Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'2.0 படத்தின் வசூல் 500 கோடி ரூபாயைத் தாண்டியது' - லைகா தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுமார் 550 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட 2.0 திரைப்படம், முதல் நான்கு நாட்களில் 400 கோடி ரூபாயை வசூலித்ததாக லைகா நிறுவனம் தெரிவித்தது.

தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு திரையரங்கிலும் வசூலாகும் தொகை எவ்வளவு என்பதை துல்லியமாக கணக்கிட்டுச் சொல்ல எந்த அமைப்பும் இல்லை என்பதால், தயாரிப்புத் தரப்புத் தெரிவிக்கும் தொகையே அந்தப் படத்தின் வசூலாக குறிப்பிடப்படுகிறது.

2.0வின் வசூல் 500 கோடி ரூபாய் தாண்டியதாக லைகா தகவல்படத்தின் காப்புரிமை LYCA

இந்தப் படம் எந்த மொழியில், எந்தப் பகுதியில் எவ்வளவு வசூலைப் பெற்றது என்ற தகவலை லைகா நிறுவனத்திடம் கேட்டபோது, அவர்கள் தற்போது அந்தத் தகவல் இல்லையெனக் கூறினர்.

2019 மே மாதம் சீனாவில் இந்தப் படம் 10,000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இதனால், படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும்.

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்
  • கருத்துக்கள உறவுகள்

2.0: வசூல் சாதனை அறிவிப்பின் பின்னணி என்ன?

81.jpg

இராமானுஜம்

ஏழு நாட்களில் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் 2.0 வசூல் செய்ததாக அறிவித்திருப்பதில் தமிழகத்தின் பங்கு என்ன ? நேற்று நாம் கூறியிருந்த 400 கோடி ரூபாய் சாத்தியமா என்பதை பற்றிய ஆய்வுகளுக்குள் தென்னிந்திய ஊடகங்கள் ஈடுபடவில்லை.

மீடியாக்களின் செய்தி பசியை லைகா நிறுவனம் பயன்படுத்தி கொண்டது. இந்த செய்தியை வெளியிட்ட வட இந்திய ஊடகங்கள் இந்தி பதிப்பின் மொத்த வசூலை மட்டும் குறிப்பிட்டு எழுதிவிட்டு பிற மொழிகளில் வசூலான தொகை என்ன என்பதை இதுவரை குறிப்பிடவில்லை.

என்ன காரணம் தென் மாநிலங்களில் 2.0 படத்தின் வசூல் மந்தம் என்பதுடன் யார் கொடுக்கும் வசூலையும் அவர்கள் நம்பத் தயாராக இல்லை. முதல் நாள் தமிழகத்தில் 13 கோடி மொத்த வசூல் என்கிற போது, நான்கு நாட்களில் ஐம்பது கோடி' வசூலை கடக்க முடியாது என்பது சினிமா வியாபாரம், வசூலை பற்றிய அனுபவம் உள்ளவர்களுக்கு நன்கு தெரியும்.

சினிமா படங்களின் வசூல் தகவல்களை வெளிப்படை தன்மையுடன் கூறுவதில் இங்கு தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களிடம் தயக்கமும் பயமும் தொடர் கதையாகி வருகிறது.

அதனை சினிமா தயாரிப்பில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களும், நடிகர்களும் தங்களுக்கு சாதகமாக கடந்த பத்தாண்டுகளாக பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

2.0 படத்தின் தமிழக வசூல் நேற்றுடன் முடிவடைந்த முதல் வார கணக்குப்படி சுமார் ஐம்பது கோடி ரூபாய் என்கிறது தியேட்டர் வட்டாரம். இதில் வரி, தியேட்டர் பங்குத் தொகை கழித்து தயாரிப்பாளருக்கு கிடைக்க கூடியது 27 கோடி ரூபாய் மட்டுமே..

ஆனால் இங்கு மொத்த வசூல் மட்டுமே சாதனையாக கருதப்பட்டு அறிவிக்கப்படும் சூழல் தமிழ் சினிமா வளர்ச்சிக்கு ஆரோக்கியமில்லை என்கின்றனர் சிறு பட தயாரிப்பாளர்கள். ரஜினிகாந்த் நடிக்கும் படங்கள் வெளியாகும் போது இது போன்ற மிகைப்படுத்தபட்ட வசூல் கணக்குகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

கபாலி படம் வெளியானபோது அதன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு 500 கோடி வசூல் வரலாற்று சாதனை என மிகைப்படுத்தினார். ஏன் என்றால் ரஜினியிடம் அடுத்த கால்ஷீட் பெறுவதற்கான முயற்சியில் அவர் இருந்தார்.

அது இல்லை என்று ஆனபின்பு கபாலி சாதனை வசூல் இல்லை என்பதுடன் தமிழகத்தில் அப்படத்தின் ஏரியா உரிமை வாங்கி நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்களுக்கு குறைந்த பட்ச தொகையை திருப்பி தந்தார்.

2.0 படம் இதில் இருந்து வேறுபட்டது. தமிழகம், கர்நாடகா மாநிலங்களில் லைகா படத்தை நேரடியாக வெளியிட்டிருக்கிறது. ஆந்திரா, கேரளாவில் ஏற்கனவே ஒப்பந்தம் செய்து கொண்டபடி விநியோகஸ்தர்கள் பணம் தரவில்லை.

இந்த சூழ்நிலையில் படத்தின் வசூலை லைகா நிறுவனம் மிகைப்படுத்தி கூறும் போது அதற்கு எதிராக விபரங்களை வெளியிட வேண்டிய கட்டாயம் விநியோகஸ்தர்களுக்கு இல்லை என்பதால் லைகா நிறுவனம் வசூல் விபரங்களில் தப்பாட்டம் ஆடி வருகிறது என்கின்றனர் 2.0 படங்களின் விநியோகஸ்தர்கள். அதற்கு என்ன காரணமாக இருக்க கூடும் என்கிற போது படத்தயாரிப்பில் முதலீடு செய்வது மட்டும் லைகாவின் நோக்கம் இல்லை. இந்தியாவில் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்யும் முயற்சியில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதற்கு அரசியல் ரீதியாக செல்வாக்கை ஏற்படுத்திக் கொள்ள, தனது நிறுவனத்தை பொது வெளியில் பிரபலப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனை இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் எளிதில் கொண்டுசெல்லும் சக்தி சினிமாவுக்கு உள்ளது. அதனை இந்நிறுவனம் தயாரித்த முதல் படமான கத்தி மூலம்தொடங்கி 2 .0 மூலம் சாதித்து உள்ளது லைகா நிறுவனம்.

கத்தி படம் தயாரித்த போது எனது இரண்டு நாள் செலவு தான் படத்தின் பட்ஜெட் என்றார் லைகா குழுமத் தலைவர் சுபாஷ்கரன். அப்படியென்றால் 2.0 படத்தின் பட்ஜெட் இந் நிறுவனத்தின் புரமோஷனுக்காக செய்யப்பட்டதா?வசூல் ரீதியாக ரஜினியை உலகளவில் லைகா உயர்த்திப் பிடிக்க வேண்டிய காரணம் என்ன? எல்லாம் அரசியல் என்கிறது விபரமறிந்த வட்டாரம். அது என்ன அரசியல், 2.0 வணிக ரீதியாக லாபமா நஷ்டமா? நாளை ..

 

https://minnambalam.com/k/2018/12/06/81

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மின்னம்பலம் யாரை தக்குகினம் என்று தெரியவில்லை மல்ரிபரல் அடிதான் ரஜனியையும் தூக்கி சப்பி கடிச்சு கடைசியில் சுபாஸ்கரனையும் ஒரு ராவு ராவி  விடுகினம் இப்போ லைக்கா வருவாயை கூட்டி காட்ட யோசியமும் சொல்ல வெளிகிட்டு விட்டினம் . 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் நுhறு கோடி வந்தாலே செலவு பணம் வந்து சேரும்.அதன் பின் தான் லாபம்.

வசூல் தொடர்பாக ஜெயமோகன் நீண்டதொரு விளக்கத்தை தன் தளத்தில் கொடுத்து இருந்தார். அதை இந்து வும் நேற்று பிரசுரித்து இருந்தது. முழுமையாக வாசிக்கவில்லை...ஆனால் வசூலின் 20 வீதம் கூட தமிழகத்தில் இருந்து இல்லையென்றும், மிச்சதெல்லாம் வெளி நாடுகளில் இருந்தும் என்று குறிப்பிட்டு இருந்தார். சீனாவில் மட்டும் பத்தாயிரம் திரையரங்க்குகள் என்ற மாதிரி குறிப்பிட்டு இருந்தார். கட்டுரையின் நீளத்தால் வாசிக்கும் போது சலிப்பு வந்து இடையில் நிறுத்தி விட்டேன்

----------------------------------------

2.0 – சில பதில்கள்

Share491

 

s

 

மறுபடியும் சினிமா பற்றிய கேள்விகள். கிட்டத்தட்ட மின்னஞ்சல்கள் அனைத்துமே இக்கேள்விகளால் நிறைந்துவிட்டன. தனித்தனியாக பதில்போடுவது இயலாதது. ஆகவே ஒட்டுமொத்தமாக ஒரு விளக்கம். இத்துடன் முடித்துக்கொள்வோம்.

 

பல கேள்விகள் 2.0 வின் வசூல் பற்றிய ஐயங்கள். ரசிகர்கள் இதைப்பற்றி ஏன் கவலைப்படுகிறார்கள் என எனக்குப் புரியவில்லை. சினிமா செயல்படும் விதமே வேறு. இதழ்களோ, சமூகவலைத்தளங்களோ முற்றிலும் சம்பந்தமில்லாத திசையில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. அவை வெறும் செய்திக்கேளிக்கைகள் மட்டுமே. 2.0 படம் நவம்பர் 29 அன்று காலை வெளியாகியது. சுமார் பத்து மணிக்கு அதன் தோராயமான மொத்த வசூலை கணக்கிட்டுவிட்டார்கள். அதற்கான எல்லா சூத்திரங்களும் வேறு எந்தத் தொழிலையும்போல இதிலும் உண்டு.

 

இந்தியவரலாற்றில் ஒரு சினிமா ஈட்டும் உச்சவசூல் 2.0 வுக்குத்தான்.ஏனென்றால் 2.0 உலகமெங்கும் வெளியாகியது. முதல் ஐந்து நாட்களிலேயே நாநூறுகோடியை தாண்டிவிட்டது வசூல் என லைக்கா அறிவித்துள்ளது [ எந்த நிறுவனமும் வசூலை மிகையாக அறிவிக்காது] மொத்தத்தில் இந்திய அளவில் வசூலில் அதன் இரண்டாமிடத்தில் இருக்கும் படத்தைவிடஒரு மடங்குக்குமேல் கூடுதல் வசூலாகலாம். முதலீட்டை விட  இருமடங்கு வசூல். பதினொன்றரை மணிக்கே ஷாம்பேன் உடைத்துக் கொண்டாடிவிட்டார்கள். அதன்பின்னர்தான் இங்கே இணையத்தில் சம்பந்தமில்லாதவர்கள் வசூல் கணக்குகளை அலச ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் எவரிடமும் தகவல்கள் இல்லை. சினிமாவுக்கும் அந்தச் செய்திகளுக்கும் சம்பந்தமில்லை. 2.0 வெளிவந்தபின்னரும் சர்க்கார் அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த ஆண்டின் இரு முதன்மைவெற்றிப்படங்கள் இவைதான்.

 

இது அடிப்படையில் தமிழ்ப்படம் அல்ல. இதன் வருவாயில் 20 சதம்கூட தமிழகத்தில் இல்லை. 50 சதம்கூட இந்தியாவிலிருந்து அல்ல. இது சர்வதேச ரசிகர்களுக்கான கதை. குறிப்பாகச் சொல்லப்போனால் மூன்றாமுலக நாடுகளுக்கான படம்.  உலகமெங்கும் பத்தாயிரத்துக்குமேற்பட்ட அரங்குகளில் வெளியாகியது. சீனாவில் வரும் மேமாதம் பத்தாயிரம் அரங்குகளில் வெளியாகவிருக்கிறது.  ஆகவேதான் எந்திரனில் இருந்த குடும்ப அம்சங்கள், காமெடி டிராக், காதல் போன்றவை இதில் இல்லை. கதையின் உணர்ச்சிகள் நாடகத்தனம் குறைவாக அளவோடு உள்ளன. ஆரா போன்ற மதம்சாராத ஆன்மிகச் சாயல்கொண்ட கருத்துக்கள் கீழைநாட்டு ரசிகர்களுக்கு மிக உகந்தவை.

 

இந்தப்படத்தின் திரைக்கதை அமைப்பு உலகளாவிய இளையதலைமுறை ரசிகர்களுக்குரியது. அவர்களின் ரசனையை கணக்கில்கொண்டது. ஆகவேதான் பாடல்கள் இல்லை. வழக்கமான தமிழ்ப்படம் முதலில் நெடுநேரம் விளையாட்டாக அலையும், அதன்பின்னரே முதல்முடிச்சு விழும். இதில் இரண்டாவதுகாட்சியிலேயே முதல் முடிச்சு விழுந்துவிடுகிறது. அதன்பின் நகைச்சுவை, குடும்பக்காட்சி எதற்கும் இடமில்லை. உணர்ச்சிகரக் காட்சிகள் அளவோடு உள்ளன.

 

வழக்கமான தமிழ்ப்பட அளவுகோல்களைக்கொண்டு இதை மதிப்பிட்டவர்கள் இதன் மலைக்கச்செய்யும் உலகளாவிய வசூலை எண்ணிப்பார்க்கவேண்டும். இனி இந்த வகைப் படங்கள் கூடுதலாக வரும் என்றும் புரிந்துகொள்ளவேண்டும். அத்துடன் இது முப்பரிமாணப் படம். அதில் ஓர் அளவுக்குமேல் காட்சிகளை வசனங்களாக நீட்டமுடியாது. ஏனென்றால் முப்பரிமாணம் கொண்டு நின்றிருக்கும் பொருட்கள் கவனச்சிதறலை உருவாக்கும்.

2

அறிவியல் அடிப்படை உண்டா?

 

இங்கே எழுந்த பெரிய கேள்வி, இதன் அறிவியல் அடிப்படை பற்றியது. வாழ்நாளில் ஓர் அறிவியல்நூலைக்கூட, ஓர் அறிவியல்கட்டுரையைக் கூட வாசித்திராதவர்களெல்லாம் அறிவியல்பற்றிப் பேசவைத்ததுதான் 2.0 வின் முதல்சாதனை. அவர்களிடமிருந்து அறிவியலைத் தெரிந்துகொள்ள நேர்ந்ததுதான் சோதனை.

 

தெளிவாகவே ஒன்று தெரிந்துகொள்ளவேண்டும். அறிவியல்புனைவு [science fiction] வேறு அறிவியல்மிகைக்கற்பனை [science fantasy]  வேறு. அறிவியல்புனைவு என்பதன் விதிகள் மூன்று.

 

1. அது அறிவியலின் அடிப்படைக் கொள்கைகளுக்கு உட்பட்டதாகவே இருக்கமுடியும்.

 

2 அறிவியலின் முன்னூகங்களில் [hypothesis] மட்டுமே அது கற்பனையை ஓட்டமுடியும். அதன் நிரூபணவழிமுறை அறிவியல் சார்ந்ததாகவே இருக்கமுடியும்.

 

3.அறிவியல்புனைவு என்பது வாழ்க்கையின் ஓர் உண்மையை, தத்துவத்தை அறிவியலைத் துணைகொண்டு சொல்வதாகவே இருக்கும். அதன் இலக்கு அறிவியலில் தாக்கம் செலுத்துவதல்ல, வாழ்க்கையை விளக்குவதே.

 

அறிவியல் மிகுபுனைவுக்கு முதல் இரண்டுவிதிமுறைகளும் இல்லை. அது அறிவியலில் இருந்து குறியீடுகளை,  வியப்பும் திகைப்பும் ஊட்டும் கதைகான வாய்ப்புகளை மட்டுமே எடுத்துக்கொள்கிறது. அது ஒருவகை புராணக்கதைதான், அறிவியலை பாவனைசெய்கிறது. அது கேளிக்கையை அளிக்கிறது, கூடவே உருவகங்கள் வழியாகச் சிலவற்றைச் சொல்கிறது. அதன் குறியீட்டுத்தன்மையைக் கொண்டுதான் அதன் அழகியலைக் கணிக்கிறோம்.

 

ஜுராஸிக் பார்க் முதல் மைனாரிட்டி ரிப்போர்ட் வரையிலான எல்லா சினிமாக்களும் அறிவியல்சார்ந்த மிகுபுனைவுகள்தான். மிக அரிதாகச் சில அறிவியல்புனைகதைகள் சினிமாவாக வந்துள்ளன, அவை பெரிய வணிகப் படங்கள் அல்ல. ஏனென்றால் அவை அனைவரும் பார்க்கத்தக்கவை அல்ல.

 

ஒரு டைனோசரை கொசு கடிக்க, கொசு அரக்கில் மாட்ட, அந்த அரக்கு நிமிளை [amber] ஆக, அந்த கொசுவின் டி.என்.ஏவை எடுத்து தவளைக்கருவுக்கு அளித்து டைனோசரை உருவாக்குவதெல்லாம் அறிவியல் அல்ல – சுஜாதா அந்தப்படம் வந்தபோது சொன்னதுபோல அது  ‘வாழைப்பழ அறிவியல்’ .லட்சக்கணக்கான ஆண்டுகளாக சிலிக்கானிலோ பிறபொருட்களிலோ உள்ள ஒரு பொருள் கற்படிவு [fossil] ஆகவே எஞ்சும்- நம் திருவக்கரை கல்மரங்கள் போல. கரிம [carbon] அமைப்புடன் அல்ல. அவற்றில் டி.என்.ஏ இருக்காது. உலகமெங்கும் டைனோசர் முட்டைகள் கிடைத்துள்ளன. எல்லாமே கல்தான். வேண்டுமென்றால் அப்படியும் யோசிக்கலாம், அவ்வளவுதான்.

 

ஆனால் அந்தக் குறியீடு முக்கியமானது. டைனோசர் என்பது இறந்தகாலம். ஒரு சிறு துளியில், ஒர் அணுவளவு கருவில் இருந்து கடந்தகாலம் உயிர்கொண்டு திரும்ப வருகிறது. நம்மால் கடந்தகாலத்தை கையாள முடியாது. நம் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது அது. இன்னொரு வகையில் டைனோசர் என்பது இயற்கை. இயற்கையை நாம் நம் விருப்பப் படி ஆட்சி செய்யமுடியாது. நாம் அதை சேணமிட்டு வாகனமாக ஆக்கமுடியாது. அடிப்படையில் அது கட்டற்றது. அதைத்தான் அந்தப்படம் சொல்கிறது. ஆகவே தான் ஜுராஸிக் பார்க் மிகப்பெரிய ஒரு செவ்வியல் ஆக்கம்.

 

இன்றைய சூழலில் ‘சிந்திக்கும் ரோபோ’ என்பதே ஒரு மிகைக்கற்பனைதான். வரையறுக்கப்பட்ட ஆணைகளைச் செய்யும் இயந்திரன்களையே மானுடர்களால் இன்று உருவாக்க முடியும். கொள்கை அடிப்படையில் நாளைகூட சிந்திக்கும் ரோபோக்களை உருவாக்கமுடியாது. செயற்கைநுண்ணறிவு [artificial intelligence]  பற்றி அசிமோவ் யுகத்தில், அறுபது-எழுபதுகளில், இருந்த நம்பிக்கை இன்று இல்லை. இன்று அதன் வரையறைகள் முற்றிலும் வேறு.

 

மானுடமொழியுடன் இயந்திரங்கள் உரையாடமுடியும் என்பதை ரோலான் பார்த் முதல் ழாக் தெரிதா வரையிலான அறிஞர்கள் முன்வைத்த நவீன நுண்மொழியியல் [micro linguistics] தகர்த்துவிட்டது. மானுட மொழி என்பது குறியீட்டமைப்புக்குள் குறியீட்டமைப்பு என விரிந்துசென்றுகொண்டே இருப்பது. ஒரு சொல் என்பது அந்த ஒட்டுமொத்த பண்பாட்டாலும், ஒட்டுமொத்த தருணத்தாலும் தற்காலிகமாக அர்த்தம்கொள்வது. தொடர்ந்து அர்த்தம் ஒத்திவைக்கப்படுவது. அந்த முடிவின்மையை இயந்திரங்கள் அடையமுடியாது.

 

மானுடமூளைக்கு நிகரான கணினி மூளை சாத்தியம் என்பதை நவீன நரம்பியல் [neuroscience] இல்லாமலாக்கியது. மூளையும் ஓர் அமைப்புக்குள் மேலும் அமைப்புகள் என முடிவிலாது சென்றுகொண்டே இருக்கும் செயல்பாடு கொண்டது. அதில் ஒருமுறை நிகழ்ந்தது மீண்டும் நிகழ்வதில்லை. ஆலிவர் சாக்ஸ், ரிச்சர்ட் ரீஸ்டாக் போன்றவர்களின் இதைச்சார்ந்த கட்டுரைகளை 1991ல் சொல்புதிதில் மொழியாக்கம் செய்து அளித்திருக்கிறோம். ஆகவே மனிதனைப்போல இயல்பாகச் சிந்திக்கும் இயந்திரன்கள் கூட ஒருவகை கனவுக்கற்பனைகள்தான், அறிவியல் அல்ல

 

எனவே டெர்மினேட்டர் முதல் இண்டர்ஸ்டெல்லார் வரை உலகின் எல்லா பெரும்படங்களும் அறிவியல்சார்ந்த மிகைபுனைவுகளே. எந்த ஒரு இயற்பியல்விதிகளின்படியும் ஒரு ரோபோ நீராக உருகி கதவுக்கடியில் பாய்ந்து மீண்டும் மானுட உருவாக எழுந்து துரத்திக்கொண்டுவராது – டெர்மினேட்டர் போல.எந்த ரோபோவும் பறக்காது. அதேபோல காலப்பயணங்கள், பிரபஞ்சத்துளைகள் எல்லாமே வெறும் கற்பனைகள்தான்.

 

உண்மையான அறிவியல்புனைவுகளில் ஆர்வமுள்ளவர்கள்  ஐசக் அஸிமோவ், ராபர்ட் சில்வர்பெர்க் முதல் ஜான் பார்த் வரையிலானவர்களை வாசித்துப் பார்க்கலாம். நான் சொல்புதிது நடத்தியபோது அறிவியல்புனைவுக்காக ஒரு தனி இதழே கொண்டுவந்திருக்கிறேன். அறிவியல்புனைவுகள் குறித்து சில கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். 12 அறிவியல் கதைகளின் தொகுதியாக  ‘விசும்பு’ என்னும் நூல் வெளிவந்துள்ளது.

 

அத்துடன்,அறிவியல் [science] வேறு தொழில்நுட்பம் [technology]  வேறு. தொழில்நுட்பம் என்பது பொறியியலின் வெளிப்பாடு. அதில் சிலவற்றை ஒரு கதைக்குள் கொண்டுவந்தால் அது அறிவியல்புனைவு அல்ல. அறிவியல் என்பது அறிவியல்கோட்பாடுதான். அந்தக் கோட்பாட்டைக்கொண்டு கற்பனை செய்வதே அறிவியல்புனைவு.

 

நம்மவர்களுக்கு அறிவியல்வாசிப்பு, அறிவியல்புனைவு வாசிப்பு மிகமிகக்குறைவு. ஆகவே ஹாலிவுட் ’பிளாக்பஸ்டர்’ படங்கள் அறிவியலைச் சொல்கின்றன என நம்பிவிடுகிறார்கள். அறிவியல் என்றால் அது அங்கே சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள்.’அங்கல்லாம் சயன்ஸ் பிக்‌ஷன் என்னமா எடுக்கறான்!” என புளகாங்கிதம் அடைகிறார்கள்.

 

2.0 ஓர் அறிவியல் மிகைபுனைவு மட்டுமே. ஜுராசிக் பார்க் போல. ஹல்க் போல. 2.0 வில் அறிவியலின் ஒரு விளக்கம் உள்ளது, அவ்வளவுதான். அதில் உள்ள உண்மையான அறிவியல் இருப்பது இந்தபூமி ஒற்றைக்கட்டுமானம், எந்த உயிரினத்தையும் தனியாகப் பிரிக்கமுடியாது என்ற தரிசனத்தில். அதுவே அதன் மையம். அது அறிவியல் இன்று வந்தடைந்துள்ள ஒர் இடம்.

 

2.0-வின் குறியீட்டுத்தன்மை மிகச்சிறிய ஒன்றை அழிக்க முயன்றால் அது மிகப்பெரிய வடிவை எடுக்கும் என்ற பார்வையில் உள்ளது. அது எப்போதுமே அறிவியலில் பேசப்பட்டு வருவது. பூச்சிமருந்துகளால் வெல்லமுடியாதவையாக ஆன பூச்சிகள் உண்டு. முறிமருந்துக்களால் பெரிய நோய்களாக ஆன கிருமிகள் உண்டு. அந்த அறிவியல் தரிசனமே அதில் குறியீடாகச் சொல்லப்பட்டுள்ளது. மிகச்சிறிய சிட்டுக்குருவி அழிவுச்சக்தியாக ஆகிறது.

 

இப்பிரபஞ்சத்தில் நல்லது – கெட்டது என ஏதுமில்லை. கட்டுக்குள் நிற்பது– கட்டற்றது என்ற இரண்டு விஷயங்களே உண்டு. கட்டுக்குள் இருக்கையில் மிக அழகியது, எளியது, உயிரூட்டுவது கட்டற்றுப் பெருகினால் அழிவுச்சக்தியாக ஆகும் என்பதை அறிவியல் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கிறது. 2.0 அதைத்தான் சொல்கிறது. உங்களுக்குப் புரியாவிட்டால் நவீன படக்கதைகளை வாசிக்கும் உங்கள் குழந்தைகளிடம் கேளுங்கள், விளக்குவார்கள்.

 

செல்பேசியும் சிட்டுக்குருவியும்

செல்பேசிக் கதிரியக்கம் ,பறவைகளின் இறப்பு- ஒரு செய்தி

செல்பேசி அலைகளால் சிட்டுக்குருவிகள் பாதிக்கப்படுகின்றனவா? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை , இந்தப்படத்தில் அறிவியல் இல்லை என ஒரு கூட்டம் சொல்கிறது. அவர்கள் தங்கள் அடிப்படை அறிதல்களையாவது கொஞ்சம் சரிபார்த்துக்கொள்லலாம். உண்மையில் அவர்கள் சொல்வதுதான் முதிரா அறிவியல்.[pseudoscience].அறிவியல் என்பது ஒற்றை அமைப்பு அல்ல. ஒற்றை நிரூபண முறையும் அதற்கு இல்லை. ஒரே உலகப்பார்வையை பகிர்ந்துகொண்டால்தான் ஒரேவகை நிரூபணமுறை செல்லுபடியாகும். அறிவியலுக்குள் பார்வைக்கோணங்கள் பல உண்டு.

 

பூச்சிக்கொல்லிகளால் எந்த கெடுதலும் இல்லை, பசுமைக்குடில் விளைவால் எந்தக்கெடுதலும் இல்லை, அவையெல்லாம் நிரூபிக்கப்படவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும் ஒர் அறிவியலாளர் கூட்டம் உள்ளது.மரங்கள் வெட்டப்படுவதனால் மழைகுறைகிறது என்பதுகூட புறவயமாக இன்னமும் நிரூபிக்கப்படாத ஊகம்தான்.

 

எதையும் பகுதிபகுதியாகப் பிரித்தால்தான் அதை ஆய்வுக்கூட நிரூபணமாக முன்வைக்க முடியும். பூமியை ஒட்டுமொத்தமாக பாதிக்கும் விஷயங்களை அப்படி பிரிக்க முடியாது. ஒட்டுமொத்தமாகப் பார்ப்பவர்கள் X ஆய்வுக்கூட உண்மைகளைப் பார்ப்பவர்கள் என அறிவியலாளர் இரு தரப்பு. அது அறிவியலுக்குள் நிகழும் பெரிய விவாதம்.  இந்த எளிய வணிகப்படத்திலேயே அது தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது, பக்ஷிராஜன் முழுமையாக புவியைச் சார்ந்து பார்க்க விரும்புபவர்.அவரால் தன் தரப்பை நிரூபிக்கமுடிவதில்லை.

Lyall_Watson (1)

 

ஆரா அறிவியலா?

 

ஆரா.[aura] பற்றி. பறவைகள் ஒரு மனிதனின் உடலாக ஆகின்றன என்று கற்பனைசெய்துவிட்ட பின் அதற்கு ஓர் அறிவியல்விளக்கம் அளிக்கவேண்டும் என்றால் இருப்பதிலேயே சிறந்த, அல்லது ஒரே விளக்கம் ஆராதான். ஆர்வம் கொண்டவர்கள் விக்கிபீடியாவிலேயே ஆரா பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ளலாம். ஆரா அறிவியல்சார்ந்ததா? இல்லை. அது இன்று முதிரா அறிவியல் [pseudoscience] என்றே கருதப்படுகிறது. ஆனால் நினைவில்கொள்க, மொத்த ஹோமியோபதி மருத்துவமும், மொத்த சித்தமருத்துவமும் நவீன அறிவியலால் முதிரா அறிவியலாகவே, நிரூபிக்கப்படாத நம்பிக்கைகளாகவே, கருதப்படுகிறது

 

ஆரா பற்றி மேல்நாட்டு அறிவியலிலும், மாற்று அறிவியலிலும் நிறைய பேசப்பட்டுள்ளது. பொதுவாக அறிவியலின் எல்லையில் நின்று இப்படி அதீதமான ஊகங்களைச் செய்துபார்ப்பது என்பது அறிவியலின் அவசியமான செயல்பாடுகளில் ஒன்று.  அதில் பத்துக்கு ஒன்பதும் அபத்தமாகப் போகும், ஆனால் ஒன்று நிரூபணமாகும். அதுவே அறிவியல்திறப்பாக ஆகும். பத்தொன்பதாம்நூற்றாண்டின் இறுதிவரை ரேடியோ அலைகள் காற்றிலுள்ள ஈதர் [ Ether] என்னும் பொருள்வழியாகச் செல்வதாக அறிவியலாளர் சொன்னார்கள்.  பின்னர் அக்கருத்து மறுக்கப்பட்டது. பின்னர் ஈதர் என்பது பருவெளியிலுள்ள மின்னூட்டம்பெறும் இயல்பு என இன்று விளக்கப்படுகிறது. வேறு அர்த்தங்களிலும் இச்சொல் விளக்கப்படுகிறது

 

ஆரா என்பது உயிர்ப்பொருள் வெளியிடும் ஆற்றல்மண்டலம் என பொருள்கொள்ளப்பட்டது. இது ஓர் அறிவியல் ஊகம்தான், ஆனால் நிரூபிக்கப்படாதது. இத்தகைய விளிம்புநிலை விஷயங்களைப் பற்றி எழுதிய லயால் வாட்சன் [Lyall Watson] அவருடைய நூல் ஒன்றில் ஓர் உதாரணம் சொல்கிறார். கருவறையில் இருந்து ஓரு வளரும் கருத்துளியை  எடுத்து பின்னர் அதன் உணர்கொம்பாக ஆகப்போகிற இடத்தில் இருந்து செல்லைப் பிரித்து எடுத்து அதை பின்னர் அதன் காலாக வளரப்போகிற இடத்தில் ஒட்டினால் என்ன ஆகும்? அங்கே உணர்கொம்பு வருமா? வராது, கால்தான் வரும். அதாவது அந்த உடலின் வரைபடம் வேறெங்கோ இருக்கிறது. செல்கள் அங்கே சென்று அமைகின்றன, அந்த வரைபடத்திலுள்ள உருவை அடைகின்றன. அந்த உடல்சாராமல்  உள்ள வரைபடமே ஆரா.

 

லயால்வாட்சன் அறிவியலின் விளிம்புநிலைகளைப் பற்றி எழுதியவர். கறாரான அறிவியலில் அவருக்கு  இடமில்லை, அவர் முன்னூகங்களை முன்வைத்தவர் மட்டுமே.  ஆனால் சுவாரசியமான பல கருத்துக்கள் உள்ளன. அறிவியல்புனைகதைக்கு அவை மிக உகந்தவை. எழுத்தாளன் உள்ளத்தில் பல கேள்விகளை உருவாக்குபவை. பல உருவகங்களை அளிப்பவை. ஆரா இந்தப் படத்தில் ஓரு குறைந்தபட்ச அறிவியல் விளக்கமாக உள்ளது, கூடவே ஓர் உருவகமாகவும் செயல்படுகிறது.

 

திரைப்படங்களும் பெரும்பாலான ‘பிரபல’ பாணி புனைவுகளும் அறிவியலை அல்ல, அறிவியலின் அதீத விளிம்புகளையே எடுத்துப்பேசுகின்றன. அறிவியலின் புதிர்கள் அமைந்துள்ள அவ்வெல்லையிலேயே கற்பனை அத்துமீற முடியும். காலப்பயணம், வேற்றுக்கோள்களின் உயிர்கள் போன்றவை அத்தகையவை. பொதுவாகக் கீழைநாடுகளின் ரசனைக்கு கறாரான அறிவியலை விட அறிவியலின் எல்லையில் அமைந்த கற்பனைகள் மேலும் உகந்தவை. ஆரா அத்தகையது.

 

குழந்தைகளுக்கானதா?

 

சிறுவர்கள் இந்தப்படத்தைப் பார்ப்பது பற்றி குழந்தை எழுத்தாளர் ஒருவரின் கருத்தை வாசித்தேன். இங்கே குழந்தைஎழுத்தாளர்கள் ஏன் குழந்தைகளால் தூக்கிவீசப்படுகிறார்கள் என்பதற்கான சான்று அவருடைய கூற்று. தாத்தாபோல அமர்ந்து பொய்யான மழலைக்குரலில் குழந்தைகளுக்கு நல்லுபதேசங்களைச் சொல்வதே குழந்தை இலக்கியம் என இவர்கள் நினைக்கிறார்கள்.குழந்தைகளை அறிதல்களில் இருந்து பொத்திப்பொத்தி ‘நல்வழியே’ கொண்டுசெல்ல விரும்புகிறார்கள். குழந்தை வாழ்வது அடுத்த காலகட்டத்தில். சரிதான் போய்யா என அது திரும்பிக்கொண்டுவிடும்.

 

ஜுராசிக் பார்க் கதை விவாதிக்கப்பட்டபோது இந்த வினா எழுந்ததை ஸ்பீல்பெர்க் சொல்லியிருக்கிறார். டைனோசர்கள் வந்து மனிதர்களை வாழைப்பழம் போல தின்பதைக் கண்டால் குழந்தைகள் அவற்றை வெறுக்கவும் அஞ்சவும் ஆரம்பிக்கும் என்றார்கள். ஆனால் ஸ்பீல்பெர்க் குழந்தைகள் ஆற்றலை வழிபடுபவை, பேருருக்களை கனவுகாண்பவை, அவை ஒருபோதும் டைனோசர்களை வெறுக்காது என்றார். அவ்வாறே ஆயிற்று. இன்று உலகம் முழுக்க டைனோசர் பித்து குழந்தைகளை ஆட்டிப்படைக்கிறது, அது ஜுராஸிக் பார்க்கிலிருந்து ஆரம்பித்ததுதான். அதில் பேருக்கொண்டு உறுமியபடி வரும் t-rex தான் குழந்தைகளின் உலகளாவிய செல்லம்.

 

ஜுராஸிக் பார்க்கின் அதே சூத்திரம்தான் 2.0விலும் உள்ளது. இயற்கையின் ஓர் நுண்ணிய அம்சம் சீண்டப்படுகிறது, அது பேருருக் கொள்கிறது. இன்று உலக அளவில் எழுதப்படும் பெரும்பாலான குழந்தைக்கதைகளின் கரு இதுதான். தமிழ்த் தொடர்கதைகளை வாசிப்பவர்களுக்குப் புரியாமலிருக்கலாம், குழந்தைகளுக்கு எளிதில் அக்கருத்து புரியும். புரிகிறது என்பதையே 2.0 கொண்ட பெரும்வெற்றி காட்டுகிறது. 2.0 ஓர் இந்திய கேளிக்கை பிராண்ட் ஆக மாறியிருப்பதும் அதனால்தான்

 

ஹாலிவுட்டிலும் சரி, உலகமெங்கும்சரி, இத்தகைய எல்லா கதைகளும் மானுடக் கற்பனையின் ஒரு சின்ன எல்லைக்குள் நிலைகொள்பவை. ஒற்றை அறிவுத்தளம் சார்ந்தவை. உலகளாவிய ரசிகர்களின் ஒரு சிறு உளநிலையை சென்றுதொடுபவை. ஆகவே அனைத்துமே ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள ஒரேவகையான பிம்பங்களால் ஆனவை. ஃபாண்டம், பேட்மேன்,சூப்பர்மேன்,ஸ்பைடர்மேன் என அனைத்துமே ஒரே பிம்பத்தின் வேறுபட்ட வடிவங்கள்தான். அதைப்புரிந்துகொள்வதற்குச் சற்று ஊடகவியல் அறிவு தேவை.

 

உண்மையான அறிவியக்கவாதி இந்த நிகழ்வைப் புரிந்துகொள்ளவே முயல்வான். பெரிய வாசிப்போ, ஆழமான திரைரசனையோ இல்லாதவர்கள்தான் இத்தகைய சினிமாக்களை மட்டம்தட்டி தங்கள் ரசனை மேம்பட்டது என நிறுவ முயல்கிறார்கள். அதெல்லாம் ‘லாடன் தெரியுமா?பின்ன்ன்ன்ன் லாடன்?’ வகை பம்மாத்துக்கள். இவர்கள் எவருக்குமே சினிமா என்னும் கலை குறித்து, அதில்நிகழ்ந்த சாதனைகள் குறித்து ஏதும் தெரியாது.

 

2.0 நிறுவியிருப்பது என்னவென்றால் இப்படி ஒன்றை உருவாக்கி உலகளாவிய வணிகத்தை அடைய தமிழகத்துக் கற்பனை தயாராகியிருக்கிறது, அதேசமயம் தமிழகத்தின் வாசிப்புப்பழக்கம் குறைவானதும் போதிய சினிமா அறிமுகம் அற்றதுமான  சமூகவலைச் சூழல் இதைப்புரிந்துகொள்ளமுடியாமல் தவிக்கிறது என்பதையே.

 

*

 

கடைசிவினா, இத்தகைய பெருமுதலீட்டுப் படங்கள் தேவையா? இது  வீணடிப்பு அல்ல, முதலீடு. இது ஒரு பெருந்தொழில். பெருந்தொழில்கள் தேவை என்றால் இதுவும் தேவைதான். இதுவே பெரிய அளவில் கொண்டுசேர்க்கப்படும். பெரும் வருவாயையும் கொண்டுவரும். ஹாலிவுட் அமெரிக்காவின் மாபெரும் உற்பத்திசாலை. அமெரிக்காவுக்கு கோடிக்கணக்காக வருமானம் கொண்டுவருவது. அதை இதைப்போன்ற படங்கள் இங்கே தொடங்கிவைக்கின்றன. பேட்மேன், ஸ்பைடர்மேன் போலஇது ஒரு இந்திய கேளிக்கை பிராண்ட். .இந்தியாவுக்கு பெரிய அளவில் வருவாய் கொண்டுவருவது. இந்தப்போக்கு வளரவேண்டும்.

https://www.jeyamohan.in/115778#.XArTRhHQZAh

  • கருத்துக்கள உறவுகள்

 

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்

2.O வசூல்: நிஜமும் நிழலும்!

2.O வசூல்: நிஜமும் நிழலும்!

 

இராமானுஜம்

 

இந்திய சினிமா பிரமிப்புடன் பார்த்து வியந்த நிறுவனம் லைகா. அதிக பட்ஜெட், பிரமாண்ட கூட்டணி, அடிப்படையில் தமிழ்ப் படமாக தொடங்கப்பட்ட 2.O படத்துக்கான இசை வெளியீடு, ட்ரெய்லர் வெளியீட்டை மும்பையிலும், வெளிநாடுகளிலும் நடத்தி கெத்து காட்டியது.

2.O படத்தின் வியாபாரமும் வசூலும் பெருமைக்குரிய சாதனையாக இருக்கும் என்று லைகா நிறுவனம் எதிர்பார்த்தது. அப்படி ஓர் ஆச்சரியத்தை 2.O படத்தின் வியாபாரம் வசூல் நிகழ்த்தவில்லை.

கபாலி, காலா, 2.O இம்மூன்று படங்களும் ரஜினிக்கு இரு மடங்கு லாபகரமானவை. ஆனால் இந்தப் படங்களை தயாரித்த, விநியோகம் செய்த, திரையிட்ட திரையரங்குகளுக்கு இவை லாபத்தைக் கொடுத்ததில்லை.

கபாலி, காலா, 2.O ஆகிய மூன்று படங்களிலும் ரஜினியை முன்னிறுத்த அதிகம் செலவு செய்தனர் தயாரிப்பாளர்கள். ஆனால், லாபம் கிடைக்கவில்லை. அதே நிலைமைதான் 2.O படத்துக்கும் ஏற்பட்டிருக்கிறது. தமிழ்ப் படங்களுக்கு அதன் பட்ஜெட்டில் பெரும்பகுதியைத் தமிழ்நாட்டில் தியேட்டர்கள் வசூல் மூலம் எடுப்பது இயல்பு. 2.O அனைத்து இடங்களிலும் எதிர்பார்த்ததைக் காட்டிலும் குறைவான வசூல் ஆகியுள்ளது. 11 நாட்களில் உலகம் முழுவதும் 2.O படத்தின் மொத்த வசூல், தயாரிப்பாளர் அல்லது விநியோகஸ்தருக்கு கிடைக்கக்கூடிய பங்குத் தொகை உங்கள் பார்வைக்கு:

13a.jpg

விநியோக வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது நான்கு நாட்களில் ரூ.400 கோடி இரண்டு வாரங்களில் ரூ.500 கோடி என தயாரிப்பு தரப்பு வெளியிட்ட தகவலின் உண்மைத் தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.

2.O படம் 11 நாட்களில் தமிழ்நாட்டில் திரையரங்குகள் மூலம் 80.3 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இவற்றில் தயாரிப்பு தரப்பு அல்லது விநியோகஸ்தர்களுக்குக் கிடைத்திருப்பது 46.4 கோடி ரூபாய் ஆகும். இந்தியா முழுவதும் 404.3 கோடி ரூபாய் வசூலைப் பெற்றுள்ளது. தயாரிப்பு தரப்புக்கு 205.4 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் இந்தப் படம் 11 நாட்களில் 530.7 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ஆனால், தயாரிப்பு தரப்புக்கு 264.1 கோடியே கிடைத்துள்ளது.

இந்தியில் மட்டும் குறிப்பிடும்படியாக இருப்பதாகவும் மற்ற இடங்களில் எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லை என்றும் கூறுகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் சீனாவில் படத்தைத் திரையிடுவதற்கான முயற்சியை லைகா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

 

https://minnambalam.com/k/2018/12/12/13

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.