Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் களத்தில் பெண்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் களத்தில் பெண்கள்

-கௌரி நித்தியானந்தம்  

இலங்கை சட்டமன்றத்துக்காக 1931இலிருந்து இதுவரை அறுபது பெண்கள் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதில் கடந்த மூன்று நாடாளுமன்றங்கள் ஒவ்வொன்றிலும் தலா 13 பெண்கள் மாத்திரமே அங்கம் வகித்திருந்தனர். 

image_b607f910ad.jpg

 

 

இது மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகையில் வெறும் 5.7 சதவீதம் மாத்திரமே ஆகும்.  உலக அரங்கில் பெண் தலைவர்களைக் கொண்ட நாடுகளாக தற்போது இருபதுக்கும் அதிகமான நாடுகள் இருக்கின்றன. அதிலும் கியூபா, பொலிவியா, உகண்டா போன்ற நாடுகளின் நாடாளுமன்றத்தில் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஆனால், ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமான பெண் சனத்தொகை விகிதாசாரத்தைக் கொண்டிருக்கும் இலங்கையானது 192 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் 182ஆவது இடத்தையே பெற்றிருப்பது வேதனைக்குரிய விடயம்.  

உலகில் முதலாவது பெண் பிரதமரை மட்டுமன்றி, ஒரு பெண் பிரதமரைத் தொடர்ந்து நேரடியாக மற்றொரு பெண் பிரதமரைப் பெற்றிருந்ததும், மேலும் ஒரு பெண் பிரதமரையும் ஒரு பெண் ஜனாதிபதியையும் ஒரே நேரத்தில் கொண்டிருந்ததுமான முதல் நாடாகவும் இலங்கை இருந்து வருகிறது.

நாட்டின் தலைமைப் பொறுப்புத் தவிர, இதுவரை பல பெண் அமைச்சர்களைக் கண்ட அமைச்சுகளாக சிறுவர் அபிவிருத்தி பெண்கள் விவகார அமைச்சு மட்டுமன்றி கல்வி அமைச்சு, மீன்வள அமைச்சு, நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு, கால்நடை மற்றும் கிராமப்புற சமூக மேம்பாடு அமைச்சு, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு போன்றவையும் உள்ளடங்குகின்றன.  

இவை தவிர நாட்டின் மிக முக்கிய கட்டமைப்புகளான பாதுகாப்பு அமைச்சு, பெற்றோலிய வளங்கள் அமைச்சு, துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு, தபால் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சு, பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சு, புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை சீர்திருத்தங்கள் அமைச்சு போன்றவற்றிலும் கூட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தவிர்த்து பவித்திரா வன்னியாராச்சி, ஐரீன் விமலா கண்ணங்கரா போன்ற பெண்கள் பலமுறை அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள்.  

இவை நாடளுமன்றத்தில் சொற்ப ஆசனங்களையே பெற்றிருப்பினும் தமக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கக்கூடிய திறமை மிக்க பெண்களை இந்த நாடாளுமன்றங்கள் கொண்டிருந்தமையை நிரூபணம் செய்கின்றது.  

எனினும் இந்தப் பட்டியலில், நாட்டின் சனத்தொகையின் கால்வாசி அளவைக் கொண்டிருக்கும் சிறுபான்மையினங்களிடையே பெண் அமைச்சுப் பிரதிநிதித்துவம் என்பது மிகவும் அரிதாகவே காணப்படுகிறது.

2000ஆம் ஆண்டில் கால்நடை மற்றும் கிராமப்புற சமூக மேம்பாடு அமைச்சராகப் பதவிக்கு வந்த சிறுபான்மையின பெண் நாடாளுமன்ற உறுப்பினர் பேரியல் அஷ்ரப் அவர்கள், தொடந்து 2004இல் வீட்டுவசதி மற்றும் கட்டுமானத் தொழிலமைச்சராகவும் பதவியேற்றிருந்தார். சமீபகாலங்களில் தேசிய கட்சிகள் மூலமாகவே வடக்கில் விஜயகலா மகேஸ்வரனுக்கு அமைச்சுப் பதவி கிடைக்கப்பெற்றிருந்தது.  

வடக்கின் தமிழ் அரசியல் தலைமைகள்  அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளை எடுப்பதை சலுகைகளுக்காக உரிமைகளை விட்டுக் கொடுப்பதாகக் கருதிப் புறக்கணிப்பதாக இருப்பினும் ஒருவேளை அவ்வாறு அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவியேற்கவேண்டி ஏற்படின் கூட பெண்களை முன்னிலைப் படுத்துவார்களா என்பது கேள்விக்குறியே.  

முப்பது வருடங்களுக்கு மேலாக அரசாங்கத்துடனேயே தொடந்து பயணித்து வரும் சில மலையக அரசியல் தலைமைகள் கூட பெண்களின் பிரதிநித்துவத்தை உறுதிப்படுத்துவதில் அசமந்தப் போக்கையே இன்றுவரை காண்பித்து வருகின்றன. இதற்குச் சிறந்த உதாரணமாக இம்முறை தேர்தலில் நிற்பதற்கான சகல தகுதிகள் இருந்தும் வாய்ப்பு நிராகரிக்கப்பட்ட மலையக மக்கள் முன்னணியின் பிரதிச் செயலாளரும் முன்னாள் அமைச்சர் சந்திரசேகரனின் மகளுமாகிய சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரனைக் குறிப்பிட முடியும்.  

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகரான சந்திரசேகரனின் மகளான சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் போட்டியிடும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டமைக்குக் காரணமாக, குறித்த கட்சி இம்முறை தேசிய கட்சியொன்றுடன் இணைந்து போட்டியிடுவதால் ஆசனப் பகிர்வு சிக்கல்களால் இவரை, வரும் மாகாண சபைத்தேர்தலில் நிற்கும்படி வலியுறுத்தப்பட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.  

அரசியலுக்குள் நுளைய நினைக்கும் பெண்கள் மீது வைக்கப்படும் மிகப்பெரிய குற்றச்சாட்டுகளில் ஒன்றாக அவர்கள் சாதாரண உறுப்பினர், பிரதேச சபை உறுப்பினர், பின்னர் மாகாண சபை என்று படிப்படியாக முன்னேறாமல் எடுத்தவுடனேயே நாடாளுமன்றத் தேர்தலில் நிற்க வேண்டும் என ஆசைப்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறார்கள். ஆனால், இதுவரை பிரதேச சபை, மாகாண சபை என்று படிப்படியாக வளர்ந்து வரும் எத்தனை பெண்களுக்கு வடக்கில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது?  

அங்கே ஒவ்வொருமுறையும் பெண்களுக்கு வாய்ப்பு வழங்குகிறோம் என்றுவிட்டு சாட்டுக்காக அறிமுகப்படுத்தப்படும் பெண்கள் எல்லோருமே தேர்தல் காலத்துக்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னர் திடீரென இறக்குமதி செய்யப்படுபவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களும் ஏதோ பேருக்கு நாலு பிரசாரங்களைச் செய்துவிட்டு தம்மைப் பரிந்துரைசெய்து, அரசியலுக்குக் கொண்டு வந்தவர்களுக்கான விருப்புவாக்குகளை மாட்டும் பெற்றுக்கொடுத்துவிட்டு அடுத்த தேர்தலில் காணாமல் போய்விடுகிறார்கள்.  

இதில் சென்றமுறை வட மாகாண சபைத் தேர்தலில் இரண்டாவது அதிக வாக்குகளைப் பெற்றிருந்த அனந்தி சசிதரன், கூட்டமைப்பானது தன்னை வெறும் வாக்குச் சேர்ப்பதற்காக மட்டுமே பாவித்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெறுகிறது. இருப்பினும் இவர் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கியுள்ள கட்சி கூட பெண்களை தமது வாக்கு வங்கியைப் பலப்படுத்த மட்டுமே பாவிப்பதற்கான சாத்தியக் கூறுகளே அதிகமாகக் காணப்படுகின்றன.  

இவ்வாறான சந்தர்ப்பத்தில் மற்றக் கட்சி வேட்பாளர்களை விடவும் இம்முறை ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரான உமா சந்திரபிரகாஷ், தான் யாழ். மண்ணின் புதல்வி என்பதை நிரூபிக்கவும் வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்கும் நிறையவே பிரயத்தனப்பட வேண்டியிருக்கிறது. இருப்பினும் வடக்கில் வேறெந்த புதுமுக பெண் வேட்பாளர்களை விடவும் சிறந்த திட்டமிடல்களையும் ஆணாதிக்க அரசியலை கேள்விக்குட்படுத்தக்கூடிய சிறந்த ஆளுமையையும் கொண்டிருப்பதாகவே உமா சந்திரபிரகாஷ் தெரிகிறார்.  

காலாகாலமாக தமிழர்கள் மத்தியில் அரசியல் என்பது ஆண்களுக்கே வரிந்துவிடப்பட்டதாகக் கருதப்படும் சூழ்நிலையில் துணிந்து களமிறங்கும் பெண்களின் மீது அவர்களது நடத்தையைக் கேள்விக்குள்ளாக்கும் முகமாகச் சேற்றை வாரியிறைக்கும் செயல்கள் தொடர்ந்தும் அரங்கேறுவதும் வேதனைக்குரிய விடயம்.

இத்தகைய சேறுபூசல் நிகழ்வுகள் இம்முறை யாழ்ப்பாணத் தொகுதியில் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் சசிகலா ரவிராஜ் தொடக்கம் வேட்பாளராக விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் சமர்ப்பித்திருந்த மட்டக்களப்பின் நளினி இரட்ணராஜா வரை நீண்டு செல்கிறது.  

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜின் துணைவியாகிய சசிகலா ரவிராஜ் தனது பிரசாரங்களில் புலிகளால் ரவிராஜுக்கு வழங்கப்பட்ட ‘மாமனிதர்’ பட்டத்தைப் பயன்படுத்தினார் என்பதற்காக மாற்றுக் கட்சி உறுப்பினர் ஒருவரால் “அரசியலில் இறங்க முதல் உங்கள் கணவரின் நினைவுச் சிலையில் மாமனிதர் என்ற கௌரவத்தினை பொறியுங்கள். அது செய்ய வக்கில்லை. தூ.. பிறகு அரசியல் கதைக்கிறாவாம். இதைவிட உடுப்பில்லாமல் திரியலாம். அதுமேலானது” என்றவாறாக மிகவும் கீழ்த்தரமாக, விமர்சிக்கப்பட்டிருக்கிறார். 

இதேபோலவே நளினி இரட்ணராஜாவின் நடத்தையும் இன்றுவரை மிகவும் கீழ்த்தரமான முறையிலேயே விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதன் பின்னாலிருக்கும் ஆணாதிக்க மனோ நிலையானது பெண்கள் எவரையும் தேர்தல் களத்துக்கு வரவிடாமல் செய்வதனையே பிரதான குறிக்கோளாகக் கொண்டிருப்பதைக் காணலாம். இதனாலேயே சில ஆளுமை மிக்க பெண்கள் கூட தேர்தல் களத்துக்கு வர அஞ்சி, தேசியப்பட்டியலை விரும்பிச் செல்வதற்குக் காரணமாகிறது.  

இன்னும் சில இடங்களில் பெண்களை வேட்பாளராகக் களமிறக்கினாலும் முன்னிலையில் சென்று பேசுவதற்குத் தடுக்கப்படுகிறார்கள் அல்லது தயக்கம் காட்டுகிறார்கள். அத்தகைய பெண்களின் குரலாக ஆண்களே இவர்களுக்கும் சேர்த்து பேசிவிட்டுச் செல்கிறார்கள். இதனை கிழக்கின் ஒரு முன்னிலைக் கட்சியின் கூட்டங்களில் காணமுடிகிறது. ஆனால், ‘தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்’ கட்சியின் சார்பில் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் மங்களேஸ்வரி சங்கர் ஓரளவு தனித்துவத்துடன் தெரிகிறார்.  

தேர்தல் களத்தில் பெண்கள் மீதான இத்தகைய சவால்களையெல்லாம் துடைத்தெறியக்கூடிய ஆளுமை மிக்க பெண்களாகவும் வெற்றி மீதான ஓர்மமுள்ள பெண்களாகவும் இனி அரசியலுக்கு வரத்துணியும் பெண்களுக்கான சிறந்த வழிகாட்டிகளாக அமையக்கூடிய பெண்களாகவும் இம்முறை தேர்தல் களத்தில் இரு தமிழ்ப் பெண்களைப் பார்க்க முடிகிறது. ஒருவர் மலையகத்தின் சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் மற்றையவர் வடக்கில் உமா சந்திரபிரகாஷ்.  

இவர்கள் இருவரிடத்திலும் தாம் சார்ந்த மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் புரிகிறது, அவற்றைச் சிறந்த முறையில் பகுப்பாய்வு செய்து அவற்றுக்குத் தம்மால் முன்வைக்கப்படும் தீர்வுகளைப் பற்றியே தமது பிரசாரங்களில் அதிகமாகப் பேசுகிறார்கள்.

குறுகியகாலத்தில் அடைய முடியாத தீர்வுத்திட்டங்களையும் பிறர் மீது பழிசுமத்தும் அரசியலையும் மட்டுமே இதுவரைகாலமும் செய்து வந்த பல அரசியல்வாதிகளுக்கு இவர்களின் இந்தப் புதிய அணுகுமுறை மாபெரும் அடியாக இருக்கிறது.  

கூரையேறிக் கோழிபிடிக்க முடியாதவர்கள் எல்லாம் வானம் ஏறி வைகுந்தம் போவேன் என்பதில் அர்த்தமில்லை. ஒரு பெண்ணுக்குத்தான் குடும்பத்தின் அடிப்படைப் பிரச்சினைகள் என்னவென்று புரிந்துகொள்ள முடியும், சாதாரண மனிதர்களின் அபிலாசைகளைத் தீர்த்துவைக்க முடியும். இந்தவகையில் மேற்குறிப்பிட்ட இரு பெண்கள் முன்மொழியும் திட்டங்களும் அவற்றைப் பெற்றுக்கொடுப்பதாகச் சொல்லும் பொறிமுறைகளும் செயற்பாடுகளும் எளிதானவையாகவும் மெச்சத்தக்கனவையாகவும் இருக்கின்றன.  

இவ்விரு பெண்களும் இம்முறை தேர்தல் களத்தில் துணிச்சலுடன் எதிர்கொள்வது, பல தாசாப்தங்களாக ஆசனத்தை விட்டகலாத பலம் மிக்க அரசியல் முதலைகளையேயாகும். இருப்பினும் அந்த அரசியல் முதலைகளால் இவர்கள் மீது வைக்கக் கூடிய அதிகபட்ச பழி சுமத்தலே திருமணம் செய்த பின்னரும் தனது கணவனின் பெயரைப் பயன்படுத்தாமல் தந்தையாரின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டிருகிறார் என்பதும், வாக்குகளைப் பிரிப்பதற்காகக் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுவும் மட்டுமே.  

ஒரு பெண் தனது பெயருடன் தந்தையின் பெயரைப் பயன்படுத்த வேண்டுமா அல்லது கணவனின் பெயரைப் பயன்படுத்த வேண்டுமா அல்லது தாயின் பெயரைப் பயன்படுத்தவேண்டுமா என்பது அந்தப் பெண்ணின் சுதந்திரம். இந்த அடிப்படைச் சுதந்திரத்தைக் கூடப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், பெண்களுக்கு அனைத்து உரிமைகளையும் பெற்றுத்தந்து விடுவார்கள் என்று நினைப்பது அடிமுட்டாள்தனம்.  

ஐம்பத்தியாறு சதவீதத்துக்கு மேற்பட்ட பெண் வாக்காளர்களை இலங்கை கொண்டிருக்கூடியபோதிலும், இன்றுவரை ஆறு சதவீதத்துக்கும் குறைவான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை மட்டுமே பெண்கள் கொண்டிருப்பதற்கு நிச்சயமாக பெண் வாக்காளர்களைத் தான் குறைசொல்ல வேண்டியிருக்கிறது. அது மட்டுமன்றி இலங்கை நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்துக்கான எதிர்பார்ப்புகள் அதிகமாகக் காணப்பட்டபோதிலும், அரசியலில் பெண்களின் பங்களிப்பு தேக்கமடைந்துள்ளமைக்கான காரணமாகவும் பெண் வாக்காளர்களே இருக்கிறார்கள்.

எனவே இம்முறை ‘குறிப்பிடத்தக்களவு விகிதாசாரத்தில் பெண்கள் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்பதையும் பெண் வாக்காளர்களாகிய எமக்குப் புரிகிறது’ என்பதையும் அனைவருக்கும் உரத்துச் சொல்வதற்காகவேனும் ஒரு பெண் வேட்பாளருக்கு தமது வாக்கைக் கட்டாயம் அளித்தே தீரவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.  

புலிகள் உருவாக்கினார்கள் என்பதற்காக இதுநாள்வரை ஒரு கட்சிக்கு வாக்குப் போட்டுக்கொண்டிருந்த மக்களுக்குத் தற்போது அதனைக் கூட ‘அப்படியெல்லாம் இல்லை’ என்று குறித்த தலைமைகள் கற்பூரம் கொழுத்திச் சத்தியம் செய்பவர்களாக இருக்கிறார்கள். தாம் காலம் காலமாக ஆசனத்தில் இருப்பதற்காக வெளியே ஒன்றையும் பின்னர் தேர்தல் காலத்தில் மக்களுக்கேற்றவாறு இன்னொன்றையும் திரித்துக் கூறக் கூடியவர்களை மீண்டும் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி ஏதாவது கிடைத்துவிடும் என்று காத்திருப்பதை விடுத்து மக்களது அடிப்படைத் தேவைகளைப் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு புதிய தலைமுறையை நாடாளுமன்றத்துக்கு அனுப்பவேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.  

தமிழர்களின் ஒற்றுமை என்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் என்பது. எனவே, இம்முறை தேர்தலில் களமிறங்கியிருக்கும் பெண் வேட்பாளர்களை, ஆண் பிரதிநிதிகளால் வசைபாடப்படுவதைப்போல, மக்களின் வாக்குகளைப் பிரிக்க வந்தவர்களாகப் பார்க்காமல், இவர்கள் அனைவரும் ஆணாதிக்க அரசியலில் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் என்பதைத் தெளிவுறப் புரிந்துகொண்டு, தமது ஒட்டுமொத்த வாக்குகளையும் இம்முறை பெண்களுக்கு வழங்கி வெற்றிபெறச் செய்வதே இனிவரும் காலங்களில் அனைத்துக் கட்சிகளும் பெண் பிரதிநிதித்துவத்துக்கு முக்கியத்துவமளிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கும்.  

தவிர, இம்முறை களமிறங்கியிருக்கும் பெண் பிரதிநிதிகளும் சிறந்த ஆளுமை கொண்டவர்களாகவும் தாம் செய்வோம் என வாக்குக் கொடுப்பதைச் செய்யக்கூடிய தற்றுணிவுடையவர்களாகவும் தெரிகிறார்கள். இவர்கள் வேறுவேறு கட்சிகளிலும் சுயேட்சையாகவுமே தேர்தல் களத்தில் இறங்கியிருந்தாலுமே தமக்கான வாக்காளர் பகுதிகளை ஒருவருக்கொருவர் பாதிப்பேற்படுத்தாத வகையில்தான் தேர்வு செய்து பிரசாரங்களை மேற்கொண்டுவருகிறார்கள் என்பது கவனத்துக்குரியது.  

எனவே, மக்கள் நினைத்தால் இம்முறை வழமையைவிட அதிக பெண் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்துக்கு அனுப்பக்கூடிய இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இது வருங்காலங்களில் பிரதான தமிழ்க் கட்சிகளில் அனுமதி மறுக்கப்பட்டாலும் தனித்துக் களத்தில் இறங்கக் கூடிய உத்வேகத்தைப் பெண்களுக்கு வழங்கும். இல்லாதுவிடின் சிறுபான்மையினரின் அரசியலில் பெண் தலைமைத்துவம் என்பதும் சிறந்த பெண் ஆளுமைகளது உருவாக்கம் என்பதும் இனிவரும் கால் நூற்றாண்டுக்குக் கூட சாத்தியப்படாத ஒன்றாகவே ஆகிவிடும்.    

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தேர்தல்-களத்தில்-பெண்கள்/91-252770

 

  • கருத்துக்கள உறவுகள்

இதைப்பற்றி யாழ் இணைய உறவுகள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய ஆவல்.

ஏன் இலங்கை அரசியலில் பெண்களின் எண்ணிக்கை குறைவு? அல்லது சந்தர்ப்பங்கள் வழங்கப்படுவதில்லை? பெண் வாக்காளர்களை அவர்களால் ஏன் கவரமுடியாது உள்ளது?

விதாண்டவாத கருத்துகள் இல்லாமல், ஆக்கபூர்வமான கருத்துகளை அறிய ஆவல்.. நன்றி.

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனங்கள் இணைக்கப்பட்டமை

  • கருத்துக்கள உறவுகள்

என் கருத்துப் படி இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் "கலாச்சாரம்" என்ற பெயர் கொண்ட நடைமுறைகள் தான் பெண்கள் அரசியலில் முன்வராமல் இருக்கக் காரணம். பொதுவாகவே அரசியலில் அறம் என்பது மிகக் குறைவாக இருக்கிறது. இந்த சூழலில் எந்த அரசியல் வாதிக்கும் வித்தியாசமான ஒரு மன அமைப்பு வெற்றிபெறத் தேவையாக இருக்கிறது! கீழைத்தேய ஆசிய நாடுகளில் வாழும் பெண்களுக்கு நாம் நம்பிக்கைகளை ஊட்டும் விதமாக எம் சமூக அமைப்பை முன்னேற்றவில்லை! இதனால் அவர்கள் spotlight இற்குள் வராமல் பின் புலத்திலேயே பணியாற்றிய படி இருப்பர்! யாராவது முன்னே வர முனைந்தால், சாதாரண அரசியல் சித்து விளையாட்டுகளோடு சேர்ந்து மேலதிகமாக ஆணாதிக்க வாதம் நிறைந்த தாக்குதலையும் எதிர் கொள்ள வேண்டி வரும்!

பி.கு: உலகின் முதல் பெண் பிரதமராக சிறிமா வந்ததும், இந்தியாவில் பெண் ஜனாதிபதியாக பிரதீபா பட்டேல் வந்ததும் அந்த நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கும் ஒரு விடயமாக நான் கருதுவதில்லை! அந்த நாடுகளில் பெரும்பாலான பெண்களின் நிலையே இதற்குச் சான்று! 

  • கருத்துக்கள உறவுகள்

கீழத்தைய நாடுகளில் பெண்கள் தலமைப் பொறுப்புக்கு வந்தாலும் கணவன் இறந்தபின் அல்லது தந்தை இறந்த பின் வந்தவர்கள் தான் அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூறியபடி பொதுவாக அரசியலில் அறம் என்பது குறைவாக உள்ள நிலையில் இலங்கையில் இந்தியாவில் பெண்கள் அரசியலில்/ சமூக பொருளாதார முன்னேற்றங்களில் ஈடுபடும் போது நிறைய சவால்களை எதிர்நோக்குகிறார்கள். சவால்களை மீறி முன்னேறுவதற்கு வித்தியாசமான மன உறுதியும் தேவை. அந்த தன்னம்பிக்கை பெண்களிடம் குறைவாக உள்ளது அல்லது அப்படி வளர்க்கப்படுகிறார்கள். 

சம்பளம் பெறுவதால் அரசியலும் ஒரு தொழில், அரசியல்வாதியும் ஒரு ஊழியன் என நினைத்துகொண்டு மேலே முன்னேறுவதற்கான mindset என்பதும் இல்லைதான். இளவயதினர் கூட படிப்படியாக மேலே வரமுடியாதளவிற்கு எங்களது சமூக கட்டமைப்பு உள்ளது. 

இந்தியா, ஆபிரிக்க நாடுகளில் நடைபெறும்  பெண்களுக்கெதிரான வன்முறைகளைவிட இலங்கை பரவாயில்லை என்றும் இலங்கையில் பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி வருகிறார்கள் எனகூறிகொண்டாலும் இன்னமும் கலாச்சாரம் என்ற பெயரில் தடையை போடுகிறார்கள் என்பதும், பெண்களின் விகிதசாரம் சற்றுக்கூட இருந்தும் பெண் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை குறைவு என்பதும், மாற்றங்களைப்பற்றி சிந்திப்பதும் இல்லை என்பதும் உண்மை

On 7/7/2020 at 01:05, சுவைப்பிரியன் said:

கீழத்தைய நாடுகளில் பெண்கள் தலமைப் பொறுப்புக்கு வந்தாலும் கணவன் இறந்தபின் அல்லது தந்தை இறந்த பின் வந்தவர்கள் தான் அதிகம்.

நீங்கள் கூறுவது தலமைப்பொறுப்பிற்கு வந்தவர்களுக்கு பொருந்தும் ஆனால் இங்கே சாதாரண உறுப்பினர்/ மாநகர சபை/ மாகான சபை என படிப்படியாக முன்னேறுவதே மிகவும் கடினமாக உள்ளதே ஏன்?

On 6/7/2020 at 14:11, பிரபா சிதம்பரநாதன் said:

இதைப்பற்றி யாழ் இணைய உறவுகள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய ஆவல்.

ஏன் இலங்கை அரசியலில் பெண்களின் எண்ணிக்கை குறைவு? அல்லது சந்தர்ப்பங்கள் வழங்கப்படுவதில்லை? பெண் வாக்காளர்களை அவர்களால் ஏன் கவரமுடியாது உள்ளது?

விதாண்டவாத கருத்துகள் இல்லாமல், ஆக்கபூர்வமான கருத்துகளை அறிய ஆவல்.. நன்றி.

தமிழ்ச்சூழலில் அரசியலுக்கு பெண்கள் நெடுங்காலமாகவே வரவேற்கப்படவில்லை என்பதே உண்மை. பெண்களுக்கான கலாச்சார அழுத்தம் என்பது மறைமுகமாக  சமூகத்தால் குடும்ப வளர்ப்பு முறையிலேயே விதைக்கப்பட்டு விடுவதால் அவர்களாகவே தயங்கி கூனிக்குறுகி  நிற்பவர்களாகவே இருந்தனர். 

ஆயுதப்போராட்டம் ஆரம்பிகப்பட்ட போது போராளிகள் தேவைகருதி பெண்பிள்ளைகளை உள்வாங்க வேண்டிய கட்டாயம்  வந்தது.  இதுவரை கலாச்சார பழமைவாதத்துக்குள் பொத்தி வைத்து  அவர்களின் திறமைகளை மழுங்கடித்த  தமிழ்சமூகம் பலம்மிகு  புலிகளை பகைக்க முடியாத இக்கட்டான சூழ்நிலையில்  பெண்பிள்ளைகள் ஆண்களுக்கு சமமாக நின்று போராடுவதை மனதுக்குள் விருப்பமின்றி ஏற்றுக்கொள்ளவேண்டியிருந்தது.   

அவ்வாறு போராளிகளாக உள்ளே கொண்டு வரப்பட்ட பெண பிள்ளைகள் ஆண்போரளிகளுக்கு நிகராக சிலவேளைகளில் அதற்கு மேலாகவே தமது திறமையை நிரூபித்தனர். பெண்கள் கலாச்சார பழமைவாதங்களுக்குள் இருந்து வெளியே வர வேண்டும் என்ற  முற்போக்கு சிந்தனை கொண்ட பலர் விடுதலைப்புலிகளுக்குள் இருந்த போதிலும் அவர்களின் போராட்ட நெருக்கடி காரணமாக இதனை சரியான சமூக விழிப்புணர்வாக தமிழ் சமூகம் சார்ந்த ரீதியில்  செய்யமுடியவில்லை. அதனால் தற்போதைய நிலையில் தீவிர புலிகள் ஆதரவு தமிழ் தேசியம் பேசும் பலரும் பெண்கள் தொடர்பாக  பழைய பத்தாம்பசலி  அணுகுமுறையை நடைமுறையில் ஆதரிப்பதை காணலாம். இருப்பினும் இவர்களை மீறி பெண் பிள்ளைகள் தமது அசாத்திய திறமையினால் வளர்ந்துவருகின்றனர் என்பது மகிழ்சசிக்குரிய விடயம். 

கடந்த வருடம்  பெண்களுக்கான கோலோற்றி பாய்தல் விளையாட்டில் தேசியரீதியில் சாதனை நிகழ்த்தி ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு தன்னை தயாராகி வரும் தமிழ் வீராங்கனை அனிதா ஜெகதீசனின் பேட்டி கேட்டேன். வயதில் இளையவரான அவர் சார்ந்த தமிழ் சமூகம்  பெரியளவில் தன்னை ஊக்குவிக்காததையும் பொம்பிளைப் பிள்ளைக்கு இப்படியான விளையாட்டுகள் தேவையில்லை என்ற ரீதியிலான மனதை புண்படுத்தும் விமர்சனங்களால் தன்னை  demotivation பண்ணியிருந்ததை வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார். அதேவேளை விளையாட்டு போட்டிகளுக்கு சென்ற போது தன்னுடன் பழக்கத்தை ஏற்படுத்திய சிங்கள இனத்தை சேர்ந்த பல தனது பெண் தோழிகள் இனபேதத்தை கடந்து தனக்கு மிகுந்த  ஊக்கம் கொடுத்திருந்ததையும் அவர்   தெரிவித்திருந்தார்.   

 

 

 

Edited by tulpen

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் பெண்கள் பழமைவாதங்களிலிருந்து விடுபட்டு, முற்போக்கு சிந்தனையுடையவர்களாக இருக்கவேண்டும் என நினைத்து நடவடிக்கைகளை எடுத்திருந்தார்கள். அவர்கள் மீதான பயத்தினால் பழமைவாதிகளும் அடக்கிவாசித்தார்கள் என்றுதான் நானும் நினைப்பதுண்டு. இப்பொழுது மீண்டும் பழைய அணுகுமுறைகளை தொடங்கிவிட்டார்கள்,

ஆனால், நான் பெண் வாக்காளர்களை நினைத்து பார்க்கிறேன். ஏன் அவர்கள் இந்தப்பெண் வேட்பாளர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுப்பதில்லை?. இப்பொழுது போரினால் குடும்பத்தை தாங்கிய ஆண்களை இழந்த பெண்தலைமைத்துவகுடும்பங்கள் அதிகம்..அவர்கள் நினைத்தால், தங்களது பிரச்சனைகளை அதிகம் யாரால் உணரமுடியும் என்றும், இவ்வளவுகாலமும் வாக்கு போட்டு அனுப்பியவர்கள் என்ன செய்தார்கள் எனவும் சற்று சிந்தித்தால் பெண் வேட்பாளர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கமுடியும்.. ஆனால் ஏதோ வாக்குபோட்டுவிட்டு வந்தால் போதும் என்றோ. அல்லது தாங்களாக அறியமுற்படாமல் அவர்களை சுற்றியுள்ளவர்களின் வார்த்தைகளை கேட்டு பெண்வேட்பாளர்களை தவிர்த்து வாக்குகளை போடுவார்களாயின் பெண் வேட்பாளர்களுக்கான சந்தர்ப்பம் கிடைக்கபோவதில்லை.  
 

ஒரு அருமையான புள்ளி விபரங்களுடனான அரசியல் அலசல் . பெண்கள்  சாதாரண பொது வெளிகளுக்கே வரத்  தயங்கும் சூழல் தான் புலம் பெயர்ந்த நாடுகளிலும் சரி தாயகத்திலும் சரி காலம் காலமாக இருந்து வருகிறது.  இந்த நிலையில் துணிச்சலுடன் அரசியலில் குதித்திருக்கும் பெண்கள் வாழ்த்தப் பட வேண்டியவர்கள்.  ஆனால் வழமை போலவே தூற்றித் தள்ளுவதற்கு மக்கள் மிகவும் ஆர்வமாக இருப்பது அவர்கள் எவருமே பெண்களின் அரசியல் பங்களிப்பை உள்வாங்க முடியாமல் இருப்பவர்களே.

பெண் தலைமைத்துவத்தை ஏற்க முடியாத தன்மை எமது தற்போதைய கலாச்சாரம் சார்ந்தது. அது மட்டுமல்லாது ஆண்  ஆதிக்கம் மிகுந்த கட்சிகளில் பெண் பிரதிநித்துவம் என்பது வெறும் கண் துடைப்பாகவோ அல்லது தம் கட்சிக்கு வாக்குகளை வாங்கித்தரும் பலியாடுகளாகவோ இருப்பதற்கே பயன் படுத்தப்படுகின்றது.  இந்நிலையில் பெண்கள் சார்ந்த பிரச்சனைகளை மட்டுமல்லாது தம் சார்ந்த சமூகத்துக்கும் பலம் சேர்க்கவும் பெண்களை பிரதிநிதிப்படுத்தவும் பெண்கள் நாடாளுமன்றம் செல்வது இன்றியமையாதது. இதில் நீங்கள் குறிப்பிட்டது  போல ஆண்ஆதிக்கத்தை மட்டுமன்றி, தமது பாதையை ஓர்மத்துடன் நின்று எதிர் கொள்ளக்கூடிய பெண்களும் இங்கு அவசியமாகின்றார்கள்.  

மக்கள், முக்கியமாக பெண்கள்  தம் வாக்குகளை தம் விரும்பும் கட்சிகளிலுள்ள பெண்களுக்கோ அல்லது தம் ஒரு சிறந்த பெண் ஆளுமை என அடையாளம் காணுகின்ற ஒரு பெண் வேட்பாளருக்கோ போட்டு இந்த தேர்தலை ஒரு நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்த வேண்டும். உலக அரங்கில் பெண் ஆளுமைகள் தலைமை தங்கி செல்லும் நாடுகள் செழிப்புள்ளதாக அமைந்திருப்பது கண்கூடு.

Edited by தோழி

On 12/7/2020 at 10:54, பிரபா சிதம்பரநாதன் said:

 விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் பெண்கள் பழமைவாதங்களிலிருந்து விடுபட்டு, முற்போக்கு சிந்தனையுடையவர்களாக இருக்கவேண்டும் என நினைத்து நடவடிக்கைகளை எடுத்திருந்தார்கள். அவர்கள் மீதான பயத்தினால் பழமைவாதிகளும் அடக்கிவாசித்தார்கள் என்றுதான் நானும் நினைப்பதுண்டு. இப்பொழுது மீண்டும் பழைய அணுகுமுறைகளை தொடங்கிவிட்டார்கள்,

ஆனால், நான் பெண் வாக்காளர்களை நினைத்து பார்க்கிறேன். ஏன் அவர்கள் இந்தப்பெண் வேட்பாளர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுப்பதில்லை?. இப்பொழுது போரினால் குடும்பத்தை தாங்கிய ஆண்களை இழந்த பெண்தலைமைத்துவகுடும்பங்கள் அதிகம்..அவர்கள் நினைத்தால், தங்களது பிரச்சனைகளை அதிகம் யாரால் உணரமுடியும் என்றும், இவ்வளவுகாலமும் வாக்கு போட்டு அனுப்பியவர்கள் என்ன செய்தார்கள் எனவும் சற்று சிந்தித்தால் பெண் வேட்பாளர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கமுடியும்.. ஆனால் ஏதோ வாக்குபோட்டுவிட்டு வந்தால் போதும் என்றோ. அல்லது தாங்களாக அறியமுற்படாமல் அவர்களை சுற்றியுள்ளவர்களின் வார்த்தைகளை கேட்டு பெண்வேட்பாளர்களை தவிர்த்து வாக்குகளை போடுவார்களாயின் பெண் வேட்பாளர்களுக்கான சந்தர்ப்பம் கிடைக்கபோவதில்லை.  
 

ஒரு அன்பர் ஒருவர் கேட்டார் இவை எல்லாம் போய்  என்ன செய்யப்போகினம் என்று.  அவரை நான் கேட்டாக வேண்டி வந்தது

' தோழரே சில கட்சிகளில் இருக்கும் ஆண்கள் போய் என்ன செய்தார்கள்,  இவ்வளளவு நாளும் இருந்து ஆண்கள் சாதித்ததை விட பெண்கள் கூடுதலாக சாதிக்கக் கூடும், ஒரு சந்தர்ப்பம் கூடக் கொடுக்காமல் கேள்விகளே கேட்பது நல்லதல்ல ' என்று. இப்படியாகத்தான் அரசியல் அவதானிகள் இருக்கிறார்கள் என்ன செய்வது ?

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, தோழி said:

உலக அரங்கில் பெண் ஆளுமைகள் தலைமை தங்கி செல்லும் நாடுகள் செழிப்புள்ளதாக அமைந்திருப்பது கண்கூடு.

யேர்மனி, தய்வான் சுவீடன் என்று நாடுகளை பார்க்கும் போது நீங்கள் சொன்னது உண்மை தான். ஆனால் முன்பு ஆசிய நாடுகளில் பண்டாரநாயக்க இந்திராகாந்தி மோசமான ஆட்சிகள் நடத்தியதாக அறிய முடிகிறது.
தமிழ் பெண் வேட்பாளர்களும் வழக்கமான ஆண்கள் மாதிரி உணர்ச்சி உசுப்பேற்று  அரசியல்  பேசாமல் பெண்கள்,மக்கள் செழிப்புற வாழ்வதில் அக்கறை எடுத்து செயல்பட   வேண்டும்.

உண்மை தான்! வாக்குகளை  மட்டும் கொடுத்து விட்டு வேலை முடிந்தது என்றில்லாமல், வாக்குப் போட்டவர்களும் தம் வாக்குகளை வாங்கியவர்கள் என்ன செய்து தருகிறார்கள், கூறிய வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துகிறார்களா என ஆர்வமாக இருந்து கவனிப்பதும் அவர்களுடன் ஆதரவாக பயணிப்பதும் இன்றியமையாதது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.