Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண சமூகத்தில் கிறீஸ்தவர்களின் பங்கு - சிவா சின்னப்போடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1955ம் ஆண்டு நான் எனது 6 வகுப்பு கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் ஆரம்பித்த போது அது எனக்கு அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை.

அந்தக் கல்லூரி எங்கள் வீட்டில் இருந்து வெகு தொலைவில் இருந்தது. மந்திகை சந்தியில் இருந்து பருத்தித்துறைக்கு அல்லது மாலிசந்திக்கு ஒரு பேருந்தில் சென்று பின்னர் அங்கிருந்து உடுப்பிட்டிக்கு வேறு ஒரு பேருந்தில் செல்லவேண்டி இருந்தது.
இதற்காக வீட்டிலிருந்து 6 மணிக்கு புறப்பட வேண்டி இருந்தது.10 வயது சிறுவனான என்னால் அவ்வளவு தூரம் தனியாக பயணம் செய்ய பயமாக இருந்தது. எனது பெற்றோரும் அதை விரும்பவில்லை.அதனால் எனது அப்புவை(தாத்தாவை) என்னுடன் கூட அனுப்புவார்கள்.

அப்போது எங்கள் வீட்டில் இருந்து உடுப்பிட்டிக்கு செல்வதற்கு சிறுவனான எனக்கு 10 சதமும்,பெரியவரான எனது தாத்தாவுக்கு 20 சதமும் பேருந்து கட்டணமாக இருந்தது.போகவர 60 சதம்,அப்பு காலையில் என்னை கொண்டு வந்து விட்டு விட்டு வீட்டுக்கு திரும்பிசென்று பின்னர் மாலையில் என்னை அழைத்துச் செல்ல வருவதற்கு 40 சதம் என்று ஒரு நாளைக்கு எனது படிப்புக்கான போக்குவரத்து செலவாக ஒரு நாளைக்கு ஒரு ரூபா செலவானது.இது அந்தக்காலத்தில் பெரிய தொகையாகும்.
இதனால் எனது அப்பு என்ன செய்வார் என்றால், காலையில் என்னை பேருந்தில் அழைத்துவந்து பாடசாலையில் விட்டு விட்டு குறைந்தது 8 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள எமது வீட்டுக்கு நடந்து செல்வார்.பின்னர் மாலையில் திரும்ப நடந்து வந்து என்னை பேருந்தில் அழைத்துச் செல்வார்.இதன் மூலம் அவர் 40 சதத்தை மிச்சம் பிடித்தார்.
புதிய பாடசாலையில் எனக்கு ஏற்பட்ட இன்னொரு சிக்கல் தனிமைப்படுத்தப்பட்டது போன்ற அந்நியமான உணர்வாகும்.

நான் மந்திகை பாடசாலையில் படித்த போது எனது உறவினர்கள் ஊரவர்கள் தெரிந்தவர்கள் என்று ஒரு பெரிய நட்பு வட்டம் இருந்தது.

அப்போது எங்கள் வீட்டில் இருந்து உடுப்பிட்டிக்கு செல்வதற்கு சிறுவனான எனக்கு 10 சதமும்,பெரியவரான எனது தாத்தாவுக்கு 20 சதமும் பேருந்து கட்டணமாக இருந்தது.போகவர 60 சதம்,அப்பு காலையில் என்னை கொண்டு வந்து விட்டு விட்டு வீட்டுக்கு திரும்பிசென்று பின்னர் மாலையில் என்னை அழைத்துச் செல்ல வருவதற்கு 40 சதம் என்று ஒரு நாளைக்கு எனது படிப்புக்கான போக்குவரத்து செலவாக ஒரு நாளைக்கு ஒரு ரூபா செலவானது.இது அந்தக்காலத்தில் பெரிய தொகையாகும்.
இதனால் எனது அப்பு என்ன செய்வார் என்றால், காலையில் என்னை பேருந்தில் அழைத்துவந்து பாடசாலையில் விட்டு விட்டு குறைந்தது 8 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள எமது வீட்டுக்கு நடந்து செல்வார்.பின்னர் மாலையில் திரும்ப நடந்து வந்து என்னை பேருந்தில் அழைத்துச் செல்வார்.இதன் மூலம் அவர் 40 சதத்தை மிச்சம் பிடித்தார்.
புதிய பாடசாலையில் எனக்கு ஏற்பட்ட இன்னொரு சிக்கல் தனிமைப்படுத்தப்பட்டது போன்ற அந்நியமான உணர்வாகும்.

நான் மந்திகை பாடசாலையில் படித்த போது எனது உறவினர்கள் ஊரவர்கள் தெரிந்தவர்கள் என்று ஒரு பெரிய நட்பு வட்டம் இருந்தது.
மெதடிஸ் பெண்கள் பாடசாலையில் சேர்ந்த போது மேரி ரீச்சருக்கு என்னை தெரிந்திருந்து.அவரே எனது வகுப்பாசிரியாகவும் இருந்ததால் என்மீது தனிப்பட்ட அக்கறை எடுத்துக்கொண்டார்.அதனால் எனக்கு அந்நியமான உணர்வு அங்கு ஏற்படவில்லை.அத்துடன் அந்த பாடசாலை கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள சூழல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.பாடம் நடக்காத நேரத்தில் வகுப்பில் இருந்து கடலையும் அதில் செல்லும் படகுகளையும் பார்ப்பது எனக்கு பிடித்தமான பொழுது போக்காக இருந்தது.
ஆனால் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் எல்லாமே எனக்கு புதிதாக இருந்தது. ஆசிரியர்கள் மாணவர்கள் நெருக்கலான குடிமனைகளுக்குள் கல்லூரி அமைந்த இடம் எல்லாமே ஒரு அந்நிய சூழலுக்குள் இருப்பதைப் போன்ற உணர்வை எனக்கு எற்படுத்தியது.
எனது வகுப்பில் இருந்த மாணவர்கள் ஏற்கனவே ஒன்றாக கல்வி கற்றவர்கள் ஊரவர்கள் என்று பல காரணங்களால் ஒருவரை ஒருவர் தெரிந்தவர்களாக இருந்தார்கள்.நான் மட்டும் தான் அவர்களுக்கு புதியவனாக இருந்தேன்.மதிய இடைவேளையின் போது அவர்கள் எல்லாம் வீடுகளுக்கோ வெளியிலோ கூட்டமாக சாப்பிடச் செல்லும் போது நான் மட்டும் வீட்டிலிருந்து கொண்டுவரும் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு வகுப்பில் இருக்கும் போது தனிமை உணர்வு வாட்டும்.அதை தவிர்ப்பதற்காக பாடசாலை வாசலுக்கு வந்து வீதியில் செல்லும் வாகனங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பேன்.
ஒரு மூன்று மாத காலம்;தான் இப்படி இருந்தது. அதன்பின்னர் பல புதிய நண்பர்கள் எனக்கு கிடைத்துவிட்டார்கள்.அவர்களின் உதவியோடு இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து புறாபொறுக்கி என்ற இடத்துக்கு சென்றால் மந்திகைக்கு நேரடியாக செல்லும் 750 ம் இலக்க பருத்தித்துறை யாழ்ப்பாண வழித் தட பேருந்து எடுக்கலாம் என தெரிந்து கொண்டேன். இதன் மூலம் 2 பேருந்துகள் மாறும் சிரமம் குறைந்ததுடன் நேரமும் மிச்சமாகியது.

 

udupidi-1.jpg

 

கொஞ்ச நாட்களில் அப்பு என்னோடு வரவேண்டாம் என்று வீட்டில் வாதாடி நானே தனியாக பாடசாலைக்கு சென்று வரவும் ஆரம்பித்துவிட்டேன். பாடசாலை முடிந்ததும் உடுப்பிட்டியிலிருந்து புறாபொறுக்கிக்கு செல்லும் வழியிலுள்ள தோப்புகளில் (திருட்டு) மாங்காய் பறிப்பது கொய்யா காய் பறிப்பது அண்ணா உண்ணா பழம் பிடுங்குவது வீடுகளுக்குள் இருந்து சத்தமிட்டு குரைக்கும் நாய்களும் கூக்குரலிட்டு வெறுப்பேத்துவது என்று அந்த வயதுக்குரிய குறும்புத் தனங்களை நண்பர்களோடு சேர்ந்து செய்வதில் ஒரு தனிச் சந்தோசம் இருந்தது.
ஆனால் அந்த சந்தோசம் நீண்ட நாள் நீடிக்கவில்லை.

அப்போது எனது ஒரே தங்கையை அம்மா கருவில் சுமந்து கொண்டிருந்தா.
எனது பெற்றோருக்கு நாங்கள் இரண்டு பிள்ளைகள். நான் மூத்தவன். எனது தங்கை நான் பிறந்து 10 வருடத்துக்குப் பின்பு பிறந்தாள்.
எனது அம்மா கர்ப்பமாக இருந்த காலத்தில் அப்பா எமது பிரதேசத்தில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான நடத்த ஆலயப் பிரவேச போராட்டம் தேனீர் கடை பிரவேச போராட்டம் என்று அனைத்துப் போராட்டங்களில் பங்கெடுத்திருந்தனால்; எமது பிரதேசத்தில் இருந்த மேட்டுக் குடியினரால் ஆபத்தான பிரச்சனைகுரிய மனிதராக இனங் காணப்பட்டிருந்தார்.
இதனால் அவர் அம்மாவை பிரசவத்துக்காக மந்திகை மருத்துவமனையில் சேர்க்க விரும்பவில்லை.சாதி வெறியில் அம்மாவுக்கும் குழந்தைக்கும் மேட்டுக்குடியினர் ஏதாவது கெடுதல் செய்துவிடுவார்கள் என்று அவர் பயந்தார்.
நான் பிறந்த போதும் இதே பயம் அவருக்கு இருந்ததாக அறிந்தேன்.

அந்த காலகட்டத்தில் யாழ்ப்பாண குடாநாட்டில் கெங்கம்மா என்பவர் சிறந்த கைராசிக்கார மகப்பேற்று மருத்;துவரென பெயரெடுத்திருந்தார். தமிழக பூர்வீகத்தைக்கொண்ட அவர் அப்போது இணுவில் மருத்துவ மனையில் கடமைபுரிந்தார்.
எங்கள் வீட்டிலிருந்து நெடுந்தொலைவில் உள்ள அந்த மருத்துவ மனையில் அந்த கைராசிக்கார மருத்தவரான கெங்கம்மாவின் மருத்துவ கண்காணிப்பில் தான் நான் பிறந்தேன்.
இப்போது எனது தங்கையை பிரசவிப்பதற்காகவும் அதே மருத்துவ மனையில் தான் அம்மாவை அப்பா சேர்த்திருந்தார்.அன்று ஒரு சனிக்கிழமை எனக்கு பாடசாலை இல்லை.காலை 6 மணிக்கு அப்பா என்னையும் அழைத்துக்கொண்டு அம்மாவை பார்ப்பதற்காக புறப்பட்டார்.அந்த மருத்துவமனைக்கு நாங்கள் செல்வதற்கு மந்திகை சந்தியில் இருந்து பேருந்து எடுத்து யாழ்ப்பாணம் சென்று பின்பு இன்னொரு பேருந்து எடுத்து செல்ல வேண்டும்.
நாங்கள் இணுவில் மருத்துவமனையை அடைந்த போது காலை 8.30 மணியாகிவிட்டது.
எனக்கு பசிக்கும் என்று கருதிய அப்பா மருத்துவமனை வாசலில் இருந்த சாப்பாட்டுக் கடைக்கு அழைத்துச் சென்றார்.
அந்த சாப்பாட்டுக் கடையின் பெயர் இப்போது எனக்கு ஞாபகத்தில் இல்லை.
நாங்கள் அந்த சாப்பாட்டுக்கடையின் உள்ளே சென்று உறுளைக் கிழங்கு கறியுடன் இட்லி சாப்பிட்டோம்.
சாப்பிட்டு முடிந்து கை கழுவச் சென்ற போது அப்பா தனது சட்டை கை நனைந்து விடும் என்பதற்காக அதை மேலே தூக்கிவிட்டார்.

எனது தந்தை தனது கைகளால் அணைத்து பனை தென்னை மரங்கள் ஏறுவதால் அவரது இரண்டு கையும் காய்த்துப் போய் தழும்பு போல துருத்திக்கொண்டு பொருக்காக இருக்கும் அதை மறைப்பதற்காக வெளியில் செல்லும் வேளைகளில் முழுக்கை வைத்த சேர்ட்டு போடுவார்.அன்றும் அவ்வாறுதான் ஒரு முழு கைவைத்த வெள்ளைச் சேர்ட்டு அணிந்திருந்தார்.

அவர் அங்கிருந்த அண்டாவில் நிரப்பப்பட்டிருந்த தண்ணீரை குவளையால் அள்ளி ஊற்றி கையை கழுவிய போது எங்களுக்கு பின்னர் சாப்பிட்டு விட்டு கைகழுவ வந்த ஒருவன் அவரது கையில் இருந்த காய்ப்பை கவனித்துவிட்டு ‘டேய் நீ ஆர்? கீழ் சாதிக்காரன் தானே? ‘ என்று அதிகார திமிரோடு கேட்டான்.
எனது தந்தை மிரட்டலுக்கு பணிபவரல்ல. அதனால் அவரும் ‘அதைக் கேட்க நீ ஆரடா?’ என்று திருப்பிக்கேட்டார்.
அதற்குள் வேறும் சிலர் அங்கு வர கலவரமாகி விட்டது.

‘கீழ் சாதிக்காரன் ஹோட்டலுக்குள்ள வந்து சாப்பிட்டுட்டான்’ என்று கத்தினார்கள்.

பார்ப்பதற்கு தெருச்சண்டியன் போல இருந்த அந்த சாப்பாட்டு கடை முதலாளி வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு விரைந்து வந்து ‘கீழ் சாதி நாயே, என்ன தைரியத்திலையடா கடைக்குள்ள வந்து சாப்பிட்டனி’ என்று கத்திக்கொண்டு அப்பாவின் கன்னத்தில் அறைந்தான்.
அப்பா அவமானத்தில் குறுகிப் போய் ஆத்திரத்துடன் திமிற முற்பட மற்றவர்களும் சேர்ந்து அவருக்கு அடிக்க ஆரம்பித்தார்கள்.
ஒருவன் அவரின் சேர்ட்டை இழுத்து கிழித்து எறிந்தான்.இன்னும் சிலர் அவர் கட்டியிருந்த வேட்டியை உருவி எறிந்தார்கள்.
அந்த காலத்தில் ஜட்டி பொதுவான புழக்கத்தில் வராததால் அப்பா உள்ளே கோவணம் தான் கட்டியிருந்தார்.
என்னுடைய அப்பா தொழில் செய்து முறுக்கேறிப் போன திடகாத்திரமன உடம்பை உடையவர்.நல்ல பலசாலி.
அதற்கு மேலும் அவமானத்தை தாங்க முடியாது பொறுக்க முடியாது என்ற நிலையில் திமிறிக்கொண்டு அவர் தனிஆளாக அந்த சாதி வெறியர்களுக்கு திருப்பி அடிக்க ஆரம்பித்தார்.அவர்களும் திருப்பி அடிக்க
நான் பயந்து போய் ‘டேய் விடுங்கோடா அப்பாவை விடுங்கோடா’ என்று கத்தி அழுது ஆர்பாட்டம் செய்த போது அவர்களின் கவனம் என் மீது திரும்பியது.
அவர்களில் ஒருத்தன் என்னை எட்டி காலால் உதைந்து தள்ள நான் சுறுண்டு போய் அருகிலுள்ள சேற்று நிலத்தில் விழுந்தேன்.

அதைக் கண்டு பதறிப்போன அப்பா,எனக்கு எதாவது செய்துவிடுவார்கள், அடித்துவிடுவார்கள் என்ற பயத்தில் அடங்கிப் போய் அவர்கள் கொடுத்த அடிகள் உதைகள் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டார்.அவரது நெற்றி உதடுகள் எல்லாம் வெடித்து இரத்தம் கொட்டியது.அவரது கண்ணிகளில் இருந்து கண்ணீர் வடிந்தது. என்னுடைய வாழ்க்கையில் அவர் அழுததை அன்று தான் நான் முதன் முதலாகப் பார்த்தேன்.
ஒரு 15 நிமிட அடி உதைக்குக்கு பிறகு ‘கடைக்குள் வந்து மேசையில் இருந்து சாப்பிட்டது’ என்ற நாங்கள் செய்த மாபெரும் குற்றத்துக்காக எங்களுக்கு தண்டனை தரப்பட்டது.
அதாவது ஒரு உளவியந்திர பெட்டியின் கொள்ளவுள்ள விறகை கொத்தி அடுக்கிவிட்டு நாங்கள் போகலாம் என்பது தான் அந்தத் தண்டனை.

அப்போது காலை ஒன்பது மணி இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு கோடாலியை கொண்டு வந்து அப்பாவின் கையில் கொடுத்து விட்டு அவர் கொத்த வேண்டிய விறகையும் கடையின் பின்புறம் கூட்டிச் சென்று காண்பித்தார்கள்.
அவர் விறகை கொத்திப் போடப் போட நான் அதை எடுத்துச் சென்று வேறு ஒரு இடத்தில் ஒழுங்காக அடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.
அப்பா அவர்கள் உருவி சேற்றில் எறிந்ததால் அழுக்காகிப் போன வேட்டியை எடுத்து ஒரு துண்டை கிழித்து நெற்றி காயத்தக்கு கட்டிக்கொண்டு மிகுதியை இடுப்பில் கொடுக்கு கட்டுவது போல கட்டிக்கொண்டு அந்த விறகு மலையை பிளக்கும் வேலையை ஆரம்பித்தார்.
அந்த விறகுகள் மா பலா வேம்பு முதிரை பாலை என்று பல்வேறு மரங்களின் அடி வேர் கட்டைகளாக இருந்தன.அவற்றை கொத்துவது அவ்வளவு சுலபமானதாக இருக்க வில்லை.
அதை விட அந்த சாதி வெறியர்கள் பலர் ஒன்று சேர்ந்து அடித்ததால் எனது தந்தை மிகவும் சோர்ந்து போயிருந்தார்.
வெய்யில் வேறு சுள்ளென்று எறித்துக்கொண்டிருந்தது.
சூரியன் உச்சி பொழுதுக்கு வந்த போது அந்த விறகு மலையில் கால்வாசி பங்கை கூட அப்பாவால் கொத்த முடியவில்லை.அதை விட அவர் கொத்திப் போட்ட விறகை எடுத்து அடுக்கி நான் களைத்துப்போய்விட்டேன்.எனது பிஞ்சுக் கை காய்த்துவிட்டது. பசியும் தாகமும் வேறு எடுத்து நான் அழ ஆரம்பித்துவிட்டேன்அப்பா எவ்வளவு கெஞ்சியும் அவாகள்; சொட்டு தண்ணீர் கூட குடிப்பதற்கு எங்களுக்கு தரமறுத்தார்கள்.
அதை விட கொடுமை அப்பா களைத்து சோர்ந்து போகப் போக ஒரு பூவரசம் தடி வைத்து என்னை அடிப்பார்கள்.எனக்கு அடிவிழாமல் தடுப்பதற்காக அவர் தனது உடல் அசதி களைப்பை மீறி அந்த விறகு கட்டடைகளை கொத்துவார்.அவர் கொத்தக் கொத்த அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரத்தில் உணவு குறையாமல் இருப்பதைப் போல விறகும் நிறைந்துகொண்டே இருக்கும்.நானும் மூச்சு வாங்கி இளைக்க இளைக்க அவற்றை எடுத்து கொண்டுபோய் அடுக்குவேன்.என்னை என்னுடைய களைப்பை பார்த்து அப்பா அழுதார்
எங்களுடைய ஊரில் ஒரு கம்பீரமான மனிதனாக வீரனாக வலம் வந்த அவர் அங்கே என் கண்முன்னே ஒரு அடிமையாக பரிதபத்துக்குரியவராக அழுதுகொண்டு வேலை செய்யதது என்னால் தாங்க முடியாமல் நான் அழுதேன்.
ஒரு கட்டத்தில் என்னால் அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்ற நிலை வந்தபோது நான் போய் ஒரு இடத்தில் இருந்துவிட்டேன்.
அப்பா விறகு கொத்துவதை நிறுத்திவிட்டு கொத்திய விறகுகளை எடுத்து அடுக்க ஆரம்பித்தார்.
அதை பார்த்த அந்த கடை பணியாளன் ஒருவன் போய் கடை முதலாளியிடம் சொல்ல,அந்த மிருகம் வந்து ‘டேய் நீ உதை நிப்பாட்டிப் போட்டு விறகைக் கொத்து’ என்று அப்பவை அதட்டிவிட்டு, ‘டேய் நீ எழும்படா, விறகுகளை எடுத்து அடுக்கு’ என்று கூறிக்கொண்டு எனக்கு அடிக்க வந்தது.
அதற்மேல் பொறுக்க முடியாத அப்பா, ‘டேய் என்ரை பிள்ளைக்கு மேல இனி கை வைச்சியள் எண்டால் கொத்திப் பிளந்து போடுவன்’ என்று கோடலியை உயர்த்திவாறு கத்திக் கொண்டு அந்த மிருகத்தை நோக்கிப் பாய்ந்தார்.
அவரது ஆக்குரோசத்தை கண்டு பயந்து போன அவன் கடைக்குள் ஓடிச் சென்று வேறு சிலரை கூட்டிக் கொண்டு திரும்பி வந்து அப்பாவை மடக்கிப் பிடித்து மீண்டும் அடிக்க ஆரம்பித்தான்.எங்களுடைய நல்லகாலம் அந்த கடைக்கு பக்கத்து கடைக்கு சாமான்வாங்க வந்த கொம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் சிலர் அந்த பகுதிக்கு எதோ ஒரு வேலையாக வந்த தோழர் எஸ்.ரி. நாகரத்தினத்துக்கு விசயத்தை சொல்லிவிட்டனர்.
அவர் ஒரு பத்து பதினைந்து தோழர்களையும் அழைத்துக்கொண்டு அங்கே வந்துவிட்டார்.
அவருக்கு எற்கனவே எனது தந்தையை தெரியும்.அவரை அந்தக் கோலத்தில் பார்த்த எஸ்.ரி.என்னும் அதிர்ந்து போய்விட்டார்.எனது தந்தையும் அவரைப் பார்த்ததும் அழ ஆரம்பித்துவிட்டார்.
சிறிது நேரம் உணர்வுபூர்வமாக இருந்த அந்தக்காட்சிக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
எஸ்.ரி.என்னுடன் வந்த தோழர்கள் எங்களை அடித்து அவமானப்படுத்திய கடை பணியாளர்களை பின்னி எடுத்துவிட்டார்கள்.
சாதி வெறியனான அந்த கடை முதலாளியை அடித்து துவைத்து இழுத்து வந்து எனது தந்தையின் காலடியில் போட்டு மன்னிப்புக் கேட்க வைத்தார்கள்.
காலடியில் கிடந்த அவனை தலைமுடியில் பிடித்து தூக்கிய எனது தந்தை அவனுக்கு கன்னத்தில் நாலு சாத்து சாத்துவார் என்று நான் எதிர்பார்த்தேன்.ஆனால் அவர் அப்படி செய்ய வில்லை.
ஆனால் தனது பலத்தை கூட்டி எச்சியை உமிழ்ந்து அவனது முகத்தில் காரி துப்பினார்.அது அவனுக்கு தோழர்கள் கொடுத்த அடியை விட பெரிய தாக்கத்தை கொடுத்திருக்கும்.
அதன் பின் தோழர் எஸ்.ரி.என் ‘நீ இதிலை தொடர்ந்து கடை நடத்த வேண்டுமானால் இனிமேல் இப்பிடி செய்யக் கூடாது.இல்லை இப்படித்தான் நான் செய்வன் எண்டு நீ நினைச்சி எண்டால் கடை இருக்கும் நீ இருக்க மாட்டாய்’ என்று அந்த கடை முதலாளியை எச்சரித்துவிட்டு எங்களை அண்மையில் இருந்த ஒரு தோழர் வீட்டுக்கு அழைத்துச் சென்ற குளிக்க வைத்து நாங்கள் அணிவதற்கு புது உடுப்புகள் வாங்கித்தந்து எங்களுக்கு பெரும் உறுதுணையாக இருந்தார்.
அதேபோல எனது தங்கை பிறக்கும் வரையும் அவள் பிறந்தபின் அம்மாவையும் அவளையும் நாங்கள் வீட்டில் கொண்டு போய் சோக்கும் வரைக்கும் அவர் செய்த உதவிகளை நான் இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும்.

point-pedro-moth.jpg

பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் பாடசாலையில் 1963, 1964 ஆகிய இரண்டு வருடங்களும்; எந்தவித பிரச்சனையும் இல்லாமல் மகிழ்ச்சியாக எனது கல்வி தொடர்ந்தது.

இந்த இரண்டு வருட காலத்தில் எங்களுரில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.
வல்லிபுர ஆள்வார் கோவில் அனைவரினதும் சமத்துவ வழிபாட்டுக்காக திறந்துவிடப்பட்டுவிட்டது.ஆலய பிரவேசத்தை தடு;க்க முயன்ற சாதி வெறியர்கள் வாள்வெட்டுக்கும் துவக்குச் சூட்டுக்கும் பயந்து பின்வாங்கி விட்டனர்.வல்லிபுரக் கோவில் கிணறுகளில் நாங்கள் தண்ணீர் அள்ளக் கூடியதாக இருந்தது.அங்குள்ள மடங்களுக்குள் நாங்கள் செல்வதற்கு அனுமதி கிடைத்திருந்தது.
மந்திகை சந்தியில் இருந்த கடைகளில் எங்களுக்கு போத்தலில் தேனீர் தந்த நடைமுறை ஒழிந்து போனது.
இவையெல்லாம் மேட்டுக்குடியினரின் மனமாற்றத்தால் தானாக நிகழவில்லை.
கொம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டலில் எம்மவர்கள் மேற்கொண்ட ஆயுதப் போராட்டத்தினாலேயே இந்த உரிமைகள் எங்களுக்கு கிடைத்தன.
எங்களுரைப் பொறுத்தவரை இந்த சமூக விடுதலைப் போராட்டத்தின் தளபதிகளாக எனது தந்தையும் எனது சித்தப்பா செல்லத்தம்பியும் இருந்தனர். எனது தந்தை கொம்யூனிஸ்ட் கட்சியின் கீழும் எனது சித்தப்பா சிறுபான்மை தமிழர் மகா சபையின் கீழும் போராட்டங்களில் பங்கெடுத்தனர்.

1965 ம் ஆண்டு பிறந்த போது எனக்கு மீண்டும் பிரச்சனை ஆரம்பித்தது.
1963ம் ஆண்டு நான் நன்றாகப்படித்து பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற்றதால் 3ம் வகுப்பில் இருந்து 4 வகுப்புக்கு போகாமல் நேரடியாக 5 வகுப்புக்கு சிறப்பு தகுதி என்ற அடிப்படையில் அனுப்பப்பட்டேன்.1964 டிசம்பரில் நடந்த 5 ம் வகுப்பு ஆண்டிறுதிப் பரீட்சையிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தேன்.

அத்துடன் ஹாட்லிக் கல்லூரியில் சேர்வதற்கான நுளைவுத் தேர்விலும் அதிக மதிப்பெண்கள் வாங்கியிருந்தேன்.
அந்த கல்லூரியில் சேர்வதற்கு அவர்கள் நிர்ணயித்த அடிப்படை மதிப்பெண்களை விட நான் 30 மதிப்பெண்கள் அதிகமாகப் பெற்றிருந்தேன்.
1965 ம் ஆண்டு ஜனவரி மாதம் எனக்கு அந்தப்பாடசாலையில் சேர்ந்து படிப்பதற்கு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு சென்றபோது ஏமாற்றமே கிடைத்தது.
தங்களது பாடசாலை ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாடசாலை என்றும் அதனால் ஒழுக்கமற்ற மாணவனை சேர்க்க முடியாதென்றும் கூறிவிட்டார்கள்.
அப்போது அந்தக் கல்லூரியின் அதிபராக பூரணம்பிள்ளை இருந்தார்.
சிறந்த கல்விமானான அவர் நியாயமாக நடப்பவர் என்றும் அவரிடம் சென்று பேசிப்பார்த்தால் எனக்கு நியாயம் கிடைக்கும் என்றும் சிலர் எனது தந்தைக்கு ஆலோசனை கூறினர்.
அதன் படி மறுநாள் காலையில் என்னையும் அழைத்துக்கொண்டு எனது தந்தை அவரை சந்திக்கச் சென்றார்.
எங்கள் தரப்பு நியாயங்கள் எனக்கு நடந்தது எல்லாவற்றையும் பொறுமையுடன் கேட்ட அவர் தமது பாடசாலையில் மாணவர்களை சேர்ப்பதற்கான நிர்வாகக் குழு ஒன்று இருப்பதாவும் அர்கள் எடுக்கும் முடிவில் தான் தலையிடுவதில்லை என்றும் வேண்டுமானால் எனது விடயம் தொடர்பாக அவர்களிடம் பேசிப்பார்ப்பதாகவும் இரண்டு நாள் கழித்து வரும்படியும் சொல்லி அனுப்பினார்.
மீண்டும் நாங்கள் அவரிடம் சென்ற போது ‘மந்திகை பாடசாலையில் என்னை நடத்திய விதம் தவறு என்றாலும் அதற்காக ஆசிரிருக்கு சிலேட்டால் எறிந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் இது ஒரு வன்முறைக் கலாச்சாரம் என்றும் கட்டுப்பாட்டுக்கு பேர் போன தங்கள் பாடசாலையில் ஆசிரியர்கள் கட்டுப்பாடு விதித்தால் நான் அவர்களுடன் அவ்வாறு நடக்க சாத்தியக் கூறு உள்ளதால் என்னை அந்த பாடசாலையில் சேர்க்க முடியாதென்று நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கருதுவதாகத் தெரிவித்தார்.
எனது தந்தை மந்திகை பாடசாலைகளில் நிலவிய சூழ்நிலைகளை மீண்டும் அவருக்கு எடுத்துக் கூறி ஹாட்லிக் கல்லூரியில் அவ்வாறான சூழ்நிலை இல்லாததால் நான் அப்படி நடக்கமாட்டேன் என்றும் எனக்கு படிப்பதில் மிகுந்த ஆர்வம் இருக்கிறதென்றும் தெரிவித்தார்.
ஆனால் அவரோ தான் அந்தக் கல்லூரியின் அதிபர், கல்லூரியின் கட்டுப்பாடு என்பதற்கு அப்பால் என்னுடைய எதிர்கால கருதியே என்னை அந்தப்பாடசாலையில் சேர்த்துக்கொள்ள விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.
‘தமிழ் சமூகம் என்பது ஒரு மூடுண்ட சமூகம் என்றும் அது இன்னும் பழைவாத கருத்துக்களையே பற்றிப்பிடித்துக்கொண்டிருப்பதாகவும் இதற்கு ஆசிரியர்களும் விதிவிலக்கல்ல’ என்று அவர் எனது தந்தையிடம் குறிப்பிட்டார்;.
‘நான் ஆசிரியரை அடித்த மாணவன் என்பது எப்படியாவது யாராவது ஒரு ஆசிரியருக்கு தெரிய வந்து அதை அவர் மற்ற ஆசிரியர்களுக்கும் சொன்னால் அவர்கள் என்னை நடத்தும் விதம் வேறாக இருக்கும் என்றும் அதனால் என்னுடைய படிப்பு கெட்டுவிடும்’ என்றும் கூறினார்.
ஓரு சராசரி யாழ்ப்பாண சமூகத்தை சேர்ந்த கல்விமானாக அவரது தளத்தில் இருந்து என்னைப்பற்றி அவர் பார்த்த பார்வையும் அவர் தெரிவித்த கருத்துக்களும் சரியானவையே என்று தோன்றினாலும் மெதடிஸ் பெண்கள் பாடசாலை அதிபருக்கு இருந்த சமூக அக்கறை தொலைநோக்குப் பார்வை மற்றும் தற்துணிவு அவருக்கு இருக்கவில்லை என்பதே என்னுடைய விமர்சனமாகும்.
மெதடிஸ் பெண்கள் பாடசாலையில் என்னை சேர்த்த போது நான் ஆசிரியரை அடித்த மாணவன் என்பது அந்த பாடசாலையின் (பெண்)அதிபருக்குத் தெரியும். நான் அவ்வாறு நடந்து கொள்வதற்கான சூழ்நிலை எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதும் அவருக்குத் தெரியும்.என்னை தனது பாடசாலையில் சேர்த்தால் நான் ஆசிரியர்களுடன் தகராற்றில் ஈடுபடுவேன் என்றோ அதனால் கல்லூரிக்கு கெட்ட பெயர் வரும் என்றோ எண்ணம் அவர் மேட்டுமைத்தனமாக-எதிர்மறையாக சிந்திக்கவில்லை. மாறாக எனக்கு மறுக்கப்பட்ட சமத்துவத்தை ஊக்குவிப்பை வழங்கினால் நான் ஒழுக்கமுள்ள திறமையான மாணவனாக உருவெடுப்பேன் என்பதை அவர் கண்டு கொண்டார்.அதன்படி அவர் நடந்ததால் அவருடைய பாடசாலையில் கல்வி கற்ற இரண்டு ஆண்டுகளில் வகுப்பில் முதல் மாணவனாகவும் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுமளவுக்கு சிறப்பு தேர்ச்சி பெற்றவனாகவும் இருந்தேன்.

ஹாட்லிக் கல்லூரியில் இடம் கிடைக்காது என்றவுடன் பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயம் புட்டளை மகா வித்தியாலயம் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் என்பவற்கு சென்று இடம் கேட்டோம்.
அங்கெல்லாம் அவர்கள் கேட்ட முதல் கேள்வி மெதடிஸ் பெண்கள் பாடசாலையில் படித்தால் ஹாட்லிக் கல்லூரியில் இடம் கிடைக்கவேண்டுமே? ஏன் கிடைக்கவில்லை? என்பதாகும்.
உண்மையை மறைத்து அனுமதி பெறமுடியாதென்பதால் நடந்தவற்றை சொல்ல எல்லா இடங்களிலும் எமக்கு கதவடைப்பு செய்யப்பட்டது.
வேறு வழியின்றி மெதடிஸ் பெண்கள் பாடசாலையின் அதிபரிடம் போய் நின்ற போது அவர் உடுப்பிட்டியிலுள்ள அமெரிக்கன் மிசன் பாடசாலை அதிபருக்கு என்பற்றிய விபரங்களை எழுதி நான் மேற்கொண்டு படிக்க உதவி செய்யுமாறு ஒரு கடிதம் தந்ததுடன் நான் ஒழுக்கமற்றவன் என்று எழுதிய மந்திகை பாடசாலை சான்றிதழை தூக்கிப் போட்டுவிட்டு தனது பாடசாலையில் கல்வி கற்ற திறமையான மாணவன் என்று புதிய சான்றிதழ் ஒன்று எழுதி அதையே தொடர்ந்து காட்டும்படியும் ‘யராவாது ஆரம்பபாடசாலை சான்றிதழ் எங்கே’ என்று கேட்டால் அது தொலைந்துவிட்டது என்று கூறும்படியும் சொன்னார்.
கல்விச் செயற்பாட்டிலுள்ள ஒரு பாடசாலை அதிபராக அவர் இதை செய்திருக்க கூடாது என்று சிலர் கூறக்கூடும்.ஆனால் ஒரு சிறுவனின் கல்வி பாழாகிவிடக் கூடாது என்ற மனிதத் தன்மையுள்ள தங்களது சமூக வக்கிரங்களை கல்விச் செயற்பாட்டில் திணிக்கும் அதிகார வர்க்கத் திமிரை எதிர்க்கத் துணிந்த ஆளுமை மிக்க பெண்மணியாக அவர் திகழ்ந்தார்.
அவர் நினைத்திருந்தால் சாதி அடிப்படையில் சமூகத்தால் புறந்தள்ளப்பட்ட எங்களுக்கு தான் ஏன் உதவி செய்ய வேண்டும் என்று கருதி ‘எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை’ என்று கூறி எங்களை கழட்டி விட்டிருக்கலாம்.

https://sivasinnapodi.wordpress.com/category/வரலாறும்-வாழ்க்கையும்/

 

 

 

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் இருந்தார்களா? நான் அறிந்தவரை கோவிலுக்குள் விடமால் அடிபாடு நடந்த தை பார்த்திருகிறேன் சிறு வயதில். இயக்கங்கள் வந்தபின்ன இருந்த இடமே தெரியவில்லை இந்த சாதி பிரச்சனைகள். 

தலைவரைபோல் இனி ஒருவர் வருவரோ எங்கள் சமுதாயத்தை மீட்டெடுக்க?

19 minutes ago, உடையார் said:

தலைவரைபோல் இனி ஒருவர் வருவரோ எங்கள் சமுதாயத்தை மீட்டெடுக்க?

சமூக/அரசியல்  புறநிலைகள் சிலரை தலைமைத்துவம் நோக்கி நகர்த்திய வரலாறு எமக்குள் இருந்தாலும்  தலைவர்களும் எங்களது சமூதாயத்தில் இருந்துதான் உருவார்க்கின்றார்கள் என்பதை நாங்கள் மறக்கக்கூடாது.  எனவே நாம் எம்மை திருத்துவதுடன் எமது வருங்கால சந்ததியை சரியான வழியில் வளர்த்தால் எமக்குள் இருந்து நல்ல தலைவர்கள் வர சந்தர்ப்பம் மிக அதிகம்.

தலைவர்கள் வந்த பின் தான் நாங்கள் திருந்துவோம் என்றால் தலையெடுக்க விரும்பியவர்களும் கொஞ்சம் யோசிப்பார்கள் அல்லது வாற நல்லவர்களையும் எப்படியாவது கழுத்தறுப்பதில் கண்ணாக இருப்போம். 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, உடையார் said:

இப்படியும் இருந்தார்களா? நான் அறிந்தவரை கோவிலுக்குள் விடமால் அடிபாடு நடந்த தை பார்த்திருகிறேன் சிறு வயதில். இயக்கங்கள் வந்தபின்ன இருந்த இடமே தெரியவில்லை இந்த சாதி பிரச்சனைகள். 

தலைவரைபோல் இனி ஒருவர் வருவரோ எங்கள் சமுதாயத்தை மீட்டெடுக்க?

என்ன உடையார்,  உங்களுக்கு ஒன்றுமே தெரியாதா ? 🤥 

இதில் வாசித்தது லட்சம் கோடியில் ஒன்று 😡

உங்களுக்கு சிறு தகவல்;

சாதி அடுக்கு முறையில் கீழே உள்ளவர்களாக கருதப் படுபவர்களுக்கு பிறப்பு / இறப்புச் சான்றிதழ்கள் கூட முறைப்படி எழுதமாட்டார்கள் தெரியுமா☹️

ஒருவரின் பிறப்புச் சான்றிதளை வைத்தே இவர்கள் எந்த சாதியினர் என என்னால் கூற முடியும். அந்த அளவு அனுபவம் எனக்கு. நம்புவதற்குக் கடினமாக இருக்கும். ஆனால் உண்மையும் அதுதான். 😡

  • கருத்துக்கள உறவுகள்

 

தனது அனுபவங்களை, வரலாற்று நினைவுகளை நூலாக வெளியிட்டுள்ளார். போராட்டத்திற்கு முன்னரும் பின்னரும் சாதியம் எப்படி இருந்தது என்ற வரலாற்றை அறிய இந்நூலை படிப்பது நல்லது.

 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

என்ன உடையார்,  உங்களுக்கு ஒன்றுமே தெரியாதா ? 🤥 

இதில் வாசித்தது லட்சம் கோடியில் ஒன்று 😡

உங்களுக்கு சிறு தகவல்;

சாதி அடுக்கு முறையில் கீழே உள்ளவர்களாக கருதப் படுபவர்களுக்கு பிறப்பு / இறப்புச் சான்றிதழ்கள் கூட முறைப்படி எழுதமாட்டார்கள் தெரியுமா☹️

ஒருவரின் பிறப்புச் சான்றிதளை வைத்தே இவர்கள் எந்த சாதியினர் என என்னால் கூற முடியும். அந்த அளவு அனுபவம் எனக்கு. நம்புவதற்குக் கடினமாக இருக்கும். ஆனால் உண்மையும் அதுதான். 😡

அதெப்படி பிறப்பு சான்றிதழை வைத்து சாதியை கண்டு பிடிக்க முடியும் என்று விளக்கமாய் சொல்வீர்களா? 

 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

அதெப்படி பிறப்பு சான்றிதழை வைத்து சாதியை கண்டு பிடிக்க முடியும் என்று விளக்கமாய் சொல்வீர்களா? 

 

தனி ஒரு சான்றிதழைப் பார்ப்பதால் இதனை புரிந்துகொள்ள முடியாது. நூற்றுக்கணக்கான சான்றிதழ்களைப் பார்க்க வேண்டும். அப்படி வரும்போது பெயர், எழுதப்பட்டுள்ள எழுத்தின் தரம் (Eg; குப்பையாக எழுதுதல், தொடர் எழுத்து,  வாசிக்க முடியாத வகையில் எழுதுதல். மற்றும் பெயர் என்று வரும்போது பெற்றோர் பிள்ளைக்குச் சூட்டும் பெயர் கிருஸ்ணபிள்ளை என்றிருக்கும். ஆனால் பத்திரத்தில் கிட்டினன் / கிருஸ்ணன், கந்தையா என்கின்ற பெயர் கந்தன் என்றிருக்கும்) என்பன இலகுவில்  அடையாளம் காட்டும்.😡

பிற்காலத்தில் அலையவிட வேண்டும் என்கின்ற நோக்கத்தில் தகவல்களை பிழையாக எழுதி கோட்டுக்கு அலைய விட்ட பல கேஸுகளைக் கூட பார்த்திருக்கிறேன். ☹️ 

(கிழக்கு மாகாணம் தொடர்பில் அந்த அளவு பரீட்சயமில்லாவிட்டாலும் பலதை என்னால் அடையாளம் காண முடியும்) 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

தனி ஒரு சான்றிதழைப் பார்ப்பதால் இதனை புரிந்துகொள்ள முடியாது. நூற்றுக்கணக்கான சான்றிதழ்களைப் பார்க்க வேண்டும். அப்படி வரும்போது பெயர், எழுதப்பட்டுள்ள எழுத்தின் தரம் (Eg; குப்பையாக எழுதுதல், தொடர் எழுத்து,  வாசிக்க முடியாத வகையில் எழுதுதல். மற்றும் பெயர் என்று வரும்போது பெற்றோர் பிள்ளைக்குச் சூட்டும் பெயர் கிருஸ்ணபிள்ளை என்றிருக்கும். ஆனால் பத்திரத்தில் கிட்டினன் / கிருஸ்ணன், கந்தையா என்கின்ற பெயர் கந்தன் என்றிருக்கும்) என்பன இலகுவில்  அடையாளம் காட்டும்.😡

பிற்காலத்தில் அலையவிட வேண்டும் என்கின்ற நோக்கத்தில் தகவல்களை பிழையாக எழுதி கோட்டுக்கு அலைய விட்ட பல கேஸுகளைக் கூட பார்த்திருக்கிறேன். ☹️ 

(கிழக்கு மாகாணம் தொடர்பில் அந்த அளவு பரீட்சயமில்லாவிட்டாலும் பலதை என்னால் அடையாளம் காண முடியும்) 

நன்றி ...புதுத் தகவல்  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.