Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கையறுநிலை - சுப. சோமசுந்தரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                                                                கையறுநிலை

                                                                 (Helplessness)

                                                                                                                                 - சுப. சோமசுந்தரம்

         ஏதோ ஒரு சூழ்நிலையில் செய்வதறியாது திகைக்கும் கையறுநிலை நாம் அனைவரும் அவ்வப்போது எதிர்கொள்வதே. சூழ்நிலைகளைப் பொறுத்து கையறுநிலையைப் பல்வேறு வகைப்படுத்தலாம். சிலவற்றிற்குத் தீர்வும் பலவற்றிற்குத் தீர்வு இல்லாமலும் போகலாம்.
         இன்றைக்கு இந்திய சமூகத்தில் அரங்கேறும் மதவாதம், தனியார்மயம், பொருளாதாரச் சீர்குலைவு ஆகிய தீமைகளைப் பார்த்து நம்முள் ஏற்படும் அதிர்வு சமூக அவலம் சார்ந்த கையறுநிலை. கையறுநிலையின் வெளிப்பாடு ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மாதிரி. உலகில் பசிப்பிணி கண்டு வாளாவிருக்க மாட்டாமல்
"தனியொருவனுக்கு உணவில்லை எனில்
சகத்தினை அழித்திடுவோம்" என்ற பாரதியின் கையறுநிலையை அறச்சீற்றமாய்க்  காண்கிறோம். இதே அறச்சீற்றம் மனிதனுக்குத் தன் இறைவன் மீதே ஏற்படுவதும் உண்டு. சொல்லொணாத்  துயரத்திற்கு ஆளாகும்போது, "அட ஆண்டவனே ! உனக்குக்  கண் இருக்கா ? நீ நாசமாப் போக !" என்று உரிமையோடு அவனிடம் வெகுண்டு எழுவது நாட்டார் வழக்காற்றியலில் உண்டு. இஃது கையறுநிலையின் நிந்தனை அல்லது சாப வெளிப்பாடு.

"இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்"
     (குறள் 1062; அதிகாரம் : இரவச்சம்)

என்பதும் ஈதன்றி வேறென்ன ?
[குறளின் பொருள் : மற்றவரிடம் கேட்டுப் பெற்றே (இரந்தும்) ஒருவன் உயிர் வாழும் நிலை ஏற்படுமானால், இவ்வுலகைப் படைத்தவன் (உலகு இயற்றியான்) எங்கும் அலைந்து திரிந்து (பரந்து) கெடுவானாக ! ]
          வறியோர்க்குக் கொடுக்கப்படும் பொருள் கண்டு பொறாமை கொள்கிறவனைக் காணச் சகிக்காத வள்ளுவனின் கையறுநிலை கொண்ட மனம்

"கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்"
       (குறள் 166; அதிகாரம்: அழுக்காறாமை)

எனச் சபிக்கிறது. அவ்வாறு அழுக்காறு கொண்டவன் தான் கெடுவது மட்டுமல்ல, தன்னைச் சார்ந்தோரும் உடுப்பதற்கும் உண்பதற்கும் இன்றிக் கெடக் காரணமாய் அமைவான் என்பது கையறுநிலையின் மற்றுமொரு சாப வெளிப்பாடு.
          கையறுநிலையின் வெளிப்பாடு தீமை கண்டு
வாளாவிருத்தல் மட்டுமல்ல. சில இடங்களில் சினத் தீ வெகுண்டெழுந்து அழிவினையும் ஏற்படுத்த வல்லது போலும். தன் கணவனை ஆராயாது கொன்ற மன்னன் மீது மட்டுமல்லாமல் அதனைத் தட்டிக் கேட்காத நகரத்தார் மீதும் அத்தீ கொழுந்து விட்டு எரிவதை இளங்கோவடிகள்,

"பட்டாங்கு யானுமோர்  பத்தினியே யாமாகில்
ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையும்" என்றும்

"யானமர் காதலன் தன்னைத் தவறு இழைத்த
கோநகர் சீறினேன் குற்றமிலேன் யான்" என்றும்

கண்ணகி வாயிலாகச் சித்தரிக்கின்றார். அன்பும் அமைதியும் வடிவான கண்ணகியின் கையறுநிலை சாது மிரண்ட காவியமானது.
        அழுக்காறு (பொறாமை) உடையவன் கெடுவதும் அஃதில்லாதவன் நல்வாழ்வு பெறுவதும்தானே இயற்கை அறமாக இருக்க முடியும் ? அதற்குப் புறம்பாகவும் உலகில் நிகழ்வதைக் கண்ணுற்ற வள்ளுவன் எந்த வகையில் அதனை நியாயப்படுத்துவான் ? கையறுநிலைக்குத் தள்ளப்பட்ட வள்ளுவன்,

"அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப்படும்"
    (குறள் 169; அதிகாரம்: அழுக்காறாமை)

என்று அமைதியாய் முடித்து விட்டான் போலும். அதாவது இயற்கை நீதிக்குப் புறம்பாக நிகழ்வது (மக்களால்) நினைக்கப்படும் என்கிறான். எவ்வாறு ? பொறாமை உடையவன் மேன்மை பெறுவது (அவ்விய நெஞ்சத்தான் ஆக்கம்), "போயும் போயும் இவனுக்கு வந்த வாழ்வைப் பார் !" என்று மக்களால் நினைக்கப்படும்; அஃதில்லாத செம்மையானவன் தாழ்வது (செவ்வியான் கேடு), "ஐயோ ! இவனுக்கா இந்த  இழிநிலை ?" என்று நினைக்கப்படும்.
இவ்வாறே கையறுநிலையின் அமைதி வெளிப்பாடாக

" அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்
எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே"
         (புறநானூறு பாடல் 112)

என்று தந்தையை இழந்த பாரி மகளிரின் சோகம் அரங்கேறக் காணலாம்.
          நிறைவேறாத காதல், பிரிவாற்றாமைக் காதல் என மனிதனைக் கையறுநிலையில் கொண்டு நிறுத்தும் நிகழ்வுகள் அக இலக்கியங்களில் பரவலாகக் காணலாம். இஃது பெரும்பாலும் புலம்பலாகவே காணக் கிடைப்பது. மேற்கோளுக்கு ஒன்றிரண்டு இடங்களைச் சுட்டுவது இங்கு பொருந்தி அமையும். தலைவனின் மனம் அவன் வசமே இருக்கையில், தன் மனம் மட்டும் தன் வசமின்றி அவன் வசமே சென்ற தலைவியின் புலம்பல்

"அவர்நெஞ்சு அவர்க்குஆதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது"
       (குறள் 1291; அதிகாரம்: நெஞ்சொடு புலத்தல்)

என வெளிப்படக் காணலாம்.
           தலைவனும் தலைவியும் களவொழுக்கம் மேற்கொண்டு மகிழ்ந்திருந்தபின் பிரிந்து சென்ற தலைவன் திரும்பி வாராத நிலையில், "அப்போது அங்கு யாரும் இல்லை; அவனே கள்வன்; அவனும் ஏமாற்றி விட்டால் நான் என் செய்வேன் ?" என்ற தலைவியின் கையறுநிலை

"யாரும் இல்லை தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ"
      (குறுந்தொகை பாடல் 25 ன் பகுதி)

என்று மற்றுமொரு புலம்பல்.
        கண்ணகியை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக ஊரைவிட்டு மதுரை நோக்கிச் செல்லும் கோவலனுக்கு மாதவி விடுக்கும் மடலில், "மூத்தோர்க்கு (குறிப்பாக பெற்றோர்க்கு) ஆற்ற வேண்டிய பணியினை (குரவர் பணி) மறந்தது மட்டுமல்லாமல், குலமகளோடு (கண்ணகியோடு) இரவோடு இரவாக ஊரை விட்டுத்  தாங்கள் செல்லும் அளவு (இரவிடைக் கழிதற்கு) நான் செய்த பிழை அறியேன் (என் பிழைப்பு அறியாது). நிலை கொள்ளாது தவிக்கும் என் மனதின் (கையறு நெஞ்சம்) வாட்டத்தினைத் தாங்கள் போக்க வேண்டும் (கடியல் வேண்டும்) எனும் பொருள்பட

"குரவர் பணி அன்றியும், குலப்பிறப்பாட்டியோடு
இரவிடைக் கழிதற்கு என் பிழைப்பு அறியாது
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்"

என்று வரைந்தாள். இதில் தன் கையறு நெஞ்சத்தைத் தெளிவாக வெளிப்படுத்தினாள் மாதவி.
            காதலில் கையறு நிலை பெண்மைக்கு மட்டுமே உரியது என்று எழுதாச் சட்டம் உள்ளதா என்ன ? தனது நிறைவேறாக் காதலை ஊரார் முன் வெளிப்படுத்தி அவர்கள் துணைக் கொண்டு நிறைவேற்ற முற்படும் தலைவன் மடல் ஏறுதல் அகப்பாடல்களில் ஓர் அங்கம். அந்நிலையில் ஊராரிடம் புலம்பும் அவனது உள்ளத்தின் வெளிப்பாடே மடலேறுதல் அன்றி வேறென்ன !

"காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடல்அல்லது இல்லை வலி"
      (குறள் 1131; அதிகாரம்: நாணுத் துறவுரைத்தல்)
[பொருள்: காதலில் உழன்று வருந்துகிறவர்களுக்கு மடலேறுதல் அன்றி வலிமையான  துணை (ஏமம்) வேறு இல்லை].

          மானிட சமூகத்தின் பிரதிபலிப்புதானே இலக்கியமாய் அமைய முடியும் ! எனவே சமூகத்தில் வெவ்வேறு சூழலில் மனிதன் எதிர்கொள்ளும் கையறுநிலையின் வெளிப்பாட்டை அச்சூழலும் மனிதனின் உளவியலுமே தீர்மானிக்கவல்லது. மேலே சுட்டிய இலக்கியக் காட்சிகளில் நிந்தனையாக, சினத்தீயாக, அமைதியாக, புலம்பலாக அவ்வெளிப்பாடு அமைவதைக் காண்கிறோம். வேறு எவ்வகைகளில் எல்லாம் அமையும் என்று தீர்மானிக்க நாம் உளவியலாளர்களா என்ன ? 

17 hours ago, சுப.சோமசுந்தரம் said:

மானிட சமூகத்தின் பிரதிபலிப்புதானே இலக்கியமாய் அமைய முடியும் ! எனவே சமூகத்தில் வெவ்வேறு சூழலில் மனிதன் எதிர்கொள்ளும் கையறுநிலையின் வெளிப்பாட்டை அச்சூழலும் மனிதனின் உளவியலுமே தீர்மானிக்கவல்லது.

நல்லதொரு அவதானிப்பு ஐயா. 👍

 

17 hours ago, சுப.சோமசுந்தரம் said:

மேலே சுட்டிய இலக்கியக் காட்சிகளில் நிந்தனையாக, சினத்தீயாக, அமைதியாக, புலம்பலாக அவ்வெளிப்பாடு அமைவதைக் காண்கிறோம். வேறு எவ்வகைகளில் எல்லாம் அமையும் என்று தீர்மானிக்க நாம் உளவியலாளர்களா என்ன ? 

இவற்றுடன் போராட்டமாகவும் வெளிப்படலாம். அண்மையில் இலங்கை உதாரணத்தைக் கொள்ளலாம்.

தவிரவும், இந்தக் கையறு நிலையை நகைச்சுவையாக மாற்றியோரும் உளர் என்பதை நீங்கள் அறிவீர்கள் ஐயா. பல நகைச்சுவை நடிகர்களின் வாழ்க்கைப் பின்னணியைப் பார்த்தால் புரியும். 😊

கையறு நிலையில் வரும் அறச் சீற்றத்தை ஆக்கபூர்வமானதாக மாற்றி அறப் போராட்டமாக, அந்நிலையிலுள்ள பலரை இணைத்து அவர்கள் போல் இருக்கும் பலருக்கு நல வாழ்வு தரும் தொண்டு நிறுவனங்களை அமைப்பதாக என்று ஆரோக்கியமான பாதைகளை உருவாக்குவோரும் உளர்.

சிந்தனையைத் தூண்டிய அருமையான கட்டுரைக்கு நன்றி ஐயா. 🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, மல்லிகை வாசம் said:

இவற்றுடன் போராட்டமாகவும் வெளிப்படலாம். அண்மையில் இலங்கை உதாரணத்தைக் கொள்ளலாம்

முற்றிலும் உண்மை. ஆயுதப் போராட்டங்கள், சில வன்முறைகள், உண்ணாநிலை போன்ற அறப்போராட்டங்கள் இவை கையறுநிலைக்குத் தள்ளப்பட்டதால் முகிழ்க்கலாம்.

      மேலும் ஒரு வெளிப்பாடு எனக்குத் தோன்றுகிறது. அஃது கையறு நிலையில் தனது இறைவனிடமோ இறைவனைப் போல் தான் மதிக்கிற மனிதரிடமோ தஞ்சம் அடைவது. அரசவையில் துச்சாதனன் பாஞ்சாலியின் துகிலுரிய முனைய, பாஞ்சாலி கையறு நிலையில்  'கோவிந்தா, கோவிந்தா !' என்று இறைவனைச் சரணடைவது இதற்கான சிறந்த மேற்கோள்.

"ஆறாகி இரு தடங் கண் அஞ்சன வெம் புனல் சோர,
                 அளகம் சோர,
வேறான துகில் தகைந்த கை சோர, மெய் சோர, வேறு
                 ஓர் சொல்லும்
கூறாமல், 'கோவிந்தா! கோவிந்தா!' என்று அரற்றி,
                 குளிர்ந்து நாவில்
ஊறாத அமிழ்து ஊற, உடல் புளகித்து, உள்ளம் எலாம் உருகினாளே !"
----பாஞ்சாலி சபதம் பாடல் 246.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு ஆக்கத்திற்கு... நன்றி, சுப.சோமசுந்தரம் ஐயா.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் பதிவு நன்றிகள்.

57 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

மேலும் ஒரு வெளிப்பாடு எனக்குத் தோன்றுகிறது. அஃது கையறு நிலையில் தனது இறைவனிடமோ இறைவனைப் போல் தான் மதிக்கிற மனிதரிடமோ தஞ்சம் அடைவது. அரசவையில் துச்சாதனன் பாஞ்சாலியின் துகிலுரிய முனைய, பாஞ்சாலி கையறு நிலையில்  'கோவிந்தா, கோவிந்தா !' என்று இறைவனைச் சரணடைவது

அருமையான வெளிப்பாடும் நல்ல உதாரணமும் ஐயா. இப்படிப் பல உதாரணங்கள் புராண, இதிகாசங்களில் உண்டல்லவா! மணிவாசகர் 'யாரொடு நோவேன்! யார்க்கெடுத்து உரைப்பேன்!' என இறைவனிடம் சரணாகதி அடைந்தது போன்று இன்னும் பல நாயன்மார்கள் கதையையும் இதில் உள்ளடக்கலாம். இந்த சரணாகதி, தேவாரம் உள்ளிட்ட திருமுறைகளாக வெளிப்பட்டு இன்றும் பல அடியார்களுக்குப் பயன்படுவது அற்புதம்!

 

அள்ள அள்ளக் குறையாத நீரூற்றாய் சிந்தனைகளைத் தூண்டிவிட்டது உங்கள் கட்டுரை ஐயா! 😊

இன்னும் ஒன்று, சிறு வயதில் படித்த ஞாபகம்; மிகச் சுருக்கமாக என் நினைவில் இருப்பதை எழுதுகிறேன்: 

இது நடந்தது அமெரிக்காவோ / ஐரோப்பாவோ தெரியவில்லை. வறுமையில் வாடிய ஒரு இளைஞன் ஒரு முறை ஏதோ ஒரு பணத் தேவை காரணமாகப் பலவாறு யோசித்துக் குழப்பத்தில் இருந்தார். அப்போது கையில் கிடைத்த ஒரு சிறு உலோகக் கம்பியை அங்கலாய்த்தபடியே எவ்வித நோக்கமும் இல்லாமல் வளைத்தபடி இருக்கும்போது சட்டென அவர் மனதில் தோன்றியதே நம்மில் பலர் இன்னமும் பாவிக்கும் safety pin (சட்டை ஊசி). அதை அந்த இளைஞன் கண்டுபிடிப்பாகப் பதிவு செய்து அதன் மூலம் பொருளீட்டினான் என்று படித்த ஞாபகம். அவர் பெயர் தெரியவில்லை. எனவே கையறு நிலை மனித குலத்துக்கு வேண்டிய சில பல பொருட்களையும் கண்டுபிடிக்க வைத்துள்ளது எனக் கூறலோமோ! 😊

 

கையறு நிலையிலும் நமக்கென்று பல வழிவகைகள் ஒளிந்திருக்கும். அவற்றை அவரவர் நம்பிக்கைக்கேற்ப இறைவனிடம் சரணாகதி அடைந்தோ, அல்லது நம் புத்தியைப் பயன்படுத்தியோ தேடிக் கண்டுபிடிக்கலாம் போலும்! 😊

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 hours ago, சுப.சோமசுந்தரம் said:

கையறுநிலை

நல்லதொரு பதிவு...

  • 3 weeks later...

கையறுநிலை நிலையை இலக்கியங்களிலிருந்து அழகாகத் தொகுத்துள்ளீர்கள்.

கையறு நிலை என்பதை நாமே உருவாக்கிக் கொள்வது என்று நினைக்கிறேன். அது ஒவ்வொருவரினது மன உறுதியின் எல்லையாக இருக்கும். ஒரே பிரச்சனையை எதிர்கொள்ளும்போது தன்னம்பிக்கை குறைவான ஒருவருக்கு இந்த நிலை விரைவில் ஏற்படலாம். மன உறுதி உள்ள ஒருவர் இந்த நிலையைத் தவிர்க்கக் கூட முயல்வார். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.