Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘கோட்டா கோ ஹோம்’ மக்கள் எழுச்சியில் வடக்கும் கிழக்கும் இணைய வேண்டுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘கோட்டா கோ ஹோம்’ மக்கள் எழுச்சியில் வடக்கும் கிழக்கும் இணைய வேண்டுமா?

என்.கே. அஷோக்பரன்

Twitter: @nkashokbharan

வரலாறு காணாத மக்கள் எழுச்சியொன்றை இலங்கை சந்தித்து நிற்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.

காலிமுகத்திடல் பகுதியில் மக்கள், 24 மணிநேரமுமாக பல நாள்களாகத் தொடர்ந்து அமைதியான வழியிலான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு சிங்களம், தமிழ், முஸ்லிம் மக்கள் எல்லோரும் ஒன்றாக ஒருமித்த குரலில் “கோட்டா கோ ஹோம்” (கோட்டா வீட்டுக்குப் போ), “ராஜபக்‌ஷ கோ ஹோம்” (ராஜபக்‌ஷர்கள் வீட்டுக்கு போ) என பலமான கோஷத்தை எழுப்பி வருகிறார்கள்.

கோட்டா அரசாங்கமும், ராஜபக்‌ஷர்களும் திணறிப்போய் நிற்கிறார்கள் என்றால் அது மிகையல்ல. வெற்றி வீரர்களாக தம்மைக் கொண்டாடிய அதே மக்கள், பச்சைத் தூஷண வார்த்தைகளால் தம்மை திட்டுவார்கள், மிக மோசமான வகையில் கேலிசெய்வார்கள், தாம் ஒரு கேலிப் பொருளாவோம் என்று ராஜபக்‌ஷர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள்.

ஜனநாயக வழியிலான போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை அடக்குமுறைக்குள்ளாக்குவது என்பது ராஜபக்‌ஷர்களுக்கு புதியதொரு விடயமல்ல. தமிழ் மக்களுடைய நியாயமான ஜனநாயக வழிப்போராட்டங்களின் போது, பொலிஸாரையும் இராணுவத்தினரையும் அனுப்பி அச்சுறுத்துதல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை இராணுவத்தினர் படம்பிடித்தல் உள்ளிட்ட பல அடக்குமுறைகளை அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது என்பது அப்பட்டமாகத் தெரிந்த வரலாறு.

ஆனால் இந்தமுறை, இதுவரை இந்த அச்சுறுத்தல் நுட்பங்களெல்லாம் பெரும்பாலும் பலிக்கவில்லை. இரு தினங்கள் முன்புகூட, காலையில் பொலிஸ் லொறிகளை காலிமுகத்திடலருகே மக்கள் கூடும் இடத்தில் நிறுத்திவைத்து மக்களை அச்சுறுத்தும் ஒருவித நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. உடனேயே அந்த விடயம் சமூக ஊடகங்கள் மூலம் அனைவரையும் சென்றடைந்து பரபரப்பை ஏற்படுத்தியதும், லொறிகள் உடனடியாக அங்கிருந்து நீக்கப்பட்டன. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இந்த அச்சுறுத்தல் நடவடிக்கைகளுக்கு எதிரான கடுமையான கண்டனத்தை வௌியிட்டிருந்தன.

image_7de75c8584.jpg

ராஜபக்‌ஷர்களின் வழக்கமான கையாளல்முறைகள் எல்லாம், இந்தச் சந்தர்ப்பத்தில் வேலைசெய்யவில்லை. ராஜபக்‌ஷர்கள் தமது மிகப்பெரிய பலமான ‘சிங்கள-பௌத்த’ பெருந்தேசியவாதத்தையும் இனவாதத்தையும் பயன்படுத்தி இந்த நிலையிலிருந்து எப்படியாவது மீண்டுவிட தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருந்தாலும், இதுவரை அது பலனளிக்கவில்லை.

இன்னும் கூட ராஜபக்‌ஷர்களின் ஆதரவாளர்களாகத் தொடர்பவர்கள் எல்லாம் திருடனுக்குத் தேள் கொட்டியது போல அமைதியாக அடக்கிக் கொண்டிருக்கிறார்கள். அடங்கியிருக்கும் அந்த இனவாதமெல்லாம் மீண்டும் கிளர்ந்தெழ முன்னர், ஜனநாயக வழியிலான மக்கள் போராட்டம் வென்றுவிட வேண்டும் என்பதுதான் பெரும்பான்மை இலங்கையர்களின் இன்றைய அவா!

இந்த இடத்தில்தான், இந்த மக்கள் எழுச்சியில் போதியளவில் தமிழ் மக்கள் பங்களிப்புச் செய்யவில்லை என்ற குரல்களும் எழத் தொடங்குகின்றன. காலிமுகத்திடலில் இடம்பெறும் அமைதி வழியிலான போராட்டத்தில் பல தமிழ் மக்களும் கலந்துகொண்டாலும், வடக்கு-கிழக்கில் இந்த காலிமுகத்திடல் மக்கள் எழுச்சிக்கான அடையாள ஆதரவு கூட எழவில்லை என்பது பலரது கவனத்தையீர்ப்பதாக இருக்கிறது.

தென்மாகாணத்தின் காலியில் கூட தற்போது, கொழும்பு காலிமுகத்திடல் மக்கள் எழுச்சியின், கிளை மக்கள் எழுச்சியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிலையில், ராஜபக்‌ஷர்கள் இழைத்த அநீதிக்கு எதிராக ஒரு தசாப்தகாலத்திற்கு மேலாக குரலெழுப்பிவரும், ஜனநாயக வழியில் போராடி வரும் வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள், இன்று நாடே ராஜபக்‌ஷர்களைப் போ எனத்துரத்தும் மக்கள் எழுச்சியில் பங்குபெறாதது ஏன் என்று கேள்வி எழுவது ஆச்சரியமல்லவே!

வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின் மனநிலையைப் புரிந்துகொள்ளுதல் இங்கு அவசியமாகிறது. பேரினவாதத்தின் அடக்குமுறையை பல தசாப்தங்களாக எதிர்கொண்டவர்கள் வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள். பாதுகாப்பின்மை என்பது வாழ்வில் ஓர் அங்கமாகவே மாறிப்போனதால், அது பழக்கப்பட்டே போய்விட்ட மக்கள் வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள். இன்று எரிபொருள், எரிவாயு விலையேற்றம், மின் வெட்டு ஆகியன ஏற்பட்டிருக்காவிட்டால், கொழும்பில் இந்த மக்கள் எழுச்சி ஏற்பட்டிருக்காது என்பது நிதர்சனமானது.

image_5aefb8e76d.jpg

 

ஆனால் பல தசாப்தங்களாக மின்சாரவசதி கூட இல்லாமல், இரண்டாயிரம், மூவாயிரம் ரூபாய்க்கு ஒரு லீற்றர் பெற்றோல் வாங்கி, பல மடங்கு விலைகொடுத்து மண்ணெண்ணெய் வாங்கி, விறகடுப்பில் சமைத்து, மண்ணெண்ணெய் விளக்கின் ஒளியில் படித்து, சைக்கிள் டைனமோவில் வானொலிப்பெட்டியை இயக்கி மிகப்பெரும் பொருளாதார அடக்குமுறைக்குள் வாழ்ந்த சமூகமொன்றை பல தசாப்தங்களாக கண்டுகொள்ளாத நாடு இது என்ற ஆதங்கம் அந்த மக்களுக்குள் இருக்கிறது. சரி, அதுதான் யுத்தகாலம். 

யுத்தத்திற்குப் பின்னர் கூட தமக்கான நீதி, நியாயத்திற்காக அந்த மக்கள் ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் செய்த போதெல்லாம், அந்த ஆர்ப்பாட்டங்கள் அடக்குமுறையைச் சந்தித்த போதெல்லாம் இந்த நாடும், இந்த நாட்டு மக்களும் அவர்களுக்கு ஆதரவு தரவில்லை என்ற ஆதங்கம் அவர்களிடம் இருக்கிறது.

காணாமல்போன தமது உறவுகளைத் தேடி எத்தனை தாய்மார், சகோதரிகள், மனைவிமார், குடும்பங்கள் ஒரு தசாப்தத்திற்கும் மேலாகத் தொடர்ந்து போராட்டம் நடத்தியபோது, இந்த நாடும் மக்களும் அதனைக் கண்டுகொள்ளவில்லை என்ற ஆதங்கம் அந்த மக்களிடம் இருக்கிறது. இதெல்லாம் சேர்ந்துதான் அந்த மக்களை மனரீதியாக முழுமையாக இந்த மக்கள் எழுச்சியில் பங்குகொள்ளச் செய்ய இயலாத நிலையை உருவாக்கியிருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

மேற்சொன்ன மனநிலையின் நியாயத்தை ஒருபோதும், எந்தவொரு நிலையிலும் மறுக்க முடியாது. ஆயினும் இது ராஜபக்‌ஷர்களின் கோரமுகத்தை வடக்கு-கிழக்கு தமிழர்களைத்தாண்டி, இன்னாளில் ராஜபக்‌ஷர்களின் முன்னாள் ஆதரவாளர்களாக மாறியிருப்போர் உட்பட இலங்கையின் பெரும்பான்மை மக்கள் உணர்ந்து, ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக கிளர்ந்து எழுந்துள்ள வரலாற்றுத் தருணம் இது.

இன்று காலிமுகத்திடலருகே இரவு பகலாக ஜனநாயக வழியில் போராடும் மக்கள் இலங்கையின அரசியலில் மாற்றத்தைக் கோருகிறார்கள். அந்தக் கோரிக்கையில் தமிழர்களும் பங்காளிகளாக வேண்டும். அந்த மாற்றத்தினுள் தமிழ் மக்களின் அபிலாஷைகளும் உள்ளடக்கப்பட வேண்டும். அதற்காகவேனும் தமிழ் மக்கள் இந்த மக்கள் எழுச்சியை, கசப்புணர்வுகளுக்காகப் புறக்கணிக்காது, கைகோர்த்து நிற்க வேண்டும்.

image_8d231b508e.jpg

வரலாறு மக்களுக்கு அவ்வப்போது அரிய வாய்ப்புகளை வழங்கும். அந்த வாய்ப்புகளை சரி வரப் பயன்படுத்திக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னகர வேண்டும். அரசியலில் எதுவுமே ஒரே இரவில் கிடைத்துவிடாது. உரோம சாம்ராஜ்யம் ஒரு நாளில் கட்டியெழுப்பப்படவில்லை என்பது ஞாபகமிருக்கட்டும்.

இத்தனை காலம் ஜனநாயக வழியில் போராடிய தமிழ் மக்கள் இந்தச் சந்தர்ப்பத்தை கைவிடுதல், தமிழ் மக்களை அரசியல் ரீதியில் வங்குரோத்து நிலைக்குத் தள்ளிவிடும். ஆகவே இந்த மக்கள் எழுச்சிக்கு தார்மீக ரீதியிலான ஆதரவையேனும் வழங்க வேண்டிய அரசியல் கடமை, வடக்கு-கிழக்கு தமிழ் மக்களுக்கு உண்டு.

இதனால் மட்டும் முழு இலங்கையும், இவ்வளவு ஏன், காலிமுகத்திடலில் கிளர்ந்தெழுந்து நிற்கும் மக்கள் எல்லாம் தமிழ் மக்களின் அபிலாஷைகளை ஏற்றுக்கொண்டு விடுவார்கள் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், இது தமிழ் மக்கள் தமது நல்லெண்ணத்தை, நேரடியாக இந்நாட்டின் ஏனைய மக்களுக்கு எடுத்துரைக்கும் அரிய வாய்ப்பு.

இந்தப் பத்தி எழுதப்படும் நாளில், காலிமுகத்திடல் மக்கள் எழுச்சிக்கு ஆதரவாக, வடக்கில் ஒரு எழுச்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர வேண்டும். எங்களுக்காக நீங்கள் குரல் கொடுக்காமல் போயிருக்கலாம்; ஆனால் அநீதி எங்கு நடந்தாலும், அது அனைவருக்கும் எதிரான அநீதிதான். அதற்காக நாம் குரல்கொடுப்போம் என்று தமிழ் மக்கள் தமது அரசியல் தர்மத்தை வௌிப்படுத்த வேண்டிய தருணம் இது.

“அரசியல் என்பது சாத்தியமானவற்றின் கலை” என்பார் ஒட்டோ வொன் பிஸ்மார்க். சின்னச் சின்ன அடைவுகள் மூலம் தான், நீண்ட காலத்தில் பெரு அடைவுகளைக் கட்டியெழுப்ப முடியும். இது, எல்லா கசப்புணர்வுகளையும் தாண்டி, ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக அனைத்து மக்களோடும் கைகோர்க்க வேண்டிய தருணம் என்பதை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டியது காலத்தின் தேவை.
 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கோட்டா-கோ-ஹோம்-மக்கள்-எழுச்சியில்-வடக்கும்-கிழக்கும்-இணைய-வேண்டுமா/91-294993

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கிருபன் said:

எல்லா கசப்புணர்வுகளையும் தாண்டி, ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக அனைத்து மக்களோடும் கைகோர்க்க வேண்டிய தருணம் என்பதை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டியது காலத்தின் தேவை.

இந்த கருத்துடன் உடன்பாடு இல்லை. சிங்கள-பெளத்த மேலாண்மையும், ஒற்றையாட்சியும் இல்லாத அரசியலமைப்பை சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ளும் நிலையை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உருவாக்கினால் தமிழர்கள் கைகோர்ப்பதைப் பற்றி சிந்திக்கலாம். ஆனால் அப்படியானதொரு மனநிலை மாற்றம் சிங்கள மக்களிடையே சடுதியாக உருவாகாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
32 minutes ago, கிருபன் said:

‘கோட்டா கோ ஹோம்’ மக்கள் எழுச்சியில் வடக்கும் கிழக்கும் இணைய வேண்டுமா?

இல்லை...

தமிழர்களின் பிரச்சனை வேறு என்பதை உலகிற்கு காட்ட இதுவே நல்ல சந்தர்ப்பம்.


ராஜபக்ச வம்சம் எம்மினத்தவரை அழிக்க அரும்பாடுபட்டவர்கள் என்பது யாவருக்கும் தெரியும்.அந்த கோபம் உணர்ச்சியுள்ள தமிழன் ஒவ்வொருவருக்கும் உண்டு.இன்றிருக்கும் இனவாத சிங்களம் போனால் நாளை இன்னொரு இனவாத சிங்களம் ஆட்சியில் அமரும்.அவ்வளவுதான்.

பண்டாரநாயக்க காலம் தொடக்கம் ராஜபக்ச காலம் வரைக்கும் தமிழினம் தன் உரிமைக்காக கத்திக்கொண்டேதான் இருக்கு. இன்னும் ஒரு விடிவுமேயில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கோட்டா கோ ஹோம்’ மக்கள் எழுச்சியில் வடக்கும் கிழக்கும் இணைய வேண்டுமா?

இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

கோட்டா கோ ஹோம்’ மக்கள் எழுச்சியில் வடக்கும் கிழக்கும் இணைய வேண்டுமா?

இல்லை அப்படி இணைய நினைப்பதே படு முட்டாள்த்தனமானது இங்கு சிலர் இனவாத சிங்களத்துக்கு பெல் வேர்க்  செய்ய நினைக்கினம் அந்தக்கால ரோம் அரசர் காலைக்கடன் முடித்தபின் பெல் அடிக்க அடிமைகள் அடிபடுவினம் துடைப்பத்துக்கு அதுபோல் சிலரின் கருத்து. 

Edited by பெருமாள்

 

சிங்களர்களை வீட்டுக்கு போகவிடாமல் பார்த்துக்கொள்வதர்க்கு றிக்கியா இணையிறமாதிரி இணையவேண்டும், சில உதவிகள் செய்யலாம் பதாதைகள், etc. கன பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும் அவர்களுக்குள்

அரசியல்

Edited by Knowthyself

2 hours ago, கிருபன் said:

இன்னும் கூட ராஜபக்‌ஷர்களின் ஆதரவாளர்களாகத் தொடர்பவர்கள் எல்லாம் திருடனுக்குத் தேள் கொட்டியது போல அமைதியாக அடக்கிக் கொண்டிருக்கிறார்கள். அடங்கியிருக்கும் அந்த இனவாதமெல்லாம் மீண்டும் கிளர்ந்தெழ முன்னர், ஜனநாயக வழியிலான மக்கள் போராட்டம் வென்றுவிட வேண்டும் என்பதுதான் பெரும்பான்மை இலங்கையர்களின் இன்றைய அவா!

2019ல் இவர்களுக்கு அமோக வாக்களித்து பதவியில் இருத்திவிடடவர்கள் ஒரே இரவில் சிறுபான்மையினராகி விட்டனர் என்று சொல்லவருகிறாரா?. ஆதாரம் என்ன?. 

2 hours ago, கிருபன் said:

மேற்சொன்ன மனநிலையின் நியாயத்தை ஒருபோதும், எந்தவொரு நிலையிலும் மறுக்க முடியாது. ஆயினும் இது ராஜபக்‌ஷர்களின் கோரமுகத்தை வடக்கு-கிழக்கு தமிழர்களைத்தாண்டி, இன்னாளில் ராஜபக்‌ஷர்களின் முன்னாள் ஆதரவாளர்களாக மாறியிருப்போர் உட்பட இலங்கையின் பெரும்பான்மை மக்கள் உணர்ந்து, ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக கிளர்ந்து எழுந்துள்ள வரலாற்றுத் தருணம் இது

 பெரும்பான்மையினரின் கோரிக்கைகள் பொருளாதார சுமைகளை அடித்தளமாக கொண்டவை. சர்வேதேச மதியஸ்தத்துடன் பேச்சுக்கள் நடந்த காலத்திலும் பெரும்பான்மை மக்கள் தான் Peace Dividend  மூலம் பொருளாதார அனுகூலங்களை அனுபவித்தார்களே  தவிர போரினால் அழிந்த எமது சமூகம் மீள முயன்ற எல்லா வழிகளையும் புலிகள் பலம் பெற்றுவிடுவார்கள் என்று சாக்குபோக்கு சொல்லி தடுத்தவர். பின்னர் 2009ல் எல்லாம் முடிந்துவிட்டது இனி புலிகள் இல்லாதபடியால் தாங்கள் பொருளாதாரரீதியாக மீண்டும் பலம் பெறுவோம் என்ற செய்தியை சிங்களத்தை பிரதிநித்துவம் செய்யும் கட்சிகள் தங்கள் மக்களிடம் விதைத்தார்கள். ஆனால் தமிழ் பயங்கவாதம் தான் உங்கள் பொருளாதார முன்னேற்றத்துக்கு குறுக்கால நின்கிறந்து என்ற பழைய வாதம் 12 வருடத்துக்கு பின்னரும் வேலைசெய்யும் என்று எதிர்பார்த்து தான் Peries ஐயாவும் ஓடி ஓடி ஜெனீவாவை வைத்து புலி புராணத்தை இன்னொரு வடிவில் கொண்டு செல்ல முனைந்தார். அவர்களின் துரதிஷ்டம் கொரோன வடிவில் வந்து இலங்கையில் பொருளாதார அடித்தளம் (economic foundations) உண்மையில் எப்படியானது என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. இதில் இருந்து நாங்கள் மீளவே முடியாது என்ற மரணபயத்தில் தான் இப்ப Gota Go Home என்ற கோஷம். அதை விடுத்து "ராஜபக்‌ஷர்களின் கோரமுகத்தை"  ... "பெரும்பான்மை மக்கள் உணர்ந்து, ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக கிளர்ந்து எழுந்துள்ளனர் " என்பது எழுத்தாளரின் கட்பனை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.