Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சில ஞாபகங்கள் -9

Featured Replies

ஞாபகங்கள் ஒரு வகையில்  விசித்திரமானவை. அண்மையில் நடந்த சம்பவமொன்று மறந்து போகிறது.கடைத்தெருவில் சந்திக்கிற மனிதர் ஒருவர் என்னை ஞாபகமிருக்கிறதா என கேட்கிறபோது அசடு வழியவேண்டிவருகிறது. எங்கேயோ பார்த்த முகம் போல இருக்கும். பெயர் நினைவுக்கு  வராமல் அடம் பிடிக்கும். முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னர் நடந்த சில சம்பவங்கள் இப்போதும் அச்சொட்டாக  ஞாபகத்தில் இருக்கிறது.  பல நூறு மனிதர்களையும் சில ஆயிரம் சம்பவங்களையும்  கடந்திருப்போம். சிலது ஒட்டிக்கொள்கிறது. சிலது தொலைந்து போகிறது. எது தொலையும் எது தங்கிநிற்கும் என்பதற்கு ஏதேனும் எளிய சூத்திரம் இருக்கிறதோ தெரியாது. இது இன்னும் மறையாமல் எங்கையோ ஓரமாக  ஒட்டிக்கொண்டிருகிற இரண்டு  பள்ளிகால  கனவுகள்  பற்றியது.

சின்ன வயதில்   நண்பர் கூட்டம் ஒன்று  இருந்தது. பொதுவாக  எல்லோருக்கும் இருந்திருக்க கூடும். அவர்கள் பெரும்பாலும் வாழ்க்கை போகிற போக்கில் பயணிப்பார்கள்.  ஏறினாலும் இறங்கினாலும் பெரிதாக அதலட்டிக்கொள்வது கிடையாது. நாளையை பற்றி யோசித்து இருக்கிற   பொழுதை சிதைக்க தெரியாதவர்கள். முடிந்தவரை அந்த அந்த பொழுதுகளுக்கு வஞ்சகம் செய்யாதவர்கள்.  சின்ன சின்ன  பகிடிக்கும் வாய் கிழிய சிரிப்பார்கள். கப்பல் கவிண்டாலும் கணக்கில் எடுக்க மாட்டார்கள்.   அவர்களோடு  கூடி இருக்கிறபோது சந்தோசங்கள் தானாக வந்து சேரும்.
 
முன்பெல்லாம் ஊருக்குள் வீரசாகசங்கள் நடப்பதுண்டு. ஓடாமல் நிக்கிற  லொறியை இடுப்பில்  கட்டி இழுப்பது, ஓடுகிற  ட்ரக்டரை நெஞ்சில் ஏற்றுவது  செங்கட்டியை கையால் உடைப்பது என அது பலவகைப்படும்.அவ்வப்போது ஆணழகன் போட்டியும் நடந்தேறும். எண்ணெய் பூசிய ஜம்பவான்களின்    தசைகள் மேடையேறி  தனித்தனியே நடனமாடும். இவைகளை பார்த்த எங்கள்  நண்பர் ஒருவருக்கும்  பயில்வான் ஆகிற ஆசை வந்து தொலைத்தது.
 
அப்போதெல்லாம் பருத்தித்துறையில் பயில்வானாக மாற இரண்டு வழிகள் மட்டுமே இருந்தது. அதற்கு மேலும் இருந்திருக்க கூடும். ஒன்பதாம் வகுப்பு பாடத்திட்டத்தில் சேர்க்காததால்  எங்களுக்கு தெரிந்திருக்க  வாய்ப்பில்லை.  
 
சோதி அண்ணாவின் கராட்டி வகுப்புகள் வீரபாகுவின் கட்டடத்தில் மேல் தளத்தில் நடக்கும்.  பச்சை முட்டையை வெறும் வயித்தில் குடித்த பிறகு சோதி அண்ணாவிடம் கராட்டி பழகுவது ஒரு வழி.
 
சாண்டோ துரைரத்தினம் வீட்டில் பொடி பில்டிங் (body building) நடக்கும். இரவு முழுக்க தண்ணீரில் ஊற வைத்த கடலையை அவிக்காமல் சாப்பிட்ட பிறகு சாண்டோ அண்ணா  வீட்டில் பாரம் தூக்குவது மற்றைய வழி.
 
முட்டை விலை கட்டுபடியாகாது என்பது தெரிந்தது. பிறகு யோசிக்க என்ன இருக்கிறது.  சண்டோ வீட்டுக்கு போவதென நண்பர்கள் ஒருமனதாக முடிவுக்கு வந்தார்கள்.  கூட்டமாக சவனாய்க்கு போனோம்.  சாண்டோ துரைரத்தினம் வீட்டு கதவை தட்டனோம்.  பயில்வான் ஆகிற ஆசையை சொன்னோம். எங்களை பார்த்த சாண்டோவுக்கு சிரிப்பு வந்தது. முதலில் போய் படிக்கிற வேலையை பாருங்கள் பிறகு பயில்வான் ஆகலாம் என்றார். நாங்கள் விடுவதாக இல்லை.
 
அதிஸ்டம்  சொல்லிகொண்டா வருகிறது? அப்படிதான் சாண்டோவின் இரண்டாவது மகன் ஹரி அறைக்குள் இருந்து எட்டி பார்த்தான்.   ஹாட்லியில் ஒன்றாக படிக்கிற கதையை சொல்லி எங்களுக்கும் பழக்கிவிடும்படி  அப்பாவிடம் சிபார்சு செய்தான் . வேறு வழியில்லாமல் சாண்டோவுக்கு  எங்களையும் ஆட்டத்தில்  சேர்க்கவேண்டியதாயிற்று.
 
அடுத்த நாள் பின்னேரம் ரியுசனில் பாதிநேரம் இருந்தோம் மிகுதி நேரம் சாண்டோவின் வீட்டில் பயில்வான் பயிற்சியில் இருந்தோம். முதல் நாள்  பயிற்சி ஆரம்பமானது. கால்களும் கைகளும் இறுகிய பிறகுதான் பாரம் தூக்கமுடியுமென சொன்னார். முதலில்  ஐயாயிரம்  தரம் இருந்து எழும்ப சொன்னார். இலக்கங்களில் கொஞ்சம் திருகுதாளங்கள் செய்து பார்த்தோம்.  அப்படியிருந்தும் யாராலும்  ஆயிரம்  இலக்கத்தை கூட   தாண்ட முடியவில்லை. சரி நாளைக்கு வந்து ஐயாயிரம்  தரம் இருந்து எழும்பிய பிறகு பயிற்சியை தொடங்கலாம் என திருப்பி  அனுப்பி வைத்தார்.  அதற்கு பிறகு சாண்டோ வீட்டுக்கு மட்டுமல்ல சவனாய்க்கு போவதையே நிறுத்திகொண்டோம்.  இப்படியாக  பயில்வான் கனவு ஒரே நாளில்  கலைந்தது.
 
இன்னுமொரு சம்பவம்.
எண்பத்து மூன்றின் கடைசி அல்லது எண்பத்து நான்கின் தொடக்கமாக இருக்க வேண்டும். வயதும் பக்குவமும் கொஞ்சம் கூடியிருந்தது. நாட்டின் நிலமைகள் வேறு திசையில் பயணிக்க தொடங்கியிருந்தது. பெரும்பாலான எங்கள் வயதுக்காரின் எண்ணங்களில் பெரும்  மாற்றம் தொற்றிக்கொண்டது. சிரிப்புகள் குறைந்து போனது. சீரியஸ் பேச்சுகள்  வந்து சேர்ந்தது. ஜனநாயகமா அல்லது மாக்சீசமா ஈழத்தின் ஆட்சி என்பதுவரை அது நீண்டிருந்தது.  
 
அது ஒரு வழமையான சனிக்கிழமை. (CME) சிம்ஈயில் பகல் நேர வகுப்புகள் இருக்கும். புத்தகமும் கையுமாக வீட்டில் இருந்து புறப்பட்டேன்.  இனி புத்தகமும் நானும் வீடு திரும்பப்போவதில்லை என்பது தெரியும். யாருக்கும் அது பற்றி மூச்சுவிடவில்லை. இந்தியாவிற்கு பயிற்சிக்கு போவதற்கான எல்லா ஏற்பாடுகளும் முடிவாகியிருந்தது.
 
வெயில் மறையாத பின்நேர பொழுதொன்றில்
மணற்காடு கடற்கரையை சென்றடைந்தோம். மீனவர் வாடியொன்றை ஒதுக்கியிருந்தார்கள். ஓட்டியும் வள்ளமும் வந்து சேரும்வரை அங்கு இருக்கும்படி சொல்லப்பட்டிருந்தது. கூட இருக்கிற மற்றையவர்கள் ஏற்கனவே தெரிந்தவர்கள்.   நாட்டை விட்டு போவது பற்றிய எந்த பதட்டமும் இருக்கவில்லை. யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டு வந்தது பற்றிய சின்ன  உறுத்தல் மட்டும் உள்ளுக்குள் கனன்றுகொண்டிருந்தது. அப்பாவின்  சைக்கிளை வீட்டில் கொண்டு போய் சேர்க்காமல்  இடைநடுவில் போட்டு விட்டு வந்ததை சொல்லி ஒருவர் வருத்தப்பட்டார்.  திருநாவுக்கரசு மாஸ்டர் வகுப்பில் அரைவாசி பேரை காணாமல் தலையில் கைவைக்கபோகிறார் என சொல்லி இன்னுமொருவர்  சிரிக்க வைத்தார்.  நேரங்கள் நகர்ந்தது.
 
வானம் இருட்ட தொடங்கியிருந்தது. காற்று கொஞ்சம் பாலமாக வீசியது. அது மணலை காவிவந்து விசிறி எறிந்தது.  அலைகள் ஆளுயர எழுந்து இறங்கியது. இடியும் மின்னலும் அந்த இரவை வெருட்டியது. சோவென பெய்த மழை நிலமையை இன்னும் மோசமாக்கியது. இதுதான் கடலோர வாழ்கையாக இருக்ககூடும் என எங்களுக்குள் பேசிகொண்டோம். உண்மை அதுவல்ல. அதுவொரு பேய் காற்றும் கடல்கொந்தழிப்புமான அசாதாரணமான இரவு என்பது பின்னர் தெரிந்தது.  வள்ளம் இன்றைக்கு புறப்படுவதற்கு சாத்தியமில்லை என்பதை பக்கத்து வாடி மீனவர்கள்  சொல்லிப்போனார்கள்.  அவர்கள் காச்சிய கஞ்சியை  கொண்டு வந்து தந்தார்கள் . மணல் கஞ்சிக்குள் வந்து விழுவதை தடுப்பதுவும் நனையாமல் நிப்பதுவும்  பெரும் சிரமமாக இருந்தது. நித்திரை இல்லாத ஒரு முழு கடற்கரை  இரவை முதன் முதலில்  பார்க்க கிடைத்தது.
 
படிக்க போன பிள்ளைகள் வீடுவந்து சேராததால் பருத்தித்துறையில் சில வீடுகள் அல்லோகல்லோலப்பட்டது . இரவு முழுக்க தேடியும் எந்த சேதியும் இல்லை. அப்போதெல்லாம் படிக்க போனவர் வீடு திரும்பவல்லையென்றால் இயக்கத்தில் ஒரு இலக்கம் கூடியிருக்கும். கொஞ்சம் மினகட்டால் எந்த இயக்கம் என்ற துப்பு மட்டும் வேண்டுமானால்  கிடைக்கும்.
 
வள்ளம் போகாமல் வாடியில் தங்கியிருக்கிற செய்தி எப்படியோ காலையில்  ஊருக்குள் கசிந்தது.  பெரியவர்கள் மணற்காட்டுக்கு படையெடுத்தார்கள்.  கடல் கடந்த  பயிற்சி கைநழுவி போனது. இப்படியாக இந்திய கனவு கைநழுவி போனது.
 
சில ஞாபகங்கள் நிம்மதியையும் சில ஞாபகங்கள் பட்ட வலிகளையும் ஞாபகப்படுத்தும். இது அழகாக படம் பிடித்த உங்கள் ஞாபக ஏடு ரசிக்க கூடியதாகவும் ஒரு வலியை உணர்த்தி செல்வதாகவும் இருந்தது. அனுபவம் மிகப்பெரிய ஆசான் . தொடர்ந்து எழுதுங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, pri said:

முதலில்  ஐயாயிரம்  தரம் இருந்து எழும்ப சொன்னார். இலக்கங்களில் கொஞ்சம் திருகுதாளங்கள் செய்து பார்த்தோம்.  அப்படியிருந்தும் யாராலும்  ஆயிரம்  இலக்கத்தை கூட   தாண்ட முடியவில்லை.

ஒருதரும் மயங்கிவிழவில்லையா! 20 தரம் தோப்புக்கரணம் போடும்போதே மூச்சுவாங்கும்!

18 hours ago, pri said:

வள்ளம் போகாமல் வாடியில் தங்கியிருக்கிற செய்தி எப்படியோ காலையில்  ஊருக்குள் கசிந்தது.  பெரியவர்கள் மணற்காட்டுக்கு படையெடுத்தார்கள்.  கடல் கடந்த  பயிற்சி கைநழுவி போனது. இப்படியாக இந்திய கனவு கைநழுவி போனது.

இப்படி பலருக்கு நடந்திருக்கு. அதுவே சில நண்பர்களின் வாழ்வின் திசையையும் முற்றாக மாற்றியதும் நடந்துள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஆணழகனாக வேண்டும் என்றெல்லாம் நாங்கள் முயற்சி செய்ததில்லை.நம்ம உடல்வாகு பற்றி நமக்குத் தெரியாதா என்ன..... ஆனால் மணிக்கூட்டு கோபுரம் போல நிக்கும் தலைமுடியை சுருட்டுவதற்காக கிளுவந்தடியை தணலுக்குள் வைத்து பின் தலையில் சூடு போட்டுக்கொண்டதுண்டு.....அப்பவும் அது நாணல்போல் சிலநாட்கள் வளைந்து(சுருண்டு அல்ல) பின் s j v செல்வநாயகம் நினைவுத் ஸ்தூபிபோல் நிமிர்ந்து நிக்கும்......!  😂

  • தொடங்கியவர்
22 hours ago, nige said:

சில ஞாபகங்கள் நிம்மதியையும் சில ஞாபகங்கள் பட்ட வலிகளையும் ஞாபகப்படுத்தும். இது அழகாக படம் பிடித்த உங்கள் ஞாபக ஏடு ரசிக்க கூடியதாகவும் ஒரு வலியை உணர்த்தி செல்வதாகவும் இருந்தது. அனுபவம் மிகப்பெரிய ஆசான் . தொடர்ந்து எழுதுங்கள்..

நன்றி nige .

6 hours ago, கிருபன் said:

ஒருதரும் மயங்கிவிழவில்லையா! 20 தரம் தோப்புக்கரணம் போடும்போதே மூச்சுவாங்கும்!

இப்படி பலருக்கு நடந்திருக்கு. அதுவே சில நண்பர்களின் வாழ்வின் திசையையும் முற்றாக மாற்றியதும் நடந்துள்ளது!

நன்றி கிருபன் .

எங்களை பயிற்சிக்கு சேர்த்தாலும் எங்கள் வயதும் உடம்பும் 
அதட்கு சரிப்பட்டு வராது என்பது துரை அண்ணாவுக்கு தெரியும் .
ஐயாயிரம்  தரம் இருந்து எழும்ப சொன்னதெல்லாம் எங்களை வராமல் பண்ணுவதட்கே .

6 hours ago, suvy said:

இப்படி ஆணழகனாக வேண்டும் என்றெல்லாம் நாங்கள் முயற்சி செய்ததில்லை.நம்ம உடல்வாகு பற்றி நமக்குத் தெரியாதா என்ன..... ஆனால் மணிக்கூட்டு கோபுரம் போல நிக்கும் தலைமுடியை சுருட்டுவதற்காக கிளுவந்தடியை தணலுக்குள் வைத்து பின் தலையில் சூடு போட்டுக்கொண்டதுண்டு.....அப்பவும் அது நாணல்போல் சிலநாட்கள் வளைந்து(சுருண்டு அல்ல) பின் s j v செல்வநாயகம் நினைவுத் ஸ்தூபிபோல் நிமிர்ந்து நிக்கும்......!  😂

நன்றி suvy .

எங்களுக்கு தலைமயிரோட  சாகசம் செய்ய முடியாது .
கொஞ்சம் வளந்தாலும் தேடி அடிக்க ஒரு வாத்தியார் இருந்தார் .

  • கருத்துக்கள உறவுகள்
"படிக்க போன பிள்ளைகள் வீடுவந்து சேராததால் பருத்தித்துறையில் சில வீடுகள் அல்லோகல்லோலப்பட்டது . இரவு முழுக்க தேடியும் எந்த சேதியும் இல்லை. அப்போதெல்லாம் படிக்க போனவர் வீடு திரும்பவல்லையென்றால் இயக்கத்தில் ஒரு இலக்கம் கூடியிருக்கும். கொஞ்சம் மினகட்டால் எந்த இயக்கம் என்ற துப்பு மட்டும் வேண்டுமானால்  கிடைக்கும்.
 
வள்ளம் போகாமல் வாடியில் தங்கியிருக்கிற செய்தி எப்படியோ காலையில்  ஊருக்குள் கசிந்தது.  பெரியவர்கள் மணற்காட்டுக்கு படையெடுத்தார்கள்.  கடல் கடந்த  பயிற்சி கைநழுவி போனது. இப்படியாக இந்திய கனவு கைநழுவி போனது."
 
எங்கள் ஊர் பக்க பெடியள் பெட்டையளுக்கு இது ஒரு சாவாலாகவே இருந்தது 
எந்த இயக்கத்துக்கு போயிருப்பார்கள் என்பதை இலகுவாகவே யூகிக்கலாம் 
அதனால் யாருடைய வண்டி எந்த கரையில் இருந்து எப்போ கடல் இறங்கும் 
என்பது பலருக்கும் தெரியும் அங்கே நேரடியாகவே சென்று விடுவார்கள் 

இப்படி பலமுறை அடிபட்டு வந்தவர்கள் மாணவ- மாணவிகள் ஈப்பிஆர்எல்வ் 
உடன் பேசி இங்கிருந்து ஏற்கமுடியாது என்பதால் அவர்களை மயிலிட்டிகரையில் இருந்து 
ஏற்ற ஏற்பாடு ஆகி இருந்தது. அவர்கள் காலையில் பள்ளிக்கு போவதாக வெளிக்கிட்டு 
யாரும் பள்ளி போகவில்லை ஒரு 10 மணிபோலதான் விஷயம் கசிய தொடங்கியது 
12 மணிக்குத்தான் தேட தொடங்கினால் அப்போதே அவர்கள் யாழ்ப்பாணம் போய்விட்டார்கள் 
போனவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி இந்தியா போய் சேர்ந்த நினைப்பு. 

இங்கிருந்தவர்கள் திட்டம் கொஞ்சம் வித்தியாசம் என்பதை சுதாகரித்துக்கொண்டு 
அவர்கள் மயிலிட்டி போய் சேரும்முன்னரே இவர்கள் போய் இருந்தார்கள் 
மறுநாள் எல்லோரையும் கூட்டி வந்தார்கள் ... அன்று இரவு முழுக்க எமக்கு நல்ல கொண்டாடடம் 
நித்திரையும் இல்லை அவர்களுக்காக காத்திருந்தோம். இப்போ எல்லோரும் வயது வந்த பிள்ளைகளுடன் 
வாழ்கிறார்கள் நாம் ஒன்று சேர நேர்ந்தால் அதை பற்றி பேசி சிரித்து மகிழ்வதுண்டு. 

டெலோ டீசல் பவுசர் கடத்தியது டோபி (இனிப்பு) லொறி கடத்தியது எல்லாம் 
எம்மால் மறக்கமுடியாத பெரும் நகைசுவை கொண்ட நிகழ்வுகள் காரணம் இரண்டும் 
எமது ஊருக்குத்தான் வந்து சேர்ந்தது ..அது வந்த பின்பு எமது ஊரில் நடந்த நிகழ்வுகள் 
மறக்க முடியாதவை 

  • கருத்துக்கள உறவுகள்
On 27/12/2020 at 16:24, pri said:

ஐயாயிரம்  தரம் இருந்து எழும்ப சொன்னார்.

இது உடற்பயிற்சி ஆசான்களின் உத்திகளில் ஒன்று.  சாண்டோ துரைசிங்கம் (சிவன் கோவிலுக்கு முன்னால் இருந்த சாராயக் கடை உரிமையாளர்), தன்னிடம் பயிற்சி எடுக்க வந்த மாணவனுக்கு இப்படிச் சொல்லியிருந்தார். “கிணத்திலை தண்ணி அள்ளி இரண்டு வாளிகளுக்குள்  நிழப்பி எடுத்துக் கொண்டு போய் தோட்டத்துக்குள் இருக்கிற மரங்களுக்கு குறைஞ்சது 100 தடவைகளாவது தண்ணி ஊத்து. பிறகு பயிற்சியைப் பார்ப்பம்”

பருத்தித்துறையில் சாண்டோ மணியத்தாரை விட்டு விட்டீர்களே. வயது 50ஐ தாண்டியிருக்குமா?

  • தொடங்கியவர்
13 hours ago, Maruthankerny said:

இந்தியாவுக்கு போகேலாமா மாட்டுப்பட்ட   பெரிய கூட்டம்  இருக்குது போல . 
சில விசயங்களை இப்ப நினைக்க சிரிப்பாகவும் சந்தோசமாகவும் இருக்கும் .

நன்றி maruthankery ,உங்கள் நினைவுகளையும் பகிர்ந்தமைக்கு .

  • தொடங்கியவர்
9 hours ago, Kavi arunasalam said:

இது உடற்பயிற்சி ஆசான்களின் உத்திகளில் ஒன்று.  சாண்டோ துரைசிங்கம் (சிவன் கோவிலுக்கு முன்னால் இருந்த சாராயக் கடை உரிமையாளர்), தன்னிடம் பயிற்சி எடுக்க வந்த மாணவனுக்கு இப்படிச் சொல்லியிருந்தார். “கிணத்திலை தண்ணி அள்ளி இரண்டு வாளிகளுக்குள்  நிழப்பி எடுத்துக் கொண்டு போய் தோட்டத்துக்குள் இருக்கிற மரங்களுக்கு குறைஞ்சது 100 தடவைகளாவது தண்ணி ஊத்து. பிறகு பயிற்சியைப் பார்ப்பம்”

பருத்தித்துறையில் சாண்டோ மணியத்தாரை விட்டு விட்டீர்களே. வயது 50ஐ தாண்டியிருக்குமா?

நன்றி கவி அண்ணா .

நீங்கள் சாண்டோ மணியம் என்பது மணியம் மாஸ்டரோ தெரியவில்லை .

எனக்கே ஐம்பதை தாண்டிவிட்டது . கட்டாயம் ஐம்பதை தாண்டிஇருக்கும் . 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, pri said:

சாண்டோ மணியம் என்பது மணியம் மாஸ்டரோ தெரியவில்லை .

மணியம் மாஸ்டர் வேறு.

சாண்டோ மணியத்தாரை உங்களுக்குத் தெரியாவிட்டால் உங்கள் வயது 50ஐத் தாண்டி 60க்குள் என்று கணக்குப் போட்டிருந்தேன். கணக்கு சரியாக வந்திருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவுகள்.நீங்கள் வேறு திரிகளிலும் எழுத வேணும்.நன்றி.

  • 1 month later...

வாசிக்கத்தூண்டும் பதிவு . வாழ்த்துகள்

  • 2 months later...
  • தொடங்கியவர்
On 30/12/2020 at 06:03, சுவைப்பிரியன் said:

நல்ல பதிவுகள்.நீங்கள் வேறு திரிகளிலும் எழுத வேணும்.நன்றி.

நன்றி சுவைப்பிரியன் .
 
On 4/2/2021 at 19:10, nige said:

வாசிக்கத்தூண்டும் பதிவு . வாழ்த்துகள்

நன்றி nige.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.