Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கப்டன் திலகா

 

 

Captain-Thilaka.jpg

சிட்டுக்குருவி கப்டன் திலகா

குள்ளமான சிறிய உருவம். சிரிக்கும் முகம், அமைதியான் சுபாவம். எல்லோருடைய மனங்களையும் கவர்ந்து, பழகுவதற்கு இனிய போராளி. கற்பனை செய்து பாருங்கள்.

உங்கள் மனங்களில் ஒரு உருவம் தெரிகின்றதல்லவா? நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். அதோ, அந்த உருவம் ஓடுவதைப் பாருங்கள். பாதங்கள் தரையில் படாதது போல் தோன்றுகிறதல்லவா, உடற்பயிற்சி செய்வதைப் பாருங்கள், எப்படி இவ்வளவு வேகமாகவும் லாவகமாகவும் உடலை வளைக்க முடிகிறது என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அவள் தான் திலகா. சிட்டுக்குருவி போல் துருதுருவென்ற இயல்புடன் எப்போதுமே உற்சாகமாகத்தான் ஓடித்திரிவாள். திலகாவிடம் பயிற்சி பெற்ற பெண் புலிகள் “திலகாக்கா மாத்திரம் எப்படி சோர்வேயில்லாமல் இப்படி சுறுசுறுப்பாக இருக்கிறார்?” என்று ஆச்சரியப்படுவார்கள். “பயிற்சிப் பாசறையில் நாம் பயிற்சி எடுக்கிறோமா அல்லது திலகாக்கா பயிற்சி எடுக்கிறாரா என்று சந்தேகமாக இருக்கும். ஏனென்றால் அவர் எந்நேரமும் ஓடித்திரிந்து கொண்டே இருப்பார்” என்று அவர்கள் சொல்வார்கள்.

களத்தில் கூட அவளது உற்சாகம் சிறிதும் குறையவில்லை. 1989ம் ஆண்டின் நடுப்பகுதியில் அமைப்போடு தன்னை இணைத்துக்கொண்ட திலகா இதுவரை காலமும் பயிற்சி கொடுத்து படையணிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததால் களம் செல்லும் சர்ந்தப்பம் அவளுக்கு கிடைக்கவில்லை. ஆனையிறவு மோதலே அவளது அவாவை நிறைவேற்றியது. வழமை போல் படு உற்சாகமாகவே தன் குழுவை அழைத்துக் கொண்டு புறப்பட்டாள்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆனையிறவு மோதலின் கடைசிக் கட்டம், திலகா தனது அணியுடன் களம் புகுந்தாள். அகிலன் வெட்டையில் நின்ற இராணுவம் ஆனையிறவை நோக்கி முன்னேறத் தொடங்கியது. புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையில் கடும் மோதல் வெடித்தது. இராணுவம் அங்குலம் அங்குலமாக முன்னேற முயன்றது, இராணுவத்தினரின் நகர்வுகளுக்கு ஏற்ற வகையில் திலகா தனது அணியின் வியூகங்களை மாற்றி – மாற்றியமைத்து போரிட்டுக் கொண்டிருந்தாள். இராணுவத் தரப்பில் பலரை நாம் விழ்த்திய போதும் எம் பக்கமும் இழப்புகள் அதிகமாகவே இருந்தது. களத்தில் நிற்கும் எம்மவர் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டது. ஆனாலும் இராணுவத்தினது நகர்வு தடுக்கப்பட வேண்டும். திலகா உடனேயே தொலைத் தொடர்பு சாதனம் முலம் தனது குழுவின் அணித்தலைவர்களை அழைத்தாள்.

“முன்னுக்குப் போங்கோ. சளைக்காமல் அடிபடுங்கோ. வீரமரணமடைந்த ஒவ்வொரு போராளியையும் மனதில நினைத்துக்கொண்டு போங்கோ – போய் அடிபடுங்கோ.” என்று திரும்பத் திரும்பச் சொல்லி தன் குழுவை உற்சாகப்படுத்திக் கொண்டு சண்டைக்குத் தலைமை தாங்கினாள். சண்டையும் தீவிரமடைந்தது.

இராணுவத்தினரின் துப்பாக்கி ஒன்றிலிருந்து புறப்பட்ட ரவை திலகாவை துளைத்துச் சென்றது. தரையில் படாமல் பறப்பது போல் ஓடுகின்ற திருமலை மண் பெற்ற அந்தத் தவப்புதல்வி அந்தப் பெருமணல் வெளியிலே சாய்ந்தாள்.

அரை மயக்கத்திலிருந்த போதும் அவள் வாய், “செத்த ஒவ்வொரு, போராளிகளையும் நினையுங்கோ. போய் அடியுங்கோ” என்றே கட்டளையிட்டுக் கொண்டிருந்தது.

வைத்தியசாலைக்கு அவள் கொண்டு வரப்படும் வழியிலும் எதோ சொல்ல விரும்புவது போல் அவள் வாய் திறந்து, திறந்து முடியது. ஆனால் வார்த்தைகள் வெளிவரவில்லை.

வைத்தியசாலைக்கு அவள் கொண்டுவரப்பட்ட பின்னர் உயிர் பிரியும் இறுதி நேரத்தில் கூட அவள் வாய் எதையோ முணுமுணுத்தது. நான் நினைக்கின்றேன் கடைசி நேரத்தில் கூட “செத்த ஒவ்வொரு போராளிகளையும் நினைத்துக் கொண்டு அடிபடுங்கோ. ” என்று சொல்லத்தான் அவள் விரும்பியிருப்பாள்.

நினைவுப்பகிர்வு: மலைமகள்.
நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (ஆவணி – புரட்டாதி 1991).

https://thesakkatru.com/captain-thilaga/

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீரவணக்கம்

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

spacer.png



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.