Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை நெருக்கடி: "உயிரைக் கையில் பிடித்தபடி வாழ்கிறோம்" - கண்ணீர் சிந்தும் மீனவர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நெருக்கடி: "உயிரைக் கையில் பிடித்தபடி வாழ்கிறோம்" - கண்ணீர் சிந்தும் மீனவர்கள்

  • யூ.எல். மப்றூக்
  • பிபிசி தமிழுக்காக
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

இலங்கை நெருக்கடி மீனவர்கள்

டீசல் கிடைக்காமை காரணமாக சில வாரங்களுக்கு முன்னர் 15 நாட்கள் தொடர்ச்சியாக தொழிலுக்குச் செல்ல முடியாமல் போய்விட்டது என்கிறார் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதைச் சேர்ந்த அப்துல் றஹீம். இவர் - பலநாட்கள் கடலில் பயணித்து மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் பெரிய படகு ஒன்றில் பணியாற்றுகின்றார்.

இப்போதும் மூன்றாயிரம் ரூபாவுக்கு மட்டுமே ஒவ்வொருவருக்கும் டீசல் வழங்கப்படுவதாகவும், அதனால் தங்கள் படகுக்குத் தேவையான டீசலை நான்கு, ஐந்து பேரை தனித்தனியாக அனுப்பி கொள்வனவு செய்வதாகவும் அவர் கூறுகின்றார்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள்களுக்கான விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டமை காரணமாக, கடற்றொழிலாளர்களும் கடுமையான கஷ்டங்களை தமது தொழில் நடவடிக்கைகளில் எதிர்கொண்டு வருகின்றனர் என, அப்துல் றஹீம் தெரிவிக்கின்றார்.

கடற்றொழிலில் ஈடுபடும் படகுகள் மற்றும் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட தோணிகளுக்கு எரிபொருட்கள் தேவைப்படுகின்றன. பலநாட்கள் கடலில் பயணிக்கும் பெரிய படகுகளுக்கு டீசலும், ஒருநாள் தொழிலில் ஈடுபடும் சிறிய படகுகள் மற்றும் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட தோணிகளுக்கு மண்ணெண்ணெயும் பயன்படுத்தப்படுகின்றன.

கடந்த வருடம் நடுப்பகுதியில் 111 ரூபாவாக இருந்த ஒரு லீட்டர் டீசல் தற்போது 176 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. அப்போது 77 ரூபாவாக இருந்த ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விலை - இப்போது 87 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், கடற்றொழிலுக்கான செலவும் கணிசமாக உயர்ந்துள்ளது.

சுமார் 15 நாட்கள் கடலில் பயணித்து மீன்பிடியில் ஈடுபடும் பெரிய படகு ஒன்றுக்கு கிட்டத்தட்ட 420 லீட்டர் டீசல் தேவைப்படும் என்கிறார் அப்துல் றஹீம். ஒரு நாள் தொழிலில் ஈடுபடும் சிறிய படகு ஒன்றுக்கு சுமார் 35 லீட்டர் மண்ணெண்ணெய் தேவைப்படும் எனவும் அவர் கூறுகிறார்.

எரிபொருள்களுக்கு விலை அதிகரித்துள்ள போதிலும், அவற்றுக்கான தட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இலங்கை நெருக்கடி மீனவர்கள்

மீன்பிடி தொழிலில் பயன்படுத்தப்படும் கலங்களில் மொத்தம் 06 வகை உள்ளதாக, கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் கல்முனையில் அமைந்துள்ள அம்பாறை மாவட்டக் காரியாலயம் தெரிவிக்கின்றது. அவற்றில் 04 வகையானவை - இயந்திரங்கள் பொருத்தப்பட்ட படகுகள் மற்றும் தோணிகளாகும். இவற்றுக்கே எரிபொருள்கள் தேவையாக உள்ளன. அம்பாறை மாவட்டத்தில் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட படகுகள் மற்றும் தோணிகள் மொத்தமாக 1484 உள்ளன.

மோட்டார் இயந்திரங்கள் பொருத்தப்படாத, துடுப்புகளால் ஓட்டப்படும் 172 கரைவலைத் தோணிகளும் இம் மாவட்டத்தில் உள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

அம்பாறை மாவட்டத்தில் செயற்பாட்டிலுள்ள மீனவர்கள் 14,424 பேர் உள்ளனர். கடற்றொழில் சார்ந்த தொழில்களை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை 65,344 ஆகும். இந்த மாவட்டத்தின் மொத்த மீனவர் குடும்பங்களின் எண்ணிக்கை 13,500 என கணக்கிடப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள்களுக்கான விலையேற்றம் காரணமாக கடற்றொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால், மேற்குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மறுபுறமாக, மீன் விலைகளும் தாறுமாறாக அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தொழிலில் அதிக செலவு

 

இலங்கை நெருக்கடி மீனவர்கள்

'கீரி' மீன் முன்னெரெல்லாம் அதிகபட்சமாக ஒரு கிலோ 400 அல்லது 500 ரூபாவுக்கு மேல் விற்பனையானதில்லை. ஆனால், சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்டத்தில் சில பிரதேசங்களில் அமைந்துள்ள சில்லறைச் சந்தைகளில் 1300 ரூபாவுக்கு ஒரு கிலோ கீரி மீன் விற்கப்பட்டது. இப்படி அனைத்து வகை மீன்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன.

கடல் மீன்களை வாங்கி, மொத்தமாக விற்பனை செய்து வருபவர் சாய்ந்தமருதைச் சேர்ந்த இஸ்திகார். மீன்களை சாய்ந்தமருதில் இருந்து கொழும்புக்குக் கொண்டு செல்வதற்காக, முன்னர் தனது வாகனத்துக்கு 10 ஆயிரம் ரூபாவுக்கு டீசல் போதுமானதாக இருந்தது என்கிறார். ஆனால் தற்போது 18 ஆயிரம் ரூபாவுக்கு டீசல் தேவைப்படுவதாக அவர் கூறுகின்றார்.

அதேவேளை, வாகனத்துடன் செல்லும் கூலியாட்களுக்கு சாப்பாட்டுச் செலவாக முன்னர் 02 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டதாகவும் தற்போது 04 ஆயிரம் ரூபா கொடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

குறித்த பயணத்துக்காக வாகன சாரதி 4500 ரூபாவை கொடுப்பனவாகப் பெற்று வந்ததாகவும், தற்போது 06 ஆயிரம் ரூபாவை பெறுவதாகவும் இஸ்திகார் தெரிவித்தார். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பின் காரணமாகவே, இவ்வாறு அதிக தொகையினை அவர்கள் கேட்டுப் பெறுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

மற்றொருபுறம், தற்போதைய காலகட்டத்தில் மீன் வியாபாரம் குறைவடைந்துள்ளதாகவும், மக்களிடம் பணம் இல்லாமையே அதற்கான காரணம் எனவும் இஸ்திகார் குறிப்பிட்டார்.

புத்தளம் பிரதேசத்திலிருந்து இறால் வகைகளைக் கொள்வனவு செய்து, அவற்றினை அம்பாறை மாவட்டத்தில் இஸ்திகார் மொத்தமாக விற்பனை செய்தும் வருகின்றார்.

எரிபொருள் மானியம் நிறுத்தம்

 

இலங்கை நெருக்கடி மீனவர்கள்

கடந்த காலத்தில் எரிபொருள்களுக்கான விலைகள் குறைவாக இருந்தபோதும், கடற்றொழிலாளர்களுக்கு குறிப்பிட்டளவு எரிபொருளை அரசு இலவசமாக வழங்கி வந்தது.

2012ஆம் ஆண்டு தொடக்கம் 2013 மே மாதம் வரையில் அப்போதைய அரசாங்கம் கடற்றொழியலார்களுக்கு டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றினை இலவசமாக வழங்கியதாக கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட காரியாலம் தெரிவிக்கின்றது.

மாதமொன்றுக்கு அதிகபட்சமாக 30 ஆயிரம் ரூபா பெறுமதியான டீசலும், 18 ஆயிரம் ரூபா பெறுமதியான மண்ணெண்ணையும் இலவசமாக வழங்கப்பட்டன.

ஆனால், 2013ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச எரிபொருள்கள் நிறுத்தப்பட்டன. இதனால் கடற்றொழிலுக்கான செலவு மீண்டும் அதிகரித்தது.

இந்த பின்னணியில், தற்போது எரிபொருள்களுக்கான விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதால், கடற்றொழிலாளர்கள் பெரும் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர்.

அடிமேல் அடி: தொடரும் நெருக்கடி

 

இலங்கை நெருக்கடி மீனவர்கள்

ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டமையினால், ஏற்கனவே அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் மூடப்பட்ட பின்னர், அம்பாறை மாவட்டத்தில் கடற்றொழில் மூலமாகக் கிடைக்கும் மீன்களின் தொகையும் குறைவடைந்துள்ளன.

உதாரணமாக அம்பாறை மாவட்டத்தில் 2017ஆம் ஆண்டு சுமார் 20,177 மெட்றிக் தொன் மீன்கள் கிடைத்தன. 2018இல் 17806 மெட்றிக் தொன் மீன்கள் பிடிபட்டன. பின்னர் அந்தத் தொகை 2019ஆம் ஆண்டு 10,852 மெட்றிக் தொன்னாக குறைவடைந்தது. இந்த நிலையில் கடந்த வருடம் (2021) சுமார் 8656 தொன் மீன்களே கிடைத்ததாக கட்றொழில் நீரியல் வள திணைக்தின் அம்பாறை மாவட்ட அலுவலகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆக, கிடைக்கும் மீன்களின் அளவில் பாரியளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், எரிபொருள்களுக்கான விலை அதிகரிப்பு மற்றும் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் கடற்றொழிலாளர்கள் பெரும் நெருக்குவாரங்களைச் சந்தித்து வருகின்றனர்.

சிலவேளை படகுகளில் கடலுக்குச் சென்று, மீன்கள் கிடைக்காமல் வெறுங்கையுடன் திரும்பும் போது - தாம் நஷ்டத்தினை எதிர்கொள்ள வேண்டியேற்படுவதாகவும் மீனவர்கள் கூறுகின்றனர். இப்போதுள்ள எரிபொருள்களின் விலையில் அந்த நஷ்டம் மிகவும் அதிகமானது என்றும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

'உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு' மீனவர்கள் கடலுக்குச் செல்வதாக பலரும் கூறுவார்கள். அந்தளவு அபாயங்கள் நிறைந்தது இந்தத் தொழில். ஆனால், இப்போதைய கால கட்டத்தில் - மீனவர்கள் கரை திரும்பிய பிறகும் 'உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான்' வாழ வேண்டி உள்ளது என்கிறார், கல்முனையில் நாம் சந்தித்த கடற்றொழிலாளர் பாறூக்.

https://www.bbc.com/tamil/sri-lanka-60968905

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்.....மீனவர்களின் வாழ்வு மிகவும் சிரமமானது......பொதுவாக எல்லா மக்களும் இந்தத் துன்பமான காலத்தை எப்படிக் கடந்து வருவார்களோ தெரியவில்லை.......!  🤔

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

உண்மைதான்.....மீனவர்களின் வாழ்வு மிகவும் சிரமமானது......பொதுவாக எல்லா மக்களும் இந்தத் துன்பமான காலத்தை எப்படிக் கடந்து வருவார்களோ தெரியவில்லை.......!  🤔

அம்பாறை மாவட்டம் மீன்பிடிக்கு முக்கிய மாவட்டமாகும் ஆழ்கடல் மீன் பிடிப்படகுகள் ஆயிரக்கணக்கில் உள்ளது அண்ணா இந்த நிலை மிக மோசமாக பாதித்துள்ளது  கல்முனை சாய்ந்தமருது மாளிகைக்காடு காரைதீவு நிந்தவூர் ஒலுவில் ஆகிய ஊர்களை பல ஆயிரம் குடும்பங்கள் நிர்கதியில் உள்ளன எனது பகுதியும் இதில் அடக்கம் எனது நண்பர்களும் அடக்கம்  அடகுகளினால் சிலர் சிவியம் போகிறது என்று சொல்கிறார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அம்பாறை மாவட்டம் மீன்பிடிக்கு முக்கிய மாவட்டமாகும் ஆழ்கடல் மீன் பிடிப்படகுகள் ஆயிரக்கணக்கில் உள்ளது அண்ணா இந்த நிலை மிக மோசமாக பாதித்துள்ளது  கல்முனை சாய்ந்தமருது மாளிகைக்காடு காரைதீவு நிந்தவூர் ஒலுவில் ஆகிய ஊர்களை பல ஆயிரம் குடும்பங்கள் நிர்கதியில் உள்ளன எனது பகுதியும் இதில் அடக்கம் எனது நண்பர்களும் அடக்கம்  அடகுகளினால் சிலர் சிவியம் போகிறது என்று சொல்கிறார்கள்

விவசாயிகள் ஏதோ ஒரு விதத்தில் பிழைத்துக்கொள்வார்கள்.


தினசரி ஊதியகாரர்களினதும்,மீனவர்களினதும் நிலமையை நினைக்க பெரும் கவலையாக உள்ளது. வளர்ந்த நாடுகளில் அந்த அரசுகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆவன செய்யும்.
இலங்கையில் எதை யாரிடம் எதிர்பார்க்க முடியும்? ☹️

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, குமாரசாமி said:

விவசாயிகள் ஏதோ ஒரு விதத்தில் பிழைத்துக்கொள்வார்கள்.


தினசரி ஊதியகாரர்களினதும்,மீனவர்களினதும் நிலமையை நினைக்க பெரும் கவலையாக உள்ளது. வளர்ந்த நாடுகளில் அந்த அரசுகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆவன செய்யும்.
இலங்கையில் எதை யாரிடம் எதிர்பார்க்க முடியும்? ☹️

பழைய காலம் போல் முதலாவது இரண்டாவது உலக யுத்தம் காலப்பகுதியில் கடல் எல்லைகளை திறந்துவிடுவது தான் இனிவரும் பஞ்சத்தில் இருந்து தப்ப வழி .

காக்கிநாடா .பர்மா . வேதராண்யம் ,அதிராம்பட்டினம் போன்ற இடங்களில் இருந்து வடமராட்சி கடலோடிகள் உணவை கொண்டுவந்து சேர்த்த வரலாறு உண்டு .

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 2/4/2022 at 15:14, தனிக்காட்டு ராஜா said:

அம்பாறை மாவட்டம் மீன்பிடிக்கு முக்கிய மாவட்டமாகும் ஆழ்கடல் மீன் பிடிப்படகுகள் ஆயிரக்கணக்கில் உள்ளது அண்ணா இந்த நிலை மிக மோசமாக பாதித்துள்ளது  கல்முனை சாய்ந்தமருது மாளிகைக்காடு காரைதீவு நிந்தவூர் ஒலுவில் ஆகிய ஊர்களை பல ஆயிரம் குடும்பங்கள் நிர்கதியில் உள்ளன எனது பகுதியும் இதில் அடக்கம் எனது நண்பர்களும் அடக்கம்  அடகுகளினால் சிலர் சிவியம் போகிறது என்று சொல்கிறார்கள்

வள்ளுவம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று இயங்கிக் கொண்டு இருக்கிறது...வாகரை பகுதியில் நிறைய காலமாக பணிகள் நடக்கிறது..மற்றப் பகுதிகளையும் கவனிக்கிறார்களோ தெரியவில்லை..இங்கிருந்து ஒவ்வொரு வார விடுமுறைகளிலும் வித்தியாசம்;வித்தியாசமான உணவுகள் தயாரித்து விற்பனை செய்து அதனூடாக வரும் பணம் அனேகமாக வறுமை பட்ட மக்களுக்கு தான் வந்த வண்ணமுள்ளது..சில வேலைக்கு போகும் பெண்கள் மற்றும் குடும்ப அங்கத்தவர்களாக சேர்ந்து இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 14/4/2022 at 08:06, யாயினி said:

வள்ளுவம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று இயங்கிக் கொண்டு இருக்கிறது...வாகரை பகுதியில் நிறைய காலமாக பணிகள் நடக்கிறது..மற்றப் பகுதிகளையும் கவனிக்கிறார்களோ தெரியவில்லை..இங்கிருந்து ஒவ்வொரு வார விடுமுறைகளிலும் வித்தியாசம்;வித்தியாசமான உணவுகள் தயாரித்து விற்பனை செய்து அதனூடாக வரும் பணம் அனேகமாக வறுமை பட்ட மக்களுக்கு தான் வந்த வண்ணமுள்ளது..சில வேலைக்கு போகும் பெண்கள் மற்றும் குடும்ப அங்கத்தவர்களாக சேர்ந்து இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

அம்பாறை பகுதியில் அப்படி ஒன்றும் இல்லை யாயினி உழைத்தால் மட்டுமே உயிர்வாழ முடியும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.