Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளக் கதைகள் -நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளக் கதைகள் -நிலாந்தன்

December 13, 2020

 

nallur-flood-1024x768.jpg

புரேவிப் புயல் கடந்த வாரம் தமிழர் தாயகத்தை ஓரளவுக்குச் சேதப்படுத்தியது. மூன்று மரணங்கள். ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்தார்கள்.சொத்துக்களுக்கு நட்டம் ஏற்பட்டது.குறிப்பாக யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலைச் சூழ்ந்து வெள்ளம் நின்றது. யாழ் நகரத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியது.

கோவில் வீதியில் அமைந்துள்ள இரண்டு நாடாளுமன்ற உறுபினர்களின்(விக்னேஸ்வரன்,அங்கஜன்) வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. விக்னேஸ்வரனின் வாடகை வீட்டின் படிக்கட்டுக்கு வெள்ளம் ஏறியது. இவ்வாறு யாழ்ப்பாணத்தின்  சில பகுதிகள் வெள்ளத்துள் மிதந்தமை குறித்து சமூக வலைத்தளங்களில் ஊடகங்களில் பரவலாக விமர்சனங்கள் எழுந்தன.

நகைச்சுவை உணர்வு மிக்க சிலர் நல்லூரை வெள்ளம் சூழ்ந்திருக்கும் ஒரு படத்தில் ஒரு படகை ஒட்டி அதில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை வழி என்று எழுதி அதைப் பிரசுரித்து ரசித்தார்கள். இது விடயத்தில் வடமாகாண  வடிகாலமைப்பு தொடர்பாக ஊற்று சிந்தனை நடுவம் என்றழைக்கப்படும் ஒரு  அமைப்பு துறைசார் நிபுணர்களை இணைத்து மெய்நிகர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தது.

கோவிட்-19 சூழல் கடந்த சுமார் ஓராண்டு காலமாக உலகத்தை இயல்பற்ற இயல்பிற்கு தள்ளிவிட்டிருக்கிறது. இயல்பின்மையே இயல்பாக மாறி வருகிறது. இவ்வாறு இயல்பற்ற இயல்பிற்குள்  மழைக்காலம் குறிப்பாக தாழமுக்கங்கள் இலங்கைத்தீவில் புதிய இயல்பின்மைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. இவற்றுக்கு யார் பொறுப்பு?இது தொடர்பாக கீழ்கண்ட அபிப்பிராயங்கள், உரையாடல்கள் உண்டு.

உரையாடல் ஒன்று- ஒட்டுமொத்த திட்டமிடல் இல்லாத அபிவிருத்தி. ஒரு பிரதேசத்தின்  புவியமைப்புத்  தொடர்பாக முழுமையான ஒன்றிணைந்த ஆய்வுகள் இன்றி அல்லது பெறப்பட்ட ஆய்வு முடிவுகளை கலந்தாலோசிக்காமல் உருவாக்கப்பட்ட கட்டுமானங்கள் நீர் வழிந்தோடும் வழிகளை அடைத்துவிட்டன. இதனால் நீர் வெளிவழிய இடமில்லாத குறிப்பிட்ட சில இடங்களில் தேங்கி விடுகிறது. இதற்கு உரிய அனுமதி பெறாமல் கட்டிடங்களை கட்டியவர்களே பொறுப்பு அல்லது அவ்வாறான அனுமதிகளை ஏதோ ஒரு காரணத்துக்காக வழங்கிய உள்ளூராட்சி சபைகளும் இதற்குப் பொறுப்பு. இது ஒர் உரையாடல்.

இரண்டாவது உரையாடல்- மழையும் புயலும் வெள்ளப் பெருக்கும் இயல்பானவை;வழமையானவை. பருவப் பெயர்ச்சி மழை பெய்யும் காலங்களில் புயல் உருவாகும். வெள்ளம் பெருகும்.இழப்புக்கள் ஏற்படும். இயற்கை அதன் போக்கில் இயங்கும்.ஆனால் இது சமூக வலைத்தளங்களின் காலம் என்பதால் எல்லாரும் எல்லாவற்றையும் பற்றி அபிப்பிராயம் கூறுவார்கள். இதனால் இயல்பான இயற்கையான ஒன்றிற்கு இருக்கக்கூடிய இயல்பான முக்கியத்துவத்தை விட அதிகரித்த முக்கியத்துவத்தைக் கொடுத்து ஒரு டிரெண்ட் ஆக்கி விடுகிறார்கள். இயல்பான ஒன்று இயல்பற்றதாக உருப்பெருக்கிக்  காட்டப்படுகிறது என்ற ஓர் உரையாடல்.

மூன்றாவது உரையாடல்-. இயற்கை தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். வெள்ளம் பெருகி வழிந்தால்தான் பூமியின் நச்சுக்கள் கழுவப்படும். நிலத்தடி நீர் புதுப்பிக்கப்படும். எனவே மழையும் வெள்ளமும் வேண்டும். குறிப்பிடத்தக்க அளவுக்கு புயலும் வேண்டும். இயற்கை தன்னை புதுப்பித்துக் கொள்ளவேண்டும். ஆனால் பூகோள அளவிலான மாற்றங்களால் இயற்கை அனர்த்தங்கள் வழமைக்கு மாறாக  அதிகரிக்கும் ஆபத்து உண்டு. இதில் முன்னெச்சரிக்கையாக தற்காப்பாக இருந்தால் சரி. ஆகக் கூடிய பட்சம் முன்னேற்பாடாக இருந்து சேதத்தின் அளவையும் இழப்ப்பின் அளவையும் குறைத்தால் சரி.

இந்த உரையாடல்களை ஆழமாக ஆராய்வது  இக்கட்டுரையின் நோக்கமன்று.மாறாக தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம். நிலம் நீர் கடல் காற்று முதலான சுற்றுச் சூழல் எனப்படுவது தாயகத்தைக் குறிக்கும். தாயகம் எனப்படுவது ஓரு மக்கள் கூட்டத்தைத் தேசமாக வனையும் அடிப்படை மூலக்கூறுகளில் ஒன்று. எனவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது ஒரு தேசியக் கடமை. ஒரு தேசிய இனம் அதன் தேசிய நோக்கு நிலையில் இருந்து தாயகச் சூழலை பாதுகாக்க வேண்டும். எனவே எதிர்காலத்தை அபிவிருத்தியை  திட்டமிடும் பொழுது ஒரு தேசிய நோக்குநிலை இருக்க வேண்டும்.

தேசிய நோக்குநிலை எனப்படுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அந்த மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கும் புத்திஜீவிகள் துறைசார் நிபுணர்கள் போன்றவர்களால் உருவாக்கப்படுகிறது. ஆனால் கடந்த சில தசாப்தங்களாக யாழ் நகரப் பகுதிகள் உட்பட தமிழர் தாயகத்தில் இவ்வாறு தேசிய நோக்கு நிலையிலிருந்து பெரும்பாலான விடயங்கள் திட்டமிடவில்லை. முதலாவது காரணம் யுத்தம். இரண்டாவது காரணம் யுத்தத்தின் விளைவுகள்.

ஆழமாகப் பார்த்தால்  யுத்தமும் ஒரு காரணம் அல்ல.  யுத்தம் போராட்டத்தின் விளைவு. போராட்டம் இன ஒடுக்குமுறையின் விளைவு. எனவே இங்கு மூல காரணம் ஒடுக்குமுறைதான். இன ஒடுக்குமுறை எனப்படுவது இனப்படுகொலை எனப்படுவது ஒரு தேசிய இனம் ஒரு இனமாக வாழ்வதற்குரிய அடிப்படைகளை அழிப்பதுதான். எனவே ஒரு இனத்தை ஒடுக்குபவர்கள் அபிவிருத்தியையும் ஒடுக்குமுறையின் ஒரு கருவியாகவே பயன்படுத்துவார்கள். 

குறிப்பாக யாழ்ப்பாணம் கடந்த 40 ஆண்டு காலப்பகுதிக்குள் கிட்டத்தட்ட ஆறு தடவைகளுக்கு மேல் வெவ்வேறு தரப்புகளால் ஆளப்பட்டிருக்கிறது. 1986ஆம் ஆண்டு  வரையிலும் அது அரசபடைகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. 86ஆம் ஆண்டிலிருந்து குறிப்பாக யாழ் பொலிஸ் நிலையத்தில் மீதான தாக்குதலைத் தொடர்ந்து பெருமளவுக்கு அது புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அங்கிருந்து தொடங்கி இந்திய இலங்கை உடன்படிக்கை வரையிலும் புலிகள் இயக்கமே நிர்வாகத்தை பெருமளவுக்கு கண்காணித்தது. அதன்பின் இந்திய இலங்கை உடன்படிக்கை. அதிலிருந்து தொடங்கி கிட்டத்தட்ட 1989 வரையிலும் நிர்வாகம் அமைதி காக்கும் படை மற்றும் இலங்கை அரசாங்கத்தின் கைகளில் இருந்தது. அமைதிகாக்கும் படை வெளியேறிய பின்னிருந்து 95 ஆம் ஆண்டு வரையிலும் மறுபடியும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

96 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மறுபடியும் யாழ்ப்பாணம் அரச படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதிலிருந்து தொடங்கி நோர்வேயின் அனுசரணையுடனான சமாதானம் வரையிலும் அது அரச படைகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. எனினும் நிர்வாகத்தின் மீது புலிகள் இயக்கத்தின் தலையீடு ஏதோ ஒரு விகிதமளவுக்கு இருந்தது. சமாதான உடன்படிக்கையோடு அந்த தலையீடு மேலும் அதிகரித்தது. அதற்குப்பின் நாலாம் கட்ட ஈழப்போர். 2009ஆம் ஆண்டு ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் யாழ்ப்பாணம் உட்பட பெரும்பாலான தமிழ்ப் பகுதிகள் அரசபடைகளின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன. அதிலிருந்து தொடங்கி கடந்த பத்தாண்டுகளில்தான் யாழ்ப்பாணம் தொடர்ச்சியாக ஒரே அதிகாரத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகிறது.

கடந்த 40 ஆண்டுகளில் ஆறு தடவைகளுக்கு மேல் அது மாறி மாறி வெவ்வேறு தரப்புகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்திருக்கிறது. இக்காலகட்டங்களில் ஒரு தரப்பின் பூரணமான கட்டுப்பாட்டுக்குள் யாழ்ப்பாணம் இருந்தது என்று கூற முடியாது. மேற்கத்திய ஊடகங்கள் வர்ணித்ததை போல பகலில் அதை ஒரு தரப்பு ஆண்டது இரவில் மற்ற  தரப்பு ஆண்டது என்ற நிலைமைதான் பெரும்பாலும் காணப்பட்டது.

1996 ஆம் ஆண்டிலிருந்து விடுதலைப்புலிகளின் கட்டுப்பாடு ஒப்பீட்டளவில் குறைந்த போதிலும்கூட மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் பிரதிநிதிகளின் கட்டுப்பாடு என்பது அப்பொழுது பலமாக இருக்கவில்லை. எனவே தமிழ்தேசிய நோக்கு நிலையிலிருந்து அல்லது குறைந்தபட்சம் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் நோக்கு நிலையிலிருந்து தமிழ் பகுதிகளில் அபிவிருத்தியை திட்டமிடுவது என்று சொன்னால் அதற்கு கடந்த பத்தாண்டு காலம் போதாது என்பதே உண்மை. எனவே வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு தரப்புகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த ஒரு பிரதேசத்தில் நீண்டகால நோக்கில் திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான அபிவிருத்தியை முன்னெடுப்பது கடினம். அதன் விளைவே தொகுக்கப்பட்ட ஒட்டுமொத்த தரிசனமற்ற கட்டுமானங்கள் ஆகும்.

இந்நிலையில் தமிழ்தேசிய நோக்கு நிலையிலிருந்து தமிழ்ப் பகுதிகளை முழுமையாகத் திட்டமிடும் ஒரு நிலைமை இப்பொழுதும் கூட முழுமையாக ஏற்படவில்லை என்பதே உண்மை.அண்மையில் கோப்பாய் பிரதேச சபைத் தவிசாளருக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். தென்னிலங்கை மைய நோக்கு நிலையிலிருந்து தமிழ் பகுதிகளின் மீது திணிக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் அனேகமாக தாயக நோக்கு நிலைக்கு எதிரானவை. இதற்கு யாழ்ப்பாணத்தில் ஆளுனர் ஆட்சிக்காலத்தில்  மேற்கொள்ளப்பட்ட ஒரு கட்டுமானத்தை உதாரணமாக காட்டலாம்.

யாழ் பழைய பூங்கா வீதியில் அமைந்திருக்கும் பழைய பூங்கா ஒரு மரபுரிமைச் சொத்து. காலனியாதிக்கத்தின் மிச்சம். இங்கிருந்த பெரிய விருட்சங்கள் லட்சக்கணக்கான வெளவால்களுக்கு புகலிடங்களாக இருந்தன. ஆனால் ஆளுநர் சந்திரசிறியின் காலத்தில் இந்த மரங்களில் ஒரு பகுதி வெட்டித் தறிக்கப்பட்டு நிர்வாகக் கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டன. தவிர ஒரு பகுதியில் ஒரு நவீன பூங்கா உருவாக்கப்பட்டது. அங்கிருந்த முதுபெரும் விருட்சங்கள் தறிக்கப்பட்டு அவற்றுக்கு பதிலாக வழமையாக பூங்காக்களில் காணப்படும் மரங்கள் சில நடப்பட்டன. ஒரு மரபுரிமை சொத்தாகிய பழைய பூங்காவை நிர்வாகக் கட்டிடத் தொகுதியாக மாற்றும் உரிமையை ஆளுநர் எங்கிருந்து பெற்றார்?அதற்குள் ஒரு புதிய பூங்காவை உருவாக்கும் உரிமையை அவருக்கு யார் கொடுத்தது?

அதைவிட முக்கியமாக உலகம் முழுவதிலும் சிறிய பெரிய நகரங்களில் நகர்ப்புற சிறு காடுகள் உருவாக்கப்படுகின்றன. அதாவது நகரத்தின் கட்டட நெரிசலுக்கு மத்தியில் பச்சையாக காணப்படக்கூடிய பகுதிகளை பாதுகாத்து நகர்ப்புறச் சிறு காடுகளை உருவாக்கி வருகிறார்கள். குறிப்பிட்ட நகரத்தின் சுவாசப்பை என்று கூறத்தக்க அச்சிறிய காடுகளில் வாழும் உயிரினங்களும்  பாதுகாக்கப்படுகின்றன. இவ்வாறான உலக வளர்ச்சியின் பின்னணியில் லட்சக்கணக்கான வெளவால்களுக்குப் புகலிடமாக இருந்த பழைய பூங்காவை அழித்து புதிய பூங்காவையும் நிர்வாக கட்டிடங்களையும் ஒரு ஆளுநர் உருவாக்கியிருக்கிறார்.

அதாவது ஒருமக்கள் கூட்டம் அதன் தாயகம் என்று கருதும் ஒரு நிலப்பரப்பில் தேசிய நோக்கு நிலையிலிருந்து அபிவிருத்திகளை திட்டமிடாவிட்டால் இப்படித்தான் நடக்கும்.அதற்குத் தேவையான தேசிய விழிப்பை ஏற்படுத்தி தமிழ் மக்களை அதன் பங்காளிகளாக்க வேண்டும். எனவே தமிழ் மக்களுக்கு அபிவிருத்திக்கான கூட்டு அதிகாரம் வேண்டும்.அதே சமயம் கீழிருந்து மேல் நோக்கிய மக்கள் மயப்பட்ட சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும். இல்லையென்றால் இயற்கைக்கும் அபிவிருத்திக்கும் இடையில் பொருத்தமான ஒரு சமநிலையைக் கண்டுபிடிப்பது கடினம்.  #வெள்ளக்கதைகள் #]புரேவிப்புயல் #நிலாந்தன் #வெள்ளம்

 

https://globaltamilnews.net/2020/154302/

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி கிருபன்......!  😁

  • கருத்துக்கள உறவுகள்

நான் போன முறை  போயிருந்த போதும் சும்மா அடித்த மழைக்கே நல்லூர் பின் வீதி வெள்ளக் காடாய் இருந்தது ....நான் அந்த தண்ணிக்குள்ளால நடந்து லிங்கம் கூல் பாரில் ஜஸ் கிறீம் குடிக்க போனேன்😋 ...இப்ப நினைக்க அருவருப்பாய் இருக்குது ...நல்ல காலம் சொறி, சிரங்கு வரவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ரதி said:

நான் போன முறை  போயிருந்த போதும் சும்மா அடித்த மழைக்கே நல்லூர் பின் வீதி வெள்ளக் காடாய் இருந்தது ....நான் அந்த தண்ணிக்குள்ளால நடந்து லிங்கம் கூல் பாரில் ஜஸ் கிறீம் குடிக்க போனேன்😋 ...இப்ப நினைக்க அருவருப்பாய் இருக்குது ...நல்ல காலம் சொறி, சிரங்கு வரவில்லை 

சொறி சிரங்கு வர நல்லூரடியில் வெள்ளநீரில் நடக்க வேண்டியதில்லை. காரணம் இது தான்: 
 யாழ்ப்பாணத்தில் கட்டாக்காலி நாய்கள் அதிகம் உலவும் இடம் நல்லூரடி. இந்த நாய்களின் கழிவுகளில் கொழுக்கிப் புழுக்களின் முட்டைகள் இருந்து, நல்லூரடி மணலோடு சேரும். அதில் இருந்து வரும் கொழுக்கிப் புழுக்கள் அங்கே அங்கப் பிரதட்சணை செய்யும் அடியார்களின் தோலைத் துளைத்து சொறிதலை உருவாக்கும். 

யாழ்ப்பாணத்தில் தற்போது கோவிட் பரிசோதனைகளுக்கு தலைமை வகிக்கும் பேராசிரியர் கண்ணதாசன் பல ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வு செய்து கண்டறிந்த தகவல் இது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.