Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செவ்வாய்க் கோளுக்குச் சென்றவர்களின் பெயர்ப் பட்டியலில் நீங்களும் இடம்பெற வேண்டுமா? - இதோ நாசா வழங்கும் இலவச வாய்ப்பு!

Featured Replies

Are you willing to go to Mars?

ரு படத்தில் வடிவேலுவிடம் “ஆளுக்கு ஐயாயிரம் ரூபாய் எடுத்து வை! இல்லன்னா எங்களை செவ்வாய் கிரகத்துக்குக் கூட்டிட்டுப் போ!” என்று போதைப்பொருளுக்குப் பணம் கேட்டு மிரட்டுவார் மயில்சாமி.


வெறும் போதை மயக்கத்தின் மூலம் செவ்வாய்க் கோளுக்குப் போகவே ஐயாயிரம் ரூபாய் ஆகும் என்றால், அது கூட இல்லாமல் முழுக்க முழுக்க இலவசமாகவே உங்களை... இல்லை இல்லை... உங்கள் பெயரைச் செவ்வாய்க்கோளுக்கு அழைத்துப் போக இன்று முன்வந்திருக்கிறது நாசா.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா செவ்வாய்க் கோள் பற்றிப் பல ஆண்டுகளாகவே தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. உலாவிகளை (Rovers) அந்தக் கோளில் தரையிறக்கி நேரிடையாகவே பல சோதனைகளையும் நடத்தி வருகிறது. இவையெல்லாம் நாம் அறிந்தவையே. இதன் அடுத்த பகுதியாக வரும் ஆண்டில் ‘மார்சு 2020 (MARS 2020)’ எனும் செயல்திட்டத்தின் கீழ் மீண்டும் இன்னோர் உலாவியைச் செவ்வாயில் இறக்கத் திட்டமிட்டுள்ள நாசா இதில் மக்களும் கலந்து கொள்ளும் வகையில் ஒரு சிறிய முயற்சியை மேற்கொண்டிருக்கிறது. இதன் மூலம் நாமும் பெயரளவில் செவ்வாய்க்குப் போக முடியும். எப்படி எனக் கேட்கிறீர்களா?

நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; நாசாவின் இந்த இணையத்தளப் பக்கத்துக்குச் சென்று அங்கு காணப்படும் சிறிய படிவத்தில் நம் பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களை நிரப்பி அனுப்ப வேண்டும். உலகெங்குமிருந்து இவ்வாறு திரட்டப்படும் பெயர்கள் அனைத்தும் (நெறிமுறைகளுக்கு உட்படாத வகையிலான பெயர்கள் தவிர) ஒரு நுண்சில்லில் (microchip) பதிவு செய்யப்பட்டு, உலாவியில் (Rover) இணைத்துச் செவ்வாய்க்கு அனுப்பப்படும்.

அதாவது ஒரு காசு செலவில்லாமல், எந்த விதக் கடினமான பயிற்சியும் மேற்கொள்ளாமல் யார் வேண்டுமானாலும் விண்வெளிப் பயணம் செய்யலாம், செவ்வாய்க்குப் போகலாம்.

“அட, செவ்வாய்க்குப் போகும் கருவியில் ஓர் ஓரமாக நம் பெயரை ஒட்டி அனுப்பப் போகிறார்கள், அவ்வளவுதானே?” எனக் கேட்கலாம். ஆனால் இதற்காக வழங்கப்படும் பயணச்சீட்டைப் பார்த்தால் அப்படித் தோன்றாது. இதோ கீழே உள்ள படத்தைப் பாருங்கள்!


Gnanapragasan_BoardingPass_MyNameOnMars2

நம் பெயர் முதலான விவரங்களைக் கொடுத்த உடனே மேற்கண்டவாறு ஒரு பயணச்சீட்டு நமக்கு வழங்கப்படுகிறது. அதில் பாருங்களேன், செவ்வாய்க்கு அனுப்பப்பட உள்ள ஏவூர்தி (Rocket), அது புறப்படும் இடம், செவ்வாயில் அது தரையிறங்கும் இடம் என அத்தனை விவரங்களுடன் கூடவே பெரிய எழுத்துக்களில் நம் பெயரும் பொறிக்கப்பட்டு ஏறக்குறைய உண்மையான பயணச்சீட்டுப் போலவே இருக்கிறது!

இந்தத் திட்டம் கேட்கச் சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும் இப்படி ஒரு பயணச்சீட்டை நம் பெயரில் பெறும்பொழுது புதுவிதமான உணர்வு ஒன்று ஏற்படத்தான் செய்கிறது. இந்தச் சீட்டை நாம் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளலாம்; தரவிறக்கிக் (Download) கொள்ளலாம்; அச்செடுத்துக் கொள்ளலாம்; இதற்கென அளிக்கப்படும் ஒட்டுநிரலியின் (Embed Code) மூலம் நமது வலைப்பூவில் / இணையத்தளத்தில் இப்படிக் காட்சிக்கும் வைக்கலாம்.

அதுவும் இத்திட்டத்துக்காக நாம் பெயர் தாக்கல் (submit) செய்வது இந்த ஒரு தடவையோடு முடிவது இல்லை. அடுத்தடுத்த செவ்வாய்க்கோள் ஆராய்ச்சிகளின்பொழுதும் இதே போல் நம் பெயரை மீண்டும் மீண்டும் அனுப்பலாம்; ஏற்கெனவே கலந்து கொண்டவர்கள் எனும் பெருமையோடு. இதற்கு முன்பு 2014, 2015, 2017 ஆகிய ஆண்டுகளிலும் இதே போன்ற வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அப்பொழுது அனுப்பியவர்கள் இப்பொழுது மீண்டும் தங்கள் பெயரை அனுப்ப அதே இணையப் பக்கத்தில் மறுபயணர் (Frequent Flyer) எனும் சிறப்புப் பிரிவும் வழங்கப்பட்டுள்ளது.

திட்டம் துவங்கிய நாள் முதல் இதோ கட்டுரையின் இந்த வரியைத் தட்டெழுதிக் கொண்டிருக்கும் இந்நொடி வரை 88,60,325 பேர் தங்கள் பெயரை இத்திட்டத்தின் கீழ் தாக்கல் (submit) செய்திருக்கிறார்கள்! இன்னும் பல கோடிப் பேர் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகப் பெரும் புகழும் தலைசிறந்த சாதனை வரலாறும் கொண்ட நாசாவின் செயல்திட்டம் (project) ஒன்றில் நமது பெயரும் ஏதோ ஒரு வகையில் இடம்பெறுவது நமக்குப் பெருமைதானே! வரலாற்றில் நம் பெயரும் பதிவாக இது ஒரு வாய்ப்புத்தானே என நினைப்பவர்கள் இப்பொழுதே தங்கள் பெயரை அனுப்பி வைக்கலாம்.

அதே நேரம், விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவுக்குத் திடீரென அரசியல்வாதிகளைப் போல இப்படி மக்களை மகிழ்விக்கும் எண்ணம் வந்தது ஏன் என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!

நாசாவின் செவ்வாய்க் கோள் ஆராய்ச்சிகள் அனைத்துக்கும் முக்கிய நோக்கமே அங்கு மனிதர்கள் வாழ முடியுமா என்பதைக் கண்டறிவதுதான். ஏற்கெனவே உலகப் பெருமுதலாளிகளின் பணவெறியும் அதற்காகவே அரசு நடத்தும் அமெரிக்கா போன்ற நாடுகளின் வலச்சாரி அரசியலும் இணைந்து இந்தப் பூமியை உயிர்கள் வாழத் தகுதியில்லாத சுடுகாடாக மாற்றத் தொடங்கி விட்டன. ஓசோனில் ஓட்டை, துருவப் பகுதிகளில் பனிமலைகள் உருக்கம், இந்தியா போன்ற பல நாடுகளில் ஏற்படும் வரலாறு காணாத வெள்ளம் என்று உலக அழிவுக்குப் பல எச்சரிக்கைகளை இயற்கை காட்டி விட்டது. ஆனாலும் இந்த வளர்ந்து கொழுத்த நாடுகள் சுற்றுச்சூழலுக்கு எதிரான தங்கள் எந்த நடவடிக்கையையும் அணுவளவும் மாற்றிக் கொள்ள ஆயத்தமாக இல்லை. மாறாக, வேறு புது உலகையே வேண்டுமானாலும் படைத்துக் கொள்ளலாமே ஒழிய இந்தப் பூமியில் மிச்சமிருக்கும் இயற்கை வளங்களையும் சக்கையாகப் பிழிந்தெடுக்காமல் விடுவதில்லை என்கிற முடிவில்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அப்படி ஒரு புது உலகைப் படைப்பதற்கான முயற்சிதான் நாசாவின் செவ்வாய்க் கோள் ஆராய்ச்சிகள்.

ஆனால் இந்த முயற்சி பலன் தர வேண்டுமானால் பெருமுதலாளிகள் கொண்டு வந்து கொட்டும் பண மூட்டைகள் மட்டும் போதாது; மக்களின் ஆதரவும் கொஞ்சமாவது வேண்டும். ஏனெனில் வருங்காலத்தில் மனிதர்களைச் செவ்வாய்க்குப் புலம்பெயரச் செய்வதாக இருந்தால் உலகப் பெரும் பண முதலைகள் மட்டும்தாம் அதில் இடம் பிடிப்பார்கள் என்றாலும் அவர்களுக்கு அடிமை ஊழியம் பார்ப்பதற்காகவாவது நம்மைப் போன்ற எளிய மனிதர்களும் சில கோடிப் பேர் தேவை.

எனவே எல்லாவற்றுக்கும் முன்னதாக மக்கள் உள்ளத்தில் விண்வெளிப் பயணம், செவ்வாய்ப் பயணம் போன்றவற்றின் மீது அடிப்படை ஆவலைத் தூண்டியாக வேண்டும். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அந்த மிகப் பெரிய மாற்றத்துக்கு மனிதர்களை உள்ளத்தளவில் கொஞ்சமாவது ஆயத்தப்படுத்தியாக வேண்டும். அதற்கான உலகளாவிய ஒரு முயற்சிதான் இந்தப் பெயர் திரட்டும் வேலை என்பது என் தனிப்பட்ட கருத்து.

ஆம்! உலகம் விட்டு உலகம் பறக்கும் அந்த உச்சப் பொருட்செலவுப் பயணத்தின் நுழைவுச்சீட்டை வாங்க வசதியற்ற நமக்கு வழங்கப்படும் ஒரு சிறு ஆறுதல் பரிசுதான் இந்த இலவச நுழைவுச்சீட்டு. அதாவது கட்டுரையின் துவக்கத்தில் சொன்ன நகைச்சுவைக் காட்சியைப் போல், என்றைய பொருளாதாரத்திலும் செவ்வாய்க்குப் போக முடியாத நம்மைப் போன்ற எளிய மயில்சாமிகளுக்கு வழங்கப்படும் ஒரு சிறு போதை இது!

இப்படி எல்லாவற்றையும் ஆழமாக, தீவிரமாகச் சிந்தித்து வாழ்க்கையில் கிடைக்கும் சில சின்னஞ்சிறு இன்பங்களை இழக்க வேண்டுமா எனக் கேட்பவரா நீங்கள்? கைதூக்குங்கள், நீங்களும் என் கட்சியே! தட்டி விடுங்கள் உங்கள் பெயரையும் உங்கள் அன்புக்குரியவர்களின் பெயர்களையும் நாசாவுக்கு. கடைசி நாள் செப்டம்பர் 30.

இது பற்றி மேலும் விவரங்கள் அறியவும் ஐயம் ஏதும் இருந்தால் தெளிவுபடுத்திக் கொள்ளவும் மேலே கூறிய இணையப்பக்கத்தின் அடியில் காணப்படும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ) எனும் இணைப்பைச் சொடுக்குங்கள்! 

❀ ❀ ❀ ❀ ❀
(நான் தினச்செய்தி நாளிதழில் ௩௦-௦௮-௨௦௧௬ அன்று எழுதியது).
 
படங்கள்: நன்றி மார்சு 2020 செயல்திட்டம் - தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி மேலாண்மை மையம் (NASA) 
 
தொடர்புடைய பதிவுகள்:
இணையத்தமிழ் ஊடகம்! – நான்காம் தமிழின் வளர்ச்சியில் அடுத்த கட்ட முயற்சி!
முகநூல் 'விருப்பம்' பொத்தான் - புதிய சிக்கலும் தீர்வும்!

Edited by இ.பு.ஞானப்பிரகாசன்
இணைக்கப்பட்ட படம் பதிவேறவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

நாசா... எங்களுடைய பெயரை, செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி....
எங்களுக்கு, செவ்வாய் தோசம்  பிடிக்க வைக்கிறதுக்கு.... பிளான் பண்ணுது போலை இருக்கு. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

நாசா வெள்ளையள் முதலில் தமிழ்நாடு வைத்தீஸ்வரன் கோவிலில் வந்து உத்தரவு பெற வேண்டும்.. 👍

  • கருத்துக்கள உறவுகள்

அங்கேயும் அவங்களின் முட்டிக்கு கீழே அடிமையாகத்தான் இருக்க வேண்டுமா ....  செவ்வாய் தொடும் அளவாவது உயரமுடியாதா ......!  🤔

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.