Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாவை நோக்கி ஒன்றுதிரள முடியாத தமிழர்கள் – நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவாவை நோக்கி ஒன்றுதிரள முடியாத தமிழர்கள் – நிலாந்தன்.

September 12, 2021
 

கடந்த 31ஆம் திகதி இலங்கை வெளிவிவகார அமைச்சு கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கும் ஐநாவுக்கும் ஓர் அறிக்கையை அனுப்பியது. ஆங்கிலத்தில் 14 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையின் தலைப்பு “மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கைகள்” என்பதாகும். வரும் 14ஆம் தேதி தொடங்கவிருக்கும் ஐநா கூட்டத்தொடரையொட்டித் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையில் அரசாங்கம் பின்வரும் விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கிறது.

முதலாவதாக அனைத்துலக விசாரணை மற்றும் அனைத்துலக தகவல் சேகரிப்பு பொறிமுறைகள் தொடர்பாக பின்வருமாறு கூறப்பட்டுள்ளது..“உள்ளகப் பொறிமுறைகள் சோர்வின்றி முன்னெடுக்கப்பட்டுவரும் ஒரு சூழலுக்குள் நாட்டுக்கு வெளியிலான வெளியக தகவல் சேகரிப்பு பொறிமுறைகளை அரசாங்கம் நிராகரிக்கிறது” பெருந்தொற்றுநோய்க்கு எதிராக அரசாங்கம் போராடிக் கொண்டிருக்கும் ஒரு பின்னணியில் அதற்காக பெருமளவு நிதி தேவைப்படும் ஒரு பின்னணியில் அனைத்துலக பொறிமுறைக்காக பெருமளவிலான ஒரு நிதி ஒதுக்கப்பட்டதை நியாயப்படுத்த முடியாது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக வெளியக தகவல் சேகரிப்பு பொறிமுறை என்பது “அரசியலாக்கப்பட்ட” ஒரு நடவடிக்கை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அதாவது சாராம்சத்தில் ஜெனிவாத் தீர்மானம் எனப்படுவது அரசியலாக்கப்பட்ட ஒன்று. அதாவது அரசியல் நோக்கங்களைக் கொண்டது என்றும் அது கூறுகிறது.

பொறுப்புக்கூறல் என்பது சாராம்சத்தில் அரசியல்தான். இலங்கை மீதான அழுத்தம் என்பதும் அரசியல்தான். அது சீனாவுக்கு எதிரான அரசியல் என்பதில் சந்தேகமில்லை. அந்த அரசியலில் இனப்பிரச்சினை ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதும் உண்மைதான். இவ்வாறு வெளியகப் பொறிமுறைகளை அரசியலாக்கப்பட்ட ஒன்று என்று கூறி நிராகரிக்கும் அரசாங்கம் அதேசமயம் உள்ளகப் பொறிமுறைகளில் கடந்த 20மாதங்களில் தான் சாதித்தவைகள் என்றுகூறி மிகநீண்ட பட்டியல் ஒன்றை அங்கே முன்வைத்திருக்கிறது. இந்தப்பட்டியலில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் புள்ளிவிவரங்களை தொகுத்துப்பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. முன்னைய ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தின் காலத்தில் நிலைமாறுகால நீதிச் செய்முறைகளுக்காக அதாவது பொறுப்புக்கூறலுக்காக உருவாக்கப்பட்ட கட்டமைப்புக்களின் இதுவரைகாலச் செயற்பாடுகள் என்று கூறப்படும் விடயங்கள் அங்கே தொகுக்கப்பட்டிருக்கின்றன.

இதன்படி ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் உருவாக்கப்பட்ட காணாமல் போனோருக்கான அலுவலகம், இழப்பீட்டு நீதிக்கான அலுவலகம், ஓநூர்(ONUR) என்று அழைக்கப்படும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் போன்றவற்றின் செயல்பாடுகள் குறித்து விரிவான புள்ளிவிவரங்கள் அங்கே தொகுக்கப்பட்டிருக்கின்றன. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபொழுது மேற்படி கட்டமைப்புகளை சினேக பாவத்தோடு அணுகவில்லை. மாறாக அக்கட்டமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட வழங்கள் குறைக்கப்பட்டன. அக்கட்டமைப்புகள் நிதிஅமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டன. மேலும் அக்கட்டமைப்புக்களுக்கு ஐநா வழங்கிவந்த தொழில்சார் உதவிகள் கடந்த டிசம்பர் மாதத்தோடு நிறுத்தப்பட்டன. அதற்குரிய உடன்படிக்கை பின்னர் புதுப்பிக்கப்படவில்லை. இவை தவிர முக்கியமாக கடந்த 20 மாதங்களாக அரசாங்கம் முன்னெடுத்துவரும் ராணுவ மயமாக்கும் நடைமுறையின் கீழ் இந்த அலுவலகங்களுக்குள்ளும் ஓய்வுபெற்ற படைப்பிரதானிகள் நியமிக்கப்பட்டார்கள். அவ்வாறு நியமிக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய முன்னாள் பொலிஸ் மா அதிபர் சில வாரங்களுக்கு முன் சுகவீனம் காரணமாக இறந்து போய்விட்டார் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இவ்வாறு கடந்த 20 மாதங்களாக மேற்படி கட்டமைப்புகளை அரசாங்கம் மிகக்குறைந்த வளங்களோடு மந்தநிலையில் இயங்க அனுமதித்தது. கடந்த மாதம் கிளிநொச்சியில் காணாமல் போனோருக்கான அலுவலகம் ஒன்று ரகசியமாக திறக்கப்பட்டதையும் இங்கு சுட்டிக்காட்டலாம். இப்பொழுது மேற்கண்ட அலுவலகங்களின் செயற்பாடுகள் என்று கூறி அரசாங்கம் ஒரு பெரிய பட்டியலை முன்வைக்கின்றது. அதிலும் குறிப்பாக கடந்த பட்ஜெட்டின்போது இழப்பீட்டு நீதிக்கான அலுவலகத்துக்கு அதிகரித்த தொகை நிதி ஒதுக்கப்பட்டதை மேற்படி அறிக்கை மிகக்குறிப்பாக சுட்டிக்காட்டுகிறது.

எனவே தொகுத்துப் பார்த்தால் ஒன்று தெரிகிறது. ரணில் விக்கிரமசிங்க உருவாக்கிய கட்டமைப்புகளை இந்த அரசாங்கம் உள்நோக்கத்தோடு பேணியிருக்கிறது. அதுமட்டுமல்ல கடந்த பட்ஜெட்டின்போது இழப்பீட்டு நீதிக்கான அலுவலகத்துக்கு அதிகரித்த நிதியை ஒதுக்கியமை என்பது ஜெனிவாவை நோக்கி செய்யப்பட்ட வீட்டுவேலைதான். இதை எனது கட்டுரைகளில் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறேன். எனவே ஐநாவுக்காக கண்துடைப்பாக ஒரு தொகுதி வீட்டு வேலைகளை செய்துவிட்டு அரசாங்கம் அவற்றை எல்லாம் அறிக்கையாகத் தொகுத்திருக்கிறது.

இந்த அறிக்கை தொடர்பில் தமிழ் கட்சிகளும் குடிமக்கள் சமூகங்களும் குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களின் சங்கங்களும் எதிர்வினையாற்ற வேண்டியுள்ளது. இந்த அறிக்கையில் கூறப்படும் புள்ளிவிவரங்கள், தகவல்கள் தொடர்பில் ஐநாவுக்கும் உலகசமூகத்துக்கும் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு தமிழ்த் தரப்புகளுக்கு உண்டு. இதுதொடர்பில் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றில் பொறுப்பான பதவி வகிக்கும் எனது நண்பரொருவர் சுட்டிக்காட்டியது போல மேற்படி அறிக்கையில் உள்ள தகவல்களின் உண்மைத் தன்மை நாட்டிலுள்ள எல்லா தூதரகங்களுக்கும் நன்கு தெரியும். இது ஒரு சம்பிரதாய பூர்வமான அறிக்கைதான். ஆனால் அரசாங்கம் ஜெனிவாவை ஏதோ ஒருவிதத்தில் சுதாகரிக்க முற்படுகிறது என்பதனை அது நமக்கு உணர்த்துகிறது.

மேற்கண்ட சுதாகரிப்புக்களின் மையமாக பசில் ராஜபக்ச காணப்படுகிறார். அவர் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பின் இலங்கைத் தீவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான வெளியுறவுச் சூழல் ஒப்பீட்டளவில் மாற்றம் அடைந்திருக்கிறது. பஸில் நிதியமைச்சராக வந்ததால் நாட்டின் நிதிநிலைமை தேறியதோ இல்லையோ இலங்கைத் தீவுக்கும் மேற்கு நாடுகள் மற்றும் இந்தியாவுக்கும் இடையிலான வெளிவிவகாரச் சூழலை அவர் மாற்றத்தொடங்கியிருக்கிறார். புதிய வெளிவிவகார அமைச்சராக மேற்கிற்கு பிடித்தமான ஜி எல் பீரிஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். மிலிந்த மொரகொட ஒரு மூலோபாய திட்டத்தோடு இந்தியாவுக்கு போகிறார். அயோத்தியில் கட்டப்படும் சர்ச்சைக்குரிய ராமர் கோயிலுக்கு சீதா எலியவில் இருந்து ஒரு கல்லைக் கொண்டு போகிறார். அமெரிக்கா தலைமையிலான குவாட் நாடுகளுக்கு திருகோணமலையில் ஒரு தொகுதி காணி வழங்கப்படும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அரசாங்கம் மேற்கத்திய நிதி முகவர் அமைப்புகளான உலக வங்கி, பன்னாட்டு நாணய நிதியம் போன்றவற்றிடம் கடன்வாங்கத் தொடங்கியிருக்கிறது.

உலக வங்கியும் பன்னாட்டு நாணய நிதியமும் நிபந்தனைகளோடுதான் கடனை வழங்கும். சீனாவை போல நிபந்தனையின்றி கடன் கொடுப்பதில்லை. அந்த நிபந்தனைகளில் மனித உரிமைகள் விவகாரம், இனப்பிரச்சினைக்கான தீர்வு,பொறுப்புக்கூறல் மற்றும் மானியங்களைக் குறைதல், வரிகளை அதிகரித்தல் போன்ற பல விடயங்களும் அடங்கி இருக்கக்கூடும். அதாவது பொறுப்புக்கூறல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஏதோ ஒரு விதத்தில் மேற்கு நாடுகளுடன் சுதாரிக்க முற்படுவதை இது காட்டுகிறது. கடந்த ஜூலை மாதம் இருபத்தியோராம் திகதி ஜனாதிபதி தனது ட்விட்டர் செய்தியில் என்ன எழுதினார் என்பது பின் வரக்கூடிய நகர்வுகளை ஊகிக்க போதுமாக இருந்தது. அதாவது அரசாங்கம் மேற்கு நோக்கியும் இந்தியாவை நோக்கியும் சுதாகரிக்கத் தொடங்கிவிட்டது. அவ்வாறு சுதாரிக்க வேண்டிய ஒரு நிலைமையை covid-19 ஏற்படுத்தியிருக்கிறது.

இங்கு குறிப்பாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் நிலைமாறுகால நீதிக்குரிய கட்டமைப்புக்களை தொடர்ந்து இயங்க விட்டமையும் கடந்த பட்ஜெட்டில் அந்தக் கட்டமைப்புகளில் ஒன்றுக்கு அதிகரித்த நிதி ஒதுக்கப்பட்டமையும்;ஒருதொகுதி அரசியல் கைதிகளை விடுதலை செய்தமையும்;பயங்கரவாதத் தடைச்சசடடத்தை திருத்தப் போவதாகக் கூறுவதும் ஐநாவில் எடுத்துக்காட்டுவதற்காக செய்யப்பட்ட வீட்டுவேலைகள்தான். அதாவது அரசாங்கம் ஒருபுறம் பொறுப்புக்கூறலுக்கான ஐநா தீர்மானத்துக்கு ரணில் விக்கிரமசிங்க வழங்கிய அனுசரணையில் இருந்து பின்வாங்கிவிட்டது. அதேநேரம் இன்னொருபுறம் ராஜபக்ச பாணியிலான ஒரு பொறுப்புக்கூறலுக்கு தயார் என்ற சமிக்கைகளை காட்டுகிறது. அதற்காக கடந்த 20 மாதங்களாக வீட்டு வேலைகளை செய்து வருகிறது.

அவர்கள் ஓர் அரசுடையதரப்பு. எல்லாவற்றுக்கும் அவர்களிடம் கட்டமைப்புக்கள் உண்டு. வெளியுறவுக் கொள்கையில் சுதாகரிப்புக்களைச் செய்வது என்று முடிவெடுத்தபின் பசிலை கொண்டுவந்து ஒரு முக மாற்றத்தை காட்டிவிட்டு எல்லாவற்றையும் செய்கிறார்கள். அவ்வளவுதான். ஆனால் அரசற்றதரப்பு ஆகிய தமிழ் மக்கள் அதுவும் சிறிய மக்கள் கூட்டமாகிய தமிழ் மக்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? தமிழ்த்தரப்பு ஒருங்கிணைத்து வீட்டுவேலைகள் எதையும் செய்வதாகத் தெரியவில்லை. அதற்கு வேண்டிய கட்டமைப்புகளும் இல்லை. ஜெனிவாவை ஏற்றுக்கொண்ட கட்சிகளிடமும் அதற்குரிய கட்டமைப்புகள் இல்லை. வழிவரைபடங்கள் இல்லை. ஜெனிவாவுக்கு வெளியே போகவேண்டும் அனைத்துலக நீதிமன்றங்களுக்கு போகவேண்டும் என்று கேட்கும் கட்சிகளிடமும் அதற்கு வேண்டிய கட்டமைப்புகள் இல்லை.

அரசாங்கத்திடம் எல்லாவற்றுக்கும் கட்டமைப்புக்கள் உண்டு. ஐநா ஓர் உலகளாவிய கட்டமைப்பு. அனைத்துலக நீதிமன்றங்களும் கட்டமைப்புகள்தாம். கட்டமைப்புக்களை எதிர்கொள்வதற்கு கட்டமைப்பு ரீதியாகத்தான் செய்யப்படலாம். அது அதற்குரிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். எந்தத் தமிழ்க் கட்சியிடம் அப்படிப்பட்ட கட்டமைப்புகள் உண்டு? கடந்த 20 மாதங்களில் அவ்வாறு உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளை கட்சிகள் முன் வைக்கட்டும் பார்க்கலாம்.

இப்படிப்பட்டதொரு பரிதாபகரமான வெற்றிடத்தில்தான் கடந்தகிழமை தமிழ்க்கட்சிகள் ஜெனிவாவுக்கு கடிதங்களை அனுப்பின. வழமைபோல ஒரே கூட்டுக்குள் இருந்து கொண்டு இரு வேறுகடிதங்களை அனுப்பின. மொத்தம் 3 க்கும் குறையாத கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. ஒரு இத்துணூண்டு மக்கள்கூட்டம், ஏற்கனவே இனப்படுகொலையால் சிறுத்துப்போன ஒரு மக்கள் கூட்டம், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி மக்கள் புலம்பெயர்ந்து சென்றதால் நீர்த்துப்போன ஒரு மக்கள்கூட்டம், கட்சிகளாகவும் அமைப்புக்களாகவும் சிதறிக் காணப்படுகிறது. கடந்த 20 மாதங்களாக செய்த வீட்டுவேலைகளும் குறைவு. அதிலும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு வீட்டுவேலையைக்கூட ஒற்றுமையாக செய்ய முடியவில்லை.

ஆனால் அரசாங்கம் செய்திருக்கிறது. அது ஒரு சம்பிரதாயபூர்வமான வீட்டு வேலைதான். அந்த வீட்டுவேலை இறுதி விளைவை தீர்மானிக்காது. இறுதி விளைவைத் தீர்மானிக்கப் போவது குவாட் நாடுகளுக்கு திருகோணமலையில் காணிகளை கொடுப்பதா இல்லையா என்ற தீர்மானம்தான். மேற்கத்தைய நிதி முகவரமைப்புக்களின் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்வதா இல்லையா என்று முடிவெடுப்பதுதான். ஏனென்றால் அரசாங்கம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது போல தூய பொறுப்புக்கூறல், தூய நீதி என்று எதுவும் கிடையாது. எல்லாமே அரசியலாக்கப்பட்ட நீதிதான்.

 

https://globaltamilnews.net/2021/165839

 

  • கருத்துக்கள உறவுகள்
On 12/9/2021 at 16:04, கிருபன் said:

தீர்மானிக்கப் போவது குவாட் நாடுகளுக்கு திருகோணமலையில் காணிகளை கொடுப்பதா இல்லையா என்ற தீர்மானம்தான். மேற்கத்தைய நிதி முகவரமைப்புக்களின் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்வதா இல்லையா என்று முடிவெடுப்பதுதான். ஏனென்றால் அரசாங்கம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது போல தூய பொறுப்புக்கூறல், தூய நீதி என்று எதுவும் கிடையாது. எல்லாமே அரசியலாக்கப்பட்ட நீதிதான்.

அரசியலாக்கப்பட்ட நீதி சிறிலங்காவுக்கு கிடைத்து விட்டது...  இனி ஐந்து வருடங்களுக்கு தமிழ் மக்களின் உரிமைக்காக  போராடுவதாக சம்பந்தர் கோஸ்டி நாடகம் ஆடும் 

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் புலம்பெயர் நாடுகளிலிருந்து எவரும் பெருவாரியாகக் கவனயீர்ப்பில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கமுடியாது. ஏன் ஒரு பத்து இருபதுபேராவது கலந்துகொள்வார்களென்பதே சந்தேகமே.

காரணம் ஒரு சிறிய இனக்குழுமம் தங்களுக்குள் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து ஆழுக்கு ஒரு லெட்டர்பாட் வைத்துக்கொண்டு கடிதமெழுதுவதை சக தமிழனே காமடியாகத்தான் பார்க்கிறான். பல்வேறு சந்தர்ப்பங்களில் அனைவருக்கும் சொல்லியாச்சு. தேர்தல் அரசியலை நீங்கள் எப்படியாவது நடத்திக்கொள்ளுங்கள் ஆனால் ஒரு பொதுவான முக்கிய கொள்கைத்திட்டங்களை முதன்மையாக வைத்து உள்ளூரிலும் சர்வதேசத்திலும் ஒன்றுபட்டுக்குரல் கொடுங்கள் என ஆனால் யாரும் அதைப்பத்திச் சிந்திப்பதே இல்லை.

புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் உறவுகள் அப்படியே போட்டது போட்டபடி எல்லாத்தையும் விட்டெறிஞ்சு தங்கள் வேலையைப் பார்ப்போம் என ஒதுங்கும் மணோநிலைக்கு வந்துவிட்டார்கள்.

அடுத்ததாக மறைந்த போராளிகளது நினைவுநாள் வணக்கநிகழ்வுகளுடன் ஒரு மட்டுப்படுத்தல்களுக்குள் வரவேண்டியதுதான்.

அதைவிட இன்னுமொரு விடையம் உசிதமானது.

புலம்பெயர் தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து சர்வதேசத்திடம்நீங்கள் புடுங்கிய ஆணியெல்லாம் போதும் ஒதுங்குங்கள் நாம் இனிமேல் உங்களிடம் வந்து மன்றாட மாட்டோம் எதிர் காலத்தில் நாம் வாழும் தேசங்கள் எங்கும் எமது தமிழ்ச் சாதியின் கல்வி மற்றும் பொருளாதார மேம்படுகளுக்கான வழிவகைகளை நாம் வாழும் நாடுகளில் ஏற்படுத்தும் நோக்கில் செயற்படப்போகிறோம் உங்கள் உலகமயமாக்கல் அரசியலைச் செய்வதற்கு வேறு யாரையும் தேடவும் எனக்கூறலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

நிதிகளை (கடன்) பெறும் வகையில் இலங்கை அரசு செயற்படும்.
புலம் பெயர் தமிழர்கள் தத்தம் நாடுகளின் அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்து சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம்.
 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, nunavilan said:

நிதிகளை (கடன்) பெறும் வகையில் இலங்கை அரசு செயற்படும்.
புலம் பெயர் தமிழர்கள் தத்தம் நாடுகளின் அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்து சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம்.
 

இன்னுமா நம்புகிறீர்கள் நீங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இன்னுமா நம்புகிறீர்கள் நீங்கள்

கொடுக்கலாம் என்று தானே சொல்லி உள்ளேன்.
வங்குரோத்து நிலைமை ஏற்கனவே வந்து விட்டது. இதை எல்லோரும் நம்பித்தான் ஆக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

கொடுக்கலாம் என்று தானே சொல்லி உள்ளேன்.
வங்குரோத்து நிலைமை ஏற்கனவே வந்து விட்டது. இதை எல்லோரும் நம்பித்தான் ஆக வேண்டும்.

நம்பி நம்பியே நகர்கின்றன நாட்களும் வருடங்களாக 

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழ் அமைப்புகளது அழுத்தம் எந்தவகையிலும் எடுபடாது காரணம் அவ்வமைப்புகளிடம் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட எந்த ஒரு பிரதிநிதியும் இல்லை தாயகத்தில் மக்கள் பிரதிநிதிகள் இரண்டுபட்டல்ல நாலுபட்டு நிற்கையில் எம்மால் எதுவுமே செய்ய முடியாது.

கடந்த காலங்களில் நான் நேரடியாக நான் வாழும் நாடுகளின் வெளிவிவகார அமைச்சின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடும்போது அவர்கள் எம்மிடம் கேட்ட ஒரு கேள்வி "அதுசரி நீங்கள் போர்க்குற்றம் அது சர்வதேச விசாரணை என வேண்டுகோள் விடுக்கிறேர்கள் ஆனால் இலங்கைத்தீவில் தமிழர்களால் தெரிவுசெய்யப்பட்ட அவர்களது பிரதிநிதிகள் அப்படி எந்தவித வேண்டுகோளையும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அதிகாரிகளைச் சந்திக்கும்போது விடுப்பதில்லையே"

ஏன் நீங்கள் அவர்களது எண்ணத்துக்கு முரண்படுகிறேர்கள் " எஙிறார்கள் 

ஏதாவது பதில் எதுவும் எம்மிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

காரணம் அவர்கள் எதிர்பார்ப்பது மக்கள் பிரதிநிதிகளது கருத்துக்களைத்தான்

  • கருத்துக்கள உறவுகள்
On 15/9/2021 at 09:47, Elugnajiru said:

புலம்பெயர் தமிழ் அமைப்புகளது அழுத்தம் எந்தவகையிலும் எடுபடாது காரணம் அவ்வமைப்புகளிடம் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட எந்த ஒரு பிரதிநிதியும் இல்லை

புலம்பெயர்ந்துள்ள நாடுகளின் மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்யும் கணிசமான வாக்குகளை தம்மகத்தே கொண்டுள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகளது அழுத்தம் எந்தவகையிலும் எடுபடாதா? கனடாவிலும், நோர்வேயிலும், சுவிற்சலாந்திலும், பிரான்சிலும், இங்கிலாந்திலும் புலம்பெயர்ந்த தமிழர்களையே மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்ய முன்னி்ன்று உழைத்து வெற்றிபெற்ற இந்த அமைப்புகள், தாம் ஆட்சிக்கு கொண்டுவந்த அரசுகளிடம் மிகுந்த செல்வாக்கை கொண்டுள்ளன. இந்த அரசுகளிடம் புலம்பெயர் தமிழ் அமைப்புகளது செல்வாக்கு இலங்கை அரசினதிலும் பார்க்க பலமடங்கு சக்திவாய்ந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.