக மலை, பள்ளத்தாக்கு எல்லாம் தாண்டி அம்மூன்று பந்துகளுடன் தன் அரண்மனையை வந்தடைந்தான். பூனை அவனுக்காக அவனது அரண்மனையில் காத்திருந்தது.

“மூன்று பந்துகளையும் கொண்டு வந்தீரா?”, என்றது பூனை.

“ஆம், என்னிடம்தான் உள்ளது”, என்றான் இளவரசன்.

“என்னைப் பின் தொடர்ந்து வாருங்கள்”, என்றவாறே பூனை ஓடியது.

சில நொடிப்பொழுதுகளில், அரண்மனையிலிருந்து புறப்பட்டுத் தொலைவிலுள்ள ஒரு கடலை நோக்கிச் சென்றனர் இருவரும்.

“இப்பொழுது, சிவப்பு நிறப்பந்திலிருக்கும் நூலை அவிழ்த்துவிட்டு அதன் ஒரு முனையை உமது வலது கையில் பற்றிக் கொண்டு பந்தினை இக்கடல் நீரில் விசுங்கள், அதன் பிறகு என்ன நடக்க வேண்டுமோ அது தானகவே நடக்கும்”, என்றது அப்பூனை.

பூனை கூறியவாறே இளவரசன் செய்ததும், அப்பந்து கடல் நீரில் உருண்டோடியது. அப்பந்து கண்ணுக்கெட்டாத தூரம் வரை சென்று விட்டது.

“இப்பொழுது நூலை இழுங்கள்”, என்றது பூனை.

பூனை கூறியவாறு நூலை இளவரசன் இழுத்ததும், தொலை தூரத்தில் கடலில் வெள்ளி நிறத்தில் ஏதோ மின்னுவது போல் தெரிந்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் அங்கே ஒரு வெள்ளிப் படகு வந்து அக்கடற்கரையில் நின்றது.

“இப்படகில் ஏறிக்கொள். இது உன்னை இக்கடலிலுள்ள ஒரு தீவிற்கு அழைத்துச் செல்லும். அத்தீவில் இதுவரை எந்த மனிதனது கால்தடமும் பட்டதில்லை. அத்தீவிற்கு மனிதனால் உருவாக்கப்பட்ட எக்கலமும் செல்லாது. அந்தத் தீவில்தான் குட்டிப்பூனைகளின் அரண்மனை உள்ளது. அவ்வரண்மனையில் வைரத்தால் செய்யப்பட்ட ஒரு வாளுள்ளது. அவ்வாள் கொண்டே நீவிர் அரக்கனைக் கூறிட்டுக் கொல்ல முடியும். மேலும், அத்தீவில் நூறு ரொட்டிகள் உள்ளது. அந்த ரொட்டிகளை உண்டால் அரக்கனிடமுள்ள நூறு நாய்களும் இறந்து போகும். ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். போகும் வழியில்  நீவிர் எங்காவது உணவருந்தினாலோ அல்லது நீர் பருகினாலோ உமக்கு இளவரசியினைப் பற்றிய நினைவின்றிப் போகும்.” என்றது பூனை.

“சத்தியமாக. நான் விடைபெறுகிறேன்”, என்று கூறி படகில் ஏறி கண்ணுக்கெட்டாத தூரம் சென்றான் இளவரசன்.

அன்றைய பொழுது முழுவதும் படகிலேயே கழிந்தது இளவரசனுக்கு. இரவில் விண்மீன்களின் ஒளி கடல் நீரில் மின்னியது. ஆனால் படகு நில்லாமல் சென்று கொண்டே இருந்தது. இரண்டு பகல்களும் இரண்டு இரவுகளும் படகிலேயே கழிந்தன. மூன்றாவது நாள் காலையில், தூரத்தில் ஒரு தீவு தெரிந்தது. இளவரசன் குதூகலத்தில் பயணம் முடிந்தது என்று எண்ணினான். பசி மற்றும் தாகத்தால் மயக்கமே வந்தது இளவரசனுக்கு.  அந்த நாளும் கடந்து போனது, ஆனால் அத்தீவினை அவன் அடையவில்லை.

அடுத்த நாளில், இறுதியாக அவன் அத்தீவருகே வந்துவிட்டான். அங்கே மரங்களில் பழங்கள் பழுத்துத் தொங்கி கடல் நீரைத்தொடும் வண்ணம் மரங்கள் வளைந்திருந்தன. தீவைச் சுற்றிச் சுற்றிப் படகு வந்தது. ஒவ்வொரு சுற்றாக முடிந்து மரத்தின் கிளையைத் தொடும் அளவிற்குப் படகு முன்னேறியது. பழங்களைக் கண்டதும் இளவரசனுக்குப் பசி அதிகமானது. தாகமும் அதிகமானது. பசி மயக்கத்தில் பூனைக்குச் செய்து கொடுத்த சத்தியம் மறந்து போனது. மரத்தின் கிளையைப் பிடித்து அத்தீவில் இறங்கினான். அந்த மரத்தில் பழுத்திருந்த பழங்களை உண்டான். அது மிகவும் தித்திப்பாக இருந்தது. அவன் பழங்களை உண்ட மறுகணம் படகு அவனை அத்தீவில் விட்டுவிட்டு தொலைதூரம் சென்று கண்ணில்படாமல் மறைந்தது. இளவரசனுக்கு அனைத்தும் மறந்து போனது. இளவரசியைக் காப்பாற்ற வேண்டும் என்பதையும் மறந்து போனான். அவன் பசியாற பழங்களைப் புசித்ததும் மரத்தினைவிட்டு இறங்கி நடந்தான். அப்பொழுது சில இசைவாணர்கள் இசை மீட்டியவாறே இளவரசரை நோக்கி வந்தனர்.

இளவரசரைக் கண்டதும், இசை மீட்டுவதை நிறுத்திவிட்டு, கூட்டமாக, “வருக! வருக! வெள்ளி நதித் தீவின் இளவரசே வருக! பழங்களின் தீவிற்கு வருக! பூக்களின் தீவிற்கு வருக! எங்களது அரசரும் அரசியும் தாம் இத்தீவிற்குக் கடல் தாண்டி வருவதை அறிந்தனர். உமை எங்கள் தீவின் அரண்மனைக்கு அழைத்துவரப் பணித்தனர்”, என்றனர்.

இளவரசன் அவர்களோடு சென்றான். அரண்மனை வாயிலருகே அரசரும், அரசியும், பழத்தீவு இளவரசியும் ஒன்றாக நின்று வெள்ளி நதி இளவரசரை வரவேற்றனர். இளவரசனின் கண்கள் பழத்தீவின் இளவரசியை விட்டு அகலவில்லை. அத்தீவிலிருக்கும் அத்தனைப் பூக்களையும் விட இளவரசி அழகாகத் தெரிந்தாள். அவளைப் போன்ற ஒரு அழகியைக் கண்டதில்லை என்று நினைத்தான் இளவரசன். அரக்கனிடம் மாட்டிக் கொண்ட இளவரசியை மறந்தே போனான் இளவரசன். பழத்தீவு அரசர் அமுது படைத்து விருந்தளித்தார். அரசருக்கும் இளவரசிக்கும் நடுவே அமர்ந்து விருந்துண்டான் இளவரசன். இளவரசன் பழத்தீவு இளவரசியின் மீது காதல் கொண்டான். விருந்து முடிந்ததும் அரசியார் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். விடிய விடிய நடந்த நடன நிகழ்ச்சியில் இளவரசன் இளவரசியோடு நடனமாடினான். அவளோடு நடனமாடிய ஒவ்வொரு நிமிடமும் அவள் மீது காதல் அதிகமானது. இப்படியே பல விருந்துகளும் பல நடன இரவுகளும் கழிந்தது.

அங்கே அரக்கனின் கோட்டையில் இருக்கும் இளவரசி ஒவ்வொரு நாட்களாக எண்ணி வருந்திக் கொண்டிருந்தாள். குள்ளர்கள் தினம் தினம் பனித்துளியைச் சேகரித்தனர். முதல் பந்தில் பாதிப் பந்தை உருவாக்கிவிட்டனர் அக்குள்ளர்கள்.

இளவரசன் பழத்தீவு இளவரசியை மணமுடிக்க ஆசைப்பட்டு அரசனிடம் கேட்டான். அரசனும் இன்முகத்தோடு சம்மதிக்க, திருமண நாளும் நிச்சயிக்கப்பட்டது. திருமண நாளிற்கு முந்தைய இரவில் இளவரசன் தனது அறையில் நடன நிகழ்ச்சிக்குச் செல்லத தயரானான். அவன் அறையிலிருந்து கிளம்பிய பொழுது அவன் காலில் ஏதோ உரசியது போன்று உணர்ந்தான். அவனது காலடியில் ஒரு குட்டிப் பூனை உரசியதைக் கண்டான். பூனையைக் கண்டதும் அவனுக்கு அனைத்தும் நினைவுக்கு வந்தது. அரக்கன் வசம் சிறைபட்ட இளவரசியைக் கண்டு எத்தனை நாட்கள் ஆகிவிட்டன என்று எண்ணிப்பார்த்தான். ஆனால் அவனுக்குப் பழத்தீவு இளவரசி மீது வைத்த காதலும் குறையவில்லை. என்ன செய்வது என்று அறியாது திகைத்தான்.

இளவரசனின் எண்ணத்தை அறிந்த பூனை “இன்றிரவு நீவிர் ஒரு காரியம் செய்ய வேண்டும்”, என்றது. “காலை எழுந்ததும் கடலுக்குச் செல்லுங்கள். எத்திசையும் நோக்காது, எவ்வுயிரினமும் தீண்டாது, இத்தீவை விட்டுச் செல்லுங்கள். உங்களிடம் இருக்கும் இரண்டாவது பந்தையும் முதல் பந்தை வீசியது போன்று கடல் நீரில் வீசுங்கள். படகு வந்ததும் ஏறுங்கள். இப்பொழுது உங்களுக்கு யார் முக்கியமானவர் என்று சிந்தியுங்கள். பழத்தீவு இளவரசியா? அல்லது அரக்கனிடம் சிறைபட்ட இளவரசியா? அதன் பிறகு செல்வதா இல்லை இங்கேயே இருப்பதா என்பதை முடிவெடுங்கள்”, என்றது பூனை.

இளவரசன் தூங்கமால் கண்ணிமைக்காமல் விடியலின் வெளிச்சத்திற்காக காத்திருந்தான். விடியல் வந்ததும் கடலுக்குச் சென்றான். அங்கு சென்று பந்தைக் கடலில் வீசியதும் பந்து கண்ணுக்கெட்டாத தூரம் வரை சென்றது. உடனே ஒரு படகு மின்னல் வேகத்தில் வானில் மின்னும் விண்மீன் போன்று மின்னியபடி அவன் முன்னர் தோன்றியது. இளவரசன் அரண்மனையிலிருந்து காணாமல் சென்றதும், அத்தீவின் அரசர், அரசி, இளவரசி, பணியாளர்கள் என அனைவரும் அவரைத் தேடினர். கடல் வரையில் விரைந்து சென்றனர். இசைவாணர்கள் இசை இசைக்க, அதன் இசையினும் இனிமையாக பழத்தீவு இளவரசி, “இளவரசே…” என்று விளித்தாள். இளவரசரின் இதயம் பழத்தீவு இளவரசியை நினைத்து வருந்த அவளைத் திரும்பிப் பார்க்க நினைத்தான். ஆனால் பூனை கூறியது நினைவிற்கு வர படகில் ஏறும் வரை அவன் திரும்பிப் பார்க்கவில்லை. இளவரசன் படகில் ஏறியதும் இளவரசி இளவரசரைத் தொட நெருங்கினாள். ஆனால் அதற்குள் இளவரசன் படகிற்குள் ஏறிவிட்டான். படகு கண்ணிமைக்கும் நேரத்தில் கடலில் மிதந்தது. ஒரு பேரொலி எழுப்பியவாறு படகு சென்றதும், இளவரசன் கண்ணிற்கு அரசரோ, அரசியோ, இளவரசியோ, யாரும் கண்ணுக்குத் தெரியவில்லை, ஆனால் அந்தத் தீவில் பெரிய பெரிய பச்சைப் பாம்புகள் சிவந்த கண்களுடனும் சிவந்த நாக்குகளுடனும் தீயைக் கக்கும் விசத்துடனும் தெரிந்தன.

அத்தீவில் இருந்து தப்பிய இளவரசன் மீண்டும் கடலில் அப்படகில் பயணம் செய்தான். அப்படகிலேயே மூன்று இரவுகளும் பகல்களும் கழிந்தன. ஒவ்வொரு நாளும் தான் செல்ல வேண்டிய தீவு வரும் என்று காத்திருந்தான். பசியால் மீண்டும் மயக்கமுற்றான். நான்காவது நாளில் தொலை தூரத்தில் ஒரு தீவில் சூரிய ஒளி சிதறுவதைக் கண்டான். அத்தீவின் அருகே வந்த பொழுது பெர்ரி மரங்களும் அதில் பழுத்த சிவந்த பெர்ரி பழங்களும் இருந்ததைக் கண்டான். படகு தீவை எட்டும் தூரத்திற்குச் சென்றதும் தீவைச் சுற்றிச் சுற்றி வந்தது. அத்தீவின் பெர்ரி பழங்களின் நறுமணம் இளவரசனின் பசியை மேலும் அதிகரிக்க கைக்கு எட்டும் தூரத்தில் இருந்த மரத்தில் இருந்த பழங்களைப் பறிக்க எண்ணினான். ஆனால் கடந்த முறை நடநது போன்று இம்முறை ஏதும் நடக்கக்கூடாது என்றெண்ணி பழங்களை அவன் தொடவில்லை. படகு சுற்றிச் சுற்றி தீவின் கரையினை உரசுவது போன்றிருந்த ஒரு மரத்தின் கிளையை இடித்தது. அதனால் அப்பெர்ரி மரத்தின் பழங்கள் படகில் விழுந்தன. பழங்கள் அனைத்தும் சேர்ந்து படகினை மூழ்கடிக்கும் அளவிற்கு படகை நிரப்பின. அவற்றில் சில பழங்கள் இளவரசனின் கைகளிலும் விழுந்தன. அவன் பழங்களைக் கையிலேந்தி இதனை ருசித்தால் தனக்குச் சக்தி கிடைக்கும், ஒரு சில பழங்களை உண்டால் ஒன்றும் ஆகிவிடாது என்று பழங்களை ருசி பார்த்தான். பழங்களை ருசி பார்க்க நினைத்தவன் பழங்களை விழுங்கலானான். அதன் பிறகு அவனுக்கு என்ன நடந்தது என்பதறியாது அனைத்தையும் மறந்து போனான். படகு இளவரசனைத் தூக்கித் தீவில் வீசிவிட்டு மறைந்து போனது.

இளவரசன் மேலும பல பழங்களை உண்டு பசியாறினான். அவன் உண்டு முடித்த சிறிது நேரத்திற்கெல்லாம் ஒரு பெரிய ஒலி இடி இடிப்பது போல் கேட்டது. அங்கே ஒரு பெரிய இரும்புப் பந்து ஒரு மரத்தின் மீது மோதி மரத்தையே சாய்த்தது. இளவரசன் சுதாரிப்பதற்குள் அங்கு நூறு அரக்கர்கள் தோன்றினர். அவர்கள் அனைவரும் இளவரசனைக் கண்டனர். அரக்கர்களில் ஒருவன் கண்ணிமைக்கும் நேரத்தில் இளவரசனைத் தன் கையில் தூக்கிக் கொண்டான். இளவரசன் இறந்துவிடும் அளவிற்கு அவனை இறுக்கமாகப் பிடித்தான் அந்த அரக்கன். அதன் பிறகு இளவரசனைத் தரையிலேயே இறக்கிவிட்டான் அவ்வரக்கன்.

“யார் நீ?” என்று கேட்டான் ஒரு அரக்கன்.

“நான் இளவரசன்” என்றான் இளவரசன்

“இளவரசனா? நீயா? எதில் சிறந்தவன் நீ?” என்றான் அரக்கன்.

இப்படி ஒரு கேள்வியை இளவரசன் தன் வாழ் நாளில் கேட்டதே இல்லை. அதனால் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றான்.

“இவன் எதில் சிறந்தவன் என்று எனக்குத் தெரியும்” என்றான் ஒரு அரக்கன். அந்த அரக்கனுக்கு ஒரு கண் நெற்றியிலும் மற்றொரு கண் கன்னத்திலும் இருந்தது. “இந்த இளவரசன் தின்னிப்பண்டாரம், தின்பதில்தான் இவன் சிறந்தவன்”, என்று கூறிச் சிரித்தான் அந்த அரக்கன்.

அதைக் கேட்ட மற்ற அரக்கர்கள் அனைவரும் வானதிர சிரித்தனர். அதைக் கண்ட இளவரசனுக்குக் குலை நடுங்கியது.

“ஏனென்றால், அங்கே பார், அவனது வாய் முழுக்க பெர்ரி பழங்கள் தான்” என்று ஒரு அரக்கன் கூற மீண்டும் சிரித்தனர் அனைத்து அரக்கர்களும்.

“அவனை என்னிடம் விட்டுவிடுங்கள். அவனை நான் பார்த்துக் கொள்கிறேன். இவனை நையப் புடைத்து, நன்றாக சமைத்து, அவ்வுணவை நன்றாக அலங்காரம் செய்து நமது அரசருக்கு விருந்தாக்குகிறேன்” என்றாள் ஒரு அரக்கி.

இதைக் கேட்ட அரக்கர்கள் இளவரசனை அந்த அரக்கி வசம் ஒப்படைத்தனர். அரக்கி இளவரசனைத் தூக்கிக் கொண்டு அவளது வீட்டின் சமையலறைக்குச் சென்றாள். இளவரசனை ஒரு சர்க்கரை மூட்டையில் முக்கி அதன் பின்பு ஏலக்காய், முந்திரி எல்லாம் அவன் மீது தூவி ஒரு இனிப்புப் பலகாரம் போல் செய்து அரக்கர்களின் அரசர் தீவுக்குத் திரும்பும் பொழுது தர வேண்டும் என்று இளவரசனை உணவாகச் சமைத்தாள். அவனது உள்ளுறுப்புகளும் இனிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அவனுக்குத் தின்பதற்கும் இனிப்புகளைக் கொடுத்தாள் அந்த அரக்கி. ஆனால் இளவரசன் உண்ண மாட்டேன் என அடம்பிடிக்க, “உன்னைத் தீயில் வாட்டி எடுத்தால்தான் சரிப்படுவாய். உண்கிறாயா? உயிரோடு எரிக்கவா?”, என்று மிரட்டினாள் அரக்கி. அரக்கிக்குப் பயந்து இனிப்புகளை உண்டான் இளவரசன்.

நாட்கள் உருண்டோட, இளவரசன் வாடிக் கொண்டே இருந்தான். தன்னை சமைத்து அரக்க அரசருக்கு உணவாகக் கொடுத்துவிடுவார்களே என்ற பயத்தில் உடல் பாதியாக இளைத்துவிட்டான். அங்கே அரக்கனிடம் சிறைபட்ட இளவரசியும் இளவரசன் தன்னை மீட்க வரவில்லையே என்று வாடியபடியே பாதியாக இளைத்துவிட்டாள்.

குள்ளர்களும் இரண்டு பந்துகளை உருவாக்கி முடித்து மூன்றாவது பந்தை உருவாக்க ஆரம்பித்திருந்தனர்.

“நாளை அரக்க அரசர் திரும்பி வருவார்”, என்றாள் அரக்கி.

“இதுதான் உனக்கு இறுதி நாள். நாளை நீ அரசருக்கு உணவாகப் போகிறாய். உனது இறுதி ஆசை என்ன? எதுவானாலும் கூறு, நிறைவேற்றப்படும்”, என்றாள் அரக்கி.

“எனக்கு ஒரு ஆசையும் இல்லை”, என்று இதயம் உடைந்து கூறினான் இளவரசன்.

“சரி! நாளை வருகிறேன்”, என்று கூறி அரக்கி வெளியில் சென்றாள்.

இளவரசன் ஒரு மூலையில் அமர்ந்து சிந்தித்துக் கொண்டே இருந்தான். அப்பொழுது அவனது காதுகளை யாரோ மயிலிறகால் வருடுவது போல் உணர்ந்தான். அங்கே பூனை வந்து நின்றது.

“நான் மீண்டும் உங்களைச் சந்திக்க வரக்கூடாது என்றெண்ணினேன். ஆனால் உங்களுக்காக அல்ல, இளவரசிக்காக இங்கு வந்தேன். நீங்கள் அனைத்தையும் மறந்துவிட்டீர்கள், இளவரசியையும் கூட. இளவரசி அங்கே உமது நினைவாகவே இருக்கிறார். நான் கூறியதை நீவிர் மதிக்கவே இல்லை. இதே உமது பிழைப்பாக உள்ளது.” என்று கூறியது பூனை.

“பலநாள் காதலர்கள் மறந்து போகலாம், புதிய  காதலர்கள் அப்படி மறப்பதில்லை”, என்றது பூனை.

இளவரசியைப் பற்றிப் பூனை கூறியதும், தனது செயலுக்காக வெட்கித் தலை குனிந்தான் இளவரசன்.

“இங்கு நடப்பதை எல்லாம் மறந்து விடு, இப்பொழுது நான் கூறுவதைக் கேட்பீராக. இனி ஒரு முறை என் சொல் கேளாமால் போனால் உமது இளவரசியை என்றுமே காணாமல் போவீர். நாளை காலையில் அரக்கி வந்து கேட்டதும் கடைசி ஆசையாக கடலினை ஒரு முறை காண வேண்டும் என்று கூறி கடலுக்குச் செல்லுங்கள் இளவரசே. அதன் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பது உமக்கே தெரியும். நான் இப்பொழுது செல்கிறேன். அரக்கி வருகிறாள்”, என்று கூறி அங்குள்ள ஒரு சாளரம் வழியே சென்று மறைந்தது பூனை.

அரக்கி வந்தாள். “கடைசி ஆசை ஏதும் உள்ளதா உனக்கு?”, என்று அதட்டினாள்.

“எனக்கு நாளைதான் கடைசி நாளா?”, என்று மிரட்சியோடு கேட்டான் இளவரசன்.

“ஆம்”, என்று கூறிச் சிரித்தாள் அரக்கி.

“அப்படியா, சரி நாளை அதிகாலையில் நான் கடைசி முறையாக கடல் வரை சென்று கடலை ரசிக்க வேண்டும்”, என்றான் இளவரசன்.

“அதிகாலையிலேயே நீ விழித்துக் கொண்டால் உனது ஆசையை நிறைவேற்றிக் கொள்”, என்று கூறினாள் அரக்கி.

“கண்டிப்பாக. விடியும் முன்னே விழித்துக் கொள்வேன்”, என்றாள் இளவரசன்.

“நல்லது, இன்றைய இரவு உனக்கு இறுதி நல்லிரவாகட்டும்”, என்று கூறி விடைபெற்றாள் அரக்கி.

இந்த இரவு இன்னும் விரைவாகச் செல்லாதோ என்றெண்ணியவாறே இருந்தான் இளவரசன். இறுதியாக ஒளி மறைந்து, இருள் சூழ, சூரியன் மெதுவாக கடலுக்குள் குடிபுகுந்தான். மீண்டும் கதிரவன் தன் கதிர்களைப் பரப்பும் முன்னரே கடலை நோக்கிப் புறப்பட்டான் இளவரசன். கடலருகே சென்றதும், தன்னிடம் மீதம் இருந்த மூன்றாவது பந்தையும் தூக்கிக் கடலில் எறிந்தான். கடந்த இருமுறை போன்றே இம்முறையும் ஒரு படகு காற்றைக் கிழித்துக் கொண்டு வந்தது. படகு கரையை அடைந்ததும் அவசர அவசரமாக படகில் ஏறி அமர்ந்தான். அவன் ஏறி அமர்ந்த மறுகணம் மீண்டும் படகு காற்றைக் கிழித்தவாறு பயணித்தது. நொடிப் பொழுதில் அந்தத் தீவு ஒரு புள்ளியளவிற்குதான் இளவரசன் கண்ணிற்குத் தெரிந்தது. பகலிரவு கழிந்த பின்பு விண்மீன்கள் கடலில் ஒளியைப் பாய்ச்சியது. படகு தன் பயணத்தினைத் தொடர்ந்தது. கதிரவன் கதிர் பரப்பக் கடல் தங்க நிறத்தில் மினுமினுக்க அருகே ஒரு தீவு தெரிந்தது. அத்தீவு கோடைகாலத்து இலைகளைப் போன்று பசுமையாக இருந்தது. இளவரசன் அத்தீவை அடைந்ததும் படகிலிருந்து குதித்தோடி அங்கிருந்த ஓர் பள்ளத்தாக்கினை அடைந்தான். அங்கே வெள்ளைப் பனிமழையால் செய்த ஓர் அரண்மனை இருந்தது.

அவ்வரண்மனை அருகே சென்றதும் அதன் கதவுகள் தானாகவே திறந்து கொண்டன. அரண்மனைக்குள் சென்றதும் யாரையும் நோக்காது சென்று கொண்டே இருந்தான். நிறைய அறைகளைக் கடந்து அரண்மனையின் நடுவே உள்ள அறைக்குச் சென்றதும் அங்கே ஒரு வட்டவடிவ அறையைக் கண்டான். அது ஆயிரங்கால் மண்டபம் போன்று ஆயிரம் தூண்களோடு அழகாக இருந்தது. ஒவ்வொரு தூணும் விதவிதமான பளிங்குக் கற்களால் செதுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு தூணிலும் கருத்த கண்களோடு ஒரு வெள்ளைப் பூனையின் சிலை வடிக்கப்பட்டிருந்தது. அங்குள்ள ஒவ்வொரு தூணிற்கு இடைப்பட்ட பகுதிகளையும் விலையுயர்ந்த ரத்தின தோரணங்களால் மூன்று வரிசைகளில் அலங்கரித்திருந்தனர். முதல் வரிசையில் தங்கத் தோடுகள் மற்றும் வெள்ளித் தோடுகளாலும், இரண்டாவது வரிசையில் தங்கச் சிலம்புகள் மற்றும் வெள்ளிக் சிலம்புகளாலும், மூன்றாவது வரிசையில் வாட்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு வாளின் கைப்பிடியும் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்டிருந்தது. மற்றொரு பக்கம் பல மேசைகளில் அனைத்துவித உணவுகளும் அனைத்துவித மதுபானங்களும் தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து உணவு நறுமணம் வீசியது.

இளவரசன் ஒவ்வொன்றாக ரசித்துக் கொண்டிருந்தான். தூணிலிருந்த பூனைச் சிலைகள் அனைத்தும் உயிர் பெற்று ஒரு தூணிலிருந்து மற்றொரு தூணிற்குத் தாவின. ஏன் இப்பூனைகள் தரையில் குதிக்காமல் தூணிற்குத் தூண் தாவுகின்றன என்று குழப்பத்துடன் நோக்க, அங்கே குட்டி வெள்ளைப் பூனை ஒன்று தோன்றியது.

“என்னைத் தெரியவில்லையா?”, என்று இளவரசனிடம் கேட்டது அவ்வெள்ளைப்பூனை.

“நன்றாகவே தெரியுமே”, என்றான் இளவரசன்.

“ஆனால் நான் யாரென்று உமக்குத் தெரியாது. இந்த அரண்மனை, குட்டி வெள்ளைப் பூனைகளுடையது. இந்த அரண்மனையின் அரசன் நான். நீங்கள் பசியாக இருப்பீர்கள். இந்த விருந்து உங்களுக்காகவே ஏற்பாடு செய்யப்பட்டது”, என்றது அப்பூனை.

இளவரசன் விருந்துண்டான். அதன் பிறகு அப்பூனையரசன், தனது பணிப்பூனைகளை அழைத்து, அரக்கனைக் கொல்லும் வாளையும் நூறு நாய்களைக் கொல்வதற்குத் தயார் செய்யப்பட்ட ரொட்டிகளையும் எடுத்து வரப் பணித்தது.

பணிப்பூனைகள் வாளையும், ரொட்டிகளையும் எடுத்து வந்து பூனையரசன் முன் வைத்தன.

“இவற்றை எடுத்துச் செல்லுங்கள். உங்களுக்கு நேரம் குறைவாகவே உள்ளது. அந்த அரக்கன் கோட்டையில் பணிபுரியும் பணிக்குள்ளர்கள் நாளைக்குள் மூன்றாவது பந்தை உருவாக்கிவிடுவார்கள், அதன் பிறகு அரக்கன் நாளை மாலையில் இளவரசியை மணமுடிக்க ஆயத்தமாகிவிடுவான். நீங்கள் இப்பொழுதே கிளம்பிச் செல்லுங்கள். அதற்கு முன் இளவரசிக்கு எனது இப்பரிசினையும் எடுத்துச் செல்லுங்கள்” என்று கூறி ஒரு பரிசினைக் கொடுத்தது பூனை.

அப்பரிசு நகையணிகலனிருக்கும் ஒரு பதக்கம் போலிருந்தது, அப்பரிசு அரண்மனையில் அலங்காரம் செய்யப்பட்ட அனைதினைக்காட்டிலும் அழகாக இருந்தது.

பூனையரசன் தனது படைபரிவாரங்களுடன் இளவரசனை வழியனுப்ப கடற்கரைக்குச் சென்றான். அங்கே படகு தயாராக இருந்தது. இளவரசன் படகிலேறியதும் அனைத்துப் பூனைகளும் “மியாவ்” என்று கூட்டமாக மும்முறை குரலெழுப்பின. இளவரசன் மும்முறை கையசைத்து விடைபெற்றான். படகு வெகுவேகமாக புறப்பட்டுச் சென்றது. இரவெல்லாம் விண்மீன்களை ரசித்தபடி இளவரசியின் நினைவலைகளோடு பயணம் செய்தான் இளவரசன். அதிகாலையில் படகு அரக்கன் வசிக்கும் தீவினை அடைந்த மறுகணம் தாவிக் குதித்து மலை காடு எல்லாம் கடந்து பள்ளத்தாக்கினைக் கடந்தான். இறுதியாக அரக்கன் வசிக்கும் கோட்டையை அடைந்தான். அவனைக் கண்டு கொண்ட நாய்கள் பெருங்குரலில் குரைத்தன. இளவரசன் அவற்றை நெருங்கியதும் அவனைக் குதறியெடுத்து ஆயிரம் துண்டுகளாக்க தயாராக இருந்தன. இளவரசன் அனைத்து நாய்களுக்கும் ரொட்டியைக் கொடுத்தான். அந்த ரொட்டிகளை உண்ட அடுத்த நொடி ஒவ்வொன்றாக மடிந்தன. பூனையரசனிடம் இருந்து பெற்ற வாளையும் கேடயத்தையும் தட்டி மும்முறை ஒலியெழுப்பினான் இளவரசன்.

வாளோசையும் நாய்கள் குரைப்பதையும் கேட்ட அரக்கன், “யாரது? எனது திருமண நாளில் எனக்குச் சவால் விட வந்திருப்பது?” என்று கோபக் கண்களோடு கத்தினான்.

பணிக்குள்ளர்கள் வெளியில் சென்று பார்த்துத் திரும்பி வந்து அங்கே ஓர் இளவரசன் உங்களோடு சண்டையிட வந்திருக்கிறான் என்றனர்.

கோபத்தோடு தனது கவசங்களை அணிந்து கொண்டு சண்டையிட ஓடினான் அரக்கன். அந்த நாள் முழுவதும் சண்டை நடந்தது. கதிரவன் மறைய ஆரம்பித்த பொழுது “இன்றைக்கு அதிகமாகவே சண்டையிட்டுவிட்டோம். இன்றைய சண்டை போதும். நாளை மீண்டும் சண்டையைத் தொடர்வோம்”, என்றான் அரக்கன்.

“இல்லை, இன்றே வாழ்வா சாவா என்பதை அறிய வேண்டும்”, என்றான் இளவரசன்.

“அப்படியா, இந்தா வாங்கிக் கொள்”, என்று கூறி தனது முழுபலத்தையும் பயன்படுத்தி இளவரசனின் தலையை எடுக்க வாளை ஓங்கினான் அரக்கன். ஆனால் அதற்குள் மின்னல் வேகத்தில் இளவரசன் தன் வாளை அரக்கனின் இதயத்தில் இறக்கினான். பெருங்குரலெழுப்பியபடியே அங்கே இறந்து கிடந்த நாய்களின் மீது சரிந்தான் அரக்கன்.

அரக்கன் இறந்ததைக் கண்டதும் பணிக்குள்ளர்கள் அழுது புலம்பினர். தங்களது தலை முடிகளை எல்லாம் பிய்த்து எறிந்தனர். இளரசன் அப்பணிக்குள்ளர்களிடம் நீங்கள் யாரும் பயப்பட வேண்டாம், இளவரசியிடம் சென்று நான் அவளோடு பேச வேண்டும் என்று கூறுங்கள் என்றான் இளவரசன். ஆனால் இளவரசியோ அரக்கனும் இளவரசனும் சண்டையிடுவதை சாளரத்தினருகே நின்று கண்டாள். அரக்கன் மடிந்ததும் இளவரசனைக் கட்டியணைக்க ஓடோடி வந்தாள் இளவரசி. அன்றிரவே அக்கோட்டையில் பணிபுரிந்த பணிக்குள்ளர்கள், இசைவாணர்கள் அனைவரும் வெள்ளி நதித் தீவிற்கு இளவரசன் இளவரசியோடு புறப்பட்டனர். அடுத்த நாள் அதிகாலையில் இளவரசனின் தீவிற்குச் சென்றனர். அதற்கடுத்த நாள் இளவரசன் இளவரசியை மணந்து கொண்டான். இளவரசிக்கு வைர வைடூரியங்களால் ஆன நகைகளை அணிவித்தான். அதில் வெள்ளைப்பூனையரசன் கொடுத்த பதக்கத்தையும் பதித்திருந்தான். அன்றிலிருந்து இளவரசனும் இளவரசியும் மகிழ்ச்சியாக பல்லாண்டுகள் வெள்ளி நதித் தீவை ஆண்டனர்.

https://tamilkanithan.wordpress.com/2018/03/15/ireland-folkstories-1/

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா.......கன காலத்திற்குப் பிறகு ஒரு அம்புலிமாமா கதை. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான கதை.......!  ?  ?  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
On 11/23/2018 at 3:09 AM, suvy said:

ஆஹா.......கன காலத்திற்குப் பிறகு ஒரு அம்புலிமாமா கதை. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான கதை.......!  ?  ?  tw_blush:

சரியான நீளம் கதை :)

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் காலத்தில நிறையத்தரம் இந்தக் கதையை வாசித்து இருப்பினம்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.