Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதித் தேர்தலைத் தமிழ் மக்கள் பகிஷ்கரிக்கலாமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தலைத் தமிழ் மக்கள் பகிஷ்கரிக்கலாமா?

Editorial / 2019 ஒக்டோபர் 10 வியாழக்கிழமை, பி.ப. 05:06 

-இலட்சுமணன்  

பல்லின சமூகக் கட்டமைப்புக் கொண்ட ஒரு ஜனநாயக நாட்டின் பிரஜைகளின் வாக்குரிமையும் அதன் தேவைப்பாடும் பற்றிச் சிந்திக்க வேண்டிய ஒரு தருணத்தில் தமிழ்ச் சமூகம் தள்ளப்பட்டுள்ளது. 

அதேபோல், வழிகாட்டலும் அதற்கான வழிபடுதலும் சரியான முறையில் வரையறுத்துச் சொல்லப்பட வேண்டிய ஒரு காலச்சுழலினுள் இன்றைய தமிழ்ச் சமூகம் சிக்கியுள்ளது. 

கடந்த கால வரலாறுகளும் அவை கற்றுத்தந்த பாடங்களும் நல்லிணக்கமும் அதற்கான தேவைப்பாடுகளும், தற்காலத்தில் பேசுபொருளாக இருந்த போதும், அதனால் ஏற்பட்டிருந்த விளைவுகள், எமக்குப் பல்வேறு கருத்தியல்களை, பதிவுகளை பாடமாகத் தந்திருந்தன. ஆயினும், இதன் பின்புலத்தில் வகுக்கப்பட்ட இராஜதந்திர நகர்வுகளும் இவற்றுக்கு மேலால் நடத்தப்பட்ட உரிமைப் போராட்டங்களும் எமது இருப்புகள் தொடர்பாகத் தெளிவான ஒரு செய்தியைத் தமிழ்ச் சமூகத்துக்கு கற்றுத் தந்துள்ளன. 

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற முடிவுக்குத் தமிழ் இனத்தின் விடுதலைக்காகக் குரல் கொடுப்பதாக உரிமை கோரும் தமிழ் அரசியல்க் கட்சிகள், இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. அவை அனைத்தும், ஏட்டிக்குப் போட்டியாக அரசியல் அறிக்கைகளையும் அதற்கும் மிஞ்சிய முறையில் முட்டிமோதிக் கொண்டும் உள்ளன. 

கடந்த கால வரலாற்றில், தமிழ்த் தேசியக் கட்சிகள் என்று கூறிக் கொள்பவைகள், காலத்துக்குக் காலம் ஆட்சிபீடம் ஏறும் பேரினவாத கட்சிகளுக்கு ஆதரவாக இருந்துள்ளன. ஆனால், அதனால் சாதித்தவைகள் எதுவும் இல்லை; இழந்தவைகளே அதிகம். 

இந்தத் தமிழ்த் தேசியக் கட்சிகள், கடந்த சில வாரங்களாகக் கூப்பாடு போட்ட நிலை மாறி, இன்று, திடீரென “தமிழர் பிரச்சினை தொடர்பாக வெளிப்படையாகவும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்படும் என்று வாக்குறுதி தந்தால்தான் ஆதரவு” என்றும் வாய்கிழியப் பேசியும் அறிக்கையும் வௌியிட்டும் வருகின்றார்கள். 

இன்று, திடீரென உயர்கல்விப்புலம் சார் மாணவ அமைப்புகளின் அழைப்பின் பேரில் ஒன்றிணைந்து, தேர்தலைப் பகிஷ்கரிப்பது; ஐ.தே.கவை நிராகரிப்பது; பொதுஜன பெரமுனவை வெல்ல வைப்பது என்ற சிக்கல்நிலைக் கருத்தாடல்களும் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் பிரசாரப்படுத்தப்பட்டு வருகின்றன. 

இத்தகைய கருத்துகளை மக்கள் மத்தியில் பிரசாரப்படுத்தும் அமைப்புகள், எந்த அடிப்படையில், எவர் ஆலோசனையில் இத்தகைய தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முனைகின்றார்கள், இந்த அமைப்புகளின் பின்புலத்தில் நிற்பவர் யார் என்பதையும் தமிழ்த் தேசியத்துக்காக போராடுகிறோம் என்று சொல்லிக்கொள்ளும் கட்சிகள் இதயசுத்தியுடன் வெளிப்படுத்த வேண்டும்.

ஏனெனில், ‘சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது’ என, விடுதலைப் போராட்டத்தை விமர்சித்த நபர்கள் எல்லோரும், இன்று மாணவர் அமைப்பின் முடிவுக்குக் கட்டுப்பட முனைவது வேடிக்கையாகவே தெரிகின்றது. 

தமிழ் மக்கள், தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்த, கட்சிகள் சார்ந்த உறுப்பினர்கள், தங்கள் சுயநல அரசியல் காரணங்களுக்காக, இந்த முடிவுகளின் நிமித்தம், எதிர்காலத்தில் நிகழவிருக்கும் எதிர்வினைகளை மக்களே அனுபவிப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.  அத்தறுவாயில், இத்தகைய சுயநல அரசியல்வாதிகள், தாங்கள் அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் தங்கள் இலாப நட்டங்களைச் சரி பார்த்துக் கொள்ளவும் பயன்படுத்தும் ஒரு மூலோபாயமாகவே, இத்தகைய நடவடிக்கையின் சார்பான கருத்து வெளிப்பாடுகள் புடம் போட்டுக் காட்டுகின்றன. 

ஏனெனில், கடந்த கால வரலாற்றில், தமிழினம், புலிகளின் பலத்தோடு பேரம்பேசும் சக்தியாக இருந்த காலத்தில் எடுத்த தேர்தல் பகிஷ்கரிப்பு முடிவானது, தமிழினத்தை அழித்து மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது. அந்த இருள் சூழ்ந்த காலத்திலிருந்து மீள முடியாத ஒரு சூழலில், 10ஆண்டு காலத்துக்குள் மீண்டும் அத்தகையதொரு முடிவானது, தமிழினம், பேரம் பேசும் எந்தவித சக்தியும் சர்வதேச ஆதரவும் மிகமிக நலிவடைந்த காலத்தில் முன்னெடுக்க முனைவது என்பது, போரின் விளைவுகளின் துயரங்களிலிருந்து மீட்சி பெறாத தமிழினத்தை, இன்னும் ஓர் இருண்ட யுகத்துக்குள் தள்ளி விடும் பேராபத்தான படுகுழி அரசியல் நிலைக்கு இட்டுச்செல்லும். தூர சிந்தனையற்ற உள்ளூர், வெளியூர், இராஜதந்திரம், புத்தி சாதுரியமற்ற இழி அரசியல் முடிவாகவே இதைத் தமிழ் மக்கள் நோக்குகின்றனர்.

அரசியல் உரிமைகளில் வாக்குரிமை மிகப் பிரதானமானது. இலங்கை அரசியல் யாப்பின் முதல் அத்தியாயத்தின் உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகளைத் தாமாகவே மறுக்கும் மறுதலைச் சிந்தனை என்பதும் தமக்குரிய பிரஜாவுரிமை அந்தஸ்தைத் தாரைவார்க்கத் துணியும் மிக மோசமானதோர் அறிவியல் பூர்வமற்ற, அடிப்படை அரசியல் தெளிவற்ற குழந்தைத்தனமான முடிவை, தமிழ் மக்களை எடுக்கும் படி பணிப்பதும் தூண்டுவதுமான இந்த முடிவென்பது, ஒரு தற்கொலை அரசியல் செயற்படாகவே பார்க்க வேண்டியுள்ளது. 

நாம் எதைச் செய்கிறோம்; எவ்வாறு செய்கிறோம்; எதற்காகச் செய்கிறோம்; ஏன் செய்கிறோம் என்ற தூர நோக்குடைய சிந்தனையற்ற இத்தகைய முடிவுகள் கடந்த கால வரலாற்றில் கற்றுக்கொண்ட எந்தவொரு பாடத்தையும் இவர்களுக்கு நினைவூட்டவில்லையா? அல்லது இத்தகைய முடிவுகளை எடுத்தவர்களுக்கும், அதற்கு ஆதரவாக நின்று  செயற்படுபவர்களுக்கும் துணைபோகும் இச்சக்திகளுக்கும் இவை பற்றிய தெளிவில்லையா? அல்லது அவர்கள் இந்த வரலாற்றுக் காலத்தை அறியாதவர்களா, என்ற வினாக்கள் இன்று தமிழ் மக்கள் மத்தியில் முகிழ்ந்துள்ளன எனலாம். 

இவற்றுக்கு மேலாக மக்களின் அடிப்படை உரிமையான வாக்களிக்கும் உரிமையை பகிஷ்கரிக்கும்படி தூண்டுவது என்பது அவர்களுக்கு இத்தீவில் கிடைத்த அதிகுறைந்தபட்ச உரிமையையும் விட்டுக் கொடுக்கும் அல்லது, இல்லாதொழிக்கும் நடவடிக்கை எனலாம். இதை மறுவாசிப்பு செய்தால் பிரஜாவுரிமை அந்தஸ்தற்ற நாடற்றவன் என்ற சிங்கள பெருந்தேசியவாத சிந்தனைக்கு ஒத்தூதும் சக்திகளாக இவர்களைத் தமிழ் மக்கள் ஏன் நோக்க முடியாது. 

தமிழர் தம் வாக்குகளை நிராகரிப்பது என்பது வேறு; வாக்களிப்பை பகிஷ்கரிப்பது என்பது வேறு. எனவே பகிஷ்கரிக்கும்படி கோர எவருக்கும் உரிமை இல்லை; நிராகரிக்கும் படி கோர உரிமை உண்டு. ஆனால், இந்த நிராகரிப்புகளால் இத் தீவின் வரலாற்றுப் புலத்தில் எதனையும் சாதித்துவிட முடியாது என்பதும் சர்வதேச நிலைமைகள், இந்திய அரசின் சமிக்ஞையின்றி இதற்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என்பதும், தற்கால அரசியல் நிகழ்வுகள் நன்கு படம் பிடித்துக் காட்டுகின்றன, காட்டிக் கொண்டிருக்கின்றன.

இத்தகைய ஒரு நிலையில், இலங்கை வரலாற்றின் அதிகப்படியான அதாவது, 35 வேட்பாளர்கள் போட்டியிடும் களத்தில் ஐ.தே.க, பொதுஜன பெரமுன இடையே கடும் போட்டி நிகழவிருக்கிறது. இது, காலம் காலமாக இலங்கை வரலாற்றில் இவ்வாறு தான் நிகழ்ந்துள்ளது. ஆயினும் காலத்துக்குக் காலம் ஆட்சி மாறினாலும் கட்சிகள் ஒருபோதும் மாறவில்லை; மாறப் போவதுமில்லை. 

இந்த வகையில் இன்றைய தமிழித்தின் இருப்புகள் தற்சார்பு அரசியலே! எனவே, இணக்க அரசியலுக்குச் செல்ல வேண்டும்; இல்லையேல் நாம் தொடர்ந்தும் இதே துயரத்தைத்தான் அடுத்த சந்ததிக்கும் வழங்கவேண்டும். மாறாக, எமக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்ற  நம்பிக்கை இருக்குமானால் அது, இந்தியக் கண்டத்தில் இந்தியா என்ற நாடு இருக்கும் வரை, ஈழத் தமிழினத்துக்குக் கிடைக்கும் தீர்வு, 1987இல் கிடைத்த இந்திய இலங்கை ஒப்பந்தம் ஒன்றே; அதை மிஞ்சி இங்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை என்பதே, தற்கால அரசியல் சூழ்நிலைகளும் கடந்தகால அரசியல் வரலாறும் கற்றுத்தந்த பாடங்கள் ஆகும் .

இந்த அரசியல் நிலைமை என்பது, சிங்களப் பெருந்தேசியவாதக் கட்சிகளுக்கும் புரியும்; தமிழ் அரசியல்வாதிகளுக்கும் புரியும்; புலம்பெயர் தமிழர்களுக்கும் புரியும். 

ஆயினும் விடுதலையின் பெயராலும் போரில் பாதிக்கப்பட்ட தமிழரின் பெயராலும் தங்கள் சுயநல அரசியலை நடத்தத் துணிந்தவர்களுக்கு இவற்றை  புரிந்து கொள்ளும் தன்மை, அறிவு நிலையிலோ அரசியல் அனுபவத்திலோ இல்லை என்பதே உண்மை.

எனவேதான், தேர்தல் பகிஷ்கரிப்பு என்ற பிற்போக்குத்தனமான அரசியல் ஞானமற்ற, தமிழினத்தை ஒரு தேச விரோத சக்தியாக, இனவாத சக்தியாக, சிங்கள இனத்துக்குக் காட்டும் முயற்சியாகவே இது அமையும். 

எனவே, தமிழினத் தமிழ் மக்கள், தாமாக முடிவெடுக்கும் சுதந்திரத்தையும் உரிமையையும் அழித்து, பகிஷ்கரிப்பு கருத்தாடல் கருத்துரைக்கும் சக்திகள் மௌனமாக இருப்பதே, தமிழினத்தை இன்றைய சூழலில் காப்பாற்றும். 

இதுவே ஈழத்தமிழ் மக்களின் மன வெளிப்பாடுமாகும். இது சாத்தியப்படுமா? ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிக்கக் கோரும் இத்தகையவர்களின் தமிழ் மக்களுக்கான  தெளிவான பதில் என்ன?

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஜனாதிபதித்-தேர்தலைத்-தமிழ்-மக்கள்-பகிஷ்கரிக்கலாமா/91-239798

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 
“Insanity is doing the same thing over and over and expecting different results” 
Albert Einstein
 
எங்களுக்கும் பகிஷ்கரிப்பிற்கும் இருக்கும் பந்தம் பலமானது, தலைமுறைகள் தாண்டியும் தொடரும் ஒரு புனிதமான உறவது. நாங்கள் ஆயுதங்களை காதலிக்கவில்லை, ஆனால் பகிஷ்கரிப்பைக் காதலித்தோம், இன்றும் காதலித்துக் கொண்டுதானிருக்கிறோம். 
 
ஆயுதங்கள் ஏந்த முதல் நாங்கள் எடுத்த ஆயுதம் பகிஷ்கரிப்பு, ஆயுதங்கள் ஏந்திய போதும் நாங்கள் பாவித்த ஆயுதம் பகிஷ்கரிப்பு, ஆயுதங்கள் மெளனிக்கப்பட்ட பின்னும் நாங்கள் தூக்கும் ஆயுதம் பகிஷ்கரிப்பு.
 
வரலாற்றில் தமிழர் பிரதேசத்தில் நடந்த முதலாவது பகிஷ்கரிப்பாக 1931ல் யாழ்ப்பாண இளைஞர் பேரவை (Jaffna Youth Congress, JYC), முன்னின்று நடாத்திய தேர்தல் பகிஷ்கரிப்பு பதிவாகிறது. டொனமூர் யாப்பிற்கமைய, நடாத்தப்பட்ட சர்வஜன வாக்குரிமையடிப்படையிலான  தேர்தலை, யாழ்ப்பாணத் தமிழர்கள் புறக்கணித்தார்கள், Hello.. Excuse me.. பகிஷ்கரித்தார்கள்.
 
 
சாதி, மத, பால் பாகுபாடின்றி, ஆசிய கண்டத்திலேயே இலங்கையில் தான் முதன் முதலாக அனைவருக்குமான வாக்குரிமை (universal suffrage) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் 1950 வரை அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்படவில்லை. சுவிஸ்லாந்து 1971ல் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் போது, உலகின் முதலாவது பெண் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்க பதவியேற்று ஆறாண்டுகள் கடந்து விட்டிருந்தன.
 
 
"கீழ் சாதியினரிற்கும் படிப்பறிவில்லாதவர்களிற்கும் பெண்களிற்கும் வாக்குரிமை அளிப்பது முட்டாள்தனமானது" என்று சேர் பொன் இராமநாதன் வெள்ளைக்காரன் தந்த சர்வஜன வாக்குரிமைக்கு எதிர்ப்பு தெரிவிக்க, இலங்கையிலேயே எழுத்தறிவில் முன்னனியில் திகழ்ந்த யாழ்ப்பாண மாவட்டமோ, வேறொரு காரணத்திற்காக தனக்கு வழங்கப்பட்ட முதலாவது ஜனநாயக உரிமையை பகிஷ்கரிக்கத் தயாரானது.
 
 
இந்திய தேசிய காங்கிரஸின் வழிநின்ற யாழ்ப்பாண இளைஞர் பேரவை, பிரித்தானியா இலங்கைக்கு சுயராஜ்ஜியம் வழங்காததால் தேர்தலை புறக்கணிக்குமாறு அழைப்பு விட, யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நான்கு ஆசனங்களும் வெற்றிடமாயின.
 
யாழ்ப்பாணத்தில் பகிஷ்கரிப்பு நடந்ததால் அங்கு போட்டியிட முடியாத ஜீஜி பொன்னம்பலம், மன்னார் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றுப்போனார்.
 
 
1931 தேர்தல் புறக்கணிப்பால் தேசிய சட்ட சபையில் தங்கள் உரிமைகளும் நலன்களும் புறக்கணிக்கப்படுவதையும் 
பாதிக்கப்படுவதையும் காலங்கடந்து உணர்ந்த யாழ்ப்பாண மக்கள், அடுத்து வந்த காலங்களில் யாழ்ப்பாண இளைஞர் பேரவையை புறந்தள்ளினார்கள் என்பது வரலாறு. அதாவது தேர்தலைப் பகிஷ்கரிக்க சொன்னவர்களையே மக்கள் பகிஷ்கரித்தார்கள். 
 
 
1931 யாழ்ப்பாண தேர்தல் புறக்கணிப்பு பற்றி Jane Russell எனும் வரலாற்றாசிரியர் எழுதிய விரிவான கட்டுரைக்கு அவர் இட்ட தலைப்பு "The dance of the Turkey-cock: the Jaffna Boycott 1931", அதாவது "வான் கோழியின் நடனம்: யாழ்ப்பாண பகிஷ்கரிப்பு 1931". 
 
இந்திய தேசிய காங்கிரஸ் என்ற மயிலைப் பார்த்து யாழ்ப்பாண இளைஞர் பேரவை என்ற வான் கோழி ஆடிய நடனமே 1931ம் ஆண்டு தேர்தல் பகிஷ்கரிப்பு என்று Jane Russell விபரிக்கிறார். யாழ்ப்பாணத்தார் அப்பவே பூகோள அரசியலில் புகுந்து விளையாட வெளிக்கிட்டு மோட்டுப் பட்டம் பெற்றிருக்கிறார்கள் என்பதை தான் Russell ஆங்கிலத்தில் பதிவுசெய்திருக்கிறார் போலும்.
 
இலங்கையில் 1982 ஒக்டோபர் மாதம் 20ம் திகதி நடந்த முதலாவது ஜனாதிபதி தேர்தலை தமிழர் விடுதலைக் கூட்டணி (TULF) பகிஷ்கரித்தது. எழபது வீதமான சிங்களவர்கள் வாழும் நாட்டில் தமிழர்கள் எவரும் ஜனாதிபதியாக வரமுடியாது, ஆதலால் ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் பங்கெடுப்பது ஒரு “cheap stunt”  என்று அமிர்தலிங்கம் பகிஷ்கரிப்பிற்கான விஞ்ஞான விளக்கத்தையும் தந்தார். 
 
1981ல் UNP அரசு முன்மொழிந்திருந்த மாவட்ட சபைகளினூடான அதிகார பரவலாக்கல் திட்டத்தை பலப்படுத்தி, மாவட்ட சபைகளிற்கு கூடுதலான அதிகாரங்களைப் பெறத் திரைமறைவில் JRன் UNP அரசுடன் TULF செய்துகொண்ட ரகசிய உடன்படிக்கையால் தான் தேர்தலை பகிஷ்கரிக்க சொல்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் TULF மீது பலமாக எழுந்தது.
 
வடக்கு கிழக்கில் கிடைக்கும் இரண்டரை இலட்சம் சொச்ச வாக்குகள் வெற்றிக்கு அவசியமானவை, தமிழர் வாக்குகள் எதிரணியான SLFPக்கு போகவே அதிக வாய்ப்புக்கள் உள்ளன, அதை தடுக்கவே TULF இந்த பகிஷ்கரிப்பு நாடகத்தை அரங்கேற்றுகிறது என்ற குரல்களும் மேலெழத் தொடங்கின.
 
1981ல் வட அயர்லாந்து இடைத்தேர்தலில் போட்டியிட்டு எதிர்ப்பைக் காட்ட,  IRA களமிறக்கிய சிறையில் இருந்த போராளியான Bobby Sandsஐப் போல், தமிழர் தரப்பும் தமது எதிர்ப்பை பதிவுசெய்ய ஜனாதிபதி வேட்பாளராக, சிறையில் இருந்த போராளி குட்டிமணியை தேர்தலில் நிறுத்துமாறு  இளைஞர்களிடம் இருந்து எழுந்த பலமான கோரிக்கையை TULF தலைமை லாவகமாக புறந்தள்ளியது. 
 
1977 தேர்தலில் யாழ்ப்பாண தொகுதியில் யோகேஸ்வரனிடம் தோற்ற அகில இலங்கை காங்கிரஸ் கட்சியின் தலைவர் குமார் பொன்னம்பலம், TULFன் பகிஷ்கரிப்பு முடிவை எதிர்த்து 1982 ஜனாதிபதி தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் களமிறங்கி, 173,934 வாக்குகளைப் பெற்று, JR, கொப்பேகடுவ, ரோஹன விஜயவீரவிற்கு அடுத்தபடியாக நான்காவதாக வந்தார். 
 
TULFன் பகிஷ்கரிப்பு முடிவால், யாழ்ப்பாணத்தில் 46 வீதமான வாக்காளர்களே தேர்தலில் வாக்களித்தார்கள். இலங்கை முழுவதும் 81 வீதமான வாக்காளர்கள் வாக்களித்து, கிட்டத்தட்ட ஒன்பது லட்சம் மேலதிக வாக்குகளார் JRஐ ஜனாதிபதியாக்கினார்கள். 
 
1982ல் தமிழர்கள் வாக்களித்திருந்தாலும் முடிவு மாறியிருக்காது, ஆனால் நாங்கள் பகிஷ்கரித்தோம். பகிஷ்கரிப்பு மூலம் உலகிற்கு என்ன செய்தி சொல்ல முனைந்தோமோ தெரியாது, எண்ணி ஒன்பதே ஒன்பது மாதங்களில் 1983 ஜூலையில் JRன் UNP அரசாங்கம் எங்களிற்கு ஒரு பலமான செய்தியை சொல்லியனுப்பியது.
 
1980களின் மத்தியில் இயக்கங்களின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாண தீபகற்பம் இருந்த காலங்களில், இயக்கங்களின் மாணவர் அமைப்புக்கள் நடத்திய பகிஷ்கரிப்புக்களையும் ஹர்த்தால்களையும் ஊர்வலங்களையும் அந்தக் காலப்பகுதியில் வாழ்ந்த யாரும் மறந்திருக்க மாட்டார்கள். பெரும்பாலான பகிஷ்கரிப்புக்களை முன்னின்று நடத்தியது PLOTE அமைப்பின் மாணவர் அணியான TESO, EROS அமைப்பின் GUYS மற்றும் EPRLFன் GUES.
 
 
"இன்று ஹர்த்தால்" என்று காலை எழுந்ததும் ஈழநாடு பத்திரிகையில் கொட்டை எழுத்தில் தலையங்கம் மிரட்டும். இலங்கை அரசாங்கம் நிகழ்த்திய ஏதோ ஒரு அநியாத்தைக் கண்டித்து, நாங்கள் பள்ளிக்கூடங்களை பகிஷ்கரித்து, கடைகளை அடைத்து, அலுவலகங்களை மூடி, கண்டி வீதியால் கச்சேரியை நோக்கி, "மாணவர் சக்தி... மாபெரும் சக்தி" என்று தொண்டை கிழிய கோஷம் எழுப்பிக் கொண்டு, கொளுத்தும் வெயிலில் ஊர்வலம் போய்க் கொண்டிருக்க, கொழும்பில் அத்துலத்முதலியும் ஜெயவர்த்தனாவும் சுடச்சுட தேத்தண்ணியோடு கொக்கீஸ் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். 
 
பாடசாலைகளை புறக்கணித்து நாங்களே எங்கள் கல்வியில் மண் அள்ளிக் கொட்டி எங்களை அழித்துக் கொண்டிருப்பதை பார்த்து எதிரியே மகிழ்ந்து கொண்டிருந்த காலங்கள் அவை.
 
2005 ஜனாதிபதி தேர்தல் பகிஷ்கரிப்பிற்கான காரணங்களை நியாயப்படுத்த, அந்த முடிவை எடுத்த எவரும் இன்று இல்லை. தேர்தலை பகிஷ்கரித்தமைக்கான காரணங்கள் அன்றைய களநிலவரங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டவை, இன்றைய காலத்தில் நின்று கொண்டு அந்த முடிவை எடை போடுவதும் நியாயமாகப் படவில்லை.
 
தமிழர் தரப்பு தேர்தலை பகிஷ்கரித்ததால் ஆட்சிக்கு வந்த மகிந்த குடும்பத்தால் வந்த வினைகளை சொல்லி விளக்கப்படுத்த வேண்டியதில்லை. மேற்குலகின் நண்பன் ரணில் தோற்கடிக்கப்பட்டதால் வந்த கோபமும், தாங்கள் மதிக்கும் ஜனநாய பொறிமுறையை தமிழர் தரப்பு எட்டி உதைத்ததால் வந்த விரக்தியும் இணைந்தே, இறுதி யுத்த காலத்தில் மேற்குலகை தமிழ் தரப்பிடமிருந்து அந்நியப்பட வைத்தன.
 
அன்று மகிந்த தோற்றிருந்தால், ராஜபக்‌ஷ குடும்பத்தின் இன்றையே நிலைமையே வேறு மாதிரி இருந்திருக்கும். புலம் பெயர் தமிழர்களின் நெருக்குதல்களால், யுத்தத்தை நிறுத்தவென விசேட விமானத்தில் பறந்து வந்த பிரித்தானிய பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சர்களை மகிந்த அலையவிட்டு பாற்சோறு கொடுத்து அனுப்பிய மாதிரி ரணில் நடந்து கொண்டிருக்க மாட்டார், மேற்குலகின் அழுத்தத்தை தாங்கவல்ல வல்லமை ரணிலிற்கு இருந்திராது.
 
 
எங்களது பகிஷ்கரிப்புக்கள் எல்லாம் மோட்டுத்தனமானவுயாகவும் எங்களது அழிவிற்கு நாங்களே அடிகோலுபவையாகவும் இருந்திருப்பதையே வரலாறு சான்றாக வைத்து விட்டு சென்றிருக்கிறது. பகிஷ்கரித்து, பகிஷ்கரித்து நாங்கள் தோற்றுக் கொண்டிருப்பதைப் பார்க்க பகிஷ்கரிப்பிற்கே விசர் தான் வரும். 
 
பகிஷ்கரிப்பிற்கே வாழ்க்கை வெறுக்க வைக்கும் வல்லமை படைத்த இனமாக நாங்கள் உலகில் வலம் வந்து கொண்டிருக்கிறோம். அந்தளவிற்கு நாங்கள் பகிஷ்கரிப்பிற்கு கொடுத்த, கொடுக்கும் அலுப்பு கொஞ்ச நஞ்சமல்ல. போற போக்கை பார்த்தால், பகிஷ்கரிப்பே எங்களை பகிஷ்கரித்து விடும் போல தானிருக்கிறது.
 
எந்த பக்கம் ஆதரவளிப்பது என்ற முடிவை எடுக்க திராணியில்லாத தருணங்களில் பகிஷ்கரிப்பை ஆயுதமாக எடுப்பது தவறாகவே தெரிகிறது. பகிஷ்கரிப்புக்களால் நாங்கள் இழந்தவையே அதிகம், அடைந்தவை எவையுமல்லை. பகிஷ்கரிப்புக்களால் நாங்கள் தோற்றோம், பகிஷ்கரிப்புக்களால் எதிரிகளே வென்றார்கள். 
 
மீண்டும் ஒருமுறை பகிஷ்கரிப்பு எனும் ஆயுதத்தைத் தூக்க முதல் எங்களது தற்போதைய நிலைமையையும் எதிர்காலத்தையும் களநிலவரங்களையும் ஆழமாக ஆராய்வோம். பகிஷ்கரிப்பு எனும் முடிவும் துணிவான முடிவாகவே இருக்க வேண்டும், முடிவெடுக்க முடியாததால் எடுக்கப்பட்ட முடிவாக இருக்கக் கூடாது. 
 
தேர்தலை பகிஷ்கரிக்கப் போகிறோம் என்று நாங்கள் எடுக்கும் முடிவு எதிர்காலத்தில் எங்களது நலன்களை பாதுகாப்பதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்துவதாக 
 அமையவேண்டும். இல்லையெனில் இதுவரை நாங்கள் அரங்கேற்றிய பகிஷ்கரிப்பு எனும் வான் கோழி நடனங்களில் இருந்து பாடம் எதுவும் கற்காத கல்லாதவர்கள் போலாகி விடுவோம். 
 
 
"கான மயிலாட கண்டிருந்த வான்கோழி 
தானும் அதுவாகப் பாவித்துத் தானுந்தன் 
பொல்லாச் சிறகை விரித்தாடினார் போலுமே
கல்லாதான் கற்ற கவி"
 

2009இல் ஆயுத போராட்டம்  மௌனிக்கப்பட்டது.

2019இல் அரசியல் போராட்டமும் மௌனிக்கப்படலாம் 😞 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nunavilan said:

ளது பகிஷ்கரிப்புக்கள் எல்லாம் மோட்டுத்தனமானவுயாகவும் எங்களது அழிவிற்கு நாங்களே அடிகோலுபவையாகவும் இருந்திருப்பதையே வரலாறு சான்றாக வைத்து விட்டு சென்றிருக்கிறது

முற்றிலும் உண்மை. அனுபவித்தும் அறிவுவரவில்லை. இதற்கெல்லாம் காரணம்..... தவறான அரசியல் தலைமைகளை நாங்களே உருவாக்கினோம். 

21 hours ago, nunavilan said:

"கீழ் சாதியினரிற்கும் படிப்பறிவில்லாதவர்களிற்கும் பெண்களிற்கும் வாக்குரிமை அளிப்பது முட்டாள்தனமானது" என்று சேர் பொன் இராமநாதன் வெள்ளைக்காரன் தந்த சர்வஜன வாக்குரிமைக்கு எதிர்ப்பு தெரிவிக்க, இலங்கையிலேயே எழுத்தறிவில் முன்னனியில் திகழ்ந்த யாழ்ப்பாண மாவட்டமோ, வேறொரு காரணத்திற்காக தனக்கு வழங்கப்பட்ட முதலாவது ஜனநாயக உரிமையை பகிஷ்கரிக்கத் தயாரானது.

உண்மை தெரியாது இன்றுவரை இவரைப் போற்றி வந்திருக்கிறோமா???????😲

On 10/11/2019 at 7:25 AM, கிருபன் said:

இன்று, திடீரென உயர்கல்விப்புலம் சார் மாணவ அமைப்புகளின் அழைப்பின் பேரில் ஒன்றிணைந்து, தேர்தலைப் பகிஷ்கரிப்பது; ஐ.தே.கவை நிராகரிப்பது; பொதுஜன பெரமுனவை வெல்ல வைப்பது என்ற சிக்கல்நிலைக் கருத்தாடல்களும் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் பிரசாரப்படுத்தப்பட்டு வருகின்றன. 

தமிழர்கள் இம்முறை தேர்தலை பகிஷ்கரித்தால் முதல் சுற்றிலேயே கோத்தா வெற்றி பெறுவார்.

தமிழர்கள் ஐதேக ஐ நிராகரித்து அநுரவுக்கு வாக்களித்தால் அல்லது வேறு யாருக்குமோ வாக்களித்தால் முதல் சுற்றில் யாரும் 50% பெறாத நிலையில் இரண்டாம் சுற்றில் கோத்தா வெற்றி பெறுவார்.

தமிழர்கள் சஜித்துக்கு வாக்களித்தால் முதல் சுற்றில் கோத்தா 50% இற்கு மேல் எடுக்காத சந்தர்ப்பம் அமைந்தால் இரண்டாம் சுற்றில் சஜித் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.