Jump to content

வெப்பச் சூத்திரம்: சக்கரவர்த்தி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது


 

வெப்பச் சூத்திரம்: சக்கரவர்த்தி

ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

veppa_soothiram.jpg?resize=747%2C1024&ss

“எனது பெயர் ஷாரிகா. எனது அம்மாவின் பெயரைச் சொன்னால் என்னைத் தெரிந்து கொள்ள இன்னும் உங்களுக்கு இலகு. விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர் மருத்துவர் ராஜினி திரணகமவின் மகள். ஷாரிகா திரணகம.”

பேச்சின் ஊடாக உணர்வுகளைப் பகிர நான் தெரிந்து வைத்துக் கொள்ளவில்லை.

மௌனம்தான் எனது ஊடகம்.

மௌனத்தின் ஊடாக மட்டுமே ஊணர்வுகளை பகிரத் தெரியும்.  புத்தர்தான் மௌனத்தை எனக்கு கற்றுக் கொடுத்திருந்தார். இரண்டாயித்தி ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் மௌனப் பிரசங்கம் செய்த சோனாலியில், இலைகளின் சலனம் இல்லாத அதே அரச மரத்தடியில் என்னை மட்டும் தனியே அமர்த்தி, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு மௌனப் பிரசங்கம் செய்தார்.

என் முன்னே இருக்கும் கதிரையில்  ஷாரிகா திரணகம அமர்ந்திருந்தார். . நான் மொழி அறியாதவன். கதைக்கும் வல்லமை அல்லாதவன். பேச்சின் ஊடாக உணர்வுகளை பங்கிடத் தெரியாத குறையாளி. புத்தரைக் துணைக்கழைத்து மௌனித்து விடுகிறேன்.

‘உன் அம்மாவை அவர்கள் சுட்டுக்கொன்ற போது நீ பாலகியாகத்தான் இருந்திருப்பாய். மனித உரிமைகள் பற்றிப் பேசுவது தமிழீழத்தில் அவ்வளவு பெரிய குற்றமா?

பல்கலைக்கழகத்துக்கு விரிவுரையாற்றச் சென்ற உன் அம்மாவை அதே பல்கலைக்கழகத்துக்கு முன்பு மனித உரிமைகள் பற்றிப் பேசிய குற்றத்துக்காகச் சுட்டுக் கொன்றவர்களைக் காலம் சபிக்கும். முலை சப்பிப் பால் குடிக்கக் காத்திருந்து, பசியில் நீ வாடி வதங்கி இருப்பாயே.. உன் பசியின் துயரத்தை எப்படி நான் தாங்கிக் கொள்வேன்.’

எனக்குப் பேசத் தெரியவில்லை. எனது மொழி மறுக்கப்பட்டது. காற்று வீசவில்லை. அரச இலைகள் சலனமற்றுத் தொய்வில் இருந்தது. மௌனம்…!  என் கண்களில் இருந்து நீர் வழிந்தது. உன் கண்களும் கலங்கியது. உனது துயத்தின் வலியை, எனது அழுகை உனக்குத் தந்திருக்க வேண்டும். எமது துயரத்தின் வலியை நாம் மட்டும்தானே அழுது தேற்ற வேண்டும். புத்தனின் மௌனம் பேசியது.

எடின்பரோப் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறையின் ஆராய்ச்சி மாணவியான ஷாரிகா திரணகம, கண்டங்கள் கடந்து இந்த யுத்த சந்நியாசியைத் தேடி வந்திருந்திருக்கிறார். அவருடைய மானுடவியல்  ஆய்வுக்குச் சிறுவர் போராளிகள் பற்றிய என்னுடைய அனுபவமும் தேவைப்படுகிறதாம்.

‘அன்று வியாழக்கிழமை. செப்ரெம்பர் இருத்தியொன்று. பல்கலைக்கழகத்தில் உடற்கூற்றியல் விரிவுரையை முடித்துவிட்டுச் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்ட உன் அம்மாவைப் பின் தொடர்ந்தவன் உன் அம்மாவின் மண்டையில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். உன் அம்மாவின் மரணத்தை உறுதிப்படுத்த இறந்து விழுந்த பின்னும், இன்னும் இரண்டு தடவைகள் மண்டையில் சுட்டான். மானுடவியலை ஆராய உன் துயர் ஒன்றே போதாதா? மானுடவியலை ஆராய்ந்து ஆராய்ந்து முடிவில் எதனை நாம் கற்போம்?’

குரற்பதிவு இயந்திரத்தை அழுத்தி என் முன்னே வைத்த ஷாரிகா “நீங்க இயக்கத்தில் சேரும் போது எத்தனை வயது” என்றார்.

“பதினாறு.”

நான் சம்பவங்களைச் சொல்ல ஆரம்பித்தேன்..

வவுனியா நகர சபை மண்டபப்  பக்கமாகத் துவக்கு வெடிக்கிற சத்தம் கேட்டது. சின்ன இடைவெளிக்கு பின்பு பூந்தோட்டப் பக்கமாக இருந்து அடுத்தடுத்ததாக இரண்டு வெடிச் சத்தங்கள். வெடிச் சத்தத்தை வைத்து ஆர்மிக்காரன் சுட்டதா இயக்கங்கள் சுட்டதா எனக் கண்டுபிடிக்க முடியாது.

அரிசி மூட்டை மீது பதட்டமாகக் குந்தியிருந்தான் யூட். இன்று இரவு எப்படியாவது தப்பி விட வேண்டும்.

நகர சபைப் பக்கமிருந்து கேட்ட வெடிச் சத்தம் ஆர்மிக்காரன் சுட்டது. பூந்தோட்டப் பக்கமிருந்து சுட்டது இயக்கம், என்பதை யூட் ஊகித்துக் கொண்டான். நகரசபை மண்டபத்தில் ராணுவம் முகாமிட்டிருந்தது. வவுனியா நகரம் இருள ஆரம்பித்ததும் வேட்டுச் சத்தங்கள் கேட்பது இயல்புதான். வேட்டுச் சத்தங்களூடாக ராணுவமும் இயக்கமும் பேசிக் கொள்கின்றார்கள்.

ராணுவத்தின் ஒற்றை வேட்டின் பொருள் நாங்கள் முகாமை விட்டு ரோந்துக்குப் புறப்படுகின்றோம். பதிலுக்கு இரண்டு வேட்டுக்களைத் தீர்த்து இயக்கங்கள் நகருக்குள் நிற்கின்றோம், வந்தால் உங்களுக்கு ஆபத்து என்று இயக்கம் சொல்கிறது. கடைக்கு அரிசி வாங்க வருபவர்கள் முதலாளியிடம் அப்படித்தான் சொன்னார்கள்.

இப்போதெல்லாம் வவுனியா நகரம் இருட்ட முன்னமே பயத்தில் உறங்கப் போய்விடும். இரவானதும் ஆர்மியோ, இயக்கமோ  நகருக்குள் நடமாடுவார்கள். இவனை உள்ளே வைத்து முதலாளி கடையை பூட்டிவிட்டு ஆறு மணிக்கெல்லாம் கிளம்பி விடுவார்.

பெரிய கடை சந்துக்குள் இருக்கும் கண்ணகி சாப்பாட்டுக்கடை, பஸ் ஸ்டான்ட் முன்பிருக்கும் அனலாஸ் கூல் பார் எல்லாம் அரிசிக் கடை முதலாளியின் சகோதரங்களின் வியாபாரம்தான்.

அரிசிக் கடையின் பின் பக்கம் ஒற்றைத் தட்டிக் கதவு. அவன் மூத்திரம் பெய்யப் போகும்போது மட்டும் அதனைப் பயன்படுத்துவான். வேட்டுச் சத்தம் அதிகம் கேட்டால் மூத்திரம் கூடப் பெய்யாமல் சாக்குப் பையின் மேல் சுருண்டு கிடப்பான்.

கடையின் முன் பக்கம் காலடிச் சத்தம் கேட்டது.

கல்லா மேசைக்கு மேற்பக்கமாக சுவாமிப் படங்கள் மாட்டியிருக்கும் சுவரில் இருக்கும் கடிகாரம் இயங்கும் சத்தம் கேட்டாலும் இருட்டுக்குள் நேரத்தை அவனால் பார்க்க முடியவில்லை. எட்டு மணியிருக்கலாம் என அனுமானித்துக் கொண்டான்.

மற்றைய சகோதரங்களின் கடைகளுக்குப் போய் வரவுசெலவுகளையும் மேற்பார்வை பார்த்து, தம்பியின் கண்ணகி சாப்பாட்டுக் கடையில் இரவுச் சாப்பாட்டையும் முடித்து விட்டுத்தான் வருவார். எப்படியும் பத்து மணியாகும் முதலாளி வர. அவர் வரும் முன் எப்படியாவது தப்பி இயக்கத்துக்கு ஓடி விட வேண்டும்.

கடையின் முன் பக்கம் கேட்கும் காலடிச் சத்தம் யாருடையது. இருட்டுக்குள் மெல்ல நகர்ந்து பலகைத் தட்டிக் கதவுகளுக்குள் காதை வைத்துக் கவனிக்கின்றான். ஆர்மிக்காரர்களாகவும் இருக்கக் கூடாது. முதலாளியாகவும் இருக்கக் கூடாது.

செருப்பணிந்த கால்களின் நடமாட்டம். ஆர்மிக்காரங்கள் இல்லை. முதலாளி வர இன்னும் நேரம் இருக்கிறது.  இது இயக்க அண்ணாக்களாகத்தான் இருக்க வேண்டும்.

தாகம் இல்லை. ஆனாலும் தண்ணீர் குடிக்க வேண்டும் போல் உணர்வு. பதட்டமாக இருந்தது. இருட்டுக்குள் தடவாமலேயே தண்ணீர் ஜக்கைக் கண்டுகொண்டான். இருட்டு அவனுக்கு பழக்கம்தானே.

அவனது மார்பின் மேற்பகுதியின் எரிச்சல் தீரவே இல்லை. எச்சிலைத் தொட்டுத் தடவிக் கொண்டான். சின்னஞ்சிறிய முலைக்காம்பு பிய்ந்து தொங்குகின்ற மாதிரி எரிச்சல். நாவில் எச்சிலைக் கூட்டி விரலால் வழித்து முலைக்காம்பில் திரும்பவும்  தடவிக் கொண்டான்.

தோட்டத்துக்கே திரும்பிப் போகலாம் என்றால் அது அவ்வளவு லேசுப்பட்டதில்லை. மதவாச்சிக்கோ, அநுராதபுத்துக்கோ அல்லது ஏதாவது ஒரு சிங்கள ஊருக்கோ போய்விட்டால் அங்கிருந்து கொழும்புக்குப் போய் பொகவந்தலாவைக்குக்கு போய்விடலாம். பகலில் மட்டும்தான் பஸ் ஓடும். இரவெல்லாம் ஊரடங்குச் சட்டம்.  கையில் காசு கூட இல்லை. இயக்கத்துக்குப் போகலாம் என்றால் அதன் நடை முறை எப்படி என்றும் தெரியவில்லை.

எது எப்படியோ இன்று இங்கிருந்து எப்படியும் தப்பிவிட வேண்டும்.

தேயிலைக் கொழுந்தில் பட்டு வருகின்ற குளிர்ந்த காற்றின் சுவாசம் அவனுக்குத் தேவையாக இருந்தது. ஆறு மாதங்களாக அதை அவன் இழந்திருந்தான்.

பிறந்து வளர்ந்த சூழலையும் சகோதரங்களையும் அம்மா அப்பாவையும் கூட்டாளிகளையும் பிரிந்து அந்நியப்பட்ட  இடத்தில் தனிமையில் கிடத்தல் எத்தனை பெரிய துயரம் தெரியுமா?

கடைக்கு அரிசி வாங்க வருபவர்கள் எவரிடமும் அவன் பேசிக் கொண்டதில்லை.

“என்ன முதலாளி தோட்டக்காட்டுப் பெடி போல கிடக்கு. என்னடா தம்பி. கண்டியா, பதுளையா.”

யூட் முதலாளியைப் பார்த்தான்.

“ஐயா கேக்கிறார். சொல்லனடா.”

“இல்லீங்க ஐயா. பொகவந்தலாவ.”

“என்ர வீட்டு வேலைக்கு ஒரு பொம்புளப் பிள்ள வேணும். உனக்கு அக்கா தங்கச்சி யாராவது இருக்கிறாங்களேடா?”

யூட் வாய் திறக்கவில்லை. தராசுக்குக் கீழ் ஒரு கிலோ படிக்கல் இருந்தது. அதனை அவன் பார்த்தான். உச்சக் கோபத்தில் படிக்கல்லைத் தூக்கிக், கேட்டவன் மண்டையில் ஒரு அடி போட்டால் போதும். தேங்கிக் கிடக்கும் நூற்றாண்டு காலக் கோபம் வெடித்து விடும் போலிருந்தது.

பொகவந்தலாவைக்கு யாழ்பாணத்தில் இருந்து படிப்பிக்க வந்த சொர்ணலிங்கம் வாத்தியார்தான், யூட்டை இந்த அரிசிக் கடைக்கு வேலைக்கு ஆள் வேண்டும் என்று கூட்டி வந்திருந்தார். சொர்ணலிங்க வாத்தியாரின் அண்ணன்தான் அரிசிக் கடை முதலாளி.

“ஏன்டா தம்பி. நீ பொகவந்தலாவையிலதானே படிப்பிக்கிறே. கடையில வேலை செய்யத் தோட்டக்காட்டுப் பெடியன் ஒருத்தன் கிடைச்சா.. கூட்டி வாடாப்பா. தனியாளா சமாளிக்க கஸ்டமா கிடக்கு.” என்று தம்பியிடம் சொல்லி வைத்திருந்தார். முதலாளிக்கும் வவுனியாவுக்கும் வியாபார உறவு மட்டும்தான். குடும்பம் எல்லாம் யாழ்ப்பாணம் மூணாம் குறுக்குத்தெருவில் இருக்கின்றார்கள்.

லெட்சுமி தோட்டத்தில் இருக்கின்ற சின்னப் பையன்கள் எல்லாம் மாரியம்மன் கோயிலுக்கு காமன் கூத்து பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்த அன்றுதான் யூட்டை வவுனியாவுக்கு சொர்ணலிங்கம் வாத்தியார் கூட்டிக் கொண்டு கிளம்பினார்.

தோட்டத்தை விட்டுக் கிளம்பும்போது புதிய உலகம் பற்றிய கனவுகள் அழகாகத்தான் இருந்தன. வெற்றுடம்பில் சணல் சாக்கு பட்டது போல் கனவு இப்போது சுணைக்கிறது.

மனிதர்களிடத்தில் வறுமை, இயலாமையைத்தான் முதலில் திணிக்கிறது. நூற்றாண்டு கால வறுமை. தமிழகத்தில் இருந்து பெருந்தோட்டச் செய்கைக்காகக்  கொண்டு வரப்பட்ட காலத்தில் இருந்து, நூற்றாண்டுகளாக தொடரும் இயலாமை.

“என்னடா ராமசாமி.. உன்ர மகனை என்னோட அண்ணயோட அரிசிக் கடைக்கு வேலைக்கு கூட்டிப் போகட்டே?”  ராமசாமியை விடச் சொர்ணலிங்கம் வயதில் சிறியவர்தான். ஆனாலும் மலைநாட்டை விட, யாழ்ப்பாணம் உயர்வான இடத்தில் அல்லவா புவியியல் அமைப்பில் இருக்கிறது.

“இல்லீங்க சாமி. அவன் படிக்கிற புள்ள.”

மறுப்பது போன்று ராமசாமியால் பாசாங்குதான் செய்ய முடிந்தது. புத்திர சோகத்தைக் காட்டிலும் வறுமையின் கோரப்பிடியில் இருந்து மீள்வது பெரும் பாடு.

“லீவுக்கு யாழ்ப்பாணம் போட்டு வரேக்க  பெடியனோட சம்பளத்த அண்ணனிட்ட வாங்கிக்கொண்டு உன்ர கையில குடுத்திடுறன்.”

காலங்காலமாகத் தன் மீது வறுமையைத் திணித்து சாபமிட்ட கடவுள்களிடம் வஞ்சம் பாராட்டக் கூட விரும்பாத வெள்ளந்தி மனசுக்கார மக்கள் குவிந்து கிடக்கின்றார்கள், மலையெங்கும்.

ஓராண்டுக்கும் மேலாகி விட்டது யூட் பொகவந்தலாவையில் இருந்து வவுனியாவுக்கு வந்து.

ஆர்மியின் நடமாட்டம் முடிந்ததும் இயக்கங்கள் நகருக்குள் எங்கேயாவது நிற்பார்கள். அவர்களிடம் கேட்டால் இயக்கத்தில் சேர்த்து விடுவார்கள். அது மட்டுமல்லாது மாரியாத்தா, அவனை இயக்கத்தில் சேர்த்து விடுவாள் எனவும்  நம்பினான்.

கடைக்கு வெளியே கேட்கின்ற காலடிச் சத்தங்கள் இயக்கக்காரங்களுடையதாகத்தான் இருக்க வேண்டும். காதைக் கதவில் வைத்துப் பார்த்தான், சிங்களக் குரல்கள் ஏதும் கேட்கிறதா என்று. இல்லை. முதலாளி வர முன்னம் ஓடி விட வேண்டும்.

அரிசிக்கடையின் பின் பக்கம் இருக்கும் கக்கூஸ் கூரையில் ஏறி மதிற்சுவர் வழியே நடந்து போனால் மடத்தடித் தெரு வரும்.  பெரிய ஆஸ்பத்திரியின் பின் பக்கம் . தெருவில் இயக்க அண்ணன்களின் நடமாட்டம் இருக்கும் அவர்களிம் போய் “அண்ணே, நான் யக்கத்தில சேரணும்ணே” என்றால் இயக்கத்துக்குக் கூட்டிப் போவார்கள்தானே. இதை விட வேறென்ன நடை முறை.

இரவுகள் நிம்மதிக்கானவைகளாக அவனுக்கு இருப்பதில்லை. பல்லுக்காயம் பட்ட அவனது மார்பு எரிந்து கொண்டே இருந்தது. போன மாதம் நடப்பதற்குக் கூடக் கடினப்பட்டான். அவனது தொடைகள் பற்களால் கடித்து  காயமாகி இருந்தது. இரத்தம் கண்டி, நீல நிறத்தில் திட்டுத் திட்டாகப் படர்ந்திருந்தது.

மனிதர்கள் ஏன் இப்படி இருக்கின்றார்கள் என்பதற்கான கேள்வி அவனிடம் இல்லை.

கண் இமை கொட்டாமல் நான் சொல்வதைப் பதிவு செய்தும், கேட்டும் கொண்டிருந்தார் ஷாரிகா. இடைமறித்து என்னிடம் ஏதோ கேட்கத் தோன்றி இருக்க வேண்டும். சுண்டு விரலை நிமிர்த்தி ஒரு நிமிடம் என்பது போல் சைகை செய்தார். கதை சொல்வதை நிறுத்திவிட்டு நான் அவரைப் பார்த்தேன்.

“நீங்கள் மட்டக்களப்பு. ஆனால் சம்பவம் வவுனியாவில் நடக்கிறது. மலையகம் பொகவந்தலாவைக்கும் போய் வருகிறது கதை. இதில் உங்கள் பகுதி எது. நீங்கள் யூட் இல்லைத்தானே?”

ஷாரிகாவின் சந்தேகம் சரியானதுதான். குரற்பதிவு இயந்திரத்தின் மூலையில் சிகப்பு புள்ளி வெளிச்சம் தொடர்ந்து ஒளிர்ந்து கொண்டே இருந்தது.

ஆம் இது எனது கதையில்லை. யூட்டின் கதைதான். யூட் என்பது அவனது இயக்கப் பெயர். அவனது அம்மா, அப்பா வைத்த பெயர் என்னவென்று எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தும் காலப் போக்கில் நான் மறந்தும் இருக்கலாம். இருபது ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. யூட்டை நான் சந்தித்தது வேலணைக்குப் பக்ககத்தில் இருக்கின்ற புளியங்கூடல் இயக்க முகாமில்….

“ரெயினிங் எடுக்க இந்தியாவுக்கு போகணும் மச்சான்.”

யூட் இந்தியா போய் ஆயுதப் பயிற்சி எடுப்பதில் பெரிதும் ஆர்வமாக இருந்தான். இந்திய ரெயினிங் என்றால் அப்படி ஒரு கௌரவம். ஆனாலும் உள்ளூரிலேயே துப்பாக்கி சுடுவதில் நாங்கள் தேர்ச்சி பெற்றிருந்தோம்.

ஊர்காவற்துறையில் இருந்துதான் நானும் யூட்டும் ஊர் காவல் செய்வோம்.

காரைநகர் கடற்கோட்டையில் இருக்கும் கடற்படை ரோந்துப் படகு இயங்கத் தொடங்க, யூட் தனது துப்பாக்கியால் ஒற்றை வேட்டை வெடிக்க வைப்பான். சற்று இடைவெளி விட்டு நான் என் துப்பாக்கியை இயக்கி, இரண்டு வேட்டுக்களைத் தீர்ப்பேன்.

அது எச்சரிக்கை வேட்டு. இயக்கம் கரையில் காவலுக்கு நிற்கின்றது என்பதைக் கடற்படைக்குத் தெரிவிக்கும் பணி எங்களுக்கானது. இரவு எட்டு மணியிலிருந்து மறு நாள் காலை வரை அவ்வப்போது ரோந்துப் படகு கிளம்பும் போதெல்லாம், எங்கள் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்க்கும்.

“திருச்சிக்கு பக்கத்தில கோட்டத்தூர்தான் எங்க சொந்த ஊரு தெர்மா. கொல்லி மலை பக்கமாம். பொகவந்தலாவ மாரியம்மன் கோயில்ல ஆடுற காமன் கூத்து ஒன்னுமே இல்லையாம். கோட்டத்தூர்ல கூத்து எப்படித் தெர்மா இருக்கும்? எங்க ஊர பத்தி அம்மாச்சி கதை கதையா சொல்லும்டா மச்சான்.”

ஆறு மாதமாக யூட் சொல்லும் கதையைத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இருட்டுக்குள் எங்கள் பார்வை கடற்கோட்டை முகாமைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் தூங்காமல் இருக்கப் பேச்சுத் துணை வேண்டி இருக்கிறது.

“அப்படியெண்டா இந்தியாக்கு ரெயினிங் போனா திரும்பி வர மாட்டாய்?”

“அதெப்படி. கோட்டத்தூருக்கு என்னோட அம்மாச்சியே போனதில்ல. அங்க யாருயிருக்காங்கண்ணு எங்க அம்மாச்சிக்கே தெர்யாது.”

“மறுகாகெப்படி  உனக்கவ கோட்டத்தூரப் பற்றி கதைகதையா சொல்றது.”

“அம்மாச்சிக்கு அவக அப்பா சொன்னது. அம்மாச்சி சொன்னத வச்சி என்னோட பூர்வீக கிராமத்த பார்கணும்ணு ஆச. நூறு வரிசத்துக்கு முன்னம் கண்டிக்கும் தேயில தோட்டத்துக்கு வேலைக்குப் போன சின்னசாமி கவுண்டரோட மக வயித்து பேரன் நான். அவகளோட வம்சத்துக்காரங்க எங்கனாச்சும் தட்டுப்படுறாங்களானு பார்கணும். என் ஊரு எப்பவும் பொகவந்தலாவ லெட்சுமித் தோட்டம்தான்.”

நாங்கள் மறைந்திருந்து நோட்டமிடுவது, துறையோரம் இருக்கும் ஆலமரத்தடியில். நாங்கள் மறைந்திருந்திருந்து நோட்டமிடுவதைப் போல கடற்கோட்டையில் இருந்தும் காரைநகர் கடற்படை முகாமில் இருந்தும் எங்களது நடமாட்டத்தைக் கடற்படை நோட்டமிடும். அவர்களிடம் இரவில் பார்க்கும் வல்லமையுள்ள பைனாகுலர் உள்ளது. எங்களிடம் உள்ளது வெளிச்ச நடமாட்டத்தை மட்டும்தான் காட்டும்.

காரைநகர் துறையின் பக்கமிருந்து இரண்டு பொட்டு வெளிச்சம். கணப்பொழுதில் சுதாரித்துக் கொண்டு என்னை விழ வைத்துவிட்டு யூட்டும் தரையோடு படுத்தான். பட்பட்டென இரண்டு வேட்டுச் சத்தம். ஆல மரத்தில் எங்கள் நெற்றியின் உயரத்தில் இரண்டு ரவைகள் பாய்ந்தது, ஆலம் பட்டைகள் சிதறுவதை உணர முடிந்தது. அச்சம் கொண்டு ஆலமரத்தில் கூடு கட்டியிருக்கும் காக்கைள் திசைகெட்டுப் பறந்தன. சினைப்பர் ஷாட்.

“ரெண்டு பேரோட மண்டயையும் நேவிக்காரன் சிதறடிச்சிருப்பான். தப்பிட்டம்.”

இரண்டு பேரும் மெல்ல ஊர்ந்து, சாக்கடை வடிகால் கானுக்குள் இறங்கிக் குந்திக் கொண்டோம்.  மெலிஞ்சிமுனைப் பக்கமிருந்து துப்பாக்கி வெடிக்கிற சத்தம் கேட்டது. மெலிஞ்சிமுனை கிறீஸ்து ராஜன் கோயிலில் இரவு நேரத்தில் புளட் இயக்கப் பெடியன்கள் படுப்பதற்காகச் செல்வார்கள். அவர்கள்தான் எச்சரிக்கைக்காகச் சுட்டிருக்க வேண்டும்.

படபடப்பு அடங்கவில்லை. சிகரெட் புகைக்க வேண்டும் போல் இருந்தது. முகாமை விட்டுக் கிளம்பும் போது பொறுப்பாளர் தேவாவிடம் இரண்டு சிகரெட்டுகளும் தீப்பெட்டியும் வாங்கி வைத்திருந்தேன். யூட்டுக்குப் பழக்கமில்லை. பொக்கற்றுக்குள் கசங்கியிருந்த சிகரெட் ஒன்றை திமிர்த்திக் கொண்டே,

“அருந்தப்பு. தொலைஞ்சிருப்பம் ரெண்டு பேரும்” என்றேன்.

“ஆமா மச்சான். இயக்கத்தில சேர்ந்ததோட என்னோட விருப்பம் நடக்காமலேயே போயிருக்கும்.”

“இந்தியா போய் உன்னோட சொந்தக்காரங்கள தேடிப் பார்க்கிறதா?”

“அதும்தான். அத விட முக்கியமான வேறொண்ணு இருக்கு.”

“மலையகத்தையும் தமிழீழத்தோட இணைக்கிறதா? அதுக்கு நீ ஈரோஸ் இயக்கத்திலதான் சேர்ந்திருக்க வேணும்.”  உயிர் அச்சத்துக்கு மத்தியிலும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. யூட்டுக்கு சிரிப்பு வரவில்லை. எனது நையாண்டிக்கு நான் மட்டும்தான் சிரித்தேன்.

புகையை நெஞ்சுக்குள் நிரப்பிக் கொண்டேன். சிகரெட் நுனி நெருப்பு, வெளியில் தெரியா வண்ணம் இரு  கைகளைக் குவித்தே புகைத்தேன்.

“ரெலோக்காரனுகளும் புலிகளும் ஒண்டு. யாழ்ப்பாணிகள்.  நீ மலையகத்திலும், நான் மட்டக்களப்பிலும் இலங்கை ராணுவத்தை எதிர்த்துச் சண்டை போடாமல் எதுக்கு இங்க காவலுக்கு நிக்க வேணும். இண்டைக்கு நாம செத்திருந்தால்?”

“மச்சான் இண்ணைக்கு நான் செத்திருந்தேன்னா; நீ என்னோட கனவா நெறவேத்துவால்ல.”

“தோட்டக்காட்டனுகளா தமிழீழத்தோட சேர்க்க இந்த எந்த யாழ்ப்பாணிகளோட இயக்கமும் விரும்பாது யூட். சிகரெட் பத்துறீயா? “

என்னிடம் சிகரெட்டை வாங்கிச் சும்மா புகையை இழுத்து ஊதிவிட்டுத் திரும்பக் கொடுத்தான்.

“என்னோட அரிசிக்கடை முதலாளிய மண்டையில போடணும் மச்சான். ஆமாடா மச்சான் நான் இயக்கத்துக்கு வந்தது அதுக்குத்தான். றெயினிங் எடுத்திட்டுப் போய் அந்த கண்டோழி முதலாளி நாய..” யூட்டின் தொண்டை கமறியது. என் கைக்குள் பொத்தியிருந்த சிகரெட்டைப் பிடுங்கி எடுத்துப் புகை உறிஞ்சி ஊதினான்.

அச்சப்பட்டுத் திசைகெட்டுப் பறந்த ஆல மரக் காக்கைகள் திரும்பவும் தங்கள் கூட்டுகளுக்குத் திரும்புவதை உணர முடிந்தது.

“உனக்கு எவனாச்சும் கம்பி அடிச்சிருக்கானுளா மச்சான்?”

“கம்பியா?”

“ஆதாண்டா மச்சான். ஆம்புளய ஆம்புள கற்பழிக்கிறது.” யூட்டின் தூப்பாக்கி தன்னிச்சையா இயங்கி வானத்தை நோக்கி வெடித்துக் கொண்டிருந்தது.

காக்கைகள் இன்னும் அச்சம் கொண்டிருக்க வேண்டும். இப்போது அவைகள் சத்தமிட்டுக் கொண்டே பறந்தன. இப்போது தேமாதா கோயிலுக்குள் இருந்து வேட்டுகள் தீர்க்கப்படும் சத்தம் வந்தது. அந்தப் பக்கமிருந்தும் காக்ககைகள் தறிகெட்டுப் பறக்கின்ற இரைச்சல் கேட்டது.

இரவானதும் ஊர்காவற்றுறையில் கரையோரமாக இருக்கும் பாவப்பட்ட மக்கள் குடும்பமாக வந்து தேமாதா கோயிலில்தான் அடைக்கலமாவார்கள். அவர்களுக்குக் காவலாகச் சில புலிப் பெடியன்கள் காவலுக்கு நிற்பார்கள். அவர்கள் சுட்ட எச்சரிக்கை வெடியாக இருக்க வேண்டும்.

“லயத்தில ஒரு காம்பறாதான். நான் அக்காவு, அம்மாவு அப்பரு அம்மாச்சி யெல்லாருமே ஒண்ணாத்தான் இருக்கோம். குடும்பத்தில கெட்ட கஸ்தம். அம்மஉம் அக்கஉம் கொழுந்து பறிப்பாக. அப்பரு டீ பக்டறிக்கு போவாரு. நல்ல சோறுண்னா மாரியம்மன் திருவிழாக்  காலத்திலதான்.”

கடற்கோட்டைப் பக்கம் ரோந்துப் படகுச் சத்தம் கேட்டது. யூட் பேச்சை நிறுத்திவிட்டு என்னைப் பார்ப்பது இருட்டிலும் தெரிந்தது.

“வீரயா சூரயா” என்றான். ஆமாம் சத்தம் பெரிதாக இருப்பதால் வீரயாசூரயாகவாகத்தான் இருக்க வேண்டும். ஆழ் கடல் ரோந்துப் படகு. இந்தியாவுக்கு பயிற்சிக்குப் பெடியன்களைக் கொண்டுபோகும் பல படகுகளை அழித்து, நூற்றுக்கணக்கான பெடியன்களையும் கடலில் கொன்றழித்திருக்கிறது…

வீரயா சூரயா செல் அடித்தால் பத்துக்கிலோ மீட்டர்கள் வரை போய் விழும்.  எழுவைதீவுக்குப் பின்பக்கமிருந்து அடித்த ஷெல் மண்கும்பானில் விழுந்து வெடித்த சம்பவங்களும் உண்டு.

வடிகால் கானுக்கு வெளியே தலையைத் தூக்கிப் பார்க்க முடியாது. காரைநகர் துறையில் நிற்கும் நேவிக்காரனின் ஸ்னைப்பர் குறி இன்னும் எங்களைத் தேடிக் கொண்டுதான் இருக்கும். 

விடியும் வரை சாக்கடை நாத்தத்துக்குள் குந்தியிருக்கத்தான் வேணும். கணுக்கால் அளவுதான் சாக்கடை நீர் தேங்கிக் கிடக்கிறது. தலை தெரியாமல் குந்தியே இருப்பதால் குண்டிப் பகுதி சாக்கடையில் நனைந்தே இருந்தது.

எங்களுடைய மோட்டார் சைக்கிளை ஆஸ்பத்திரியின் பக்கவாட்டு ஒழுங்கைக்குள்தான் நிறுத்தியிருந்தேன். சாக்கடைக் கான் வழியாகவே தவழ்ந்து தவழ்ந்து ஆஸ்பத்திரி வரை போகலாம். நேரம் எப்படியும் இரண்டு மணியைத் தாண்டியிருக்கும்.

“பொகவந்தலாவையில இருக்கும் வர நான் அழுததே இல்ல மச்சான். எப்போ எங்க லெட்சுமி தோட்டத்தோட வாத்தியாரு என்னய கூட்டியாந்து வவுனியால அரிசிக் கடைக்கு வேலைக்கு உட்டாரோ, தெனம் தெனம் அழுகதான் மச்சான்.”

வீரயா சூரயாவின் சத்தம் மேற்குப் பக்கமாகத் தேய்ந்து கொண்டிருந்தது. எழுவதீவுக்கும் ஊர்காவற்துறைக்கும் இடைப்பட்ட கடற்பகுதி ஆழமற்றது. குறுக்காலே தவிர்த்து மேற்கு நோக்கிக் கனதூரம் நகர்ந்து நயினாதீவையும் சுற்றிக்கொண்டுதான் ஆழ்கடலுக்குள் போகும். இந்தியாவுக்கு பயிற்சிக்குப் பெடியன்களைக் கொண்டு செல்லும் படகுகள் எல்லாம் எட்டு மணிக்கெல்லாம் கிளம்பியிருக்கும். ஒரு மணிக்குப் பிறகு ஏதாவது படகு கிளம்பியிருந்தால் இன்று வீரயா சூரயாவிடம் தப்பவே முடியாது.

மெல்லத் தவழ்ந்து, தவழ்ந்து சந்திவரை வந்து விட்டோம். இப்போது தலையை மேலே தூக்கினாலும் காரைநகர் துறையில் நிற்கும் நேவிக்காரனின் சினைப்பர் மண்டையைச் சிதறடிக்கும். சந்திப்பகுதி, ஆல மரத்தடியை விட மேடானது.

முழங்கால் வலித்தது. சாக்கடைக்குள் சப்பணம் கட்டி அமர்ந்து விட்டேன். முதுகுப் பக்கம் அமுக்கிக் கொண்டிருந்த துப்பாக்கியை உருவிக் கானுக்கை வெளியே கையை மெல்ல நீட்டித் தெருவோரமாக வைத்துவிட்டு, அடுத்த சிகரட்டையும் பற்ற வைத்தேன்.

“அரிசிக்கடை மொதலாளியோட சேர்த்து இன்னொரு ஆம்புள ஓழியையும் மண்டையில போடணும் மச்சான்.” கால்கள் இரண்டுக்கும் இடையில் துப்பாக்கியை ஊன்றிக் கொண்டு உடல் பாரத்தை துப்பாக்கியிலும் மனப்பாரத்தை என்னிலும் இறக்கினான்.

ஆஸ்பத்திரிக்குக் கிட்ட வரவர ஆஸ்பத்திரிக்

கழிவுகளின் மணம் சாக்கடைக்குள் தாங்கொணாக் கொடுமையாக இருந்தது.

தொடர்ந்து பேச முடியவில்லை தொண்டை வறண்டது. லேசான படபடப்பு. பல ஆண்டுகள் கடந்த பின்னும் அந்தச் சாக்கடையின் துர்வாடை உடலெங்கும் வீசியது. உடல் வியர்த்து நசநசப்பாகியது. தண்ணீர் குடித்துவிட்டு என்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும் போல் இருந்து. யாராவது தோள் மீது என்னைச் சாய்த்துக்கொண்டு, தலை தடவி விட மாட்டார்களா என்றிருக்கிறது.

ஏழு கடல்கள் தாண்டியாகி விட்டது. நூற்றுக் கணக்கான தேசங்கள், மலைகள், நதிகள் பல கோடி மனிதர்கள் என்று எத்தனையோ தாண்டியாகி விட்டன. இந்தக் கொடும் போரின் நினைவுகளில் இருந்து விடுபட இன்னும் எங்கே ஓடுவேன்.

“Are you okay? You’re sweating, I can see you’re overwhelmed. Would you like some water? I’m going to stop the recorder for now.”

ஷாரிகா குரற்பதிவு இயந்திரத்தை நிறுத்த முற்பட, இல்லை இருக்கட்டும் என்று கையால் சைகை செய்துவிட்டுத் திரும்பவும் தண்ணீர் குடித்தேன்.

“There is another person who has abused Jude?! I can’t even fathom the pain he’s endured.”  ஷாரிகாவும் தண்ணீர் குடித்தார். அவருக்கும் நெற்றியில் வியர்வைப் பொட்டுகள் அரும்பிற்று.

“நாளைக்கு மைதிலி என்னைக் காதலி புதுப் படம் போடுறன். யூட்டனையும் கூட்டிட்டு வாறீரோ” என கேம்புக்கே வந்து கூப்பிட்டிருந்தார் கருமாரி அண்ணன். 

துறையூர் சந்தியில் கருமாரி வீடியோக் கடை வைத்திருக்கும் அண்ணன், என் மீதும் யூட் மீதும் எப்போதும் அனுதாபமும் பிரியமும் கொண்டிருந்தார். அவருடைய கடைக்குப் பின் பக்கமாக வீடியோ மினித் தியேட்டர் இருக்கும். எதாவது புதுப் படம் போட்டார் என்றால் பார்க்க வரும்படி கூப்பிடுவார்.

அவரோட பேர் என்னவென்று தெரியாது. கடைப் பெயரில்தான் நானும் யூட்டும் அவரைக் கூப்பிடுவோம்.

நேற்றைய  இரவின் அசதி. விடியவிடியச் சாக்கடைக்குள் குந்தியே இருந்த, கால் வலி எல்லாம் சேர்த்து மதியம் பனிரெண்டு மணிக்கே தூக்கத்தைக் கலைத்து விட்டது. என்னாலும் தூங்க முடியவில்லை என்று யூட்டும்தான் சொன்னான்.

“கருமாரி அண்ணன், மைதிலி என்னைக் காதலி படம் போடுறார். உன்னையும் கூட்டி வரச் சொல்றாரு வா போலாம்.” என்னைக்காட்டிலும் படம் பார்ப்பது என்றால் யூட்டுக்குத்தான் கொள்ளைப் பிரியம்.

வேலணை மத்திய கல்லூரிக்கு பின் பக்கம் உள்ள புகையிலைத் தோட்டத்துக்குள்ளால் நடந்து போவதானால் புளியங்கூடல் முகாமில் இருந்து முப்பது நிமிடங்களில் துறையூரில் இருக்கும் கருமாரி அண்ணனோட கடைக்குப் போய் விடலாம்.

புகையிலைத் தோட்டத்துக்குள்ளால் நடந்து கொண்டிருக்கும் போது திரும்பவும் சொன்னான்.

“கண்டாளோழி அரிசிக்கடக்காரன மட்டும் மண்டையில போட்டாப் பத்தாது மச்சான். “

“இன்னும் ஆரோட மண்டையில போடவேணும்?”

“நம்ம கேம் பொறுப்பார் தேவாவையும் மண்டையில போடணும் மச்சான். அந்த ஆம்புள ஓழியும் எனக்கு கம்பி அடிக்கிறான் மச்சான்.”

பதினாறு வயது பெடியனுக்கு இன்னொரு பதினாறு வயது பெடியனால் என்ன ஆறுதல் சொல்ல முடியும் சொல்லுங்கள்…? ஷாரிகா நீங்களே சொல்லுங்கள். மானுடவியலை ஆராய்ந்து கொள்ளும் உங்களால் யூட்டுக்கு ஆறுதல் சொல்ல முடியும் என்று நினைக்கின்றீர்களா ?

மதிய நேரம் என்பதாலோ என்னவோ வீடியோக் கடையில் கூட்டமில்லை. கருமாரி அண்ணன் மட்டும்தான் இருந்தார். என்னைக் கண்ட உடனேயே பன்னிரெண்டுள்ள பிறிஸ்ரல் சிகரெட் பைக்கற் ஒன்றைக் கொடுத்தார். நல்ல மனிதர். அடிக்கடி யாரும் காணாமல் எனக்கவர் தருவது வழக்கம்தான். தந்துவிட்டு “சின்னப் பெடியன்டா நீ. இதெல்லாம் கூடாத பழக்கம்.” என்று வேறு சொல்வார்.

“யூட் இவனோட சேர்ந்து நீயும் பழகிடாத என்ன.”

“இல்லண்ணே எனக்கு பழக்கமில்லெ. எனக்கந்த நாத்தமே புடிக்காது.”

கருமாரி அண்ணன் கடையை விட்டு வெளியே வந்து சுற்றும் முற்றும் பார்த்தார். பின்பு கடையின் உள்ளே போய் எங்களையும் உள்ளே வருபடி கையால் சைகை செய்தார். புரியாமல் அவர் பின்னே போனோம்.

“தம்பியவ.. புங்குடுதீவில இருந்து கொழும்புக்கு என்னோட லொறி போயில கொண்டு போகுது. என்ர மகனுக்கும் உங்களோட வயதுதான்டா. அவன நான் கொழும்புக்கு அனுப்புறன். உந்த போராட்டம் சரிவராதுடா தம்பியவ. நீங்களும் என்ர பிள்ளைகள்தாண்டா. இரவைக்கு இங்க வாங்க. உங்களையும் லொறியில ஏத்தி கொழும்புக்கு அனுப்பி விடுறன். உதுல இருந்து தப்பிப் போய் கண்காணாத தேசத்திலையாதுவது உயிர் வாழுங்கடா.”  கருமாரி அண்ணனின் கண்கள் கலங்கி இருந்தன. அவருடைய ஒவ்வொரு சொற்களிலும் இருந்த அக்கறையும் கனிவும் எங்களால் உணரப்பட்டதா எனத் தெரியவில்லை. நாங்கள் மௌனமாகவே நின்றிருந்தோம்.

“யூட்டைக் கொழும்புக்கு அனுப்புவம் அண்ண. யூட் நீ கொழும்புக்கு போ என்ன.” சொல்லிக் கொண்டே சிகரெட் ஒன்றை உருவிக்கொண்டே கடைக்கு வெளியே வந்தேன்.

“இல்லெ.. நா கொலும்புக்கு போகல்லெ. நா ரெண்டு பேர மண்டையில போடாம இயக்கத்த விட்டு போறதா இல்லெ..” மறுத்தவன். என் பின்னே அவனும் வந்து கடைக்கு வெளியே நின்று கொண்டான்.

“அவங்கள் ரெண்டு பேரையும் நான் மண்டையில போடுறன். கருமாரி அண்ணனோட சொல்லக் கேட்டு கொழும்புக்கு போ. அங்க இருந்து, மலை நாட்டுக்கு போய்…உன்னோட லெட்சுமி தோட்டத்துக்குப் போய் சேர்ர வழியப் பாரு.” கோவமாகத்தான் அவனிடம் சொன்னேன்.

சிகரெட்டை மூட்டுவதற்காகக்  கடையின் பின் பக்கம் வந்தேன். இன்னமும் ஆட்கள் முன் புகைக்கும் தைரியம் வரவில்லை. நான் புகைத்தலைப் பழகி இருக்கிறேன் என்று கருமாரி அண்ணன் கேள்விப்பட்டுத்தான் வாங்கித் தருகின்றாரே தவிர அவர் முன்பெல்லாம் நான் புகைத்ததே இல்லை. யூட்டுக்கு முன் மட்டும்தான்.

கடையின் முன் பக்கம் நின்று கருமாரி அண்ணணுடன் யூட் கதைத்துக் கொண்டிருப்பது கேட்டது. அவனைப் புகையிலை கொண்டு போகும் லொறியில் கொழும்புக்கு அனுப்பி விடுவதுதான் சரி என்று பட்டது. கொழும்பு போனால் எப்படியும் எப்படியும் தட்டுத்தடுமாறியாவது பொகவந்தலாவைக்கு போய் விடுவான். பாவம் அவன். அவனுக்கு சிங்களம் வேறு அத்துப்படி.

வாகனம் ஒன்று வேகமா வந்து வீடியோக் கடையின் முன்  நின்கின்ற கறகற சத்தம் கேட்டது. திடுதிடுவென நான்கைந்து பேர்கள் வாகனத்தை விட்டு அவசரமாக இறங்குகின்ற சத்தம்.

யூட்டிடம் வந்தவர்கள் ஏதோ கேட்பது போன்றும் அவன் பதில் சொல்வது போன்றும் காதில் விழுந்தது. புகைத்து முடிந்த சிகரெட்டின் பில்டர் கட்டையை வீசிவிட்டுக் கடையின் முன் பக்கம் வர எத்தனிக்க…,

டுப்..!

ஒற்றை வேட்டு. பிஸ்டல் வெடிக்கும் சத்தம். அதுவும் பத்தடி நெருக்கத்தில்.. வீடியோக் கடை முன்தான் கேட்டது. மினித் தியேட்டர் சுவரோடு  சாய்ந்து மறைந்து கொண்டேன்.  கண இடைவெளி கடந்து வாகனம் புறப்பட்டுப் போகும் சத்தம். உடல் போர்த்திய பயத்தோடு கடையின் முன் பக்கம் நகர்ந்தேன்.

யூட் மல்லாந்து கிடந்தான்.

அவனது நெற்றிப் பொட்டில் இருந்து இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருந்தது. கண்கள் நிலை குத்தி நின்றன. அவன் நெற்றியை நோக்கித்தான் பிஸ்டல் வெடித்திருக்கிறது.

“யூட்.. யூட்.. மச்சான் டேய்..

எழும்புடா.. ரெண்டு பேர நாம மண்டையி போட வேணும்லா.. எழும்புடா.. யூட்…இந்தியா போய் கோட்டத்தூருல சின்னசாமி கவுண்டரோட வம்சத்து ஆக்களத் தேட வேணும் மச்சான். யூட்..”

யூட் எழும்ப மாட்டான். கொல்லப்பட்டவன் எப்படி உயிர்ப்பான்?

ஷாரிகா, உங்களுக்கு இப்போது கேள்வி எழ வேண்டுமே, யூட்டை கொலை செய்தது யார் என்று?

கருமாரி அண்ணன் எதோ சொன்னார். வார்த்தைகளை உணரும் தன்மையில் நான் இல்லை.  நண்பன் கொல்லப்பட்டு விட்டான் என்பதை மௌனத்தில் உணர எந்த புத்தனாலும்   சொல்லித்தர இயலாது.

சத்தமிட்டு நான் அழுதேன்.

என் வயதை ஒத்த ஆயுதம் தரித்த சிறுவர்களைச் சுமந்துகொண்டு ஒரு வெள்ளை நிற வான் புங்குடுதீவு செல்லும் கடற்பாலம் நோக்கிக் கடும் வேகத்தில் போய்க் கொண்டிருந்தது.

வேகமாகச் செல்லும் அந்த வாகனத்தின் உடைந்திருந்த பக்கவாட்டுக் கதவின் வழியாகத் தலையை நீட்டி என்னை ஒருத்தன் பார்த்தான். நொடிப் பொழுது. விரோதமும் குரோதமுமாக இரு முகங்களும் வன்மத்தை பகிர்ந்தன.

இயற்கை எப்போதும் நியதிக்கு உட்பட்டதுதான். பல கோடி மனிதர்களின் முகங்களுக்குள் என்றேனும், நான் அந்த முகத்தின் சொந்தக்காரனைச் சந்திக்கக் கூடும் என அந்த இயற்கை அப்போதே தீர்மானித்திருக்கக் கூடும்.

ஷாரிகா என் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். குரற்பதிவு மெசினின் இடது மூலை சிகப்பு வெளிச்சம் மின்னிக் கொண்டே இருந்து. ஷாரிகா திரணகமையின் கண்களுக்குள் நிற்கும் கேள்வியை, மின்னிக் கொண்டிருக்கும் சிகப்பு வெளிச்சம் கேட்டது..

“வாழ்வின் நெடும் பயணத்தில், பல கோடி முகங்களுக்குள் அந்த முகத்தை நீ திரும்பவும் பார்த்தாயா?”

கூச்சப் போர்வையை எடுத்து மனம் போர்த்திக் கொள்கிறது. நான் மௌனித்திருந்தேன். இந்தக் கள்ள மௌனத்தைப் புத்தன் எனக்குச்  சொல்லித்தரவில்லை.

 

சக்கரவர்த்தி 

 

சக்கரவர்த்தி கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் எழுத்தாளர். இவரின் ‘யுத்தசன்யாசம்’ என்ற கவிதை நூலும், ‘யுத்தத்தின் இரண்டாம் பாகம்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் இதுவரை வெளியாகியுள்ளன.

https://akazhonline.com/?p=3447

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

படித்ததும் மனம் ரணமாகி விட்டது........எங்களின் வாழ்வியலை இப்படித்தான் திரும்பிப் பார்க்க முடிகிறது......!   😢

நன்றி கிருபன்......! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, கிருபன் said:

“எனது பெயர் ஷாரிகா. எனது அம்மாவின் பெயரைச் சொன்னால் என்னைத் தெரிந்து கொள்ள இன்னும் உங்களுக்கு இலகு. விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர் மருத்துவர் ராஜினி திரணகமவின் மகள். ஷாரிகா திரணகம.”

புலிதான்சுட்டதுக்கு  இன்றுவரை சரியான ஆதாரம் இல்லை ஆனாலும் புலி எதிர்ப்புவாதிகளுக்கும் புலி இல்லை என்ற பின் உருவான மே  18 க்கு பிறகு எதிர்ப்பாளிகளும் திரும்ப திரும்ப சூடம் ஏற்றி அடித்து சத்தியம் செய்வது  இந்த விடயத்தில் தான் இன்னும் ஒரு ஐந்து பத்து வருடங்கள் தான் அதன் பின் முதியோர் இல்லத்தில் இருந்து "ராஜினி திரணகம".......... கொன்னது .................................இழுத்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான் . ஏனென்றால் புலியை எதிர்க்கிறம் என்று வீட்டில் உள்ள பிள்ளைகளை ஒரு தமிழ் வார்த்தை தெரியாமல் வளர்க்கும் அளவுக்கு கோபம் அதுகள் வளர்ந்த பின் எங்கள்  கண்களுக்கு முன்னாலே வேற்று நாட்டவரைபோல் வருஷப்பிறப்புக்கு மட்டும் வாழ்த்துக்காட்  தபாலில் வருகிறதாம் ஆசையாய் வளர்த்த கடைசி மகன் வீட்டுக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகுதாம் .

 

மலையகத்தமிழரின் ஏழ்மை இன்னும் எத்தனை இலக்கியவாதிகளை உருவாக்கப்போகுதோ என்று பயமாய் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதையைப் புனைந்தவர் குழந்தைப் போராளியாக ரெலோவில் இணைந்தவர். 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இணைப்பிற்கு நன்றி ...அந்த காலத்தில் போராட்டங்களுக்கு  போனவர்களுக்கு பல விதமான அனுபவங்கள் இருக்குது ...இந்த கதை எழுதி சில காலங்கள் இருக்குமென நினைக்கிறேன் 

Posted

வாசித்து முடித்த பின் நெஞ்சுக்குள் புகையாக எழும் உணர்வுகளை எழுத்தில் கொண்டு வர முடியுது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, பெருமாள் said:

புலிதான்சுட்டதுக்கு  இன்றுவரை சரியான ஆதாரம் இல்லை ஆனாலும் புலி எதிர்ப்புவாதிகளுக்கும் புலி இல்லை என்ற பின் உருவான மே  18 க்கு பிறகு எதிர்ப்பாளிகளும் திரும்ப திரும்ப சூடம் ஏற்றி அடித்து சத்தியம் செய்வது  இந்த விடயத்தில் தான் இன்னும் ஒரு ஐந்து பத்து வருடங்கள் தான் அதன் பின் முதியோர் இல்லத்தில் இருந்து "ராஜினி திரணகம".......... கொன்னது .................................இழுத்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான் . ஏனென்றால் புலியை எதிர்க்கிறம் என்று வீட்டில் உள்ள பிள்ளைகளை ஒரு தமிழ் வார்த்தை தெரியாமல் வளர்க்கும் அளவுக்கு கோபம் அதுகள் வளர்ந்த பின் எங்கள்  கண்களுக்கு முன்னாலே வேற்று நாட்டவரைபோல் வருஷப்பிறப்புக்கு மட்டும் வாழ்த்துக்காட்  தபாலில் வருகிறதாம் ஆசையாய் வளர்த்த கடைசி மகன் வீட்டுக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகுதாம் .

 

மலையகத்தமிழரின் ஏழ்மை இன்னும் எத்தனை இலக்கியவாதிகளை உருவாக்கப்போகுதோ என்று பயமாய் உள்ளது .

விதைப்பதை தானே அறுவடை செய்யலாம்

நான் அடிக்கடி சொல்வது தான்.

வீட்டில் இருந்தே எல்லாமே ஆரம்பிக்கின்றன. பெற்றோரில் இருந்தே முதல் அடியை எடுத்து வைக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.