Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

  ஓய்வூதியம் - சுப. சோமசுந்தரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                                    ஓய்வூதியம்

                                                                                   - சுப. சோமசுந்தரம்

திருநெல்வேலி மாவட்டம் காரியாண்டி என்னும் குக்கிராமத்தைச் சேர்ந்த துரைப்பாண்டி தாத்தா தமது தொண்ணூறு வயதிலும் பனையேறும் தொழில் செய்து தம்மையும் தமது மனைவியையும் காப்பாற்றிக் கொள்கிறார் எனும் தகவல் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தது. அவர் போற்றுதலுக்குரியவர்; போற்றப்பட்டார் என்பது சரிதான். காட்சித் திரையில் இதனைக் கண்ட ஒவ்வொருவரும், "நம்மிடையே வாழ்வையே சாகசமாக ஏற்று இப்படி ஒருவர் வாழ்கிறார் !" என்று பெருமிதத்தில் நெஞ்சு விம்மியது வரை கூட சரிதான். "நம்மிடையே அரைசாண் வயிற்றுக்காக ஒருவரை தள்ளாத வயதிலும் அல்லல்பட வைத்தோமே !" என்னும் குற்ற உணர்வு இச்சமுகத்தில் எவருக்கேனும் ஏற்படவில்லை எனில் அது சரிதானா? ஆரம்பக் காலத்தில் இருந்தே சோம்பேறித்தனமாய்ப் பிச்சை எடுத்து வாழ்பவர்கள் முதுமையில் அல்லலுறுவதை நாம் பேச வரவில்லை. தமது பன்னிரெண்டு வயது முதல் (அன்று குழந்தைத் தொழிலாளராய்) தொண்ணூறு வயது வரை பனையேறும் உழைப்பாளிக்கு இச்சமூகம் பனையின் உச்சியிலேயே சமாதி கட்டி விடுமோசமூக வலைத்தளங்களின் மூலமாக இவர் பற்றிய செய்தி அரசின் கவனத்தை ஈர்த்ததால் துரைப்பாண்டி தாத்தாவிற்கும் அவரது துணைவியார் வேலம்மாள் பாட்டிக்கும் முதியோர் ஓய்வூதியம் கிடைக்க வழி செய்யப்பட்டது ஓரளவு ஆறுதல் செய்தி. சமூகத்தில் வெளிச்சத்திற்கு வராத துரைப்பாண்டியர் எத்தனை பேரோ ?
           வாழ்வில் பெரும்பகுதி விவசாயத் தொழிலாளர்களாகவும், கட்டுமானப் பணியாளர்களாகவும், தனியார் கடை ஊழியர்களாகவும், இன்ன பிற தொழிலாளர்களாகவும் இச்சமூகத்தில் களமாடியோர் முதுமையில் எப்படி வாழ்வார்கள் என்று இச்சமூகமோ அரசுகளோ பெரிய அளவில் நினைத்துப் பார்த்ததுண்டா ? சிறிய அளவில் அவர்கள் நினைக்கப்படுகிறார்கள் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். "பணியாளர் வருங்கால வைப்பு நிதியகம்" (Employees Provident Fund Organization - EPFO) என்ற அரசின் அமைப்பிற்கு பணியாளரும் பணி செய்யும் நிறுவனத்தின் உரிமையாளரும் மாதந்தோறும் பங்களிப்புச் செய்து வரும் பட்சத்தில், இருபது வருடங்களுக்குப் பிறகு சேர்ந்த தொகையுடன் மாதந்தோறும் ஒரு சிறிய ஓய்வூதியம் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது கால அளவிற்கு ஏற்ப வளரும் தன்மையுள்ள  ஓய்வூதியம் அல்ல. இன்று மாதம் ரூபாய் ஐயாயிரம் என்று நிர்ணயிக்கப்படும் ஓய்வூதியம் பத்து வருடங்களுக்குப் பிறகும் ரூபாய் ஐயாயிரம் என்று இருப்பது எவ்வகையில் நியாயம் ? மேலும், பணிக்காலத்தில் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைத்  தரத்தில் பழகியவர்கள் ஓய்வு பெற்ற பிறகும் ஓரளவு அத்தரத்தில் வாழ வகை செய்வதே சரியான ஓய்வூதியமாய் அமையும். பசியினால் வாடுவது மட்டும் வறுமையன்று; வாழ்க்கைத் தரம் அதல பாதாளத்திற்கு செல்வதும் வறுமைதான். நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர் காலத்திலேயே இந்த நோக்கில்தான் ஓய்வூதியம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் EPFO தரும் ஓய்வூதியமோ  ஒன்றுமில்லாததற்கு ஏதோ பரவாயில்லை (Something is better than nothing) என்ற வகையிலேயே உள்ளது. இந்நிலையை மாற்றி வாழ்வில் பெரும்பகுதி பணியாற்றியவர்களை எவரிடமும் கையேந்தாமல் வாழ வைப்பது எங்ஙனம்  என்று சிந்தித்துச் செயலாற்றுவதே ஒரு சோஷலிச ஜனநாயகமாக இருக்க முடியும். அதை விடுத்து அரசு ஊழியர்களுக்குக்  கிடைக்கிற நியாயமான ஓய்வூதியத்தையும் நிறுத்துவது சமூகத்தின், அரசுகளின் அராஜகப் போக்கு என்று தான் சொல்ல வேண்டும். எல்லோருக்கும் விடியலைத் தருவது தானே சமத்துவம் ? வெளிச்சத்தில் உள்ளோருக்கும் விளக்கை அணை என்பதுவா சமத்துவம் ? எல்லோரையும் ஏற்றி விடு என்றால், அதற்கு மாறாக படியில் ஏறியவர்களையும் இறக்கி விடு என்பதுவா சோஷலிசம் ?
            "பணத்திற்கு எங்கே போவது ?" என்று யாரோ ஒரு அரசியல்வாதி முதலாளியைப் போல் கர்ஜிக்கும் செய்தி வரும் அதே பக்கத்தில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வழங்கிய பல ஆயிரம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட செய்தியும் வருகிறது. "அரசு வருவாயில் பெரும்பகுதி ஊழியர்களின் சம்பளத்திற்கும் ஓய்வூதியத்திற்குமே  செல்கிறது" என்று நம்பத் தகுந்த பொய்யினைச் சொல்லும் நிதி அமைச்சரே சட்டமன்ற அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை எந்த எதிர்ப்புமில்லாமல் (!)  உயர்த்திக் கொள்கிறார்எத்தனை முறை ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஒவ்வொரு முறையும் தனித்தனியே அன்னாருக்கு  ஓய்வூதியம் நிர்ணயிக்கப்படுகிறது. ஓய்வூதியத்தின் நோக்கமே ஒருவர் முதுமையில் கௌரவமாக வாழ வழி செய்வதுதானே ? அப்புறம் அதில் என்ன கௌரவம் ஒரு தரம், கௌரவம் இரண்டு தரம் என்று ஏலம் எல்லாம் ?
             இந்த முதலாளித்துவப்  பார்வையில், பலம் குறைந்த பொதுவுடமைக் கட்சிகளைத் தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் விதிவிலக்கு அல்ல. இது ஏதோ பாசிச அணுகுமுறை கொண்ட தற்காலத்து பாஜக அரசினால் கொண்டுவரப்பட்டது என்று சொல்வதற்கில்லைபொருளாதார மேதை என்று பெரிதும் கொண்டாடப்படும் மனமோகன் சிங் சார்ந்த காங்கிரஸ் அரசின் கைங்கரியம் என்று தான் சொல்ல வேண்டும். முன்னாள் நிதி அமைச்சர் .சிதம்பரம் ஏதோ பேட்டியில், மனிதர்களின் வாழ்நாள் கூடிவிட்டதை பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் (ஓய்வூதியத்தை இல்லாமல் செய்வதற்குப் பெயர் 'புதிய ஓய்வூதியத் திட்டம்') கைவிடுவதற்கான ஒரு காரணமாகச் சொன்ன நினைவு. மனிதருக்கு நாகரிகமான ஒரு காரணம் அன்று கிடைக்கவில்லையோ, என்னவோ ! பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாய் இரு தேர்தல்களில் வாக்குறுதி தந்த ஜெயலலிதா இரண்டாவது ஆட்சி காலம் முடியும் தறுவாயில் அதனைப் பரிசீலிக்கக் குழு ஒன்றை அமைத்தார். திட்டத்தை நிறுத்தும் போது இல்லாத பரிசீலனைக் குழு மீண்டும் அமல்படுத்துவதற்கு மட்டும் ஏன் ? ஒரு அடிமை அரசின் முதல்வராயிருந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு வாய்ப்பே இல்லை என்று எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் வெகு சாதாரணமாகப்  பேசியது மனதை விட்டு அகல்வதாய்  இல்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்காத திமுக தனது தேர்தல் வாக்குறுதியில்  மீண்டும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் சேர்த்ததும், பின்னர் ஆட்சி அமைந்ததும் தனது நிதியமைச்சரை அதற்கு எதிராகப் பேச வைத்து வேடிக்கை பார்த்ததும் கயமைக்கு ஓர் எடுத்துக்காட்டுமாநில வருவாயில் பெரும் பகுதி அரசு ஊழியர்களின் ஊதியத்திற்கே செல்கிறது என்பது எந்த போதி மரத்தின் கீழ் தோன்றிய ஞானோதயம்தேர்தல் வாக்குறுதியின் போது அப்போதி மரம் கண்ணில் தென்படவே இல்லையா ? .சிதம்பரமும் பழனிவேல் தியாகராஜனும் சொல்லும் போது அவர்களையும் மீறி ஒரு பண்ணையார்த்தனம் வெளிப்படுவதை அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல  இயலவில்லை. வளர்ச்சித் திட்டங்கள் பற்றி வாய்ப்பு கிழியப் பேசும் இன்றைய அரசியலாளர்க்கு தனிமனித வாழ்வு மேம்பாடு வளர்ச்சித்  திட்டமாய்த் தோன்றாதது விந்தையானது.
            ஓய்வூதியத்திற்கு எதிராக முதலாளித்துவ ஜனநாயக அரசியல்வாதிகள் தான் நிற்கிறார்கள் என்றில்லை. "லஞ்ச ஊழலில் திளைக்கும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் ஒரு கேடா ?" எனக் கேட்கும் வெகுசனத்திற்கும் குறைவில்லைஅத்தகையோர்க்கு நாம் கூற விரும்புவது, "மனித வரலாறு தெரிந்த நாள் முதல் தனி மனிதர்கள் பெரும்பாலும் பேராசை பெற்றவர்களாகவும், நினைத்தவற்றை அடைய சிறிய பெரிய தீவினை புரிபவர்களாகவுமே வாழ்ந்து வருகிறார்கள். இதனைக் கூறுவதால் நாம் லஞ்ச லாவண்யங்களை நியாயப்படுத்த எண்ணவில்லை. தீவினைக்கான வழிகளை அடைக்க முயல்வதே சமூகத்தில் நீதி நெறியை நிலை நாட்டுமே தவிர, ஒவ்வொரு மனிதனும் நியாய உணர்வுடன் செயல்படுவான் என்று எதிர்பார்ப்பது இருட்டறையில் இல்லாத கருப்புப்  பூனையைத் தேடுவதுவலுக்கட்டாயமாக நல்வழி கைகூடுமா எனில் கைகூடும் என்றே தோன்றுகிறது. உதாரணமாக, அக்காலத்தில் கடவுச்சீட்டு (Passport) வாங்கியதற்கும் இக்காலத்தில் பெறுவதற்கும் எவ்வளவு வேறுபாடு ? சல்லிக்காசு யாருக்கும் தராமல் கால விரயமுமின்றி இன்று எவ்வாறு கைகூடியது ? மனிதர்கள் ஒட்டுமொத்தமாகத்  திடீரென்று திருந்திட வாய்ப்பே இல்லையே !அங்கு அதனை நடைமுறைப்படுத்திய தானியங்கி (automation) முறையை ஒவ்வொரு துறையிலும் நடைமுறைப்படுத்த ஆட்சியாளர்களுக்கு ஒழுக்க உறுதிப்பாடு (moral conviction)  வேண்டும். அப்படிச் செய்தால் தம் வருமானமும் போய்விடுமே என்றெண்ணும்  ஆட்சியாளர்களால் நல்ல ஊழியர்களையும் குடிமக்களையும் உருவாக்க இயலாது. எனவே ஊதியம், ஓய்வூதியம் பற்றிப் பேசும்போது மட்டும் பெரும்பாலும் 'தீவினைக்கான வாய்ப்பின்மை ஒழுக்கசீலர்'க்கு நன்னெறியும் நேர்வழியும் கண்ணில் தெரிவது ஒரு வேடிக்கையான வாடிக்கை. இருப்பினும் நாம் கூறியது போல் நடைமுறைகளைச்  செப்பனிடுவது மூலமாகவும், ஊழல் குற்றங்களுக்கான தண்டனையைக் கடுமையாக்குவது மூலமாகவும் அரசு இயந்திரத்தைச் சீர் செய்வது ஊதியம், ஓய்வூதியம் இவற்றிற்கு அப்பாற்பட்டு நமக்கான சமூகக் கடமை.
             இறுதியாக தனிப்பட்ட முறையில் ஒன்றிரண்டு வார்த்தைகள். வாழ்க்கையில் பணம்தான் எல்லாம் என்றில்லை. ஆனால் பணம் இல்லாமல் எதுவும் இல்லைகுறிப்பாக முதுமைக் காலத்தில். சாகப் போகிறவனிடம் உன் கடைசி விருப்பம் என்னவென்று கேட்பார்களே ! கேட்காமலேயே நான் சொல்கிறேன் : பழைய ஓய்வூதியத் திட்டத்தினால் எனக்குக் கிடைத்த அமைதியான வாழ்க்கை உலகில் வயதான ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டும். ஓய்வூதியரான என் தந்தையாரின் மறைவுக்குப் பின் குடும்ப ஓய்வூதியரான என் தாய்க்குக் கிடைத்த நிம்மதியும் பெருமிதமும் இவ்வுலகில் ஒவ்வொரு தாய்க்கும் கிடைக்க வேண்டும். தாங்கிப் பிடிக்கப் பிள்ளைகள் நாங்கள் இருந்தாலும், தம் கணவர் ஊழியம் செய்த அரசினால் எனது தாயார் இவ்வுலகில் பிள்ளைகளைக்  கூட எதிர்பார்க்கும் நிலையில் இல்லை; இக்கர்வம் தரும் நிவாரணத்தை எந்த மருந்தும் தருவதில்லை என்பது என் தாய் வெளிப்படையாய்ச் சொல்லாமல் உணர்வால் தரும் செய்தி. அரசு ஊழியரோ தனியார் ஊழியரோ "யாம் பெற்ற அமைதியினை வாழ்விலும் சாவிலும் பெறுக !" என்பதே செல்லாக் காசு எனத் தெரிந்தும் நான் எழுத விரும்பும் உயில்

  • கருத்துக்கள உறவுகள்

சுப.சோமசுந்தரம் அவர்களே…. 
சமூக நலன் சார்ந்த… அருமையான கட்டுரைக்கு நன்றி. 

இதனை….   அரசியல்வாதிகள், அதிகாரிகள் வாசித்து 
விளிம்பு நிலையில் வாழ்கின்ற மூத்த குடி மக்களின்,
இறுதிக் கால வாழ்வை… நிம்மதியாக கழிக்க உதவ வேண்டும்.
 

  • கருத்துக்கள உறவுகள்

அவசியமான கட்டுரை ஐயா.  ஓய்வூதியத்தை நிறுத்த முயற்சிப்து அராஜகம்.

On 2/7/2022 at 10:51, சுப.சோமசுந்தரம் said:

ஓய்வூதியத்திற்கு எதிராக முதலாளித்துவ ஜனநாயக அரசியல்வாதிகள் தான் நிற்கிறார்கள் என்றில்லை. "லஞ்ச ஊழலில் திளைக்கும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் ஒரு கேடா ?" எனக் கேட்கும் வெகுசனத்திற்கும் குறைவில்லை

இந்தியா போன்ற நாடுகளில் அரச ஊழியர்கள் லங்சம் வாங்கி அநீதி செய்வார்கள் என்று அறிந்துள்ளேன். அவர்கள் செய்யும் இலஞ்ச ஊழல் குற்றங்களுக்கு அவர்கள் தண்டிக்கபட வேண்டுமே தவிர  ஓய்வூதியத்திற்கு எதிராக வெகுசனங்கள் செயல்படுவது தவறு.

முதலாளித்துவ ஜனநாயகமாக மேற்கு நாடுகளில் ஓய்வூதிய திட்டம் நல்ல முறையில் செயல்படுத்தபடுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா 
பனை தென்னை ஏறுபவர்கள் என்றில்லாமல் கூலி வேலை செய்பவர்கள் எவராயினும் ஒரு வயதுக்கு பின் கட்டாய உதவித் தொகை வழங்க வேண்டும்.

எத்தனையோ பேர் வயது போனபின் உழைப்பில்லாமல் சேமிப்பில்லாமல் ரொம்பவும் கஸ்டப்படுகிறார்கள்.

அந்தந்த அரசுகள் இவர்களை கவனிக்க ஏதாவது செய்தே ஆகணும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/7/2022 at 02:45, ஈழப்பிரியன் said:

பனை தென்னை ஏறுபவர்கள் என்றில்லாமல் கூலி வேலை செய்பவர்கள் எவராயினும் ஒரு வயதுக்கு பின் கட்டாய உதவித் தொகை வழங்க வேண்டும்.

எத்தனையோ பேர் வயது போனபின் உழைப்பில்லாமல் சேமிப்பில்லாமல் ரொம்பவும் கஸ்டப்படுகிறார்கள்.

அந்தந்த அரசுகள் இவர்களை கவனிக்க ஏதாவது செய்தே ஆகணும்.

நன்றாக சொன்னீர்கள். அந்த நாடுகளில்  அதிகாரத்திற்கு வந்த ஆட்சியாளர்களோ அரசியல்வாதிகளோ  இதைபற்றி சிறிதும் அக்கறை கொள்ளவில்லையே 😞

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 2/7/2022 at 10:51, சுப.சோமசுந்தரம் said:

இறுதியாக தனிப்பட்ட முறையில் ஒன்றிரண்டு வார்த்தைகள். வாழ்க்கையில் பணம்தான் எல்லாம் என்றில்லை. ஆனால் பணம் இல்லாமல் எதுவும் இல்லைகுறிப்பாக முதுமைக் காலத்தில். சாகப் போகிறவனிடம் உன் கடைசி விருப்பம் என்னவென்று கேட்பார்களே ! கேட்காமலேயே நான் சொல்கிறேன் : பழைய ஓய்வூதியத் திட்டத்தினால் எனக்குக் கிடைத்த அமைதியான வாழ்க்கை உலகில் வயதான ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டும். ஓய்வூதியரான என் தந்தையாரின் மறைவுக்குப் பின் குடும்ப ஓய்வூதியரான என் தாய்க்குக் கிடைத்த நிம்மதியும் பெருமிதமும் இவ்வுலகில் ஒவ்வொரு தாய்க்கும் கிடைக்க வேண்டும். தாங்கிப் பிடிக்கப் பிள்ளைகள் நாங்கள் இருந்தாலும், தம் கணவர் ஊழியம் செய்த அரசினால் எனது தாயார் இவ்வுலகில் பிள்ளைகளைக்  கூட எதிர்பார்க்கும் நிலையில் இல்லை; இக்கர்வம் தரும் நிவாரணத்தை எந்த மருந்தும் தருவதில்லை என்பது என் தாய் வெளிப்படையாய்ச் சொல்லாமல் உணர்வால் தரும் செய்தி. அரசு ஊழியரோ தனியார் ஊழியரோ "யாம் பெற்ற அமைதியினை வாழ்விலும் சாவிலும் பெறுக !" என்பதே செல்லாக் காசு எனத் தெரிந்தும் நான் எழுத விரும்பும் உயில்

நல்லதொரு வாழ்வியல் சிந்தனை ஐயா 🙏

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கட்டுரைக்கு நன்றி. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/7/2022 at 02:45, ஈழப்பிரியன் said:

ஐயா 
பனை தென்னை ஏறுபவர்கள் என்றில்லாமல் கூலி வேலை செய்பவர்கள் எவராயினும் ஒரு வயதுக்கு பின் கட்டாய உதவித் தொகை வழங்க வேண்டும்.

எத்தனையோ பேர் வயது போனபின் உழைப்பில்லாமல் சேமிப்பில்லாமல் ரொம்பவும் கஸ்டப்படுகிறார்கள்.

அந்தந்த அரசுகள் இவர்களை கவனிக்க ஏதாவது செய்தே ஆகணும்.

கட்டாய மருத்துவ காப்புறுதியும் கட்டாய ஓய்வூதிய காப்புறுதியும் சட்டமாக கொண்டு வந்தாலே பாதி பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடும்.அத்துடன் இலவசங்களுக்கு எல்லை வைத்திருக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.