Jump to content

குழந்தைகள் தேவையா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

குழந்தைகள் தேவையா?

September 9, 2021

paret.jpg
 

அன்புள்ள ஜெயமோகன்,

2015 அமெரிக்கா வந்த புதிதில் ஒருநாள் அமெரிக்கரான என் மேலாளர் சுமார் 50 வயதைக் கடந்த பெண்மணி. அவர் எப்படி திருமணமான புதிதில் அவரும் அவர் கணவரும் குழந்தைகள் வேண்டாம் என்று முடிவெடுத்ததையும் அந்த முடிவிற்காக உறவினர்கள் எப்படி விமர்சித்தனர் என்று கூறினார். என்னைத் தூக்கிவாரிப் போட்ட தருணங்களில் ஒன்று அது.

என்னுடைய குழப்பம் எல்லாம் பிறகு எதற்காகத் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதே? அதுவரை நான் அறிந்தது இரண்டே திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்வது, இரண்டு மணம்முடித்து பிள்ளை குட்டிகளுடன் வாழ்வது, மிஞ்சிப்போனால் குழந்தைப்பேறை தள்ளிப் போடுவது. இப்படியிருக்க திருமணம் உண்டு, ஆனால் குழந்தைகள் வேண்டாம் என்போரின் மனநிலையை புரிந்துகொள்ள நெடுநாட்கள் ஆகியது. இதுதான் cultural clash  போலும் என்று எண்ணிக்கொண்டேன்.

நம் சூழலில் வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு பிரதான தேவைகளுக்காக குழந்தை பெற்றுக்கொண்டார்கள்.  சிறுவயதில் அம்மாவின் வசைகளெல்லாம் நினைவிற்கு வந்தது “நீ இப்போவே இப்படி பண்ற, கடைசி காலத்துல என்ன உக்காரவச்சு சோறுபோடுவியா?”

இவ்வாறிருக்க முதலாளித்துவ மனநிலையின் நீட்சிதான் மேலைநாடுகளில் குழந்தைகள் தேவையில்லை என்று எண்ணக் காரணம் என்று ஒருவாறு யூகித்தேன். அரசாங்கத்தின் ஓய்வுகால சலுகைகள், உள்கட்டமைப்பு, சார்பின்மை இவையும் பெரும்பங்கு வகிக்கும் என நினைக்கிறேன்.

இணையத்தில் சில நாட்களுக்கு முன் இந்த காணொளியை கண்டேன். காணொளியின் தலைப்பு “எனக்கு குழந்தை தேவையா?” (“Do I want kids?”). காணொளியைப் பார்த்தது முதல் அன்றாடம் மனதிற்குள் குழப்பமே எஞ்சுகிறது. எதற்காக குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்? ஆதலால் உங்களுக்கு எழுதலாம் என்று எண்ணினேன்.

காணொளி கமெண்ட்களில் பலர் உலகம் வெப்பம் அடைந்துவிட்டது,  உலகம் அழிந்து கொண்டிருக்கிறது அதனால் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதே நல்லது என்ற தொனியில் பதிவிடுகிறார்கள். இது முற்றிலும் ஒரு புதிய கோணத்தை காட்டுகிறது. குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று நினைத்துக்கொள்ளும் அளவுக்கு உலகம் நாசமாகி விட்டதா என்ன? இல்லை, இணையம் மக்கள் மனதில் அப்படி ஒரு பதிவை பதித்துள்ளதா?

பல்வேறு காரணங்களால் பெரும்பாலான இந்தியத்தம்பதிகள் ஒரு குழந்தையுடன் நிறுத்திக்கொள்கிறார்கள். என்றாவது ஒரு நாள் இந்தியாவிலும் தம்பதிகள் குழந்தைகள் வேண்டாமென்று முடிவெடுக்கும் காலம் வருமா?

அன்புடன்,
அருண்

***

அன்புள்ள அருண்,

இங்கே என் நட்புச்சூழலிலும் இலக்கியச் சூழலிலும்கூட குழந்தைகள் தேவையில்லை என்னும் முடிவில் இருக்கும் பல தம்பதியினரை எனக்குத் தெரியும். அதற்காக அவர்கள் சொல்லும் காரணங்கள் பல.

அ. உலகம் மோசமானதாக மாறிக் கொண்டிருக்கிறது. சூழியல் அழிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் குழந்தைகளை உருவாக்கி விடுவது தவறு.

ஆ. வாழ்க்கை அனுபவிக்கப்பட வேண்டியது. அதற்குச் சுதந்திரம் தேவை. குழந்தைகள் பொறுப்பும் சுமைகளும் ஆக உள்ளன. தங்களுக்கு இருக்கும் மலையேற்றம் பயணம் போன்ற விசேஷமான வாழ்க்கைமுறைக்கு குழந்தைகள் ஏற்றவை அல்ல.

இ. குழந்தைகள் பெற்று குடும்பமாக ஆவது ஒரு வழக்கமான வாழ்க்கைமுறை. அதில் நம்பிக்கை இல்லை. வேறொரு வாழ்க்கை முறையை விரும்புகிறோம்.

இந்த மூன்று காரணங்களுமே சரியானவை அல்ல.

அ. இந்த உலகம் நூறாண்டுகள் முன்புவரை பெரும்போர்களும் தொற்றுநோய்களும் பஞ்சங்களும் கொண்டிருந்தது. சமூகப்படிநிலையும் அடக்குமுறையும் அடிமைத்தனமும் இருந்தது. இன்று அவற்றிலிருந்து விடுபட்டு ஒரு வசதியான வாழ்க்கையை வந்தடைந்திருக்கிறோம். நாளை இன்னும் மேலான வாழ்க்கையே வரும். இதுவே உண்மை.

உலகம் அழிவைநோக்கிச் செல்கிறது என்பதெல்லாம் சிலவகை சோர்வுவாதப் பார்வைகள் மட்டுமே. நூறாண்டுகளுக்கு முன்பு ஒவ்வொருவரும் சொந்தக் குழந்தைகளின் சாவை பார்த்தாக வேண்டும். ஒவ்வொருவரும் கடும் உடல்வலிகளைச் சந்தித்தாக வேண்டும். இன்று அத்தகைய வாழ்க்கை இல்லை. நாம் நம் பிள்ளைகளுக்கு நம் தந்தையர் தந்ததைவிட மேலான வாழ்க்கையையே அளித்துச் செல்கிறோம்.

இனிவரும் உலகம் எதுவாக இருக்கும், என்ன நிகழுமென்று அறுதியாக எவரும் சொல்லிவிடமுடியாது. அதை முடிவுசெய்வது நம் கையில் இல்லை. நம்மை இயற்கையை, பிரபஞ்சத்தை முற்றறிந்த ஞானிகளாக நினைப்பதன் ஆணவத்தையே உலகின் எதிர்காலம் பற்றிய மிகையான கவலை, உறுதிப்பாடுகளில் காண்கிறோம்.

உலகம் நாளையே அழியலாம், கோடி ஆண்டு நீடிக்கவும் செய்யலாம். நாம் அதில் ஓரளவுக்குமேல் செய்வதற்கு ஒன்றுமில்லை. நாம் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டு பிரபஞ்ச நியதிகளுக்கு வழிவிட்டு நம் இடத்தை உணர்ந்து அமைவதே நம்மால் செய்யக்கூடியது.

இயற்கை மனிதனுக்கு இட்ட ஆணைகளில் ஒன்று குழந்தைகளை பெற்று அடுத்த தலைமுறையை உருவாக்குவது. அதை நிறுத்திக்கொள்ளும் உரிமை எவருக்கும் இல்லை. குழந்தைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்திக் கொள்கிறோம். இயற்கையே தன் கடுமையான ஆயுதங்கள் வழியாக தகுதியுள்ளதை வாழச்செய்யும். ஆனால் அது வலிமிக்க துயர்மிக்க வழி. அந்த துயரை தவிர்ப்பதற்காக நாம் குறைவாக பெற்று அவற்றை தகுதியுடையவர்களாக ஆக்குகிறோம். அவ்வளவுதான்.

ஆ. உலகியலில் உள்ள மகிழ்ச்சி, சாதனை முதலிய எதன்பொருட்டும் குழந்தைகள் பெறாமல் இருப்பவர்கள் ஆயிரம் ரூபாய் கொடுத்து நூறுரூபாய் மதிப்புள்ள பொருட்களைப் பெறுபவர்கள். உலகியலின் முதன்மை இன்பமும் நிறைவும் மக்கட்பேறே. வள்ளுவரைவிட அதை சிறப்பாக எவரும் சொல்லிவிடமுடியாது. அதில் பொறுப்பு, பதற்றம் ஆகியவை உள்ளன. ஆனால் உலகியலின் எந்த களியாட்டுக்கும் வெற்றிக்கும் அதைவிடப் பலமடங்கு பொறுப்பும் பதற்றமும் உண்டு. உலகியல் களியாட்டின் பொருட்டு வெற்றியின் பொருட்டு குழந்தைகளைத் தவிர்ப்பவர்கள் மெல்லமெல்ல வெறுமையை, இழப்புணர்வைச் சென்றடைவார்கள்.

இ. குடும்ப அமைப்புகள் உலகில் பல உள்ளன. பெருந்திரள் குடும்பம் என்னும் அமைப்பே பழங்குடிகளில் உள்ளது. கம்யூன்கள் உள்ளன. ஆனால் அனைத்துக்கும் நோக்கம் ஒன்றே. நன்மக்கள் பேறு. குழந்தைகளுக்குச் சிறப்பான வளர்ச்சிப்புலத்தை உருவாக்குவதே எந்தக் குடும்ப அமைப்புக்கும் அடிப்படை நோக்கம். குழந்தைகளில்லா குடும்பம் என்பது நோக்கம் அற்றது. வேறுவகை குடும்பம் என்றால் வேறுவகை குழந்தை வளர்ப்பு என்றே பொருள்.

ஒருவருக்கு இங்கே பிறந்தமையாலேயே சில கடமைகள் உண்டு. பெற்றோர் பேணல், சுற்றத்தாருக்கு உதவுதல். அந்தப்பொறுப்பை தட்டிக்கழித்தால் குற்றவுணர்வே எஞ்சும். தன்னை நியாயப்படுத்திக் கொள்ளவே மண்டையின் அத்தனை சொற்களையும் செலவிட்டு, எதிர்மறையானவர்களாக ஆகவேண்டியிருக்கும். எதிர்மறை இருப்பு என்பது உடலுடன் இருக்கும் சாவுநிலை.

பிறருக்குச் செய்யும் கடமைகளை தவிர்ப்பவர்கள் நடைமுறையில் தங்களுக்குப் பிறரும் எதுவும் செய்ய வேண்டாமென அறிவிப்பவர்கள்தான். இப்புவியில் அப்படி ஒரு வாழ்க்கை இயல்வதல்ல. அது தனிமையும் வெறுமையும் மட்டுமே கொண்டது.

சரி, குழந்தைகளை தவிர்த்தல் எந்நிலையில் ஏற்கத்தக்கது?

ஆன்மீகத்தின் பொருட்டு மட்டும்தான். அந்நிலையில் நூறு ரூபாய் கொடுத்து ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றை பெறுகிறோம். இழப்புதான், ஆனால் ஈட்டுவது பெரிது.

ஆன்மீகத்தின் வழிகள் மூன்று. கல்வி, சேவை, ஊழ்கம். மெய்ஞானத்தை கற்று அறிதல். எளியோருக்கும் உயிர்களுக்கும் சேவை செய்தல். ஊழ்கத்திலமர்ந்து நிறைவுகொள்ளல். மூன்றுக்கும் துறத்தல் அவசியம். முழுமையான துறத்தல் இலக்கு. ஆனால் சற்றேனும் துறக்காமல் அவற்றை அடையவே முடியாது.

உலகியல் துறப்பே ஆன்மீகத்திற்கான வழி. ஆடம்பரங்களை துறப்பது. வசதிகளைத் துறப்பது. உடைமைகளை துறப்பது. பெருமைகளைத் துறப்பது. அடையாளங்களைத் துறப்பது. அதன் ஒரு பகுதியாக குடும்பத்தையும் குழந்தைகள் பெற்றுக் கொள்வதையும் துறப்பது வருகிறது. காலகாலமாக அந்த வாழ்க்கைமுறை இங்கே உள்ளது

ஆனால் அதை வெறும் விழைவால் அல்லது விருப்புறுதியால் எவரும் இயற்ற முடியாது. அவ்வண்ணம் துறந்து வாழ்வதற்கு சரியான வழிகாட்டுதல்கள் வேண்டும். அதில் பல படிநிலைகள் உள்ளன. ஒவ்வொன்றாக கடக்கவேண்டும். ஒவ்வொரு நிலையிலும் சரியாகத்தான் செல்கிறோமா என நாமே நம்மை மதிப்பிடவேண்டும். நம்மை பிறர் மதிப்பிடவேண்டும். அதற்கான அமைப்பில் நாம் இருக்கவேண்டும்.

துறவு என்பது குடும்பம் போலவே தொன்மையான இன்னொரு வாழ்க்கைமுறை. குடும்பம் போலவே அங்கும் பிரச்சினைகள் உண்டு, நெறிகளும் உண்டு.

ஜெ
https://www.jeyamohan.in/150998/

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குழந்தைகள் தேவையா?
ஓம்!

குழந்தைகள் தேவையில்லை என்று எம் முன்னோர் முடிவெடுத்திருந்தால் இன்று நாங்கள் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேற்குலகத்தில் குழந்தைகள் இல்லையெனில் நிம்மதியான வாழ்வு ஆகும்  என்று கருதுகின்றனர்.

தெற்காசிய நாடுகளில் குழந்தைகள் இல்லாவிட்டால் நிம்மதியில்லாத வாழ்வு என்று ஆகிவிடும் என்று கருதுகின்றனர்.

எமது பிராந்தியங்களில் முதலில் சமூகத்தின் ஏளனம் வசைபாடல்களை குழந்தையற்ற தம்பதிகள்  எதிர் கொள்ளவேண்டும்.

ஆண்களை ஆண்மையில்லாதவன், ஒம்பது என்று நெஞ்சில் ஈரமில்லாமல் ஏளனம் செய்வார்கள், பெண்களை மலடி, மங்கல நிகழ்வுகளுக்கு முன்னால் வர தகுதியில்லாதவள் என்று அழை வைப்பார்கள்.

குழந்தை இல்லாத தம்பதிகள் பல நல்ல காரியங்களுக்கு முன்னால் போக முடியாது அவர்கள் அபசகுனத்தின் அடையாளம் என்று கருதபடுகின்றனர்.

மேற்குலகத்தினர் உனக்கு குழந்தையில்லையென்றால் நீ லக்கி என்கிறார்கள். 

தெற்காசியநாடுகளில் குழந்தை பெறுவது என்பது வயசான காலத்தில் தம்மை கவனிக்க ஒரு வாரிசு வேண்டுமென்பது மிக முக்கியமான குறிக்கோள்களில் ஒன்றாக  இருக்கிறது.

மேற்குலகத்தில் அரசாங்கமே வயதானவர்களை ஆஹா ஓஹோ என்று பார்த்துக்கொள்ளும் என்பதால் வாரிசுகளின் தேவை அவ்வளவு முக்கியத்துவம் இல்லாத ஒன்றாகி போய் விடுகிறது.

எப்படியோ மேற்குலகமும் ஏனைய உலகின் பகுதிகளும் பொருளாதார சிக்கல், குழந்தை வளர்ப்பின் சிரமம் கருதி  குழந்தைகளை பெற்றுக்கொள்ளூம் அளவை கட்டுக்குள் வைத்திருக்கிறது.

 இதை பயன்படுத்தி இந்த இரண்டிற்கும் இடையில் சைக்கிள் கேப்பில் லொறி ஓட்டி 

இந்த ஒன்றே இஸ்லாமிய சமூகத்திற்கு வாய்ப்பாக போய்., ஆளுக்குபத்து பிள்ளை பெற்று உலகில் அதிவேகமாக அவர்கள் சமூகம் ஏனைய இன மக்களைவிட வளர வாய்ப்பாய் போய்விட்டது,

அதுமட்டுமில்லாமல்  அவர்கள் மதமே உலகமெங்கும் ஆளவேண்டும் என்ற வெறியில் உலகின் நிம்மதிய கெடுக்கவும் , உலகத்தை நாங்கள்தான் ஆள போகின்றோம் என்று அவர்கள்  சொல்வதற்கு வசதியும் ஏற்படுத்திகொடுத்துவிட்ட ஒன்றாகி போய்விட்டது.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, valavan said:

மேற்குலகத்தில் குழந்தைகள் இல்லையெனில் நிம்மதியான வாழ்வு ஆகும்  என்று கருதுகின்றனர்.

தெற்காசிய நாடுகளில் குழந்தைகள் இல்லாவிட்டால் நிம்மதியில்லாத வாழ்வு என்று ஆகிவிடும் என்று கருதுகின்றனர்.

எமது பிராந்தியங்களில் முதலில் சமூகத்தின் ஏளனம் வசைபாடல்களை குழந்தையற்ற தம்பதிகள்  எதிர் கொள்ளவேண்டும்.

ஆண்களை ஆண்மையில்லாதவன், ஒம்பது என்று நெஞ்சில் ஈரமில்லாமல் ஏளனம் செய்வார்கள், பெண்களை மலடி, மங்கல நிகழ்வுகளுக்கு முன்னால் வர தகுதியில்லாதவள் என்று அழை வைப்பார்கள்.

குழந்தை இல்லாத தம்பதிகள் பல நல்ல காரியங்களுக்கு முன்னால் போக முடியாது அவர்கள் அபசகுனத்தின் அடையாளம் என்று கருதபடுகின்றனர்.

மேற்குலகத்தினர் உனக்கு குழந்தையில்லையென்றால் நீ லக்கி என்கிறார்கள். 

தெற்காசியநாடுகளில் குழந்தை பெறுவது என்பது வயசான காலத்தில் தம்மை கவனிக்க ஒரு வாரிசு வேண்டுமென்பது மிக முக்கியமான குறிக்கோள்களில் ஒன்றாக  இருக்கிறது.

மேற்குலகத்தில் அரசாங்கமே வயதானவர்களை ஆஹா ஓஹோ என்று பார்த்துக்கொள்ளும் என்பதால் வாரிசுகளின் தேவை அவ்வளவு முக்கியத்துவம் இல்லாத ஒன்றாகி போய் விடுகிறது.

எப்படியோ மேற்குலகமும் ஏனைய உலகின் பகுதிகளும் பொருளாதார சிக்கல், குழந்தை வளர்ப்பின் சிரமம் கருதி  குழந்தைகளை பெற்றுக்கொள்ளூம் அளவை கட்டுக்குள் வைத்திருக்கிறது.

 இதை பயன்படுத்தி இந்த இரண்டிற்கும் இடையில் சைக்கிள் கேப்பில் லொறி ஓட்டி 

இந்த ஒன்றே இஸ்லாமிய சமூகத்திற்கு வாய்ப்பாக போய்., ஆளுக்குபத்து பிள்ளை பெற்று உலகில் அதிவேகமாக அவர்கள் சமூகம் ஏனைய இன மக்களைவிட வளர வாய்ப்பாய் போய்விட்டது,

அதுமட்டுமில்லாமல்  அவர்கள் மதமே உலகமெங்கும் ஆளவேண்டும் என்ற வெறியில் உலகின் நிம்மதிய கெடுக்கவும் , உலகத்தை நாங்கள்தான் ஆள போகின்றோம் என்று அவர்கள்  சொல்வதற்கு வசதியும் ஏற்படுத்திகொடுத்துவிட்ட ஒன்றாகி போய்விட்டது.

 

இப்ப, தமிழ்சிறியர் வந்து, ஒன்பது என்டால் என்னவோய், எண்டு கேட்கப்போறார்.

அடுத்தது,

மேற்குலகில் நீஙகள் சொல்வது போல இல்லை என்றே நிணைக்கிறேன்.

ஜவிஎப் சிகிச்சை, அதுகான தவிப்பு, கடைசியாக, வாடகைத்தாய் முறை, தத்தெடுத்தல் என இஙகும் பல சோககதைகள் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிகவும் நன்றாக எழுதியுள்ளீர்கள்.

3 hours ago, valavan said:

இதை பயன்படுத்தி இந்த இரண்டிற்கும் இடையில் சைக்கிள் கேப்பில் லொறி ஓட்டி 

இந்த ஒன்றே இஸ்லாமிய சமூகத்திற்கு வாய்ப்பாக போய்., ஆளுக்குபத்து பிள்ளை பெற்று உலகில் அதிவேகமாக அவர்கள் சமூகம் 🤦‍♂️

 

3 hours ago, valavan said:

எமது பிராந்தியங்களில் முதலில் சமூகத்தின் ஏளனம் வசைபாடல்களை குழந்தையற்ற தம்பதிகள்  எதிர் கொள்ளவேண்டும்.

இந்தியாவில் பெண்ணுக்கு வயிற்றில் குழந்தை வந்ததும் அதை பெரிய கொண்டாட்டமாக கொண்டாடுவார்கள் தமிழ்படங்களில் பார்த்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மனித குலத்தின் வளர்ச்சிக்கு, முன்னேற்றத்துக்கு உழைத்த எத்தனையோ பெரியவர்கள் திருமணமே செய்யவில்லை, குழந்தைகளும் இல்லை. உலக சனத்தொகை பெருக்கம் பூமியை அழிவு பாதையில் கொண்டு செல்கின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆரம்பத்தில்  குழந்தையற்ற வாழ்க்கை சுதந்திரத்தை உணர்ந்தாலும் காலப்போக்கில் இயந்திரமயமாய் மாறும். சலித்து போகும் . உங்கள்  உயிரணுக்களின்  ஆற்றல் வீணாகும் . தாய்மை முழுமையடையும் .  இருவரின் வாழ்வுக்கான பிணைப்பு  தளர்ந்து  போகும் .மழலைகளுடன் நேரம் செலவிட்டு பாருங்கள்,  வாழ்க்கை அர்த்தமாகும் .  நேரம் போவதே தெரியாமல்.  உங்கள்  தலைமுறை  உறவு , வழித்தோன்றல் உறவு நிலைக்கும்.  (பாட்டன்,  பாட்டி பேரன் பேத்தி தாய் தந்தை  மகன் மகள் )வெளி நாட்டில் உள்ள ஒரு தந்தை  தன் மகவு தூக்கத்தில் "அப்பா அப்பா "என அழைத்ததை  தொலை நோக்கி காடசியில்( skype) பார்த்தும் வேலையை உதறிவிட்டு  ஊருக்கே வந்துவிடடராம். " குழல் இனிது  யாழ் இனிது மழலைச்சொல்   கேளாதவர் ...

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

குழந்தைகள் தேவையா?- கடிதம்

January 3, 2022

அன்பு ஜெ,

நலமா?

உங்களிடம் நான் முன்னரே பகிர்ந்திருக்கிறேன், நானும் குழந்தையே வேண்டாம் என்ற நிலைப்பாட்டுடன் இருந்தேன். எதோ ஒரு தருணத்தில், முடிவே மறுபரிசீலனை செய்து மாற்று முடிவை நானும் எனது மனைவியும் எடுத்தோம். உங்களது பல வாசகர்கள் நான் இருந்த மனநிலையிலேயே இருக்கலாம் அவர்களுக்காக இதை பகிர்கிறேன். இன்று, இந்த முடிவை யாரேனும் எடுக்கிறாரென்றால் அவர் வாழ்வில் ஒரு பெரும் இன்பத்தை இழக்கிறார்கள் என்றே நான் நம்புகிறேன் (நான் குறிப்பிட்டு சொல்வது என்னை போன்று வேண்டாம் என்று சுயமுடிவு எடுவைபவர்களை பற்றியே. ஏதேதோ மருத்துவ காரணங்களால் அவர்களுக்கு விருப்பமிருந்தும் சிலருக்கு இந்த வரம் அருளப்படுவதில்லை, அவர்களை நோக்கி நான் இதை கூறவில்லை என்று தெளிவு படுத்த விரும்புகிறேன்). ஒவ்வொரு நாளும் எனது மகள் செய்யும் சேட்டைகளை காணும்போதும், நெஞ்சில் மிதித்தேறி சிரிக்கும்பொழுதும், இப்படி ஒரு இன்பத்தை முட்டாள்தனமாக இழக்க இருந்தேன் என்ற எண்ணம் வராத நாளில்லை . மறுகணமே அந்த முடிவில் இருந்து என்னை (எங்களை) மடை மாற்றியே அந்த தருணத்திற்கு நன்றி கூறுகிறேன். இதில் வெண்முரசிற்கும் ஒரு பங்கிருக்கிறது என்று நான் முன்னரே உங்களுக்கும் எழுந்திருப்பது நினைவிருக்கலாம்.

நான் என் குழந்தை வேண்டாம் என்று எண்ணினேன்?

குழந்தை ஒரு சுமை பொருளியில் ரீதியாகவும், மனதளவிலும் நான் தீவிரமாக நம்பியிருந்தேன். அதற்கு அளிக்கும் உழைப்பை, பொருளியல் தியாகங்களை நான் வேறு வழியாக (உலகம் சுற்றுவதன் மூலமும், பெரும் பொருள் ஈட்டி சேர்ப்பதன்முலமும் அடையமுடியும் என்று நம்பியிருந்த காலமது). இணையம் ஒரு பெரு வரம்  உங்கள் நம்பிக்கை என்னவாகவே இருந்தாலும் அதையொட்டிய கருத்தில் திளைப்பவர்களே கண்டுகொள்ளமுடியும் (நீங்கள் childless by choice என்று தேடினால் கண்டடையமுடியும்)  . அதை படிக்க , பார்க்க நாமே நம்மை மாற்றிக்கொள்கிறோம், நம்ப தொடங்குகிறோம்- நாளைடைவில் நாமே அதை தீவிர பிராச்சரம் போல மற்றவர்களுக்கும் சொல்லத்தொடங்கிவிடவோம்.

இப்பொழுது என்னுடைய நிலைப்பாடு;

1. குழந்தை உங்களக்கு உங்களில் இருக்கும் நீங்கள் அறிந்திராத உன்னதமான பகுதிகளை காட்டும், உணர்த்தும். எனது குழந்தை சிறிய அடி பட்டுவிட்டது (அருண்மொழி அக்கா அவர்களது அப்பா அவரை தூக்கிக்கொண்டு ஓடியதை எழுதிருப்பார்) நானும் ஓடினேன் (ஓட்டினேன்). முதல் அழுகை நான் கேட்டபொழுது என்னையறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. இந்த அனுபவம் சொல்லியுணர்த்த என்னிடம் வார்தைகள் இல்லை.

2. ஒரு அளவிற்கு மட்டுமே நீங்கள் லெளகிகத்தில் திளைக்கமுடியும் அதில் இருந்து இன்பத்தை பெறமுடியும்; உப்பு தண்ணீரை போல பருக பருக தாகத்தை அடைக்காது மேலும் பெரிய தேவைகளை நோக்கி ஓடுவதை தவிர வேறு எந்த இன்பமும் அமையாது. நீங்கள் மிகப்பெரிய லட்சியத்தை நோக்கி  உழைப்பவர் என்றால் இந்த வெறுமையிலிருந்து தப்பிக்க வாய்ப்பு உள்ளது.

3. மனிதனாக நாம் எல்லாரும் சிம்பொனி எழுதவோ, வெண்முரசு போன்ற ஒரு படைப்பையோ எழுதுவதற்கான திறமையோ, உழைப்பையோ குடுக்கமுடியாதவர்கள். நீங்கள் இதை எல்லாம் செய்யவேண்டும் என்ற அவசியமும் இல்லை. உங்களது வாழ்க்கையில் ஒரு பொருளை (meaning) ஒரு குழந்தை அளித்துவிடும் . சுருங்கச்சொன்னால் நான் முன்னைவிட உத்வேகமாக செயல்புரிகிறேன். அவ்வப்போது வரும் இருத்தலியல் சார்ந்த வெறுமைகளும் இல்லாமல் போனது குழந்தைக்கு பிறகே.

4. நீங்கள் கையில் ஏந்தும் ஒரு துளி இறை ! நான் மிகவும் நிறைவாக, மகிழ்ச்சியாக, நேர்மறையான வாழ்க்கையில் 34 வருடங்களில் இருந்தது குழந்தைக்குப்பிறகுதான்.

குழந்தை மட்டும் தான் இந்த இன்பத்தை அளிக்கமுடியுமா ?

இல்லை என்பதே எனது பதில். உங்களக்கு வேறு எதாவது செயல்பாடு ஒரு structure, framework ஒரு நிலையான சந்தோஷத்தை அளிக்கமுடியுமானால் (இலக்கியம், எழுத்து, சமூகசேவை)  நீங்கள் இந்த இன்பத்தை அதன்முலமும் பெறமுடியும்.

பின்குறிப்பு:  தயவு செய்து தவறான வழிகாட்டுதலால் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்றே நான் மன்றாடுவேன் (உதாரணம்: மணவாழ்க்கை சரியில்லை என்று நண்பர்களிடம் பகிரும்போளுது அவர்கள் கூறும் பல தேய்வழக்கு அறிவுரைகளில் முதன்மையானது – ஒரு குழந்தை பிறந்தா எல்லாம் சரியாப்போயிடும். இதை பின்பற்றி இப்பொழுது பிடிக்காத மணவாழ்க்கையில் குழந்தைக்காக நடிப்பவர்களை (நீடிப்பவர்களை) நானறிவேன், நீங்களும் அறிந்திருக்கக்கூடும்). வாழ்க்கையிலே எடுக்கும் ஒரு பெரியமுடிவுகளில் இதுவே அகப்பெரியது, ஆகவே கணவனும் மனைவியும் நல்ல புரிதல் அடைந்தபின் எடுப்பதே நல்லது – மிகப்பெரிய பொருளியில், தனிமனித சுதந்திர தியாகங்களை கோரும் செயல் ஆதலால் தீர கலந்தோசித்து எடுக்க வேண்டிய முடிவு.

அன்புடன்

கோபி 

 

https://www.jeyamohan.in/159332/

 

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.